Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

காஜலிட்ட விழிகளே இறுதிப் பதிவு

“ஆக உங்க இரண்டுபேருக்கு நடுவில் ஒரு வீணை ஒரு கிட்டார் ஒரு மிருதங்கம் இருந்தது? எல்லாம் லைன்கட்டி நின்றது? நீங்க இரண்டு பேரும் ஃபேன் காற்று இல்லாமல் வியர்த்து வடிந்து அந்த ஒரு ரூமில் ஒரு மணி நேரம் காத்துக்கிடந்தீங்க. வீணைக்கு அந்தப் பக்கம் அவள் நிற்க நீ இந்தப் பக்கம் அமைதியாக நின்னுக்கிட்டுயிருந்தீயா? ”

 

“ஆமாம்டா” என்று கார்த்திக் எரிச்சலுடன் கத்தினான்.

“உன் செல்ஃபோனை பிடுங்க வந்தாளே? அப்ப உன்கிட்ட அவளாகத்தானே வந்திருப்பா? ”
“ஆமாம்டா! ”

“அப்ப ஏன்டா நீ ஒண்ணும் பண்ணல? உன் கை பூ பறிச்சதா? அவள்தான் வீணையைத் தாண்டி வந்திட்டாளே? ”
“இல்லை தருண்.. ”

“என்ன இழுக்கிற? ”

“அவள் கையில் ஃபுளுட் இருந்ததுடா! தந்திரமாக கையில் ஃபுளுட்டை வச்சிக்கிட்டுதான் என் ஃபோனைப் பிடுங்கினாடா! ” என்றான் கார்த்திக் அப்பாவியாக!

“ஃபூளுட் மேல் சத்தியம் இன்னைக்கு நீ மிஸ் பிஹேவ் பண்ணக்கூடாதுன்னு அர்த்தமாம் அதுக்கு! ”

அட்ரா சக்கை! அட்ரா சக்கை என்று சொல்ல முடியாமல் தவித்தான் தருண்.

 

இவ்வளவு நேரம் நண்பனுடன் உருண்டு புரண்டு சண்டையிட்டவன் இந்த அபார விளக்கத்தைக் கேட்டு தரையில் உருண்டு புரண்டு சிரித்தான்.

ஸ்ருதி சமாதானம் அடைந்தபிறகுதான் கார்த்திக் தனது தந்தையிடம் விஷயத்தைப் பிடிவாதமாகச் சொல்லி காரியத்தை சாதித்துக்கொண்டான்.
ஆனால் ஸ்ருதி அவனிடம் மறுநாளே அவனது தந்தை வந்து பெண்கேட்டு வந்ததாகச் சொன்னாள். மேலும் தனது தந்தை ரொம்ப யோசித்ததாகவும். ஜாதகம் பார்க்காமல் எப்படி என்று யோசித்ததாகவும் ஆனால் அவளது அம்மாதான் உடனே பரிசம்போட நாள் குறிக்கும்மாறு முகம் மலரச்சொன்னதாகவும் சொன்னபோது அவன் ஆச்சரியம் கொண்டான்.

“கார்த்திக் அம்மா கொஞ்சம்கூட யோசிக்கலை தெரியுமா? உன் அப்பா உள்ளே வரும்போதே அவுங்க என்னை ‘புடவை மாத்திட்டு வாடான்னு’ சொன்னாங்க. ரொம்ப நாளாகவே நானும் கவனிச்சிட்டுதான் இருக்கேன் கிரிஜா அக்கா என்னை கண்டிக்கும்போதுகூட அவளைத்தான் அமைதியாக இருக்கச்சொல்றாங்க கார்த்திக். ஏதோ மேஜிக்தான் நடந்திருக்கு!
அப்புறம் அப்பா ‘ஜாதகம் பார்க்கணுமே வேணுகோபால்’ என்று சொன்னபோது அதெல்லாம் தேவையில்லை கார்த்திக் மாதிரி ஒரு பையன் நாங்க எங்க வீட்டிற்கு மருமகனாக வர நாங்க கொடுத்துவச்சிருக்கணும் என்றுசொல்லி உடனே நல்ல நாள் பார்க்கச் சொல்லிட்டாங்க. ”

கார்த்திக்கும் வியப்புற்றான். ஆனால் அவன் கவனத்தை ஸ்ருதி திசை திருப்பினாள்.

“கார்த்திக் நான் என்ன கலர் டிரஸ் போட்டிருக்கேன் என்று சொல்லவா? ”
உரிமை வரப்போகிறதாம்.. அதனால் அம்மையார் கொஞ்சம் இரக்கம் காட்டுறாங்களாம்.. என்று மனதில் நினைத்து சிரித்துக்கொண்டான் அவன்.
ஆனால் ஜான் இடம் கிடைத்தால் கார்த்திக் சும்மா விடுவானா?
“ம்! ம்! எல்லாம் சொல்லு! ஒண்ணு விடாமல் சொல்லு.. ”

“அடச்சீ! போடா! ”

ஸ்ருதியின் பெற்றோரிடம் திருமண தேதியை சொல்ல கார்த்திக் அவள் வீட்டிற்குச் சென்றான்.

ஸ்ருதியின் அன்னை மட்டும்தான் இருந்தார்.
“ஆன்ட்டி நீங்க என்னைக் கோவிலில் பார்த்தபிறகு இன்றுதான் பார்க்கிறீங்க இல்ல? ”

“ஆமாம்ப்பா. ”

“நீங்கதான் ஸ்ருதி அப்பாகிட்ட ஜாதகம் பார்க்க வேண்டாம் என்று ஸ்டிரிக்டாக சொன்னீங்களா? ”

“ஆமாம். ”

“நான் சாரி கேட்காமலே நீங்க சம்மதம் சொல்லிட்டீங்களே? ”
“தப்பு செய்யலைன்னா சாரி எதுக்கு கேட்கணும்? அன்னைக்கு அதனால்தானே நீ சாரி கேட்காமல் போனப்பா? ம்?”
“யெஸ்.. அதான் அன்று நான் உங்கிடம் சாரி சாரி என்று மறுபடியும் கெஞ்சவில்லை. ”
“எனக்கும் தெரியும்! ”
“ஆனட்டி அப்பா கல்யாண தேதிகள் கொடுத்துவிட்டிருக்கார். ”
“கார்த்திக் தம்பி நாம அந்த விநாயகர் கோயிலுக்கு போயிட்டு அர்ச்சனை செய்திட்டு ஐயர்கிட்டயே கேட்டு தேதி முடிவு செய்யலாம். ”

கார்த்திக் மணமேடையில் ஸ்ருதியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தான். அவளிடம் தனது நண்பர்களை அறிமுகம் செய்கிறேன் என்றபோது மட்டும் அவனது இதயம் வெளியே வந்துவிடும் அளவிற்கு துடித்தது. அவர்கள் கேலிப்பேச்சை ஸ்ருதி எப்படி எடுத்துக்கொள்வாளோ என்ற பயம்தான் அவனிடத்தில்.
ஸ்ருதி திஸ் இஸ் விக்கி பரத் ஷயாம் ஆல்பர்ட் என்று தனது நண்பர்களின் பெயர்களை அடுக்கிக் கொண்டேயிருந்த போது அதிகபிரசங்கி விக்கி கேட்டான்..
“ஹலோ மிஸஸ் கார்த்திக். உங்க லவ் சக்ஸஸ் ஆன சந்தோஷத்தில் எங்களுக்கு டிப்ஸ் கொடுக்க மறந்திடாதீங்க. டிப்ஸ் ப்ளீஸ். ”

“டிப்ஸ்தானே? சொல்லிட்டா போச்சு! Never go on a date with your lover ! ” என்று சொல்லி கார்த்திக்கைப் பார்த்து மோகனப் புன்னகை வீசினாள்.

“அதெப்படி? நீங்க இரண்டுபேரும் மட்டும் இன்டர்கான்டினென்டல்.. ” என்று சொல்லி முடிக்கும் முன் கார்த்திக் பிரசாத்திடம் “பிரசாத் நம்ம பாய்ஸ் ஏதோ டிரீட் பற்றி கேட்குறாங்க.. ” என்று ரூட்டை மாற்றினான்.

பிரசாத்தும் கார்த்திக் குறிப்பறிந்து அவர்களை விருந்து நடக்கும் இடத்திற்கு அழைத்துச்சென்றான்.
கார்த்திக் ஏதோ பெரிய சுனாமியில் இருந்து தப்பித்த மாதிரி உணர்ந்தான். நேரம் வேகமாக நகர்ந்தாலும் இருவரும் தனியறை சென்றபிறகு இருவருக்குமே நேரம் மௌளத்தான் நகர்ந்தது. அவர்களது காதல்கோட்டைக் காதல் நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற இலக்கில் சென்று கொண்டிருந்தது.
மறுநாள் காலை தருண் கார்த்திக்கை கைபேசியில் அழைத்தான்.
தூக்கத்தில் கஷ்டப்பட்டு விழித்தவன் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த ஸ்ருதியை தொந்தரவு செய்யாமல் தனது கைபேசியை எடுத்து பதில் தந்தான் டேய் மணி என்ன தெரியுமா? ”

“மணி ஆறுதான் ஆகுதா? கார்த்திக் சாரிடா.. ஒரு டவுட் கேட்கணும்? ”
“டவுட்டா? இந்த நேரத்திலா? ”

“டேய் நைட் எல்லாம் நான் தூங்கவேயில்லை தெரியுமா? உன் ஸ்ருதியின் கிலோஸ் ஃப்ரண்ட் என்று எனக்கு அறிமுகப்படுத்தினியே ஆர்த்தி என்ற ஒரு பெண்ணை? ”

“ஆமாம். ” என்றான் கொட்டாவியுடன்
“அவள் என்னுடன் தான்டா வேலை பார்க்கிறா. அவளும் நானும் லவ்வர்ஸ் ஆகி நாற்பத்தி எட்டு மணி நேரம் தான்டா ஆகுது! ”
“அப்படியா? இனிமே உனக்கும் நான் happy valentines day சொல்லணுமா? சரி சரி சொல்லித் தொலைக்கிறேன். ” என்றான் சிரித்துக்கொண்டே.
“கார்த்திக் எனக்கு இப்ப நெஞ்சு வலி வருகிற மாதிரி இருக்குடா. ”

“ஏன்டா? ”

“இன்று காலையில் என்னை கபாலீஷ்வரர் கோவிலுக்கு வரச்சொல்லி நேற்று நைட் சொன்னாடா. ஏதோ முக்கியமான விஷயம் பேசணுமாம்டா. ”
கார்த்திக்கிற்கு விஷயம் முழுதும் புரிந்துவிட்டது. தருண் பயல் காரணம் இல்லாமல் துள்ளமாட்டானே? காலில் வெந்நீர் ஊற்றியதுபோல் துள்ளுவதை கற்பனையில் கண்டு ரசித்தவன் நண்பனின் நிலையை நினைத்து சிரிக்காமல் சொன்னான்
“கூப்பிட்டா போ! ”
“இல்லைடா… ஸ்ருதியின் பெஸ்ட் ஃப்ரண்ட் என்று சொன்னியே அதான்.. அவளிடம் ஸ்ருதி காதல் கோட்டை காதல் பற்றி சொல்லியிருப்பாளாடா? அதுக்காத்தான் கூப்பிடுறாளோ? ரூல்ஸ் சொல்லத்தான் கூப்பிடுறாளோ? எனக்குதான் மனப்பாடமாகத் தெரியுமே.. பார்க்கலாம் ஆனால் தனியாக மீட் பண்ணக்கூடாது பேசலாம் ஆனால் தனியாக மீட் பண்ணி பேசக்கூடாது. அப்புறம் இந்த இந்தியன்கிஸ் ஃப்ரண்ச்கிஸ் எல்லாம் அவள் நாய்குட்டிக்கு கொடுக்கலாம் ஆனால் அவள்கிட்ட கொடுக்கக்கூடாது. இதுதானே அந்த கண்டிஷன். இதையெல்லாம் அவள் ஃப்ரண்ட்கிட்ட ஸ்ருதி சொல்லியிருப்பாளாடா? ”
“கண்டிப்பா! அஃப்கோர்ஸ்! ”

“அச்சச்சோ.. நான் எப்படிடா சமாளிக்கப்போறேன்?
“என்கிட்ட நீ ஐடியா கேட்கிற.. ”

என்றவன் மேற்கொண்டு பேசமுடியாமல் சிரித்தான்.
“கார்த்திக்.. ”

“சரி சரி சொல்றேன் கேட்டுக்கோ.. தண்ணீர் தொட்டியில் எப்போதும் தண்ணீர் நிரப்பி வச்சிக்கோ! ஏன்னா உனக்குத் எக்கச்சக்கமாக தேவைப்படும் Cold Shower! ஆனால் Beleive me உன் காதலி அம்சமான மனைவியாக இருப்பா! அதுதான் நான் இந்த ஒரே நாளில் கண்டுபிடிச்சது. காமம் இல்லாத காதல் இல்லறத்தில் ஜம்மென்று பயனிக்கும் நான்கு வழிச்சாலையில் போகும் B.M.W போல.. ”

“கார்த்திக்.. நீங்க இரண்டு வருஷம் காத்திருந்ததையும் சொல்லியிருப்பாளா ஸ்ருதி? ”
செல்பேசி பதில் தரவில்லை. மறுமுனையில் கார்த்திக் தனது காதல் மனைவியின் முகத்தை ரசிக்கும் வேலையைச் செய்தான். அவர்கள் காதலித்தபோது ஒரு முறை ஸ்ருதி அவனிடம் சொன்னது நினைவு வந்தது.. கார்த்திக் தொட்டுக்கிட்டு இடிச்சிக்கிட்டு பேசுறது சரின்னு படுவதுபோல் கட்டிப்பிடிச்சிக்கிட்டு முத்தம் கொடுத்திட்டு பேசுறதும் ஏதோ ஒரு நிமிஷம் சரின்னு பட்டிடும். இப்ப நானும் இமோஷனலா இருக்கேன். நீயும் தவிக்கிற.. திரும்பத் திரும்ப தப்பு நடந்திடுமோன்னு பயமா இருக்கு. அதான்.. ப்ளீஸ்..
கார்த்திக்கும் இப்போது ஸ்ருதியின் வார்த்தைகளை ஆமோதித்தான்.
Never go on a date with your lover !

 

இடம்:

கபாலீஷ்வரர் கோயில் சென்னை…
இது காதல் கோட்டைக் காதல்தான் என்று ஆர்த்தி சொன்ன போது தருண் ஒன்றும் சொல்லவில்லை.

“தருண் இது காதல் கோட்டைக் காதல் தான். நான் சொல்றது புரியுதா?”

“புரியுது ஆர்த்தி. ஆனா கொஞ்சம் தள்ளுபடி தர முடியுமா? கொஞ்சோன்டி டிஸ்கௌன்ட்?”

“நோ தருண்! நாம இரண்டு பேரும் சந்திக்கலாம். ஆனால் தனியாக சந்திக்கக் கூடாது. நீ தனியாக என்கூட பேசக்கூடாது. வெளியே எங்கேயும் என்னை கூப்பிடக் கூடாது. அப்பா இரண்டு வருஷம் கழித்துதான் என் கல்யாணம் பற்றியே பேச்செடுப்பார். அதனால் அதுவரை எப்ப கல்யாணம் என்று என்னை நச்சரிக்கக் கூடாது. என் வீட்டில் குறிப்பா என் அக்கா இரண்டு பேருக்கும் சந்தேகம் வரும்படியாக நாம நடந்துக்கக் கூடாது. பெரிய அக்கா கல்யாணம் இன்னும் ஒரு வருஷத்தில் முடிஞ்சிடும் சின்ன அக்கா எங்க அம்மாவின் தத்துபிள்ளை. நாங்க எங்க சின்ன அக்காவை ஒரு அநாதை இல்லத்திலிருந்து தத்தெடுத்தோம். அவுங்க கல்யாணமும் எந்தப் குறைவும் இல்லாமல் அப்பா முடிக்கணும் என்று தான் இரவும் பகலும் நினைப்பார். நான் என் அப்பாகிட்ட எனக்கு முதலில் கல்யாணம் செய்து வைங்க என்று கேட்க முடியாது. மூனு பொண்ணுங்க இருக்கும் வீடு என்பதால் அம்மா பயங்கர ஸ்டிரிக்ட். அதனால் நாமும் ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணும்! முக்கியமானது ஒண்ணு சொல்ல மறந்திட்டேன் பாரு.. நீ என்னை தொடவே கூடாது! ”

“ஆர்த்தி ப்ளீஸ். இது வாய்ப்பே இல்லை. நான் உன்னைத் தொடமல் எப்படி? கரும்பை கையில் கொடுத்து விட்டு கடிக்காதே என்று சொன்னால் எப்படி? ”

“ஏன் அப்படி நினைக்கிற? நான் சொல்வதுபோல் நினை.. உன் கையில் தங்கக்கட்டி தருகிறேன். நீ அதை லாக்கரில் வைத்து பத்திரப்படுத்து என்கிறேன். நேரம் வரும்போது அதை கழுத்தில் செயினாக செய்து போடு என்கிறேன். ரொம்ப சிம்பிள்! ”

“நோ ரொம்ப ரொம்ப கஷ்டம். ”

“அப்ப நாம பிரேக்கப் செய்துகல்லாம். ”
“என்ன ப்ரேபோஸ் பண்ணி 56 மணிநேரத்தில் பிரக்கபா? ”

“துப்பாக்கி படத்தில் ஹீரோவும் ஹீரேயினும் ஒரு மணிநேரத்தில் பிரேக்கப் செய்துகிட்டாங்க. 56 மணிநேரம் ஒரு விஷயமா டீலா நோ டீலா? ”

இந்த சினிமாக்காரன்கள் சிகரெட் பிடிப்பதை சொல்லிக்கொடுத்தது பத்தாதா? இதை வேற சொல்லிக் கொடுக்கணுமா? இரண்டாங் கிளாஸ் புள்ளகூட பிரேக் அப் பற்றிப் பேசுது! என்று மனதில் பொறுமியவன் வானத்தை பூமியை எதிரே இருந்த விருட்சிக மரத்தைப் பார்ப்பதுபோல பேர் பண்ணிக்கொண்டு “டீல்! ” என்றான்.

 

அவன் மனமோ அந்த வானத்தைப் போல மனம் படைச்ச வல்லவரே.. இந்த பூமியைப் போல குனம் படைச்ச சின்னவரே என்று மனதிற்குள்ளே பாடியது.
டீலும் அமலுக்கு வந்தது. தருணும் வீடு வந்து சேர்ந்தான்.

கார்த்திக் வீட்டிலிருந்து இரண்டு வாரத்திற்கு முன்பே புதிதாக வாங்கிய தனது சொந்த பிளாட்டில் குடிவந்துவிட்டான்.
கபாலீஷ்வரர் கோயில் சென்று வந்த பிறகே தனது முதல் கோல்ட் ஷவரை முடித்துவிட்டான்.
குளித்துவிட்டு வந்தவனுக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது கார்த்திக்கை அவன் மதிய உணவிற்கு அழைத்திருந்தது. உடனே அவர்களுக்கு செல்பேசியில் அழைத்து மீண்டும் ஒரு அழைப்பு விடுத்துவிட்டு வேகமாக நல்ல சட்டையும் பேன்ட்டும் போட்டுக்கொண்டான்.
கார்த்திக் வீட்டிற்குள் நுழைந்ததும் தருணைப்பார்த்து கேட்டான்
“என்ன தருண்? மதிய வேளையில் குளித்தியா? ”

“ம் ” என்று அவன் எரிச்சலுடன் சொன்னான்.
“காலையில் கபாலீஷ்வரர் கோயிலுக்கு போனியா? ”

“ம ” என்றான் இந்த முறை பரிதாபமாக!
“என்ன தருண் அண்ணா கோயிலுக்கு போயிட்டு குளிப்பாங்களா?” என்று தனது முக்கியமான சந்தேகத்தைக் கேட்டாள் ஸ்ருதி.

“ஸ்ருதி உனக்கு இந்த விளக்கம் புரியாது. நீ போய் தருணுடைய புது வீட்டிடைச் சுற்றிப் பார். நானும் அவனும் கொஞ்ச சமாச்சாரங்கள் பேசிக்கிட்டிருக்கோம். ”

ஸ்ருதி அவன் பக்கத்தில் இருந்தபோதே தருண் “உன்னிடம் ஒன்று சொல்லணும. ” என்று அவன் காதினில் சொன்னான்.

கிளைமாக்ஸ் காட்சி
ஸ்ருதி அந்த இடத்தைவிட்டு நகர்ந்ததும்..
“அப்ப என்னமோ சொல்லணும் என்று என் காதிலே கடிச்சியே? என்ன? ” என்று வினவினான் கார்த்திக்.
“கார்த்திக் ஆர்த்திக்கு இரண்டு அக்கா இருக்காங்கடா! ”
கார்த்திக் விழுந்து விழுந்து சிரித்தான்.

“இரண்டு பேரும் இப்பதான் P.G முடிச்சிருக்காங்க Ph.D பண்ண பிறகுதான் கல்யாணமே பண்ணிப்பாங்களாம்! ”

இன்னும் நன்றாகச் சிரித்தவன் தருணின் பரிதாபத்திற்கு ஆளான முகத்தைப் பார்த்துச் சொன்னான்
“தருண் Beleive me உன் காதலி அம்சமான மனைவியாக இருப்பா! அதுதான் நான் இந்த ஒரே நாளில் கண்டுபிடிச்சது. காமம் இல்லாத காதல் இல்லறத்தில் ஜம்மென்று பயனிக்கும் நான்கு வழிச்சாலையில் போகும் B.M.W போல.. ”

 

சைவ உணவைப்போல் சைவ காதலும் உடலுக்கும் மனதுக்கும் நல்லதுதான்.
இக்கதையை வாசிக்கும் காஜலிட்ட விழிகளே.. இது, இது தான் காதல் கோட்டைக் காதல்! உங்களுக்குத் தெரிந்த காதல் ஜோடிகளிடம் இதைச் சொல்லுங்களேன்.. ப்ளீஸ்! கல்யாணத்திற்குப் பிறகு அவர்கள் வாழ்க்கையும் B.M.W போல செல்லட்டுமே.
2 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sameera Alima says:

    Nice story…. full fun with good message….


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Umadevi santhakumar says:

    Cute and nice story

error: Content is protected !!