Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

கற்க கசடற

கற்க கசடற

 

“கீஈஈஈ………கேஏஏ……”

 

அது ஒரு கராத்தே பயில்விக்கும் பள்ளி (Kicks and punches karate school – mudichur – west tambaram)

 

என் மகன் கொஞ்சம் பயந்த சுபாவம், அவனை வீர தீரன் ஆக்க வேண்டும் என்று எல்லா தாய்மார்களை போலவே நானும் ஆசைபட்டு தான் அந்த பள்ளியில் சேர்த்திருக்கிறேன். அன்று அவனது ஐந்தாம் நாள் பயிற்சி,  நான்கு நாட்கள் என் கணவர் தான் அவனை அழைத்துச்சென்றார். என் மகனின் ஆசைக்கிணங்க அன்று நான் சென்றிருந்தேன்.

 

என் மகனை பயிற்சிக்கு அனுப்பிவிட்டு பெற்றோர்களுக்காக போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டேன்.

 

 

அந்த வகுப்பு கத்து குட்டிகளுக்கானது (அதாவது வெள்ளை பெல்ட்).  அவர்களை குழுக்களாக பிரித்து பயிற்சியாளர்கள் மாணவர்களை தயார்படுத்திக்கொண்டிருந்தனர்.

 

இந்த பயிற்சியாளர்கள் வேறு யாருமில்லை அங்கேயே பயிற்சி பெறும் பிரவுன் பெல்ட் மாணவர்கள்தான் (seniors), அவர்கள் அனைவரையும் அந்த பள்ளியின் நிர்வாகி 6th Dan sensei திரு கார்த்திகேயன் உன்னிப்பாக கண்காணித்துக் கொண்டிருந்தார், அவர் கையில் பெரிய கம்பு ஒன்று இருந்தது. பயிற்சியில் ஏதேனும் தவறு செய்தால் அவ்வளவுதான் என்று சொல்லாமல் சொல்லியது அந்த கம்பு.( ஒருவேளை இவர் சிலம்பமும் சொல்லித்தருவாரோ என்று என்னுள் தோன்றியதை உடனே அழித்துவிட்டேன்)

 

அந்த குழந்தைகள்  கையையும் காலையும் விரைப்பாக முன்னும் பின்னும் அசைக்க முயன்று “.கீஈஈஈ……….கேஏஏ…” என்று எழுப்பும் சத்தம் சங்கீதமாய், கேட்கும் எனக்குள்ளும் வீரத்தை ஊட்டும் வண்ணம் இருந்தது. என் மகனுடன் சேர்ந்த ஓர் குழுவிற்கு சாய்கிருஷ்ணா என்ற பிரவுன் பெல்ட் மாணவன் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தான். லீடர்ஷிப் மிக முக்கியமல்லவா.

 

அந்த கூட்டத்தில் என் மகனும் “கீஈஈஈ……..கேஏஏ….” என்று எனக்கு புரியாத மொழியில் கத்திக்கொண்டிருந்தான். அங்கு நடந்த எல்லாவற்றையும் ஓர் சுவாரஸ்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். மகனின் வீரத்தை பார்க்க எந்த தாய்க்கும் தெவிட்டுவதில்லை தானே.

 

அந்த இடமே சண்டை களமாக இருந்தது, வலிகள் நிறைந்த இடமாக, வீர தீர செயல்களுக்கான இடமாக வருங்கால இரும்பு இதயங்களை உற்பத்தி செய்யும் இடமாக என் மனதில் ஆழப்பதிந்து கொண்டிருக்கையில் , முற்றிலும் மாறுபட்ட ஒரு காட்சி அங்கே அரங்கேறியது

 

நேரம் மாலை 6.00 – இருள் சூழ்ந்து கொண்டிருந்த நேரம்,  அப்போது வெளியிலிருந்த ஈசல்கள் உள்ளே இருந்த வெளிச்சத்தை நோக்கி வரத் தொடங்கின. இதனால் குழந்தைகளின் கவனம் சிதறுவதை உணர்ந்த Sensei அந்த அறையின் கதவினை மூடச்சொன்னார். உடனே கதவுகள் மூடப்பட்டன, ஆனால் உள்ளே வந்துவிட்ட ஈசல்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்தன. சில இங்கும் அங்குமாய் பறந்தன, சில கராத்தே பயிற்சி செய்யும் மேட்டில் விழுந்து கிடந்தன.

 

Sensei மாணவர்களை பார்த்து “கிளியர் த மேட் ” என்றார்

 

உடனே அங்கே இருந்த கத்துகுட்டி (வெள்ளை பெல்ட் குட்டீஸ்)  சில அந்த ஈசல்களை  கையால் அடித்து கொன்றனர், சிலர் காலால் மிதித்தனர், என் மகன் எல்லாவற்றையும்  வேடிக்கை  பார்த்து கொண்டு நின்றிருந்தான், அவன் தான் பயந்த சுபாவமாயிற்றே!!!!

 

ஆனால் அந்த கூட்டத்தில் பிரவுன் பெல்ட் மாணவன் (என் மகனுக்கு பயிற்சி அளித்த சாய்கிருஷ்ணா) முன் வந்து கத்துகுட்டீஸை வழி நடத்தினான்

 

“ஈசலை கொல்லாதீங்கப்பா பாவம் ” என்று கூறிக்கொண்டே உள்ளேயிருந்த ஒவ்வொரு ஈசலையும் பட்டாம்பூச்சியை பிடிப்பது போல் பிடித்து கதவுக்கு வெளியே விட்டுவிட்டு வந்தான்.

 

சாய்கிருஷ்ணாவின் இந்த செயலுக்கு நான் விசிறியாகிவிட்டேன். காரணம் ஈசல்களுக்காக எப்போதும் என் மனதில் ஓர் ஈரத்தன்மை இருக்கும், ஒரே நாள் மட்டுமே ஆயுளாக கொண்ட ஜீவனல்லவா, அதனை காத்த அந்த மாணவனின் மீது எல்லையில்லா மரியாதை உண்டானது. அவனை பார்த்து மற்றவர்களும் கற்றுக்கொண்டு அவனைபோலவே செய்தனர்.

 

மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட சாய்கிருஷ்ணாவின்  இந்த செயலுக்கு என் கணவர் கூறிய காரணம் “அவனோட பேருக்கு ஏத்த மாதிரி நடந்துக்கிறான் ” என்பதுதான். இது ஒரு புறம் இருக்கட்டும், எனக்கு தோன்றிய காரணங்கள் இரண்டு, ஒன்று அவனது பெற்றோர் “பிற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடாது” என்று சொல்லி வளர்த்திருக்கலாம்,  இன்னொரு மிக முக்கிய காரணமாக நான் நினைத்தது அவன் கற்றுக்கொண்டிருக்கும் அந்த கலை, அந்த கூடத்தில் கற்றுத்தரப்படுவது தற்காப்புக் கலை,  சண்டை போடவும் அதனை தடுக்கவும் தான்  பயிற்றுவிக்க படுகிறது, ஆனால் அதற்கு சரிசமமாக அங்கே மனித நேயமும் விதைக்கப்படுகிறது.  எனக்கு ஒன்று தெளிவாக புரிந்துவிட்டது எந்த ஒரு  கலையையும் முழுதாக புரிந்து கொண்டு கற்பதே மேன்மையை தரும்.

 

அதனை சரியாக செய்யும் Sensei கார்த்திகேயன் அவர்களுக்கும் அவரது மாணவச் செல்வங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

 

– இப்படிக்கு சாய்கிருஷ்ணாவின் விசிறி – இந்திரா செல்வம்

 

 




3 Comments

  • Indra Selvam says:

    Hi friends…. நம்ம Lifela நிறைய சம்பவங்கள் நடக்கும், அதை நம்ம எல்லாரும் இங்க பகிர்ந்துக்கலாம், Readers writers……. எல்லாருமே, என்னுடைய சுவாரஸ்யமான நிகழ்வை நான் முதலில் பதிவிட்டுவிட்டேன். – நன்றி

  • Wow what a observation….. Each lines not a meaning it’s a feeling
    Thanks a lot mam for your encouragement

You cannot copy content of this page