Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL சிவதாசன் எனும் நான் - Tamil Novel

Status
Not open for further replies.

Meerajo

Member
Vannangal Writer
Messages
33
Reaction score
6
Points
8
RD-22 -சிவதாசன் எனும் நான்!... அத்தியாயம் -10

கோயிலுக்குச் செல்வதற்காகப் பல்லக்கில் ஏறச்சென்ற ருத்ராதேவியை நோக்கிப் பதட்டமாக ஓடி வந்த யாழ்.

"இளவரசி! பாண்டிய குமாரரும், அவருடைய நண்பரும், வீரர்களும் பாசறையிலிருந்து புறப்பட்டுச் சென்று விட்டனராம்." என்று கூறியதும் அதிர்ச்சியடைந்த ருத்ராதேவி, 'ஏன்?' என்ற கேள்வியுடன் தூரத்தில் தெரிந்த சிவன் கோயிலின் கோபுரத்தைப் பார்த்தாள்…

கிழக்குத் திசை சிவப்பு ஆடை உடுக்க, விடிகாலைப் பொழுதை அறிவிக்கும் விதமாகப் புள்ளினங்கள் கோபுரத்திலிருந்து பறந்து சென்றன... அதைக் கண்ட ருத்ராதேவி,

'இவ்வளவு உயிர்களுக்கு உறைவிடம் அளிக்கும் எந்தையே… எமக்கு உம் மனதில் சிறிதேனும் இடமிருத்தால் இந்தச் சோதனை வருமோ?' என்று மனமுருகி வேண்டிய சமயத்தில் கோயிலில் உள்ள ஆலயமணி ஒலித்தது…

இமையோரங்களில் நீர் கோர்த்தை யாரும் அறியாமல் மறைத்தபடி, யாழின் அருகில் சென்ற ருத்ராதேவி, "எப்பொழுது சென்றார்கள்? என் அப்பா எங்கே இருக்கிறாரென்று பார்த்தாயா?" என்று பதற்றமாகக் கேட்டாள்.

"அரசர் அரண்மனையில் தான் இருக்கிறார். பாண்டிய குமாரர், நம் அரச மணிமகுடத்தையும் பெற்றுச் செல்லவில்லை... அவர் எப்போது இங்கிருந்து சென்றார் என்பதும் யாருக்கும் தெரியவில்லை." எனப் படபடவென பதில் உரைத்தாள் யாழ்.

"கோட்டை வாயிலில் இருக்கும் காவலாளிகள் கூட அறியாவண்ணம் பாசறையிலிருந்தவர் சென்றதெப்படி?" என்று ருத்ராதேவி கேட்டதும்,

"அவர்களுக்குத் தெரியாமல் இருக்காது இளவரசி! விசாரிக்க ஆள் அனுப்பியிருக்கிறேன்…" என்று கூறினாள் யாழ்.

ஒரு நிமிடம், 'கோயிலுக்குச் செல்வதா? வேண்டாமா?' என்று தடுமாறிய ருத்ராதேவி, கோயிலுக்கே செல்வதென்று முடிவெடுத்து யாழிடம்,

"மற்றொரு பல்லக்கில் என்னைப் பின்தொடர்ந்து வா!" என்று கூறிவிட்டுப் பல்லக்கில் ஏறினாள்.

'மாறன், என் தந்தையின் மணிமகுடத்தைக் கூடப் பெற்றுக்கொள்ளாமல் அவசரமாக ஏன் சென்றான்?' என்ற எண்ணங்களே சுழன்றதால், எப்பொழுதும் போல் நிதானமாக ஒவ்வொரு பரிவார தெய்வங்களையும் வணங்காமல், வேகவேகமாக வணங்கிவிட்டு, கருவறையில் வீற்றிருந்த லிங்க ஸ்வரூபனாகிய ஈசனின் முன் நின்ற ருத்ராதேவியின் கண்களில் வற்றாத அருவியாகக் கண்ணீர் வழிந்தோடியது…

அதனைக் கண்ட யாழ் பதறி, "இளவரசி! தயைகூர்ந்து மனதைக் கட்டுப்படுத்துங்கள்… எவரேனும் தங்களின் கண்ணீரைப் பார்த்து விட்டால், உடனடியாக நம் அரசருக்குத் தெரிவிக்கக்கூடும்" என்றதும்.

அப்பொழுதுதான் கண்ணீர் வழிவதை உணர்ந்த ருத்ராதேவி சட்டென்று அவ்விடம்விட்டு அகன்று கண்ணீரைத் துடைத்துவிட்டு உமையவளின் சன்னதிக்குச் சென்றாள்.

"தாயே! எனக்குள் ஏன் இவ்வளவு தடுமாற்றம்! மாறனை ஒரே ஒரு தினம் பார்த்ததிலேயே மனம் பறிபோய்விட்டதா?! அந்தப் அளவிற்கா என் மனம் பலவீனமாக இருக்கிறது? எவ்வளவு முயன்றும் இதயம் கலங்குவதைத் தடுக்கும் வழி அறியாமல் தவிக்கிறேன் தாயே! என்னைப்போல் மானிடப் பெண்ணான நீ, அந்த ஈசனையே விரும்பி, கணவனாகப் பெற்றாய்… ஈசனை மணப்பதற்குள் எத்தனை தடைகளைக் கடந்திருப்பாய்? காதல் மணம் புரிந்த பெண்ணாக உனக்கு, என் மனவேதனையும் புரியும்… மாறன் என் இதயத்தில் நீங்கா இடம்பிடித்துவிட்டான்… ஆனால் அவர் மனதில் என்ன இருக்கிறதென்று தெரியவில்லை… அதை அறிந்துகொள்ளும் வழியும் தெரியவில்லை... அவரை மறந்து வாழ்வதும் என்னால் முடியாது... என் விருப்பம் நிறைவேற அருள்புரியுங்கள் தாயே…" என்று உமையவளிடம் மனமுருகி வேண்டினாள்.

தெய்வ தரிசனத்திற்குப் பிறகு தனிமையில் மனம்விட்டு பெசுவதற்காக ஆலயத்தின் சுற்றுப்பிரகாரத்தில் அமர்ந்திருந்தனர் ருத்ராதேவியும், யாழும்.

ஒரு நாழிகை கடந்தும் இருவருமே ஏதும் பேசாமல் அமைதியாக, சிந்தனை வயப்பட்டவர்களாய் அமர்ந்திருந்தனர்.

அந்த நேரத்தில் அங்கு வந்தான் அரண்மனைக் காவலாளி!

"இளவரசி தேவியாருக்கு வணக்கம்! கோட்டை வாசலில் இருந்த காவலாளிகளிடம், பாண்டிய குமாரர் பற்றி விசாரிக்கச் சென்றிருந்தேன். இன்று அதிகாலை விடிவதற்கு இரண்டு நாழிகைக்கு முன்பே அனைவரும் பாசறையைவிட்டுப் புறப்பட்டுச் சென்று விட்டதாகக் காவலாளிகள் கூறினர்." என்று கூறிய காவலாளியிடம்,

"நல்லது! நீங்கள் போகலாம்!" என்று யாழ் கூற,

ருத்ராதேவி எதுவும் கூறாமலிருக்கவே, சிறிது தயங்கி நின்றவன், இடைவரை குனிந்து, "உத்தரவு தாருங்கள் இளவரசி!" என்று கூறி வணங்கி விட்டுச் சென்றான் அந்தக் காவலாளி.

"என்ன காரணமாக இருக்கும் என்று உன்னால் ஏதாவது யூகிக்க முடிகிறதா யாழ்?"

"இன்று அதிகாலை விசாரித்தபொழுது ஒரு தகவல் கேள்வியுற்றேன்... நேற்று இரண்டு பணியாளரகள், என் தந்தையார் அனுப்பிவைத்து, என்னைத் தேடி வந்ததாகவும், நான் உங்களுடன் வெகுநேரம் அந்தரங்கமாக உரையாடிக் கொண்டிருந்ததால் திரும்பிச் சென்று விட்டதாகவும், நம் பணிப்பெண் கூறினாள். ஆனால் 'அவ்விதம் எந்தப் பணியாளரையும் நான் அனுப்பவில்லை' என்று என் தந்தை கூறினார். இதிலிருந்து ஒருவேளை நேற்று வந்த இருவர் பாண்டிய குமாரரும் அவருடைய நண்பருமாக இருக்கக் கூடும் என்று நினைக்கிறேன்."

"இதை ஏன் வந்ததும் கூறவில்லை?" என்று சட்டென்று கேட்ட ருந்ராதேவியிடம்,

"இப்பொழுதுதான் யோசித்துப் பார்த்தேன்… அதுமட்டுமின்றி, இது என்னுடைய யூகம் தானே தவிர, உறுதியான தகவல் கிடையாது இளவரசி!" என்று கூறினாள் யாழ்.

உடனே இருவரும் அரண்மனைக்குச் சென்று, மாறனையும் விக்ரமனையும் பார்த்த பணிப்பெண்களை அழைத்து, யாழைத் தேடி வந்தவர்களின் அங்க அடையாளங்களைக் கூறுமாறும், வந்தவர்களிருவரும் யாருடனாவது பேசினார்களா? ஏதேனும் தகவல் கூறிவிட்டுச் சென்றார்களா? என்றும் பலவாறு விசாரித்தனர்…

பணிப்பெண்கள் கூறிய அங்க அடையாளங்களிலிருந்து, 'வந்தது மாறனும் விக்ரமனுமாகத்தான் இருக்க வேண்டும்!' என்று ருத்ராதேவியும், யாழும் முடிவுக்கு வந்தனர்.

ஒருவேளை வந்தவர்கள் மாறன் என்றால், எதற்காக வந்தார்? ஏன் எதுவும் கூறாமல் சென்றுவிட்டார்? யாழைத் தேடி வந்தாரா? அல்லது அதைச் சாக்கிட்டு என்னைக் காண வந்தாரா?'என்று மேல்மாடத்தில் வந்தமர்ந்து, என்ன நடந்திருக்க்கூடும் என்று எண்ணிய ருத்ராதேவிக்கு ஒரு சந்தேகம் வலுக்க,

முன்னும் பின்னும் நடந்தவாறு யோசித்துக் கொண்டிருந்த யாழிடம்,

"நாம் நேற்று மேல்மாடத்தில் பேசிக்கொண்டிருந்தை அவர்கள் கேட்டிருக்கக் கூடுமோ?" என்று கேட்ட ருத்ராதேவியிடம்,

"இருக்கலாம்!" என்று யாழ் கூறியதும்,

முந்தைய தினம் தங்களுக்குள் நடைபெற்ற உரையாடலை இருவரும் நினைவு கூர்ந்தனர்.

"ஈஸ்வரா! நேற்று நாம் அவரைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருந்தோம்!" என்று யாழ் பதற,

"அவர்கள் ஏன் உன்னைத் தேடி வந்தார்கள்?" என்ற ருத்ராதேவியின் குரல் தேய,

"நேற்று வந்தவர்கள், அவர்கள் இருவர்தான் என்பதற்கு நமக்குச் சரியான ஆதாரங்கள் இல்லை இளவரசி! அப்படியே இருந்தாலும் அவர்கள் என்னைத் தேடி வருவதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை." என்றாள் சமாதானப் படுத்தும் குரலில் யாழ்.

"அவர் என்ன காரணமாக இவ்விடம் விட்டுச் சென்றார்கள் என்பதை நாம் அறிய வேண்டும் யாழ்!"

"அது ஒன்றும் பிரமாதமான விஷயம் இல்லை இளவரசி! இப்பொழுதே நாம் ஒற்றர் ஒருவரை மதுரைக்கு அனுப்புவோம்... இரண்டு நாட்களில் விஷயம் வந்துவிடும்." என்று யாழ் கூற, உடனடியாக ஒர் ஒற்றரை மதுரையை நோக்கி அனுப்பி வைத்தாள் ருத்ராதேவி.

இரண்டு நாட்கள் கழித்துத் திரும்பி வந்த ஒற்றன், "பாண்டிய படைகள் மதுரை போய்ச் சேர்ந்துவிட்டன. ஆனால் இதுவரை பாண்டிய குமாரரை யாரும் பார்க்கவில்லை என்று கூறுகின்றனர் இளவரசி!" என்று கூறினார்.

"இலங்கைக்குப் படை நடத்திச் சென்ற மதுரை மாமன்னர் குலசேகரப் பாண்டியர் வந்துவிட்டாரா?" என்று கேட்டாள் ருத்ரமாதேவி.

"இல்லை தேவி! பெரிய பாண்டியர் வருவதற்கு இன்னும் ஒரு வார காலம் ஆகும் என்கின்றனர்" என்று ஒற்றன் கூற,

"சரி! நீங்கள் போகலாம்!" என்று அனுப்பி வைத்துவிட்டு யாழிடம்,

"அரசரிடம் வேறு எங்கேனும் உல்லாச பயணம் செல்வதாக அனுமதி பெற்று, நாம் மதுரை வரை சென்று வருவோம்!" என்று ருத்ரதேவி தீர்க்கமான குரலில் கூற, அதிர்ச்சியில் வாய்திறந்து நின்றாள் யாழ்.

குலசேகரப் பாண்டியரின் அந்தப்புர அரண்மனைகளுள் ஒன்றில்…

"கதிரவன் மேற்கே உதித்து விட்டானா என்ன? இரண்டு நாட்களாக என் செல்ல மகன், என் அரண்மனையிலேயே தங்கி இருக்கிறானே?" என்று முப்பதுகளில் இருந்த பெண்மணி, உப்பரிகை ஊஞ்சலில் தவமியற்றிய நிலையில் அமர்ந்திருந்த மாறனிடம் பகடி பேச,

மாறனிடமிருந்து எந்தப் பதிலும் வராமல் போகவே, அவனருகில் நெருங்கி அமர்ந்து, மாறனின் வலது கையை எடுத்துத் தன் இரு உள்ளங்கைகளுக்குள் அடக்கியவாறு வாஞ்சையான குரலில், "என்னாயிற்று குமாரா? உன்னைப் பார்த்தால் படை நடத்திச் சென்று, வெற்றி வாகை சூடியவன் போல் தெரியவில்லையே? உமது வெற்றியைக் கொண்டாடும் வகையில் மதுரை மக்கள், நகரெங்கும் தோரணங்களால் அலங்கரித்து, பல தேசத்திலிருந்து நாடக, நாட்டிய கலைஞர்களையும், புலவர்களையும் வரவழைத்து மிகப் பெரிய வரவேற்பு செய்யக் காத்திருக்க, நீயோ எந்தவொரு அறிவிப்புமின்றித் திடீரெனப் படைகளுடன் திரும்பி வந்தாய்... வந்ததிலிருந்து ஏதோ ஒன்றை சிந்தித்தவண்ணம் தனித்திருக்கிறாயே? அப்படியெது உன்னை வாட்டுகிறதென்று என்னிடம் கூறக்கூடாதா?" என்று கேட்டார்.

மதுரை பேரரசரின் இதயக் கோட்டைடையை ஆட்சி செய்யும் பேரழகு தெய்வம்… நல்ல கோதுமை நிறத்தில், முழங்காலைத் தொடும் அலைஅலையான கருங்கூந்தலுமாய் இன்றும் இளமை குன்றாமல், பெரிய நீளக்கண்களில் கருணையையே கருவிழிகளாகக் கொண்டிருந்தார் வேதநாயகிதேவியார்… அதே விழிகள் தனது தந்தைக்கு மட்டும் காதலுரைப்பதாய் தந்தை கூறக் கேட்டிருக்கிறான். முத்துப்பற்கள் தெரிய புன்னகை வடிவத்தைத் தவிர வேறெந்த வடிவமும் அறியாத இளஞ்சிவப்பு இதழ்களைப் பிரித்து,

"என் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பதால், என் செல்வத்தின் இளம் மனதை வாட்டி வதைக்கும் காரிருள் நீங்கிடுமா என்ன?" என்று கேட்டதும்,

தன் தாயின் அன்பிலும் அக்கறையான வார்த்தைகளிலும் கலங்கிய மாறன், தன் தாயின் கையை எடுத்துத் தனது மடியில் தன் கரங்களுக்குள் வைத்தவாறு, "நான் ஒன்று கேட்பேன்! உங்கள் மனதில் உள்ளதை மறைக்காமல் என்னிடம் கூற வேண்டும்!" என்று ஆரம்பித்தான்.

"போருக்குச் சென்றால் அனுபவம் கிடைக்கும் என்பது உண்மைதான் அதற்காக ஒரே போரில் நீ இவ்வளவு தொண்டு கிழவன்போல் மாறி விடுவாய் என்று நான் கருதவில்லை…" என்று சிரித்தபடி கூறிய தன் தாயிடம்,

"நான் கேட்டதற்கு இது பதில் இல்லையே?" என்றான் மாறன்.

"இதுவரை உன்னிடம் நான் எதையும் மறைத்ததில்லை குமாரா! கேள்" என்ற தன் தாய் வேதநாயகிதேவியாரின் மடியில் தலைசாய்த்து.

"ம்ம்ம்… தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது... இதற்கான பதிலைத் தவிர, என்ன ஏது? என்று கேள்வி கேட்கக் கூடாது... சரியா?" என்ற மாறனின் தலைமுடியை கலைந்தபடி,

"என்ன பீடிகையெல்லாம் பலமாக இருக்கிறதே?"

"ம்ம்… அம்ம்மா… நான் விளையாட்டுத்தனமாக எதையும் கேட்கப்போவதில்லை... தயவுசெய்து என்னைக் கிண்டல் செய்வதை விடுத்து உரிய பதிலைக் கூறுங்கள்!" என்றான் மாறன்.

மாறன் பேச்சில் இருந்த தீவிரத்தில், ஒரு நிமிடம் புருவத்தைச் சுளித்துப் பார்த்த வேதநாயகிதேவியார், "சரி சரி" என்றார் தன் மகனின் கண்களையே பார்த்தவாறு.

"நீங்களும் பாண்டிய அரசுக்கு உட்பட்ட குறுநில மன்னரின் மகள் தானே?"

தெரிந்த பதிலுக்கு ஏன் இத்தனை பீடிகை என்பதைப் போல் சிரித்த வேதநாயகிதேவியார், "ஆமாம்!' என்றார்.

தன் தாயின் மடியிலிருந்து எழுந்து ஊஞ்சலில் அமர்ந்து, சிறிது நேரம் ஊஞ்சல் கட்டியிருந்த தங்க செயினியில் அலங்காரமாகக் கோர்க்கப்பட்டிருந்த முத்துக்களைச் சுண்டியபடி அமைதியாக அமர்ந்திருந்த தன் மகனைப் பார்த்த வேதநாயகிதேவி,

"பட்டத்தரசியாரின் அரண்மனைக்குச் சென்றாயா? அவர்கள் ஏதேனும் விபரீதமாகக் கூறிவிட்டார்களா? ஏன் இவ்வளவு யோசனை? என்னிடம் கூறுவதற்கு நீ ஏன் இவ்வளவு தயக்கம் காட்ட வேண்டும்? இதுநாள்வரை மனதளிவில், உனக்கும் எனக்கும் அத்தனை ஒன்றும் இடைவெளி விட்டதில்லையே குமாரா?" என்ற தன் தாயின் குரலில் இருந்த கவலையில் நிமிர்ந்த மாறன்,

"அதெல்லாம் ஒன்றுமில்லை அம்மா! நான் செண்பகப் பொழிலிலிருந்து நேராக உங்கள் அரண்மனைக்குத் தான் வந்திருக்கிறேன். வேறு எங்கும் செல்லவில்லை!" என்றான்.

ஆனாலும் தன் மகன் ஏதோ கேட்கத் தயங்குவது புரிந்து, "குமாரா எதுவாக இருந்தாலும் நீ என்னிடம் கேட்கலாம்!" என்று புன்னகை தவழ, தன் மகனின் கண்களைப் பார்த்து மீண்டும் மீண்டும் ஊக்கினார்.

"அம்மா எம் தந்தையைத் திருமணம் செய்வதற்கு முன்பாக, உங்களுக்கும், உங்கள் தந்தையான எம் பாட்டனாருக்கும், உங்கள் வருங்கால வாழ்க்கையைப் பற்றிக் கனவுகள் இருந்ததா?" என்று கேட்டான்.

புன்னகையால் இதழ்கள் மேலும் விரிய, "இது என்ன கேள்வி குமாரா? எல்லாத் தந்தைக்கும், தாய்க்கும், தன் பிள்ளைகளின் எதிர்காலம்பற்றிய கனவுகள் இருக்கத்தானே செய்யும்? இதில் நாங்களிருவரும் மட்டும் எப்படி விதிவிலக்காவோம்?" என்று கேட்டார் வேதநாயகிதேவியார்.

மீண்டும் சற்றேத் தயங்கிய மாறன், பிறகு 'கேட்டே விடுவது!' என்ற உறுதியுடன் தன் தாயைப் பார்த்து, "அம்மா! நான் கேட்கும் கேள்விகளுக்கு மனதளவில் வேதனைப்படாமல், பதில் கூறவேண்டுகிறேன்!" என்று தன் தாயின் முகத்தையே கலக்கத்துடன் பார்த்தான்.

'மாறன் ஏதோ வில்லங்கமாகக் கேட்கப் போகிறான்' என்பதை அறிந்த வேதநாயகிதேவி, தானும் தயாராகி, "முதலில், நீ கேட்க வந்ததைக் கேள்!" என்று கூறினார்.

'ஒரு குறுநில மன்னனுக்குத் தன் மகளை, அதாவது உங்களை... ம்ம்ம்... ஒரு அரசனுக்குப் பட்டத்தரசியாக மணமுடிக்க வேண்டும் என்றுதானே கனவு இருந்திருக்க வேண்டும். அப்படியிருக்கும்போது... தாங்கள்…" என்று இழுத்து, தயங்கி நிறுத்தினான் மாறன்.

சிறிது நேரம் தூரத்தில் கதிரவனின் கதிர் வீச்சால் தகதகவெனப் பிரகாசித்த, பட்டுப் போன்ற வெண்பஞ்சு மேகங்கள் நகர்வதையும், சேர்ந்து பிரிவதையும் பார்த்துக் கொண்டிருந்தவர், தன் மகன் தன் பதிலுக்காகக் காத்திருக்கிறான் என்பதை உணர்ந்து, மாறனைப் பார்த்து, "ஆம்! அனைத்து மன்னர்களுக்கும், மணம்புரிந்து செல்லும் தங்கள் மகள், ஒரு நாட்டுக்குப் பட்டத்தரசியாக வேண்டும் என்பதுதான் லட்சியமாகவே இருக்கும். ஆனால்… இந்த மாமதுரை பேரரசின் பெருமைமிகு சக்ரவர்த்தி, மீனாட்சி அம்மன் கோயில் திருவிழா ஒன்றின் கலைநிகழ்ச்சியைக் காணவந்த என்னைப் பார்த்து, விருப்பப்பட்டுப் பெண் கேட்டு வந்தால், பேரரசரின் ஆட்சிக்குட்பட்ட குறுநில மன்னரால் மறுக்க இயலுமா? அவ்வாறே மறுத்தாலும், அக்குறுநில மன்னனை போரில் வென்று தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வார்களே இப்புவியாளும் பேரரசர்கள்!!" என்று இதழ்களில் வேதனையான புன்னகை ஒன்றை வெளியிட்டு, சிறிது நேரத்தில் மீண்டும், "இருப்பினும் என் தந்தை, என் மகளின் விருப்பத்தைக் கேட்டு, தங்களுக்குச் செய்தி அனுப்பி வைக்கிறேன்!" என்று பதிலுரை அனுப்பி வைத்தார்....

….மதுரையம்பதியின் மாமன்னரை மணம்புரிய மறுத்தால், என்னமாதிரியான விளைவுகள் நிகழும் என்பதை அறிந்த எந்த ஒரு மகளும் என்ன முடிவெடுப்பாளோ அதைத்தான் நானும் என்று செய்தேன்... ஆமாம்! திருமணத்திற்குச் சம்மதம் கூறினேன்!... நான் மனதார சம்மதம் கூறவில்லை என்பதை அறிந்த என் தந்தை, 'உன் விருப்பத்தை மீறி எதுவும் செய்யமாட்டேன். எதுவாக இருந்தாலும் பார்த்துவிடலாம் கூறு' என்றார்... எனக்கு என் வாழ்வை விட என் தந்தையின் உயிர் முக்கியமாகத் தெரிந்தது... அதனால் அத்தனை நாட்கள் என் மனதில் வளர்த்து வந்த பட்டத்தரசி கனவுகளை நொறுக்கி விட்டு, சந்தோஷமாகச் சிரித்தபடி, 'எனக்கு முழுச் சம்மதம் தந்தையே மதுரை பேரரசை மணக்கக் கசக்குமா என்ன?' என்று நான் கூறவும் என் தந்தை திருமணத்திற்குச் சம்மதித்தார்." என்று கூறி முடித்தார் வேதநாயகிதேவியார்.

அத்தருணத்தில் தன் தாயின் மனம் எவ்வளவு வேதனையைச் சுமத்திருக்கும் என்று வருந்திய மாறன்,

"இங்கு வந்து உங்களுக்கு மிகவும் வேதனையாக இருந்ததா அம்மா?" என்று கேட்ட தன் மகனின் கன்னத்தில் கை வைத்து,

"நிச்சயமாக இல்லை என் செல்வமே! இங்கு வந்த பிறகுதான் உன் தந்தை என்மீது கொண்ட அன்பின் ஆழத்தை என்னால் அறிய முடிந்தது... இன்றும் அவர் கண்களில் என்மீது உள்ள அன்பு தெரிகிறது… ஒரு நாட்டின் பட்டத்தரசியாக வாழ்வதைவிட, நல்லமனிதனின் இதயத்தில் அரசியாக வாழ்வதுதான் சிறந்தது என்பதை உணர்ந்த பிறகு மகிழ்ச்சிக்கும் குறைவேது... வேதனைக்கு வழியேது…" என்று சிரித்தார் வேதநாயகிதேவியார்.

வார்த்தைகளின் எண்ணிக்கை - 1479.

சிவதாசனின் கர்ஜனை தொடரும்…

⚔️⚔️⚔️⚔️⚔️⚔️
 

Meerajo

Member
Vannangal Writer
Messages
33
Reaction score
6
Points
8
RD-22 -சிவதாசன் எனும் நான்!... அத்தியாயம் -11

பெரியவரிடம் வீராப்பாகச் சொல்லிவிட்டு வந்தாகிவிட்டது… ஆனால் அதற்குத் தகுந்த இடம் கிடைக்காமல் தேடி அலைந்தான் சீலன்.

இரவுவரை தேடி, சோர்ந்து போனவனாய் அறப்பளீஸ்வரர் கோயில் அருகே ஓடிய மீன்பள்ளி ஆற்றங்கரையில் சென்று அமர்ந்தான்…

வானில் மேகங்களுடன் ஒளிந்து விளையாடிய சந்திரன், மீன்பள்ளி ஆற்றுநீரில் பிரதிபலித்தும், அதைக் கண்டு ரசிக்கும் மனநிலையில் இல்லாமல் இருட்டையே வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான்…

"இருளையே வெறித்துப் பார்த்தால் வழி கிடைத்துவிடுமா சீலா? முதலில் இருள் என்னும் மாயையைத் தூக்கி எறிந்து விட்டுப் பார்! உன் அருகிலேயே நீ தேடுவது கிடைக்கும்" என்ற சிவனடியாரின் குரல் கேட்டுத் திரும்பிய சீலன், சட்டென்று எழுந்து நின்று சிவனடியாரை வணங்கினான்.

"வெற்றி உண்டாகட்டும் மகனே!" என்று சிவனடியார் ஆசீர்வதித்தார்…

சீலன் ஏதும் பேசாமல் அமைதியாக நிற்கவே,

“என்ன சீலா உன் தேடலுக்கு என்னால் விடை கொடுக்க முடியாது என்று அமைதியாக நிற்கிறாயா?" என்ற சிவனடியார் சிரித்தபடியே கேட்க,

"அப்படி இல்லை சுவாமி! என்னால் முடியாததை மட்டும் உங்களிடம் கேட்டுப் பெறலாம் என்று நினைத்தேன்…" என்றான் சீலன்.

"அந்த அளவுக்கு உனக்குக் கால அவகாசம் இருக்கிறதா சீலா? தேடுவதிலேயே காலம் கழிக்கப் போகிறாயா?" என்ற சிவனடியார் கேட்க, மீண்டும் ஒன்றும் பேசாமல் சிவனடியாரின் முகத்தையே பார்த்தவண்ணம் நின்றான் சீலன்.

"இப்பொழுது உனது தேவை சிறு படை... அந்தப் படையை ரகசியமாக வைத்துப் பயிற்சி செய்ய ஒரு இடம்... அது தானே?" என்று கேட்டார் சிவனடியார்.

"ஆமாம்! சுவாமி" என்றான் சீலன்.

"மனதில் ஏதேனும் ஓடிக்கொண்டே இருந்தால், நீ தேடுவது அருகில் இருந்தாலும், உன் கண்களுக்குப் புலப்படாது!" என்று சிவனடியார் கூறவும்,

"கொல்லிமலையிலேயே பயிற்சி செய்யலாம் என்று கூறுகிறீர்களா? ஆனால்… போர் பயிற்சி எடுத்துக் கொள்ளும் இடமும், நான் மறைந்து வாழும் இடமும் வேறு வேறாக இருப்பது தானே சுவாமி நல்லது... ஒருவேளை பயிற்சி செய்யும் பகுதி பகைவர் கண்ணில் தென்பட்டு விட்டாலும்…."

"புரிகிறது அம்புகள் மாட்டினாலும் அம்பு எய்தவன் வெற்றி கிட்டும் வரை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிறாய்… ஆனால் நான் கொல்லிமலையைக் கூறவில்லை சீலா!" என்ற சிவனடியார் கூற

'வேறு ஏதேனும் தகுந்த இடம் இருக்கிறதா?" என்று ஆர்வமிகுதியில் சந்தோசமாகக் கேட்டான் சீலன்.

"ஆம் உன் தந்தையின் ஆட்சிக்குட்பட்ட நெல்லைச் சீமையின் அருகிலேயே இருக்கிறது ஒரு நல்ல இடம்... நெல்லைச்சீமையிலிருந்து 43 கல் தொலைவில் மகேந்திரகிரிமலை இருக்கிறதல்லவா? அந்த மலையில் 18 சித்தர்களும் இன்றும் வாழ்கிறார்கள்… அந்த மலை, அனைத்து தெய்வங்களின் பாதங்களும் பட்ட தெய்வீகத் தன்மை கொண்டது... கொல்லிமலையைப் போன்றே மிகவும் சக்தி வாய்ந்த மூலிகைகள் நிறைந்த வனம் கொண்ட மலை அது... அதன் அடிவாரத்தில் ஓடுகிற நம்பியாற்றைக் கடந்து நீ செல்... மலையின் மேலே ஏறாமல் மலையடிவாரத்திலேயே நிலப்பகுதி ஒன்று இருக்கிறது... நீ அங்கு சென்று பார்! உன் பகைவர் மட்டுமல்ல எவராலும் கண்டுபிடிக்க முடியாத அற்புதமான இடம் அது!" என்ற சிவனடியார் கூற,

அவருக்கு நன்றி கூறி வணங்கிவிட்டு உடனே இந்திரன் மீதேறிக் கிளம்பினான் சீலன்.

நெல்லையிலிருந்து 43 கல் தூரத்தில் இருந்தது மகேந்திரகிரிமலை... அதன் அடிவாரத்தில் ஓடிய நம்பியாற்றைக் கடந்து சென்று பார்த்த சீலனின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன…

மூன்று திசைகளிலும் மகேந்திரகிரிமலை, கோட்டைபோல் சூழ்ந்திருக்க, அதன் வாயிலை மூடிய கதவு போல் நம்பியாறு ஓடிக்கொண்டிருந்தது… நடுவே பசும்புல்வெளியைப் போர்த்தியிருந்த நிலப்பகுதி!!!...

மலையடிவாரத்தின் குளிர்ச்சியும், ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றின் குளிர்ச்சியும் சேர்ந்து அந்த இடத்தின் சூழ்நிலையை இதமாக்கியது,.. மலையிலிருந்து வீசும் காற்று மூலிகை வாசத்தை ஏந்தி வந்தது… இரவு நேரமென்பதால் சிள்வண்டின் ரீங்காரம் அந்த இடம் முழுவதும் வியாபித்திருந்தது… அனைத்தையும் ரசித்தபடி அருகிலிருந்த பாறைத்திட்டில் அமர்ந்தான்.

இதமான குளிரும் மூலிகையின் சுகந்த நறுமணமும் மனதை மயக்க, ஆற்றுநீரின் சளசளப்பும், சிள்வண்டின் ரீங்காரமும் இணைந்து, தேர்ந்த இசைக்கலைஞன் போல் இனிமையாக இசைக்க, பகல் முழுவதும் ஓடிய களைப்பில் இருந்த சீலன், அமர்ந்த நிலையிலேயே உறங்கிப் போனான்.

இரவு முழுவதும் இளைப்பாறிவிட்டு, ஆதவன் பூமியைப் பார்க்க விரைந்து வரும் அதிகாலை...

பறவைகளின் ஒலியுடன், குளிர்ந்த காற்று தென்றலாய் மாறி வருட, இமைகளைப் பிரிக்க முடியாமல் கண்களைச் சுருக்கியபடி, சுற்றுப்புறத்தை பார்த்தான் சீலன். ஆற்றின் அக்கறையில் சூரியனைப் பிரிய மனமின்றி, ஆதவனின் கரங்களைப் பற்றி மேலே இழுத்தபடியே நிலவுப்பெண் விடைபெற்றுக் கொண்டிருந்தாள்… பறவையினங்கள் தங்கள் சுற்றம் சூழ, வானத்தில் பறந்தபடி புவிவாழ் உயிருக்கெல்லாம் புத்துயிர் ஊட்டின… புல்வெளிகள் வைர மூக்குத்தி எனும் பனித்துளியைச் சூடி மலரந்து சிரித்தன… எங்கிருந்தோ வந்த பூக்களின் நறுமணம் தென்றலோடு கைகோர்த்து ஆனந்தக் கூத்தாடியது… மலைகளின் மீது விலங்குகளின் நடமாட்டம்… என்று ரசிக்கும் வேளையில் அதைக் கெடுக்கும் விதமாய் ,

"தலைக்குமேல் கத்தி தொங்குகிற இந்நேரத்தில் நீ என்ன வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாய்?" என்பதைப்போல் கனைத்து சீலனின் மோனநிலையை, இந்திரன் கலைத்தது…

அதுகாரும் நந்தவனத்தில் உலவியவன், திடீரென்று பாலையின் உச்சி வெயிலில் தகிக்கத் தகிக்க நடப்பதைப் போன்று, இயற்கையை ரசித்து மகிழ்ந்த சீலனின் நெஞ்சத்தில் நிதர்சனம் வந்து நின்றது.

இருள் பிரிந்து, பொழுது புலரும்முன் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு இந்திரனுடன் மலைமீது ஏறிச்சென்றான் சீலன்.

"இப்பொழுது ஏன் என்னை மலைமீது ஏற்றுகிறாய்?" என்பதுபோல் இந்திரன் கேட்க,

இந்திரனின் பிடரியை ஆதுரத்துடன் தடவியவாறே, "போர்ப்பயிற்சி நிலப்பகுதியில் நடந்தாலும், படைவீரர்கள் பாதுகாப்பாகத் தங்குவதற்கு ஏற்ற குகைகள் இந்த மலையில் நிறைய இருக்கின்றன. இங்கே எந்தெந்த இடத்தில் குகைகள் இருக்கின்றன என்பதை பார்த்துவிட்டு வருவோம்" என்றான்.

"என்னைத் தவிர பிற உயிர்களிடத்தில் உனக்கு மிகவும் அக்கறை!" என்று கனைத்தது இந்திரன்.

சிரித்தபடியே இந்திரனுடன் அளவளாவிக் கொண்டே, அந்த மலைக் குகைகள் மற்றும் படை வீரர்கள் தங்குவதற்கான வசதிகள் இருக்கிறதா என்பதைப் பார்த்துவிட்டு,

தான் நினைத்த காரியத்தைத் திறம்பட நடத்தத் தேவையான வீரர்களைப் பெறுவதற்காக நெல்லைசீமை சென்றான்.

நெல்லைச்சீமை சிற்றரசர் திருநெல்லைவர்மனை ரகசியமாகச் சந்தித்து,

"பகைவனிடமிருந்து நம் பாண்டிய தேசத்தை மீட்க எனக்கு உதவுங்கள்…" என்று கேட்டான்.

"நிச்சயமாக! அவர்களை விட்டுவைத்தால், தென்பகுதி முழுவதையும் கொள்ளையடித்து விடுவர்!" என்றார் சிற்றரசர் திருநெல்லை வர்மன்.

"அவர்கள் கொள்ளையடிக்கும் வரை பாண்டிய மன்னர்களின் கரங்கள் பூ பறிக்குமா என்ன?" என்ற சீலனிடம்,

"உனக்கு விசயம் தெரியாதா? பகைவரின் படைத்தலைவன், வாக்கு கொடுத்தபடி பாண்டிய இளவரசரிடம் மதுரையை ஒப்படைக்கவில்லை… மாறாக இளவரசரை மதுரை அரண்மனையிலிருந்தும் வெளியேற்றிவிட்டான்… ஆனால் நம் இளவரசரோ அரண்மனையிலிருந்த செல்வங்களையும், மீனாட்சி அம்மன் கோயில் செல்வங்களையும் எடுத்துக்கொண்டு, தலைமறைவாகி விட்டார்! அந்தக் கோபத்தில் நம் தேசத்தின் பொக்கிசங்களை எல்லாம் சூறையாடி வருகிறான்…" என்று கூற,

"இளவரசர் தலைமறைவாகி விட்டாரா? இது முற்றிலும் தவறான தகவல்…"

"அப்படியா? ஆனால் இளவரசர் மதுரையம்பதியில் இல்லையே?"

"அப்படியென்றால் இளவரசருக்கு நேர்ந்த கதி தங்களுக்குத் தெரியாதா?" என்று சீலன் ஆச்சரியமாக, நெல்லை சிற்றரசரிடம் கேட்க,

"என்ன சொல்கிறாய்…?" என்று சீலனின் பெயரை உச்சரிக்க வந்த சிற்றரசரின் வாயை மூடி,

"இவ்விதம் நடந்துகொள்வதற்கு என்னை மன்னியுங்கள்… தயவுகூர்ந்து என் பெயரை உச்சரிக்க வேண்டாம்… நான் இறந்து விட்டதாக பகைவன் எண்ணுகிறான்… அது அப்படியே இருக்கட்டும்… தாங்கள் என்னை சீலன் என்றே அழையுங்கள்!" என்று ரகசிய தொனியில் கூறிவிட்டு தன் கையை சிற்றரசர் வாயிலிருந்து எடுத்தான்.

"சரி! இளவரசருக்கு என்னாயிற்று?" என்று நெல்லைச்சீமை சிற்றரசர் மீண்டும் கேட்க,

"பாண்டிய தேசத்தின் இளவரசரையும் அக்கொடியவன் விட்டுவைக்கவில்லை அரசே… அவரையும் கொன்றுவிட்டான்."

"அப்படியானால் அங்கிருந்த பொக்கிஷங்களை இளவரசர் எடுத்துச் செல்லவில்லையா?"

"இல்லை!"

"ஆனால் மதுரை அரண்மனைக் கருவூலங்களும், மீனாட்சிஅம்மன் கோயில் செல்வமும் காணாமல் போய்விட்டதே? அதை யார் எடுத்துச் சென்றது?" என்று சிற்றரசர் கேட்க,

அவரது பார்வையைத் தவிர்த்து, வேறு திசையில் பார்த்தபடி, "எனக்கெப்படி தெரியும்? சரி எனக்குத் தாங்கள் உதவ முடியுமா?" என்று மீண்டும் கேட்டான்.

"என்ன உதவி வேண்டும்?"

"நெல்லைச்சீமையை ஆளும் மன்னருக்காக, தங்கள் உயிரையும் கொடுக்க சித்தமாகயிருக்கும் 'வேளீர்ப்படையினரை' சிறிது காலம் என்னோடு அனுப்பி வைக்க வேண்டும்."

"தாராளமாக அழைத்துச் செல்வாய் சீலா!"

"நன்றி! மீண்டும் வருகிறேன்!" என்று கூறிவிட்டு சிற்றரசர் நெல்லைவர்மன் அனுப்பி வைத்த வேளீர்ப்படையினரை அழைத்துக் கொண்டு, மகேந்திரகிரிமலை அடிவாரத்தில் ஓடும் நம்பியாற்றின் கரைக்குச் சென்றான்.

நம்பியாற்றைக் கடந்து அக்கரையை அடைந்தவன்…

வேளீர்ப்படைத்தலைவன் பொன்மாணிக்கத்தை அழைத்து,

"இங்குள்ள குகைகளில் எல்லோரும் தங்கிக் கொள்ளுங்கள்… நாளையிலிருந்து போர்ப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்…" என்று கூறிய சீலனிடம்,

"மதுரையைக் கைப்பற்றிய பகைவரை அழிக்க, இந்தச் சிறு படை பொதுமா?" என்று பொன்மாணிக்கம் ஆச்சரியமாக கேட்டான்.

"நாம் மறைந்திருந்து தாக்கப் போகிறோம்…" என்றதும்,

"எப்பொழுது?"

"வரும் அமாவாசையன்று ___பாண்டியர் (பெரியவர்) சில சிற்றரசர்களுடன் சென்று, மதுரை அரண்மனையை முற்றுகையிடப்போகிறார்… பெரியவரின் வாள் வீச்சின் வீரியம் நம் தேசம் அறிந்ததே!... அவரிடமிருந்து பகைவரின் படைத்தலைவனைக் காப்பதென்பது பகைவனின் சேனைகளால் முடியாத காரியம்… அதனால் பகைவனின் பாதுகாப்பு வீரர்கள் மட்டுமின்றி, அவர்கள் கைப்பற்றிய, நம் பாண்டிய நாட்டுப் படைகளுக்குக் காவலிருக்கும் காவலர்களும், பாண்டியரின் முற்றுகையை முறியடிக்கச் செல்வார்கள்… அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பகைவர் வசமிருக்கும் நம் நால்வகைப் படைகளையும் மீட்டு, இங்கு கொண்டு வந்துவிட வேண்டும்…"

"அதனால் மட்டும் பகைவர் ஒழிந்து விடுவரா?"

"இல்லை! ஆனால் அவர்களின் வலிமை குன்றும்… மற்ற தேசத்தைக் கைப்பற்றியதைப் போல பாண்டிய தேசத்தைக் கைப்பற்றுவது எளிதன்று என்று பகைநாட்டவனை உணரவைக்க வேண்டும்... அவர்கள் வஞ்சகத்தால் நம்மை வீழ்த்தியதைப் போன்று நாமும் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை வீழ்த்தி, நம் தேசத்தே விட்டே துரத்தவேண்டும்…" என்று சீலன் விளக்கியதும்,

"உத்தரவு?" என்று கூறிவிட்டு படைவீரர்களிடம் விபரங்களைக் கூறி குகைகளுக்கு அனுப்பிவைத்தான்.

அடுத்த நாளிலிருந்து படை வீரர்களுக்கு மறைந்திருந்து தாக்கும் கலையைக் கற்றுக் கொடுத்துத் தினமும் பயிற்சி நடந்தவண்ணம் இருந்தது.

அமாவாசைக்கு மூன்று தினங்கள் இருக்கையில்… பெரியவருக்குத் தன் திட்டத்தை விரிவாக ஓலையில் எழுதி, இந்திரனிடம் (சீலனின் புரவி) கொடுத்துவிட்டான்.

அடுத்த ஓலையில், 'அமாவாசை இரவில் கோட்டைக்குள் இருக்கும் மதுரை மக்கள் எக்காரணம் கொண்டும் வீட்டைவிட்டு வெளிவரவிடாமல் தடுக்கும் பணியை மிகவும் ரகசியமாக செயல்படுத்த வேண்டும்!' என்று எழுதி, மதுரையின கோட்டை வாசல் தலைவரிடம் கொடுக்கச் சொன்னான்.

அமாவாசையன்று பகல் பொழுதிலேயே சீலனின் வேளீர்ப்படைவீரர்கள், மதுரைக் கோட்டையைத் தாண்டி உள்ளே வந்து பெரியவர் சொன்ன இடங்களில் பணியாளர்களோடு பணியாளர்களாக கலந்தனர்…

இரவு பத்து நாழிகை கழியவும் பெரியவர் மற்றும் பாண்டிய சிற்றரசர்கள் அரண்மனையைச் சுற்றி முற்றுகையிட்டனர்.

பாண்டியர்கள் திடீரேன முற்றுகையிட்டதை, பகை அரசரின் படைத்தலைவன் உணர்ந்து, தன் படை ஆட்களைத் திரட்டும்முன் பாண்டிய படைகள் அரண்மனைக்குள் நுழைந்து பகைவரின் படைகளைத் துவம்சம் செய்ய ஆரம்பித்தனர்…

இதை அறிந்த, அரண்மனை தவிர மற்ற பகுதிகளில் காவல் புரிந்துவந்த பகை அரசரின் காவலாளிகளும் அரண்மனையை நோக்கி ஓடினர்…

அரண்மனைக்குள்ளேயும், வெளியேயும் பாண்டியர்களுக்கும், பகைவர்களின் படைக்கும் போர் வலுத்தது… ஒருவருக்கொருவர் சளைக்காமல் போர் புரிந்தனர்…

பாண்டிய வீரர்கள் வில், அம்பு, வாள், குந்தம், ஆழி, வேல் முதலிய கருவிகளைப் பயன்படுத்திப் போர் புரிந்தனர்.

பாண்டியரிகளின் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள், பகைவரது சேனையை சின்னாபின்னமாக்கியது…

வெள்ளமென அரண்மனைக்குள் சென்ற பாண்டிய படைகளை எதிர்கொள்ள முடியாமல் பகைவர் சேனைகள் திணறி, தோற்று ஓடினர்.

பகைநாட்டுப் படைத்தலைவனுடன் பெரியவர் போர் புரிய, அவ்வீரக்கிழவனின் வாளுக்கு பதில் கொடுக்க முடியாமல், உடை கிழிந்து, உடலின் பாகங்களை இழந்து ஓடி ஓழிந்தவர்களையும் பெரியவரின் வாள் பதம்பார்த்தது… பெரியவரிடமிருந்து தங்களின் படைத்தலைவனைக் காக்கவந்த பகைநாட்டுச் சேனைகள், தலை துண்டிக்கப்பட்டு விழுந்தனர்.. அவர் ஒருவரையே சமாளிக்க முடியாமல், பகைவரின் சேனைகள் தங்கள் படைத்தலைவனைக் காப்பாற்ற பல உயிர்களை பலியிட்டனர்.

மற்ற சிற்றரசர்கள் நால்வரும், அரண்மனையின் திசைக்கொருவராய் தங்கள் படைகளுடன் நின்று போரிட்டனர்… அரண்மனைக்குள்ளிருந்து வந்த பகைவர்களின் சேனையைத் தங்களின் வில்லுக்கும், வாளுக்கும், வேலுக்கும் பலியாக்கினர்…

நகருக்குள் காவலிலிருந்த சேனைகள் முற்றுகையைத் தகர்க்காவண்ணம் அரண்மனையைச் சுற்றிலும் இருந்த பாண்டிய படைவீரர்கள், காவற் காட்டை அழித்தும், அகழியைத் துார்த்தும், புற மதிலையும், அக மதிலையும் அழித்தும் போரிட்டனர்.

அரண்மனையில் பாண்டியர்களின் கை வலுக்கவே, பாண்டிய அரசிடமிருந்து கைப்பற்றிய குதிரை, யானை மற்றும் காலாட்படைகளைக் காவல் புரிந்த பகை அரசர்களின் பணியாட்களும் அரண்மனைக்குச் சென்று போர் புரிய,

ஏற்கனவே திட்டமிட்டபடி, அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சீலனின் வேளீர்ப்படைகள் நான்கு பகுதிகளாகப் பிரிந்து சென்று, சீலன் தங்களுக்கு இட்ட கட்டளைகளை நிறைவேற்ற ஓடினர்…

சீலனின் படைவீரர்களில் ஒரு பகுதியினர், சிறைக்கூடத்திற்குச் சென்று அங்கே கைது பண்ணி அடைக்கப் பட்டிருந்த பாண்டிய காலாட்படை வீரர்களை விடுவித்து, அவர்களின் கையில் ஆயுதங்களைக் கொடுக்க, விடுபட்ட அப்பாண்டிய காலாட்படை வீரர்கள், அரண்மனை முற்றுகையில் பங்கு கொண்டு, பகைவரின் சேனைகளை வீழ்த்தினர்…

சீலனின் இரண்டாம் பகுதி வேளீர்ப்படையினர், பகைவர் பிடியிலிருந்த யானைப்படை மற்றும் குதிரைப் படை வீரர்களுக்குப் புரவிகள் கொடுத்து, நெல்லைச்சீமை மகேந்திரகிரிமலையை நோக்கி அனுப்பி வைத்தனர்.

அடுத்த பகுதி வீரர்கள், பாண்டியரிடம் கைப்பற்றிய யானைப்படையைச் சேர்ந்த யானைகள், பரிப்படையைச் சேர்ந்த குதிரைகள், மற்றும் தேர்ப்படையைச் சேர்ந்த தேர்களையும் மகேந்திரகிரிமலை அடிவாரத்தை நோக்கி நடத்திச் சென்றனர்…

நான்காம் பகுதி வீரர்கள் பகைவர்களின் ஆயுதக்கிடங்கு மற்றும் படைவீரர்களின் குடியிருப்புகளை எல்லாம் தீக்கிரையாக்கினர்…

சீலனோ மதுரை வாழ் மக்கள் எவரும் வீட்டைவிட்டு வெளியே வராத வண்ணம் பார்த்துக் கொண்டான்…

பொழுது புலர, பகைவர் சேனைகளில் பெரும்பான்மை அழிந்திருந்தது…

பாண்டியர்களிடம் கைப்பற்றிய படைவீரர்கள் மற்றும் படைகள் காணாமல் போயிருந்தன…

ஏற்கனவே பாண்டிய மன்னனுக் எதிராக போர் புரியும்படி கேட்டு, தங்களிடம் வந்துசேர்ந்த பாண்டிய இளவரசன், பொக்கிசங்களை மறைத்துவைத்து, தங்களுக்கும் துரோகம் செய்ததை எண்ணி கொதித்திருந்தவன், முந்தைய நாள் நடந்த முற்றுகையில் வெகுண்டெழுந்தான் பகைநாட்டு அரசரின் சார்பில் பாண்டிய தேசத்தைக் கைப்பற்றி, மதுரையம்பதியை ஆட்சிபுரியும் படைத்தலைவன் "மாலிக்காபூர்"...

வார்த்தைகளின் எண்ணிக்கை - 1369.

சிவதாசனின் கர்ஜனை தொடரும்…

⚔️⚔️⚔️⚔️⚔️⚔️


1 கல் =1 மைல் = 1.609 கி.மீ.

1 நாழிகை = 24 நிமிடங்கள்

24 நிமிடங்கள் கொண்ட ஒரு கால அளவு.

பகல் முப்பது நாழிகை; இரவு முப்பது நாழிகை.
 

Meerajo

Member
Vannangal Writer
Messages
33
Reaction score
6
Points
8
RD-22- சிவதாசன் எனும் நான்!...-12

உக்கிரமாய் எரிந்து கொண்டிருந்தான் கதிரவன்… ஆதவனின் கதிர்கள் சுள்ளென்று முதுகைத் தீண்டிச் சிவக்க வைத்தது… பாதுகை அணிந்தும், சூடான ஆற்றுமணல் பட்டு, பாதங்கள் எரிந்தன... உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை வியர்த்து வழிந்தது.

பறவைகள், விலங்குகள் கூடச் சுட்டெரிக்கும் சூரியனுக்குப் பயந்து நிழல்தேடிப் பதுங்கின…

இத்தகைய கொடும் வெயிலின் கோரப்பிடியில் தனதருமை நண்பனால் சிக்கிய விக்ரமன்,

"கிராதகா! உச்சிவெயில் உயிரெடுக்கிற நேரத்துல ஆற்றங்கரைக்கு எதற்கு வரச் சொல்லி அனுப்பினாய்? வந்ததிலிருந்து நானும் பார்க்கிறேன், வந்த காரணத்தையும் கூறாமல், புரவிமேலும் ஏறாமல், புரவியுடன் ஏன் நடந்து வருகிறாய்? ஆற்றுமணல் உன் பாதங்களையும், பாதுகையை மீறிச் சிவக்க வைத்துவிட்டது பார்!" என்று விக்ரமன் கதறும் எந்த ஒரு வார்த்தையும் மாறனின் செவிகளைச் சேர்ந்ததாகத் தெரியவில்லை…

ஒரு கையால் தனது குதிரையின் கழுத்துப் பட்டையைப் பிடித்துக்கொண்டு, கால்களால் ஆற்று மணலை, உதைத்து எறிந்து விளையாடியவாறே நடந்து கொண்டிருந்தான்.

திடீரென்று சூரியனின் வெப்பம் கொஞ்சம் ஏற, "டேய்! கொலைபாதகா! சூரியனோட வெப்பத்தைப் பொருட்படுத்தாமல் நீ ஆனந்தமாக நடைபோடுவதைப் பார்த்து, சூரியனுக்கே கோபம் அதிகமாகி உக்கிரமமாய் எரிகிறானடா… தயவுசெய்து எதற்காக அழைத்தாய் என்பதையாவது சொல் அல்லது ஏதேனும் ஒரு மர நிழலில் அமர்ந்து பேசுவோம்!" என்று விக்கிரமன் கெஞ்ச ஆரம்பித்தான்.

"எனக்கு ருத்ராவைப் பார்க்க வேண்டும்!" என்று சட்டென்று மாறன் சொன்னதும்,

அதிர்ச்சியில் தன் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து இழுத்து நின்று விட்டான் விக்ரமன்.

விக்ரமன் தன்னுடன் வராமல் நின்று விட்டதைக் கண்ட மாறன், "என்னைச் சொல்லிவிட்டு இந்த உச்சிவெயிலில் நீ நிற்கிறாயே விக்ரமா... என்ன ஆச்சு உனக்கு?" என்று விக்கிரமனை கிண்டல் செய்தான் மாறன்.

"இல்லை... சிறுது நேரத்திற்கு முன் நீ என்ன கூறினாய்?"

"ருத்ராவைப் பார்க்க வேண்டும் என்றேன்."

"உண்மையிலேயே இன்று வெயிலின் தாக்கம் அதிகம் தானோ? இதற்கு முன் நடந்ததையெல்லாம் நீ மறந்துவிட்டாய் போலிருக்கிறதே மாறா!!" என்று கொஞ்சம் தீவிரமாகவும் கொஞ்சம் கிண்டலாகவும் பேசினான் விக்ரமன்.

"ருத்ராவை நான் பார்க்க வேண்டும் என்று கூறும் பொழுதே, அவளுக்கும் எனக்கும் இடையேயான தடையை நீக்கும் உபாயம் கிடைத்துவிட்டது என்பது உனக்குப் புரியவில்லையா விக்கிரமா?" என்று கேட்டான் மாறன்.

"நீ சொல்வது ஒன்றும் எனக்குப் புரியவில்லை மாறா... உபாயம் எப்படி கிடைக்கும்?" என்று கேட்டான் விக்கிரமன்.

"என் அன்னை வாயிலாக உபாயத்தைக் கண்டேன்."

"நீ யாரைச் சொல்கிறாய்?... மகாராணி மூலமாகவா? அவரிடம், நீ செண்பகப்பொழில் இளவரசியை விரும்பும் விஷயத்தைக் கூறி விட்டாயா?" என்று விக்ரமன் படப் படக்க…

"அவள் மனதை அறியாமல், அன்னையிடம் எப்படிச் சொல்வது?" என்று மாறன் கேட்டான்.

"நீ ஒரு முடிவோடுதான் வந்திருக்கிறாய்… இந்த நண்பகல் நேரத்து வெயிலில் எனக்கிருக்கும் சிறு... மூளையும் உருகி ஓடிக்கொண்டிருக்கிறது... நீ அதையும் கழுவிக் களைகிறாய்…" என்ற விக்கிரமனைப் பார்த்துப் புன்னகைத்த மாறன், முதல்நாள் தனக்கும், தன் அன்னைக்கும் இடையே நடந்த உரையாடல்களைக் கூறினான்.

"எந்த நாட்டு இளவரசியாக இருந்தாலும், ஒரு பட்டத்து இளவரசரைத்தான் திருமணம் செய்ய விரும்புவார்கள் என்பதை, ஏற்கனவே செண்பகப்பொழில் இளவரசி ருத்ராதேவியே கூறிவிட்டார்களே… மகாராணியும் அதைத்தானே ஆமோதித்திருக்கிறார்? இதிலிருந்து உனக்கு என்ன உபாயம் கிடைத்தது?" என்று குழப்பமாகக் கேட்டான் விக்ரமன்.

"ருத்ராவின் விருப்பத்தை நிறைவேற்றுவது என்று!"

"அதுதான் எப்படி?"

"இந்த வார இறுதிக்குள் என் தந்தை ஈழத்திலிருந்து வெற்றிவாகை சூடி வந்துவிடுவார். அவரிடம் சென்று பரிசு கேட்கப் போகிறேன்…"

"ருத்ராதேவியையா பரிசாகக் கேட்கப் போகிறாய்? அப்படியே இருந்தாலும் ருத்ராதேவி எப்படிப் பட்டத்தரசியாக முடியும்?"

"உண்மையிலேயே உன் மூளை உருகித்தான் ஓடிவிட்டது... ருத்ராதேவியை ஏன் பரிசாகக் கேட்கப் போகிறேன்? நாம் செண்பகப்பொழில் சிற்றரசை வென்றதற்குப் பரிசாக, என் தந்தையின் ஆட்சிக்குட்பட்ட மூன்று ஊர்களையாவது ஆளும் உரிமையைக் கேட்கப் போகிறேன்…"

"அருமை நண்பா! மிக அருமையான யோசனை! மூன்று ஊர்களுக்காவது நீ குறுநில மன்னன் ஆகிவிட்டால், உன்னை மணக்கும் பெண் பட்டத்தரசி தானே? நல்ல யோசனை…" என்று ஓடி வந்து தன் அன்பு நண்பனைக் கட்டி அணைத்துக்கொண்டான் விக்ரமன்.

அன்று இரவு இந்த விஷயத்தைத் தன் தாயார் வேதநாயகிதேவியாரிடம் மாறன் கூற, வேதநாயகி தேவியாரோ வேறொன்று கூறினார்.

"நாட்டின் சிறு பகுதிக்காவது மன்னன் ஆகிவிட வேண்டும் என்பது உன் குறிக்கோளாக இருந்தால், அதைப் பரிசாகப் பெறுவதில் என்ன பெருமை இருக்கிறது?" என்ற தன் அன்னையை மாறன் கூர்ந்து பார்க்க, மீண்டும் தொடர்ந்தார் வேதநாயகி தேவியார்.

"நீ போர்புரிந்து தானே செண்பகப்பொழில் நாட்டை வென்றாய்? அந்த நாட்டையே ஆளும் உரிமையைக் கேள்!" என்றதும் மாறனின் ஆர்வம் விழுந்துவிட்டது…


'செண்பகப்பொழில் நாட்டின் உரிமையை, தன் தந்தையிடம் கேட்டால் அவர் கொடுக்காமல் இருக்க மாட்டார். ஆனால் ருத்ராதேவியின் மன வருத்தத்திற்கு, தான் ஆளாக நேரிடும்!' என்பதை உணர்ந்த மாறன் வேறொன்றை யோசிக்க ஆரம்பித்தான்.

அப்பொழுது அவனைத் தன் புறம் திருப்பி, "எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது! நேற்று இளவரசிகளின் கனவு, பட்டத்தரசியாக வேண்டும் என்பதா? என்று கேட்டாய்... இன்று வந்து... குறுநில அரசுக்கு மன்னனாக வேண்டும் என்பதே உன் குறிக்கோள் என்கிறாய்… இரண்டையும் சேர்த்துப் பார்க்கும்பொழுது…" என்று தன் மகனின் கண்களுக்குள் பார்த்துச் சிரித்த வேதநாயகிதேவியார்,

"யார் அவள்? சில தினங்களாகவே என் மைந்தனின் மனதை போட்டுக் குடைபவள்?" என்று கேட்டார்.

"ஆஹா! மாட்டிக் கொண்டாயே மாறா!' என்று விழித்தவன், 'தாய் அறியா சூழ் உண்டா?' என்பதை உணர்ந்து, குனிந்தபடி, 'தன் தாயிடம் எப்படி ஆரம்பிப்பது?'என்று யோசிக்கும் பொழுதே மாறனின் முகம் சிவந்தது…

"போதும்! போதும்! இன்னும் குனிகிறேனென்று பூமிக்குள் சென்றுவிடாதே…" என்று பரிகாசம் செய்தவர் தன் மகனின் நாடியைத் தொட்டு, முகத்தை நிமிர்த்தி, "அப்படியென்றால் நான் சொன்னதுதான்… இல்லையா?" என்று கண்களில் குறும்பு மின்னக் கேட்டார்.

'இதற்கு மேல் இங்கே இருந்தால், தான் உளறிக்கொட்டி விடக்கூடும்' என்று உணர்ந்த மாறன் சிரித்தபடி விடுவிடுவென்று அந்த இடத்தை விட்டு அகன்றான்.

"எங்கே ஓடுகிறாய் குமாரா? எப்படியாகினும் என்னிடம் வந்துதானே ஆகவேண்டும்?" என்ற வேதநாயகிதேவியாரின் பரிகாசக் குரல் தூரத்தில் ஒலித்தது…

மாறன், குலசேகரப் பாண்டியரிடம் ஆட்சி உரிமை கோரப்போவதை அறிந்த பாண்டிய போரரசின் பட்டத்தரசியாரின் சகோதரரான தொண்டை மண்டலத்தை ஆண்ட பொருங்கிள்ளிப் பாண்டியர், மாறனுக்கும், விக்ரமனுக்கும் தன் அரண்மனைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.

"இவர் ஏன் மாறா நம்மை அழைக்கிறார்?" என்று விக்கிரமன் மாறனிடம் கேட்க,

"வேறென்ன? நான் அரசுரிமை கோரப்போவது பட்டத்தரசியாருக்குத் தெரிந்திருக்கும்... இது சரியல்ல! என்று அறிவுரை கூறுவதற்காக அழைக்கிறார். வா! என்னதான் சொல்கிறார் என்று போய்ப் பார்ப்போம்!" என்று கூறி இருவரும் தொண்டைமண்டலம் சென்றனர்.

மாறனும் விக்ரமனும் எதிர்பார்த்ததற்கு மாறாகப் பெருங்கிள்ளிப் பாண்டியரின் அரண்மனையில் வரவேற்பு பிரமாதமாக இருந்தது.

விருந்து உபசாரங்கள் எல்லாம் முடிந்த பிறகு, பெருங்கிள்ளிப் பாண்டியரைத் தனிமையில் சந்திக்க மாறனும் விக்ரமனும் சென்றனர்.

"நான் கேள்விப்பட்டது உண்மையா குமாரா? மதுரையம்பதி பேரரசர் குலசேகரப் பாண்டியர் மதுரைக்கு வந்ததும், நீ குறுநில மன்னன் ஆவதற்கு உரிமை கோரப் போவதாகக் கேள்விப்பட்டேன்." என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார் பெருங்கிள்ளிப் பாண்டியர்.

பெருங்கிள்ளி பாண்டியரே நேரடியாக விஷயத்திற்கு வந்ததால் மாறனும், விக்கிரமனும் தயக்கமின்றிப் பேச ஆரம்பித்தனர்

"ஆமாம் அரசே!"

"எந்தப் பகுதியைக் கேட்பதாக இருக்கிறாய்?" என்று பெருங்கிள்ளி பாண்டியர் கேட்க,

"நான் அவரிடம் பரிசாகவோ, வாரிசுரிமையிலோ கேட்க விரும்பவில்லை அரசே! செண்பகப்பொழில் நாட்டைக் கைப்பற்றியது போல் ஏதேனும் ஒரு பகுதியைப் போர் புரிந்து கைப்பற்றி, அந்த நாட்டிற்கான உரிமையைக் கோரத்தான் விரும்புகிறேன்.' என்று கூறிய மாறனை விழிகள் விரித்துப் பெருமையாகப் பார்த்தார் பெருங்கிள்ளிப் பாண்டியர்.

"உன் திறமையை நான் அறிவேன் குமாரா! நீ ஏன் நம் பாண்டிய ஆட்சிக்குட்பட்ட ஒரு மன்னரை வீழ்த்தி, அவரது அரசுரிமையைப் பெற வேண்டும்? நம் பாண்டிய அரசுக்குட்படாத, வேறொரு தேசத்தை வென்று, அதைப் பாண்டிய நாட்டுடன் இணைத்து, அரசுரிமையையும் பெறலாமே?" என்று பெருங்கிள்ளிப் பாண்டியர் கூற,

விக்ரமனும் மாறனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"எனக்கு ஒரு சந்தேகம்! அரசர் அனுமதித்தால் கேட்கிறேன்." என்று மாறன் கூற,

அனுமதி தருவதுபோல் தலையசைத்தார் பெருங்கிள்ளிப் பாண்டியர்.

"நீங்கள் கூறும் இந்த யோசனை சிறந்ததுதான்… ஆனால்… இதற்குப் பின்னால், பாண்டிய பேரரசரும் எமது தந்தையுமான குலசேகரப் பாண்டியரின் பட்டத்துஅரசி மைந்தனுக்கு வாரிசுரிமையில் பங்கம் விளைவித்து விடாமல் இருக்கும் பொருட்டு, என்னை வேறு தேசத்தை வென்று வரச் சொல்கிறீர்களோ? என்று தோன்றுகிறது." என்று கூறிவிட்டு பெருங்கிள்ளி பாண்டியரையே மாறன் கூர்ந்து கவனித்தான்.

மாறன் கூறியதைக் கேட்ட பெருங்கிள்ளிப் பாண்டியர் ஆச்சரியத்தில் திகைத்தாலும், அவர் கண்களில் பாராட்டும் இருந்தது.
"நீ அறிவிற் சிறந்தவன் என்று பேரரசர் குலசேகரப்பாண்டியர் கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால் உன் புத்திகூர்மையை இன்று தான் நேரில் பார்க்கிறேன். உன் தந்தையின் வீரமும் உன் தாயின் விவேகமும் பெற்று பிறந்திருக்கிறாய்…"என்று தன்னைப் புகழ்ந்து கொண்டே போனவரைப் பார்த்துச் சிரித்தபடி,

"தாங்கள் இன்னும் விஷயத்திற்கு வரவில்லை அரசே!" என்றான் மாறன்.

மாறனுடைய இந்தத் துணிச்சலும் பெருங்கிள்ளிப் பாண்டியரை வியப்பில் ஆழ்த்த, "வருகிறேன் குமாரா! அதற்குத்தானே அழைப்பு விடுத்து இருக்கிறேன். நீ நினைப்பது முற்றிலும் உண்மை குமாரா... குலசேகரப் பாண்டியருக்குப் பின் அவரது பட்டத்தரசியின் மைந்தனே அரசாலும் உரிமையைப் பெறுகிறான். ஒருவேளை மூத்த குமாரனுக்கு விருப்பம் இல்லையென்றாலும், அவருடைய இளைய சகோதரர்களால் மட்டுமே அரசுரிமை கோர வழி இருக்கிறது என்பதை நீ அறிவாய்… உன்னுடைய வீரதீரத்தையும், புத்திக் கூர்மையையும், இரக்க சிந்தையையும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதோடு செண்பகப்பொழில் நாட்டை நீ கையாண்ட விதத்தில் நான் அறியவும் செய்தேன். இப்படிப்பட்ட வீரன், பாண்டிய நாட்டிற்கு அவசியம் குமாரா... இன்றைய சூழ்நிலையில் உன்னைப் போன்ற வீரமும் விவேகமும் உடையவனை இழக்க பாண்டிய தேசம் விரும்பவில்லை. அதோடு நம் நாட்டிற்குள்ளும் குழப்பம் விளைவிக்க வேண்டியதில்லை என்பது என் எண்ணம். சகோதரர்களுக்குள் குழப்பம் வருவது அண்டை தேசத்தவருக்கு வாய்ப்பாக அமைந்துவிடும் குமாரா. புரிந்து கொள்வாய் என்று நம்புகிறேன்... அதனால் தான் இப்படியொரு யோசனை உனக்குக் கூறினேன். இன்னுமொரு திட்டம் எனக்கு இருக்கிறது. நம் பாண்டியநாட்டின் அண்டை நாடான நெல்லூர் சோழன் விஜயகந்த கோபாலன் என்ற சோழன் ஆளுகின்ற காஞ்சிப் பகுதியைப் பற்றி நிறையக் கேள்விப்படுகிறேன்… காஞ்சிதேசத்தின் மீது நம் பேரரசர் குலசேகரப் பாண்டியருக்கு விருப்பம் என்பதை முன்னொருமுறை அவர் கூறக் கேட்டேன்… அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற இது தக்க தருணம் என்றும் எனக்குத் தோன்றுகிறது… அதை நிறைவேற்றும் பொறுப்பை நான் உன்னிடம் ஒப்படைக்கிறேன். நீ காஞ்சி மன்னர் விஜயகந்த கோபால சோழன் மீது போர் தொடுத்து, வெற்றி வாகை சூடி வா! நானே முன்நின்று வரவேற்று, குலசேகரப் பாண்டியரிடம் உனது அருமை பெருமைகளைக் கூறி, அந்த தேசத்தைப் பாண்டிய தேசத்தோடு இணைப்பது மட்டுமல்லாமல் உனக்கே ஆளும் உரிமையையும் பெற்றுத் தருகிறேன்" என்றார் பெருங்கிள்ளிப் பாண்டியர்.

நெல்லூர் சோழர் என்றழைக்கப்படும் விஜயகந்த கோபாலர் பற்றி மாறனும், விக்ரமனும் அறிந்ததே. அவர் சிறந்த ஆட்சியாளர் மட்டுமல்லாமல், மிகச் சிறந்த வீரர் என்றும் கேள்விப்பட்டிருக்கிறார்கள். அவருடைய ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் பழமையும், பெருமையும், செழிப்பும் மிக்கது என்றும் அறிவார்கள்.

'அப்படிப்பட்ட தேசம், பாண்டிய தேசத்தோடு இணைந்தால் மிகப் பெருமை தான்.' என்று தோன்றினாலும் மாறனும், விக்கிரமனும் பெருங்கிள்ளி பாண்டியரிடம்,

"எங்களுக்குச் சிறிது அவகாசம் தாருங்கள் அரசே! நாங்கள் விரைவில் தங்களுக்குத் தகவல் அளிக்கிறோம்." என்று கூறி பெருங்கிள்ளிப் பாண்டியரை வணங்கி விடைபெற்றனர்.

மாறன் சென்று வெகுநேரம் கழித்தும், மாறனின் கம்பீரத்தோற்றப் பொழிவும், எதிராளியின் ஆழ்மனம் வரை ஊடுருவும் தீர்க்கமான பார்வையும், ஆளுமையும், தோள் வலிமையும் பெருங்கிள்ளிப் பாண்டியரின் கண்களுக்குள்ளேயே நின்றிருந்தது.

இத்தகுதிகள் எல்லாம் தமது தமக்கையாம் பட்டத்தரசியாரின் மைந்தனுக்கு இருந்தாலும், சுந்தரனது பொறுப்பற்ற அலட்சியமும், உல்லாசமும் சற்றே கவலையேற்படுத்தியது.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில், எல்லா வகையிலும் மிகச்சிறந்த அரசனே பாண்டியப் பேரரசின் மன்னன் ஆவதற்குத் தகுதி வாய்ந்தவன் என்றும் தோன்றியது.

மாறனும், விக்ரமனும் சென்றபிறகு பெருங்கிள்ளிப் பாண்டியர் ஒரு காவலாளியை அழைத்து, "அவர்களை அழைத்ததாகக் கூறு." என்று பணித்ததும் பெருங்கிள்ளிப் பாண்டியர் இருந்த அறைக்குள் பாண்டிய பேரரசர் குலசேகரப் பாண்டியரின் பட்டத்தரசியும், அவரது புதல்வன் சுந்தரனும் உள்ளே வந்தனர்.

"மாறன் சம்மதித்தானா?" என்று தீவிரமாகச் சுந்தரன் கேட்டதும்,

"சம்மதித்தது போலத்தான்!" என்றார் பெருங்கிள்ளிப் பாண்டியர்.

"அருமையான வேலை செய்தீர்கள் மாமா! மிக அருமை? விஜயகந்த கோபாலனை வெற்றி கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல... நம் ஆட்சிக்குட்பட்ட ஒரு சிற்றரசனை வென்று விட்டதால் ஆட்சி உரிமை கோரும் ஆசை வந்து விட்டது மாறனுக்கு… அந்த ஆசை விஜயகந்த கோபாலனோடு போர் புரியும்போது அடியோடு அழிந்து விடும்… ஹாஹ்ஹஹ்ஹா!" என்று பெருஞ்சப்தமிட்டுச் சிரித்தான் சுந்தரன்.
"ஆனால் குமாரா இதெல்லாம் உன்னால் விளைந்தது... அன்றே நீ செண்பகப்பொழில் சிற்றரசை நோக்கிப் படையெடுத்துச் சென்றிருந்தால் இப்படியொரு பிரச்சனை இன்று வந்திருக்காது." என்று பட்டத்தரசியாகக் கண்டித்தார் அவனது தாயார்.

தங்களின் உரையாடலில் கலந்து கொள்ளாமல் பெருங்கிள்ளி பாண்டியர் யோசனையோடு தங்களையே பார்ப்பதை கவனித்த பட்டத்தரசியார் பெருங்கிள்ளிப் பாண்டியரிடம்,

"தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக... அரசர் இல்லாத சமயத்தில் பாண்டியப் பேரரசைக் கட்டிக்காக்கும் மிகப்பெரிய பொறுப்பு என்னுடையது. இந்நேரத்தில் தேவையில்லாத குழப்பத்தைத் தவிர்க்க வேண்டியே தங்களின் உதவியை நாடி வந்தேன்...."

"இப்பழமைவாய்ந்த பாண்டியப் பேரரசின் பட்டத்தரசியாருக்கு பாண்டிய தேசத்தின் மீது அக்கறை இருக்கும் என்பதை நானும் அறிவேன்... ஆனாலும் மாறன் சிறந்த வீரன்! விவேகி! புத்தி கூர்மை உடையவன்! ஒரு நாட்டை ஆளும் தகுதி நிறைந்தவன்! இன்றைய நம் நாட்டின் சூழ்நிலையை அறிந்த பட்டத்தரசி, எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறமை கொண்டவன் நம்மோடு இணைந்து இருக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்"

"போதும் மாமா அவனைப் புகழ்ந்தது. எதிரில் பேசுபவர்களைத் தன்வயப்படுத்தும் திறன் மிக்கவன் அவன். மற்றபடி அவன் என்னைவிட எதிலும் சிறந்தவன் இல்லை மாமா!" என்ற சுந்தரனை கவலையோடு பார்த்த பெருங்கிள்ளிப் பாண்டியர்.

"வருங்கால இப்பாண்டிய பேரரசை ஆளப்போகும் இளவரசருக்கு இது தகுதியான பேச்சு அல்ல… இவ்வளவு பெரிய பேரரசை ஆளுவதற்குத் தேவையான முக்கியமான குணம், வீரமும் விவேகமும் நிறைந்தவரை அணைத்துக்கொள்வதே... மேலும், மாறன் ஒன்றும் மாற்றான் அல்ல. அவனும் உன்னுடைய சகோதரனே…" என்று பெருங்கிள்ளிப்பாண்டியர் கூறிக்கொண்டிருக்கும் போதே,

"தயவு செய்து மறுத்துப் பேசுவதற்கு என்னை மன்னித்துவிடுங்கள் மாமா! அவன் என் சகோதரன் அல்ல!" என்றான் சுந்தரன்.

வார்த்தைகளின் எண்ணிக்கை-1432

சிவதாசனின் கர்ஜனை தொடரும்…


⚔️⚔️⚔️⚔️⚔️⚔️
 

Meerajo

Member
Vannangal Writer
Messages
33
Reaction score
6
Points
8
RD-22- சிவதாசன் எனும் நான்!...-13

"டெல்லி சுல்தானிய தேசத்தின் மாகாராணிக்கு வணக்கம்! தங்களிடம் எனக்கு ஒரு விண்ணப்பம்" என்று சமையல்கூட நிர்வாகி ஆமிரா டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் மனைவி சுல்தானா பேகத்திடம் வந்து நின்றார்.

"என்ன விசயம்?" என்ற சுல்தானா பேகம் அவர்களின் கம்பீரக் குரலில், வழக்கம் போல் சிறிது தயங்கி விட்டு,

"இன்று, விருந்து உபச்சார தினம் என்பதால் அதிகப்படியான சுவைமிகுந்த உணவுகள் தயாரிக்க வேண்டியுள்ளது. ஆனால் அதற்குத் தேவையான பணியாட்கள் குறைவாக உள்ளனர் என்று தலைமை அமைச்சரிடம் விண்ணப்பித்தேன். அவர், நம்பிக்கைக்குரிய பணிப்பெண்களை தங்களின் அனுமதியோடு அழைத்துச் செல்லுமாறு பணித்தார்…" என்றதும் சுல்தானா பேகத்திற்கு முந்தைய வாரத்தில் நடந்த நிகழ்வு மனதில் விரிந்தது…

உணவு செரிமானத்தில் ஏதோ தவறாகி வயிற்றுவலியால் துடித்தார் சுல்தானா பேகம்…

பணிப்பெண்கள் ஏதேதோ வைத்தியம் செய்தும் குணமாகாததால் வைத்தியரை அழைத்துவர ஆள் அணுப்பினர்…

அப்பொழுது மிகவும் பணிவாக, சுல்தானாவின் அருகில் வந்து நின்ற சமீதா என்ற பணிப்பெண்,

"எனக்குத் தங்களின் உபாதைக்குரிய சிறந்த மருந்து தெரியும். தாங்கள் அனுமதித்தால் எடுத்து வருகிறேன்…" என்ற சமீதாவை பார்த்த சுல்தானா பேகம்,
"நீ குதிரைப்படை சேனைத் தலைவரால் பணியமர்த்தப்பட்ட குதிரைப்படை வீரனின் தங்கையல்லவா?"

"ஆமாம் மாகாராணி!"

"உனக்கு வைத்தியம் தெரியுமா?"

"வைத்தியமும் சமையலும் கொஞ்சம் அறிவேன் மகாராணி!" என்ற சமீதாவின் முகவசீகரத்திலும் அமைதியாக ஓடும் நதியின் ஓசையை ஒத்த குரலிலும், குளிர்ந்த நிலவைப் போன்ற இதம் தரும் புன்னகையிலும் ஈர்க்கப்பட்ட சுல்தானா பேகம்,

"உன் திறமையையும் பார்த்து விடுவோம் எடுத்து வா! வலி குறைந்தால் நன்று!" என்று அனுமதி தந்த சில நொடிகளில் சுல்தானா பேகத்தின் முன் ஒரு குவளையுடன் வந்து நின்றாள் சலீமா.

"அதற்குள்ளாகத் தயாராகி விட்டதா!" என்று ஆச்சரியப்பட்ட அவர் அந்தக் குவளையைத் திறந்து பார்க்க, அதில் சிறிது கறிவேப்பிலையும், சீரகமும் இருந்தது.

"என்ன இது?" என்று சற்றுக் கோபமாக நிமிர்ந்து பார்த்துக் கேட்டார் சுல்தானாபேகம்.

"தயவுகூர்ந்து இதை அப்படியே சாப்பிடுங்கள் மகாராணி... நல்ல பலன் கிடைக்கும்... இதில் தவறு இருந்தால் தாங்கள் என்னைத் தண்டித்து விடலாம்!" என்று பணிவாகக் கூறினாள் சமீதா
சற்றே முகம் சுளித்தபடி அதை எடுத்து அப்படியே சாப்பிட்ட சுல்தானா பேகத்திற்கு ஒரே நாழிகையில் நல்ல பலன் தெரிந்தது... வயிற்று வலி முற்றிலும் குணமாகி, பூரண நலம் ஆனது…

ஆச்சரியத்துடன் விசாரிக்கும் பொழுது பணிப்பெண்களில் சிலர், தங்களது சிறு சிறு உடல் உபாதைகளுக்கு அவள் கொடுக்கும் இவ்வகை மருந்துகளும், கஷாயங்களும் நல்ல பலன் தருவதாகக் கூறினர்.

அந்த ஞாபகங்கள் வந்ததும், சில மாதங்களாக சமீதாவின் நடவடிக்கைகளைக் கவனித்து அதில் ஏற்பட்ட நம்பிக்கையாலும், சமீதாவை அழைத்துச் சமையல் நிர்வாகியிடம் அறிமுகப்படுத்தினார் சுல்தானா பேகம்.

"இவள் சமீதா! இவளோடு சில பெண்களை அழைத்துச்செல்!" என்று கூறி சமீதாவின் தலைமையில் சில பணிப்பெண்களை அனுப்பிவைத்தார்.

சில திங்களுக்குப் பிறகு ஒரு நாள்….

"சமீதாவை வரச்சொல்" என்று சுல்தானா பேகம் யாஸ்மின் என்ற தனது தோழியிடம் கூற,

"சமீதா தங்களுக்குப் பானம் தயாரிக்கச் சென்றிருக்கிறாள் மகாராணி" என்று சுல்தானா பேகத்திற்குக் கால் பிடித்துவிடும் பணிவிடை செய்து கொண்டிருந்த பணிப்பெண் கூறினாள்…

"சமீதாவின் கைமணத்தில், உணவு கூடுதல் சுவையுடன் இருப்பதால் அடிக்கடி அவளைச் சமையல் கூடத்திற்கு அழைத்துக்கொள்கிறார்கள் மகாராணி…" என்றாள் யாஸ்மின் என்ற சுல்தானா பேகத்தின் தோழி…

"மிகவும் ஆச்சரியமான விஷயம் இது, இல்லையா யாஸ்மின்? நம் தலைமை அமைச்சர் யாரையும் அவ்வளவு எளிதில் நம்புபவரல்ல… அதிலும் சுல்தானிற்காக, உணவு சமைப்பவர்களிலிருந்து பரிமாறுபவர்கள் வரை மிகவும் நம்பிக்கைக்குரியவர்களே தொடர்ந்து பணிபுரிகின்றனர்...‌ அப்படியிருக்க, சில திங்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்த நம் சமீதாவை சிறப்புஉணவு தயாரிக்கும் பணியில் சர்வ சுதந்திரமாக அனுமதித்திருக்கிறார் எனில் சமீதா மீது அவர் கொண்டுள்ள நம்பிக்கை மிகவும் வியக்கத்தக்கது…" என்று சுல்தானா பேகம் கூறும் பொழுதே,

சிறந்த வேலைப்பாடுகளுடன் கூடிய தங்கக் குவளையை ஏந்தியபடி பணிவான புன்னகையுடன் வந்து நின்றாள் சமீதா!

"நீ தரும் பானத்தை விட உன்னுடைய வசீகரிக்கும் புன்னகையும், உன்னிடமிருந்து வரும் நேர்மறை ஆற்றலுமே, எனக்குப் புத்துயிர் அளிக்கிறது சமீதா!" என்று சிரித்தபடி குவளையை வாங்கிப் பருகியவர் முகத்தில் ஆனந்தம் கூடியது.

"உன் கையில் அப்படி என்ன இருக்கிறது? நீ எதைக் கலந்து கொடுத்தாலும் அமிர்தமாக இருக்கிறது!" என்று சிரித்தபடி கூறினார்.

இந்த உரையாடலில் வயிறு எரிந்த ஒரு பணிப்பெண், "ஆமாம் மகாராணி! இவள் கொடுக்கும் பானமும் இவளைப் போன்றே பார்வைக்கு அசூசையை ஏற்படுத்தினாலும், பருகுவதற்கு இனிமையாக இருக்கிறது!" என்று கூற,

"ஒருவரின் உருவத்தைப் பார்த்து பரிகாசம் செய்வது மிகவும் தவறான செயல். இதில் எனக்குச் சிறிதும் உடன்பாடு கிடையாது." என்று கண்டித்தார் சுல்தானா பேகம்.
"மன்னிக்க வேண்டும் மகாராணி!" என்று இடைவரை குனிந்து வணங்கி, மன்னிப்பைக் கோரினாள். அந்தப் பணிப்பெண்.

"வைரம் கூடக் கருமை நிறம் தான்!" என்று புன்னகையுடன் சுல்தானா பேகம் கூற,

"சில வைரங்கள், பல நேரங்களில் உயிருக்கு ஊறு விளைவிப்பதாகவும் இருக்கும் மகாராணி!" என்று சுல்தானா பேகத்தின் மற்றொரு தோழியான சுமையா எச்சரித்தாள்.

"உங்கள் அனைவருக்கும் சமீதா மீது பொறாமை! வந்த சில தினங்களிலேயே என் மனதில் மட்டுமல்ல, நம் அரண்மனையிலுள்ள பல நல்லவர்கள் மனதில் நம்பிக்கைக்குரியவளாக இடம்பிடித்து விட்டாள் என்பது தானே உங்களுடைய இத்தகைய கூற்றுக்குக் காரணம்? சமீதா மீது பொறாமைப் படுவதற்குப் பதிலாக அவளிடமிருந்து நீங்கள் ஒரு நல்ல விஷயத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்… ஒரு மனிதனை, தன் சமையல் கைமணத்தால் அவனுடைய நாவை அடிமையாக்கி விட்டால், அம்மனிதனின் மனதிலும் சிறந்த இடத்தைப் பிடித்துவிட முடியும். நான் சொல்வது சரிதானே சமீதா?" என்று சிரித்தார்.

"சாதாரணப் பணிப்பெண்ணிடம் இத்தனை நம்பிக்கையும், அன்னியோன்யமும் வைப்பது, தங்களுக்கு அவ்வளவு நல்லதல்ல மகாராணி!" என்று எச்சரித்தாள் தோழி யாஸ்மின்.

"இன்று உனக்கு என்ன ஆயிற்று? அவள் முகத்தைப் பார்! நிலவுபோல் களங்கம் இல்லாமல் இருக்கிறது... நம் அகத்தினுள் இருப்பதை எடுத்துக்காட்டுவது முகம் தானே? ஆயின், அவள் மனதிலும் எந்தக் களங்கமும் இல்லை என்பதை நீ அறிய மாட்டாயா?" என்று கேட்டார் சுல்தானா பேகம்.
"நான் தங்களுக்குத் தோழி மட்டுமல்ல அந்தரங்கப் பாதுகாவலாளியும் ஆவேன்... அதன்பொருட்டு யாரையும் முழுவதும் நம்புவதற்குச் சற்றுத் தயங்குகிறேன், அவ்வளவுதான்!" என்று தோழியும் சிரிக்க,

'உத்தரவு மகாராணி!" என்று கூறி சமீதா கூடத்திலிருந்து வெளியேறினாள்.

'இவளைக் கண்காணிக்க வேண்டும்!' என்று தோழி யாஸ்மின்னின் உள்ளுணர்வு எச்சரிக்கும்பொழுதே, 'உன் மனதிலும் பொறாமை குடிகொண்டு விட்டது:' என்று எள்ளி நகையாடியது தோழியின் இதயம்.

டெல்லி சுல்தான் அலாவுதின் கில்ஜியின் அந்தப்புரதில் பணிப்பெண்களுக்காக அமைக்கப்பட்டிருந்த சிறிய மாளிகை. அவரவர் பணிக்கேற்ப பெரிய பெரிய கூடங்களைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு கூடத்திலும், ஒரே வகை பணிசெய்யும் பணிப்பெண்கள் தங்கியிருந்தனர்.

அம் மாளிகையின் மாகாராணியின் அந்தரங்க பணிப்பெண்களுக்கான அறையில் தங்கியிருந்த இருபது பெண்களில் ஒரு பெண்ணைத் தவிர.

இரவு நேர சந்திரனின் குளுமையும், தென்றலின் சுகமும் தாலாட்ட, அதிகாலையிலிருந்து பணிகள் பல செய்ததால் உடல் களைத்திருந்தாலும், சமீதாவின் மனம் மட்டும் எப்பொழுதும் போல் உற்சாகமாக இருந்தது.

பல உயிரினங்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனின் மூளையும் கூட ஓய்வெடுக்கும் நேரம் அல்லவா இரவு?

பலருக்கு! குறிப்பாக, கவிஞர்களுக்கும், கலைஞர்களுக்கும், காதலர்களுக்கும் மனம் விழித்திருக்கும் நேரம் இது!

நிதர்சன உலகம் மறைந்து, கற்பனை உலகம் விரியும் அற்புதமான நேரம் இது!

இவ்வினிய வேளையில் சமீதா மட்டும் உறங்கி இருப்பாளா என்ன?

பொதுவாகவே இரவு நேரங்களில் இளம் பெண்களுக்கும், கட்டிளங்காளைகளுக்கும் உறக்கம் வருவது சற்றுச் சிரமம்தான்... அதிலும் காதல் வயப்பட்டவர்களுக்கு?!!

அப்படி என்றால் சமீதாவும் யாரையேனும் விரும்புகிறாளா என்ன?

ஆம்! ஆனால், அவள் மனதில் சிம்மாசனம் போட்டு வீற்றிருந்தது ஒரு தேசத்தின் இளவரசன்!

அடக்கடவுளே! பணிப்பெண்ணுக்கு இளவரசன் மீது விருப்பமா? இது எப்படிச் சாத்தியம்?

சாத்தியமாவது எது? சாத்தியம் இல்லாதது எது? என்று பார்த்து வருவதல்ல காதல்!

ஆனாலும் காதலுக்குக் கண்ணில்லை என்பது மட்டுமல்ல, பல நேரங்களில் அறிவும் வேலை செய்வதில்லை!!! எத்தனையோ கதைகளிலும், காவியங்களிலும் படித்திருக்கிறோம்! அரசனுக்கும், பணிப்பெண்ணுக்கும் அல்லது ஆடல் கலையில் வல்ல நடனதாரகைகளுக்கும் ஏற்படும் காதல், துயரத்திலேயே முடிந்திருக்கிறது... ஆனாலும் மனம் கேட்கிறதா?

ஒவ்வொரு நன்நாளிலும், ஒவ்வொரு வீதியெங்கும், சலீம், அனார்கலியின் காதலைக் கூறாத மேடை நாடகங்கள் உண்டா? அதையும் ரசித்துப் பார்க்கத்தான் செய்கிறது மனம்… ஆனால்

தனக்கென்று வருகையில் மரணத்தை மட்டுமல்ல, ஏற்றத்தாழ்வு மிக்கக் காதலின் விளைவுகளையும் ஏற்றுக் கொள்வதில்லை மனிதனின் மனம்…

'நாட்பட நாட்பட ஏதேதோ யோசனைக்க ஆரம்பித்து விட்டாய் சமீதா!' என்று தன்னைத் தானே செல்லமாகத் திட்டிக் கொண்டாள் சமீதா.

எங்கெங்கோ சுற்றி அலைந்த தன் மனதை அடக்கி, தன் மனதிற்கினிய இளவரசனிடம் ஒருநிலைப்படுத்தினாள்.

'இந்நேரம் அவர் என்ன செய்து கொண்டிருப்பார்? துயில் கொண்டிருப்பாரா? அல்லது என்னைப் போல், என்னை நினைத்துக் கொண்டிருப்பாரா?' என்று நினைத்தவளுக்கு இதயம் முழுதும் தேனினும் இனிய பரவசம் பரவியது…

அன்றொரு நாள், இதே போல் துயில் கலைந்து எழுந்த சமீதா, தனது அறையிலிருந்து வெளியேறி மேல் மாடத்தில் நின்று, நிலவொளியில் கலங்கலான ஓவியம்போல் தெரிந்த அரண்மனையின் பிருந்தாவனத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அப்பொழுது பிருந்தாவனத்தின் பூச்செடிகளுக்கிடையே சிறிய சலசலப்பு... மனதிற்குள் 'திக்!: கென்றிருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த இடத்தைக் கூர்ந்து பார்த்தவளின் இதயம், அதிவேகமாக மிரண்டு ஓடும் புரவியைப் போல் தடதடத்தது.

அங்கே அவளின் மனதிற்கினிய இளவரசன் நிலவொளியையும் தோட்டத்திலிருந்து வரும் பூக்களின் கலவையான நறுமணத்தையும், தென்றலின் சுகத்தையும் அனுபவித்தவாறு உலாவிக்கொண்டிருந்தான்.

இளவரசனைப் பார்த்த கணத்தில் சமீராவின் மனமோ துளியும் யோசியாமல் மேல் மாடத்திலிருந்து துள்ளி கிழே குதித்தது... ஆனால் சமீராவால் முடியுமா? விடுவிடுவென்று பிருந்தாவனத்தை நோக்கி ஓடத்தான் முடிந்தது. அதிலும் பிறரின் உறக்கத்தைக் கலைக்கா வண்ணம் ஓட வேண்டும்…

திடீரென்று தன் முன்னால் மூச்சுவாங்கியபடி நின்ற சமீதாவைப் பார்த்தவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது…

சமீதாவின் மனம்நோகக்கூடாதென்று வெடித்து வந்த சிரிப்பைத் தன் வாயிற்குள்ளேயே அடக்கியபடி, "இந்த நேரத்தில், இங்கே வந்து ஏன் மூச்சு வாங்க நிற்கிறாய்? யாரேனும் துரத்தினார்களா என்ன?"என்று கேட்டவனுக்கு என்ன பதில் தருவது என்று தெரியாமல் விழித்தாள் சமீதா.

"இல்லை!... அதாவது… மேல்மாடத்திலிருந்து பார்த்தபொழுது இவ்விடத்தில் யாரோ உலாவுவது தெரிந்தது… யாரெனப் பார்க்க வந்தேன்…"

"ஓ!... தாங்கள் நடுநிசி வரை உறக்கம் கொள்ளாமல் மேவ்மாடத்தில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?"

'ம்ம்ம்? உம்மைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்… என்றா சொல்ல முடியும்?' என்று நினைத்தவள்,

"அது… வந்து… உறக்கம் பிடிக்கவில்லை…" என்று இழுக்க,

"நல்லவேளை! நான் கூட உறக்கத்தில் உலாவும் பழக்கம் இருக்குமோ? என்று சந்தேகித்தேன்…

தன்னைக் கேலி செய்கிறான் என்பதை உணர்ந்தவள், ஏதும் கூறாமல் சட்டென்று திரும்பி நடக்க,

அவள் வழியை மறித்தவாறு வந்து நின்றவன், அவளின் கண்களில் எதையோ தேட, அதற்குமேல் அவனின் பார்வையைச் சந்திக்கும் திராணியற்று நிலத்தை நோக்கிக் குனிந்தாள்…

குனிந்திருந்த நிலையிலும் அவளின் கன்னக்கதப்புகள் அவள் மௌனமாகச் சிரித்துக்கொண்டிருக்கிறாள் என்பதை உரைக்க,

"நல்லது! தனியாக உலவிய எனக்குத் துணை கிடைத்தது… சற்று என்னுடன் இங்கிருக்கலாகாதா?" என்று கெஞ்சலும் காதலுமாய்க் கேட்க,

'நல்லவேளை! என்னைப் போகவிடாமல் தடுத்து நிறுத்தினார்…' என்று மனதிற்குள் குதூகலித்தவள் அவனுடன் இணையாக நடந்தாள்…

தென்றல் ஏந்திவந்த நறுமணங்களை மீறி, அவனுடைய ப்ர்த்யேக வாசம் அவளின் நாசியைத் தீண்ட, அவளின் உயிர்வரை உலுக்கி தேகம் சிலிர்த்தது. அவளின் அங்க அசைவைக் கவனித்தவன்,

"இரவுநேர வாடைக்காற்றில் தேகம் நடுங்குகிறதென்றால், நீ அரண்மனைக்குள் சென்றுவிடு!" என்றதும் பதறியவளாக,

"இல்லை! அப்படியெல்லாம் இல்லை! நாம்… இல்லை... நான் உங்களுடனே… இல்லையில்லை இங்கேயே இருக்கிறேன்…” என்று திக்கித்திணறி ஒருவாறு கூறி முடிக்க,

அவனுக்குள் மீண்டும் சிரிப்பு பொங்கியது.

"முதன்முறையாக இல்லை என்ற வார்த்தைக்குச் சம்மதம் என்று அர்த்தம் வரக்கண்டேன்!" என்றவனை அவள் காதலுடன் நோக்க,

அவள் பார்வையால் ஈர்க்கப்பட்டவன் சட்டென்று அவளை இழுத்து அணைத்தான்!

காதலனின் கைப்பிடிக்குள் இருக்கும் இளம்பெண்ணின் இன்பத்திற்கு எந்தக் கவிஞராலும் உவமை கூறிவிட இயலாது…

அத்தகைய உணர்விற்கு இணையான இன்பத்தை ஆண்டவனாலும் படைப்பதரிது...

காதலின் அணைப்பில் அன்பும் இல்லை காமமும் இல்லை… இது வேறு…

யாரேனும் அன்பாக அணைக்கும்போது பெண்ணின் மனம் குளிரும்…

காமத்தில் அணைக்கும்போது தீயாய் பற்றி எரியும்…
ஆனால் காதலால் அணைக்கும்போது இது இரண்டுமே இல்லை…

இது வேறு… என்று உணர்வுக்குப் பொருள் விளங்காமல் தவித்தவளுக்கு,

தன்னவரின் இறுகிய அணைப்பையும் மீறிக் குளிர் ஊடுருவ, தேகம் சிலிர்த்து எழுந்தவள் சுற்றிலும் சூழ்ந்திருந்த இருளும், உடலை உறுத்தும் படுக்கையும் நிகழ்காலத்திற்கு இழுத்துவர, மனம் சற்றே சலித்து, "ப்ச்சு" என்று உச்சுக் கொட்டியபடி மீண்டும் படுக்கையில் படுத்த சமீதா, உறக்கம் வராமல் புரண்டு, புரண்டு படுத்தாள்.

அதனால் உறக்கம் கலைந்த, சமீதாவிற்கு அடுத்தப் படுக்கையில் உறங்கிய பணிப்பெண், "தினமும் இவளுடன் இதை வேலையாகப் போய்விட்டது... ஆந்தைப்பிறவி போல… இரவு முழுவதும் கொட்டகொட்ட விழித்திருக்கிறாள்..‌. இதில் அடிக்கடி உச்சுக்கொட்டி என் உறக்கத்தை வேறு கலைக்கிறாள்!" என்று புலம்பினாள்.

உறக்கத்தைச் சுத்தமாகத் தொலைத்த சமீதாவின் விழிகள், நிலவு இருந்த இடத்தைப் பார்த்து நேரத்தைக் கணித்தது...

நள்ளிரவு வரை காத்திருந்து, தன்னுடன் கூடத்தில் படுத்திருந்த பணிப்பெண்கள் அனைவரும் உறங்குவதை உறுதி செய்து கொண்டு எழுந்த சமீதா, யார் கண்ணிலும் பட்டுவிடாமல், பதுங்கிப் பதுங்கிக் குதிரைகள் கட்டப்பட்டு இருக்கும் குதிரைலாயத்திற்குச் சென்று, சுற்றும் முற்றும் பார்த்தவாறே யாரையோ தேடினாள்.

அப்பொழுது லாயத்திற்குள்ளிருந்து மிகவும் மெல்லிய சப்தம் ஒன்று வரவே, சப்தம் வந்த திசையில் கூர்ந்து பார்த்தாள்... அங்கே… ஆகாயத்தின் நிலவொளியில் சிறிதும், தூரத்திலிருந்த விளக்கிலிருந்த ஒளியில் சிறிதுமாக அளித்த வெளிச்சத்தில், அவளைப் பார்த்தவாறு நின்று இருந்தது சத்திகன் (குதிரை).

தன் அன்புக்குரியவர்களை ஒரு பிறவி கடந்து, மறு பிறவியில் சந்திக்கும் ஆனந்தத்துடன் சத்திகனை நோக்கி ஓடோடிச் சென்ற சமீதா,

"வந்துவிட்டாயா சக்திகா? அவரைப் பார்த்தாயா? அவர் எப்படி இருக்கிறார்? நலமுடன் இருக்கிறாரா? என்னைப் பற்றி விசாரித்தாரா?" என்று சத்திகனின் முகத்தைத் தடவிக் கொடுத்தபடி மூச்சுவிடாமல் கேட்டாள் சமீரா என்ற சீலனின் நிலா!

வார்த்தைகளின் எண்ணிக்கை-1398

சிவதாசனின் கர்ஜனை தொடரும்…

⚔️⚔️⚔️⚔️⚔️⚔️
 

Meerajo

Member
Vannangal Writer
Messages
33
Reaction score
6
Points
8
RD-22- சிவதாசன் எனும் நான்!...-14
மாறனைத் தன் சகோதரன் அல்ல என்று சுந்தரன் கூறியதைக் கேட்ட பெருங்கிள்ளிப் பாண்டியருக்கு மனதில் மிகப்பெரிய பாறையை ஒத்த கவலை வந்து அமர்ந்தது.
'இளவரசர் பேசும் விதம் சற்றும் சரியில்லையே! இப்படியே இருந்தால் எதிர்காலத்தில் பாண்டிய தேசத்திற்குப் பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்கிறது!' என்று எண்ணிய பெருங்கிள்ளிப் பாண்டியர் பாண்டியர், பட்டத்தரசியைப் பார்த்து,
"சுந்தரன் எண்ணத்தில் மிகப்பெரிய தவறு இருக்கிறது பெருந்தேவி! ஆரம்பத்திலேயே இவ்வாறான எண்ணங்களை வேரோடு கலைந்து விடுவதே, நம் நாட்டிற்கும் நமக்கும் நல்லது! தகுதி வாய்ந்த வீரர்களையும், புத்திசாலிகளையும் அரவணைப்பதே, எப்பொழுதும் ஒரு அரசனுக்கு அழகு! உன் மகன் பாண்டிய தேசத்தை அரசாள வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் முதலில் இவரிடம் உள்ள சிறு சிறு குறைகளைக் களையுங்கள். இல்லையென்றால் தேவையில்லாத பின்விளைவுகளை நம்தேசம் சந்திக்க வேண்டியிருக்கும். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்." என்று கூறிவிட்டு அவர் கிழக்குத் திசையிலிருந்த அறை வாயிலை நோக்கி நடக்க, அவர் நடையில் தெரிந்த தொய்வு பட்டத்தரசியின் புருவங்களை முடிச்சிடச் செய்தது.

அதேவேளையில் இதைப்பற்றிச் சுற்றும் கவலையின்றித் தன் தோள்களை அலட்சியமாகக் குலுக்கிவிட்டு அறையின் மேற்கு வாயிலை நோக்கி நடக்கும் சுந்தரனை கவலையுடன் பார்த்தார் பட்டத்தரசி.

இருவரும் எதிரெதிர் திசையில் சென்றது பட்டத்தரசி பெருந்தேவியின் மனதில் சிறிய நெருடலை உண்டுபண்ணியது.

வெகுதூரம் எதுவும் பேசாமல் குதிரையை மெல்ல நடத்தியபடி வந்துகொண்டிருந்தனர் மாறனும், விக்ரமனும்.

மாலை நேரம் மயங்கி இருள் கவியத் தொடங்கும் வேளையில் இருவரின் குதிரைகளும் நின்றுவிட்டன. குதிரைகள் நின்று ஒரு நாழிகை கடந்தும் இருவருமே அதை உணராமல் அமைதியாகக் குதிரையின் மேல் அமர்ந்திருக்க,

'என்ன எதுவும் பேசாமல் இருக்கிறார்கள்? இதற்குமேல் செல்ல இவர்களின் அனுமதி வேண்டுமே?' என்று இரு குதிரைகளுமே ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டன.

முதலில் சுயஉணர்வுக்கு மீண்ட விக்ரமன், "என்ன முடிவெடுத்திருக்கிறாய் மாறா?" என்று கேட்க,

"படைதிரட்டிப் போருக்குச் செல்வதென்று எப்பொழுதோ முடிவுசொய்துவிட்டேன். ஆனால் பெரிய பாண்டியரின் மனதை, நம் செயல் புண்படுத்துமோ என்றுதான் யோசிக்கிறேன்."

"பெரிய பாண்டியர்?!! யாரைச் சொல்கிறாய் மாறா? உனது தந்தையையா?"

"இல்லையில்லை… பெருங்கிள்ளிப் பாண்டியரைச் சொன்னேன்."

"இதில் பெருங்கிள்ளிப் பாண்டியரின் மனம் புண்பட என்ன இருக்கிறது அவர்தானே காஞ்சியை நோக்கிப் போர் நடத்தச் சொன்னார்." என்று கேட்டான் விக்ரம்.

"பாண்டிய தேசத்துக்குட்பட்ட எந்த ஒரு சிற்றரசர் மீதும் போர் புரியாமல், பாண்டிய நாட்டுக்கு அப்பாற்பட்ட ஒரு தேசத்தின் மீது படையெடுக்கச் சொல்லும்போதே பெரிய பாண்டியரின் மனநிலை உனக்குப் புரியவில்லையா? இளவரசர் சுந்தரன் ஆட்சியில் என்னால் குழப்பம் வந்துவிடலாம் என்று அவர் ஐயம் கொள்கிறார்."

"ஏற்கனவே பாண்டிய தேசத்துக்கு உட்பட்ட அரசின் மீது ஏன் போர் தொடுக்க வேண்டும்? அந்நிய தேசத்தைக் கைப்பற்றிப் பாண்டிய தேசத்தோடு இணைப்பதுதானே பெருமை, என்றும் நினைத்திருக்கலாம் இல்லையா! என்று விக்ரம் கேட்டான்.

"எனக்கென்னவோ இளவரசரின் அரசுரிமையில் நான் பங்கு கேட்டு வந்துவிடுவேனோ என்று எண்ணியதாகத்தான் தோன்றுகிறது."

"ஓ!... ஆனால் அவருடைய பயத்திலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது… அதற்காக? உன் மனதில் இடம் பிடித்த இளவரசி ருத்ராவின் கனவை நிறைவேற்றுவதும் உன் கடமைதானே?"

"அவளுக்காகத்தான் இவ்வளவு தூரம் யோசிக்கிறேன்… நம் தேசமா? அவளுடைய விருப்பமா?"

"இதில் நம் தேசத்திற்கு என்ன வந்தது? நீ வேறு எதையும் எண்ணிக் குழம்பாதே மாறா! உன் தந்தை, பெருங்கிள்ளிப் பாண்டியர், என் தந்தையைப் போன்ற நம் நாட்டின் நலத்தையே உயிர்மூச்சாக எண்ணும் பல சிற்றரசர்கள் இருக்கிறார்கள்… தவறாக ஏதும் நடக்கவிடமாட்டார்கள்…"

"அதுவும் சரிதான்!" என்று கூறியவாறே சுற்றுப்புறத்தைக் கவனித்தான் மாறன்.

அவர்கள் நின்றுகோண்டிருந்த செம்மண் பாதை ஒரு அடர்ந்த வனத்தின் முன் முடிவடைந்திருந்தது… சாதாரணமாக வனம் என்று சொல்லிவிட முடியாத அளவு, மிகவும் நெருக்கமாக மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தது... மனிதன் நடந்துசெல்லவே முடியாத அளவிற்கு முட்புதர்களும் மண்டியிருந்தது. மூன்று மரங்களுக்கு அப்பால் என்ன இருக்கிறது என்று கூடத் தெரியாத அளவிற்கு இருள் படர்ந்திருந்தது… சூரியன் மட்டுமல்ல மனித நடமாட்டம் கூட இல்லாத பகுதி என்று நன்றாக விளங்கியது...
'சிந்தனை வயப்பட்டிருந்ததால் குதிரைகளையும் வழிநடத்தவில்லை' என்று எண்ணிய மாறன்,

"ஹேய்! எங்கே வந்திருக்கிறோம்? இது எந்த இடம்?" என்று பொதுவாகக் கேட்டான்.

விக்ரமனும் சுற்றிலும் பார்த்துவிட்டு. "எங்கடா வந்திருக்கீங்க?" என்று குதிரைகளைப் பார்த்துக் கேட்க,

'நாங்களும் பாதைல கவனமில்லாமல் கால் போன போக்கில் வந்துவிட்டோம்!' என்பதைப்போல் அப்பாவியாகப் பார்த்தன குதிரைகள்!'

"அப்படியே வந்த வழியில் திரும்பிப் போவோம். பரிட்சயமான பகுதி வந்துவிடலாம்." என்று கூறி தன் குதிரைக்கு மாறன் சின்ன ஒலியால் சமிக்ஞை கொடுக்க, மாறனின் குதிரை வந்த பாதையை நோக்கித் திரும்பிய நேரத்தில், அவர்கள் நின்று கொண்டிருந்த பகுதியிலிருந்து ஆரம்பமான வனப்பகுதியில் ஏதோ புகையும் நெடி நாசியைத் தொட்டது.

'இந்த வனத்தில் எங்கேனும் நெருப்பு பற்றிவிட்டதோ?' என்று அதிர்ந்த மாறன் மீண்டும் குதிரையோடு திரும்பி வனத்தைப் பார்த்தான்.

மாறன் திரும்பி வனத்தைப் பார்க்கவுமே "உனக்கும் அந்த நெடி வருகிறதா மாறா?" என்று கேட்டான் விக்ரமன்.

"ஆமாம்! ஆனால், உள்ளே எந்த வெளிச்சமும் தெரியவில்லையே நண்பா!" என்ற மாறன் குதிரையை விரட்டி, சற்றுத் தூரத்திற்குச் சென்று வனத்தைத் திரும்பிப் பார்த்தான்.

'அருகில் நிற்கும் பொழுதே ஒன்றும் தெரியவில்லை… மாறன் ஏன் தூரமாகச் சென்று பார்க்கிறான்?' என்று மாறனைப் பார்த்தவாறு அதே இடத்தில் நின்றுகொண்டிருந்தான் விக்ரமன்.

மீண்டும் விக்ரமன் அருகில் வந்த மாறன் தூரத்தில் புகைமூட்டம் தெரிகிறது விக்ரமா…" என்று சொல்லி விட்டுத் தன் குதிரையிடம், "இந்த வனத்திற்குள் உன்னால் செல்லமுடியுமா? இல்லையென்றால் இங்கேயே காத்திருங்கள, நான் உள்ளே போய்ப் பார்த்து விட்டு வருகிறேன்." என்று கூற,

"குதிரைகள் இங்கேயே இருக்கட்டும் நாம் உள்ளே போவோம்!" என்றபடி குதிரையிலிருந்து இறங்கினான் விக்ரம்.

மாறனும் இறங்கி, "நாங்கள் வரும்வரை இந்தப் பகுதியிலேயே உலாவுங்கள்… என்னிடமிருந்து சமிக்ஞை வந்தால் மட்டுமே உள்ளே வாருங்கள்." என்று கூறிவிட்டு, இடையில் செருகியிருந்த வாளைத் தொட்டுப் பார்த்து உறுதி செய்துகொண்டு, குதிரையில் இரு பக்கங்களிலும் தொங்கிக்கொண்டிருந்த மூட்டையிலிருந்து, முக்குத்துவாள், வளரி(பூமராங்) போன்ற சிறுசிறு ஆயுதங்களை எடுத்துத் தன் இடையில் செருகிக்கொண்டான்.

இரு நண்பர்களும் வனத்திற்குள் செல்லச் செல்ல, மிகவும் இருள் சூழ்ந்து நடப்பதற்கே சிரமமாக இருந்தது.

"இது எந்த வனம் விக்ரமா? இதற்கு முன் நீ இந்த வனத்தைப் பற்றி யாரேனும் கூறக் கேள்விப்பட்டிருக்கிறாயா? இவ்வளவு நெருக்கமாக மரங்கள் இருக்கின்றன… இப்பொழுதே அருகில் இருக்கும் உன்னை நிழலுருவமாகத்தான் பார்க்க முடிகிறது" என்று ஆச்சரியமாகக் கேட்வாறே நடந்தான்.

"மாறா! நாம் சென்று சேனைகளை அழைத்து வருவோம்… இது அடர்ந்த வனமாக இருப்பதால் நெருப்பு விரைவில், வேகமாகப் பரவிவிடும்… நாம் நெருப்பில் மாட்டிக்கொண்டுவிட்டால் தப்பிப்பது கடினம்." என்று விக்ரமன் எச்சரித்ததும்,

"நாம் சென்று சேனைகளுடன் திரும்பி வருவதற்குள் வனம் முழுவதும் அழிவதோடு அருகில் உள்ள ஊர்களையும் அழிக்க வாய்ப்பிருக்கிறது…"

"ஆனால் நாம் இருவர் மட்டும் சென்று நெருப்பு பரவுவதைத் தடுக்க இயலுமா? இதுவரை நாம் வந்த வழியில் எந்த ஒரு நீராதரங்களையும் நாம் பார்க்கவில்லையே? அப்படியிருக்க எப்படி நெருப்பை" என்று விக்ரம் கேட்கும்போதே,

"ஆனாலும்…" என்று மாறன் கூறுவதற்குள்,

"நீங்கள் இருவரும் இங்கே எந்தத் தேசத்து அரசரைப் பின் தொடர்ந்து வந்தீர்கள்?" என்று அவர்களுக்குப் பின்னால் பெண்ணின் பரிகாசக் குரல் கேட்க,

'இப்படியொரு அடர்ந்த வனத்தில் பெண்ணா?' என்று ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்தவர்களுக்கு இதயத்துடிப்பு நின்றேவிட்டது…

ஏனெனில் அங்கே ஒரு பெண் காற்றில் மிதந்தபடி நின்றுகொண்டிருந்தாள்..‌. இருளில் அவள் முகவடிவமோ, உடல் வடிவமோ சரியாகப் புலப்படவில்லை… ஆனால் இருள் சூழ்ந்த வனத்தில் எத்திசையிலும் ஒளி ஊடுருவ வழி இல்லாமல் இருக்க, அந்தப் பெண்ணைச் சுற்றி மட்டும் மங்கலான வெளிச்சம் பரவியிருந்தது. அந்தப் பெண்ணிற்கு இறக்கைகள் இருந்தது...

"மாறா! வனமோகினியிடம் மாட்டிக்கொண்டோம்… " என்று மாறனின் செவியில் கிசுகிசுத்தான் விக்ரமன்.

"இதெல்லாமா நம்புகிறாய்?" என்ற மாறன் அந்தப் பொண்ணைக் கூர்ந்து பார்த்தவாறே அவளை நோக்கி அடி எடுத்து வைக்க,

மாறனை நகரவிடாமல் அவன் தோளைபா பற்றி நிறுத்திய விக்ரமன், "மாறா! இந்த மாதிரி மோகினிகளைப் பற்றி நான் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். மோகினிகளுக்கு நம்மைப் போல் இளம் வாலிபர்களைத்தான் பிடிக்குமாம். அதிலும் நாம் இளவரசர்கள்… வா இங்கிருந்து ஓடிவிடலாம்!" என்று கூறிவிட்டு, மாறனின் கையைப் பற்றிக்கொண்டு, விக்ரமன் வேகமாக மோகினிக்கு எதிர் திசையில் ஓட எத்தனித்தவனால் ஓட முடியவில்லை… நின்ற இடத்திலேயே ஓடிக்கொண்டிருந்தான்…
அவன் பின்னால் அந்த மோகினியின் சிரிப்புச் சப்தம் அந்த ஆரண்யம் முழுவதும் எதிரொலித்தது…

அவர்கள் ஓட முயற்சிப்பது புரிந்து, மோகினி இரு நண்பர்களை நோக்கி வர,
சற்றே குழம்பிய மாறன், எதற்கு வீண் வம்பு? விக்ரமனுடன் ஓடிவிடலாம் என்று முடிவெடுத்து விக்ரமனைப் பார்க்க,
அவன் நின்ற இடத்திலேயே ஓடிக்கொண்டிருந்தது புலப்பட்டது.

இவன் ஏன் இப்படி ஓடுகிறான் என்று விக்ரமன் அருகில் சென்க்ஷ மாறனின் பார்வையில் விக்ரமனின் அங்கவஸ்த்திரம் சிறிய மரக்கிளையில் சிக்கியிருப்பதைப் பார்த்துச் சிரித்தான்.

"மாறா அந்த மோகினி நம்மை நெருங்கிவிட்டாள். நீ ஏன் சிரித்துக் கொண்டிருக்கிறாய்?" என்று விக்ரமன் கூறியதும்,

திரும்பிப் பார்த்த மாறன், மோகினி தங்களை நெருங்கி வந்துவிட்டதைக் கண்டதும் மரக்கிளையில் மாட்டியிருந்த விக்ரமனின் உடையை விடுவித்து, விக்ரமனுடன் ஓடினான்.

திக்குதிசை அறியாமல் இருவரும் ஓட, அவர்களின் பின்னால் கால் கொலுசின் ஒளி பின்தொடர்ந்தது. அதை அறிந்து மேலும் வேகமாக இரு நண்பர்களும் ஓட, வெகுதூரம் ஓடியபின்னர், விக்ரமனின் கையைப்பிடித்து நிறுத்திய மாறன்,

"பெண்ணிற்குப் பயந்து ஓடுவது நம் வீரத்திற்கு அழகாகவா இருக்கிறது?"என்று கேட்க,

"நாம் ஒரு பெண்ணிற்குப் பயந்து ஓடவில்லை… மோகினிக்கு… அதோடு ஒரு விஷயத்தைக் கவனித்தாயா? நாம் இருவரும் இந்த இருண்ட வனத்தில் ஓடத் தடுமாறும்போது, அவள் மட்டும் கொஞ்சம் கூடத் தடுமாற்றமின்றிச் சீராக ஓடி வந்தாள்… சாதாரண பெண்ணிற்கு இது சாத்தியமா?" என்று விவாதம் செய்து கொண்டிருந்த விக்ரமனை, பேசாமல் அமைதியாக இருக்கும்படி சைகை காட்டிவிட்டு, தங்களைப் பின்தொடர்ந்த கொலுசொலி எங்கிருந்து வருகிறது என்று பார்க்க,
கொலுசொலி கேட்கவில்லை…
இரு நண்பர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்தபடி, "அவள் வரவில்லை… சரி வா நாம் இவ்வனத்திலிருந்து வெளியே செல்லும் மார்க்கத்தைப் பார்ப்போம்." என்று கூறி தங்களை அசுவாசப் படுத்திக் கொண்டு நடக்க,

சட்டென்று அவர்கள் வழியை மறித்தவாறு ஒரு உருவம் குதிக்க, நண்பர்கள் இருவரும் பின்னேறிச்சென்று ஒரு மரத்தில் மோதி நின்றனர்.

வார்த்தைகளின் எண்ணிக்கை-1035
சிவதாசனின் கர்ஜனை தொடரும்…

⚔️⚔️⚔️⚔️⚔️⚔️
 

Meerajo

Member
Vannangal Writer
Messages
33
Reaction score
6
Points
8
RD-22- சிவதாசன் எனும் நான்!...- அத்தியாயம்-15

சமீதா என்று தனது பெயரை மாற்றிக்கொண்டு, அலாவுதீன் கில்ஜியின் மாகாராணிக்குப் பணிப்பெண் வேடத்தில் இருக்கும் நிலா, சத்திகனைப் பார்த்ததும் வினாக்களைத் தொடுக்க, அவள் பேசி முடிக்கும் வரை காத்திருந்த சத்திகன்,

சீலன் கொடுத்தனுப்பிய குளிகை இருக்குமிடத்தைக் காட்டியது.

உடனே குளிகையை எடுத்துப் பார்த்தவள்,

"இந்தக் குளிகையைப் பார்த்தால்… அவர் தயாரித்தது போல் இல்லையே? யாரேனும் சித்தர் கொடுத்தார்களா சத்திகா?" என்று கேட்டதும்,

"ஆமாம்!" என்பதைப் போல் தலையசைத்தது சத்திகன்,

"சீலன் வேறு ஏதேனும் கூறினாரா? ஓலை எதுவும் அனுப்பவில்லையே?" என்று கேட்க,

நிலாவின் உச்சந்தலையை முகர்ந்து விட்டு, தள்ளி நின்று நிலாவைப் பார்த்தது சத்திகன்.

"அதாவது… அவர் என்னைப் பத்திரமாகவும், நேசத்துடனும் பார்த்துக் கொள்ளச் சொன்னார் என்கிறாயா?"

"ஆமாம்!" என்றது…

அப்பொழுது யாரோ குதிரை லாயத்தை நோக்கி வரும் சந்தடி கேட்டதும், குளிகையைத் தனது தலையை மறைத்து அணிந்திருந்த மேல் அங்கியின் நுனியில் முடிந்து, தனது கொண்டைக்குள் வேகமாகச் செருகி வைத்து அதனை, மேல் அங்கியால் நன்றாக மறைத்து, பிறகு, தான் குளிருக்கு இதமாகப் போர்த்தியிருந்த உள்ளன் சால்வையையும் தலை முழுவதும் போர்த்திக்கொண்டே, சட்டென்று ஐந்து குதிரைகளுக்கு அப்பால் தள்ளிச் சென்று, அங்கிருந்த சிறு திட்டில் அமர்ந்து கொண்டாள்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த காவலாளி, "நீ யாரம்மா? ஏன் இங்கே அமர்ந்திருக்கிறாய்?" என்று கேட்டதும்,

"நான் குதிரைசேனை வீரன் இளம்பொறையின் தங்கை. இங்கு மகாராணிக்குப் பணிப்பெண்ணாக இருக்கிறேன்... எனக்கு என் தமயனாரின் ஞாபகம் வந்ததால், அவரைக் காணும் பொருட்டு இங்கு வந்து அமர்ந்திருக்கிறேன்." என்றாள்.

"இந்நேரத்தில் உன்னுடைய அறையைவிட்டு வெளியே வர அனுமதியில்லையே? அதோடு இங்கெயெல்லாம் வரக்கூடாதும்மா. புறப்படு… உன் அறைக்குச்செல்… இனியொருமுறை உன்னை வெளியிடங்களில் பார்த்தால் அரசவையில் கொண்டுபோய் நிறுத்திவிடுவேன்… புரிகிறதா?" என்று கூறியதோடு, நிலா, அவளது அறை இருக்கும் மாளிகைக்குள் செல்லும் வரை, உடன் சென்று, அவள் தலை மறைந்ததும், தன் பணியைத் தொடர்ந்தான்.

தனது படுக்கையில் சென்று படுத்த நிலா என்ற சமீதாவிற்கு உறக்கம் கண்களைச் சுழற்ற அயர்ந்து உறங்கினாள்.

சமீதா வெளியே சென்று வந்ததை, அதே கூடத்தில் தங்கியிருந்த ஒரு பெண் படுத்தநிலையில் இருந்தபடியே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அமாவாசை முடிந்த அடுத்த நாள் காலை, சமையல்கூடத்தில் சமீதா வேலை செய்து கொண்டிருந்தபொழுது, திடீரென அரண்மனை வளாகத்தில் இருந்த அனைவருமே பதற்றமாக அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தனர்.

அதைக்கண்டு சமையல்கூடத்திலுள்ளோருக்கும் பதற்றம் தொற்றியது.

"என்னாயிற்று? என்னாயிற்று?" என்று தான் அனைவரும் கேட்டார்களே தவிர யாரும் நடந்த விஷயத்தைக்கூறினாரில்லை…

இங்கே இவ்வளவு களேபரம் நடக்கையில் சமீதா மட்டும் மிகவும் சிரத்தையாகக் கசாயத்தைத் தயார் செய்துகொண்டிருந்தாள்.

"சமீதா உன்னால் எப்படி இச்சூழ்நிலையிலும் நிதானமாகப் பணிசெய்ய முடிகிறது?" என்று ஒரு பெண் கேட்க,

"நாம் செய்வது உணவு தயாரிக்கும் பணி... அதிலும் நான் செய்து கொண்டிருப்பது காய்ச்சலை குணப்படுத்தும் கசாயத்தை. நம் கவனம் சிதறினால் பல உயிர்களுக்குப் பிரச்சினையாகிவிடக்கூடும்… அதனால்…"

"உன்னுடைய இந்த நல்ல எண்ணத்தால்தான் இவ்வளவு விரைவில் சமையல்கூடத்திற்குள் அனுமதிக்கப் பட்டிருக்கிறாய். ஆனாலும் எதற்காக அனைவரும் இவ்வளவு பதற்றமாக இருக்கிறார்கள்? என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் கூட இல்லையா?" என்று கிண்டல் செய்தாள், நிலாவிற்கு உதவியாக இருந்த பணிப்பெண்.

"சரி!சரி! பேச்சோடு நிற்காமல் வேலையும் நடக்கட்டும். சமீதா! நீ விரைவாக தயார் செய்து அனுப்பு…" என்று சமையல்கூட நிர்வாகி ஆமிரா உத்தரவு பிறப்பித்தாள்..

"எதற்காக இவ்வளவு அதிகமான கசாயம் தயாரிக்கச் சொல்லியிருக்கிறார்களென்று நான் தெரிந்துகொள்ளலாமா?" என்ற சமீதாவிடம்,

"திடீரென்று வானிலை மாறியதால் சுல்தானின் மெய்க்காப்பாளர் மற்றும் ஊழியர்களுக்கு உடல் நலம் கெட்டுவிட்டது.அதனால்தான் குறைந்தது இருபது பேருக்குத் தேவையான கசாயம் தயாரிக்கச் சொல்லியிருக்கிறார்கள்." என்று விளக்கினார் ஆமிரா

"அத்தனை மனிதர்கள் நோயால் அவதியுற்றால் வைத்தியரிடமும் மருந்து வாங்கலாமே?" என்ற சமீதாவை, 'இவள் என்ன அர்த்தத்தில் இப்படி கேட்கிறாள்?' என்பது போல் பார்த்தவாறு,

"மருத்துவ அமைச்சர் அவர்களிடம், நீ பிரமாதமாக மருந்து தயாரிப்பதாக மகாராணி ஏதோ ஒரு சமயத்தில் கூறியிருக்கிறார். அந்த நம்பிக்கையால் அமைச்சரும் சம்மதித்ததால்தான், சுல்தானின் மெய்க்காப்பாளர்களுக்கு மருந்து தாயாரிக்கும் பணியை முழுவதுமாக உனக்குக் கொடுத்திருக்கிறார்கள்…" என்று கூறிய ஆமிரா, சமீதாவைப் பார்க்க,

"மகாராணிக்கு என் மீதுள்ள நம்பிக்கையில் என் மனம் சிலிர்க்கிறது." என்றாள் சமீதா.

"இது உனக்கு மிகப்பெரிய வாய்ப்பு தெரியுமா? இப்பொழுது நீ தயாரிக்கும் மருந்து சரியாக வேலை செய்து, நல்ல பலனைக் கொடுத்தால், நம் சுல்தானிய அரச குடும்ப வைத்தியரின் ஆஸ்தான வைத்தியராகி விடுவாய். மேலும் மகாராணியின் பணிப்பெண் என்ற பதவியிலிருந்து முன்னேறி, மகாராணியின் தோழி என்ற இடத்திற்குச் செல்லவும் வாய்ப்பிருக்கிறது. இதை சரியாகப் பயன்படுத்திக் கொள்." என்று ஆமிரா ஆலோசனையும் கூறினார்.

சமீதா என்ற நிலாவின் கண்களில் தன் லட்சியத்தின் வாயில்கதவு திறப்பது தெரிந்தது.

இந்துஸ்தானின் வலிமை மிகுந்த சுல்தானியப் பேரரசிற்கு எதிராக, பாண்டியப் பேரரசின் பிரதிநிதியாகக் களம் இறங்கிய தினத்திலிருந்து, வெற்றிபெரும் மார்க்கம் ஒன்றையே எண்ணி வாழ்ந்தவளுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு தான்.

மனமும் உடலும் சோர்ந்து போகும்பொழுதெல்லாம் நங்கையின் கடைசி நிமிடங்களும், அவளுடைய வீரமுமே கண் முன்னால் வந்து நின்றது நிலாவிற்கு.

'என்றுமே நீ தனி ஆள் இல்லை நிலா!... எப்பொழுதும் உன்னருகில் நான் இருக்கிறேன்... அதோடு நீ தனியாள் இல்லை நிலா, நீ பாண்டிய பேரரசின் பிரதிநிதி! உன்னால் பாண்டியப் பேரரசுக்கே விடிவுகாலம் வர வேண்டும்! அதை நினைவில் கொள்! மனம் சோர்ந்து போகாதே!" என்று அடிக்கடி நங்கை சொல்வது போலவே தோன்றும் நிலாவிற்கு.

"ஆம் நங்கை! நம் லட்சியம் நிறைவேறும் நாள் வெகுதொலைவில் இல்லை…' என்று தன் தோழியிடம் ஆத்மார்த்தமாகப் பேசிய நிலாவிற்கு, இங்கு வந்த சில தினங்களில் டெல்லி சாம்ராஜ்யத்தைக் கண்டு மலைத்துப் போய் அன்றிரவு சத்திகனிடம் (குதிரை) உரையாடியது நினைவு வந்தது…

"இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தைக் கட்டி அரசாளும் மன்னனையும், அவன் அரசையும் என்னால் வீழ்த்த முடியுமா சத்திகா?" என்று குதிரை லாயத்திலிருந்த சத்திகனிடம் கேட்டாள் சமீதா என்ற நிலா.

"முடியும் என்று நம்பித்தானே வந்தோம்!" என்று தானும் நிலாவிற்குத் துணையிருப்பதை, சைகையால் சுட்டிக் காட்டியது சத்திகன்.

"எப்படி? சாதாரண பணிப்பெண்ணால், இந்துஸ்தானத்தின் பெரும்பகுதிக்கு மன்னனாகிய அலாவுதீன் கில்ஜியை வீழ்த்த முடியுமா?"

"சாதாரண பெண்ணால் முடியாது. ஆனால் தன் தோழியை வதைத்தவனைப் பலிவாங்க வந்திருக்கும் உங்களால் அது எளிதாக முடியும்." என்றான் நிலா, சத்திகனிடம் பேசுவதைக் கேட்டபடி வந்த இளம்பொறை!

"அண்ணா! தாங்களா?" என்று 'இந்தச் சமயத்தில் இளம்பொறை எப்படி இங்கே வந்தான்?' என்று அதிர்ச்சியாகக் கேட்ட நிலாவிடம்,

"இதில் ஆச்சரியம் கொள்ள என்ன இருக்கிறது? நான் சுல்தானிய குதிரைப்படை குதிரைகளைப் பழக்கும் பணியிலும் இருப்பதால், இந்தக் குதிரைலாயத்தின் அருகிலேயே நான் தங்குமிடமும் இருக்கிறது… அதிருக்கட்டும், தயவுசெய்து இன்னொன்றையும் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் மட்டும் தனியாகச் சத்திகன் அருகில் நிற்பதும், பேசுவதும் சத்திகனையும் நம் எதிரிகளிடம் காட்டிக்கொடுத்து விடும். அதே நேரத்தில், நீங்கள் சத்திகனிடம் பேச எண்ணும்போது நான் உங்கள் அருகில் இருந்தால், அண்ணனும், தங்கையும் பணி முடிந்தபிறகு சந்தித்துப் பேசிக் கொள்வதாகத் தோன்றும். இனிமேல் இங்கு வரும்பொழுது நான் இருக்கிறேனா? என்பதை உறுதிபடுத்திய பிறகு பேசுங்கள். நமக்கு ஏதேனும் நேர்ந்தாலும், நடந்த விபரங்களைச் சீலனிடம் கூற சத்திகன் நலமுடன் இருந்தே ஆக வேண்டும். சரிதானே?" என்று எச்சரிக்கை செய்தான் பாண்டிய தேசத்தின் குதிரைப் படையைப் பழக்கப்படுத்த வந்து, தற்போது நிலாவுக்குத் துணையாக டெல்லி சுல்தானின் குதிரைப் படை வீரனாக இருக்கும் இளம்பொறை.

"நீங்கள் சொல்வது சரியே! இன்னும் நான் கவனமாக இருக்கிறேன்." என்று தலையாட்டிய நிலாவிடம்,

"உங்களிடம் நான் இதை எதிர்பார்க்கவில்லை… அன்று தனியொரு பெண்ணாக வீறுகொண்டு எழுந்து, என்னுடன் வந்த அந்த வீரப்பெண்மணியா நீங்கள்? ஒரு பெண், மனம் வைத்து விட்டால் முடியாதது என்று ஒன்று இருக்கிறதா என்ன? நம் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் பல ராஜ்ஜியங்கள் சரிந்து வீழ்ந்தது பெண்ணால்தானே?… அப்படியிருக்க நீங்கள், வந்த சிறிது நாட்களிலேயே இப்படி மலைக்கிறீர்களே?!!" என்று இளம்பொறை பேசப்பேச, நிலாவிற்குப் பழைய உத்வேகம் வந்தது…

"பல தேசங்களுக்குச் சென்று குதிரைப்படைக் குதிரைகளை, பழக்கச்சென்றபோது கிடைத்த அனுபவத்தில், ஸ்ரீராமருக்கு அணில் உதவியதுபோல், என் அனுபவத்தில் பட்டதைக் கூறுகின்றேன்... ஒரு மனிதன் பகைக்கவே கூடாத மனிதர்களில் சமையல்காரரும், மருத்துவரும் மிகவும் முக்கியமானவர்கள்… நீங்கள் இவ்விரண்டு விஷயங்களில் கவனம் வையுங்கள்… அரண்மனை சமையல்கூடத்திற்குள் அல்லது அரண்மனை வைத்திய சாலைக்குள் செல்வதற்கான வழியைத் தேடுங்கள்… நீங்கள் எண்ணிவந்த காரியம் தானாக அரங்கேறும்." என்று கூறிவிட்டு விடைபெற்றான்.

'அன்று இளம்பொறை அண்ணா கொடுத்த ஆலோசனைதான் இன்றைய வெற்றியின் ஆதாரம்!' என்று மனதார இளம்பொறைக்கு நன்றி கூறினாள் நிலா...

அதே நேரத்தில் சமையல்கூடத்தின் வாயிலில் வந்து நின்றிருந்தான் இளம்பொறை! அவனைப் பார்த்ததும் அருகில் இருந்த பெண்ணிடம் வேலையை ஒப்படைத்துவிட்டு, இளம்பொறையின் அருகில் சென்றாள்.

"கவனமாக இருங்கள். இன்று இரவு உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் இருக்கும் மண்டபத்தில் காத்திருக்கிறேன்." என்று படபடவெனவும், நிலாவுக்கு மட்டும் கேட்கும் வகையிலும் கூறிவிட்டு சட்டென்று அவ்விடத்தை விட்டு மறைந்தான் இளம்பொறை.

ஒரு நிமிடம் அதே இடத்தில் நின்றபடி இளம்பொறை சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்த நிலா, 'ஏதோ நடந்திருக்கிறது…" என்று யோசித்தபடி, மீண்டும் கசாயம் தயாராகும் இடத்திற்கு வந்து அங்குப் பணி செய்து கொண்டிருந்த பணிப்பெண்ணிடம், "இன்று ஏன் எல்லோரும் பரபரப்பாக இருக்கிறார்கள்?" என்று கேட்டாள்.

அதற்கு அந்தப் பணிப்பெண், "ஏதோ பிரச்சனை நடந்து விட்டது போல, என்ன விபரம் என்று யாருக்கும் தெரியவில்லை. மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறார்கள். இவ்வளவு தூரம் ரகசியம் காக்கிறார்கள் என்றால், அது நிச்சயம் நம் ராஜாங்கம் சம்பந்தப்பட்ட விஷயமாகத் தான் இருக்கும்." என்று என்று கிசுகிசுப்பாகக் கூறினாள்.

கசாயம் தயாரானதும் பொறுப்பாளரிடம் கொடுத்துவிட்டு, மகாராணியின் அரண்மனைக்குச் சென்று விசாரித்த பொழுதும் நிலாவிற்கு, அரண்மனை அல்லோகலப் பட்டதற்கான காரணத்தை அறிய முடியவில்லை.

அன்று இரவு தன் இருப்பிடத்திற்கு வந்த நிலாவிற்கு இளம்பொறை, அவனை இரவு சந்திக்கச் சொன்னது ஞாபகம் வர, வழக்கம்போலப் பணிப்பெண்கள் அனைவரும் உறங்கும் நேரத்திற்காகக் காத்திருந்தாள்.

அனைவரும் உறங்கவும், மெல்ல எழுந்து அருகிலிருந்த மண்டபத்திற்குச் சென்றாள்.

அந்த மண்டபம், சிறு விளக்கொலியில் மிகவும் பழமையான ஓவியம் போலிருந்தது. அந்த விளக்கின் ஒலியால் மண்டபத்தின் ஒரு பகுதி மட்டுமே மங்கலான வெளிச்சத்தைப் பெற்றிருக்க, ஏனைய பகுதிகள் கருங்காலி மரத்தை அரைத்துப் பூசிக்கொண்டதைப் போல, இருண்டு காணப்பட்டது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒருசில தேசாந்திரிகள் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருளில் பாதி, வெளிச்சத்தில் பாதியுமாகக் கிடந்ததைப் பார்க்கையில், மனித உறுப்புகளான கை, கால், உடலின் ஒரு பகுதி மட்டும் தனியாகக் கிடந்ததைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.

இருட்டான பகுதியில் நின்றபடி நிலா, இருளுக்குத் தன் பார்வையைப் பழக்கபபடுத்திக் கொண்டிருந்தபொழுது அவளை ஒரு கரிய உருவம் நெருங்கியது…

தன் இடையில் செருகியிருந்த குத்துவாளை எடுத்துக்கொண்டு தன்னை நோக்கி வந்த உருவத்தை ஊற்று நோக்கினாள்.

உருவம் நெருங்க, நெருங்க வருவது யார் என்று நிலாவிற்குப் புரியும் பொழுதே, "நான் இளம்பொறை! குத்துவாளுக்கு வேலை கொடுத்துவிடாதீர்கள்!" என்று கூறிய வார்த்தைகளில் நகைச்சுவை இருந்தாலும், அவன் முகத்தில் சிறிய பதற்றம் இருந்ததைக் கவனித்த நிலா,

"என்னாயிற்று அண்ணா?" என்று கேட்டாள்.

"அலாவுதீனின் பிரியத்திற்குரிய படைத் தலைவரான மாலிக்காபூர், நம் பாண்டிய மன்னர்களின் அரண்மனையில் தங்கி இருந்திருக்கிறார். அதனால் கோபமுற்ற பாண்டிய சிற்றரசர்கள் சிலர் சேர்ந்து அரண்மனையை முற்றுகையிட்டு, போர் நடந்து இருக்கிறது…"

"அருமை!" என்றவளின் சந்தோசத்தைக்கண்ட இளம்பொறையின் முகத்திலும் சற்றே பதற்றம் குறைய,

"அது மட்டுமல்ல, வேறொரு சம்பவமும் நடந்திருக்கிறது. மாலிக்காபூரிடம் பிணையக் கைதியாக இருந்த பாண்டிய தேசத்து வீரர்கள், யானைப்படை, குதிரைப்படை அனைத்தும் மாயமாகி இருக்கிறது."

கண்கள் ஆச்சரியத்தில் விரிய "பிறகு?" என்று சந்தோஷமாக அவசரப்படுத்தியவளிடம்,

"அதனால் மாலிக்காபூர் கடும் கோபத்தில் இருப்பதாகவும், சுல்தானிடம் ஆலோசனை பெறுவதற்காக இங்கே வந்துகொண்டிருப்பதாகவும் செய்தி வந்திருக்கிறது."

"வரட்டும்! வரட்டும்! அவருக்கும் சிறந்த கசாயம் ஒன்றை தயார் செய்துவிடுகிறேன்." என்று நிலா கூறிய விதத்தில் பதற்றம் சுத்தமாக மறைந்து அவளுடன் தன்னுடைய சந்தோசத்தையும் பகிர்ந்து கொள்ளும் வகையில் சிறிய புன்னகை ஒன்றை சிந்தினான் இளம்பொறை.

"நீங்கள் மிகவும் கவனமாக இருங்கள். இனி நாம் இருவரும், சூழ்நிலை சரியாகும்வரை சந்தித்துக் கொள்ள வேண்டாம். எனக்கு ஏதேனும் உதவி தேவை என்றால் நான் சத்திகனிடம் ஓலை எழுதி வைக்கிறேன். நீங்களும், உங்களுக்கு ஏதேனும் என்னிடம் கூற வேண்டும் என்றால் சத்திகன் மூலமாகவே எனக்குத் தூது அனுப்புங்கள்... வருகிறேன்." என்று கூறிவிட்டு, பதிலைக் கூட எதிர்பாராமல் மீண்டும் அந்த இடத்தை விட்டு வேகமாக மறைந்தான்.

'பிணையக் கைதிகள் மாயமான விஷயம், சீலனின் கைங்கர்யமாக இருக்குமோ?' என்று நினைத்த நிலாவிற்கு,

சீலனின் முகமும், தீட்சண்யமான விழிகளும், சற்றே முறுக்கிய மீசையும், மீசையிலிருந்து வெளிப்படும் புன்னகையும் கண்களிலாட,

வழக்கம்போல் வலது கையின் கட்டைவிரலும் ஆள்காட்டி விரலும் முறுக்கிய மீசையை, மேல் நோக்கி நீவி விட்டபடி, ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கி, "எப்படி?" என்று சீலன் கேட்பது போல் தோன்றவும், மனதிற்குள் சிரித்தவாறு தன் இருப்பிடம் வந்து சேர்ந்தாள்

நிலா, இரவுநேரத்தில் அனைவரும் உறங்கியபிறகு வெளியே சென்று வருவதை, மீண்டும் அதே பணிப்பெண் பார்த்துக்கொண்டிருந்தாள்.

வார்த்தைகளின் எண்ணிக்கை-1317

சிவதாசனின் கர்ஜனை தொடரும்…
⚔️⚔️⚔️⚔️⚔️⚔️
 

Meerajo

Member
Vannangal Writer
Messages
33
Reaction score
6
Points
8
RD-22- சிவதாசன் எனும் நான்!...- அத்தியாயம்-16

சூரியன் கூட உள்ளே புக முடியாத வனத்திற்குள் ஒரு மோகினி துரத்த, ஓடிய மாறனும் விக்ரமனும் மோகினியின் கொலுசொலி சப்தம் கேட்காமல் போகவே, தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அந்தக் காட்டிலிருந்து வெளியேறும் வழியைத் தேடத் தொடங்கியபோது அவர்கள் முன் மீண்டும் ஒரு உருவம் வந்து குதித்தது.

இரண்டடி பின்வாங்கிய நண்பர்கள், வருவது வரட்டும், மோகினியிடம் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்து விடுவது என்று மோகினியை நோக்கி நகர,

அங்கே, அலங்காரமாகக் கட்டிவைத்த கூந்தல், அலங்கோலமாகக் கலைந்து, ஆடை கசங்கி, உடலெங்கும் செம்மண் வாரிஇரைக்கப் பட்டிருக்க, நெஞ்சில் கைவைத்தபடி, இடைவரை குனிந்து மூச்சு வாங்க நின்றுகொண்டிருந்தாள் செண்பகப்பொழில் தேசத்து இளவரசி ருத்ராதேவியின் தோழி யாழ்!

"இவளா?" என்று விக்ரமனும்,

"இந்த வாயாடிப் பெண்ணா?!!" என்று மாறனும் தங்களுக்குள் முணுமுணுத்துக்கொண்டே ஒருவரை ஒருவர் பார்த்து, அசடு வழிய சிரித்தனர்.

ஒருவாறு மூச்சு சமநிலைக்கு வந்தபிறகு, நிமிர்ந்து நின்று இடுப்பில் இரு கைகளையும் வைத்து, கண்களை லேசாகச் சுருக்கி இரு நண்பர்களையும் மாற்றி மாற்றிப் பார்த்தவள்,

"உங்கள் இருவரையும் நினைத்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது."

"ஏனாம்?"

"போர்க்கலையில் இருக்கும் வீரம், பெண்களைப் பார்த்துப் பேச எண்ணும்போதே பறந்துவிடுகிறதே"

"ஓ!... அதாவது... தங்களைப் பார்த்துப் பேச நாங்கள் பயந்துவிட்டோம் என்கிறீர்களா?" என்று கேட்ட விக்ரமனிடம்,

"நேருக்கு நேராக எங்களைச் சந்திக்கவே பயம்! இதில் பேசுவதெங்கே?" என்ற யாழ், சற்றே தோள்களைக் குலுக்கி, முகத்தை இடப்புறமாகத் திருப்பி நக்கலான புன்னகை ஒன்றை சிந்த,

இரு ஆண்சிங்கங்களின் தன்மானம் சீண்டப்பட்டதால் மீசை துடித்தது…

"இங்கே பார் பெண்ணே! யாரைப் பார்த்து இப்படியொரு வார்த்தை பேசிவிட்டாய்?" என்று மாறன் சீற,

"பின்னே? இப்பொழுது கூட என்னைப் பார்த்து விட்டுத்தானே, பிடறியில் பின்னங்கால் படத் தலைதெறிக்க ஓடி வந்தீர்கள்?"என்றதும்,

"ஆஹா! நண்பா!... நாம் இந்த வாயாடிப் பெண்ணைப் பார்த்து ஓடி வந்தோம் என்று நினைத்ததற்கே இவ்வளவு பரிகாசம் செய்கிறாள்! நாம் மட்டும், இவளை மோகினி என்று நினைத்து ஓடி வந்தோம் என்று தெரிந்ததோ, நம் நிலைமை மிகவும் மோசமாகி விடும்." என்று மாறன் கூற,

"எனக்கும் புரிகிறது மாறா! இவளிடம் நாம் கொஞ்சம் ஜாக்கிரதையா பேசுவோம்... மோகினியைப் பற்றி உளறிவிட வேண்டாம்." என்று விக்ரமன் மாறனிடம் கிசுகிசுத்தான்.

இங்கே ஒருத்தி சிலைபோல் நின்று கொண்டிருக்கிறேன். அங்கே என்ன உங்களுக்குள் ரகசிய சம்பாசனை?" என்று மறுபடியும் இருவரையும் கண்களைச் சுருக்கிப் பார்த்தவாறு யாழ் கேட்டாள்.

"இரு! இந்த வாயாடிப் பெண்ணை ஒரு வழி பண்ணிவிட்டு வருகிறேன்." என்று வீராவேசத்துடன் கூறியபடி விக்ரமன் யாழை நோக்கி நடக்க,

"அப்படியே நில்லுங்கள்! இரு ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை அச்சுறுத்தவது மிகவும் மோசமான செய்கையாகும்." என்றபடி மேலும் சில தோழிகளுடன் அங்கு வந்த இளவரசி ருத்ராதேவியைப் பார்த்ததும் சிலையாகச் சமைந்துவிட்டான் மாறன்.

அதைக் கவனிக்காத விக்ரமனோ, "யார் யாரை அச்சுறுத்தியது? இவள்தான் எங்களை மோகி..." 'மோகினி போல் வந்து அச்சுறுத்தினாள்' என்று உளறப்போன விக்ரமனின் காலை, மாறன் "நங்"கென்று மிதித்து, அவன் வலியில் கத்த வாய் திறக்கவும், தன் வலது கையால் விக்ரமனுடைய வாயை மூடியபடி, இளவரசி ருத்ராதேவியைப் பார்த்துக் கொண்டிருந்தான் மாறன்.

அப்பொழுதுதான் மாறனைக் கவனித்த விக்ரமன், 'அடப்பாவி! இந்தப் பெண்களிடம் என்னைத் தனியே அல்லாட விட்டுவிட்டு, அவன் ஆளை ரசிக்க ஆரம்பித்து விட்டானே?' என்று நினைத்த விக்ரமன் ஒரே உதறலில் மாறனின் பிடியிலிருந்து விலகி, மாறனை விக்ரமன் முறைக்க,
'விக்ரமன் ஏன் இப்படி முறைக்கிறான்?' என்று அவனுடைய பார்வையைத் தொடர்ந்த ருத்ராவும், யாழும் மாறனைப் பார்த்தனர்.

கண்ணிமைகள் கூட அசையாது, இலேசாக விரிந்த இதழ்களில் இளம் புன்னகை உறைந்திருக்க, கண்களோ சூரியனின் தங்கநிற பிரகாசத்தையும், நிலவின் ஒளியை ஒத்த குளுமையையும் கலந்தார் போன்று பளபளக்க, எங்கிருந்தோ விசிய இளந்தென்றலோடு சுருள் சுருளாக இருந்த சிகைமட்டும் மெதுவாக நடனமாட நின்றிருந்தவனைப் பார்த்த ருத்ராவுடன் வந்த தோழிகள் தங்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டு, நாணத்தால் தலைகுனிந்து சிரித்துக் கொண்டனர்.

ருத்ராவாலோ மாறனின் குறுகுறுப்பான பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தனது அழகிய வதனம் செஞ்சாந்து நிறம் பூசிக்கொள்ள வேறுபுறம் திரும்பிக்கொண்டாள். பக்கவாட்டு முகம் கூட தெரியாமல் கூந்தல் சரிந்து விழுந்து மறைத்தது.

ஆனால் அப்பொழுதும் மாறன் தன் பார்வையை ருத்ராதேவியிடமிருந்து பிரித்தானில்லை…

தங்களது இளவரசி நாணத்தால் தன் முகத்தை மறைத்தபிறகும், பக்கவாட்டு தோற்றத்தில் மிளிரும் இளவரசியின் கூந்தலை வைத்தகண் எடுக்காமல் மாறன் பார்ப்பதைக் கண்ட யாழ்,

"நல்லது பாண்டியக் குமாரரே எங்கள் இளவரசியின் வதனம் மட்டுமல்ல கூந்தலும் மிகுந்த வனப்பாகத்தானிருக்கிறது அதற்காக?" என்று யாழ் கூறிய எந்த ஒரு வார்த்தையும் மாறனின் மோனநிலையைச் சிறிதும் அசைக்க முடியாமல் தோற்றன.

"இதென்ன இவர் இப்படியே நிற்கிறார்? இவரைச் சுய உணர்வுக்குக் கொண்டு வர, நான் மட்டும் தனியே எத்தனை அல்லல் படுகிறேன்? நீங்கள் எனக்கு உதவக் கூடாதா? எவ்வளவுநேரமாக உங்கள் விழிகளை உருட்டி நீங்கள் முறைத்தாலும், உங்கள் நண்பர் அதைக் கண்டுகொள்ளும் மனநிலையில் இல்லை… இவரை ஏதாவது செய்து…" என்று யாழ் பேசி முடிக்கும் முன்,

"ஏதாவது செய்வதா?!! இதற்கான பொருளை நான் அறிய முடியுமா?" என்று தன்னிடம் எகிறினான் விக்ரமன்,

"இதற்கொன்றும் குறைச்சல் இல்லை! என்னிடம்தான் உங்களுடைய பராக்கிரமத்தைக் காட்டுவீர்களா?" என்று யாழ் பதிலுக்கு எகிற,

"என்னது? நான் எப்போது உங்களிடம் என்… என்…"

"பராக்கிரமத்தை!" என்று மாறன் எடுத்துக் கொடுக்க,

'இவன் எப்போது சரியானான்… இவன் சுய உணர்வுக்கு வந்து, என்னைப் பரிகாசம் செய்யும் வரையா இவளுடன் வார்த்தையாடினேன்?' என்று விக்ரமன் நினைத்ததை வரி தப்பாமல் அப்படியே மொழிந்தாள் யாழ்!

ருத்ராதேவியும் யாழும் முன்னே நடக்க, அவர்களைப் பின்தொடர்ந்து தோழிகள் செல்ல, அவர்களுக்குப் பின்னால் நண்பரகள் இருவரும் நடந்தனர்.

"எங்கே சென்றாலும் இப்படிதான் கூ...ட்டமாக உங்கள் இளவரசியைப் பின்தொடருவீர்களோ?" என்று மாறன் சிரிக்க,

தோழிகள் திரும்பி, நண்பர்களைப் பார்த்து, சினேகமாகச் சிரித்துவிட்டு நடந்தனர்.

"ஏன் உங்கள் இளவரசியின் பின்னால்தான் வருவீர்களோ? எங்களைப் பின்தொடர்ந்து வரமாட்டீர்களோ?" என்று மாறன் மீண்டும் கேட்டதும்,

ருத்ராதேவி, மெல்ல தன் பின்னால் வரும் தோழிகளைப் பார்த்துப் புன்னகை வீசியதும், மாறனையும், விக்ரமனையும், இளவரசியின் பின்னால் நடக்கவிட்டு, நண்பர்களுக்குப் பின்னே தோழிகள் பின்தொடர்ந்து சென்றனர்.

சிறிது தூரம் சொன்றதும், "ஏன் விக்ரமா? செண்பகப் பொழிலில் ஒரு இளவரசிதானே இருக்கிறார்? ஆனால் என் கண்களுக்கு இரு உருவங்கள் தெரிகிறதே?" என்று மாறன், யாழ்ஐப் பார்த்தவாறே கேட்டான்.

மற்றதோழியர் நண்பர்களின் பின்னால் சென்றுவிட, தான் மட்டும் இளவரசி ருத்ராதேவியுடன் இணைந்து வருவதைத்தான் மாறன் ஜாடையாகக் கூறுகிறான் என்று அறிந்தும் யாழ், மாறனின் கூற்றுத் தன் காதில் விழாததைப் போல் ருத்ராதேவியின் அருகிலேயே நடந்தாள்.

`அந்த வாயாடிப் பெண்ணை எப்படி விலக்குவது?` என்று மாறன் யோசிக்கும் பொழுதே, சற்று முன் யாழைப் பார்த்து, மோகினி என்று எண்ணிய இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

முன்பு யாழ் நின்றுகொண்டிருந்த இடத்தில் மரங்களின் நெருக்கம் குறைந்து காணப்பட்டது.

"இந்தப் பகுதியில் மரங்கள் நெருக்கமாக இல்லை. அதனால் அந்தப் பெண் நம் எதிரில் நின்றபோது, அவளுக்கு மட்டும் கொஞ்சம் வெளிச்சமும், வேகமாகக் காற்றும் வீசியிருக்கிறது… அதே காரணத்தால்தான் அவள் காற்றில் மிதப்பது போன்றும் தோற்றமளித்திருக்கிறது மாறா!" என்று விக்ரமன், மாறனின் காதில் அருகிலிருந்தவர் செவியில் விழாதவண்ணம் கூறினான்.

விக்ரமன் கூறியபிறகே, ருத்ராவிடமிருந்து தன் பார்வையை விலக்கி, சுற்றிலும் பார்வையை ஓடவிட்டான்.

அந்த இடத்தில் மட்டும் மரங்கள் சற்று இடைவெளி விட்டு வளர்ந்திருக்க, சூரியனின் கதிர்கள் மரக்கிளைகளுக்குள்ளே ஊடுருவிக் குறைந்த அளவு ஒளிவீசிக்கொண்டிருந்தது… காற்றின் வேகமும் அதிகமாக இருப்பதை உணர்ந்த மாறன் யாழ் அணிந்திருந்த உடையைப் பார்த்தான்.

உள்ளே கெட்டிப் பட்டுதுணியில் சிற்றாடையும் அதன் மேல் வெங்காயச் சருகை ஒத்த மெல்லிய மேலாடையும் அணிந்திருந்தாள்…

இப்பொழுது கூட அவளது மெல்லிய மேலாடை, காற்று வீசும் திசையில் பறந்து கொண்டிருந்தது.

மீண்டும் யாழ் நின்ற கோலத்தை நினைத்துப் பார்த்த மாறன், விக்ரமனைப் பார்த்து ஆமோதிப்பதைப் போல் சிரித்தான்.

இவ்வாறே மாறனும், விக்ரமனும் கிசுகிசுப்பதும், அதை ருத்ராதேவியும் மற்றும் யாழும் ஓரக்கண்ணால் பார்ப்பதுமாக, ருத்ராதேவி தோழியர்களுடன் முகாமிட்டிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

அடர்ந்த வனத்தில் இப்படியொரு இயற்கை எழில் கொஞ்சும் பகுதியா? என்று எண்ணம் வந்தது ருத்ராதேவி தன் தோழிகளுடன் களித்த இடத்தைப் பார்த்த நண்பர்களுக்கு…

சுற்றிலும் வானுயர்ந்த கோட்டைபோல் மரங்கள்… அந்தக் கோட்டையையும் ஊடுருவி வனப்பகுதியில் எங்கிருந்தோ ஓடி வந்துகொண்டிருந்தது வைகைநதி… வைகை என்னும் எழிலரசியை வரவேற்பது போல் கரையெங்கும் வரிசையாய் தலையசைத்த பனை மரங்கள்… நல்லபாம்புடன் பின்னிப் பிணைந்திருக்கும் சாரைப்பாம்பு போல, பெரிய நெடிய மரங்களோடு ஒன்றித் தழுவியிருந்தன பூங்கொடிகள். இயற்கை அன்னையை ரசித்துப் பார்க்கும்போது கேட்கும் மெல்லிசைபோல் பறவைகளின் ஒலிகள் செவிகளுக்கு விருந்தளித்தன…. மகரந்த வாசனையுடன் பூக்களின் வாசனையையும் சுமந்து வரும் தென்றல் தேகத்திற்கு இன்பம் சேர்த்தன …

"இது என்ன சொர்க்கத்தின் பிரதிபிம்பமா?" என்று மாறனும் விக்ரமனும் கேட்கும் அளவிற்கு அந்த இடம் பார்ப்பவர் மனதைக் கவர்வதாய் இருந்தது…

அங்கே ஒரு பகுதியில் உணவு தயாராகிக் கொண்டிருந்தது. அதனைக் கண்ட நண்பர்களுக்கு அதிலிருந்து வெளிப்பட்ட புகைதான் மாறனையும் விக்ரமனையும் கானகத்தில் நுழைய வைத்திருந்தது என்பதும் புரிய மீண்டும் இருவரும் தங்களுக்குள் ஓர் அர்த்த புன்னகை புரிந்து கொண்டனர்.

"யாழ் நானும் பார்க்கிறேன், நண்பர்கள் இருவரும் அவர்களுக்குள் பார்வையையும், புன்னகையையும் அடிக்கடி பரிமாறிக் கொள்கின்றனர்… இதற்கான விளக்கம் என்னவாக இருக்கும்? நாம் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் அல்ல, அன்னியர் என்றா? அல்லது நாம், அவர்களால் வெளியே சொல்லமுடியாத ஏதோ வகையில் நகைப்புக் குரியவர்கள் என்றா?" என்று இளவரசி ருத்ராதேவி மேடை ரகசியம் பேச,

மீண்டும் நண்பனைப் பார்த்துச் சிரிப்பதற்காகத் திரும்ப எத்தனித்த மாறன், விக்ரமனைப் பார்க்காமலேயே இளவரசி ருத்ரா தேவியைப் பார்த்தவாறே,

"நம் மனம் கவர்ந்தவர்களை எதிர்பாராமல் சந்தித்ததில் ஏற்பட்ட அதிர்ச்சியும், சந்தோஷமுமாகவும் இருக்கலாமே நண்பா!" என்று கூற,

"அடேங்கப்பா! மனம் கவர்ந்தவர்களைக் கண்டதும் அப்படியே ஓடிவந்து அன்புமழை பொழிந்தீர்கள் பாருங்கள்… விரட்டிப் பிடித்தவர்கள் நாங்கள்!" என்று கிண்டல் செய்தாள் யாழ்.

"அம்மா பரதேவதை! நான் என் மனம் கவர்ந்தவர்களைப் பற்றிக் கூறினேன்… இவனைப் பிடித்த மோகினியை அல்ல!" என்று விக்ரமனைக் கண்ணால் காட்டி முகத்தில் பல பாவங்களுடன் மாறன் பேசிய விதத்தில் வெகுண்ட யாழ்,

"என்ன மோகினியா? இவரைப் பிடித்திருக்கிறேனா?" என்று வீரிட்டாள்…

மீண்டும் ஏதோ வில்லங்கமாய்ப் பேச வாய்திறந்த மாறனின் கையை இறுகப் பற்றிய விக்ரமன்,

"இளவரசி உன்னையே பார்க்கிறார்… நீ அவர்களை விடுத்து இவளோடு என்ன வேடிக்கை செய்துகொண்டிருக்கிறாய்?" என்று காதில் கிசுகிசுக்க,

"பாண்டிய குமரரின் நண்பர் அடிக்கடி அவருடைய நண்பரின் செவியைத்தான் கடிக்கிறார்…"

"பின்னே? தங்களின் செவியைக் கடிக்கமுடியுமோ?" என்று மாறன் சிரிக்க,

"மாறா!!!" என்று பார்வையால் இளவரசி ருத்ராதேவியைக் காட்டிய விக்ரமன், 'இவன் யாழோடு மல்லுக்கு நிற்பதற்கா இங்கே வந்தான்?' என்று எண்ணியவன் சட்டென்று யாழின் அருகே சென்று,

"எனக்கு இந்தப் பகுதி மிகவும் புதிது… இதுவரை என் கனவில் கூட கண்டிராத அழகிய வனம். உங்களால் எனக்குச் சுற்றிக்காட்ட இயலுமா?" என்று கேட்ட விக்ரமனை,

'என்ன திடீரென்று நம்மிடம் வந்துவிட்டார்? இவர் நண்பரின் வால் பிடித்துத் திரிபவராயிற்றே?' என்று நினைத்தவாறு புருவம் சுருக்கி, விக்ரமனை மேலும் கீழும் பார்க்க,

அவளுடைய பார்வையின் அர்த்தம் புரிந்து, "நீங்கள் இளவரசியின் தோழிதானே? அவர்கள் சற்று நேரம் தனிமையில் மனம் திறந்து பேசட்டும்... நாம் இங்கிருந்து நகர்ந்து விடுவோமா?" என்று யாழுக்கு மட்டும் கேட்கும் தொனியில் கேட்டபடியே யாழைக் கடந்த சென்றான்.

யாழ், இளவரசி ருத்ராவின் மேல் ஒர் இணக்கமான பார்வையும், மாறன் மீது முறைப்பையும் வீசிவிட்டு, மற்ற தோழிகளையும் கண் ஜாடையால் அழைத்துக்கொண்டு விக்ரமனைப் பின்தொடர்ந்தாள்.

தனிமை இனிமையைக் கொடுப்பதற்குப் பதிலாக ஒரு விதமான சங்கடத்தையே தருவதாக இருக்க, மாறனும், இளவரசி ருத்ராவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பதும், புன்னகைத்தபடியே குனிவதாகவும் இருந்தனர்.

"இவள் கண்களில் அப்படியென்ன வைத்திருக்கிறாள்? புதைமணலில் சிக்கியதைப் போன்று கண்ணுக்குள்ளே என்னை இழுக்கிறதே?" என்று மாறன் நினைக்கும்போதே,

அதுவரை காதலை சிந்திய ருத்ராவின் கண்கள் கலங்கி கண்ணீர் ததும்ப, அவளது இரு கண்களையும் மாறிமாறி பார்த்தவன்,

"என்னாயிற்று ருத்ரா? கண்களில் தெரிந்த என் பிம்பம் நீரில் கரைவதேன்?" என்ற மாறனின் அன்பில் திளைத்தாள்,

"உங்களது பார்வையின் அர்த்தத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளத் தெரியாதவள் நான்…."

"புரியவில்லை…"

அதேதான் என் நிலையும் உங்கள் மனதில் உள்ளதை உங்கள் கண்கள் வெளிப்படுத்துகிறதா? அல்லது…" என்று இழுத்தவளின் கண்கள் பூமித்தாயை நோக்க,

"நாணத்தில் கூட என் ருத்ராவின் சுந்தர நயனங்கள், நிலத்தைப் பார்ப்பதை நான் விரும்புவதில்லை... நேருக்கு நேராக என்னைப் பார்! என்ன கேட்க வேண்டுமோ கேள்."

"தாங்கள் எல்லாப் பெண்களிடமே இதேபோல்தான் கரிசனமாகப் பேசுவீர்களா?"

"பெண்களிடம் எனக்கு எப்பொழுதுமே கரிசனம் ஏற்படுவதுண்டு... ஆனால் உன்னிடம் நான் கரிசனம் காட்டியதாக யார் கூறியது?..."

"அப்படியெனில் என்மீது தென்றலாய் வீசும் உங்கள் பார்வையின் பொருள் என்ன?" என்று ருத்ரா கேட்க,

"என் பார்வையின் பொருள் புரியாமலா என் முன் நின்று கொண்டிருக்கிறாய்?" என்று மாறன் கேட்டான்.

" நான் தவறாகப் புரிந்து கொண்டேனோ?" என்ற அச்சம் தான் எனக்கு." என்றாள் ருத்ரா.

"நான் எதிரிலேயே நிற்கும்பொழுது எப்படி நீ தவறாகப் புரிந்து கொண்டதாக முடியும்?" என்று மாறன் கேட்க,

"இன்று எதிரில் நிற்பவர், அன்று காரணம் கூடக் கூறாமல் காணாமல் போனதன் மர்மம் என்ன? எந்நிலையை ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தீர்களா?" என்று ருத்ரா கேட்டதும், அன்றைய நினைவில் சற்று முகம் வாடிய மாறன்,

"அன்றைய உங்களுடைய பேச்சில் என் பெயர் வரவும் ஏதோ ஒரு ஆர்வத்தில் நின்று கேட்டேன்… உங்களின் உரையாடல் என் மனதை தடுமாற வைத்தது… அன்றைய தினம்வரை, வருங்காலக் கணவன் மீதான பெண்ணின் எதிர்பார்ப்பை என் மனம் அறியவில்லை... அதை அறிந்தபோது, அந்தப் பெண்ணிற்குப் பொருத்தமானவனா நான்? என்ற கேள்வி என் முன் மிகப்பெரிய ருத்ரரூபம் எடுத்து நின்றது... அதை மீறி வந்து உன்னைச் சந்திக்கும் மனநிலை எனக்கு இல்லை…. முதலில் என் நிலையைச் சரி செய்துகொண்டு பிறகு உன்னைச் சந்திக்கலாம் என்று நினைத்தேன்."

மாறனுடைய நீண்ட விளக்கம் அவனுடைய மனவேதனையை ருத்ராதேவிக்கு எடுத்துரைக்க, மாறனின் மனம் எவ்வளவு தூரம் காயப்பட்டு இருக்கும் என்பதை நன்கு உணர்ந்தாள். அந்தக் காயத்தைப் போக்கும் விதமாகக் கண்களில் நேசம் என்னும் அமிர்தத்தை நிரப்பி, அவனுடைய கண்கள் வழியாக அவன் நெஞ்சத்திற்கு அனுப்பினாள்.

ருத்ராவின் நயனங்கள் அனுப்பிய அமிர்தம் மாறனின் உயிர்நாடிவரை சென்று சிலிர்க்க,

இருவரும் கண்களால் கலந்து சுற்றுப்புறம் மறந்து, நேரம் போவது அறியாமல் சிலையென நின்றனர்.

இந்த மோனநிலையை மரங்களில் அமர்ந்து பார்த்த பறவைகளின் சிறு நெஞ்சத்திலும் காதல் எனும் சுடர் எரிய, ஒரே சமயத்தில் அத்தனை பறவைகளும் சப்தமெழுப்பியபடி தன் இணையைத் தேடிச் சென்றன...

அந்த சப்தத்தில் தன்னுணர்வு பெற்ற மாறனுக்கும், ருத்ராவிற்கும், மீண்டும் ஒருவரை முகத்தை, ஒருவர் பார்க்கும்பொழுது, நாணம் தடுக்க, ஆளுக்கொரு திசையைப் பார்த்தனர்.

'அடுத்துப் பேச்சை ஆரம்பிப்பது?' என்று தெரியாமல் சிறிது நேரம் மவுனம் காத்தனர். பிறகு

"இப்பொழுது என் முன் வந்து நிற்கிறீர்களே? உங்கள் நிலையை, சரி செய்து விட்டீர்களா? அல்லது இன்னும் சரி செய்யாததால்தான் எங்களைக் கண்டு ஓடினீர்களா?" என்று இளவரசி ருத்ராதேவி கேட்டாள்.

"என் மனம் கவர்ந்தவளை ஒரு குறுநில தேசத்துக்காகவாவது பட்டத்து அரசியாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள்ளும் புகுந்து விட்டது. அதனால் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். காரியம் பலிதமானதும் தேவிக்குத் தூது அனுப்பலாம் என்று நினைத்தேன். ஆனால் என் அதிர்ஷ்டம் தேவியின் தரிசனம் அதற்குள் கிடைத்தது. தேவியின் இனிய தரிசனமே எனது வெற்றிக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக அமையும் என்று நம்புகிறேன்." என்று முத்துப் பற்கள் தெரிய அவன் சிரிக்க,

அந்தச் சிரிப்பில் ருத்ரா தன்னைத் தொலைத்தாள்.

'இவன் சிரிப்பு எத்தனை சுந்தரமாக இருக்கிறது? எப்பொழுதும் ஈரமாக இருக்கும் அதரங்களை விரித்து, வரிசை தப்பாத பற்கள் பளீரிட முகமெங்கும் இளம் சூரியனாய் பிரகாசிக்கச் சிரிக்கும் அழகில் நான் சிக்குண்டதை அறிவானா?' என்று எண்ணியவளின் கண்கள் மாறனின் கண்களைப் பார்க்க,

ருத்ரா தன்னை ரசிப்பதை உணர்ந்த மாறனின் கண்கள் காதலுடன் குறும்பையும் வெளிப்படுத்தியது.

'ஈஸ்வரா! இவன் கண்கள் இருக்கிறதே ஒரே சமயத்தில் ஆயிரம் குத்தூசிகளைக் கொண்டு தாக்கும் வல்லமை பொருந்தியது… ஆனால்... என்ன விந்தை? குத்தூசி தாக்கியதில் வலிக்காமல் கூச்சம்தானே ஏற்படுகிறது?!!'

" ஹாஹ்ஹஹ்ஹா… போதும்! ருத்ரா போதும்! உன் பார்வை எனும் குத்தூசியால் எனைத் துளைக்காதே! ஆணுக்குள்ளும் நாணம் உண்டென்பதை உன் பார்வை எனக்கு விளக்கிவிட்டது…" என்று முகம் சிவந்து மாறன் சிரிக்க,

அந்த அழகிலும் ருத்ரா மயங்க,

"வேண்டா...ம்… உன் பார்வை என்னைத் தூண்டுகிறது… தனியாகச் சிக்கியது புள்ளிமானாகவே இருந்தாலும், என் இதயம் எனும் ராஜ்ஜியத்தின் பட்டத்துமகிஷியை, ஒரு தேசத்தை வென்றபின் ஆளலாம் என்ற என் விரதத்தை இவ்வளவு எளிதாக ஒரே பார்வையில் வீழ்த்தி விடாதே தேவி… தாங்கமாட்டேன்." என்று கூறியபடி ருத்ராவின் அருகில் வந்து, நெற்றிச்சுட்டி அணிந்த முன் நெற்றியில் தன் இதழ்களைப் பதித்தான்.
"இங்கே என்ன நடக்கிறது?" என்ற கோபக்குரல் கேட்டுச் சட்டென்று விலகி நின்றனர் மாறனும், இளவரசி ருத்ராதேவியும்.

வார்த்தைகளின் எண்ணிக்கை-1729

சிவதாசனின் கர்ஜனை தொடரும்…
⚔️⚔️⚔️⚔️⚔️⚔️
 

Meerajo

Member
Vannangal Writer
Messages
33
Reaction score
6
Points
8
RD-22- சிவதாசன் எனும் நான்!...- அத்தியாயம்-17

மனிதவாடையே இல்லாமல் அவ்வப்போது சித்தர்கள் மட்டும் வந்து சென்ற மகேந்திரகிரி மலையடிவாரத்தில் இப்பொழுது, மாலிக்காபூரிடம் பிணையக் கைதிகளாக இருந்த பாண்டிய தேசத்தின் நால்வகைப் படைகளும் தங்கி, சிலனுடன் சேர்ந்து வீரியமாகப் பயிற்சி பெற்றன…

பறவைகளின் இனிய கானம் இசைத்த பகுதி வாள்களும், வேல்களும் மோதிக்கொள்ளும் ஒலியால் நிறைந்திருந்தது.

ஒவ்வொரு படை வீரனின் கண்களிலும் தெரிந்த சுதந்திர வேட்கையைக் கண்ட சீலனுக்கு, 'மீண்டும் பாண்டியன் நாடு நம் கைவசம் வந்து விடும்!' என்ற நம்பிக்கை உண்டானது.

ஏற்கனவே ஒரு சிறந்த வீரனிடம் போர் பயிற்சியும், யுத்த தந்திரங்களும் கற்ற அவ்வீரர்களுக்கு மேலும் வெறியேற்றி, ஒவ்வொரு வீரனையும் கூர்மையான ஆயுதமாக ஆக்கினான்…

சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகும் வானம் இருள் எனும் ஆடையை உடுத்தும் வரை போர் பயிற்சியில் ஈடுபடுபவர்கள், இரவு ஆனதும், பயிற்சி முடிந்து அவரவர் தங்கும் குகைகள் மற்றும் உயர்ந்த மரங்களின் மேல் அமைக்கப்பட்டிருந்த மரக்குடில்களுக்குச் செல்லும் முன் வழக்கம்போல, அடுத்த நாளுக்கான திட்டங்களை அறிய மற்றும் கலந்தாலோசிக்க, சீலனின் எதிரில் நின்றனர்…

"எனக்கு உங்களைப் பார்க்கும்பொழுது நம் தேசத்தின் வெற்றி மிக அருகில் இருப்பதாகத் தெரிகிறது… நீங்கள் கரந்தடிப் போர் முறையை அறிந்தவர்கள்… நான் புதிதாக எதுவும் சொல்லப் போவதில்லை… ஒரே தாரக மந்திரம் 'பண்டியதேசம் பாண்டியருக்கே!'"என்று சீலன் சிங்கமெனக் கர்ஜித்தான்.

சேனையில் இருந்த ஒருவன், "எனக்கொரு ஐயம், தாங்கள் அனுமதித்தால் …” என்று நிறுத்த,

“இங்கு யார் தலைவன், யார் வீரன் என்ற பேதம் இல்லை. நாம்முடைய ஐயங்களை நாமே அலசி ஆராயத்தான் தினமும் இரவு கூடுகிறோம்.” என்று சீலன் மறைமுகமாக அனுமதி கொடுக்க,

“நம்மிடம் போதுமான அளவுப் படைகள் இல்லாததால் தான் கரந்தடிப் போரைத் தேர்ந்தெடுத்தீரா?"

"நம்மிடம் வீரர்கள் குறைவாக இருப்பதாக என்றும் நான் எண்ணியதில்லலை… நம் தேசத்து வீரன் ஒருவனே, ஒரு படைக்குச் சமம்!…"

"பிறகு எதற்காகக் கரந்தடிப் போர்முறையைக் கையாள வேண்டும்… வழக்கம்போல நேர்மையான வழியிலேயே போர் புரியலாமே?" என்ற வீரனை பெருமை பொங்க பார்த்த சீலன்,

"தன் தேசத்தையே குறுக்குவழியில் அபகரித்த எதிரியிடமும் நேர்மையான முறையில் போரிட வேண்டும் என்று நினைக்கும் உன் தர்மசிந்தனைக்கு நான் தலை வணங்குகிறேன்… ஆனால் ஒன்றை மனதின் அடிஆழம்வரை பதித்துக் கொள்ளுங்கள். நம் எதிரிகள் எந்த யுத்த தர்மத்தையும் கடைபிடித்து, நம் தேசத்தைக் கைப்பற்றவில்லை என்பது உங்களுக்கே நன்கு தெரியும்."

"அவர்கள் அப்படிச் செய்தார்கள் என்பதற்காக நாமும் இதே முறையைக் கையாண்டால், அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?" என்று மற்றொரு வீரன் கேட்க,

“இதே கேள்வி ஏற்கனவே என் முன் எழுப்பப்பட்டது. எனக்குள்ளும் பலமுறை விவாதித்து எடுத்த முடிவெ கரந்தடிப் போர் என்னும் மறைந்து நின்று தாக்கும் முறை. ஆனால் அவர்களின் நயவஞ்சகச் செயலுக்கும், நம்முடைய போர் முறைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது... அவர்கள், சூழ்ச்சியும், துரோகமும் செய்து அடுத்தவர் தேசத்தை வென்றார்கள். நாம், அந்நியர்களிடமிருந்து நம் தேசத்தைக் கைப்பற்றுவதற்காக அந்தச் சூழ்ச்சியைக் கையில் எடுக்கிறோம்... இதில் தவறு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை." என்று கூறிவிட்டு வீரர்களின் முகத்தை ஆராயும் நோக்குடன் சீலன் பார்க்க, அதில் ஒரு சிலரின் முகங்கள் சிலனின் கருத்துடன் ஒத்துப் போகவில்லை என்பது நன்றாகத் தெரிந்தது.

"நம்மில் சிலருக்கு கரந்தடிப் போரில் இஷ்டமில்லை என்பது நன்றாகத் தெரிகிறது. ஆனால் இப்பொழுது நமக்கு வேறுவழியில்லை. பெரிய பாண்டியர் மற்றும் பல சிற்றரசர்கள் சேர்ந்து நேரடியாகப் போரில் ஈடுபடுகிறார்கள்… அவர்களை நம் எதிரி, சூழ்ச்சி செய்து தோற்கடித்துவிடக் கூடாது… எதிரியின் சூழ்ச்சிகளை மறைந்திருந்து கவனிக்க வேண்டும். போர்செய்யும் முறையில் எதிரிகள், நம் அரசர்களை வீழ்த்த, தவறான வழியைக் கையாளும் பொழுது, மறைந்திருந்தபடியே எதிரியின் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும். நம் பாண்டிய அரசர்கள் போரில் வெற்றி பெறுவதற்காக, நாம் மறைந்திருந்து தாக்க வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது." என்று சீலன் பேசும் போதே ஓர் சேனைத்தலைவன் எழுந்து, வீரர்களைப் பார்த்து,

"இவர் நமக்கு இவ்வளவு தூரம் விளக்கம் கொடுக்க வேண்டியது அவசியம் இல்லை... அவர் என்ன சொல்கிறாரோ அதை நாம் செய்ய வேண்டியது நம் கடமை... நம் தாய்நாட்டை மீட்பதற்கு என்ன வழியோ அதை அவர் யோசித்துச் செயல்படுகிறார்... நாம் இவரைப் பின்பற்றுவோம்... அதைவிட்டுவிட்டு தேவையில்லாத கேள்விகளும் நேர விரயமும் இப்போது நமக்கு அவசியமில்லை…" என்று கூற பெரும்பாலோனோர் அதற்கு ஆமோதிப்பதாகக் குரல் எழுப்பினர்

"நல்லது! கரந்தடிப்போரின் கொள்கையை வான் முட்டுமளவு கூறுவோம்!" என்று தன் கையிலிருந்த வாளை, வானை நோக்கி சீலன் உயர்த்த, அனைத்து வீரர்களும் அவ்வாறே செய்தனர்.

“எதிரி முன்னேறுகிறான்,
நாம் பின்வாங்குகிறோம்;
எதிரி தங்குகிறான்,
நாம் துன்புறுத்துகிறோம்;
எதிரி களைப்படைகிறான்,
நாம் தாக்குகிறோம்;
எதிரி பின்வாங்குகிறான்,
நாம் துரத்துகிறோம்”

என்ற கரந்தடிப் போரின் கொள்கையை வீர்கள் அனைவரும் உச்சஸ்தாயியில் முழங்கினர்.

இறுதியாக,

"போர்க்களத்தில் உங்கள் ஒவ்வொருவரிடமும் உள்ள யுத்த தந்திரங்கள் அனைத்தையும் வெளிப்படுத்துங்கள்… யாருடைய அனுமதிக்காகவும் காத்திருக்காமல் போரிடுங்கள்... சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுது யாருக்கும், எதற்காகவும் இரக்கம் காட்டாமல் பகையை மிச்சம் இல்லாமல் அழியுங்கள். நாம் காட்டும் ஒரு நிமிட இரக்கம் நமக்கே ஆபத்தாக முடியும் என்பதை மறவாதீர்கள்…" என்று சீலன் கூறி, `ஆலோசனைக்கூட்டம் முடிந்தது!` என்று அறிவிக்கும் விதமாகத் தலைசைத்துவிட்டுத் தனது குதிரையான இந்திரன் நிற்கும் இடத்தை நோக்கித் திரும்பினான்.

"நாம் இன்று வெகுவிரைவிலேயே பயிற்சி முடித்து விட்டோம். இவ்வளவு சீக்கிரத்தில் தங்கும் இடத்திற்குச் சென்று என்ன செய்யப்போகிறோம்? அதற்குப் பதிலாகத் தாங்கள், அந்த மாலிக்கபூர் பற்றியும், அலாவுதீன் கில்ஜி பற்றியும் எங்களுக்குக் கூறினால், 'யார் மீது போர் தொடுக்கிறோம்?' என்று நம் வீரர்களும் அறிந்துகொள்ள உதவியாக இருக்கும்…" என்று சேனைகளின் தலைவன் கூற,

சீலன் மாலிக் காபூர் யார்? என்று கூற ஆரம்பித்தான். "இந்த மாலிக்காபூர், தில்லியின் சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவர் என்று உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். இவர் பிறப்பால் இஸ்லாமியர் அல்ல இந்து மதத்தைச் சார்ந்தவர்."

"அப்படியா? ஒரு இந்து மதத்தைச் சார்ந்தவரா இன்று பல இந்துக் கோயில்கள் தரைமட்டமாவதற்குக் காரணமானார்?"

"ஆம்… அலாவுதீன் கில்ஜி, சோமனாதபுரம் (இன்றைய குஜராத்) மீது படையெடுக்க ஆணையிட்டாராம். அப்போது சோமனாதபுரத்தை ஆண்டு கொண்டு இருந்தவர், இரண்டாம் கர்ணதேவ வகேலா. கில்ஜியின் படைகள் உலுக்கான் என்ற படைத்தலைவர் தலைமையில் சோமனாதபுரத்தை கைப்பற்றிதோடு சோமநாதபுரம் கோயிலையும் சுவடு தெரியாமல் அழித்துவிட்டார்களாம். அதோடு நிறுத்தாமல் சோமனாதபுர மன்னரின் பட்டத்து அரசி கமலாதேவி மற்றும் அவளது திருநங்கை பணிப்பெண்ணையும், கில்ஜியின் படைத்தலைவர்கள் அழைத்துச் சென்று தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியிடம் ஒப்படைத்தார்களாம். சோமனாதபுர மன்னரின் மனைவி, மிகவும் அழகாக இருந்ததால் அலாவுதீன் கில்ஜி, அரசியின் சம்மதமில்லாமலேயே, அவரை மணந்து கொண்டாராம். அரசியின் பணிப்பெண்ணான திருநங்கையையும் மதமாற்றம் செய்து ’மாலிக் கபூர்’ என்று இஸ்லாமிய பெயர் சூட்டியிருக்கிறார்.”

“பணிப்பெண்ணாக வந்தவரிடம், தன் படையை நடத்தும் அதிகாரத்தை அலாவுதீன் எப்படிக் கொடுத்தார்?”

“அது அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லை. முதலில் சுல்தானது படை வீரர்களுக்குப் பணிபுரியத்தான் மாலிக்காபூர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பணியாளாகப் போனவர் போர்த்தந்திரங்களைக் கற்றறிந்தார். அதோடு மட்டும் மாலிக்காபூர் நிற்கவில்லை. சுல்தானின் மனதில் இடம்பிடிப்பதிலும் கவனம் செலுத்தியிருக்கிறார். தனது போர்த்திறமைகளை சுல்தானின் கவனத்தில் படும்படி செய்தான். பத்துவருட கடின உழைப்பு, கிடைத்த சந்தர்ப்பங்களை மிகச்சரியாகப் பயன்படுத்தியதன் விளைவு, இன்று சுல்தானத்தின் படைத்தலைவன்!. இதுதான் பணிப்பெண் படைத்தலைவரான கதை…" என்று சீலன் மாலிக்காபூர் பற்றித் தான் அறிந்தவற்றை வீரர்களிடம் கூறினான்.

"அலாவுதீன் கில்ஜி எந்த நாட்டுக்காரர்?" என்று ஒரு வீரன் கேட்க,

"துருக்கிய இனத்தைச் சேர்ந்தவர், ஆப்கானிஸ்தானத்தில் பிறந்து வளர்ந்ததால் ஆப்கானியர் என்றும் கூறுகிறார்கள்."

"அங்கிருந்தா இங்கே வந்தார்? மங்கோலியர்களைத் துரத்திக் காலணிய ஆட்சி வராமல் காத்தவர் என்று கேள்விப்பட்டேனே!"

"அரசர் கோரி முகம்மதுக்குப் பிறகு அடிமைவம்சம் என்ற வம்சத்தினர் தில்லியை கைப்பற்றினார்கள்… அவர்களில் ஒருவர் கியாசுதீன் பால்பான். அவருடைய படைத்தளபதியாக இருந்தவர் தான் ஜலாலுதீன் கில்ஜி. பால்பன் இறந்ததும் அவரது மகன் ஆட்சிக்கு வந்திருக்கிறான்… அவர் அரசாட்சி பொறுப்பு இல்லாமல் கேளிக்கைகளில் ஈடுபட்டதால் கோபமடைந்த ஜலாலுதீன் கில்ஜி, அவரை வீழ்த்தி அரசுரிமையைக் கைப்பற்றினார். ஜலாலுதீன் கில்ஜிதான் கில்ஜி வம்சத்தை உருவாக்கியவர். அந்த ஜலாலுதீன் கில்ஜியின் மகளை மணம்புரிந்த மருமகன்தான் இந்த அலாவுதீன் கில்ஜி."

"யப்பா! ஆட்சிகட்டிலில் ஒருவர் ஏறுவதற்குள் எத்தனை உயிர்பலிகள்?…" என்று ஒருவன் கூற,

"பின்னே? ஆயிரம் நாணயம் கொடுத்து அடிமையாக வாங்கப்பட்டதால் மாலிக் கபூரை 'ஹசார் தினார்' என்றும் கூறுகிறார்கள்… அடிமையாக வாழ்க்கை ஆரம்பித்தவர் சுல்தானியப் பேரரசின் படைத் தளபதிகளில் ஒருவராக வருவோம் என்று மாலிக்காபூர்லாம் நினைத்துப் பார்த்திருப்பாரா?"
"ஜலாலுதீன் கில்ஜிக்கு வாரிசு இல்லையா? அவருக்கடுத்து அலாவுதீன் தில்லி சுல்தானாகிவிட்டாரே?" என்று ஒரு வீரன் கேட்க,

"ஜலாலுதீனுக்கு வாரிசுகள் இருந்தார்கள். ஆனால் அவரோட விதி, மருமகனை நம்பினார்… முதலில் சொமனாதபுரத்துக்கு அருகில் உள்ள கிராமங்களை அலாவுதீனுக்குக் கொடுத்தார்… பிறகு அலாவுதீன் படைதிரட்டிச்சென்று மால்வாவைக் கைப்பற்றியதும் மருமகன் மேல் அசாத்திய நம்பிக்கை கொண்ட ஜலாலுதீன், அலாவுதீனுக்குப் பரிசாக மேலும் சில நகரங்களைக் கொடுத்தார். அப்பொழுதே அலுவுதீனுக்குத் தில்லியின் மீது ஆசை வந்துவிட்டதாகக் கூறுகின்றனர்… அடுத்து தேவகிரி கோட்டையை அலாவுதீன் கைப்பற்றி நாடு திரும்பும்போதே மருமகனை வரவேற்பதற்காக ஜலாலுதீன் தனிப் படகில் காத்திருந்திருக்கிறார்… "

"அடக்கடவுளே! தனியாகவா போனார்?"

"மருமகனாயிற்றே? அந்த அளவுக்கு நம்பிக்கை… "

"அப்புறம்?"

"வெற்றிவாகைசூடிவந்த மருமகனை வாழ்த்துவதற்காக ஜலாலுதீன் கட்டியணைக்க, இதைவிடச் சிறந்த சந்தர்ப்பம் அமையாது என்று அலாவுதீன் மாமனாரின் வயிற்றில் கத்தியால் குத்திவிட்டான். `என்ன நடக்கிறது?` என்று ஜலாலுதீன் கில்ஜி உணரும் முன்னரே அவருடைய தலையைச் சீவினான் அலாவுதீனின் படை வீரன்"

"மன்னாதி மன்னர்கள் கதையெல்லாம் இப்படித்தான் இருக்கிறது” என்று ஒருவர் அங்கலாய்க்க,

"ஜலாலுதீனுக்குத்தான் வாரிசுகள் இருந்தார்களே? பிறகு எந்த நம்பிக்கையில் மாமனாரைக் கொன்றான்?" என்று ஒரு வீரன் கேட்டதும்,

"சிங்கத்தையே சாய்த்தாகிவிட்டது… அதன் குட்டிகளைச் சமாளிப்பதா பெரிது?" என்று சீலன் கேட்டான்.

“விசயம் கேள்விப்பட்டதும் ஜலாலுதீனின் மனைவி தனது பத்து வயது மகனான ருக்னுதீனை மன்னராக அறிவித்தாராம். அதற்குள் ஜலாலுதீனின் அரண்மனை அலாவுதீன் வசமாக, அடுத்த நாளே விளையாடிக் கொண்டிருந்த ருக்னுதீனின் கண்களைப் பறித்துவிட்டான் அலாவுதீன்… மாமியார், மற்றும் உறவினர் அனைவரையும் சிறையில் தள்ளிவிட்டு, கிரீடத்தைத் தன் தலையில் வைத்துக் கொண்டானாம் அலாவுதீன்."

"அடப்பாவமே சிறுகுழந்தையைச் சிதைக்க அலாவுதீனுக்கு எப்படி மனசு வந்தது? எவ்வளவு கொடூரம்?"

"இது என்ன கொடூரம்? மங்கோலியர்களுக்கும் அலாவுதீனுக்குமிடையே அடிக்கடி போர் வந்ததல்லவா? அந்த ஆத்திரத்தை மங்கோலிய வீரர்களிடம் காட்டமுடியாமல், அலாவுதீனின் ஆட்சிக்குட்பட்டு மங்கோலிய குடியிருப்பு ஒன்று இருந்தது. அங்கு வசித்த மங்கோலிய இனத்தைச் சேர்ந்த அப்பாவி பொதுமக்கள் முப்பதாயிரம் பேரை ஒரே இரவில் கொன்று குவித்திருக்கிறான்." என்று சீலன் கூறி முடித்தபிறகும் யாரும் எதுவும் பேசவில்லை…

அனைவர் மனதிலும் ஒரே கேள்வி, “பொது மக்கள் என்ன செய்வார்கள்? அவர்களைக் கொன்றதால் மங்கோலிய இனம் அழிந்துவிட்டதா என்ன்?”

அலுவுதீனின் மறுபக்கம் அறிந்த பிறகு, சீலனின் கரந்தடிப் போருக்கு ஆதரவு தெரிவிக்காத வீரர்களுமே அதிர்ச்சியில் உறைந்திருந்தனர்.

"சரி வெகுநேரமாகிவிட்டது... நீங்கள் சென்று ஓய்வெடுங்கள்!" என்று கூறி நகர்ந்த சீலனிடம், கரந்தடிப் போருக்கு சம்மதிக்காத வீரர்கள் எழுந்து நின்று இடைவரை குனிந்து வணங்கி, " எங்களை மன்னித்தருளுங்கள்! இந்த நிமிடம் முதல் சுல்தானியப் பேரரசை அழிப்பதற்கு எவ்வகைப் போர்முறையாக இருந்தாலும் சரி? பார்த்து விடுவோம்! "என்று சூளுரைத்தனர்.

வார்த்தைகளின் எண்ணிக்கை-1131

சிவதாசனின் கர்ஜனை தொடரும்…
⚔️⚔️⚔️⚔️⚔️⚔️

கரந்தடிப் போர்முறை என்றால் கொரில்லாபோர்முறையை குறிக்கின்றது கரவாக என்றால் மறைவாக, கள்ளத்தனமாக, ஏமாற்றுமுகமாக, எதிர்பாராமல் எனப்பொருள்படும்.


கியாசுத்தீன் பல்பான் (1200 – 1287) அடிமை வம்சம் எனப்பட்ட மம்லுக் வம்சத்தைச் சேர்ந்த தில்லி சுல்தானகத்தின் துருக்கிய ஆட்சியாளர்.


1296ல் அலாவுதீன் கில்ஜி தேவகிரிமீது படையெடுத்து ஏராளமான செல்வத்துடன் காரா திரும்பினார். அப்போது அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் கலந்து கொண்ட மாமனாரும் சுல்தானுமான ஜலாலுதீன் கில்ஜியை சதிசெய்து கொன்றுவிட்டு அலாவுதீன் கில்ஜி டெல்லி அரியணையக் கைப்பற்றினார்.
 

Meerajo

Member
Vannangal Writer
Messages
33
Reaction score
6
Points
8
RD-22- சிவதாசன் எனும் நான்!...- அத்தியாயம்-18

அடர்ந்த வனத்தில் எதிர்பாராமல் ருத்ராதேவியை சந்தித்த மாறன், ருத்ராதேவியின் நெற்றியில் இதழ் பதித்த வேளையில்,

"இங்கே என்ன நடக்கிறது?" என்ற கோபக் குரல் கேட்டு மாறனும் ருத்ராவும் திரும்பிப் பார்த்தனர்.

அங்கே இடுப்பில் இரு கைகளையும் ஊன்றியபடி, பெருமூச்சையே அனல் மூச்சாக விட்டு, கண்கள் இரண்டிலும் தீப்பொறி பறக்க நின்றிருந்தாள் யாழ்.

"ஓ நீ தானா?" என்று அசால்டாக மாறன் சிரித்தான்.

மாறனின் இந்தச் செய்கை, யாழை கோபத்தின் உச்சத்திற்குக் கொண்டு சென்றது.

"ஏன் வேறு யாரை எதிர்பார்த்தீர்கள்?"

"நிச்சயமாக உன்னை இல்லை!... என்று சொல்லிவிட முடியாது... ஏனென்றால் சிவபூஜையில் கரடி வேலையெல்லாம் நீதானே பார்ப்பாய்?" என்று மேலும் கோபத்தை ஏற்படுத்தினான் மாறன்.

"ம்ஹும்! இப்போது நடந்ததற்குப் பெயர் சிவபூஜை! இதில் நான் கரடியாக வந்து கெடுத்துவிட்டேன்!” என்று கோபம் குறையாமல் உதடுகளை கோணலாக்கியவாறு யாழ் கேட்டதும்,

“ஆமாம்! ஆமாம்!” என்றான் மேலும் சிரித்தபடி.

வேகமாக நண்பனின் அருகில் வந்த விக்ரமன், "ஏன் மாறா பிரச்சனையைப் பெரிதாக்குகிறாய்?" என்று கேட்டான்.

"இங்கே என்ன பிரச்சனை நடந்தது?" என்று மாறன், தன் தோள்களை அசால்ட்டாக குலுக்கியவாறு விக்கிரமனிடம் கேட்கும் பொழுதே,

"ஆமா! உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை! பாண்டிய குமாரரே! எங்களை நம்பி இளவரசியை, எங்கள் அரசர் அனுப்பி வைத்திருக்கிறார். எங்கள் இளவரசியை நாங்கள் கவனமுடன் பாதுகாத்து, அவர் அரண்மனையில் ஒப்படைக்கும் வரை, பிரச்சனை எங்களுக்குத்தான்." என்று யாழ் கூறினாள்.

"நீ தான் கொஞ்சம் பேசாமல் இரேன்! என்று ருத்ராதேவி யாழை, கெஞ்சும் பாவனையில் அதட்டினாள்..

சின்னச் சிணுங்களுடன் ருத்ராதேவியை யாழ் பார்த்தாள்.

ருத்ராதேவியின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தையும், நாணத்தையும் கண்டு, மனம் இளகி, "சரி! சரி! எனக்குப் பசிக்கிறது. உணவு தயாராகிவிட்ட மணம் அங்கு வரை வந்ததால்தான் நான், இங்கு வந்தேன்... வாருங்கள்! எல்லோரும் உணவருந்தலாம்." என்று கூறி யாழ் சமையல் நடக்கும் இடத்தை நோக்கி நடந்தாள்.

உணவருந்தி முடித்ததும், நீலநிற பளிங்குத் தரை, மெல்ல நகர்வதைப் போல், கொஞ்சம்கூட ஆர்ப்பாட்டம் இல்லாமல் மிகவும் அமைதியாக நடைபயின்று கொண்டிருந்த வைகை ஆற்றின் கரையில், விக்ரம், மாறன், ருத்ராதேவி, யாழ் நால்வரும் கணுக்கால் வரை மட்டும் நதிநீரில் மூழ்கும்படி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

செண்பகப்பொழில் நாட்டில் நடந்த சுவாரசியமான விஷயங்களைப் பெண்கள் கூறுவதும், மதுரையில் நடந்த சுவாரசியமான விஷயங்களை நம் நாயகர்கள் கூறுவதுமாகச் சந்தோஷமாகக் கழிந்துகொண்டிருந்தது மதியவேளை.

“இந்த இனிமையான பொழுதை மேலும் சிறப்பாக்கும் பொருட்டு யாரேனும் கானம் இசைத்தால் நன்றாக இருக்கும்." என்று ருத்ரதேவி, பாண்டிய குமாரரைப் பார்த்தபடி கூற,

"ஆண்கள் பாடுவதை விடப் பெண்கள் பாடினால் இன்னும் இனிமையாக இருக்கும்…" என்று விக்ரமன் முந்திக்கொண்டு பதிலளித்ததும், அவன் அருகில் அமர்ந்திருந்த யாழ், யாருமறியாவண்ணம் சீலனின் புறங்கையில் கிள்ளி,

"இளவரசி ஒன்றும் உங்களைப் பாடச் சொல்லவில்லை." என்றாள் கிசுகிசுப்பாக.

"அடடே!! கையோடு யாழ் கூடக் கொண்டு வந்திருக்கிறீர்களே?... பிறகு பெண்கள் இசைப்பதற்கு என்ன?" என்ற மாறனும் யாழை வாரினான்.

"இந்த யாழ் மற்றவர் இசைப்பதற்கு அல்ல!" என்று யாழ் வெடுக்கென்று கூற,

"அப்படியென்றால்? தானே இசைத்துக் கொள்ளுமோ?" என்று மாறன் மீண்டும் வம்பு இழுத்தான்.

"இளவரசி!!!" என்று தன் தோழியைப் பார்த்தாள் யாழ்.

"ஏன் எப்போது பார்த்தாலும் யாழையே கிண்டல் செய்கிறீர்கள்?" என்று ருத்ராதேவி மாறனிடம் மிகவும் மெல்லிய குரலில் கேட்டாள்.

"என்ன செய்வது? நீதான் பேச மாட்டேன்கிறாய்... அவள் தான் வளவளவென்று பேசிக் கொண்டிருக்கிறாள். பேசுபவர்களுடன் தானே நானும் பேச முடியும்? அதோடு உன் தோழி பாண்டிய குமாரணொடு பேசுவது போலவாபேசுகிறாள்?” என்றான் மாறன்.

"இதற்கு என்ன அர்த்தம் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?"என்று யாழ் குனிந்தபடி மேல் கண்ணால் மாறனை பார்த்தவாறு கேட்டாள்.

பேச்சு, திசை திரும்புவதைப் புரிந்துகொண்ட விக்கிரமன், "இனிமையான சூழலில் அருமையான இசையைக் கேட்டு மகிழலாம் என்று எண்ணியிருந்தேன். இங்கே இசை இசைப்பதற்கான சூழல் தெரியவில்லை... இங்கேயும் வாள் இரண்டும் உராயும் ஒலிதான் கேட்கிறது." என்று தன்னிடமே கூறுவதுபோல் கூறிக் கொண்டான்.

அதைக்கேட்ட ருத்ராதேவி, மாறனிடம் "நீங்கள் அழகாக வாள் சுழற்றுகிறீர்கள்... எனக்குக் கற்றுத் தர முடியுமா?" என்று கேட்க,

அவளின் கண்களையே கூர்ந்து பார்த்தவாறு மாறன், "உன் கண்கள் எனும் வாள் என்னைக் கூறு போடுவதை விட, வேறு எந்தக் கூர்மையான ஆயுதமும் என்னைக் கூறு போட்டதுகிடையாது... உனக்கு எதற்கு வாள்?" என்று கேட்டான்.

"ஆக, இங்கே வாள் சண்டைதான் நடக்கப் போகிறது போல… " என்று முகத்தை மிகவும் சோகமாக வைத்துக்கொண்டு விக்ரமன் சலிப்பாகப் பேசிய விதத்தில் மற்ற மூவரும் சிரித்தனர்.

"நாங்கள் வேண்டுமானால் இசைக்கருவிகளை இங்கே எடுத்து வரட்டுமா இளவரசி?" என்று சற்றுத் தொலைவில் இருந்த மரங்களுக்குப் பின்னால் மறைந்து நின்ற தோழிகள் கலகலவெனச் சிரித்தபடி கேட்டனர்.

"ம்ம்...எடுத்து வாருங்கள்! ஏதடா இவ்வளவு நேரமாக இவர்கள் தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருக்கிறோமே என்று நினைத்தேன்... வானரங்கள் மரத்துக்குப் பின்னால் ஒளிந்து நின்று வேடிக்கை பார்த்திருக்கின்றன." என்று சிரித்தாள் யாழ்.

"உன்னைப் போலவே." என்று சொல்ல நினைத்து வாயைத் திறந்த மாறனின் இதழ்களை இறுக மூடினான் விக்ரமன்.

சிறிது நேரத்தில் தோழிகள் அனைவரும் ஆளுக்கு ஓர் இசைக்கருவியை எடுத்து வந்து தயாராக இருக்க, யார் முதலில் பாடுவது என்று ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"முதலில் இனிமையான கானம் வரட்டுமே! இளவரசியே பாடுங்கள்! நீங்கள் கவிதைகள் படைப்பதிலும் பாடுவதிலும் வல்லவர் என்று கேள்விப்பட்டோம்... உங்கள் கானம் கேட்டால், தோட்டத்தில் பூக்கள் சுகந்த மணம் வீசி மலரும் என்றும், பறவைகள் தன் இனிய கானத்தை நிறுத்தி மயங்கி நிற்கும் என்றும், மயில்கள் தோகை விரித்து ஆடும்! என்றும், கேள்விப்பட்டோம் அப்படிப்பட்ட கானத்தை நாங்கள் கேட்கும் பாக்கியம் இருக்கிறதா? என்று கேட்டான் விக்ரமன்.

"சரியாகச் சொன்னீர்கள்! பாடலுக்கு இனிமை சேர்ப்பதே பெண்களின் குரல் மூலமாகத்தான்... சில ஆண்களின் குரல் கர்ண கொடூரம்!" என்றும் யாழ் முகதைச் சுளித்துக் கூற,

"உன்திரு வாயை அடைப்பதற்கு வழி ஒன்றும் இல்லையா?" என்று வானத்தை நோக்கி இருகைகளையும் உயர்த்திக் கடைக்கண்ணால் யாழைப் பார்த்தான் மாறன்.

"தாங்கள் என்ன என் மாமனா? மச்சானா? ஏன் எப்பொழுது பார்த்தாலும் என் வழிக்கே வருகிறீர்கள்?" என்று யாழ் கேட்க, சம்பந்தமே இல்லாமல் விக்ரமன் பொங்கினான்.

"உங்களை மாறன் தன் சகோதரியாகப் பார்க்கிறான்!" என்று விக்ரமன் கூற,

சட்டென்று விக்கிரமனைத் திரும்பிப் பார்த்த மாறன் புருவங்களைச் சுளித்து, "நான் எப்போது கூறினேன்?" என்றான்.

"இந்தக் கணத்திலிருந்து யாழ் உனக்குச் சகோதரிதான்!" என்று வேக வேகமாகவும் ஆணித்தரமாகவும் விக்ரமன் கூறிய விதத்திலிருந்து, விக்ரமனும், யாழும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்களோ? என்று மாறனுக்கு ஐயம் எழ, யாழைப் பார்த்தான், யாழோ வானத்தைப் பார்த்தாள்.

"ஓஹோ இப்படிப் போகிறதா? இது எப்போதிருந்து நடக்கிறது?" என்று மாறன் சந்தோசமாக இருவரிடமும் கேட்க,

தாங்கள் இருவரும், யாரும் அறியா வண்ணம் மனதில் பூட்டிவைத்த விஷயம் வெளிவந்த அதிர்ச்சியில் விக்கிரமனும், யாழும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு, கட்டுண்ட பார்வையைப் பிரிக்காமலே, "இன்று தான்! இப்போதுதான்!' என்று மாற்றி மாற்றி உளறினர்.

விக்ரமனையும், யாழையும் சந்தோசமாகப் பார்த்த மாறன், சட்டென்று விக்கிரமனை அணைத்துக்கொண்டு,

"மனதிற்கு உகந்த இனிய செய்தி! இனி வாழ்நாள் முழுவதும் நாம் இருவரும் இணை பிரியாது இருப்போம்!" என்று கூறினான்.

'இந்த அருமையான வசனத்தை நான் தானே கூற வேண்டும்? இங்கே என்ன நீங்கள் கூறிக் கொண்டிருக்கிறீர்கள்?" என்று யாழ் தன் இதழ்களைக் கரங்களால் மூடிச் சிரிக்க,

"சகோதரிக்காக, சகோதரனும் வசனங்கள் கூறலாம்!" என்ற மாறனின் பார்வையில் அது வரை இருந்த குறும்பு மறைந்து பாசம் தெரிந்தது.

“அப்பாடா இனியாவது கானம் இசைக்கலாமே?” என்றான் விக்கிரமன்.

விக்கிரமனை பார்த்து, `உத்தரவு!` என்பதைப்போல், தன் வலது உள்ளங்கையை மேல் நோக்கியவாறு வயிற்றை ஒட்டி வைத்தபடி, மார்பு வரை குனிந்து நிமிர்ந்த மாறன், இளவரசி ருத்ராதேவியைப் பார்த்து,
"மனதிற்கு மிகவும் உவகை அளித்த இத்தருணத்தில் உணர்ச்சி மிகுதியால், என் நா மேலன்னத்தில் ஒட்டிக்கொண்டது…. அதனால் முதலில் நீங்களே ஆரம்பித்து வையுங்கள்!" என்றான்.

சிறிது நேரம் மாறனையே பார்வையால் ஊடுருவிய ருத்ராதேவி,

"முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னே அவனுடைய ஆரூர் கேட்டாள்
பேர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள்தன் நாமம் கெட்டாள்
தலைப்பட் டாள்நங்கை தலைவன் தாளே"

என்று நாவுக்கரசர் பாடிய தேவாரப்பாடல் மூலமாகவே தன் இதயத்தில் இருந்த காதலின் ஆழத்தை பாடலின் வரிகளால் உணர்த்தினாள் ருத்ராதேவி,

'அன்று வாளெடுத்து நிற்கையில் உமையையும், சற்றுமுன் விரிந்த புன்னகையில் இலக்குமியையும், கனிந்த கவிதையைப் பாடிய விதத்தில் கலைவாணியையும் காண்கின்றேன்…" என்று சுற்றம் மறந்து மாறன் பிதற்ற,

"போதும் மாறா! நாங்களும் இருக்கின்றோம்… நீ அங்கே வடிக்கும் கவிதையை எங்களுக்கும் கூறினால் நன்று!" என்ற விக்ரமனின் புஜத்தில் செல்லமாக ஓங்கிக் குத்திய மாறன்,

`பாடட்டுமா?` என்று ருத்ராதேவியிடம் நயனபாஷையில் வினவ,

தன் பார்வையை மாறனின் கண்களிலிருந்து அகற்றாமலேயே, தலையைக் கூட அசைக்காமல், எவ்வித சைகையும் காட்டாமலே, சம்மதம் தெரிவித்தாள் ருத்ராதேவி.

`யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!’’.

நாழிகை கடந்தும் அந்த இடத்தில் யாரும் யாருடனும் பார்வையால் கூடப் பேசாது மாறன் ருத்ராதேவியின் காதல் உணர்வலைகள் ஏற்படுத்திய பாதிப்பில், சிலையாகச் சமைந்தனர்...

மாலை மயங்கிய பிறகும், சந்திரன் வெளியே வருவதற்குத் தயங்கி மேகத்தினுள் இருந்தபடி, “ஆத்மார்த்தமான காதல் மொழிகளற்றது… அந்த ஏகாந்த நிலையைக் கலைக்க விருப்பமில்லை… தோழியர் குரலோ, அவர்களின் அசைவால் பறக்கும் பறவைகளின் ஒலியோ கேட்டபிறகே மேகத்திலிருந்து வெளிவருவேன்!” என்று மேக மெத்தையில் சஞ்சரித்தவாறு காத்திருந்தான்…
சந்திரனை வெகுநேரம் காக்க விடாமல் தோழிகள் தன்னுணர்வு பெற்று, இளங்காதலர்களைப் பார்த்துப் பரிகசித்துச் சிரிக்க, மரங்களிலிருந்த பறவைகள் சட்டென மேலழுந்து பறந்தன…

பிரியாவிடை என்பது சொல்வதற்கும், கேட்பதற்குமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை… ஆனால் அவரவர்க்கு நேரும்பொழுது...

அப்படிப்பட்ட கொடிய நிலையில் நின்றிருந்தனர் நான்கு காதல் இதயங்களும்.

ஒரு வழியாக, நீர் தழும்பும் கண்களும், ஒருவர் கரத்தை மற்றவர் பிடிப்பதும், “போய் வருகிறேன்” என்று தலையசைத்துவிட்டு, அதே இடத்தில் நிற்பதுமாகப் பொழுது கழிய,

தோழிகள் யாழிடம், "நாம் அரண்மனை செல்லும் நேரம் கடந்துவிட்டால் தண்டனைக்கு உள்ளாவோம்… அரசரின் கோபத்தைத் தாங்கும் சக்தியில்லை எமக்கு" என்று கூறி உலுக்கினர்.

விக்ரமனும், யாழும், மாறனும் ருத்ராதேவியும் தத்தம் மனதில் அழுத்திய பிரிவு வலியை கட்டுப்படுத்தி, புன்னகையால் விடைகொடுத்தனர்…

எதிரெதிர் திசையில் இரண்டு அடிகள் வைத்திருக்க மாட்டர்… மீண்டும் திரும்பி வந்து ஒருவர் கரத்தை ஒருவர் பிடித்துக்கொண்டு,

"மீண்டும் எப்பொழுது சந்திப்போம்?" என்று காளைகள் கேட்டனர்.

"இப்பொழுது கட்டாயம் பிரியவும் வேண்டுமோ?" என்றனர் கன்னியர்.

நம்மை இணைத்த இந்த இயற்கை எழில் கொஞ்சும் வனத்தில் இந்த இன்ப தினத்தை நினைவுருத்தும் வகையில் எழில்மிகு வசந்தமண்டபம் ஒன்றைக் கட்டுவோம்" என்று முடிவெடுத்து தங்கள் பாதையில் செல்லலாயினர்.

வார்த்தைகளின் எண்ணிக்கை-1114.

சிவதாசனின் கர்ஜனை தொடரும்…
⚔️⚔️⚔️⚔️⚔️⚔️


குறுந்தொகைப் பாடல் எண்: 40 (நாற்பது)

ஆசிரியர் செம்புலப்பெயனீரார்

"யாயும் ஞாயும் யாராகியரோ"
(மாறன் பாடுவதாக கூறிய பாடல்)
பாடலின் பொருள்:

என் தாயும் உன் தாயும் யார் யாரோ?
என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவானர்கள்?
எந்த உறவின் வழியாக நானும் நீயும் அறிந்துகொண்டோம்?
செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல
அன்புடைய நம் நெஞ்சம் தாமாக ஒன்றுபட்டனவே!

இப்படி செம்மண் நிலத்திலிருக்கும் நீர் போல் தலைவனும் தலைவியும் ஒன்றுபட்டிருந்தனர்.
 
Last edited:

Meerajo

Member
Vannangal Writer
Messages
33
Reaction score
6
Points
8
RD-22- சிவதாசன் எனும் நான்!...- அத்தியாயம்-19

அதிகாலைச் சூரியன் எழுந்துவர சிரமப்படும் கொல்லிமலைக் குகையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சீலனின் செவியில் இந்திரனின் கனைப்பொலி நிஷ்டூரமாகக் கேட்டது.

"அதிகாலையிலேயே இவனுக்குப் பசித்துவிட்டதா?" என்று உறக்கம் கலைந்து, எழுந்து வந்து பார்க்க, குகை வாசலில் இந்திரனுடன், பெரியவருடன் சென்ற சைந்தவனும் நின்றுகொண்டிருந்தது.

'இன்னும் வானத்தில் இருள் பிரியவில்லை. அதற்குள் சைந்தவன் இங்கு வந்து நிற்கிறானே? ஏதோ அவசரச் செய்தி போலிருக்கிறது.' என்று நினைத்த சீலன்,

சைந்தவன் அருகில் சென்று வழக்கம்போல் அவன் பிடரி மயிரைத் தடவிக் கொடுத்து, கழுத்தை நிமிண்டி விட்டு, தனது சிரசை சைந்தவனின் முகத்தோடு செல்லமாய் முட்டி, சைந்தவனின் வரவில் தனக்குண்டான சந்தோஷத்தை வெளிப்படுத்தினான் சீலன்.

'என்னெவெல்லாம் செய்கிறான்! என்றாவது ஒருநாள்… குறைந்தது ஒர் வேளையாவது இவ்வாறு உவகையுடன் என்னுடன் களித்திருப்பானா?' என்று எண்ணியபடி கண்களில் பொறாமை கொப்பளிக்க சீலனை வெறித்த இந்திரன், தனது வாலால் சீலனின் பின்புறத்தைத் தட்டினான்.

சீலன் திரும்பிப் பார்க்காமலேயே இந்திரனின் இச்செயலுக்கான காரணத்தைப் புரிந்து கொண்டு புன்னகை தவழ, சைந்தவனின் கண்களைப் பார்த்துச் சிரித்தான்.

இதைக் கண்ட இந்திரனுக்கு, பொறாமை எனும் வெப்பத்தால் வெளியேறிய புகை அவனுடைய செவி வழியே வெளியேற, "போதும்! போதும்! முதலில் வந்த விபரத்தைக் கேள்!" என்பது போல் ஒலி எழுப்பியது.

திரும்பி இந்திரனைப் பார்த்த சீலன், அவனுடைய முதுகில் செல்லமாகத் தட்டிக் கொடுத்துவிட்டு, மீண்டும் சைந்தவனிடம்,

"எப்படி இருக்கிறாய் சைந்தவா?…. விடியும்முன் வந்திருக்கிறாயே? ஏதேனும் அவசரச் செய்தியா?" என்று சீலன், சைந்தவனிடம் கேட்டான்.

சைந்தவன், "ஆமாம்!" எனபதைப் போல் தலையசைத்து, தனது முதுகுப்புறத்தை சிலிர்த்து, கண்களால் சிலிர்த்த இடத்தை சீலனிடம் காட்டியது.

உடனே சீலன் சைந்தவனின் முதுகுப்பகுதியில் ஓலை அனுப்பிவைக்கும் மறைவான இடங்களில் பரிசோதிக்க, அங்கே ஒரு சுருள் ஓலை இருந்தது. அதை எடுத்து விரித்தான்.

"வரும் பஞ்சமியன்று காலை இரண்டாம் நாழிகையில், கோட்டை வாசலில் முற்றுகை இடுக்கிறோம்." என்று எழுதி, பாண்டிய தேச ரகசிய முத்திரையுடன் இருந்தது.

"நல்லசெய்தி கொண்டு வந்தாய் சைந்தவா! நான் உடனே புறப்பட்டுச் சேனைகளுடன் வருகிறேன் என்று கூறு.” என்றவன்,

அதையே ஓர் ஓலையிலும் எழுதி, கையோப்பமிடும் இடத்தில் அச்சிடுவதற்காக, அருகில் பூத்திருந்த வண்ணப்பூக்களைக் கசக்கி, அதன் ரசத்தைத் தனது கணையாழியின் முகப்பால் தொட்டு அச்சிட்டான். பிறகு ஓலையைச் சுருட்டி, சைந்தவன் ஓலை கொண்டு வந்த அதே இடத்தில் மறைத்து வைத்தான்.

பிறகு, இந்திரன் பசியாறுவதற்காக வைத்திருந்த கொல்லிமலையில் கிடைக்கும் சத்து மிகுந்த மூலிகைகளை, சைந்தவனிடம் எடுத்துக் கொடுத்துச் சாப்பிட வைத்தான் சீலன்.

அதைக் கண்ட இந்திரன், "அடுத்த முறை இங்கு வரும்போது, அங்கு நீ சாப்பிடும் எதையாவது எனக்கு எடுத்து வா!” என்பது போல் சைந்தவனிடம் உறுமியது.

அதைப்பார்த்து சிரித்த சீலன், சைந்தவன் பசியாறியதும், "நீ சென்று வா! சைந்தவா" என்று சொல்லி, சைந்தவனை வழி அனுப்பி வைத்தான்.

"விரைவில் பசியாறி, காத்திரு… நாம் மகேந்திரகிரிமலைக்குச் செல்ல வேண்டும்…" என்று ஓடிக்கொண்டே பேசிய சீலனைப் பார்த்த இந்திரன்,

"எனக்காக வைத்திருந்த மூலிகைப் பயிர்களை எல்லாம் வந்தவனுக்கு வாரி இரைத்துவிட்டு, எஞ்சி இருப்பதையும் விரைவாக உண்ணவாம்… எவ்வளவு மெதுவாக உண்டாலும் அவன் வருவதற்குள் அனைத்தையும் உண்டு முடித்து, ஒரு நித்திரையும் போட்டு விடுவேன்!" என்று பொருமியபடி, எஞ்சியிருந்த மூலிகைப்பயிர்களை உண்ண ஆரம்பித்தது.

மகேந்திரகிரி மலையடிவாரத்தில், இன்னும் பனி சுமந்து நின்ற புல்வெளியில் பாண்டிய வீரர்கள் சீலனின் கூற்றுக்காகக் காத்திருந்தனர்.

"நம் வீரத்தையும், விவேகத்தையும் வெளிப்படுத்தும் வேளை வந்தது… நம் பாண்டிய தேசத்தை அயலானிடமிருந்து மீட்க தக்க தருணம் வந்துவிட்டது... வரும் பஞ்சமியன்று மதுரைக் கோட்டையை, நம் மண்ணின் மாண்பைக் காப்பாற்றத் துடிக்கும் வீராதிவீரர்களாகிய பாண்டிய சிற்றரசர்கள், பெரியவர் தலைமையில் முற்றுகை இடப்போவதாக நற்செய்தி வந்துள்ளது."

"நற்செய்தி! வாழ்க பாண்டிய தேசம்! வாழ்க பாண்டியர் குலம்!" என வீரர்கள் சிறிது நேரம் முழங்கினர்.

வீரர்களின் ஆரவாரமே மனதிற்கு எழுச்சி ஊட்ட, சீலன் தொடர்ந்தான்.

"இந்தக் கணம் முதல் நாம் ஒவ்வொருவரும் ஒரு படையாகிறோம்… நாம்தான் சேனைத்தலைவன், நாமே வீரனும் ஆவோம்… நம் தாய்த்திரு நாட்டைக் காக்க வீறுகொண்டு எழுவோம்… நம் பண்பாட்டை அழிக்க வந்தவனை வேறோடு சாய்ப்போம்… நம் மண்ணின் மீது, ஆழம் தெரியாமல் கால்வைத்த அயலானை ஓட ஓட விரட்டுவோம்… நாம் ஒவ்வொருவரும் குறைந்தது நூறு வீரர்களையாவது வென்று வீழ்த்துவோம்... வெற்றியுடன் திரும்புவோம்…" என்று உணர்ச்சிப் பிழம்பாய் சீலன் வெடிக்க,

"வெற்றி! வெற்றி நமதே! எம் தேசத்துக்கு வெற்றி” என்று வீரர்கள் மீண்டும் ஆர்ப்பரித்தனர்.

"நாம் கோட்டையைச் சுற்றிலும் உள்ள கிராமத்து இல்லங்களில், பொது மக்களைப் போல் கலந்து விட வேண்டும்… கோட்டையைச் சுற்றிலும் உள்ள மதில் சுவர்கள், மரங்கள் போன்ற மறைவான பகுதிகளில் அம்புகள் மட்டும் செல்லும்படி துளையிட்டு தயாராக இருக்க வேண்டும். எதிரிகள் நம் மன்னர்களைப் போர் தர்மம் தவறி தாக்கும்பொழுது அவர்கள்மீது நாம் திடீரென்று ஆயுதங்களைப் பிரயோகித்து, போரிட்டு அவர்களை அழிக்க வேண்டும் நம்மில் ஒருவர் பிடிபட்டாலும் மற்றவர் சேர்ந்து அந்த ஒருவரை காக்க வேண்டும்… இந்தப் போர் முறையில் நாம் ஒவ்வொருவரும் தளபதியே, ஒவ்வொருவரும் சேனைத் தலைவர்களே...போர்க்களத்தில், என்ன செய்ய வேண்டும் என்ற முடிவை உடனுக்குடன் நாமே சந்தர்ப்பத்துக்குத் தகுந்தவாறு எடுத்து, எதிரியை அழிக்க வேண்டும்… வாருங்கள்! வெற்றிக்கு வித்திட்டு வருவோம்… நாம் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் உள்ள மக்களுடன் கலந்து விடுவோம்... இப்பொழுதே கிளம்பினால் நாம் அவர்களோடு இணைந்து செயல்பட வசதியாக இருக்கும்." என்று கூறிய பிறகு,

வீரர்களின் விருப்பப்படி குழுக்கள் சேர்த்தான். கோட்டை வாசலின் அமைப்பை மணலில் வரைந்து, எந்தெந்த குழு, கோட்டையைச்சுற்றி, எங்கெங்கு மறைந்து இருக்க வேண்டும் என்பதையும் அலசி ஆராய்ந்தார்கள்... மேலும் ஏதேனும் மாற்றம் இருப்பின் அங்கேப் போய்ப் பார்த்துக் கொள்ளலாம். என்று கூறி, சீலனின் தலைமையில் கரந்தடிப் போர் வீரர்கள் மதுரை கோட்டையை நோக்கிப் பயணமாகினர்.

சீலன் கரந்தடிப் போர் வீரர்களுடன் மதுரை கோட்டையை நோக்கி வருவதை ஏற்கனவே சைந்தவன் மூலம் அறிந்து கொண்ட பெரியவர், மதுரையைச் சுற்றிலும் உள்ள தேசங்களின் சிற்றரசர்களுக்குத் தகவல் அனுப்பி, சீலனின் குழுக்களைக் கிராமத்துக்கு ஒரு குழுவாகத் தங்க வைத்தார்.

கரந்தடிப் போர் வீரர்களுக்குத் தேவையான வில், அம்பு, வேல், ஈர்வாள், உடைவாள், முக்குத்துவாள், வளரி (பூமராங்), ஈட்டி, வளைந்து தானே எய்யும் இயந்திர வில், கல்லை உமிழும் கவண், தூண்டில் வடிவாகச் செய்து விடப்பட்டு வைத்து மதில் ஏறும் எதிரிகளைக்கோத்து வலிக்கும் கருவி, கழுக்கோல் போலக் கழுத்தில் பூட்டி முறுக்கும் சங்கவி, ஆண்டலைப்புள் வடிவாகப் பண்ணிப் பறக்கவிட உச்சியைக்கொத்தி மூளை யைக் கடிக்கும் பொறி வரிசைகள், மதில்மீது ஏறுவோரை மறியத் தள்ளும் இருப்புக்கவை, கழுக்கோல், ஏவறைகள், சிற்றம்புகள் வைத்து எய்யும் இயந்திரம், பகைவர்மேல் சென்று கண்ணேக்கொத்தும் சிச்சிலிப்பொறி, மதில் உச்சியில் ஏறினவர் உடலைக் கொம்பால் கிழிக்க இரும்பால் செய்து வைத்த பன்றிப் பொறி, மூங்கில் வடிவாகப்பண்ணி அடிப்பதற்கு அமைத்த பொறி, கழுகுப்பொறி, புலிப்பொறி, குடப்பாம்ப சகடப்பொறி, தகர்ப்பொறி போன்ற ஆயுதங்களையும் கொடுத்தனுப்பினார்.

போர்க்களத்தில் கரந்தடிப் போர் வீரர்கள் தாக்கப்பட்டால் அவர்களைக் காப்பாற்றுவதற்கு, தனியாகச் சில வீரர்களை அமர்த்தினார்…

கரந்தடிப்போர்வீரர்களுக்கென்று தனியாக வைத்தியர்களை அமர்த்தினார்.

மேலும் ஒவ்வொரு குழுவினருக்கும் குடும்ப அங்கத்தினர் போர்வையில் பணியாட்கள் அமர்த்தப்பட்டனர்…

ஆகவே மற்ற பொதுமக்களுடன் வித்தியாசம் தெரியாமல் கரந்தடிப் போர் வீரர்களும் குடும்பம்போல் வாழ்ந்தார்கள்.

பஞ்சமி திதி வருவதற்குள் அனைத்து வீரர்களும், திட்டமிட்டபடி தாங்கள் மறைந்து நின்று தாக்குவதற்கு ஏற்ற இடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கே தங்கள் திறமைக்கேற்றவாறு தேவையான ஆயுதங்களை மறைத்து வைத்தனர்.

கரந்தடிப்போர் வீரர்கள் மக்களுடன் நெருங்கிப் பழகி மக்களின் செல்வாக்கையும் பெற்றனர்.

"அரண்களில், மறைந்து நின்று அம்பு எய்யும் துளைகள், அதாவது ஏப்புழைகள் இருக்கின்றன அவை எங்கெல்லாம் இருக்கிறதொன்று பார்த்துக் கொள்ளுங்கள்…" என்று சீலன் அதற்கு ஏற்ற குழுவினருக்கும், மற்ற குழுவினருக்கும் தினமும் தகவல் அனுப்பிய வண்ணமிருந்தான்...

பஞ்சமி
இதுநாள்வரை மதுரை மக்களுக்கும் மன்னர்களுக்கும் காவலாகவும், சில திங்களுக்கு முன் பெரிய அவலத்தைக் கண்டு கலங்கியும், உயர்ந்த மலைபோல் வீற்றிருந்த, பாண்டியர் அமைத்த கோட்டை, விடிகாலை வேளையில் இன்று நடக்க இருக்கும் நிகழ்வுகளுக்குச் சாட்சியாக நின்றிருந்தது.
பாண்டிய சிற்றரசர்களுடன் பெரியவர் மதுரைக் கோட்டையை முற்றுகையிட்டார்.

மாமதுரையின் பிரமாண்டமான கோட்டை வாசலின் எதிரே பாண்டியர்களின் நால்வகைப் படைகள் வரிசை வரிசையாக அணிவகுத்து நின்றன.

பெரியவர், நெல்லைபாண்டிய சிற்றரசர்கள், வேணாடு, ஆய்நாட்டுச் சிற்றரசர்கள் ஆகியோர் ஆகியோர் நன்கு அலங்கரிக்கப்பட்ட யானைகளின்மேல் ஏறிக்கொண்டு அவரவர் சேனைகளுக்கும் முன்னால் கம்பீரமாக வீற்றிருந்தனர்.

சுற்றியிருந்த கோடிக்கணக்கான படை வீரர்களின் வாழ்த்தொலி வானைப் பிளந்தது.

நீர், உணவு, உணவுக்குத் தேவையான பொருட்கள் என்று அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் கோட்டைக்குள் போகாதவண்ணம் முற்றுகை பலப்படுத்தப்பட்டது.

ஆங்கங்கே மறைவான புதர்களில், உயரமான மரங்களின் மேலே, பகைவர்களை, அவர்கள் கண்ணுக்குத் தெரியாமலேயே சூறையாடுவதற்காகக் கரந்தடிப் போர் வீரர்களைமறைந்து இருக்கச் செய்தான் சீலன்.

இச் செய்தியைக் கோட்டை வாயில் காவலர், அரண்மனையிலிருக்கும் மாலிக்காபூருக்குத் தகவல் அனுப்பினான்.

கோட்டையை முற்றுகையிட்டால் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் சில தினங்கள்தான் தாக்குப்பிடிக்க முடியும் என்பதை அந்தந்தத் துறை அமைச்சர் மூலமாக அறிந்த மாலிக்காபூர், படைகளைத் திரட்டிக்கொண்டு கோட்டை வாசலுக்கு வந்து போர் புரியத் தொடங்கினான்.

ஒரு நாள் முழுவதும், வில்லோடு வில்லும், வாளோடு வாளும் யானைப் படையுடன் யானைப் படையும், குதிரைப் படையோடு குதிரைப் படைகளும், ஆக்ரோசமாக மோதிக்கொண்டன…

போர்க்களமாக மாறியது கோட்டைவாசல்…

ஒரு நாள் முழுவதும் போர் புரிந்தும் பாண்டிய வீரர்களில் ஒருவரைக்கூடத் தோற்கடிக்க முடியாமல் அன்றைய போர் முடிந்தது…

அவசரமாகச் சேனைத் தலைவர்களை அழைத்துப் பேசினான் மாலிக்காபூர்.

'நாளைய தினம், நான் சுல்தானைச் சந்திப்பதற்காகத் தில்லி செல்லவிருக்கும் வேளையில், இன்று கோட்டையை முற்றுகையிட்டிருப்பது நமக்குப் பலவகையிலும் தீங்கு விளைவிப்பதாகிவிட்டது. அதிலும் இன்றைய போரில் ஒரு வீரனைக் கூட நம்மால் சாய்க்க முடியவில்லை…" என்று உறும,

"நம் சேனைகள் இப்பாண்டிய தேசத்தைக் கைப்பற்றி விட்டோம் என்று கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்துவிட்டனர்…" என்று ஒரு சேனைத்தலைவர் தலைகுனிந்தவாறு கூற,

“அது மட்டுமல்ல, நம் சேனைகள் குறிப்பிட்ட வீரரக்களைத் தாக்க முன்னேறுகையில் எங்கிருந்தோ அம்பு மழையும், வேலும் ஈட்டியும் பறந்து வந்து தாக்கின…" என்று ஒரு வீரன் கூறினான்.

"அதே போல் தன் நாட்டை மீட்க வேண்டும் என்ற வெறி அவர்களிடம் மிகுந்து காணப்படுகிறது. அதுதான் இன்று நாம் திணறியதற்கு முக்கியமான காரணம்!" என்று மாலிக்காபூர் கூறவும், அனைவரும் அதை ஆமோதிப்பது போல அமைதியாக இருந்தனர்.
"நீங்கள் அனைவரும் இவ்வாறு அமைதியாக இருப்பது எனக்கு மேலும் மன வருத்தத்தை அளிக்கிறது. அடுத்து, நான் சுல்தானை வெறும் கையோடு போய்ப் பார்க்க முடியுமா? ஏற்கனவே மதுரை அரண்மனையில் இருந்த கருவூலங்கள், கோயிலில் இருந்த பொக்கிஷங்கள் என்று எதுவுமே இல்லாமல் துடைத்து எடுத்துச் சென்றுவிட்டனர் பாண்டியர்கள். நம் பிணையக் கைதிகளாக இருந்த படைகளையும் களவாடிச் சென்று விட்டனர். இதே நிலை நீடித்தால், நான் சுல்தானின் முன் நிற்பதற்கு அஞ்சுகிறேன்... வருத்தம் கொள்கிறேன்... வெட்கப்படுகிறேன்…" என்று மாலிக்காபூர் கண்கள் சிவக்க பற்களை நற நறத்தபடி கூறினான்.

"இதுவரை நாம் அறவழியில் போர் புரிந்தோம்... அதைக் கைவிட்டால் நாம் வெற்றி காண முடியும்!" என்று ஒரு சேனைத்தலைவர் கூறினான்.

"அதற்கு முன்னர், நாளை அவர்கள் போருக்கு வருவதற்கு முன்னரே அவர்களுடைய யானைப்படை, குதிரைப் படைகளிலிருக்கும் யானைகளையும் குதிரைகளையும் விரட்டி ஓடவிடுவோம்... அவருடைய ஆயுத கிடங்கைத் தீ வைத்துக்கொளுத்துவோம்... அவர்களின் வீரர்கள் ஓய்வெடுக்கும் படை வீடுகளையும் தீக்கிரையாக்குவோம்... எஞ்சியவர் மட்டும் நாளைக்குப் போருக்கு வரட்டும். அவர்களையும் அறவழியில் அல்லாது அடித்து நொறுக்குவோம்." என்று மாலிக்காபூர் வெறியோடு கதறினான்…

மாலிக்காபூரின் குரலில் இருந்த சீற்றம், மற்ற வீரர்களையும் பற்றிக் கொள்ள, அனைவரும் எழுந்து பாண்டியர் படைகள் ஓய்வெடுக்கும் இடத்தை நோக்கிச் சென்றனர்.

அங்கு நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கவனித்த பாண்டிய தேசத்தின் ஒற்றர்கள் இருவர், விரைந்து சென்று ஒற்றர்குழுவிடம் கூறினர். அவர்கள் திசைக்கு ஒருவராய் பிரிந்துசென்று பெரியவர் தங்கியிருக்கும் படைவீடுகளுக்கு ஒருவர், கரந்தடிப்போர் புரியும் குழுக்களுக்கு மற்றவர்களுமாகப் பிரிந்து சென்று விஷயங்களைக் கூறினர்.

ஒற்றர்கள் சமயமறிந்து, தெரிந்து வந்து உரைத்த மேற்கூறிய செய்திகள் சீலனுக்கும் பெரியவருக்கும், அடுத்தடுத்து திட்டமிட பெரிதும் உதவின...

இரவு நேரமும், எதிரிகள் தாக்க வரலாம் என்று ஏற்கனவே தயாராக இருந்த கரந்தடிப் போர் வீரர்கள், யானைப்படை, குதிரைப்படையில் உள்ள யானைகளைத் தாக்க வந்த மாலிக்காபூரின் வீரர்களை, மறைந்து நின்று தங்கள் ஆயுதங்களால் தாக்கினர்.

அந்தத் திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத மாலிக்காபூரின் வீரர்கள் திணறினர்.

'எந்தத் திசையிலிருந்து, என்ன ஆயுதம் வருகிறது? எப்படி வருகிறது? என்பதைப் பகைவர்கள் யோசிக்கும் முன்னரே சீலனின் கரந்தடிப் போர் வீரர்கள், அங்கிருந்த பகைநாட்டு வீரர்களை அழித்து ஒழித்தனர்.

இதை அறிந்த மாலிக்காபூர் மேலும் படைகளை அனுப்பினான்.

போர் அறநெறியை கடைபிடிக்காத எதிரியின் எல்லாத் தீய செயலையும் ஏற்கனவே பாண்டிய சிற்றரசர்கள் எதிர்பார்த்ததால், பெரியவரும், சிற்றரசர்களும் இரவு நேரத்தில் போர்புரிவதற்கென்றே தனியாக ஒரு படையை அமர்த்திக் கொண்டு வந்திருந்தனர்.

சிற்றரசர்கள் மற்றும் பெரியவர்களுடைய இரவு படைகளும், கரந்தடிப் போர் வீரர்களுடன் சேர்ந்து கொண்டு எதிரிப் படையைத் துவம்சம் செய்ய ஆரம்பத்தனர்…

சீலன், ஒரு பெரிய யானைமேல் விஷம் தடவிய வில் அம்புகளோடும், ஈட்டிகளோடும், அமர்ந்து கொண்டும், நின்று கொண்டும் சந்தர்ப்ப வசதிகளுக்கு ஏற்றவாறு மாறிமாறிப் போர் செய்துகொண்டிருந்தான்.

ஒர்புறம் பாண்டிய சிற்றரசர்களின் படைகள் கொஞ்சம்கூடச் சோர்வு இல்லாமல் மிகவும் ஆக்ரோசமாகப் போர்புரிய, மறுபுறம் எங்கிருந்துதான் ஆயுதங்கள் வந்து நம்மைத் தாக்குகின்றன என்பது கூட அறியமுடியாமல் அதிரவைத்த கரந்தடிப் போர் வீரர்கள் என எதிரிவீரர்களைச் சிதறடித்தனர்... அதை எதிர்பாராத எதிரிப்படைகள் பின்வாங்கினர்.

சீலன் ஒவ்வொரு குழுவுடனும் நின்று போர்புரிந்தான்…

தங்களின் ஆயுதங்கள் வரும் பகுதியை அறிந்து தன் வீரர்களைத் தாக்க வந்த ஆயுதங்களையும் பகைநாட்டு வீரர்களையும். வீழ்த்தினான்.

கரந்தடிப் போர் வீரர்களின் அம்பு, வேல் செலுத்தும் பகுதியை அறிந்து பகைநாட்டு வீரர்கள் வருவதைப் பார்த்த சீலன்,

வளரியை, வளைவான மரங்கள், கோட்டைச்சுவரின் வளைவான பகுதிகளில் செலுத்த, வளரி வளைவான பகுதியில் பட்டு, சரியாக அதற்கு எதிரில் இருந்த பகைநாட்டு வீரனைத் தாக்கிவிட்டு சீலனின் கைகளுக்கே திரும்பியது. அதைப் பார்த்த மற்ற வீரர்களும் இந்த முறையைப் பின்பற்றினர்...

எதிரி நாட்டு படையைக் குழப்பி விடுவதையே, சீலன் முதல் ஆயுதமாக எடுத்தான்.

மீண்டும் பாண்டியர்களுடன் தாக்குப்பிடிக்க முடியாமல் பகைநாட்டு வீரர்கள், கோட்டைக்குள் சென்று விட்டனர்.
இரவு முழுவதும் போர் புரிந்ததால் பாண்டிய வீரர்கள் களைப்படைந்து இருப்பார்கள் என்று எண்ணி அடுத்த நாள் காலை மாலிக்காபூர் ஒரு படையைத் திரட்டிக்கொண்டு கோட்டை வாசலுக்குச் செல்ல, அவன் வருகைக்காகத் தினவெடுத்த தோள்களுடன் பாண்டிய வீரர்கள் காத்திருந்தனர்.

படைவீரர்கள் சந்தித்த உடனேயே எதிர்பார்த்ததைக் காட்டிலும் விரைவாகப் போர் தொடங்கி விட்டது. மீண்டும் படு பயங்கரமாக மோதிக்கொண்டன இருதரப்பு படைகளும்… இரண்டு பக்கத்திலும் வீரர்கள் நிறைகுறை சொல்ல முடியாதபடி ஈடுபட்டுப் போர் செய்தனர். காலாட்படையினர், யானைப்படையினர், குதிரைப் படையினர் என்றும் தனித்தனியே பிரிந்து நின்று போரிட்டனர். ஆரவாரம் செய்யும் அலைகடல் போலப் போர்க்களமே பயங்கரமான ஒலிகளால் நிறைந்து வழிந்தது.

கரந்தடிப் போரிலிருந்த ஒவ்வொரு வீரனும் தன்னைத்தானே சேனை தலைவனாக நினைத்துக்கொண்டு உயிரையும் துச்சமென மதித்துத் தன் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தினான்.

மாலிக்காபூர் வீரர்கள், அறம்தவறி செய்த அனைத்து செயல்களையுமே தவிடுப்பொடியாக்கினர் கரந்தடிப் போர் வீரர்கள்…

மறைந்திருந்து தாக்கும் கரந்தடிப் போர் முறையை விரும்பாமல் வந்த வீரர்களும், சீலனின் அற்புதமான இத்திட்டத்தை எண்ணி வியந்தனர்.

இவ்வாறுதான் போர் புரியப் போகிறோம்... இவ்வாறுதான் மறைந்திருந்து தாக்கப் போகிறோம்… எந்தெந்தப் படை எப்படி வரும்? அதை எவ்வாறு நிர்மூலமாக்குவது... அறவழியில் போர்புரியும் பாண்டிய சிற்றரசர்களையும், அவர்களது படைகளையும், எதிரியின் நயவஞ்சகத்தால் நெருங்க முடியாத அளவுக்கு எவ்வாறு காப்பது என்பதையும் முன்னரே திட்டமிட்டு செயலாற்றி, பயிற்சி அளித்த சீலனை ஒவ்வொரு வீரனும் மனமாறப் பாராட்டினர்…

சூறாவளியாகப் பறந்து, பறந்து எல்லாதிசைகளிலுமே நின்று போர்புரிந்த சீலனின் வேகத்தைக் கண்டு தாங்களும் வெறியுடன் போரிட்டனர்.

எப்பேர்ப்பட்ட தலைமையின் கீழ், தாம், போர் புரிகிறோம் என்று கர்வம் கொண்டனர்…

வீரமும், ஆணையிடாமலே எந்தச் சந்தர்ப்பத்தில் எப்படித் தாக்குவது என்பதைத் தன் செயல்களினாலேயே விளக்கிய விவேகமும், துணிச்சலும் நிறைந்த ஒரு தலைசிறந்த வீரனாகிய சீலனிடம், போர்ப்பயிற்சி பெற்றதில் ஒவ்வொரு கரந்தடிப் போர் வீரனும் பெருமை கொண்டான்…

போர்க்களத்தில் குருதி பெருகி ஓடியது. உடல்கள், யானைகள், குதிரைகள் சிலபல பிண்டங்களாகக் கோரமாய் வெட்டுண்டு வீழ்த்தப்பட்டன. நேரம் ஆக ஆகப் போர் வெறி மூண்ட நிலையில், இரண்டு படைகளும் மிக நெருங்கி நின்று தாக்கிக் கொள்ளத் தலைப்பட்டன. போரின் வேகம் உச்சநிலையை அடைந்திருந்தது.

'இன்னும் சிறிது நேரம் போர் புரிந்தால், எஞ்சியிருக்கும் வீரர்களையும் இழந்து விடுவோம்' என்று எண்ணிய மாலிக்காபூர், தனது படைகளுடன் கோட்டைக்குள் சென்று கோட்டைக் கதவுகளை மூடினான்.

விரைந்து அமைச்சரவையைக் கூட்டி, பாண்டிய தேசத்தை ஆள ஒரு கவர்னரை நியமித்து விட்டுத் தில்லி செல்ல ஆயத்தம் ஆனான் மாலிக்காபூர்

இங்கு நடக்கும் விஷயங்களை எல்லாம் சுல்தானிடம் கூறி, மேலும் படைகளைப் பெற்று வருவதற்கும், ஆலோசனை பெறுவதற்கும், மாலிக்காபூர் மாறுவேடத்தில் தில்லியை நோக்கிப் பயணமானான்.

வார்த்தைகளின் எண்ணிக்கை-1721

சிவதாசனின் கர்ஜனை தொடரும்…
⚔️⚔️⚔️⚔️⚔️⚔️
 
Status
Not open for further replies.
Top Bottom