Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அக்ரஹாரம்

Messages
44
Reaction score
18
Points
8
கோவில் நகரமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் அருகேயுள்ள அழகான அக்ரஹார வீடுகள் அது. எங்கு பார்த்தாலும் மடிசார் அணிந்த பெண்களும்,பட்டுப்பாவடை தாவணி அணிந்த இளம்பெண்களின் கூட்டமும் நிரம்பி வழியும். அந்த பெருமாள் கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்களும் ,குமாஸ்தாக்களும்,
தர்மகர்த்தாவும் வசிப்பதற்காகவே அமைந்துள்ளது அந்த அழகான அக்ரஹாரம்..

அந்த அக்ரஹாரத்தில் வசிக்கும் கிட்டுமாமாவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வாயில் வெற்றிலைபாக்கை மென்றுக்கொண்டு வெறும் உடம்பில் ஒரு வேட்டியை சுற்றிக்கொண்டு நெற்றியில் நாமம் இட்டுக்கொண்டு கையில் எந்நேரமும் ரமணிச்சந்திரன் நாவல்களை புரட்டிக்கொண்டு இருப்பார் கிட்டுமாமா..இவருக்கு ரமணிச்சந்திரன் நாவல் என்றாலே ஒரு அலாதியான பிரியம் . அவர் படித்த கதைகளை எல்லாம் அக்கம்பக்கத்தில் வசிக்கும் நபர்களிடமும் இளவட்டங்களுக்கும் விவரித்து காட்டுவார்..இவரது விவரிப்பில் மொத்த கதையும் கேட்பவருக்கு மனதில் சினிமா காட்சிப்போல் ஓடும்.

அன்று வழக்கம்போல ரமணிச்சந்திரன் எழுதிய அதற்கொரு நேரமுண்டு கதையை வாசித்து கொண்டிருக்க பக்கத்து வீட்டு வனஜா ஓடிவந்து அமர்ந்து கொண்டாள் "என்ன தாத்தா இன்னைக்கு என்ன கதை சொல்லப்போற "என்று ஆவலுடன் கேட்க...
"ஏண்டிமா இன்னைக்கு நீ காலேஜ் போலயோ"? என்று கிட்டுமாமா கேட்க சளித்துக்கொண்டே "அட போங்க தாத்தா ,அதை ஏன் கேக்குறீங்க எங்க ஆத்துல என்னை படிக்க வேண்டானு நிப்பாட்டிட்டா.."

"அச்சோ ஏண்டிமா?"

"பெண் பார்க்க வராளாம் தாத்தா அதுவும் இன்னைக்கு சாய்ங்காலம்"

"ம்ம்ம் அது சரி காலாகாலத்துல கல்யாணம் நடந்தா நல்லது தானே டி . பேசாம உன் தோப்பனார் சொல்ற புள்ளையாண்டவ கட்டிக்கிட்டு சந்தோஷமா வாழ்க்கை யை ஆரம்பி"..

"தாத்தா... கல்யாணம் என்றாலே பயமா இருக்கு"என்று அவள் சொல்லி முடிக்க அவர் சிரித்துக்கொண்டே "இப்படித்தான் எல்லாம் பொண்ணுங்க சொல்லுவிங்க ,கல்யாணம் பிறகு வசவசனு புள்ளக்குட்டி பெத்துண்டு குடும்பமே லோகம்னு இருப்பேல்"

அசடு வழிந்தது நம்ப வனஜாவிற்கு.பிறகு "சரி சரி அதெல்லாம் இருக்கட்டும் நீ முதல் அத்தியாயம் விவரி அதற்கொரு நேரமுண்டு கதையை"

"வேண்டாடி மா அந்த கதையில் சுசிலா தான் புருஷன் கிட்ட பட்டபாடு பற்றி கேள்விபட்டினா நீ கல்யாணமே வேண்டானு ஒத்தக்காலில் நிப்ப..ஆனால் அதுல அந்த மனோகரி கேரக்டர் இருக்கும் பாரு..ரொம்ப நல்ல பொன்னுடி மா"

"ம்ம்ம்... அதுசரி ஆமாம் உனக்கு இந்த நாவல் எல்லாம் படிச்சு போர் அடிக்கல?"

"ஹாஹா... சிலருக்கு படம் பார்க்க பிடிக்கும்,சிலருக்கு பாட்டு கேட்க பிடிக்கும் அந்த மாதிரி நேக்கு புஸ்தகம் படிக்க விருப்பம்"என்று புன்னகையிக்க... அவளோ அவரது பதிலை கூர்ந்து கவனித்துவிட்டு. "தாத்தா அப்படினா உன்னோட புஸ்தகம் சிலது எனக்கு கல்யாண பரிசா தருவியா"என்று சாதாரணமாக கேட்க...

"ஒன்று இரண்டு அல்ல உனக்கு பிடித்த எல்லா புஸ்தகங்களையும் எடுத்துக்கொள்"என்று சந்தோஷமாக கூற அந்த கிட்டுமாமாவை கண்ணத்தில் கிள்ளி முத்தமிட்டு தனது வீட்டுக்குள் நுழைந்தாள் வனஜா...
வனஜா வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி ராஜி மாமி வீடு ,அவங்க வீட்டில் கூட்டுக்குடும்பமாக மூத்தார் ஓர்ப்புடியார் அவர்கள் குழந்தைகள் ராஜியின் குழந்தைகள் என அந்த வீட்டில் பத்து நபர்கள் இருப்பர் தினமும் ராஜி மாமிக்கும் அவரது ஓர்ப்புடியாருக்கும் சமையலறையை யார் சுத்தம் செய்வது என்பதிலே சண்டை வரும்
"ஓ...நோக்கு நான் வேலைக்காரியோ எப்ப பாரு துடைக்கிறது கழுவுறதுனு போடி...நீ போய் சுத்தம் செய் "என ஓர்ப்புடியார் கடுகு பொறிய கத்த ராஜியிற்கு முகம் வாடியே போகும்..ச்ச இந்த வீட்டில் நிம்மதியே இருக்கா பாரு என்று முகம் வாட்டத்துடன் கிட்டுமாமாவை தேடித்தான் வருவாள்.
"என்ன மாமா என்ன பன்றேல்...ஏதாவது புத்தகம் வாசிக்க தாங்கோ படிச்சிட்டு தரேன்" என்று லைப்ரேரியில் புத்தகம் வாங்குவதைபோல் வாங்கிச்செல்வாள் ராஜி.

இப்படியே கிட்டுமாமாவை தேடி தேடி வந்து அக்ரஹாரத்தில் வசிக்கும் அனைவரும் புத்தகம் வாசிக்க வருவர். மார்கழி மாதம் துவங்க சற்று தினங்களே இருக்க காலையில் குளித்து முடித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி விட்டு கிட்டுமாமாவின் திருட்பாவை வகுப்பிற்கு வருவது அங்குள்ள பெண்களின் வழக்கம்.

யார் இந்த கிட்டுமாமா ஏன் இவரை தேடி இத்தனை கூட்டம், இவருக்கு எப்படி இத்தனை ரசிகர்கள்.. விட்டால் இவருக்கு ரசிகமன்றமே வைப்பார்கள் போல...வாருங்கள் அவர் யார் என்ற சிறிய பார்வை.
கிட்டுமாமா இவருடைய உண்மை பெயர் கிருஷ்ணன். 40 வருடங்களாக அதே அக்ரஹாரத்தில் வசிப்பவர். ஆரம்பத்தில் கோவில் நடை திறப்பது ,நடை சாத்துவது என்று அனைத்து விதமான கோவில் பொறுப்புகளும் அவர் கையிலுருக்க..வழக்கம் போல அன்று நடைசாற்றிவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது ஒரு ஆட்டோ வந்து இடித்ததில் வலது கால் காயமடைந்த நிலையில் அந்த கால் அப்படியே முடங்கி போக,ஏதோ தாங்கி தாங்கி தான் நடப்பார்... கோவில் பொறுப்புகளை இந்த கால் வைத்துக்கொண்டு எல்லாம் செய்ய இயலாது என்பதால் அந்த பொறுப்பை மகனிடம்.கொடுத்துவிட்டு இவர் வீட்டிலே இருந்துவிட்டார். மனைவியோ பார்வையற்ற பெண். அவளுக்கு துணையாக வீட்டில் சாதம் வடிப்பது காய்கறி நறுக்குவது என்ற உதவிகளை செய்தவருக்கோ..இதை தாண்டி ஏதோ அவருக்குள் ஒரு தேடல் இருப்பதை உணர்ந்தார். அது தான் புத்தக வாசிப்பு தேடல் என்பதை உணர்ந்த பின்பு ...வீட்டில் வாரந்தோறும் வரும் மங்கையமலர் குமுதம் போன்ற வாரப்பத்திரிக்கைகளை படித்து அதிலுருக்கும் சமையல் குறிப்பு ஆகியவற்றை மனைவிக்கு வாசித்து காண்பித்து அதை மறாறவர்களகடமும் பகிர..இப்படித்தான் வாசிப்பு துவங்கியது...
"மாமா அந்த மோர்க்குழம்பு க்கு என்ன அரைத்து ஊத்தனும்?..."

"கிட்டுமாமா... அந்த அப்பளம் எப்படி செய்தேல்" என அக்கம்பக்கத்தில் இருப்போர் சுவரஸ்யமாக கேட்டு தெரிந்து கொள்ள ஆரம்பித்தனர்.
அட நல்லா இருக்கே இந்த புத்தக வாசிப்பு பழக்கம்... சரி..கதைகளை அலசி ஆராய்வோம் என்று கதை புத்தகங்கள் வாங்க ஆரம்பித்தார். அதை படிக்க படிக்க ஆர்வம் தொற்றியது.
சமையல் குறிப்பில் ஆரம்பித்து இன்று சுஜாதா நாவல் வரை எல்லாவற்றையும் அலச ஆரம்பித்துவிட்டார்.
"தாத்தா இந்த கதை சொல்லுங்கோ"என்று குழந்தைகள் வட்டமும் சூழ்ந்துகொண்டது.

நாட்கள் கடந்து சென்றன..
அக்ரஹாரம் முழுவதும் விழாக்கோலம் ஆனது. எங்கு பார்த்தாலும் வாசலிலும் முற்றத்திலும் அகல் விளக்குகள் ஏற்றி..வாசலில் வண்ணக்கோலங்கள் போட்டு தெருக்களில் பஜனைகளும் ஆரம்பம் ஆனது.

கிட்டுமாமா திருட்பாவை ஆரம்பித்தார் "பன்னிரெண்டு ஆழ்வார்களின் ஒருவரான பெரியாழ்வர் மகள் கோதை பாடிய பாடல்கள் தான் திருட்பாவை"என்று அவர் பேசத்துவங்கினர்... அனைத்து பெண்களும் குழந்தைகளும் ஆர்வமுடன் கேட்டுக்கொண்டு இருந்தன.

"கிட்டுமாமா...மொத்தம் 30 பாடலோ னோ" என்று ஒருவள் கேள்வி கேட்க.."ஆம் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே "என்று ஒருபக்கம் பதிலளிக்க இன்னொரு பக்கம் அந்த அகல் விளக்கின் ஒளியை ரசித்தவண்ணம் கிட்டுமாமாமா பேசத்துவங்கினர்.....
இப்படியே மார்கழி திங்கள் நகர்ந்துகொண்டே இருந்தது..நம் வனஜாவும் பாவை நோன்பு மேற்கொண்டு இருந்தாள் இந்த அழகான மார்கழி திங்களில்.

அதிகாலையில் துயில் எழுந்து குளத்தில் நீராடிவிட்டு விளக்கேற்றி கோவிலுக்கு சென்று வருவது வழக்கம். அன்று எப்போதும் போல் குளத்தில் நீராடிவிட்டு ஈரத்துணியுடன் மேலே வரும்போது விச்சு (விஷ்வா) நின்றுகொண்டு இருந்தான்.

"விச்சு இது என்ன விளையாட்டு வழியை விடு"

"வனஜா நீ எனக்கு பதில் எதுவும் சொல்லலியே"

"இங்க பாரு உனக்கும் எனக்கும் நிச்சயம் ஆயிடுச்சு அதுக்காக இப்படி அடிக்கடி பார்க்க பேசப்படாது தப்பு ,அதுவும் இப்படி ஸ்நானம் பன்னிட்டு ஈரத்துணியோட நிக்கிற பொண்ணு கிட்ட பேசிண்டு நிக்கிற போ..போய் வேலையை பாரு."

"ப்ச்ச் ஏண்டி புரிஞ்சிக்க மாட்டேங்குற? இந்த அக்ரஹாரம் தாண்டி உனக்கு ஆசைகள் கனவுகள் எதுவுமே இல்லையா நோக்கு"..

"என்ன ஆசை என்ன கனவு இருக்கனுமா சொல்லுங்கோ விச்சு".

"உன்னை விவாஹம் செய்ய போற பையன் நான் என்னிடம் பேசபழக கூட ஆசையில்லையா நோக்கு?"

"அதெல்லாம் கல்யாணம் ஆன பிறகு"என்று ஒற்றை வார்த்தையில் பதிலளிக்க ..."ஏண்டி இந்த கோவில் குளம் அக்ரஹாரம் வீடு இதை தாண்டி யோசிக்க எதுவுமே இல்லையா? நீ ஏன் படிப்பு நிப்பாட்டினே? "

"என் தோப்பனாருக்கு விருப்பம் இல்லை விச்சு விடு,அப்படி நான் படிக்கனும் னு ஆசைப்பட்ட கல்யாணம் ஆகிட்டு உங்கள் ஆத்து மாட்டுபொண்ணா படிக்கிறேன் போதுமா"

"அதெல்லாம் இருக்கட்டும் இன்னைக்கு எங்க ஆபிஸ்ல ப்ரண்ட்ஸ் க்கு கெட் டு கெதர் பார்ட்டி ஏற்பாடு பன்னிருக்கு நீ கண்டிப்பாக வரனும் புரியுதா?"

"விச்சு ப்ளீஸ்...நான் பாவை நோன்பு இருக்கேன்..பால் நெய் எதையும் உபயோக படுத்தாமல் விரதம் இருக்கேன். என்னபோய் பார்ட்டிக்கு கூப்பிடுற நான் வரலை"

"இங்கே பாரு வனஜா ,என்னை கட்டிக்க உனக்கு விருப்பம் இல்லை அதானே?"

"அய்யோ அப்படி இல்லை விச்சு"

"இங்க பாரு...நீ இந்த கோவில் பூஜை புனஸ்காரம் இதையே கட்டிட்டு அழு நான் கிளம்புறன் குட்பை"...

"விச்சு விச்சு...என்றழைத்தும் அவன் சற்று தூரம் விலகி சென்றுவிட்டான். "

விச்சுவின் செயல்கள் வனஜாவிற்கு எரிச்சலூட்டியது, இந்த கல்யாணமே வேண்டானு தானே சொன்னேன் எங்க ஆத்துல கேட்டாளா இப்ப பாரு இந்த விச்சு கிட்ட மாட்டிண்டு நான் படாத பாடு படுறேன்... என்று புலம்பிக்கொண்டு வீட்டினுள் நுழைய அன்றைய பொழுதே முனுமுனுப்புடன் துவங்கியது வனஜாவிற்கு.

நேரம் கடந்துக்கொண்டே இருக்க கோவிலுக்கு தயாராகி சென்றாள் வனஜா...பிராகாரத்தை சுற்றி வலம் வந்து விளக்கேற்ற துவங்கினாள். திடிரென அவள் செவிகளில் சங்கீத உபன்யாசம் கேக்க துவங்கியது அதில் யாரோ அறிமுகமான குரலாக இருப்பதை உணர்ந்தவள். வழக்கம் போல் பாட்டுகச்சேரி நடத்தும் கோவில் மண்டபத்தை காண ஓடிவந்தவள்,அங்கு அதே அக்ரஹாரத்தில் வசிக்கும் சீனுவின் குரல் என்பதை உணர்ந்தவள் மெய்மறந்து அவனது குரலில் வெளிப்படும் பக்தி பாடல்கள் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு இருந்தாள். அவனது குரலை கேட்க கேட்க அவன் மீது அல்ல அவனது குரல் மீது காதல் வர....
அவன் பாடிமுடித்தபின்பு அவனருகே சென்றவள் "சீனு நல்லா பாடுறே டா. உன் பாட்டை கேட்டா சாட்சாத் அந்த பெருமாளே இறங்கி வந்து ஆசிர்வாதம் பன்ற மாதிரி இருந்தது"என்று அவனை பாராட்ட சீனுவோ ஒரே ஒரு சிறிய புன்னகையுடன் "நன்றி"என ஒற்றை வார்த்தையில் பதில் கூறிவிட்டு சென்றுவிட்டான்.

அவனது குரலில் அவளது டென்ஷன் அனைத்தையும் மறந்து விட்டு வீட்டுக்கு வந்தாள் வனஜா...பக்கத்து திண்ணையில் அமர்ந்திருந்த கிட்டுமாமா"என்னடி இன்னைக்கு சீனு பாடினானா மே"என்று கேட்க..."அட ஆமாம் தாத்தா சீனு நன்னா பாடினான் கேக்கவே அவ்வளவு அருமையா இருந்தது"

"ஹாஹா.... சரி சரி அப்றம் எப்போ உனக்கு கல்யாண தேதி குறிச்சிருக்கா"?

"தாத்தா அதை மட்டும் கேட்காத நேக்கு டென்ஷன் தலைக்கேருது. எனக்கு விச்சுவை பிடிக்கல தாத்தா.. மத்தவங்க மனசை புரிஞ்சிக்க தெரியாதவன். இந்த மேனர்ஸ் னு சொல்வாளே அது சுத்தமா அவன்கிட்ட கிடையாது"

"ஏய் வனஜா உள்ள வா என்றழைத்தாள்" அவளுடைய தாய்.

"என்னமா" என்றாள் வனஜா?,

"ஏண்டி மாப்பிள்ளை யை உனக்கு பிடிக்கலையோ கிட்டுமாமா கிட்ட ஏதேதோ பேசிட்டு இருந்தே"

"ஆமாம் மா நேக்கு அவனை சாரி சாரி அவரை பிடிக்கலை..அப்பா கிட்ட சொல்லி கல்யாண தேதி குறிக்க வேண்டானு சொல்லிடு".

"ஏண்டி உனக்கு விச்சு மேல இவ்வளவு கோபம்"?என்று கேட்க அவளோ பட்டென்று அதிகாலை நடந்த உரையாடலை தன் தாயிடம் ஒன்று விடாமல் ஒப்பித்தாள்.
"மா..நான் ஈரத்துணியோட நிக்கிறேன் னு கூட பார்க்காமல் வழி மறைத்து அவ்வளவு கேள்வி கேக்குறாரு மா,பார்டி போலாமா ,ஏன் என்கூட பழக மாட்டேங்குற அது இது னு"

"வனஜா உன் மேல உள்ள அன்புல உன்கிட்ட பேச ஆசைபடுறானோ என்னவோ. விச்சு நல்ல பையன் தான் மா".

"மா...உண்மையை சொல்லவா?"என்று அவள் பேசுவதற்குள் அவள் தந்தையும் அங்கு வந்து நிற்க ...பேச்சை நிப்பாட்டாமல் தைரியமாக அவள் எண்ணத்தை வெளிப்படுத்தினாள்.

"அம்மா...பா...நேக்கு இந்த அக்ரஹாரத்தை விட்டு எங்கேயும் போக பிடிக்கல, இந்த வீடு ,அக்கம்பக்கத்தில் உள்ள மக்கள், முக்கியமா கிட்டுமாமாவும் அவருடைய கதைகளும்,அப்றம் இந்த கோவில்.. இதெல்லாம் விட்டு எனக்கு போக பிடிக்கல..அதற்காக கல்யாணம் பன்னிக்க மாட்டேனு சொல்ல வரவில்லை... இதே அக்ரஹாரம் ல இருக்கிற ஒருத்தரை கல்யாணம் பன்னிட்டு நான் இங்கேயே இருந்திடுறேனு சொல்றேன்"

ஹாஹா "அப்போ விச்சுவை நீ வேண்டானு சொல்ல இதான் காரணம் அப்படித்தானே"?

"ம்ம்ம்"என்று பாவமாக தலையசைக்க.. மகளின் தலையை வருடியவர் "விச்சு வை கல்யாணம் ஆகிட்டு நம்ப ஆத்துலையே தங்கிட சொல்லி பார்க்கிறேன்"என்று கூற ஏதோ மனதில் இருந்த பாரம் அவளுக்கு இறங்கியது.

விச்சுவின் குடும்பத்தை பார்த்து பேசிவிட்டு போகலாம் என்று வனஜாவின் தந்தை அவர்கள் இருக்கும் வீட்டிற்கு சென்றார்.
விச்சுவின் வீடு அந்த வீதியிலே மிகப்பெரிய வீடு கேட் திறந்து உள்ளே செல்ல பெரிய தாழ்வாரம்... லொல் லொல் என்று குரைக்கும் பொமேரியன் டாக் ஒன்று ,தாழ்வாரம் கடந்து வந்தால் ஒரு பெரிய முற்றம் அதில் விலை உயர்ந்த சோப்பா செட் அந்த முற்றத்தை தாண்டி மூன்று அறைகள் ஒரு தனியே பூஜையறை. பார்க்க அவ்வளவு அம்சமாக இருக்கும். சோப்பாவில் அமர்ந்து செய்தித்தாள் படித்து கொண்டிருந்த விச்சுவின் அப்பா "வாங்க சம்மந்தி"என்று இன்முகத்துடன் அழைக்க...

"சம்மந்தி உங்கள் கிட்ட ஒன்று கேக்கலாமா"? என்று ஆரம்பித்தார் வனஜாவின் தந்தை.

என்ன கேட்க போகிறார் என்பதை யோசித்தவர் சரி கேளுங்க என்று அனுமதிக்க 'உங்கள் விச்சு கல்யாணம் ஆன பிறகு எங்கள் வீட்டில் தங்கிகிட்டா இல்லை இல்லை எங்க வீட்டில் தங்கனும் னு கூட இல்லை.. அதே அக்ரஹாரத்தில் வேற ஒரு வீடு வாடகைக்கு எடுத்து கூட தங்கிக்கட்டும்.அப்படி இருந்தா நல்லாருக்கும் னு தோன்றுது"

"ஹாஹா.. சம்மந்தி இது என்ன பொம்மை யா உங்கள் வீட்டில் தூக்கிண்டு போய் வச்சிருக்க... எங்க ஆத்து மாட்டுபொண்ணு தானே இங்கே வந்து தங்கனும் "அது தானே முறையும் கூட..

"அதுக்கில்ல சம்மந்தி என் பொண்ணு அக்ரஹாரம் கலாச்சாரத்தோடு ஒன்றி வாழ்ந்வள். அவளுக்கு இந்த மாதிரி ஆடம்பர வாழ்க்கை பழக்கமும் இல்லை.. அதனால்.."

"அதுக்கு என் புள்ளையாண்ட உன் வீட்டில் வந்து தங்கனுமாக்கும். இங்க பாருங்க சம்மந்தி எங்களுக்குனு ஒரு ஸ்டேடஸ் இருக்கு. அதை எந்த காரணத்தை காட்டியும் விட்டுகொடுக்க முடியாது"என்று கோபமாக கூற..

"அப்படினா ஸ்டேடஸ் பாக்குற உங்கள் வீட்டில் சம்மந்தம் பேச எனக்கு விருப்பமில்லை. குட் பை" என்று வனஜாவின் தந்தை தெளிவாக பேசிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார்.

"என்னங்க.... எங்கேங்க போயிருந்திங்க?"என்று மனைவி கேட்க கோபத்துடன் இருந்தவர் "இங்கே பாரு இந்த சம்மந்தம் வேண்டாம் நமக்கு.. ஸ்டேடஸ் பாக்றவா அவங்க ஸ்டேடஸ்க்கு ஏத்த பொண்ணை பார்த்துக்கட்டும்"

"என்ன சொல்றேல் னா....என்ன பேசிட்டு வந்தேல்"

"என் பொண்ணுக்கு இதே அக்ரஹாரத்தில் வாழத்தான் விருப்பம் னு சொல்லிட்டு வந்துட்டேன்"

"ஐயோ பெருமாளே ! கல்யாணத்தை கெடுத்துட்டேளா"என்று அவள் ஆதங்கபட...

"எதுக்கு டி உன் ஆதங்கத்தை கொட்டிண்டு இருக்க..என் மகளுக்கு பிடிக்காத வாழ்க்கை ஒருபோதும் நான் தேர்ந்தெடுக்க மாட்டேன்... என் பொண்ணு எனக்கு பிடிக்கலை அப்படிங்கிற காரணத்தால் படிப்பையே விட்டு கொடுத்தவள்..அவளுக்கு பிடித்த வாழ்க்கை அமைச்சு தருவது என் பொறுப்பு".

தன் தந்தையின் பேச்சுகளை கேட்ட வனஜாவிற்கு முகத்தில் சிரிப்பும் மனதில் தெளிவும் வந்தது..."எனக்கு பிடிக்காத விச்சுவை எங்க அப்பாவுக்கும் பிடிக்கலை ஸோ நைஸ்"என்று தன் தந்தையை நினைத்து பெருமிதம் கொண்டாள்.

நாட்கள் உருண்டோடியது.
வாசலில் கோலம் போட்டுக்கொண்டு இருந்தாள் ராஜி. அய்யோ தாத்தா என்ன ஆயிடுத்து உங்களுக்கு என்று வனஜா கதறும் சத்தம் ஒருபக்கம், பார்வையற்ற கிட்டுமாமா மனைவியும் தலையில் அடித்து அழும்குரல் ஒருபக்கம்..."அப்பா...அப்பா போய்டேலா" என்று அவரின் மகனின் புலம்பல் ஒருபக்கம். ராஜி ஓடிவந்து பார்க்க கிட்டுமாமா இறந்துவிட்ட நிலையில் இருப்பது கண்டு அவளும் அழத்துவங்கினாள்....
ஆம் இனி கிட்டுமாமா வரவே மாட்டார். அவருடைய கதைகள் எவருடைய செவிகளிலும் கேட்காது..அந்த அக்ரஹாரமே துர்க்கத்தில் இருந்தது. இரண்டு நாட்கள் கழித்து அந்த திண்ணையில் அமர யாருமில்லாமல் வெறிச்சோடி இருக்க..என்ன தோன்றியதோ தெரியவில்லை சீனுவிற்கு அந்த திண்ணையில் வந்து அமர்ந்துக்கொண்டு அவருடைய புத்தகம் ஒன்றை எடுத்து வாசிக்க துவங்கினான். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
"ஐயோ தாத்தா ஆள விடு நீயும் உன் கதைகளும்" என்று ஒதுங்கி போனவன். இன்று அவருடைய கதைகளுக்கு ஏங்கினான்.

வாசலில் நின்று இதை கவனித்துக்கொண்டிருந்த வனஜா "சீனு அழாத டா..கிட்டு தாத்தா எப்பவும் நம்ப கூடவே இருப்பார்"என்று ஆறுதல் கூறினாள். இவர்களுடைய நட்பு இங்கே துவங்கியது. அவ்வப்போது சீனு வீட்டுக்கு சென்று வரும் வனஜாவை பார்க்க சீனுவின் பெற்றோர் மட்டும் தாத்தா பாட்டிக்கு இவளை மிகவும் பிடித்துபோனது. நல்ல நாள் பார்த்து பெண் கேக்க வந்தனர். ஒர் இரு மாதங்களில் திருமணமும் நடந்தேரியது. வனஜா ஆசைப்பட்ட மாதிரி அதே அக்ரஹாரத்தில் வசிக்கும் சீனுவை மணந்து கொண்டு வாழ்க்கையை சந்தோஷமாக துவங்கினாள்.

....முற்றும்....
Moral : அவரவருக்கு பழகிய சூழ்நிலை பொறுத்தே அவரவர் மனநிலை இருக்கும்.​
 

Latest posts

New Threads

Top Bottom