Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் - Story

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
சென்ற அத்தியாயத்திற்கு ஃபேஸ்புக்கில் தங்கள் பிடித்தம் மற்றும் கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி ப்ரெண்ட்ஸ்🙂
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
உங்களுக்கான அத்தியாயம் இருபத்தேழு இதோ...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்

எழுதியவர்: ஷிவானி செல்வம்

அத்தியாயம் 27


மறுநாள் அலுவலகத்தில் விக்கியின் அறையில் அவனின் அன்னையைப் பற்றி அடைமழையாய் கொட்டித் தீர்த்துவிட்டாள் அனன்யா.

அயர்ந்துபோனவன் ஆறுதல் கூறினான்.

“அவங்க பேசுறதல்லாம் பெருசா எடுத்துக்காத அனி. சம்டைம்ஸ் இப்படி தான் லூசுப் புடிச்சிரும் அவங்களுக்கு. லீவ் இட்.” என்றான்.

“அவங்க எப்பவுமே இப்படி தான் ட்ரெஸ் பண்ணிப்பாங்களா விபூ? அசிங்கமா ஒடம்பக் காட்டிக்கிட்டு.”

“ஏய்! என்ன பேசுற நீ?”

இவ்வளவு நேரமும் கனிவாய் இருந்தவன் முகம் திடீரென கடுமை கொண்டது.

“அனி‌ எப்படி எங்கம்மா உங்க வீட்டுக்கு வந்து கத்துனது தப்போ, அதே மாதிரி நீ அவங்க ட்ரெஸ்ஸிங் சென்ஸ் பத்தி கமெண்ட் பண்றதும் தப்பு. இனியொரு தரம் இந்த மாதிரி பேசாத!” என்று எச்சரித்தான்.

தான் காதலை வெளிப்படுத்திய பிறகு அவன் காட்டும் முதல் கோபத்தில் மிரண்டுபோனவள் உடனே சமாளித்தாள்.

“அவங்க நீங்க என்ன கைக்கழுவிருவீங்கன்னு உங்களப் பத்தியே தப்பா சொன்ன கோபத்துல அப்படி பேசிட்டேன். சாரி விபூ. சாரினு சொல்றேன்ல?”

சமாதானமடைந்தவன் அவளை கேபினுக்கு அனுப்பி வைத்தான். ஆனால், மனதில் மட்டும் கங்காவைப் பற்றி உறுத்திக்கொண்டே இருந்தது. பின், எது வந்தாலும் சமாளிக்கலாம் என்ற முடிவோடு அடுத்து வந்த வேலைகளை கவனித்தான்.

அதன் பின்னான‌ நாட்களில் அனன்யாவை காதலிப்பதொன்றும் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.‌‌ தொட்டது அனைத்திற்கும் தடைப்போட்டாள். ஆனால், அவன் விடாமுயற்சியால் ஒன்றிரண்டை தகர்த்தான். இரு குடும்பத்தாரிடமும் சொல்லியாயிற்று. இனி யாருக்கு என்ன பயம் என்று அவள் விதித்த விதிமுறைகளை அவளையே மீறும்படிச் செய்தான்.

முதலில் அலுவலகத்தில் வைத்துக்கொள்ளும்படியான பரிசுகளைத் தந்தவன், ஒரு முறை வீட்டிற்கு எடுத்துப்போகச் சொல்லி மொராக்கோ‌ புகழ் உதட்டுச்சாயத்தை வாங்கிக்‌ கொடுத்தான். அது அவளுக்கென்று பிரத்யேகமாக‌ வரச்செய்யப்பட்டது.

களிமண்ணால் செய்யப்பட்ட விளக்கு போல் இருக்கும் அதில் கங்கா விவரமில்லாமல் சூடமேற்றி வைத்தார். ஈர விரலால் உரசும்போது மானின் ரத்தச் சிவப்பில் மிளிரும் அது தீப்பட்டவுடன் கருகியது. அனன்யா அதை அபசகுனமாக நினைத்து விக்கியிடம் இரண்டு நாட்கள் அழுது புலம்பினாள். அவன் அவளை சரிகட்டுவதற்குள் போதும் போதுமென்றானது.

அதேபோல்‌‌ தொடர்ந்து தலைவலி, வயிற்றுவலியென அவளை விடுப்பு எடுக்கவைத்து திரையரங்கிற்கு அழைத்துச் செல்வது, பல்பொருள் அங்காடிக்கு‌ அழைத்துச் செல்வது‌ என்று முன்னேற்றியிருந்தான். மகேஷின் உபயத்தால் அவர்களின் காதல் விசயம் அலுவலகம் முழுவதும் பரவியிருந்ததும் அனன்யாவிற்கு வசதியானது.

கடந்த மூன்று வார காலமாக தன் மகளின் காதல் விவகாரத்தை ஊறுகாய் ஜாடி மாங்காய் போல் தனக்குள் ஊறப் போட்டு வைத்திருந்த கங்கா, தான் போட்டிருக்கும் திட்டம் சரியாக வருமா என்று மூளையைப் போட்டு கசக்கினார்.

‘சரி தான். உடனே அதை செயல்படுத்து!’ என்ற கட்டளையை அவர் மூளை எப்போது விதித்ததென்றால், அனன்யா‌ விக்கியின் நிர்பந்தத்தால் தன் சகஊழியர்களுடன் இரண்டு நாள் பயணமாக கொடைக்கானல் செல்ல அடம்பிடித்தபோது தான்.

எதைச்சொல்லி அவளது கோரிக்கையை மறுப்பதென்றே கங்காவுக்கு புரியவில்லை. எதைச் சொன்னாலும் அதற்கு தீர்வு கூறும் கெட்டிக்காரியாய் அவளை மாற்றியிருந்தான் விக்கி. இறுதியில்‌ மகளே வெற்றி பெற, அவளை பயணப்பொதிகளோடு நிறுவன வாயிலில் இறக்கிவிட்டவருக்கு அன்னம் தண்ணீர் செல்லவில்லை.

மகள் அது பற்றிய அக்கறை ஏதுமின்றி விக்கி நீட்டிய நொறுக்குத்தீனிகளையெல்லாம் கொறித்தபடி வந்தாள். பேருந்தில் ஒலிக்கும் பாட்டிற்கு ஒவ்வொருவராய் எழுந்து நடனமாடி ரகளை செய்தது வேறு அவளை கள்ளமின்றி சிரிக்க வைத்தது.

இவ்வாறு கலகலப்பாக மலைப்பாதையில் ட்ரெக்கிங் செய்த அந்தப் பேருந்து அவர்களை பூண்டி தங்கும்விடுதியில் இறக்கிவிட்டபோது அடைமழையில் சிலிர்த்துக் கொண்டிருந்தது கொடைக்கானல். ஓரளவு வசதியான தங்கும்விடுதியில் தான் அறைகளை முன்பதிவு செய்திருந்தான் விக்கி. மொத்தம் அறுபது பேருக்கென்பதால் பார்த்து பார்த்து செலவு‌ செய்ய வேண்டியிருந்தது.

நான்கு மாதங்களுக்கு ஒருமுறை இதுபோல் டீம்பாண்டிங் பணமென்று ஒதுக்கி ஊழியர்களுக்குள் நல்ல ஒற்றுமையை கொண்டுவருவது தான் அவனின் திட்டம். இம்முறை அனன்யாவும் உடன் வந்தது கூடுதல் கொண்டாட்டம்.

ஆனால், மழை குறுக்கிட்டதன் விளைவாக அவர்கள் ஊர் சுற்றச் செல்வது‌ தடைபட்டது. தங்களது அதிருஷ்டத்தை நொந்துகொண்டு வேறுவழியின்றி உள்ளரங்க விளையாட்டுகளில் இறங்கினார்கள்.

அப்போது விக்கி யாரும் பாராதபடி அனன்யாவை மட்டும் வெளியே வரச்சொல்லி சைகை‌ செய்தான்.‌ ஓய்வறை செல்வதாகச் சொல்லிவிட்டு அவளும் வெளியே வந்தாள். உடனே அவளை தயாராக நின்றிருந்த காரில் ஏறும்படி அவசரப்படுத்தியவன் ஓட்டுநர் அவன் கட்டளையிட்ட இடத்தில் அவர்களை‌‌ கொண்டுபோய் விட்டதும், அங்கிருந்த ‌வாடகை வண்டிக்காரனிடம் தான் முன்பதிவு செய்திருந்த ராயல் என்ஃபீல்டைப் பெற்றான்.

இவ்வளவு நேரமும் அவனை‌ எங்கே செல்கிறோமென தொணதொணத்துக் கொண்டிருந்தவள் அவன் தனக்கும் ஒரு தலைக்கவசத்தை கொடுத்து அணியச் சொன்னதும் திருதிருவென விழித்தாள்.

அவன்‌, “ப்ளீஸ்” என்று கெஞ்சவும், முரண்டுபிடிக்க மனமின்றி தலைகவசத்துடன் வண்டியில் ஏறினாள்.

செல்லும்போது எதிர் வரும் மழைக்காற்றில் நடுங்கியவள்‌ அவன் இடையை‌ இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள். உடனே வேகத்தை அதிகரித்தான் விக்கி. சிறிது தூரம் சென்றதுமே துப்பட்டாவை விரித்து இருவருக்கும் குடையாக்கியவள் அந்தப் பயணத்தை மிகவும் ரசித்தாள். தன் அன்னையுடன் வண்டியில் செல்லும்போது தான் தவறவிட்டது எது என்பதையும் தற்போது உணர்ந்தாள்.

அவர்களின் போறாத காலம் பூமிமாதா எண்ணெய் குளியல் மேற்கொண்டதில் தார்ச்சாலைகளனைத்தும் மினுமினுத்தன.

விக்கி தாங்கள் வர வேண்டிய இடத்தை அடைந்துவிட்ட மகிழ்ச்சியில் அவளிடம், “இங்க தான் நான் சொன்ன எடம் இருக்கு” என்று கை நீட்டி காண்பிக்க, இருசக்கரவாகனம் நிலைகுலைந்தது.

விழுந்த இருவரும் பெரும் காயமின்றி சிராய்ப்புகளோடு தப்பித்தார்கள். இதற்கு மேலும் வண்டியில் செல்ல வேண்டாமென்று நூறு மீட்டர் இடைவெளியையும் வண்டியை தள்ளிக்கொண்டே கடந்தார்கள்.

எங்கு இவ்வளவு ஆபத்தையும் கடந்து ஆர்வமாக அழைத்துச் செல்கிறான் என்ற கேள்வியோடே பயணித்தவளுக்கு அவன் அழைத்து வந்திருந்த இடத்தை பார்த்ததும் அப்படியொரு சில்லிப்பு. பரந்து விரிந்த பள்ளத்தாக்கினையொட்டி ஒரேயொரு குடில்.​
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
கூக்காலில்‌ அமைந்துள்ள அக்குடிலின்‌ வாயிலைவிட்டு இரண்டு எட்டு எடுத்து வைத்தால் நேரே மேலோகம் தான். அவன் முன்பொரு சமயம் அங்கு வந்தபோது கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சை உடுப்பணிந்த இளவரசிகள் பெல்லி டான்ஸராய் இடுப்பாட்டி போதையேற்றின.‌ தற்போதோ மழை நின்று முகத்தை மறைக்குமளவு பனி சூழ்ந்ததில் ஏமாற்றமாய் உணர்ந்தான்.

ஆனாலும், அவளின் நலனில் கண்ணாக குடிலுக்குள் நுழைந்ததுமே சிராய்த்திருந்த இடத்தையெல்லாம் பார்வையிட்டு வெளியே சென்று தனக்கு தெரிந்த அளவில் சில மூலிகைகளைப் பறித்து வந்து அவற்றின் மீது கசக்கித் தேய்த்தான். அவளின் நாடியில், தோளில், முழங்கையில், கணுக்காலில் என்று வரிசையாக மூலிகை பரவ, எரிச்சலோடு அவன் விரல்படும் கூச்சமும் சேர்ந்து விலக முற்பட்டாள். அவன் வம்படியாய் உட்காரவைத்தான்.

வலியில் தன் அன்னையை கட்டிக்கொள்வது போல் அவனை அவள் கட்டிக்கொள்ள, தனக்கு உண்டான காயங்களை மறந்தான் விக்கி. மூலிகைச்சாறு அவள் கன்னங்களில் வழிந்தோடியது.

“எனக்கு ரொம்ப குளுருது விபூ”

மாவுக்கடையில் தும்மல் வரவில்லையென்றால் தான் அதிசயம். ஆனால், முழுதாக நனைந்து மாற்று உடையில்லாமல் அவள் பற்கள் விசைப்பலகை தட்டியபோது முன்னேற்பாடு எதுவும் செய்யாமல் வந்த தன் மடத்தனத்தை நொந்தான்.

மதியம் மூன்று மணியளவில் அவளை அங்கு அழைத்து வந்தவனுக்கு இப்போதே தங்களை இருள் சூழ்ந்தது வேறு அசௌகர்யமாய் இருந்தது.

எதிரிலிருக்கும் பள்ளத்தாக்கை குடில் வாயிலில் கால்களை தொங்கப்போட்டுக்கொண்டே ரசிக்கலாம்; இவ்வளவு நாள் பேசாத கதையெல்லாம் இன்று அவளிடம் மனம் விட்டு பேசலாம்; ஒரு மணி நேரத்திற்குப் பின் யார் கண்ணும் உறுத்தாதவாறு இருவரும் விடுதிக்கு திரும்பிவிடலாம் என்றவன் போட்டிருந்த திட்டத்தில் பெரிய ஓட்டையைப் போட்டது இந்த வானிலை மாற்றம்.

அந்தக்குடிலின் கயிற்றுக்கட்டிலில் கம்பளியொன்று கிடந்தது மட்டும் சற்று ஆறுதல். எடுத்து வந்து அவளுக்கு போர்த்தி விட்டான். இருளைக்கண்டு அவள் பயப்படக்கூடாதென்று அலைபேசியின் டார்ச்சையும் இயக்கினான்.

தன் பாக்கெட்டில் நனையாமல் இருந்த சிகரெட்டில் ஒன்றையெடுத்து பற்ற வைத்தவன் வெளியே செல்வதும் உள்ளே வருவதுமாக இருக்க, சுவாரசியம் கூடியது அவள் பார்வையில்.

வெளியே சூரியன் கொசுவத்தி பொருத்தியிருந்ததால்‌ குடிலுக்குள்ளேயே சிறிதுநேரம் விரல்களைத் தடவி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடியிருந்தனர். மூடுபனியுடன் பரவிய ஒளிக்கீற்றுகளின் டச்சப்பில் இருவரின் கண்மணிகளும் இணைய, இதழ்கள் துடித்தன. தாளாமல் உடனே இருவரும் ஒரு உடலாய் மாறத் துடித்தனர்.

இவ்வளவு நேரமும் அவள் ஆடைகள் உறிஞ்சிய உஷ்ணத்தை அவன் விழிகள் உறிஞ்சத் தொடங்க, வெட்கம் பிடுங்கித் தள்ளியது. அடர்ந்த மரவேர்களின் சிக்குகளுக்கு போட்டியாய் அவர்களின் வேர்க்காத இடங்கள் மாறியது எப்போதோ இருவருக்கும் தெரியாது.

மழையில் முளைத்த இரண்டு அரிய வகை காளான்போல் மிருதுவாயிருந்த அவளின் அந்த உயர்ந்தப் பாகங்களிலேயே விக்கி வெள்ளி நீர்வீழ்ச்சி‌யானவன் மெதுவாக குடை சாய்ந்தான். அவளுமே தன் அன்பை வட்டக்கனல் அருவி போல் வஞ்சமின்றி கொட்டினாள். அவனுக்கோ மீண்டு வரமுடியாத குணாக்குகையானது அவள் தேகக்குகை.

ஆதியாட்டத்தில் அவள் வலி பொறுக்காமல், “ஆ! ம்மா!” என்று அலற, சூடான பாலில் வாய்வைத்தவன் போல் உமிழ்ந்து விலகினான்.

அவளுக்கு கொஞ்சம் அவகாசமளித்து குடிலின் வெளியே சென்று வந்தவனுக்கு ரொம்ப குற்றவுணர்வாக இருந்தது.

“அனி நான் இதுக்காக உன்ன இங்க கூட்டிட்டு வரல.” என்றான் கம்மிய குரலில்.

“தெரியும்.”

கம்பளி போர்த்தி திரும்பி அமர்ந்திருந்தவளின் முகம் சரியாகத் தெரியவில்லை அவனுக்கு. ஆயினும் அக்குரலின் திடம் அவன் மீதான அவள் நம்பிக்கையை பறைசாற்ற, உச்சி குளிர்ந்தான். ஆனால், உடனே அந்த நிம்மதிக்கு ஆப்பு வைத்தான் ஆண்டவன்.

"காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தேவதை அம்மா! அன்பென்றாலே அம்மா! என் தாய் போல் ஆகிடுமா?" என்ற அலைபேசியின் பாடலில் தானே ஆடிப்போன அனன்யா பவ்யமாக ஏற்றாள்.

“குட்டிமா எங்கலாம் போனீங்கடா? அம்மா உன் ஞாபகத்துல ஆனியன் பக்கோடா செஞ்சேன்டா இன்னைக்கு. ஆனா, நீ இல்லாம சாப்டவே பிடிக்கல. நீ ஸ்னாக்ஸ் எதுவும் சாப்ட்டியா? அம்மாவுக்கு உன்ன பாக்கனும் போலருக்கு. வீடியோ கால் வர்றியா?” என்றதும்,

“ம்மா அதுவந்து… என் பக்கத்துல ஆளுங்களா இருக்காங்க. நான் ரூமுக்குப் போனதும் உங்களுக்கு கால் பண்றேன்” என்றவள் அலைபேசியை அணைத்ததும் ஓவென்று கதறினாள்.

இதுதான் அவனுக்கு அவளிடம் பிடிக்காதது.

“இனி நான் என் அம்மா மூஞ்சில எப்படி முழிப்பேன்? அவங்களுக்கு நான் பெரிய துரோகம் பண்ணிட்டேன் விபூ. உடனே உங்க அப்பா அம்மாவ எங்க வீட்டுக்கு பொண்ணுக் கேட்டு வரச் சொல்லுங்க ப்ளீஸ்!” என்று அரற்றினாள்.

“நீ உன் அம்மா உம்மேல நம்பிக்க வச்சிருந்தாங்களேன்னு அழற. நான் நீ எம்மேல நம்பிக்க வைக்க மாட்டிக்கிறியேன்னு அழுகைய கன்ட்ரோல் பண்ணிட்டு நிக்கிறேன். அவ்வளவு தான் வித்தியாசம்.”

“நீங்க ஒரு பொண்ணா இருந்து பாத்தா தான் என் கஷ்டம் புரியும்.”

“இப்ப நடந்ததுல உனக்கு சந்தோசம்னா எனக்கும் சந்தோசம். உனக்கு கஷ்டம்னா எனக்கும் கஷ்டம். புரியுதா அனி?”

“அப்போ பொண்ணுக் கேட்டு வரமாட்டீங்களா?”

“உடனே வேண்டாம்னு சொல்றேன். இந்த ஐ.டி கம்பெனி ஆரம்பிக்க எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா? சோப்புக்கம்பெனிய ஓரங்கட்டினதுக்கு இப்பவும் என் அம்மாக்கிட்ட மண்டகப்படி வாங்கிக்கிட்டிருக்கேன். ஏதோ இப்ப தான் எல்லாம் ஓரளவுக்கு செட்டாகிருக்கு. உனக்கும் இருபத்திமூன்ற வயசு தான ஆகுது? இன்னும் ஒரு நாலஞ்சு வருசம் போகட்டும். அப்பறம் மேரேஜ் பத்தி யோசிக்கலாம்.”

“உங்கம்மா சொன்னது உண்மையோன்னு எனக்கு பயமா இருக்கு விபூ.”

“அப்போ எதுக்கு நான் கூப்ட்டதும் கொடைக்கானல் வந்த? இந்த மாதிரி பேசும்போது தான் எனக்கு எரிச்சலாயிருக்கு. சும்மா சும்மா எங்கம்மா உங்கம்மாங்காத.”

அவன் வெளியேப்போய் உட்கார்ந்தான். பனித்திரை மெதுவாக விலகி அந்த அற்புதக்காட்சி கிட்டியது.

தன் கோபமெல்லாம் அவற்றுடனே விலக, “அனி! இங்க வந்து பாரேன்” என்றான் உற்சாகமாக.

முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு வந்தவளுக்கும், ‘வாவ்!’ என்று கண்கள் விரிந்தன.

கம்பளி போர்த்தியபடி அவனருகில் வந்து உட்கார்ந்தவளை தோளோடு அணைத்துக்கொண்டான் காதலன். ஊடலை காதல் மிஞ்சியது.

சென்ற இரண்டு மணி நேரத்திலேயே விக்கியும் அனன்யாவும் விடுதி திரும்பியபோது அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்கள் சுற்றுலாப் பிரியர்கள்.

“ஸிப்லைன், கயாக், ஹார்ஸ் ரைடிங்னு ஜாலியா எஞ்சாய் பண்ணலாம்னு பாத்தா இப்படி பண்ணிடுச்சேப்பா இந்த மழ?”

பேஸ்ட்ரி கார்னர் கேக், பப்ஸை சுவைத்துக்கொண்டே கதையளந்து கொண்டிருந்தவர்களின் கண்ணில் படாமல் செல்ல முற்பட்டவர்களை மகேஷ் மடக்கிவிட்டான். அவன் பார்வை முழுவதும் வாசலில் தானே இருந்தது!

அவர்களின் கலைந்த கோலம் குடும்பஸ்தனுக்கு பல கதைகளைச் சொல்ல அதிர்ச்சியாக, “என்ன விக்கி இப்படி பண்ணிட்ட?” என்றான்.

“என்ன பண்ணினாங்க? சும்மா கற்பனைய பறக்க விடாதடா.” என்றான்.

“அப்படியா? ரெண்டுபேரும் உங்க மொகத்துல பச்சையா தெரியுறத மொதல்ல தொடைங்க” என்றதும், மறுத்துக் கூற வார்த்தைகளின்றி சங்கடமாக நழுவினார்கள் இருவரும்.

மறுநாள் வருணன் ஓய்வெடுத்த காரணத்தால் மூன்று முக்கியமான இடங்களுக்கு மட்டும் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு ஹோம் மேட் சாக்லேட்டுகளோடு மதுரைக்குத் திரும்பினார்கள்.

மகள் வாங்கி வந்த‌ ஸ்ட்ராவ்பெர்ரி, பட்டர் ஸ்காட்ச், கேரமல், ரம், ஹேசல்நட், வால்நட், பாதாம், ப்ரஸலியன் காஃபி மற்றும் முந்திரி சாக்லேட் வகைகளில் ஒன்றைக் கூட வாயில் வைக்கவில்லை கங்கா.

கலைடாஸ்கோப் திரும்பும்…​
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
உங்களுக்கான அத்தியாயம் 28 இதோ ப்ரெண்ட்ஸ்...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்

அத்தியாயம் 28


நன்றாக சென்ற மகள் சிராய்ப்புகளோடு வீடு திரும்பியது கங்காவிற்கு உறுத்தியது. கேட்டால் ஏரியைச் சுற்றி சைக்கிள் ஓட்டி விழுந்ததாகக் கூறினாள்.

அங்கு மருந்தகத்தில் ஒரு பிளாஸ்த்ரி கூடவா கிடைக்கவில்லை என்றதற்கும் சரியான பதிலில்லை.

அவள் மீதான சந்தேகம் வலுத்ததில் அவளின் பயணப்பொதியை அலசி ஆராய்ந்தார். துணிகளுக்கிடையே சங்குப்பூ நிறத்திலான மழைத்துளி வளையல்களை ரகசியமாக ஒளித்து வைத்திருந்தாள் மகள்.

“இது யாரோடது குட்டிமா?” என்றதும், தாய் கேட்ட கேள்வியில் ஒன்றும் ஓடவில்லை அவளுக்கு.

உடன் வந்தவர்கள்‌ அனைவரும் உள்ளூர் சந்தையில் ஆர்வமாக பொருள்களை அள்ள, இவள் தெரியாத்தனமாக அந்த மழைத்துளி வளையல்களை கையிலெடுத்துப் பார்த்துவிட்டாள். அது விக்கியின் கண்ணில்பட்ட அடுத்த கணமே வாங்கித் தந்துவிட்டான்‌ சொல்லச்சொல்ல‌ கேளாமல்.

“கேட்கறேன் இல்ல?”

“என் ஃப்ரெண்ட் ப்ரீத்தி இல்ல? அவ வாங்கிக் குடுத்ததும்மா”

“நீ வேண்டாம்னு சொல்லல?”

“ஆசப்பட்டு வாங்கித் தரும்போது எப்படிம்மா வேண்டாம்னு சொல்ல முடியும்?”

அவர் முகம் பார்க்கத் தயங்கி திரும்பி நின்று பேசியவளை சல்லென்று நொறுங்கிய வளையல் திரும்பிப் பார்க்க வைத்தது.

“கை தவறி விழல. நானா தான் போட்டேன். கை நெறைய கண்ணாடி வளையல் நீ என்னைக்கு போட்ட குட்டிமா? ஆமா நீ கொண்டுபோ‌ன சுடிதார்ல ஒண்ணு கொறையுதே எங்க அது?”

அவளுக்கு பொய் பொய்யாக சொல்வது கடுப்பானதோ என்னவோ, “சும்மா கேள்வியா கேட்டு டிஸ்டர்ப் பண்ணாதீங்கம்மா” என்று சிடுசிடுத்துவிட்டாள்.

அவ்வளவு தான் முகம் சுருங்கிவிட்டது கங்காவுக்கு. அதன் பின் அவளுடன் பேசுவதையே குறைத்துக்கொண்டார். முன்பு போல சாப்பாடு ஊட்டிவிடுவதும் நின்று விட்டது. தன் சார்ந்த விசயங்களிலிருந்து தாய் விலகுவதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை அனன்யாவால்.

பல முறை மன்னிப்பு கேட்டும் தாய் இறங்கவில்லை எனவும் கவலையில் விக்கியிடம் பழகுவதை குறைத்துக் கொண்டாள். அவன் வேலைப்பளுவில் சிக்கியதால் எதைக் கவனிப்பதென்று அல்லாடினான்.

இப்படியே இரண்டு வாரங்கள் கடக்க, அலுவலகத்தில் முக்கியமான கலந்துரையாடலின் போது மயக்கம் போட்டு விழுந்தாள் அனன்யா. முன்பு போல் நினைத்து அவளை தண்ணீர் தெளித்து எழுப்பினர் சகஊழியர்கள். விழித்தவளோ எழுந்து உடனே விக்கியின் அறைக்குச் சென்றாள்.

அங்கு முக்கியமான ஆலோசனைக்கூட்டத்தில் இருந்தவன் ‘ஃபைவ் மினிட்ஸ்’ என்று விரல்களை அசைத்தான்.

அவள் நகராமல் நிற்கவும் வேறுவழியின்றி மகேஷிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, தன் மடிக்கணினியை மூடியவன் காரசாரமாகக் கத்தினான்.

“ஆர் யூ மேட்? எவ்வளவு முக்கியமான கிளையண்ட்ஸ் தெரியுமா? இதான் பிசினஸையும் பெர்சனல் லைஃபையும் ஒரே எடத்துல வச்சிக்கக் கூடாதுங்கிறது.”

முகம் ரத்தப் பசையற்றுப்போனவள், “நீங்க அப்பாவாகப் போறீங்கனு நெனைக்கிறேன்” என்றாள் ஸ்ருதி இறங்கிய குரலில்.

அடங்கிப்போன விக்கி அடுத்து செய்ய வேண்டியதை புயல் வேகத்தில் கவனித்தான். அடுத்த சில நிமிடங்களிலேயே அவன் ஓய்வறைக்குள் சென்று வந்தவள் அதனை உறுதி செய்ய, இருவருக்குமே குப்பென்று வியர்த்தது.

“இப்ப என்ன பண்றது அனி?”

“எனக்குமே தெரியலங்க.”

“நீ சொன்னது சரி தான் அனி. உடனே நம்ம கல்யாணம் பண்ணிக்கறது‌ தான் நல்லது. நான் இப்பவே என் அம்மா அப்பாக்கிட்ட விசயத்த சொல்றேன். நீ உன் அம்மாக்கிட்டப் பேசு. சீக்கிரமே தேதி குறிச்சு சிம்ப்ளா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம். பட் ரிசப்சன் மட்டும் கிராண்டா பண்ணனும். என்ன சொல்ற?”

விக்கி கண்கள் விரியச் சொன்னதை கேட்டவளுக்கு நடக்குமா என்ற ஏக்கப் பெருமூச்சு எழுந்தது. அவன் அளவுக்கு அவளால் சட் சட்டென்று முடிவெடுக்க முடியவில்லை. இவ்விசயத்தை தன் அன்னையிடம் சொல்வதற்கே முதலில் கூசினாள். அவன் அவள் தோளில் கைப்போட்டு வெளியே அழைத்துவர, அலுவலகமே அவர்களைத் தான் ‘பே’வென்று பார்த்து வைத்தது.

அவளைத் தனது காரில் வீட்டில் சென்று இறக்கிவிட்டவன் அவள் முகம் இன்னும் தெளிவடையாததைக் கண்டு, “நான் வேணும்னா உங்கம்மா வர்றவரைக்கும் வெயிட் பண்ணி அவங்கக்கிட்ட நெலமைய எடுத்துச் சொல்லவா அனி?” என்றதும், திடுக்கிட்டாள்.

பின், தானே கூறிக்கொள்வதாக அவனை கெஞ்சிக்கூத்தாடி அனுப்பி வைத்தாள். மனசஞ்சலத்துடனே கிளம்பினான்.‌

வீட்டிற்குள் நுழைந்தவள் தன்னை திடப்படுத்திக்கொண்டு தன் அன்னையின் எண்ணிற்கு முயல, எதிர்புறம் பரீட்சயமான ஆண்குரலொன்று கேட்டது.

“ஹலோ! நான் தான் கண்ணு நம்ம ஸ்கூல் ஹெச்.எம் தணிகாச்சலம் பேசுறேன். நல்லாருக்கியா கண்ணு?”

“ஆங்! நல்லாருக்கேன் அன்க்கிள். அம்மா எங்க அன்க்கிள்? எக்ஸாம் ஹால்லயா?”

“இல்ல கண்ணு. அவங்க என் பக்கத்துல தான் இருக்காங்க. அது வந்து நானும் அம்மாவும் ஒரு முடிவுக்கு வந்துருக்கோம் கண்ணு. அது என்னன்னா… நேராவே சொல்லிடுறனே. எனக்கு உன் அம்மாவ ரொம்பப் புடிச்சிருக்கு கண்ணு. நானும் அவங்களும் சேர்ந்து வாழ ஆசப்படுறோம். நீ என்ன கண்ணு சொல்ற?”

பேசிக்கொண்டே மேசையிலிருந்த கங்காவின் கையைத் தடவினார். அதை நான்கு கண்கள் பார்த்துவிட்டதை இருவருமே அறியவில்லை.

தணிகாச்சலம் அலைபேசியை நீட்டியபோது கங்கா ஆர்வமாக வினவினார். “என்ன சார் கட் பண்ணிட்டாளா?”

“ஆமா மேடம். இப்ப ரெண்டுவாரமா தான் நீங்களே சிரிச்சுப் பேச ஆரம்பிச்சிருக்கீங்க. இனி நான் உங்கப் பொண்ண வேற தாஜா பண்ணனுமா?”

“பின்ன? அவ சம்மதிச்சா தான் நான் உங்களுக்கு கெடைப்பேனாக்கும்.”

“இப்படிச் சொன்னா எப்படி மேடம்?” அழுத்திப் பிடித்தார் விரல்களை.

“நான் சொன்னா சொன்னது தான்”

விரல்களை மெதுவாக இழுத்தவர் சிரித்துக்கொண்டே வருகைப் பதிவேட்டை எடுத்துக்கொண்டு வெளியேறினார். பின்னல் அசைந்தாடப் போகிறவரை விழுங்குவது போல் பார்த்தார் தணிகாச்சலம்.

கடந்த ஆறுமாத காலமாக முயன்ற காரியம் திடீரென இரண்டு வாரத்திற்கு முன்பு கைக்கூடியது அவரே எதிர்பாராதது. ஆனாலும், இடையில் மகளை நுழைப்பதை சுத்தமாக ரசிக்கவில்லை அவர். அனன்யா எப்போது சம்மதம் தந்து எப்போது அவரின் விரகதாபம் தீர்ந்து என்று சலிப்பாக இருந்தது.

கங்காவோ இப்போது தான் நிம்மதியாக உணர்ந்தார். மகள் எப்படி தன் காதலனைக் கொண்டு தனக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்தாளோ அதேபோல் தானும் அவளுக்கு ஒரு அதிர்ச்சி தந்ததில் பரம திருப்தி.

மகளை உணர்ந்து உடனே வீட்டிற்கு கிளம்பி வந்தவர் மகள் நகத்தைக் கடித்து துப்பிக் கொண்டிருப்பதை தூரத்தில் வரும்போதே கவனித்து இன்புற்றார். அவள் முகம் அழுது அழுது வீங்கியிருப்பதும் அவர் கண்களுக்குத் தப்பவில்லை.

அன்னையைப் பார்த்ததும் தாவி வந்து கட்டிக்கொண்டவள், “ம்மா ப்ளீஸ்மா அது பொய்யினு சொல்லுங்க. என்ன வெறுப்பேத்தத் தான அப்படி பண்ணீங்க? இனிமே கொடைக்கானல் எதுக்கும் நான் பெர்மிசன் கேட்க மாட்டேம்மா. உங்கள எதுத்துப் பேச மாட்டேன். என்ன கேட்டாலும் ஒழுங்கா பதில் சொல்வேன். ப்ளீஸ்மா பொய்யினு சொல்லுங்க. என்கிட்ட பழைய மாதிரி இருங்கம்மா.” என்று அழுது புலம்பினாள்.

தன்னிலிருந்து அவளைப் பிரித்தவர், “எல்லாம் உண்ம தான் குட்டிமா. இவ்வளவு நாள் நீயே ஒலகம்னு வாழ்ந்துட்டேன். அதனால எனக்கொரு தொணத் தேடல. இப்ப அப்டியா? நீ கல்யாணமாகிப் போனப் பின்னாடி நான் தனியா அழுது பொலம்பறதுக்கு கூட தணிகாச்சலம் இருந்தா தேவல இல்லையா?” எனவும், மகளால் ஏற்கவே முடியவில்லை.

“ம்மா அந்த ஆளப்போய் நீங்க எப்படி? எனக்கு அந்தாள சுத்தமா பிடிக்கலம்மா. இனிமே நீங்க அவர்கூட பேசவோ பழகவோக் கூடாது.”

“எங்கள தடுக்க முடியும்னு நீ நெனைக்கிறியா குட்டிமா?”

“அவர் உங்க பலவீனத்த யூஸ் பண்ணிக்கறார்மா.”

“எல்லா ஆம்பளைகளும் அப்படித்தான்.”

“இவ்வளவு பெரிய பொண்ண வச்சிக்கிட்டு நீங்க காதல் கீதல்னு திரிஞ்சா நல்லாவா இருக்கும்?”

“எனக்கு என் சந்தோசம் தான் முக்கியம்.”

“நந்தகோபன் பெரியப்பாக்கு தெரிஞ்சா காரித் துப்புவாரு. வேண்டாம்மா. அந்த சாக்கடைய இப்பவே ஒதறித் தள்ளுங்க.”

தன் காலைப்‌ பிடித்துக் கெஞ்சுபவளை இரக்கமின்றி பார்த்தார் கங்கா.​
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93

“நீ ஏன் இப்படி பதறுறனு எனக்கு சுத்தமா புரியலடா? நானும் அன்க்கிளும் கொழந்தப் பெத்துப்போம்னு பயப்படுறியா? உனக்கு அந்தக் கவலையே வேண்டாம். அம்மாவோட சொத்துப் பூரா உனக்கு தான்.”

விசுக்கென்று அவர் காலிலிருந்து தலையை உயர்த்தினாள் அனன்யா.

“நீங்க அந்தாள் கூடப் போனீங்கன்னா நான் சூசைட்‌ பண்ணிப்பேம்மா.”

“சும்மா மெரட்டிப் பாக்குறியா குட்டிமா? நான் இல்லனா அவரும் கூட அப்படித் தானாம்.”

“எல்லாம் பொய் ம்மா. உங்களுக்கு நானும் எனக்கும் நீங்களும் தவர வேற யாரும் நமக்காக‌‌ உயிர விட மாட்டாங்க. நாம மொதல்ல மாதிரியே நம்ம ரெண்டுபேர் மட்டுமா இருப்போம்மா. நமக்குள்ள யாரும் வேணாம்.”

“யாரும் வேணாமா?”

தலையை‌ பலமாக ஆட்டினாள் மகள்.

“விக்கி கூடவா?”

அதற்கும் தலை வேகமாக அசைந்தது. அந்நேரம் தன் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கூட பெரிதாகத் தெரியவில்லை அனன்யாவுக்கு.

“இல்ல! இல்ல! நீ அவசரத்துல எடுத்திருக்க முடிவு இது. நீ நல்லா யோசிக்கறதுக்கு டைம் எடுத்துக்கோ குட்டிமா. ஆனா, ரொம்ப எடுத்துராத. தணிகாச்சலம் பாவம்.” என்றுவிட்டு படுக்கையறைக்குச் சென்று கண்ணாடியில் முகம் திருத்தினார்.

ஒருமணி நேரம் மட்டும் அனுமதி கேட்டு வந்திருந்தவர் மீண்டும் பள்ளிக்குச் செல்ல ஆயத்தமானார். வெளியே வரும்போது அவர் நெற்றியில் பட்டாணி விட்டத்தில் அரக்கு நிறப் பொட்டிருக்க, பாய்ந்து வந்து அதனை கிள்ளியெறிந்தாள் மகள்.

அவர் ஸ்தம்பித்து நிற்க, ஓடிப்போய் சமையறைக்குள் புகுந்து உட்புறமாக தாழிட்டுக்கொண்டாள். அவளின் பின்னேயே ஓடியவர் ஓங்கித் தட்டி கதவை திறக்கச் சொல்ல, உள்ளே அனன்யா சிலிண்டரை திறந்து எரிவாயுவை கசியவிட்டாள். அதன் மணம் தன் நாசியை எட்டியதுமே பதறிப்போனார் கங்கா. கத்தி‌ கூச்சலிட்டுக்கொண்டே கதவை உடைக்க முயன்றார்.

பள்ளியில் கங்காவை தணிகாச்சலத்தின் அறையில் பார்த்த நான்கு கண்களில் இரண்டான‌து வாசன் அனுப்பிய உளவாளியினுடையது. அந்தப் பெண்மணி திடீரென வெளிப்பட்டு கங்காவுடன் சேர்ந்து தானும் கதவை உடைக்கத் தலைப்பட்டார். இருவரின் முயற்சியிலும் அந்த பலவீனமான தாழ்ப்பாள் தெறித்து விழுந்தது. உடனே மகளை சமீபித்து சிலிண்டரை அமர்த்தினார் கங்கா. மகள் அவர் முயற்சியை தடுக்க முயல, அவளை தரதரவென இழுத்துக்கொண்டு வரவேற்பறைக்குச் சென்றார்.

உளவாளியோ காற்றுப்போக்கியை இயக்கி விட்டு சாளரம்,‌ கதவு என அனைத்தையும் திறந்து வைத்து தானும் வரவேற்பறைக்கு வந்தார்.

வெளியே செல்ல எத்தனித்தவரை புதியவராக இருந்தாலும் தன் கூக்குரல் கேட்டு ஓடி வந்த ஒருவராக நினைத்த கங்கா, “ரொம்ப தான்க்ஸ்மா” என்றார்.

அவர் தலைகுனிந்தபடி வெளியேறிவிட்டார்.

அழுது கரையும் மகளை பூஜையறை அழைத்துச் சென்று உட்கார வைத்தவர் விபூதித் தட்டொன்றில் சூடமேற்றி, “இனி தணிகாச்சலத்துக்கு என் வாழ்க்கைல எந்த எடமும் கெடையாது. போதுமா?” என்று அடித்து சத்தியம் செய்தார். ஆனந்தக் கண்ணீரோடு அவரின் மடியில் தலை சாய்த்தாள் மகள்.

வெளியே செல்வது போல்‌ பாவனை காட்டிவிட்டு இவ்வளவு நேரமும் சாளரம் வழியே நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த வாசனின் உளவாளி தானறிந்த விசயத்தை உடனே வாசனுக்குக் கடத்தினார்.

கீமோதெரபியால் வீட்டில் சோர்ந்து கிடந்தவர் தானறிந்த உண்மைகளில் ஆடிப்போனார். உடனே தனது மகனை அலைபேசியில் தொடர்புகொண்டு வீட்டிற்கு வரச் சொல்லலாம் என்றால் மந்திரம் போட்டதுபோல் அவனே அவரின் முன் பிரசன்னமானான்.

தந்தையின் முகத்தில் தெரிந்த பீதியைக் கண்டு மகன் என்னவோ ஏதோவென்று பதறி அருகில் வர,‌ ஒன்றுமில்லையென்று கண்களால் சொன்னவர் கங்கா தொடர்பான அனைத்து விசயங்களையும் ரத்தினச் சுருக்கமாய் கூறினார்.

விதிர்த்துப் போனான் விக்கி.

“என்னப்பா சொல்றீங்க? நீங்க சொல்றதெல்லாம் உண்மையா? என்னையும் அனியையும் பிரிக்க அந்தம்மா இந்தளவுக்கு எறங்குவாங்களா? என்னால நம்பவே முடியலப்பா.” என்றான்.

“உங்கம்மாவே அவங்க வீடுவரப்போய் பிரச்சன பண்ணிட்டு‌ வந்த ஆள் தான? ஆனாலும், அவங்க ரொம்ப டேஞ்சரஸ் விக்கி. அவங்கள ரொம்ப கேர்ஃபுல்லா தான் நாம ஹேண்டில் பண்ணனும். அப்பறம் அந்தப் பொண்ணையும். என்னக் கேட்டா நீ அந்தப் பொண்ண மறக்கறது தாம்ப்பா நல்லது” என்றார் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியது போல்.

“நீங்களும் என்னப்பா அம்மா மாதிரி பேசிக்கிட்டு”

“இல்ல விக்கி. நான் சொல்றதுக்கு காரணம் இருக்கு. அந்தப்பொண்ணு அவ அம்மாவோட மினி ஜெராக்ஸ். அவள உன்னால மாத்த முடியாது. அது மட்டுமில்லாம சின்ன வயசுலயே அவ சைக்கலாஜிக்கலா ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கா. ஸ்டெப்ஃபாதர் பத்தின பயத்துல அவ அம்மாவுக்கு ரெண்டாம் கல்யாணமே நடக்கவிடாம பண்ணிருக்கா. இதுல கடந்த பதிமூனு வருசமா அவ ஃபாரின்ல இருக்க தன் தாத்தா பாட்டிக்கிட்ட கூட பேசறதில்லையாம். அம்மா மேல ரொம்ப பொசஸிவ். அவளோட வட்டம் ரொம்ப‌ச் சின்னது. அதுக்குள்ள நீ மாட்டிக்கிட்டது உன்னோட துரதிஷ்டம்னு‌ தான் சொல்லுவேன்.”

“சாரிப்பா, என்னால இப்ப அவள விட்டு வெலக முடியாது. ஏன்னா..”

“அவ கன்சீவா இருக்கா”

தன் வார்த்தைகளை தன் தந்தை கூற அதிர்ச்சியாகப் பார்த்தான் விக்கி. மெலிந்து கண்களைச் சுற்றி கருவளையம் விழுந்து கிடந்தாலும் அவர் பார்வையின் தீட்சண்யம் குறையவில்லை.

“அது மட்டும் இல்ல, அவள நான்‌ ரொம்ப லவ் பண்றேப்பா. எந்தளவுக்குனா நீங்க சொல்ற எல்லாக் கொறயையும் என்னால‌ சரி செஞ்சிட முடியுங்கிற‌ அளவுக்கு. காதல்னாலே அதானப்பா? அம்மாவுக்கும் உங்களுக்கும் தான் எவ்ளோ டிஃபரண்ஸ். நீங்க நல்லா வாழலையா?”

“உங்கம்மாகிட்டப்போய் இந்தக் கேள்விய கேட்ராத விக்கி. நான் என்னத்த வாழ்ந்தேன்னு ஒரே வார்த்தைல முடிச்சிருவா. ஜோக்ஸ் அபார்ட், நீ வைக்கிறது ஓவர் கான்ஃபிடன்ஸ். என் அனுபவத்துல இந்த மாதிரி ஆட்கள் திருந்தறது ரொம்ப கஷ்டம். ஆனா, உன் பிடிவாதத்த உன் அம்மாவாலயே மாத்த முடியாதுங்கும்போது சொல்றதுக்கு ஒன்னுமில்ல.”

திடீரென அருகில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு இருவருமே திரும்பினார்கள். அவன் பிடிவாதத்தின் சான்று வாலாட்டிக் கொண்டிருந்தது. வேணி பொமரேனியன் வாங்கி வளர்த்தும் தெருநாயிடம் தான் விக்கியின் பந்தம் பலப்பட்டது. அதன் குட்டியைத் தான் தற்போது தூக்கிச் சுற்றினான்.

அப்போது அவ்வறைக்குள் நுழைந்த வேணி தான் காணும் காட்சியில் முகத்தைச் சுளித்தார்.

அவரிடம் அவன் உற்சாகமாக, “கங்கிராட்ஸ்மா! சீக்கிரம் நீங்கப் பாட்டியாகப் போறீங்க.” என்று புன்னகைத்தான்.

“வாசன் இவன் என்ன சொல்றான் பாத்தீங்களா?” என்று எப்போதும்போல் புலம்ப ஆரம்பித்துவிட்டார் வேணி.

அவரிடம் தன் தந்தையை மாட்டிவிட்டு வெளியே வந்தவன் தன் ஆப்பிள் அலைபேசியில் அனன்யாவின் எண்ணிற்கு முயல, அது அவள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாய் சொல்லியது.

மறுநாள் விக்கி தன்னை குறைத்து எடைபோகிறான் என்பதற்கு சான்றாய் தன் வேலையை ராஜினாமா செய்தாள் அவள்.


கலைடாஸ்கோப் திருப்பம்…

 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
சென்ற அத்தியாயத்திற்கு ஃபேஸ்புக்கில் தங்கள் பிடித்தம் மற்றும் கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி ப்ரெண்ட்ஸ்🙂
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom