Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL உன்னைத் தீண்டுவேன் உயிரே- Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
664
Reaction score
817
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

Writer X

Well-known member
Messages
462
Reaction score
616
Points
93
வாசக நண்பர்களுக்கு வணக்கங்கள்.உங்கள் ரைட்டர்x "உன்னைத் தீண்டுவேன் உயிரே" கதையின் டீசருடன் வந்து விட்டேன்.

பெருந்தொற்று காலத்தில் என் கதையில் துயரத்தை வைத்து அந்த துயரம் உங்களை தொற்றி விடக்கூடாது என்பதற்காகவே மென்மையான நகைச்சுவையுடன் கூடிய இந்த கதைக்களத்தை தேர்ந்தெடுத்தேன்.

உங்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கலைனாலும், பிழிய பிழிய அழ வைக்க மாட்டேன் பா.அதுக்கு நான்‌ கேரண்டி.

கதையைப் படிச்சு உங்க கருத்தை சொல்லுங்க.


Teaser 1

"டேய் ஒழுங்கா ரெண்டாவது வாய்ப்பாடு சொல்லு டா" பிரம்பை மகன் முன்னால் நீட்டி மிரட்டினார் அன்பு.

பெயரில் இருந்த அன்பு அவர் முகத்தில் கிஞ்சித்தும் இல்லை.

'சொல்ல மாட்டேனே நீ என்ன பண்ணுவ' விளம்பர பாடல் ராகத்தில் மனதினுள்ளே பாடிய விக்ரம் வெளியே திமிராக நின்றான்.

"டேய் நீ மட்டும் இப்ப சொல்லலை,இந்த பிரம்பாலயே அடிச்சு உன்னை உரிச்சுருவேன்"

"நான் என்ன வெங்காயமா இல்ல பூண்டா உரிக்கிறதுக்கு,அட போங்க டேட்" அலட்சியமாக தலையை சிலுப்பினான்.

விக்ரமின் சிலுப்பலில் அன்புவின் உச்சந்தலையில் கோபம் சுர்ரென்று ஏறியது.

"உன்னை " என்றவாறே பல்லைக் கடித்துக் கொண்டே கையில் இருந்த பிரம்பால் அவனை அடிக்க முயல,துள்ளி விலகினான் அவன்.

"டேய் எங்கடா ஓடுற,ஒழுங்கா முன்னால வா" அறை
வாயிலில் ஓடிச்சென்று நின்றவனை பார்த்து கத்தினார்.

"நீ அடிப்பேன்னு தெரிஞ்சும் உன்‌ முன்னால வந்து நிக்க நான் என்ன கேனைப் பயலா?போயா யோவ்" என்று பழிப்புக் காட்டியவன் அங்கிருந்து ஓட முயல,பின்னாலிருந்து ஒரு கரம் அவன் முதுகில் கை வைத்து வலுவாக உள்ளே தள்ளியது.


வேகமாக தள்ளியதால் அறைக்குள் வந்து விழுந்த விக்ரம் தன்னை தள்ளி விட்டவனை முறைக்க,அவனோ விக்ரமின் முறைப்பை கண்டு கொள்ளாமல் அறையை மூடி வெளியே பூட்டிக் கொண்டு அதற்கு காவலாக நின்றான்.


"மாட்னியாடா மகனே" என்று விக்ரமின் காதைப் பிடித்து தூக்கிய அன்பு, "இப்போ சொல்லு டா ரெண்டாவது வாய்ப்பாட்டை" அன்று அதட்டினார்.

தந்தையை முறைத்துக் கொண்டே கடகடவென்று வாய்ப்பாட்டை ஒப்பித்தான் விக்ரம்.


சொல்லி முடித்ததும் "அதான் சொல்லிட்டேனே விடுங்க டேடி" என்று வெளியே போக முயல,"டேய் மேத்ஸ் போர்ஷனே இன்னும் முடியலை..அதுக்குள்ள எங்கடா வெளியே போற?இன்னும் சயின்ஸ்,சோசியல் வேற இருக்கு.நாள் கம்மியா இருக்கு , சீக்கிரம் சிலபசை முடிச்சா தான் நீ டெஸ்ட்ல பாஸ் ஆக முடியும்" படு மும்முரமாக அன்பு சொல்ல , முழி பிதுங்கி போய் நின்றான் விக்ரம்.


அறைக்கு வெளியே காவலாக நின்றவனை முறைத்த விக்ரமின் தாயோ "அய்யோ என் மகனை இந்த பாடு படுத்துராறே இந்த மனுஷன்" என்று வாய் விட்டே புலம்பினார்.


செய்யும் வேலையில் ஒரு கண்ணும், வீட்டில் இருப்பவர்களின் மீது மற்றொரு கண்ணும்,இரண்டு காதும் வைத்திருந்த வேலைக்காரி வீர லட்சுமி "ஏன்க்கா அந்த தம்பியை ஐயா படி படின்னு பாடு படுத்துராறே, அப்படி எந்த பரிட்சைக்கு தயார் படுத்துறாரு அவரு மகனை?ரொம்ப பெரிய படிப்பா இருக்குமோ?" பக்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த கனகம்மாளிடம் கதை கேட்கும் ஆர்வத்தில் கேட்டார்.

"படிப்பா அடி போடி,அந்த தம்பி படிச்சு முடிச்சுட்டாரு" அசால்ட்டாக சொல்லிக் கொண்டே தூசி தட்டிக் கொண்டிருந்தார் கனகு.

" படிச்சு முடிச்சுட்டாரா" ஆச்சரியமாக கேட்டவர் " அப்போ வேற பெரிய வேலைக்கு ஏதும் அனுப்புறதுக்கு தயார் படுத்துறாரோ" தன் யூகங்களை அடுத்ததாக அடுக்கினார்.

"இவங்களுக்கு இருக்குற தொழிலை பார்க்கவே அந்த தம்பிக்கு நேரம் இல்ல..இதுல வேற பெரிய வேலைக்கு போகப் போறாராக்கும்" நொடித்துக் கொண்டார் கனகு.


"அப்போ எதுக்குக்கா ஐயா அந்த தம்பியை படி படின்னு படுத்தி எடுக்குறாரு" விசயத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வம் கண்களில் மின்னியது வீர லட்சுமிக்கு.


" ம்ம்..அந்த தம்பியை மாப்பிள்ளை பார்க்க அடுத்த வாரம் பொண்ணு வரப்போகுதாம்.அந்த பொண்ணு வைக்க போற பரிட்சையில பாஸ் ஆனா தான் தம்பியை கட்டிக்குமாம்.அதுக்கு தான் ஐயா தம்பியை தீவிரமா தயார் படுத்துராறு" நக்கலுடன் கனகு சொன்னதை கேட்ட வீர லட்சுமியோ பலாப்பழத்தை திணிக்கும் அளவிற்கு வாயைத் திறந்தாள் அதிர்ச்சியில்!


Comments please 👇👇
 

Writer X

Well-known member
Messages
462
Reaction score
616
Points
93
அத்தியாயம் 1


"என்ன சித்தி சொல்றீங்க? ரெண்டாவது வாய்ப்பாடு தெரியலைன்னு பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளையை பிடிக்கலைன்னு சொல்லிட்டாளா?"

அன்பு அதிர்ச்சியும், ஆச்சரியமும்,திகைப்பும் சரிவிகிதமாக கலந்த கலவையில் கேட்டார்.

"சின்ன திருத்தம்,பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளையை இல்ல,இவ மாப்பிள்ளை பார்க்க போன பையனை" பெருமூச்சுடன் சொன்னார் அன்புவின் சித்தி.

"எது மாப்பிள்ளை பார்க்க போனாளா?" அன்புவின் வாய் ஆட்டோமெட்டிக்காக "ஆ " வென்று அவரே அறியாமல் திறந்து கொண்டது.

"அட ஆமாப்பா,ஊரு உலகத்துல இல்லாத வழக்கமா இந்த மகராசி பண்ணிட்டு திரியறா.இவ போடுற கண்டிஷனுக்கெல்லாம் எவனும் ஒத்து வர மாட்டேன்றான்.அப்படியே ஒன்னு ரெண்டு பேரு வந்தாலும் அவங்களை கேள்வி கேட்டே துரத்தி விட்டுடுறா.இவளுக்கு கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பாருங்கன்னு சொன்னா தரகர்ல இருந்து சொந்தக்காரங்க வரை அத்தனை பேரும் தெரிச்சு ஓடுறாங்க"

சற்று முன் சித்தி தந்த காபியின் சுவையை விட அவர் சொல்லிக் கொண்டிருக்கும் விசயங்கள் அன்பினுள்ளே துளித் துளியாய் இறங்கிக் கொண்டிருந்தது.

"அப்படி என்ன கண்டிஷன் போடுறா?"

"கண்டிஷன் நம்பர் 1:பையன் காலைல ஒன்பது மணிக்கெல்லாம் வெளியே வேலைக்கின்னு போனா நைட்டு பத்து மணிக்கு தான் திரும்பி வரனுமாம்

அப்படியே தவிர்க்க முடியாத காரணத்தால் நடுவுல திரும்ப வந்துட்டான்னா இவளை சோறு போடு, குழம்பு ஊத்துன்னு தொல்லை பண்ணக்கூடாதாம்.அவனே போட்டு சாப்பிட்டுக்கனுமாம்.

கண்டிஷன் நம்பர் 2: பையனுக்கு கொஞ்சமாச்சும் சமைக்க தெரிஞ்சு இருக்கனுமாம்.அட்லீஸ்ட் டீ,காபி இல்லைன்னா தோசையாவது சுடத் தெரிஞ்சு இருக்கனுமாம்.

கண்டிஷன் நம்பர் 3: வீட்டுக்கு சொந்தக்காரங்கன்னு வந்தா ரெண்டு நாள்ல விருந்தாடிட்டு போயிடனுமாம்.அப்படி ரெண்டு நாளைக்கு மேல தங்கினா அவங்களுக்கு உண்டான சமையல்ல இருந்து சாப்பாடு வரை பையனே பார்த்துக்கனுமாம்

கண்டிஷன் நம்பர் 4: வீக் எண்ட்ல கண்டிப்பா வெளியே கூட்டிட்டு போனுமாம்.அப்போன்னு பார்த்து ஃப்ரெண்ட்ஸ் கூட வெளியே போகனும்னு தட்டிக் கழிக்க கூடாதாம்.

கண்டிஷன் நம்பர் 5: கல்யாணம் முடிஞ்ச உடனே ஹனிமூன் கண்டிப்பா போயே ஆகனுமாம்.அதுவும் குறைஞ்சது ஒரு வாரத்துக்காவது.

கண்டிஷன் நம்பர் 6: தேவையில்லாம மாமியாரோ,நாத்தனாரோ இல்ல அவங்க சொந்தக்காரங்களோ இவளை வம்பிழுத்தா ஒன்னுக்கு மூணு மடங்கா திருப்பி குடுத்துடுவாளாம்.அப்ப வந்து இவளை அட்ஜஸ்ட் பண்ணிட்டு போகவோ இல்லை பொறுத்து போன்னு யாரும் சொல்லக் கூடாதாம்.

கண்டிஷன் நம்பர் 7: இது ரொம்ப முக்கியமான கண்டிஷன்.எக்காரணத்தைக் கொண்டும் யாரும் அறிவுரைன்ற பேருல அவளை ரம்பம் இல்லாமலே ‌அறுக்க கூடாதாம் ‌.மீறி அப்படி ஏதாவது பண்ணினா பிறகு இவ ஏடாகூடமா ‌எதுவும் பண்ணிருவாளாம்.

கண்டிஷன் நம்பர் 8: கல்யாணம் முடிஞ்ச கொஞ்ச நாள்லயே முழுகாம இல்லையா,முழுகி இல்லையான்னு கேட்கக் கூடாதாம்.அதுவா வரும் போது வரட்டும்னு விட்டுரனுமாம்

கண்டிஷன் நம்பர் 9: இது தான் பண்ணனும்,இப்படி தான் இருக்கனும்னு யாரும் ரூல்ஸ் போடக் கூடாதாம்.மீறி போட்டா இவ ப்ருக் தி ரூல்ஸ்ன்னு போய்ட்டே இருப்பாளாம்.

கண்டிஷன் நம்பர் 10: நள்ளிரவு நாலு மணிக்குலாம் எழுந்து காபி போட்டு புருஷன் கால்ல தொட்டுக் கும்பிடுவான்னு எல்லாம் இவளை எதிர்பார்க்க கூடாதாம். இவளுக்கா தோணும் போது எட்டு மணிக்கு மேல எழுந்துப்பாளாம்.முக்கியமா இவ தூங்கும் போது டிஸ்டர்ப் பண்ணிடவே கூடாதாம்"

அன்புவின் சித்தி மூச்சு வாங்க சொல்லி முடிக்க , தண்ணீண் சொம்பை எடுத்து உடனே நீட்டினார் அன்பு.

"பத்து கண்டிஷன் மட்டும் தானா.இல்ல இன்னும் மிச்சம் மீதி ஏதாவது இருக்கா" ஆல்ரெடி கேட்ட கண்டிஷனிலேயே தலை கிறு கிறுத்து போயிருந்தவர் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள கேட்டார்.

"ம்ம்..இந்த பத்து கண்டிஷனுக்கு முதல்ல ஓகே சொன்னா தான் அடுத்து ரவுண்ட் 2 க்கு இருக்க ரூல்ஸ் சொல்லுவா‌.அதுக்கும் ஓகேன்னா 3 வது ஆப்டிடியூட்.அப்போ தான் இந்த வாய்பாடு,ஆத்திசூடி,அறிவியல்னு வித விதமா கேள்வி கேட்பா.அதுல பாஸ் ஆனா நாலாவது ரவுண்டு பர்சனல் இன்டர்வியூ.அதுலயும் பாஸ் ஆனா கடைசியா பையனோட குடும்ப உறுப்பினர்களோட குரூப் டிஸ்கஷன்.எல்லாம் ஓகேன்னா கல்யாணம் கன்பார்ம்.இதுல ஒன்னுல ஃபெயில் ஆனாலும் அந்த பையன் ரிஜக்டட்"


"நீங்க சொல்றதை எல்லாம் பார்த்தா கல்யாணத்துக்கு மாப்பிள்ளை தேடுற மாதிரி இல்ல.வேலைக்கு ஆள் எடுக்குற மாதிரி இருக்கு"

"இதையே நீ அவ கிட்ட போய் கேட்டேன்னு வச்சுக்கோயேன், சோறு போடுற வேலைக்கே அத்தனை டெஸ்ட் வச்சு செலக்ட் பண்ணும் போது ,சோறை ஆக்கிப் போட்டு காலம் முழுக்க கூட உட்கார்ந்து சாப்பிட வரப்போறவனுக்கு டெஸ்ட் வச்சா என்ன தப்புன்னு கேட்பா.இவ கிட்ட எல்லாம் பேசி ஜெயிக்க முடியாது பா" பலமுறை அவளிடம் பேசி தோற்று விட்ட கடுப்பில் அங்கலாய்த்தார் அன்புவின் சித்தி அங்கையற்கண்ணி.


சித்தியின் கவலை தோய்ந்த முகத்தைப் பார்க்க அன்புவிற்கும் வருத்தமாய் தான் இருந்தது.

ஆனால் இதில் தான் என்ன செய்ய முடியும் என்று தான் அவருக்குத் தோன்றியது.

'அறிவுரை கூறினால் அறுவை போடாதே ' என்று சொல்பவளிடம் போய் அன்பு அன்பைப் பொழிந்து அறுவையை இல்லை இல்லை அறிவுரையை பொழிவாரா என்ன?

"சரி சித்தி,நானும் வந்து இவ்வளவு நேரம் ஆச்சு எங்க உங்க பேத்தியைக் காணோம்?" சட்டென்று பேச்சை மாற்றினார்.

"அவ பேங்க் வரைக்கும் போயிருக்கா,இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவா. நீ டிவி பார்த்துட்டு இரு.நான்‌ போய் மதியத்துக்கு சமைக்கிறேன்"

அங்கை அந்தப் பக்கம் சென்று விட அன்புவோ மீண்டும் அவளின் அடாவடி கண்டிஷன்களைப் பற்றி அசைபோட்டவாறே கண்களை டிவியில் நிலைக்க வைத்தார்.

***************

வங்கியில்..

மஞ்சள் நிற ஸ்லிப்பை எடுத்து அதில் விவரங்களை நிரப்பிக் கொண்டிருந்தாள் அவள்.

அவள் தான் அங்கையற் கண்ணியின் அன்பான பேத்தி மதுமிதா.

"எக்ஸ்கியூஸ்மி கொஞ்சம் பேனா கொடுக்குறீங்களா?"

தன் பின்னாலிருந்து கேட்ட சத்தத்தில் திரும்பி பார்த்தாள்.ஒரு பெண் நின்றிருந்தாள்.கல்லூரி மாணவி போல !அவள் கழுத்தில் தொங்கிய கல்லூரி ஐடி கார்டை வைத்து உறுதி செய்துக் கொண்டாள் ‌.

"ஏங்க உங்க‌ கிட்ட தான் கொஞ்சம் பேனா குடுங்களேன்" அந்தப் பெண் மது பேனா தராததால் மீண்டும் கேட்டாள்.


"உன்கிட்ட கொஞ்சம் பேனாவை கொடுத்திட்டு மீதியை நான் என் அக்கவுண்ட்லயா போய் போட முடியும்.முழு பேனாவையும் நானே வச்சுக்குறேன்.நீ கடையில போய் வாங்கிக்க" முறைப்புடன் சொல்லி விட்டு நகர்ந்தாள் மதுமிதா.


"ஹலோ பேனா கேட்டா என்ன ஓவரா பேசுறீங்க?" மதுவின் பதிலில் காண்டு ஆன கல்லூரி மாணவி கடுப்புடன் கேட்டாள்.


"என்ன ஓவரா பேசினேன்?" மதுவும் அதையே திருப்பிக் கேட்டாள்.


"பேனா கேட்டா ஒன்னு தரேன்னு சொல்லனும்,இல்ல தர மாட்டேன்னு சொல்லனும்.அதை விட்டுட்டு ஏன் நக்கலா பேசுறீங்க?அப்படி என்கிட்ட நக்கலா பேசுற உரிமையை உங்களுக்கு யாரு கொடுத்தா?" மதுவின் மேல் எரிச்சலான அந்த கல்லூரி மாணவி கத்திவிட்டாள்.


அவள் சத்தத்தில் வங்கியில் இருந்தவர்களின் கவனம் இவர்கள் புறம் திரும்பியது.


மது சற்றும் கோபப்படாமல் நிதானமாக அந்த மாணவியை பார்த்தவள் " என் கிட்ட பேனா கேட்குற உரிமையை மட்டும் உனக்கு யாரும் கொடுத்தாங்களா? என் பேனா என் இஷ்டம்,அதை எனக்கு குடுன்னு நீ எப்படி கேட்கலாம்? பேங்க் வரும் போது காசு கொண்டு வர்றது எவ்வளவு முக்கியமோ,அதே அளவு முக்கியம் பேனா கொண்டு வர்றதும் தான்.வெளியே பெட்டிக் கடைல அஞ்சு ரூபாய்க்கு பேனா விக்கிது.உன்னால வெளியே நடந்து போய் அதையே வாங்க முடியலை.என் கிட்ட ஓசி வாங்குற. உன்னோட சோம்பேறித் தனமும்,அலட்சிய மனப்பான்மையும்,நாம எதுக்கு நம்ம காசை செலவு பண்ணனும்னு நினைக்கிற உன்னோட இந்த மனசு தான் நீ என் கிட்ட பேச்சு வாங்க காரணம்.அஞ்சு ரூபாய்க்கு உன்னால பேனா வாங்க முடியலை.நாளைக்கி எப்படி நீ சக்சஸ்புல்லா ஒரு ஃபேமிலியையோ இல்ல பிஸ்னசையோ ரன் பண்ணுவ.ஃபேமிலி பொறுப்பை யார்கிட்டயாவது தள்ளிட்டு ,பிசினஸ் பண்ண வாங்கின பணத்தை திருப்பி கட்ட சோம்பேறி பட்டுக்கிட்டு நாட்டை விட்டே ஓடினாலும் ஓடிருவ. உன்னால நம்ம நாட்டோட பொருளாதாரம் பாதிக்கப்படும்.உலக நாடுகள் கேலியா பேசும்.நம்ம நாட்டுக்கு கெட்ட பெயரை வாங்கி தர்ற உனக்கு என்னால பேனா கொடுக்க முடியாது"

நீளமாக பேசி முடித்த மதுமிதா மூச்சு வாங்க,பக்கத்தில் இருந்த அவளின் தோழி அவள் அருந்த நீரை எடுத்து நீட்டினாள்.

(பாட்டிக்கும் பேத்திக்கும் லென்த்தா தான் பேச வரும் போல.இதுல அவங்க பேசி முடிச்சதும் தண்ணியை எடுத்து நீட்ட பக்கத்துலயே ஒரு ஆளு இருக்காங்க)


அந்த கல்லூரி மாணவியோ பேயறைந்தாற் போல் அதிர்ச்சியில் நின்றாள்.

'அஞ்சு ரூபா பேனாவை ஓசியில கேட்டதுக்கு என்னை நாட்டை விட்டே ஓட வச்சுட்டாளே ' என மனதில் நொந்துக் கொண்டு தொங்கி போன முகத்துடன் பேனா வாங்க பெட்டிக் கடைக்கு சென்றாள்‌.

(இதை நீ முதல்லயே செஞ்சு இருக்கலாம் பாப்பா)


வங்கியில் இருந்த அனைவரும் அவளை விசித்திரமாக பார்க்க அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவள் பணம் செலுத்தும் வரிசையில் சென்று நின்றாள்.


அவள் முறை வர பணம் செலுத்தும் காசோலையை கவுன்ட்டரில் கொடுத்தவள், டெபாசிட் செய்ய வேண்டிய தொகையையும் கொடுத்தாள்.


"மேடம் இந்த நூறு ரூபாய் நோட்டு எல்லாம் கசங்கி இருக்கு பாருங்க.இப்படி இருந்தா எப்படி ?" சற்று சலித்துக் கொண்டார் அந்த கவுன்ட்டரில் இருந்தவர்.


சற்று முன் மதுவின் சொற்பொழிவை பார்த்த அனைவரும் அடுத்து இவருக்கு என்ன காத்திருக்கிறதோ?' என்று சுவாரசியாக பார்த்தனர்.


'இன்னிக்கு இந்த பேங்க்குக்கு நேரம் சரியில்லை போல.வரிசையா வாங்கி கட்டுறானுங்களே' மதுவின் தோழி சங்கவி அந்த கவுன்ட்டரில் இருப்பவரை பரிதாபமாக பார்த்தாள்.


" வேணும்னா அயன் பண்ணி கொண்டு வரவா?" மதுமிதா முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு கேட்டாள்.


'இந்தா ஆரம்பிச்சுட்டால்ல' சங்கவி அடுத்து நடக்கப் போவதை பார்க்க ஆர்வமாகி விட்டாள்.


"என்ன மேடம் கிண்டலா?"


"இல்ல கசங்கல்.நீங்க தானே சொன்னீங்க ரூபாய் நோட்டு எல்லாம் கசங்கி இருக்குறதா,அதான் அயன் பண்ணி தரவான்னு கேட்டேன்.அயன் பண்ணாலும் பண்ணலைன்னாலும் என் அக்கவுண்ட்ல தானே க்ரெடிட் ஆக போகுது.என் அக்கவுண்ட்ல கிரெடிட் ஆகப்போற பணம் எப்படி இருந்தா என்ன?அதைப் பத்தி எனக்கே கவலை இல்ல.தென் வை டிட் யூ வொரீட் அபவ்ட் இட்?"


இப்பொழுது அந்த பேயறைந்த முகபாவனை ‌அந்த கவுன்ட்டரில் இருப்பவருக்கும் வந்து விட்டது.


'உனக்கு இது தேவையா?அந்த பொண்ணு முன்னாடி ஆத்துன சொற்பொழிவை பார்த்த பிறகும் நீ இப்படி ஒரு கேள்வி அதை பார்த்து கேட்டு இருக்கலாமா?' பக்கத்து கவுன்ட்டரில் இருப்பவர் இவரை பரிதாபமாக பார்த்து நினைத்துக் கொண்டார்.


மதுவின் பதிலைக் கேட்ட பிறகு அந்த கவுன்ட்டரில் இருப்பவருக்கு மேலும் எதுவும் பேச தெம்பில்லாமல் போக, அமைதியாக பணத்தை அவளின் அக்கவுண்டில் கிரெடிட் செய்து பாஸ்புக்கை அவளின் கையில் கொடுத்து ஒரே ஓட்டமாக ஓய்வறைக்கு ஓடிவிட்டார்.


'இன்னிக்கு மதுவோட கோட்டா ஓவர்' என்று நினைத்தவாறே அவளுடன் வங்கியிலிருந்து வெளியேறினாள் சங்கவி.

கருத்து திரி
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை... https://www.sahaptham.com/community/threads/உன்னைத்-தீண்டுவேன்-உயிரே-comments.695/

 

Writer X

Well-known member
Messages
462
Reaction score
616
Points
93
அத்தியாயம் 2


"கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
மதனா..மது சூதனா
என் கண்ணா நீ தூங்கடா"


ஹோம் தியேட்டரில் பாட்டு அலற அந்த சத்தம் தன்னை சிறிதும் பாதிக்கவில்லை என்னும் வகையில் உறங்கிக் கொண்டிருந்தான் நவீன கும்பகர்ணன்.

"என்னக்கா பாட்டு சத்தம் இப்படி அலறுது" இன்று தான் புதிதாய் வேலைக்கு சேர்ந்த வீர லட்சுமி தன் ட்ரெய்னர் கனகவல்லியிடம் சந்தேகம் கேட்டாள்.

"இன்னிக்கு தான் தம்பி சத்தத்தை கம்மியா வச்சு இருக்கு,இதுக்கே நீ அலறுதுங்குற" அசால்ட்டாய் சொன்னார் கனகா.

"எது இது கம்மி சத்தமா?"

"இந்த வீட்டையும்,தம்பியையும் பொறுத்த வரை இது கம்மியான சத்தம் தான்.மத்த நாளுலலாம் பக்கத்து ஏரியா வரை சத்தம் எகிறும்.இவ்வளவு ஏன் பக்கத்து வீட்ல இருக்க டி.டி.ஆர் கூட இந்த வீட்டு பாட்டு சத்தத்தை கேட்டுட்டு தான் ரயிலுக்கு நேரமாச்சுன்னு கிளம்பி ஓடுவாருன்னா பார்த்துக்கோயேன்"

"ஓஹோ அப்போ இந்த வீட்டு தம்பி சாங்கு வச்சே சோசியல் சர்வீஸ் பண்ணுறாருன்னு சொல்றீங்க"

"அடடே உனக்கு இங்கிலீஷ்லாம் தெரியும் போல" ஆச்சரியமாக கேட்டார் கனகா.

"போன மாசம் வரை ஆங்கிலோ இந்தியன் வீட்ல இல்ல வேலை பார்த்துட்டு இருந்தேன்.இந்த அளவு கூட பேசலைன்னா எப்படி?" மிதப்பாய் கேட்டாள் வீர லட்சுமி.

"அப்புறம் ஏன்டியம்மா அந்த ஆங்கிலோ இந்தியன் வீட்டை விட்டுட்டு இங்கன வேலைக்கு வந்த?"

"எல்லாம் என் கெரகம் தான்‌.அந்த ஆங்கிலோ இந்தியன் குடும்பம் ஆஸ்திரேலியாக்கு போய்ட்டாங்க.சரின்னு ஒரு இந்தி காரவுங்க வீட்டுக்கு வேலைக்கு போனேன்.அவங்க என்னன்னா இந்தியிலயே வேலை சொல்லுறாங்க.புரியலைன்னு சொன்னேன்‌.இந்தி கத்துக்கோன்னாங்க.நான் மாட்டேன்னேன்.உடனே ஆன்டி இந்தியன்னுட்டாங்க.ஆமாங்க நான் ஆன்டி இந்தியன் தான் அதுக்காக எல்லாம் என்னால இந்தி கத்துக்க முடியாதுன்னு இங்கன வேலைக்கு வந்துட்டேன்" தான் இங்கு வேலைக்கு சேர்ந்ததற்கான காரணத்தை விலாவரியாக புட்டு புட்டு வைத்தவாறே அடுப்பில் இருந்து வெந்த புட்டை இறக்கி வைத்தாள் வீர லட்சுமி.

" ஏம்மா நீ ஆன்டி இந்தியனா?"

"ஆமா"

"என்ன நீ இவ்வளவு வெளிப்படையா இதை சொல்ற"

" ஏன் சொல்லக்கூடாது? கல்யாணமானாலே ஆன்டின்னு இப்ப இருக்க பசங்க சொல்லிடுதுங்களே‌.எனக்கு தான் கல்யாணம் ஆகி ரெண்டு பிள்ளையே இருக்கே.அப்ப நான் ஆன்ட்டி தானே.அப்புறம் நான் ஒரு இந்தியன்.ஆக மொத்தம் நான் ஒரு ஆன்ட்டி இந்தியன்னு சரியா தானே சொல்லுறேன்.இதுக்கு ஏன்‌ இவ்வளவு அதிர்ச்சி ஆகுறீங்க?"

" அதிர்ச்சி இல்லமா. இம்புட்டு அறிவு இருக்க பிள்ள இப்படி வீட்டு வேலை பார்க்க வந்துட்டியேன்னு ஆத்தாமையில பார்த்தேன்"

"இப்போலாம் அறிவு இருக்கவன் தான் உழைக்கிறான்.இல்லாதவன் அறிவு இருக்கவனை வச்சு பிழைக்கிறான்"

"நீ சொல்றதும் வாஸ்தவம் தான் லட்சுமி"

வீர லட்சுமியின் பேச்சு பிடித்து போக அவளுடன் மேலும் பேச்சை வளர்த்தார் கனகா.

"ஆமா நீ ஏன் இந்தி கத்துக்க மாட்டேன்னு சொல்லிட்ட.இங்கிலீஷே பேசக் கத்துக்கிட்ட.இந்தி கத்துக்கறதா கஷ்டம்"

"கஷ்டமெல்லாம் இல்லீங்ககா.முன்ன வேலை பாத்த ஆங்கிலோ இந்தியன் வீட்டுல தமிழ்ல தான் என்கிட்ட வேலை சொல்லுவாங்க.எனக்கு இங்கிலீஷ் புரியாதுன்னு எனக்கு புரிஞ்ச பாஷையில முதல்ல அவங்க பேசுனாங்க.பிறகு அவங்க கிட்ட பேசிப்பேசி எனக்கும் அந்த இங்கிலீஷ் வந்துருச்சு.ஆனா இந்த இந்திக்காரவுங்க வீட்டுல எடுத்தவுடனே இந்தியில் பேசுனா எனக்கு எப்படி புரியும்? நான் என்ன வடநாட்டுக்கா வேலைக்கு போறேன் இந்தி கத்துக்க! எத்தினி பாஷை கத்துக்கிட்டாலும் அடி விழுந்தா அய்யோ அம்மான்னு தான் இன்னிக்கி வரை கத்துறோமே தவிர மம்மி டாடி,மாதாஜி பிதாஜின்னா கத்துறோம்.தமிழ்நாட்டுல இருந்துட்டு எனக்கு தமிழ் தெரியாது.அதுனால எனக்கு தெரிஞ்ச இந்தியில தான் நீ பேசனும்னா கோவம் வருமா வராதா? அதான் சர்தான் போங்கடான்னு வந்துட்டேன்.சொல்ல போனா அவனுங்கல்லாம் ஆன்டி தமிழன் அக்கா.என்ன இந்தி தெரிஞ்சா ஒரு வீடு,தெரியலைன்னா ஊரு பூரா வீடு" கோபாவேசமாக சொன்ன வீர லட்சுமியைப் பார்த்து கனகவல்லிக்கு உச்சி முடி நியாயத்திற்கு சிலிர்த்திருக்க வேண்டும்.

ஆனா நம்ம ஆளுங்க என்னிக்கி சரியான நேரத்துல சரியா நடந்திருக்காங்க? உல்டாவா செய்யறது தானே நம்ம பழக்கம்.

அப்படி தான் நம்ம கனகு அக்காவும் கெக்கே பிக்கேன்னு சிரிச்சு வைக்க வீர லட்சுமி காண்டு லட்சுமி ஆகிட்டா.

அப்புறம் என்ன அந்த காண்டு லட்சுமியை சமாதானம் பண்ணி சாந்த லட்சுமியா மாத்திட்டு அரைச்ச சட்னி,சாம்பார்,சுட்டு வச்ச இட்லி, தோசை,அவிச்சு வச்ச புட்டு எல்லாத்தையும் எடுத்துட்டு போய் ரெண்டு பேரும் டைனிங் டேபிள்ள வச்சுட்டு மறுபடியும் கிச்சனுக்குள்ள புகுந்துக்கிட்டாங்க.


"ஏன்கா நாம பாட்டுக்கு டிபனை எடுத்து வச்சுட்டு பேசாம இங்க வந்து நின்னுட்டோமே.முதலாளியம்மா வந்து திட்ட மாட்டாங்களா?"


"அவங்க ஏன் திட்ட போறாங்க?சொல்ல போனா நாம அங்கனவே நின்னா தான் திட்டுவாங்க.ஆக்கி போடுறது மட்டும் தான் இங்க நம்ம வேலை‌.அதை ஆறிப்போய் தின்னுறதோ ஆறுறதுக்கு முன்னாடி தின்னுறதோ அது அவங்க வேலை"


"அது சரி இப்ப நமக்கு அடுத்து என்ன வேலை?"


" பொறு இப்ப தானே காலை டிபனை எடுத்து வச்சிருக்கோம்.அவங்கவங்களுக்கு தோது பட்ட நேரம் போட்டு சாப்பிடுவாங்க.மதிய நேரம் நம்ம ரெண்டு பேரையும் அந்த பாட்டியையும் தவிர வேற யாரும் இருக்க மாட்டாங்க.அதுனால நமக்கு தோது படுற நேரம் சமைச்சு நாமளே சாப்பிட்டுக்க வேண்டியது தான்" சாவதானமாக சொல்லிக் கொண்டே சாப்பிட அமர்ந்தார் கனகவல்லி.


கனகவல்லிக்கு கம்பெனி கொடுக்க வேண்டி தானும் சாப்பிட அமர்ந்த வீர லட்சுமி "அக்கா அப்படியே இந்த வீட்டு ஆளுங்க பத்தின ஹிஸ்டரிய சொல்லேன்.கேட்டுட்டே சாப்பிடுறேன்" என்றாள்.


"ஹிஸ்டரின்னா வரலாறு தானே"


"ஆமா அக்கா"


" இந்த வீட்டு ஆளுங்களுக்குன்னு ரெண்டு பாகமா சொல்ல வேண்டிய வரலாறுன்னு பெருசா ஒன்னும் இல்ல. இந்த வீட்டுக்கு மூத்தவங்க பாட்டியம்மா நாக வேணி.அவங்களுக்கு ஒரே பையன் அன்பு ஐயா.அவரு மனைவி ஜோதி.அவங்களோட ஒரே பையன் தான் விக்ரம் தம்பி.பாட்டியம்மாக்கு இப்ப தான் கொஞ்ச மாசம் முன்னாடி நெஞ்சு வலி வந்து ஆப்ரேஷன் பண்ணியிருக்கு.அதுனால அவங்க அதிகமா வெளியே எங்கேயும் போக மாட்டாங்க.மத்தவங்க தான் காலையில சூரியன் உச்சிக்கு வரும் போது வெளியே போறவங்க ,நைட்டு நிலா உச்சியில் இருக்கும் போது திரும்ப வருவாங்க.அப்புறம் பாட்டியம்மாவோட சொந்தம்,ஜோதியம்மாவோட சொந்தம்னு மாசத்துக்கு நாலு நாள் ஆளுங்க வந்து போகன்னு இருப்பாங்க.அப்ப மட்டும் நமக்கு வேலை அதிகம் இருக்கும்"


கனகவல்லி சொல்லிய விசயங்களை கவனமுடன் உள்வாங்கிய வீர லட்சுமி " ஏன்க்கா பாட்டியம்மா ஹார்ட் பேசண்டுங்குறீங்க.அப்ப இந்த தம்பி பாட்டை இப்படி அலற விடுதே.அது பாட்டியம்மாக்கு தொந்தரவா இருக்காது" என்று கேட்டாள்.


"க்கும்.பாட்டியம்மாக்கு நெஞ்சு வலி வந்ததே அந்த பாட்டு சத்தத்தைக் கேட்டுத் தான்.ஆஸ்பத்திரியில இருந்து வந்த ஒரு வாரம் மட்டும் வீடு அமைதியா இருந்துச்சு.பிறகு தம்பியால பாட்டு போடாம இருக்க முடியலை.செல்ல பேரனை ஒன்னும் சொல்ல முடியாம இந்த பாட்டியம்மா தான் அவரு எழுந்து வர வரைக்கும் வாக்கிங் போறேன்னு தினம் பார்க்குல போயி உட்கார்ந்து இருப்பாங்க.தம்பி எழுந்ததும் நான் அவங்களுக்கு போனு போட்டு சொன்ன உடனே வீட்டுக்கு நடையை கட்டுவாங்க.அதை தவிர வெளியேன்னு அவங்க எங்கேயும் போறது இல்ல"


இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே டைனிங் டேபிளில் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்க எட்டிப் பார்த்தாள் வீர லட்சுமி.


சுருட்டை முடிகள் சுருண்டு வந்து கண்களை மறைக்க ,அதை கையால் பின்னே தள்ள விரும்பாமல் தலையாலேயே சிலுப்பிக் கொண்டு பின்னே தள்ளி விட்டுக் கொண்டே மூடி இருந்த பாத்திரங்களில் உள்ள பதார்த்தங்களை எடுத்து தட்டில் வைத்துக் கொண்டு உண்ண அமர்ந்தான் விக்ரம்.


"அக்கா அந்த தம்பி சாப்பிட வந்துருச்சு" கனகவல்லியிடம் சேதி சொன்னாள் வீர லட்சுமி.


தன் கைப்பேசியின் மூலம் பாட்டியம்மா நாகவேணிக்கு தகவல் சொல்லி விட்டு உண்ணும் வேலையைத் தொடர்ந்தார் கனகா.


'ட்ரெய்னரின் வழியே என் வழி' என்பதைப் போல் தானும் உண்ணும் வேலையைத் தொடர்ந்தாள் வீர லட்சுமி.


டைனிங் டேபிளில்..

விக்ரம் சாப்பிட்டு முடிக்கும் நேரம் தன் அறையில் இருந்து வெளியே வந்தார் ஜோதி.


"சாப்டாச்சா விக்ரம்?" என கேட்டவாறே உண்ண அமர்ந்தார்.


"எஸ் மாம்.நீங்க சாப்பிடுங்க.இன்னிக்கு ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் பார்ட்டி பண்ண பாண்டி வரை போறோம்.டாட் கிட்ட சொல்லிடுங்க ‌.சும்மா சும்மா போன் பண்ணி தொல்லை பண்ணுவாரு"


"அவரு ஊருல இல்லடா‌.அங்கை பாட்டியைப் பார்க்க திருவாரூர் போயிருக்காரு.நீ ஜாலியா என்ஜாய் பண்ணு"


"வாவ் சூப்பர் மா.அப்ப ரெண்டு நாள் எக்ஸ்ட்ரா அங்க இருந்துட்டு வரேன்.அவரு வந்து கேட்டார்னா அவரு வந்த அன்னைக்கு தான் நான் வெளியே போனேன்னு சொல்லிடுங்க"


"அதெல்லாம் நான் பாத்துக்குறேன்.நீ நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாடா.முக்கியமா ஃபேஸ்புக்ல போட்டோ போட்டு ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணிட்டே இரு.எல்லாரும் நீ என்ஜாய் பண்ணுவதை பார்த்து பொறாமை படட்டும்.மறக்காம உங்க அப்பா ஐடியை ப்ளாக் பண்ணிடு.ஃபேக் ஐடி எதுவும் கிரியேட் பண்ணி உன்னை நோட்டம் விட்டாலும் விடுவாரு‌.எந்த புது ஐடியையும் அக்சப்ட் செய்யாத.அப்புறம் மறக்காம அம்மாவையும் டேக் பண்ணிடுடா" படு அக்கறையாக சொன்ன அம்மாவை பாசத்துடன் அணைத்துக் கொண்டு அவர் கொடுத்த ஐம்பதாயிரத்தையும் வாங்கிக் கொண்டு பாண்டிச்சேரிக்கு பயணமானான் விக்ரம்.


"யக்கா என்ன இது அம்மாவே மகனுக்கு காசு கொடுத்து ஊரை சுத்த சொல்லுறாங்க" அதிர்ச்சியாய் கேட்டாள் வீர லட்சுமி.


"நீ வேற.ஜோதியம்மா விக்ரம் தம்பிக்கு சரக்கே வாங்கி குடுப்பாங்க"


"சரக்காஆஆ" அஷ்ட கோணலாய் முகத்தை வைத்தாள் லட்சுமி.


"முகத்தை நார்மலா வையி.இல்லைன்னா அப்படியே சுலுக்கிக்கப் போவுது.ஜோதியம்மா போன வருசம் விக்ரம் தம்பி பொறந்த நாளுக்கு அவரு ஆசைப்பட்டாருன்னு ஃபாரின் சரக்கு பெட்டி நிறையா வாங்கிக் கொடுத்தாங்க.அன்பு ஐயா அது எல்லாத்தையும் நடு வீட்ல நின்னு தூக்கிப் போட்டு உடைச்சுட்டாரு.அதுல இருந்தே அன்பு ஐயாக்கும் இவங்க ரெண்டு பேருக்கும் மோதல் இன்னும் அதிகமாயிருச்சு"


"அப்ப அதுக்கு முன்னாடி ராசியா இருந்தாங்களா எல்லாரும்?"


"அதுதான் இல்ல.முன்னாடி மூஞ்சிக்கு நேரா முறைக்க மட்டும் செய்வாங்க.இப்ப முறைக்கிறதோட திட்டிக்கவும் செய்றாங்க"


'என்ன குடும்பம் டா இது!' மனதினுள்ளே நினைத்துக் கொண்டாள் லட்சுமி.

"நீ என்ன நினைக்கிறேன்னு எனக்கும் புரியுது.ஆரம்பத்துல எனக்கும் இப்படித்தான் இருந்துச்சு.அப்புறம் போகப் போக பழகிருச்சு.உனக்கும் பழகிடும்" சமாதானம் சொன்னார் கனகா.

" ஹூம்,இந்த வீட்டுல இருக்கவங்க தான் இப்படி.வரப்போற மருமகளாவது உருப்படியா இருக்கனும்‌.அப்ப தான் இந்த குடும்பம் வருங்காலத்துலயாவது உருப்படும்"


"தப்பித் தவறி கூட அப்படி உருப்பட்டுற கூடாதுன்னு தான் ஜோதியம்மா அவங்க சொந்தத்துலயே ஒரு பொண்ணை பார்த்து வச்சிருக்காங்க‌.அது மட்டும் இந்த வீட்டுக்கு மருமகளா வந்துச்சுன்னு வையேன் ,என்ன குடும்பம்டா இதுன்னு நினைக்கிற காலம் போய் குடும்பமாடா இதுன்னு நினைக்கிற நிலைக்கு வந்துருவோம்"


"எந்த நிலைக்கு வேணா வரட்டும்,நமக்கு சம்பளம் பாக்கியில்லாம வந்துரும்ல" ஆர்வமாய் கேட்டாள் லட்சுமி.


"பிழைக்கத் தெரிஞ்ச பிள்ளை.அதுலாம் கரெக்டா வந்துரும்.வா அடுத்த வேளைக்கு எதுனா சமைச்சு வைப்போம்" என்று அடுக்களை நோக்கி நடையைக் கட்டினார்கள் இருவரும்.

கருத்து திரி
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை... https://www.sahaptham.com/community/threads/உன்னைத்-தீண்டுவேன்-உயிரே-comments.695/
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom