நிசப்தம் - 4
அடுத்த நாள் காலை சூரியன் சுறுசுறுப்பாக புவியில் மலர்ந்து கொண்டு இருக்க... அந்த கதிர்கள் எல்லாம் சாரளத்தின் பக்கத்தில் அமர்ந்த படியே உறங்கிக் கொண்டு இருந்த சாரல் மீது பட்டது...
சூரியனின் கதிர்கள் அவள் மீது பட்டு... கொஞ்சம் கண்கள் கூசிட... துயில் கலைந்து கொஞ்சம் விலோசனங்களை விரித்து பார்த்தாள்...
சாரலின் கையில் இருந்த அப்பத்தாவின் புகைப்படத்தை... வலது கையால் சுவற்றில் மாட்டி விட்டு... இடது கையை பார்க்க... அதுவோ செக்க செவேள் என்று சிவந்து போய் காட்சி கொடுத்தது...
அவள் மணியை பார்க்க எழு என்று காட்டியது... எழுந்து சென்று அவளுடைய பள்ளி சீருடையை எடுத்துக் கொண்டு... பச்சை தண்ணீரில் குளிக்க சென்றாள் சாரல்...
சூடு பட்ட கரத்தின் மீது நீர் துளிகள் விழ விழ எரிச்சல் கொடுத்தது... அதை எல்லாம் தாங்கி கொண்டு குளித்து முடித்து... உடைகளை அணிந்துக் கொண்டாள்...
பின்னர்... அவளே கஷ்டப்பட்டு தலை சீவி... இரட்டை பின்னல் போட்டு கொண்டு... முகத்தில் அழுத தடம் தெரிய கூடாது என்று எண்ணி.. கொஞ்சம் பவுடரை பூசி... ஒரு மெரூன் கலர் ஸ்டிக்கர் பொட்டை வைத்தவள்... அவளுடைய ஸ்கூல் பேக்கை எடுத்துக் கொண்டு... வீட்டில் யாரிடமும் சொல்லி விட்டு செல்லாமல்... அப்படியே பள்ளிக்கு கிளம்பி விட்டாள் திகழொளி...
வீட்டில் உமாதேவியோ சாரல் இன்னும் வெளியே வராமல் இருப்பதால்... அவள் அறைக்கு சென்று பார்க்கலாம் என்று நினைத்து அங்கே போனார்... அங்கு சாரல் இல்லாமல் போக... அவளுடைய புத்தக பை இருக்கிறதா எனப் பார்க்க அதுவும் இல்லை... அதனை கண்டதும் உமாவுக்கு ஆத்திரம் தான் பொங்கி வந்தது...
அவரோ... "எவ்வளவு திமிரு இருந்தால்... என்னிடம் கூட சொல்லாமல்... உன் பள்ளிக்கூடத்திற்கு நேரத்துக்கு முன்னமே போய் இருப்ப... அவ்வளவு கொழுப்பு ஏறிப் போச்சா..." என்று குரலை செருமிய படி சொல்லிய உமா நேராக சென்றது என்னமோ செந்தில் நாதனிடம் தான்...
"உங்க மவளுக்கு இருக்கும் திமிரை பார்த்தீங்களா... என்ன எகத்தாளம் இருந்தா... அவ சொல்லாம கொள்ளாம இங்கிருந்து பள்ளிக்கூடம் போய் இருப்பா... நாளை பின்ன இதே மாதிரி வீட்டை விட்டு ஓடிப் போனால்... என்ன பண்ணுவீங்க... இதோ பாருங்க நானும் சொல்லிட்டே தான் இருக்கேன்... பொட்டை கழுதைக்கு படிப்பு எதுக்கு... அவ படிச்சி கிழச்சது எல்லாம் போதும் சாமி... சட்டு புட்டுன்னு அவளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சி... நம்ம கடமையை நாம மரியாதையுடன் முடிச்சிக்கலாம்... இதுக்கு நீங்க என்னங்க சொல்றீங்க..." என்று கத்தி... அவரிடம் எகிறிக் கொண்டு இருந்தார் உமாதேவி...
அவரை பார்த்து கொண்டு இருந்த செந்தில்நாதன்... "எனக்கு வேலைக்கு நேரம் ஆச்சு... நான் கிளம்புறேன்... எனக்கு சாப்பிட எதுவும் வேண்டாம்... நான் வெளியே பார்த்துக் கொள்கிறேன்..." என்று சொல்லி விட்டு... மனதில் உமா சொன்னதை யோசித்து கொண்டே அங்கிருந்து புறப்பட்டு சென்றார்...
அவர் சென்றதும்... "விவஸ்தை கெட்ட மனுஷர்... ஒரு விஷயத்தை சொன்னால்... அதை காது கொடுத்து என்னன்னு கேட்க மாட்டாரு... அப்போ தான் அம்மா முந்தானையை பிடிச்சு... நாய் குட்டியை போல சுத்திட்டு கிடந்தார்... இப்ப பொண்டாட்டி பேச்சை கேட்டு பூம்பூம் மாடு போல தலை ஆட்டினால் தான் என்ன... எல்லாம் நான் வாங்கி வந்த வரம் அப்படி... நைட்டு என்னிடம் தானே நீங்க வந்து... குழைந்து கிட்டு... உமா சுமா ன்னு நெருங்கி வருவார்... கச்சேரியை அப்ப வச்சிக்கிறேன்..." என்று உமா வசை பாடிக் கொண்டு இருக்க...
"சாரல்... சாரல்..." என்று அழைத்த கயலின் குரல் கேட்டது...
அதை கேட்டு வெளியே போனார் உமா...
அவரை கண்டதும்... "ஆன்டி... சாரலை கூப்பிடுங்க... ஸ்கூல் போக டைம் ஆச்சு..." என்று நக்கலாக சொன்னாள் கயல்...
உமாவிடம் இருந்து... "அந்த சீமாட்டி... இங்க இல்ல... வீட்டில் யாரிடமும் சொல்லாமல்... எங்க போய் தொலைந்தாலோ தெரியலை...." என்று வார்த்தைகள் எரிச்சலாக வந்து விழுந்தன...
"என்னது இல்லையா..." என்று சொல்லி சந்தேகமாக அவரை பார்த்தாள் கயல்...
"ஆமா இந்த மவராணி... காலையில் பையை மாட்டிட்டு என்னிடம் எதுவும் சொல்லாமல்... பள்ளிக்கூடம் போயிட்டா... அங்க தான் போனாலோ இல்லை... வேற எங்க ன்னா போனாலோ... யாருக்கும் தெரியும்..." என்று சொன்னார் உமா...
'நம்ம சாரல்.. இப்படி எல்லாம் பண்ண கூடிய ஆள் இல்லயே... ஏதோ பிரச்சினை ஒன்னு நடந்து இருக்கும் போல...' என்று மனதில் நினைத்து கொண்ட கயல்... உமாவிடம்... "ஆமா... அவள் சாப்பிட்டு போனாலா..." என்று கேட்க...
"ஆமா..... அவளுக்கு அது ஒன்னு தான் கொறை... திமிர் பிடித்தவள்... ஒருவேளை சாப்பிடலை என்றால் ஒன்னும் ஆகிடாது... அகப்பை குறைந்தால் இந்த கொழுப்பு எல்லாம் மொத்தமாக அடங்கி போவும்..." என்று மனசாட்சி இல்லாமல் பேசினார் உமாதேவி...
அவரை வெறுப்புடன் பார்த்த கயல்... "குட்டக் குட்டக் குனிகிறவனும் முட்டாள்... குனியக் குனியக் குட்டுகிறவனும் முட்டாள் தான்... இந்த மனசாட்சி இல்லாமல் பேசும் நீங்களும் முட்டாள் தான்... உங்க பேச்சை எல்லாம் கேட்டு... அதை மனசை கல்லாக்கி... எல்லா கஷ்டத்தையும் தாங்கிட்டு... பேசாமல் போறாளே... நீங்க பெத்து எடுத்த முத்து... அவளும் ஒரு முட்டாள் தான்..." என்று கோபத்துடன் கத்தினாள் கயல்...
"என்னடி என் கிட்டயே இப்படி எகிறிட்டு கிடக்க... மரியாதையாக போயிடு... இல்ல சண்டை ஆகிடும் பார்த்துக்க... அவள் கொழுப்பெடுத்த போனால்... நீ என்னிடம் தேவை இல்லாமல் பேசிட்டு இருப்பீயா..." என்று அவரும் கத்த...
"ச்சே... மொதல்ல வாயை மூடுங்க... சாரலை பற்றி பேச உங்களுக்கு கொஞ்சம் கூட அருகதையே கிடையாது... முதலில் நீங்க பெத்து வளர்த்த மகன்... நேற்று குடிச்சிட்டு ரோட்டில் விழுந்து கிடந்தான்... அந்த குடிகாரனை என் அண்ணன் தான் உங்க வீட்டு முன்னாடி விட்டுட்டு போனான்... உங்களுக்கு அப்படி இருப்பவனை திருத்த துப்பு இல்ல... அவனை மேலும் மேலும் தலையில் தூக்கி வைத்து ஆடி... இன்னும் கெடுத்து வச்சிட்டு இருக்கீங்க... நீங்க வந்து சாரலை திட்டி... பேசிட்டு இருக்கீங்க... முதலில் உங்க புள்ளையின் நடவடிக்கையை கவனிக்க பாருங்க..." என்று ஆத்திரத்தில் அனைத்தையும் சொல்லி விட்டு அவளுடைய பள்ளியை நோக்கி சென்று விட்டாள் கயல்...
உமாவும் அவள் போனதும் வீட்டின் கதவை சாற்றி விட்டு... எதுவும் நடக்காதது போல உள்ளே சென்று விட்டார்...
அங்கே சாரலோ எட்டு மணிக்கு எல்லாம் பள்ளிக்கூடம் சென்று விட்டதால்... அங்கே மாணவிகள் யாரும் இல்லாமல் வெறிச்சோடி தான் இருந்தது...
அங்கிருந்த வாட்ச்மென் தாத்தா எழுந்து வந்து... "என்ன பாப்பா இவ்வளவு நேரமாகவே பள்ளிக்கூடம் வந்துட்டு இருக்க..." என்று கேட்டார் அவர்...
"அ.. அது வந்து தாத்தா... ஹான்... எனக்கு கொஞ்சம் எழுதும் வேலை இருக்கு... அதான் தாத்தா சீக்கிரமா வந்துட்டேன்..." என்று சொன்னாள் திகழொளி...
"சரி டா கண்ணு... நீ போய் உன் படிப்பை பாரு..." என்று சொல்லி விட்டு... வாட்ச்மென் தாத்தா சேரில் அமர்ந்து கொண்டார்...
அவரிடம் புன்னகையுடன் சரி என்று தலை அசைத்து விட்டு அவளுடைய வகுப்பறைக்கு சென்றாள்...
அங்கே போனதும் அவளுடைய இடத்துக்கு போய்... பையை கழட்டி விட்டு... அவள் வலது கையை தலைக்கு வைத்து சாய்ந்து கொண்டு... அப்படியே படுத்துக் கொண்டாள்...
திகழொளி நேற்று காலை மட்டும் தான் கொஞ்சமாக சாப்பிட்டது... அதன் பிறகு எதுவும் சாப்பிடவும் இல்லை... தண்ணீரை கூட குடிக்க வில்லை... அதனால்... அவளுக்கு உடல் எல்லாம் ரொம்ப சோர்ந்து போய்... தெம்பு இல்லாமல்... அசதியாக இருப்பது போல இருந்தது...
கொஞ்ச நேரத்தில் அந்த பக்கமாக சென்ற ஒருவர்... சாரலை பார்த்ததும் உள்ளே வந்தார்...
"சாரல்..." என்று அவர் அழைக்க...
அந்த குரலை கேட்டதும் தலை நிமிர்ந்து பார்த்தாள் சாரல்...
"பிரியா மிஸ்... நீங்களா..." என்று மென்னகையுடன் கேட்டாள் அவள்...
"ஆமா... என்ன நீ இவ்வளவு சீக்கிரமா ஸ்கூலுக்கு வந்துட்டு இருக்க..." என்று பிரியா மிஸ் கேட்க...
சாரலின் மனதில் இன்னொரு கதை தோன்ற... அதையே சொல்ல தயார் ஆகினாள்...
"அதுவா மிஸ்... வீட்டில் எல்லாரும் விடியற் காலையில் குலதெய்வம் கோவிலுக்கு போய்ட்டாங்க... நான் தலைக்கு ஊற்றிக் கொண்டேன்... அதனால் நான் போகலை... வீட்டில் நான் மட்டும் தனியாக இருந்தேன்... ரொம்ப போர் அடிச்சது... அதான் மிஸ்... நான் கிளம்பி ஸ்கூலுக்கு வந்துட்டேன்..." என்று புன்னகை மாறாமல் பொய்யை உண்மையை போல சொன்னாள் திகழொளி...
"சரி சரி..." என்று சொல்லிய பிரியா மிஸ் எதர்ச்சையாக சாரலின் சிவந்திருந்த கையை பார்த்து... பதறி கொண்டே... அவள் கையை மெதுவாக பிடித்து... " ஏய் சாரல்... கை என்னமா ஆச்சு... இப்படி சிவந்து போய் இருக்கு..." என்று கேட்டார் அவர்...
"அது... மிஸ்... வந்து..." என்று சாரல் வார்த்தை வராமல் தடுமாற...
"என்னமா சொல்லு... என்னாச்சு..." என்று சொல்லி அவளை பார்த்தார் பிரியா...
"காலையில் நான் குளிக்க சுடு தண்ணீர் வைத்தேன்... அதை நான் எடுத்துட்டு போகும் போது... பிடிக்க தெரியாமல் பிடிச்சு... கை தவறி... அது கீழே விழுந்து... அப்படியே என் கை மேலயும் கொட்டி விட்டது மிஸ்..." என்று பாவமாக சொன்னாள் சாரல்...
"அச்சோ... சாரல் அதை எல்லாம் பார்த்து பத்திரமாக பண்ண மாட்டீயா மா... பாரு எப்படி சிவந்து போய் இருக்குன்னு... நீ இங்கேயே இரு... நான் போய் இதுக்கு மருந்து எடுத்துட்டு வரேன்..." என்று சொன்னார் பிரியா...
"அது எல்லாம் வேணாம் மிஸ்... இது சீக்கிரமா சரியாக போயிடும்..." என்று சொல்லி மறுத்தாள் சாரல்...
"ஷ்ஷ்ஷ்... நீ சும்மா இரு சாரல்... நான் போய் கொண்டு வரேன்..." என்று சொல்லி விட்டு அங்கிருந்து ஆசிரியர் அறைக்கு சென்றார் பிரியா...
'ஹ்ம்ம்... மத்தவங்களுக்கு இருக்கும் அக்கறை கூட என்னை பெத்தவங்களுக்கு இல்லையே... இதுக்கு நான் யாரை தப்பு சொல்ல முடியும்...' என்று மனதில் நினைக்கும் போதே கண்ணில் நீர் சுரந்தது...
அதற்குள் பிரியா மிஸ் வந்து விட... அவருக்கு தெரியாமல் கண்களை துடைத்துக் கொண்டு... சிரித்தபடி அவரை பார்த்தாள் திகழொளி...
பிறகு... அவர் சாரலுக்கு மருந்து போட்டு விட்டார்...
"சாரல் கொஞ்சம் எரியும் தான்... பட் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ..." என்றார் பிரியா...
'இதை விட அதிகமாக மனசு தான் ரொம்ப வலி எடுக்குது... அதை கம்பேர் பண்ணும் போது... இந்த வலி பெருசா தெரியல...' என்று மனதில் நினைத்து கொண்டு... வெளியே அவரிடம் சரி என்று தலை அசைத்தாள் சாரல்...
"சரி மா... நான் வரேன்... பத்தாவது பிள்ளைகளுக்கு இன்னைக்கு ஸ்பெஷல் கிளாஸ்... நான் போய் அவங்களுக்கு டெஸ்ட் வைக்கனும்... நான் போய்ட்டு வரேன்..." என்று அன்பாக சொன்னார் பிரியா மிஸ்...
"சரி மிஸ்... நீங்க போங்க... நான் பார்த்துக் கொள்கிறேன்..." என்று சாரல் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே... கயல் கோபத்துடன் உள்ளே நுழைந்தாள்... அவள் பிரியாவை கண்டதும்... தன் கோபத்தை மறைத்து விட்டு உள்ளே போனாள்...
"குட் மார்னிங் பிரியா மிஸ்..." என்று சிரித்தபடி சொன்னாள் கயல்...
"குட் மார்னிங் கயல்... போ சாரல் தனியாக இருக்கா பாரு... கையில் வேற சுடு தண்ணீர் கொட்டி விட்டதாம்... நான் இப்ப தான் மருந்து போட்டு விட்டேன்... நீ போய் பாரு டா.. சாரி.. இப்ப எனக்கு நேரம் ஆகிடுச்சு..." என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டார் பிரியா மிஸ்...
அவர் சென்றதும் சாரலிடம் சென்ற கயல்... சாரலோ அவளை பார்க்காமல் கீழே குனிந்து கொண்டாள்...
கயல் அவளிடம் எதுவும் பேசாமல்... சாரலை கண்டு முறைத்து விட்டு... அவளுடைய பையில் இருந்து ஒரு டப்பாவை எடுத்தாள்... அதை திறந்து... அதில் இருந்த இட்லியை பிட்டு... அவளுடைய வாய் அருகே நீட்டினாள் கயல்... சாரல் கண்ணீருடன் அவளை பார்க்க...
"தயவு செய்து என்னை திட்ட வைக்காத சாரல்... செம கடுப்பில் இருக்கேன்... ஒழுங்கா மரியாதையாக... நான் கொடுக்கும் இதை சாப்பிடு... இல்லாட்டி சத்தியமா சொல்ற உன் கிட்ட எப்பவும் பேசவே மாட்டேன் டி..." என்று கயல் சினத்துடன் சொல்ல...
அவள் அழுது கொண்டே... கயல் தந்த இட்லி துண்டை வாங்கி... மெல்ல முடியாமல் மென்று விழுங்கிக் கொண்டாள்...
"இதை பாரு இப்ப மட்டும் கண்ணை கசக்கிட்டு இருந்த அறைந்து விடுவேன் சாரல்... நீ மொதல்ல அழாமல் கண்ணை துடை..." என்று கயல் அதட்டி சொல்ல... சாரலும் அவள் கண்களை துடைத்து கொண்டு... அவளுடைய தோழி ஊட்டிக் கொண்டு இருப்பதை சாப்பிட்டாள்...
கயல் வெளியே முறைத்துக் கொண்டே இருந்தாலும்... அவள் நிலையை எண்ணி... உள்ளுக்குள் கஷ்டமாக தான் இருந்தது...
அந்த டப்பாவில் இருந்த ஐந்து இட்லியை... சாரலுக்கு முழுமையாக ஊட்டி விட்டு... அவளுடைய கையை கழுவிக் கொண்டு... அவளுடைய பக்கத்தில் வந்து அமர்ந்தாள் கயல்...
"நேத்து நான் போனதுக்கு அப்பறம் அங்க என்னாச்சு ஆச்சு சாரல்... ஒழுங்கா மரியாதையாக உண்மையை மட்டும் சொல்லு டி... எப்படி உன் கை இப்படி சிவந்து போச்சு..." என்று அழுத்தமாக கேட்டாள் கயல்...
சாரலும் நேற்று நடந்த ஒன்று விடாமல் அனைத்தையும் கயலிடம் சொல்லி முடித்தாள்...
"உங்க வீட்டில் இருக்கும் யாருக்கும் மனசாட்சியே இல்லையா டி... இப்படி கூடவா கல்லு மனசா இருக்க முடியும்... நீ நேத்து எல்லாம் சாப்பிடலையே... அதில் இரக்கம் கொண்டு... ஒரு வார்த்தைக்கு கூட சாப்பிடு என்று சொல்ல மாட்டீங்களா..." என்று ஆத்திரம் குறையாமல் பேசிக் கொண்டு இருந்தாள் கயல்...
அவளை கட்டிக் கொண்டு அழுத திகழொளி... "எனக்கு அப்படியே செத்து போலாம் போல இருக்கு கயல்..." என்று லூசு போல சொல்லி கொண்டே இருக்க...
அவள் கன்னத்தில் பட்டென்று அறை கொடுத்தாள் கயல்...
*******
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் 👇👇👇
எழுத்தாளினி நிசப்தா - Comments