Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed ஆபத்து ஆரம்பம்

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 11.



ஜெர்கின்காரன் விசில் ஒன்றை அடித்தபடி நடந்தான்.அவனது இலக்கு தெளிவாக இருந்தது.அவன் இப்போது தேடி பிடிக்க வேண்டியது ஒரு முட்டு சந்துக்குள் முடங்கியிருந்த கவிதா லாட்ஜ் என்கிற நாலந்தர லாட்ஜை.வழியில் தென்பட்டவர்களிடம் வழியை விசாரித்து கொண்டு அவன் இலக்கு நோக்கி முன்னேறினான்.கையிலிருந்த சிகரெட்டை அவ்வப்போது வாசனை பார்த்து கொண்டான்.



“வேண்டாம் பரிமளம்! நீ பண்றது தப்பு! “



“பொறந்ததிலிருந்து கஷ்டத்தை மட்டுமே பார்த்தவள் நான்.உன்னை கல்யாணம் பண்ணியது கூட பணக்காரன்னு நினைச்சுத்தான்.இப்பத்தான் டம்மி பீஸ்னு தெரியுது.எனக்கு வசதியான வாழ்க்கை வேணும்.அதுக்காக என்ன வேணா பண்ணுவேன்! “



காதோரத்தில் எப்போதோ கேட்ட சம்பாஷணை நினைவுக்கு வர ஜெர்கினின் வேகம் கூடியது.அவன் மங்கலான வெளிச்சத்தில் இருந்த கவிதா லாட்ஜினுள் நுழைந்தான். ரிசப்சனில் உட்கார்ந்திருந்தவன் கலைஞர் டிவியில் எதையோ பார்த்து கொட்டாவி விட்டு கொண்டிருந்தான்.

“ரூம் ஒன்னு வேணும்! “என்ற ஜெர்கினை பார்த்தவன் “சிங்கிளா? டபுளா? “என்றான்.



“சிங்கிள்! “



“ஐநூறு கொடுங்க! வாடகை 250 தான்.காலி பண்ணும் போது மீதிய வாங்கிக்கலாம்! ஒருநாள்தானே? “



“ம்! “என்ற ஜெர்கின் “அனுசுயா இருந்தா ரூமுக்கு அனுப்புங்க! “என்றான்.



“இது அந்த மாதிரி லாட்ஜ் இல்லைங்க! “என்று ரிசப்சன் பம்மும்போது ஜெர்கினின் கையில் ரோஸ் நிற நோட்டு ஒன்று முளைத்திருந்தது.



“ப்ரண்டு சொல்லித்தான் வந்திருக்கேன்.அனுப்பு! “என்றான் ஜெர்கின்.



“பேரு, விலாசம் எழுதுங்க! “என்று ரிசப்சன் நோட்டை தள்ளினான்.ஜெர்கின் மனதிற்குள் ஒற்றையா, இரட்டையா போட்டு விட்டு மனதிற்குள் வந்ததை எழுதி முடித்தவுடன் வாங்கி பார்த்தவன் “போன் நம்பர், இல்லைன்னா ஆதார் கார்டு கொடுங்க! நாளைக்கு எனக்கு ப்ரச்சனை வந்துர கூடாது பாருங்க! “என்றான்.



“என்ன பிரச்சனை வரும்னு நினைக்கிற? “



“கயித்த போட்டுட்டு தொங்கிட்டீங்கன்னா? “



“நான் தொங்க விடுகிறவன்.தொங்குபவன் அல்ல! “



“வசனம் நல்லாத்தான் இருக்கு.ஆதார் வேணுமே?



“இங்கேயுமா ஆதாரு! போன் பண்ணிஎன்னோட நம்பரை செக் பண்ணிக்க!”என்ற ஜெர்கின் பாக்கெட்டிலிருந்த செல்போனை உயிர்பித்தான். தன்னுடைய செல்லிலிருந்து ஜெர்கினின் செல் நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்து திருப்தியடைந்தவன் “மேல போங்க! 12 நெம்பர் ரூம்.இந்தாங்க சாவி! அனுசுயாவை அனுப்புறேன்! “என்றான்.



அவன் சாவியை எடுக்க திரும்பிய கணத்தில் மேஜையிலிருந்த அவனது செல்லை எடுத்து சுவிட்சை அணைத்தான் ஜெர்கின்.சாவியை கொடுத்த ரிசப்சன் தன்னுடைய செல்லை டிராவில் போட்டு விட்டு டிவியை பார்த்தவன் “அனுசுயா! பார்ட்டி கூட போ! “என்றான்.அதுவரை இருளின் மறைவில் ஒருவள் உட்கார்ந்திருந்ததை ஜெர்கின் பார்க்க தவறியிருந்தான்.தூணின் மறைவிலிருந்து வெளிப்பட்டவளை கூட்டி கொண்டு ஜெர்கின் நீண்டிருந்த படிகளில் ஏற ஆரம்பித்தான்.”எதுக்குய்யா அவனோட போனை ஆப் பண்ணினாய்? “என்றாள் அனுசுயா.ஜெர்கின் ஒரு திடுக்கிடலோடு நிமிர்ந்தான்.ஒரு கொலையை நிகழ்த்த அவனுக்கு குறுகிய அவகாசமே இருந்தது.



தொடரும்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 12.



அருணும் முத்துசாமியும் நள்ளிரவு வாகன ரோந்து பணியில் இருந்தார்கள்.அப்போது முத்துசாமியின் போன் அடித்தது.எடுத்து பேசியவர் பதட்டமானார்.



“தம்பி! கில்லரோட போன் ஆனாகி இரண்டு நிமிசத்துல ஆப்பாகிருச்சாம்.கம்பெனியிலிருந்து போன் வந்துச்சு.!”



“எதுக்கு ஆன் பண்ணியிருப்பான்? “என்றான் அருண்.



“ஒரே ஒரு மிஸ்டு கால் வந்துருக்கு அந்த செல்லுக்கு.உடனே கட்டாயிருச்சு! “



“அந்த மிஸ்டு கால் நெம்பரை வாங்கி அதுக்கு கால் பண்ணுங்கண்ணே! “



முத்துசாமி கம்பெனிக்கு போன் போட்டு ரிசப்சன்காரனின் நெம்பரை வாங்கினார்.இருவரும் மாற்றி மாற்றி போன் செய்த போது சுவிட்ச் ஆப் என்றது கம்யூட்டர் குரல்.



அதே நேரம் ஜெர்கின் அனுசுயாவை பார்த்து “செல்லை ஆப் பண்ணியதை நீ பார்த்தியா? “என்றான்.



“ஆமாம்! “என்றாள் அனுசுயா.



“உள்ளே வா பேசிக்கலாம்! “என்று12 ஆம் எண் அறைக்குள் அவளை இழுத்தவன் கதவை தாழ் போட்டான்.



“அய்யாக்கு ரொம்ப அவசரமோ? “என்ற அனுசுயாவை உற்று பார்த்தவன் அவளை அப்படியே கட்டிலில் சாய்த்தான்.ஜெர்கினுக்குள் ஸ்டில்லடோ உறுத்தியது.



“என்னய்யா குத்துது? “என்றவளை தள்ளி விட்டவன் தலையணை உறையை கழட்ட ஆரம்பித்தான்.



“எல்லோரும் உறைய போடுவாங்க?நீ என்னய்யா கழட்டுற? “என்ற அனுசுயாவின் வாயில் அதை திணித்து அவளை மவுனமாக்கினான்.கைகளை பின்புறமாக கட்டியவன் அவளை பாத்ரூமுக்குள் நெட்டி தள்ளினான்.பாக்கெட்டிலிருந்த நைலான் கயிறையும், ஸ்டில்லடோவையும் எடுத்து கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்து தாளிட்டான்.அனுசுயாவின் கண்கள் பீதியில் விரிந்தன.



அங்கே அருணும்,முத்துசாமியும் பதட்டத்தின் உச்சியில் இருந்தனர்.”எதிரி வேட்டையை ஆரம்பித்து விட்டான்.நாம கவனமா இருக்கனும்! “என்றார் முத்துசாமி.



“ஆனா இந்த நெம்பர் சுவிட்ச் ஆப்னு வருதே? இப்ப என்ன பண்றது? “என்றான் அருண்.



“சிக்னல் எங்கிருந்து வருதுன்னு கண்டு பிடிக்கலாம்! ஆனா குத்து மதிப்பாத்தான் தேடனும்.அதுக்குள்ள கொலை நடந்து முடிஞ்சிரும்! “



“அண்ணே! இப்படி யோசிப்போம்.மிஸ்டு காலுக்கு கடைசியா வந்த போன் நம்பரை கேளுங்க.கண்டிப்பா ப்ரண்டாவோ, உறவுக்காரனாகவோ இருக்கலாம்.அவனை பிடிச்சா மிஸ்டு காலோட டீடெய்ல் தெரியலாம்! “



“செம தம்பி! “முத்துசாமி கம்பெனிக்கு போனை போட்டார்.அவர்கள் கொடுத்த நம்பரில் அழைத்த போது போனைஎடுத்தவன் போலீஸ் என்றதும் மிரண்டான்.”அந்த நெம்பர் என்னோட ப்ரண்டு ராமனுடையதுங்க! அவன் கவிதா லாட்ஜில் ரிசப்சனிஸ்டா இருக்கான்! “



“தேங்க்ஸ்! “என்ற அருண் முத்துசாமியோடு புயல் வேகத்தில் கிளம்பினான்.அதிர்ஷ்டவசமாக முத்துசாமிக்கு கவிதா லாட்ஜை தெரிந்திருந்தது.இருவரையும் சுமந்து கொண்டு பைக் புயல் வேகத்தில் தடதடத்தது.லாட்ஜில் நுழைந்ததும் முத்துசாமி ரிசப்சன்காரனை ஒங்கி அறைந்தார்.”போனை எதுக்குடா ஆப் பண்ணி வைச்ச? “என்றார்.போலீசை பார்த்ததும் மிரண்டவன்



“போனை நான் ஆப் பண்ணலைங்களே? “என்றான் பரிதாபமாக!



“எடு போனை! “என்ற அருண் ராமன் டிராவிலிருந்து எடுத்த போனை ஆன் செய்தான்.”கடைசியா மிஸ்டு கால் கொடுத்த நம்பர் யாருது? “என்றான். “என் போனை யார் ஆப் பண்ணாங்க? “என்றான் ராமன் குழப்பமாக!



“12 நெம்பர் ரூம் கஸ்டமர் நெம்பருங்க! கன்பார்ம் பண்ண கால் பண்ணினேன்.ஏங்க எதுனா பிரச்சனையா? “



“ உன்னால ஒரு உசுரு போயிருச்சுடா!என் பின்னாடியே வா! “என்ற அருணும் முத்துசாமியும் படிகளில் ஓடி 12 ம் நெம்பர் ரூமை அணுகிய போது அது ஆ வென திறந்து கிடந்தது.காரியம் முடிந்திருந்தது.பாத்ரூமில் கைகள் கட்டப்பட்டு ரத்தகளறியாகியிருந்தாள் அனுசுயா.இருவரும் துப்பாக்கியோடு ஒவ்வொரு அறையாக தேட ஆரம்பித்தனர்.பலரின் சொர்க்க யாத்திரை அரைகுறை ஆடையோடு பாதியில் முடிந்தது.போலீஸ் யூனிபார்மை பார்த்து விட்டு பலரும் சிதறி ஓட ஆரம்பித்தனர்.அருண் தன் தவறை உணரும் முன்லாட்ஜில் முக்கால்வாசி காலியாகியிருந்தது.ஜெர்கின் ரிசப்சன் தூங்கிய நேரத்தில் நழுவியிருக்கலாம்.இல்லை எங்காவது இருளில் மறைந்திருந்து கூட்டத்தோடு கலந்து வெளியேறியிருக்கலாம்.ராமனிடமும், லாட்ஜ்ஜில் வேலை செய்பவர்களிடமும்வழக்கமான விசாரணைகள் முடிந்த பின் பாரன்சிக் ஆட்கள் வந்து சேர்ந்தார்கள்.அருணும் முத்துசாமியும் சோர்வாக வந்து சாத்திய கடை ஒன்றின் முன் உட்கார்ந்த போது ஜெர்கின் போட்டு தொப்பி அணிந்தபடி அரை போதையில் டாக்டர் மருத நாயகம் கையில் ஒரு பையோடு தடுமாறி நடந்து வந்து கொண்டிருந்தார்.



தொடரும்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம்13



இருவரையும் பார்த்ததும் எதிர்பாராத அதிர்ச்சிக்கு போன மருத நாயகம் “என்னப்பா இங்க உட்கார்ந்துருக்கீங்க? “என்றார்.



“நீங்கஎங்க டாக்டர் இந்த பக்கம்? “என்றான் அருண்.



“சரக்கு தீர்ந்து போய்விட்டது.பத்து மணிக்கு கடைய வேற சாத்திட்டாங்க! ஸ்டாக் எதுவும் இல்லை.இங்க ஒருத்தன் இருக்கான்.பாண்டிச்சேரிலருந்து சரக்கை வாங்கிட்டு வந்து விற்பதுதான் அவனோட வேலை.அவனை தேடி வந்தேன்.நல்லவேலையா நாலு ஆப் கிடைச்சுது.!ஆமா நீங்க ஏன் இங்க உக்காந்திருக்கீங்க? உங்க வில்லன் வேலய காட்டிட்டானா?”



“ஆமா! சுடசுட ஒரு கொலைய பண்ணியிருக்கான்.!ஆமா இவ்வளவு தூரம் நடந்தா வந்தீங்க? “



“இல்லைப்பா! பஸ்லதான் வந்தேன்.!”



“சரக்கை யாருகிட்ட வாங்கினீங்க? அவனோட நம்பரை கொடுங்க! “



“எம் மேல டவுட்டா? “என்றவர் நம்பரை சொன்னார்.ரிங் போய் எடுத்தவனிடம் “ஹலோ! நான் இன்ஸ்பெக்டர் அருண் பேசறேன்.உங்ககிட்ட மருத நாயகம்னு …”



“ஸாரிங்க! அப்படி யாரையும் தெரியாது.ராங் நம்பர்! “என்றது எதிர்முனை.



“இப்ப என்ன சொல்ரீங்க டாக்டர்? “என்றான் அருண்.



“என்னப்பா புரியாம பேசற.எடுத்ததும் போலீஸ்னு சொன்னா பதில் அப்படித்தான் வரும்.இனி யார் போன் பண்ணாலும் எடுக்க மாட்டான்.நெம்பரைகூட மாத்த வாய்ப்பிருக்கு.அப்ப கொலைய நான்தான் பண்ணேன்னு சொல்ரீங்களா? அடப்பாவிகளா! நான் செத்த பொணத்தைதானே துண்டு துண்டா வெட்டிட்டு இருக்கேன்! “



அருகில் வந்த முத்துசாமி “தம்பி! நான் ரிசப்சன் ராமனை கூட்டிட்டு வர்ரேன்.அவன் கில்லரை பார்த்திருக்கிறான்.அடையாளம் காட்டுவான்.”என்றார்



“சரிதான்! கூட்டிட்டு வாங்கண்ணே! “



லாட்ஜ்க்குள் போன முத்துசாமி ஐந்து நிமிடத்தில் பதட்டமாக ஓடி வந்தார்.”தம்பி! அவனுக்கு லோ ப்ரசர் இருக்கும் போலிருக்கு.பாத்ரூம்ல இருந்த பொணத்தை பார்த்துட்டு மயக்கமாயிட்டான்! “என்றார்.



அதே நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்து நின்றது.பாரன்சிக் ஆட்கள் அனுசுயாவின் பிணத்தை ஏற்றினார்கள்.கூடவே ராமனை கைத்தாங்கலாக லாட்ஜ் ஆட்கள் வேனில் ஏற்றினார்கள்.”யாராவது கூட வாங்கப்பா! “என்ற முத்துசாமியின் அழைப்புக்கு யாரும் முன் வரவில்லை.அதே நேரம் மருத நாயகம் வேனில் ஏறினார்.”அப்பாடா! எப்படி ஹாஸ்பிடல் போறதுன்னு நினைச்சேன்.வண்டியும் கிடைச்சிருச்சு.வேலை செய்ய பாடியும் கிடைச்சிருச்சு! “என்றார்.



முத்துசாமியை தனியாக அழைத்த அருண் “வேன்ல கூட போங்கண்ணே! கவனமாஇருங்க.ஒரே ஐ விட்னஸ் ராமன்தான்.டாக்டர் அவனை எதாவது பண்ணிற போறாரு! “



“நான் பாத்துக்கிறேன் தம்பி! “என்ற முத்துசாமி வேனில் ஏறியவுடன் வேன் கிளம்பியது.கடைக்கு முன் உட்கார்ந்த படியே அருண் தூங்க ஆரம்பித்தான்.அருண் திடுக்கென்று விழித்த போது மணி மூன்று நாற்பது.இந்நேரம் அப்பா சிவன் மலை பஸ் ஸ்டாப்பை அடைந்திருப்பார்.தன் கல்லூரி நண்பன் கோவிந்தனுக்கு போன் செய்தான்.”அப்பா வந்துட்டாரா மச்சி! “



“இன்னும் வரலை மாப்பிள்ளை! வந்தா நான் பாத்துக்கிறேன்! “என்றான் கோவிந்தன்.



போனை அணைத்த போது மறுபடியும் போன் அடித்தது.ஸ்டேசனிலிருந்து அழைப்பு வந்திருந்தது.

“சார்! காந்தி நகர் நாலாவது தெருவுல ஒரு மர்டர் நடந்திருக்கு சார்.இப்பத்தான் பால்காரர் போன் பண்ணினார்.போய் பாருங்கள்! “



இதென்ன புது பிரச்சனை என்று நினைத்தவனாக அருண் பைக்கை கிளப்பினான்.காந்தி நகரின் நாலாவது தெருவில் பைக்கை நிறுத்தினான்.சொற்பமான கூட்டம் சடலத்தின் அருகே நிற்பதை பார்த்தவன் அதை பிளந்து கொண்டு முன்னேறினான்.பிணத்தின் சட்டை அவனுக்கு பரிச்சயமானது போல் தோன்றியது.வலது கையில் பெல்ட்டை பிடித்தபடி கிடந்த சடலத்தை புரட்டிய அருண் அதிர்ந்தான்.அது அப்பா! அம்மா இல்லாத குறை தெரியாமல் தோளிலும் மார்பிலும் தூக்கி வளர்த்த அப்பா தாமோதரன் நெஞ்சில் கத்தி குத்துபட்டு இறந்து கிடந்தார்.அதே நேரம் போன் அடித்தது.மறுமுனையிலிருந்த கோவிந்தன் “என்ன மாப்பிள்ளை! அப்பா இன்னும் வரலை? “என்றான்.



“இனி எப்பவுமே வர மாட்டாருடா! “என்ற அருண் கதறி அழ ஆரம்பித்தான்.



தொடரும்!
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 14



“என் மேல இருந்த டவுட் போயிருச்சா அருண்? “என்றார் மருதநாயகம்.அருகிலிருந்த டேபிளில் தாமோதரனின் உடல் போஸ்ட்மார்டம் செய்யப்பட்டு தயாராக இருந்தது.



“ராமன் லாட்ஜ்க்கு வந்தது இவரு இல்லைன்னு சொல்லிட்டான் சார்.சரக்கு விற்றவனையும் விசாரிச்சாச்சு.இவரு அவன்கூட இருந்ததா சொல்றான்! “என்றார் முத்துசாமி.



அழுது அழுது சிவந்த கண்களுடன் இருந்த அருண் “ஸாரி டாக்டர்! உங்களை தப்பா நினைச்சுட்டேன்.!”என்றான்.

“இட்ஸ் ஒகேப்பா! ஆனா உங்கப்பா ஒரு க்ளுவை விட்டுட்டு போயிறுக்காரு.!”



“என்ன டாக்டர் சொல்ரீங்க? “



“எஸ்! பாரன்ஸிக் ரிப்போர்ட்படி அந்த பைக் உங்கப்பாவை பார்த்ததும் பிரேக் போட்டு நிறுத்தப்படலை.பைக் நின்ன இடத்துல பிரேக் போட்ட தாரை இல்லை.அதே நேரத்துல உங்கப்பாவை குத்திட்டு அவனால வண்டியை கிளப்ப முடியலை.அதனால் டென்சனாகி தரையில் காலை உதைச்சிருக்கான்.கீழே குத்துப்பட்டு கிடந்த உங்கப்பா பெல்டு பக்கிளில் இருந்த ஊசியால காத்தை இறக்கியிறுக்கனும்.இல்லைன்னா பஞ்சர் பண்ணியிருக்கனும்.இன்னொன்னு பைக்கோட டயர்ல பார்மால்டி ஹைடு இருந்திருக்கு.அது உங்கப்பாவோட கைல பட்ருக்கு.”



“அது எதுக்கு யூஸாகும் டாக்டர்? “



“இறந்த உடலை பதப்படுத்த பயன்படுத்தப்படும் திரவம் அது! வித்தியாசமான நாற்றமடிக்க கூடியது! “



“நைட்டு மூன்றரை மணிக்கு பைக் காத்து இல்லாமயோ, பஞ்சராயிட்டாவோ ஒருத்தன் என்ன பண்ணுவான்? “என்றார் மருதநாயகம்.



“அந்த நேரத்துல பஞ்சர் கடை எதுவும் இருக்காது.சோ வண்டிய தள்ளிட்டுத்தான் போயாகனும்.!”என்றான் அருண்.



“இப்பத்தான் டியூப்லெஸ் டயர்னு ஒன்னு வந்துருக்கே! பஞ்சரானாலும் காத்து மட்டும் அடிச்சா போதும்! பல கிலோ மீட்டர் போகும்.!”என்றார் முத்துசாமி.



“அப்ப அந்த நேரத்துல காத்தடிக்க எங்க போயிருப்பான்.?”என்றார் மருதநாயகம்.



“பெட்ரோல் பங்க்! அது மட்டும்தான் 24 மணி நேரமும் திறந்திருக்கும்.!”



“காந்தி நகர்ல ஒரு பங்க் இருக்கு! “என்றார் முத்துசாமி.



“அப்பாவோட பாடி இங்கேயே இருக்கட்டும்.கில்லரை பிடிச்சிட்டு பாடிய அடக்கம் பண்ணிக்கிறேன்.!”என்றான் அருண்.



காந்தி நகர் பெட்ரோல் பங்க்!

காற்று பிடிக்கும் சிறுவனிடம் விசாரித்த போது “ஆமா சார்! அந்த பைக்கோட டயர் ரொம்ப நாறுச்சு.எதோ பாட்டில் உடைஞ்சு டயர்ல ஆயிருக்கும் போலருக்கு.அவருக்கிட்ட கேட்டேனே? அவரு கூட ஹேல்மெட்டை கழட்டிட்டு டயரை பார்த்தாரே? “என்றான்.



அருண் பெட்ரோல் பங்கின் சிசிடிவி கேமராவை பார்த்தான்.இரவு நடந்த காட்சிகளை பார்வேர்ட் செய்த போது அந்த புட்டேஜ் சிக்கியது.பையன் டயரை பார்த்துவிட்டு முகத்தை சுழித்தபடி ஏதோ சொல்வதும் அவன் யோசித்தபடி ஹேல்மெட்டை கழற்றுவதும் பதிவாகியிருந்தது.



“தம்பி!இது மதன்! “என்றார் முத்துசாமி.



“அவனேதான்! “என்றான் அருண்.அவன் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.”அப்பாக்கிட்ட பைக் தானாவே நிக்கனும்னா பெட்ரோல் ரிசர்வ் விழுந்துருக்குமா தம்பி! “என்றார் முத்துசாமி.



“பெட்ரோல் ரிசர்வ் விழுந்திருந்தா பெட்ரோல் அடிச்சிருக்கனுமே? ஆனா அடிக்கலையே? “என்றான் அருண்.ஜும் செய்து பார்த்ததில் வண்டியின் பெட்ரோல் நாப் மெயினில் இருந்தது.



அவர்கள் அதன் நகலொன்றை எடுத்துகொண்டு மதனின் வீட்டுக்கு விரைந்தார்கள்.வீட்டின் போர்டிகோவில் அந்த பைக் லேசான நாற்றத்துடன் நின்றிருந்தது.நல்லவேளையாக டைகர் ராம்நாத் வெளிநாட்டு சுற்றுபயணத்தில் இருந்ததால் மதனை எளிதில் கைது செய்ய முடிந்தது.”நான் யாரையும் கொல்லலீங்க! “என்றவனால் சிசி டிவி புட்டேஜிக்கு பதில் சொல்ல முடியவில்லை.”எதா இருந்தாலும் அப்பா வந்த பின்புதான் பேசுவேன்! “என்று அடமாக மவுனம் சாதித்தவனிடம் தோற்றான் அருண்.அருணுக்கு குழப்பமாக இருந்தது.கேஸ் எங்கெங்கோ போவது போல் இருந்தது.மனசோர்வுடன் வீட்டிற்கு வந்தான்.அப்பா இல்லாத வீடு வெறிச்சோடி காணப்பட்டது.இனி தான் மட்டும் தனியாக இருக்க வேண்டும் எனறு நினைத்த போதே துக்கம் தொண்டையை அடைத்தது.சர்ட் மாட்டும் ஹேங்கரில் அப்பாவின் ஹேண்ட் பேக் தொங்கியது.எதோ ஒன்று அருணை உந்த அந்த பேக்கின் ஜிப்பை நீக்கினான் அருண்.உள்ளே ஒரு டைரியும் சில போலோ மிட்டாய் பாக்கெட்டுகளும் கிடந்தன.போலோ மிட்டாய்களின் எக்ஸ்பைரி தேதி காலாவதியாகியிருந்தது.பஸ் பயணங்களில் வாய் சும்மா இருக்கிறதென்று மிட்டாய்களை சுவைப்பது அவர் பழக்கம்.அப்படி வாங்கிய மிட்டாய் காலவாதியானது தெரியாமல் தின்று வாயில் புண் வந்திருக்கலாம்.அருணுக்கு அவருக்கு வெளியூர் போனால் வாயில் புண் வரும் ரகசியம் புரிந்தது.



அப்பாவின் டைரியை பிரித்து படிக்க ஆரம்பித்த போது அவனுக்குள் இருள் பிரிந்து வெளிச்சம் பிறக்கலாயிற்று. ஒருஅனுபவம் மிக்க போலீஸ்காரனின் திறமை அந்த டைரியில் வெளிப்பட்டிருந்தது.அதில் எழுதப்பட்டிருந்த 13 இலக்க எண்களும் அவற்றுக்கான விளக்கத்தையும் பார்த்த போது அப்பா குறுக்கு வழியில் கொலைகாரனை பிடிக்க முயற்சி செய்திருப்பது தெரிந்தது.சிவப்பு மையால் ஏழுமலைஎன்று எழுதி பெருக்கல் குறிபோட்டிருந்தது.புது உற்சாகத்தோடு எழுந்தவன் முத்துசாமிக்கு போன் போட்டான்.”அண்ணே! இன்னைக்கு நைட்டு தயாரா இருங்க.கில்லரை பிடிக்கிறோம்.!”என்றான்.



“அப்ப மதனை விட்ரலாமா? “



“நோ!அவனை வெளியில் விட்டா இன்னைக்கு நைட்டு நடக்க போற கொலையும் நடக்காது! “



“என்ன தம்பி சொல்றீங்க? இன்னைக்கும் ஒரு கொலை நடக்க போவுதா? “



“ஆமாம்! அதுவும் மதனை காப்பாற்றத்தான்!”என்றான் அருண்.

தொடரும்!
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 15

இரவு மணி பணிரெண்டு!

முத்துசாமியும், அருணும் காந்தி நகர் நாலாவது தெருவில் நின்றிருந்தனர்.அருகே இருட்டுக்குள் போலீஸ் ஜீப் நின்றிருந்தது.தாமோதரன் விழுந்து கிடந்த இடத்தருகேநின்ற அருண் “கில்லரோட பைக் சரியா இந்த இடத்துக்கு வந்ததும் நின்றுக்கு.எதனாலன்னு சொல்லுங்க பார்ப்போம்.!”



“வண்டி ரிசர்வ் விழுந்துருக்குமா? “



“டிவி புட்டேஜ்ல பெட்ரோல் நாப் மெயின்ல இருப்பதை பார்த்தோமே? “



“அப்படின்னா வண்டி ஏன் நின்றுக்கும்? “



“சில பேத்துக்குகிட்ட சில பழக்கங்கள் இருக்கும்.கியர்ல வண்டிய நிறுத்தறது.வண்டிய நிறுத்தியதும் பெட்ரோல் நாப்பை ஆப் பண்றது.இந்த மாதிரி! “



முத்துசாமிக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.



“அப்ப கொலையாளி பெட்ரோல் ஆப் பண்ணியிருப்பது தெரியாம வண்டிய எடுத்துட்டு வந்திருப்பானா? “



“எக்ஸாட்லி! பெட்ரோல் ஆப் செய்யப்பட்ட வண்டி குறைந்தது அரைகிலோமீட்டராவது ஓடும்.இல்லையா? “



“ஆமாம்! “



“ரைட்டு! வண்டியோட டயர்ல பார்மால்டீ ஹேடு இருக்குன்னா அந்த வண்டி ஒரு ஹாஸ்பிட்டல்லயோ, இல்லை டாக்டர் வீட்டுலயோ நிறுத்தப்பட்டிருக்கலாம்.அங்க மட்டும்தான் அது கிடைக்கும்.!”



“வண்டிதான் மதன் வீட்டுல கிடைச்சதே? “



“கிடைச்சது! கில்லரோட வண்டியும், மதனோட வண்டியும் ஒரே மாடல். ஒரே கலர்.பங்க் சிசி டிவியில் தெரியும் பைக்கோட நம்பர் வேற.மதனோட வண்டி நெம்பர் வேற.!”



“அப்ப கில்லரோட வண்டி எங்கே? “



“அதைத்தான் தேட போறோம்.மதனோட பைக் டயரில் இருப்பது பார்மால்டிஹெடு இல்லை.பாலீஸிக்கு யூஸ் பண்ற சீலர்ங்கிற கெமிக்கல்.பாரன்சிக் ரிப்போர்ட் சொல்லுது.!”



“இந்த அரைகிலோமீட்டருக்குள் இருக்கும் ஹாஸ்பிட்டல் இல்லை டாக்டர் வீடுஎதுன்னு கண்டு பிடிக்கனும்.!”



“ஒரே வீடுதான் இருக்கு.அது டாக்டர் மருதநாயகத்தோட வீடு.!”



“கரெக்ட்! ஆள் நடமாட்டம் இல்லாத டாக்டரோட காரேஜ்லதான் அந்த பைக் இருக்கனும்.!”



“சரி தம்பி! பைக் இங்கதான் இருக்கு.கொலைகாரன் பெட்ரோலை ஆப் பண்ணி வைச்சிருப்பான்னு அப்பாக்கு எப்படி தெரியும்? அப்ப கொலைகாரன் யாருன்னு அப்பாக்கு தெரியுமா? அன்னைக்கு கொலை செய்வான்னு அவருக்கு எப்படி தெரியும்."



“தெரிஞ்சிருக்கனும்.அதனால்தான் சரியா பெட்ரோல் டிரையாகிற இடத்தை கணிச்சு நின்றுக்காரு.!”



“இவ்வளவு டெரரான ஆளை பிடிக்க ஆயுதம் இல்லாமயா வந்திருப்பாரு! “

“அதுதான் உதைக்குது! சரி வாங்க! மருதநாயகத்தோட கார் செட்டுகிட்ட மறைஞ்சு வெயிட் பண்ணுவோம்.!”



“இன்னைக்கு வருவான்னு எப்படி நம்பறீங்க? “



“ஒரு யூகம்தான்! அந்த பைக்கை அப்புறப்படுத்தவாவது வருவான்னு நம்பறேன்.இன்னொரு தியறி இருக்கு.அதை அப்புறமாக சொல்கிறேன்.!”



மருதநாயகத்தின் கார்செட்டிற்கு எதிரே இருந்த மரத்தோடு ஒட்டியபடி இருவரும் சத்தமின்றி நின்றனர்.நொடிகள் யுகங்களாக நகர்ந்தன.சில்வண்டுகளின் ரீங்காரம் தவிர வேறு சத்தம் எதுவுமில்லை.நிலவு வானத்தின் உச்சிக்கு வந்திருந்தது.அப்போதுதான் சில் அவுட்டாக அந்த உருவம் நகர்ந்தது.சுற்றும் முற்றும் பார்த்தபடி வந்த ஜெர்கின் அணிந்த உருவம் கார் செட்டின் ஷட்டரை சாவி போட்டு திறந்தது.உள்ளேயிருந்த ஜீரோ வாட்ஸ் பல்பின் சுவிட்சை போட்டதும் மெல்லிய வெளிச்சம் காரேஜினுள் பரவியது.உள்ளே மதன் வைத்திருந்த அதே பைக் மாடலில் ஒரு பைக் நின்றிருந்தது.ஹேல்மெட்டை எடுத்து அணிந்த பின் வண்டியின் சைடு ஸ்டேண்டை அந்த உருவம் எடுக்க முயற்சித்த போது அருணின் போன் ஒலித்தது.”அடச்சே! “என்ற அருண் போனை அணைக்காத தன் முட்டாள்தனத்தை நொந்து கொண்ட போது முத்துசாமி துப்பாக்கியை நீட்டினார்.போனின் ஒசையில் திடுக்கிட்டு திரும்பிய ஜெர்கின்காரன் இருவரையும் பார்த்ததும் குழம்பி ஸ்டில்லடோவை கையில் எடுத்தான்.ஜீரோ வாட்ஸ்ஸின் வெளிச்சத்தில் கத்தி மின்னியது.”ப்ரீஸ்! கையை மேலே தூக்கு! “என்றார் முத்துசாமி.கம்பெனி அழைப்பை நிராகரித்த அருணின் கையிலும் இப்போது துப்பாக்கி முளைத்திருந்தது.



தொடரும்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 16



லாக்கப் ரூமின் வெளியேயிருந்த மேஜையில் ஹேல்மெட், ஸ்டில்லடோ கத்தி, ஒரே ஒரு லிப்ஸ்டிக் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன.ஜெர்கின் அணிந்த மாயா கையில் விலங்கு மாட்டப்பட்டு தலை கலைந்து உட்கார்ந்திருந்தாள்.பக்கத்து அறையிலிருந்த மதன் “மாயா! எதுவும் சொல்லாதே! அப்பா வரட்டும்.இந்த கேஸை உடைச்சிரலாம்! “என்றான்.”வாய மூடுடா கூட்டு களவாணி! “என்று லத்தியால் கம்பியில் அடித்தார் முத்துசாமி.



“சொல்லு மாயா! ஒரு டாக்டரா உயிரை காப்பாத்த வேண்டிய நீ எதுக்கு இப்படி கொலை செய்தாய்? “என்றான் அருண்.



“எனக்கு ஒரு ப்ளாஷ்பேக் இருக்கு.சொன்னா கேப்பீங்களா? “என்றாள் மாயா வறண்ட குரலில்.



“சொல்லு! “என்றான் அருண்.



“என்னோட தாத்தா ராஜசேகரை இந்த ஊருல பணக்காரரா, பெரிய மனுசனா எல்லாத்துக்கும் தெரியும்.ஆனா அவரோடஒரே பையன் தனசேகரை பத்தி யாருக்கும் தெரியாது.எஸ்! அவருதான் எங்கப்பா! “



“அவரும் உங்கம்மாவும்தான் விமான விபத்துல செத்துட்டாங்களே? “என்றார் முத்துசாமி.



“இல்லை.அது தாத்தாவோட செட்டப்.தன்னோட மானத்தை, கௌரவத்தை காப்பாத்திக்க தாத்தா செஞ்ச ஏற்பாடு. எங்கப்பா தனசேகர் ஏழையான பரிமளத்தை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.தன்னோட பேச்சை கேட்காமல் கல்யாணம் பண்ணிக்கிட்ட பையனுக்கு சொத்துல பத்துகாசு கூட தர மாட்டேன்னு தாத்தா கண்டிப்பா சொல்லிட்டாரு.உங்களோட பேரை யூஸ் பண்ணாம பெரிய ஆளாகி காட்டுறேன்னு அப்பாவும் சபதம் போட்டாரு.அப்பாவும், அம்மாவும் சென்னைக்கு பிழைப்பு தேடி வந்தாங்க.அப்பாவோட படிப்புக்கு நல்ல வேலையாவே கிடைச்சுது.வாழ்க்கையில் முன்னேறனும்னு நினைச்ச அவரோட கனவுக்கு இடையூறா வந்தது அம்மாவோட ஆடம்பர செலவுகள்.சின்ன வயதிலிருந்தே வறுமையில் வாடிய அம்மா அப்பாவை பணம் காய்க்கும் மரமாக நினைக்க தொடங்கினாள்.இதுக்கு நடுவில் அகல்யாவும், நானும் 5 வருட இடைவெளியில் பிறந்தோம்.என்னை அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும்.எனக்கு அவர் மேல் வீசும் சிகரெட் ஸ்மெல்லை ரொம்ப பிடிக்கும்.அம்மாவோட பணத்தாசை அப்பாவை எந்த வேலையிலும் தங்க விடலை.கடைசியில் பேர் கெட்டு போய் எங்கேயும் வேலை கிடைக்கவில்லை.அப்பாவோட வருமானம் நின்றவுடன் அம்மாவின் நடத்தை மாற ஆரம்பித்தது.தட்டி கேட்ட அப்பாவை அவள் சட்டை செய்யவேயில்லை.அப்பாவுக்கு தோல்வியை ஒப்பு கொண்டு தாத்தாவிடம் திரும்பி போக தன்மானம் இடம் கொடுக்கவில்லை.கடைசியில் ஒருநாள் தற்கொலை பண்ணி கொண்டார்.அம்மாவுக்கு அவரோட மரணம் விடுதலையை தந்து விட்டது.முழு நேரமாக தப்பான தொழிலில் இறங்கி விட்டாள்.அந்த சின்ன வயதில் நான் பார்க்க கூடாதவைகளை கேட்க கூடாதவைகளையெல்லாம் கேட்டேன்.அம்மாவுக்கு துணையாக அக்கா அகல்யாவும் போன போது என்ன செய்வதென்றே தெரியவில்லை.அப்பா சாவதற்கு முன் தாத்தாவிற்கு எழுதிய கடிதம் ஆறு மாதத்திற்கு பிறகுதான் தாத்தாவிற்கு கிடைத்தது.காரணம் அவர் காசி யாத்திரை போயிருந்தது.அடித்து பிடித்து எங்களை தேடி வந்தவர் அம்மாவிடமிருந்து என்னை மீட்டார்.அதற்கும் பணம் வாங்கினாள் அம்மா.அக்காவிற்கும், அம்மாவிற்கும் கணிசமான பணத்தை மாதம் தோறும் அனுப்பினார் தாத்தா.நான் தாத்தாவின் பராமரிப்பில் படிக்க ஆரம்பித்தேன்.என்னை சொந்த பந்தங்களிடம் கௌரவமாக அறிமுகப்படுத்தவே விமான விபத்தில் என் பெற்றோர்கள் இறந்ததாக செட்டப் செய்தார் தாத்தா.



அம்மா இறக்கும்வரை எந்த தொந்தரவும் வரவில்லை.இறந்த பிறகு அக்கா அகல்யா சொத்தில் எனக்கும் பங்கிருக்கிறது என்று தாத்தாவை மிரட்ட ஆரம்பித்தாள்.அவளுக்கு சொத்தை தர தாத்தா விரும்பினாலும் அவளுடைய கறை படிந்த வாழ்க்கை குடும்ப கௌரவத்தை குலைத்து விடும் என்று தாத்தா பயப்பட்டார்.அதனால் அவளை கொன்றேன்.!”



“இதுதான் காசிலிங்கத்தால கண்டு பிடிக்க முடியாத கேஸ்! “என்றார் முத்துசாமி.



“அதற்கு பிறகு அமைதியாகத்தான் இருந்தேன்.மருதநாயகத்தின் மகள் சுகன்யா என்னோட குளோஸ் ப்ரண்ட்.அவளுடைய வாழ்க்கை லவ் என்ற பெயரால் சீரழிக்கப்பட்டு ரெட்லைட் ஏரியாவில் விற்கப்பட்டாள்.லோக்கல் தாதாக்களுடைய உதவியுடன் அவளை பணம் கொடுத்து மீட்டோம்.மெல்ல நார்மலுக்கு வந்தவளுக்கு கல்யாணம் செய்ய முயற்சிக்கும் போதுதான் அவளுடைய செக்ஸ் வீடியோ வெளியானது.அவமானம் தாங்க முடியாமல் அம்மாவும், மகளும் சூசைட் பண்ணிக்கிட்டாங்க.!”



“இதுக்கும் மத்த கால் கேர்ள்களை கொலை செய்யறதுக்கும் என்ன சம்மந்தம்? “



“வெறுப்புதான்.மோசமான பெண்கள் இருப்பதாலேயே நல்ல பெண்களையும் மோசமா நினைக்க தோணுது.சினிமாவுல கூட நீ நடிக்கலைன்னா வேற ஒரு பொண்ணு நடிக்க ரெடியா இருக்குதுன்னு சொல்லி கவர்ச்சி காட்சியில் நடிக்க வைச்சிருவாங்க.எல்லோரும் நடிக்க மறுத்தால் அந்த காட்சியை வைக்க மாட்டாங்க.சில பெண்கள் தங்களின் வசதிக்காக வளைந்து கொடுத்து எல்லா பெண்கள் மீதும் தப்பானஎண்ணத்தை உருவாக்கிடறாங்க.அதனாலதான் தேடி தேடி கொன்னேன்.விபச்சாரிகளில் 80 சதவீதம் பேர் செக்ஸ்மேனியாக்குகள்.வேற வேலை கிடைச்சாலும் செய்யாம செக்ஸிக்காக இந்த தொழிலை விரும்பி செய்வதாக ஒரு ஆய்வு சொல்லுது.!”



“அந்த மாதிரி பொண்ணுகளோட நெம்பர், அட்ரஸெல்லாம் எப்படி கிடைச்சுது? “



“எயிட்ஸ் வந்த ஏழுமலை கோபத்துல தூக்கி போட்ட நோட்டுல இருந்ததுதான் அதெல்லாம்.நோயை பரப்புபவர்கள் சாவதே மேல்னுதான் இதை ஆரம்பிச்சேன்.!பிம்புகளிடம் பேசும்போது ஆப் மூலவோ,கர்ச்சீப் போட்டோ குரலை மாத்திருவேன்.!"



“எங்கப்பாவை ஏன் கொன்னீங்க? “என்றான் அருண்.



“அவர் உங்கப்பான்னு தெரியாது.ஆனால் சப் இன்ஸ்பெக்டரா இருந்தப்போ அவரை பார்த்திருக்கேன்.வாய்புண் டிரிட்மெண்டுக்கு வந்தப்ப பத்த வைக்காத சிகரெட்டை கையில் வைச்சு எனக்கு எங்கப்பாவை, எங்கம்மாவோட துரோகத்தை நினைவுபடுத்தி வெறியேற்றினார்.அவரும் அந்த சிகரெட்டால ஒரு மாதிரியாத்தான் இருந்தார்.என்னை எப்படி கண்டு பிடிச்சார்னு தெரியலை.!”



தொடரும்!
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 17



“நான் சொல்றேன்.உன்னுடைய ரகசிய போன்ல சிம் கார்டை மாத்துன.ஆனா மாத்துன அத்தனை சிம்லயும் பேசஅப்பப்போ ரீஜார்ஜ் பண்ணியிருக்க.அதை வைச்சுத்தான் அப்பா ஹாஸ்பிடலுக்கு எதிரே இருக்கிற கடையிலதான் ரீசார்ஜ் பண்ணியிருக்கேன்னு கண்டு பிடிச்சாரு.அதை செய்தது ஏழுமலை.உன்னோட பைக்ல காத்து கம்மியானப்போ டியூப்லெஸ்னு தெரியாம ஏழுமலைய பஞ்சர் ஒட்ட மருத நாயகத்தோட வீட்டுக்கு கூட்டிட்டு போயிருக்கிறாய்.நடுவழியில் லாரி பஞ்சரானா டிரைவர்கள் பஞ்சர் ஒட்டுவது சகஜம்.அதை யூஸ் பண்ண நினைச்ச.ஆனா காத்தடிச்சா போதும்னு ஏழுமலை சொல்லிட்டான்.!இதை எங்கப்பாகிட்ட ஏழுமலை உளறிட்டான் குடிபோதையில்.!”



“மருத நாயகத்தோட வீட்டுசாவி உங்கிட்ட எப்படி? “



“என் தாத்தா வாடகைக்கு விட்ட பல வீடுகளில் அதுவும் ஒன்னு.அதோட ஸ்பேர் சாவி எங்கிட்ட இருந்ததால் அந்த காரேஜை பைக் நிறுத்த யூஸ் பண்ணிக்கிட்டேன்.இது அவருக்கு தெரியாது! “



“எங்கப்பா சிகரெட்டை காட்டி உனக்கு வலை விரிச்சிருக்காரு.ஆனா நீ வராம ஏன் மதனை அனுப்பினாய்? “



“மதன் நைட்டு, பகல்னு என் பின்னாடியே சுத்திகிட்டு இருந்தான்.அது எனக்கு பயங்கர தொந்தரவாக இருந்தது.எல்லா பழியையும் அவன் மேல போட நினைச்சேன்.நான்உன்னை லவ் பண்றேன்.பதிலுக்கு நீ என்ன பண்ணுவேன்னு கேட்டேன்.கொலைகூட பண்ணுவேன்னு சொன்னான்.அப்ப பண்ணி காட்டு. உன்னை லவ் பண்றேன்னு சொன்னேன்.அவன் எனக்காக கொலை பண்ணகூட ரெடியாயிருந்தது என்னை அசைச்சிருச்சு.காரேஜ் சாவிய கொடுத்து ஒரு பிராஸ்டியுட்டோட அட்ரஸீம் கொடுத்தேன்.ஆனா எனக்கு தெரியும்.நான்தான் பைக்கை எடுக்க வருவேன்னு தாமோதரன் காத்துகிட்டு இருப்பார்னு.ஏன்னா அவருதான் என்னை வெறியேத்தி விட்டுட்டாரே? ஒரு பொண்ணை மடக்க எதுக்கு ஆயுதம்னு கேஸிவலா வந்து வெயிட் பண்ணியிருக்காரு.பெட்ரோல் நாபை ஆப் பண்ணும் என்னோட பழக்கத்தை அவர் நோட் பண்ணியிருக்கனும்.மதன் வண்டிய காரேஜிலிருந்து எடுக்கும் போது பார்மால்டீஹெடு பாட்டிலை தெரியாம உடைச்சிட்டான்.நான் பெட்ரோலை ஆப் பண்ணி வைச்சது அவனுக்கு தெரியலை.சரியா வண்டி நிக்கிற இடத்துல தாமோதரன் அவனை மடக்கிட்டார்.என்னை எதிர்பார்த்தவருக்கு அவனை பைக்கில் பார்த்ததும் குழப்பமாயிருச்சு.விசாரிக்க ஆரம்பிச்சுட்டாரு.மதன் ப்ளு டூத் ஹேட் செட் மூலமா எங்கிட்ட யோசனை கேட்க ஆரம்பிச்சான்.அப்பத்தான் நான் உங்கப்பாவை கொல்ல சொன்னேன்.அவனும் எனக்காக அவரை கத்தியில் குத்திட்டான்.அப்புறம் வண்டி ஸ்டார்ட் ஆகலைன்னு டென்சனாகிட்டான்.எனக்கும் பெட்ரோல் ஆப் பண்ணியது சட்டுன்னு நினைவுக்கு வரலை.அதுக்குள்ள தாமோதரன் பெல்ட் பக்கிளால டயரை பஞ்சர் பண்ணிட்டாரு.அப்புறம் பெட்ரோல் ஆப்பானதை சொன்னேன்.காத்தடிக்க போனவனுக்கு பையன் மூலமா டயர் நாத்தம் தெரிய வந்தது.பைக்கை காரேஜ்ல நிறுத்திட்டு மதனோட பைக்ல சீலரை தெளிச்சு வைச்சோம்.போலீஸ்ல மாட்டிக்குவோம்னு புலம்பியவனுக்கு தைரியம் கொடுத்தேன்.இன்னொரு கொலையை இதே ஸ்டைல்ல பண்ணினால் போலீஸ் குழம்பி விடும்.உன்னை நிரபராதின்னு ரிலீஸ் பண்ணிருவாங்கன்னு சொன்னேன்.அதுக்குத்தான் பைக்கை எடுக்க வந்து மாட்டிகிட்டேன்.!”



“அதுசரி! கவிதா லாட்ஜ்ல எதுக்கு ஆண்குரலில் பேசினாய்? “



“கொலை செய்வது ஆண் என்று நம்பவைக்கத்தான்.ஆண் குரலில் பேச நிறைய பிராக்டீஸ் செய்தேன்! மதன் என்னோட ஸ்டைல்ல கொலை பண்ணுவான்னு நான் நம்பலை.தாமோதரன் அவனை விட்ருவாருன்னு நினைச்சேன் "



“பிடிபடலைன்னா இன்னும் கொலை பண்ணிட்டுதான் இருப்பியா? “



“இல்லை! ஐந்து கொலைதான் என்னோட இலக்கு! “



“அதென்ன கணக்கு? “



“ஜாக் தி ரிப்பரோட கணக்கு.இங்கிலாந்தை கலக்கிய கொலையாளி.5 கொலை மட்டும் செய்துட்டு காணாம போயிட்டான்.1000 துப்பு கிடைத்தும் இன்னைக்கு வரைக்கும் சிக்கலை.அதே மாதிரிஇங்கேயும் செய்ய நினைச்சேன்.ஆனா மாட்டிக்கிட்டேன்.இனி என்னால் கொலை செய்ய முடியாது.”



“ஏன்? “



“காதல்! யெஸ்! தாத்தாவோட மரணத்திற்குபின்என்னை முழுசா நேசிச்ச ஒரேஆள் மதன்.முதல்ல வெறுத்த நான் இப்ப அவனை விரும்புகிறேன்.அவனை பாக்கனும்.கொஞ்சம் பேசனும்.வர சொல்ரீங்களா? “



“சரி! “என்று எழுந்த அருணை “அந்த லிப்ஸ்டிக் வேணும்.தருவீங்களா? அவனுக்கு முன்னாடி கொஞ்சம் அழகா இருக்கனும்னு நினைக்கிறேன்! “என்றாள்.



லிப்ஸ்டிக்கை மாயா போட்டு கொண்டிருந்த போது முத்துசாமி மதனை அறைக்குள் அழைத்து வந்தார்.



“என்ன மாயா இப்படி பண்ணிட்ட? “என்றான் மதன்.



“என்னை விட்டுட்டு வாழ்ந்துருவியா மதன்! “என்றாள் மாயா.



“செத்துருவேன் மாயா! “என்றான் மதன்.



“என்னோட நினைவா இதை வைத்து கொள்! “என்ற மாயா அவன் உதடுகளில் நீண்ட முத்தம் ஒன்றை கொடுத்தாள்.அருணும், முத்துசாமியும் திரும்பி கொண்டார்கள்.அவளது அணைப்பில் மதன் துடித்து விலக முற்பட்டு கீழே விழுந்தான்.அருண் புரியாமல் உள்ளே வந்து பார்த்த போது மதன் உதட்டோர நுரையுடன் துடித்து கொண்டிருந்தான்.லிப்ஸ்டிக்கில் பாய்சன்.இதை அருண் எதிர்பார்க்கவில்லை.மதனை அருண்உலுக்கி கொண்டிருந்த போது அருணின் கைத்துப்பாக்கி மாயாவால் உருவப்பட்டது.”அடுத்த ஜென்மத்தில் தீர தீர காதலிப்போம் மதன்.என்னை மன்னித்து விடு.கேம் இஸ் ஓவர்! “



அருண் விபரீதம் உணர்ந்து “மாயா! வேண்டாம்! “என்ற போது மாயாவின் நெற்றியில் துப்பாக்கி வெடித்தது.உயிரற்ற உடலாய் சரிந்தாள் மாயா!

முற்றும்.
 
  • Like
Reactions: bbk

bbk

Member
Messages
6
Reaction score
2
Points
18
நாம சந்தேகபடுற யாருமே கொலையாளி இல்லைங்கிறது நல்ல டுவிஸ்ட் சூப்பர்
 
Top Bottom