Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Share Us On

[Sassy_Social_Share]

காஜலிட்ட விழிகளே 5

அன்று ஞாயிற்றுக்கிழமை. கார்த்திக் ஞாயிறுகளில் வீட்டில் தங்குவதில்லை என்று நன்றாக தெரிந்து வைத்திருந்தான் தருண். அவனது உற்சாகத்தைப் பார்த்து அவனால் கேள்வி கேட்காமல் இருக்க முடியவில்லை.

“ டேய் ஒவ்வொரு ஞாயிறும் எங்கடா போற? ”

“ டேட்டிங். ”

படுத்திருந்த தருண் எழுந்தேவிட்டான். தனது போர்வையை இழுத்து பக்கத்தில் எறிந்தவன் ஒன்றும் பேசாமல் வேகமாக பல்துலக்கினான். கார்த்திக் குளிக்கப் போவதற்குள் தான் குளித்து நல்ல ஆடையாக ஒன்றை எடுத்துப் போட்டுக் கொண்டான். கார்த்திக் தருண் செய்யும் ஆர்ப்பாட்டத்தை கவனிக்காமல் அமைதியாக தனது வேலையில் மும்முரமாகவே இருந்தான். இந்த கொசு ஏன் இப்படித் துள்ளுது என்று நினைக்காமல் தனது வேலையை செய்யணும் என்று முடிவும் கார்த்திக் எடுத்துவிட்டான்.
இறுதியில் கார்த்திக்கின் பைக் சாவியை எடுத்து தருண் தன் கையில் வைத்துக்கொண்டான். இதைப் பார்த்து சிடுசிடுத்த கார்த்திக் அவனிடம் கேட்டான்,

“என்ன தருண் லிஃப்ட் வேணுமா? நான் அவசரமா போறேன். நீ ஆட்டோ பிடிச்சிக்கோயேன். இல்லை உன்கூட வேலையில் இருக்கானே அந்த வினோத்கிட்ட ஃபோன் போட்டு வரச்சொல்லு. ”

“இல்லை கார்த்திக் நான் உன்கூட வர்றேன். கையில் காசு ரொம்ப கம்மியா இருக்கு! இந்த ஊரில் எனக்கு உன்தைத்தவிர யாருடன் பழக்கம் இருக்கு? நீதான என் பெஸ்ட் ஃப்ரண்ட்! நீ தான் உதவி செய்கிறதில் குருவாச்சே!”

“மச்சி , ‘காக்கா காக்கா நீ ரொம்ப அழகா இருக்க! ஒரு பாட்டு பாடு.’ கதையெல்லாம் நான் ஆயிரம் தடவை கேட்டாச்சு! நீ உன் வழியைப் பார். நான் என் வழியைப் பார்க்கணும். ”

தருண் கார்த்திக் சொல்லச் சொல்ல கேட்காமல் வீட்டிலிருந்து வெளியேறி பார்க் செய்து வைத்திருந்த கார்த்திக்கின் வண்டி மீது ஏறி உட்கார்ந்தான்.

கார்த்திக் அவனிடம் கோபமாக வந்து நின்றபோது “என்கூட வர்றியா? இல்லை நீ ஆட்டோ பிடிச்சி போறியா? ” என்றான்.

“நான் ஸ்ருதி வீட்டுக்கு போறேன்டா. உன்னை எப்படி கூட்டிட்டு போக? ”

“நானும் ஸ்ருதி வீட்டுக்குதான் போகணும். அவுங்க அம்மா என்னை ஒரு நாள் நீ கண்டிப்பா வீட்டுக்கு வரணும் என்று சொன்னாங்களே. அந்த நாள் இந்நாளாக இருக்கட்டும். ”

“இம்சைடா நீ, தள்ளு! சென்னை ஊர் உனக்கு தெரியாது. நானே ஓட்டுறேன். ”

வண்டி தெருமுனைதான் தாண்டியிருக்கும். கார்த்திக் சொன்னான், “தருண் நீ நல்லாதானடா இருந்த. தீடீரென்று உனக்கு என்னடா ஆச்சு? ஃப்ரண்ட் டேட்டிங் போறேன்னு சொல்றேன்.. கூட வர்றேன் ஒத்தக் காலில் நிக்கிறியே? ”

“நானும் அதனால்தான்டா வர்றேன்னு சொல்றேன். நீ டேட்டிங் போவதை கண்குளிரப் பார்த்து ரசிக்கணும்தான் உன்கூட வருவதே! தப்பா எடுத்துக்காதே மச்சி. ஒரு வருஷமா ஒவ்வொரு ஞாயிறும் நீ கிளம்பும்போது தோன்றும் ஆர்வம். இன்னைக்கு கொஞ்சம் அதிகமாயிடுச்சு. ஆர்வக்கோளாறு என்று வச்சிக்கோயேன். ரோட்டைப் பார்த்து வண்டி ஓட்டு!

“டேட்டிங் போகும்போது யாராவது ஃப்ரண்டை துணைக்கு அழைச்சிட்டு போவாங்களா? சொல்லு? ”

“ஸ்ருதியை நீ பிக்கப் பண்ணும்போது நீ வழிவதை பார்க்கணுமே.. அதான். பேசாமல் வண்டி ஓட்டு! ”

“ஆனால் நான் ஸ்ருதி வீட்டிற்கு போனதும் நீயும் திரும்பிப் பார்க்காமல் ஓடிடணும். என்னை தொந்தரவு செய்யக்கூடாது. ஐ வான்ட் பிரைவசி! ”

“என்னடா? முக்கால் மணி நேரம் உன் பைக்கில் கால் கடுக்க உட்கார்நது வந்திருக்கேன். கிளைமாக்ஸ் பார்க்காமல் போக முடியுமா? அந்த கரும்பு ஜுஸ் கடையில் ஐந்து நிமிஷம் வண்டியை நிறுத்து. இன்னும் ஐந்து நிமிஷம் ஆகும் இந்த சிக்னல் கிளியர் ஆக. அதற்குள் ஒரு ஜுஸ் குடிச்சிடலாம்.”
கார்த்திக்கிற்கும் நல்ல பசி. வண்டியை அந்த கரும்பு ஜுஸ் கடையில் நிறுத்தினான்.

தருணும் கார்த்திக்கும் அந்த கரும்பு ஜுஸ் கடையில் ஜுசைக் குடித்துவிட்டு ஐநூறு ரூபாய் தாளை அந்த ஜுஸ் கடைக்காரரிடம் கொடுத்தனர். சில்லரை மாற்ற பக்கத்து கடைக்குச் சென்றார் கடைக்காரர்.
அமைதியாக இருவரும் நின்றனர். இடதுபுறத்தில் நகர்ந்த வாகனங்களின் கத்தல் காதைக் கிழித்தது. அப்போது அவர்கள் பக்கத்தில் ஒரு அறுபது வயது ஆள் “ கடையில் ஆள் இல்லையாப்பா? ” என்று கேட்டுக்கொண்டே அருகே வந்தார். அவரிடம் “ஆமாம் சார்.

சில்லரை மாற்ற போயிருக்கார். சார்.. நீங்க? ” என்றான் தருண்.

“அட. தருண்! இங்க எப்படி? ”

“நான் இங்கதான் சார்.. சென்னையில் தான் வேலை செய்யிறேன். ”

“குட். சம்பளம் கட்டுபடியாகுதா? வேலை ஒரு வருஷமாவது இருக்குமா? ம்? ”

“இருக்கும் சார். நீங்க எப்படி சார் இங்க? ”

“நான் இங்கதான் பாவேந்தர் ஆர்ட்ஸ் காலேஜில் சேர்மென்னாக இருக்கேன். மதுரையில் ரிட்டையர்டு ஆனபிறகு நான் இங்க வந்துட்டேன். சும்மா இருக்க பிடிக்கலை அதான் பாவேந்தர் கலேஜில் அப்ளை பண்னேன். இப்ப சேர்மென் ஆகிட்டேன். ”
கார்த்திக் அவர் சொன்ன பதிலில் வியப்படைந்தான் “சார் எந்த காலேஜில் சேர்பெர்சனாக இருக்கீங்க? ”

“பாவேந்தர் ஆர்ட்ஸ் காலேஜ். நீ தருண் ஃப்ரண்டா? ”

“ஆமாம் சார். ”

“தருண் ரொம்ப நல்ல பையன். நீ அவனை டிரின்க், பியர் என்று பழக்கப்படுத்திடாதேப்பா கார்த்திக்! ”
“சார் எனக்கும் அந்த பழக்கம் எல்லாம் இல்லை. இது என் கார்ட் சார். நான் ஒரு மியூசிக் ட்ரூப் வச்சிருக்கேன்.”

“நல்ல சமாச்சாரமாச்சே.. குட் குட். நான் கிளம்புறேன் டிரைவர் பாவம் ரொம்ப நேரமா நிற்குறான். தருண் வரட்டுமா?”
“சார் உங்க செல் நம்பர் தாங்க! ” என்றான் தருண்.

“இந்தாப்பா குறிச்சுக்கோ” என்று தனது செல்பேசி எண்ணைச் சொன்னார்.
தருண் தனது செல்பேசியில் குறித்துக்கொண்டான்.
அவர் கிளம்பியதும் சில்லரையை வாங்கி பையில் போட்டுக்கொண்ட கார்த்திக் அவசரப்பாட்டான். வண்டியை நேராக ஸ்ருதியின் வீட்டின் வாசலில்தான் நிறுத்தினான். “டேய் எனக்கு ரொம்ப லேட் ஆகிடுச்சு. நீ கிளம்புடா. ”
“நோ நத்திங் டூயிங்! ”
இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும் போதே ஸ்ருதியின் அம்மா வாசல் வந்துவிட்டார்.
“வாப்பா கார்த்திக் பைக் சத்தம் கேட்டுச்சேன்னுதான் பார்க்க வந்தேன்… அட தருண் நீயும் வந்திருக்கியா? கார்த்திக் தம்பியிடம் உன்னைப் பற்றிதான் நான் கேட்டுக்கிட்டேயிருப்பேன். ஞாயிற்றுக்கிழமையானால் நீ பகல் முழுதும் தூங்குவியாமே? போன வாரம் உனக்கு டயரியாவாமே? பத்து நாளாக நீ கஞ்சியா குடிச்சியாமே? கார்த்திக்தான் சொன்னான். உன்னையும் போன சன்டே வீட்டிற்கு அழைச்சிட்டு வரச்சொன்னபோது கார்த்திக் ரொம்ப வருத்தப்பட்டுச் சொன்னான். ஒரு பத்து நாள் ஊர்ப்பக்கம் போயிட்டு வாப்பா. அப்பதான் உடம்பு தேறும். வேலை வேலைன்னு அலஞ்சி உடம்பைக் கெடுத்துக்காதே.. சரியா? ”

ஸ்ருதியின் அம்மா பேச ஆரம்பித்தபோது நெஞ்சைப் பிடித்தவன்தான்… அதன் பிறகு ரயில் வண்டிப் பெட்டியாக பொய்களை நண்பன் அவிழ்த்துவிட்டிருந்த உண்மை அறிந்து கையை நெஞ்சிலிருந்து எடுக்கவேயில்லை.

கார்த்திக் தருணை ஓரக்கண்ணால்கூடப் பார்க்காமல் தனது வண்டியை ஷெட்டில் நிறுத்தினான். அதே ஷெட்டில் பார்க் செய்யப்பட்டிருந்த அவனது காரை எடுத்து வாசலில் நிறுத்தினான். அவனது கார் எப்போதும் இங்கேதான் இருக்கும். அவனது வீட்டில் பார்க்கிங் வசதிகள் இல்லை. மேலும் அவன் தனியாக இருப்பதால் கார் தேவைப்படவும் இல்லை. காரை நிறுத்தியதும் ஸ்ருதியின் அம்மா உரக்க கத்தி ஸ்ருதியை அழைத்தார்.

“ஸ்ருதி வாம்மா. நேரம் ஆச்சு? கார்த்திக் வந்தாச்சு!”

தருணால் நம்பவே முடியவில்லை. ஸ்ருதியின் அம்மாவே கார்த்திக்குடன் தனியே அப்படி எங்க அனுப்புறாங்க?
அவன் தலையே வெடித்துவிடும்போல இருந்தது.
இந்த இரண்டும் எங்க போகுதுங்க? அதுவும் அம்மா கண்ணிலேயே மண்ணைத்தூவிட்டு அப்படி எங்கதான் போவாங்க? விஷயம் என்ன என்று தலையைப் பிய்த்துக்கொள்ள அவன் நினைத்தபோது ஸ்ருதி அழகிய சேலையில் வெளியே வந்தாள்.
கார்த்திக்கிடம் ஓடிச்சென்று நீ மச்சக்காரன்டா என்று சொல்ல துடித்தது அவன் நாவு. ஆனால் எம்டன் சொன்ன பொய்களை நினைவுகூர்ந்து மனதின் ஆசையை ஓரம்கட்டினான்.

ஸ்ருதி காரில் ஏறி உட்கார்ந்ததும் கார்த்திக்கின் முகத்தில் ஆயிரம்வாட்ஸ் பல்ப் மின்னியது.

‘ஸ்ருதி பின்னாடி சீட்டில் உட்கார்ந்தபோதே இவ்வளவு பிரகாசமா பல்ப் எரியிதே.. முன்னாடி உட்கார்ந்தால்.. துரை அணல்மின் நிலையம்தான்.’ என்று மனதில் பொறுமியவன் கார்த்திக் அருகே சென்று நின்றபோது, கார்த்திக் அவனிடம், “மச்சி நைட் பார்க்கலாம். ” என்று அவசரமாகச் சொன்னான்.

தருண் கிளம்ப ஆரம்பித்தபோது ஸ்ருதியின் தந்தை உள்ளேயிருந்து குரல் கொடுத்தார், “கார்த்திக் அந்த பாஸ் உன்கிட்டதானே இருக்கு? இன்று கொஞ்சம் லேட் ஆகிடுச்சு..”
அதே ஷனத்தில்தான் அவசரம் அவசரமாய் தனது தோள்ப்பைக்கொண்டு தருணை இடித்ததைக்கூட கவனிக்காமல் காரில் கார்த்திக்கின் பக்கம்மாய் உட்கார்ந்தார்.

“சாரிப்பா. கொஞ்சம் லேட் ஆயிடுச்சு.. பொறு! பொறு கார்த்திக். என் ஃபோன் அடிக்குதுப்பா. ” என்றவர் அதனை எடுத்து காதில் வைத்தார். அவரே பேசத்தொடங்கினார்..

“சார் சொல்லுங்க. நான் தான் பேசுறேன். ஓ அப்படியா? சரி சார் ஒண்ணும் பிரச்சனையில்லை. அடுத்த வருஷம் பாத்துக்கிட்டா போச்சு. என் பொண்ணுதான் ரொம்ப அங்க பாடணும் என்று ஆசைப்பட்டது. இருக்கட்டும் கிருபா நான் தான் அடுத்த வருஷம் பார்த்துக்கலாம் என்று சொன்னேன்தானே. விட்டுவிடுங்கள். ம் சரி சரி. நான் இப்ப அன்பு இல்லத்திற்குப் போறேன். வச்சிடவா கிருபா? ”
“யார் சார் ஃபோனில்? ” என்றான் கார்த்திக்.

“நாம அந்த ஆர்ட்ஸ் காலேஜில் ப்ரோகிராம் வைக்கலாமா என்று கேட்டிருந்தோம். ஞாபகம் இருக்கா கார்த்திக். ஸ்ருதி தான் ரொம்ப ஆசைபட்டது. ஆனால் அவுங்க… ”
“முடியாது என்று சொல்லிட்டாங்களா சார்? ”

“ஆமாம் கார்த்திக். ”

“கிருபா தானே முடியாதுன்னு சொன்னது? நான் வேறு காலேஜில் முயற்சி செய்து பார்க்கிறேன் சார். தருண் பேராசிரியர் ஒருவர் இருக்கார். பாவேந்தர் ஆர்ட்ஸ் காலேஜில் சேர்மென்னாக இருக்கார். இப்பத்தான் அவரைப் பார்த்தோம். அங்கே நமக்கு நிச்சியம் ஒரு சான்ஸ் கிடைக்கும் சார். கிடைச்சாச்சு என்றே வச்சிக்கோங்களே.. ”

“முடிந்தால் செய்து பார் கார்த்திக். நமக்கு விளம்பரங்கள் தேவையாக இருக்கு. இந்த மாதிரி கான்செர்ட் கிடைத்தால் தானே நமக்கும் விளம்பரம் கிடைக்கும்? அன்பு இல்லத்தின் பாஸ் உன்கிட்டதானப்பா இருக்கு? போலாமா? நேரம் ஆச்சு. ”
“ம். இதோ வண்டியை ஸ்டார்ட் செய்திட்டேன் சார். ”

வண்டி உருமத் தொடங்கியது.
தருணிற்கு, ‘இங்க என்ன நடக்குது? யாராவது சொல்லுங்களேன் ’ என்று கத்தவேண்டும் போல் இருந்தது.
கார்த்திக்கின் திருட்டுப் பார்வையைப் பார்த்தபோது தருணுக்கு நன்றாகவே புரிந்தது.
இதுதான் கார்த்திக் பம்மியதன் காரணமா? துரை குடும்பத் தலைவரோடு சேர்ந்து ஊர் சுற்றுவதைத்தான் டேட்டிங் என்று பீலா விட்டானோ.. என்று நினைத்தவன் கார்த்திக்கை கடந்து செல்லும்போது, “நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை” என்று சத்தமாக அனைவருக்கும் குறிப்பாக கார்த்திக்கிற்கு கேட்கும்படியே பாடிக்கொண்டே சென்றான்.
கார்த்திக் தனது கார் ஹாரனை தெருமுனை திரும்பும்முன்னே அழுத்திக்கொண்டே சென்றான். போடா ஃபூல் என்று கத்தவேண்டும் என்ற எண்ணத்தை அடக்கத்தான் அவன் ஹார்னை விடாது அழுத்தியது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *