அலைபேசியை காதில் வைத்திருந்தவனை வெகுநேரம் காத்திருக்க வைக்காமல் ஆர்வமாய் கேட்டார் கங்கா.
“குட்டிமா காஃபி பிரேக்காடா?”
வகுப்பறையில் உட்கார்ந்திருப்பார் போலும், பிள்ளைகளின் கூச்சல் கேட்டது.
“நான் விக்கி. அனி என்னப் பத்தி உங்கக்கிட்ட சொல்லிருப்பானு நெனைக்கிறேன். விக்டரி டெக் சொலுஷனோட சிஇஓ”
ஆண்குரல் கேட்டதும் விரைத்தது உடல்.
“ஹே! எல்லாம் அமைதியா இருங்க!”
அதட்டி பிள்ளைகளைப் பணிய வைத்தவர் பதட்டமாக விசாரித்தார்.
“என்னாச்சு எம்பொண்ணுக்கு?”
“அவளுக்கு ஒடம்புக்கெல்லாம் ஒன்னுமில்ல. மனசுக்கு தான் பாரமா ஃபீல் பண்றா, அங்க நான் இருக்கதால.”
விக்கி அதட்டாமலே அமைதியாகிப்போனார் கங்கா.
அலைபேசியை அனன்யாவிடம் நீட்ட, “அம்மா என்ன சொன்னாங்க?” என்று ஆர்வமாகக் கேட்டாள்.
“ஒன்னும் சொல்லல. கட் பண்ணிட்டாங்க.”
“காலையா? நம்ம காதலையா?”
“அத வீட்டுக்குப் போனதும் நீதான் சொல்லனும்”
“நான் இப்பவே வீட்டுக்குப் போறேன் விபூ. நிச்சயம் அம்மா பெர்மிஷன் போட்டு வீட்டுக்கு வந்திருப்பாங்க.”
“எதுல போறதா உத்தேசம்?”
“நடந்து தான்”
“என் கார்ல கொண்டுபோய் விடுறனே?”
“அப்ப தெரு முக்குலயே எறங்கிருவேன். பரவாயில்லையா?”
“டன்”
அனன்யா நினைத்ததுபோலவே தலைவலியென விடுப்பு எடுத்து வீட்டிற்கு வந்திருந்தார் கங்கா. ஆனால், தன் மகள் தெருமுனையில் காரில் வந்திறங்கியதை எதிர்புறமாக வந்தவர் கவனித்துவிட்டார்.
வீட்டிற்கு வந்ததும் பதட்டமாக, “அம்மா” என்றவளை,
“தலைக்கு குளிச்சிட்டு வா.” என்றார்.
அவளும் காரணம் கேட்காமல் குளிக்கச்சென்றாள். முடிகளில் நீர் சொட்டச் சொட்ட வந்தவளை பூஜையறையில் சாமிப்படத்திற்கு முன்புபோய் உட்கார வைத்தவர் தானும் அருகிலமர்ந்து மனதை சுத்தப்படுத்தும் பீஜ மந்திரத்தை ஆயிரத்தெட்டு முறை சொல்ல வைத்தார்.
அவள் அத்தனை முறை சொல்லி முடித்ததும் எழுந்து படுக்கையில் சென்று விழுந்து விட்டார். அவளுக்கு அவரிடம் என்ன கேட்பதென்றே தெரியவில்லை. இரவு உணவு செய்யவும் அவர் எழவில்லை. தான் காலையில் கட்டியப் புடவையோடே கழுத்திலிருந்த அடையாள அட்டையைக் கூட கழற்றாமல் கிடந்தவரை இவ்வளவு துன்பப்படுத்துவது அவளுக்கே வேதனையாகத்தான் இருந்தது. தண்டனையாக தானும் வயிற்றை காயப்போட்டாள்.
மறுநாள் காலையிலோ சமையல் வேலை துரிதமாய் நடந்தது. மகளுக்குப் பிடித்த காரக்குழம்பும், பீன்ஸ் பொரியலும் செய்தார் கங்கா.
எப்போதும் போல், “குட்டிமா லேட்டாகிருச்சிடா. எந்திரிடா” என்று எழுப்புபவரை கண்களை கசக்கி ஆச்சரியமாகப் பார்த்தாள் மகள்.
அவர் நேற்று தன்னை பேசாமல் தண்டித்ததில் அழுகையே வந்துவிட்டது.
“ம்மா!” என்று அவரின் இடையைக் கட்டிக்கொண்டாள்.
“ச்சீ! இதுக்கெல்லாமா அழுவாங்க? நானே எம்பொண்ணு பெரிய மனுஷியாகிட்டாளேன்னு சந்தோசத்துல இருக்கேன். வேலைக்கு நேரமாச்சுப் பாரு. சீக்கிரம் கெளம்பு.” என்று அவளின் முதுகில் தட்டினார்.
அவர் இயல்பாக இருப்பதுபோல் தன்னைக் காட்டிக்கொண்டது மனதோரத்தில் உறுத்தியது மகளுக்கு.
எப்போதும் போலவே அவளுக்கு காலையுணவை ஊட்டிவிட்டு தன் ஸ்கூட்டியிலேயே நிறுவன வாயிலில் அவர் இறக்கிவிட்டுச் சென்றதாக அனன்யா கூற, விக்கியுமே புதிராகத் தான் பார்த்தான்.
பெரிய நாடகமொன்றை எதிர்பார்த்தவனுக்கு கங்கா குறைந்தபட்சம் கோபமாகக்கூட கத்தவில்லை என்பது சரியாகப் படவில்லை.
உடனே மகேஷை அழைத்து கங்கா வேலைப் பார்க்கும் பள்ளிக்கு அவனையனுப்பி அவரின் வருகையை உறுதிபடுத்தச் சொன்னான்.
அவனும் விதியே என்று விசாரித்து கங்கா வழக்கம்போல் பாடம் எடுத்துக் கொண்டிப்பதாகத் தகவல் தர, குழப்பமாக இருந்தது காதலர் இருவருக்கும்.
இவ்விடத்தில் மகேஷ் தகவலை வேணிக்கும் சேர்த்தே பரிமாற்றினான். உடனே, கங்காவை மிரட்டி காரியம் சாதிக்கத் திட்டம்போட்டது அவரின் மூளை. மகேஷிடமே அனன்யாவின் வீட்டு முகவரியைப் பெற்று, ருத்ரதாண்டவத்திற்கு தயாரானார்.
மறுநாள் கங்காவும், வேணியும் ஒருவரையொருவர் எதிர்கொண்டது இரு துருவங்கள் மோதிக்கொள்வது போல் தான் இருந்தது.
தனது வீட்டிற்குள் நுழைந்து தன்னையே நாட்டாமை பண்ணும் வேணியை எரிச்சலாகப் பார்த்தார் கங்கா.
“இங்கப் பாருங்க! நான் என் அப்பாப் பேரச் சொன்னதுலயிருந்தே நாங்க எவ்ளோ பெரிய ஆளுங்கன்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்கும். என் பையன் செல்லமா வளந்தவன். அவன் எது கேட்டாலும் எங்களால தட்ட முடியாது. இப்படித்தான் சின்ன வயசுல தெருவுல கெடந்த ஒரு நாய தூக்கிட்டு வந்து நம்ம இத வளக்கனும்மானு சொன்னான். நானும் ஒன்னும் சொல்லல. அதுக்கூடவே ஒரு பொமரேனியன வாங்கிட்டு வந்து தான் விட்டேன். தானா தெருநாய்கிட்ட இருந்து ஒதுங்கி அதுக்கிட்ட ஒட்டிக்கிட்டான். இப்பவும் உங்கப்பொண்ணு விசயத்துல அவன நான் தப்பு சொல்லவே மாட்டேன். அவன் வயசு அப்படி. தங்கத்துக்கும் ஜிகினா பேப்பருக்கும் உள்ள வித்தியாசத்த காமிச்சிட்டா தானா கைக்கழுவிடப் போறான்.” என்றார் தோரணையாக.
அனன்யாவோ இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் பயங்கரமான வலியுறுத்தல்படி தனது வார வேலைநேரம் எழுபதுமணி நேரமாக இருந்திருக்கக்கூடாதா என்று நொந்துகொண்டாள். அவளுக்கு விருப்பமான ஞாயிற்றையே துறக்கும் அளவுக்கு வேணியின் பேச்சு கடுப்பைக் கிளப்பியது. உடன் அவர் வாயசைவில் கூடுதல் கவனத்தைப் பெற்ற அந்த அடர்சிவப்பு நிற உதட்டுச் சாயத்தையும் வெறுத்தாள்.
கங்காவின் கண்களோ வேணியின் கையில்லாத ரவிக்கை மீது பட்டு பட்டுத் திரும்பியது. ‘குடும்பப் பொண்ணா இவ?’ என உள்ளுக்குள் குமுறியவர் வெளியில் நிமிர்வுடன் பேசினார்.
“நீங்க ஒரு விசயத்த நல்லாப் புரிஞ்சிக்கனும். எம்பொண்ணு ஏதோ ரோட்டுல கெடக்கற நாயும் இல்ல. நான் பொமரேனியன் வச்சிருக்கற பொம்பளையப் பாத்து பயப்படுறவளும் இல்ல. மொதல்ல என் பொண்ணும் சரி; உங்கப் புள்ளையும் சரி; இருபத்தியோரு வயசு பூர்த்தியானவங்க. சட்டம் தெரியுந்தான உங்களுக்கு? அவங்க முடிவுல நான், நீங்க, யாருமே தலையிட முடியாது. சும்மா வில்லி மாதிரி பேசிட்டுத் திரியாம அவங்களுக்கு ஆதரவா இருக்கற வழியப் பாருங்க.” என்றார்.
தன் அன்னையின் நச் பதிலில் அவரை ஓடிச்சென்று கட்டிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது அனன்யாவுக்கு. முயன்று தன்னை கட்டுப்படுத்தினாள்.
கங்காவுக்கும் அவர்கள் காதலில் சம்மதம் இருக்காது என்று எதிர்பார்த்து வந்த வேணிக்கோ பெரிய அடியாக இருந்தது அவரின் இந்த காட்டமான பதில். தானும் சளைத்தவரில்லை என்பதால் பதிலுக்குக் கத்தினார்.
“பெரிய எடம்னதும் சட்டம் கிட்டம்னு பூச்சாண்டிக் காட்டுறியா? நீங்கலாம் பட்டா தான் திருந்துவீங்க. என் மகன் சீக்கிரமே உன் மகள தூக்கியெறியுறானா இல்லையா பாரு.”
“எவ்வளவு கெட்ட எண்ணம் உங்களுக்கு? ஒருக்கால் நீங்க சொல்றபடியே நடந்தாலும் எம்பொண்ணு உங்க மகனுக்காக தற்கொலையெல்லாம் செஞ்சுக்க மாட்டா. ஏன்னா என் வளர்ப்பு அப்படி.”
வேணி கங்காவை நீர்க்குமிழியாய் நினைத்தால் அவர் பேப்பர் வெயிட்டாய் கனத்தார். தன் கணிப்பு பொய்யானதில் பதிலுக்கு இரண்டு கத்து கத்திவிட்டு விரக்தியாக வீடு திரும்பினார்.
அவர் சென்றதும் கங்கா மனம் பொறுக்காமல் தன் மகளிடம் கவனம் சொன்னார். “இப்படியொருத்தி உனக்கு மாமியாரா வர்றது எனக்கு சரியாப்படல குட்டிமா. அவளும் அவ ப்ளவுஸும். எதுக்கும் அவப்பையன் கிட்ட பாத்தே பழகு” என்றார்.
அறிவுரை கூறிய தாயை அன்பொழுகப் பார்த்தவளும் சரியென்று தலையசைத்தாள்.
கலைடாஸ்கோப் திரும்பும்…