Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


"இனிதா மோகன்-மாறாத நேசம்!_கதை திரி"

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
404
Reaction score
114
Points
93
மாறாத நேசம்!


அத்தியாயம் 4


பொன்மணி மகனிடம் சொன்னது போல், அடுத்த நாள் சீர்மதியன் பண்ணைக்கு சென்று வந்த பின்னே, மகள் தூய முல்லையை பார்க்க கணவன் ,மகனுடன் சென்றார்.


அன்று காலை எழுந்ததிலிருந்தே தூயமுல்லை ஒரு துள்ளலுடனேயே வலம் வந்தாள்.அதைக் கண்ட கனியமுதன், "மேடம் என்ன இன்னைக்கு ரெக்கை இல்லாமலே பறக்கிறீங்க போல ..?" என்று கேட்டபடியே தடபுடலாக சமைத்துக் கொண்டிருந்த மனைவியின் அருகில் சென்று நின்றான்.


"அப்படியெல்லாம் இல்லையே!"


"எனக்கு தெரியாதா? என் பொண்டாட்டியைப் பத்தி..போன்ல பேசுனாலே முகம் ஜொலிக்கும்.இப்ப நேர்ல வாராங்கன்னா சொல்லவா வேணும்.." என்ற படி மனைவியின் தோள்களில் முகம் புதைத்தான்.


கணவனின் செய்கையில் முகம் சிவந்தாலும், ஒரு கையில் அவனின் கேசத்தை கோதியபடியே , "ம்.!‌ மூன்று பேரும் சேர்ந்து வந்து ரொம்ப நாளாச்சா?அது தான் பால் பாயாசம் செஞ்சுட்டு இருக்கேன்.."


"ம்..! செய்..செய்..ஆனா,என்ன டீல்ல விட்டுறாதீங்க மேடம்.."


"உங்கள விடுவேனா? "என்றபடி கணவனின் புறம் திரும்பி,அவனின் கன்னத்தை கிள்ளினாள்.


இருவரின் மோனநிலையை கலைப்பது போல் தூங்கிக் கொண்டிருந்த மகளின் சினுங்கல் கேட்கவும், கணவனிடமிருந்து விலகி மகளிடம் சென்றாள்.


அதன் பிறகு நேரம் ரெக்கை கட்டிக் கொண்டு பறந்தது. கணவனின் உதவியுடன், ஒரு வழியாக சமையல் வேலையை முடித்துவிட்டு, தன் பிறந்தவீட்டாருக்காக காத்திருந்தாள்.


கனியமுதனும் அன்று வேலைக்கு செல்லவில்லை. அவனுமே,தன் மாமனார் வீட்டினர் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்தான்.


சொன்ன நேரத்திற்கு கோவழகன் குடும்பத்துடன் வந்ததும். மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லாமல் நேரம் பறந்தது.


கனியமுதனுக்கு தாய் தந்தை இல்லாததால் , மனைவியின் குடும்பத்தை தன் குடும்பமாகவே பாவித்தான்.


பொன்மணி மகளுக்கு செய்து எடுத்து வந்த பலகாரங்களை கொடுத்துவிட்டு, மகளின் உடல்நிலையை பற்றி விசாரித்தவர் அவருக்கு தெரிந்த சில..பல ஆலோசனைகளை அன்னையாக கூறினார்.



பேத்தி ஏந்திழையை கோவழகன் மடியில் அமர்த்தி கதைச் சொல்ல.. கனியமுதனும்,சீர்மதியனும் வெளித் திண்ணையில் அமர்ந்து, மனம் விட்டு பேசிக் கொண்டு இருந்தார்கள்.


சீர்மதியனுக்கு எப்போதுமே கனியமுதன் என்றால் மிகவும் பிடிக்கும். அவன் மனம் குழம்பும் போதெல்லாம், அமுதனிடம் தான் மனம் விட்டு பேசுவான்.


அழுதனும் ,எந்த ஈகோவும் இல்லாமல் சீர்மதியனிடம் அக்கறையாக பேசுவான். அன்றும், சீர்மதியனின் முகத்தை பார்த்தே, ஏதோ குழப்பத்தில் இருப்பதை அறிந்து கொண்டவன், என்னவென்று கேட்டான்.


சீர்மதியனும் அதற்காகவே காத்திருந்தவன் போல..தன் மனதை அழுத்திய விசயத்தை தன் மாமனிடம் கொட்டி தீர்த்தான்.



சீர்மதியன் சொன்னதைக் கேட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தான் அமுதன்.


"ஏன் மாமா எதுவும் பேசமாட்டிறீங்க. நான் என்ன செய்யட்டும்?" என்று கலக்கமாக கேட்டான்.


"சீரா, நான் உங்கிட்ட கேட்கிற கேள்விக்கு உண்மையா பதில் சொல்லு. உனக்கு நிஜமாவே தண்மதியை பிடிக்குமா?இல்லை பழி வாங்கனும்ன்னு இப்படி யோசிக்கிறீயா?"


"மாமா நான் போய் பழி வாங்குவேனா? எனக்கு தண்மதியை ரொம்ப பிடிக்கும்.அவளை கல்யாணம் பண்ண இது ஒரு நல்ல வாய்ப்பு..பாட்டி வேறு குடும்பத்தை ஒண்ணு சேர்க்க இதை விட்டா வேறு வழியில்லைங்குறாங்க.."


"அதெல்லாம் சரி.. ஆனால் அவளுக்கு உன்னை பிடிக்குமா?இதில் ஒரு பெண்ணோட கவுரவம் இருக்கே அதை பற்றி யோசித்தையா?"


" மாமா தண்மதிக்கு என்னைப் பிடிக்காது.அது நன்றாக தெரியும்.ஆனால் அவளைத் தவிர என்னால் வேறு யாரையும் கல்யாணம் செய்துக்க முடியாது.."


"சீரா ,தண்மதிக்கு உன்னை பிடிக்காதுன்னு தெரிந்தே உங்கள் இருவர் வாழ்க்கையையும் பணயம் வைக்க போறீயா..?"


"மாமா திருமணம் நடந்தால் போதும் .என் அன்பு அவளை மாற்றும்..அந்த நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கு.."


"சீரா நான் திரும்பவும் சொல்றேன்.இதில் ஒரு பெண்ணோட கவுரவம் இருக்கே அதை பற்றி யோசிச்சையா?"


"நானும், அதை யோசிப்பதால் தான் முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகிறேன்."


"சீரா..இதனால் நாளை கல்யாணத்துக்கு அப்புறம், உனக்கும் தண்மதிக்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு தான் எனக்கும் பயமா இருக்கு.."


"மாமா, நானும் அதை யோசிச்சேன்..அதனால் தான், எனக்கும் தயக்கமா இருக்கு. தண்மதி பற்றி உங்களுக்கே தெரியும்.அவள் அப்படியே தாத்தா குணம். நல்லவிதமாக எதையும் புரிந்து கொள்ள மாட்டாள்."


"சீரா..தண்மதி மட்டுமில்லை எந்த பெண்ணுக்குமே இப்படி ஒரு சூழலில் திருமணம் நடந்தால், அதை ஏற்றுக் கொள்வது கஷ்டம் தான்.."


"மாமா, ஆனால், இதை தவிர எனக்கு வேறு வழி தெரியலை.. அம்மாவும்,அப்பாவும் செய்த தப்பை நான் ஒரு நாளும் செய்ய மாட்டேன். எனக்கு இருக்கும் ஒரே வழி இது தான்.."


"இதற்கு மட்டும் உன் தாத்தா எப்படி சம்மதிப்பாருன்னு நினைக்கிறே.."


"தெரியலை ..ஏதோ , ஒரு குருட்டு நம்பிக்கை! நல்லதே நினைப்போம். குடும்பம் ஒண்ணு சேரனும். எனக்கு தண்மதியும் வேண்டும். அதற்கு இது தான் ஒரே வழி.."என்று தீர்க்கமாக சொன்னவனிடம் மறுத்து எதுவும் சொல்லாமல்.. "சரி உனக்கு சரின்னு பட்டதை செய்.." என்றான் கனியமுதன்.


மாலை வரை மகளுடன் இருந்து விட்டு, பேத்தி ஏந்திழையை அழைத்துக் கொண்டு கோவழகன் குடும்பம் தங்கள் வீடு வந்து சேர்ந்தது.


முறை வழுதிக்கோ, சீர்மதியனிடம் சண்டை போட்டுக் கொண்டு வந்ததிலிருந்தே அவனின் மனம் நிலை இல்லாமல் தவித்தது. என்ன செய்வது என்று இரவும் பகலுமாக சிந்தித்தவன் ,ஒரு முடிவுடன் தாத்தாவிடம் தன் விருப்பத்தைச் சொன்னான்.


அருமைநாயகத்திற்கும், பேரன் சொன்னது மனதிற்கு சரி என்று படவும், மனைவியிடமும்,மகனிடமும் வழுதி சொன்னதைப் பற்றி பேசினார்.


ஆனால் தாய்,மகன் இருவருக்கும் அது பேரதிர்ச்சியாக இருந்தது. செம்பியனோ, தன் ஆசையை எப்படி தந்தையிடம் சொல்லுவது என்று தவித்தார்.


நாச்சியோ தன் ஆசையில் மண்ணள்ளிப் போட நினைக்கும் கணவனிடம் என்ன சொல்லி தடுப்பது என்று மனதிற்குள் குமறினார்.


மனைவி,மகன் ஆசையைப் பற்றி அறியாமல் தன் பெண்ணால் ஏற்பட்ட சங்கடத்தை தன் பேத்தியின் மூலம் ஈடுசெய்யலாம் என்று அருமைநாயகம் நினைத்து இது தான் சரி என்று நினைத்து தன் முடிவைச் சொன்னார்.


தன் கண்வனின் முடிவைக் கேட்டு தூயநாச்சி திகைத்தவர், மனதிற்குள் 'இந்த மனுசங்கிட்ட எப்படிச் சொல்லிப் புரிய வைத்து, இதை தடுப்பது..' என்று குழம்பினார்.


ஆனால் மருமகள் பூந்தாழையோ, மாமனார் சொன்ன விசயத்தை கேட்டு அளவில்லா மகிழ்ச்சியில் திளைத்தார்.


பூந்தாழை மகிழவில்லை என்றால் தான் ஆச்சரியம்.தன் அண்ணனே தனக்கு சம்பந்தியானால்? அதை விட வேறு என்ன மகிழ்ச்சி இருக்கப் போகுது அவளுக்கு!


அதுவும்,இந்த வீட்டு பெண்ணால் தன் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானம்.அதே வீட்டு பெண்ணால் சரியாகப் போகிறது என்று நினைத்தாலே அவள் மனம் இனித்தது.


தன் அண்ணன் மகள், தனக்கு மருமகளாக வந்தால், நன்றாக இருக்குமென்று ரொம்ப நாளாக மனதிற்குள் ஆசைப்பட்டாள்.ஆனால், மாமனார் ஒத்துக் கொள்வாரா? என்று கவலைப் பட்டவளுக்கு, அவரே அவளை அழைத்து விசயத்தை சொன்னதும் மட்டில்லா மகிழ்ச்சியை கொடுத்தது.


அதுமட்டுமின்றி ,மகளுக்கும் தன்‌ அண்ணனின் மகன் தான் சரியான பொருத்தமாக இருப்பான் என்று உறுதியாக நம்பினார்.



முடிவெடுத்தவுடன் அதை தள்ளிப்போடாமல் அருமை நாயகம் உடனே காரியத்தில் இறங்கினார்.


எல்லாம் நல்ல படியாக நடந்து கொண்டிருக்கும் போது.பூந்தாழையின் அண்ணன் மகன் சேரன் தனக்கு தண்மதியை மணந்து கொள்வதில் விருப்பமில்லை என்று கூறி அனைவரின் தலையிலும் இடியை இறக்கினான்.


ஏனென்று கேட்டதற்கு தனக்கு கிராமத்து பெண் சரியாக வராது என்று உறுதியாக மறுத்து விட்டான்.


ஆனால்,அவன் கூறியது எல்லாரையும் விட தண்மதிக்குத் தான் பேரதிர்ச்சியாகவும்,அவமானமாகவும் இருந்தது.


பூந்தாழையின் அண்ணன் குடும்பம் சென்னையில் வசித்து வந்தனர். நல்ல வசதியும் கூட..அதனால் அவர்களிடம் மேல் தட்டு மிடுக்கு அதிகமாகவே இருந்தது.


தங்கள் பிள்ளைகளையும் நன்கு படிக்கவும் வைத்திருந்தார் . அதுவும் மகனை வெளிநாடு அனுப்பி படிக்க வைத்தார்.அவன் தான் இப்போது அவர்களின் தொழிலை பார்த்துக் கொள்கிறான்.


தண்மதிக்கும் அவன் மீது கொஞ்சம் ஈடுபாடு இருந்தது.அதற்கு காரணம் அவர்களின் நாகரீக வாழ்க்கை தான்.


தாத்தா தன் திருமண பேச்சை அவனுடன் எடுத்ததுமே, தண்மதி மகிழ்ச்சியில் பூரித்துப் போனாள்.ஆனால், அவன் தன்னை நிராகாரித்ததும் மனதிற்குள் மிகவும் உடைந்து போனாள். வெளியில் காட்டிக் கொள்ளாமல் தனக்குள்ளேயே மருகினாள்.



வழுதியோ, மனதிற்குள்' தங்கைக்காகத் தான் இந்த திருமண முடிவையே நாம் எடுத்தோம்.ஆனால் ,அவளை வேண்டாமென்று சொல்லிட்டானே..' என்று சேரன் மீது கடுங்கோபம் கொண்டான்.


அந்த கோபத்தில்,தன் தாத்தாவிடம் எனக்கும் அவன் தங்கை வேண்டாமென்று உறுதியாக சொல்லிவிட்டான்.


அருமைநாயகம் பெண் கொடுத்து பெண் எடுக்கலாம் என்று வழுதி சொன்னதை ஏற்றிருந்தார்.ஆனால் பேரன் இப்போது மறுக்கவும் இவன் பேச்சை கேட்டு முடிவெடுத்தது தப்போ? என்று நினைத்தவர் ,வழுதியிடம் காரணம் கேட்டார்.


வழுதி தன் மனதில் நினைத்ததை சொன்னான்.


பேரன் கூறியதைக் கேட்ட அருமைநாயகத்திற்கு, பேரனின் முடிவு பிடிக்கவில்லை என்றாலும், வேறு வழியில்லாமல் சிறிது நாள் கழித்து ,வழுதி திருமணத்தைப் பற்றி பேசிக் கொள்ளலாம். என்று பூந்தாழையின் அண்ணன் வீட்டாரிடம் கூறி விட்டார்.


நாச்சியும் , செம்பியன் மட்டுமே திருமண ஏற்பாடு நின்றதில் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.


பூந்தாழைக்கு தன் அண்ணன் மகன் மீது அளவு கடந்த கோபம் வந்தது. தன் மகளுக்கு என்ன குறைச்சல்! எப்படி இவன் தன் மகளை வேண்டாமென்று சொல்லாம் என்று மனதிற்குள் கருவினார்.


தண்மதி மனதிற்குள் மிகவும் நொருங்கி போனாள்.நிராகரிப்பு அவளை மிகவும் பாதித்தது. யாரையுமே பார்க்காமல் தனக்குள் ஒடுங்கினாள்.


அறைக்குள்ளே அடைந்து கிடந்த பேத்தியின் நிலையைக் கண்ட நாச்சி, "தணு இப்ப என்ன குடியா மூழ்கிருச்சு..? இதற்குப் போய் இப்படி கவலைப் படறே.. "என்று கடிந்து கொண்டார்.


பேத்தியை பழைய நிலைக்கு மீட்க்கும் பொருட்டு, "தணும்மா நான் வாழ்ந்தவ சொல்றேன் கேட்டுக்கோ..ஒண்ணு நம்மள விட்டு போதுனா? அதை விட நல்லதா நமக்கு வேறு கிடைக்க போகுதுன்னு அர்த்தம்.உன்னை, வேண்டாம்ன்னு சொன்னவன் முன்னாடி . நீ நல்லா வாழ்ந்து காட்டணும்.." என்றார்.


பாட்டியின் வார்த்தைகள் பேத்திக்கு கண்களில் நீர் கோர்க்க வைத்தது. அதைக் கண்ட நாச்சி துடித்துப் போனார்.எப்பொழுதும் வம்புக்கு நிற்கும் பேத்தியின் கண்ணீர் அவரையுமே பாதித்தது.


பேத்தியின் அருகில் சென்று அவளின் கண்களில் வடியத் துடித்துக் கொண்டிருந்த கண்ணீரை சுண்டி விட்டவர். "இந்த கண்ணீருக்கு, அவன் தகுதியே இல்லாதவன்.படிச்ச புள்ள செய்ற காரியாம இது? ஒருத்தன் நம்மளை வேண்டாம்னு சொன்னா? நம் வாழ்க்கையே முடிஞ்சு போச்சா?அவனே இந்த பொண்ணை கட்டலையேன்னு உணர வைக்கிற மாதிரி வாழனும் புரிஞ்சுச்சா.."என்றவர் பேத்தியின் முகத்தை கைகளில் ஏந்தி உச்சி முகர்ந்தார்.


தண்மதி அமைதியாகவே இருப்பதைக் கண்டு.. "தணு போய் குளிச்சு கிளம்பி வா..நாம அம்மன் கோவிலுக்கு போய்ட்டு வரலாம். வீட்டுக்குள்ளையே அடைஞ்சு கிடந்தா? தேவை இல்லாத நெனப்பு தான் வரும்." என்று பேத்தியை அதட்டி உருட்டி கிளம்பச் செய்தார்.


தண்மதியும் பாட்டியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு கிளம்பினாள்.


சீர்மதியன் ஏழிசை வந்திருப்பதால் தன் வேலைகளை விரைவாக முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து, தினமும் அக்கா மகளை வெளியில் அழைத்துச் செல்வதை ஒரு வேலையாகவே வைத்திருந்தான்.


அன்றும் அதே போல் வந்தவன்,தன் அம்மாவும் கிளம்பி இருப்பதை பார்த்து, " என்னம்மா ஏதாவது வாங்கனுமா? டவுனுக்கு போகுமா?" என்றான்.




"இல்ல சீரா பாப்பாவைக் கூட்டிட்டு அம்மன் கோவிலுக்கு போய், ஒரு அர்ச்சனை செய்துட்டு வரலாம்ன்னு கிளம்பினேன்ப்பா.."என்ற தாய்யிடம்,


"ஓ..! அப்படியா ,சரி வாங்க.. நானே கூட்டிட்டு போறேன்.. அப்பா வந்துட்டாரா? "


"இல்லப்பா தோட்டத்தில் ஏதோ வேலை இருக்கு. நேரமாகும்ன்னு சொல்லிட்டுத் தான் போனார் .."என்றார்.


" அப்படியா..? சரி.. இருங்கம்மா, நான் குளிச்சுட்டு வந்துறேன்.." என்றவன் தன் அறையை நோக்கி சொன்றான்.


பொன்மணி,மகன் குளித்து வருவதற்குள் சூடாக பாலை காய்ச்சி டம்ளரில் ஊற்றினார்.


சீர்மதியன் குளித்து முடித்து வேட்டி சட்டையில் தாயாராக வந்தான்.தாய் கொடுத்த பாலை வாங்கி குடித்துவிட்டு, காலி டம்ளரை தாயிடம் கொடுத்துவிட்டு,விளையாடிக் கொண்டிருந்த அக்கா மகளைத் தூக்கி, கொஞ்சியவாறு வண்டியில் அமர வைத்தவன், தன் வண்டியை ஸ்டார்ட் செய்தான்.


நேசம் தொடரும்..
Hi friends,
மாறாத நேசம்! அடுத்த அத்தியாயம் (4) போட்டு விட்டேன்.படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
விரைவில் அடுத்த அத்தியாத்துடன் வருகிறேன்.

நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
404
Reaction score
114
Points
93

மாறாத நெஞ்சம் !

அத்தியாயம் 5

சீர்மதியன் தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்க போவதை அறியாமலேயே, கோவில் வாசலில் வண்டியை நிறுத்தினான்.

பொன்மணி பேத்தியை அழைத்துக் கொண்டு கோவிலுக்குள் சென்றார்.

சீர்மதியன், உள் உணர்வின் உந்துதலில் சுற்றும் முற்றும் பார்த்தபடியே கோவிலுக்குள் மெதுவாக நடந்தான்.

மாலை நேரம் என்பதால் கூட்டம் குறைவாக இருந்தது.

தூய நாச்சியும் , தண்மதியும் கோவில் மண்டபத்தின் படிக்கட்டுகளில், சாமி தரிசனம் முடித்து விட்டு வந்து அமர்ந்திருந்தார்கள்.

மகள் பொன்மணி தன் பேத்தியுடன் கோவிலுக்குள் வருவதை முதலில் நாச்சி தான் பார்த்தார். எதிர்பாராமல் மகளைக் கண்டதில் ,அவர் கண்களில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது.

உள்ளூர் கோவில் என்பதால் உடனே பேச முடியாது என்று, மனதை கட்டுப்படுத்திக் கொண்டு மகளை பார்வையாலேயே தழுவினார்.

மகளின் பின்னால் ராஜகுமாரனைப் போல், வீர நடையுடன் வந்த பேரன் சீர்மதியனைக் கண்டவர்.. விழி அசையாது பேரனை விட்டுப் பார்வையை நகர்த்தாமல், பார்த்துக் கொண்டே இருந்தார். அவரையும் அறியாமல் மனம் பேரனுடன் தண்மதியை ஜோடி சேர்த்தது.

தண்மதி இதை எதையும் உணராமல் கோவிலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

பொன்மணியும்,சீர்மதியனும் ஏழிசையுடன் சென்று சாமி தரிசனத்தை முடித்து விட்டு, மண்டபத்தில் சிறிது நேரம் அமரலாம் என்று மண்டபத்தை நோக்கி நடந்தனர்.

ஏழிசை‌ அங்கே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்ததும் அவர்களுடன் விளையாட ஆசைப்பட்டு தானே நடப்பதாக பாட்டியின் இடுப்பிலிருந்து அடம்பிடித்து கீழே இறங்கினாள்.

பொன்மணியும் , கோயில் தானே என்று பேத்தியை இறக்கி விட்டார். ஏழிசை விடுபட்ட மகிழ்ச்சியில் முன்னே ஓடியவள் கால் தவறி‌ விழுந்தாள்.

அதைக் கண்டு சீர்மதியனும்,பொன்மணியும் பதறி ஏந்திழையை தூக்க ஓடினார்கள்.

சீரமதியன் ஓடிப் போய் குப்புற விழுந்திருந்த ஏழிசையை தூக்கவும்,அதே நேரம் தண்மதியும் ஓடிவந்து குழந்தை தூக்கினாள்.

இருவரின் கரங்களும் லேசாக உரசிக் கொள்ளவும்.. மின்சாரம் தாக்கியது போல் இருவரும் நிமிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

இருவரின் விழிகளும் சிலநொடிகள் ஆச்சிரித்தையும் ,திகைப்பையும்‌ கொட்டியது.அடுத்த வினாடி இருவரும் தங்கள் கைகளை பிரித்துக் கொண்டனர்.

சீரமதியன், ஏழிசைக்கு அடிபட்டு இருக்கிறதாவென்று குழந்தையை ஆராய்வதில் தன் நெஞ்சின் படபடப்பை சமன் படுத்திக் கொண்டான்.

தண்மதி சட்டென்று பின் நகர்ந்து கொண்டாள்.

பொன்மணி மகனிடமிருந்து பேத்தியை வாங்கிக் கொண்டு, கீழே விழுந்த பயத்தில் அழுது கொண்டிருந்த பேத்தியை சமாதானப் படுத்தினார்.

நாச்சியோ பேச முடியாத உணர்ச்சி தழும்பலில் சிறிது நேரம் ததும்பியவர்.. "குழுந்தையை கூட்டிட்டு வந்தால், கவனம் குழந்தை மேல் தான் ‌இருக்கனும்.." என்று பொத்தாம் பொதுவாக சொன்னார்.

பொன்மணி அப்போது தான் தன்‌ தாயையும் , அண்ணன் மகளையும்‌ பார்த்தார்.

தூயநாச்சி கண்களாலேயே மகளிடம் நலம் விசாரித்தார். உள்ளூர் கோவில் என்பதால் தாயும் மகளும் பேசிக் கொள்ளவில்லை.

தண்மதி முகத்தை திருப்பிக் கொண்டு நின்றாள். எப்போதுமே அவள் பொன்மணியிடம் பேச மாட்டாள்.

சீர்மதியன், தன்னையும் அறியாமல் தண்மதியைப் பார்த்தான். மாசுமருவற்ற முகம் அன்று கலையிழந்ததைப் போல் இருந்தது. முகத்தில் வருத்தம் குடி கொண்டிருந்ததைக் கண்டவனுக்கு ஏதோ சரியில்லை என்று மனதிற்கு பட்டது.

தண்மதி தன் பாட்டியிடம் திரும்பி "போலாம் வாங்க பாட்டி.." என்று கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டே நகர்ந்தாள்.

தூயாநாச்சி மகளையும்,பேரனையும் திரும்பி ..திரும்பி பார்த்தபடியே பேத்தியின் பின் சென்றார்.

பொன்மணிக்கு தன் தாய் தன்னிடம் ஏதோ சொல்ல நினைப்பது நன்றாக புரிந்தது. ஆனால், அதை அறிந்து கொள்ள இது சூழல் இல்லை என்று நினைத்து மகனுடன் வீடு திரும்பினார்.

சீர்மதியன் ,அன்றைய இரவு வெகுநேரம் உறங்காமல் தண்மதியை பற்றியே நினைத்துக் கொண்டு இருந்தான்.அதுவும் அவள் ஸ்பரிசம் பட்டவுடன் தன் உடம்பில் உண்டான மின் அதிர்வுகளை நினைத்து ..நினைத்து, சிலிர்த்தான்.

அந்த நொடி என்ன பிரச்சினை வந்தாலும் ,அவளை மணந்தாக வேண்டுமென்று முடிவு செய்தான். அதுமட்டுமின்றி அவள் முகம் சோர்ந்திருந்ததும் ,அவனுக்கு குழப்பத்தை கொடுத்தது.

நாளை முதல் வேலை எப்படியாவது பாட்டியைப் பார்த்து பேசவேண்டுமென்று நினைத்தபடியே உறங்கினான்.

தண்மதியும் சீர்மதியனை பற்றித் தான் நினைத்துக் கொண்டு படுத்திருந்தாள்.குழந்தையை தூக்கும் போது அவனுடைய விரல் தீண்டியதை இப்போது நினைத்தாலும் அவளுக்குள் ஒரு குறுகுறுப்பை கொடுத்தது.

இது என்ன உணர்வு ! என்றெண்ணி அவனின் விரல்கள் பட்ட இடத்தை தடவிக் கொண்டாள். ஆனால்,குறுகுறுப்பு மட்டும் போகவே இல்லை ‌.அது ஏன் என்று அவளுக்கு புரியவே இல்லை. ஏதே ஏதோ யோசித்தபடியே உறங்கிப் போனாள்.

சீர்மதியன் பாட்டியை சந்திக்கும் முன்பே பொன்மணி தன் தாயை வழக்கம் போல் பெருமாள் கோவிலில் சந்தித்தார்.

தூயநாச்சி மகளை சந்தித்தவுடன் அனைத்தையும் கொட்டித் தீர்த்தார்.

"பொன்னு உங்கப்பா வழக்கம் போல், என்னை கேட்காமலேயே பூந்தாழையின் அண்ணனுடன் சம்மந்தம் வச்சுக்க முடிவு பண்ணிட்டார்.."

"என்னம்மா சொல்றீங்க.." என்று பொன்மணி திகைப்புடன் கேட்டார்.

"ஆமாம்மா பெண் கொடுத்து பெண் எடுக்கலாம்ன்னு முடிவே பண்ணிட்டார்.. நல்லவேளை ! என்ன‌சாமி புண்ணியமோ! பூந்தாழையின் அண்ணன் பையன், தண்மதியை கிராமத்து பொண்ணுன்னு சொல்லி வேண்டாம்ன்னு சொல்லிட்டான்.."

"அடப்பாவமே தண்மதிக்கு என்ன கொறைச்சல்..அவுனுக்கு என்ன பைத்தியமா?" என்ற மகளிடம்,

"அடி கூறுகெட்டவளே.. நானே நல்லவேளை அவன் வேண்டாம்னு சொல்லிட்டானேன்னு சந்தோஷப்பட்டால் நீ வருத்தப்படறீயா?"

"ஏம்மா.."

"உன்னையெல்லாம் என்ன சொல்றதுன்னே தெரியலை..நான் தண்மதியை சீர்மதியனுக்கு கொடுக்கனும்ன்னு கனவு கண்டுட்டு இருக்கேன்..உனக்கு கொஞ்சமாவது அந்த எண்ணம் இருக்கா?"

"ஏம்மா இப்படி கேட்கிறீங்க..நானே அதுக்குத் தான் காத்துட்டு இருக்கேன்.. இருந்தாலும் நம்ம வீட்டுப் பொண்ணை, ஒருத்தன் வேண்டாம்னு சொல்லிட்டானேன்னு தான்‌ கஷ்டமா இருக்கு.."

"அடிப்போடி.. கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசனை..எம்பேத்தி அருமை அவனுக்கு தெரியலை. அதுவுமில்லாமல் அவள் எம்பேரனுக்காக பொறந்தவடீ. .நீ வேணா பாரு..அவ எம்பேரங்கூட ஊரே மெச்சரபடி வாழுவா.. ஆனால், அதற்கு நான் போட்ட திட்டப்படி எல்லாம் நல்லபடியா நடக்கனும்.."

"ஏம்மா அண்ணன் ஒண்ணும் சொல்லலையா?"

"எப்ப அவன் உங்கப்பா வார்த்தைக்கு மறுபேச்சு பேசியிருக்கான். இந்த காலத்தில் இப்படி ஒரு பையன் கிடைக்க உங்கப்பா என்ன‌ புண்ணியம் பண்ணுனாரோ..?"

"ம்..! எனக்கு எங்க வீட்டுக்காரரை நினைத்தால் தான், கொஞ்சம் பயமா இருக்கு. அவருக்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்தால் நிச்சயம் ஒத்துக்கவே மாட்டார்.."

"பொன்னும்மா அதைப்பத்தி நீ கவலைப்படாதே.. அதெல்லாம் எம் பேரன் பார்த்துக்குவான்.."

"ம்ஹும்! உங்க பேரனும் அண்ணன் மாதிரி தான் .அவுங்க அப்பா பேச்சுக்கு மறு பேச்சு பேசமாட்டான்.அது தான் எனக்கு கவலையா இருக்கு.."

"அதெல்லாம் இந்த விசயத்தில் அவன் பக்குவுமா நடந்துக்குவான்.."

"என்னமோ? எல்லாம் நல்ல படியா நடந்தா சரி..ஏம்மா ,தண்மதி அதனால் தான், நேத்து முகம் வாடி இருந்தாளா?அவளுக்கு அந்த பையன் மீது விருப்பமா?"

"விருப்பமெல்லாம் பெரிசா இல்லை. ஆனால் டவுன் வாழ்க்கை மேலே ஒரு மோகம் அவ்வளவு தான்.அப்புறம் எந்த பெண்ணுக்குமே ஒருத்தன் தன்னை வேண்டாம்னு சொன்னா? கொஞ்சம் வருத்தமாத்தானே இருக்கும்.மனசு‌ மாறட்டும்ன்னு தான் நேத்து அவளை கோவிலுக்கு கூட்டிட்டு வந்தேன்.."

"ஓ..! அண்ணி எப்படி இருக்காங்க.."

"அவளுக்கும் ரொம்பவே வருத்தம் தான்.அவ அண்ணங்கூட போன் பேசிட்டே இருந்தா..அண்ண பையன் மேலே கோவமாத் தான் இருக்கா.."

"ம்..! கோபம் இருக்கத் தானே செய்யும்.சரி நேரமாவதும்மா..பாப்பாவ அவர பார்த்துக்கச் சொல்லிட்டு வந்தேன் .ரொம்ப நேரம் அவரால சமாளிக்க முடியாது .நான் போய்ட்டு வரேன்!"

"சரிம்மா ..முல்லை நல்லாயிருக்காளா?"

"நல்லா இருக்காமா..!என்ன மசக்கை தான் அவளை படாய் படுத்துது"

"எல்லாம் இன்னும் ரெண்டு மாசம் போன சரியாகிடும். வாந்தி எடுத்துட்டு சாப்பிடம இருக்கப் போற..நீயாவது ஏதாவது வாய்யுக்கு ருசியா செஞ்சு கொடுத்து அடிக்கடி பார்த்ததுட்டு வா ! மாமியாவும் இல்லே.."

"ஆமாம்மா, மாமியார் இருந்திருந்தா? நான் கொஞ்சம் தைரியமாக இருப்பேன்.எனக்கும் அந்த கொடுப்பினை இல்லை.என் மகளுக்கும் அந்த கொடுப்பினை இல்லை.."

"சரி..சரி..இல்லாததை நினைச்சு என்னாகப் போகுது.நடக்க வேண்டியதை பார்க்கலாம்.என்ன செய்ய? என் பேத்தியே ! இந்த சமயத்தில் பக்கததுல வச்சு வாயுக்கு பிடிச்சதை ஆக்கிப்போட எனக்கும் கொடுத்து வைக்கலை.." என்று பெருமூச்சு விட்டபடியே கிளம்பினார்.

பொன்மணி வீடு வந்ததும் கணவரிடமும்,மகனிடமும் தாய் தன்னிடம் சொன்னதை மனக்குழறலுடன் சொல்லிவிட்டார்.

" யார்.. யாருக்கு எங்கேன்னு எழுதிவச்சிருக்கோ அப்படித் தானே நடக்கும்..அந்த புள்ளைக்கு என்ன கொறைச்சல்..எங்கே போனாலும் மகாராணியாட்ட வாழ்வா.. "என்றார் கோவழகன் மனைவிக்கு ஆறுதலாக.


சீரமதியன் தன் தாய் சொன்னதைக் கேட்டு ஒரு நிமிடம் கலங்கிவிட்டான்.ஆனால் ,அடுத்த நொடி தந்தை சொன்னதைக் கேட்டு மனதிற்குள், 'சரித்தான்ப்பா..அவ எனக்காக பிறந்தவ.. இந்த வீட்டில் மாகராணியாட்ட வாழப் போறா..' என்று எண்ணினான்.

ஆனாலும், தண்மதி இதற்கு தான் நேற்று சோகமாக இருந்தாளா?.அப்படின்னா ..அவளுக்கு அந்த கல்யாணத்தில் விருப்பமா?என்று குழம்பினான்.

"ஏன் மணி ! தண்மதி எப்படி இருக்காளாமா? அந்த பையன் வேண்டாம்னு சொன்னதில் வருத்தமா?"என்றார் கோவழகன்.

"வருத்தம் இல்லாமல் இருக்குமா? எந்த பெண்ணுக்குமே தன்னை ஒருவன் நிராகரித்தால் வருத்தமாகத் தான் இருக்கும்.."என்றார் பொன்மணி கணவனின் கேள்விக்கு.

சீர்மதியனுக்கு ,தாய் சொன்ன பதில் எரிச்சலை கொடுத்தது.'அவளுக்காக வருச கணக்காக நான் காத்துட்டு இருக்கிறது தெரியவில்லை. எவுனக்காவோ இவ வருந்தறாளா..? சீக்கிரம் இதற்கு ஒரு முடிவு கட்டணும் ..'என்று‌ நினைத்துக் கொண்டான்.

இரண்டு நாட்கள் நத்தையாக ஊர்ந்து போனது. சீர்மதியனுக்கு‌ தண்மதியை பார்க்கவேண்டும் போல் ஆசையாக இருந்தது .ஆனால் அதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கலை.

ஏனோ ?பால்பண்ணையிலும், அவனால் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. அவன் மனம் நிலையில்லாமல் தவிப்பதை அவனால் தடுக்க இயலவில்லை.

பதின்ம வயது பையனைப் போல் நடந்து கொள்கிறோமே! என்று தன்னை நினைத்தே வெட்கப் பட்டான். ஆனால் ,இந்த காதல் யாரைத் தான் விட்டு வைக்கிறது.

இத்தனை நாள் நடக்குமோ..?நடக்காதோ?என்று மனதிற்குள் மறைத்து வைத்திருந்த காதல் ! இன்று ,தனக்கு போட்டியாக வேறு ஒருவன் வரும் நிலை வந்ததுமே.. அவன் மனதில் சிறு பயம் கவ்விக் கொண்டது.

அவள் தனக்கு மட்டுமே சொந்தமாகவேண்டும் என்ற எண்ணம் வலுத்தது. அதற்காக என்ன வேண்டுமானாலும், செய்யலாம் என்று எண்ணினான்.

மனம் அதே நினைவில் உழன்று கொண்டிருப்பதை மாற்றும்‌ பொருட்டு‌, அந்த வாரச் சந்தைக்கு ஏழிசையையும் அழைத்துக் கொண்டு சென்றான்.

ஏழிசைக்கு விளையாட்டு சாமானங்கள் வாங்கி கொடுத்துவிட்டு, அப்படியே சந்தையை வலம் வந்தான்.

அப்போது ஏழிசை தன் மாமானிடம் பஞ்சுமிட்டா
யை கை காட்டி கேட்டதும்.குழந்தையை கொஞ்சிய படியே பஞ்சுமிட்டாய்காரனிடம் சென்றான்.

அங்கே அவனுக்கு ஒரு இனிய அதிர்ச்சி காத்திருந்தது.

நேசம் தொடரும்..

Hi friends,
மாறாத நேசம் அடுத்த அத்தியாயம்(5 )போட்டு விட்டேன்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..
நன்றி
அன்புடன்

இனிதா மோகன்
 

Latest posts

New Threads

Top Bottom