Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சிவகாமியின் சபதம் பாகம் -3 : பிக்ஷுவின் காதல்

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
முப்பத்தைந்தாம் அத்தியாயம்

கலங்கிய குளம்

ஆஹா! அந்தப் பழைய தாமரைத் தடாகம்தானா இது? சிவகாமியும் தானும் எத்தனையோ இன்பமான தினங்களைக் கழித்த குளக்கரைதானா இது? ஆம்; அதுதான் ஆனால் அதன் தோற்றம் இப்போது அடியோடு மாறிப் போயிருந்தது. மாமல்லரின் மனம் அடைந்திருந்த நிலையை அந்தத் தாமரைக்குளம் நன்கு பிரதிபலித்தது. பளிங்குபோல் தௌிந்த தண்ணீர் ததும்பிக் கொண்டிருந்த தடாகத்தில் இப்போது பெரும் பகுதி சேறாயிருந்தது. காண்போர் கண்களையும் உள்ளத்தையும் ஒருங்கே கவர்ந்து பரவசப்படுத்திய செந்தாமரை மலர்கள், குவிந்த மொட்டுக்கள், பச்சை வர்ணக் குடைகள் போல் கவிந்து படர்ந்திருந்த இலைகள் - இவை ஒன்றும் இப்போது இல்லை. யானைகளின் காலினால் சேற்றோடு சேர்த்து மிதிக்கப்பட்ட சில தாமரை இலைகள் காணப்பட்டன. வாடி வதங்கிய இலைகளையுடைய தாமரைக் கொடிகள் துவண்டும் உலர்ந்தும் கிடந்தன.

குளக்கரையில் தழைத்துச் செழித்திருந்த விருட்சங்களின் கிளைகள் முறிக்கப்பட்டுப் பாதி மொட்டையாகக் காணப்பட்டன. ஆ! அந்த விசுப்பலகை! அதுவும் பாதியில் முறிந்து ஒரு பகுதி தரையில் துகள் துகளாய்க் கிடந்தது. இன்னொரு பாதி அப்படியே பிளந்த முனைகளுடன் நின்றது. இருதயம் உடைந்த மாமல்லர் அந்தப் பிளந்த விசுப்பலகையின் மேல் உட்கார்ந்தார். சுற்று முற்றும் பார்த்தார்; பழைய ஞாபகங்கள் ஒன்றையொன்று தள்ளிக் கொண்டு போட்டியிட்டுக் கொண்டு வந்தன.

வசந்த காலத்தில், வனத்திலுள்ள மரங்களெல்லாம் புதுத் தளிர்களும் புஷ்பங்களுமாய்க் குலுங்கிக் கொண்டிருந்த நாட்களில், எத்தனையோ தடவை சிவகாமியைத் தேடிக் கொண்டு அவர் அங்கு வந்ததுண்டு. கானகத்துப் பட்சிகள் கலகலவென்று சப்தித்துக் கொண்டிருந்த நேரங்களில், அவரும் சிவகாமியும் அதே விசுப்பலகையில் உட்கார்ந்து, கண்களோடு கண்களும் கரங்களோடு கரங்களும் இருதயத்தோடு இருதயமும் பேசும்படி விட்டு, வாய்மூடி மௌனிகளாய் நேரம் போவது தெரியாமல் இருந்ததுண்டு. கீழ் வான முகட்டில் பச்சை மரங்களுக்கிடையே பொற் குடத்தைப் போல் பூரண சந்திரன் உதயமாகும்போது, அந்த முழுமதியையும் சிவகாமியின் முகத்தையும் மாமல்லர் எத்தனை தடவை ஒப்பிட்டுப் பார்த்திருப்பார்! தாமரைக் குளத்திலே ததும்பிய தௌிந்த நீரின் விளிம்பிலே நின்று, மேலே தோன்றிய சிவகாமியின் உண்மை உருவத்தையும் தண்ணீரிலே தெரிந்த அவளுடைய பிரதி பிம்பத்தையும் மாறி மாறிப் பார்த்து மகிழ்ந்தது எத்தனையோ நாள்! இம்மாதிரி ஞாபகங்கள் எல்லாம் மாமல்லருக்கு ஆரம்பத்தில் இன்பத்தையளித்தன. ஆனால் இடையிடையே, "இனிமேல் அந்த மாதிரி அனுபவங்கள் நமக்குக் கிட்டப் போவதே இல்லை" என்ற நினைவு வந்ததும் மனத்தில் கொடிய வேதனை உண்டாயிற்று. இனிமேல் பொறுக்க முடியாது என்ற மனோநிலை ஏற்பட்டதும் மாமல்லர் குதித்து எழுந்தார். விரைந்து சென்று குதிரை மீது தாவி ஏறி ஆயனர் வீட்டை நோக்கிச் செலுத்தினார்.

காஞ்சியிலிருந்து புறப்பட்ட சமயம் அவர் மனத்திலிருந்த அமைதி இப்போது இல்லை. அமைதிக்குப் பதிலாக இப்போது கோபமும் ஆத்திரமும் அவர் மனத்தில் குடிகொண்டிருந்தன. சிவகாமியைக் கொள்ளை கொண்டுபோன சளுக்கப் பகைவர்கள் மீது குரோதம் எழுந்தது. மூடத்தனத்தினால் சிவகாமியைப் பறி கொடுத்த ஆயனர்மீது கோபம் கோபமாக வந்தது. புத்த பிக்ஷுவின் மீது இன்னதென்று விவரமாகாத சந்தேகமும் கோபமும் ஏற்பட்டன. ஆ! அந்தப் பாஷாண்டியினிடம் அவருக்கு எப்போதுமே நல்ல அபிப்பிராயம் கிடையாது. பிக்ஷு மனம் வைத்திருந்தால் சிவகாமியைக் காப்பாற்றியிருக்கலாமல்லவா? ஏன் காப்பாற்றவில்லை? ஏன் ஆயனரிடம் செய்தி ஒன்றும் சொல்லவில்லை? பிக்ஷு என்ன ஆனார்? எப்படி மாயமாய் மறைந்தார்?

சிவகாமியின் அரங்கேற்றம் தடைப்பட்ட அன்றிரவு இராஜ விஹாரத்தின் அருகில் புத்த பிக்ஷுவைச் சுட்டிக் காட்டிச் சக்கரவர்த்தி தமக்கு எச்சரித்தது மாமல்லருக்கு நேற்று நடந்ததுபோல் ஞாபகம் வந்தது. உடனே, கோபம் தந்தையின் பேரிலேயே திரும்பிற்று. மகேந்திர பல்லவரின் மந்திர தந்திரங்கள், சூழ்ச்சிகள், வேஷங்கள் இவற்றினாலேதான் பல்லவ இராஜ்யம் இன்றைக்கு இந்தக் கதியை அடைந்திருக்கிறது! தாமும் சிவகாமியை இழக்கும்படி நேரிட்டிருக்கிறது! திடீரென்று ஒரு விபரீதமான சந்தேகம் மாமல்லரின் உள்ளத்தில் உதித்தது. ஒருவேளை சிவகாமி சிறைப்படும் வண்ணம் சூழ்ச்சி செய்தவர் மகேந்திர பல்லவர்தானோ? இல்லாவிடில் எதற்காகத் தன்னைப் போர்க்களத்துக்கு அனுப்பிவிட்டு, மண்டபப்பட்டு கிராமத்திலிருந்து சிவகாமியைத் தருவிக்கிறார்? எதற்காக அரண்மனைத் தோட்டத்தில் ஒரு சுரங்க வழியை ஏற்படுத்தி அதைக் கண்ணபிரானின் மனைவிக்குத் தெரியும்படி செய்திருக்கிறார்? ஒருவேளை அந்தப் பெண் கமலி கூடச் சக்கரவர்த்தியின் சதிக்கு உடந்தையாயிருந்திருப்பாளோ? எல்லாரும் சேர்ந்து தன்னை இப்படி வஞ்சித்துவிட்டார்களோ! ஆஹா! இது என்ன சதிகார உலகம்? துரோகமும், தீவினையும் நிறைந்த சதிகார உலகம்!

இத்தகைய மனோநிலையில் மாமல்லர், ஆயனர் வீட்டு வாசலுக்கு வந்து சேர்ந்தார். சிவகாமி சிறைப்பட்டது சம்பந்தமாக மர்மமாகவும், விளங்காமலும் இருந்த சில விஷயங்களை ஆயனரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள அவர் விரும்பினார். வீட்டு வாசலுக்குச் சற்றுத் தூரத்திலேயே குதிரையை நிறுத்தி விட்டுத் தாமும் சற்று அங்கேயே நின்று மனத்தை அமைதிப்படுத்திக் கொண்டார். பிறகு சாவதானமாக நடந்து வந்து ஆயனர் வீட்டுக்குள் நுழைந்தார். வீட்டுக்குள்ளே பேச்சுக் குரல் கேட்டது அவருக்குச் சிறிது வியப்பையளித்தது. ஆயனர் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறார்? உள்ளே சிற்ப மண்டபத்தில் ஆயனருக்கு அருகில் உட்கார்ந்திருந்த மனிதனைப் பார்த்ததும் மாமல்லருடைய வியப்பு அளவு கடந்தது. அந்த மனிதன் ஒற்றர் தலைவன் சத்ருக்னன்தான்!

சத்ருக்னனை அங்கே கண்டதுகூட மாமல்லருக்கு அவ்வளவு வியப்பளிக்கவில்லை. சத்ருக்னனுடைய முகத்தைப் பார்த்ததும் பளிச்சென்று இன்னொரு முகம் ஞாபகத்துக்கு வந்தது. அப்படி ஞாபகத்துக்கு வந்த முகம் சற்று முன்னால் காட்டுப் பாதையில் அவர் பார்த்த பெண்ணின் முகமேதான்! என்ன அதிசயமான ஒற்றுமை? ஒருவேளை சத்ருக்னனுடைய தங்கை அல்லது தமக்கையோ அவள்? அல்லது ஒருவேளை இவனே...? சந்தேகம் தோன்றிய ஒரு கணத்திற்குள்ளேயே அது தீர்ந்து விட்டது. சத்ருக்னனுக்கு அருகில் ஒரு சேலையும், மற்றும் ஸ்திரீகளுக்குரிய சில ஆபரணங்களும் கிடந்ததை நரசிம்ம பல்லவர் பார்த்தார்.



முப்பத்தாறாம் அத்தியாயம்

சத்ருக்னன் வரலாறு

வாசற்படியில் மாமல்லர் வந்து நின்றதைச் சத்ருக்னனும் ஆயனரும் கவனிக்கவில்லை. அவ்வளவுக்குத் தங்களுடைய பேச்சில் அவர்கள் ஆழ்ந்திருந்தார்கள். மண்டபத்துக்குள்ளே மாமல்லர் பிரவேசித்ததும் இருவரும் ஏக காலத்தில் நிமிர்ந்து பார்த்தார்கள். சத்ருக்னன் சட்டென்று எழுந்து நின்று, "பிரபு!" என்றான். மேலே ஒன்றும் சொல்ல முடியாமல் அவன் திகைத்தான். ஆயனரோ முகத்தில் உற்சாகமும் குதூகலமும் ததும்ப சாய்ந்து படுத்திருந்தவர் நிமிர்ந்து எழுந்து உட்கார்ந்து "பிரபு! வாருங்கள்! வாருங்கள்! தங்களைத்தான் இப்போது நினைத்துக் கொண்டிருந்தேன். சத்ருக்னன் நல்ல செய்தி கொண்டு வந்திருக்கிறான். குழந்தை சிவகாமி உயிரோடு சௌக்கியமாயிருக்கிறாளாம்!" என்றார்.

இதைக் கேட்ட மாமல்லரின் தலை சுழல்வது போலிருந்தது. ஆயனருக்கு அருகில் வந்து நின்று சத்ருக்னனை ஏறிட்டுப் பார்த்த வண்ணம், "சத்ருக்னா! இது உண்மைதானா?" என்று கேட்டார். "ஆம் பிரபு! உண்மைதான்!" என்று சத்ருக்னன் கூறிவிட்டுக் கைகூப்பிய வண்ணம், "பல்லவ குமாரா! சற்று முன்பு காட்டுப் பாதையில் தங்களைக் கண்டபோது பேசாமல் வந்துவிட்டேன், அதற்காக மன்னிக்க வேண்டும். திடீரென்று தங்களைப் பார்த்ததும் பேசக் கூச்சமாயிருந்தது!" என்று பணிந்த குரலில் கூறினான். "அந்தப் பெண் நீதானா? நல்ல வேஷம்!" என்றார் மாமல்லர். "ஆமாம், நானுங்கூடச் சற்று முன்பு திகைத்துப் போய் விட்டேன். பெண் பிள்ளை வேஷம் எவ்வளவு நன்றாய் இவனுக்குப் பலித்திருக்கிறது? சக்கரவர்த்தி ஒவ்வொரு வேலைக்கும் எவ்வளவு பொருத்தமாய் ஆட்களைத் தேர்ந்தெடுக்கிறார்?" என்றார் ஆயனர்.

மாமல்லர் மெல்லிய குரலில், "சக்கரவர்த்தியின் சாமர்த்தியத்தை நீங்கள்தான் மெச்சிக் கொள்ள வேண்டும்!" என்று முணு முணுத்துக் கொண்டார். பிறகு, சத்ருக்னனைப் பார்த்து, "எதற்காக ஸ்திரீ வேஷம் போட்டாய்?" என்று கேட்டார். "சத்ருக்னன் அந்த வேஷம் போட்டதனால்தான் சிவகாமியைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. தயவு செய்து உட்காருங்கள்; சத்ருக்னன் எல்லாம் விவரமாய்ச் சொல்லட்டும். நானும் இன்னொரு முறை கேட்டுக் கொள்கிறேன்" என்றார் ஆயனர். மாமல்லர் உட்கார்ந்தார், சத்ருக்னனும் உட்கார்ந்து தன் வரலாற்றைக் கூறத் தொடங்கினான் அந்த வரலாறு இதுதான்:

"ஆயனரும் சிவகாமியும் காஞ்சிக் கோட்டையிலிருந்து சுரங்க வழியாக வௌியே போய் விட்டார்கள் என்று தெரிந்ததும் சக்கரவர்த்திக்கு இடி விழுந்தது போலாகி விட்டது. உடனே தாமும் கோட்டைக்கு வௌியே போகத் தீர்மானித்துப் படைகளை ஆயத்தம் செய்யும்படி கட்டளையிட்டார். பிறகு என்னைத் தனியாகக் கூப்பிட்டு, 'சத்ருக்னா! நீ இதுவரையில் பல்லவ சாம்ராஜ்யத்துக்கு எத்தனையோ சேவைகள் செய்திருக்கிறாய். ஆனால், அவை எல்லாவற்றையும் காட்டிலும் முக்கியமான சேவை இப்போது செய்ய வேண்டும். மாமல்லன் மட்டும் இப்போது இங்கிருந்தால் நானே அந்த வேலையை மேற்கொள்வேன். பல்லவ குலத்தின் மானத்தைக் காப்பதற்காக நான் இப்போது போருக்குப் புறப்பட வேண்டியிருக்கிறது. சிவகாமியைக் கண்டு பிடித்து அவளைத் திருப்பிக் கொண்டு வரும் வேலையை உன்னிடம் ஒப்படைக்கிறேன். சிவகாமியை மீட்டுக் கொண்டு வர முடியாவிட்டால் அவளைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்' என்று கட்டளையிட்டார். இதைக் கேட்டு நான் திகைத்துப் போனேன். 'பிரபு! சிவகாமி அம்மை சளுக்கரிடம் சிறைப்பட்டிருந்தால் தன்னந்தனியாக நான் என்ன செய்வேன்?' என்றேன். 'கஷ்டமான காரியமானபடியால்தான் உன்னிடம் ஒப்படைக்கிறேன், சத்ருக்னா! நீ இதுவரை எத்தனையோ வேஷங்கள் போட்டிருக்கிறாய். அவை எல்லாவற்றையும் விட உனக்கு நன்றாகப் பலிக்ககூடிய வேஷம் ஒன்று இருக்கிறது, அது பெண் வேஷந்தான்!" என்றார். சக்கரவர்த்தியின் கருத்தை நான் உடனே தெரிந்து கொண்டேன். சற்றுமுன் பார்த்தீர்களே! அம்மாதிரி வேஷம் தரித்துக் கொண்டு காஞ்சியை விட்டுக் கிளம்பி முதலில் இந்த வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

"நான் வரும் சமயத்திலேதான் இவரை ஸ்மரணையற்ற நிலையில் இந்த வீட்டுக்குள்ளே கொண்டு வந்தார்கள். இவரோடு சிவகாமி தேவி வரவில்லை; எனவே, தேவி சளுக்கரிடம் சிறைப்பட்டுத்தான் இருக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டு புறப்பட்டேன். காஞ்சிக் கோட்டையைச் சுற்றிச் சென்றேன். சளுக்க ராட்சதர்களின் கூக்குரல் கேட்ட இடங்களிலெல்லாம் மறைந்திருந்து கவனித்தேன். கடைசியில் காஞ்சிக்கு வடமேற்கே ஒரு பெரிய சளுக்கர் படை வட திசையை நோக்கிப் புறப்பட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அந்தப் பெருங்கும்பலுக்கு மத்தியிலிருந்து ஸ்திரீகள் புலம்பி அழும் சத்தம் வந்து கொண்டிருந்தது. இன்னும் அருகில் சென்று பார்த்த போது, அவ்வாறு ஓலமிட்ட ஸ்திரீகள் நம் கிராமங்களில் சிறைப் பிடிக்கப்பட்டவர்கள் என்று தெரிந்தது. அந்தப் பெண்களுக்கு நடுவே பல்லக்கு ஒன்றும் காணப்பட்டது. அதில் இருந்தவர் சிவகாமி தேவிதான் என்று தெரிந்து கொண்டேன்.

"சற்று நேரத்துக்கெல்லாம் நான் தலை விரிகோலமாய் 'ஓ' என்று ஓலமிட்டுக் கொண்டு அந்தப் படையை நோக்கி ஓடினேன். பின்னால் என்னை யாரோ துரத்தி வருவதுபோலப் பாசாங்கு செய்து திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு ஓடினேன். சளுக்கர்கள், 'வந்தாயா? வா!' என்று பரிகாசக் குரலில் கூறிக்கொண்டு என்னை அழைத்துப்போய் மற்றச் சிறைப்பிடிக்கப்பட்ட பெண்களுடனே சேர்த்து விட்டார்கள். சற்று நேரம் மற்றப் பெண்களைப் போல் நானும் ஓலமிட்டுக் கொண்டிருந்தேன். பிறகு மெள்ள மெள்ளப் பல்லக்கை நெருங்கிச் சென்று அதிலிருப்பது சிவகாமி அம்மைதான் என்று உறுதிப்படுத்திக் கொண்டேன். சிவகாமியை அவ்வளவு மரியாதையுடன் அழைத்துபோன காரணத்தையும் ஊகித்தறிந்தேன். அந்தச் சளுக்கர் படையின் தலைவனாகிய தளபதி சசாங்கன், சிவகாமி அம்மையைப் பத்திரமாய்க் கொண்டுபோய் வாதாபிச் சக்கரவர்த்தியிடம் ஒப்புவித்துப் பல்லவ நாட்டின் சிறந்த கலைச் செல்வத்தைக் கொள்ளை கொண்டு வந்ததற்காகப் பரிசு கேட்கப் போகிறான்! இந்த எண்ணத்தினால் எனக்கு ஒருவாறு மனநிம்மதி ஏற்பட்டது. சிவகாமி அம்மைக்கு உடனே தீங்கு எதுவும் நேராது என்று தைரியம் அடைந்தேன். ஆனால், சளுக்க ராட்சதப் படையால் சூழப்பட்ட சிவகாமியை அங்கிருந்து அப்புறப்படுத்தி அழைத்துச் செல்வது சாத்தியமான காரியமாகவே தோன்றவில்லை. எத்தனையோ உபாயங்கள் யோசித்து யோசித்துப் பயன்படாது என்று கைவிட்டேன்.

"இதற்கிடையில் எல்லாரும் வடதிசை நோக்கிப் போய்க் கொண்டேயிருந்தோம். வெள்ளாறு என்று வழங்கும் பொன்முகலியாற்றங்கரைக்குப் போய்த் தங்கினோம். இவ்விடத்தில் தளபதி சசாங்கன் பெரு மனக்குழப்பத்தை அடைந்தவனாகக் காணப்பட்டான். அதன் காரணமும் சளுக்க வீரர்களின் சம்பாஷணைகளிலிருந்து தெரிந்து கொண்டேன். மணிமங்கலத்தில் வாதாபிச் சக்கரவர்த்திக்கும் மகேந்திர பல்லவருக்கும் நடந்த பெரும் போரைப் பற்றித் தூதர்கள் கொண்டு வந்த செய்திதான் காரணம். இந்தச் செய்தி தளபதி சசாங்கனுக்கு அவ்வளவு குழப்பம் ஏன் அளித்தது என்பதையும் நான் ஊகித்தறிந்தேன். வாதாபிச் சைனியத்தில் பெரும் பகுதியுடன் புலிகேசி முன்னால் சென்று விட்டதாகவும், இதற்குள்ளாக அவர் வடபெண்ணைக் கரையை அடைந்திருக்க வேண்டும் என்றும் சசாங்கன் எண்ணிக் கொண்டிருந்தான். இப்போது புலிகேசி தனக்குப் பின்னால் தங்கி மாமல்லபுரத்துக்குப் பக்கத்தில் மணிமங்கலத்தில் சண்டையிட்டதாகச் செய்தி வந்ததும் சசாங்கன் திகைத்தது இயற்கைதானே? சக்கரவர்த்தியைப் பின்னால் விட்டுவிட்டுத் தான் முன்னால் ஓடி வந்தது பற்றி அவருக்குக் கோபமோ என்னவோ என்று சசாங்கன் ரொம்பவும் தவித்துக் கொண்டிருந்ததாகத் தெரிந்தது. பொன் முகலி ஆற்றங்கரைக்கு நாங்கள் வந்து சேர்ந்த மறுநாள் சசாங்கன் தன் சளுக்கப் படைகளுடன் தென்கரையில் இருந்து கொண்டு சிறைப்பிடித்த ஸ்திரீகளாகிய எங்களை மட்டும் அக்கரைக்கு அனுப்பினான். எங்களைக் காவல் புரிவதற்குச் சில சளுக்க வீரர்களை உடன் அனுப்பி வைத்தான்.

"அக்கரை சென்றதும், 'இது ஒரு நல்ல சந்தர்ப்பம்; சிவகாமி அம்மையை அழைத்துக் கொண்டு போய்ப் பக்கத்தில் காணப்படும் குன்றுகளிலே ஒளிந்து கொள்ளலாம். காவலர்கள் சிலர்தான் இருப்பதால் அவர்களுக்குத் தெரியாமல் இரவு நேரத்தில் தப்பிச் செல்லலாம்' என்று தீர்மானித்தேன். அன்றிரவு, எல்லோரும் தூங்க யத்தனம் செய்த சமயத்தில் நான் சிவகாமி அம்மையின் அருகில் இருக்கும்படி ஏற்பாடு செய்து கொண்டேன். மற்றப் பெண்கள் எல்லாரும் தூங்கிய பிறகு பிராகிருத பாஷையில் என்னை இன்னானென்று தெரிவித்துக் கொண்டேன். சிவகாமி முதலில் பெரிதும் ஆச்சரியமடைந்தார். பிறகு, ஆயனரைப் பற்றிக் கேட்டார்; தங்களைப் பற்றியும் விசாரித்தார். ஆனால் தங்களைப்பற்றி எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. தாங்கள் தெற்கேயிருந்து திரும்பி வந்த விவரமே தெரியாது. ஆகையால், ஆயனர் உயிர் பிழைத்திருக்கிறார் என்ற விவரத்தை மட்டும் சொன்னேன். பிறகு மெள்ள, மெள்ள என் யோசனையையும் தெரிவித்தேன். பிரபு! என்னுடைய ஏமாற்றத்தை என்னவென்று சொல்வேன்...."
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
முப்பத்தேழாம்அத்தியாயம்

புலிகேசியும் சிவகாமியும்

சத்ருக்னன் கூறிவந்த வரலாற்றில் மேற்கண்ட இடத்திற்கு வந்ததும் மாமல்லருக்கு மூச்சு நின்றுவிடும் போல் இருந்தது. மேலே நடந்ததை தெரிந்து கொள்ள அவர் அவ்வளவு ஆவலாக இருந்தார். ஒருகணநேரத்தில் அவருடைய மனம் என்னவெல்லாமோ கற்பனை செய்தது. சத்ருக்கனனும் சிவகாமியும் புறப்பட்டு ஓடிவந்திருக்கவேண்டும் என்றும், மறுபடியும் வழியில் அவளுக்குஏதாவது ஆபத்து நேர்ந்திருக்க வேண்டுமென்று நினைத்தார்.அவளை அந்த ஆபத்திலிருந்து மீட்டுக் கொண்டு வருவதற்கு அவருடைய உள்ளம் துடித்தது.

"சத்ருக்னா ஏன் இப்படிக் கதையை வளர்த்திக் கொண்டுருக்கிறாய்? சிவகாமியை எங்கே விட்டு விட்டு வந்தாய்? சீக்கிரம் சொல்லு,, என்று ஆத்திரத்துடன் கேட்டார். "பிரபு, சிவகாமியம்மை இப்போது வடபெண்ணை நதிக்கு அப்பால் போய்க்கொண்டுருப்பார்! பொன்முகலி ஆற்றுக்கும் வடபெண்ணைக்கும் மத்தியில் அவரை விட்டு விட்டு வந்தேன். பாவி!" என்று சத்ருக்னன் துயரக்குரலில் கூறினான்.மாமல்லரின் கண்களில் தழற்பொறி பறந்தது. புலிகேசியிடம் வந்த கோபத்தைக் காட்டிலும் சத்ருக்னனிடம் அதிக கோபம் வந்ததாகத் தேன்றியது

"இதெரன்ன ? சிவகாமியைப் புலிகேசியிடம் விட்டுவட்டு நீ மட்டும் தப்பி வந்தாயா? சத்ருக்னா! என்னிடம் விளையாட வேண்டாம் சீக்கிரம் விஷயத்தைச்சொல்!" என்று கர்ஜனை புரிந்தார். அப்போது ஆயனார், மாமல்லருக்குக் காரணம் விளங்காத உற்சாகம் நிறைந்த குரலில் , "பிரபு! சத்ருக்னன் சொல்கிறபடிசொல்லிவரட்டும். தயவு செய்து சற்றுப் பொறுமையாகக் கேளுங்கள்!" என்றார். சத்ருக்கக் மறுபடியும் சொல்லத்தொடங்கினான்:

"சிவகாமி அம்மை உடனே என்னுடைய யோசனையைச் சந்தோஷமாய் ஒப்புக்கொண்டு தப்பிச்செல்ல இணங்குவார் என்று எதிர்பார்த்தேன். இதில் பெறும் ஏமாற்றம் அடைந்தேன். அதுவரை தைரியமாய் இருந்த சிவகாமி அம்மை என்னுடைய யோசனையைக் கேட்டதும் திடீரென்று விம்மி அழத்தொடங்கினார். முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு தேம்பினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவரைச் சமாதானப்படுத்த முயன்றேன். அப்போது சிவகாமி அம்மை என்னை வெறித்துப் பார்த்து, 'அவருடைய வாக்குறுதியை நம்பி இந்த கதி அடைந்தேன்'. என்றார். உடனே, 'இல்லை, இல்லை. அவர் பேச்சைக் கேளாததால் இன்த விபரீதம் வந்தது. இனி அவருடைய முகத்தில் எப்படி விழிப்பேன்?' என்றார். இன்னும் என்னவெல்லாமோ சம்பந்தமற்ற வார்த்தைகளைச் சென்னார். இதனாலெல்லாம் என் திகைப்பு அதிகமாயிற்று.ஒருவேளை அவருக்குச் சித்தப்பிரமை ஏற்பட்டுவிட்டதோ என்று மிகவும் பயந்து போனேன்.

பிறகு, சளுக்கியர் படை நம் கிராமங்களில் செய்த அட்டூழியங்களைத் தம் கண்ணால் பார்த்தது பற்றி சிவகாமி அம்மை சொல்ல ஆரம்பித்தார். அப்புறந்தான் அவர் அறிவுத்தௌிவைப் பற்றி எனக்கு ஏற்பட்ட சந்தேகம் நீங்கிற்று.அவர் சொன்னவற்றை யெல்லாம் சிறிது நேரம் நான் பொறுமையாகக் கேடடேன். பிறகு, 'அம்மா! மகேந்திர பல்லவரும் மாமல்லரும் இதற்கெல்லாம் பழிக்குப் பழி வாங்குவார்கள்!' என்றேன். அப்போது சிவகாமி அம்மைக்கு ஏற்பட்ட ஆத்திரத்தையும் ஆவேசத்தையும் பார்க்க வேண்டுமே? 'ஆம், சத்ருக்னா! ஆம்! பழிக்குப் பழி வாங்கியே தீர வேண்டும்' என்று அவர் அப்போது போட்ட கூச்சலினால் காவலர்கள் சந்தகம் கொள்ளாமல் இருக்க வேண்டுமே என்று எனக்கு பயமாய்ப்போய்வட்டது. நல்லவேளை அங்கே ஸ்தரீகள் துக்கத்திலே புலம்புவதும் பிதற்றுவதும் சகமாய் இருந்தபடியால், சிவகாமி அம்மையின் கூச்சல் காவலர்களின் கவனத்தைக் கவரவில்லை.

"பிறகு நான் அவரை மெல்ல மெல்ல சாந்தப்படுத்தினேன். மறுபடியும் தப்பிச்செல்லும் யோசனையைக் கூறினேன். அப்போது அவர் என்னை வெறித்துப் பார்த்து, "ஐயா என்னைபோல் ஆயிரம் பெண்கள் இருக்கிறார்கள். இவர்களில் சிலர் கட்டிய புருஷனை விட்டுவிட்டு வந்திருக்கிறார்கள். சிலர் கைக்குழந்தைகளை கதறவிட்டு வந்திருக்கிறார்கள். இவர்களை எல்லாம் அந்த சாளுக்கிய ராட்சதரர்கள் கொண்டுபோகும்படி விட்டுவிட்டு நான்மட்டும் தப்பிச்செல்லவேண்டுமா? எனக்கு தாலிகட்டிய கணவண் இல்லை;. வயிற்றில் பிறந்த குழந்தையும் இல்லை. நான் எக்கேடு கெட்டுப்போனால் என்ன? என்னை விட்டுவிடுங்கள்; இங்குள்ள கைக்குழந்தைக்காரிகளில் யாராவது ஒருத்தியைக் அழைத்துப்போங்கள் உஙகளுக்கு புண்ணியம் உண்டாகும்' என்றார். என்மனமும் இளகிவிட்டது. ஆயினும் மனதை கெட்டிபடுத்திக்கொண்டு, 'அம்மா! மகேந்திர சக்கிரவர்த்தி எனக்கு இட்ட கட்டளை தங்களைப் பத்திரமாய் அழைத்து வரவேண்டும் என்பதுதான் 'நான் சக்கிரவர்த்தியின் ஊழியன். அவருடைய கட்டளையை நிறைவேற்றவேண்டியவன்' என்றேன். இதனால் அவருக்கு மனம் மாறாது என்று எனக்குத் தெரிந்தே இருந்தது. ஆதலின் மறுபடியும் 'அம்மா! உங்களுக்கு புருஷனில்லை. குழந்தையில்லை எனபது உண்மைதான். ஆனால் தந்தை ஓருவர் இருக்கிறார் அல்லவா? ஏகபுத்திரியாகிய தங்களைப் பிரிந்து அவர்மனம் என்ன பாடுபடும்? அதை யோசிக்க வேண்டாமா' என்றேன்.

"சிவகாமி அம்மையின் கண்களில் அப்போது கண்களில் கண்ணீர் துளித்தது. தழுதழுத்த குரலில், 'ஆம் என் தந்தைக்கு பெரிய துரோகம் செய்துவிட்டேன் . ஐயோ! அவர் பிழைத்தாரோ இல்லையோ?' என்றார். 'அம்மா! அவரை பிழைப்பிக்க விரும்பினால் நீங்கள் என்னுடன் உடனே புறப்பட வேண்டும்!' என்றேன்நான். சிவகாமி அம்மை மறுபடியும் முகத்தைக் கையால் மூடிக்கொண்டு விம்மினாள். சீக்கிரம் கையை எடுத்துவிட்டு, 'ஐயா இன்று ஒருநாளைக்கு அவகாசம் கொடுங்கள். என் உடம்பும் உள்ளமும் சோர்ந்து போயிருக்கின்றன. இப்போது நான் புறப்பட எண்ணினாலும் ஓர் அடி கூட என்னால் எடுத்து வைக்க முடியாது. நாளுக்கு முடிவாகச்சொல்கிறேன்' என்றார். நானும் அவருக்கு ஒருநாள் அவகாசம் கொடுப்பது நல்லது என்று எண்ணி, 'ஆகட்டும், அம்மா! ஒருநாளில் ஒன்றும் குடிமுழுகிப் போகவில்லை. நாளைக்கே முடிவுசெய்யலாம்' என்று சொன்னேன்.

"மறுநாள் இராத்திரி எப்படியாவது அவருடைய மனத்தைத் திருப்பி அவரையும் அழைத்துக் கொண்டு திரும்பலாம் என்று எண்ணி இருந்தேன். ஆனால் மறுநாள் மாலை நான் சற்றும் எதிர்பாராத சம்பவம் நடந்துவிட்டது. சளுக்கிய சக்ரவர்த்தி புலிகேசி பொன்முகலியாற்றைக்கடந்து வந்து எங்களுடன் சேர்ந்து கொண்டார். அவருடன் சிறு சைன்யமும் வந்தது! தளபதி சசாங்கனை அங்கேயே காவலுக்கு நிறுத்தி விட்டு இவர் மட்டும் முன்னால் செல்ல தீர்மானித்து வந்திருக்கிறார் என்று ஊகித்தேன். அதன்படியே அன்று இரவுக்கிரவே எல்லோரும் வடக்கு நோக்கி பிரயாணமானோம். எனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தையும் துக்கத்தையும் சொல்லி முடியாது. வழியில் சிவகாமி அம்மையோடு தனியாயிருக்க நேர்ந்த போது, 'அம்மா! இப்படி செய்து விட்டீர்களே!' என்றேன். 'நானா செய்தேன்? விதி இப்படி இருக்கும் போது நான் என்ன செய்வேன்!' என்றார் சிவகாமி.

இரண்டுநாள் பிரயாணத்திற்குப் பிறகு மூன்றாவதுநாள் திருவேங்கடமலையின் அடிவாரத்தில் சென்று தங்கினோம். முதல் இரண்டுநாள் பிரயாணத்தில் புலிகேசி நாங்கள் தங்கியிருந்த பக்கம் வரவேயில்லை. முன்றாம் நாள் நாங்கள் ஒரு பாறையின் பக்கத்தில் தங்கி இருந்தோம். சமீபத்தில் குதிரைகளின் காலடிச்சத்தம் கேட்டது. சிறிது நேரத்திற்கெல்லாம் புலிகேசியும் இன்னும் சில குதிரை வீரர்களும் அந்தப் பாறையின் திருப்பத்தில் வந்து நின்றார்கள். சக்ரவர்த்தி குதிரை மேலிறிங்கி எங்கள் அருகில் வருவாரோ என்று நான் எதிர்பார்த்தேன். அவ்விதம் நாடபெறவில்லை. சற்று நின்று பார்த்துவிட்டுச் சக்ரவர்த்தி குதிரையை திருப்ப யத்தனித்த போதுதான் சற்றும் எதிர்பாராத அதிசயச்சம்பவம் நடைபெற்றது. கண்ணைமுடித்திறக்கும் நேரத்தில் சிவகாமி பெண்கள் கூட்டத்தின் மத்தியிலிருந்து ஒரே பாய்ச்சலாக பாய்ந்த ஓடினார். புலிகேசியின் குதிரைக்கு எதிரில் வழிமறித்து நின்று, 'சக்கிரவர்த்தி! ஒரு விண்ணப்பம்' என்று அலறினார்.

"சிவகாமியம்மையின் அலறலைக்கேட்டு அந்தக் கல்நெஞ்சன் புலிகேசி மனம்கூட இளகி இருக்க வேண்டும். உடனே, சிவகாமியின் அருகில் வந்தார். 'பெண்ணே! என்ன விண்ணப்பம் செய்து கொள்ள வேண்டும்?' என்று கேட்டார். ஆகா! அப்போது சிவகாமி அம்மையின் வாக்கிலிருந்து வந்த ஆவேச மொழிகளை எவ்விதம் வர்ணிப்பேன்! அத்தனை தைரியமும், சாமர்த்தியமும், வாக்கு வன்மையும அவருக்கு எங்கிருந்துதான் வந்ததோ, அறியேன். கம்பீரமாகப் புலிகேசியை நிமிர்ந்து பார்த்து, தழுதழுத்த குரலில், சிவகாமி அம்மை கூறிய மொழிகளை ஏதொ எனக்கு ஞாபகம் உள்ள வரையில் கூறுகிறேன்.

"ஐயா பூமண்டத்தை ஆளும் மன்னர்களாகிய நீங்கள் உங்களுடைய வீரத்தையும் புகழையும் நிலைநாட்டிக்கொள்ள யுத்தம் செய்கிறீர்கள். இன்றைக்கு எதிரிகளாய் இருக்கிறீர்கள்; நாளைக்குச் சினேகிதளாகீர்கள். இன்றைக்கு ஒருவனுடைய அரண்மனையில் இன்னொருவர் விருந்தாளியாயிருக்கிறீர்கள். மறுநாள் போர்களத்தில் யுத்தம் செய்கிறீர்கள். உங்களுடைய சண்டையிலே ஏழைப்பெண்களாகிய எங்களை ஏன் வாட்ட வேண்டும்? உங்களுக்கு நாங்கள் என்ன கெடுதல் செய்தோம்? கருணை கூர்ந்து எங்களையெல்லாம் திருப்பி அனுப்பி விடுங்கள். இங்கே சிறை பிடித்து வைத்திருக்கும் பெண்களில் சிலர் கைக்குழந்தைகளை கதறவிட்டு வந்திருக்கிறார்கள். இன்னும் அநேகர் கையில் திருமணக் கங்கணத்துடன் வந்திருக்கிறார்கள். இவர்களை எல்லாம் நீங்கள் விடுதலை செய்து அனுப்பாவிட்டால், தங்களுடைய நகரமாகிய வாதாபியை அடைவதற்குள் அவர்களுகஙகுப் பைத்தியம் பிடித்துவிடும். திக்விஜயம் செய்து விட்டுத் தலைநகருக்கு திரும்பும்போது சித்தப் பிரமை பிடித்த ஆயிரம் ஸ்தரீகளை அழைத்துக்கொண்டு போவீர்களா? அதில் உங்களுக்கு என்ன லாபம்? ஆயிரம் பெண்கள் மனமார வாயாரத் தங்களை வாழ்த்திக் கொண்டு வீடு திரும்பும்படி செய்யுங்கள்!' - இப்படிக் கல்லுங் கரையுமாறு சிவகாமியம்மை கேட்டதற்கு, 'பெண்ணே! உன்னுடைய பாவ அபிநயக்கலை சாமர்த்தியங்களை யெல்லாம் நாட்டியக் கச்சேரியில் காட்டவேண்டும்; இங்கே போர்களத்திலே காட்டி என்ன பிரயோஜனம்!' என்றான் அந்த ரஸிக்கத்தன்மையற்ற நிர்மூடன்!......"

சத்ருக்னன் இவ்வாறு சொன்னபோது, மாமல்லர் ஓர் நெடுமூச்சுவிட்டு, ஆகா! ஆயனாரின் மகள் அந்த நீசனிடம் போய்க் காலில் வீழ்ந்து வரம் கேட்டாள் அல்லவா? அவளுக்கு வேண்டுயதுதான்!" என்ற கொதிப்புடன் கூறினார்.

சத்ருக்னன் மேலே சொன்னான்: "ஆம் பிரபு! சிவகாமி அம்மையும் தங்களைபப்போலவே எண்ணியதாகத் தோன்றியது. புலிகேசியின் மறுமொழியைக்கேட்டு அவர் தலையைக் குனிந்து கொண்டார். சிறிது நேரம் தரையைப் பாார்த்த வண்ணம் இருந்தார். அப்போது அந்த சண்டாளப்பாவி, 'பெண்ணே! உன் அபிநய சாகஸத்தைக்கண்டு நான் ஏமாந்து விடமாட்டேன். ஆனால் உன் பேச்சில் கொஞ்சம் நியாயம் இருக்கிறது. ஆகையால் உன்வேண்டுகோைளு நிறைவேற்ற இணங்குகிறேன். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை. நீ இந்தப் பெண்களுக்காக மிகவும் இரங்கிப் பேசினாய். உன்னுடைய இரக்கம் வெறும் பாசாங்கு இல்லை என்பதை நீ நிரூபிக்க வேண்டும். இவர்கள் கட்டிய கணவனை பிரிந்து வந்தார்கள் என்றும், கைக் குழந்தையைப் பிரிந்து வந்தவர்கள் என்றும் சொன்னாயல்லவா? ஆனால் உனக்கு கணவனுமில்லை. குழந்தையுமில்லை. நீ என்னுடன் வாதாபிக்கு வர சம்மதிக்கிராயா, சொல்லு! சம்மதித்தால் உன்னைத்தவிர இவர்கள் எல்லோரையுமே இந்தக்கணமே விடுதலை செய்து அனுப்பி விடுகிறேன்' என்றான். அந்த மொழியைக் கேட்டதும் அந்தப் பாவியை கொன்றுவிடலாமா என்று எண்ணினேன்.

மாமல்லர் குறுக்கிட்டு, "நிபந்தனைக்குச் சிவகாமி சம்மதித்தாளா?" என்று குரோதம் ததும்பிய குரலில்கேட்டார். "ஆம்பிரபு! சிவகாமிஒருகணங்கூடதாமதிக்கவில்லை. உடனே எழுந்து நின்று, "சம்மதம், சக்கிரவர்த்தி! நிபந்தனையை ஒப்புக்கொள்கிறேன்! என்றார். அச்சமயம் சிவகாமி அம்மை நின்ற நிலையும், அவருடைய முகத்தோன்றமும் தெய்வீகமாய் இருந்தது! இராவணனுக்கு முன்னால் நின்ற சீதையையும், துரியோதனன் சபையில் நின்ற பாஞ்சாலியையும், யமன் முன்னால் வாதாடிய சாவித்திரியையும், பாண்டியன் முன்னால் நின்ற கண்ணகியையும் ஒத்து அச்சமயம் ஆயனாரின் திருக்குமாரி விளக்கினார்.....". சத்ருக்னா உன்னுடைய! பரவச வர்ணணனை அப்புறம் இருக்கட்டும், பின்னே என்ன நடந்தது?" என்று மாமல்லர் கேட்டார்.

"சற்று நேரத்திற்கெல்லாம் சக்கிரவர்த்தி எங்களை விடுதலைசெய்யும்படி உத்தரவிட்டார். பொன்முகலி ஆறு வரையில்எங்களைத் திரும்பக் கொண்டுபோய் விட்டுவிடும்படியும் சில வீரர் களுக்கு ஆக்ஞாபித்தார். அவ்வளவு நாளும் அழுத கண்ணும் சிந்தி முக்குமாய் இருந்த ஸ்தரீகள் எல்லோரும் இப்போது ஒரே சந்தோஷத்தில் ஆழ்ந்தார்கள். சிவகாமியைத் தலைக்குத்தலை வாழ்த்தினார்கள்.ஆனால் எனக்கு இடிவிழுந்தது போல் இருந்தது.சிவகாமியின் காலில் விழுந்து 'அம்மா! உங்களைவிட்டு நான் போகமாட்டேன். சக்கிரவர்த்தியிடம் மீண்டும் வரங்கேட்டு என்னை உங்களுடனேயே வைத்துக் கொள்ளுங்கள்' என்றேன். சிவகாமி ஒரெ பிடிவாதமாக, 'நீதான் முக்கியமாய்ப் போகவேண்டும். என் தந்தையிடம் பொய்ச்செய்தி சொல்லவேண்டும்' என்றார். நான் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. கடைசியில் வேறு வழியில்லை என்று நானும் புறப்படத் தீர்மானித்தேன். மேலும் அங்கே நான் தாமதித்தால் என்னுடைய வேஷம் வௌிப்பட்டு சிவகாமிக்கும் உபயோகமில்லாமல் இங்கேவந்து சொல்லமுடியாமற் போய்விடலாம் என்று பயந்தேன். ஆகவே 'தங்கள் விருப்பம் அதுவானால் போகிறேன், அம்மா! அப்பாவிற்கு என்ன சேதி சொல்லட்டும்?' என்று கேட்டேன். 'என்னைப்பற்றிக் கவலப்படவேண்டாம். வாதாபியில் நான் சௌக்கியமாயிருப்பேன் என்றும் சொல்லு. வாதாபியிலிருந்து திரும்பி வரும்போது அஜந்தா வர்ண ரகசியத்தைத் தெரிந்து கொண்டு வருவேன் என்றும் சொல்லு என்றார் சிவகாமியம்மை..."

இவ்விதம் சத்ருக்னன் சொன்னதும் ஆயனர் துள்ளும் உற்சாகத்துடனே "பார்த்தீர்களா? பல்லவ குமாரா! சிவகாமி சௌக்கியமாய் இருக்கிறாள். அதோடு அஜந்தா இகரசியத்தையும் அறிந்து கொண்டு வருவதாக சொல்கிறாள். அதற்காக நான் பரஞ்சோதியை அனுப்பியதெல்லாம் வீணாய்ப் போய்விட்டதல்லவா? என் அருமைக் குமாரியினால் என் மனேராதம் நிறைவேறப்போகிறது! இதுமட்டுமல்ல! வாதாபிச் சக்ரவர்த்தியைப்பற்றி நமது எண்ணத்தைக்கூட மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவர் ரஸிகத்தன்மையற்றவர், கலைஉணர்ச்சியே இல்லாதவர் என்று எண்ணிக் கொண்டிருந்தோமே? அப்படி இருந்தால், ஆயிரம் பெண்களைத் திருப்பி அனுப்பிவிட்டு சிவகாமியை மட்டும் அழைத்துப் போயிருப்பாரா? பிரபு!.....எனக்கு மட்டும் உடம்பு குணமாக வேண்டும். குணமானதும் நானே வாதாபிக்குப் போவேன்....."

ஆயனாரின் வார்த்தைகள் மாமல்லரின் செவிகளில் நாராசம் போல் விழுந்துக் கொண்டிருந்தன. சிவகாமி வாதாபிக்குப் போக சம்மதித்தாள் என்றதுமே மாமல்லரை ஆயிரம் தேள்கள் ஏக காலத்தில் கொட்டுவது போலிருந்தது. சிவகாமியிடம் அவர் கொண்டுள்ள பரிசுத்தமான அன்பில் ஒருதுளி நஞ்சு அப்போது கலந்தது என்றே சொல்ல வேண்டும். சிவகாமி மனமுவந்து புலிகேசியிடம் வாதாபிக்குச் செல்ல சம்மதித்தாள் என்னும் எண்ணத்தை அவரால் சகிக்க முடியவில்லை. இந்த எண்ணத்தில் புண்பட்டிருந்த அவருடைய இருதயத்தில் கூரிய வேலை நுழைப்பது போலிருந்தது ஆயனரின் பேச்சு. மாமல்லர் அப்போது தனிமையை விரும்பினார். பழைய தாமரைக் குளத்திற்கு போக வேண்டுமென்று அவருக்கு விருப்பம் உண்டாயிற்று. சட்டென்று ஒரு துள்ளலில் எழுந்து நின்று "சத்ருக்னா அவ்வளவு தானே விஷயம்? சிவகாமி வேறு எந்தச் செய்தியும் அனுப்ப வில்லையல்லவா?" என்றார்.

சத்ருக்னன் தயக்கத்துடன் ஆயனாரைப் பார்த்தான். அவர் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருப்பதைக் கவனித்த பின்னர், சிறிது தாழ்ந்த குரலில், "பல்லவ குமாரா! சிவகாமியம்மை தங்களுக்கும் ஒரு செய்தி சொல்லியனுப்பினார். வேலின் மீது ஆணையிட்டுக்கூறிய வாக்குறுதியைத் தங்களுக்கு ஞாபகப் படுத்தச்சொன்னார். சீதாதேவி இலங்கையில் காத்திருந்தது போல் தாங்கள் வாதாபிக்கு வந்து அழைத்துப் போகும் வரையில் காத்திருப்பேன் என்று சொன்னார்." என்றான்.

சற்றுமுன் மாமல்லருக்கு இவ்வுலகம் ஒரு சூனியமான வறண்ட பாலைவனமாகக் காணப்பட்டது. இப்போது அந்தப் பாலைவனத்தில் பசுமையான ஜீவ பூமி ஒன்றும் இருப்ஒபதாகத் தோனறியது.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
முப்பத்தெட்டாம் அத்தியாயம்

வாதாபி மார்க்கம்

புலிகேசியின் படை வாதாபியை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. வாதாபியிலிருந்து கிளம்பிய போது அந்தப் படை எவ்வளவு பெரியதாயிருந்ததோ, அதில் பாதிதான் இப்போது இருந்தது. ஆயினும், இன்னமும் அது பெரும்படைதான். ஏறக்குறைய மூன்று இலட்சம் யுத்த வீரர்கள் அந்தப் படையில் இருந்தார்கள். ஏழாயிரம் போர் யானைகளும் இருந்தன. போகுமிடத்தையெல்லாம் சுடுகாடாகவும் பாலைவனமாகவும் செய்து கொண்டு அப்படை சென்றது. கிராமங்களும் பட்டணங்களும் கொள்ளையடிக்கப்பட்டன. வீடு வாசல்களையும் உடைமைகளையும் காப்பாற்றிக் கொள்ள முயன்ற மக்கள் ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட்டார்கள், அல்லது அங்கஹீனம் செய்யப்பட்டார்கள். வீடுகளும் குடிசைகளும் வைக்கோற் போர்களும் கொளுத்தி விடப்பட்டன. ஏரிக் கரைகள் வெட்டி விடப்பட்டன.

ஒரு பக்கம் பசியினாலும் இன்னொரு பக்கம் பழி வாங்கும் வெறியினாலும் சளுக்கிய வீரர்கள் இம்மாதிரி பயங்கர அட்டூழியங்களைச் செய்தார்கள். தாங்கள் செய்வது போதாதென்று யானைகளையும் அவர்கள் அந்த நாச வேலையில் ஏவி விட்டார்கள். பசியும் வெறியும் கொண்ட போர் யானைகள் தாம் போகும் வழியிலிருந்த பசுஞ்சோலைகளை அழித்தன. பயிர் செய்த வயல்களைத் துவைத்தன. வீட்டுக் கூரையைப் பிடுங்கி வீசின; வைக்கோற் போர்களே இடறி எறிந்தன. இதனாலெல்லாம் சளுக்கர் படை திரும்பிப் போன பாதை வெகு சுலபமாகத் தெரிந்து கொள்ளும்படி இருந்தது. அந்தப் பாதையானது ஒரு பெரிய பயங்கரமான சூறைக் காற்றுப் போன வழியை போலக் காணப்பட்டது. அந்தப் பாதையில் பின்னர் வெகு காலம் அழுகுரலும் புலம்பல் ஒலியும் கேட்டுக் கொண்டிருந்தன. பருந்துகளும் கழுகுகளும் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. நரிகள் பட்டப் பகலிலேயே ஊளையிட்டுக் கொண்டிருந்தன.

வாதாபி நோக்கிச் சென்ற சளுக்கர் படையுடன் கூடச் சிவகாமியும் போய்க் கொண்டிருந்தாள். அவளைப் பல்லக்கிலே வைத்துத் தூக்கிக் கொண்டு போனார்கள். ஆனால் பல்லக்குச் சுமப்பவர்கள் தன்னைத் தூக்கிக் கொண்டு போவதாகவே சிவகாமிக்குத் தோன்றவில்லை. தடுக்க முடியாத ஏதோ ஒரு விதியானது தன்னை எங்கேயோ அழைத்துப் போய்க் கொண்டிருப்பதாகவே அவளுக்குத் தோன்றியது. சளுக்கர்களால் சிறைப் பிடிக்கப்பட்ட உடனே அவள் மனத்தில் தோன்றியிருந்த பீதியும், தன்னுடைய கதி என்ன ஆகப் போகிறதோ என்ற கவலையும் இப்போது மறைந்து விட்டன.

அத்தகைய நிலைமையில் ஓர் அபலைப் பெண்ணிடம் சற்றும் எதிர் பார்க்க முடியாத மனோ தைரியம் அவளுக்கு ஏற்பட்டிருந்தது. மனோதைரியம் மட்டும் அல்ல; தன்னுடைய சக்தியைக் குறித்த ஒரு பெருமித உணர்ச்சியும் உண்டாகியிருந்தது! சிறைப் பிடிக்கப்பட்ட பெண்களை விடுதலை செய்யும்படி புலிகேசியிடம் விண்ணப்பம் செய்து வெற்றி பெற்றதிலிருந்து அந்தப் பெருமித உணர்ச்சி சிவகாமிக்கு உண்டாயிற்று. இதோ ஒரு சக்கரவர்த்தி பல்லவ சாம்ராஜ்யத்தைக் காட்டிலும் எவ்வளவோ பெரிய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி அபலையாகிய தன்னுடைய வேண்டுகோளுக்கு உடனே இணங்கினார்! இது மட்டுமல்ல; இன்னும் தான் என்ன சொன்னாலும் அந்தப்படி அவர் செய்ய ஆயத்தமாயிருந்தார் என்பதை அவருடைய முகபாவத்திலிருந்து சிவகாமி தெரிந்து கொண்டாள்.

அதே சமயத்தில் சிவகாமி இன்னோர் இரகசியத்தையும் கண்டு கொண்டிருந்தாள். (அல்லது கண்டு கொண்டிருந்ததாக எண்ணினாள்) அன்று காஞ்சியில் கூடியிருந்த சபையிலே புலிகேசியின் முகத்தைப் பார்த்த போது ஏதோ ஒரு விளங்காத மர்மம் அதில் இருப்பதாக அவளுக்குத் தோன்றியதல்லவா? அது என்ன என்பது இப்போது அவளுக்குத் தெரிந்து விட்டது. புத்த பிக்ஷு நாகநந்தியின் முகத்துக்கும் புலிகேசியின் முகத்துக்கும் இருந்த ஒற்றுமைதான் அது. ஆஹா! தெரிந்தது மர்மம்! புலிகேசி சக்கரவர்த்தியும் புத்த பிக்ஷுவும் ஒருவரேதான்! மகேந்திர பல்லவர் மாறுவேடம் பூண்டு தேச யாத்திரை செய்வதுண்டு என்பதைச் சிவகாமி அறிந்திருந்தாளாகையால் புலிகேசியும் அப்படி மாறுவேடம் பூணுவது இயற்கையென்று அவளுக்குத் தோன்றியது. புத்த பிக்ஷு தன்னுடைய நாட்டியக் கலையில் காட்டிய ஆர்வமெல்லாம் அவளுக்கு நினைவு வந்தது. ஒருவேளை தனக்காகவே புலிகேசி காஞ்சி மீது படையெடுத்து வந்திருக்கலாம் என்றும் அவள் எண்ணமிட்டாள்.

தன்னிடம் இவ்வளவு சக்தி இருக்கிறது என்பது சிவகாமிக்கே வியப்பையும் பிரமிப்பையும் அளித்தது. கொடுமைக்கும் குரூரத்துக்கும் பெயர் போன வாதாபிப் புலிகேசி தன்னுடைய விருப்பத்தின்படி நடக்கச் சித்தமாயிருக்கிறார்! இந்த நினைவு அடிக்கடி தோன்றிச் சிவகாமியின் பெருமிதத்தை வளர்த்து வந்தது. அன்றியும், தன்னுடைய பாதுகாப்பைப் பற்றி அவளுக்குக் கவலை ஏற்படாமலும் செய்தது. தன்னுடைய விருப்பத்திற்கு விரோதமாக ஒன்றும் நடவாதென்றும், தனக்குத் தீங்கு எதுவும் நேராதென்றும் அவள் தைரியம் கொண்டாள்.

இந்த நாட்களில் சிவகாமி மாமல்லரைப் பற்றி நினைத்தாளா? நல்ல கேள்வி! அவளுடைய எல்லாவித மானஸீக அனுபவங்களுக்கும் அடிப்படையில் மாமல்லரின் நினைவு இருந்து கொண்டுதானிருந்தது. ஆனால் அந்த நினைவு அவ்வப்போது விசித்திர ரூபங்களைக் கொண்டது. அன்பு ஆத்திரமாயிற்று; ஆத்திரம் துயரம் ஆயிற்று; துயரம் துவேஷத்தையும், பழி வாங்கும் எண்ணத்தையும் உண்டாக்கிற்று. பல்லவ சாம்ராஜ்யத்தை ஆளப் பிறந்த மாமல்லரால், பல்லவ நாட்டுப் பெண்களைச் சிறைப் பிடிக்கப்படாமல் காப்பாற்ற முடியவில்லை. இந்த ஏழைச் சிற்பியின் மகளால் அவர்களை விடுதலை செய்ய முடிந்தது! இந்தச் செய்தியைச் சத்ருக்னன் அவரிடம் சொல்லும் போது அவர் என்ன நினைப்பார்? மகிழ்ச்சியடைவாரா? கோபங் கொள்வாரா? அவர் என்ன நினைத்தால் இங்கு யாருக்கு என்ன? கேவலம் சிற்பியின் மகள் என்றுதானே என்னை அவர் அலட்சியம் செய்து விட்டிருந்தார்? அவருடைய தந்தை என்னை அவமானப்படுத்தியதையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருந்தாரல்லவா? உண்மையிலேயே என்னிடம் அன்பு இருந்தால், என்னைக் காட்டிலும் இராஜ்யத்தைப் பெரியதாய் எண்ணியிருப்பாரா? மகேந்திர பல்லவரிடம் தம் எண்ணத்தைத் தைரியமாகச் சொல்லி என்னை மணந்து கொண்டிருக்க மாட்டாரா? அப்படிச் செய்திருந்தால் இந்த விபரீதமெல்லாம் நேர்ந்திருக்குமா?

நல்லது; அவருக்கு ஒரு பாடம் கற்பிக்கிறேன். இதோ ஒரு மகா சக்கரவர்த்தி - பல்லவ இராஜ்யத்தைக் காட்டிலும் மூன்று மடங்கு பெரிய ராஜ்யம் உடையவர் - நான், காலால் இட்ட பணியைத் தலையால் செய்வதற்குக் காத்திருக்கிறார்! மாமல்லர் வந்து இதைப் பார்க்கட்டும்! இப்படிப்பட்ட மகோன்னத பதவியை நான் எவ்வளவு துச்சமாகக் கருதி அவருடன் வருவதற்குச் சித்தமாயிருக்கிறேன் என்பதையும் நேரிலே தெரிந்து கொள்ளட்டும்! ஒருவேளை அவர் வராமலே இருந்து விட்டால்! இந்த எண்ணம் தோன்றியதும் சிவகாமியின் உடம்பிலுள்ள இரத்தமெல்லாம் ஒருகணத்தில் சுண்டிப் போய் அவளுடைய தேகம் ஒரு தோல் கூடாக மாறி விட்டது போன்ற பயங்கர உணர்ச்சி ஏற்பட்டது. அடுத்தகணம் அவள் மீண்டும் தைரியம் பெற்றாள். வராமலிருந்து விடுவாரா? ஒருநாளும் அப்படிச் செய்ய மாட்டார். அவ்வளவு கேவலமான மனுஷர் அல்ல; அவருடைய அன்பும் அவ்வளவு மட்டமானதல்ல. வேலின் மேல் ஆணையிட்டுக் கூறிய வாக்குறுதியை நிறைவேற்று வதற்காக வேனும் அவர் அவசியம் வருவார்.

'ஒருவேளை அவர் வரவில்லையானால்...' என்பதாகச் சிவகாமி மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு சிந்தனை செய்தாள். 'வரவில்லையென்றால், அதற்கு என்ன அர்த்தம்? என்னிடம் அவருக்கு உண்மையில் அன்பு இல்லை. என்னிடம் காதல் கொண்டதாக அவர் சொன்னதெல்லாம் வெறும் நடிப்பு என்றுதான் அர்த்தம். நல்லதாய்ப் போயிற்று! அன்பில்லாதவரைப் பிரிந்து வந்ததற்காக நான் ஏன் வருத்தப்பட வேண்டும்? என் தந்தை எனக்களித்த அற்புதமான நாட்டியக் கலை இருக்கிறது. விஸ்தாரமான வாதாபி இராஜ்யம் இருக்கிறது. அதற்கு அப்பால் ஹர்ஷவர்த்தனருடைய சாம்ராஜ்யமும் இருக்கிறது. அன்பில்லாத ஒரு மனிதரிடம் பிரேமை வைத்து ஏன் உருகி அழிய வேண்டும்?'

இப்படிச் சிவகாமி எண்ணியபோதே, உண்மையில் அவளுடைய உள்ளம் அந்த அன்பில்லாத மனிதரைக் குறித்து உருகிக் கரைந்து கொண்டிருந்தது. சீச்சி! இது என்ன வீண் பிரமை? அவர் மட்டும் வந்து என்னை அழைத்துப் போகாவிட்டால், அப்புறம் இந்த உலக வாழ்க்கையில் என்ன இருக்கிறது? எதற்காக வாழ வேண்டும்? நாட்டியமாவது, கலையாவது, மண்ணாங்கட்டியாவது? வீணாக என்னை நானே ஏமாற்றிக் கொள்வதில் என்ன பிரயோஜனம்? சளுக்கரிடம் சிறைப்பட்டு நான் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பது அவருக்காகத்தான். வழியில் பயங்கர அட்டூழியங்களை யெல்லாம் பார்த்துக் கொண்டு நான் வாதாபிக்குப் போவதும் அவருக்காகத்தான். அவர் வந்து இந்தப் பாதகச் சளுக்கர்களைப் பழிவாங்கி என்னை மீட்டுக் கொண்டு போவார் என்ற நம்பிக்கையினால்தான். அவருடைய அன்புக்காகவே நான் உயிர் வாழ்கிறேன். அவருடைய கௌரவத்தைப் பாதுகாக்கவே நான் வாதாபிக்குப் போகிறேன். அவர் என்னை மறந்து விட்டால்? நல்லது அப்புறம் இந்த உயிரை மாய்த்துக் கொள்ள எத்தனை நேரம் ஆகி விடும்? சிவகாமி நாட்டியமாடும் போது சில பாடல்களுக்கு அபிநயம் பிடிப்பதற்கு மின்னல் மின்னும் நேரத்தில் உணர்ச்சிகளையும் முகபாவங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டியதாயிருக்கும். பார்ப்பவர்கள் அம்மாறுதல்களைத் தொடர்ந்து கவனிப்பது கூட அசாத்தியமாகி விடும். இப்போது சிவகாமியின் உள்ளமானது உண்மையாகவே அத்தகைய மின்னல் வேக உணர்ச்சி மாறுதல்களை அனுபவித்து வந்தது.

பல்லவ நாட்டுப் பெண்களை விடுதலை செய்த பிறகு, வடபெண்ணை நதிக்கரை போய்ச் சேரும் வரையில் புலிகேசிச் சக்கரவர்த்தி அவள் இருந்த பக்கம் வரவேயில்லை. புலிகேசியின் புத்த பிக்ஷு வேஷத்தைப் பற்றிய இரகசியம் தெரிந்து விடப் போகிறதே என்னும் தயக்கத்தினாலேதான் அவர் தன்னிடம் வரவில்லையென்று சிவகாமி கருதினாள். அது தனக்குத் தெரிந்திருப்பதாக இந்தப் பிரயாணத்தின் போது காட்டிக் கொள்ளக் கூடாது என்றும் அவள் தீர்மானித்துக் கொண்டாள். வடபெண்ணை நதிக்கு அக்கரையில், முன்னதாக வந்த வாதாபி சைனியத்தின் பெரும் பகுதி தங்கியிருந்தது. அந்தச் சைனியத்தோடு பின்னால் புலிகேசியோடு வந்த சிறு சைனியம் ஒன்று சேர்ந்த அன்று இரவு, சிவகாமி ஓர் அதிசயமான கனவு கண்டாள். ஆனால் அது கனவா நனவா என்பது அவளுக்கு வெகுநாள் வரையில் சந்தேகமாயிருந்து வந்தது. கனவாயிருந்தாலும் நனவாயிருந்தாலும், அதில் கண்டதும் கேட்டதும் அவளுடைய உள்ளத்தில் புதிய பல சந்தேகங்களையும் கவலைகளையும் கிளப்பி விடுவதற்கு ஏதுவாயிருந்தன.

வாதாபி சைனியம் தண்டு இறங்கியிருந்த இடத்துக்கு சற்றுத் தூரத்தில் சிவகாமியின் பல்லக்கு இறக்கப்பட்டது. பிரதேசம் இயற்கை அழகு பொருந்தியதாயும் நிசப்தமாயும் இருந்தது. பூரண சந்திரன் வானத்திலும் பூமியிலும் பால் நிலவைப் பொழிந்து கொண்டிருந்தான். இனிய இளங்காற்று வீசிக் கொண்டிருந்தது. நீண்ட பிரயாணத்தினால் பெரிதும் களைப்புற்றிருந்த சிவகாமி ஒரு மரத்தினடியில் படுத்துக் கொண்டாள். அவளுடைய கண்கள் தாமே மூடிக் கொண்டன. சிறிது நேரத்துக்கெல்லாம் நித்திரா தேவியின் வயப்பட்டு அயர்ந்த தூக்கத்தில் ஆழ்ந்தாள். ஏதோ பேச்சுக் குரல் கேட்டு உறக்கம் சிறிது கலைந்தது. ஆனால் கண்ணிமைகள் திறக்க மறுத்தன. எனினும், யார் பேசுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆவலும் அதிகமாயிருந்தது. பெரிதும் முயன்று கண்ணிமைகளைச் சிறிது திறந்தாள். எதிரே நிலவு வௌிச்சத்தில் அவள் சற்றும் எதிர்பாராத அதிசயமான காட்சி ஒன்று தென்பட்டது.

புலிகேசிச் சக்கரவர்த்தியும் புத்த பிக்ஷுவும் அருகருகே நின்று கொண்டிருந்தார்கள். ஒரே உயரம்; ஒரே உருவம்; முகத்தின் தோற்றம், மூக்கின் அமைப்பு, கண், புருவம் எல்லாம் ஒன்றே. உடைகளில் மட்டுந்தான் வித்தியாசம். ஒருவர் சக்கரவர்த்திக்குரிய கிரீடம் முதலியவை தரித்திருந்தார். இன்னொருவர் மொட்டைத் தலையுடனும் காவி வஸ்திரத்துடனும் விளங்கினார். இதைப் பார்த்த சிவகாமி தன் மனத்திற்குள், 'ஆ! இதென்ன! புலிகேசியும் புத்த பிக்ஷுவும் ஒருவர்தானே? இங்கே தனித்தனியாய் நிற்கிறார்களே? ஆகையால், இது உண்மையான காட்சியல்ல, நாம் கனவு காண்கிறோம். கனவிலேதான் இந்த மாதிரி பிரமை நமக்கு ஏற்பட்டிருக்கிறது!' என்று எண்ணமிட்டாள். மறுபடியும் கண்ணிமைகள் மூடிக் கொண்டன.

கண்கள் மூடிக் கொண்டபோதிலும் செவிகள் திறந்திருந்தன. பின்வரும் சம்பாஷணை அவளுடைய காதில் விழுந்தது: "அண்ணா! நீ சொன்னது இந்தப் பெண்தானே?" "இவள்தான்!" "இவள்தான் சிவகாமியா?" "ஆம், இவள்தான் சிவகாமி!" "எனக்கு நீ எழுதிய ஓலையில் காஞ்சி சுந்தரியை நீ எடுத்துக் கொள்; சிவகாமியை எனக்குக் கொடுத்து விடு' என்று எழுதியிருந்தாயே; அது இந்தப் பெண்ணைப் பற்றித்தானே?" "ஆமாம், தம்பி, ஆமாம்!" "அப்படி, இவளிடம் நீ என்ன அழகைக் கண்டாயோ, அதுதான் எனக்குத் தெரியவில்லை. இவளை விட எத்தனையோ சுந்தரமான பெண்களை நம் வாதாபியிலே நான் பார்த்திருக்கிறேன்." "இவள் நாட்டியமாடும்போது பார்க்க வேண்டும்; அப்போது வேறு விதமாகச் சொல்லுவாய்!" "அதையும் மகேந்திர பல்லவனுடைய சபையில் பார்த்தேனே! அப்படியொன்றும் அதிசயமாக எனக்குத் தெரியவில்லை." "உனக்குத் தெரிந்திராது; கலை கண்களோடு பார்ப்பவர்களுக்குத் தெரியும். அஜந்தா சித்திரங்களைப் பார்த்து, 'இது என்ன அதிசயம்?' என்று சொன்னவனல்லவா நீ?" "போகட்டும்; நமது வம்சத்துக்கு நீ ஒருவன், கலைக் கண் உடையவன் இருக்கிறாயே, அதுவே போதும். இந்தத் தென்னாட்டுப் படையெடுப்பில் நமக்கு எல்லாம் அபஜயமாய் முடிந்தது. ஏதோ உன்னுடைய மன விருப்பமாவது நிறைவேறியதே, அந்த வரையில் எனக்கும் திருப்திதான்."

"தம்பி! இவளை நீ சர்வ ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் திரும்பி வரும் வரையில் இவளுக்கு ஒரு குறைவும் வைக்கக் கூடாது." "இதென்ன இப்படிக் கவலைப்படுகிறாய், அண்ணா?" "நான் இவளுக்காகக் கவலைப்படவில்லை. இவளிடமிருக்கும் கலைக்காகத் தான் கவலைப்படுகிறேன். அந்தத் தெய்வக் கலைக்கு யாதொரு குறைவும் வரக்கூடாதே என்று கவலைப்படுகிறேன்." "நல்ல கலை! நல்ல கவலை! என்னைக் கேட்டால், என்ன சொல்வேன் தெரியுமா? மகேந்திர பல்லவனிடம் சொன்னதைத்தான் உனக்கும் சொல்வேன்!" "மகேந்திர பல்லவனிடம் என்ன சொன்னாய், தம்பி!"

"இந்த அற்பர்களுக்கு இவ்வளவு மரியாதை என்ன! எங்கள் நாட்டிலேயென்றால் சாட்டையால் அடித்து நடனம் ஆடச் சொல்வோம் என்று கூறினேன்." "பார்த்தாயா? உன்னை நம்பி இவளை எப்படி ஒப்புவித்து விட்டுப் போவது? நான் வேங்கிபுரத்துக்குப் போகவில்லை." "இல்லை அண்ணா, இல்லை! ஏதோ விளையாட்டுக்காகச் சொன்னதை உண்மையாக எடுத்துக் கொள்ளாதே! உன் விருப்பத்துக்கு மாறாக நான் எந்தக் காரியத்திலாவது நடந்து கொண்டிருக்கிறேனா? இவளுடைய மனங்கோணாமல் எல்லா ஏற்பாடுகளும் செய்து வைக்கிறேன். நீ கவலையின்றிப் போய் விட்டு வா!" இத்துடன் சம்பாஷணை முடிந்ததாகத் தோன்றியது. சிவகாமி மறுபடி நினைவற்ற உலகத்தில் ஆழ்ந்தாள்.

மறுநாள் பொழுது விடிந்து சிவகாமி கண் விழித்து எழுந்த போது மேலே கூறிய கனவுக் காட்சியும் சம்பாஷணையும் சிறிது சிறிதாக ஞாபகம் வந்தன. அவையெல்லாம் கனவுதானா, ஒருவேளை உண்மையான நிகழ்ச்சிகளா என்ற சந்தேகமும் அவள் மனத்தில் எழுந்து குழம்பியது. வெகு நேரம் சிந்தித்துக் கனவாகத்தானிருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்தாள். அப்படி ஒரேவித உருவமுள்ள இரண்டு பேர் இருக்க முடியாது. இருந்தாலும் ஒருவர் பிக்ஷுவாகவும் ஒருவர் சக்கரவர்த்தியாகவும் இருக்க முடியாது. அவர்கள் தன்னெதிரே வந்து நின்று அவ்விதமெல்லாம் பேசுவது ஒருநாளும் நடந்திருக்க முடியாத காரியம். தன்னுடைய பிரமை கொண்ட மனத்தில் கற்பனையிலேதான் இவையெல்லாம் நிகழ்ந்திருக்க வேண்டும். மூர்க்கப் புலிகேசியிடம் ஒரு பக்கத்தில் கலைப்பற்றும் இருக்கும் அதிசயத்தைக் குறித்துத் தான் அடிக்கடி எண்ணமிட்டதுண்டல்லவா? அது காரணமாகவே ஒரே மாதிரி இரண்டு உருவங்கள் தன்னுடைய கனவிலே தோன்றி அத்தகைய சம்பாஷணையை நடத்தியிருக்க வேண்டும். புலிகேசியும் புத்த பிக்ஷுவும் உண்மையில் ஒருவர்தான் - இவ்விதம் சிவகாமி தீர்மானம் செய்து கொண்டபோதிலும் மேற்படி கனவு கண்டதன் காரணமாக அவளுடைய உள்ளம் பெரிதும் கலக்கமும் கவலையும் அடைந்திருந்தது.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
முப்பத்தொன்பதாம் அத்தியாயம்

சகோதரர்கள்

புலிகேசியும் புத்த பிக்ஷுவும் ஒரே மனிதர்கள்தான் என்று சிவகாமி எண்ணிக் கொண்டதில் வியப்பு ஒன்றுமில்லை. சற்று முன்னால், புலிகேசிச் சக்கரவர்த்தியே மேற்படி உருவ ஒற்றுமை காரணமாகத் திகைக்கும்படி நேர்ந்தது. வாதாபிச் சக்கரவர்த்தி தம்முடைய கூடாரத்தில் தன்னந் தனியாக உட்கார்ந்திருந்தார். அவருடைய மனத்தில் பெரும் சோர்வு குடிகொண்டிருந்தது. வாதாபியிலிருந்து அவர் புறப்பட்டபோது என்னென்ன உத்தேசங்களுடன் கிளம்பினாரோ அவை ஒன்றும் நிறைவேறவில்லை. எல்லாம் மகேந்திர ஜால பல்லவனுடைய தந்திரங்களினால் உருப்படாமற் போயின.

மகேந்திர பல்லவனுடைய தந்திரங்களுக்கு மாற்றுத் தந்திரங்கள் செய்து அவனைத் தோற்கடிக்கக்கூடிய சாமர்த்தியம் வாய்ந்தவரான நாகநந்தி பிக்ஷுவைப் பற்றித் தகவலே கிடைக்கவில்லை. இதனாலெல்லாம் புலிகேசி பெரிதும் உற்சாகம் குன்றியிருந்தார். அவருக்கிருந்த ஒரே ஓர் ஆறுதல் தளபதி சசாங்கன் மூலம் மகேந்திர பல்லவனுக்கு ஒரு பாடம் கற்பிக்க ஏற்பாடு செய்து விட்டு வந்ததுதான். ஆ! பல்லவ நரி தன்னுடைய பொந்தை விட்டு வௌியே வந்து பார்க்கும்போது, வாதாபிப் புலிகேசியை வஞ்சித்து ஏமாற்றுவது எவ்வளவு பிசகான காரியம் என்பதைக் கொஞ்சம் தெரிந்து கொள்வானல்லவா?

தளபதி சசாங்கன் தம்முடன் வந்து சேர்வதற்காகவே சக்கரவர்த்தி வடபெண்ணையின் வடகரையில் காத்துக் கொண்டிருந்தார். கட்டளையை நிறைவேற்றிவிட்டு வந்து சேரச் சசாங்கனுக்கு ஏன் இத்தனை நாள் பிடிக்கிறது என்று அவருக்குக் கோபம் வந்து கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் தெற்கேயிருந்து படை வருகிறது என்று கேட்டதும் சசாங்கன்தான் வருகிறான் என்று எண்ணி, அவன் கொண்டு வரும் செய்தியைக் கேட்பதற்காக மிக்க ஆவலுடன் இருந்தார். கூடாரத்துக்கு வௌியே குதிரை ஒன்று வந்து நின்றதும், சசாங்கன் இவ்வளவு தாமதமாய் வருவதற்காக அவன் மேல் எரிந்து விழுவதற்கு ஆயத்தமானார். ஆனால், உள்ளே பிரவேசித்து வந்தது சசாங்கன் அல்ல. கிரீடமும், வாகுவலயமும், சக்கரவர்த்திக்குரிய மற்ற ஆபரணங்களும் தரித்த நெடிதுயர்ந்த கம்பீர உருவம் ஒன்று வந்தது. அதைப் பார்த்ததும் புலிகேசிக்கு ஏற்பட்ட திகைப்புக்கும் குழப்பத்துக்கும் எல்லையேயில்லை. 'இது என்ன? எனக்குச் சித்தப் பிரமை பிடித்துவிட்டதா? அல்லது மாயக் கனவு காண்கிறேனா? பின், ஆசனத்தில் இதோ சாய்ந்து உட்கார்ந்திருக்கும் நானே கூடாரத்துக்கு வௌியிலிருந்து எப்படி உள்ளே வர முடியும்?' என்று திகைத்தார்.

புலிகேசியின் குழப்பத்தைப் பார்த்து விட்டு வௌியிலிருந்து வந்த உருவம் புன்னகை புரிந்து, "தம்பி! ஏன் இப்படிப் பயப்படுகிறாய்? நான் என்ன பேயா, பிசாசா, பூதமா? உனக்கு என்னைத் தெரியவில்லையா?" என்று சொல்லிக் கொண்டே தலைக் கிரீடத்தை எடுத்ததும், பிக்ஷுவின் மொட்டைத் தலை காணப்பட்டது. உடனே புலிகேசி குதூகலத்துடன் துள்ளி எழுந்து, "அண்ணா நீயா?" என்று கட்டிக் கொள்ளப் போனவர், மறுபடியும் திகைத்து நின்று, "ஆஹா! இது என்ன வேஷம்? உன்னுடைய வாக்குறுதி...?" என்று வினவினார். அப்போது புலிகேசியின் கண்களின் ஓரங்களில் பொறாமையுடன் கூடிய குரோத ரேகை தென்பட்டது.

"தம்பி! அதற்குள்ளே அவசரமா? ஒரு சந்தர்ப்பத்தில் இந்த வேஷம் உன்னுடைய உயிரைக் காப்பாற்றுவதற்குப் பயன் பட்டதல்லவா? இப்போது என்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இது பயன்பட்டது. என் வாக்குறுதிக்கு ஒரு பங்கமும் நேரவில்லை. உன்னுடைய ராஜ்யத்தில் நான் இந்த வேஷம் போட்டுக் கொள்வதில்லையென்றுதானே வாக்குறுதி கொடுத்தேன்? இன்னும் உன்னுடைய சாம்ராஜ்யத்துக்குள் நாம் வந்துவிடவில்லையே?" என்று நாகநந்தி சொன்னதும் புலிகேசி கொதிப்புடன் கூறினார்: "ஆம்; ஆனால் இந்தப் பிரதேசம் இன்று நம்முடைய சாம்ராஜ்யத்துக்குள் வராதிருப்பது ஏன்? பல்லவ நாட்டில் இன்று வராகக் கொடி பறக்காதது ஏன்? அற்பத்திலும் அற்பமான மகேந்திர பல்லவனுடைய சைனியத்துக்கு முன்னால் வாதாபியின் மகா சைனியம் தோல்வியடைந்து திரும்பிப் போவது ஏன்? எல்லாம் உன்னால் வந்ததுதான்!"

"தம்பி! தோல்வி என்கிற வார்த்தையையே சொல்லாதே! யார் தோல்வியடைந்தது? வாதாபி சைனியம் தோல்வியடையவில்லை, நீயும் தோல்வியடையவில்லை. அந்தத் தோல்வி என்னால் நேரவும் இல்லை. எல்லாம் சாவகாசமாகப் பேசுவோம். முதலில் உடனே காவி வஸ்திரம் இரண்டு தருவித்துக் கொடு. நான் இந்த வேஷத்தில் இருந்தால் வீண் குழப்பத்துக்கு இடமாகும். ஏற்கெனவே, நான் வந்து கொண்டிருந்தபோது வௌியில் நிற்கும் வீரர்கள் என்னை வெறித்து வெறித்துப் பார்த்தார்கள்!" "ஆமாம்; அவர்கள் வெறித்துப் பார்ப்பதற்குக் காரணம் இருக்கிறதல்லவா? கூடாரத்திற்குள் இருந்த சக்கரவர்த்தி வௌியில் எப்போது, எப்படிப் போனார் என்று அவர்களுக்குத் திகைப்பாயிருந்திராதா? எனக்கே கொஞ்ச நேரம் குழப்பமாய்ப் போய்விட்டதே!" என்று புலிகேசி கூறிவிட்டு கூடாரத்தின் வாசலில் நின்ற காவலனிடம், "உடனே ஒற்றர் விடுதிக்குச் சென்று காவி வஸ்திரம் இரண்டு கொண்டு வா!" என்று கட்டளையிட்டார்.

காவி வஸ்திரம் வந்தவுடனே நாகநந்தி உடையை மாற்றிக் கொண்டார். சகோதரர்கள் இருவரும் ஒரே ஆசனத்தில் அருகருகே உட்கார்ந்தார்கள். "தம்பி! இப்போது சொல்லு! நீ வாதாபியை விட்டுப் புறப்பட்டதிலிருந்து நடந்ததையெல்லாம் விவரமாகச் சொல்லு!" என்று நாகநந்தி கேட்க, அவ்விதமே புலிகேசி கூறிவந்தார். எல்லாவற்றையும் கவனமாகக் கேட்ட பிறகு, பிக்ஷு கூறினார்; "ஆகா! மகேந்திர பல்லவன் நான் நினைத்ததைக் காட்டிலும் கெட்டிக்காரன். நெடுகிலும் நம்மை ஏமாற்றி வந்திருக்கிறான்!" "அண்ணா! இராஜ்ய தந்திரத்தில் உன்னை வெல்லக் கூடியவன் இந்த உலகில் எவனுமே இல்லையென்று நினைத்திருந்தேன்." "ஆரம்பத்தில் நான் ஒரே ஒரு தவறு செய்தேன். அதன் பலன் நெடுகிலும் விபரீதமாகவே போய்விட்டது!" "அடிகளே! அது என்ன தவறு?" "பரஞ்சோதி என்னும் பிள்ளையின் முகத்தைப் பார்த்து என் மனம் சிறிது இளகிற்று." "அந்தத் திருட்டுப் பயலை நம்பி ஓலை கொடுத்து அனுப்பினாய்!" "அதற்குக் காரணமானவன் நீதான், தம்பி!" "நானா? அது எப்படி?"

"பாண்டிய நாட்டுக்குப் போய் அங்கே வேண்டிய ஏற்பாடுகள் செய்துவிட்டுக் காஞ்சிக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தேன். வழியில் ஏரிக் கரையில் ஒரு பிள்ளை சோர்ந்து படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். உன்னை நான் முதன்முதலில் அதே நிலையில் பார்த்தது ஞாபகம் வந்தது. அதனால் என் மனம் இளகி அந்தப் பிள்ளையின் பேரிலும் விசுவாசம் உண்டாயிற்று. அவனுடைய முகக் களையிலிருந்து பெரிய பதவிக்கு வரப்போகிறவன் என்று தெரிந்து கொண்டேன். ஆகையால், அவனை நம்மோடு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற சபலமும் உண்டாயிற்று. அவனிடம் உனக்கு ஓலை கொடுத்து அனுப்பினேன். அந்த ஓலை உன்னிடம் சேர்ந்து நீ நேரே வந்திருந்தாயானால், காஞ்சிக் கோட்டையை மூன்றே நாளில் கைப்பற்றியிருக்கலாம். மகேந்திர பல்லவன் உன்னுடைய காலடியில் விழுந்து கிடப்பான்." "ஆனால் உன்னுடைய ஓலைக்கு மாறாக மகேந்திர பல்லவன் எழுதி வைத்த ஓலை என்னிடம் கிடைத்தது. அதன் பயனாக வடபெண்ணைக் கரையில் எட்டு மாதம் வீணாக்க நேர்ந்தது. மகேந்திர பல்லவன் ஒரு சிறு குதிரைப் படையை வைத்துக் கொண்டு, யுத்தம் செய்யாமல் வெறும் பாய்ச்சல் காட்டியே ஏமாற்றிக் கொண்டிருந்தான். அதற்குப் பிறகு நான் காஞ்சிக்கு வந்து கோட்டையை முற்றுகையிட்டும் பயன்படவில்லை. அண்ணா! நான் வாதாபிச் சிம்மாசனத்தில் ஏறிய பிறகு முதன்முதலாக அடைந்த தோல்வி இது தான்..."

"அப்பனே! அந்த வார்த்தையை மட்டும் சொல்லாதே! தோல்வி எது? யார் தோல்வி அடைந்தது? இராஜரீக சாஸ்திரத்தில் முதலாவது பாடம் என்னவென்பதை இன்னமும் நீ தெரிந்து கொள்ளவில்லையா? தோல்வியடைந்து விட்டதாக ஒரு நாளும் ஒப்புக்கொள்ளக் கூடாதென்பதுதான் அந்தப் பாடம். நீயே தோல்வியடைந்ததாகச் சொல்லிக் கொண்டால் ஊரார் அப்படிச் சொல்வார்கள்; உன் விரோதிகளும் அவ்விதமே சொல்வார்கள்; தேசமெங்கும் 'புலிகேசிச் சக்கரவர்த்தி தோல்வியடைந்தார்!' என்று செய்தி பரவும். ஹர்ஷவர்த்தனன் காதிலும் அது எட்டும். மகேந்திர பல்லவன் பொய்யாக எழுதியபடி ஒருவேளை உண்மையில் நடந்தாலும் நடக்கலாம். நர்மதையைக் கடந்து ஹர்ஷனுடைய சைனியம் உன் இராஜ்யத்திற்குள் பிரவேசிக்கலாம். தோல்வி என்ற வார்த்தையை இனிமேல் சொல்லாதே, தம்பி!"

"நான் சொல்லாமலிருந்து விட்டால், தோல்வி வெற்றியாகி விடுமா, அண்ணா?" "மறுபடியும் தோல்வியைக் கட்டிக் கொண்டு ஏன் அழுகிறாய்? என்ன தோல்வியை நீ அடைந்தாய்? யோசித்துப் பார்! கடல் போன்ற சைனியத்துடன் திக்விஜயம் செய்யத் தென்னாட்டை நோக்கிப் புறப்பட்டாய், வைஜயந்தியை அழித்தாய். வடபெண்ணைக் கரையில் பல்லவ சைனியத்தை நிர்மூலம் செய்தாய், காஞ்சிக் கோட்டையை முற்றுகையிட்டாய், தெற்கே கொள்ளிடக் கரை வரையில் சென்றாய். பல்லவன் சிறைப்படுத்தியிருந்த துர்விநீதனை விடுதலை செய்தாய். காவேரிக் கரையில் தமிழகத்தின் மூவேந்தர்கள் - சேர, சோழ, பாண்டியர்கள் - வந்து உன் அடிபணிந்து காணிக்கை செலுத்தினார்கள்." "அண்ணா! சோழன் வரவில்லையே?"

"சோழன் வராவிட்டால் களப்பாளன் வந்தான். இதையெல்லாம் யார் விசாரிக்கப் போகிறார்கள், தம்பி? நீ திரும்பிக் காஞ்சிக் கோட்டைக்கு வந்தபோது, மகேந்திர பல்லவனும் உன்னைச் சரணாகதி அடைந்தான். மகாபலியின் தலையில் மகாவிஷ்ணு பாதத்தை வைத்ததுபோல், நீயும் மகேந்திர பல்லவனுடைய சிரசில் உன் பாதத்தை வைத்து, 'பிழைத்துப் போ' என்று உயிர்ப் பிச்சை கொடுத்தாய். அவன் கொடுத்த காணிக்கைகளைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டாய்..." "காணிக்கை ஒன்றும் நான் கொண்டு வரவில்லையே, அண்ணா!" "நீ கொண்டு வராவிட்டால், நான் கொண்டு வந்திருக்கிறேன்." "என்ன அது?" "இன்று இரவு காட்டுகிறேன், மேற்படி விவரம் எல்லாம் உத்தர பாரத தேசத்திலே பரவும்போது, நீ திக்கு விஜயம் செய்து வெற்றி முழக்கத்துடன் திரும்பினாய் என்று சொல்வார்களா? 'தோல்வி' யுற்று ஓடி வந்தாய் என்பார்களா?"

"அண்ணா! உன் சாமர்த்தியமே சாமர்த்தியம்! தோல்வியைக் கூட நீ வெற்றியாக மாற்றக் கூடியவன். உன் பேச்சைக் கேட்ட பிறகு எனக்கே நான் அடைந்தது வெற்றி என்றே தோன்றுகிறது. ஆனால், இந்த வெற்றிச் செய்தி வடநாட்டிலே எப்படிப் பரவும்?" "ஆ! புத்த பிக்ஷுக்களின் சங்கங்களும் சமணர்களின் மடங்களும் பின் எதற்காக இருக்கின்றன? நாகார்ஜுன பர்வதத்துக்கு உடனே ஆள் அனுப்பவேண்டும்." "அண்ணா! நீயே போவது நல்லது; உனக்கு வேங்கியிலும் வேலை இருக்கிறது." "என்ன வேலை?" "விஷ்ணுவர்த்தனன் காயம்பட்டுக் கிடக்கிறான். சென்ற வருஷம் அவன் வெற்றி கொண்ட வேங்கி இராஜ்யத்தில் இப்போது எங்கே பார்த்தாலும் கலகமாம்." "அதற்கு நான் போய் என்ன செய்யட்டும்?" "நீ போய்த்தான் அவனுக்கு யோசனை சொல்லி உதவ வேண்டும். உன்னால் முடியாத காரியம் ஒன்றுமில்லை அண்ணா! தோல்வியையும் நீ வெற்றியாக்கி விடுவாய்." "என்னால் இப்போது வேங்கிக்குப் போக முடியாது." "ஏன்?" "காரணம் இருக்கிறது." "அதைச் சொல்லேன்." "இராத்திரி சொல்கிறேன்; தம்பி! சூரியன் அஸ்தமித்து நாற்புறமும் இருள் சூழ்ந்துவிட்டது. பூரண சந்திரன் உதயமாகப் போகிறது. இந்தக் கூடாரத்திற்குள்ளேயே அடைந்து கிடப்பானேன்? வா வௌியே போகலாம்!"

"ஆமாம், ஆமாம்! பிரகிருதியின் சௌந்தரியங்கள் அநியாயமாய் வீணாய்ப் போகின்றன!" என்று பரிகாசக் குரலில் சொல்லிக் கொண்டு புலிகேசிச் சக்கரவர்த்தி எழுந்தார். "உனக்கு எவ்வளவோ பாக்கியங்கள் இருந்தாலும் என்ன பயன்? சௌந்தரியத்தை அநுபவிக்கும் பாக்கியம் மட்டும் இல்லை" என்று சொல்லிக் கொண்டு நாகநந்தி எழுந்தார். சகோதரர்கள் இருவரும் ஒத்த வயதுடைய ஆத்ம சிநேகிதர்களைப் போலக் கைகோத்துக் கொண்டு வௌியே சென்றார்கள்.



நாற்பதாம் அத்தியாயம்

அஜந்தா அடிவாரம்

'சூரியன் மறைந்தால் என்ன? அதோடு உலகம் அஸ்தமித்துப் போய்விடுமா? இதோ நான் ஒருவன் இருக்கிறேனே' என்று பறையறைந்து கொண்டு கீழ்த்திசையில் பூரண சந்திரன் உதயமானான். நெடிதுயர்ந்த இரண்டு பனை மரங்களுக்கு நடுவே தங்க ஒளி பெற்றுத் திகழ்ந்த சந்திர பிம்பமானது, மரச் சட்டமிட்ட பலகணியின் வழியாக எட்டிப் பார்க்கும் நவயௌவன நாரீமணியின் பொன் முகத்தையொத்த இன்ப வடிவமாய் விளங்கியது. புத்த பிக்ஷுவுக்கு அந்த முகம் சிவகாமியின் முகமாகவே காட்சியளித்தது.

நாகநந்தியும் புலிகேசியும் கூடாரத்துக்கு வௌியே வந்து ஒரு மொட்டைப் பாறையின் மீது உட்கார்ந்தார்கள். "அண்ணா! என்ன யோசிக்கிறாய்?" என்று புலிகேசி கேட்டார். "தம்பி! இன்றைக்கு நான் கூடாரத்துக்குள்ளே வந்தபோது உன்னைப்போல் உடை தரித்துக் கொண்டு வந்தேனல்லவா? இதே மாதிரி முன்னொரு தடவை உன்னைப் போல் வேஷம் தரித்துக் கொண்டேனே, உனக்கு ஞாபகம் இருக்கிறதா?" "அதை எப்படி மறக்க முடியும், அண்ணா? ஒருநாளும் முடியாது." "இல்லை, இருபத்தைந்து வருஷம் ஆகிவிட்டதே; ஒருவேளை மறந்து விட்டாயோ என்று நினைத்தேன்." "இருபத்தைந்து வருஷம் ஆனால் என்ன? இருபத்தைந்து யுகம் ஆனால் என்ன? இந்தப் பிறவியில் மட்டுமல்ல, எத்தனை பிறவி எடுத்தாலும் மறக்க முடியாது, அண்ணா!"

"முதன் முதலில் நாம் சந்தித்தது நினைவிருக்கிறதா, தம்பி!" "ஏன் நினைவில்லை? சித்தப்பன் மங்களேசனுடைய கடுஞ்சிறையிலிருந்து தப்பி ஓடிவந்தேன். அந்தப் பாதகனுடைய வீரர்களுக்குத் தப்பி ஒளிந்து, காட்டிலும் மலையிலும் எத்தனையோ நாள் திரிந்தேன். ஓடி ஓடி கால்கள் அலுத்துவிட்டன, உடம்பும் சலித்துவிட்டது. பசியும் தாகமும் எவ்வளவு கொடுமையானவை என்பதை உணர்ந்தேன். கடைசியில் ஒருநாள் களைப்படைந்து மூர்ச்சையாகிவிட்டேன். மூர்ச்சை தௌிந்து எழுந்தபோது என்னை நீ மடியில் போட்டுக் கொண்டு, என் வாயில் ஏதோ பச்சிலைச் சாற்றைப் பிழிந்து கொண்டிருந்தாய். நீ மட்டும் அச்சமயம் தெய்வாதீனமாய் அங்கு வந்திராவிட்டால் என் கதி என்ன ஆகியிருக்கும்? அண்ணா! அவ்வளவு சிரமம் எடுத்து என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று உனக்கு எதனால் தோன்றிற்று?"

"எனக்கு வினாத் தெரிந்த நாள் முதல் நான் அஜந்தா மலைக் குகையில் புத்த பிக்ஷுக்களுடன் வாழ்ந்து கொண்டு வந்தேன். சித்திரக் கலை, சிற்பக் கலை முதலியவை தெரிந்து கொண்டிருந்தேன். ஆயினும் அடிக்கடி என் மனம் அமைதியிழந்து தவித்தது. வௌி உலகத்துக்குப் போக வேண்டுமென்றும் என்னையொத்த வாலிபர்களுடன் பழக வேண்டுமென்றும் ஆசை உண்டாகும். சில சமயம் பெரிய பிக்ஷுக்களுக்குத் தெரியாமல் நதி வழியைப் பிடித்துக் கொண்டு மலைக்கு வௌியே வருவேன். ஆனால், அங்கும் ஒரே காடாக இருக்குமே தவிர மனிதர்கள் யாரையும் பார்க்க முடியாது. இப்படி நான் ஏக்கம் பிடித்திருக்கையிலேதான் ஒரு நாள் அஜந்தாவின் அடிவாரத்தில் உள்ள காட்டிலே நீ நினைவிழந்து படுத்துக் கிடப்பதைக் கண்டேன். அந்த நிமிஷத்தில் இருபது வருஷமாக என் உள்ளத்தில் பொங்கிக் கொண்டிருந்த அவ்வளவு ஆசையையும் உன் பேரில் செலுத்தினேன். அந்த வயதில் நாடு நகரங்களில் உள்ள வாலிபர்கள் தங்களுடைய இளங் காதலிகளிடம் எத்தகைய அன்பு வைப்பார்களோ, அத்தகைய அன்பை உன்னிடம் கொண்டேன். பச்சிலையைச் சாறு பிழிந்து உன் வாயிலே விட்டு மூர்ச்சை தௌிவித்தேன்."

"அண்ணா! உன்னை முதன் முதலில் பார்த்ததும் எனக்கும் அம்மாதிரியே உன் பேரில் அபிமானம் உண்டாயிற்று. தம்பி விஷ்ணுவர்த்தனரின் பேரில் எனக்கு எவ்வளவோ ஆசைதான். ஆனாலும், அதைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு அதிகமான பாசம் உன்பேரில் ஏற்பட்டது..." "உன்னைக் கண்டு பிடித்த அன்றைக்கு நான் அஜந்தா குகைக்குத் திரும்பிப் போகவில்லை. அடுத்த இரண்டு மூன்று நாளும் போகவில்லை. புது மணம் புரிந்த காதலர்கள் இணைபிரியாமல் நந்தவனத்தில் உலாவுவதுபோல் நாம் இருவரும் கைகோத்துக் கொண்டு காட்டிலே திரிந்தோம். நீ உன்னுடைய வரலாற்றையெல்லாம் எனக்கு விவரமாகச் சொன்னாய். நாம் இருவரும் அப்போதே மங்களேசனைத் துரத்தியடித்து வாதாபி இராஜ்யத்தைத் திரும்பக் கைப்பற்றும் மார்க்கங்களைப்பற்றி ஆலோசிக்கலானோம்."

"இதற்குள் மங்களேசனுடைய ஆட்கள் என்னைத் தேடிக் கொண்டு அங்கே வந்து விட்டார்கள்." "தூரத்தில் ஆட்கள் வரும் சத்தம் கேட்டதும் நீ பயந்தாய். 'அண்ணா! என்னைக் கைவிடாதே!' என்று கட்டிக் கொண்டாய். ஒரு நிமிஷம் நான் யோசனை செய்து ஒரு முடிவுக்கு வந்தேன். 'தம்பி! நான் சொல்கிறபடி செய்வாயா?' என்று கேட்டு உன்னிடம் வாக்குறுதியொன்று வாங்கிக் கொண்டேன். பிறகு உன்னுடைய உடைகளை எடுத்து நான் தரித்துக் கொண்டேன். என்னுடைய ஆடையை நீ உடுத்திக் கொண்டாய். அதே சமயத்தில் அஜந்தா மலைக் குகைக்குள் புத்த சங்கிராமத்துக்குப் போகும் வழியை உனக்கு நான் சொன்னேன். அங்கே நடந்து கொள்ள வேண்டிய விதத்தையும் சொன்னேன். சற்றுத் தூரத்தில் இருந்த அடர்ந்த கிளைகள் உள்ள மரத்தின் மேல் ஏறி ஒளிந்து கொள்ளச் சொன்னேன்."

"மரத்தின் மேல் ஏறி நான் ஒளிந்து கொண்டதுதான் தாமதம், மங்களேசனுடைய ஆட்கள் யமகிங்கரர்களைப் போல் வந்து விட்டார்கள். அவர்களுடைய தலைவன் உன்னைச் சுட்டிக்காட்டி, 'பிடித்துக் கட்டுங்கள் இவனை!" என்று கட்டளையிட்டான். என் நெஞ்சு துடியாகத் துடித்தது. 'எப்பேர்ப்பட்ட அபாயத்திலிருந்து தப்பினோம்' என்று எண்ணினேன். உன்னிடம் அளவற்ற நன்றி உணர்ச்சி உண்டாயிற்று." "தம்பி! நம்முடைய உருவ ஒற்றுமையை நான் அதற்கு முன்னமே தெரிந்து கொண்டிருந்தேன். நதியிலும் சுனையிலும் நாம் குளித்துக் கரையேறும் போது, தண்ணீரில் தெரிந்த நமது பிரதிபிம்பங்களைப் பார்த்து அறிந்து கொண்டிருந்தேன். அப்படித் தெரிந்து கொண்டிருந்தது அச்சமயம் உன்னைக் காப்பாற்றுவதற்கு ஏதுவாயிற்று." "அண்ணா! அந்தச் சம்பவமெல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டாயே! முன்பின் அறிந்திராத எனக்காக நீ உன் உயிரைக் கொடுக்கத் துணிந்ததை என்னால் எப்படி மறக்க முடியும்?" என்று குரல் தழுதழுக்க உருக்கத்துடன் புலிகேசிச் சக்கரவர்த்தி கூறியபோது, அவருடைய கண்களிலே கண்ணீர் துளித்தது. 'ஆ! இதென்ன? நெஞ்சில் ஈரப் பசையற்ற கிராதகப் புலிகேசியின் கண்களிலும் கண்ணீரா? இது உண்மைதானா?' என்று பரிசோதித்துத் தெரிந்து கொள்வதற்காகப் பூரண சந்திரன் தனது வெள்ளிக் கிரணங்கள் இரண்டை ஏவ, அது காரணமாகப் புலிகேசியின் கண்ணில் எழுந்த நீர்த்துளிகள் ஆழ்கடல் தந்த நன்முத்துக்களைப் போல் சுடர்விட்டுப் பிரகாசித்தன.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
நாற்பத்தோராம் அத்தியாயம்

அஜந்தா குகையில்

புலிகேசியின் உணர்ச்சி மிகுதியையோ கண்ணீரையோ, கவனியாதவராய்ப் புத்த பிக்ஷு கீழ்வானத்தில் மிதந்து வந்த பூரண சந்திரனைப் பார்த்துக் கொண்டே மேலும் கூறினார்: "அந்தக் கிராதகர்கள் என்னை நீ என்றே எண்ணிக் கொண்டு பிடித்துப் போனார்கள். வனப் பிரதேசங்களையெல்லாம் தாண்டி அப்பால் கொண்டு போனதும் என்னைக் குதிரை மேல் ஏறச் சொன்னார்கள். நான் குதிரை ஏறத் தெரியாமல் தவித்ததைப் பார்த்ததும் அவர்களுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. நான் பாசாங்கு செய்கிறேனோ என்று அவர்கள் முதலில் எண்ணினார்கள். பிறகு உண்மையாகவே எனக்குக் குதிரை ஏறத் தெரியவில்லை என்று அறிந்ததும் அவர்களுடைய தலைவன் என்னை என்னவெல்லாமோ கேள்விகள் கேட்டான். என்னுடைய விடைகளைக் கேட்டு அவர்கள் திகைத்தார்கள். உன்னுடைய காதுகளில் நீ குண்டலம் போட்டுக் கொண்டிருந்தாய், அதற்காகத் துவாரங்களும் இருந்தன. என் காதுகளில் துவாரமே இல்லையென்பதைப் பார்த்ததும் அவர்களுக்கு நான் நீ இல்லையென்பது நிச்சயமாய்த் தெரிந்து விட்டது. உன்னைப் பிடிக்க முடியாததனால் ஏற்பட்ட கோபத்தையெல்லாம் என்பேரில் காட்டி உபத்திரவப்படுத்தினார்கள். என்னை அடித்த அடியின் தழும்புகள் இதோ இன்னும் இருக்கின்றன!" என்று புத்த பிக்ஷு தம் முதுகைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார்.

"ஐயோ! அண்ணா! அந்தத் தழும்புகளைப் பார்த்து எத்தனையோ நாள் நான் தூக்கமின்றித் தவித்திருக்கிறேன். ஆனால் அதையெல்லாம் எதற்காக இப்போது ஞாபகப்படுத்துகிறாய்?" என்று புலிகேசி அலறினார். "தம்பி! உனக்கு ஞாபகப்படுத்தவில்லை; எனக்கு நானே ஞாபகப்படுத்திக் கொள்கிறேன். அதையெல்லாம் இன்றைக்கு எண்ணிப் பார்த்தால் எனக்கு மனக் கஷ்டம் உண்டாகவில்லை, குதூகலந்தான் உண்டாகிறது. பரோபகாரம் செய்வதில் உள்ள பலன் இதுதான். ஒருவருக்கு ஒத்தாசை செய்வதற்காக நாம் கஷ்டப்பட்டோமானால், கஷ்டம் அதை அனுபவிக்கும் போது மட்டுமே நீடிக்கிறது. சீக்கிரத்தில் அது போய் விடுகிறது. அப்புறம் வாழ்நாள் உள்ளவரை நாம் செய்த உதவியை நினைத்து நினைத்துச் சந்தோஷப்படுகிறோம். ஆனால், தம்பி! அந்தப் பழைய கதையையெல்லாம் இப்போது ஞாபகப்படுத்துவது உனக்கு ஒருவேளை மனக்கஷ்டத்தை உண்டாக்கினால் நான் சொல்லவில்லை" என்று நாகநந்தி நிறுத்தினார்.

"அண்ணா, என்ன சொல்கிறாய்? எனக்கும் அந்தக் காலத்தை நினைத்தால் எத்தனையோ மகிழ்ச்சி உண்டாயிற்று!" "அப்படியானால் சரி, கொஞ்ச நேரம் வரையில் அந்தக் கிராதகர்கள் துன்புறுத்தியதையெல்லாம் பொறுத்துக் கொண்டிருந்தேன். பொறுக்க முடியாமற்போன பிறகு, நான் அஜந்தா புத்த சங்கிராமத்தைச் சேர்ந்தவன் என்று தெரிவித்தேன். உடனே அவர்கள் பயந்து விட்டார்கள். நான் அணிந்திருந்த உடைகள் எப்படிக் கிடைத்தன என்று கேட்டார்கள். பொய்கைக் கரையிலே அவை கிடைத்தனவென்றும், நான் அவற்றை வெறுமனே உடுத்திக் கொண்டு பார்க்க ஆசைப்பட்டு உடுத்திக் கொண்டதாகவும் சொன்னேன். என்னை அழைத்துக் கொண்டு திரும்பி அதே பொய்கைக் கரைக்கு வந்தார்கள். சுற்றியிருந்த வனப் பிரதேசமெங்கும் தேடிப் பார்த்தார்கள். கடைசியில் ஏதோ காட்டு மிருகம் உன்னைக் கொன்று தின்றிருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு என்னை விட்டு விட்டுத் திரும்பிப் போய்ச் சேர்ந்தார்கள். பிறகு, நீ வழி கண்டுபிடித்துப் பத்திரமாய்ப் போய்ச் சேர்ந்தாயோ என்னவோ என்ற கவலையுடன் நானும் அஜந்தாவை நோக்கிக் கிளம்பினேன்."

வாதாபிச் சக்கரவர்த்தி அப்போது குறுக்கிட்டுக் கூறினார்; "நீ சொல்லியிருந்தபடியே நான் நதி வழியைப் பிடித்துக் கொண்டு போனேன். வளைந்து வளைந்து போன நதியோடு எத்தனை தூரம் போனாலும் மனித சஞ்சாரமே இல்லை. அடிக்கடி எதிரே சுவர் வைத்தது போல் மலை நின்று அப்பால் வழியே இல்லையென்று தோன்றியது. போகப் போக இப்படியே இருந்தது. ஒருவேளை நீ சொன்னதை நான் நன்றாய்த் தெரிந்து கொள்ளாமல் தப்பான வழியைப் பிடித்துக் கொண்டு போகிறேனோ என்று எண்ணினேன். அதைவிடப் பயங்கரமான எண்ணம் ஒன்று தோன்றியது. நீ ஒருவேளை என்னை ஏமாற்றி விட்டாயோ, சித்தப்பன் மங்களேசனிடம் போய்ச் சமாதானம் செய்து கொண்டு இராஜ்யம் ஆளப் பார்க்கிறாயோ என்று நினைத்தேன். கடைசியில் அஜந்தாவின் அற்புதச் சித்திரக் குகைகளை அடைந்தேன். நீ சொன்னபடியே அங்கு யாரோடும் பேச்சுக் கொடாமல் சிற்பியின் சீடனாக நடித்துக் காலம் கழித்துக் கொண்டிருந்தேன். ஒரு வாரம் கழித்து நீ வந்து சேர்ந்தாய். உன்னுடைய கதையைக் கேட்டு, உன்னுடைய முதுகிலிருந்த காயங்களையும் பார்த்து விட்டு, உனக்கு நான் மனத்தினால் செய்த அநீதியை எண்ணி 'ஓ'வென்று அழுதேன்..."

"தம்பி! என் விஷயத்தில் உன்னுடைய மனம் அப்போது கூட முழு நிம்மதி அடையவில்லை. சங்கிராமத்தின் தலைமை பிக்ஷு நம்மை ஒருநாள் சேர்ந்தாற்போல் பார்த்து விட்டார். நாம் நதியில் தனி இடத்திற்குச் சென்று குளித்துக் கொண்டிருந்த போது அவர் பார்த்தார். உன்னைப் பற்றி விசாரித்தார்; நான் உண்மையைச் சொன்னேன். அஜந்தா சட்டத்துக்கு நேர்விரோதமாக அந்நியனாகிய உன்னை நான் அங்கே கொண்டு வந்ததற்காக என்னை எவ்விதம் தண்டிப்பாரோ என்று பயந்தேன். ஆனால், குரு என்னைக் கோபிக்கவும் இல்லை; தண்டிக்கவும் இல்லை. அன்று சாயங்காலம் அவருடைய தலைமை விஹாரத்தில் ஒருவரும் வராத சமயத்தில் நம்மை அழைத்து வைத்துக் கொண்டு நம்மைப் பற்றிய கதையைச் சொன்னார். அதைக் கேட்ட பிறகு உன்னுடைய மனநிம்மதி இன்னும் அதிகமாகக் குலைந்தது. தம்பி! என் விஷயமாக உன் உள்ளத்தில் பொறாமைத் தீ மூண்டு, வரவரப் பெரிதாகிக் கொழுந்து விட்டெரியத் தொடங்கியது." "ஆம், அண்ணா! அது உண்மைதான்; ஆனால் அதே சமயத்தில் என்னுடைய நீச குணத்தைப் பற்றியும் நான் அடிக்கடி எண்ணமிட்டு வெட்கமடைந்தேன்."

"உன் பேரில் தவறில்லை, தம்பி! சிறிதும் தவறில்லை. அப்போதும் நான் அவ்வாறுதான் எண்ணினேன். நீயும் நானும் இரட்டைப் பிள்ளைகள் என்றும், இரண்டு பேரில் நான் முதலில் பிறந்தவன் என்றும் தலைமைப் பிக்ஷு நமக்குத் தெரியப்படுத்தினார். நம் தந்தை நான் பிறந்தவுடனேயே என்னை அப்புறப்படுத்தி வைத்திருந்து ஐந்தாவது வயதில் என்னைப் பிக்ஷுவிடம் ஒப்புவித்தார். உன்னுடைய உயிருக்கு ஏதாவது அபாயம் நேர்ந்ததாகத் தெரிந்தால், அப்போது மட்டும் என்னைப் பற்றிய இரகசியத்தை வௌிப்படுத்தி என்னை இராஜ்யத்துக்குரியவனாகச் செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தார். இதையெல்லாம் பிக்ஷு குரு நமக்குச் சொல்லி, உன்னை நானே காப்பாற்றும்படியாக நேர்ந்த விதியைக் குறித்து வியந்தார். என்னுடைய உத்தம குணத்தை வெகுவாகச் சிலாகித்தார். நான் பிறந்து அரை நாழிகைக்குப் பிறகு நீ பிறந்ததாகவும், ஜாதக ரீதியாக நீயே இராஜ்யமாளப் பிறந்தவன் என்று ஏற்பட்டபடியால் நம் தந்தை உன்னைச் சிம்மாசனத்துக்கு உரியவனாகத் தேர்ந்தெடுத்ததாகவும் கூறினார். இது தெரிந்ததும் உன் பேரில் எனக்கு ஏற்கெனவே இருந்த அன்பு பன்மடங்கு ஆயிற்று. ஆனால், அதே செய்தியினால் உன்னுடைய மனத்தில் விஷம் பாய்ந்து விட்டது. அந்த நிமிஷம் முதல் நீ என்னை மனத்திற்குள் துவேஷிக்கத் தொடங்கினாய். அதைக் குறித்து நான் ஆச்சரியப்படவில்லை; உன் பேரில் கோபம் கொள்ளவும் இல்லை. நியாயமாக வாதாபிப் பட்டத்துக்குரியவன் நான் என்று ஏற்பட்டபடியால் நீ என் பேரில் சந்தேகப்படுவது இயற்கை என்பதை உணர்ந்தேன். உன்னுடைய சந்தேகத்தை அறவே போக்கத் தீர்மானித்தேன். பிக்ஷு குருவின் காலில் விழுந்து என்னையும் பிக்ஷு மண்டலத்தில் சேர்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டேன். குரு முதலில் ஆட்சேபித்தார், கடைசியில் ஒப்புக் கொண்டார். உன்னுடைய முன்னிலையில் நான் தலையை மொட்டை அடித்துக் கொண்டு காவி வஸ்திரம் தரித்த புத்த பிக்ஷு ஆனேன். என்றென்றைக்கும் உலக வாழ்க்கையைத் துறந்து விட்டதாகச் சத்தியம் செய்தேன். உன் உள்ளத்தில் மூண்டிருந்த தீ அணைந்தது. முன்போல் என்னிடம் அன்பும் விசுவாசமும் கொண்டாய்."

"அண்ணா! அது முதல் உன்னையே நான் தெய்வமாகக் கொண்டேன். எந்தக் காரியத்திலும் உன் இஷ்டப்படியே நடந்து வந்தேன். நீ சொன்ன சொல்லைத் தட்டி நடந்ததில்லை." "அதனால் நீ எவ்வித நஷ்டமும் அடையவில்லை, தம்பி! உன்னை அஜந்தாவில் விட்டு விட்டு நான் வௌியேறினேன். மூன்று வருஷ காலம் நாடெங்கும் சுற்றினேன். இராஜ்யத்தின் அதிகாரிகள், இராணுவத் தலைவர்கள் எல்லாரையும் உன்னுடைய கட்சியில் சேரச் செய்தேன். பொது ஜனங்களையும் மங்களேசனுக்கு எதிராகக் கிளப்பி விட்டுக் கொண்டிருந்தேன். பக்குவமான காலம் வந்த போது உன்னை அஜந்தாவிலிருந்து வரவழைத்தேன். பெரிய சைனியத்துக்குத் தலைமை வகித்து நீ வாதாபி நோக்கிச் சென்றாய். மங்களேசன் போரில் உயிரை விட்டான். நம்முடைய புகழ்பெற்ற பாட்டனார் சத்யாச்ரயப் புலிகேசி வீற்றிருந்து ஆட்சி புரிந்த சளுக்க சிம்மாசனத்தில் நீ ஏறினாய்."

"அண்ணா! உன்னுடைய ஒத்தாசையினாலேதான் வாதாபிச் சிம்மாசனம் ஏறினேன். உனக்கு நியாயமாக உரிய சிம்மாசனத்தை நீ எனக்காகத் துறந்தாய். என் மனத்தில் சிறிதும் களங்கம் இருக்கக் கூடாது என்பதற்காக உலக வாழ்க்கையையே துறந்து பிக்ஷு ஆனாய். உன்னுடைய மகத்தான பிரயத்தனங்களினாலேதான் மங்களேசனைக் கொன்று நான் சிம்மாசனம் ஏறினேன். அதற்குப் பிறகு, இருபது வருஷ காலமாக நீ எனக்கு அன்னை, தந்தையாகவும், மதி மந்திரியாகவும், இராணுவ தந்திரியாகவும் இருந்து வந்திருக்கிறாய். இன்று நர்மதையிலிருந்து வடபெண்ணை வரையில் வராகக் கொடி பறந்து வருவதெல்லாம் உன்னாலேதான். இதையெல்லாம் நான் ஒப்புக் கொள்கிறேன். ஒப்புக் கொண்டு உனக்கு நன்றி செலுத்துகிறேன். ஆனால், இந்தப் பழைய கதையையெல்லாம் எதற்காக இப்போது ஞாபகப்படுத்துகிறாய்? உன்னிடம் எனக்குள்ள நன்றியை எந்த விதத்திலாவது நான் தெரிவித்துக் கொள்ள இடமிருக்கிறதா?" என்று புலிகேசி கேட்டு விட்டு ஆவலுடன் நாகநந்தியின் முகத்தை நிலா வௌிச்சத்தில் பார்த்தார்.

கடுமையான விரதங்களினால் வற்றி உலர்ந்திருந்த பிக்ஷுவின் முகத்தில் புலிகேசி என்றும் காணாத கனிவு தென்பட்டது. "ஆம்; தம்பி! நான் உனக்குச் செய்திருப்பதற்கெல்லாம் பிரதியாக நீ எனக்குச் செய்யக்கூடியது ஒன்று இருக்கிறது" என்றார் பிக்ஷு. "அப்படியானால் உடனே அதைச் சொல்லு, இருபத்தைந்து வருஷமாக உனக்கு நான் பட்டிருக்கும் நன்றிக் கடனில் ஒரு பகுதியையாவது கழிக்கிறேன்." "தம்பி! நீ வாதாபியை விட்டுப் புறப்படுவதற்கு முன்பே உனக்கு ஓர் ஓலை அனுப்பியிருந்தேனல்லவா? அதில் என்ன எழுதியிருந்ததென்பது ஞாபகம் இருக்கிறதா?" "எவ்வளவோ விஷயம் எழுதியிருந்தாய்; எதைச் சொல்கிறாய்?"

"காஞ்சி சுந்தரியை நீ எடுத்துக் கொள்; சிவகாமி சுந்தரியை எனக்குக் கொடு! என்று எழுதியிருந்ததைச் சொல்கிறேன்." "ஆமாம்; அதைப் பற்றி இப்போது என்ன?" "அப்போது கேட்டதையே இப்போதும் கேட்கிறேன்." "அண்ணா! இது என்ன? காஞ்சி சுந்தரியைத்தான் நம்மால் கைப்பற்ற முடியவில்லையே?" "காஞ்சி சுந்தரி உனக்குக் கிடைக்கவில்லை! ஆனாலும், சிவகாமியை எனக்குக் கொடு என்று கேட்கிறேன்." "அதெப்படி முடியும்? உண்மையில் மகேந்திர பல்லவனுடைய சபையில் அந்தப் பெண் நாட்டியம் ஆடிய போது நீ ஓலையில் எழுதியிருந்தது எனக்கு ஞாபகம் வந்தது. அவளை என்னுடன் அனுப்ப முடியுமா என்று பல்லவனைக் கேட்டேன். அவன் என்ன சொன்னான் தெரியுமா? கலை உணர்ச்சியேயில்லாத என்னுடன் அவள் வர மாட்டாள் என்று சொன்னான்! இப்போது மறுபடியும் திரும்பிக் காஞ்சி மீது படையெடுக்கச் சொல்லுகிறாயா?" "வேண்டாம், தம்பி! மறுபடியும் படையெடுக்க வேண்டாம். காஞ்சி சுந்தரி உனக்குக் கிட்டவில்லை; ஆனால், சிவகாமி சுந்தரி எனக்குக் கிடைத்தாள், அவளைக் கொண்டு வந்தேன்." "என்ன? என்ன? உண்மையாகவா?"

"தம்பி! அவளுக்காகவே நான் உன்னைப் போல வேஷந்தரித்தேன். அவள் தந்தையின் உயிரைக் காப்பாற்றினேன். சிவகாமிக்காகவே படைத் தலைமை வகித்து மகேந்திர பல்லவனுடன் மணிமங்கலத்தில் போர் செய்தேன். அவளை முன்னிட்டே போரை நடுவில் நிறுத்தி விட்டுப் பின்வாங்கினேன்." "அண்ணா! எல்லாம் விவரமாகச் சொல்லு!" என்று புலிகேசி கேட்க, நாகநந்தி தாம் மூன்று வருஷத்துக்கு முன்னால் தென்னாட்டுக்கு வந்ததிலிருந்து செய்ததை எல்லாம் விவரமாய்க் கூறினார்.

எல்லாவற்றையும் கேட்ட புலிகேசி, "அண்ணா! அந்த நாட்டியப் பெண்ணின் மீது உண்மையாகவே நீ காதல் கொண்டிருப்பதாகவா சொல்கிறாய்?" என்று நம்பிக்கையில்லாத குரலில் வினவினார். "ஆமாம் தம்பி! சத்தியமாகத்தான்." "ஆனால், நீ அஜந்தாவில் புத்த குருவின் முன்னால் செய்த பிரதிக்ஞை என்ன ஆவது? நாடெங்கும் காவித் துணி அணிந்து ஸ்திரீலோலர்களாய்த் திரியும் கள்ளப் பிக்ஷுக்களின் கூட்டத்தில் நீயும் சேர்ந்து விடப் போகிறாயா, அண்ணா?" "தம்பி! இந்தக் கேள்வியை எதிர்பார்த்தேன். இதற்கு மறுமொழி சொல்லவும் ஆயத்தமாயிருக்கிறேன். ஆனால், இரண்டொரு வார்த்தையிலே சொல்ல முடியாது. விவரமாகச் சொல்ல வேண்டும், கேட்கிறாயா?" "கட்டாயம் கேட்கிறேன், ஆனால் சொல்லத்தான் வேண்டுமென்று உன்னை நான் கட்டாயப்படுத்தவில்லை. உனக்கு இஷ்டமிருந்தால் சொல்லு; இல்லாவிட்டால் சொல்ல வேண்டாம்!" என்றார் வாதாபிச் சக்கரவர்த்தி. உண்மையில் மேற்படி விவரத்தைக் கேட்கப் புலிகேசியின் உள்ளம் துடிதுடித்தது. அதே கணத்தில் அவருடைய மனத்தில் அசூயையின் விதையும் விதைக்கப்பட்டது. இத்தனை நாளும் புத்த பிக்ஷுவின் இருதயத்தில் தன்னைத் தவிர வேறு யாரும் இடம்பெற்றதில்லை. அவருடைய அன்புக்கெல்லாம் தாமே உரியவராயிருந்தார். தம்முடைய நன்மையைத் தவிரப் பிக்ஷுவுக்கு வேறு எந்த விஷயத்திலும் கவலையும் கவனமும் இல்லாமலிருந்தது. இவ்வளவு காலத்துக்குப் பிறகு இப்போது பெண் ஒருத்தி, நாட்டியக்காரி, அவருடைய உள்ளத்தில் இடம்பெற்று விட்டாள்! "ஆம்! இப்போது என்னைக் காட்டிலும் அந்தப் பெண்ணிடந்தான் பிக்ஷுவுக்கு அபிமானம்! அவள் படுநீலியாயிருக்க வேண்டும்!" என்று புலிகேசி தம் மனத்திற்குள் அசூயையுடன் எண்ணமிட்டார்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
நாற்பத்திரண்டாம் அத்தியாயம்

பிக்ஷுவின் காதல்

புலிகேசியின் உள்ளத்தில் அசூயையென்னும் பாம்பு படமெடுத்து ஆடுவதை அறியாதவராய் நாகநந்தி பிக்ஷு தமது இருதயத்தைத் திறந்து சொல்லத் தொடங்கினார். "தம்பி! குழந்தைப் பிராயம் முதற்கொண்டு - எனக்கு அறிவு தௌிந்த நாளிலிருந்து, நான் அஜந்தா மலைக் குகைகளில் வளர்ந்து வந்தேன். அஜந்தா சங்கிராமத்தில் பிக்ஷுக்களும் அவர்களுடைய சிஷ்யர்களும் இருந்தார்கள். என் இருபதாவது பிராயம் வரையில் உயிருள்ள பெண்ணை நான் பார்த்ததில்லை. அதாவது, சதை, இரத்தம், எலும்பு, நகம் ஆகியவற்றால் ஆன மானிடப் பெண்ணைப் பார்த்ததில்லை. ஆனால், ஜீவனுள்ள பெண்களைப் பார்த்திருக்கிறேன். ஒருவனுடைய இருதய அந்தரங்கம் வரைக்கும் சென்று ஊடுருவிப் பார்க்கும் சக்தி வாய்ந்த விசால நயனங்களுடைய பெண்களைப் பார்த்திருக்கிறேன். மானிடக் குலத்துக்கு எட்டாத தெய்வீக சௌந்தரியம் வாய்ந்த மடமங்கையர்களைப் பார்த்திருக்கிறேன். அழகுக்கு அழகு செய்யும் திவ்விய ஆபரணங்களை அணிந்த அணங்குகளைப் பார்த்திருக்கிறேன். தங்கள் கூந்தலில் மலர் அணிந்ததனால் அம்மலருக்கு அழகைத் தந்த பெண்களைப் பார்த்திருக்கிறேன். சாந்தங் குடிகொண்ட பெண்களையும், கருணை வடிவான பெண்களையும், மினுக்கி மயக்கும் மோகினி ரூபம் கொண்ட மாயப் பெண்களையும் பார்த்திருக்கிறேன். இவர்களையெல்லாம் அஜந்தா விஹாரங்களில் உள்ள சுவர்களிலே பார்த்தேன். மகா சைத்திரிகர்களான பிக்ஷுக்கள் தீட்டிய அற்புத சித்திர வடிவங்களிலே பார்த்தேன். அந்த சித்திர வடிவங்கள் எல்லாம் என்னைப் பொறுத்தவரையில் உயிர் உள்ள ஸ்திரீ புருஷர்கள்தான். நான் அவர்கள் அருகில் சென்றதும் என்னை அவர்கள் வரவேற்பார்கள்; முகமன் கூறுவார்கள்; க்ஷேமம் விசாரிப்பார்கள். அவர்களுடன் நானும் மனம் விட்டுப் பேசுவேன்; அவர்களுடைய க்ஷேம லாபங்களை விசாரிப்பேன்; வௌி உலகத்து விஷயங்களைப் பற்றியெல்லாம் அவர்களிடம் கேட்பேன். மௌன பாஷையில் அவர்கள் மறுமொழி சொல்வார்கள்.

"இப்படி நான் தினந்தோறும் பார்த்துப் பேசிப் பழகிய சித்திர வடிவங்களுக்குள்ளே முக்கியமாக ஒரு பெண்ணின் வடிவம் என் சிந்தையைக் கவர்ந்திருந்தது. அவளுடைய பொன்னிற மேனியின் சோபையை அவள் இடையில் உடுத்தியிருந்த நீல நிறப் பட்டாடையும், மாந்தளிர் நிறத்து உத்தரீயமும் அதிகமாக்கிக் காட்டின. புன்னகை பூத்த அவளுடைய இதழ்களின் செந்நிறமும், அவளுடைய கருங்கூந்தலில் குடியிருந்த செவ்வாம்பல் மலரின் சிவப்பு நிறமும் ஒன்றையொன்று தூக்கியடித்தன. தாமரை இதழ் போல வடிவம் அமைந்த அவளுடைய கண்களின் கருவிழிகள் என் இருதயத்தை ஊடுருவி நோக்கிய போது என் இருதயத்தில் நான் அதுகாறும் அறிந்திராத வேதனையும் இன்பமும் உண்டாயின. அந்தச் சித்திர உருவம் தீட்டப்பட்டிருந்த விஹாரத்தின் எந்தப் பக்கத்தில், எந்த மூலையில் நின்று பார்த்தாலும், அந்தப் பத்மலோசனியின் கண்கள் என்னையே நோக்குவது போல் இருந்தன. அவ்வளவு அற்புத வேலைத் திறமையுடன் யாரோ ஒரு சைத்திரிகப் பிரம்மா அவ்வுருவத்தைத் தீட்டியிருந்தார். அந்தச் சித்திரத்தை வரைந்து முந்நூறு வருஷங்களுக்கு மேல் ஆகியிருந்த போதிலும் வர்ணங்கள் சிறிதும் மங்காமல் நேற்று எழுதியவை போல் விளங்கின.

"அந்தச் சித்திரப் பெண்ணின் உருவத்தில் இன்னொரு விசேஷம் இருந்தது; அவள் இடை வளைந்து நின்ற நிலையும், அவளுடைய கரங்களும் கழுத்தும் அமைந்திருந்த தோற்றத்தில் காணப்பட்ட நௌிவும், அவள் ஏதோ ஒரு விசித்திரமான காரியத்தில் ஈடுபட்டிருக்கிறாள் என்பதைப் புலப்படுத்தின. ஆனால், அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்பது எனக்குப் புலப்படவில்லை. என் மனத்திற்குள் எவ்வளவோ யோசனை செய்தும் அதை என்னால் அறிய முடியவில்லை. கடைசியில் சைத்திரிக பிக்ஷு ஒருவரைக் கேட்டேன். அவர் 'அந்தப் பெண் பரதநாட்டியம் ஆடுகிறாள்' என்று சொன்னார். பிறகு பரதநாட்டியம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள விரும்பினேன். பரத சாஸ்திரம் என்னும் ஒரு நூல் இருப்பதாகத் தெரிந்து கொண்டு அந்த நூலைச் சம்பாதித்துப் படித்தேன். பரதநாட்டியக் கலையின் பல அம்சங்களையும் நன்கு தெரிந்து கொண்டேன்.

"இதற்குப் பிறகு, அந்த ஓவியக் கன்னி என் உள்ளக் காட்சியில் பரத நாட்டியம் ஆடத் தொடங்கினாள். பரதநாட்டியக் கலைக்குரிய பலவிதத் தோற்றங்களிலும் அவள் காட்சியளித்தாள். பற்பல முத்திரைகள், ஹஸ்தங்கள், பலவித அபிநயத் தோற்றங்கள் - என் அகக் கற்பனையில் தோன்றிக் கொண்டேயிருந்தன. பகலிலும் இரவிலும் சதா சர்வகாலமும் அந்தக் கற்பனைப் பெண் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டிருந்தாள். அப்போது தான் எனக்கு முதன் முதலில் வௌி உலகத்துக்குப் போக வேண்டும், நாடு நகரங்களில் வாழும் ஸ்திரீ புருஷர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. ஒரு வேளை அந்த மாதிரி உண்மையாகவே ஒரு பெண் எங்கேனும் இருக்கலாமல்லவா என்ற சபலம் ஏற்பட்டது. இந்த ஆசை காரணமாகவே அஜந்தா நதி வழியைப் பிடித்துக் கொண்டு வௌியே வந்து மலையடிவாரத்துக் கானகங்களிலே நான் சுற்ற ஆரம்பித்தேன். அப்போதுதான் தம்பி, ஒருநாள் உன்னைப் பார்த்தேன். பேச்சு மூச்சற்றுக் கிடந்த உன் உடம்பில் பிராணனை ஊட்டினேன். அது முதல் என் மனப்போக்கில் ஒரு மாறுதல் உண்டாயிற்று. சித்திரத்தில் பார்த்துக் கற்பனையில் நான் வளர்த்து வந்த பெண் சிறிது சிறிதாக என் உள்ளத்திலிருந்து மறையலானாள். அவள் இருந்த இடத்தில் நீ வந்து சேர்ந்தாய். நீ என் சொந்த உடன்பிறந்த சகோதரன், என்னுடன் இரத்தத் தொடர்புடையவன்; என்பதை அறிந்த பிறகு என் இருதயத்தில் அந்தச் சித்திர நாட்டியக்காரிக்குச் சிறிதும் இடமில்லாமல் போய் விட்டது.

"தம்பி! சிறிது காலத்துக்கெல்லாம் நீயும் நானும் அஜந்தா மலைக் குகையை விட்டு வௌியேறினோம். நீ வாதாபிச் சிம்மாசனம் ஏறினாய். நீயும் நானுமாக எத்தனையோ யுத்தங்கள் நடத்தி ஜயித்தோம். எத்தனையோ இராஜ தந்திரங்களையும் இராணுவ தந்திரங்களையும் கையாண்டு வெற்றி பெற்றோம். துங்கபத்திரையிலிருந்து நர்மதை நதி வரையில் சளுக்க சாம்ராஜ்யம் படர்ந்து தழைத்தது. உத்தராபத ஹர்ஷவர்த்தன சக்கரவர்த்தியும் வராகக் கொடியைக் கண்டு அஞ்சலானார்.

"இந்த நாட்களில் நான் ஏற்றுக் கொண்டிருந்த பிக்ஷு விரதத்தை நிறைவேற்றுவது எனக்குக் கொஞ்சமும் கஷ்டமாயில்லை. வாதாபி நகரத்திலும், மற்றும் நான் யாத்திரை செய்த பட்டணங்களிலும் கிராமங்களிலும் எத்தனையோ ஸ்திரீகளை நான் பார்த்தேன். அஜந்தா குகைச் சுவர்களில் நான் பார்த்த சித்திரப் பெண் வடிவங்களோடு ஒப்பிடும் போது, இந்த மானிடப் பெண்கள் அழகற்ற அவலட்சண வடிவங்களாகத் தோன்றினார்கள். அந்தச் சித்திரப் பெண்களைப் பார்த்து அவர்களுடைய அழகை வியந்த கண்களினால் இந்தச் சாதாரண மானிட ஸ்திரீகளைப் பார்க்கவே முடியவில்லை. "உலகத்திலே மனிதர்கள் என்னத்திற்காக ஸ்திரீகள் மீது மோகம் கொண்டு பைத்தியம் பிடித்து அலைகிறார்கள் என்று வியந்தேன். தம்பி! ஒருவர் பின் ஒருவராக நீ ஆறு பெண்களை மணந்த போது உன்னுடைய பரிதாப நிலையைக் குறித்து இரங்கினேன்!"

இத்தனை நேரம் மௌனமாயிருந்து கேட்டுக் கொண்டிருந்த புலிகேசி இப்போது குறுக்கிட்டுக் கூறினார்: "ஆம், அண்ணா! அதையெல்லாம் நினைத்தால் ஏன் அந்தப் பைத்தியக்காரத்தனங்களில் இறங்கினோம் என்று எனக்கும் ஆச்சரியமாய்த்தான் இருக்கிறது. என்ன செய்யலாம்? எங்களுக்கெல்லாம் அனுபவித்த பிறகுதான் புத்தி வருகிறது. நீயோ பெண் மோகம் என்பது எவ்வளவு அசட்டுத்தனம் என்பதை முன்னதாகவே கண்டு கொண்டு விட்டாய்!"

புலிகேசிச் சக்கரவர்த்தி இவ்விதம் கூறிய போது அவருடைய தொனியில் சிறிது பரிகாசம் கலந்திருப்பதாகத் தோன்றியது. ஆனால், அறிவுக் கூர்மை மிகப் படைத்த பிக்ஷுவுக்கு அச்சமயம் அது தெரியவில்லை, அவர் மேலும் கூறினார்: "இல்லை, தம்பி இல்லை! உன்னுடைய புகழ்ச்சிக்கு நான் அருகனல்ல. நீங்கள் எல்லாரும் பட்டு அனுபவித்த பிறகு, உண்மையைக் கண்டுகொண்டீர்கள். ஆனால், நானோ எத்தனையோ காலம் துறவறத்தை அனுஷ்டித்த பிறகு, யௌவனப் பிராயத்தையெல்லாம் இழந்து விட்ட பிறகு, ஒரு பெண்ணின் காதலுக்கு வயமானேன். ஆனால், என்னுடைய காதல் மற்ற உலக மாந்தரின் காதலை ஒத்ததன்று. அதைப் பற்றிச் சொல்வதற்கு முன்னால் நான் காதல் வயப்பட்ட வரலாற்றைச் சொல்லி விட வேண்டும்.

"வடக்கே ஹர்ஷ மகா சக்கரவர்த்தியுடன் நாம் ஓர் உடன்படிக்கைக்கு வந்து நர்மதைக்குத் தெற்கே அவருடைய சைனியங்கள் வருவதில்லையென்று வாக்குறுதி பெற்ற பிறகு, தென்னாட்டுப் படையெடுப்புக்கு முன் ஆயத்தம் செய்வதற்காகச் சென்றேன். தென்னாடெங்கும் பௌத்த மடங்களும் ஜைன மடங்களும் ஏராளமாக இருந்தபடியால் என்னுடைய வேலை மிகவும் சுலபமாயிருந்தது. காஞ்சி இராஜ விஹாரத்திலே கூட நமக்காக வேலை செய்யும் பிக்ஷுக்கள் கிடைத்தார்கள். பிறகுதான், உனக்குச் சைனியத்துடன் கிளம்பும்படி ஓலை அனுப்பினேன். அனுப்பி விட்டு நான் மதுரைக்குப் பிரயாணப்படுவதற்கு முன்னால் என் வாழ்க்கையிலேயே முக்கியமான சம்பவம் நிகழ்ந்துவிட்டது.

"தம்பி! சளுக்க சாம்ராஜ்யத்தின் விஸ்தரிப்புக்கான வேலைகளில் நான் பூரணமாய் ஈடுபட்டிருந்த போதிலும், இடையிடையே சிற்ப சித்திரக் கலைகளில் என் மனம் செல்லாமல் தடுக்க முடியவில்லை. காஞ்சியில் சில அற்புதமான சிற்பங்களைப் பார்த்தேன்; மாமல்லபுரம் என்று புதிதாகப் பெயர் பெற்ற துறைமுகத்துக்கருகில் சில அதிசயமான சிற்ப வேலைகள் நடைபெறுவதாகக் கேள்விப்பட்டேன். மதுரைக்குப் போகுமுன் அவற்றைப் பார்க்க வேண்டும் என்று சென்றேன். மாமல்லபுரத்துச் சிற்பங்கள் உண்மையில் அதிசயமாகவே இருந்தன. அந்த வேலைகளை நடத்தி வைக்கும் பெரிய சிற்பி ஒருவர் அரண்யத்தின் நடுவில் வீடு கட்டிக் கொண்டு வசிப்பதாகக் கேள்விப்பட்டேன். அவரைப் பார்க்க வேண்டுமென்று விரும்பி அவருடைய சிற்ப வீட்டைத் தேடிக் கொண்டு போனேன்.

"அந்த மகா சிற்பியின் வீட்டில் பல அற்புதங்களைக் கண்டேன். முக்கியமாக, ஆயனர் அப்போது செய்வதில் ஈடுபட்டிருந்த நடனச் சிலைகள் என் மனத்தைப் பெரிதும் கவர்ந்தன. அஜந்தாவின் புத்த விஹாரத்தின் சுவரில் நான் பார்த்த நடனப் பெண்ணின் உருவத்தை அவை எனக்கு நினைவூட்டின. அந்த நடனச் சிலைகளைப் பார்த்து வியந்து கொண்டிருந்த போது ஒரு மகா அற்புதம் நிகழ்ந்தது. வீட்டின் பின்கட்டிலிருந்து ஒரு பெண் உருவம் நாங்கள் இருந்த சிற்ப மண்டபத்துக்கு வந்தது. ஊனும் உடலும் உயிரும் உள்ள உருவந்தான். ஆனால், அஜந்தா சுவரில் நான் பார்த்த சித்திரத்துக்கும் இந்த உருவத்துக்கும் அணுவளவும் வேற்றுமை இல்லை. அதே பூரண சந்திரனையொத்த முகம்; பொன்னிற மேனி; அதே வர்ணமுள்ள உடைகள்; நெஞ்சை ஊடுருவிப் பார்க்கும் நீண்ட நயனங்கள்; கூந்தலை எடுத்துக் கட்டியிருந்த விதமும் அப்படியே. சற்று நேரம் நான் காண்பது உண்மையான தோற்றமா, அல்லது சித்த பிரமையா என்று பிரமித்திருந்தேன். அந்த உருவம் அதன் செவ்விதழ்களைச் சிறிது விரித்து, 'அப்பா! இந்தச் சுவாமிகள் யார்?' என்று கேட்ட பிறகு தான், இதெல்லாம் உண்மை என்று உணர்ந்தேன். ஆயனச் சிற்பி என்னைப் பார்த்து, 'இவள் என்னுடைய மகள் சிவகாமி; இவளுடைய நடனத் தோற்றங்களைத்தான் நான் சிலை வடிவங்களாக அமைக்கிறேன்' என்றார். சற்று நேரத்துக்கெல்லாம் சிவகாமி நடனம் ஆடினாள்.

"தம்பி! அந்த நேரம் முதல் இந்த உலகமே எனக்குப் புதிய உலகமாக மாறி விட்டது. இவ்வுலகில் யுத்தத்தையும் இராஜ தந்திரத்தையும், இராஜ்ய பாரத்தையும் விட முக்கியமான காரியங்களும் இருக்கின்றன என்பதை உணர்ந்தேன். அஜந்தா அடிவாரத்தில் உன்னைச் சந்திப்பதற்கு முன்னால் சில காலம் அங்கே நான் கண்ட நடனச் சித்திரம் எப்படி என் உள்ளத்தைக் கவர்ந்ததோ, அல்லும் பகலும் அதே நினைவாக இருக்கச் செய்ததோ, அதே மாதிரி இப்போது சிவகாமியின் உருவம் என் உள்ளத்தைக் கவர்ந்தது. உள்ளத்தை மட்டுமா? ஊனையும் உயிரையும் உயிரின் ஒவ்வோர் அணுவையும் கவர்ந்து விட்டது.

"ஆம், தம்பி! சிவகாமியிடம் நான் காதல் கொண்டேன்; பிரேமை கொண்டேன்; மோகம் கொண்டேன். இன்னும் உலகத்துப் பாஷைகளில் என்னென்ன வார்த்தைகள் அன்பையும், ஆசையையும் குறிப்பதற்கு இருக்கின்றனவோ அவ்வளவு வார்த்தைகளையும் குறிப்பிட்ட போதிலும் காணாது என்று சொல்லக்கூடிய வண்ணம் அவள் மீது பிரியங்கொண்டேன். காதல், பிரேமை, மோகம் என்னும் வார்த்தைகளை இந்த உலகம் தோன்றிய நாள் முதல், கோடானு கோடி மக்கள் எத்தனையோ கோடி தடவை உபயோகித்திருக்கிறார்கள். ஆனால், அந்த வார்த்தைகளின் மூலம் நான் குறிப்பிடும் உணர்ச்சியை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். என்னுடைய காதலில் தேக தத்துவம் என்பது சிறிதும் கிடையாது.

"சிவகாமியின் உருவத்தைக் கண்டு நான் மோகித்து விடவில்லை. அவளுடைய உருவத்தைக் காட்டிலும் அழகிய சித்திர சிற்ப வடிவங்களை நான் கண்டிருக்கிறேன். "சிவகாமியின் பசும்பொன் மேனி நிறத்துக்காக அவள் மீது நான் காதல் கொள்ளவில்லை. அந்த மேனி நிறத்தைக் காட்டிலும் பிரகாசமான பொன்னிறத்தை இதோ இந்தச் சந்திரனிடம் காணலாம். "சிவகாமியின் கண்ணழகைக் கண்டு நான் மயங்கி விடவில்லை. அவள் வளர்த்த ரதி என்னும் மான் குட்டியின் மருண்ட கண்கள் சிவகாமியின் கண்களைக் காட்டிலும் அழகானவை.

"சிவகாமியின் உடம்பின் மென்மைக்காக அவள் மீது நான் ஆசை கொள்ளவில்லை. அவளுடைய உடம்பைக் காட்டிலும் அதிக மென்மை பொருந்திய எத்தனையோ புஷ்பங்கள் உலகில் இருக்கின்றன. "ஆம், தம்பி, சிவகாமியிடம் நான் கொண்டிருக்கும் காதலில் தேக தத்துவம் என்பதே கிடையாது. "ஆகையால் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் உனக்காக நான் ஏற்றுக் கொண்ட பிக்ஷு விரதத்துக்குச் சிவகாமியினால் யாதொரு பங்கமும் நேரவில்லை.." இவ்விதம் நாகநந்தி சொல்லி வந்த போது அவருடைய முகத்தில் அசாதாரணமான ஒரு கிளர்ச்சி காணப்பட்டது. புலிகேசி தம் மனத்தில், 'இதென்ன' ஒருவகை விசித்திரமான பைத்தியம் போல இருக்கிறதே? மகேந்திரனுடைய சிறையில் வெகு காலம் கிடந்ததனால் புத்தி மாறாட்டமாகி விட்டதா?' என்று எண்ணமிட்டார்.

புலிகேசியின் முகபாவத்தைக் கொண்டு இதை ஊகித்து உணர்ந்த நாகநந்தி கூறினார்: "இல்லை தம்பி, இல்லை! எனக்குப் பைத்தியம் பிடித்து விடவில்லை. இவ்வளவு தௌிவாக என்னுடைய அறிவு இதற்கு முன் எப்போதும் இருந்ததில்லை. எனக்கு உண்மையில் சிவகாமியின் மீது ஆசையே கிடையாது; அவளை ஆட்கொண்டிருக்கும் கலைத் தெய்வத்தினிடந்தான் மோகம். சிவகாமி சுயப்பிரக்ஞையை இழந்து தன்னை மறந்து ஆனந்த வௌியில் மிதந்து நடனமாடும் போது, நானும் தன் வசமிழந்து விடுகிறேன். அப்போது எனக்கு உண்டாகும் ஆனந்தம் இந்த உலகில் வேறெந்தக் காரியத்திலும் ஏற்பட்டதில்லை. தம்பி! மகேந்திர பல்லவனை நான் எவ்வளவோ பகைக்கிறேன்; துவேஷிக்கிறேன்; ஆனால், ஒரே ஒரு விஷயத்தில் மகேந்திரனும் நானும் ஒரே அபிப்பிராயம் கொண்டவர்கள். சிவகாமி கேவலம் மனிதர்களுக்கு மனைவியாகப் பிறந்தவள் அல்லவென்றும் அவளுடைய அற்புதக் கலை தெய்வத்துக்கே அர்ப்பணமாக வேண்டிய கலையென்றும் ஒருநாள் ஆயனரிடம் மகேந்திர பல்லவன் சொன்னான். புத்தர் சிலையின் பின்னாலிருந்து அதை நான் கேட்டேன்; அவனுடைய கூற்றை மனத்திற்குள் பூரணமாக ஆமோதித்தேன். தம்பி! நீ நிச்சயமாக நம்பலாம், சிவகாமியிடம் நான் கொண்ட காதலினால் என்னுடைய பிக்ஷு விரதத்துக்கு யாதொரு பங்கமும் நேராது" என்று முடித்தார் நாகநந்தியடிகள்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
நாற்பத்து மூன்றாம் அத்தியாயம்

புலிகேசியின் வாக்குறுதி

புலிகேசி சக்கரவர்த்தி முகத்தில் புன்னகையுடன், "அடிகளே! தங்களுடைய பிக்ஷு விரதத்துக்கு நாட்டியப் பெண் சிவகாமியினால் பங்கம் நேராமலிருக்கலாம். ஆனால், நம்முடைய தென்னாட்டுப் படையெடுப்புக்கு அந்தப் பெண் தெய்வத்தினால் பங்கம் நேர்ந்துவிட்டது!" என்றார். பிக்ஷு வியப்பும் கோபமும் கலந்த குரலில், "அது எப்படி? படையெடுப்புக்கும் சிவகாமிக்கும் என்ன சம்பந்தம்? மகேந்திர பல்லவனுடைய சூழ்ச்சித் திறமையினால் அல்லவா நமது உத்தேசம் நிறைவேறவில்லை?" என்று கேட்டார்.

"அடிகளே! மகேந்திரனுடைய சூழ்ச்சித் திறனுக்குத் தங்களுடைய சூழ்ச்சித் திறன் குறைவானதா? யுத்தரங்கத்தில் நாம் சில சமயம் தோல்வியடைந்திருக்கிறோம். ஆனால், அரசியல் தந்திரத்தில் இதற்கு முன்னால் எப்போதாவது நாம் தோல்வியடைந்ததுண்டா? சிவகாமியிடமோ, அவளை ஆட்கொண்ட கலைத் தெய்வத்திடமோ தங்களுக்கு மோகம் ஏற்பட்டிராவிட்டால், மகேந்திர பல்லவன் தங்களைச் சிறைப்பிடித்திருக்க முடியுமா? தங்களுடைய திருவுள்ளத்தைப் பரிசோதனை செய்து உண்மையைச் சொல்லுங்கள்!"

இவ்விதம் புலிகேசி கூறியபோது, பிக்ஷுவின் முகத்தில் தோன்றிய கோபக்குறி மறைந்து, வெட்கம் கலந்த பிடிவாதம் காணப்பட்டது. தரையை நோக்கித் தலையைக் குனிந்த வண்ணம், "சக்கரவர்த்தி! இந்த அறிவிழந்த பிக்ஷுவை மன்னித்து விடுங்கள்! சாம்ராஜ்யத்தின் தொண்டுக்கு நான் இனித் தகுதியில்லாதவன். இத்தனை காலமாய் நான் செய்திருக்கும் சேவையை முன்னிட்டு மன்னித்து விடுதலை கொடுங்கள்!" என்றார் பிக்ஷு. "அண்ணா! இது என்ன விளையாட்டு?" "இல்லை, தம்பி! விளையாட்டு இல்லை; உண்மையாகத்தான் சொல்கிறேன், எனக்கு விடை கொடு; நான் போகிறேன்." "எங்கே போவதாக உத்தேசம்?" "எங்கேயாவது மனிதர்களுடைய கண் காணாத இடத்துக்குப் போகிறேன். அஜந்தாவைப் போன்ற இன்னொரு மலைப் பிரதேசத்தைக் கண்டுபிடித்து அதற்குள்ளே, உள்ளே, உள்ளே யாரும் எளிதில் வர முடியாத இடத்துக்குப் போய்விடுகிறேன். அங்கே சிவகாமியை நடனம் ஆடச் சொல்லிப் பார்த்துக் கொண்டே என் மிகுதி ஆயுளைக் கழித்து விடுகிறேன்.."

"அண்ணா! அப்படித் தனியாகச் சிவகாமியை நீ கொண்டு போய் வைத்துக் கொண்டிருந்தால், அந்தப் பெண் நடனம் ஆடுவாளா?" "கலைஞர்களின் இயல்பு உனக்குத் தெரியாது, தம்பி! பெரிய சாம்ராஜ்யத்தை ஆளும் சக்கரவர்த்தியின் அதிகாரத்தினால் சிவகாமியை ஆடச் சொல்ல முடியாது. ஆனால், நிற்க நிழலில்லாத இந்த ஏழைப் பிக்ஷுவினால் சிவகாமியை ஆடச் செய்ய முடியும்." "ஓஹோ!" "ஆம், தம்பி! அதனாலேதான் நான் உன்னைப்போல் வேஷம் தரித்திருக்கும் வரையில் அவளை நடனம் ஆடச் சொல்லவில்லை." "அண்ணா! இந்தப் பைத்தியம் உனக்கு வேண்டாம். சிவகாமியைக் காஞ்சிக்கே திருப்பி அனுப்பிவிடுகிறேன். இல்லாவிட்டால், நம் தளபதிகளில் யாராவது ஒருவனுக்கு அவளைக் கல்யாணம் செய்து கொடுத்துவிடுவோம்."

பிக்ஷுவின் கண்களில் கோபக் கனல் பறந்தது, "தம்பி! சிவகாமியைப் பெண்டாளும் எண்ணத்துடன் அவள் அருகில் நெருங்குகிறவன் யமனுலகம் போக ஆயத்தமாயிருக்க வேண்டும்" என்றார். "அண்ணா! மாமல்லன் யமனுலகம் போய்விட்டானா?" என்று புலிகேசி பரிகாசக் குரலில் கேட்டார். "இல்லை; அந்த நிர்மூடன் அதைக் காட்டிலும் கொடிய தண்டனையை இந்த உலகிலேயே அனுபவிக்கப் போகிறான். கேள், தம்பி! மாமல்லனை இந்தக் கையினாலேயே கொன்று விடத் தீர்மானித்திருந்தேன். இரண்டு மூன்று தடவை சந்தர்ப்பங்களும் வாய்த்தன. ஆனால், கடைசி நேரத்தில் என் மனத்தை மாற்றிக் கொண்டேன்."

"ஆகா! நீ மட்டும் உன் மனத்தை மாற்றிக் கொள்ளாமல் மாமல்லனைக் கொன்றிருந்தால், பல்லவ இராஜ்யத்தில் இப்போது வராகக் கொடி பறந்து கொண்டிருக்கும். மகேந்திர பல்லவனும் மதுரைப் பாண்டியனும் நம் காலின் கீழ் கிடப்பார்கள். "ஒருவேளை அப்படி ஆகியிருக்கலாம், ஆனால் சிவகாமியைத் தன்னுடைய சுகபோகப் பொருளாக்கிக் கொள்ள நினைத்த மாமல்லனுக்கு அது தக்க தண்டனையாகியிராது." "இப்போது என்ன தண்டனை?" "அவனுடைய ஆருயிர்க் காதலியைச் சளுக்கர் கொண்டு போன செய்தி வாழ்நாளெல்லாம் அவனுக்கு நரக வேதனை அளிக்கும். இரவு பகல் அவன் மனத்தை அரித்துக் கொண்டிருக்கும். இதைக் காட்டிலும் அவனுக்குத் தண்டனை வேறு கிடையாது." "நல்லது, அண்ணா! இப்போது என்ன சொல்கிறாய்?"

"இராஜரீக விவகாரங்களிலிருந்து அடியோடு விலகிக் கொள்வதாகச் சொல்கிறேன். இருபத்தைந்து வருஷம் உனக்காகவும் சாம்ராஜ்யத்துக்காகவும் உழைத்தேன். இனிமேல் சிலகாலம் எனக்காக வாழ்கிறேன். தம்பி! எனக்கு விடைகொடு! எங்கேனும் ஏகாந்தமான பிரதேசத்தைத் தேடிச் செல்கிறேன்." "அண்ணா! இராஜ்ய விவகாரங்களிலிருந்து விலகிக் கொள். அதற்காகக் காடு மலை தேடிப்போக வேண்டாம். வாதாபியிலேயே ஒரு நல்ல மாளிகையைப் பார்த்து எடுத்துக் கொள். வேண்டுமானால் அதில் ஒரு நடன மண்டபமும் கட்டிக்கொள். சிவகாமி அதில் ஆனந்தமாய் நடனமாடட்டும்; நீ பார்த்துக் கொண்டே இரு." "தம்பி! மெய்யாகச் சொல்கிறாயா? இதெல்லாம் எனக்காக நீ செய்து தரப்போகிறாயா?" "நிச்சயமாகச் செய்து தருகிறேன்; ஆனால், அதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது." "நிபந்தனையா? என்னிடமா கேட்கிறாய், தம்பி!"

"நிபந்தனைதான்; ஆனால், உன்னிடம் நான் பிரார்த்தித்துக் கேட்டுக் கொள்ளும் நிபந்தனை; உன்னைத் தவிர யாரும் செய்ய முடியாத காரியம். எனக்கு இந்தக் கடைசி உதவியை நீ செய்து கொடு. அப்புறம் உன்னை நான் ஒன்றும் கேட்பதில்லை." "அது என்ன?" "சற்று முன் சொன்னேனே, அதுதான்; வேங்கியில் விஷ்ணுவர்த்தனன் படுகாயப்பட்டுக் கிடப்பதாகச் செய்தி வந்திருக்கிறது. நாடெல்லாம் கலகமும் குழப்பமுமாய் இருக்கிறதாம். நீ அங்கு உடனே போய் அவனைக் காப்பாற்ற வேண்டும். என்னைப் போல் விஷ்ணுவும் உன் உடன்பிறந்த சகோதரன்தானே?" "உடன் பிறந்த சகோதரன்தான்; ஆனால், அவனுக்கு என்னைக் கண்டால் பிடிப்பதே இல்லை! அவனிடமிருந்து நான் பாரவியைப் பிரித்து விரட்டிய குற்றத்தை அவன் மன்னிக்கவே இல்லை...." "அண்ணா! பாரவி கவியை ஏன் விஷ்ணுவிடமிருந்து நீ பிரித்தாய்? அதனால் எப்பேர்ப்பட்ட விபத்துக்கள் நேர்ந்தன!" "எல்லாம் அவனுடைய நன்மைக்காகத்தான் செய்தேன். அவன் ஓயாமல் கவிதை படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் வீண்பொழுது போக்கிக் கொண்டிருந்தான்...."

புலிகேசி புன்னகை புரிந்தார், மனத்திற்குள் "என் உடன் பிறந்தவர்களில் இரண்டு பேரில் ஒருவனுக்குக் கவிதைப் பைத்தியம்; இன்னொருவனுக்குக் கலைப் பைத்தியம். புத்தி மாறாட்டம் இல்லாதவன் நான் ஒருவன்தான். அன்று விஷ்ணுவைக் காப்பாற்றியதுபோல் இன்று பிக்ஷுவை நான் காப்பாற்றியாக வேண்டும்" என்று எண்ணிக்கொண்டார். பின்னர் கூறினார், "ஆம் அண்ணா! அவனுடைய நன்மைக்காகவே செய்தாய். உன்னுடைய விருப்பத்தின்படி நான்தான் பாரவியை நாட்டை விட்டுப் போகச் சொன்னேன். ஆனால், அதன் பலன் என்ன ஆயிற்று? பாரவி கங்க நாட்டுக்குப் போனான். அங்கிருந்து துர்விநீதனுடைய மகளைப்பற்றி வர்ணித்து விஷ்ணுவுக்குக் கலியாணம் செய்து வைத்தான். பிறகு காஞ்சி நகருக்குப் போனான், அங்கிருந்து காஞ்சி நகரைப் பற்றி வர்ணனைகள் அனுப்பிக் கொண்டிருந்தான். அதனால் காஞ்சி சுந்தரியின் மேல் எனக்கு மோகம் உண்டாயிற்று." "அந்தப் பழைய கதைகளையெல்லாம் எதற்காகச் சொல்கிறாய்?" "உனக்குப் பிடிக்காவிட்டால் சொல்லவில்லை. ஆனால் இந்தக் கடைசி உதவியை நீ எனக்குச் செய்துவிடு, அண்ணா! நாம்தான் காஞ்சியைக் கைப்பற்ற முடியாமல் திரும்புகிறோம். வேங்கியிலிருந்து விஷ்ணுவர்த்தனனும் தோல்வியடைந்து திரும்பினால் அதைக்காட்டிலும் நம்முடைய குலத்துக்கு அவமானம் வேண்டியதில்லை. இந்த ஒரே ஓர் உதவிமட்டும் செய்துவிடு. உன்னுடன் நமது பாதிப் படையை அழைத்துக் கொண்டு போ!" புத்த பிக்ஷு சற்று யோசித்துவிட்டு, "ஆகட்டும் தம்பி; ஆனால், எனக்கு ஒரு வாக்குறுதி தரவேண்டும்!" என்றார். "சிவகாமியைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்பதுதானே? அப்படியே வாக்குறுதி தருகிறேன். இத்தனை காலமும் நீ எனக்குச் செய்திருக்கும் உதவிகளுக்கு இதுகூட நான் செய்ய வேண்டாமா? வாதாபியின் அழகான அரண்மனை ஒன்றில் அவளைப் பத்திரமாய் வைத்து நீ, வரும் வரையில் பாதுகாத்து ஒப்புவிக்கிறேன்." "தம்பி! சிவகாமி கலைத் தெய்வம்; அவளிடம் துராசையுடன் நெருங்குகிறவன் அதோகதி அடைவான். "அதை நான் மறக்கமாட்டேன் ஆனால், நடனக் கலையைப் பற்றி நீ சொல்லச் சொல்ல எனக்கே அதில் ஆசை உண்டாகிவிட்டது. சிவகாமியை நடனம் ஆடச் சொல்லி நான் பார்க்கலாமா?" "அவள் ஆடமாட்டாள்." "அவளாக இஷ்டப்பட்டு ஆடினால்..." "எனக்கு ஆட்சேபமில்லை." "மிகவும் சந்தோஷம்." "தம்பி! நம்முடைய பாட்டனாருக்குச் சத்யாச்ரயர் என்று பட்டம் கொடுத்தார்கள். அதே பட்டப் பெயர் உனக்கும் கிடைத்திருக்கிறது. ஒரு விஷயத்திலாவது உன் பட்டப் பெயருக்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டும்." "சத்தியமாகச் சிவகாமியைப் பத்திரமாய்ப் பாதுகாத்து உன்னிடம் ஒப்புவிக்கிறேன்." இவ்விதம் புலிகேசிச் சக்கரவர்த்திக்கும், புத்த பிக்ஷுவுக்கும் நடந்த நீண்ட சம்பாஷணை முடிவடைந்தது. அன்றிரவு இரண்டாவது ஜாமத்திலே தான் இருவரும் சிவகாமி அரைத் தூக்கமாய்ப் படுத்திருந்த இடத்துக்குச் சென்று நிலா, வௌிச்சத்தில் நின்று, அவளைப் பார்த்தார்கள்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
நாற்பத்து நாலாம் அத்தியாயம்

நள்ளிரவுப் பிரயாணம்

மணிமங்கலம் போர் நடந்து ஏறக்குறைய ஒருமாத காலம் மகேந்திர பல்லவர் உணர்வற்ற நிலையில் படுத்த படுக்கையாய்க் கிடந்தார். போர்க்களத்தில் அவர் மீது பாய்ந்து காயப்படுத்திய கத்தி விஷந்தோய்ந்த கத்தி, என்று தெரியவந்தது. அரண்மனை வைத்தியர்கள் சக்கரவர்த்தியைக் குணப்படுத்த எவ்வளவோ பிரயத்தனப்பட்டும் தக்க பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் திருவெண்காடு நமசிவாய வைத்தியர் வந்து சேர்ந்தார். தளபதி பரஞ்சோதி திருவெண்காட்டுக்கு ஆள் அனுப்பி அவரை வரவழைத்தார். நமசிவாய வைத்தியருடைய சிகிச்சை விரைவில் பலன் தந்தது. மகேந்திரருடைய அறிவும் தௌிவு பெற்றது.

அறிவு தௌிந்ததும் மகேந்திர பல்லவர் முதன்முதலாக ஆயனர் - சிவகாமியைப் பற்றி விசாரித்தார். ஆயனர் கால் ஒடிந்து கிடக்கிறார் என்றும், சிவகாமியைச் சளுக்கர்கள் சிறைப்பிடித்துச் சென்றார்கள் என்றும் தெரிந்ததும் அவர் அடைந்த மனக் கலக்கத்திற்கு அளவே இல்லை. அதனால் குணமான உடம்பு மறுபடியும் கெட்டு விடுமோ என்று பயப்படும்படி இருந்தது. மாமல்லர் தந்தையைப் பார்க்கச் சென்றபோது, அவரை முன்னொரு நாள் ஆயனர் என்ன கேள்வி கேட்டாரோ, அதையே மகேந்திரரும் கேட்டார். "நரசிம்மா! சிவகாமி எங்கே?" என்றார்.

நரசிம்மர் மிக்க வேதனையடைந்தவராய், "அப்பா! அதைப் பற்றி இப்போது என்ன கவலை? முதலில் தங்களுக்கு உடம்பு நன்றாய் குணமாகட்டும்!" என்றார். "மாமல்லா! சிவகாமியிடம் நீ காதல் கொண்டதாகச் சொன்னதெல்லாம் வெறும் வார்த்தை என்று இப்போது தெரிகிறது. இதோ நான் கிளம்புகிறேன், சிவகாமியைக் கண்டுபிடித்துக் கொண்டுவா!" என்று சொல்லிய வண்ணம் மகேந்திர பல்லவர் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முயன்றார். மாமல்லர் வெட்கமும் பரபரப்பும் கொண்டவராய்க் கூறினார்; "அப்பா! தங்களுக்கு உடம்பு குணமாவதற்காகவே காத்திருந்தேன். தாங்கள் என்ன சொல்வீர்களோ என்று சந்தேகமாயிருந்தது தாங்களே இப்படி சொல்லும் போது..."

"வேறு என்ன நான் சொல்வதற்கு இருக்கிறது மாமல்லா? ஆயனருடைய சிற்பத் திறமையும், சிவகாமியின் நடனத்திறமையும் இமயத்திலிருந்து இலங்கை வரையில் பரவியிருக்கின்றன. அப்படிப்பட்ட சிவகாமியை அந்த வாதாபி ராட்சதன் கொண்டு போய்விட்டான் என்றால், அதைக் காட்டிலும் பல்லவ குலத்துக்கு வேறு என்ன அவமானம் வேண்டும்? அப்படிப்பட்ட அவமானத்தைச் சகித்துக் கொண்டு உயிரோடிருப்பதைக் காட்டிலும், போர்க்களத்திலேயே என் உயிர் போயிருந்தால் எவ்வளவோ நன்றாயிருக்கும்." "தந்தையே! இப்படியெல்லாம் பேசவேண்டாம்; தங்களுக்கு உடம்பு குணமானதும் தங்களிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்படுவதற்கு நானும் தளபதியும் ஆயத்தம் செய்திருக்கிறோம்..." "என்ன ஆயத்தம் செய்திருக்கிறீர்கள்?" "படை திரட்டிச் சேர்த்திருக்கிறோம்." "புத்திசாலிகள்தான்! படைகளுடன் சென்றால் சிவகாமியையும் கொண்டுவரமாட்டீர்கள்; நீங்களும் திரும்பி வரமாட்டீர்கள்." மாமல்லர் வியப்புடன், "அப்பா! வேறு என்ன செய்வது? தங்களுடைய யோசனை என்ன?" என்றார். "பரஞ்சோதியையும், சத்ருக்னனையும் அழைத்துக் கொண்டு வா! என்னுடைய யோசனையைச் சொல்கிறேன்" என்றார் மகேந்திரர்.

அவ்விதமே மாமல்லர், பரஞ்சோதி, சத்ருக்னன் ஆகியவர்கள் அன்று மாலை சக்கரவர்த்தியிடம் வந்தபோது, அவர் தமது யோசனையைக் கூறினார். பரஞ்சோதியும் சத்ருக்னனும் மாறுவேடம் பூண்டு வாதாபிக்குப் போய்ச் சிவகாமியை அழைத்துவர வேண்டும் என்பதுதான் அந்த யோசனை. அப்படித் திருட்டுத்தனமாய்ப் போய்ச் சிவகாமியை அழைத்துக் கொண்டு வருவது பற்றி முதலில் மாமல்லர் ஆட்சேபித்தார். திருட்டுத்தனமாய்க் கொண்டு போகப்பட்டவளை அதே முறையில் திருப்பிக் கொண்டு வருவதில் தவறில்லை என்று மகேந்திரர் சொன்னார். அதோடு அவ்விதம் இப்போது ஒருதடவை வாதாபிக்குப் போய்விட்டு வருவது பின்னால் அவர்கள் வாதாபி மேல் பகிரங்கமாகப் படையெடுத்துப் போவதற்கும் அனுகூலமாயிருக்கும் என்று மகேந்திர சக்கரவர்த்தி தெரிவித்தார்.

வாதாபி மீது படையெடுக்கும் யோசனை மகேந்திர பல்லவருக்கு இருப்பது தெரிந்ததும் மாமல்லருக்கும் உற்சாகம் உண்டாகித் தம்முடைய ஆட்சேபங்களையெல்லாம் நிறுத்திக் கொண்டார். எல்லாம் பேசி முடிந்ததும் மாமல்லர் எழுந்து, தந்தைக்குச் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து, "அப்பா! தளபதியுடன் நானும் போய் வருகிறேன். கருணை கூர்ந்து அனுமதி கொடுக்க வேண்டும்!" என்று கெஞ்சுகிற குரலில் விண்ணப்பம் செய்தார். மகேந்திரர் முதலில் இதை மறுதலித்தார். கடைசியில், மாமல்லரிடம் முரட்டுத்தனமான காரியங்களில் இறங்குவதில்லை என்பதாகவும், எல்லா விஷயங்களிலும் தளபதி பரஞ்சோதியின் ஆலோசனைப்படி நடப்பதாகவும் உறுதி பெற்றுக்கொண்டு, விடை கொடுத்தார்.

இரண்டு தினங்களுக்குப் பிறகு நடுநிசி வேளையில், காஞ்சி அரண்மனை முற்றத்தில் ஆறு குதிரைகள் மீது ஆறு பேர் ஆரோகணித்துப் பிரயாணத்துக்கு ஆயத்தமாய் நின்றார்கள். தாடி, மீசை வைத்துக் கட்டிக்கொண்டிருந்த அந்த வேஷதாரிகள் மாமல்லர், பரஞ்சோதி, சத்ருக்னன், குண்டோதரன், கண்ணபிரான், அவனுடைய தந்தை அசுவபாலர் ஆகியவர்கள்தான். அப்படி நின்ற அறுவரும் அரண்மனை மேல்மாடத்தின் முன்றிலை அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சற்று நேரத்துக்கெல்லாம் அந்த முன்றிலுக்கு மகேந்திர சக்கரவர்த்தியும் புவனமகாதேவியும் வந்து சேர்ந்தார்கள். "புறப்படுங்கள்; ஜயத்துடன் சீக்கிரம் திரும்புங்கள்" என்று மகேந்திர பல்லவர் கூறியதும் மாமல்லரும் பரஞ்சோதியும் அவர்களைப் பார்த்து வணங்கிவிட்டுக் குதிரைகளைத் தட்டிவிட்டார்கள். குதிரைகள் அரண்மனை வௌி வாசலைக் கடந்து வீதிக்குப் போனதும், புவனமகாதேவியை மகேந்திர பல்லவர் பார்த்து, "தேவி! இராஜ குலத்தில் பிறந்ததற்குத் தண்டனை இது!" என்று சோகம் ததும்பும் குரலில் கூறினார்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
நாற்பத்தைந்தாம் அத்தியாயம்

மகேந்திரர் அந்தரங்கம்

அன்றிரவு மகேந்திர பல்லவரும் அவருடைய பட்ட மகிஷி புவன மகாதேவியும் கண்ணுறங்கவேயில்லை. அரண்மனை மேல் மாடத்தில், வெள்ளி நட்சத்திரங்களை அள்ளித் தௌித்திருந்த வானவிதானத்தின் கீழ் அமர்ந்து, சென்ற காலத்தையும் வருங்காலத்தையும் பற்றி, அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். "தேவி! என் வாழ்நாளின் இறுதிக் காலத்தில் இப்படி எனக்கு ஆசாபங்கம் உண்டாகுமென்று நான் எதிர்பார்க்கவேயில்லை. என்னுடைய கனவுகளெல்லாம் சிதைந்து போய்விட்டன. துரதிர்ஷ்டத்துக்கு உள்ளானவனை அவனுடைய அந்தரங்க சிநேகிதர்கள் கூடக் கைவிட்டு விடுவார்கள் என்று அரசியல் நீதி கூறுவது எவ்வளவு உண்மை! அதோ வானத்தில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் முன்னேயெல்லாம் என்னைப் பார்த்து, 'மகேந்திரா! உன்னைப் போன்ற மேதாவி இந்தப் பூவுலகில் வேறு யார்? உன்னைப் போன்ற தர்மவான், குணபரன், சத்ருமல்லன், கலைப்பிரியன் வேறு யார்?' என்று புகழ்மாலை பாடுவது வழக்கம். இப்போது அதே நட்சத்திரங்கள், என்னைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டிக் கேலிச் சிரிப்புச் சிரிக்கின்றன. 'மகேந்திரா! கர்வபங்கம் போதுமா? உன்னுடைய அகட விகட சாமர்த்தியங்கள் எல்லாம் விதியின் முன்னால் பொடிப் பொடியாகப் போனதைப் பார்த்தாயா?' என்று கேட்கின்றன..."

மகேந்திரருடைய உடம்பும் உள்ளமும் வெகுவாக நொந்திருந்தன என்பதைச் சக்கவர்த்தினி அறிந்தவளாதலால், அவர் மனத்தை மேலும் புண்படுத்த விரும்பவில்லை. ஆயினும் அவளை அறியாமல் இந்த வார்த்தைகள் வௌிவந்தன. "பிரபு! நாமாகச் செய்து கொள்ளும் காரியத்துக்கு விதி என்ன செய்யும்?" இதைக் கேட்ட மகேந்திர பல்லவர் சோகப் புன்னகை புரிந்து, "மனிதர்களாகிய நாம் எவ்வளவு சாமர்த்தியமாகக் காரியம் செய்தாலும் விதி வந்து குறுக்கிட்டு எல்லாவற்றையும் கெடுத்து விடத்தான் செய்கிறது. என்னுடைய காரியங்களைக் கெடுப்பதற்கு விதியானது சிவகாமியின் ரூபத்தில் வந்தது!" என்றார்.

"ஆ! அந்த ஏழைப் பெண்ணின் மீது ஏன் பழியைப் போடுகிறீர்கள்? அவள் என்ன செய்வாள்?" என்று இரக்கம் ததும்பிய குரலில் கூறினாள் பல்லவர் தலைவி புவனமகாதேவி. "பெண்ணுக்குப் பெண் பரிந்து பேசுகிறாய், அது நியாயந்தான். ஆனாலும், ஆயனர் மகளின் காரணமாகத்தான் என்னுடைய உத்தேசங்கள் எல்லாம் பாழாய்ப் போயின. சிவகாமியிடமிருந்து மாமல்லனைப் பிரித்து வைக்க நான் முயன்று வந்தேன். அதற்காக என்னவெல்லாமோ சூழ்ச்சிகளும் தந்திரங்களும் செய்தேன். நான் செய்த சூழ்ச்சிகளும் தந்திரங்களும் பயன்படாமல் போயின, விதிதான் கடைசியில் வெற்றி பெற்றது."

"விதியானது உங்களுடைய நோக்கத்தைத்தானே நிறைவேற்றி வைத்தது? அந்தப் பெண்ணிடமிருந்து மாமல்லனைப் பிரிப்பதற்குத் தாங்கள் எத்தனையோ ஏற்பாடுகள் செய்தீர்கள். விதி உங்கள் ஒத்தாசைக்கு வந்து அவளை வாதாபிக்கே கொண்டு போய்விட்டது. அப்படியிருக்க, அவளைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்கு நீங்கள் ஏன் பிரயத்தனம் செய்ய வேண்டும்? தங்களுடைய காரியம் எனக்கு விளங்கவில்லையே?" என்று புவனமகாதேவி உண்மையான திகைப்புடன் கேட்டாள்.

"அதைத்தான் அப்போதே சொன்னேன், பழைமையான பல்லவ குலத்திலே பிறந்ததற்குத் தண்டனை இது. சிவகாமியைத் திருப்பிக் கொண்டு வராவிட்டால் பல்லவ குலத்துக்கு என்றென்றைக்கும் மாறாத அவமானம் ஏற்படும். புலிகேசி காஞ்சிப் பல்லவனை முறியடித்துவிட்டு ஊர் திரும்பியதாகப் பெருமையடித்துக் கொள்வான். சிவகாமி வாதாபியில் இருக்கும் பட்சத்தில் புலிகேசியின் ஜம்பத்தையே உலகம் நம்பும்படி இருக்கும். சிவகாமியின் புகழ் ஏற்கெனவே இலங்கை முதல் கன்யாகுப்ஜம் வரையில் பரவியிருக்கிறது. மாமல்லபுரத்துச் சிற்பங்களையும், சிவகாமியின் நடனத்தையும் வந்து பார்த்துவிட்டுப் போக வேண்டுமென்று நானே ஹர்ஷவர்த்தனருக்கு ஓலை அனுப்பியிருந்தேன். அப்படிப்பட்ட சிவகாமி வாதாபியில் சிறை வைக்கப்பட்டிருந்தால் உலகம் என்ன நினைக்கும்? பல்லவ குலத்துக்கு அதைக் காட்டிலும் வேறு என்ன இழிவு வேண்டும்?"

"சுவாமி! தாங்கள் தலையில் அணியும் கிரீடத்தைச் சில சமயம் நான் கையிலே எடுத்துப் பார்த்திருக்கிறேன். அதனுடைய கனத்தை எண்ணி, 'இவ்வளவு பாரத்தை எப்படித்தான் சுமக்கிறீர்களோ!' என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்த இரண்டு மூன்று வருஷத்திலேதான் எனக்குத் தெரிந்தது, தலையிலே அணியும் மணிமுடியைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு பாரத்தைத் தாங்கள் இருதயத்திலே தாங்க வேண்டியிருக்கிறதென்று. 'இராஜ்ய பாரம்' என்று உலக வழக்கிலே சொல்வது எவ்வளவு உண்மையான வார்த்தை?" என்று சக்கரவர்த்தினி உருக்கமான குரலில் கூறினாள்.

"ஒரு காலத்தில் அந்தப் பாரத்தை நான் வெகு உற்சாகத்துடன் தாங்கினேன். இப்போது அதுவே தாங்க முடியாத பெரும் பாரமாய் என் இருதயத்தை அமுக்குகிறது. தேவி! மூன்று வருஷத்துக்கு முன்பு வரையில் நான் ஆகாசக் கோட்டைகள் கட்டி வந்தேன். ஆம்; காஞ்சிக் கோட்டையை அலட்சியம் செய்து விட்டு ஆகாசக் கோட்டைகள் கட்டினேன். இந்தப் பூவுலகத்தைச் சொர்க்க பூமியாகச் செய்து விடலாம் என்று கருதினேன். என்னுடைய மூதாதையர்களையெல்லாம் மனத்திற்குள் நிந்தித்தேன். வீணாகச் சண்டை பூசல்களிலும் இரத்தக் களறிகளிலும் அவர்கள் காலத்தைக் கழித்தார்களே என்று வருத்தப்பட்டேன். மாமல்லபுரத்தில் எல்லாச் சமயங்களுக்கும் அழியாத கற்கோயில்கள் கட்டத் தொடங்கினேன். கோயில்கள் கட்டி முடிந்ததும் ஹர்ஷனையும் புலிகேசியையும் அழைக்க நினைத்திருந்தேன். இந்த ஆகாசக் கோட்டைகளையெல்லாம் அந்தச் சளுக்க அரக்கன் பொடிப் பொடியாக்கி விட்டான். அவன் தொண்டை மண்டலத்துக் கிராமங்களில் வைத்த தீ சீக்கிரத்தில் அணையப் போவதில்லை. பல்லவர் படை வாதாபிக்குப் போய்ப் புலிகேசியை முறியடித்தாலொழியப் பல்லவ குலத்துக்கு நேர்ந்த அவமானம் தீரப் போவதில்லை. இது என் காலத்தில் நிறைவேறாவிட்டால், மாமல்லனுடைய காலத்திலாவது நிறைவேறியாக வேண்டும்." "பிரபு! என் வீர மகன் நிச்சயமாகத் தங்கள் மனோரதத்தை நிறைவேற்றுவான். பல்லவ குலத்துக்கு நேர்ந்த பழியைத் துடைப்பான்!" என்று புவனமகாதேவி பெருமிதத்துடன் கூறினாள்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
நாற்பத்தாறாம் அத்தியாயம்

வாதாபி

டபெண்ணைக் கரையிலிருந்து சளுக்க சைனியத்தின் பெரும் பகுதி வடமேற்குத் திசையாக வாதாபி நகரத்தை நோக்கிக் கிளம்பிற்று. சிவகாமியும் அந்தச் சைனியத்துடன் பிரயாணம் செய்தாள். தொண்டை மண்டலத்துக் கிராமங்களிலே பார்த்த பயங்கரங்களைக் காட்டிலும் கொடுமையான காட்சிகளைப் பார்த்துக் கொண்டு போனாள். வீடுகளும் வைக்கோற் போர்களும் பற்றி எரிவதையும், பசுமையான தோப்புக்கள் போர் யானைகளால் அழிக்கப்படுவதையும், பயிர்கள் நாசமாக்கப்படுவதையும் பார்த்துக் கொண்டு போனாள். குற்றமற்ற கிராமத்து ஜனங்கள் கொல்லப்படுவதையும், திடகாத்திர புருஷர்களும் இளம் வயதுப் பெண்களும் சிறைப்பிடிக்கப்படுவதையும் தாய்மாரைப் பிரிந்த குழந்தைகள் அலறி அழுவதையும் பார்த்துக் கொண்டு போனாள்.

சிவகாமியின் உள்ளத்திலும் பெரிய தீப்பிழம்பு ஜுவாலை விட்டு எரியத் தொடங்கியது. வாதாபிச் சக்கரவர்த்தியை மீண்டும் சந்தித்து இம்மாதிரி அக்கிரமக் கொடுமைகளைச் செய்ய வேண்டாமென்று வேண்டிக் கொள்ள விரும்பினாள். பல தடவை அதற்காகப் பிரயத்தனம் செய்தாள். தன்னுடன் வந்த காவலர்களை தன்னைப் புலிகேசியிடம் அழைத்துப் போகும்படி கேட்டுக் கொண்டாள். அந்தக் காவலர்கள் அவள் கூறியதைக் காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை. ஒவ்வொரு சமயம் அவள் இரவில் தூங்கும் போது, 'ஹ ஹா ஹா' என்று பேய் சிரிப்பது போன்ற சிரிப்புச் சப்தம் கேட்கும். திடுக்கிட்டுக் கண்ணை விழித்துப் பார்ப்பாள். எதிரே சற்றுத் தூரத்திலிருந்து வாதாபிச் சக்கரவர்த்தியின் உருவம் திரும்பிப் போவது போலத் தோன்றும். எழுந்து உட்காருவதற்குள் அந்த உருவம் மறைந்து போய் விடும். தன்னுடைய சித்தப் பிரமையில் தோன்றிய உருவந்தான் அது என்று எண்ணிக் கொள்வாள்.

புலிகேசி இளம் பிராயத்தில் சிற்றப்பன் மங்களேசனால் பெரிதும் கொடுமை செய்யப்பட்டவன். அதன் காரணமாக, மரத்திலே வைரம் பாய்வது போல் அவனுடைய சுபாவத்திலேயே குரூரம் கலந்து இறுகிக் கெட்டிப்பட்டிருந்தது. நாகநந்தியின் உதவியால் வாதாபிச் சிம்மாசனம் ஏறிய காலத்திலிருந்து உள்நாட்டு எதிரிகளை ஒழித்தல், வௌிப் பகைவர்களோடு யுத்தம் செய்தல் முதலிய கொடுங் காரியங்களிலேயே புலிகேசியின் வாழ்நாளெல்லாம் சென்றிருந்தது. பிறருடைய துன்பங்களைப் பார்த்து வருந்துவது என்பது புலிகேசியின் சுபாவத்தில் இல்லவே இல்லை. தற்சமயம், புலிகேசியின் சுபாவக் குரூரத்தை ஒன்றுக்குப் பத்தாக வளரச் செய்த காரணங்கள் இரண்டு ஏற்பட்டிருந்தன.

ஒன்று, மகேந்திர பல்லவனுடைய மாய தந்திரங்களினால் தம்முடைய தென்னாட்டுப் படையெடுப்பு அபஜயமாக முடிந்ததில் ஏற்பட்டிருந்த ஆசாபங்கம். இன்னொன்று, இதுகாறும் வாதாபி இராஜ்யத்தின் பெருமையையும் தம்முடைய க்ஷேமத்தையும் தவிர வேறு கவனமே இல்லாமலிருந்த நாகநந்தியடிகளின் உள்ளத்தை ஒரு பல்லவ நாட்டுப் பெண் கவர்ந்து விட்டாளே என்ற அசூயையும் ஆத்திரமும். இக்காரணங்களினால் தம் உள்ளத்தில் கொழுந்துவிட்டெரிந்த குரோதத்தையெல்லாம் புலிகேசிச் சக்கரவர்த்தி தாம் சென்ற மார்க்கத்தில் எதிர்ப்பட்ட குற்றமற்ற ஜனங்கள் மீது காட்டினார். அதனோடு, சிவகாமியின் மீது வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்கும் தக்க வழியை யோசித்துக் கொண்டிருந்தார். இதையெல்லாம் அறிந்திராத சிவகாமி, தான் மட்டும் வாதாபிச் சக்கரவர்த்தியை இன்னொரு தடவை நேருக்கு நேர் சந்திக்க முடிந்தால், அவருடைய படைகள் செய்யும் கொடுமைகளையெல்லாம் நிறுத்தி விடலாம் என்று ஆசையுடன் நம்பினாள். அவளுடைய இந்த மனோரதம் வாதாபி போய்ச் சேரும் வரையில் நிறைவேறவில்லை.

வாதாபியில் பெரியதோர் அழகான அரண்மனையில் சிவகாமி கொண்டு வந்து சேர்க்கப்பட்டாள். அவளுக்குத் துணையாகவும், பணிவிடை புரிவதற்காகவும் இரண்டு தாதிப் பெண்கள் அமர்த்தப்பட்டார்கள். அவர்கள் பிராகிருதமும் தமிழும் கலந்த பாஷையில் பேசினார்கள். அந்தத் தாதிப் பெண்களுடைய பேச்சையெல்லாம் சிவகாமி எளிதில் புரிந்து கொள்ளுதல் சாத்தியமாயிருந்தது. சக்கரவர்த்தி கட்டளையின் பேரிலேயே அந்த அரண்மனை சிவகாமிக்காகத் திட்டம் செய்யப்பட்டதென்றும், அவளுக்கு யாதொரு சௌகரியக் குறையும் இல்லாதபடி பார்த்துக் கொள்ளும்படி ஆக்ஞை என்றும் மேற்படி தாதிப் பெண்களிடம் சிவகாமி தெரிந்து கொண்டாள். இதெல்லாம் அவள் எதிர்பார்த்தபடியே இருந்தது. ஆகவே, கூடிய சீக்கிரம் புலிகேசிச் சக்கரவர்த்தி தன்னைப் பார்க்க அங்கு வருவாரென்றும் சிவகாமி தீர்மானித்தாள். அப்படி அவர் வரும் போது என்ன பேச வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ஓயாமல் சிந்தித்த வண்ணமிருந்தாள்.

சக்கரவர்த்தியின் விஷயத்தில் சிவகாமியின் மனோபாவம் இரண்டு விதமாயிருந்தது. ஒரு சமயம், அவருடைய சைனியம் செய்த கொடுஞ் செயல்களை எண்ணி எண்ணி அவளுடைய உள்ளம் கொதித்தது. மற்றொரு சமயம், அப்பேர்ப்பட்ட கொடுங்கோல் மன்னன் மீது அபலையாகிய தனக்கு ஏற்பட்டிருந்த சக்தியை நினைத்து அவள் உள்ளம் பெருமிதம் அடைந்தது. இராவணன் கவர்ந்து சென்று அசோக வனத்தில் சிறைவைத்த சீதாதேவியின் நினைவு சிவகாமிக்கு அடிக்கடி வந்தது. சீதையின் நிலைமைதான் தன்னுடைய நிலைமையும். இராமபிரான் இராவணனை வென்று சீதையைச் சிறை மீட்டுக் கொண்டு போனது போல் மாமல்லர் ஒருநாள் வந்து இந்தப் பாதகப் புலிகேசியை வென்று தன்னைச் சிறை மீட்டுக் கொண்டு போகப் போகிறார்!

இவ்விதம் நம்பிய சிவகாமி, சீதைக்கும் தனக்கும் இருந்த வித்தியாசத்தைப் பற்றியும், எண்ணமிட்டாள். சீதாதேவியை இராவணன் அவளுடைய அழகுக்காக ஆசைப்பட்டு அபகரித்துக் கொண்டு வந்தான். அவளைக் கலியாணம் செய்து கொள்ள விரும்பினான். ஆனால், புலிகேசியோ தன்னிடமிருந்த நாட்டியக் கலையின் மேல் மோகங்கொண்டு தன்னைச் சிறைப்பிடித்து வந்திருக்கிறான். (புலிகேசியே மாறுவேடம் பூண்ட புத்த பிக்ஷு என்னும் நம்பிக்கை சிவகாமியின் உள்ளத்தில் வேரூன்றியிருந்தபடியால் இவ்விதம் எண்ணினாள்.) ஆகையால், இராவணன் மீது சீதைக்கு இல்லாத செல்வாக்கு, தனக்கு வாதாபிச் சக்கரவர்த்தியின் மீது இருக்கிறது. தன் கலையின் சக்தி கொண்டு அவரைத் தன் இஷ்டப்படியெல்லாம் ஆட்டி வைக்கலாம். ஆ! அந்தப் பொல்லாத புத்த பிக்ஷுவைத் தான் இலேசில் விடப்போவதில்லை. வரட்டும் இங்கே! எப்படியும் என்னிடம் வந்துதானே ஆக வேண்டும்?

சிவகாமி வாதாபி வந்து சேர்ந்த எட்டாம் நாள் அவளுடைய மனோரதம் ஈடேறியது. சக்கரவர்த்தி அவளைப் பார்ப்பதற்காக அந்த அரண்மனைக்கு வந்தார். வாசற்புறமிருந்த தாதி ஓடி வந்து, "சக்கரவர்த்தி வருகிறார்!" என்று தெரிவித்ததும், சிவகாமி மிக்க பரபரப்புக் கொண்டு வாதாபிச் சக்கரவர்த்தியை வரவேற்கவும், அவர்மீது தன் கூரிய கண்ணம்புகளையும், சொல்லம்புகளையும் செலுத்தவும் ஆயத்தமானாள். ஆனால், சக்கரவர்த்தி அரண்மனைக்குள்ளே வந்து நின்று அவளை மேலும் கீழும் ஏறிட்டுப் பார்த்து விட்டு, அவள் கனவிலே கேட்டது போன்ற ஒரு பேய்ச் சிரிப்புச் சிரித்ததும், சிவகாமி எண்ணியிருந்த எண்ணமெல்லாம் எங்கேயோ போய் விட்டன. இன்னதென்று சொல்ல முடியாத ஒரு பீதி அவளுடைய இருதயத்தில் புகுந்து தேகமெல்லாம் வியாபித்துத் தேகத்தின் எலும்புகளுக்குள்ளே பிரவேசித்து ஒரு குலுக்குக் குலுக்கி விட்டது. வாயைத் திறந்து பேச முடியாதபடி நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.

"சிற்பி மகளே! நாட்டிய கலாராணியே! மகேந்திர பல்லவனின் கலைப் பொக்கிஷமே! சௌக்கியமா? வாதாபி வாசம் உனக்குப் பிடித்திருக்கிறதா?" என்று புலிகேசி கேட்ட போது, சிவகாமியின் உடம்பு படபடத்து நடுங்கிற்று. தன்னுடைய நாட்டியத் தோற்றங்களிலே வெகு சாதாரணமான தோற்றத்தைக் கண்டு அப்படியே பரவசப்பட்டு நின்ற புத்த பிக்ஷுவா இவர்? தன்னிடம் அணுகும்போதே பயபக்தியுடன் அணுகி உணர்ச்சி மிகுதியினால் தன்னுடன் பேச முடியாமல் தத்தளித்து நின்ற நாகநந்தி இவர்தானா? பொன்முகலி நதிக்கரையில் தொண்டை நாட்டுப் பெண்களை விடுதலை செய்ய வேண்டுமென்று தான் வரங் கேட்டுப் பெற்ற போது, அவர் இவ்விதமில்லையே? வாதாபி நகருக்கு வந்து விட்டதனாலேயே இவரிடம் இந்த வித்தியாசம் ஏற்பட்டிருக்கிறதா?

இவ்விதம் சிவகாமியின் உள்ளக் கடல் கொந்தளித்துக் குழம்ப, புலிகேசியின் கேள்விகளுக்கு மறுமொழி ஒன்றும் சொல்ல முடியாமல் நின்றாள். அதைப் பார்த்த புலிகேசி, "பெண்ணே! ஏன் மௌனம் சாதிக்கிறாய்? 'கலை உணர்ச்சியில்லாத வாதாபிப் புலிகேசியுடன் நமக்கு என்ன பேச்சு' என்ற எண்ணமா? அப்படி நான் அடியோடு கலை உணர்ச்சி இல்லாதவனல்ல. அவ்விதமிருந்தால் சிறைப்பிடித்துக் கொண்டு வந்த உன்னை இந்த அரண்மனையில் வைத்திருப்பேனா? பல்லவ நாட்டின் இணையற்ற நடன கலாராணிக்குத் தகுந்த அலங்கார மாளிகையல்லவா இது? இங்கு உனக்கு எல்லாம் சௌகரியமாயிருக்கிறதா? பணிப்பெண்கள் திருப்தியாகப் பணிவிடை செய்கிறார்களா? ஏதாவது குறை இருந்தால் சொல்!" என்றார்.

புலிகேசியின் பேச்சு எவ்வளவோ அருவருப்பாயிருந்த போதிலும் இனிப் பேசாமல் இருக்கக் கூடாது என்று சிவகாமி கருதி, மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு, "பிரபு! இங்கு எல்லாம் சௌகரியமாயிருக்கிறது; ஒரு குறையும் இல்லை, மிக்க வந்தனம்!" என்றாள். "ஆஹா! வாய் திறந்து பேசுகிறாயா? நல்லவேளை! நீ மௌனமாய் நின்றதைப் பார்த்து விட்டு, நீ உயிருள்ள பெண்தானா அல்லது உன் தந்தை அமைத்த கற்சிலைகளில் ஒன்றைத்தான் சிறைப் பிடித்துக் கொண்டு வந்து விட்டோமா என்று சந்தேகித்தேன். நீ இந்த மட்டும் பேசியது மிக்க சந்தோஷம். நீ வாயினால் சொன்னபடி உண்மையாகவே எனக்கு வந்தனம் செலுத்த விரும்பினால் அதற்கு ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது..." என்ற புலிகேசி மேலும் கூறத் தயங்கி நின்றார்.

அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்ற பீதியுடன் சிவகாமி மௌனமாயிருந்தாள். "பெண்ணே! அந்த மூடன் மகேந்திர பல்லவன் என்னைக் கலை உணர்ச்சி அற்றவன் என்று சொன்னான்; அதை நீயும் நம்பினாய். நரிக்கும் புலிக்கும் எவ்வளவு வித்தியாசமோ, குட்டைக்கும் சமுத்திரத்துக்கும் எவ்வளவு வித்தியாசமோ, உள்ளங்கை அகலமுள்ள தொண்டை மண்டலத்துக்கும் விஸ்தாரமாகப் பரந்த சளுக்க சாம்ராஜ்யத்துக்கும் எவ்வளவு வித்தியாசமோ, அவ்வளவு வித்தியாசம் மகேந்திர பல்லவனுடைய கலை உணர்ச்சிக்கும் என்னுடைய கலை உணர்ச்சிக்கும் உண்டு. கூடிய சீக்கிரத்தில் இதை நீயே தெரிந்து கொள்வாய். கலா ராணியே! கேள்! தொலை தூரத்திலுள்ள பாரசீக நாட்டுச் சக்கரவர்த்தியிடமிருந்து என்னுடைய சபைக்குத் தூதர்கள் வந்திருக்கிறார்கள். என்னுடைய நட்பைக் கோரிப் பாரசீகச் சக்கரவர்த்தி காணிக்கைகளும் சன்மானங்களும் அனுப்பியிருக்கிறார். பாரசீகத் தூதர்களைப் பகிரங்கமாக வரவேற்பதற்கும் அவர்கள் கொண்டு வந்த காணிக்கைகளை ஏற்பதற்கும் நாளைய தினம் மகுடாபிஷேக மண்டபத்தில் மகாசபை கூடுகிறது. அந்த மகாசபையில் வந்து நீ நடனம் செய்ய வேண்டும்."

இத்தனை நேரம் பயமும் பலவகைக் குழப்பங்களும் குடிகொண்டிருந்த சிவகாமியின் உள்ளம் நடனம் என்ற வார்த்தையைக் கேட்டதும் அசாதாரண தைரியத்தை அடைந்தது. கொஞ்சமும் தயங்காமலும் பயப்படாமலும் தலைநிமிர்ந்து புலிகேசியை நோக்கி அழுத்தந் திருத்தமான குரலில், "முடியாது" என்றாள். புலிகேசியின் கண்கள் ஒருகணம் ஜுவாலாக்கினியைக் கக்கின. தன்னை மீறிக் கொண்டு வந்த கோபத்தைப் புலிகேசி பல்லைக் கடித்துச் சமாளித்துக் கொண்டதாகத் தோன்றியது. "பெண்ணே! ஏன் இவ்வளவு கண்டிப்பாக 'முடியாது' என்று சொல்லுகிறாய்? மூன்று நாள் உனக்கு அவகாசம் கொடுக்கிறேன்; யோசித்துச் சொல்!" என்றார் புலிகேசி.

"யோசிப்பதற்கு அவசியமேயில்லை, பிரபு! என்னைத் தங்களுடைய சபையில் ஆடச் சொல்லி, மகேந்திர பல்லவரைத் தாங்கள் ஜயித்து வந்தது பற்றி உலகத்துக்கெல்லாம் பறையறையப் போகிறீர்கள். 'பல்லவ நாட்டிலிருந்து கொண்டு வந்த அடிமை இவள்!' என்று சுட்டிக் காட்டப் போகிறீர்கள். ஆ! தங்கள் நோக்கம் தெரிந்தது. தாங்கள் என்னைச் சிறைப்பிடிக்கலாம், என்னுடைய தேகத்தை அடிமை கொள்ளலாம். என் ஆத்மாவையும் கட்டுப்படுத்தலாம்; ஆனால், என்னிடமுள்ள கலையைத் தங்களால் அடிமைப்படுத்த முடியாது. அதிகாரத்துக்கு அடங்கி, ஆக்ஞைக்குப் பயந்து நான் நடனம் ஆட மாட்டேன்! ஒரு நாளும் ஆட மாட்டேன்" என்றாள்.

ஆத்திரம் பொங்கிய குரலில் சிவகாமி மேற்கூறிய மொழிகளைக் கூறி வந்த போது புலிகேசியின் கண்கள் செந்தணல் நிறம் பெற்று அனல் உமிழ்ந்தன. சிவகாமி பேசி முடித்ததும் புலிகேசி பழையபடி ஒரு பேய்ச் சிரிப்புச் சிரித்தார். "பெண்ணே! பொறு! இவ்வளவு பதற்றம் உனக்கு எங்கிருந்து வந்தது? அப்படியொன்றும் உன் தேகத்தையோ, உன் கலையையோ அடிமைப்படுத்த எனக்கு உத்தேசமில்லை. உனக்கு இஷ்டமில்லாவிட்டால் நீ நடனம் ஆட வேண்டாம். இந்த அரண்மனைக்குள்ளே உன்னைச் சிறைப்படுத்தி வைத்திருப்பதாகவும் எண்ண வேண்டாம். உனக்கு இஷ்டமான போது நீ இந்த மாளிகையை விட்டு வௌியே போகலாம். வாதாபி நகரைச் சுற்றிப் பார்த்து விட்டு வரலாம். உங்கள் காஞ்சியைப் போல் எங்கள் வாதாபி அவ்வளவு அழகாயில்லாவிட்டாலும், ஏதோ பார்க்கத் தகுந்த காட்சிகள் இங்கேயும் இருக்கின்றன. இந்த அரண்மனை வாசலில் காவல் காப்பவர்கள் உன்னைச் சிறை வைப்பதற்காக இங்கு இருக்கவில்லை. உனக்கு ஏவல் புரிவதற்காக இருக்கிறார்கள். நீ எப்போது சொல்கிறாயோ அப்போது அவர்கள் உனக்குப் பல்லக்குத் தருவித்துக் கொடுப்பார்கள். மறுபடியும் என்னைப் பார்ப்பதற்கு நீ விரும்பினாலும் அவர்களிடமே சொல்லி அனுப்பலாம். சிற்பி மகளே! நீ என் அதிகாரத்துக்குப் பயந்து நடனமாட வேண்டாம். உன் இஷ்டம் போல் சுயேச்சையாகவும் சுகமாகவும் இருக்கலாம்!"

இவ்விதம் சொல்லி விட்டுப் புலிகேசிச் சக்கரவர்த்தி சிவகாமியைக் கூர்ந்து பார்த்தார். அந்தப் பார்வையில் எல்லையில்லாத துவேஷமும், பழிவாங்கும் உறுதியும் குடிகொண்டிருந்ததைச் சிவகாமி கவனிக்கவில்லை. அந்த ஏழைப் பெண் அப்போது தரையை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள். கொடுமைக்கும் கொடூரத்துக்கும் பெயர் போன வாதாபிப் புலிகேசியைத் தான் வென்று விட்டதாக அவளுடைய உள்ளம் இறுமாப்புடன் எண்ணமிட்டுக் கொண்டிருந்தது. அன்று மாலை சிவகாமி வாசற் காவலரிடம் தான் வாதாபி நகரைச் சுற்றிப் பார்க்க விரும்புவதாகக் கூறிப் பல்லக்குக் கொண்டு வரச் சொன்னாள். "உன்னை இங்கே சிறை வைத்திருக்கவில்லை; உன் இஷ்டப்படி வௌியே சென்று வரலாம்" என்று புலிகேசி கூறியது அவள் மனத்தை விட்டு அகலாதிருந்தது. தன்னுடைய சுதந்திரத்தை அன்றே பரிசோதித்து விட எண்ணிப் பல்லக்கில் ஏறிக் கொண்டு புறப்பட்டாள்.
 
Top Bottom