Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL எழுத்தாளினி நிசப்தா - Tamil Novel

Status
Not open for further replies.

Kani novels

Member
Vannangal Writer
Messages
45
Reaction score
38
Points
18
நிசப்தா - 8

ஒரு மாதம் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் திகழொளி சாரலின் வாழ்க்கை தெளிந்த நீரோடை போல சுமுகமாக அமைதியாக சென்றது...

அப்போது ஓர் நாள் மாலையில் எப்போதும் போல வெள்ளி கிழமை அன்று வழமையாக வரும் பெருமாள் கோவிலுக்கு வந்து இருந்தாள் சாரல்... அவளோடு சேர்ந்து கயலும் கோவிலுக்கு வந்திருந்தாள் கயல்...

இருவரும் பெருமாளை சேவித்து விட்டு...‌ கோவில் பிரகாரத்தை சுற்றிக் கொண்டு இருந்தனர்...

அப்போது... "சாரலு சாரலு..." என்று கத்திக் கொண்டு இருந்தாள் கயல்...

அவளும் கோவிலை சுற்றி கொண்டே... "ம்ம்... என்ன டி..." என்றாள் சாரல்...

"அடியே கால் வலிக்குது டி... உனக்கு இவ்வளவு பெரிய கோவிலை ஒரு சுற்று சுற்றினால் போதாதா... மூணு சுற்றா சுற்றனும்... அவ்வ்... முடியலை டா சாமி..." என்று சொல்லி பெருமூச்சு விட்டாள் கயல்...

"ஷ்ஷ்ஷ்... வாயை மூடு... இன்னும் ஒரு சுற்று தான்... அப்பறம்..." என்று சாரல் சொல்லி முடிக்கும் முன்னரே...

"அப்பறம்... சுட சுட வெண் பொங்கல் இல்லாட்டி சக்கரை பொங்கல் பிரசாதமாக கொடுப்பாங்க... செமயா இருக்கும்... அதை வாங்கி வாயிறு நிறையாட்டியும்... வாய்க்கு ருசியாக கொஞ்சமாக சாப்பிடலாம் சாரல்..." என்று வாயெல்லாம் பல்லாக சொன்னாள் கயல்...

"அப்போ நீ இதுக்கு தான் கோவிலுக்கு வரேன்னு ஆர்வமா வந்தீயா..." என்று சிரித்துக் கொண்டே... சந்தேகமாக கேட்டாள் சாரல்...

"அதே அதே... என் அய்மாவை ஏதாவது செய்து தர சொன்னேன்... ஆனால்... இந்த அம்மா என்னை பார்த்து... உனக்கு எப்ப பார்த்தாலும் திங்கறது மட்டும் தான் பொழப்பா அப்படின்னு கேட்டு... கேவலமாக ஒரு லுக்கு விட்டாங்க... அதில் என் பிஞ்சு மனசு அப்படியே புண்ணாக்கு... ச்சீ... புண்ணா போச்சு சாரலு... அதான் உன்னை தேடி இங்க வந்து... நம்ம ஐயர் தாத்தா கிட்ட இன்னைக்கு என்ன மெனு என்று கேட்டா... அவரும் அதே லுக் விட்டார்... அதனால்... நீ தான் எனக்கு சிபாரிசு பண்ணி பிரசாத்தை வாங்கி தரணும்..." என்று வராத கண்ணீரை துடைத்து கொண்டே சொன்னாள் கயல்...

சாரலுக்கு அவள் சொன்னது சிரிப்பு வர... "ஏய் போதும் டி... சிரிப்பு அடக்க முடியலை... நான் கொஞ்சம் சிரிச்சிக்கிறேன்... திட்டாதே கயலு..." என்று சொல்லி சிரித்தாள்...

"ஹ்ம்ம்... சிரி சிரி... யூ நோ... எப்ப பொழப்பை பார்த்தியா... எப்படி சிரிப்பா சிரிக்குது..." என்று சொல்லி கயலும் சாரலுடன் சேர்ந்து சிரித்தாள்...

"விடு டி செல்லம்... நான் உனக்கு இன்னொரு தொன்னை பிரசாதத்தை எக்ஸ்ட்ரா வாங்கி தரேன்..." என்று சாரல் சொல்ல...

"இது தான் உயிர் தோழிக்கு அழகு..." என்றாள் கயல்...

பிறகு... இருவரும் பிரகாரத்தை சுற்றி விட்டு... இன்றைய ஸ்பெஷல் வெண் பொங்கலை பிரசாதமாக வாங்கிக் கொண்டு ஓர் இடத்தில் சென்று இருவரும் அமர்ந்தனர்... ஹாஹா... சாரல் சொன்னது போலவே கயலுக்கு இன்னொன்று கூட வாங்கி கொடுத்தாள்...

கயல் பிரசாதத்தை சாப்பிட்டு முடித்து... ஒவ்வ் என்று ஏப்பம் விட்டாள்...

"ஹிஹி செம சூப்பரா இருந்தது..." என்று‌ இளித்துக் கொண்டே சொன்னாள் கயல்... சாரல் அதற்கு பதில் சொல்லாமல் மென்னகை புரிந்தாள்...

பிறகு... "ஏண்டி சாரலு... இன்னுமா அந்த கேணை தேவி நடிப்பை கண்டியூ பண்ணுது..." என்றாள் அவள்...

சாரலோ ம்ம் என்று தலை அசைத்தாள்...

"இவ்வளவு நாளாக ஒரு வசை பாட்டையும் பாடாமல்... அமுக்குனி மாதிரி அமைதியாக இருக்குது என்றால்... அதற்குப் பின்னால் ஏதோ ஒரு பெரிய ஆப்பு கண்டிப்பா இருக்கும்... அது என்னன்னு ஏதாவது க்ளு (clue) கிடைச்சதா..." என்று கேட்டாள் கயல்...

"இல்லை..." என்று ஒற்றை பதிலையே கதறினாள் சாரல்...

"ஆமா... நம்ம ஸ்கூலில் ஒரு நாள் டூர் கூட்டிட்டு போறாங்களே... நீ வர தானே..." என்று கயல் கேட்க...

சாரலோ... "ம்ஹூம்... அனுப்பி வைக்க மாட்டாங்க கயல்..." என்றாள்...

"அனுப்பி வைப்பாங்க சாரலு..."

"இல்ல டி..."

"கண்டிப்பா அனுப்பி வைப்பாங்க..."

"எப்படி கயல்... நீ இவ்வளவு உறுதியாக சொல்ற..."

"உன் அம்மாவோட நடிப்பு அப்படி... அந்த நம்பிக்கையில் தான் நான் இவ்வளவு உறுதியாக சொல்றேன்..." என்று சொல்லி கண் அடித்தாள் கயல்...

"அப்படியா சொல்ற..." என்று சந்தேகமாக கேட்டாள் சாரல்...

"ஹ்ம்ம்... அப்படி தான்..." என்று சொன்னாள் கயல்...

"என்ன விட என் அம்மாவை பற்றி நல்லா தெரிந்து வச்சு இருக்க கயல்..." என்று சலிப்புடன் சொல்ல...

"அது எல்லாம் அப்படி தான்..." என்று சொல்லி நகைத்தாள் கயல்...

அந்த சிரிப்பில் கலந்து கொள்ள முடியாமல்... ஏதோ ஒரு யோசனையாகவே இருந்தாள் திகழொளி...

அவள் முகத்தை பார்த்த கயல்... 'ச்சேய்... இந்த புள்ள எதுக்கும் சரிப்பட்டு வராது... எப்படி தான் இவ அந்த கேணை தேவியை எதிர்த்து வாழப் போறாளோ...' என்று மனதில் எண்ணி கவலை கொண்டாள் சாரலின் நண்பி...

கயல் எழுந்துக் கொண்டு...‌ சாரலின் கரம் பற்றி இழுத்தாள்...

"என்ன டி..." என்று சினுங்கினாள் சாரல்...

"வா வா... நல்ல விஷயத்தை எல்லாம் சீக்கிரம் பண்ணணும் சாரல்..." என்று சொல்லி அவளை இழுத்துக் கொண்டு சென்றாள் கயல்...

"கயல் எங்க போறோம் இப்ப..." என்று கேட்க

"ஹ்ம்ம்... உன் வீட்டுக்கு தான் சாரல்..." என்று சொல்லி சாரலின் வீட்டுக்கு அழைத்து போனாள் கயல்...

"ஆன்டி... ஆன்டி..." என்று கத்திக் கொண்டே உள்ளே சென்றாள் கயல்...

"அடியே பிரச்சனை பண்ணாமல் இரேன் டி..." என்று மெல்லிய குரலில் சொன்னாள் திகழொளி...

ஆனால் கயலோ அதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் இருக்க... உமாதேவி ஹாலுக்கு வந்தார்...

'இதுக்கு எப்பவும் கொழுப்பு மட்டும் குறையாது...' என்று மனதில் நினைத்து கொண்டார் உமா...

"என்ன கயல்..." என்று சிரித்துக் கொண்டே கேட்டார் உமா...

"ஆன்டிடிடிடி..." என்று இழுத்து சொன்னாள் கயல்...

அவளை முறைத்து பார்த்த உமாதேவி... "அடடா... கயலு... இந்த இங்கிலி பிசாசு எல்லாம் விட்டுட்டு... வாய் நிறைய சித்தின்னு கூப்பிடு மா..." என்று சொன்னார்...

அதை கேட்டு சாரலும் கயலும் முகத்தை அஷ்ட கோணல் ஆக்கினர்...

"ஏது இங்கிலி பிசாசா... எங்களுக்கு தெரியாமல் என்னது அது புதுசா... அப்படி ஒரு பிசாசை நாங்க இந்த ஊரில் கேள்வி பட்டதே இல்லயே..." என்று கூறினாள் கயல்...

"லூசு கயல்... அவங்க இங்கிலிஷை தான் அப்படி சொன்னாங்க..." என்று கயலின் காதில் மெதுவாக சொன்னாள் சாரல்...

அவர்களின் பேச்சை கவனிக்காமல்... "ஹாஹா..." என்று வாயெல்லாம் பல்லாக சிரித்த உமா... "அதான் ஏதோ படிக்கிறேன் படிக்கிறேன்னு சொல்வீங்களே அந்த இங்கிலி பிசாசு தான்..." என்று சொல்ல...

"ஓஹோ... இங்கிலிஷ் ஆஆஆ..." என்று கயல் கேட்க... உமாவும் டிங்கு டிங்குனு மண்டையை ஆட்டினார்... அதை பார்க்க சகிக்காமல் மானசீகமாக தலையில் அடித்து கொண்டாள் கயல்...

"சரி சரி ஆன்...." என்று ஆரம்பிக்கும் போதே... "சித்தி..." என்று அழுத்தமாக சொன்னார் உமா...

"ஹ்ம்ம்... சித்தி சித்தி... உன் கிட்ட ஒன்னு கேட்கணும் சித்தி... அதை நான் கேட்கவா சித்தி..." என்றாள் கயல்...

'என்ன வில்லங்கம் செய்ய போகுதோ...' என்று நினைத்தவர்... "கேளு மா..." என்றார்...

"நாளை மறுநாள் எங்க ஸ்கூலில் பன்னிரண்டாம் வகுப்பு பிள்ளைகளை மட்டும் டூர் கூட்டிட்டு போறாங்க..." என்று சொல்லி நிறுத்தியதும்...

"அதுக்கு..." என்று இழுத்தார் உமா‌...

"அதுக்கு போக ஐநூறு ரூபாய் வேணும்... அப்ப தான் கூட்டிட்டு போகணும்... நீங்க தானே என் சாரலோட பாசக்கார செல்ல அம்மா... அதான் நான் உன் கிட்ட கூட்டி வந்தேன்... ஆனால் பாருங்க சித்தி... உங்க அன்பு மக சாரலு... உங்களிடம் இதை சொல்ல ரொம்ப சங்கட படறா... சரின்னு தான் நான் கேட்கிறேன்... நீ வாடி ன்னு அழைச்சிட்டு வந்தேன்... நீங்க தான் அவளுக்கு காசு கொடுக்கணும்..." என்று உமாதேவியின் முக மாற்றத்தை பார்த்துக் கொண்டே சொல்லி முடித்தாள் கயல்...

'ம்ஹூம்... உமா எந்த கோபத்தையும் இப்ப வெளியே காட்டாதே... இவளுங்க போற போக்கிலே போ... அப்ப தான் எல்லாம் நல்லதா நடக்கும்... இவளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணிட்டா நான் நிம்மதியாக இருப்பேன்..' என்று மனதில் எண்ணி கொண்டார் உமா...

"அதுக்கு என்னமா கயல்... படிக்கும் பிள்ளைங்க... இது தானே கடைசி வருஷம்... நான் காசு கொடுக்கிறேன்... சாரல் டூருக்கு போய்ட்டு வரட்டும்... நீயும் அவளும் பார்த்து சூதானமா போய்ட்டு வாங்க... நான் உள்ளே போய் காசு எடுத்துட்டு வரேன் இருங்க..." என்று புன்னகையுடன் ஏற்றி இறக்கி சொன்ன உமாதேவி உள்ளே சென்றார்...

கயலோ... "பார்த்தியா... நான் கோடு போட்டால்... அவங்க டைல்ஸ் ரோடே போட்டு விடுறாங்க..." என்று சொல்ல... சாரல் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள்...

அதன் பிறகு உமா காசை எடுத்து வந்து சாரலிடம் கொடுத்து விட்டு சென்றார்...

"இங்க பாரு பிரச்சனை வரும் போது வரட்டும்... அதை அப்ப பார்த்துக்கலாம் சரியா... இப்ப நடப்பில் கிடைப்பதை வச்சு... சந்தோஷம் இரு... மனசை போட்டு குழப்பிட்டு இருக்காதே டி... நீ தெம்பாக இருந்தால் தான் கேணை தேவியை எதிர்த்து போராட முடியும்... எப்பவும் முகத்தை சிரிப்போடு வச்சிக்கோ சாரலு... அப்படி உன்னை பார்த்தால் உனக்கே தைரியம் வரும் டி..." என்று நண்பிக்கு ஆறுதல் சொன்னார் கயல்...

அதை கேட்டு சிரித்த திகழொளி... "சரி டி பாட்டி... எனக்கு அறிவுரை சொன்னது எல்லாம் போதும்... வா நம்ம டூர் போக என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்..." என்று உற்சாகத்துடன் சொன்னாள்...

அதன் பிறகு இருவரும் சேர்ந்து கதை பேசிக் கொண்டு இருந்தனர்....

அவர்கள் பள்ளியில் சுற்றுலா செல்லும் நாளும் வர... அந்த இடத்தை எல்லாம் சந்தோஷமாக கண்டு களித்தனர்...

பின்னர்... பன்னிரண்டாம் வகுப்பின் பொது தேர்வு நாட்களும் நெருங்கி வர... கவனத்தை முழுவதுமாக அதில் திருப்பினாள் திகழொளி சாரல்...

அதனால் உமாவை நினைத்து பயம் கொள்வதை பற்றி எல்லாம் மறந்தே போனாள்... உமாவும் அவளை தொந்தரவு செய்யாமல் அவளுக்கு வேண்டியதை எல்லாம் செய்ய ஆரம்பித்தார்...

ஆகையால் நாட்கள் சுமுகமாக தான் நகர்ந்து சென்றது...

சாரலுக்கு செய்முறை தேர்வுகள் எல்லாம் முடிந்து... மாணவ மாணவிகள் தேர்வுக்கு படிக்க பள்ளியில் விடுமுறையும் விட்டனர்... நடுவே நடுவே ஏதாவது சிறப்பு வகுப்புகள் என்றால் மட்டுமே சென்று வருவாள்...

கொஞ்ச நாட்களில் பொது தேர்வுகளும் நடைபெற... அனைத்து பாடங்களையும் நன்கு படித்து... தேர்வுகளையும் சிறப்பாக எழுதி... எல்லா பரிட்சைகளையும் முடித்து விட்டாள் சாரல்...

அதன் பிறகான சில நாட்கள் அழகான விடுமுறையாக கழிந்து சென்றன... அவளுக்கு வரும் இன்னல்களை அறியாமல்... திகழொளி சாரலும் வீடு... கோவில்... கயல் என்று அந்த தினங்களை சுகமுடன் போக்கினாள்...

**************

உங்கள் பொன்னான கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்

👇👇👇👇
 

Kani novels

Member
Vannangal Writer
Messages
45
Reaction score
38
Points
18
நிசப்தா - 9

ஓர் நாள்... திகழொளி சாரலின் வீட்டில் புது ஆட்களின் வந்து இருப்பதால் அதிக பேச்சு சத்தம் கேட்டது... அதனால் சாரல் வெளியே செல்ல பிடிக்காமல்... அவள் அறைக்குள்ளேயே முடங்கி இருந்தாள்...

ஒரு அரை மணி நேரத்தில்... உமாதேவி அவள் அறைக்கு உள்ளே வந்தார்...

"சாரல்..." என்று முகம் முழுக்க புன்னகையுடன் அழைத்தார்...

"சொல்லுங்க..."

"நீ வெளியே வா மா... எதுக்காக இப்படி அறைக்குள்ள அடைஞ்சிட்டு கிடக்க..."

"இல்ல பரவாயில்லை... நான் இங்கேயே இருக்கேன்..."

"அது எப்படி... நம்ம வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தால் அவர்களை உபசரிக்காமல் அப்படியே அனுப்பி விடுவீயா.." என்று உமா கேட்க...

"அப்படி எல்லாம் இல்ல..." என்று சொன்னாள் சாரல்...

"அப்போ என் கூட வெளியே வா... மொதல்ல பெரியவர்களை மதிக்க கற்றுக் கொள்..." என்று அழுத்தமாக சொல்லிய உமா... சாரலை அழைத்துக் கொண்டு வெளியே போனார்...

'இவங்க எதுக்கு இப்படி பண்ணிட்டு இருக்காங்க... இவங்களோட ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் ஏதோ பெருசா இருக்கும் போல ஏன் எனக்கு தோன்றி கொண்டே இருக்கு...' என்று மனதில் நினைத்த படி... அவரோடு போனாள் சாரல்...

அங்கே சென்று பார்த்தால்... ஒரு வயதான பெண்மணியும்... இரண்டு இளம் வயது திருமணம் ஆன பெண்களும்... இரண்டு ஆண்களும் அமர்ந்து இருந்தனர்... அவர்கள் எல்லாம் யாரென்று தெரியவில்லை... இதற்கு முன்னர் சாரல் இவர்களை பார்த்தது கூட கிடையாது... அவர்களையே மனதில் கொஞ்சம் யோசனையுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் அவள்...

அங்கிருந்த பெண்ணில் ஒருவர் எழுந்து வந்து... சாரலின் கையை பற்றிக் கொண்டார்...

"எப்படி இருக்க சாரல்..." என்று புன்னகை தழும்பும் முகத்துடன் கேட்டார்...

அவள் யாரென்று தெரியாத போதிலும்... "ம்ம்... நல்லா இருக்கே..." என்று சொல்லி... வலுக்கட்டாயமாக ஒரு புன்னகையை வரவழைத்து கூறினாள் திகழொளி...

"இப்ப என்ன படிச்சிட்டு இருக்க..." என்று இன்னொரு பெண் கேட்க...

"ம்ம்... இப்ப தான் 12th எக்ஸாம் எழுதி இருக்கேன்..." என்று சொன்னாள்...

"நாங்க தான் உன்னுடைய அண்ணிங்க... என் பேர் வனஜா... இவங்க பேர் சரிதா... இது எங்களுடைய மாமியார் புவனா... இவங்க ரெண்டு பேரும் அவங்க பசங்க... இது என் வீட்டுக்காரர் பிரபு... இவர் சரிதா வீட்டுக்காரர் மதன்..." என்று வனஜா சொல்லிக் கொண்டே போக... அவற்றை எல்லாம் புரியாமல் கேட்டுக் கொண்டு இருந்தாள் சாரல்...

அதனை புரிந்து கொண்ட உமாதேவி... "அம்மாடி சாரல்... இவங்க வேற யாரும் இல்லை... என்னுடைய கூட பிறந்த அக்கா குடும்பம் தான்... ரொம்ப நாளாகவே உன்னை பார்க்கணும் பார்க்கணும்னு தான் கேட்டுட்டு இருந்தாங்க... நான் தான் இப்போ அப்போ என்று இழுத்து அடிச்சிட்டு இருந்தேன்... ஆனால் இப்ப தான் உனக்கு பரிட்சை எல்லாம் முடிந்து போச்சே... வீட்டில நீ சும்மா தானே இருப்ப... அதான் இவங்களை எல்லாம் இன்னைக்கு வர சொன்னேன்... இவங்க கூட எல்லாம் பேசிட்டு இரு... நான் போய் காஃபி கலக்கி எடுத்துட்டு வரேன்... நீ இவங்க கூட எல்லாம் பேசிட்டு இரு..." என்று தேன் ஒழுக சொல்லிய அவள் அம்மா... அங்கு இருந்த சரிதாவுக்கு கண்ணை காட்டி விட்டு... காஃபி போட உள்ளே போனார்...

"வா மா... ஏன் நின்னுட்டே இருக்க..‌ இப்படி வந்து உட்கார்..." என்று சொன்னார் புவனா...

"இல்ல... பரவாயில்லை.... நான்.... நான் இங்கேயே நிற்கிறேன்..." என்று மெல்லமாக சொன்னாள் சாரல்...

"அட... நான் உன் பெரியம்மா சொல்றேன்... கேட்க மாட்டீயா..." என்று சற்று குரல் உயர்த்தி சொன்னார் புவனா... அந்த தொனியில் நீ கேட்டு தான் ஆக வேண்டும் என்ற பொருள் மறைமுகமாக அடங்கி இருந்தது...

சாரலும் வேறு வழி இல்லாமல் அங்கே சென்று அமர்ந்து கொண்டாள்...

"எக்ஸாம் எப்படி எழுதின..." என்று சரிதா கேட்க...

"ம்ம்... நல்லா தான் எழுதி இருக்கேன்..."

"ஓஹ்..."

"அடுத்து என்ன மா பண்ண போற..." என்று கேட்டாள் வனஜா...

"காலேஜில் தான் சேர்ந்து மேற்படிப்பு படிக்கணும்..."

"என்ன படிக்கலாம்னு இருக்க..."

"ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸில் தான் ஏதாவது எடுத்து படிக்கணும்..."

"ஏன் டாக்டர் இன்ஜினியர் இப்படி ஏதாவது எடுத்து படிக்கலாமே..." என்று சரிதா கேட்க...

"இல்ல அதில் எல்லாம் எனக்கு சுத்தமாக இன்ரெஸ்ட் இல்ல... டாக்டர் படிக்கணும் என்றால் எனக்கு நோயாளிகளை எல்லாம் அந்த நிலையில் பார்க்கும் தைரியம் இல்லை... அதனால் அதை படிக்கலை... ஹ்ம்ம்... இன்ஜினியரிங் என்றால் அந்த ஃபீல்ட் எனக்கு பிடிக்கலை... அதனால் படிக்கலை... சோ... நான் சூஸ் பண்ணி இருப்பது இது தான்... ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் படித்தால் ஒன்னும் கேவலம் கிடையாதே..." என்று அழுத்தமாக சொன்னாள் திகழொளி சாரல்...

"இந்த காதலை பற்றி என்ன மா நினைக்கிற..." என்று கேட்டாள் வனஜா...

"அதை பற்றி எல்லாம் நினைக்க ஒன்னும் இல்லை... அது பற்றி நினைக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை... இப்போ அதற்குரிய வயசும் எனக்கு இல்லை... அதுக்கான தேவையும் இல்லை... இப்போ எனக்கு என்னுடைய படிப்பு... அது மட்டும் எனக்கு போதும்.... வேற எதுவும் வேண்டாம்...." என்று உறுதியாக சொன்னாள் சாரல்...

"நல்ல பொண்ணு தான்..." என்று சொல்லி சிரித்து... "ஆமா... நீ கல்யாணத்தை பற்றி என்ன நினைக்கிற... அது பற்றி ஏதாவது சொல்லேன்..." என்று பீடிகையுடன் கேட்டாள் சரிதா...

அதே சமயம் காஃபி போட்டு... வெளியே எடுத்து வந்தார் உமாதேவி...

சாரலை பார்த்துக் கொண்டே... "ஆமா... அப்படி என்ன முக்கியமான விஷயம் பேசிட்டு இருக்கீங்க..." என்று சொல்லிய படியே... எல்லாருக்கும் காஃபியை கொடுத்தார்...

"அதுவா அத்தை... சாரலை கிட்ட சில பொதுவான விஷயங்களை பேசிட்டு இருக்கோம்..." என்று சொன்னாள் சரிதா...

"ஓஹோ... என் சாரல் ரொம்ப நல்ல பொண்ணு... வாய் திறந்து பேசவே மாட்டா... ரொம்ப சாது... படிப்பில் படு கெட்டி... என்ன கேள்வி கேட்டாலும் டான் டான்னு பதில் சொல்லி விடுவால்... ஹ்ம்ம்... என்ன கேட்கணும்.... எல்லாத்தையும் கேளுங்க.... அவ சொல்லுவா..." என்று இரட்டை அர்த்தத்தில் சொல்லிக் கொண்டு இருந்தார் உமா...

"சொல்லு மா‌ சாரல்... நாங்க கேட்ட கேள்விக்கு நீ பதிலே சொல்லல..." என்றாள் வனஜா...

"ஆமா நீங்க என்ன கேட்டீங்க..." என்று அவரிடமே கேட்டு வைத்தாள் சாரல்...

"கல்யாணத்தை பற்றி என்னை நினைச்சிட்டு இருக்க..."

"அதை பற்றி நினைக்க... எனக்கு இன்னும் ஏழு வருஷம் டைம் இருக்கு... அதை பற்றி எல்லாம் இப்ப யோசிக்க நேரம் இல்லை... அதனால் அந்த விஷயத்தை பொறுமையாக யோசித்து கொள்ளலாம்..."

அதை வரை அமைதியாக பார்த்து... எல்லாத்தையும் கேட்டுக் கொண்டு இருந்த புவனா... "என்ன நீ இப்படி பேசிட்டு இருக்க... ஒரு பொட்ட பொண்ணு இப்படி எல்லாமா பேசிட்டு இருப்பாங்க... ஒரு பொண்ணுக்கு கல்யாணம் என்பது ரொம்ப முக்கியம்னு உனக்கு தெரியாதா..." என்று கோபமாக சொன்னார்...

"அதே போல உங்களுக்கு ஒரு சின்ன பொண்ணு கிட்ட என்ன பேசணும் என்று தெரியாதா..." என்று சாதரணமாக மறு கேள்வி கேட்டாள் திகழொளி சாரல்...

உமாவை பார்த்த புவனா... "என்ன உமா... உன் பொண்ணை இப்படியா மட்டு மரியாதை இல்லாமலா வளர்த்து வைப்ப... பெரியவங்க கிட்ட அடக்கமா நடந்துக் கொள்ளணும் என்று எல்லாம் நீ சொல்லித் தரவே இல்லையா... என்ன பொண்ணை வளர்த்து வைச்சி இருக்கீயோ... இதெல்லாம் வெளியே கேட்டால் நமக்கு தான் வெட்க கேடு... நீ இதை எல்லாம் கொஞ்சம் அடக்கி வைக்க கூடாதா உமா...." என்று கேட்க...

"ஹ்ம்ம்... அதை ஏன் அக்கா கேட்குறீங்க... இந்த பொண்ணை நான் வளர்த்து இருந்தால் அது எல்லாம் இருந்து இருக்கும்... ஆனால்... அதுக்கு தான் குடுப்பினை இல்லாம போயிடுச்சே... இவ வளர்த்தது எல்லாம் அவங்க பாட்டி தான்... அந்த கிழவி ஏகத்துக்கும் செல்லம் கொடுத்து வளர்த்து... இப்படி கெடுத்து வச்சி இருக்கு.... என்னை கூட இங்க எந்த ஒரு மதிப்போ மரியாதையோ கிடையாது அக்கா... நானே ஒவ்வொரு நாளும் இவளுக்கு அடங்கி தான் போயிட்டு இருக்கேன்..." என்று பாவமாக சொன்னார் உமாதேவி...

இதை கேட்டுக் கொண்டு இருந்த சாரலோ... தன்னை பற்றி பேசும் போது அமைதி காத்தவள்... அவள் பாட்டியை பற்றிய பேச்சு வந்ததும் அவள் பொறுமை முழுவதும் காற்றில் பறந்து விட்டது...

"இதை சொல்ல உனக்கு வெட்கமாக இல்லை உமா..." என்று புவனா சொல்லிக் கொண்டு இருக்கும் போதே...

"இங்கே என் பாட்டி பற்றி பேச உங்க யாருக்குமே எந்த ஒரு உரிமையும் கிடையாது... அப்படி அவங்களை பற்றி தேவை இல்லாமல் பேசிட்டு இருந்தால்... அப்போ தான் எனக்குள் இருக்கும் மட்டு மரியாதை எல்லாம் காற்றில் பறந்து.,. உங்க கிட்ட முழுமையாக பேச்சு கொடுக்கும்... என்னை எது வேணாலும் சொல்லுங்க... அதை நான் தலையெழுத்து என்று தாங்கிப்பேன்... ஆனால் என் ஆயாவை பற்றி பேச உங்க யாருக்கும் தகுதி கிடையாது..." என்று சினத்துடன் சீறினாள் சாரல்...

தன்னை ஓரளவு கட்டுப் படுத்திக் கொண்ட உமா... "அய்யோ சாரலு... எதுக்கு மா இம்புட்டு கோவம் உனக்கு..." என்று சொல்லி புவனாவை பார்க்க...

அதை புரிந்து கொண்ட புவனாவும் சாரலை பார்த்து சிரித்துக் கொண்டே... "அம்மாடி சாரல்... நாங்க உன் கிட்ட விளையாட்டுக்கு தான் பேசினோம்.... நீ எதுக்கு இப்படி ஆத்திரப் பட்டுட்டு இருக்க... உங்க அப்பத்தா மேலே ரொம்ப பாசம் வைச்சி இருக்கேன்னு எங்களுக்கு எல்லாம் தெரியாதா... சும்மா உன்னை சீண்டி பார்க்க தான் அப்படி பேசிட்டு இருந்தோம்... வேற ஒன்னும் இல்ல மா..." என்று சாந்தமாக சொன்னார்...

ஆனால்... சாரலோ அதனை நம்பாத பார்வையை பார்த்துக் கொண்டு இருந்தாள்...

"ம்ம்... நாங்க பேசியதை எல்லாம் தப்பாக இருந்தால் எங்களை மன்னித்து விடு சாரல்..." என்று மெல்லிய குரலில் சொன்னார் புவனா...

"அய்யோ அக்கா நீ என்ன சின்ன பொண்ணு கிட்ட போய் மன்னிப்பு எல்லாம் கேட்டுட்டு இருக்க... சாரல் என்ன இது எல்லாம்..." என்று புவானாவிடம் ஆரம்பித்து... சாரலிடம் முடித்தார் உமாதேவி...

சாரல் கண்களை மூடி திறந்து... "நீங்க அவ்வளவு பெரிய வார்த்தை எல்லாம் என் கிட்ட கேட்க வேண்டாம்... அதோ அங்க என் அப்பத்தா ஃபோட்டோ இருக்கு... அங்கே நின்று எதுவாக இருந்தாலும் கேளுங்க..." என்று அதே போல மெல்லிய குரலில் சொன்னாள்...

அப்போது கூட அவள் மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டாம் என்று கூறவில்லையே... நீங்கள் மன்னிப்பு கேளுங்கள்.. அது என்னிடம் இல்லை ஆனால்... என் பாட்டியின் ஃபோட்டோ முன்பு கட்டாயம் கேட்டு தான் ஆக வேண்டும் என்று சொல்லாமல் சொன்னாள் திகழொளி சாரல்...

அதனை கண்கள் இடுங்க அனைவரும் பார்த்தார்கள்... உமாவோ தன் கோபத்தை எல்லாம் உள்ளுக்குள் அடக்கி... பல்லை கடித்து கொண்டு பார்த்தார்...

அனைவரையும் பார்த்து... "என்னாச்சு..." என்று எதுவும் தெரியாதது போல் கேட்டாள் சாரல்...

அதை யாரும் ஒன்றும் சொல்ல முடியாமல் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்... இதற்கு உமாவால் கூட வாயை திறக்க முடியவில்லை.... அவர் வாய் திறந்தால் தான் காரியம் கெட்டு விடுமே என்று எண்ணத்தில் தான் வாயை மூடிக் கொண்டு மௌனம் காத்தார்...

"நான் உன் பாட்டி ஃபோட்டோ முன்னாடி மன்னிப்பு கேட்கிறேன்..." என்று சொல்லி அதை செய்தும் விட்டார் புவனா...

அதை கண்ட திகழொளி சாரலின் இதழ்களிலோ வெற்றி கலந்த விரக்தி புன்னகை வந்து போனது... அவள் மனமோ ஏனோ என்றும் இல்லாமல் இன்று மிகவும் பயந்து போய்... உள்ளுக்குள் நிம்மதி அற்று படபடத்து கொண்டு இருந்தது...

*********

உங்கள் பொன்னான கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே 😍

👇👇👇👇
 

Kani novels

Member
Vannangal Writer
Messages
45
Reaction score
38
Points
18
நிசப்தா - 10

அதன் பிறகு... சாரல் அங்கு எதுவுமே பேசவில்லை... அவள் அறைக்கு சென்று கதவை அடைத்துக் கொண்டாள்... அவளை யாரும் தொந்தரவு கூட செய்யவில்லை...

உமாவின் அக்கா குடும்பம் அன்று இரவு அங்கேயே தான் தங்கி கொண்டார்கள்...

அடுத்த நாள் காலை... சாரல் அவள் அறையில் எதையோ ஒரு பொது அறிவு புத்தகத்தை எடுத்துப் படித்துக் கொண்டு இருந்தாள்...

அவள் கையில் புத்தகம் இருந்தாலும்... அதில் இருப்பது அவள் மூளைக்குள் ஏறவில்லை...

அவள் மனமோ... 'ச்சே... இந்த கயல் புள்ள ஊருக்கு போனதால் எனக்கு என்ன இவ்வளவு வெறுமையாக இருக்கு... என் கஷ்டத்தை பகிர்ந்து கொள்ள அவள் மட்டும் தான் இருந்தா... ஆனால் இப்போ அவளும் இல்ல... நான் அவ என் கஷ்டத்தை சொல்லாமல் போனாலும்... அவளே ஏதாவது ஒன்று பேசி... சிரித்து... எனக்கு ஆறுதலும் தைரியமும் சொல்லிட்டு இருப்பா... இப்ப அது எல்லாம் இல்லாமல் ஒரு மாதிரி இருக்கு... இந்த பாரத்தை என்னால தாங்கிக் கொள்ளவே முடியலை... இது வீடு என்ற உணர்வு கொடுக்க மாட்டேங்குது... அப்படியே ஒரு மாதிரி மூச்சு முட்டுற போல இருக்கு... ஹ்ம்ம்... இந்த வாழ்கையை வாழ வேண்டுமா அப்படின்னு தோணிட்டே இருக்கு...' என்று வெறுமையாக நினைத்துக் கொண்டு இருந்தாள் திகழொளி சாரல்...

அப்போது....

"சாரல்..."

"சாரல்....."

"சாரல்... ஏய் சாரல் உன்னை எவ்வளவு நேரமா தான் கூப்பிட்டு இருப்பது... நான் உன்னை கூப்பிடுவது உன் காதில் விழுதா இல்லையா.... சாரல் சாரல்..." என்று வெளியே இருந்து கத்திக் கொண்டு இருந்தார் உமாதேவி...

"ஹான்... இதோ இப்ப வரேன்..." என்று கத்தினாள் சாரல்...

'இப்ப என்ன பேச போறாங்களோ... அதனால என்ன பிரச்சினை வரப் போகுதோ தெரியலையே...' என்று மனதில் நினைத்து கொண்டே வெளியே போனாள் அவள்...

ஹாலில் சாரலின் அப்பா செந்தில்நாதன்.. அம்மா உமாதேவி.. அவரின் புவனா மற்றும் அவரின் குடும்பம் என்று அனைவரும் அங்கே குழுமி இருந்தனர்...

அவளை பார்த்து... "சாரல்..." என்று செந்தில் அழைக்க...

சாரல் மனதில் ஏதோ ஒரு நெருடல் இருந்தாலும்... அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்... "சொல்லுங்க பா..." என்றாள்...

"உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி பேசணும்..." என்று தயங்கிக் கொண்டே சொன்னார் செந்தில்...

அவரின் தீவிர முக பாவனைகளை பார்த்ததும் இவள் மனதிற்குள் பயப் பந்து உருண்டோடியது...

"எ... என்ன சொல்லுங்க..."

"அது வந்து உன்னுடைய... உன்னுடைய..." என்று கூறி... அதற்கு மேல் சொல்ல தயங்கிய செந்திலின் கைகளை பிடித்து அழுத்தம் கொடுத்து... கண்களை மூடி திறந்தார் உமாதேவி..

"சாரல் நாங்க ஒரு நல்ல காரியத்தை பற்றி தான் பேச போறோம்... அது... அது... என்னன்னா உன்னோட கல்யாண விஷயத்தை பற்றி பேச தான்... அதுக்கு தான்... உன் கிட்ட இது பற்றி சொல்ல தான்... உன்னை இங்க அழைத்து இருக்கோம் சாரல்..." என்று ஒருவழியாக சொல்லி முடித்தார் செந்தில்நாதன்...

"ஆமா சாரல்... உனக்கு ஏற்ற நம்ம குடும்பத்துக்கு ஏற்ற வரன் ஒன்று அமைந்து இருக்கு... நீ கல்யாணம் பண்ணிக் கொண்டால் நல்லா வசதியான வாழ்க்கை வாழலாம்..." என்று அவசர அவசரமாக கூறினார் உமாதேவி...

இதை எல்லாம் கேட்ட சாரலின் மனமோ உள்ளுக்குள் துடித்து கொண்டு இருந்தது... இதை அவளால் கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை... பதினேழு வயதில் இருக்கும் பெண்ணால் எப்படி திருமண வாழ்க்கை ஏற்றுக் கொள்ள முடியும்... அவள் மனதாலும் உடலாலும் தாங்கவே முடியாது... அவள் மனதின் உள்ளே இவ்வளவு கலக்கம் எல்லாம் என்று இருந்தாலும்... அதை அவள் சிறிதும் வெளியே காண்பித்துக் கொள்ளாமல்... அவள் தந்தையை நேருக்கு நேராக பார்த்த படி நின்றாள் திகழொளி சாரல்...

"என்னால கல்யாணம் எல்லாம் பண்ணிக்க முடியாது அப்பா... அதனால... இதோடு இந்த பேச்சை விட்டு விடுங்க... நீங்க பேசியதற்கு பதில் கொடுத்து விட்டேன்... அதனால்... நான் இப்ப இங்க இருந்து போகலாமா அப்பா..." என்று உறுதியான குரலில் சொன்னாள் சாரல்...

"ஏய்... என்னடி பேச்சு பேசிட்டு இருக்க... என்ன உன் இஷ்டத்துக்கு பேசிட்டு இருப்பீயா... முளைச்சி மூணு இலை விடல அதுக்குள்ள உனக்கு இவ்வளவு ஏத்தமா... ஆனாலும் உனக்கு இவ்வளவு ஆங்காரம் வேணாம் டி... ஒழுங்கா உன் அப்பா சொல்லும் பேச்சை கேட்கும் வழியை பாரு... இப்படி கண்ட மேனிக்கு பேசிட்டு இருந்த அவ்வளவு தான்... உன் அப்பா வார்த்தைக்கு மரியாதை கொடு...." என்று சீறினார் உமா...

சாரலோ அவரை ஒரு அலட்சிய பார்வை பார்த்தவள்... "நான் உங்க கிட்ட இதை பற்றி பேசவே இல்லயே... என் அப்பா கிட்ட தானே நான் பேசிட்டு இருந்தேன்... உங்க கிட்ட பேசியதாக எனக்கு ஞாபகம் கூட இல்லயே... எனக்கு யார் கிட்ட எப்படி பேசணும் என்ற அறிவு எனக்கு இருக்கு... அதே போல எனக்கு பேசவும் தெரியும்... நான் ஒன்னும் ஊமை கிடையாது... உங்க கிட்ட அதிகம் பேசாமல் இருந்தது பேச தெரியாமல் எல்லாம் இல்ல... எதுவும் பேச கூடாது என்று மட்டும் தான் அமைதியாக இருந்தேன்..." என்று அவள் அம்மாவிடம் அழுத்தம் கொடுத்து சொல்ல... அவரே ஒரு நிமிடம் வாயடைத்து போய் தான் நின்றார்...

ஆனால்... மறுகணமே தன்னை சுதாரித்துக் கொண்டு... "என்ன சாரல் பேச்சு எல்லாம் பெருசா இருக்கு..." என்று குரல் உயர்த்தி சொன்னார் உமா...

அவரோடு சேர்ந்து கொண்டு புவனாவும்... "உன்னை பெத்த அம்மா அப்பாவுக்கே மதிப்பு கொடுக்க மாட்டீயா... அவங்க சொல்ற பேச்சை காது கொடுத்து கேட்க மாட்டீயா... என்னமோ பெரிய பதிவு இருக்க போல தான் ஆட்டம் போட்டுட்டு இருக்க... இதுக்கே இந்த இலட்சணம் என்றால் இன்னும் உன்னை பெரிய படிப்பு எல்லாம் படிக்க வைத்தால்... உன் கையும் காலும் அடங்கி ஒதுங்கி இருக்குமோ‌... ம்ஹூம்... நாங்களே உன் காலுக்கு கனமான சங்கிலியை மாட்டி விட்ட மாதிரி இருக்கும்..." என்று சாரலை பார்த்து சொன்னவர்...

பின்னர் செந்தில் இருக்கும் பக்கமாக திரும்பி... "இங்க பாருங்க தம்பி உங்க பொண்ணு... யார் பேச்சையும் கேட்க மாட்டேங்குது... இப்படியே விட்டால் இது உருப்படாது... வாழ்க்கையில் கெட்டு சீரழிந்து தான் போகும்... அதனால் சட்டு புட்டுன்னு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சு உங்க கடமைகளை எந்த ஒரு கெட்ட பேரும் இல்லாமல் பண்ணி வைங்க... இதை மட்டும் தான் என்னால சொல்ல முடியும்... ம்ம் ... கண்ணு போன பின்னாடி சூர்ய நமஸ்காரம் பண்ணால் அதுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை... காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்று பெரியவங்க சும்மாவா சொன்னாங்க.... எதுவாக இருந்தாலும் பார்த்து சீக்கிரமா பண்ணுங்க... நம்ம வீட்டு மாடு தொழுவத்தில் இருந்தால் தான் நமக்கு நல்லது... அது மட்டும் ஊர் மேய போச்சு... நம்ம வீட்டு முச்சந்தி தான் சிரிப்பா சிரிக்கும்... அந்த நிலையில் நீங்க இருக்க கூடாது அப்படின்னு தான் நான் இவ்வளவு சொல்லிட்டு இருக்கேன்... இதை எல்லாம் கேட்பதும் கேட்காமல் போவதும் உங்க விருப்பம் ங்க தம்பி... நல்லது பண்றதுக்கு ஆலோசனை மட்டும் தானே என்னால சொல்ல முடியும்... அதை செயல் படுத்த என்னால முடியாது இல்லையா... இனி உங்க முடிவு தான் தம்பி..." என்று ஏற்றி இறக்கி அனைத்தையும் சொல்லி விட்டு... அமைதியாக அமர்ந்து இருந்தார் புவனா...

அவற்றை எல்லாம் கைகளை கட்டிக் கொண்டு கேட்டிருந்தாள் திகழொளி சாரல்... அதே சமயம் அவள் தந்தையின் முகத்தையும் கூர்ந்து கவனித்து கொண்டு இருந்தாள்... அதை கண்டு மனதினுள் சோர்ந்து போனாள்...

"நீங்க சொல்வது எனக்கு சரி என்று தான் படுது அண்ணி..." என்று யோசனையுடன் கூறினார் செந்தில்நாதன்...

"அப்படி சொல்லுங்க... அவங்களை நாளை மறுநாளே பொண்ணு பார்க்க வீட்டுக்கு வர சொல்லலாம்... இவ கிட்ட என்ன பிடித்து இருக்கா இல்லையா என்று எல்லாம் கேட்பது... நான் பார்க்கும் மாப்பிள்ளைக்கு கழுத்து நீட்டி தான் ஆகணும்... வேறு வழி எதுவும் கிடையாது..." என்று கோபத்துடன் பேசினார் உமாதேவி...

'அப்போ இதுக்காக தான்... இவங்க இத்தனை நாள் நல்லவங்க மாதிரி நடிச்சிட்டு இருந்தாங்களா... இந்த சீப்பான விஷயத்துக்காக எதுக்கு என் கிட்ட பாசமாக இருப்பது போல நடிக்கணும்... அப்போ இதுவரை செய்தது எல்லாம் வெறும் நடிப்பு தானா... இது அவங்களுக்கு தப்புன்னு தோன்ற வில்லையா... அவங்களுக்கு என் மேல பொண்ணு என்ற பாசம் சுத்தமாக இல்லையா... ஹ்ம்ம்... நிஜமாகவே இவங்க எனக்கு அம்மா தானா... நான் என்ன தப்பு பண்ணேன்... எதுக்காக இப்படி எல்லாம் கேவலமாக பண்ணிட்டு இருக்காங்க...' என்று மனதிற்குள் விரக்தியாக தனக்கு தானே கேட்டுக் கொண்டு இருந்தாள் சாரல்...

"உங்க அம்மா சொல்றது சரி தான் சாரல்... எல்லாம் உன்னுடைய நல்லதுக்கு மட்டும் தான்..." என்று செந்தில் சொல்ல...

அவளுடைய கண்ணீரை அடக்கிக் கொண்டு... "எனக்கு தெரியாம தான் கேட்கிறேன்... எது ப்பா சரி... எது ப்பா எனக்கு நல்லது... ஹான்... நீ சொல்லிட்டு இருப்பதில் எது தான் சரி அப்பா... எது தான் நல்லது... எனக்கு சத்தியமா தெரியலை... உங்க யாருக்கும் மனசாட்சி என்ற ஒன்று இல்லவே இல்லயா... எதுக்கு ப்பா எல்லோரும் இப்படி பண்ணிட்டு இருக்கீங்க..." என்று குரல் தழு தழு சொன்னாள் சாரல்...

"ஒழுங்கு மரியாதையாக நாங்க சொல்வதை மட்டும் கேளு சாரல்... தேவை இல்லாமல் பேசிட்டு இருக்காத... நாங்க சொல்றவனை தான் நீ கட்டிக்கிட்டு ஆகணும்... அதை விட்டுட்டு எங்க கிட்ட கோக்கு மாக்கு பண்ண நினைச்சா என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது..." என்று உமா சினத்துடன் சீற...

சாரலோ சீரான மூச்சை இழுத்து விட்டு... "நீங்க பேசுவதை எல்லாம் பேசி முடிச்சாச்சு தானே... இப்ப நான் பேசுவதை கேட்டுக்கோங்க... எனக்கு கல்யாணம் பண்ணிக் கொள்வதில் துளியும் விருப்பம் இல்லை... கண்டிப்பாக என்னை மீறி இந்த கல்யாணம் நடக்காது தானே... ஹ்ம்ம்... உங்களால் அதை நடத்த முடியாது... நடத்தவும் நான் விட மாட்டேன்... உங்களால் என்ன பண்ண முடியுமோ அதை நீங்க பண்ணிக்கோங்க..." என்று அழுத்தம் நிறைய குரலில்... உறுதியாக சொல்லி விட்டு... அங்கிருந்து அகன்று... அவள் அறைக்கு சென்று தாழிட்டு கொண்டாள் திகழொளி சாரல்...

அதை எல்லாம் கொஞ்சம் பதட்டத்துடன் தான் அனைவரும் பார்த்து கொண்டு இருந்தனர்...

உமாவோ... "கொஞ்சம் விட்டு புடிச்சி பேசுவோம்... கண்டிப்பாக கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுவா ங்க..." என்று கணவனிடம் சொல்லி...

அவர் அக்காவிடம்... "அக்கா இந்த மூணு நாளைக்கு நீங்க எல்லாம் இங்கேயே இருங்க... என்னால தனியாக எல்லாம் சமாளிக்க முடியாது... அதனால் எனக்கு துணையாக இருங்க... வனஜா சரிதா... நீங்க ரெண்டு பக்குவமாக ஏதாவது பேசி... அவளை சம்மதிக்க வைக்க பாருங்க... ஹ்ம்ம்... வேலை நிறைய இருக்கு... நான் போய் அது எல்லாம் பார்க்கிறேன்...." என்று சொல்லி விட்டு... சமையல் அறைக்குள் சென்று விட்டார் உமாதேவி...

அதன் பிறகு அனைவரும் அவரவர் வேலைகளை பார்க்க சென்று விட்டனர்...

********
உங்கள் பொன்னான கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே 😍

👇👇👇👇
 
Last edited:
Status
Not open for further replies.
Top Bottom