Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மனதோடு ஒரு ராகம்-15

அத்தியாயம் – 15

“மேடம் எவ்வளவு நேரம் உங்க செல்லக் குட்டிகளோடவே விளையாடிட்டு இருப்பீங்க? டாக்டரை பார்க்கப் போக வேண்டாமா?” – வார்த்தைக்கு வலித்துவிடக் கூடாது என்றா… அல்லது வலுவான வார்த்தைத் தன் மனைவியின் மனதை வலிக்கச் செய்துவிடக் கூடாது என்றா… எதற்காக அவ்வளவு மென்மை குருவின் குரலில். கண்டிப்பாக இரண்டாவது காரணமாகத்தான் இருக்க வேண்டும்.

 

“ஒரே நிமிஷம் குரு… இதோ வந்துட்டேன்…” – கார்மேக வண்ணச் சேலைக் கட்டி, எளிமையான அலங்காரத்துடன் தேவதை போன்ற அழகுடன் அடிமேல் அடியெடுத்து வைத்து வருபவளை அள்ளிப் பருகுவது போல் பார்த்துக் கொண்டிருந்தான் குரு.

 

“கிளம்பலாமா?” – புன்சிரிப்புடன் கேட்டாள்.

 

“ம்ம்ம்… பார்த்து… மெதுவா வா…” – அவளைக் கைபிடித்து அழைத்துச் சென்று கார் கதவைத் திறந்துவிட்டு உள்ளே அமரச் சொன்னான்.

 

திருச்சியில் ஸ்டுடியோ வைத்திருந்த குரு… சேலத்தில் ஸ்டுடியோ வைத்திருந்த ஒரு நண்பனுக்கு உதவியாக ஒரு பெரிய வீட்டுத் திருமணத்திற்கு வீடியோ கவரேஜிற்குச் சென்றிருந்தான். உதவிக்குச் சென்றவன் அதை மட்டும் செய்துவிட்டு வராமல் அந்தத் திருமணத்தில் அழகுப் பதுமையாகச் சுற்றிக் கொண்டிருந்த ராஜியின் மீது காதல் கொண்டுவிட்டான். அவனிடம் தோன்றிய அதே அதிர்வலைகள் அவளிடமும் தோன்றிவிட்டதால் பார்வையில் துவங்கி போனில் வளர்ந்த அவர்களுடைய உறவுத் திருமணத்தை நோக்கி நகர்ந்தது.

 

செல்வ வளமும் அதிகார பலமும் நிறைந்த தன் குடும்பத்தார் தன்னுடைய காதல் திருமணத்திற்குப் பெரும் தடையாக இருப்பார்கள் என்று நினைத்த ராஜி… வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையுடன் தனக்குத் திருமணம் நடக்கப் போகிறது என்கிற நெருக்கடியான சூழ்நிலையில் வீட்டுக்குத் தெரியாமல் குருவைத் தேடித் திருச்சிக்கு வந்துவிட்டாள்.

 

தன்னை நம்பி வந்தவளைக் கைவிடாமல் பதிவுத் திருமணம் செய்து கொண்ட குரு… திருச்சியில் நன்றாக ஓடிக் கொண்டிருந்த தன்னுடைய ஸ்டுடியோவை விற்றுவிட்டுச் சென்னையில் வந்து செட்டில் ஆகிவிட்டான். தன் குடும்பத்தார் தன்னைத் தேடி திருச்சிக்கு வந்துவிடுவார்களோ என்கிற ராஜியின் பயம்தான் அவன் ஸ்டுடியோவை விற்றதற்குக் காரணம்.

 

ராஜி பயந்தபடி எதுவும் நடக்கவில்லை. அவளுடைய குடும்பத்தார் அவர்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாமல் ஒதுங்கிவிட்டார்கள். ஆனால் அவனுக்குத்தான் புது இடத்தில் தொழில் ஓடாமல் வருமானம் குறைந்துவிட்டது.

 

தற்பொழுது அவனுக்குக் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் சொந்தமாகக் கார் வைத்துக் கொள்வதெல்லாம் குதிரைக்கொம்புதான் என்றாலும், செல்வத்தில் சீமாட்டியாக வளர்ந்த ராஜியை ஆட்டோவிலும் பஸ்சிலும் ஏற்றிக் கஷ்ட்டப்படுத்த மனம் வராமல் போராடி ஒரு டாட்டா இண்டிகாவை வாங்கிவிட்டான். அவளை வெளியே அழைத்துச் செல்லும் போது மட்டும்தான் அந்தக் காருக்கு வேலை இருக்கும். மற்ற நேரங்களில் ஓய்வுதான்.

 

பெரும் சிரமப்பட்டுத் தனக்காகக் கார் வாங்கிய தன் அன்புக் கணவன், தினமும் வீட்டிலிருந்து பஸ் ஸ்டாண்ட் வரை நடந்து சென்று பஸ் பிடித்து ஸ்டுடியோவிற்குச் செல்வதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ராஜிக்கு அவன் மீது காதல் பலமடங்குப் பெருகும். இப்போதும் அப்படித்தான்… தனக்காகக் கார் கதவைத் திறந்துவிட்டுச் சேவகனாக மாறி நிற்பவனை மனதிற்குள் ஆராதனை செய்து கொண்டே உள்ளே ஏறி அமர்ந்தாள்.

 

மறுப்பக்கம் அவன் வந்து அமர்ந்ததும் அவன் தோள் மீது சலுகையாய் தலை சாய்த்துக் கொண்டவள் “லவ் யு குரு…” என்றாள். இது போன்ற அவளுடைய சின்னச்சின்ன செயல்களை மலையளவு ரசிப்பவன் இப்பொழுதும் பூரித்த மனதுடன் அவள் நெற்றியில் இதழ்பதித்துவிட்டு காரை கிளப்பினான்.

 

###

 

“சாரி மிஸ்டர் குரு…” – இரக்கம் தோய்ந்தக் குரலில் கூறினார் அந்தப் பெண் மருத்துவர்.

 

“இந்த மாதமும் ரிசல்ட் நெகட்டிவ் தானா!” – ராஜியின் முகம் ஏமாற்றத்தில் கலையிழந்து போனது.

 

பத்து நாள் தள்ளிப் போன நாள் கணக்கை நம்பிக் கற்பனையை வளர்த்துக் கொண்டு நடக்கக் கூடப் பயந்து பொத்திப் பொத்தி நடந்தாளே! அத்தனையும் கானல் நீரா! அவள் உள்ளம் ஊமையாய் அழுதது.

 

“உங்க மனைவிக்கு இருந்த பிரச்சனையெல்லாம் இப்போ சரியாயிடிச்சு. இனி நீங்க குழந்தை இல்லைங்கற டென்ஷன் இல்லாம சந்தோஷமா இருந்தாலே கண்டிப்பா உங்களுக்குக் குழந்தை கிடைக்கும். என்னை நம்புங்க…” – மருத்துவர் அவர்களுடைய நம்பிக்கையும் தைரியத்தையும் அதிகப்படுத்த முயன்றார்.

 

ராஜி கணவனை மெல்லத் திரும்பிப் பார்த்தாள். மருத்துவரிடமிருந்து பார்வையைத் திருப்பாதவனின் முகம் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்காமல் இறுகியிருந்தது. அவளுடைய மனம் மேலும் சோர்ந்தது.

 

மருத்துவர் கூறிய அறிவுரைகளைக் கேட்டுக் கொண்டு மேலும் சற்று நேரம் அந்த அறையில் அமர்ந்திருந்தவர்கள் பிறகு அவரிடம் விடைபெற்றுக் கொண்டு வந்து காரில் ஏறினார்கள். அதுவரை தன் அன்புக் கணவன் தன்னிடம் ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை என்பதை வேதனையுடன் கவனித்துக் கொண்டிருந்த ராஜிக்கு அடி வயிற்றிலிருந்து கிளம்பி வந்த துக்கப்பந்துத் தொண்டையை அடைத்தது. அவள் பூ மனம் கசங்கித் துவண்ட வேதனையில் அவளுக்கு ‘ஓ’வென்று அலறியழ வேண்டும் போல் இருந்தது.

 

மனைவியை எப்படிச் சமாதானம் செய்து தேற்றுவது என்று புரியாமல் தனக்குள் சுருண்டு கொண்ட குரு அவளுடைய சோர்ந்த முகத்தைத் திரும்பிப் பார்க்கும் தைரியம் கூட இல்லாதவனாகச் சாலையில் பார்வையைப் பதித்துக் காரை செலுத்திக் கொண்டிருந்தான். சிக்னல் விழுந்ததும் அனிச்சையாக அவன் கால் பிரேக்கை அழுத்தியது. சாலையை ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் கடந்து கொண்டிருப்பவர்களில் ஒரு நிறை மாத கர்ப்பிணியும் இருந்தாள். கண்களில் ஏக்கத்துடன் குருவின் பார்வை அந்தப் பெண்ணைத் தொடர்ந்தது. அதைக் கவனித்துவிட்ட ராஜி துடித்துப் போனாள்.

 

அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் கரை உடைத்துக் கொண்டு அவள் கன்னத்தை நனைத்தது. முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பித் தன் மனப் போராட்டத்தைக் கணவனிடமிருந்து மறைக்க முயன்றவள் ஓரளவு அதில் வெற்றியும் கண்டாள். அவள் வருத்தத்தில் இருக்கிறாள் என்று உணர்ந்திருந்த குரு அவளுடைய கண்ணீரைக் கவனிக்கத் தவறிவிட்டான். அதனால் அவளுடைய கண்ணீருக்கான காரணம் குழந்தையின்மை இல்லை… தன்னுடைய நடவடிக்கைகள்தான் என்பதும் அவனுக்குத் தெரியாமல் போய்விட்டது.

 

அன்று இரவு உணவு இருவருக்குமே தொண்டைக் குழிக்குள் இறங்கவில்லை. முடிந்த அளவு ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பதைத் தவிர்த்தபடி எதை உண்டோம் என்கிற உணர்வின்றி எதையோ வயிற்றுக்குள் அள்ளித் தள்ளிவிட்டுப் படுக்கைக்கு வந்து சேர்ந்தார்கள். அவள் அவனுக்கு முதுகுகாட்டிக் கட்டிலின் ஒரு பக்கம் ஒதுங்கிவிட… அவன் விட்டத்தை வெறித்துக் கொண்டு மறுபக்கம் ஒதுங்கிவிட்டான். சுவர் கடிகாரத்தில் நொடிமுள் டக் டக் என்கிற சத்தத்துடன் நேரத்தைக் கடத்திக் கொண்டிருக்கப் பேச்சில்லா மௌனம் எவ்வளவு நேரம் அவர்களை ஆகர்ஷித்திருந்ததோ தெரியாது.

 

ஒரு கட்டத்தில் மனைவியின் முதுகு சத்தமில்லாமல் குலுங்குவதை உணர்ந்து அவள் பக்கம் திரும்பிப் பார்த்தான் குரு. லேசாக வெளிப்படும் செருமல் ஒளியை அவள் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. பதறிப் போய் எழுந்து அமர்ந்து சட்டென்று அவளைப் பிடித்துத் தன் பக்கம் திருப்பினான்.

 

அழுதழுது வீங்கிச் சிவந்திருந்த அவள் முகம் அவன் பார்வைக்குக் கிடைக்கத் தவிப்புடன் “ராஜி…!” என்றான்.

 

அவ்வளவுதான்… கிட்டத்தட்ட ஐந்து மணி நேரமாகத் தனக்குள் அடக்கி வைத்திருந்த உணர்வுகளெல்லாம் கட்டவிழ்த்துக்கொள்ள அவன் மார்பில் முகம் புதைத்துச் சத்தமாகக் கதறியழுதுத் தீர்த்துவிட்டாள்.

 

“ராஜி… ப்ளீஸ்… ராஜி… வேண்டாம்… அழாத…” – அவளைச் சமாதானம் செய்யும் மார்க்கம் புரியாமல் தவித்துப் போய்க் கலங்கிவிட்ட கண்களுடன் குழந்தை போல் அவளைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு… அன்பாய் அவள் முடியைக் கோதி… ஆதரவாய் அவள் முதுகை வருடிச் சமாதானம் செய்ய முயன்றான்.

 

அவன் சமாதானம் செய்யச் செய்ய அவளுடைய அழுகை அதிகமானதே ஒழிய அவள் சற்றும் ஓய்ந்தாளில்லை. அவன் மனம் நொந்து போய்க் கேட்டான்.

 

“ஏன் ராஜி இப்படி அழற? எனக்கு நீதான் குழந்தை. உன்னையும் உன் சிரிப்பையும் பார்த்துக்கிட்டே இன்னும் நூறு ஜென்மம் நான் சந்தோஷமா வாழ்ந்துடுவேன். உன்னால என்னை அந்த அளவுக்கு ஏற்றுக்க முடியலையா? நம்ம வாழ்க்கையில நீ திருப்தியா இல்லையா?”

 

சட்டென்று அழுகை நின்றவளாகக் குழப்பத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். நனைந்த இமைகளும் சிவந்த விழிகளுமாகத் தன்னை நோக்கும் மனைவியை அன்புடன் நோக்கி “என்னடா…?” என்றான்.

 

“ஏன் மதியத்துலேருந்து என் கூடப் பேசல?” என்றாள்.

 

அவன் திகைப்புடன் “பேசலையா!” என்றான்.

 

“ஆமாம்… டாக்டர் ரிசல்ட் நெகட்டிவ்னு சொன்னதிலிருந்து நீங்க என் கூடப் பேசவே இல்லையே…” என்றாள்.

 

மானசீகமாகத் தலையிலடித்துக் கொண்டு தன்னையே நொந்துக் கொண்டவன் “அது… அது… உன்னை எப்படிச் சமாதானம் செய்யறதுன்னு பயமா இருந்துச்சு…” என்று தடுமாறினான். அவள் நம்பாமல் அவனைப் பார்த்தாள்.

 

“சத்தியமா ராஜி…” – அவன் அவளுடைய தலையில் கைவைத்தான்.

 

“சிக்னல்ல அந்தப் பெண்ணை அப்படிப் பார்த்தீங்களே…! ஒரு மாதிரி ஏக்கமா…”

 

“ஏக்கமாவா…! யாரைச் சொல்ற நீ?” – குழப்பத்துடன் கேட்டான்.

 

“அதான்… ஒரு பொண்ணு… கர்ப்பமா இருந்தாளே… நம்ம கார் சிக்னல்ல நின்னுட்டு இருந்த போது ரோட் கிராஸ் பண்ணினாளே…” – அவனுக்கு ஞாபகப் படுத்தினாள்.

 

“ஏய்…. அந்தப் பெண்ணை நான் எங்க ராஜி ஏக்கமாப் பார்த்தேன். அவ்வளவு பெரிய வயிற்றோடு நடந்து போயிட்டு இருக்காங்களேன்னு பாவமா இருந்தது. அதனால ஒருவேளை பார்த்திருப்பேன்” – என்றான்.

 

“அவ்வளவு தானா?”

 

“அவ்வளவேதான்… இதுக்காகத்தான் இவ்வளவு நேரமும் ஃபீல் பண்ணிட்டு இருந்தியா?”

 

அவள் தலையாட்டிப் பொம்மை போல் தலையை மேலும் கீழும் ஆட்டினாள். அவன் ‘அப்பாடா…’ – என்கிற நிம்மதியுடன் அவளை மேலும் இறுக்கிக் கொண்டான். இருவர் மனத்திலும் சூழ்ந்திருந்த கவலை மேகம் கலைந்தோடிவிடப் பழையபடி மகிழ்ச்சியும் காதலும் மேலோங்கியது.




16 Comments

You cannot copy content of this page