Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

முகங்கள்-16

அத்தியாயம் – 16

சந்தனாவின் அறையிலிருந்து இறுக்கமான முகத்துடன் அவனது ரூமினுள் நுழைந்த ருத்ரபிரதாபின் கண்கள்  சோபாவில் அமர்ந்த வண்ணம் உறங்கி விட்டிருந்த சந்தனாவின்  மேல் படிந்தது.

அவளது அயர்ந்த உறக்கத்தை பார்க்க பார்க்க அவனது கோபம் அதிகரித்தது. ‘இத்தனை வருட  திரைத்துறை  பயணத்தில் ஒரு நாளும் புரோடியூசரிடம் மனஸ்தாபம் ஏற்பட்டதில்லை. எல்லாம் இவளால் வந்தது பற்களை கடித்தான். அங்கேயே  இருந்தால் எங்கே அவளை எழுப்பி தன் கோபத்தை அவளிடம் வெளிப்படுத்திவிடுவாமோ என்கிற பயத்தில் ரூமை விட்டு வெளியேறினான். சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு , ஏதேதோ இலக்கில்லாமல் சிந்தித்தவாறு காரிடாரில்  நடந்தவன் கால் வலியை உணர்ந்து மணிக்கட்டை பார்த்தான் நேரம் நடு இரவு ஒன்று என்று  காட்டியது  அந்த  கருப்பு நிற ரோலக்ஸ். இதற்கு மேல் விழித்திருப்பது  காலை  படப்பிடிப்பை  பாதிக்கும் என்றுணர்ந்தவன் ரூமினுள் நுழைந்தான்.

 

இப்போதும் அதே நிலையில் தூங்கிக் கொண்டிருந்தாள் சந்தனா.இப்போது அவளது முகத்தை  பார்த்தவனுக்கு ஏனோ பால்  நிலவின் நினைவு வந்தது. சஞ்சய் கூறிய ‘விஸ்வாசி’ அவனுள் என்னவோ செய்தது. அவளுக்கு பிடிக்காத நந்தினியாய்  நடிப்பது , கிருபாகரன் , சஞ்சய்யை  சமாளிப்பது , இவை எல்லாவற்றிற்கும் மேல் அவனது அருகாமை  அவளுக்கு  தீயின்  அருகாமை  என்பதும் அவன் அறிந்ததே .  ஆனால் என்னதான்  செய்ய  முடியும் ?  அவனுக்கு  அவனது  படம்  தான் முக்கியம்,  அதை தவிர மற்றவை எல்லாமே துட்சம் தான். குறைந்தபட்சம் அவளது  அயர்ந்த தூக்கத்தை கெடுக்க  வேண்டாம் என்று தோன்றவே சத்தமில்லாமல் கட்டிலில் படுத்து கொண்டான்

 

*************

 

காலை நடைபயிற்சிக்காக ருத்ரபிரதாப்பை அழைக்க வந்த பிரகாஷ் அங்கே சோபாவில் தூங்கும்  சந்தனாவை  பார்த்ததும் வாய்பிளந்தான். கதவை திறந்து விட்ட ருத்ரனின் சிவந்த கண்களையும், கைமறைவில் அவன்  கொட்டாவி விட்டதையும் பார்த்தவன் பேந்தப் பேந்த விழித்தான்.

 

பிரகாஷின் முகமாற்றத்தின் பொருள் ஒருவாறு புரிந்து கொண்ட ருத்ரன் சைகையால் அவனை  வெளியே அழைத்துச் சென்றான்.

 

“ம்…. சொல்லுங்க சார்? என்ன நடக்குது?” புருவம்  இரண்டையும் உயர்த்தி குறும்பாக கேட்டவனிடம்

 

“நீ நினைக்கிற எதுவும் நடக்கலை ” என்றான் பொதுப்படையாக ஆனால் அழுத்தமாக

 

“ஹலோ! உங்களுக்கு அந்த ஆசை வேறயா? ” என்றவன் குரலை தணித்து ” உள்ளே இருப்பது  சாக்ஷாத்  அந்த  சீதா  தேவியே தான் அதனால் நீ கற்பனையை குறைச்சிக்கோ ” என்றவன்  ருத்ரபிரதாப்பின் முகத்தை படிக்க முயன்றான்.

 

அங்கே  எந்த வித மாற்றமும் இல்லை. சிறந்த இயக்குனரல்லவா?  அடுத்தவருக்கு நடிப்பை  சொல்லி  கொடுத்தே  இவன்  தேர்ச்சி பெற்றுவிட்டான்

 

************

 

எத்தனை முயன்றும் தன்னையே சந்தனாவால் மன்னிக்க முடியவில்லை. ஒரு அன்னியனின் அறையில் அவள் எப்படி  தூங்கினாள்!  அதுவும் இந்த கொடூரனோடு.

 

இதை நினைத்து நினைத்தே அவளது தலை வலிக்க தொடங்கியது. அது புரியாமல் ருத்ரன்  வேறு  நேற்றைய  சம்பவத்தின் காரணத்தை விளக்கிக்கொண்டிருந்தான். ‘அவள்தான்  கதவை  சரியாக  மூட வில்லையாம்!  நந்தினி  என்று எண்ணி அவளை நெருங்கினானாம்  அந்த  அறிவுகெட்ட சஞ்சய் , அதனால் இனி ரூமினுள் சென்றதும் லாக்கை  இரண்டு  முறை  சரி பார்க்க  வேண்டுமென்று  அவளுக்கே அறிவுரை கூறுகிறான்.சாத்தான் வேதம் ஓதுவது போல் நூற்றில்  ஒரு  பங்காக  இவன்  கூறுவது  உண்மையாக இருந்தாலும்  கூட  திறந்த  வீட்டில்  நாய்  போல்  நுழைய  அவனுக்கு  என்ன தைரியம் ?எல்லாம் இவன் கொடுத்த தைரியமாகத்தான் இருக்கும் ‘

 

அவளது கடுகடுத்த முகத்தை பார்த்துக் கொண்டே அவள் எதிரில் சூடான தேனீரை வைத்தான்.

 

அவனை அடித்து விடுவது போல் பார்த்தவளை விழியகற்றாமல் பார்த்தவன்.

 

“முதலில் டீயை குடி ” என்றான்

 

“எனக்கு வேண்டாம் ” என்றாள்  விடாப்பிடியாக.

 

“சரி வேண்டாம் , சீக்கிரம் குளிச்சிட்டு ரெடியாகு, உன்னுடைய இன்றைய காஸ்ட்யூமை இங்கேயே  வரவழைச்சிட்டேன்”

 

ஷாக் அடித்தது போல் எழுந்து நின்றாள் சந்தனா

 

“நான் இங்கெல்லாம் குளிக்க மாட்டேன், எ … எ…..என் ரூமுக்கு போகனும் ” குழந்தை போல்  மிரண்டவளை  விசித்திரமாக  பார்த்தவன்

 

ஒரு பெருமூச்சுடன் அவளெதிரில் அமர்ந்து “இங்கே பார் சந்தனா நீ இப்படியே இந்த நைட்டியில்  வெளியே  போனா  நம்மை பத்தின கிசு கிசு கட்டாயம் பரவும். அதில்  எனக்கு துளியும்  விருப்பமில்லை. அதனால் இங்க குளிச்சு  டிரஸ்  மாத்திட்டா  வித்தியாசமா எதுவும்  தெரியாது.  நான் எடிட்டர்ஸ் , மியூசிக் டைரக்டர்ஸ் , கோரியோகிராபர்ஸ் எல்லாரையும் டிஸ்கஷன்னு  கூப்பிட்டிருக்கேன் ,டிஸ்கஷன்  முடிச்சு எல்லோரும் ஒன்னா வெளியேறும்  பொழுது  வித்தியாசமா தெரியாது. ” என்றவன்  தன்  பேச்சு  முடிந்தது  என்று  எழுந்து  வெளியே  சென்று  விட்டான்.

 

அவன் சந்தனா என்று அழைத்ததே அவளுக்கு முதல் அதிர்ச்சி. அவள் ஒன்று செய்ய வேண்டும்  என்பதற்காக  இத்தனை  விளக்கம் கொடுத்தது இரண்டாவது அதிர்ச்சி .அவளுக்கு  மட்டும்  அவனோடு  இணைத்து  பேசப்படுவது ருசிக்குமா  என்ன? சீச் சீச்… “நினைத்தாலே  அருவருப்பாய்  இருந்தது. வேறு வழியின்றி குளியலறை நோக்கி நடந்தாள்.

 

************

 

டீ கோப்பையுடன் ரூமை விட்டு வெளியேறிய ருத்ரபிரதாப்பை பதட்டத்துடன் எதிர்கொண்டான்  பிரகாஷ்.

 

“அஷ்வின் வந்திட்டிருக்கான் ,என்ன சொல்லி அனுப்புறது ?”

 

சாவதானமாக சுவற்றில் சாய்ந்து டீயை ஒரு மிடறு பருகியவன் சில வினாடிகள் தீவிரமாக  சிந்தித்தவன்  ஒரு  பெருமூச்சுடன் “ம்… வரட்டும். நீ உடனே  பிரஸ்மீட்டுக்கு   ஏற்பாடு  செய்.  நந்தினி  பிரஸ்  மீட்  முடிஞ்சதும் தான்  அஷ்வினை மீட் பண்ணனும் அதை  நீ  பாத்துக்கோ,  மத்ததை  நான் பார்த்துக்கிறேன்” என்றான்  சிந்தனை  கலையாமலே

 

“ஆர் யூ ஓகே ருத்ரா ? இப்போ பிரஸ் மீட் கொடுக்கிறது சரியா ? ஒரு தடவைக்கு  ரெண்டு தடவ  யோசிச்சுக்கோ ! “உண்மை  வெளிவந்தால்  என்னென்ன  நடக்குமோ  என்கின்ற பயம்  அவன்  குரலில்  தெள்ளத் தெளிவாக தெரிந்தது

 

“நல்லா யோசிச்சு தான் பேசறேன், ஆனா இதை இவ்ளோ சீக்கிரம் சொல்ல வேண்டிவரும்னு நான்  எதிர்பார்க்கல”என்றவனது முகத்தில் தெரிந்த தீவிரம் ஒரு வித அச்சத்தை வரவழைத்த பொழுதும், அவனிடம் கேள்வி கேட்கும் தைரியம்  இல்லாமல்  அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலையில் ஈடுபட்டான் பிரகாஷ்.

 

முகங்களின் தேடல் தொடரும் …………




5 Comments

You cannot copy content of this page