Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சிவகாமியின் சபதம் - பாகம் - 2 :காஞ்சி முற்றுகை

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
90
Points
48
நாற்பத்தைந்தாம் அத்தியாயம்

பிக்ஷுவின் மனமாற்றம்

பாறைகளைப் பார்வையிடுவதற்காக மகேந்திர பல்லவர், ஆயனர், சத்ருக்னன் ஆகிய மூவரும் மடத்திலிருந்து புறப்பட்ட போது, வாசலில் சிவகாமி வந்து நின்றாள். மகேந்திர பல்லவர் தற்செயலாக அவளைப் பார்ப்பது போலப் பார்த்து, "சிவகாமி, நீ கூட எங்களுடன் வருகிறாயா?" என்று கேட்டார். சிவகாமி மறுமொழி சொல்லத் தயங்கினாள். ஆயனர் அப்போது, "வா, சிவகாமி! போய் விட்டு வரலாம், இங்கே நீ தனியாக என்ன செய்யப் போகிறாய்?" என்றார். எனவே, சிவகாமியும் புறப்பட்டாள்; அவளைத் தொடர்ந்து ரதியும் சுகரும் கிளம்பினார்கள்.

சிவகாமி பின் தங்கியதற்குக் காரணம் இருந்தது. பெட்டிக்குள் சிங்க இலச்சினையை வைத்துவிட்டுச் சிவகாமி நிமிர்ந்தபோது தூண் மறைவில் காவித்துணி தெரிந்தது. தூணில் மறைந்திருப்பது புத்த பிக்ஷுதான் என்பதையும் உணர்ந்தாள். அன்று அதிகாலையில் வந்து அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த புத்த பிக்ஷு வாசலில் வேற்று மனிதர் குரல் கேட்டதும், "பின்புறமாகப் போய்விடுகிறேன்" என்று சொல்லிவிட்டுப் போனார். போனவர், எப்படித் திரும்பி வந்தார். ஏன் மறைந்து நிற்கிறார்?" என்று சிவகாமிக்குச் சற்று வியப்பாயிருந்தது.

நேற்று வரைக்கும் இம்மாதிரி சந்தர்ப்பம் நேரிட்டிருந்தால் அவள் உடனே கூச்சல் போட்டிருப்பாள். ஆனால், காலையில் புத்த பிக்ஷுவுடன் பேசிக் கொண்டிருந்ததிலிருந்து அவளுடைய மனம் அவர் விஷயத்தில் அடியோடு மாறிப் போயிருந்தது. அவர் மேல் முன்னம் அவளுக்கு ஏற்பட்டிருந்த சந்தேகங்கள் எல்லாம் நீங்கி நல்ல எண்ணமே உண்டாகியிருந்தது. இந்த மனமாறுதலுக்குக் காரணமாயிருந்தது என்னவென்றால் குமார சக்கரவர்த்தி மாமல்லரைப்பற்றிப் பிக்ஷுவின் அபிப்பிராயம் அடியோடு மாறிவிட்டதாக அவர் கூறியது தான்.

"மூட ஜனங்கள் கூறியதைக் கேட்டு, மாமல்லரைப் பயங்கொள்ளி என்றும், கோழை என்றும் சொன்னேன். அப்படிச் சொன்ன நாவை அறுத்துக் கொள்ளலாம் என்று இப்போது தோன்றுகிறது. போர்க்களத்தில் நானே நேரில் பார்த்தேன். அடடா! 'வீரத்துக்கு அர்ச்சுனன்' என்ற பேச்சை இனிமேல் விட்டு விட்டு, 'வீரத்துக்கு மாமல்லன்' என்று வழங்க வேண்டியதுதான். ஆயிரம் பேருக்கு மத்தியில் தன்னந்தனியாக நின்று வாளைச் சுழற்றி எப்படி வீரப்போர் புரிந்தான்! அசகாயசூரன் என்றால் மாமல்லன்தான்."

இவ்விதம் புத்த பிக்ஷு மாமல்லருடைய வீரத்தை வர்ணித்ததுடன், அவருடைய குணத்தையும் பாராட்டினார். மாமல்லனை 'ஸ்திரீலோலன்' என்று தாம் கூறியதும் பெருந்தவறு என்று அறிந்து கொண்டதாகவும், பெண்களைக் கண்ணெடுத்தே பார்க்காத பரிசுத்தன் என்றும், அப்பேர்ப்பட்ட உத்தம வீர புருஷனைக் காதலனாகப் பெறுவதற்கு எந்த இராஜகுமாரி பாக்கியம் செய்திருக்கிறாளோ என்றும் சொல்லச் சொல்ல, சிவகாமி தன்னுடைய மகத்தான பாக்கியத்தை எண்ணி இறும்பூது அடைந்ததுடன், புத்த பிக்ஷுவின் மீது முன்னெப்போதுமில்லாத நல்ல எண்ணமும் விசுவாசமும் கொண்டாள். அசோகபுரத்தில் திடீரென்று புத்த பிக்ஷு மறைந்த காரணத்தை ஆயனர் கேட்டதற்கு, நாகநந்தி கூறியதாவது; "அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறீர்கள்? கங்க நாட்டுத் துர்விநீதனை நான் அறிவேன். பௌத்த சங்கத்தைச் சேர்ந்தவன், என்னிடமும் அவனுக்குப் பக்தியுண்டு. குண்டோதரன் அன்று ஓர் ஓலை கொண்டு வந்து கொடுத்தானல்லவா? 'துர்விநீதன் காஞ்சி மேல் படை எடுத்து வருகிறான்' என்ற செய்தி அந்த ஓலையில் இருந்தது. அத்தகைய விபரீத முட்டாள்தனமான காரியத்தை அவன் செய்யாமல் தடுக்கலாம், திரும்பிப் போகச் சொல்லலாம் என்ற எண்ணத்துடன்தான் இரவுக்கிரவே ஓடினேன். குண்டோதரனுடைய குதிரையைக் கூட அதற்காகத்தான் எடுத்துக் கொண்டேன். 'என் முயற்சி பயன்படவில்லை, நான் போவதற்குள் போர் மூண்டுவிட்டது. நான் எதிர்பார்த்தபடியே துர்விநீதன் வீர மாமல்லனால் முறியடிக்கப்பட்டு ஓட நேர்ந்தது. எங்கே ஓடினானோ, என்ன கதி அடைந்தானோ தெரியாது!"

இப்படியெல்லாம் மாமல்லருடைய புகழைக் கேட்கக் கேட்கச் சிவகாமிக்கு உள்ளம் குளிர்ந்ததுடன் புத்த பிக்ஷுவின் மீது அவளுடைய விசுவாசம் அதிகமாகிக் கொண்டே வந்தது. "சுவாமி! தாங்களும் இந்தக் கிராமத்தில் எங்களுடனேயே தங்கியிருந்து விடுங்களேன்!" என்று சொன்னாள். அதற்குப் பிக்ஷு; "இல்லை அம்மா, இல்லை! ஓரிடத்தில் தங்கியிருப்பது என்னுடைய தர்மத்துக்கே விரோதம். தென்னாடு இப்போது என்னைப் போன்ற பிக்ஷு யாத்திரிகர்களுக்குத் தகுந்த இடம் இல்லை. தெற்கேயிருந்து பாண்டியன் படையெடுத்து வருகிறான். வடக்கேயிருந்து சளுக்கன் படையெடுத்து வருகிறான். உங்கள் இருவரையும் பத்திரமான இடத்தில் விடவேண்டுமென்றுதான் கவலைப்பட்டேன். இந்தக் கிராமம் உங்களுக்குத் தகுந்த இடம்தான். புத்த மகாப் பிரபுவின் அருள் இருந்தால் யுத்தமெல்லாம் முடிந்த பிறகு, மறுபடியும் உங்களைப் பார்ப்பேன். ஆயனரே! அடுத்த தடவை உங்களைப் பார்க்க வரும்போது, அஜந்தா இரகசியத்தைக் கட்டாயம் அறிந்துகொண்டு வருவேன். சிவகாமி! இங்கேயே உங்களுடன் தங்கி; உன்னுடைய தெய்வீக நடனக் கலையைப் பார்த்துக் கொண்டிருக்க எவ்வளவோ இஷ்டந்தான். ஆனால் அதற்குக் கொடுத்து வைக்க வேண்டாமா?..." என்று பிக்ஷு கூறியபோது, அவருடைய குரலில் தொனித்த கனிவு, சிவகாமியின் உள்ளத்தை உருக்கிவிட்டது.

இந்தச் சந்தர்ப்பத்திலேதான், வாசலில் குண்டோதரன் கதவை இடிக்கும் சத்தம் கேட்டது. அப்போது பிக்ஷு, "ஆயனரே! உங்களுடைய சிஷ்யன் குண்டோதரன் என் பேரில் அநாவசியமான சந்தேகம் ஏதோ கொண்டிருக்கிறான். என்னை இங்குப் பார்த்தானானால் வீணாக வலுச் சண்டைக்கு வருவான். இன்னும் யாரோ வேற்று மனிதர்கள் வாசலில் வந்திருப்பதாகக் கூடத்தோன்றுகிறது. நான் இப்படியே பின்புறமாகப் போய் விடுகிறேன்; விடை கொடுங்கள்" என்று கூறிப் புறப்பட்டார். போகும்போது, "சிவகாமி! மறுபடியும் உங்களைப் பார்க்கிறேனோ என்னவோ? ஆனால், நான் எங்கே போனாலும், என்ன செய்தாலும் உன்னை மறக்க முடியாது. உன்னை மறந்தாலும் உன் நடனத்தை மறக்க முடியாது" என்று கனிந்த குரலில் சொல்லிவிட்டுப் போனார்.

அப்படிப் போனவரைத் திடீரென்று உள் அறையில் தூண் மறைவில் பார்த்ததும் சிவகாமிக்குச் சிறிது வியப்பாய்த்தானிருந்தது. ஆயினும் மறுபடியும் தன்னிடம் ஏதோ சொல்வதற்காக ஒரு வேளை காத்திருக்கிறாரோ என்னவோ, சக்கரவர்த்தி போன பிறகு விசாரித்துக் கொள்ளலாம் என்று வௌி அறைக்கு வந்துவிட்டாள். உண்மையில் பிக்ஷு போகாமல் தங்கியிருந்தது, சிவகாமிக்குச் சிறிது மகிழ்ச்சியை அளித்தது என்றே சொல்ல வேண்டும். இப்போது மடத்து வாசலில் சக்கரவர்த்தி "நீயும் எங்களுடன் வருகிறாயா?" என்று கேட்டதும், தூண் மறைவிலிருந்த புத்த பிக்ஷுவை நினைத்துக் கொண்டு சிவகாமி ஒருகணம் தயங்கினாள். ஆனால் ஆயனரும் சேர்ந்து அழைத்ததும், தடுத்துச் சொல்ல முடியாமல், "ஆகட்டும், அப்பா!" என்று சொல்லிப் புறப்பட்டாள். நாகநந்தி பிக்ஷு தான் திரும்பி வரும்வரையில் ஒருவேளை அங்கேயே இருக்கலாம் என்ற எண்ணமும் அவள் மனத்தில் இருந்தது.



நாற்பத்தாறாம் அத்தியாயம்

திரிமூர்த்தி கோயில்

பாறைகளை நோக்கி நடந்து போய்க் கொண்டிருந்த போது, மாமல்லரைப் பற்றியோ அவருக்கு நேர்ந்த ஆபத்தைப் பற்றியோ சக்கரவர்த்தி ஒன்றும் பேசவில்லை. ஆயனரிடம் சிற்பக் கலையைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார். இரண்டு பேரும் இந்த உலகத்தையே மறந்து பேசிக் கொண்டு போனார்கள். பாறைப் பிரதேசத்தை அடைந்த பிறகும் அப்படித்தான். இந்தப் பாறையை யானையாகச் செய்யலாம், இதைச் சிங்கமாகச் செய்யலாம். இதைத் தேராக அமைக்கலாம், இதை வஸந்த மண்டபமாக்கலாம் என்றெல்லாம் திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். கடைசியாக ஒரு பெரிய பாறையைக் குடைந்து கோயிலாக அமைப்பது என்றும் கோயில் வேலையையே முதன் முதலில் தொடங்கவேண்டும் என்றும் தீர்மானித்தார்கள்.

"இந்த ஒரே கோயிலில் மூன்று மூர்த்திகளையும் பிரதிஷ்டை செய்யலாம், ஆயனரே! மூன்று கர்ப்பக் கிருஹங்களை அமைத்து விடுங்கள்!" என்றார் மகேந்திர பல்லவர். "சுவாமி, மூன்று மதத்தினருக்கும் தனித்தனியாக மூன்று கோயில்கள் அமைத்துவிட்டால் நல்லதல்லவா? சச்சரவுக்கு இடமில்லாமல் போகுமல்லவா?" என்று ஆயனர் கேட்டார். "மூன்று மதத்தினருக்கா? நான் அப்படிச் சொல்லவில்லையே? மும்மூர்த்திகள் என்று யாரைச் சொன்னதாக எண்ணினீர்கள்?" "சிவபெருமான், புத்ததேவர், ரிஷபதேவர் இவர்களைத் தானே?" "இல்லை, ஆயனரே! பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய திரிமூர்த்திகளைச் சொன்னேன்." "அப்படியா?" "ஆம், இன்னும் கொஞ்ச காலத்துக்குப் புத்தர், சமணர் என்று என்னிடம் சொல்லாதீர்! ஆயனரே! அவர்கள் விஷயத்தில் அப்படி என் மனம் கசந்து போயிருக்கிறது!" "ஐயோ! அருள் நிறைந்த தங்கள் உள்ளம் கசந்து போகும்படி அவர்கள் என்ன செய்துவிட்டார்கள்?"

"ஆஹா! சமணர்களுக்கும் புத்தர்களுக்கும் நான் எவ்வளவு கௌரவம் கொடுத்திருந்தேன்! அவர்களைத் திருப்திப்படுத்த என்னவெல்லாம் செய்தேன்! ஒன்றும் பயன்படவில்லை. பாடலிபுரத்துச் சமணப் பள்ளியில் துர்விநீதன் ஒளிந்துகொள்ள அவர்கள் இடம் கொடுத்தார்கள். பல்லவ சைனியம் அந்தச் சமணப் பள்ளியை இடித்துத் தரைமட்டமாக்கிப் பாதாள குகையில் ஒளிந்திருந்த துர்விநீதனைப் பிடிக்கவேண்டியிருந்தது. இப்போது அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள், தெரியுமா? தேசமெல்லாம் போய்க் 'காஞ்சி மகேந்திர பல்லவன் சமணப் பள்ளியை இடித்துத் தள்ளினான்' என்ற பழியைப் பரப்பப் போகிறார்கள்! அது போகட்டும், ஆயனரே, எனக்கு அதிகமாகத் தாமதிக்க நேரமில்லை; போய் வருகிறேன். யுத்தம் முடிந்து நான் திரும்பி வந்து பார்க்கும்போது கோயில் வேலை முடிந்திருக்க வேண்டும். சத்ருக்னா! நம்முடைய தெப்பத்தை எங்கே விட்டுவிட்டு வந்தோம்! சீக்கிரம் போய்ப் பார்த்துக் கொண்டு வா!" என்று கூறிவிட்டு, "ஆயனரே! நீங்களும் கொஞ்சம் பார்க்கிறீர்களா? இந்த நதிக் கரையில் எங்கேயோ தெப்பத்தை விட்டிருக்கிறோம்? இரண்டு பேருமாய்ச் சென்று பார்த்தால் சீக்கிரம் கண்டுபிடிக்கலாம்!" என்றார்.

அவ்விதமே ஆயனரும் படைத் தலைவரும் தெப்பத்தைத் தேடிக்கொண்டு சென்றார்கள். இத்தனை நேரமும் சிவகாமி ஒரு பக்கத்தில் நின்று ரதியைத் தடவிக் கொடுத்துக் கொண்டும், மெல்லிய குரலில் ஏதோ ஒவ்வொரு வார்த்தை சொல்லிக் கொண்டும் இருந்தாள். ஆயனர், சத்ருக்னர் இருவரும் அங்கிருந்து சென்றதும், சக்கரவர்த்தி அவளருகில் வந்து, ஒரு பாறை மேல் உட்கார்ந்து கொண்டு, "சிவகாமி! உன்னிடம் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்; சற்று இந்தப் பாறை மேல் உட்காருகிறாயா!" என்றார். ஏதோ சந்தோஷமற்ற விஷயந்தான் சக்கரவர்த்தி பேசப் போகிறார் என்று சிவகாமியின் உள்ளுணர்ச்சி கூறியது. எனவே, தலைகுனிந்தபடி நின்று கொண்டேயிருந்தாள். "சிவகாமி! சற்று தலை நிமிர்ந்து இதோ இந்தக் கத்தியைப் பார்!" என்றார் மகேந்திர பல்லவர். சிவகாமி பார்த்தாள். "சற்று முன்னால் இந்தக் கத்தியைப் பற்றி ஒரு விஷயம் சொன்னேனே, அது ஞாபகம் இருக்கிறதா சிவகாமி!" "இருக்கிறது, பிரபு!" என்று சிவகாமியின் உதடுகள் முணு முணுத்தன. அந்தக் கத்தியானது மாமல்லரின் முதுகிலே பாய்வதற்கு இருந்தது என்ற எண்ணம் அவளைத் துன்புறுத்தியது. "நான் சொன்னது பொய், சிவகாமி!"

சிவகாமிக்குத் தூக்கிவாரிப் போட்டது; அவளுடைய உள்ளம் குழம்பிற்று. அந்தக் குழப்பத்தில் ஆறுதலும் மகிழ்ச்சியும் ஒருவகை ஏமாற்றமும் கலந்திருந்தன. சக்கரவர்த்தி முதலில் எதற்காக அம்மாதிரி பொய்யைச் சொன்னார்; இப்போது எதற்காகத் தாம் பொய் சொன்னதாக ஒப்புக்கொள்கிறார் என்பதொன்றும் புரியாமல் சிவகாமி திகைத்தாள். "ஆம்! சிவகாமி! உனக்குத் திகைப்பாகத்தான் இருக்கும். உண்மை விவரத்தை உன் தந்தையிடம் சொல்வதற்குக்கூட நான் இஷ்டப்படவில்லை. அதற்காகத்தான் அவரைத் தெப்பத்தைத் தேடுவதற்கென்று அனுப்பினேன். ஆனால், உண்மையான விவரம் உனக்கு மட்டும் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்..."

சிவகாமியின் மனக்குழப்பம் இன்னும் அதிகமாயிற்று. என்ன உண்மையைச் சொல்லப்போகிறார்? அது எதற்காகத் தனக்கு மட்டும் தெரிந்திருக்கவேண்டும் என்கிறார்! "சிவகாமி! எஃகிலேயே நஞ்சைக் கலந்து செய்த இந்தக் கத்தி, என் ஒரே மகன், மாமல்லனுடைய முதுகிலே பாய்வதற்கு இருந்தது. இந்த அபாயம் யாரால் ஏற்பட்டது தெரியுமா?" "பிரபு! அது பொய் என்று சொன்னீர்களே!" என்று சிவகாமி நாக்குழறக் கேட்டாள்.

"எது பொய் என்றேன்? மாமல்லன் முதுகில் கத்தி பாய்வதற்கு இருந்தது பொய் இல்லை, சிவகாமி! பல்லவ சாம்ராஜ்யத்துக்கு அந்தப் பெரும் விபத்து நிச்சயமாக வருவதற்கிருந்தது. அந்த விபத்து உன்னால் தடைப்பட்டது என்றேனே, அதுதான் பொய்! சிவகாமி! நீ கேவலம் சாதாரணப் பெண்களைப் போன்ற கோழை அல்ல! நெஞ்சுத்துணிவு உள்ளவள் ஆகையால்தான் உன்னிடம் உண்மையைச் சொல்லுகிறேன்; மாமல்ல பல்லவன் நேற்று இந்த மண்டப்பட்டுக் கிராமத்திலே இந்த விஷக் கத்தியினால் பின்னாலிருந்து குத்தப்பட்டுச் செத்துப்போயிருக்கவேண்டும். இந்தப் பாறையடியில் இந்த மகிழ மரத்தினடியிலேயே அவனுடைய உடல் அனாதைப் பிரேதமாக விழுந்து கிடந்திருக்க வேண்டும். அவ்விதம் நேராமல், அன்றொரு நாள் ஆலகால விஷத்தை உண்டு சகல உலகங்களையும் காத்த பரமசிவன்தான் நேற்றைக்கு மாமல்லனையும் பல்லவ குலத்தையும் காத்து அருளினார்..." நேற்று மாலை அதே பாறையடியில் மாமல்லர் உட்கார்ந்து தன் செவிகளில் இணையற்ற காதல் மொழிகளைப் பொழிந்து கொண்டிருந்தார் என்பதைச் சிவகாமி நினைவு கூர்ந்தபோது, அவளுடைய தலை சுழல்வதற்கு ஆரம்பித்தது.

"சிவகாமி, கேள்! வாழையடி வாழையாக வந்த பல்லவ குலத்தில் மாமல்லனைப் போன்ற ஒரு வீர மகன் இதுவரையில் தோன்றியதில்லை. இந்தப் பரந்த பல்லவ சாம்ராஜ்யம் இன்றைக்கு மாமல்லனை நம்பியிருப்பதுபோல் யாரையும் நம்பியிருந்ததும் இல்லை. அப்படிப்பட்டவன் நேற்றைக்கு இந்தப் பாறையடியில் வஞ்சகமாக நஞ்சு தோய்ந்த கத்தியினால் பின்னாலிருந்து குத்தப்பட்டுச் செத்து விழுந்திருப்பான். தவம் செய்து பெற்ற என் ஏக புதல்வனை நான் இழந்துவிட்டிருப்பேன். பல்லவ சாம்ராஜ்யமே நாதியற்ற இராஜ்யமாகப் போயிருக்கும். கவிகளிலும் காவியங்களிலும் புகழ் பெற்ற காஞ்சி சுந்தரி, வைதவ்யம் அடைந்திருப்பாள். இந்த விபத்துக்கள் எல்லாம் நேர்வதற்குக் காரணமாயிருந்தது யார் தெரியுமா?..." என்று சக்கரவர்த்தி நிறுத்தி ஒரு பெருமூச்சுவிட்டார். பிறகு கூறினார்; "நான் என் பிராணனுக்கு மேலாகக் கருதி யாரிடம் விசுவாசம் வைத்திருக்கிறேனோ, அந்த ஆயன மகா சிற்பியின் அருமை மகள் சிவகாமிதான்!" இதைக் கேட்டவுடனே சிவகாமியின் உச்சந்தலையில் பளீரென ஒரு மின்னல் பாய்ந்தது. அந்த மின்னலிலிருந்து ஆயிரம் ஆயிரம் ஒளிக் கிரணங்கள் கிளம்பி நாற்புறமும் பாய்ந்தன!
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
90
Points
48
நாற்பத்தேழாம் அத்தியாயம்

மழையும் மின்னலும்

சிவகாமிக்குச் சுய உணர்வு வந்தபோது தான் பாறையில் சாய்ந்துகொண்டு தரையில் உட்கார்ந்திருப்பதையும், சக்கரவர்த்தி தனக்கு அருகில் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்துவதையும் கண்டாள். பயபக்தியுடன் சட்டென்று எழுந்திருக்க அவள் முயன்றபோது மகேந்திரர் அவளுடைய கரத்தைப் பிடித்து உட்காரவைத்து, "வேண்டாம்!" என்று கூறினார். சற்று முன்னால் தன் காதில் விழுந்த விஷயம் உண்மைதானா அல்லது தன்னுடைய சித்தப்பிரமையா என்று கேட்பவள்போல் மகேந்திர பல்லவரைச் சிவகாமி இரங்கி நோக்கினாள். சக்கரவர்த்தி, "குழந்தாய்! மாமல்லனிடம் உன்னுடைய அன்பு எத்தகையது என்பதைக் காட்டிவிட்டாய். அவனுக்கு உன்னால் அபாயம் நேர்ந்தது என்றதும் உன் உணர்வையே இழந்துவிட்டாய். இத்தகைய அன்பு நிறைந்த உன் இருதயத்தை நான் மேலும் புண்படுத்த வேண்டியவனாயிருக்கிறேன்" என்றார். "ஐயோ! இன்னும் என்ன?" என்று சிவகாமி விம்மினாள். "முக்கியமான விஷயத்தை இன்னும் உனக்கு நான் சொல்லவில்லை, சிவகாமி! உன்னிடம் ஒரு வாக்குறுதி நான் கேட்கப் போகிறேன்! மாமல்லனுடைய க்ஷேமத்துக்காகக் கேட்கப் போகிறேன். நீ மறுக்காமல் தரவேண்டும்" என்றார் மகேந்திரர்.

சிவகாமியின் குழம்பிய உள்ளத்தின் அடிவாரத்தில் ஒரு சிறிது தௌிவு ஏற்படத் தொடங்கியது. சக்கரவர்த்தியின் பேரில் அவளுக்கு ஏற்கனவே இருந்த சந்தேகங்கள் மீண்டும் தோன்றின. 'இவர் நம்மை ஏமாற்றி ஏதோ ஒரு சூழ்ச்சியில் அகப்படுத்தப் பார்க்கிறார்; ஜாக்கிரதையாகயிருக்க வேண்டும்!" என்று எண்ணினாள். தன்னால் மாமல்லருக்கு அபாயம் நேர்ந்ததாகச் சற்றுமுன் சக்கரவர்த்தி கூறியதில்கூட அவநம்பிக்கை ஏற்பட்டது. தன்னைத் தனிமைப்படுத்தி வைத்துக் கொண்டு எதற்காக இப்படியெல்லாம் இவர் பேசுகிறார்? இவருடைய நோக்கங்கள் என்ன? தலை குனிந்த வண்ணம், "பல்லவேந்திரா! தாங்கள் சொல்லுவது ஒன்றும் என் மனத்தில் பதியவில்லை. மாமல்லருக்கு என்னால் அபாயம் நேர்ந்தது என்று சொன்னீர்களே? அது எப்படி?" என்று கேட்டாள்.

"குழந்தாய் உன் மனத்தை அதிகமாக வருத்தப்படுத்த வேண்டாம் என்று அதை நான் சொல்லவில்லை நீயே கேட்கிறபடியால் சொல்கிறேன். காஞ்சியில் உன்னுடைய அரங்கேற்றம் நடந்த இரண்டு நாளைக்கெல்லாம் உங்கள் அரண்ய வீட்டுக்கு நான் வந்தேனல்லவா? அப்போது உன் தந்தையிடம் சில விஷயங்கள் சொன்னேன். நீயும் கேட்டுக் கொண்டிருந்தாய், உன்னுடைய கலை தெய்வீகக் கலையென்றும், அதைத் தெய்வத்துக்கே அர்ப்பணமாக்க வேண்டும் என்றும் சொன்னேன் உனக்கு நினைவு இருக்கிறதா?"

சிவகாமிக்கு நினைவு வந்தது; அதை இப்போது எதற்காகச் சொல்கிறார் என்று அவள் உள்ளம் சிந்தித்தது. முகத்தை நிமிர்த்தாமல் குனிந்தவண்ணம், "நினைவு வருகிறது!" என்றாள். "குழந்தாய்! தெய்வத்துக்கு உரிமையாக்க வேண்டிய பொருளை மனிதர்களுக்கு உரிமையாக்க முயன்றால், அதனால் தீங்குவராமல் என்ன செய்யும்? ஏதோ இந்தமட்டும் மாமல்லன் உயிர்தப்பிப் பிழைத்தது பல்லவ ராஜ்யம் செய்த பாக்கியந்தான்!" அப்போது சிவகாமி சட்டென்று தலையை நிமிர்த்தி நீர் ததும்பிய கண்களினாற் சக்கரவர்த்தியை ஏறிட்டுப் பார்த்து, "பல்லவேந்திரா! தாங்கள் ஏதோ கூடமாகப் பேசுகிறீர்கள். நான் கல்வி கேள்வியற்றவள்; ஏழைச் சிற்பியின் மகள் என்னைச் சோதிக்க வேண்டாம்!" என்று விம்மினாள்.

மகேந்திரர் அப்போது சிவகாமியின் விரிந்த கூந்தலை அருமையுடன் தடவிக்கொடுத்து, அன்பு ததும்பும் குரலில் கூறினார்; "அம்மா! சிவகாமி! உன்னை நான் சோதிக்கவில்லை. உன் தந்தை ஆயனருக்கும் எனக்கும் எப்பேர்ப்பட்ட சிநேகம் என்பது உனக்குத் தெரியாதா? அவருடைய மகளாகிய நீ எனக்கும் மகள்தான்! கனவிலும் உனக்குக் கெடுதல் எண்ணமாட்டேன். உன் தந்தை எப்படிச் சிற்பக் கலையில் ஈடு இணையும் இல்லாத பெருமை வாய்ந்தவரோ, அதேபோல் நீயும் பரதக்கலையில் சிறந்து விளங்குகிறாய். உன்னுடைய கலைத் திறமை இன்னும் மகோன்னதத்தை அடைந்து பரத கண்டமெங்கும் உன்னுடைய புகழ் விளங்கவேண்டும் என்பது என் மனோரதம். அதற்கு எதுவும் குறுக்கே நிற்கக் கூடாது; யாரும் தடையாயிருக்கக் கூடாது என்பது என் எண்ணம். அப்படிக் குறுக்கே தடையாக நிற்பவன் என்னுடைய சொந்த மகனாகவே இருந்த போதிலும், அந்தத் தடையை நான் நீக்க முயல்வேன்.

சிவகாமி திடுக்கிட்டவளாய் முகத்தில் அவநம்பிக்கை தோன்ற மகேந்திர பல்லவரை ஏறிட்டுப் பார்த்தாள். "கொஞ்சம் பொறு, குழந்தாய்! முழுமையும் சொல்லிவிடுகிறேன், பிறகு, உன் இஷ்டம்போல் தீர்மானம் செய்துகொள். சற்று முன் நான் ஏதோ கூடமாய்ப் பேசுகிறேன் என்று கூறினாய். உண்மைதான், உன்னிடம் வௌிப்படையாய்ச் சொல்வதற்குச் சங்கோசப்பட்டுக் கொண்டுதான் அவ்விதம் கூறினேன். நீ அறிவாளி ஆகையால் தெரிந்து கொள்வாய் என்று நினைத்தேன். ஆனால், தற்சமயம் உன் மனம் பல காரணங்களினால் குழம்பிப் போய் இருக்கிறது. அதனால் நீ தெரிந்து கொள்ளவில்லை. எனவே, நான் சொல்ல விரும்பியதை உன்னுடைய நன்மைக்காகச் சொல்ல வேண்டியிருப்பதை பச்சையாகவே சொல்லி விடுகிறேன். அதனால் உன் மனத்திற்கு வருத்தம் நேர்ந்தால், என்னை மன்னித்து விடு!" என்று கூறி மகேந்திர பல்லவர் ஒரு பெருமூச்சு விட்டார். அச்சமயம் அவருடைய முகக்குறி மிகவும் கடினமான காரியத்தைச் செய்வதற்கு ஆயத்தமாகிறவரைப் போலக் காணப்பட்டது.

சிவகாமி மறுபடியும் தலைகுனிந்து தரையைப் பார்த்த வண்ணம் இருந்தாள். ஏதோ ஒரு பெரிய விபரீதத்தை எதிர் பார்த்து அவளுடைய இருதயம் விம்மிற்று; இடையிடையே இரண்டொரு சொட்டுக் கண்ணீர் பூமியில் விழுந்தது. "சிவகாமி கேள்! உன் தந்தை கல்லைக் கொண்டு உயிர்ச்சிலைகளைச் சமைக்கிறார். அதுபோலவே பிரம்ம தேவன் மண்ணைக் கொண்டு பூலோகத்திலுள்ள சகல ஜீவராசிகளையும் படைக்கிறான். ஆனால், அசாதாரண அழகு படைத்த ஸ்திரீகளைப் பிரம்மதேவன் சிருஷ்டிக்கும் போது தன்னுடைய நாலிருகண்களிலிருந்தும் சொட்டும் கண்ணீரையும் மண்ணுடனே கலந்து சிருஷ்டிப்பதாகச் சொல்வதுண்டு. அப்படிப்பட்ட அசாதாரண சௌந்தரியவதிகளால் உலகத்திலே எத்தனையோ துன்பங்கள் உண்டாகுமென்று பிரம்மதேவனுக்குத் தெரிந்தபடியினாலேதான் அப்படி அவன் கண்ணீர் விட்டுக் கொண்டே அவர்களைப் படைப்பானாம்! குழந்தாய் உன்னைப் படைக்கும்போது பிரம்மதேவன் கண்ணீர் பெருக்கிக் கொண்டுதான் படைத்தானா என்று நான் சில சமயம் எண்ணுவதுண்டு. அத்தகைய அற்புத சௌந்தரியம் உன் மேனியில் குடிகொண்டிருக்கிறது. அது போதாதென்று உலகிலேயே இணையற்ற சௌந்தரியக் கலையும் உன்னிடம் சேர்ந்திருக்கிறது. நீ குழந்தையாயிருந்த வரையில் இதெல்லாம் எனக்குத் தோன்றவில்லை. ஆயனரைப் போலவே நானும் உன்னை என் செல்வக் கண்மணியாக எண்ணி மடியில் வைத்துக் கொண்டும், தோளில் போட்டுக் கொண்டும் கொஞ்சிக் குலாவி மகிழ்ந்தேன். ஆனால், நீ யௌவனப் பிராயம் அடைந்த பிறகு, உன்னைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு, 'ஐயோ! இந்தப் பெண்ணால் உலகில் விபரீதம் எதுவும் ஏற்படாமல் இருக்கவேண்டும்!' என்ற பச்சாதாபம் உண்டாகும். இரண்டு வருஷத்துக்கு முன்னால் விபரீதத்துக்கு அறிகுறிகள் தோன்றின. குழந்தைப் பிராயத்தில் உனக்கும் மாமல்லனுக்கும் ஏற்பட்டிருந்த குற்றமற்ற சிநேகம் திடீரென்று காதலாக மாறியதைக் கண்டேன். இந்தத் தகாத காதலை எப்படித் தடுப்பது, உங்கள் இருவருடைய மனமும் புண்படாமல் எப்படி உங்களைப் பிரிப்பது என்று நான் யோசித்துக் கொண்டிருந்த போதே, இந்த மகாயுத்தம் வந்தது. நான் அவசரமாகப் போர்க்களத்துக்குப் போக வேண்டியதாயிற்று. நான் இல்லாத சமயத்தில் நீயும் மாமல்லனும் சந்திக்கக் கூடாது என்பதற்காகவே அவன் காஞ்சிக் கோட்டைக்கு வௌியே வரக் கூடாதென்று கண்டிப்பான திட்டம் போட்டுவிட்டுப் போனேன்...."

குனிந்துகொண்டிருந்த சிவகாமி தன்னையறியாத ஆத்திரத்துடன் மகேந்திர பல்லவரை ஏறிட்டுப் பார்த்தாள். கண்ணீர் ததும்பிய அவளுடைய கூரிய கண்களிலே தோன்றிய கோப ஜுவாலை, 'சோ'வென்று மழை பெய்து கொண்டிருக்கும் போது இருண்ட வானத்தில் பளிச்சிடும் மின்னலைப்போல் ஜொலித்தது! அதனால் ஒருகணம் தயங்கிவிட்டுச் சக்கரவர்த்தி பின்னர் தொடர்ந்து கூறினார்; "சிவகாமி! உன்னையும் மாமல்லனையும் அவ்வாறு பிரித்து வைத்த போது, அதனால் உங்களுடைய நேயம் குன்றிவிடும் என்ற எண்ணம் எனக்கில்லை. காற்றினால் பெரு நெருப்புக் கொழுந்து விட்டுக் கிளம்புவதுபோல் கட்டாயப் பிரிவினால் உங்களுடைய காதல் இன்னும் ஜுவாலையிட்டு வளரக்கூடும் என்பதை ஒருவாறு நான் எதிர்பார்த்தேன். எனவே உங்களுடைய காதலைத் தடுக்கும் எண்ணத்துடன் உங்களை நான் பிரித்து வைக்கவில்லை. நான் இல்லாத சமயத்தில் மாமல்லனும் நீயும் சந்தித்தால் அதனால் வேறு பெரும் அபாயம் நேரும் என்று என்னுடைய உள்ளுணர்ச்சி சொல்லிற்று. புதையலைப் பூதம் காக்கிறதென்றும், ஜீவரத்தினத்தை நாக சர்ப்பம் காக்கிறது என்றும் சொல்வார்களே, - அதுபோல், கலைப் பொக்கிஷமாகிய உன்னைக் காப்பாற்றுவதற்கோ அல்லது கபளீகரம் செய்வதற்குத்தானோ, ஏதோ ஒரு மாயசக்தி உன்னைத் தொடர்வதாக எனக்குத் தோன்றியது. அதனாலேயே மாமல்லன் உன்னை நெருங்க முடியாதபடி நான் ஏற்பாடு செய்துவிட்டுப் போனேன். நான் எதிர்பார்த்தபடியே, உங்களைப் பிரித்து வைத்ததனால் உங்கள் காதல் குன்றாமல் கொழுந்துவிட்டு வளர்ந்தது. இதை மாமல்லன் உனக்கு எழுதிய ஓலைகளினால் அறிந்தேன்." "என்ன?" என்று சிவகாமி அளவில்லாத வியப்புடனும் அருவருப்புடனும் சக்கரவர்த்தியை நோக்கினாள்.

"ஆமாம், சிவகாமி! மாமல்லன் உனக்கு எழுதிய ஓலைகள் - நீ மரப்பொந்தில் பத்திரப்படுத்தியிருந்த ஓலைகள் - என்னிடந்தான் வந்து சேர்ந்தன. அவ்வளவு நீசத்தனமான காரியத்தை நான் செய்யவேண்டியிருந்தது. எல்லாம் இந்தப் பல்லவ இராஜ்யத்துக்காகத்தான். குழந்தாய்! சாதாரண மனிதர்களுக்குத் தர்மம் வேறு; அரச குலத்தினருக்குத் தர்மம் வேறு. உன் தந்தையைக் கேட்டால் இதைச் சொல்வார். மாமல்லன் ஒரு வியாபாரியின் மகனாகவோ அல்லது சிற்பியின் மகனாகவோ இருந்தால், அவனுக்கும் உனக்கும் நடுவில் நான் ஒருநாளும் நிற்க மாட்டேன். உங்களுடைய தெய்வீகமான காதலைக் கண்டு நான் களித்துக் கூத்தாடுவேன். ஆனால், இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்தின் நன்மைக்காக உங்கள் இருவரையும் பிரித்து வைக்கும் கொடுமையான கடமை எனக்கு ஏற்பட்டது.." சிவகாமிக்கு அப்போது எங்கிருந்தோ அசாத்தியமான தைரியம் பிறந்தது. முகபாவத்திலும், குரலிலும் நிகரில்லாத கர்வம் தோன்ற, "பிரபு! எங்களைத் தாங்கள் பிரித்துவைக்கப் பார்த்தீர்கள். ஆனால் அரசர்களைக் காட்டிலும் அதிக சக்தி வாய்ந்த விதி எங்கள் பக்கத்தில் இருந்தது. ஏரி உடைப்பையும் வெள்ளத்தையும் அனுப்பி எங்களை இந்தக் கிராமத்தில் சேர்த்து வைத்தது!" என்றாள். "ஆம், சிவகாமி! ஆனால், உங்களைச் சேர்த்துவைத்த அதே விதி நான் செய்திருந்த ஏற்பாடு எவ்வளவு அவசியமானது என்பதையும் எடுத்துக் காட்டியது. இந்த விஷக் கத்தியே அதற்கு அத்தாட்சி!" என்று மகேந்திர பல்லவர் கூறி, மீண்டும் அந்த விஷக்கத்தியை எடுத்துச் சிவகாமியின் கண் முன்னால் காட்டினார்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
90
Points
48
நாற்பத்தெட்டாம் அத்தியாயம்

மகேந்திர பல்லவர் தோல்வி

சிவகாமி வெகுண்ட கண்களுடன் அந்த நாகப் பிடி அமைந்த கத்தியைப் பார்த்தாள். குரல் நடுங்க, நாத் தழு தழுக்க விசித்திரசித்தரைப் பார்த்துக் கூறினாள்: "பல்லவேந்திரா! எந்தப் பாவியின் கரம் இந்த விஷக் கத்தியைப் பிடித்து மாமல்லருடைய முதுகில் செலுத்த யத்தனித்தது? கிருபை கூர்ந்து அதைச் சொல்லுங்கள். என்னால் இது நேர்ந்ததாயிருக்கும் பட்சத்தில்..." என்று மேலும் அவள் பேசுவதற்குள் சக்கரவர்த்தி குறுக்கிட்டார்! "ஆத்திரப்பட்டுச் சபதம் ஒன்றும் செய்யவேண்டாம். சிவகாமி! இந்தப் பெரும் அபாயம் உன்னால் நேர்ந்ததுதான், ஆனால், நீ அறியாமல் நேர்ந்தது. இந்தக் கத்தி யாருடையதாயிருக்கும் என்று உனக்கு ஒன்றும் தெரியவில்லையா?" என்று கேட்டார்.

"இம்மாதிரி கத்தியை நான் பார்த்ததேயில்லை, பிரபு!" "பெயரிலேயே பாம்பையுடைய மனிதர் ஒருவரை உனக்குத் தெரியாதா, அம்மா?" "நாகநந்தியடிகளா?" என்று சிவகாமி கேட்டபோது, அவளுடைய குரலில் வியப்பும் பயமும் ததும்பின. "ஆம்! அவரேதான்!" "ஐயோ! அவர் எதற்காக மாமல்லரைக் கொல்ல முயல வேண்டும்? நம்ப முடியவில்லையே?" "ஏன் நம்ப முடியவில்லை! இதைவிட அதிசயமான பயங்கரத் துவேஷங்களைப் பற்றி நீ கேட்டதில்லையா?" "நாகநந்தி எதற்காக மாமல்லரைத் துவேஷிக்கிறார்? ஐயோ! காவித் துணி தரித்த புத்த பிக்ஷுவா இவ்விதம் ...." "சிவகாமி! புத்த பிக்ஷுவாயிருந்தாலென்ன? யாராயிருந்தால் என்ன? ஸ்திரீ சௌந்தரியத்தினால் புத்த பிக்ஷுவின் மனம் கெட்டுப் போகாதா? விசுவாமித்திரருடைய கடுந்தவத்தையே மேனகையின் சௌந்தரியம் கலைத்து விட்டதே! புத்த சங்கங்கள் சீர் கெட்டுப் போயிருக்கும் இந்த நாளில் இது என்ன அதிசயம்?" "என்ன சொல்கிறீர்கள்? எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே! நாகநந்தி எதற்காக மாமல்லரைக் கொல்லப் பார்த்தார்?"

"உன்னுடைய சௌந்தரியமாகிய விஷம் பிக்ஷுவின் தலைக் கேறியதனால்தான், அம்மா! வேறு என்ன இருக்க முடியும்? புத்த பிக்ஷுவின் கடின உள்ளத்தையும் உன் மேனி அழகு கவர்ந்தது. மாமல்லருடைய குழந்தை இருதயத்தையும் கவர்ந்தது. ஆனால், நீ உனது தூய உள்ளத்தை மாமல்லனுக்கே கொடுத்தாய். பிக்ஷுவின் துவேஷத்துக்கு அதுதான் காரணம். இந்தப் பாறையில் நீயும் மாமல்லனும் நேற்று இரவு பேசிக்கொண்டிருந்தபோது, இதே பாறைக்குப் பின்னால் புத்த பிக்ஷு கையில் இந்த விஷக் கத்தியுடன் ஒளிந்திருந்தார். கிராமத்துக்கருகில் உள்ள கோயில் வரையில் உங்களைப் பின் தொடர்ந்து வந்தார் கடவுளின் அருளும் குண்டோதரனுடைய சர்வ ஜாக்கிரதையும் சேர்ந்துதான் மாமல்லனுடைய உயிரைக் காப்பாற்றின.." "குண்டோதரனா காப்பாற்றினான்? எப்படி, பிரபு?" "உங்களுக்கும் பிக்ஷுவுக்கும் தெரியாமல் குண்டோதரன் உங்களைப் பின் தொடர்ந்து வந்தான். பிக்ஷு கோயில் மதில் மேல் ஏறிக் குதித்தபோது இந்தக் கத்தி தவறிக் கீழே விழுந்தது; அதை அவன் எடுத்துக்கொண்டான். பிக்ஷுவை நள்ளிரவில் கோயில் மடைப்பள்ளியில் விட்டுக் கதவை தாழிட்டுக் கொண்டு வந்து எங்களிடம் எல்லா விவரங்களையும் சொன்னான். நாங்கள் வந்து பார்ப்பதற்குள் பிக்ஷு மடைப்பள்ளியிலிருந்து மாயமாகி விட்டார்.

இவ்விதம் மகேந்திர பல்லவர் சொல்லியபோது சிவகாமியின் முகத்தில் அவ்வப்போது ஏற்பட்ட அதிசயமான மாறுதல்களையெல்லாம் அவர் கவனியாமல் இல்லை. உண்மையில் நாகநந்தியைப் பற்றி பேச்சு வந்ததிலிருந்து, சிவகாமியின் பாதி மனம் இங்கேயும் பாதி மனம் மடத்திலேயும் இருந்தது. மடத்து உள் அறையில் தூண் மறைவில் நாகநந்தி நின்ற தோற்றம் அவள் மனக்கண்முன் வந்து கொண்டேயிருந்தது. இன்னும் அந்தப் பாதக பிக்ஷு அங்கேயே இருப்பாரா! இருந்தால், சக்கரவர்த்தியின் கையிலுள்ள கத்தியை வாங்கிக் கொண்டுபோய் அவரைத் தன் கையாலேயே கொன்றுவிட வேண்டும் என்று சிவகாமிக்கு ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது.

"பல்லவேந்திரா! அப்பா எங்கே? நான் உடனே மடத்துக்குப் போக வேண்டும்!" என்றாள் சிவகாமி. "தாயே! என் கோரிக்கையை இன்னும் நீ கேட்கவே இல்லையே? நான் கோரி வந்த வரத்தைக் கொடுக்கவில்லையே?" "இப்படியெல்லாம் பேசி ஏன் என்னை வதைக்கிறீர்கள்! சிற்பியின் மகளுக்குக் கட்டளையிடுங்கள்!" "கட்டளை இல்லை, அம்மா! உன்னிடம் வரந்தான் கோருகிறேன். அதுவும் எனக்காக கோரவில்லை; பல்லவ சாம்ராஜ்யத்திற்காகக் கோருகிறேன். இந்த சாம்ராஜ்யத்தைப் பெரும் விபத்திலிருந்து காப்பாற்றும் சக்தி இப்போது உன் கையில் இருக்கிறது." "நான் என்ன செய்ய வேண்டும்?" "மாமல்லனுக்கு ஓலை எழுதித் தரவேண்டும்!" "என்ன ஓலை?" என்று சிவகாமி கேட்டாள். "மாமல்லனை நீ விடுதலை செய்வதாக எழுதவேண்டும்; உன்னை மறந்துவிடும்படி எழுதவேண்டும்." "பிரபு! இந்த ஏழைப் பெண்ணை ஏன் இப்படிச் சோதனை செய்கிறீர்கள்? மாமல்லரையாவது நான் விடுதலை செய்யவாவது? என்னை மறக்கும்படி அவருக்கு நான் எப்படி எழுதுவேன்? நான் சம்மதித்தாலும் இந்தக் கை சம்மதியாது, சுவாமி!"

"சிவகாமி! காஞ்சிக்கு மூன்று காத தூரத்தில் வாதாபியின் படைகள் வந்திருக்கின்றன. ஆயினும் நான் இங்கே உன்னுடன் வாதாடிக் கொண்டிருக்கிறேன். இதிலிருந்தே என்னுடைய கோரிக்கை முக்கியமானதென்று உனக்குத் தெரியவில்லையா? உண்மையை இன்னும் பட்டவர்த்தனமாய்ச் சொல்கிறேன், கேள்! வாதாபியின் சமுத்திரம் போன்ற சைனியங்களை எதிர்த்து நிற்பதற்கு வேண்டிய படைபலம் இப்போது பல்லவ இராஜ்யத்துக்கு இல்லை. இந்த நிலைமையில் தெற்கேயிருந்து பாண்டியனுடைய பெரும்படையும் பல்லவ இராஜ்யத்தைத் தாக்க வருகிறது. நீ மனம் வைத்து என் கோரிக்கையை நிறைவேற்றினால், பாண்டிய சைனியம் பல்லவ சைனியத்துடன் சேர்ந்துவிடும். இரண்டும் சேர்ந்தால் வாதாபிப் படைகளை வெற்றி கொள்ளலாம். சிவகாமி! பல்லவ இராஜ்யத்துக்கு இந்த மகத்தான உதவியை நீ செய்வாயா?"

"எனக்கும் பாண்டியர் படையெடுப்புக்கும் என்ன சம்பந்தம் பிரபு! பல்லவ இராஜ்யத்துக்கு இந்த ஏழைச் சிற்பியின் மகள் என்ன உதவியைச் செய்யமுடியும்?" "உன் மனத்தைப் புண்படுத்த வேண்டாம் என்று பார்த்தால் நீ விடமாட்டேன் என்கிறாய். சிவகாமி! பாண்டிய இராஜகுமாரியை மாமல்லனுக்குக் கலியாணம் செய்து கொள்ளுமாறு தூது அனுப்பினார்கள். அதற்கு மாமல்லன் இணங்காதபடியால் பாண்டியனுடைய சைனியம் நம்மீது படையெடுத்து வருகிறது. கலியாணம் செய்து கொள்வதாகச் சம்மதம் தெரிவிக்க வேண்டியதுதான்; உடனே பாண்டிய சைனியம் நம்முடன் சேர்ந்துவிடும். நீ மாமல்லனுக்கு விடுதலை கொடுத்தால், அவனை இதற்கு இணங்கச் செய்வேன் என்ன சொல்கிறாய், தாயே! பல்லவ இராஜ்யத்துக்கு உயிர்ப்பிச்சை அளிப்பாயா?" என்று மகேந்திரர் இறைஞ்சினார்.

சிவகாமி பூமியில் சட்டென்று உட்கார்ந்து, "மாட்டேன், மாட்டேன்! என்னால் முடியாது!" என்று அலறினாள். பின்னர் விம்மிக்கொண்டே, "பல்லவேந்திரா! உங்களுடைய கையிலுள்ள விஷக் கத்தியை என் மார்பிலே பாய்ச்சிக் கொன்றுவிடுங்கள். தங்கள் குமாரருக்கு விடுதலை கிடைத்துவிடும். பல்லவ இராஜ்யமும் காப்பாற்றப்படும். ஒரு பெரிய இராஜ்யத்தைக் காப்பதற்காக ஓர் அபலைப் பெண்ணைக் கொன்றால் என்ன? கத்தியை எடுங்கள் பிரபு! தங்களுக்கு தைரியம் இல்லாவிட்டால் கத்தியை இங்கே கொடுங்கள் நானே என் மார்பில் செலுத்திக் கொள்கிறேன்!" என்றாள். "சிவகாமி! நீ ஜயித்தாய்! நான் தோற்றேன்" என்றார் மகேந்திர பல்லவ சக்கரவர்த்தி.

பாறையடியில் மேலே கூறிய சம்பாஷணை நடந்து ஒரு நாழிகைக்குப் பிறகு சிவகாமியும் ஆயனரும் மண்டபப்பட்டுக் கிராமத்தை அடைந்தார்கள். மடத்து வாசலை அணுகியதும் சிவகாமி மிகவும் பரபரப்புடன் முதலில் பிரவேசித்து அறைக்குள்ளே சென்று பார்த்தாள். தூண் மறைவில் பிக்ஷுவைக் காணவில்லை. மடத்திற்குள் வேறு எங்கேயும் அவரைக் காணவில்லை. ஏதோ ஒரு சந்தேகம் உதிக்கவே, அவசரமாகச் சென்று தனது ஆடை ஆபரணப் பெட்டியைத் திறந்து பார்த்தாள். கையினால் பல முறை துழாவிப் பார்த்தாள். ஆடை ஆபரணங்களையெல்லாம் எடுத்து உதறிப் பார்த்தாள். எப்படிப் பார்த்தும் சக்கரவர்த்தி கொடுத்த சிங்க முத்திரையுள்ள இலச்சினையைக் காணவில்லை!

அதே சமயத்தில் வராக நதிக்கு அக்கரையில் ரதசாரதி கண்ணபிரானிடம் புத்த பிக்ஷு மேற்படி சிங்க இலச்சினையைக் காட்டிக் கொண்டிருந்தார். காட்டி, தன்னை அவனுடைய ரதத்தில் காஞ்சி மாநகருக்கு விரைவாக அழைத்துப் போகும்படி கட்டளையிட்டார். கண்ணபிரான் தயக்கத்துடன் அந்தக் கட்டளையை ஒப்புக்கொண்டு பிக்ஷுவை ரதத்தில் ஏறும்படி கூறினான். இதையெல்லாம் சற்றுத் தூரத்தில் மரங்களில் மறைவில் நின்று சக்கரவர்த்தியும் சத்ருக்னனும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சத்ருக்னன் பாய்ந்து சென்று கண்ணபிரானைத் தடுப்பதற்கு யத்தனித்தபோது சக்கரவர்த்தி அவனுக்குச் சமிக்ஞை செய்து நிறுத்தினார். புத்த பிக்ஷு ரதத்தில் ஏறுவதையும், கண்ணபிரான் வேண்டா வெறுப்பாக ரதத்தின் குதிரைகளைத் தட்டிவிடுவதையும், வீரர்கள் ரதத்தைப் பின் தொடர்ந்து செல்வதையும் அவ்விருவரும் பார்த்துக் கொண்டு சும்மா நின்றார்கள். சத்ருக்னனுடைய முகத்தில் கோபம் கொதித்தது; சக்கரவர்த்தியின் முகத்திலோ புன்னகை தவழ்ந்தது.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
90
Points
48
நாற்பத்தொன்பதாம் அத்தியாயம்

காஞ்சியில் கோலாகலம்

ஏறக்குறைய அர்த்த ராத்திரியில் வராக நதிக் கரையிலிருந்து புறப்பட்ட மாமல்லரும் தளபதி பரஞ்சோதியும் காஞ்சி மாநகரை நோக்கி விரைந்து சென்றார்கள். வழியில் இரண்டு காத தூரத்துக்கு ஒன்றாக ஏற்பட்டிருந்த இராஜாங்க விடுதிகளில் அவர்களுக்காக மாற்றுக் குதிரைகள் ஆயத்தமாயிருந்தன. உணவும் சிரம பரிகாரம் செய்து கொள்ள வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இவ்வளவுடன் ஒவ்வொரு விடுதியிலும், நூறு குதிரை வீரர்கள் அணிவகுத்து ஆயத்தமாக நின்றார்கள். மாமல்லருடன் வந்த வீரர்களை ஆங்காங்கே தங்கி வரும்படி நிறுத்திவிட்டுப் புதிய துணை வீரர்களுடன் செல்வது பிரயாணத்தின் விரைவுக்கு அனுகூலமாயிருந்தது.

இந்த முன்னேற்பாடெல்லாம் மாமல்லருக்கு மிக்க வியப்பளித்தது. அதே வழியில் முன்னால் சென்ற தம் தந்தை தான் அந்த ஏற்பாடுகளெல்லாம் செய்துவிட்டுப் போயிருக்க வேண்டும் என்று ஊகித்து மாமல்லர் அளவற்ற இறும்பூது அடைந்தார். பரஞ்சோதியிடமும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார். அதற்குப் பரஞ்சோதி, "ஆஹா! இதை ஒரு பிரமாதமாகச் சொல்லப் போகிறீர்களே? சமுத்திரத்தின் ஆழத்தையாவது கண்டுபிடிக்கலாம்; சத்துருமல்லரான மகேந்திரரின் முன் ஜாக்கிரதைக்கு ஆழம் கண்டுபிடிக்க முடியாது. இதையெல்லாம் எட்டு மாத காலம் அவருடன் கூட இருந்து நேரிலேயே பார்த்தேன். அதனாலேதான், சக்கரவர்த்தி எது சொன்னாலும் அதற்கு மாறாக என் மனத்தில் நினைப்பது கூட இல்லை" என்றார்.

வடபெண்ணை ஆற்றங்கரையில் பல்லவ சைனியத்தோடு எட்டு மாதம் தங்கி, வாதாபி சைனியத்தை மேலே வரவொட்டாமல் தடுப்பதற்குச் சக்கரவர்த்தி கையாண்ட அதிசயமான யுக்திகளையும் தந்திரங்களையும் பற்றி பரஞ்சோதி பிரஸ்தாபித்தார். இது மாமல்லருக்கு அவ்வளவு உற்சாகம் அளிக்கவில்லை. "தளபதி! நீங்கள் என்னதான் சொல்லுங்கள், எதிராளியை நிறுத்திவைப்பது, ஏமாற்றுவது, பின்வாங்கித் தப்பித்துக்கொண்டு வருவது இதிலெல்லாம் ஒருவிதப் பெருமையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லையே!" என்றார் மாமல்லர். அப்போது பரஞ்சோதி, "யுத்தத்தில் பின்வாங்க வேண்டிய சமயமும் உண்டு; எதிர்த்துத் தாக்க வேண்டிய சமயமும் உண்டு. ஒன்று கவனித்தீர்களா? துர்விநீதனைத் துரத்திக்கொண்டு தென்பெண்ணைக்கு அப்பால் தாங்கள் போகவேண்டாமென்று சக்கரவர்த்தி கட்டளையிட்டிருக்கிறார். அதற்காகத் தாங்கள் வருத்தப்பட்டீர்கள்...ஆனால் துர்விநீதன் தப்பித்துக்கொண்டு விட்டானா? இல்லையே? சக்கரவர்த்தி அதற்கும் ஏற்பாடு செய்திருந்தார் அல்லவா? தென்பெண்ணைக்கு அக்கரையில் திருக்கோவலூர் கோட்டத் தலைவன் ஆனந்தன் மழவராயனை ஆயத்தமாயிருக்கும்படி செய்திருந்தார் அல்லவா? துர்விநீதன் சமணப் பள்ளியில் ஒளிந்து கொள்ள முயன்றும் தப்பமுடியவில்லையே? இப்போது அவன் மழவராயன் கோட்டையில் சிறைப்பட்டிருக்கிறானல்லவா? பிரபு! பிரம்மாண்ட சைனியங்களை வைத்துக் கொண்டு யுத்தத்தில் ஜயித்தவர்கள் எத்தனையோ பேர் உண்டு. ஆனால், நமது சக்கரவர்த்தியைப் போல் சொற்ப சைனியத்தை வைத்துக்கொண்டு மகத்தான எதிரிகளின் மேல் ஜயம் அடைந்தவர்கள் யாரும் இல்லை!" என்றார். "ஆமாம், அதில் என்ன சந்தேகம்? பல்லவ வீரன் ஒவ்வொருவனும் சளுக்க வீரன் பத்துப் பேருக்கு இணையானவன் அல்லவா? புள்ளலூரிலேதான் பார்த்தோமே?" என்றார் மாமல்லர். மகேந்திர சக்கரவர்த்தி சுத்த வீரத்தைக் கைக்கொள்ளாமல் இராஜதந்திரத்தைக் கையாண்டு ஜயிக்கிறார் என்ற எண்ணம் குமார சக்கரவர்த்திக்கு வேம்பாயிருந்தது. அதை அவரால் ஒப்புக் கொள்ளவோ, பாராட்டவோ முடியவில்லை.

பாதி இரவும் ஒரு பகலும் அந்த அபூர்வ சிநேகிதர்கள் இடைவிடாமல் பிரயாணம் செய்து சூரியன் அஸ்தமிக்கும் சமயத்தில் காஞ்சி மாநகரின் தெற்கு வாசலை அணுகினார்கள். அதே தெற்கு வாசலை, ஒன்பது மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் அஸ்தமன நேரத்தில் நாகநந்தி பிக்ஷுவுடன் கூடத் தான் அணுகியது பரஞ்சோதிக்கு நினைவு வந்தது. அன்று கோட்டைக் கதவின் உள் துவாரத்தின் வழியாக நகருக்குள் பரஞ்சோதி பிரவேசித்தார். இன்றைக்கு அவ்விதம் பிரவேசிக்க வேண்டி இருக்கவில்லை. மாமல்லரும் பரஞ்சோதியும் துணையாக வந்த வீரர்களுடன், கோட்டை வாசலை நெருங்கியதும், கோட்டை வாசலின் மேல் மச்சு மண்டபத்தில் ஜயபேரிகைகள் முழங்கின; வெற்றிச் சங்குகள் ஒலித்தன; கொம்புகள் கோஷித்தன. கோட்டைக்கு உட்புறத்திலிருந்து ஒரே கோலாகலச் சத்தம் எழுந்தது.

கோட்டைக் கதவுகள் 'படார்' என்று திறந்தன. உள்ளே பார்த்தால், நகரம் கண்கொள்ளாக் காட்சி அளித்தது. விசாலமான வீதிகளின் நடுவில் கண்ணுக்கெட்டிய தூரம் பல்லவ வீரர்கள் அணிவகுத்து நின்றார்கள். வீதியின் இரு புறங்களிலும் நகரமாந்தர்கள் நெருங்கி நின்றார்கள். இருபுறத்து வீடுகளின் உப்பரிகை மாடங்களில் திவ்யாலங்கார பூஷிதைகளான இளம் பெண்கள் நின்றார்கள். அவர்கள் பக்கத்தில் மல்லிகை முல்லை கொன்றை முதலிய மலர்கள் கும்பல் கும்பலாகக் கிடந்தன. இரண்டு கை நிறையப் புஷ்பங்களை எடுத்து அவர்கள் சித்தமாய் வைத்துக்கொண்டிருந்தார்கள். எதற்காகவென்று சொல்ல வேண்டுமா? வெற்றி வீரராகத் திரும்பி வரும் குமார சக்கரவர்த்தியின் மீது மலர் மாரி பொழிவதற்காகத்தான்.

காஞ்சி நகரம் அன்று அப்படிக் கோலாகலமாய் இருந்ததற்குக் காரணங்கள் இரண்டு இருந்தன. முதலாவது, வடக்குப் போர்க்களத்திலிருந்து பல்லவ சைனியம் சேனாதிபதி கலிப்பகையின் தலைமையில் காஞ்சிக்குத் திரும்பி வந்து சேர்ந்திருந்தது. சென்ற சில நாளாக ஜனங்கள் நகரைவிட்டு போய்க் கொண்டிருந்தபடியால் பாழடைந்ததுபோல் இருந்த நகரம் ஓர் இலட்சம் போர் வீரர்களின் வரவினால் கலகலப்பை அடைந்திருந்தது. அத்தோடு புள்ளலூர்ச் சண்டையில் மாமல்லரின் மகத்தான வெற்றியைப் பற்றிய செய்தியானது அனைவருக்கும் உற்சாகத்தை உண்டுபண்ணியிருந்தது. இத்தகைய உற்சாகத்துக்குக் காரண புருஷரான குமார சக்கரவர்த்தி மாமல்லர் அன்று நகருக்குத் திரும்பி வருகிறார், அவரை நேரிலேயே பார்க்கப் போகிறோம் என்று தெரிந்த பிறகு, மகா ஜனங்களின் குதூகலத்தைக் கேட்க வேண்டுமா?

தூக்கி நிறுத்தியிருந்த பாலம் அகழியின்மேல் விடப்பட்டதும் மாமல்லர் அதன் வழியாகக் கோட்டைக்குள் பிரவேசித்தார். பரஞ்சோதியும் மற்ற வீரர்களும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். திறந்த கோட்டைக் கதவுகள் மறுபடி சாத்திக் கொண்டன. கோட்டை வாசலைத் தாண்டி மாமல்லர் நகர வீதியில் பிரவேசித்ததும், ஏக காலத்தில் ஆயிரக்கணக்கான ரிஷபக் கொடிகள் தெருவெல்லாம் உயர்ந்தன. வீதியில் அணிவகுத்து நின்ற வீரர்கள் அதுவரை அக்கொடிகளைத் தாழ்த்திப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். மாமல்லர் உள்ளே பிரவேசித்ததும் கொடிகள் மளமளவென்று உயர்ந்து காற்றில் சடசடவென்று அடித்துக்கொண்ட காட்சி ஏதோ ஓர் இந்திரஜாலக் காட்சி மாதிரி தோன்றியது. அதிலிருந்து குமார சக்கரவர்த்தி நகருக்குள் பிரவேசித்துவிட்டார் என்பதை நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் நெருங்கி நின்ற ஜனத் திரள்கள் தெரிந்துகொண்டன. அவ்வளவு ஜனங்களும் ஒருவரோடொருவர் அந்தச் செய்தியைக் கூறி மகிழ்ந்துகொண்டபோது எழுந்த சத்தமானது ஏழு சமுத்திரங்களும் ஒரேயடியாகப் பொங்கி வந்தது போன்ற பேரொலியை ஒத்திருந்தது.

மாமல்லரை வரவேற்பதற்காகக் கோட்டை வாசலுக்கருகில் அமைச்சர் குழுவினர், மந்திரி மண்டலத்தார் இவர்களுடன் சேனாதிபதி கலிப்பகையாரும் காத்திருந்தார். மாமல்லரும் பரஞ்சோதியும் குதிரைகள் மீதிருந்து இறங்கினார்கள். தங்க நிறமான கொன்றைப் பூக்களை அழகாகத் தொடுத்திருந்த பெரியதொரு மாலையை மாமல்லரின் கழுத்தில் முதல் அமைச்சர் சூட்ட, சேனாதிபதி கலிப்பகையார், "வாழ்க! வாழ்க! புள்ளலூர்ப் போர்க்களத்தில் கங்கநாட்டு மன்னனைப் புறங்கண்ட வீராதி வீர மாமல்லர் வாழ்க! வாழ்க!" என்று கோஷித்ததும், "வாழ்க! வாழ்க!", "ஜய விஜயீ பவ!" என்ற கோஷங்கள் ஆயிரம் பதினாயிரம் கண்டங்களிலிருந்தும் ஏக காலத்தில் எழுந்து வானளாவி முழங்கின.

இந்த வரவேற்பு வைபவங்களினால் எல்லாம் மாமல்லருடைய முகத்தில் நியாயமாகத் தோன்றியிருக்கவேண்டிய மலர்ச்சி காணப்படவில்லை. அவருடைய உள்ளத்தில் இன்னதென்று தெரியாத ஏதோ ஒரு குறை உறுத்திக்கொண்டிருந்தது. தந்தை மகேந்திர சக்கரவர்த்தி முன்னதாக நகருக்கு வந்து இந்த வரவேற்பு வைபவத்தையெல்லாம் ஏற்பாடு செய்திருக்கிறார் போலும்! பல்லவ இராஜ்யத்தின் மகத்தான எதிரியின் படைகள் காஞ்சியை நெருங்கி வந்து கொண்டிருக்கும்போது, இந்த வெற்றி முழக்கங்கள் எல்லாம் எதற்காக?

அந்தக் கணமே தந்தையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மாமல்லரின் உள்ளத்தில் பொங்கிற்று. உடனே அவரும் பரஞ்சோதியும் தத்தம் குதிரைகள் மேல் ஏறிக்கொண்டு அரண்மனையை நோக்கி விரைந்து செலுத்தினார்கள். அரண்மனையை அடைந்து முன்வாசலையும் நிலாமுற்றத்தையும் தாண்டி உள்ளே சென்றதும், அந்தப்புரத்து வாசலில் புவன மகாதேவியார் சேடியார் புடைசூழக் காத்திருப்பதைக் கண்டார். போர்க்களத்திலிருந்து வெற்றி மாலை சூடித் திரும்பி வந்த வீரப் புதல்வனுக்கு அன்னை ஆரத்தியெடுத்து, திருஷ்டி கழித்த பிறகு "குழந்தாய்! உன் வீரச் செயல்களைப்பற்றிக் கேட்டு என் தோள்கள் பூரித்திருக்கின்றன. நகர மாந்தர் எல்லாம் சொல்ல முடியாத ஆனந்தத்தில் மூழ்கியிருக்கிறார்கள். ஆனால், உன் முகம் ஏன் வாடிச் சிணுங்கியிருக்கிறது? நெடுந்தூரம் பிரயாணம் செய்த அலுப்பினாலோ?" என்று சக்கரவர்த்தினி கேட்டாள்.

"ஆம், அம்மா! அதுவும் ஒரு காரணந்தான்; ஆனால், அது மட்டும் அல்ல. இந்த வரவேற்பு வைபவம் ஒன்றும் எனக்குப் பிடிக்கவில்லை. புள்ளலூர்ச் சண்டையில் அடைந்த வெற்றி ஒரு பெரிய வெற்றியா? வாதாபி சைனியம் ஒரு பெரிய சமுத்திரம் என்றால், கங்கர் சைனியம் ஒரு சிறு குட்டைக்குச் சமானம். அந்தச் சிறு படையை முறியடித்ததற்கும் நானே முழுக்காரணம் அல்ல. புள்ளலூர்ச் சண்டையில் நமது வெற்றிக்குக் காரணமானவர் உண்மையில் என் தந்தைதான்! அது போகட்டும், அம்மா! சக்கரவர்த்தி எங்கே?" என்று மாமல்லர் கேட்டார். அப்போது புவனமகா தேவியின் முகத்தில் ஆச்சரியக் குறி தென்பட்டது. "இது என்ன குழந்தாய்? அந்தக் கேள்வியை உன்னிடத்தில் கேட்க வேண்டும் என்றல்லவா நினைத்தேன்? என்னை நீ கேட்கிறாயே? அப்பா எங்கே? நீ பார்க்கவில்லையா? உன்னோடு அவர் வரவில்லையா?" என்றாள் புவனமாதேவி.

அப்போதுதான் மகேந்திர சக்கரவர்த்தி காஞ்சிக்கு இன்னும் வந்து சேரவில்லையென்பது மாமல்லருக்குத் தெரிய வந்தது. தமக்கு முன்னாலேயே புறப்பட்டவர் ஏன் இன்னும் வந்து சேரவில்லை? வழியில் ஏதேனும் அபாயம் நேர்ந்திருக்குமோ? வாதாபிப் படைகள் கோட்டையைச் சூழ்வதற்குள் சக்கரவர்த்தி வந்து சேராவிட்டால் என்ன செய்வது? இராஜ்யப் பொறுப்பும் யுத்தம் நடத்தும் பொறுப்பும் தம்மையல்லவா சாரும்? இத்தகைய பல எண்ணங்கள் மாமல்லரின் உள்ளத்தில் பொங்கி எழுந்தன. புவனமாதேவி கூறிய செய்தியானது மாமல்லருக்கு எவ்வளவு வியப்பை அளித்ததோ, அவ்வளவு பரஞ்சோதிக்கு அளித்ததாகத் தெரியவில்லை. அவர் இதை எதிர்பார்த்ததாகவே தோன்றியது.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
90
Points
48
ஐம்பதாம் அத்தியாயம்

மந்திராலோசனை

அன்றிரவு ஒன்றரை ஜாமம் ஆனபோது, மந்திராலோசனை சபை கூடியிருப்பதாகவும், குமார சக்கரவர்த்தியின் வரவை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் செய்தி வந்தது. மாமல்லரும் அன்னையிடம் விடைபெற்றுப் புறப்பட்டார். புள்ளலூரிலிருந்து சக்கரவர்த்தி செய்தி அனுப்பியதன் காரணமாகத்தான் இன்றிரவும் இந்த மந்திராலோசனை சபை கூடியது. (பல்லவ சாம்ராஜ்யத்தில் மந்திரி மண்டலம் என்றும் அமைச்சர் குழு என்றும் இரண்டு சபைகள் சக்கரவர்த்திக்கு இராஜ்ய நிர்வாகக் காரியங்களில் துணை செய்தன. மந்திரிகள் ஆலோசனை சொல்வதற்கு உரியவர்கள். அமைச்சர் அல்லது அமாத்தியர் காரிய நிர்வாகத் தலைவர்கள் சாம்ராஜ்யம் பற்பல கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கோட்டத்திற்கும் ஒரு தலைவன் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கோட்டத்தலைவர்களும் மந்திராலோசனைக்கு அழைக்கப்படுவார்கள்.) மந்திரிகளும், அமைச்சர்களும், கோட்டத்தலைவர்களும் மந்திராலோசனைக்கு அழைக்கப்பட்டு வந்திருந்தார்கள்.

தளபதி பரஞ்சோதி பின்தொடர, மாமல்லர் மண்டபத்திற்குள் பிரவேசித்ததும் அங்கே கூடியிருந்தவர் எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செய்தார்கள்! பிறகு பீடங்களில் அமர்ந்தார்கள். சக்கரவர்த்தியின் சிம்மாசனம் வெறுமையாயிருந்தது. அதனருகில் போட்டிருந்த மற்றொரு சிம்மாசனத்தில் மாமல்லர் அமர்ந்தார். அவருக்குப் பின்னால் பரஞ்சோதி நின்று கொண்டிருந்தார். அவருக்கு ஏனோ உட்கார மனம் வரவேயில்லை. ஏதோ எதிர்பாராத சம்பவங்கள் நடக்கப் போவதாக அவருடைய உள்ளுணர்ச்சி சொல்லிக் கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட பரபரப்பு அவருடைய முகத்தில் பிரதிபலித்தது.

முதன் மந்திரி சாரங்கதேவ பட்டர் சபையை ஆரம்பித்து வைத்தார். அவர் சபையைப் பார்த்துக் கூறியதாவது; "இன்றைக்கு இந்த நேரத்தில் மந்திராலோசனை சபை கூட்டும்படியாகச் சக்கரவர்த்தி ஆக்ஞை இட்டதன் பேரில் இங்கே கூடியிருக்கிறோம். ஆனால், சக்கரவர்த்தி இன்னும் வந்து சேரவில்லை. விசித்திர சித்தரான நம் சக்கரவர்த்தி வேறு முக்கிய அலுவல்களில் ஈடுபட்டிருப்பதனால் இன்னும் வந்து சேரவில்லையா? அல்லது எதிர்பாராத இடையூறுகளினால் தடுத்து நிறுத்தப்பட்டாரா என்பதும் தெரியவில்லை. இந்த நிலைமையில் மந்திராலோசனையைத் தள்ளிப் போடுவதா அல்லது குமார பல்லவரின் தலைமையில் சபையை நடத்துவதா என்று முதலில் தீர்மானிக்க வேண்டும். சக்கரவர்த்தி ஒன்பது மாதத்துக்கு முன்பு வடக்குப் போர்க்களத்துக்குச் சென்றபோது மாமல்லருக்குச் சர்வ இராஜ்ய அதிகாரங்களையும் கொடுத்துவிட்டுச் சென்றார். எனவே, மாமல்லரின் தலைமையில் மந்திராலோசனை நடத்தலாம் என்றே நான் நினைக்கிறேன். உங்கள் எல்லோருடைய அபிப்பிராயமும் அவ்விதமே இருக்கும் என்று கருதுகிறேன்." முதன் மந்திரியின் மேற்படி பிரேரணையை, "ஆம், ஆம்" என்று கூறி சபையோர் அனைவரும் ஆமோதித்தார்கள்.

பின்னர், முதல் அமைச்சர் ரணதீர பல்லவராயர் சொன்னதாவது; "இந்தச் சபையைத் தள்ளிப்போட்டு, சக்கரவர்த்தி வருகிற வரையில் காத்திருப்பதற்கு முடியாத நிலைமையில் நாம் இருக்கிறோம். வாதாபியின் முன்னணிப் படைகள் கோட்டைக்கு இரண்டு காத தூரத்தில் வந்து விட்டன. இந்த நிலைமையில் நாம் செய்யவேண்டியது என்னவென்பது பற்றிக் குமார சக்கரவர்த்தியின் அபிப்பிராயத்தையும், ஆக்ஞையையும் அறிய விரும்புகிறோம். வடக்குப் போர்க்களத்திலிருந்து நம் வீர பல்லவ சைனியத்தைச் சேதமடையாமல் கோட்டைக்குள்ளே கொண்டு வந்து சேர்த்த சேனாதிபதி கலிப்பகையாரும் நமது கடமையைப் பற்றி தமது அபிப்பிராயத்தைத் தெரியப்படுத்துவாரென்று எதிர்பார்க்கிறோம்."

செஞ்சிக்கோட்டைத் தலைவன் சடையப்பசிங்கன் சொன்னான்; "சக்கரவர்த்தியைப் பற்றிய செய்தியை முதலில் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். வடக்குப் போர்க்களத்தில் தமது சேனாதிபதியுடன் பல்லவேந்திரர் இருப்பதாகவே இத்தனை காலமும் எண்ணிக்கொண்டிருந்தோம். சைனியத்தை விட்டுப் பிரிந்து சக்கரவர்த்தி எங்கே போனார் என்பதைச் சேனாதிபதி தெரிவிக்கக் கூடுமா?" சேனாதிபதி கலிப்பகையார் கூறினார்; "பத்து தினங்களுக்கு முன்னால் சக்கரவர்த்தி இரண்டாயிரம் வீரர்களுடன் வடக்குப் போர்க்களத்திலிருந்து புறப்பட்டார். காஞ்சிக் கோட்டைக்குச் சைனியங்களுடன் வந்து சேரும்படி எனக்குக் கட்டளையிட்டு விட்டுச் சென்றார். அப்புறம் எனக்குத் தகவல் ஒன்றும் தெரியாது. புள்ளலூர்ப் போர்க்களத்துக்குச் செல்வதாக நான் ஊகித்தேன். சக்கரவர்த்தி அழைத்துச் சென்ற வீரர்களில் திரும்பி வந்திருப்பவர்கள் அவ்விதமே சொல்கிறார்கள்.

"புள்ளலூர்ப் போர்க்களம்" என்றதும் அங்கிருந்தோர் அனைவருடைய கண்களும் மாமல்லரை நோக்கின. சபையின் நோக்கத்தை அறிந்து கொண்டு மாமல்லர் பேசினார். "சேனாதிபதி ஊகித்தது உண்மை; தந்தை புள்ளலூர்ப் போர்க்களத்துக்குத்தான் வந்தார். ஆனால், இன்னும் இங்கு வந்து சேரவில்லையென்பது எனக்கு வியப்பாகவே இருக்கிறது. உங்களையெல்லாம் கோட்டை வாசலில் சந்தித்தபோது, என் தந்தை அரண்மனையில் என்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று எண்ணினேன். அரண்மனைக்கு வந்ததும் பெரும் ஏமாற்றமடைந்தேன். என் அருமைத் தோழர் பரஞ்சோதிக்குச் சக்கரவர்த்தி அனுப்பியிருந்த ஓலையிலிருந்து அவ்விதம் நாங்கள் நினைக்க நேர்ந்தது. தளபதி! எல்லா விவரங்களையும் இவர்களுக்குச் சொல்லுங்கள்!"

அவ்விதமே தளபதி பரஞ்சோதி புள்ளலூர்ப் போரின் விவரம், துர்விநீதன் தோற்று ஓடியது, அவனைத் துரத்திக் கொண்டு தாங்கள் சென்றது, சக்கரவர்த்தியும் வேறு மார்க்கமாகத் தெற்கு நோக்கி வந்தது, மாமல்லர் வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டு மண்டபப்பட்டுக் கிராமத்தில் ஒதுங்கியது, தாம் அவரைத் தேடியது, துர்விநீதனைச் சக்கரவர்த்தி சிறைப்படுத்தி விட்டு தமக்கு ஓலை அனுப்பினது ஆகிய விவரங்களைச் சபையோருக்கு எடுத்துக் கூறினார். ஆயனர் சிவகாமி விஷயத்தை மட்டும் அவர் பிரஸ்தாபிக்கவில்லை. அதன் மேல் முதன் மந்திரி சாரங்கதேவபட்டர் கூறியதாவது; "சக்கரவர்த்தி இல்லாத சமயத்தில் நம்முடைய பொறுப்பு பன்மடங்கு அதிகமாயிருக்கிறது. தென் தமிழ்நாடு இது வரையில் கண்டிராத பெரிய பகைவர் படை நம்மை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. அந்த நிலைமையில் நாம் செய்ய வேண்டியதைப் பற்றிக் குமார சக்கரவர்த்தியின் அபிப்பிராயத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். கோட்டத் தலைவர்களும் மாமல்லரின் ஆக்ஞையை எதிர்பார்க்கிறார்கள். காஞ்சிக் கோட்டை முற்றுகைக்கு உட்படுவதற்குள் அவர்கள் தங்கள் தங்கள் கோட்டத்துக்குத் திரும்பிப் போய்விட வேண்டுமல்லவா?"

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மாமல்லர் உடனே மறுமொழி எதுவும் சொல்லவில்லை. ஏதோ தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்தவராகக் காணப்பட்டார். அதைக் கவனித்த முதல் அமைச்சர் ரணதீர பல்லவராயர், "முதலில் வடக்குப் போர்க்களத்திலிருந்து திரும்பி வந்திருக்கும் சேனாதிபதி கலிப்பகையார் தமது அபிப்பிராயத்தைச் சொல்லுவது நல்லது. சக்கரவர்த்தி இந்தச் சபை கூட்டச் சொன்ன தன் நோக்கம் என்ன என்பது அவருக்குத் தெரிந்திருக்கக்கூடும்!" என்றார்.

சேனாதிபதி கலிப்பகையார் தம் ஆசனத்திலிருந்து எழுந்து நின்று சொல்லத் தொடங்கினார்: "சக்கரவர்த்தி இந்த மந்திராலோசனை சபையைக் கூட்டியதன் காரணம், காஞ்சி முற்றுகை சம்பந்தமானதுதான். முற்றுகை ஒருவேளை ஓராண்டு காலம் நீடித்தாலும் நீடிக்கலாம் என்று சக்கரவர்த்தி எதிர்பார்க்கிறார். இந்த ஒரு வருஷமும் கோட்டைக்குள்ளே இருப்பவர்களுக்கும் வௌியில் இருப்பவர்களுக்கும் சம்பந்தம் எதுவும் இராது. ஓலைப் போக்குவரவுக்கும் இடமிராது. காஞ்சிக் கோட்டை முற்றுகைக்கு உட்பட்டிருக்கும் காலத்தில் நமது கோட்டத் தலைவர்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை அவர்களுக்குச் சக்கரவர்த்தி சொல்ல விரும்பினார். அவர் சொல்ல விரும்பியது என்ன என்பதை நான் அறியேன்."

"சேனாதிபதியை ஒன்று கேட்க விரும்புகிறேன். வாதாபிப் படைகள் கோட்டை வாசலுக்கு எப்போது வந்து சேரும் என்று நினைகிறீர்கள்?" என்று கோட்டத் தலைவரில் ஒருவர் கேட்டார். "நாளைச் சூரியோதயத்துக்கு வந்து சேரலாம். அஸ்தமனத்துக்குள் கோட்டையை நாலாபுறமும் சூழ்ந்து கொள்ளக் கூடும்." "அப்படியானால், கோட்டைக்கு வௌியே போகிறவர்கள் நாளைச் சூரியோதயத்துக்குள் போய்விட வேண்டுமல்லவா?" "சக்கரவர்த்தி இன்று இரவுக்குள்ளே வந்து சேராவிட்டால், கோட்டத் தலைவர்கள் அவர்களுடைய ஊர்களுக்குத் திரும்பிச் சென்று விடுவதுதான் நல்லது. சக்கரவர்த்தியின் ஆக்ஞை அவர்களைத் தேடிக்கொண்டு வந்து சேரும் என்று எதிர்பார்க்கலாம்." சற்று நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. எல்லாரும் மாமல்லருடைய முகத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள். "குமார சக்கரவர்த்தியின் ஆக்ஞையை எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்" என்று முதல் மந்திரி கூறினார்.

மாமல்லர் தமது ஆசனத்திலிருந்து கம்பீரமாக எழுந்தார். சபையோர் அனைவரையும் ஒரு தடவை பார்த்தார். பிறகு கூறினார்; "பத்து மாதங்களுக்கு முன்பு சக்கரவர்த்தி காஞ்சியை விட்டுப் புறப்பட்டபோது, தாம் திரும்பி வரும்வரை தம்முடைய ஸ்தானத்தில் சகல இராஜ்யாதிகாரங்களையும் வகிக்கும்படி எனக்குக் கட்டளையிட்டார். அது உங்களுக்கெல்லாம் நினைவிருக்கிறதல்லவா?" "நினைவிருக்கிறது!" என்று சிலர் சொன்னார்கள்; இன்னும் சிலர் ஆமோதிப்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தார்கள்.

ஏதோ விபரீதமான யோசனை வரப்போகிறதென்று எண்ணியவர்களைப்போல் மற்றவர்கள் மௌனமாயிருந்தார்கள். "சக்கரவர்த்தி இன்னும் திரும்பி வரவில்லை; ஆகவே, அவர் எனக்கு அளித்த இராஜ்யாதிகாரத்தை இன்னும் நான் வகிக்கலாமல்லவா? அது உங்களுக்கெல்லாம் சம்மதந்தானே?" "சம்மதம்! சம்மதம்" என்பதாகச் சபையில் பல குரல்கள் ஏக காலத்தில் கோஷித்தன. முதன் மந்திரி எழுந்து, நின்று, "பல்லவ குமாரா! சக்கரவர்த்தி எங்களை ஆலோசனை கேட்கும்போது நாங்கள் எங்கள் கருத்தைச் சொல்வோம். அதுபோலவே தாங்கள் கேட்டாலும் எங்கள் அபிப்பிராயத்தைச் சொல்கிறோம். தீர ஆலோசித்தபின் தாங்கள் எப்படிக் கட்டளையிடுகிறீர்களோ, அப்படியே நடத்திவைப்போம். யோசனை சொல்வதற்குத் தான் எங்களுக்கு உரிமை; ஆக்ஞையிடும் உரிமை தங்களது" என்றார்.

"சந்தோஷம், நீங்கள் சொல்லவேண்டிய யோசனையெல்லாம் சொல்லுங்கள்; கேட்டுக் கொள்கிறேன். ஆனால் என்ன செய்யவேண்டும் என்பதைப்பற்றி நான் முன்னமே முடிவு செய்துவிட்டேன். மந்திரிகளே! அமைச்சர்களே! கோட்டத் தலைவர்களே! அனைவரும் கேளுங்கள். படையெடுத்து வந்த பகைவர்களுக்குப் பயந்து கோட்டைக்குள் ஒளிந்து கொள்வது என்பது பல்லவ குலத்துக்கு என்றும் அழியாத அவமானத்தை உண்டுபண்ணக் கூடியது. தொண்டைமான் இளந்திரையன் வழி வந்த வீர பல்லவ வம்சத்துக்கு இந்த மகத்தான களங்கம் என்னுடைய காலத்தில் ஏற்படுவதை நான் ஒருநாளும் சகிக்க முடியாது. இந்தக் கோட்டைக்குள் இன்று சுமார் ஒரு லட்சம் பல்லவ வீரர்கள் போருக்குத் துடிதுடித்துக்கொண்டு காத்திருக்கிறார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு நாளைக்கே வௌியேறி நமது கோட்டை வாசலில் வாதாபி சைனியத்தைத் தாக்குவது என்று முடிவு செய்துவிட்டேன். அதற்கு உங்களுடைய சம்மதத்தை எதிர்பார்க்கிறேன். தளபதி பரஞ்சோதி என்னுடன் போர்க்களத்துக்கு வருவார். பரஞ்சோதிக்குப் பதிலாகச் சேனாதிபதி கலிப்பகையாரைக் கோட்டை காவலுக்கு நியமிக்கிறேன். இதற்கு உங்களுடைய சம்மதம் தெரிந்துகொண்ட பிறகு, வௌியூர்க் கோட்டத் தலைவர்களுக்கு நான் சொல்ல வேண்டியதைச் சொல்கிறேன்." மாமல்லர் பேச்சை நிறுத்தியபோது இடி இடித்து ஓய்ந்தது போலிருந்தது. மந்திரிகளும் அமைச்சர்களும் ஒருவரது முகத்தை ஒருவர் பார்த்தார்கள்; யாருக்கும் பேச நா எழவில்லை.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
90
Points
48
ஐம்பத்தோராம் அத்தியாயம்

சக்கரவர்த்தி தூதன்

குமார சக்கரவர்த்தி சபையில் கூடியிருந்தவர்களை ஒரு தடவை கண்ணோட்டமாகப் பார்த்துவிட்டு, "உங்கள் அபிப்பிராயம் என்ன? எல்லோருக்கும் சம்மதம்தானே?" என்று கேட்டார். சபையில் எல்லாருடைய முகத்திலும் திகைப்பின் அறிகுறி காணப்பட்டது. சற்று நேரம் நிசப்தம் குடிகொண்டிருந்தது. உண்மையென்னவென்றால், அங்கே கூடியிருந்தவர்கள் யாவரும் யுத்தம் சம்பந்தமாக அபிப்பிராயம் கூறுவதற்காக வரவில்லை. மகேந்திர சக்கரவர்த்தியின் விருப்பத்தையும் ஆக்ஞையையும் தெரிந்துகொள்வதற்காகவே அவர்கள் வந்திருந்தார்கள். ஒன்பது மாதத்துக்கு முன்னால் சக்கரவர்த்தி வடக்குப் போர்க்களம் சென்றபோது அவர்கள் மேற்படி கொள்கையே அனுஷ்டித்துச் சக்கரவர்த்திக்குச் சர்வாதிகாரம் அளித்தார்கள். இப்போதும் அதே உறுதியுடன்தான் சபையில் கூடியிருந்தார்கள். விஷயம் இப்படியிருக்க, மாமல்லர் திடீரென்று எதிர்பாராதவிதமாக ஒரு பெரிய அபாயகரமான காரியத்தைச் செய்யப் போவதாகச் சொல்லி, அதைப்பற்றி அபிப்பிராயமும் கேட்கவே, எல்லாரும் மனக் குழப்பத்தில் ஆழ்ந்து, இன்னது செய்வதென்று தெரியாமல் சும்மா இருக்கும்படி நேர்ந்தது.

மாமல்லர் எல்லாருடைய முகங்களையும் ஒரு தடவை கண்ணோட்டம் செலுத்திப் பார்த்துவிட்டு, "ஏன் எல்லாரும் மறுமொழி சொல்லாமலிருக்கிறீர்கள்? இது என்ன மௌனம்? உங்கள் முன்னிலையில் சொல்லத்தகாத வார்த்தைகள் ஏதேனும் சொல்லிவிட்டேனா? வீர பல்லவ குலத்துக்கு இழுக்குத் தரும் காரியம் எதையேனும் கூறினேனா?" என்று கம்பீரமாகக் கேட்டார். இன்னமும் அச்சபையில் மௌனம்தான் குடிகொண்டிருந்தது. பெரியதொரு தர்ம சங்கடத்தில் தாங்கள் அகப்பட்டுக் கொண்டிருப்பதாக ஒவ்வொருவரும் உணர்ந்து வாய் திறவாமல் இருந்தார்கள். "நல்லது, உங்களில் ஒருவரும் ஆட்சேபியாதபடியினால், என்னுடைய யோசனையை ஒப்புக்கொள்கிறீர்கள் என்று ஏற்படுகின்றது. சேனாதிபதி! அப்படித்தானே?" என்று மாமல்லர் சேனாதிபதி கலிப்பகையாரைக் குறிப்பாகப் பார்த்துக் கேட்டார்.

சேனாதிபதி கலிப்பகையார் எழுந்து, "குமார சக்கரவர்த்தியின் கட்டளை எதுவோ, அதன்படி நடக்க நான் கடமைப்பட்டவன். ஆனால், அது யுத்தமானது என்று என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. மாமல்லர் கூறுவது சக்கரவர்த்தியின் அபிப்பிராயத்துக்கு மாறானது. எவ்வளவோ தீர்க்காலோசனையின் பேரில் பல்லவேந்திரர் நமது சைனியத்தைக் கோட்டைக்குள்ளே கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். மகேந்திர சக்கரவர்த்தி கோழை அல்ல; போருக்குப் பயந்தவர் அல்ல. சக்கரவர்த்தியின் அபிப்பிராயத்துக்கு மாறாக நாம் எதுவும் செய்வது உசிதமல்ல" என்றார்.

குமார சக்கரவர்த்தியின் முகத்தில் ஆத்திரம் கொதித்தது. "சேனாதிபதி! என்னுடைய வீரத் தந்தையைக் கோழை என்றோ பயந்தவர் என்றோ நான் சொன்னேனா? அதைக் காட்டிலும் என் நாவை அறுத்துக்கொள்வேன்! என் தந்தையின் யுத்த தந்திரம் வேறு; என்னுடைய யுத்த தந்திரம் வேறு, அவர் இல்லாதபோது என்னுடைய யுத்த தந்திரத்தை அனுசரிக்க எனக்குப் பாத்தியதை உண்டு. சேனாபதி! பல்லவ சைனியம் நாளைச் சூரியோதயத்திற்குள் யுத்த சந்நத்தமாகக் கிளம்ப ஆயத்தம் செய்யுங்கள்!" சேனாபதி கலிப்பகையார், சற்றுத் தணிந்த குரலில், "பல்லவ குமாரரின் தந்திரம் யுத்த தந்திரம் அல்ல; தற்கொலைத் தந்திரம்! வாதாபி சைனியத்தில் ஐந்து லட்சம் போர் வீரர்கள் இருக்கிறார்கள். பல்லவ வீரர்கள் லட்சம் பேருக்கு மேல் இல்லை" என்றார்.

மாமல்லர் கண்களில் தீப்பொறி பறக்க விழித்துக் கூறினார்: "சேனாபதி! புள்ளலூர்ப் போர்க்களத்தில் பல்லவ வீரர் எத்தனை பேர், கங்கபாடி வீரர் எத்தனை பேர் என்பதை அறிவீரா? ஐம்பதினாயிரம் கங்க வீரர்களைப் புறங்காட்டி ஓடும்படி நமது பதினாயிரம் வீரர்கள் செய்யவில்லையா? போர்க்களத்தில் ஆட்களின் கணக்கா பெரிது? வெற்றியளிப்பது வீரமல்லவா? பல்லவ வீரன் ஒவ்வொருவனும் சளுக்க வீரர் ஒன்பது பேருக்கு ஈடானவன். கலிப்பகையாரே! இதைத் தாங்கள் இன்னும் அறிந்துகொள்ளவில்லையா?" "வாதாபி சைனியத்தில் ஐந்து லட்சம் வீரர்கள் மட்டுமில்லை; பதினையாயிரம் போர் யானைகள் இருக்கின்றன!" என்றார் கலிப்பகையார். "இருந்தால் என்ன? நமது வீரத் தளபதி பரஞ்சோதியாரின் கை வேலுக்கு அஞ்சி மதம் பிடித்த யானை இந்தக் காஞ்சி நகரின் வீதிகளில் தறிகெட்டு ஓடியது நமது சேனாபதிக்குத் தெரியாது போலிருக்கிறது. தளபதி பரஞ்சோதியைப் போன்ற ஒரு லட்சம் வீர சிம்மங்கள் பல்லவ சைனியத்தில் இருக்கும்போது, புலிகேசியின் போர் யானைகளுக்கு நாம் ஏன் அஞ்சவேண்டும்?.."

விவாதம் இவ்விதம் முற்றிக்கொண்டிருப்பதைக் கண்ட முதல் மந்திரி சாரங்கதேவர் பெரிதும் கவலையடைந்தார். பெரியவர் எழுந்து நின்றதும் மாமல்லர் பேச்சை நிறுத்தினார். "ஒரு விஷயம் நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். சக்கரவர்த்தி இன்னமும் வந்து சேர அவகாசம் இருக்கிறதல்லவா? இந்த விஷயம் கோட்டை வாசற்காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறதா? சக்கரவர்த்தி இன்றிரவு ஒருவேளை வந்தால் கோட்டைக் கதவைத் தாமதமின்றித் திறந்துவிடக் காவலர்கள் ஆயத்தமாகயிருக்கிறார்களா?" என்று முதன் மந்திரி வினவினார்.

அப்போது தளபதி பரஞ்சோதி, "ஆம்; அப்படித்தான் கட்டளையிட்டிருக்கிறேன். சக்கரவர்த்திப் பெருமான் ஒருவேளை தூதர்கள் மூலமாகச் செய்தி அனுப்பக்கூடுமென்று எதிர்பார்த்து அதற்கும் தக்க ஏற்பாடு செய்திருக்கிறேன்" என்றார். தளபதி பரஞ்சோதி இவ்விதம் சொல்லி வாய் மூடுவதற்குள்ளே மண்டபத்தின் வாசற் காவலன் ஒருவன் விரைந்து உள்ளே வந்து, "சக்கரவர்த்தியிடமிருந்து தூதன் ஓலை கொண்டு வந்திருக்கிறான். சிங்க இலச்சினையுடன் வந்திருக்கிறான்!" என்று தெரிவித்தான். இதைக் கேட்ட மாமல்லர் திகைத்துப் போய் நின்றார். சபையில் இருந்த மற்றவர்கள் எல்லாரும், மிகவும் நெருக்கடியான சமயத்தில் தெய்வமே தங்களுடைய துணைக்கு வந்தது என்று எண்ணியவர்களாய் மனதிற்குள் உற்சாகமடைந்தார்கள்.



ஐம்பத்திரண்டாம் அத்தியாயம்

பயங்கரச் செய்தி

சக்கரவர்த்தியின் தூதன் சபா மண்டபத்துக்குள்ளே பிரவேசித்தபோது சபையில் நிசப்தம் நிலவியது. வந்தவன் நெடிதுயர்ந்த ஆஜானுபாகுவான தோற்றமளித்தான். போர்க்களத்திலிருந்து நேரடியாக வந்தவனாகக் காணப்பட்டான். அவனது தலையிலும் முகத்திலும் காயங்களுக்குக் கட்டுக்கள் போடப்பட்டிருந்தன. அவன் உடுத்தியிருந்த துணிகள் இரத்தக் கரையினால் சிவந்திருந்தன. என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறானோ என்ற ஆவலானது எல்லோருடைய மனத்திலும் குடிகொண்டு வேறு வகை எண்ணங்களுக்கே இடம் இல்லாமல் செய்தது. சபையிலிருந்த அத்தனைபேரின் கண்களும் இமை கொட்டாமல் அத்தூதனை நோக்கின.

அப்படிப் பார்த்தவர்களில் தளபதி பரஞ்சோதியும் ஒருவர் என்று சொல்ல வேண்டியதில்லை. மற்றவர்களுடைய மனத்தில் குடிகொண்டிருந்த ஆவல் அவருடைய மனத்திலும் இருந்ததாயினும் அதோடு இன்னொரு வியப்பும் அவர் மனத்தில் ஊசலாடியது. அது இத்தூதனை எங்கேயோ பார்த்திருக்கிறோம் என்ற உணர்ச்சிதான். தூதன், சபையில் உள்ளவர்களையெல்லாம் ஒரு தடவை சுற்றி வளைத்துப் பார்த்தான். கடைசியில் அவனுடைய கண்கள் குமார சக்கரவர்த்தியின் முகத்திற்கு வந்து அங்கேயே ஸ்திரமாக நின்றன. "பல்லவ குமாரா! தங்கள் தந்தையிடமிருந்து மிக முக்கியமான செய்தி கொண்டு வந்திருக்கிறேன், செய்தியை இந்தச் சபையிலேயே சொல்லலாமல்லவா?" என்று கேட்டான்.

மாமல்லர் முதன் மந்திரியின் முகத்தைப் பார்த்தார். அந்தக் குறிப்பையறிந்த சாரங்கதேவபட்டர், "சக்கரவர்த்தியின் செய்தியை இங்கேயுள்ளவர்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியதுதான்! இங்கேயே தாராளமாகச் சொல்லலாம்" என்றார். "அப்படியானால் கேளுங்கள், நான் கொண்டு வந்திருக்கும் செய்தி மிகப் பயங்கரமானது. ஆயினும் சொல்லியே தீரவேண்டும்.. பல்லவ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி சிறைப்பட்டார்!.." களங்கமற்ற ஆகாசத்திலிருந்து திடீரென்று பேரிடி விழுந்தது போலிருந்தது அந்தச் சபையிலிருந்தவர்கள் அனைவருக்கும். சிலர் "என்ன? என்ன?" என்று அலறினார்கள். சிலர் ஆசனத்திலிருந்து குதித்து எழுந்தார்கள், சிலர் திறந்த வாய் மூடாமல் திகைத்த பார்வையுடன் தூதனைப் பார்த்தவண்ணமிருந்தார்கள். மாமல்லர் பயங்கரமான ஒரு சிரிப்புச் சிரித்தார். அது சபையிலிருந்த அனைவருக்கும் மயிர்க் கூச்சை உண்டாக்கிற்று. "சக்கரவர்த்தி சிறைப்பட்டாரா? எப்படி? எப்போது? யார் சிறைப்படுத்தினார்கள்?" என்று மாமல்லர் கர்ஜித்தார். அவருடைய கரம் தன்னையறியாமல் உடைவாளை உருவியது.

"வாதாபி சைனியத்தின் முன்னணிப் படையினால் சக்கரவர்த்தி சிறைப்படுத்தப்பட்டார்; நேற்று மாலையிலே தான்? தெற்கேயிருந்து திரும்பியவர் வாதாபி சைனியத்தின் நிலையை அறிந்து கொள்ளுவதற்காக நேரே வடதிசை சென்றார். போன இடத்தில் எதிர்பாராதவிதமாக வாதாபி வீரர்களால் சிறைப்படுத்தப்பட்டார். பல்லவ குமாரா? சக்கரவர்த்தி என்னிடம் தங்களுக்குச் சொல்லியனுப்பிய செய்தி இதுதான்; 'என் மகன் தன்னுடைய இணையில்லா வீரத்தைக் காட்டவேண்டிய சந்தர்ப்பம் வந்துவிட்டது; வாதாபி சைனியத்தை முறியடித்துப் புலிகேசியைக் கர்வபங்கம் செய்து என்னை விடுதலை செய்ய வேண்டிய பொறுப்பு என் வீரப் புதல்வனைச் சேர்ந்தது! மாமல்லனுக்கு இது அசாத்தியமான காரியமல்ல! இந்தச் செய்தியைத்தான் தங்கள் தந்தையிடமிருந்து கொண்டுவந்தேன்" என்று கூறி நிறுத்தினான் தூதன்.

மாமல்லர் அப்போது சபையிலிருந்தவர்கள் அனைவரையும் ஒரு தடவை கண்களில் அக்னிஜுவாலை எழும்படி பார்த்துவிட்டு, "சேனாதிபதி! இப்போதாவது நமது படைகளைக் கோட்டைக்கு வௌியே கொண்டுபோகச் சம்மதிப்பீரா? மந்திரிகளும் அமைச்சர்களும் என்ன சொல்கிறீர்கள்? கோட்டத் தலைவர்களின் அபிப்பிராயம் என்ன?" என்று இடிமுழக்கம் போன்ற குரலில் கேட்டுவிட்டு, தமக்குப் பின்னால் நின்ற தளபதி பரஞ்சோதியைத் திரும்பிப் பார்த்து, "தளபதி! நீர்கூட ஏன் இப்படி ஸ்தம்பித்து நிற்கிறீர்? எல்லாரும் அசையாத ஜடப் பொருள்கள் ஆகிவிட்டீர்களா?" என்றார்.

அப்போது முதல் அமைச்சர் எழுந்து, "இந்தத் தூதன் சொல்வது உண்மை என்பதற்கு என்ன ஆதாரம்?" என்று வினவினார். தூதன் உடனே கையிலிருந்த சிங்க இலச்சினையைக் காட்டி "இதுதான் ஆதாரம்; என் முகத்திலும் உடம்பிலும் உள்ள காயங்கள்தான் அத்தாட்சி!" என்றான். "ஆஹா! மகேந்திர சக்கரவர்த்தி பகைவர்களின் கையில் சிக்கிக் கொண்டிருக்கிறார். நீங்கள் ஆதாரம் கேட்டுக்கொண்டு காலம் கடத்துகிறீர்கள் அல்லவா! தளபதி வாரும், நாம் போகலாம்!" என்று மாமல்லர் பரஞ்சோதியைப் பார்த்துச் சொன்னார். ஆனால், தளபதி பரஞ்சோதி ஏதோ ஒரு மனக் குழப்பத்தில் ஆழ்ந்தவராய்க் காயக் கட்டுக்களுடன் நெடிதுயர்ந்து நின்ற தூதரின் முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். முதன் மந்திரி சாரங்கதேவபட்டர், "இந்தத் தூதனை இதற்கு முன்னால் நம்மில் யாராவது பார்த்ததுண்டோ?" தூதா! நீ யார்?" என்று கேட்க, தூதன் கூறினான்.

"நான் யாரா? பல்லவ சக்கரவர்த்தியின் அந்தரங்க ஒற்றன். பல்லவ ஒற்றர் படையில் சத்ருக்னருக்கு அடுத்த பதவி வகிப்பவன். தளபதி பரஞ்சோதி என்னை அடிக்கடி பார்த்திருக்கிறார்! தளபதி! என்னைத் தெரியவில்லையா? இந்தக் காஞ்சி நகருக்கு உம்மை அழைத்து வந்த நாகநந்தி நான்தான் என்று தெரியவில்லையா? ஆயனரும் அவர் மகளும் தெரிந்தோ தெரியாமலோ வாதாபி அரசனுக்கு ஒற்று வேலை செய்வதாகச் சந்தேகித்துச் சக்கரவர்த்தி என்னை அவர்களுக்குக் காவலாகப் போட்டார். ஆயனர் புலிகேசிக்குக் கொடுத்த இரகசிய ஓலையை எடுத்துக்கொண்டு நாகார்ஜுன மலைக்கு நீர் கிளம்பிச் சென்றீர். சக்கரவர்த்திக்கு அதை நான் தெரியப்படுத்தியதின் பேரில், அந்த ஓலையைச் சக்கரவர்த்தி உம்மிடமிருந்து பறித்துக்கொண்டார். தளபதி! இதெல்லாம் உண்மையா, இல்லையா?" என்று தூதன் கம்பீரமாகக் கேட்டான்.

தளபதி பரஞ்சோதியின் தலை சுழன்றது. சில சில விஷயங்களை எண்ணிப் பார்க்கும்போது, ஒருவேளை அத்தூதன் கூறியது உண்மையாயிருக்கலாமென்று தோன்றியது. தூதன் மேலும் சொன்னான்; "ஆயனருடன் குண்டோதரன் என்ற பெயருடன் வாதாபி ஒற்றன் ஒருவன் இருந்து வந்தான். அவன் நேற்று ஆயனருடைய செய்தியுடன் வாதாபி சைனியத்தைச் சந்திப்பதற்காகச் சென்றான். அவனைத் தடுப்பதற்காகச் சக்கரவர்த்தியும் நானும் தொடர்ந்து போனபோது எதிர்பாராதவிதமாகச் சளுக்க வீரர்கள் எங்களைச் சூழ்ந்து கொண்டார்கள். கடவுள் அருளால் நான் தப்பி வந்தேன். அவ்வளவுதான் விஷயம்; சக்கரவர்த்தி இன்னும் சில பணிகளை எனக்கு இட்டிருக்கிறார். அவற்றை நிறைவேற்றுவதற்கு நான் சத்ருக்னரைத் தேடிப் போக வேண்டும். விடை கொடுங்கள்! நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன். நன்கு ஆலோசித்து எது உசிதமோ அவ்விதம் செய்யுங்கள்!"

இவ்வாறு கூறிவிட்டு, தூதன் சபா மண்டபத்தை விட்டு வௌியே சென்றான். மேலும் அவனை ஏதேனும் கேட்கவோ அவனைத் தடுத்து நிறுத்தவோ, யாருக்கும் தோன்றவில்லை. சபையிலிருந்த அனைவரும் கல்லாய்ச் சமைந்திருந்தார்கள். மாமல்லரின் நெஞ்சில் ஆயிரம் தேள்கள் கொட்டிக் கொண்டிருந்தன. ஆகா! ஆயனரும் அவர் மகளும் வாதாபிக்கு ஒற்று வேலை செய்கிறார்களா? அப்படிப்பட்டவர்களையா நாம் வெள்ளத்திலிருந்து காப்பாற்றினோம்? அந்தச் சிவகாமியிடமா நாம் எல்லையில்லாக் காதல் வைத்தோம்? அவர்களாலேயா இப்பொழுது மகேந்திர பல்லவர் பகைவர்களிடம் சிறைப்பட்டிருக்கிறார்?....

அந்தச் சபையில் இருந்தவர்களில் அப்போது மாமல்லரின் மன வேதனையை அறிந்துகொள்ளக் கூடியவர் தளபதி பரஞ்சோதி ஒருவர்தான் இருந்தார். அவர் மாமல்லரின் கரத்தைப் பற்றிக் கொண்டு, "இன்னும் என்ன யோசனை! வாருங்கள், போர்க்களத்துக்குப் புறப்படலாம்! அந்த வாதாபி ராட்சதர்களை முறியடித்து நிர்மூலம் செய்துவிட்டுச் சக்கரவர்த்தியை மீட்டுக்கொண்டு வரலாம்! மாமல்லரே! புள்ளலூர்ச் சண்டையை நினைவு கூருங்கள்!" என்றார். இதைக்கேட்ட சேனாதிபதி கலிப்பகையாரும் பிரமையிலிருந்து விடுபட்டவராய், "ஆம்; தளபதி கூறுவது நியாயந்தான் இனி யோசிப்பதற்கு ஒன்றும் இல்லை. படைகள் புறப்பட கட்டளையிடுகிறேன்!" என்று சொல்லிக்கொண்டு எழுந்தார். சபையிலிருந்த அத்தனை பேரும் ஏக காலத்தில் எழுந்து நின்று, "மகேந்திர பல்லவர் வாழ்க!" "அரக்கன் புலிகேசி அழிக!" என்று பலவகையான வீர கோஷங்களைச் செய்தார்கள்.

இந்த கோஷங்களுக்கிடையில் சபாமண்டபத்தின் வாசலிலும் ஏதோ குழப்பமான சத்தங்கள் எழுந்தன. குதிரையின் காலடிச் சத்தம், வேல்களும் வாள்களும் உராயும் சத்தம், அதிகாரக் குரலில் யாரோ கட்டளையிடும் சத்தம், தடதடவென்று பலர் ஓடுகிற சத்தம் - இவை எல்லாம் கலந்து வந்தன. ஆம், அச்சமயத்தில் சபாமண்டபத்தின் வாசலில் ஒரு முக்கியமான சம்பவம் நடந்துகொண்டுதானிருந்தது. சக்கரவர்த்தி சிறைப்பட்ட செய்தியைக் கொண்டு வந்த தூதன் மண்டபத்தின் வாசலுக்கு வந்தபோது, அவ்விடம் குதிரைமீது ஆரோகணித்தவராய்ச் சாக்ஷாத் மகேந்திர பல்லவரே வந்து சேர்ந்தார். மண்டபத்தின் வாசலில் காவல் செய்த வீரர்களைப் பார்த்து அந்தத் தூதனைப் பிடித்துச் சிறைப்படுத்தும்படி சக்கரவர்த்தி கட்டளையிட, வீரர்கள் அக்கணமே அவனை நாலாபுறமும் சூழ்ந்து கொண்டார்கள்!
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
90
Points
48
ஐம்பத்து மூன்றாம் அத்தியாயம்

பாரவி இட்ட தீ

மகேந்திர சக்கரவர்த்தி சபா மண்டபத்துக்குள்ளே பிரவேசித்தபோது அவ்விடத்தில் ஏற்பட்ட ஆரவாரத்தையும் கோலாகலத்தையும் சொல்லி முடியாது. சற்று நேரம் வரையில் ஒரே ஜயகோஷமும் எதிரொலியுமாயிருந்தது. மாமல்லர் பாய்ந்து சென்று மகேந்திர பல்லவரைத் தழுவிக் கொண்டார். மந்திரிகளும் அமைச்சர்களும் கோட்டத் தலைவர்களும் சம்பிரதாய மரியாதைகளை மறந்தவர்களாய் சக்கரவர்த்தியைச் சூழ்ந்து கொண்டார்கள். ஏககாலத்தில் பலர் பேச முயன்றார்கள்.

தளபதி பரஞ்சோதி மட்டும் சற்றுத் தூரத்தில் ஒதுக்குப்புறமாக நின்றார். அவருடைய கண்களிலே வெட்கத்தின் அறிகுறி காணப்பட்டது. "நான்கூட ஏமாந்து போனேனல்லவா? சக்கரவர்த்தியைப் பற்றி இவ்வளவு தெரிந்திருந்தும், இவர் பகைவர்களால் சிறைப்பட்டிருக்கக்கூடும் என்று நம்பி விட்டேனல்லவா?" என்ற எண்ணத்தினால் அவ்வீர வாலிபர் வெட்கமடைந்தார் போலும்! ஆரவாரம் சற்று அடங்கியதும், மகேந்திர சக்கரவர்த்தி சபையோரைச் சுற்றி வளைத்துப் பார்த்து, "ஏது, எல்லாரும் ஒரே குதூகலமாயிருக்கிறீர்கள்? உங்களுடைய உற்சாகத்தைப் பார்த்தால், யுத்தத்திலேயே ஜயித்துவிட்டது மாதிரி தோன்றுகிறதே? நமது கோட்டைத் தளபதி மட்டும் சிறிது வாட்டமடைந்து காணப்படுகிறார்!" என்றபோது எல்லாருடைய கண்களும் பரஞ்சோதியை நோக்க, அவருடைய வெட்கம் இன்னும் அதிகமாயிற்று.

முதன் மந்திரி சாரங்கதேவர், "பல்லவேந்திரா! தாங்கள் வருவதற்கு ஒரு வினாடி நேரத்துக்கு முன்னால்தான், நம் சைனியத்தைக் கோட்டைக்கு வௌியே கொண்டுபோய்ப் புலிகேசியுடன் போர் நடத்துவதாக நாங்கள் இங்கே தீர்மானித்திருந்தோம். தங்களுடைய வரவினால் அதற்கு இடமில்லாமற் போய்விட்டதே என்று நமது கோட்டைத் தளபதிக்கு வருத்தமாயிருக்கலாம்!" என்றார். "என்ன? என்ன? நம்முடைய சைனியத்தைக் கோட்டைக்கு வௌியே கொண்டு போவதாக உத்தேசமா? இந்த அபூர்வமான யோசனையை யார் செய்தது? சேனாபதி! எப்படி என்னுடைய கட்டளையை மீறத் துணிந்தீர்? உமக்குக்கூட என்னிடம் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதா?" என்று பல்லவேந்திரர் சிம்ம கர்ஜனை போன்ற குரலில் கேட்க, சேனாபதி கலிப்பகையார் தாழ்ந்த குரலில், "பிரபு! தாங்கள் பகைவர்களால் சிறைப்பட்டிருப்பதைக் கேட்டபிறகு நாங்கள் எப்படிக் கோட்டைக்குள்ளே, பதுங்கிக் கொண்டிருக்கமுடியும்? தங்களை விடுவிக்க முடியாத பல்லவ சைனியம் இருந்தென்ன, இல்லாமற் போயென்ன?" என்றார். "ஆகா! நான் பகைவர்களால் சிறைப்பட்டிருந்தேனா? இது என்ன கதை?" என்று சக்கரவர்த்தி கேட்டபோது, அங்கே கூடியிருந்தவர்களின் ஆச்சரியத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது.

முதன் மந்திரி சாரங்கதேவர், சற்று முன்னால் சக்கரவர்த்தியின் தூதன் என்று சொல்லிக்கொண்டு ஒருவன் வந்ததையும், அவன் கூறிய அதிசயமான செய்தியையும், அதன்மேல் தாங்கள் தீர்மானித்ததையும் சுருக்கமாகக் கூறினார். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, "ஆகா! நாகநந்தியடிகள் நான் நினைத்ததற்கு மேலே கெட்டிக்காரராயிருக்கிறார். சற்று நேரம் தாமதித்து வந்திருந்தேனானால் காரியம் அடியோடு கெட்டுப் போயிருக்குமே!" என்றார் மகேந்திர சக்கரவர்த்தி.

"பிரபு! அப்படியானால், அந்தத் தூதன் கூறியது பொய்யா? தாங்கள் பகைவர்களிடம் சிறைப்படவில்லையா?" என்று சேனாபதி கலிப்பகையார் கேட்க மகேந்திரர் கூறினார்; "அது பொய்தான், நான் பகைவர்களிடம் சிறைப்படவில்லை. அப்படி நான் சிறைப்பட்டிருந்தாலும் என்னை விடுவிப்பதற்காக நீங்கள் படை திரட்டிக்கொண்டு புறப்பட்டிருக்க வேண்டியதில்லை. என்னை விடுவித்துக் கொள்ள எனக்குத் தெரியும். முன்பின் தெரியாத தூதனுடைய வார்த்தையை அவ்வளவுக்கு நீங்கள் நம்பி விட்டீர்களே? நாகநந்தி நமது எதிரியின் ஒற்றன் என்பதை மாமல்லனாவது பரஞ்சோதியாவது உங்களுக்குத் தெரிவிக்கவில்லையா?"

"பிரபு! தாங்கள் சிறைப்பட்டீர்கள் என்ற செய்தி என்னுடைய அறிவைக் குழப்பிவிட்டது. பல்லவ குமாரரும் மனம் கலங்கிப்போய் விட்டார்" என்றார் பரஞ்சோதி. "அவன் ஒற்றனா? அப்படியானால் சிங்க இலச்சினை அவனிடம் எப்படி வந்தது?" என்று முதல் அமைச்சர் கேட்டார். "நான்தான் அவனிடம் கொடுத்தேன்; இந்த அதிசாமர்த்தியசாலியான ஒற்றனைக் கைப்பிடியாய்ப் பிடிப்பதற்காகவே நான் வடக்குப் போர் முனையிலிருந்து தெற்கே போயிருந்தேன்..."

"பிரபு! எதிரியின் ஒற்றனிடம் சிங்க இலச்சினை ஏன் கொடுத்தீர்கள்? கொடுத்தபோது அவன் ஒற்றன் என்று தெரியாதா?" "ஒன்பது மாதத்துக்கு முன்னாலேயே தெரியும். நமது கோட்டைத் தளபதி காஞ்சிக்கு வந்த அன்றே அந்தச் சந்தேகம் என் மனத்தில் உதித்தது. வாதாபி ஒற்றர்கள் பல்லவ ராஜ்யமெங்கும் பௌத்த சங்கங்களின் மூலமாக வேலை செய்து வருவதை அறிந்தேன். அவர்களையெல்லாம் பிடிப்பதற்காக இத்தனை நாளும் நாகநந்தியை வௌியில் விட்டிருந்தேன். கோட்டை முற்றுகை தொடங்குவதற்குள் நாகநந்தியை எப்படியாவது பிடித்துவிட வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டு தெற்கே போனேன். கடைசியாக, மண்டபப்பட்டுக் கிராமத்தில் கண்டுபிடித்தேன்." "என்ன, மண்டபப்பட்டிலா?" என்று மாமல்லர் தூக்கி வாரிப் போட்டவராகக் கேட்டார்.

"ஆமாம், மாமல்லா! மண்டபப்பட்டிலேதான் அங்கே நமது ஆயனரையும் சிவகாமியையும்கூடப் பார்த்தேன். அவர்களைப் பெரும் வெள்ளத்திலிருந்து நீ காப்பாற்றியது பற்றிச் சொன்னார்கள்; இருவரும் சந்தோஷமாயிருக்கிறார்கள். ஆயனர் அங்கே மலைக்கோயில் அமைக்கும் பணியில் ஈடுபடுவதற்குத் தக்க ஏற்பாடு செய்துவிட்டு வந்திருக்கிறேன். நாகநந்தியைத் தேடிக்கொண்டு மண்டபப்பட்டுக்குப் போனதில் இந்த ஒரு நன்மையும் ஏற்பட்டது.."

ஆயனரும் சிவகாமியும் எதிரிகளின் ஒற்றர்கள் என்று நாகநந்தி கூறிய விஷங்கலந்த வார்த்தைகளினால் புண்பட்டிருந்த மாமல்லரின் உள்ளம் இதைக் கேட்டுக் குதூகலித்தது. அவருடைய மனத்தில் பொங்கிய உற்சாகம் முகமலர்ச்சியாகப் பரிணமித்தது. "பிரபு! ஒற்றனைச் சிறைப்படுத்தியாகிவிட்டதா?" என்று சேனாதிபதி கலிப்பகை கவலை தோய்ந்த குரலில் கேட்டார். அவருக்குப் போர்க்களத்தில் யுத்தம் செய்யும் முறைதான் தெரியுமே தவிர, இந்த மாதிரி ஒற்றர் தந்திரங்களெல்லாம் தலை வேதனை அளித்தன. "ஆம், சேனாதிபதி! வாதாபியின் மிகவும் கெட்டிக்காரனான ஒற்றனைச் சிறைப்படுத்தியாகிவிட்டது. பாதி யுத்தத்தை நாம் ஜயித்துவிட்டதுபோலத்தான்!" என்றார் சக்கரவர்த்தி.

உடனே மாமல்லர், தந்தையிடம் துள்ளி வந்து வணக்கத்துடன் கைகூப்பி நின்று, "பல்லவேந்திரா! பாதி யுத்தத்தைத் தாங்கள் ஜயித்தாகிவிட்டது. மற்றப் பாதி யுத்தத்தை ஜயிக்க எனக்கு அனுமதி கொடுங்கள். நமது வீர பல்லவ சைனியத்தை நடத்திக்கொண்டு போய் வாதாபி அரக்கர் சைனியத்தை அடியோடு அழித்து நிர்மூலம் செய்ய அனுமதி கொடுங்கள். என் அருமைத் தோழர் பரஞ்சோதியையும் என்னுடன் அனுப்பி வையுங்கள்!" என்றார். அப்போது மகேந்திரபல்லவர் மாமல்லரைத் தழுவிக் கொண்டு "குழந்தாய்! உன்னுடைய வீரத்தை மெச்சுகிறேன். ஆனால், கொஞ்சம் நான் சொல்லுவதைக் கேள்!" என்று கூறிவிட்டு, சபையோர்களைப் பார்த்து, "மந்திரிகளே! அமைச்சர்களே! கோட்டைத் தலைவர்களே! எல்லாரும் சற்றுச் செவி கொடுத்துக் கேளுங்கள். இந்த யுத்தத்திற்கு ஆதிமூலமான காரணத்தை உங்களுக்குச் சொல்கிறேன். பிறகு, உங்களுடைய விருப்பம் என்ன என்பதை எனக்குத் தெரிவியுங்கள்" என்றார்.

நிசப்தம் நிலவிய மந்திராலோசனை சபையைப் பார்த்து மகேந்திரபல்லவர் மேலும் கூறியதாவது: "நான் இளம் பிள்ளையாயிருந்தபோது யுத்தம் என்னும் எண்ணமே இல்லாதவனாயிருந்தேன். என் தந்தை சிம்ம விஷ்ணுவின் வீரப்புகழ் தென்னாடெங்கும் பரவியிருந்தது. நான் பிறப்பதற்கு முன்னாலேயே என் தந்தை கீழைச் சோழ நாட்டைப் பல்லவ ராஜ்யத்துடன் சேர்த்துக்கொண்டார். உறையூர்ச் சோழர்களை அடக்கிக் கப்பம் கட்டச் செய்தார். பாண்டியர்களையும் கர்வபங்கம் செய்தார். மேற்கே கங்கரும் வடமேற்கே கதம்பரும் சிம்மவிஷ்ணு மகாராஜாவிடம் பயபக்தி கொண்ட நண்பர்களாயிருந்தார்கள். வடக்கே வேங்கி நாட்டரசனோ எனக்குத் தாய்மாமன். ஆகவே, யுத்தம் என்ற நினைவே இல்லாமல் நான் வளர்ந்து வந்தேன். சித்திரம், சிற்பம், கவிதை சங்கீதம், நடனம் ஆகிய கலைகளில் ஈடுபட்டுக் காலம் கழித்தேன். எந்தெந்த தேசத்தில் என்னென்ன கலை சிறந்து விளங்கியது என்று அறிந்து, அந்தக் கலையில் வல்லாரைத் தருவித்து இந்தப் பல்லவ நாட்டிலும் அக்கலையை வளர்க்க முயன்றேன்.

இப்படியிருக்கும்போது, கங்கமன்னன் துர்விநீதனுடைய சபையில் பாரவியென்னும் வடமொழிக் கவி ஒருவர் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். அவர் வடக்கே அசலபுரத்தில் இருந்தவர், வாதாபி இராஜகுமாரர்களின் சிநேகிதர். புலிகேசியும் அவனுடைய சகோதரர்களும் சிற்றப்பனுக்கு பயந்து காட்டிலே ஒளிந்திருந்தபோது பாரவியும் அவர்களோடு கொஞ்சகாலம் அலைந்து திரிந்தார். பிறகு அவர் கங்கநாட்டு மன்னனுடைய சபையைத் தேடி வந்தார். துர்விநீதனுடைய மகளைப் புலிகேசியின் தம்பி விஷ்ணுவர்த்தனுக்கு மணம் பேசி முடித்து, அதன் மூலம் புலிகேசிக்குப் பலம் தேடிக் கொடுப்பதற்காக அவர் வந்தார்.

துர்விநீதன் என்னுடைய தந்தைக்குப் பெரிதும் கடமைப்பட்டவன் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகையால், கங்கபாடியில் நடக்கும் காரியங்கள் எல்லாம் அவ்வப்போது காஞ்சிக்குத் தெரிந்து கொண்டிருந்தன. பாரவி அங்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டதும், அவரைக் காஞ்சிக்கு வரவழைக்க வேண்டுமென்று நான் ஆசைப்பட்டேன். என் தந்தையும் அவ்விதமே துர்விநீதனுக்குச் செய்தி அனுப்பினார். அதன்பேரில் பாரவி இங்கு வந்தார். வந்தவர் காஞ்சி சுந்தரியின்மேல் மோகம் கொண்டு விட்டார்! இந்தக் காஞ்சி நகரின் திருக்கோயில்களும் இராஜவீதிகளும் பூந்தோட்டங்களும் பாரவியை அடியோடு கவர்ந்து விட்டன. புலிகேசி வாதாபி சிம்மாசனத்தில் ஏறிய பிறகு, அவனும் அவன் தம்பி விஷ்ணுவர்த்தனனும் பாரவிக்கு ஓலைமேல் ஓலையாக விடுவித்துக் கொண்டிருந்தார்கள். வாதாபிக்கு திரும்பி வந்துவிடும்படியாகத்தான். ஆனால் பாரவி அதற்கெல்லாம் இணங்கவில்லை. காஞ்சியை விட்டுப்போவதற்கு அவருக்கு மனம் வரவில்லை. புலிகேசியின் ஓலைகளுக்கெல்லாம் பாரவி தம்மால் வரமுடியாதென்று மறு ஓலை அனுப்பினார். அவற்றில் காஞ்சி நகரைப் பற்றி வர்ணணைகள் செய்தார். அந்த ஓலைகளில் ஒன்றிலேதான்; புஷ்பேஷு ஜாதி புருஷேஷு விஷ்ணு நாரிஷு ரம்பா நகரேஷு காஞ்சி என்ற சுலோகத்தை அவர் எழுதினார். இதையெல்லாம் அப்போது படிக்கையில் எனக்கு எவ்வளவோ சந்தோஷமாயிருந்தது. ஆனால், அப்போது அந்த பாரவி கவி மூட்டிய தீதான் இப்போது இந்தப் பெரும் யுத்தமாக மூண்டிருக்கிறது. புலிகேசி பாரவிக்கு எழுதிய ஓலை ஒன்றில், 'என்றைக்காவது ஒரு நாள் நான் காஞ்சி நகருக்கு வருவேன்; உம்முடைய வர்ணனையெல்லாம் உண்மைதானா என்று பார்ப்பேன் என்று எழுதியிருந்தான். அதுவும் எனக்குப் பெருமையாயிருந்தது. அப்போது, வாதாபி சக்கரவர்த்தி காஞ்சிக்கு வரும்போது அவருக்குப் பிரமாதமான வரவேற்பு நடத்த வேண்டுமென்று எண்ணியிருந்தேன். ஆனால், சபையோர்களே! நான் நினைத்ததற்கு மாறாக இப்போது கோட்டைக் கதவுகளைச் சாத்தி வாதாபி சக்கரவர்த்தியை வௌியில் நிறுத்த வேண்டியிருக்கிறது..."

இத்தனை நேரமும் சபையோர் அனைவரையும் போல ஆவலுடன் மகேந்திரர் கூறிய வரலாற்றைக் கேட்டுக்கொண்டிருந்த மாமல்லர் குறுக்கிட்டு, "பல்லவேந்திரா! எதற்காக நம் கோட்டைக் கதவுகளைச் சாத்தித் தாளிடவேண்டும்? வேல்களையும் வாள்களையும் கொண்டு புலிகேசியை ஏன் வரவேற்கக்கூடாது?" என்றார். "ஆம்; வரவேற்கத்தான் போகிறோம்; நமது கோட்டைச் சுவர்களின் மீது பல்லவ வீரர்கள் நின்று, வாள்களாலும் வேல்களாலும் சளுக்கர்களை வரவேற்பார்கள். வரவேற்று நமது அகழிகளிலுள்ள முதலைகளுக்கு விருந்தளிப்பார்கள்! நான் சொல்ல ஆரம்பித்ததை முழுதும் சொல்லிவிடுகிறேன். அந்த அரக்கன் புலிகேசி நமது காஞ்சி சுந்தரியின் மேல் எத்தகைய மோகம் கொண்டிருக்கிறான் என்பதை நேரில் நானே பார்த்தேன். ஆகா! காஞ்சியின் சௌந்தரியத்தை நான் வர்ணிக்க ஆரம்பித்ததும், அவனுடைய கண்கள் எப்படி ஜொலித்தன தெரியுமா...?" "இதென்ன? புலிகேசியைத் தாங்கள் நேரில் பார்த்தீர்களா? எங்கே? எப்போது?" என்று சாரங்கதேவர் கேட்டார். "வடபெண்ணை நதிக்கரையில் சளுக்கர் படைக்கு நடுவில் அவனை நான் பார்த்தேன்" என்று மகேந்திரர் கூறியதும், சபையில் பெரும் வியப்புக்கு அறிகுறியான 'ஹாஹாகாரம்' எழுந்தது. "பிரபு! இப்படியெல்லாம் தங்களை அபாயத்துக்கு உட்படுத்திக் கொள்ளலாமா? இந்தப் பெரிய பல்லவ சாம்ராஜ்யம் தங்கள் ஒருவரையே நம்பியிருக்கிறதே!" என்றார் முதல் அமைச்சர்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
90
Points
48
ஐம்பத்து நாலாம் அத்தியாயம்

சபை கலைந்தது

சபா மண்டபத்தில் ஏற்பட்ட கிளர்ச்சி ஒருவாறு அடங்கிச் சற்று அமைதி ஏற்பட்டதும் மகேந்திர பல்லவர் மேலும் தொடர்ந்து கூறலானார். "சபையோர்களே! நீங்கள் சொல்கிறபடி பல்லவ சாம்ராஜ்யம் என் ஒருவனையே நம்பியிருப்பதாக நான் ஒத்துக் கொள்ளவில்லை. இதோ என் வீர மகன் மாமல்லன் பல்லவர் குலப்பெருமையை நிலைநாட்டுவதற்கு இருக்கிறான். ஆனாலும் வாதாபி மன்னனை நான் அவனுடைய படை வீட்டில் சந்தித்தது வெறும் சாகஸத்துக்காக அல்ல. புலிகேசியை நான் நேரில் பார்ப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. சற்று முன்னால் உங்களையெல்லாம் பெருங்கலக்கத்துக்கு ஆளாக்கிய நாகநந்தியடிகள் ஒன்பது மாதத்துக்கு முன்னால் நமது கோட்டைத் தளபதியிடம் ஒரு ஓலை கொடுத்துப் புலிகேசிக்கு அனுப்பியிருந்தார். ஆயனரிடம் சிற்பக்கலை கற்க வந்திருந்த இந்த வீர வாலிபர் அந்த ஓலையில் உள்ள செய்தி இன்னதென்று அறியாமல் எடுத்துக்கொண்டு போனார். வழியில் இவரிடமிருந்து அந்த ஓலையை நான் வாங்கிக் கொண்டு புலிகேசியின் கூடாரத்துக்குச் சென்றேன். ஆனால், நான் புலிகேசியிடம் கொடுத்தது நாகநந்தியின் ஓலை அல்ல. நான் மாற்றி எழுதிய ஓலையைக் கொடுத்தேன். அதன் பயனாகவும், நமது வீர சேனாதிபதி கலிப்பகையாரின் போர்த் திறமை காரணமாகவுந்தான் வாதாபி சைனியத்தை வடபெண்ணை கரையில் எட்டு மாதத்துக்கு மேல் நிறுத்திவைக்க முடிந்தது."

"பிரபு! நாகநந்தியின் ஓலையில் என்ன எழுதியிருந்ததோ!" என்று முதன் மந்திரி சாரங்கதேவர் கேட்டார். "காஞ்சி நகரைப்போன்ற பாதுகாப்பு அற்ற நகரம் வேறு இருக்க முடியாதென்றும், வாதாபி சைனியம் வழியில் எங்கும் தங்காமல் நேரே காஞ்சிக்கு வந்து சேர வேண்டுமென்றும், மூன்றே நாளில் காஞ்சியைப் பிடித்துவிடலாம் என்றும் எழுதியிருந்தது. சபையின் நாலா பக்கங்களிலிருந்தும் அப்போது கோப கர்ஜனை முழக்கங்கள் ஒருமிக்க எழுந்து ஒலி செய்தன. சக்கரவர்த்தி கையமர்த்திக் கூறினார்; "நாகநந்தி அச்சமயம் எழுதியிருந்தது முற்றும் உண்மை, அப்போது வாதாபியின் பெரும் சைனியம் நேரே காஞ்சிக்கு வந்திருந்தால் மூன்று நாளைக்கு மேல் நாம் எதிர்த்து நின்றிருக்க முடியாது. சளுக்கரின் பதினையாயிரம் போர் யானைகளிலே ஒரு பதினைந்து யானைகள் நமது கோட்டைக் கதவுகளையெல்லாம் தகர்த்தெறிந்திருக்கும். அப்போது வைஜயந்தி பட்டணத்துக்கு நேர்ந்த கதி காஞ்சிக்கும் நேர்ந்திருக்கும். சபையோர்களே! கதம்பகுல மன்னர்கள் வாழையடி வாழையாக வாழ்ந்து அரசு செலுத்திய வைஜயந்தி பட்டணம் இருந்த இடத்திலே இப்போது கரியும் சாம்பலும் மேடிட்டிருப்பது உங்களுக்குத் தெரியுமல்லவா?"

சபையில் மறுபடியும் வியப்பொலிகளும் இரக்கக் குரல்களும் எழுந்தன. மகேந்திர பல்லவர் மீண்டும் தொடர்ந்து சொன்னார்; "இந்தக் காஞ்சி மாநகரம் உலகம் உய்ய அவதரித்த புத்த பகவானுடைய காலத்திலிருந்து ஆயிரம் வருஷமாகச் சீரும் சிறப்பும் பெற்று விளங்குகிறது. 'கல்வியிற் கரையிலாத காஞ்சி மாநகரம்' என்று நமது புலவர் பெருமான் திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற இந்தத் திருநகரின் புகழானது சீன தேசம், சாவகத் தீவு, யவனர் நாடு, ரோமாபுரி ஆகிய தூர தூர தேசங்களிலெல்லாம் நெடுங்காலமாகப் பரவியிருக்கிறது. இப்பேர்ப்பட்ட நகரம் என்னுடைய காலத்தில் அழிந்தது என்னும் அபகீர்த்தியை நான் அடைய விரும்பவில்லை. இந்தக் காஞ்சி நகரைப் பாதுகாப்பதுதான் என்னுடைய முதற் கடமை. அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு நீங்கள் என்னுடன் ஒத்துழைப்பீர்களா?"

இவ்வாறு சக்கரவர்த்தி கேட்டபோது, சபையினர் ஒருமுகமாக, "அப்படியே! அப்படியே!" என்று கோஷித்தார்கள். சக்கரவர்த்தி மறுபடியும் கையமர்த்தி! "இந்த யுத்தம் நேர்ந்ததற்கு மூலகாரணம் இன்னதென்று உங்களுக்குத் தெரிவித்தேன். இது என்னால் நேர்ந்த யுத்தம், ஆகையால், என் போக்கில் இதை நடத்தி முடிப்பதற்கு உங்களிடம் அனுமதி கோருகிறேன்" என்றார். "அப்படியே!" என்று மீண்டும் சபையில் கோஷம் எழுந்தது.

பின்னர் மகேந்திரர், சபையில் பின் வரிசையில் இருந்த தென் பல்லவ நாட்டின் கோட்டத் தலைவர்களைக் குறிப்பாகப் பார்த்து, "கோட்டைக்குள்ளே இருக்கப்போகும் எங்களைக் காட்டிலும் கோட்டைக்கு வௌியில் கிராமங்களில் இருக்க வேண்டிய நீங்கள்தான் அதிகமான கஷ்ட நஷ்டங்களுக்கு உள்ளாகும்படியிருக்கும். காஞ்சியைக் காப்பாற்றுவதற்காக எல்லாக் கஷ்டங்களையும் பொறுத்துக் கொள்ள நீங்கள் சித்தமாயிருக்கிறீர்களா?" என்று கேட்க, "சித்தம், சித்தம்!" என்று கோட்டத் தலைவர்கள் ஒரே குரலில் முழங்கினார்கள். "நாளைச் சூரியோதயத்துக்குள்ளே வாதாபி சைனியம் நமது கோட்டையை நெருங்கிவிடும். அதற்கு முன்னால் நீங்கள் எல்லாரும் நகரைவிட்டு, வௌியேறிவிட வேண்டும். அவரவர்களுடைய ஊருக்கு விரைந்து செல்ல வேண்டும். காஞ்சி நகர் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும்போது உங்களுக்கும் கோட்டைக்குள்ளேயிருக்கும் எங்களுக்கும் எவ்விதப் போக்குவரவும் இராது. கோட்டையைக் கைப்பற்ற முயன்ற புலிகேசி தோல்வியடையும்போது அவனுடைய கோபத்தையெல்லாம் சுற்றிலுமுள்ள நாட்டுப்புறங்களின் மீது காட்டுவான். அதற்கெல்லாம் நீங்கள் ஆயத்தமாயிருக்க வேண்டும். கோட்டத் தலைவர்களே! நன்றாக யோசித்துச் சொல்லுங்கள். காஞ்சியைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் சகலவிதமான தியாகங்களுக்கும் சித்தமாயிருக்கிறீர்களா? வாதாபி அரக்கர் படையினால் நேரக்கூடிய கொடுமைகளையெல்லாம் பொறுத்துக் கொள்வீர்களா? நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பட்டினி கிடந்து மடிய நேர்ந்தாலும் நீங்கள் மனம் கலங்காமல் இருப்பீர்களா?" என்று சக்கரவர்த்தி கம்பீரமான குரலில் கேட்க, செஞ்சிக் கோட்டத் தலைவன் சடையப்ப சிங்கன் எழுந்து நின்று கூறினான்.

"பல்லவேந்திரா! யோசிப்பதற்கு ஒன்றுமில்லை; பல்லவ இராஜ்யத்தின் மணிமகுடமாக விளங்குவது காஞ்சி மாநகரம். காஞ்சி அழிந்தால் பிறகு யார் உயிரோடிருந்து என்ன பயன்? காஞ்சி நகரைக் காப்பாற்றுவதற்காக எந்த விதமான தியாகங்களைச் செய்யவும் நாங்கள் சித்தமாயிருக்கிறோம். தங்களுடைய சித்தம் எதுவோ அதன்படி நடந்து கொள்கிறோம். நான் கூறியதுதான் இங்கேயுள்ள எல்லோருடைய அபிப்பிராயமும்!" "ஆம்! ஆம்!" என்று கோட்டத் தலைவர்கள் அனைவரும் ஏக மனதாக ஆமோதித்தார்கள்.

இச்சமயத்தில் சபாமண்டபத்தின் வாசற் புறத்திலிருந்து தூதன் ஒருவன் வந்தான். அவன் சக்கரவர்த்தியை நெருங்கிப் பணிந்துவிட்டு, கிழக்குத் திசையில் ஒரு பெரும் புழுதிப் படலம் தெரிகிறதென்றும், கடல் புரண்டு வருவது போன்ற பெரு முழக்கம் கேட்கிறது என்றும் தெரியப்படுத்தினான். மகேந்திரர், இடிமுழக்கம் போன்ற குரலில், "சபையோர்களே! வாதாபிச் சைனியம் வந்துவிட்டது! நம்மில் ஒவ்வொருவரும் தம் வீர சாகஸங்களைக் காரியத்தில் காட்ட வேண்டிய சமயமும் வந்துவிட்டது. அமைச்சர்களே! மந்திரிகளே! இத்துடன் இன்று சபை கலைகிறது. நாளை முதல் முற்றுகை நீடித்திருக்கும் வரையில் ஒவ்வொரு நாள் இரவும் இரண்டாம் ஜாமத்தில் இங்கே மந்திராலோசனை சபை கூடும். இப்போது போய் அவரவர்களுடைய காரியங்களைப் பாருங்கள்!" என்று கூறியதும் அமைச்சர்களும் மந்திரிமார்களும் துரிதமாக வௌியேறினார்கள்.

"கோட்டத் தலைவர்களே! நீங்கள் சற்றுமுன் கொடுத்த வாக்குறுதியினால் மிக்க சந்தோஷம் அடைந்தேன். அந்த வாக்குறுதியைமட்டும் நீங்கள் நிறைவேற்றி வைத்தால் புலிகேசியைக் கட்டாயம் வென்று ஜயக்கொடி நாட்டுவேன்" என்று கூறி, தளபதி பரஞ்சோதியைப் பார்த்து, "தளபதி! இவர்களைத் தெற்குக் கோட்டை வாசலுக்கு அழைத்துக் கொண்டு போங்கள்! இவர்கள் அகழியைத் தாண்டிச் சென்றதும், பாலத்தை உடைத்து எறிந்து விட வேண்டும். மற்றபடி கோட்டைப் பாதுகாப்புச் சம்பந்தமாக நாம் தீர்மானித்தபடி காரியங்கள் செய்கிறீர்கள் அல்லவா?" என்று கேட்க, "ஆம், பிரபு! தெற்கு வாசலைத் தவிர மற்ற மூன்று வாசல்களையும் முழுதும் அடைத்தாகிவிட்டது; பாலங்களையும் தகர்த்தாகிவிட்டது. மதில்சுவரின் மேல் வரிசையாகப் பதினாயிரம் வீரர்கள் வேலும் கையுமாய் ஆயத்தமாயிருக்கிறார்கள்!" என்றார் தளபதி பரஞ்சோதி.

பரஞ்சோதியும் கோட்டத் தலைவர்களும் சென்ற பிறகு சபாமண்டபத்தில் சக்கரவர்த்தியும் மாமல்லரும் மட்டும் தனித்திருந்தார்கள். மாமல்லரின் முகம் உற்சாகம் இன்றி வாட்டமுற்றிருந்தது. சக்கரவர்த்தி மாமல்லர் அருகிலே சென்று அவருடைய தோளின் மீது கையை வைத்து, "மாமல்லா! இந்த யுத்தத்தை என் போக்கிலேயே நடத்த எனக்கு நீயும் அனுமதி கொடுக்கிறாயல்லவா?" என்று கேட்டார். "அப்பா! என்னை ஏன் கேட்கிறீர்கள்? உங்கள் விருப்பம் எதுவோ அதுவே எனக்கும் சம்மதம்!" என்றார் மாமல்லர். "சந்தோஷம், குமாரா! அரண்மனைக்குப் போய் உன் தாயாரிடம் நான் பத்திரமாய் வந்து சேர்ந்துவிட்டதைச் சொல்லு. பொழுது விடிவதற்குள் இன்னும் ஒரு முக்கியமான காரியம் நான் செய்யவேண்டியிருக்கிறது. அதையும் முடித்து விட்டு அரண்மனைக்கு வந்து சேருகிறேன்" என்று கூற, மாமல்லர் அந்தப்புரத்தை நோக்கிச் சென்றார். சக்கரவர்த்தியோ அரண்மனை வாசலில் ஆயத்தமாய் நின்ற குதிரை மீதேறி இராஜ விஹாரத்தை நோக்கி விரைந்தார்.



ஐம்பத்தைந்தாம் அத்தியாயம்

முற்றுகை தொடங்கியது

மறு நாள் சூரியோதயம் ஆகும் சமயத்தில் கமலி தன்னுடைய வீட்டுத் திண்ணையில் கவலை தோய்ந்த முகத்துடன் உட்கார்ந்திருந்தாள். இரவெல்லாம் கண் விழித்தபடியாலும் கண்ணீர்விட்டபடியாலும் அவளுடைய கண்கள் வீங்கியிருந்தன. கண்ணபிரான் தகப்பனார் அவள் அருகில் உட்கார்ந்து ஆறுதல் மொழிகள் சொல்லிக் கொண்டிருந்தார். முதல் நாள் சாயங்காலம் குமார சக்கரவர்த்தி திரும்பி வந்த செய்தி கிடைத்தவுடனேயே கண்ணபிரானும் அவருடனே திரும்பி வந்திருப்பான் என்று கமலி எதிர்பார்த்தாள். புள்ளலூர்ப் போரில் வெற்றிமாலை சூடிய வீரரை வரவேற்க நகர மாந்தரெல்லாம் திரண்டு போனபோது கண்ணபிரானின் தந்தை தாம் போய்க் கண்ணனை அழைத்து வருவதாகச் சொல்லிவிட்டுப் போனார். இரவு வெகுநேரம் கழித்து அவர் திரும்பி வந்து, மாமல்லருடன் கண்ணன் வரவில்லை என்னும் செய்தியைத் தெரிவித்தார்.

காஞ்சி நகரில் யாருமே அன்றிரவு தூங்கவில்லையாதலால், மூன்றாம் ஜாமத்தில் சக்கரவர்த்தியும் திரும்பி வந்துவிட்ட விவரம் கிடைத்தது. நாலாம் ஜாமத்தில் வாதாபிப் படைகள் கோட்டைக்குச் சமீபத்தில் வந்துவிட்ட செய்தியும், கோட்டை வாசல்கள் அடைக்கப்பட்டுப் பாலங்கள் தகர்க்கப்படும் செய்தியும் கிடைத்தன. ஆகவே, இனிமேல் கண்ணபிரான் கோட்டைக்குள்ளே வந்து சேருவதற்கே இடமில்லையென்று ஏற்பட்டது. அதனாலேதான் கமலி துயரக் கடலில் ஆழ்ந்திருக்க, கண்ணனுடைய தந்தை அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.

அந்தச் சமயத்தில் திடீரென்று சாக்ஷாத் கண்ணனே வீட்டு வாசலில் வந்து நின்றால், அவர்களுக்கு எப்படியிருக்கும்? கமலி சட்டென்று எழுந்து, "கண்ணா!" என்று அலறிக் கொண்டு ஓடிப்போய் அவனைத் தழுவிக்கொள்ள எண்ணியவள், கண்ணனுக்குப் பின்னால் சக்கரவர்த்திப் பெருமான் குதிரையில் வருவது கண்டு நாணமும் திகைப்பும் அடைந்து நின்றாள். "கமலி! கண்ணனைக் கொண்டுவந்து சேர்த்துவிட்டேன். இனிமேல் அவனை ஜாக்கிரதையாய்ப் பார்த்துக்கொள்வது உன்னுடைய பொறுப்பு!" என்று சக்கரவர்த்தி புன்னகையுடன் கூறினார். பிறகு, "உன்னுடைய சௌக்கியத்தைப்பற்றிச் சிவகாமி ரொம்ப விசாரித்தாள், அம்மா! உனக்கு ஆண் குழந்தை பிறந்தால், உடனே சொல்லியனுப்பும்படி கூறினாள்" என்று சொல்லிக்கொண்டே சக்கரவர்த்தி குதிரையைச் செலுத்திக் கொண்டு போனார்.

சக்கரவர்த்தியின் பேச்சினால் வெட்கமடைந்த கமலி கண்ணபிரானைக் கடைக் கண்ணால் பார்த்துக்கொண்டே வீட்டிற்குள் சென்றாள். கண்ணபிரான் தந்தைக்கு முகமன் கூறிவிட்டுக் கமலியைத் தொடர்ந்து உள்ளே சென்றான். "இதென்ன கமலி! நான் வந்ததில் உனக்குச் சந்தோஷம் இல்லையா! என்னைத் திரும்பிக்கூடப் பாராமல் உள்ளே வந்து விட்டாயே! ஒருவேளை கண் தெரியவில்லையா?" என்று கண்ணபிரான் கேட்க, கமலி "ஆமாம்; கண் தெரியவில்லைதான்! இரவெல்லாம் அழுது வீங்கிப்போய் விட்டது" என்றாள்.

"ஐயோ! ஏன் அழுதாய்?" என்று சொல்லிக்கொண்டு, கண்ணபிரான் அவள் அருகே நெருங்க, கமலி அவனுடைய கையை உதறி, "இந்த அருமையெல்லாம் நேற்று எங்கே போய் விட்டது? நேற்றிரவே ஏன் வரவில்லை?" என்று கேட்டாள். "நேற்றிரவே ஏன் வரவில்லையா? எனக்கும் உனக்கும் மத்தியில் ஒரு பெரிய அகழியும் முதலைகளும் ஒரு பெரிய மதிற்சுவரும் இருந்தபடியாலேதான்" என்றான் கண்ணன். "அப்படியா? நீ இரவெல்லாம் கோட்டைக்கு வௌியிலா இருந்தாய்? அகழிப் பாலங்களை எல்லாம் இரவுக்கிரவே உடைத்து விட்டார்களாமே, நீ எப்படி உள்ளே வந்தாய்? நீ புறப்பட்டது முதல் நடந்ததையெல்லாம் விவரமாகச் சொல்" என்று கமலி பரபரப்புடன் கேட்டாள்.

"கமலி! நான் என்னத்தை என்று சொல்ல! நான் பிறந்த கதையைச் சொல்லவா, வளர்ந்த கதையைச் சொல்லவா? புள்ளலூர்ப் போர்க்களத்துக்குப் போன கதையைச் சொல்லவா? வெள்ளத்தில் அகப்பட்டுக்கொண்டு திண்டாடியதைச் சொல்லவா? மாமல்லர் ஏறவேண்டிய ரதத்தில் புத்த பிக்ஷுவை ஏற்றிக்கொண்டு வந்ததைச் சொல்லவா? கோட்டைக்கு வௌியே ராத்திரி எல்லாம் அலைந்து திரிந்ததைச் சொல்லவா?" என்றான் கண்ணன். பிறகு தான் காஞ்சியிலிருந்து கிளம்பியது முதல் நடந்த அதிசயமான சம்பவங்களையெல்லாம் விவரமாகக் கூறினான். வராக நதிக்கரையில் புத்தபிக்ஷுவை ரதத்தில் ஏற்றிக் கொண்டு புறப்பட்ட பிறகு நடந்த சம்பவங்களைப்பற்றிக் கண்ணபிரான் கூறிய வரலாறு பின்வருமாறு:

குதிரைகளைக் கண்ணபிரான் எவ்வளவு வேகமாகத் துரத்திய போதிலும் புத்த பிக்ஷுவுக்குப் போதவில்லை. மேலும் மேலும் அவசரப்படுத்தினார். வழியில் இரண்டு இடத்தில் குதிரைகளை மாற்றிக்கொண்டு, அஸ்தமித்து ஒரு நாழிகைக்குப் பிறகு காஞ்சிக் கோட்டையின் தெற்கு வாசலை அடைந்தார்கள். பிறகு, புத்த பிக்ஷு சொன்னபடி அகழி ஓரமான சாலையின் வழியாகக் கண்ணபிரான் ரதத்தைச் செலுத்திக் கொண்டு போனான். கொஞ்ச தூரம் போனதும் பிக்ஷு ரதத்திலிருந்து இறங்கிக் காட்டுக்குள் நுழைந்து போனார். சற்று நேரத்துக்கெல்லாம் அகழியில் படகு செல்லும் சப்தம் கேட்கவே, கண்ணபிரான் அந்தத் திசையில் கூர்ந்து நோக்கினான். அப்போதுதான் கீழ் வானத்தில் சந்திரன் உதயமாகியிருந்தது. நீண்டு பரந்த மர நிழல்களுக்கு மத்தியில் ஆங்காங்கு ஊடுருவி வந்த நிலாக் கிரணங்களின் சஞ்சல ஒளியில், அகழியில் ஒரு படகு போவதும் அதில் இரண்டு பிக்ஷுக்கள் இருப்பதும் கண்ணபிரானுக்குத் தெரிந்தன. படகு அக்கரைக்குச் சென்றதும் இருவரும் இறங்கினார்கள். கோட்டை மதிலின் சுவரோரமாகச் சென்றார்கள். திடீரென்று இருவரும் மாயமாக மறைந்தார்கள்.

கண்ணபிரான் நெடுநேரம் வரை அங்கேயே காத்திருந்தான். என்ன செய்கிறதென்று அவனுக்குப் புரியவில்லை. 'அவர்கள் எப்படி மறைந்திருப்பார்கள்?' என்று மூளையைச் செலுத்தித் தீவிரமாக யோசனை செய்தான். 'ஒருவேளை கோட்டைச் சுவரில் இரகசிய வழி இருக்குமோ' என்ற எண்ணம் தோன்றியதும் அவனுடைய உள்ளம் கலங்கியது. புத்த பிக்ஷு தன்னை அங்கேயே இருக்கச் சொல்லியிருப்பதால் எப்படியும் திரும்பி வருவாரென்றும், அப்போது இரகசியத்தைக் கண்டுபிடிக்கலாமென்றும், எண்ணிக் கோட்டைச் சுவரில் அவர்கள் மறைந்த இடத்தில் வைத்த கண்ணை வாங்காமல் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். எப்படியோ அவனையறியாமல் தூக்கம் வந்து கண்ணயர்ந்துவிட்டான். திடீரென்று அவன் கண் விழித்த போது, தூரத்தில் கடல் குமுறிப்புரண்டெழுந்து வருவது போன்ற பயங்கரமான சப்தம் கேட்டது. முன்னொரு சமயம் ஏரி உடைத்துக்கொண்டு வெள்ளம் வந்த சப்தத்தை அவன் கேட்டிருக்கிறபடியால், மிக்க பீதியடைந்தவனாய், பரபரப்புடன் ஒரு மரத்தின் மேல் ஏறிச் சப்தம் வந்த திசையை நோக்கினான். வெகுதூரத்தில் வெண்ணிலாவின் ஒளியில் யானைகளும், குதிரைகளும், குடைகளும், கொடிகளும், வேல்களும், வாள்களுமாய்த் திரண்டு வந்த சேனா சமுத்திரத்தைக் கண்டான். வாதாபி சைனியந்தான் அது என்று தெரிந்துகொண்டு, எப்படியாவது கோட்டைக்குள் புகுந்துவிட வேண்டும் என்று தீர்மானித்து ரதத்தை அவசரமாகச் செலுத்திக் கொண்டு, தெற்கு கோட்டை வாசலை அணுகினான். கண்ணபிரான் சத்தம் போட்டுக் கோட்டைக் காவலாளிகளை அழைத்ததில் ஒன்றும் பலன் இல்லை. சற்றுநேரம் அங்கேயே தயங்கி நின்ற பிறகு ஒரு யோசனை உதித்தது. 'புத்த பிக்ஷுக்கள் புகுந்த இரகசிய வழி ஒருவேளை தேடினால் கிடைக்கும்! அதன் வழியாய் கோட்டைக்குள் போய்விடலாம்' என்று ஆசையுடன் திரும்பவும் அதே இடத்துக்கு வந்து சேர்ந்தான். அகழியை எப்படிக் கடப்பது என்ற கேள்வி ஏற்பட்டது. நீந்திப் போகலாம் என்று நினைத்ததும், அகழியில் நூற்றுக்கணக்கான முதலைகள் இருப்பது நினைவு வந்து கதி கலங்கிற்று. இதற்குள்ளாகப் படைகள் வரும் முழக்கம் இன்னும் நெருங்கிக் கேட்கலாயிற்று.

'முதலைகளுக்கு இரையானாலும் ஆகலாம்; எதிரிகளிடம் சிக்கக் கூடாது' என்று எண்ணிக் கண்ணபிரான் அகழியில் இறங்கத் தீர்மானித்தபோது திடீரென்று கோட்டை மதிலின் எதிரே ஒரு கதவு திறந்து துவாரம் காணப்பட்டது. அதற்குள்ளிருந்து இளம் புத்த பிக்ஷு ஓடி வருவது தெரிந்தது. கண்ணபிரான் சட்டென்று மரத்தின் பின்னால் மறைந்து கொண்டான். இளம் பிக்ஷு படகில் ஏறுவதையும், இக்கரைக்கு அதைச் செலுத்தி வருவதையும் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது கண்ணபிரானுடைய மூளை தீவிரமாக வேலை செய்தது. இளம் பிக்ஷு கரையில் இறங்கியவுடனே படகைத் தண்ணீரில் கவிழ்க்கப் போவதைப் பார்த்ததும் கண்ணன் பாய்ந்து வந்து அதைத் தடுத்து, இளம் பிக்ஷுவையும் தூக்கிப் படகில் போட்டுக் கொண்டு, தானும் ஏறினான். மெதுவாகப் படகை அக்கரைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தான்.

சுவரில் திறக்கப்பட்ட துவாரம் அப்படியே இருந்தது. இளம் பிக்ஷுவை அந்தத் துவாரத்திற்குள் தள்ளிவிட்டு, தானும் உள்ளே புகுந்தான். அகழிக்கு அப்பால் அவன் நிறுத்திவிட்டு வந்த ரதத்தின் ஞாபகம் வந்தது. அந்த நினைவினால் அவன் திரும்பி வௌியே வரப் பார்த்தபோது மிகவும் உறுதி வாய்ந்த வஜ்ரக்கையொன்று தன்னைப் பிடித்து உள்ளே தள்ளுவதை உணர்ந்தான். அந்தக் கை மகேந்திர பல்லவருடைய வைரம் பாய்ந்த கைதான் என்பதை உணர்ந்ததும் கண்ணனுடைய ஆச்சரியம் அளவுகடந்ததாயிற்று. அப்போது சக்கரவர்த்தி, "கண்ணா! இந்தக் கள்ள பிக்ஷு பல்லவ இராஜ்யத்தில் இருந்த வாதாபியின் கடைசி ஒற்றன். இவன் தப்பிப் போகாதபடி தடுத்ததால், பல்லவ சாம்ராஜ்யத்துக்கு ஒரு மகத்தான சேவை செய்திருக்கிறாய் வா, போகலாம் கமலி உனக்காகக் கவலையுடன் காத்திருக்கிறாள்' என்று சொல்லிக்கொண்டே அந்த இரகசிய வாசலுக்குள்ளே தாமும் நுழைந்து இரகசியக் கதவை உள்ளிருந்தபடியே சாத்தினார். அவர்கள் புகுந்த இடம் காஞ்சி மாநகரின் பிரசித்தமான இராஜவிஹாரம் என்று விரைவில் கண்ணனுக்குத் தெரிந்தது.

மேற்கண்ட வரலாற்றை எல்லாம் கூறிவிட்டு, கண்ணபிரான் "கமலி! ஏதோ உன்னுடைய மாங்கல்ய பலத்தினாலேதான் நேற்றிரவு நான் பகைவர்களிடம் சிக்காமலும், முதலைகளுக்கு இரையாகாமலும் பிழைத்து வந்தேன். நான் பிழைத்து வந்தது உண்மைதானா என்று இன்னமும் எனக்குச் சந்தேகமாய்த்தான் இருக்கிறது. உன்னுடைய இரண்டு தளிர் போன்ற கைகளினாலும் என்னை கட்டிக்கொண்டு பார்த்து, நான் உண்மையில் உயிரோடுதானிருக்கிறேனா என்று சொல்லு" என்றான். "முடியாது, கண்ணா முடியாது! உன்னை நான் கட்டிக் கொண்டால் சின்னக் கண்ணனுக்குத் தொந்தரவாயிருக்கும்!" என்று கூறிவிட்டுப் பொருள் பொதிந்த புன்னகை புரிந்தாள் கமலி.

இரண்டாம் பாகம் முற்றிற்று
 
Top Bottom