வேப்பங்குளத்தில் ஒரு காதல் – 1
4094
5
அத்தியாயம் – 1
சூரியனும் சந்திரனும் ஓடி விளையாடும் தொடர் ஓட்டப் போட்டியில் ‘ஒளி ‘ எனும் கோளை சூரியன் சந்திரனிடம் பத்திரமாக ஒப்படைத்து விட்டு ஓய்வெடுக்க தயாராகிக் கொண்டிருந்த வேளை அது. வேப்பமரத்தின் காற்று மண் ரோட்டின் புழுதியைக் கிளப்பிவிட்டு விளையாடியது. ஒரு பக்கம் ஆட்டு மந்தையைக் கிளப்பிவிட்டு வீட்டை நோக்கி ஓட்டிக்கொண்டிருந்த சிறுவன் தென்பட்டான்.
ஆச்சர்யம் என்னவென்றால் அவன் தோளில் புத்தகங்களுடன் ஒரு ஜோல்னாப்பை. மறுபக்கம் மாடுகளை மேய்க்கும் நடுத்தர வயது மனிதர். கையில் ஒரு சிறு குச்சியை வைத்து அவர் மாடுகளை விரட்டுவதை பார்த்தால் சிரிப்புதான் வந்தது. அந்தமாடுகளுக்கு மட்டும் ஆறறிவு இருந்தால் அவர்புறம் திரும்பி தன் கூரிய கொம்புகளால் ஒரு மார்க் போட்டுவிடும். பாவம் அதற்கு அதனுடைய சக்தி என்னவென்றே தெரியவில்லை. தெரிந்தால் ஏன் அடிவாங்க வேண்டும். ஹூம்…..அது தெரியாததால் தான் எனக்கும் இந்த நிலை. பிறந்து வளர்ந்த ஊரைவிட்டு இப்படி யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ ஓடி வந்திருக்கிறேனே. ஒரு பெருமூச்சுடன் தலையை சிலுப்பிக் கொண்டாள் ரம்யா.
கூடாது பழையதை நினைக்கக் கூடாது, இப்போது இந்த நாள் அவள் கையில் ,சந்தோஷத்தை தேடித்தானே இத்தனை தூரம் வந்திருக்கிறாள், பிறகு ஏன் பழையதை யோசித்து அழுகையை ஆரம்பிக்க வேண்டும் என்று அவளை அதட்டியது அவள் உள்மனது. அதற்கு அடிபணிந்தவளாய் மறுபடியும் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். இப்போது கார் தரிசு நிலங்களையும் வயல் வெளியையும் கடந்து மரங்களின் நடுவே சென்றுகொண்டிருந்தது.அப்போது தான் அந்த மஞ்சள் போர்டை கவனித்தாள் ரம்யா. “வேப்பங்குளம் கிராமம் உங்களை அன்புடன் வரவேற்கிறது ” என்ற கொட்டை எழுத்தில் வரவேற்பு பலமாகவே இருந்தது. ஆனால் இன்னமும் வீடுகள்தான் கண்ணில் தென்படவில்லை. முதலில் தென்பட்டது ஒரு கோவில்தான் அதன் வாயிலில் பெரிய குதிரையும், அதன் அருகே குதிரை வீரனும் சிலையாக இருந்தனர். அந்த பரந்த வெளியில் கோவில் சிறியதாகத்தான் இருந்தது. நகர் புறத்து கோவில்களின் அளவும் அதன் சுற்றுப்புர இடத்தின் வசதியின்மையும்தான் நினைவிற்குவந்தது. எங்கள் கிராமம் அழகு.,அழகு என்று பீற்றிக்கொள்ளும் சுகுனாவை நம்பாதது எத்தனை பெரிய தவறு என்றுணர்ந்தாள் ரம்யா.
கோவிலை கடந்தால் ஒரு பெரிய தாமரைக்குளம் கண்ணில் பட்டது. குளத்தின் பாதியை செந்தாமரைகளே ஆக்கிரமித்திருந்தன. மீதி பாதியில் இரண்டு படிதுறைகள். ஒன்றில் பெண்கள் கூட்டம் பேச்சும் சிரிப்புமாக. குளித்துக் கொண்டிருந்தார்கள். அடுத்ததில் ஆண்கள் அமைதியாக குளித்துக் கொண்டிருந்தார்கள். அந்தி சாயும் நேரத்தில் இவர்கள் குளிப்பதும் துணிகளை துவைப்பதும் ரம்யாவிற்கு விசித்திரமாக இருந்தது. அதற்கு அடுத்தது வெறும் மாமரங்கள், ஒரு நிமிட கார் பயணத்திற்குப் பிறகுதான் வீடுகள் தென்பட்டன. எல்லாம் குடிசை வீடுகள்தான் பாதிபேர் வீட்டின் வாசலில்தான் அமர்ந்திருந்தார்கள். குடிசைகளை கடந்து சென்றது கார். ஒரு சிறு இடைவேளைக்குப்பின் ஓட்டு வீடுகள் தென்பட்டன. ஆங்காங்கே குடிநீர் குழாய்கள், டீ கடைகள், இட்டிலிகடைகள், ஆலமர பென்ச் இவற்றில் கனிசமான கூட்டமும் இருந்தது.அடுத்து ஒரு சிறு வேப்பமரக் கோவில், அங்கே வாயில் ஓரமாய் ஒரு பூக்கடை, அந்தக் கடை அருகே காரை நிறுத்திய டிரைவர் பூக்காரம்மாவிடம்,
“இங்கே நாட்டாமைக்காரர் வீடு எங்கேம்மா இருக்கு? ”
“நேரா போயி சோத்தாங்கை பக்கம் ரெண்டாம் வீடு மெத்த வீடு ”
“ரொம்ப நன்றிம்மா ”
மீண்டும் கார் மெதுவாக முன்னேறியது, அந்தச் சாலையில், டிராப்பிக் சுத்தமாக இல்லை. ஆனாலும் ஓட்டுனர் மெதுவாகத்தான் ஓட்டினார்.
“கொஞ்சம் சீக்கிரம் போங்களேன் சார் ” என்ற ரம்யாவின் அவசரத்திற்கு
“அட நீங்க வேறம்மா, இது கிராமம், எல்லா வாண்டும் ரோட்டைதான் பிளே கிரவுண்டா யூஸ் பண்ணும். அதனால நாம ஜாக்கிரதையா போறதே நல்லது. இல்லன்னா நாம நாட்டாமையை தேடி போக வேண்டாம், இந்த ஊரே கூடி நம்மள நாட்டாம முன்னாடி நிறுத்திடும் ”
ஏதோ ஒரு பெரிய ஜோக் சொல்லிவிட்ட தோரணையில் அவராகவே அடக்கமாட்டாமல் சிரித்துக்கொண்டிருந்தார்.ரம்யாவிற்கு தான் சுத்தமாக சிரிப்பு வரவில்லை
சில நிமிட பயணத்திற்குப்பிறகு கார் அந்த ‘மெத்தை வீடு ‘ என்று சொல்லப்பட்ட தளம் போட்ட வீட்டின் முன் நின்றது. கிராமத்து நாட்டாமையின் வீட்டை அவள் டிவியில் பார்த்ததுண்டு, அதற்கு துளியும் பிசகாமல் பிரம்மாண்டமாகவே இருந்தது அந்த வீடு. பெரிய தின்னை, கிட்டத்தட்ட ஒரு 50 நபர் படுத்து உறங்கலாம். நடுவில் பெரிய கதவு, அதில் அமைந்திருந்த நுணுக்கமான பூவேலை மிகவும் அழகாக இருந்தது. சென்னையில் எப்போதும் சாத்திய கதவுகளையே பார்த்து பழக்கப்பட்டிருந்த ரம்யாவிற்கு அந்த கதவுகள் திறந்தபடி காட்சி தந்தது வியப்பை அளித்தது. அதுவே லேசான புத்துணர்ச்சி அளித்தது. தின்னையில் இருந்த உரலில் இரண்டு பெண்கள் உலக்கையால் எதையோ மாங்கு மாங்கென்று குத்திக்கொண்டிருந்தார்கள். கார் உள்ளே வந்து நின்றதும் அவர்களது கைவேலையை விட்டு விட்டு காரிலிருந்து இறங்கிய ரம்யாவை ஏற இறங்க அளவெடுத்தனர். அவர்களுக்குள் ரகசியம் பேசிக்கொண்டனர், அதில் ஒருத்தி மட்டும் கொஞ்சம் முன்வந்து “யாருங்க வேணும்?? ” என்றாள்
“நாட்டாமை சாரை பாக்கனும் ”
“அவர் பஞ்சாயத்துக்கு போயிருக்காருங்க ”
‘ஓ….. அப்போ……. சுகுனா இருக்காங்களா? ”
“யாரு ….. சின்னம்மாவையா கேக்குறீங்க…? அவுக பின்கட்டுல பெரியம்மாக்கு துணையா இருக்காக, நீங்க…..?”
“நான் சுகுனாவுடைய ஃபிரண்டு ”
“ஃபிரண்டுன்னா …?”
“ஆ…..ங்….தோழிங்க ”
“ஓ…..சினேகிதிங்களா… உள்ர வாங்க நா கூட்டிப் போறேன் ” என்றவள் முன்னே நடக்க, டிரைவரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு, தன் பெட்டியோடு அவளை பின்தொடர்ந்தாள் ரம்யா.
நீண்டிருந்த அந்த கூடத்தின் நடுவே முற்றம் என்று சொல்லப்படும் சதுர வடிவ இடம், மேல் கூரை இல்லாமல், சூரிய ஒளியை தடையில்லாமல் வழங்கிக் கொண்டிருந்தது. அங்கே தரையில் மிளகாயும்,மல்லியும் காய வைக்கப் பட்டிருந்தன.அதைத் தாண்டி சென்றதும் பின் கட்டில் பெரிய சமையலறை தென்பட்டது.அங்கே சுகுணா ஆவி பறக்கும் இட்லித்தட்டுகளை சாம்பல் தடவிய இட்லி பானையிலிருந்து எடுத்து ஒரு பெரிய தட்டில் தலை குப்புற கவிழ்த்தாள்.பின் அந்த தட்டை எடுத்தவள்,இட்லிகளின் மேலிருந்த துணியை மெல்ல ,மெல்ல எடுத்தாள்.அவள் எடுக்க, எடுக்க இட்லிகள் அழகாக துணியிலிருந்து பிரிந்து தட்டில் விழுந்தன.இந்தக் காட்சியை விழி விரிய பார்த்து கொண்டே சுகுணாவை நெருங்கி விட்டாள் ரம்யா.
“சுகுணாம்மா…..உங்களைப் பார்க்க உங்க தோழியாம், கூட்டியாந்தேன்., என்று வழி காட்டிய பெண் சுகுணாவின் காதில கிசு கிசுக்க,புறங்கையால் நெற்றி வியர்வையை துடைத்துக் கொண்டே யாராக இருக்கும் என்று பார்த்த சுகுணா, ரம்யாவை, கண்டதும் துள்ளிக் குதித்தாள்.
“ஏய் ரம்யா…..என்னடி திடீர் சர்ப்ரைஸ்?” ஓடிவந்து அவளை கட்டியணைத்தவள் உடனே விடுவித்தாள்.
“என் கையெல்லாம் இட்லி பிசுபிசுப்பு, அத்துடன் உன்னை தொட்டு விட்டேன் சாரி டி, இதோ ஒரே நிமிஷம் இந்தத் திண்ணையில் உக்காரு வந்துடறேன்” என்றவள் அருகில் இருந்த அடுப்பில் சாம்பாரை கிண்டிக் கொண்டிருந்த தன் அம்மாவிடம்,
“அம்மா……இது என் சினேகிதி ரம்யா, அடிக்கடி சொல்வேனே, ரொம்ப பெரிய வீட்டுப் பொண்ணு ,தினமும் ஒரு கார்தான், ஆனா மனசு ரொம்ப சுத்தம்,பணத்திமிர் கொஞ்சமும் கிடையாது” என்று இன்னும் ஏதேதோ பேசிக்கொண்டே போக, அந்தம்மாள் இடுக்கிய கண்களுடன் ரம்யாவை ஏறிட்டாள்.
அதையுணர்ந்து இருகை கூப்பி அவருக்கு வணக்கம் தெரிவித்தாள் ரம்யா. பதிலுக்கு வணங்கி விட்டு,அருகிலிருந்த மண்பானையிலிருந்துஒரு குவளை தண்ணீர் எடுத்து ரம்யாவிடம்நீட்டினார்.
“முதல்ல வந்தவங்களுக்கு தண்ணீ கொடுக்கனும் …..இந்த பழக்கத்த எப்பதான் நீ கத்துக்க போறியோ? எண்ணி பதினைஞ்சே நாள்ல கண்ணாலம்.” என்று சுகுணாவை முறைத்து விட்டு,
“இந்தா கண்ணு தண்ணி குடி, பயணமெல்லாம் சவுகர்யம்தானே” என்று பாசமாய் பேசிய தாயுள்ளத்தைப் பார்த்ததும் தனது தாய் நினைவு வந்து கண்ணை கரித்து.
“உனக்கு இந்த அடுப்பு புகை ஆகல போல கண்ணு …… ரொம்ப கண்ணெரிச்சலா இருக்கா?” என்று கரிசனப்படவும், உடனே இல்லை என்பதுபோல் தலையாட்டி குவளையைப் பெற்று கொண்டாள்,
“பயணமெல்லாம் நல்லபடியாகவே இருந்தது அம்மா” என்று தண்ணீர் அருந்தினாள்.
அடடா…….என்ன சுவை,லேசான களிமண் வாடை…. பிரிஜ்ஜில் வைத்தால் கூட தண்ணீர் இந்தளவு ஜில்லிப்புடன் கூடிய சுவை தறாது…..அருமை அருமை என்று முழுவதுமாக சுவைத்து குடித்து முடித்தாள்,நெஞ்சம் நிறைந்தது, அதற்குள் கைகளை கழுவிக்கொண்டு சுகுணாவும் ஓடி வந்து விட்டாள்.
“அய்யாக்…கண்ணு…..அய்யாக் கண்ணு “என்ற சுகுணாவின் குரலுக்கு, முண்டாசுத் துணியை கழற்றியபடி ஐம்பதுகளில் ஒரு மனிதர் ஓடோடி வந்து சுகுணாவின் முன் கை கட்டி சற்று குனிந்து நின்றார்.
“அட எத்தனை தடவை சொல்வது, இப்படி குனிந்து கை கட்டி நிற்கக் கூடாது என்று, வீட்டு ஏவல்களை செய்வதால் நீ கேவலமானவன் ஆகி விடுவாயா, கேவலமானவங்கதான் இப்படி கூனிக்குறுகி நிப்பாங்க, உனக்கென்ன என்று அண்ணா கேட்டதை மறந்து விட்டாயா?”
மன்னிச்சிடுங்கம்மா பழக்க தோஷம் கொஞ்சம் கொஞ்சமா மாத்திடுறேன்.”என்றுவர் நெளிந்து குழைந்து தர்ம சங்கடத்துடன் நிமிர்ந்து நின்றார்.
“ம்…..இது சரி ……இவங்க என் தோழி ரம்யா, என் கல்யாணத்துக்காக வந்திருக்காங்க,அவங்க பெட்டியெல்லாம் எடுத்துப் போய் மெத்தையில் என் அறைக்கு பக்கத்து அறையில் வை” என்றவள்,
“வா ரம்யா சீக்கீரம் வந்து பிரெஷ் ஆகு.,கோவிலுக்குப் போகலாம் …இன்று வெள்ளிக் கிழமை விஷேஷமா இருக்கும்” உற்சாகமாக ரம்யாவின் கரம்பற்றி படிக்கட்டை நோக்கி நடக்கலானாள்.
“ஏய் பொண்ணுங்களா……..கொஞ்சம் காப்பித் தண்ணி குடிச்சிட்டுப் போங்கம்மா” என்று பின்னோடு கத்திய தாய் மரிக்கொழுந்தை சட்டை செய்யாமல்,
“அதை மதனியிடம் கொடுத்து விடம்மா” என்று கத்தி விட்டு மேலேறினாள் சுகுணா.
“இந்த காலத்துப் பொண்ணுங்க நம்ம சொல்ல எங்க கேக்குதுக, ஏய் பேச்சி அந்த சாம்பார் அடுப்பு வெறகை கொஞ்சம் இழுத்து வெளிய விடு, அடி பிடிக்கப் போகுது” என்ற உத்தரவை இட்டு விட்டு,காப்பி போடுவதற்கு பாலும்,தண்ணீரும் கலந்து அடுப்பில் வைத்தார் மரிக்கொழுந்து.
5 Comments
Nagarathil iruntrhirunthu graamathukku engum manam. Mun paanai thaneerum thinnaiyum murramum kan munne therigiradhu. Nice
En Oru Peru veppangulam pattukkottai kitta Varum 😍
Unga oore epadi irukum? Can u describe?
Aaka nalla thotakkam.
Nandri pa