Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


இனிப்புத் துகளால் தீர்க்க வேண்டிய ஒன்றுக்கு நஞ்சைத் தூவலாமா?

Messages
30
Reaction score
9
Points
8
🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜

வீட்டிலும் வாசலிலும் எறும்புகள் திரிந்தன. நம் வாழிடத்தில் குழியமைத்து உட்பதுங்கி வாழ்பவை அவை.
இந்தக் கோடைதான் அவற்றுக்கு உணவு தேடும் காலம். கோடையில் சேர்த்து வைக்கும் உணவினை மழைக்காலத்தில் உண்டு வாழ்கின்றன.

வீட்டுக்குள்ளும் வாசற்பரப்பிலும் எறும்புச் சாரைகள் தோன்றின. அவை கடிவகைக் கட்டெறும்புகள்.
எப்படியோ சமையலறைக்குச் சாரை பிடித்து அணியணியாய் வந்தன. அவற்றின் அணிவரிசையைக் குலைத்தால் மொய்த்துக் கடித்தன.

”எறும்புத் தொல்லை தீரமாட்டேங்குது. கடிச்சா தடிச்சுப் போயிடுது. எறும்பு மருந்து வாங்கி அடிக்கிறேன் பாரு” என்று எழுந்தார் தாயார்.

நானும் பார்த்தேன். எறும்புகள் அங்கிங்கெனாதபடி எங்கும் பரபரப்பாக ஊர்ந்தபடி இருந்தன. வாசல் மண்பரப்பில் உள்ள எறும்புக் குழிகளை எனக்குத் தெரியும். வெளியிலிருந்து தலைவாயில் வழியாகப் படையெடுத்தன.

“அம்மா... கொஞ்சம் இரு. எறும்பு என்னம்மா பண்ணுச்சு ? எல்லா உசுருங்களும்தானே இருக்கணும். அதுங்களைக் கொல்லாம மருந்தடிக்காம ஏதாச்சும் பண்ணலாமெடு” என்றேன்.

சமையலறையில் வெல்லக்கட்டி ஒன்று உடைபட்டிருந்தது. ஆங்காங்கே சில இனிப்புத்துகள்களும் இறைந்து கிடந்தன. அவற்றை மொய்ப்பதற்குக் கட்டெறும்புகள் வரிசை கட்டின.

என்ன செய்யலாம் என்று எண்ணினேன். எறும்புகளைக் கொல்லாமல் அவற்றின் ஊர்ச்சியைத் தடுக்க வேண்டும்.

உடனே ஓர் எண்ணம் தோன்றியது. எறும்புகட்கு இனிப்பு வேண்டும். எல்லா எறும்புகளும் வாய்நிறையத் தின்றாலும் ஒரு விரல்துண்டு அளவுக்குத் தின்னுமா ? தின்றுவிட்டுப் போகட்டும். இவ்வுலகம் அவ்வுயிர்கட்குமானது. அவற்றிற்குரிய உண்பொருள்கள்மீது உரிமையுள்ளவை அவை.

ஐந்தாறு வெல்லக் கட்டிகளை எடுத்துக்கொண்டுபோய் எறும்புக் குழியைச் சுற்றிலும் போட்டேன். தலைவாயில் அருகே இனிப்புத் துணுக்குகளை இறைத்தேன்.

நம்பவே முடியவில்லை. அடுத்த மணித்துளிக்குள்ளாக எறும்புச் சாரை வற்றியது. தொலைவில் சென்ற எறும்புகளைத் திரும்ப அழைத்துக்கொண்டன. ஊர்ந்த எறும்புகள் தம் இருப்பிடம் திரும்பின. தம் குழிகட்கு அருகே இறைந்திருந்த உணவுத் துணுக்குகளை விரைந்து மொய்த்தன. அவற்றுக்கிடையே நுண்ணொலிப் பரிமாற்றம் உண்டு போலும்.
இனிப்புத் துகளால் தீர்க்க வேண்டிய ஒன்றுக்கா நாம் நஞ்சைத் தூவுகிறோம் ?

வீட்டிற்குள் இப்போது எறும்புகளே இல்லை. நம்மைச் சுற்றி வாழும் உயிர்கட்கு வேண்டியது நம்மிடமிருந்து சின்னஞ்சிறு துணுக்கு. அதனைத் தந்துவிட்டால் அவை பாட்டுக்கு வாழும். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்ப வேண்டும்.


🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜
 
Top Bottom