வேப்பங்குளத்தில் ஒரு காதல் – 8
2672
4
அத்தியாயம் : 8
வீடெங்கும் மலர்களின் மனம் கமழ்ந்தது, கதம்ப மலர் மனம் அந்த கூட்டத்தை நிறைத்தது. “இந்தா புள்ள பார்வதி…. அங்கன பந்தகால் தண்ணீ ஊத்தி அலசியாச்சா “என்ற மரிக்கொழுந்தின் குரல் வீட்டை இரண்டாக பிளந்தது.
“அத கவிதா பாக்குறா அத்த. நான் பந்தக்கால் நடர பெண்களுக்கு வெத்தல பாக்கு, பழம் தட்டுல வெக்கறேன் ”
“சரி சரி …..உம் புருஷன் எங்க போனான் …பந்தக்கால் குழி தோண்டியாச்சா. இல்லையா? ” என்ற கேள்வி எழுப்பிக் கொண்டே வாசல் பக்கம் விரைந்து நடந்தாள். இங்கே காலை சிற்றுண்டி நடக்கும் இடத்தில் நின்றிருந்தாள் ரம்யா. சுகுணாவுக்கு கொள்ளை பசியாம் இரண்டு இட்டிலி கிடைத்தால் தேவலை என்று நினைக்க, அங்கே பாஸ்கரன் நின்று சமையல்கார ஆட்களை ஏவிக் கொண்டிருந்தான்.
“சீக்கிரம் மணி அண்னே இப்போ ஊருல இருக்கிற எல்லா ஜனமும் வந்துடும், பந்தக்கால் நட்டதும் உடனே சாப்பாடு போட்டாகனும்….இங்கே என்னன்னா பருப்பே வேகலங்கரீங்க ராத்திரி கொஞ்சம் நிதானத்துல படுங்கன்னா எங்க கேக்கரீங்க? “தன்குரலில் கண்டிப்பும் அவசரமும் சேர்த்து கேட்டான்.
“இதோ தம்பி ஆயிட்டுது ……பந்தகால் நடரத்துக்குள்ள முடிச்சிரலாம் கவலப்படாதீங்க . ஏய்…..கிட்டா …..கொஞ்சம் அடுப்ப வெரசா எரியவை என்று அவன் மிரட்டலுக்கு பதிலளித்தவர் வேலையில் மும்முரமானார்.
அங்கே மற்ற அடுப்புகளை மேற்பார்வை பார்த்தவனின் விழிவட்டத்திற்குள் ரம்யா தென்ப்பட்டாள். என்னவென்று கேட்க அவளருகில் சென்றான்.
அவன் கேட்கும் முன் அவளே பதிலளித்தாள் “சுகுணாவுக்கு பசிக்குதாம் ரெண்டு இட்டிலி கிடைச்சா தேவலை ”
“மணப்பெண்ணுக்கு பசிக்க கூடாதே!…. “என்று சத்தமாக சிந்தித்ததவன் தொடர்ந்து “ஆனால் நம் சுகுணா தான் சாப்பாடு ராமி ஆச்சே …… அதனால் சில விதிவிலக்குககள் உண்டு ” என்று சிரித்தான். பதிலுக்கு மென்மையாக சிரித்தவளிடம் ஒரு தட்டில் இரண்டு இட்டிலிகளை வைத்து “வீட்டுல இட்டிலி மிளகாய் பொடி இருக்கும் அதபோட்டு கொடு சட்டினி, சாம்பார் இன்னும் ரெடி ஆகல”என்றான்.சரி என்று தலையசைத்து தட்டுடன் சுகுணாவை நாடி விரைந்தாள். அங்கே கவிதா அவளுக்காகவே காத்திருந்தது போல்…
“ரம்யா இந்த வாண்டுகளை கொஞ்சம் தயார் செய்துடரியா, அங்க வேலை தலைக்கு மேல கெடக்கு, அத்த வேற சத்தம் போட்டுகிட்டே இருக்காக” என்று கெஞ்சலாக உதவி கேட்க உடனே ஒப்புக் கொண்டாள் ரம்யா நாலு வாண்டுகளையும் குளிக்க வைத்து அவர்களுக்காக கொடுக்கப்பட்ட துணிகளை அணிவித்து, அலங்காரம் செய்து முடித்து நிமிர்கையில் வந்த பார்வதி.
“ஆத்தி ….எம்புட்டு அழகா எம் புள்ளைகளுக்கு அலங்காரம் பன்னிப்புட்ட?” என்று தாடையில் கை வைத்து அதிசயத்தவள்,
“அது சரி இன்னும் நீ கெளம்பாம. நிக்கிறியே ……முகூர்த்த நேரம் நெறிங்கிட்டு சட்டுனு கெளம்பி வாசலுக்கு வா கண்ணு….என்று அன்புக்கட்டளையிட்டு விட்டு அங்கிருந்து அகன்றாள் அவசர அவசரமாக. குளித்து முடித்து சுடிதாரில் வெளியே வந்தவளை மேலும் கீழும் பார்த்த மரிக்கொழுந்து அவளது கைப்பற்றி உள்ளே இழுத்துச் சென்றார்…..
“அட என்ன புள்ளம்மா நீ மணப்பொண்ணு தோழி சுடிதார்ல இருந்தா நல்லாவா இருக்கும், இங்க வா …இந்தா இது சுகுணா பீரோ …இதுல நிறைய புடவை இருக்கு உங்க ரெண்டு பேருக்கும் சட்டை சரியாதான் இருக்கும் அதனால ஏதாவது ஒன்ன எடுத்து சீக்கிரம் கட்டிட்டு வா……!”என்று உத்தரவிட்டு அவர் அகன்றதும் அவள் செய்வதறியாமல் நின்றாள்…. .சேலையா? எப்படி கட்டுவது ……
சுகுணாவின் அறையில் எதையோ எடுக்க வந்த காளிதாசன் ,பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருந்த ரம்யாவை பார்த்து தயங்கி நின்றான்……..
“என்னாச்சு ரம்யா? ” அவனது கேள்வியில் இவ்வுலகம் வந்தவள்.
“இல்லை…..வந்து…கவிதா அக்காவ வரசொல்றீங்களா ?
“அவங்க சம பிசியா இருக்காங்களே ”
“அப்படியா? ”
“என்ன வேணும் ரம்யா? ”
“வந்து …புடவை கட்டனும்னு உங்க அம்மா சொல்லிட்டாங்க …..ஆனா எனக்கு புடவை கட்ட தெரியாது ….அது தான்….” என்று இழுத்தாள்
பொங்கி வந்த சிரிப்பை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டவன்.
“நான் மதியை அனுபறேன் ரம்யா “என்று கூறி விட்டு தன் ஆளிடம் பேச வாய்ப்பு கிடைத்தது என்று ஆவலாக வெளியேறினான்.
சில நிமிடங்களிலேயே மதிஅழகி வந்து விட்டாள் “அட என்ன அக்கா ……சேலை கட்ட தெரியாதா? அத்தான் தான் உங்களுக்கு உதவி செய்ய சொன்னாங்க “அவளது சிரிப்பும் செம்மை படிந்த முகமும் ஆயிரம் அர்த்தம் சொல்ல.
“அடடா… அத்தான் அத்தான்னு பாசம் பொழியரியே, உங்களுக்கு திருமணம் பேசி முடிச்சாச்சா? “என்று ரம்யா கேட்க புடவையை அவளது கைககளில் இருந்து வாங்கிய மதிஅழகி,
ஒரு பெருமூச்செரித்தாள்.
“எங்கன அக்கா நிச்சயமாவுறது, ஊடால பாஸ்கர் அத்தான் …..இருக்காறே ”
“ஏன் அவருக்கும் உன்னை போல் அத்தை பெண்கள் இல்லையா? ”
“அத்த பொண்ணுங்களுக்கு என்ன கொறவு, என் பெரியம்மா பொண்ணு செண்பகத்தை கட்டிக்க சொல்லி எல்லாரும் சேந்து கூட்டம் போட்டு அத்தான் கிட்டபேசுனாங்க ……ஆனா அத்ததான் சொந்தத்துல பொண்ணு கட்ட மாட்டேன்னு “உறுதியா சொல்லிட்டாரு அவரது பேச்சை எதிர்த்து பேசும் சக்தி என் மாமாவுக்கே இல்லை மத்தவங்க என்னத்த பேசுவாங்க? இதுவரைக்கும் அசல்ல நாங்க பொண்ணு எடுத்ததே இல்ல.”பேசிக் கொண்டே புடவையை கட்ட ஆரம்பித்தாள். சற்று நேரம் யோசித்த ரம்யா
“ஒரு வேளை உங்க அத்தான் யாரையாவது அசல்ல விரும்பராரோ? ” கேட்கும் பொழுதே உள்ளே ஏதோ உழன்றது.
“ம்க்கும்….அதையும் தான் ஜாடை மாடையா கேட்டாச்சு, இப்பவரைக்கும் காதல் கீதல் எதுமில்லைன்னு சொல்லிடாங்க. அப்படி காதலிச்சாலும் அதை மாமாகிட்ட சொல்ல பயப்படறஆள் அத்தான் இல்லை, அதுமட்டுமில்லாம அவர் மேல எங்க எல்லார்க்குமே அலாதி நம்பிக்கை இருக்கு. அவர் ஒரு விஷயம் செஞ்சா அது சரியாதான் இருக்கும்னு எங்க எல்லார்க்கும் தெரியும். உங்களுக்கு ஒன்னு தெரியுமா? மாமாக்கு அடுத்த நாட்டாமை பாஸ்கர் அத்தான் தான், மூத்த ரெண்டு அத்தானுக்கும் ஊர் விஷயத்துல அவ்வளவா நாட்டம் இல்லை ம் …. இதோ சேலை கட்டியாச்சு…
அட!!! சேலையில் நீங்க எம்புட்டு அழகா இருக்கீக தெரியுமா? தேவத கனக்கா இருக்கீக பாத்து அக்கா எங்க ஊரு வயசு பசங்களை எல்லாம் ஒரு வழி பண்ணிடாதீங்க “என்று கூறி சிரித்ததவள் அறையை விட்டு வெளியேறினாள்.
*******
பதினைந்து பெண்கள் பந்தகாலுக்கு அபிஷேகம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து அதன் உச்சியில் மாவிலையும் பூவையும் சுற்றி அதன் குழியில் வைக்க ஆண்கள் அந்த குழிக்கு மண் நிறைத்து அதனை அசையாமல் ஊன்றி நிற்க வைக்க உதவினர்.
இந்த கிராமத்து பந்தக்கால் நடும் விழாவையும், நகரத்தில் நடத்தப்படும் பந்தக்கால் விழாவையும் ரம்யாவின் மனம் ஒப்பிட்டு பார்த்தது.
அங்கே மண்தரையை காண்பதே அரிதாகிவிட்டது. சிமெண்டு ரோடு, வீடுமுழுவதும் சிமண்டு தரை, அதனால் ஒரு சாக்கு மூட்டையில் மண்ணை நிரம்பி அதில் பந்தக்காலை குத்து மதிப்பாக நிற்கவைத்த சில திருமணங்களை அவள் பார்த்திருக்கிறாள். அந்தத் திருமணங்களில் பந்க்காலே ஆட்டம் கான்பதால் தான் திருமண உறவு பாதியில் பிரித்தெரியப்படுகிறதோ?????”
பிறகு பெண்ணுக்கு நலங்கு வைக்கும் சடங்கு நடந்தது. பெண்ணின் அத்தை மார்களும், அண்ணி மார்களும், மாமன் மகள்களும் என்று கிட்டத்தட்ட இருபத்தைந்து பெண்கள் சுகுணாவின் முகத்தில் சந்தனமும் மஞ்சளும் குங்குமமும் தடவி தடவி முகத்தையே மஞ்சளாக மாற்றி விட்டார்கள். குனிந்து அதனை சரி செய்த ரம்யா,
“சும்மா சாஸ்திரத்துக்கு கொஞ்சமா தடவலாமே, ஏன் இப்படி அப்பறாங்க “என்று சுகுணாவின் காதில் கிசு கிசுத்தாள்.
அந்த வழியாக வந்த பாஸ்கரனின் பாம்பு செவிகளுக்கு அது தப்பவில்லை, எதையோ எடுப்பது போல் ரம்யாவின் அருகில் வந்தவன்.
” இது எங்க ஊரு ஃபேஷியல் மேடம்…. உங்கள் ஊர் ஃபேஷியலைவிடவும் முகத்தை அதிக அழகு படுத்தும்….அடுத்து கடலை மாவுபோட்டு குளிக்கச்சொல்லுவாங்க. அதைவிட முகத்தை பளபளப்பாக்கக்கூடிய கிரீம் உண்டா? ” என்று கேள்வியோடு முடித்தவன் ரம்யாவை சிந்திக்க வைத்துவிட்டு அங்கிருந்து அகன்றான்.
ஓ., இதுதான் பழமை.. நம் முன்னோர்கள் எல்லாம் யோசித்துதான் வைத்திருக்கிறார்கள் நாம்தான் எதையும் யோசிக்காமல் எல்லாவற்றையும் மாற்றிவிட்டு இப்போது அவதிப்படுகிறோம்.
அதற்கு பின் ஊருக்கே அங்கே உணவு நடந்தது.
அதே போல் மூன்று நாட்கள் நலங்கும் விருந்தும் அமளிதுமிளிபட்டது.
பெண் அழைப்பு நாளும் வந்தது.
வாசலில் வாழைமரம் கட்டப்பட்டு. சீரியல் செட்டுக்கள் பிரகாசிக்க . ஸ்பீக்கர் செட்டில் சினிமாப்பாடல்கள் காதை கிழித்தன.
ஆங்காங்கே பட்டு சேலைகள் சரசரக்க பெண்கள் நடமாட, வாண்டுகள் கண்டிக்க ஆளில்லாமல் சுதந்திரமாக சுற்றிவர. ஆண்கள் வேட்டி சட்டையில் ஊர்கதை அளக்க, பெண்ணை அலங்கரித்துக் கொண்டிருந்தாள் ரம்யா, பியூட்டிஷியன் வைக்கும் பழக்கம் இங்கில்லையாம். ஆனால் அதுவும் அழகாகத்தான் இருந்தது. மது ,ரம்யா, கவிதா, பார்வதி இன்னும் சில பெண்கள்சேர்ந்து கேலியும் கிண்டலுமாய் அலங்கரிக்க அதுவும் ஒருவகை இனம்புரியாத இன்பத்தை கொடுத்தது.
ஏறத்தாழ 30வரிசைகள் வந்த வண்ணம் இருந்தன. அதாவது, தாய் மாமாவில் துடங்கி, அத்தனை மாமா மார்கள், அத்தை மார்கள், ஒன்றுவிட்ட முறை சொந்தங்கள் என்று, பழத்தட்டுகளும், இனிப்புகளும், புடவைகைளும், மாலைகளும் குவிந்த வண்ணம் இருந்தன. தங்கையை நடுவில் விட்டு இப்புறம் பாஸ்கரனும் அப்புறம் காளிதாசனும் நின்று, வாசலில் வரிசைதட்டு ஏந்திய சொந்தங்களுக்கு ஆரத்தி எடுத்து முடிக்கப்பட்டதும் விழுந்து வணங்கி தட்டுகளை வாங்கிச்சென்றே களைப் படைந்திருப்பார்கள் என்றால் அது மிகையாகாது.
வெறுமனே உடன் சென்ற ரம்யாவாலுமே முடியவில்லை, வீடியோ கேமராக்களின் சுட்டெரிக்கும் ஒளியும் , போட்டோ க்களின் கிளிக்கும்… அதிகம் கட்டி பழகாத சேலையும், என்று ஒரே நசநசப்பு. இடையில் அந்த கூட்டநெரிச்சலில் அவ்பொழுது பாஸ்கரனுடனான சின்னச் சின்ன உரசல்கள் அதனை தொடர்ந்து இருவரின் விழிப்பார்வைகள். அப்பப்பா எப்போதடா எல்லாம் முடியும் என்றாகிவிட்டது அவளுக்கு.
நாட்டாமை மணிவண்ணனும் மரிக்கொழுந்தும் வந்தவர்களை அழைத்து உணவருந்த வைப்பதும் , வெற்றிலை பாக்கு கொடுப்பதும் என்று ஓடி ஓடி கவனித்தனர். சுகுணாவின் மூத்த இரண்டு அண்ணன்கள் வரிசை பொருட்களை டிராக்டரில் ஏற்ற வந்த ஆட்களை கவனித்துக்கொண்டிருந்தனர். பார்வதியும், கவிதாவும், அங்கே இருக்கும் பெரியவர்கள் ஏவுவதை செய்து கொண்டிருந்தார்கள்.
ஒரு வழியாக எல்லாம் முடிந்து உணவும் முடிந்தது. பிறகு மாப்பிள்ளை வீட்டிலிருந்து வரிசை வர ,அதுவே இறுதி என்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள் அப்பாடா என்றிருந்தது ரம்யாவிற்கு, பின் மாப்பிள்ளை வீட்டாரும் பெண்வீட்டாரும் தாம்பூலம் மாற்றிக்கொண்டார்கள். தாம்பூலப்புடவையை சுகுணா கட்டிவர மாலைஅணிவித்து பரிசம் போடப்பட்டது. பின் பெண்வீட்டு பெரியவர்கள்
பெண்ணுக்கு விபூதிவைத்து வழிஅனுப்ப மணப்பெண்ணையும் , ரம்யாவையும்., மதியழகியையும், ஆண்துனைக்கு காளிதாசனையும் ஏற்றிக்கொண்டு கார் சிலுக்குவார் பட்டியை நோக்கி விரைந்தது. பின்னோடு பெண்வீட்டு வேன் ஒன்றும் பிள்ளைவீட்டு வேன் ஒன்றும் மக்களை சுமந்து சென்றது.
4 Comments
Arumai kiraamatthu thiruvila mathiri kiraamatthu kalyanamu azhako azhakuppa solla vaarththai varavillai kiraam azhako azhaku
நன்றி, கிராமம்னா எல்லாருக்குமே தனி ஈர்ப்பு இருக்கு தானே
கிராமிய நடை அருமை!!
நன்றி