Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் - Story

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்

எழுதியவர்: ஷிவானி செல்வம்

அத்தியாயம் 31


அனன்யாவை சந்தித்துவிட்டு தனது அன்னையைப் பார்க்க வீட்டிற்கு வந்த உத்ரா அனைவரையும் நலம் விசாரித்துவிட்டு நேரே‌ படுக்கையறை‌‌ சென்றாள்.

அங்கு குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டிருந்தவளால் அனன்யா கூறியதை ஜீரணிக்கவே முடியவில்லை. கண்ணாடியைப் பார்த்து வசைபாடினாள்.

“எவ்ளோ தைரியம் இருந்தா என்னையே பொண்ணு இல்லனு சொல்லுவா? அவளுக்கு நான்‌ யாருன்னு காட்டாம விடப்போறதில்ல. என்ன சொன்னா? இன்னும் அவள அவன்‌ நெனச்சிக்கிட்டிருக்கதால தான் எம்மேல இன்ட்ரெஸ்ட் காட்டலனு சொன்னா இல்ல? விக்கியப் பத்தி இவளுக்கு என்ன தெரியும்? ஆனா அவ சொல்ற மாதிரி என்கிட்ட மட்டும் ஏன் இவன் ஒதுக்கம் காமிக்கிறான்? இவன் மனசுல அவ இல்லங்கறத எப்படியாவது நாம கன்ஃபார்ம் பண்ணி அவ மூஞ்சில கரியப் பூசனுமே!” என்று சிந்தனையில் இறங்கியவளை கதவருகில் கேட்ட சிரிப்புச் சத்தம் கலைத்தது.

கையில் பொம்மையோடு அவளருகில் வந்த அமிகா, “என்ன பண்ற உதி? எப்பப் பாத்தாலும் யாரையாவது திட்டிட்டே இருப்ப. இன்னைக்கு திட்ட யாருமில்லனு உன்னயே கண்ணாடிப் பாத்து திட்டிட்டு இருக்கியா?” எனவும்,

“அடி!” என்று விரட்டினாள்.

ஓடிச்சென்று பானுமதியின் பின்னே ஒளிந்து கொண்டவளை கைகளை பின்னால் கொண்டு சென்று பிடித்துக் கொண்டவர் கலக்கமாகப் பேசினார்.

“உதி, அமிகா கேஸ் இப்ப என்ன நெலமைலமா இருக்கு? வக்கீல் குருமூர்த்திக்கிட்டருந்து தகவல் எதுவும் வந்துச்சா? எல்லாம் நமக்கு சாதகமாத் தான இருக்கு? அமிகாவ நம்மக்கிட்டருந்து யாரும் பிரிச்சிரமாட்டாங்கல்ல?”

“எம்மேல நம்பிக்கை இல்லயா உங்களுக்கு? என்ன விடுங்க உங்க மாப்பிள மேல? இந்த விசயத்துல நீங்க கவலப்படவே தேவையில்லம்மா. அவன் நம்ம அமிகாவ யாரையும் நம்மக்கிட்டயிருந்து பிரிக்க விடமாட்டான். போதுமா?”

“உதி!”

“சரி, பிரிக்க விட மாட்டார்ர்ர்ர்ரு. போதுமா?”

உடனே பானுமதியின் முகம் தெளிர்ச்சி பெற்றது.

அப்போது வீட்டிற்குள் நுழைந்த கவிலயா பொட்டலம் ஒன்றை பிரித்துக்கொண்டே வர, “இன்ஸ்டாகிராம்லருந்து எவனாவது என்னத்தையாவது அனுப்பிருப்பான்.” என்று முகத்தை நொடித்தார் பானுமதி.

உத்ராவும் அதை ஆர்வமாகப் பார்க்க, இளஞ்சிவப்பு நிற சாட்டின் துணியாலான இரவு உடை ஒன்று உள்ளேயிருந்தது. விறுவிறுவென அவளருகில் சென்ற பானுமதி அதைத் தன் கையில்‌ வாங்கிப் பார்த்தார். நூறுகிராம் தான் இருக்கும் போலத் தோன்றியது.

தானும் அதை கூர்ந்துப் பார்த்தாள் உத்ரா. உடனே யோசனை ஒன்று உதயமான பிரகாசம் அவள் முகத்தில். அதை அணிந்தால் காலின் முக்கால்வாசி பளீரிடுவது நிச்சயம். அதுவும் துணியின் இயல்பிற்கு உடம்பை ஒட்டிக்கொண்டு தெரியும். இதில் தோள்களில் வேறு மெலிதான பின்னற்பட்டிகள் தாம். அதை அணிந்து காணொளி எதுவும் எடுக்கக்கூடாதென்று தான் கண்டனம் தெரிவித்துக் கொண்டிருந்தார் பானுமதி.

நான் அணிவேன் என்று பிடிவாதம் செய்து கொண்டிருந்த கவிலயா உத்ராவிடம் சென்று, “அக்கா பாருக்கா! இந்த ட்ரெஸுக்கு என்ன கொற?” என்று புகார் வாசித்தாள்.

உத்ராவோ திடீர் பல்டியடித்தாள்.

“இங்கப்பாரு லயா! இன்னும் நீ சின்னப்பொண்ணு கெடையாது. ஒழுங்கு மரியாதையா அம்மா சொல்றதக் கேளு. இந்த மாதிரி ஒடம்ப எக்போஸ் பண்ற ட்ரெஸெல்லாம் போடக்கூடாது. அத மொத என்கிட்டக் குடு. போற வழில குப்பைல போட்டுடுறேன். அப்பறம் இந்த பலூன் அக்கா, டெய்லர் அக்கா, டிவோஷனல் அக்கா வரிசைல நீயும் நைட் ட்ரெஸ் அக்காவாகிடுவ பாத்துக்க. அக்காவுக்கு உண்டான மரியாதையேப் போச்சு.” எனவும்,

‘பின்ன நீ இப்டில்லாம் பேசினா’ என்று மனதுள் சலித்தாள் தங்கை.

அப்போது கவின் இடைபுகுந்தான்.

“நல்லா சொல்லுக்கா. மொத இந்த கேக் பிசினஸ நிப்பாட்டச் சொல்லுக்கா இவள. வீட்ல எங்கப் பாத்தாலும் எறும்புத் தொல்ல.” என்று தன் பங்கிற்கு அலுத்துக்கொண்டான்.

“உன்னாலயும் தான் எனக்கு கொசுத்தொல்ல. நான்‌ என்ன வெளிய சொல்லிட்டு இருக்கேனா?” என்று இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட, தன் அன்னையின் கையிலிருந்த இரவு உடையை வாங்கிய உத்ரா படுக்கையறைக்குள் நழுவினாள்.

பானுமதி உத்ராவை இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தான் அவள் புகுந்த வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று வற்புறுத்த, அவளும் சரியென்று நிதானமாகச் சென்றாள்.

அவள் வந்த நேரம் இரவு உணவை முடித்த விக்கி தங்கள்‌ டிடெக்டிவ் ஏஜென்சிக்கு மறுதிறப்புவிழா வைக்கும்போது யாரையெல்லாம் அழைக்க வேண்டும் என்ற பட்டியலை மடிக்கணினியில் தயாரித்துக் கொண்டிருந்தான். அவனின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் கவர்ச்சியாக அந்த இரவு உடையை அணிந்துகொண்டு வந்தாள் உத்ரா. இதை மட்டும் கவிலயா பார்த்திருந்தால் கத்தி கூச்சல் போட்டிருப்பாள்.

விக்கி அவளை நிமிர்ந்து பார்த்தவன் ஆச்சரியத்துடன், “என்ன எங்கம்மாவோட நைட் ட்ரெஸெல்லாம் போட்ருக்க? நீயும் அவங்களும் ராசியாகிட்டீங்களா?” என்றதும், உத்ராவின் காதுகளிலிருந்து புகை கிளம்பியது.

இருப்பினும் தன் நோக்கத்தினை எண்ணிப் பார்த்து‌ கட்டிலில் அவனருகில் வந்து அமர்ந்தாள். அவன் வேலையே கண்ணாக இருந்தான். அவள் திடீரென தனது கண்ணில் தூசு விழுந்தது போல் நடித்தாள். குளிரூட்டப்பட்ட அறையில் திடீரென தூசு எங்கிருந்து வந்தது என அவன் சுற்றி முற்றிப் பார்க்க, நொந்துகொண்டாள்.

அவன் மீண்டும் தன் வேலையைத் தொடர, “விக்கி எனக்கு ரொம்ப போரடிக்குது. நம்ம ரெண்டுபேரும் சேர்ந்து ஒரு கேம் வெளையாடுவோமா?” என்று ஆசைக்காட்டினாள்.

அவன், “என்ன கேம்?” என்றான் மடிக்கணினியை மூடி வைத்து.

“அது வந்து ரெண்டுபேரும் இப்படி எதுத்தாப்ல உக்காந்துக்கிட்டு ஒருத்தர் மொகத்த இன்னொருத்தர் கண் சிமிட்டாமப்‌ பாக்கனும். யார் மொதல்ல கண் சிமிட்டுறாங்களோ அவங்க அவுட்டு” என்றாள்.

“உன் மூஞ்செல்லாம் ரெண்டு செகண்டுக்கு மேல‌ பாக்க முடியாது உதி. சாரி, வேற கேம் இருந்தா சொல்லு”

“வெவ்வெவ்வே! வேற கேம்னா.... நீ வந்து என் முதுகுக்குப் பின்னாடி உன் வெரல வச்சு உனக்கு தோணுறத எழுது. நான் என்னனு சரியா கெஸ் பண்றேன்.”

“சாரி, எனக்கு எப்பவும் ஒருத்தர முஞ்சிக்கு நேரா ஃபேஸ் பண்ணி தான் பழக்கம்.”

“காலக்கொடும!”

“என்ன முணுமுணுக்குற?”

“ஒன்னுமில்ல, இன்னொரு வெளையாட்டு சொல்றேன்.” என்று ஆரம்பித்தவள் அப்படியே கால் மணி நேரமாக ஒவ்வொரு விளையாட்டுகளாக சொல்லி அயர்ந்துவிட, அவன் கொட்டாவி விட்டான்.

இது சரி வராது என்று கழிவறை செல்வதுபோல் எழுந்து படக்கென்று தரையில் உட்கார்ந்துகொண்டு கால் சுளுக்கிவிட்டதாக அவள் நாடகமாட, அவன் குதூகலமானான்.

“உண்மையாவே கால் சுளுக்கிக்கிச்சா உதி? உன்னால எந்திரிக்கவே முடியாதா? இந்தா பெட்ஷீட். அப்டியே படுத்துத் தூங்கு. இங்க பக்கத்துல படுத்து என்ன நீ ஒதைக்கிற ஒத இருக்கே? கழுத தோத்துடும் போ. இன்னைக்கு எம்மேல கருண வச்சி கடவுளா அமைச்சுத் தந்துருக்கற நல்ல ஆப்பர்சுனிட்டி இது. இத நான் மிஸ் பண்றதாவே இல்ல. ஹாவ்! கொட்டாவியா வருது பாரு. உன்ன நான் காலைல மீட் பண்றேன். பாய்” என்று சொல்லி திரும்பி படுத்துவிட்டான்.​
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
அவளோ கொலைவெறியுடன் மெதுவாக எழுந்து குளியலறை சென்றாள். அங்கிருந்த ஆளுயர கண்ணாடியில் தன் உடலை திருப்பி திருப்பி பார்த்தவள் தன்னிடம் என்ன குறையென்று குழம்பினாள். அவன் தன்னிடம் விழவில்லை என்பது பெருத்த அவமானமாக இருந்தது. கண்கள் கூட லேசாக கலங்கின. குளிர்ந்த நீரால் முகத்தை அடித்துக் கழுவியவள் தனது வழக்கமான பருத்தி இரவுஉடையை அணிந்துகொண்டு படுக்கையில் வந்து விழுந்தாள்.

“சுளுக்கு சரியாகிருச்சா உதி?”

“ம்”

அவன் இரவு விளக்கை அணைத்தான். சொப்பனம் இருவரையும் அரவணைத்தது.

மறுநாள் உத்ரா டிடெக்டிவ் ஏஜென்சியை அலங்கரிக்கும் வேலைகளில் இறங்கியிருக்க, வேணியும் விக்கியும் விருந்தினர்களை அழைக்கும் வேலையில் இறங்கியிருந்தார்கள்.

அதற்கடுத்த நாட்கள் பரபரப்பாக அதிலேயே கழிய மூன்றாம் நாள் காலை திறப்புவிழா என்பதால் கோட் சூட் அணிந்து ஜோராகக் கிளம்பியிருந்தான் விக்கி. தனது கையில் கேசினோவை மாட்டிக்கொண்டே வழக்கமான வாசனை திரவியத்தை பார்த்தவன் அதனை‌ புறந்தள்ளியவனாய் அன்று உத்ரா கொடுத்த பெட்டியை எடுத்தான்.

அதற்குள் எண்ணெய் தெளிப்பான் வடிவில்‌‌ பாட்டீல் ஒன்று இருந்ததைக் கண்டு சந்தேகத்துடனே தனது‌ ஆடையில் தெளித்தான். எதிர்பார்த்த வாசனை எதுவும் வரவில்லையெனவும் கையில் தொட்டுப் பார்த்தான். பிசுபிசுத்தது. அது சர்க்கரைத்தண்ணீர் என்ற ஞானயோதயம் வந்தபோது கோபமாக அவன் உத்ராவைத் தேட, அவள் குளியலறையிலிருந்து வெளிப்பட்டாள்.

பச்சை பார்டரில் மாதுளம்பூ நிற டிசைனர் புடவை அணிந்திருந்தவளை வைத்தக்கண் வாங்காமல் பார்த்தான்.

ஏற்கனவே தலை முடியை காயவைத்து முக அலங்காரத்தை முடித்திருந்தவள் அவன்‌ கிளம்பி‌ நிற்பதைக் கண்டதும், “அய்யோ! நீ ரெடியாகிட்டியா விக்கி? ஒரு பத்து நிமிசம்! தலைய மட்டும் கட்டிட்டேன்னா நானும் ரெடி.” என்று கிளிப்பிற்காய் அலைபாய்ந்தாள்.

பின், கைக்கு அகப்பட்டதையெடுத்து முடியை அடக்கியவள், “டட்ட டான்! நானும் ரெடி. வா போகலாம்” என்று அவன் கைக்கோர்க்க வசதியாக தன் முழங்கையை முக்கோணமாக்கி காண்பிக்க, அவன் அவள் சௌந்தர்யத்திலிருந்து மீண்டு வந்திருக்கவில்லை.

‘தென்கிழக்கு தேன்சிட்டு
செம்பருத்திப்பூ மொட்டு
செல்லங்கொஞ்சுதே தாலாட்ட!’ பாடல் அவனுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. ‘வாழை’ படத்தில் வரும் சிறுவன் நிகிலா விமலைப் பார்ப்பதுபோல் தான் விக்கியும் உத்ராவைப் பார்த்துக் கொண்டிருந்தான். அக்கணம் அவளை தான் திட்ட தேடியதைக் கூட மறந்துவிட்டான்.

“விக்கி” என்று அவள் சொடுக்கிட, அவளிலிருந்து பாதி மீண்டவனாய் தன் கரத்தைக் கோர்த்து கீழே வந்தான்.

மிளகாய்ப்பழ‌ சிவப்பில்‌ காஞ்சிபுரம் பட்டு‌‌க்கட்டி தயாராக நின்றிருந்த வேணி அலைபேசியில் யாரிடமோ, “எல்லாம் சரியா இருக்குல்ல?” என்று விவரம் கேட்டுக் கொண்டிருந்தார்.

அவர் தன் மகனுடன் வந்த உத்ராவைப் பார்த்ததும் மிதப்பாக தன் கழுத்தில் கிடந்த வைரக்கல் பதித்த இரண்டடுக்கு அட்டிகையை சரி செய்வது போல் பாவனை செய்தார். உத்ராவும் பதிலுக்கு தன் கழுத்தில் கிடந்த ஆரத்தை சரிபடுத்தினாள்.

எவ்வளவு திமிர் என்று நினைத்தவர், “விக்கி இவ இப்படி இந்த டெரக்கோட்டாவோட தான் வரப்போறாளாமா? நம்மள நாலு பேர் முன்னாடி அசிங்கப்படுத்துறதுல இவளுக்கு என்னடா அவ்ளோ சந்தோசம்? அது சரி, எங்கப்பா‌வோட உழைப்பு இப்படி வைரமா மின்னுது. இவ அப்பாவோடதையெல்லாம் சேத்து வச்சிருந்தா காலி பாட்டில இல்ல மாலையாக்கிப் போட்டுருக்கனும்?” என்று வம்பு பேச, அவர் யாரையோ‌ பேசுவது போல் மேலேப் பார்த்துக் கொண்டிருந்தாள் உத்ரா.

“இப்ப இதான் ஃபேஷன் மாம்.” என்று மகன் பிரச்சனையை முடிக்கப் பார்க்க, அவர் விடுவதாய் இல்லை.

“மண்ணாங்கட்டி!” என்றார்.

“ஆமா, அதுல செஞ்சது தான்” என்று தன் ஆரத்தை தூக்கிக் காண்பித்தாள் உத்ரா.

அவள் மேல் பாயவிருந்தவரை விக்கியின் பசி மடைமாற்றியது. இருப்பினும் சாப்பிடும் இடத்தில் வைத்து அவளை அவனிடம் வசமாக சிக்க வைத்தார்.

“நான் சொல்றத இவ கேக்கவே மாட்டா போலடா. எனக்கு பிடிக்காத விசயங்கள செய்றது தான் இவளுக்கு இஷ்டம்னா, உனக்கு பிடிக்காத காரியங்களக் கூட ரொம்ப ஆர்வமா செய்யுறா.” எனவும், கேள்வியாகப் பார்த்தான் உத்ராவை.

அவள் தெரியவில்லை என்று உதட்டைப் பிதுக்கினாள்.

“எப்டி நடிக்கிறாப் பாரு? இவ மூணுநாள் முன்னாடி அந்த அனன்யாவ மீட் பண்ணத உன்கிட்ட சொன்னாளாடா? சரியான கள்ளி!” என்று பற்ற வைத்தார்.

அவன் உறுத்து விழித்தான்.

உத்ராவோ வெகுசாதாரணமாக, “ஆமா மீட் பண்ணேன். நீ அவ அம்மா எப்படி எறந்தாங்கன்னு சொல்லலைல? அத தெரிஞ்சிக்கத் தான் அவள மீட் பண்ணேன். இதுல தப்பு என்ன இருக்கு?” எனவும், அவன் அடங்கிப்போனதை பொறுக்க முடியாமல் மேலும் கோள்மூட்டிவிட்டார்.

“விக்கி அந்த அனன்யா இவக்கிட்ட என்ன சொன்னானு கேளேன். நீதான் என்னயும் விக்கியையும் சேர்த்து வைக்கனும்னு சொல்லிருக்கா. இவளும் பதில் பேசாம வந்துருக்கா. இது உண்மையா இல்லையானு அவக்கிட்டயே கேட்டுப்பாரு.”

“விக்கி உன் அம்மா உன்னயும் என்னயும் பிரிக்க பிளான் பண்றாங்கடா.”

“இல்ல உதி, நீ அவள மொத பாக்கப்போனதே தப்பு.”

“விக்கி நான் சொல்றத கேளேன்” என்றவள் பரிதாபமாய் கெஞ்ச அவன் பாதி சாப்பாட்டிலேயே எழுந்து சென்றான்.

உத்ரா அவனை எப்படி சாமாளிப்பதென்று திணற, வேணி கண்களாலேயே அவளின் தோல்வியை பரிகாசம் செய்தார். அவள் வெறுப்பாக அங்கிருந்து எழுந்து சென்றாள்.



கலைடாஸ்கோப் திரும்பும்…

 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்

எழுதியவர்: ஷிவானி செல்வம்

அத்தியாயம் 32


வேணி பணிப்பெண் பாக்கியத்துடன் தனது ஆடிக்காரில் டிடெக்டிவ் ஏஜென்சி நோக்கிச்செல்ல, விக்கி தனது மரகத பிஎம்டபுள்யூவில் உத்ராவின் பிறந்தவீடு நோக்கிச் சென்றான்.

செல்லும் வழியில் அவளே ஆச்சரியப்படும்படி‌ மன்னிப்பு கேட்டான்.

“சாரி உதி. என் அம்மா உன் அப்பாவப் பத்தி அப்படி பேசிருக்கக்கூடாது” என்று வருந்தினான்.

“உன் அம்மா சொன்னதுல தப்பு என்ன இருக்கு சொல்லு? அவங்களுக்கு நல்ல அப்பா, நல்ல புருஷன், என்ன மகன் மட்டு…ம்”

“ஏய்!”

“இப்படி எல்லாம் நல்லா அமைஞ்சா எந்தப் பொண்ணுக்கு தான் பெரும தாளாது? அத அடிக்கடி சொல்லிக்காட்டத் தான் செய்வாங்க. ஒரு விதத்துல என் அம்மாவ விட உன் அம்மா தான் எனக்கு ரோல் மாடல் தெரியுமா? ஆமா என் புருஷன் போயிட்டான்; அதனால என்ன? நான் வாழ்க்கைல எதுவும் அனுபவிக்கக்கூடாதா? இல்ல எனக்குனு வாழ்க்கைல எதுவுமே கெடையாதானு இருக்காங்கப் பாரு. ஐ லைக் ஹெர் ஆட்டிட்டியூட். ஆனா‌‌, அவங்க என்ன உன்கிட்ட‌ இன்னைக்கு கோர்த்துவிட்டதுக்கு மட்டும் மன்னிப்பே கெடையாது. என் மேல கோவப்பட்டதுக்கு உனக்கும் தான்.”

“பின்ன நீ என்கிட்ட சொல்லாம அனன்யாவப் பாக்கப் போனதும் தப்பு தான?”

அவன் தன் நிலையிலிருந்து இறங்காதது உத்ராவுக்கு சலிப்பைத் தந்தது. முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

செல்லும்வழியில் அவளின் குடும்பத்தினரையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு போவது தான் அவனின்‌ திட்டமாக இருந்ததால் உத்ரா தாங்கள் வீட்டை நெருங்கியதும் தன் அன்னைக்கு அலைபேசியில் தகவல் தந்தாள். உடனே ஆர்ப்பாட்டமாக காரில் ஏறிக்கொண்டார்கள் அனைவரும். அமிகா முன் இருக்கையில் அமர்ந்திருந்த உத்ராவின் மடியில் சென்று ஏறிக்கொண்டாள்.

கார் ‘சத்யம் டிடெக்டிவ் ஏஜென்சி’யை நோக்கி நிதானமாகப் பயணித்தது.

அங்கு அந்தப் பெயர்ப்பலகையைச் சுற்றி அலங்காரப் பலூன்கள் சரமாக தொங்கவிடப்பட்டிருக்க, வாசலில் நின்ற வாழைமரங்கள் நான்கும் அனைவரையும் வரவேற்றன.

முக்கியமான தெரிந்தவர்களுக்கு மட்டும் தகவல் சொல்லியிருந்ததால் நூறு பேருக்கு மேல் இல்லை. விருந்தினர் வந்து செல்லும் தருணம் மட்டும் புகைப்படமெடுக்கவும், பாதுகாப்பு கொடுக்கவும் பத்துபேரை நியமித்திருந்தான் விக்கி. மறுநாள் அந்தப் புகைப்படங்களை பத்திரிக்கை அலுவலகங்களுக்கு அனுப்பி விளம்பரம் செய்யச்சொல்வது அவன் திட்டங்களில் ஒன்று.

கவிலயா தனது அலைபேசியில் அனைத்தையும் காணொளியாக பதிவு செய்துகொண்டிருந்தவள் வெளியே நிற்க பொறுமையின்றி, “யாருக்காக காத்துருக்கோம்?” என்று வினவியபோது,

“சஸ்பென்ஸ்” என்றுவிட்டான் விக்கி.

ஏன் உத்ராவுக்குக் கூட வரப்போவது இன்னாரென்று தெரியாது. விக்கி, வேணி‌ இருவரும் இணைந்து தான் அந்த நபரை தேர்வு செய்தார்கள். வேணி‌ அழைத்தால் தட்டாமல் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளும் அவரின் சில தோழிகளும் இதில் கலந்திருந்தனர்.

அவர்கள் உத்ராவைப் பார்த்ததும், “இவ தான் விக்கி கல்யாணம் பண்ணிக்கிட்டவளா வேணி?” என காது கடிக்கவும், தலையசைத்தார் அவர்.

“ச்சே! விக்கிக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்ல‌ வேணி. அவன் ஆள்‌ எவ்ளோ‌ அழகு! நம்ம சொசைட்டிக்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத பொண்ணக் கூட்டிட்டு வந்து உன்ன அசிங்கப்படுத்திட்டானே இப்படி?” என்று பொல்லாப்பு பேசினர்.

அதை கேட்டுவிட்ட உத்ராவின் முகம் சிறுத்துப்போக, வேணியோ தட்டிப்பேசினார்.

“இதுல அசிங்கம்லாம் ஒன்னுமில்ல மாலினி. இவ வாசனோட சாய்ஸ். அவரோட சாய்ஸ உங்களால கொற சொல்ல முடியுமா என்ன?” என்று தானே அவர் தேர்வு தான் என்று குறிப்பால் உணர்த்த, உடனே பேச்சை மாற்றினர் தோழிகள், அதுவும் சரி தான் என்று.

அனைவரும் வாசலையேப் பார்த்திருக்க விக்கி மட்டும் யாருமறியாமல் சுவற்றில் முதுகை தேய்த்துக் கொண்டிருந்தான் எருமையைப் போல். என்னவானதென்று உத்ரா அவனிடம் விசாரிக்க எத்தனிக்க, வாசலில் வழக்கறிஞர் குருமூர்த்தி வந்து கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்ததும் அவன் ஓடிச்சென்று உபசரித்தான். மேற்கொண்டு அவர்களை காத்திருக்க வைக்காமல் தானும் தனது அரசு வாகனத்தில் வந்திறங்கினார் காவல் ஆணையர் கணபதி. அவரையும் உற்சாகமாக வரவேற்றவன் இருவரையும் உள்ளே‌ அழைத்துச் சென்றான்.

வந்திருப்பவர்களை கண்டதும் அனைவருக்குமே ஆச்சரியம் தான். புகழ்பெற்ற வழக்கறிஞர், காவல் ஆணையர் என இருவரும் இணைந்து வேணி நீட்டிய தட்டிலிருந்த கத்தரிக்கோலையெடுத்து நீல வண்ண ரிப்பனை கத்தரிக்க, மற்றவர்கள் கரகோஷத்தால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

உள்ளே நுழைந்ததும் அனைவரும் கண்டது வாசனின் ஆளுயர புகைப்படத்தின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கடி குத்துவிளக்கைத் தான். விருந்தினர் இருவரும் தீபமேற்றியது போக மீதமிருந்த மூன்று திரிகளையும் வேணி, உத்ரா, பானுமதி என மூவரும் பற்ற வைத்தனர். ஒரு பக்கம் பாக்கியம் அனைவருக்கும் லட்டு வழங்க, மறுபக்கம் உத்ரா அலுவலகத்தில் செய்திருந்த அலங்காரங்களுக்காக அனைவரும் அவளைப் பாராட்டித் தள்ளினர்.

விக்கி உத்ராவை காவல் ஆணையர் கணபதிக்கு அறிமுகம் செய்து வைத்தபோது, “ஓ! நீ தான் உத்ராவாமா? நீ அவன் வாழ்க்கைத்துணைவியா வர்றதுக்கு முன்னாடியே உனக்காக விக்கி ரொம்ப மெனக்கெட்டுட்டாம்மா” எனவும், அவர் கூற வருவது புரியாமல் விழித்தாள்.

“விக்கி அத நீ இன்னும் சொல்லலயா உன் வைஃப்கிட்ட? அதாம்மா உன்ன ஆக்சிடன்ட் பண்ணி விட்டாங்களே அந்தப் பெட்டிக்கட முருகேசன் ஆளுங்க? அவங்கள பெயில்லகூட வெளிய வர முடியாதபடி பண்ணிட்டான் விக்கி. இப்படி உம்மேல உயிரா இருக்க ஹஸ்பண்ட் கெடைக்க நீ குடுத்து வச்சிருக்கனும்மா.” எனவும், மின்சாரத்தால் தாக்குண்டாள்.​
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
விக்கியை அதிர்ச்சியும் கேள்வியுமாக அவள் நோக்க, அவன் சமாளிப்பாக வேறொரு விஷயத்தைப் பேசினான். அதற்கு தோதாய் கையில் பரிசுடன் வந்த மகேஷும் சிக்கினான்.

பின், அனைவரும் காவல் ஆணையருடன் இணைந்து புகைப்படமெடுக்க, அவருக்கு நினைவு பரிசு ஒன்றை வழங்கி கௌரவித்தான். அதைப் பெற்றுக்கொண்டதோடு தனது கடமையைச் செய்ய அலுவலகத்திற்கு புறப்பட்டார்.

பானுமதி வழக்கறிஞர் குருமூர்த்தியை கண்டதிலிருந்து அவரிடம் பேசவேண்டுமென்று துடித்தார். தனியாக அவர் அங்கிருந்த கோப்புகளை பார்வையிட்டபோது அவரருகில் சென்று நலம் விசாரித்தார். குருமூர்த்தி அவரை ஞாபகம் வைத்து பதில் கூற, தாமதியாமல் அமிகா வழக்கைப் பற்றி கேட்டார்.

அவர்களிருவரும் பேசிக்கொள்வதை தூரத்திலிருந்து பார்த்த உத்ரா அவர்களருகில் சென்றாள். அப்போது தான் குருமூர்த்தி அவளுக்குக்கூட தெரியாத ரகசியம் ஒன்றை சொன்னார்.

“நீங்க கேக்கறதப் பாத்தா விசயம் எதுவும் உங்களுக்கு தெரியாது போலயே? விக்கி உங்கக்கிட்ட சொல்லலையாம்மா? அமிகாவ கேட்டு அந்த நிகில் குடும்பம் தொடுத்த வழக்க அவங்களே வாபஸ் வாங்கப் போறாங்கன்னு?”

“சார் என்ன சொல்றீங்க! நீங்க சொல்றதெல்லாம் உண்மையா? உத்ரா இது பத்தி உனக்கு ஏதாவது தெரியுமாம்மா? அந்த அரக்கக்கூட்டம் எப்படி நம்ம அமிகாவ விட்டுச்சு? நம்ம ரத்தத்த உறியாமப் போகாதுங்கன்னு நெனச்சேனே? இது எப்படி சாத்தியமாச்சு வக்கீல் சார்?” என்று ஆர்வம் தாங்காமல் வினவவு‌ம்,

“இதுக்கெல்லாம் காரணம் ஒரே ஆள் உங்க மருமகன் விக்கி தாம்மா. அவன் ஒரு முயற்சியா தான் அவனுக்கும் உத்ராவுக்கும் கல்யாணமானத சொல்லி அவங்கப் பக்கம் எவ்வளவு வீக்குங்குறத எக்ஸ்பிளைன் பண்ணச் சொன்னான். நானும் அவங்க தரப்பு வக்கீலப் புடிச்சு விசயத்தெல்லாம் சொன்னேன்.

விக்கி சொன்ன மாதிரியே அவருக்கும் இதுல லாபம் இருக்கற மாதிரி பாத்துக்கிட்டேன். கடைசில அவங்களே கேஸ வாபஸ் வாங்கறதா சொல்லிட்டாங்க. நேத்து தான் விக்கிக்கிட்ட இந்த குட் நியூஸ சொன்னேன். அவன் உங்கக்கிட்ட‌ சொல்லிருப்பானு நெனச்சேனேம்மா? ஒருவேள சர்ப்ரைஸ் பிளான் எதுவும் பண்றான் போல. நான் உங்கக்கிட்ட சொல்லிட்டதா காமிச்சிக்க வேணாம்.” என்று கெஞ்சலாகக் கேட்டுக்கொண்டார்.

விக்கி மகேஷுடன் பேசிக்கொண்டிருந்ததால் இக்காட்சி அவன் கண்ணில் படவில்லை. ஆனால், அது வேணியின் கண்ணில் பட்டுவிட்டது. நேரே அவர்களருகில் வந்தார். வேணியைப் பார்த்ததும் விடைபெற்றுக்கொண்டனர் பானுமதியும் உத்ராவும்.

அவர் விசயத்தைக் கேட்டதும் ஒன்றுவிடாமல் அனைத்தையும் புட்டு புட்டு வைத்தார் குருமூர்த்தி. அப்போது தான் தன் மகன் உத்ராவை திருமணம் செய்துகொண்ட காரணம் புரிந்தது வேணிக்கு. மிளகாயை அரைத்துப் பூசியதுபோன்ற காந்தலில் இருவரையும் ஒரு வழியாக்கக் காத்திருந்தார்.

உத்ரா குருமூர்த்தியின் மூலம் தானறிந்த விசயத்தை உறுதிபடுத்துவதற்காக விக்கியிடம் செல்ல, அவ‌ன் மகேஷிற்கு அவளை தன் மனைவியென்று அறிமுகப்படுத்தி வைத்தான்.

மகேஷ், “எப்படா? எப்படிடா?” என்று கார்போனேடட் குளிர்பானமாய் பொங்க,

“நீ அன்னைக்கு ஹாஸ்பிடல்ல கொண்டு வந்து குடுத்தியே மால, தாலி? அதுல தான் எங்க ரெண்டுபேரோட கல்யாணமும் நடந்துச்சி.” என்று அவனுக்கு மின்னல் அதிர்ச்சியைக் கொடுத்தான் விக்கி.

“ஆனா, அது வேற யாருக்கோன்னு சொன்னியேடா? அன்னைக்கு ஆஃபிஸ்ல கிளையண்ட் மீட்டிங் மட்டும் இல்லனா உன்ன கையும் களவுமா பிடிச்சிருப்பேன். பைதவே புதுப்பொண்டாட்டி, புது ஆஃபிஸ் கலக்கறப்போ. ஆனா, உன் ஐ.டி கம்பெனி கனவு தான் அடி வாங்கிருச்சி.” என்று வருத்தமாகச் சொன்னான்.

“ஏன்? என்னாச்சு?” என்று பதறிப்போய் கேட்டாள் உத்ரா.

“இவன் பழைய காதல் கத உனக்கு தெரியாதாம்மா?” என்றவன் ஆழம் பார்க்க,

“அது தெரியும். நீங்க கவனிச்சிட்டிருந்த கம்பெனி என்னாச்சினு சொல்லுங்க?” என்று மூக்கை வெட்டினாள்.

“அது இப்ப நஷ்டத்துல போயிக்கிட்டிருக்கும்மா. எல்லாம்‌ விக்கி இருந்த வர தான். வேணி ஆன்ட்டி அத எங்கிட்டயே குடுக்கச் சொல்றாங்க. விக்கி தான் இழுத்தடிச்சிட்டு இருக்கான்.” எனவும், உத்ரா‌ வெகுண்டாள்.

“விக்கி அங்க இல்லாதனால தான் கம்பெனி நஷ்டத்துல இருக்குனு நீங்களே சொல்றீங்க. அவன் அங்க வந்து பொறுப்பேத்துக்கிட்டா இந்த நெலம நிச்சயம் மாறும் இல்லயா? ஒருநாள் கண்டிப்பா அந்த கம்பெனிய பழைய நெலைக்கு கொண்டு வருவான் விக்கி”

இவ்வாறு உத்ரா மிடுக்காகக் கூறிய பதில் விக்கிக்கு சகிக்கவில்லை போலும், அதட்டினான் அவளை.

“எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாத உதி. நான் இனி எக்காரணங்கொண்டும் அங்க திரும்பறதா இல்ல. நீ கண்டபடி ஒளராத” என்று குட்டினான்.

மகேஷ் உத்ராவைப் பார்த்து கிண்டலாக சிரித்துக்கொண்டே, “அட! அவங்க சொல்றதும் சரி தான விக்கி? ஆனா, நீ எப்பவாவது அந்தக் கம்பெனிய விக்கிறதா இருந்தா உன் நண்பன் இந்த ஏழ குசேலனுக்கு தான் விக்கனும்” எனவும், விக்கியும் அவனோட இணைந்து சிரித்தான்.

உத்ராவோ ரோசமாக அங்கிருந்து விலகினாள்.

மகேஷைப் பார்த்துக்கொண்டே உத்ராவிடம் வந்த கவின், “அக்கா இவரு அந்த விக்டரி டெக் சொலுஷனோட டெம்பரரி சிஓஓ தான? இவர நான் அங்கப் பாத்துருக்கேன். ஆனா, இவர அங்க இருக்குறவங்கல்லாம் தப்பா சொல்றாங்கக்கா” என்றவன் சொல்லும்போது, அது அவளின் காதில் விழாத வண்ணம் விக்கி அழைத்தான்.

குருமூர்த்தி விடைபெறுவதால் அவரை வழியனுப்ப அழைத்தான். அவளும் உடனே விரைந்தாள். அதன் பின் அன்றைய நாள் மகேஷைப் பற்றி பேச உடன்பிறப்புகளுக்கு காலமும் சூழலும் ஒத்துழைக்கவில்லை.



கலைடாஸ்கோப் திரும்பும்..


 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
இன்னும் ஏழு அத்தியாயங்களில் கதை நிறைவுபெறவிருக்கிறது ஃப்ரெண்ட்ஸ். இக்கதை உங்களுக்கு பிடித்திருப்பின் தாமதியாமல் உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரைப்பீர்களாக🙂
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
இன்று ஹாட்ரிக் அத்தியாயங்கள் ப்ரெண்ட்ஸ்🥳
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
உங்களுக்கான அத்தியாயம் முப்பத்துமூன்று இதோ...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்

எழுதியவர்: ஷிவானி செல்வம்

அத்தியாயம் 33


விழா முடிந்து வீட்டிற்கு வந்ததும் விக்கி வேகவேகமாக மின்தூக்கியின் பொத்தானை அழுத்தி தனதறைக்குச் சென்றான்.

உத்ரா தான் மின்தூக்கியில் ஏறுவதற்கு முன்பே அவன் மேலே சென்று விட்டதை குழப்பமாகப் பார்த்தாள்.

அவள் தனியாக நிற்பதைப் பார்த்ததும் பின்னால் வந்த வேணி பிடித்துக் கொண்டார்.

“ஏற்கனவே வேற ஒருத்தனுக்கு நிச்சயம் பண்ண உன்ன என் பையன் ஏன் கல்யாணம் பண்ணானு நானும் முடியப் பிச்சி யோசிச்சிப் பாத்தேன். ஒருவேள உன்ன லவ் பண்றானோனு கூட சந்தேகம். ஆனா, இப்ப தான உண்ம தெரியுது. அவன் இரக்கக்குணத்துல வாசனையே மிஞ்சிட்டானு.

பைத்தியக்காரன் உன் வீட்டுக் கொழந்தைக்காக தன் வாழ்க்கையையே அடமானம் வச்சிட்டான் பாரேன். நீ உண்மையிலேயே அவனுக்கு நல்லது எதுவும் செய்யனும் நெனச்சா அவன விட்டு வெலகிரு.

ச்சே! ஒரு காலத்துல எப்படியிருந்தான் எம்புள்ள! இப்ப என் புள்ள இருக்க நெலமையப் பாத்தியாடி பாக்கியம்? இந்தக் காதல் மட்டும் தான் ஒலகமா என்ன? நானும் அவன் அப்பாவும் பண்ணிடாத காதலையா அவன் பண்ணிடப்போறான்? ஏன் வாசன் போனதுக்கப்பறம் நான் இல்ல? தாடி வளத்து குடிச்சிட்டு திரியுறது தான் நம்ம எழப்போட வலிய சொல்லுமா? முட்டாள்! சரியான முட்டாள்டி அவன். இல்ல நான் தான்டி பாக்கியம் என் புள்ளய சரியா வளக்காம விட்டுட்டேன்.

நீ என்ன பாக்குற? போ முடிஞ்சா அவன் வாழக்கைல இருந்து முழுசா வெலகிப்போ. நான் நிச்சயம் அவன் மனச மாத்தக்கூடிய நல்லப்பொண்ணா பாத்து அவன் வாழ்க்கைல கொண்டு வருவேன். அவன என் பழைய விக்கியா மாத்துவேன்‌!” என்று உறுதியேற்பது போல் கூறினார்.

உத்ரா அவரின் பேச்சில் சிலைபோல் நின்றவள் மின்தூக்கியின் பொத்தானை அழுத்தி தங்கள் படுக்கையறைக்குச்‌ சென்றாள்.

அங்கு மொத்த உடையையும் அவிழ்த்துப்போட்டு ஒரு தேங்காய்ப்பூ துண்டை மட்டும் கட்டிக்கொண்டு கண்ணாடியில் தன் முதுகைப் பார்க்க முயன்று கொண்டிருந்தான் விக்கி.

அவனை என்ன செய்தால் தகும் என்று பார்த்தவள் சிறிது நேரத்திற்கு பின் தான் கவனித்தாள் அவன் முதுகிலிருந்த தடிப்புகளை. அவன் மேலிருந்த இனிப்புச்சுவைக்காக கட்டெறும்புகள் குதறி வைத்திருந்தன.

உடனே, “விக்கி என்னாச்சு? உன் முதுகுல ஏன் தடிப்பா இருக்கு?” என்று பதறி அவன் முதுகில் அவள்‌ வைத்தக் கையை படக்கென்று தட்டிவிட்டான்.

“பெர்ஃப்யூம் பாட்டில்னு சுகர் சிரப்ப தந்திருக்கல்ல நீ? வெளையாட்டுக்கும் ஒரு அளவிருக்கு உதி. உன்ன நம்புனேன்ல? என்ன சொல்லனும். என்னைக்கு தான் நீ என்ன மனுஷனா மதிக்கப்போறியோ தெரியல. இவ்வளவு நாள் என் மனச நோகடிச்சது பத்தாதுனு ஒடம்பயும் புண்ணாக்கிட்ட. உன்ன வெறுத்துரக்கூடாதுனு நானும் ட்ரை பண்றேன் உதி. ஆனா, நீ உனக்கு மட்டும் தான் உணர்ச்சிகள் இருக்கு; மத்தவங்கலாம் ஜடங்கிற ரேஞ்சுக்கு நடந்துக்கற. எல்லாம் ஒரு அளவு தான் உதி. இதுக்கு மேலயும் என் பொறுமைய சோதிக்காத சொல்லிட்டேன்.” என்று காட்டமாய் சொல்லிவிட்டு குளியலறை நுழைந்தான்.

உள்ளே அவன் தூவாலைக்குழாயின் கீழ் நின்றிருப்பதை நீரின் சத்தத்தை வைத்தே உணர்ந்துகொண்டவள், அந்த குளியலறைக்கதவை வெறித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

அவன் தலையை துவட்டிக்கொண்டே வரவும், “ஐஸ் கியூப்ஸ் எடுத்துட்டு வந்து ஒத்தடம் குடுக்கவா விக்கி? ஐ அம் ரியல்லி வெரி சாரிடா. நான் சும்மா வெளையாட்டுக்கு பண்ணது உன்ன இந்தளவுக்கு பாதிக்கும்னு நெனைக்கல.” என்று மனதார மன்னிப்பு வேண்டினாள்.

அவனோ அவளை கண்டுகொள்ளாமல் சுவரோடு ஒட்டிய அலமாரியில் தனது இரவு உடையை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தான்.

“நீ முன்னாடி சொன்னது கரெக்ட் தான் விக்கி. நம்ம ரெண்டுபேரும் ஃப்ரெண்ட்ஸா இருக்கக்கூட தகுதி இல்லாதவங்க. அதுவும் உன் தகுதிக்கு நான் துளியும் பொருத்தம் இல்லாதவ. வக்கீல் குருமூர்த்தி எல்லாத்தையும் எங்கக்கிட்ட சொல்லிட்டாரு. அமிகா பிரச்சன முழுசா முடிஞ்சதும், அவர்கிட்ட சொல்லி உனக்கும் எனக்கும் விவாகரத்து‌ ஃபைல் பண்ணச் சொல்லிரலாம்.” என்றதும், உடை தேடிக் கொண்டிருந்தவன் திடுக்கிட்டு அவள் முகத்தை ஏறிட்டான்.

அது கல் போல் இறுகி இருந்தது.

“என்ன மூடுஸ்விங்ல இருக்கியா நீ? வழக்கம் போல என்ன எப்படி வேணாலும் திட்டிக்கோ. ஆனா டைவர்ஸ் மட்டும் கேக்காத.” என்றான் திண்ணமாக.

“அதான் ஏன்? உன் அப்பாவுக்காக பாக்குறியா? அப்போ எனக்காக எப்ப பாப்ப?” என்றதும், புரியாமல் பார்த்தான்.

“நானும் உணர்ச்சிகள் நெறஞ்ச ஜென்மம் தான் விக்கி. பையனுக்கு மட்டும் தான் பொண்ணோட உடல் மேல ஈர்ப்பு வருமா? பொண்ணுக்கு பையன் மேல வராதா? இதோ தண்ணி சொட்ட சொட்ட நிக்கிற உன் ஆப்ஸப் பாத்து இப்பக்கூட எனக்கு ஒடம்பு சிலுக்குதுடா. ஐஸ் கியூப் எடுத்துட்டு வரேனு சொன்னேனே எதுக்குனு‌ நெனைக்கிற? கொஞ்சமாவது உன் முதுகத் தொட்டு திருப்தி பட்டுக்கத் தான். நீ இப்படி சாமியார் மாதிரி இருந்து என்ன தெனமும் ஏங்க வைக்கிறடா. என் இளமைய வீணடிக்கிற.

ஆமா நான் கல்யாணம் வேணாம்னு அடம்புடிச்சவ தான். ஆனா அதுக்குனு எந்த சொகத்தையுமே அனுபவிக்காம மேலோகம் போக எனக்கு இஷ்டமில்ல. ஒரு கொழந்தையோட கன்னத்த கடிக்கிற மாதிரி உன் கன்னத்த பொய்க்கடி கடிக்கனும். உன் தலைமுடிக்குள்ள என் கைய விட்டு அலையனும். கழுத்துல என் முகத்த வச்சு தேய்க்கனும். முடி டிஸ்டர்ப் பண்ணாலும் உன் தொப்புள்ல வாய் வச்சி ஊதனும். உன் ரெண்டு உள்ளங்கையையும் விரிச்சு வச்சி மாறி மாறி முத்தம் குடுக்கனும்.

கைப்படாத உன் தொடைலக் கிள்ளி உனக்கு கூச்சம் வர‌ வைக்கனும். உன் உள்ளங்கால்ல என் கைவிரல் நகத்தால கோடுகிறுக்கி கூச வைக்கனும். இப்படி நெறைய நெறைய ஆசைகள என் நெஞ்சுக்குள்ள சொமந்துட்டு இருக்கேன்டா. இது எதுவுமே எனக்கு கிடைக்காதுனு தெரிஞ்சும் நான் ஏன் உன்கூட இருக்கனும் சொல்லு?”

அவளிடமிருந்து இப்படியொரு வெடிப்பை அவன் எதிர்பார்க்காததால் ஸ்தம்பித்து நின்றான்.

“என்ன உன்னால பொண்டாட்டியா நெருங்க முடியாதுனா ஏன் என் கழுத்துல தாலிக்கட்டின? என் அம்மா உயிர் பொழைக்கனும்னா? அவங்க மேல ஏன் உனக்கு அவ்வளவு அக்கற?”

“ஏன் அக்கறனா கேக்குற? என் அப்பா உன்கிட்ட கடைசி ஆசையா நீ என்ன கல்யாணம் பண்ணிக்கனும்னு கேட்டப்போ நீ அதுக்கு சம்மதம் சொல்லல? சத்தியமா அதுக்கு நன்றிக்கடன் கெடையாது நான் செஞ்சது. என் அப்பாவோட விருப்பம் எனக்கு முன்னாடியே தெரியும்னாலும், அந்த எண்ணத்துல ஒன்னும் நான் உன்கூட சுத்தல. அதுல உன் மேல மரியாத தான் ஜாஸ்தியாச்சு. சாகப்போற ஒரு உசுரு சந்தோசமா போகட்டுமேனு நீ அவர்கிட்ட சொன்ன அந்தப் பொய் தான் எனக்கு உன் அம்மா விசயத்துல உன் கழுத்துல தாலி கட்னாலும் தப்பில்லைங்கிற தைரியத்த தந்துச்சி.”

“அப்போ அமிகா பிரச்சன தான் நம்மள இப்ப ஒன்னு சேர்த்து வச்சிருக்குல்ல?”

“இல்ல. நான் அப்படி நெனைக்கல.”

“அப்போ வேற எப்படி விக்கி? உனக்கு எம்மேல காதல் பொங்கி வழிஞ்சதாலன்னு சொல்லப்போறியா? நீ அப்படி சொன்னாலும் நான்‌ நம்புற நெலமைல தான் இருக்கேன். என் மரமண்டைக்கு தான் எதுவுமே புரியாதே விக்கி. என்னால நான் தெனமும் பாக்கறவங்களையே எப்படினு அவதானிக்க முடியலையே, நானெல்லாம் என்ன டிடெக்டிவ் எழவு சொல்லு?

வெக்கமாயிருக்கு விக்கி. இது வர எனக்கு நீ‌ நல்லது மட்டும் தான் பண்ணிருக்க. உன்னப்போய் எப்படில்லாம் பேசிருக்கேன் பாரு? சாரிடா, ரொம்ப சாரி. ஆனா என்னால உனக்கு எந்த நல்லதும் செய்ய முடியலையேனு கில்டியா இருக்குடா. அதுவும் இந்த ஒலகத்துல இருக்க எல்லாப் பொண்ணுங்களும் அழிஞ்சி கடைசி‌ப்பொண்ணா நான்‌ நின்னாக்கூட நீ என்ன சீண்டமாட்ட. அந்தளவுக்கு உன் ரசனைக்கு தகுந்தவளா நான் இல்லாம இருக்கேன்” என்றவள் குமுற, அவனின் இரு கரங்களும் அவளின் தோள்களின் மீது விழுந்தன.​
 
Last edited:
Status
Not open for further replies.

New Threads

Top Bottom