"சாந்தாம்மா, மாப்பிள்ளைக்கு ஒரு பூஸ்ட் கொண்டா" என்று விஜயாதித்தன் கூக்குரலிட்டதுமே வந்திருப்பது தன் ஷிவா அத்தான் தான் என்று அனுமானித்துக்கொண்டு தன்னறையிலிருந்து ஓடி வந்து எட்டிப் பார்த்திருந்த ஷ்ரதாஞ்சலிக்கு அங்கு வீசியைக் கண்டதுமே நாடி நரம்பெல்லாம் மின்சாரம் பாய்ந்தது.
உள்ளுக்குள் ஹார்மோன் நதியானது வஞ்சமில்லாமல் ஊற்றெடுத்தது.
கீழே அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்றே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு ஏதோ ஊமை நாடகம் பார்ப்பது போலவே சகலமும் தெரிந்தது.
திடீரென வீசியும் காவலதிகாரி ஒருவரும் தன் பலத்தை நிரூபிக்க போராடுவதைப் பார்த்ததும் தன் மனதிற்கினியவனை ஜெயிக்க வைக்க வேண்டும் என்று உள்ளே ஓடிப்போய், தேடுதல் வேட்டையில் இறங்கி, கையில் சிக்கிய அழிப்பியை எடுத்துக்கொண்டு வந்தாள். சரியாய் குறிபார்த்து எறியவும் செய்தாள்.
தன் திட்டப்படி அவன் ஜெயித்ததும் ஆவலோடு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவள், அவன் தன்னை பார்க்கிறான் என்று தெரிந்ததுமே வெட்கத்தில் உள்ளே ஓடிவிட்டாள்.
விஜயாதித்தன், "சரிங்க மாப்பிள்ளை, நீங்க இருந்து சாப்பிட்டுட்டு போங்க.. நான் முக்கியமான வேலை ஒண்ணு வந்திருக்கு; போய் முடிச்சிட்டு வந்திடுறேன்.." என்று கிளம்பினார்.
அவர் அந்தப் பக்கம் கிளம்பியவுடனேயே, "டேய் வீசி! நீ வெளிய நியூ டீலக்ஸ் தியேட்டர் கிட்ட வெயிட் பண்ணு.. நான் ஒரு பத்து நிமிஷத்துல வந்திடுறேன்" என்றான் சிவனேஸ்வரன். வீசியும் சந்தேகத்துடனே சரியென்று வெளியேறினான்.
அவன் அகன்றதுமே வெக்கு வெக்கு என்று மாடிப்படியேறி நேரே ஷ்ரதாவின் அறைக்கு முன்பு வந்து நின்றவன், அவள் ஜன்னலில் ஏறி உட்கார்ந்திருப்பதை கண்டு கதவை 'டொக் டொக்' என்று தட்டினான்.
ஜன்னல் கம்பியில் முகம் புதைத்து சற்று முன்பு நடந்ததையே நினைத்து நினைத்து தன்னால் சிரித்துக் கொண்டிருந்தவள், கதவு தட்டப்படும் சத்தத்தில் திரும்பிப் பார்த்தாள்.
அங்கு சிவனேஸ்வரனை கண்டதும், "ஷிவாத்தான்!" என்று துள்ளிக் குதித்து ஓடி வந்து அவன் கையைப் பற்றிக்கொண்டாள்.
"ஷ்ரதா உன் முகம் இன்னைக்கு ரொம்ப டாலடிக்குதே.." உண்மையை கேலித் தொனியில் கூறினான் அவன்.
"அது உங்களைப் பார்த்த சந்தோசம் தான் அத்தான்.." என்று சமயோஜிதமாய் சமாளித்தாள் அவள்.
"உண்மையாவா?"
"சத்தியம் பண்ணினா தான் நம்புவீங்களா?.."
அவன் அங்கிருந்த சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தபடியே மறுத்தான். "இல்ல இல்ல.. எங்கே உங்க வீட்டு மகளிர் அணியை காணோம்?.."
"அம்மாவும் அண்ணியும் யாரோ குட்டியப்பான்னு தூரத்து சொந்தக்காரங்களாம்.. அவங்க வீட்டு மேரேஜ்க்கு போயிருக்காங்க.. சரி சொல்லுங்க நீங்க என்ன வேலையா இன்னைக்கு இங்க வந்தீங்க?"
"அது மாமாக்கிட்ட சொல்லி என் ப்ரெண்ட் ஒருத்தனுக்கு வேலை வாங்கி கொடுக்கலாம்னு வந்தேன்.."
"ப்ரெண்டா?.. யாரு?.."
அவன் நாற்காலியில் ஆடியபடியே, "நீ பார்க்கலையா?.. ரப்பர் எல்லாம் எறிஞ்சு அவனை ஜெயிக்க வச்ச?.." என்று தன் கையிலிருந்த அழிப்பியை அவளிடம் நீட்டினான்.
அவள் அதனை வாங்கிக்கொண்டு நேக்காக அவன் நாற்காலிக்கு பின்னால் வந்து நின்று அவன் உச்சந்தலையில் நாடி புதைத்தபடியே ரகசியம் பேசினாள். "அது நான் உங்க மேல இல்ல எறிஞ்சேன்.. தவறி அந்த போலீஸ் மேல பட்டுடுச்சி.." என்றாள்.
கண நேரத்தில் தான் இமயமலையில் இருப்பது போலுணர்ந்த சிவனேஸ்வரன், 'இறைவன் எனக்குள் செலுத்திய காதலை உனக்குள்ளும் செலுத்திவிட்டானா ஷ்ரதா?' என்று சிலிர்ப்புற்றான்.
"ஷ்ரதா, இன்னைக்கு என் கூட வந்தது யார் தெரியுமா?.."
"ம்ம்? யாரு அத்தான்?"
"எல்லாம் உனக்கு தெரிஞ்ச ஆண்மகன் தான்.." பீடிகை போட்டான் அவன்.
"ம்ம்…. சொல்லுங்கத்தான்" ஏகபோகமாய் சிணுங்கினாள் அவள்.
"உங்க அண்ணியோட தம்பி வருண் சக்கரவர்த்தி இருக்கான்ல.. அவன் தான் என் ப்ரெண்ட்.."
"ஓஹோ.. முகத்தை சைடா பார்க்கும்போது எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு நினைச்சேன் அத்தான்.."
"ஷ்ரதா, அத்தான் உனக்கு ஒண்ணு கொண்டு வந்திருக்கேன்.. எங்கே அது என்னன்னு சரியா சொல்லு பார்க்கலாம்?.."
முன்னே வந்து நின்றவள் சாய்வு நாற்காலியின் கைகளைப் பிடித்துக்கொண்டு, "தெரியலை அத்தான்.. நீங்களே சொல்லுங்களேன்" என்று அவன் முகத்திற்கு நேராக குனிந்தாள்.
அவள் வாசனையின் அடர்த்தியில் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. தன் முகத்தை முயன்று பின்னோக்கி இழுத்தான். அந்நிலை இன்னும் அபாயகரமாக இருந்தது. வலதுபுறம் அந்த மச்சம்.... கண்களைத் திருப்ப ரொம்பவே மெனக்கெட்டான் சிவனேஸ்வரன். உள்ளுக்குள் எதிரிக்கும் இந்நிலை வரக்கூடாது என்று நினைத்துக்கொண்டான்.
அவன் கையிலிருந்த, தான் அவனுக்கு கொடுத்தனுப்பிய பிரவுன் அட்டை நோட்டைப் பார்த்தவள், முகத்தில் சோககீதம் வாசித்து, "போங்கத்தான், முந்தா நாள் நான் போட்டுக் கொடுக்க சொன்ன சம்மை போட்டுட்டு வந்திருப்பீங்க.. அதைத்தானே இப்படி சஸ்பென்ஸ் எல்லாம் வச்சி பெருசா பில்டப் பண்ணிக்கிட்டு இருக்கீங்க?" என்ற கேட்டபடியே கட்டிலில் போய் அமர்ந்தாள்.
அதுவும் ஒரு காலை மடக்கியும் ஒரு காலை தொங்கவிட்டும் அம்பாள் போல் அழகாய் அமர்ந்திருந்தாள்.
ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்த அவள் வலது பாதத்தைப் பிடித்து முத்தமிட வேண்டும் போல் அவனுக்குள் ஒரு உந்துதல். ஆசையை அடக்கிக் கொண்டான். 'இப்போது வேண்டாம்.. அவள் சின்னப்பெண்.. பயந்து விடுவாள்' என்று தனக்குத்தானே புத்திமதி சொல்லிக் கொண்டான்.
"இது இல்ல, வேற ஒண்ணு கொண்டு வந்திருக்கேன்.. சொல்லு பார்க்கலாம்?"
"ம்ம்? தெரியலையே.. நீங்களே சொல்லுங்கத்தான்" சலிப்பாக பதில் வந்தது அவளிடம்.
அருகில் வந்து தன் முதுகின் பின்னால் செருகி வைத்திருந்த அந்த சப்பட்டையான செவ்வகப் பெட்டியை "டொட்டடொயிங்" என்று வெளியே எடுத்து நீட்டினான் அவன்.
"வாவ்! மல்டி கலர் கியூடெக்ஸ்! அதுவும் ஃபாரீன் ப்ராண்ட்!"
"ம்ம், ஆதி அண்ணாகிட்டயிருந்து உனக்காக அனுப்ப சொன்னேன்.."
"ஹை! பெரிய அத்தான் கொடுத்தனுப்பினாங்களா?" அவள் கண்கள் மின்னியது.
"ம்ம்"
"ஸோ ஸ்வீட்.."
அவள் உடனே தனது வலது கால் பாதத்தை கட்டிலின் மீது தூக்கிவைத்து நீளமான கால் விரல் நகங்களுக்கு வண்ணம் தீட்ட ஆரம்பித்தாள்.
அவனுக்கு அந்த நகப்பூச்சை வாங்கி தூர வைத்துவிட்டு அவள் கால் விரல்களைப் பிடித்து கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல இருந்தது. கூடவே குணா கமல் போல் முத்தமிடவும் தோன்றியது.
ஆனால், நெருங்க துணிவின்றி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஷ்ரதாஞ்சலி அப்போது பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பாவை. அவள் பயந்து விட்டால் என்ன செய்வது என்பதை காட்டிலும், என்னை அவள் தவறாக எண்ணி விட்டால் என்ன செய்வது என்பது தான் பெரிய பிரச்சினையாக இருந்தது அவனுக்கு.
மெதுவாய் அவளருகில் அமர்ந்து, "உனக்கு என்னை பிடிக்குமா ஷ்ரதா?" என்றான்.
அவள் விழிகளை மட்டும் உயர்த்தி, "ஓ பிடிக்குமே" என்றாள்.
"பிடிக்கும்னா எந்தளவுக்கு?"
"ம்ம்? இப்படி கேட்டா என்ன அத்தான் சொல்றது?" என்று சிறு பிள்ளை போல் விழித்தாள் அவள்.
அவன் அவள் தலையில் கை வைத்து களைத்து விட்டான்.
மீண்டும் சிரித்துக்கொண்டே தன் வேலையைத் தொடர்ந்தாள்.
"ஷ்ரதா, நான் இப்போ உன்கிட்ட ஒண்ணு கொடுப்பேன்.. நீ அதை படிச்சிட்டு உடனே பதில் சொல்லணும்னு இல்ல.. யோசிச்சு பொறுமையாவே சொல்லலாம்.. வீட்டுல யாருக்கும் இது தெரிய வேணாம்.." என்றபடியே தன் இடக்கையிலிருந்த பிரவுன் அட்டைப்போட்ட நோட்டை திறந்துப் பார்த்து அதிர்ந்தான். அவன் எடுத்து வந்த காதல் கடிதத்தை காணவில்லை. உயிரே போய்விட்டது. 'அய்யோ கடவுளே! உள்ளே தானே வச்சேன்!'
"என்னது அத்தான்?.. என்ன நான் பதில் சொல்லணும்?.. படிச்சிப் பார்க்கணும்?"
அவன் ரத்த அழுத்தம் ஏறி அங்கேயே கீழே குனிந்து தேடிக்கொண்டிருந்தான்.
"நான் போட்டுக் கொடுக்க சொன்ன கணக்கை எல்லாம் போட்டுட்டீங்களா?.. நோட்டைக் குடுங்க" என்று அவன் கையிலிருந்த நோட்டைப் பிடுங்கி வைத்துக் கொண்டாள்.
சிவனேஸ்வரனின் கண்கள் அலை பாய்ந்தது. 'கடிதம் எங்கே தவறியிருக்கும்?' பயம் கவ்வியது அவன் குரல்வளையை.
பின், அவன் குழப்பத்துடனேயே அவளிடமிருந்து விடைபெற்றான். "எங்கே போயிருக்கும்?" என்று யோசித்தபடியே கீழேயும் தேடிக்கொண்டே வந்தான்.
அவனுக்காக நியூ டீலக்ஸ் தியேட்டர் அருகே சோடா குடித்துக்கொண்டு காத்திருந்தான் வீசி.
பைக்கில் வந்து சேர்ந்தவனின் சோர்ந்த முகத்தைப் பார்த்து ஆருயிர் நண்பன், "டேய்! என்னாச்சு?.. ஏன் இப்படி எதையோ பறிகொடுத்தவன் மாதிரி இருக்க?.." என்று விசாரிக்க,
"இல்ல மச்சி" என்றபடியே இன்னும் சிந்தனா உலகிலேயே கிடந்தான் சிவனேஸ்வரன்.
வீசி அவனிடம் ஆழம் பார்ப்பவனாக விளையாடினான். "எதையாவது தொலைச்சிட்டியா சிவா?.. எதையாவதுன்னா?.. காகிதத்தை.. காகிதத்தைன்னா?.. காதல் கடிதத்தை.. காதல் கடிதத்தைன்னா?.. என்னுயிர் ஷ்ரதாஞ்சலிக்குன்னு ஆரம்பிக்குமே அப்படி.." என்று சொல்லவுமே, போன உயிர் போன வாக்கிலேயே எக்ஸ்பிரஸ் பிடித்து திரும்பி விட்டதை போல் பெருமூச்சு விட்ட சிவனேஸ்வரன், "திருட்டு படவா, நீ தான் எடுத்து வச்சிருக்கியா?" என்று பைக்கிலிருந்து இறங்கி வீசியின் சட்டைப்பையிலும் பேண்ட் பாக்கெட்டிலும் துழாவினான்.
எதுவும் அகப்படவில்லை எனவும், "எங்கேடா?" என்று அவன் சட்டைக்காலரை பிடித்து பரிதாபமாக கேட்டான்.
அவன் கையை எடுத்து விட்ட வீசி, தன் சட்டையின் உள் பாக்கெட்டிற்குள்ளிருந்து ஒரு காகிதத்தை எடுத்து நீட்டினான்.
சிவனேஸ்வரன் படக்கென்று வாங்கி தன் பேண்ட் பாக்கெட்டிற்குள் பத்திரப்படுத்திக் கொண்டான்.
வீசி, "என்னடா லவ்வா?" எனவும், அவன் உட்கார்ந்திருந்த பெஞ்சிலேயே தானும் ஓரமாய் வந்து அமர்ந்துகொண்ட சிவனேஸ்வரன், தன் காதல் கதையை அவனுக்கு கடைவிரித்தான்.
சிறுவயதிலிருந்தே அவளை தனக்குப் பிடிக்கும் என்றும், தனியொரு பிரியம் ஏற்பட்ட காரணத்தையும் கூறினான்.
பொறுமையாய் அனைத்திற்கும் செவிமடுத்த வீசி, "அக்கா கல்யாணத்தப்பவே பார்த்தேன் சிவா.. ரொம்ப பகட்டா தெரிஞ்சது அந்தப்பொண்ணு.. கிட்டவே போகல.. இதுவரைக்கும் பேசினதுமில்ல.. ஆமா உங்க வீட்டுல சொன்னா தான் ஈஸியா முடிஞ்சிடுமேடா.. அப்பறம் ஏன் இந்த மாதிரி வேலையெல்லாம் பார்த்துக்கிட்டு திரியுற.." என்று அலட்சியமாகக் கேட்டான்.
"டேய் வீசி! வீட்டுல பேசி முடிவெடுக்கிறது வேற.. நாங்க எங்களுக்குள்ள பேசி முடிவெடுக்கிறது வேற.. எனக்கு அவளை பிடிச்சிருக்கிற மாதிரியே அவளுக்கும் என்னை பிடிச்சிருக்கான்னு தெரிய வேண்டாமா?.."
"சிவா! அவ ஸ்கூல் படிக்கிற பொண்ணுடா.."
"டேய்! அவளுக்கு இன்னும் ஆறு மாசத்துல ஓட்டுப்போடுற உரிமை.."
"நீ என்ன சொல்லு, நீ பண்றது தப்பு.. படிக்கிற பொண்ணு மனசுல இது மாதிரி சபலத்தை உண்டு பண்ணுறது, உங்க ரெண்டு பேரோட பியூச்சருக்குமே நல்லதில்ல.."
"டேய் வீசி! நீ என்ன தான்டா சொல்ல வர்ற?"
"இப்போதைக்கு அவகிட்ட எதையும் சொல்லாதன்னு சொல்றேன்.." என்று முடிந்தளவு அறிவுரை கூறினான் வீசி.
அவனின் இந்த ஆற்றுப்படுத்தலில் அவன் கண் முன்னேயே அந்தக் கடிதத்தை சுக்குநூறாக கிழித்துப் போட்டான் சிவனேஸ்வரன்.
அச்சம்பவத்திற்கு பிறகு ஒருநாள் சிவனேஸ்வரன் தன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது தோழி ஒருத்தியை அழைத்துக்கொண்டு வந்திருந்தாள் ஷ்ரதாஞ்சலி.
தன் அன்னை வந்து எழுப்பி 'அவள் வந்திருக்கிறாள்' என்றதும், உடனே டீசர்ட் ஒன்றை தலைவழியே மாட்டிக்கொண்டு, கலைந்த தலையையும் சீவிக்கொண்டு ஓடி வந்தான் சிவனேஸ்வரன்.
அவளைப் பார்த்ததும் மெதுவாக வருவது போல் பாவனை காட்டி, "என்ன ஷ்ரதா.. திடீருன்னு வந்திருக்க?" என்றான்.
அவள் அருகில் நின்றிருந்த கோகிலாவிடம், "அத்தை எங்க மூணு பேருக்கும் டீ ப்ளீஸ்" என்று அவரை கழற்றிவிட்டாள்.
அவளின் சாமர்த்தியத்தை எண்ணி சிரித்துக் கொண்டவன் அருகில் வந்து அமரவும், அப்பாவியாய் தன் இடக்கையை விரித்துக் காட்டினாள் ஷ்ரதா. உள்ளங்கையில் மட்டும் கோடுபோட்டது போல் சிவந்து வீங்கியிருந்தது.
"என்ன ஷ்ரதா இது!" என்று பதறியவனிடம், தன் உதட்டின் மத்தியில் ஆட்காட்டி விரலை வைத்து, "உஷ்ஷ்.. அத்தைக்கு கேட்டுறப் போகுது.. மெதுவா பேசுங்கத்தான்.." என்றாள்.
"சரி இந்தக் காயம் எப்படி வந்தது?"
"இது மிட்டெர்ம் எக்ஸாம்ல மேத்ஸ்லயும் கெமிஸ்ட்ரிலயும் ஃபெயில் ஆனதுக்கு மிஸ்கிட்ட வாங்கின அடி.. வீட்டுல யாருக்கும் தெரியாது.. அப்பாக்கு தெரிஞ்சது ஸ்கூலுக்கே போகவேணாம்னு சொல்லிருவாங்க.. நீங்க எனக்கு மேத்ஸ் சொல்லிக் குடுக்குறீங்களா அத்தான், ப்ளீஸ்.. எனக்கு வெளிய எங்கயும் டியூசன் போகப் பிடிக்கலை.. அப்பாகிட்ட சொன்னா யாரையாவது வீட்டுக்கு வர வச்சிடுவாங்க.. அது ரொம்ப தலைவலி.. எனக்கு நீங்க சொல்லித் தந்தா தான் நல்லா புரியும் அத்தான்.. பொறுமையா பேசுவீங்க.. டென்த் பப்ளிக் எக்ஸாம்ல நீங்க சொல்லித் தந்து தானே நான் மேத்ஸ்ல பிஃப்டிக்கு மேல எடுத்து பாஸ் பண்ணினேன்.. ப்ளீஸ் அத்தான் இதுக்கும் எனக்கு நீங்க தான் ஹெல்ப் பண்ணனும்.. எனக்கு நீங்க சொல்லித் தருவீங்க தானே?.." என்று கெஞ்சல் குரலில் கேட்டாள்.
'அய்யோ! இப்படி கண்ணைச் சுருக்கி கெஞ்சாதே ஷ்ரதா.. எனதுயிரும் உனதேன்னு காலடியில சாசனம் எழுதிக் கொடுத்திடுவேன்..'
"அத்தான்" கிணற்றுக்குள் ஒலித்தது அவள் குரல்.
"அது சரி இது யாரு?"
"தாரிணி சந்து.. என் ப்ரெண்ட்.."
"சந்தா?"
"ம்ம், சந்தன மாரியம்மனை சுருக்கி சந்துன்னு வச்சிருக்காங்க" என்று அதிகமாய் கண் சிமிட்டினாள் அந்த தோழிப்பெண்.
"ஆமா இந்த சந்துக்கும் பாடம் புரியலையாமா?.."
"ம், ஆமா அத்தான்.. எங்க ரெண்டு பேருக்கும் நீங்க தான் மேத்ஸ் சொல்லித் தரணும்.. ஆக்சுவலி இவ மத்த சப்ஜெக்ட்ஸ்ல எல்லாம் சக்கைப்போடு போடுவா.. பட் மேத்ஸ் மட்டும் தான் கவுத்து விட்டிரும்.. இவளை வச்சி தான் நான் அந்த ஃபர்ஸ்ட் பெஞ்ச் ரேணுகா மூஞ்சில கரியைப் பூசி, அவளை செகண்ட் ரேங்குக்கு தள்ளலாம்னு இருக்கேன்.. ப்ளீஸ் அத்தான் நீங்க தான் இவளுக்கும் மேத்ஸ் சொல்லிக் கொடுக்கணும்.."
அந்த ரேணுகா கருப்பா சிவப்பா என்று எதுவும் தெரியாது சிவனேஸ்வரனுக்கு. ஆனால், அவளுக்காகவே தானும் ரேணுகாவை தன் மனதில் விரோதியாக வரித்துக் கொண்டான்.
"தாரிணி என் கூட வரதுல இன்னொரு விஷயமும் இருக்கு அத்தான்.."
"என்ன விஷயம்?"
"ஈவ்னிங் தனியா வரணும்.. அதே மாதிரி போகும் போதும் இருட்டிடும்.. அப்பாக்கு தெரிஞ்சா கார்ல போ, இல்ல போகாதேன்னு சொல்லிருவாங்க.. அதேயிது இவ என் கூட இருந்தா ப்ராபளம் சால்வ்ட்.. எப்படியாவது நீங்க தான் அத்தான் எங்களை ஹை ஸ்கோர்ல பாஸ் பண்ண வைக்கணும்" என்று அவன் காலில் விழாத குறையாக கெஞ்சினாள்.
இடையில் காபிகோப்பையுடன் கோகிலா வரவும், "அத்தை, அத்தானை எனக்கு பாடம் சொல்லிக் கொடுக்க சொல்லுங்கத்தை" என்று அவர் தோளைப் பிடித்தும் தொங்கினாள்.
அவர், "சொல்லித்தான் கொடேன்டா" என்றார்.
புதல்வன் உள்ளம் குதியாட்டம் போட சரியென்றான். காதலிக்க சந்தர்ப்பம் அமைத்துக் கொடுத்த கடவுளுக்கும் நன்றி கூறினான்.
தொடர்ந்து மூன்று வாரங்கள் அவனின் வீட்டிற்கு வந்து அவனை போக்குக்காட்டி படித்த ஷ்ரதா ஒவ்வொன்றிற்கும், 'இது எப்படி அத்தான்?.. அது எப்படி அத்தான்?' என்று இயல்பு போல் அவன் மேலே விழுந்து கேட்க, பதில் சொல்லி முடிப்பதற்குள் திணறிப்போனான் சிவனேஸ்வரன்.
பூச்சொரிதலை முழுமையாக அனுபவிப்பதைக் காட்டிலும் அதை யாரும் பார்த்து விடக்கூடாதே என்று தவிப்பவனுக்கு, நடுவில் ஆட்டத்தில் தவறு செய்தால் கண்டுபிடிக்கும் அம்பையர் போல் உட்கார்ந்திருக்கும் தாரிணி சந்துவை காணும் போது எரிச்சலாக இருக்கும்.
"அது சரி அவளால் தானே ஷ்ரதா இங்கு வருகிறாள்.. இல்லையென்றால் ஷ்ரதாவை மாமா விடமாட்டாரே" என்று தனக்குள்ளேயே சமாதானமும் கூறிக்கொள்வான் அவன்.
ஷ்ரதாவின் மூலம் இப்படி தினமும் தன்னை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வதற்காக கடவுளுக்கு சிவனேஸ்வரன் நன்றி சொல்லிக் கொண்டிருந்த போது தான், அதற்கு ஆபத்து நேர்வது போல் அவனின் மாதிரி தேர்வும், அவளின் திருப்புதல் தேர்வும் ஒரே காலகட்டத்தில் வந்தது.
ஷ்ரதா, சிவனேஸ்வரனை, "அப்போ எனக்கு பாடம் சொல்லிக் கொடுக்க முடியாதா அத்தான்?" என்று பாபமாய் பார்த்த போது தான் அவனுக்குள் அந்த யோசனையே வந்தது.
'இரண்டு வாரத்திற்கு மட்டும் ஷ்ரதாவிற்கு வீசியை பாடம் சொல்லி கொடுக்கச் சொன்னால் என்ன?'
உபாயம் கிடைத்தவுடனேயே சட்டையை மாட்டிக்கொண்டு அவனது புத்தகக்கடையை நோக்கி சீறிப்பாய்ந்தான் சிவனேஸ்வரன்.
காதல் கணம் கூடும்...
உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.
கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️
கீழே உள்ள லிங்கை க்ளிக்கி கருத்துப் பதிவிட்டால் 24 மணி நேரத்திற்குள் நல்ல செய்தி கிட்டுமாம் ப்ரெண்ட்ஸ்.
கருத்துத்திரி,
ஓம் சகாப்தமே நமஹ!