Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL செப்பனிடா சொப்பனமே! - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

Viba visha

New member
Vannangal Writer
Messages
13
Reaction score
4
Points
3
செப்பனிடா சொப்பனமே..​



அத்தியாயம் - 1

வெளிறிப்போன வானம். சுட்டெரிக்கும் சூரியனும் இல்லை, தகதகக்கும் நிலவொளியும் இல்லை.

வானெங்கும் சுற்றி த்திரியும் பல்லாயிரம் செயற்கைக் கோள்களில் ஒன்றாய்.. இங்குப் பூமிக்குச் செயற்கைத் துணைக்கோள். ஆம்.. இந்த முழு உலகிற்கும் ஒட்டுமொத்தமாய் இரண்டாம் நிலவு. செயற்கை நிலவு ஒன்றும் ஒளிப் பாய்ச்சி கொண்டிருந்தது.

ஒட்டுமொத்தச் சூரிய சக்தியும் ஒரு புறம் தனியாக உறிஞ்சப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, இங்கு எஞ்சியிருக்கும் மிச்ச சொச்ச உயிர்களுக்காக இந்த நிலவொளியாவது இருபத்து நாலு மணி நேரமும், வருடத்தின் அனைத்து நாட்களிலும் வியாபித்திருக்க வேண்டாமா? அந்த ஒரு சிறு கரிசனத்துக்காகத் தான் இந்தச் செயற்கை நிலவு.

அந்தக் குளிர் நிலவினைப் போலவே எங்கெங்கும் பறந்து விரிந்திருக்கும் மெல்லிய பனி போர்த்திய புல் தரை.

ஆளரவமற்ற பிரதேசங்கள். சுற்றிலும் ஒரே அமைதி. அவ்வப்பொழுது காற்று வீசுவதும், அங்கிருந்த சிற்சில மரங்களும், தாவரங்களும், அந்தக் காற்றின் இசைவுக்கு ஏற்ப அசைவதும், கடலும், புனலும் மெல்லிய அலை எழுப்புவதுமான ஓசையும்.. அந்த ஓசையில் சோர்ந்துப் போய் இருந்த சிறுசிறு விலங்கினங்களுமாக இருந்தது அன்றைய புவி.

ஆம்.. அன்றைய புவி தான் அது. ஏறத்தாழ 2195ம் ஆண்டு அது என்று அப்பொழுதையக் கணக்கீடுகள் கூறின.

ஆனால் இப்படி மேலே விவரிக்கப்பட்ட பகுதிக்கு நேரெதிராகப் புவியின் மற்றொரு பகுதி இருந்தது.

அங்கும் முழுக்க முழுக்கப் பனி படர்ந்து வெண் பஞ்சு ஆடைத் தரித்தே காணப்பட்டாள் புவியரசி. ஆனால் கூடவே சிறு வேறுபாடாக, இந்த மற்றொரு பகுதியில் முழுக்க முழுக்கப் பல மிதக்கும் கட்டிடங்கள்.. அதவாது காற்றுக் குமிழ்கள் போன்ற கட்டிடங்கள் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தன.

பெரிய பெரிய அடுக்குமாடிகளாய் இல்லாது, ஒவ்வொரு தளமும் தனித்தனிக் குமிழாய், அடுக்கடுக்காய்க் காற்றில் மிதந்துகொண்டிருந்தன. அந்த ஒவ்வொரு மிதக்கும் குமிழும் தனித்தனி வீடுகளாகவோ, அல்லது உற்பத்திக் கூடங்களாகவோ, அப்படியும் அல்லாது கண்காணிப்பு மையங்களாகவோ, இன்னும் சில, சிறைக் கூடுகளாகவோ இருந்தான.

அப்படியான குமிழ்களுக்குள் அங்கும் இங்குமாய் அறக்கப் பறக்க, பறந்துப் பறந்து வேலை செய்து கொண்டிருந்தார்கள் அவர்கள். பறந்து, பறந்து என்றால்.. நிஜமாகவே பறந்துப் பறந்துத் தான்.

காலுடன் இணைக்கப்பட்டிருந்த பறக்கும் மிதவைகள் முலமாக அவர்களால் பறக்க முடிந்தது. தனியாக நின்றுகொண்டோ, அல்லது சொகுசாக அமர்ந்துகொண்டோ, அல்லது கூட்டம், கூட்டமாக மக்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம் பெயர்த்தும் படியாகவோ பல்வேறு வடிவுகளில், அளவுகளில், இயங்கக் கூடியதாய் அந்த மிதக்கும் பலகைகள் இருந்தன. அவை ஹவர் போர்டு போல இருந்தாலும்.. தரையில் பாதம் தோயாது.. காற்றினூடாகப் பயணம் செய்யும்படி இயங்கிக் கொண்டிருந்தன.

இப்படி நிஜமாகவே பறந்துப் பறந்து வேலைச் செய்யும் அவர்கள்.. அவைகள்.. எந்திரங்கள்.

ஆம்.. ஹுமனாய்டு எனப்படும் மனித அறிவும், குணமும் கொண்ட, இப்பொழுது மனித உருவே கொண்ட எந்திரன்கள்.

அப்படிப்பட்ட எந்திரன்கள் புடைச் சூழ அங்கிருந்த ஒரு மிதக்கும் சிறைக் குமிழிலிருந்து வெளியே வந்தாள் அவள்.

அவள் NS030. ஆம். இது தான் அவளுக்கு வழங்கப்பட்டிருக்கும் அடையாள எண்.

இங்கு ஒட்டுமொத்த உலகையே தனது ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்த அந்த எந்திரன்களை எதிர்ப்பவர்களுக்குப் பெயர்கள் கிடையாது.

தாய், தந்தையர் கிடையாது. குறிப்பிட்ட வயது வரும்வரை பெற்றோருடன் இருந்துவிட்டு, அதன் பிறகு தனிமைச் சிறை. அடிப்படை உணவு.. அடிப்படை கல்வியறிவு. அதாவது அந்த ரோபோட்களுக்கு அடிபணியக் கற்றுக்கொடுக்கும் அறிவு.

பிறகு இறுதியாக அவர்கள் மொழியில் இணையேற்பு. அதாவது மனிதர்களின் மொழியில் திருமணம்.

அந்தத் திருமண முடிவின் பொழுது, இணையர்கள் இருவரும் எந்திரன்களை எஜமானர்களாய் ஏற்றால் நல்லதொரு வேலை, விரும்பிய படிப்பு, தனி வீடு, வேண்டிய வசதிகள்.. மிக முக்கியமாக அடையாள எண்களுக்கு மாற்றமாய்த் தனிப் பெயர்கள் என இத்தனை வசதிகள் செய்து தரப்படும்.

ஆனால், அப்படி அல்லாது, எந்திரன்களை எதிர்த்தால்.. ஆயுள் சிறை. உயிர்வாழ மருந்து. பிறக்கும் குழந்தையைக் கூடத் தியாகிக்கும் நிலை.

இப்படித் தான் நாயகியையும், அவள் பெற்றோர் தியாகம் செய்திருந்தனர்.

இப்பொழுது இது இவள் முறை. ஏனென்றால், அந்த ஹுமனாய்டு ரோபோட்கள் இவளது இணையைத் தேர்வு செய்துவிட்டிருந்தன.

அதை இவள் ஏற்றேயாக வேண்டும். அவர்களது கட்டளைக்கு மறுப்புக் கூற, இவளுக்கு ப்ரோக்ராம் செய்யப்படவில்லை என்பது அந்த ரோபோட்களின் எண்ணம்.

ஆனால், தாயமுதுடன் கூடவே, மனிதர்களின் முற்காலத்தையும், அது இப்படியாய் இழிந்து போனதைப் பற்றியும்.. கோபமும், ஆதங்கமுமாய்க் கொட்டி கொட்டித் தானே அவளை வளர்த்தாள் அவளது அன்னை.

அன்னையுடன் கழித்த அந்த ஐந்தாண்டுகள் இப்பொழுதும் கூட மனக்கண்ணில் மிக விஸ்தாரமாக விரிந்தது. நெஞ்சோரம் ஓவென்று குமுறும் ஏக்க எண்ணவோட்டங்களும் தொண்டையை அடைத்தன. ஆனாலும் அதன் பிறகான இந்த இருபது ஆண்டுகாலத் தனிமைச் சிறையில் அவள் உள்ளத்துள் உருவேற்றிக் கொண்ட அத்தனை அத்தனை விஷயங்களும் அவளைப் பாறாங்கல்லாய் இறுகிப்போக வைத்திருந்தன.

இதையெல்லாம் அவள் அசைபோட்டுக் கொண்டிருக்கையில் அந்த இணையேற்பு நிகழ்வு நடக்கும் குமிழுக்குள் நுழைந்தாள் அவள்.

சுற்றிலும் பல மனிதர்கள். எல்லாரும் அவள் வயதை ஒத்த ஆண்கள் மற்றும் பெண்கள் தான். இவள் இங்கு வந்திருக்கும் காரணமாகத் தான் அவர்களும் இங்கே வந்திருக்கிறார்கள்.

இதில் அவளுக்கு ஏற்ற இணையாக யாரைக் கோர்த்துவிடும்களோ இந்த மெட்டல் மண்டையன்கள் என்று கேலியாக எண்ணிக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது அந்த இணையேற்பு நிகழ்வை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த திருவாளர் தலைமை ரோபோட்., அவருக்கெல்லாம் திவ்யமாய்ப் பெயரிருக்கிறது தான்.. மரியாதைக்குரிய மிஸ்டர். கெவின்.

அவர், இவளைப் பார்த்து நக்கலுடன் சிரித்தார். முழுக்க முழுக்க மனிதர்களைப் போலவே.. தலை முடித் தொட்டு, கால் விரல் நக நுனி வரை அனைத்தும் மனிதனைப் போலவே. கொஞ்சம் ஊன்றிக் கவனித்தால் தான் சாதாரணமாய் இந்த ரோபோட்களுக்கும், மனிதர்களுக்கும் வித்தியாசம் காண இயலும்.

ஆனால், இந்தக் குமிழுக்குள் இருப்பவர்கள் அனைவரும் இது நாள் வரையில் தனிமைச் சிறையில் இருந்து இப்பொழுதுத் தான் வெளி உலகத்தையே பார்ப்பதால் மருண்டு விழித்துக் கொண்டிருப்பதனாலும், அதையும் விட மனிதர்களுக்கு மேலாக, அந்த ரோபோட்கள் மனிதனைத் தனியே அடையாளம் கண்டு விடும் திறமைப் பெற்றிருப்பதாலும் அவ்வளவாகக் குழப்பம் வருவதில்லை.

அதிலும் இவளைத் தெரியாத ரோபோட்களே இல்லை எனலாம்.

ஏனெனெறால் இவளது பூர்வீகம் அப்படியானது. இந்த ரோபோட்களின் இப்படியான மகோன்னத மேன்மை நிலைக்குக் காரணமே இவளது மூதாதையரான ஓர் பெண்மணி தான்.

இன்னமும் சொல்லப் போனால் இவளது கொல்லுப்பாட்டியின் அதி புத்திசாலித் தனமான அறிவினைக் கொண்டே இந்த ரோபோட்களுக்கெல்லாம் தலைமை ராணித் தேனியாக விளங்கும் அவள் - சோபியா உருவாக்கப்பட்டாள்.

அதனால் இவளைப் பற்றி இவளுக்கே தெரியாத விசங்களெல்லாம் அந்த ரோபோட்களுக்குத் தெரியும். அதிலும் இந்தக் கெவின்.. இன்னும் அறிவார்ந்தவன். நக்கல் பிடித்தவன்.

இவளைக் கண்டதும், தனது ஆசனத்திலிருந்து எழுந்து மிகுந்த பயபக்தி உடையவனைப் போல, இடைவரைக் குனிந்து.. "இளவரசியாருக்கு எனது வந்தனங்கள்.." என்று எந்திரக் குரலில் நக்கல் கலந்து கூறினான்.

அவனது இந்தச் செய்கையைக் கண்ட மற்ற ரோபோட்களும் அவளைப் பார்த்து ஒரு நக்கல் சிரிப்புச் சிரித்துக் கொண்டு தங்களுக்குள் பேசிக் கொண்டன.

அதையெல்லாம் கண்டு இவள் முறைத்துக் கொண்டிருக்க, அந்தக் கெவின் மேலும் தொடர்ந்தான்.

"என்ன இளவரசியாரே.. பதிலே சொல்லல?

ஹ்ம்ம்.. நீங்க எப்படிப் பதில் சொல்லுவீங்க? நீங்க தான் எங்களுக்கே உயிர் கொடுத்த.. அதாவது மனிதனைப் போலச் சிந்திக்கற ரோபோட்களை உருவாக்கின வம்சத்தைச் சேர்ந்தவங்களாச்சே.. எங்க கூடவெல்லாம் பேசினா, உங்க மரியாதை என்னாகிறது?

ஹ்ம்ம்.. ஆனாலும் இப்படிப் பரம்பரைப் பரம்பரையா அந்த டயரியை.. அதான் உங்க கொல்லுப் பாட்டியோட டயரியை எதுக்காகப் பத்திரமாப் பாதுகாக்கறீங்கன்னுத் தெரில.

அதுல உன் பாட்டியோட கனவு மட்டும் தானே இருக்கு.. அந்தக் கனவே இப்போ இங்க நினைவாப் பளிச்சுடுச்சுல்ல? அப்பறம் எதுக்கு அது?" என்று அப்படியே மனிதனைப் போலப் பிறரை காயப்படுத்தி அதில் சுகம் காணும் வெறியுடன் கேட்டுக்கொண்டே எழுந்து வந்தவன், அப்பொழுதும் கூடச் சற்றுத் தன்னோட அணைத்தவாறே பிடித்திருந்த அந்தச் சிறு டயரியை அவளது கரத்திலிருந்து பிடுங்க எத்தனிதத்தான்.

ஆனால் இவள் மறுப்புடன் முகம் திரும்பி நின்று கொள்ள, ஒரு கணம் அவளையே பார்த்த அந்தக் கெவின், இன்னமும் விரிந்த நக்கல் சிரிப்புடன்.. "நீ எந்தப் பரம்பரையச் சேர்ந்தவளா இருந்தாலும்.. இப்போ எங்களோட அடிமை தான். போ.. போய் வரிசையில நில்லு." என்று கர்ஜித்து விட்டு மீண்டும் அவனது இடத்திற்குச் சென்று அமர்ந்து விட்டான்.

அனைத்தையும் தலை குனிந்துக் கடுப்புட ஏற்றிருந்த அவள், சோர்வுடன் நடந்து போய் வரிசையின் இறுதியில் நின்றுகொண்டாள்.

அவளுக்கு முன்பாக நிறையப் பேர் இருந்ததால், அன்று அந்தி சாயும் பொழுதில் தான் அவள் அழைக்கப்பட்டாள்.

"NS030" என்று அவள் அழைக்கப்படவுமே, சுரத்தின்றி, அதே தரையில் பதித்த பார்வையுடன் சென்று முன்னே நின்றாள்.

பிறகு, "BK230" என்று அழைக்கப்பட்டதும், திடகாத்திரமான ஒருவன் வந்து முன்னே நின்றான்.

அவனை ஏற இறங்கப் பார்த்த அந்தக் கெவின்.. "உன்னோட DNA டீடெயில்ஸ் எதுவும் எங்கக் கிட்ட இல்லையே?" என்று கேட்டான்.

அதற்கு அவன் பதில் கூறும் முன்பாக.. அருகிருந்த மற்றொரு ரோபோட்.. "அந்த வைரஸ் பிரச்சனையால நம்ம டேட்டா அழிஞ்சுதுல்ல? அந்தச் சமயத்துல இவனதும் அழிஞ்சுடுச்சு" என்று கூறியது.

அந்த மற்றொரு ரோபோட் அப்படிக் கூறியதும், இங்குக் கெவினுக்கு அப்படியொரு கோபம்.

"முட்டாள்.. உன்னோட சிஸ்டம்ல ஏதாவது பிரச்சனையா? எதையெல்லாம் எங்கெங்கே பேசலாம்னுத் தெரியாதா?" என்று எரிந்து விழுந்தான்.

இந்த மற்றோரு ரோபாட்டும்.. "நான் சம்மந்தப்பட்டவர்களோட விவரம் தானே சொன்னேன்? இதுல ரகசியம் காக்கணும்னு எதுவும் இல்லையே?' என்று அப்பாவியாய்க் கேட்டது.

அந்தச் சில வருடப் பழைய ரோபோட்டின் அறிவை எண்ணிச் சலிப்படைந்த கெவின்.. "எதுக்கும் நீ மெய்ன் சிஸ்டத்துக்குப் போ.. நான் அங்க இருக்கக் கெர்ட்டி கிட்டப் பேசறேன்." என்று கூறிவிட்டு ஒரு நானோ செகண்டுக்கும் குறைவான நேரத்தில் அந்த மற்றொரு ரோபோட்டின் செயல் திறன் பற்றிய தகவலை கெர்ட்டிக்கு அனுப்பியது.

அந்தக் கெர்ட்டி தான் இந்த அனைத்து ரோபோட்டைகளின் தலைமை நிலையத்தைக் கண்காணிப்பதும், ஒருங்கிணைப்பதும், மற்றும் பிரச்னைகளைக் களைவதும்.

அதற்கு மேலாக அந்த அனைத்து ரிப்போட்டுகளையும் அவர்களது மரியாதைக்குரிய தலைவி சோபியாவிடம் ஒப்படைப்பதும்.

இந்தப் பேச்சு வார்த்தையெல்லாம் காதில் விழுந்தாலு, விழுந்தாலும் மூளையை அடையாதபடி.. இங்கு இதில் எதிலேயும் சுரத்தில்லாதபடி நின்றிருந்தனர் நாயகியும், அவளுக்கு இணையனான நாயகன் - BK230ம்.

"ஹ்ம்ம்.. இனி நீங்க ரெண்டுப் பேரும் தான் இணை. சரியா? சரியான்னு என்ன கேள்வி..

NS030ம், BK230ம் இனி இணைகள்" என்று கூறிக்கொண்டே அதைத் தன்னிடமிருந்த சிறு டேபில் குறித்துக் கொண்டான் கெவின்.

பேருக்குக் கூட நிமிரவில்லை அவள். கிட்டத்தட்ட நாயகனுக்கும் அந்த நிலையே..

இருவரின் முகத்தையும் நோக்கிய கெவின்.. "உங்க ரெண்டுப் பேரையும் பார்த்தாலே எனக்குப் புரியுது. ஆனாலும் கேட்க வேண்டியது என்னோட கடமை. அதனால.. நீங்க ரெண்டுப் பேரும் மேடம்.சோபியாவை தலைமையா ஏத்துக்கறீங்களா?" என்று மிகவும் தீவிரமான முகபாவத்துடன் கேட்டான்.

அதற்கு அவள் மறுப்பாய்த் தலையசைத்து வைக்க.. அந்த அவனோ.. "முடியவே முடியாது" என்று கர்ஜித்தான்.

அந்தக் குரலில் இருந்த வெறுப்பையும், கோபத்தையும் உணர்ந்து மெய் சிலிர்க்க அப்பொழுதுத் தான் அவனைத் திரும்பியே பார்த்தாள் அவள்.

சிவந்த விழிகள் கோபத்தைக் கக்க, நிமிர்ந்தத் தலையுடன், திண்ணிய நெஞ்சுடன் நின்றிருந்தான் அவன்.

ஆனால் இந்தக் கோபமெல்லாம் கெவினுக்குப் பழக்கம் தானோ என்னவோ.. "ஹ்ம்ம்.. இந்த வீராப்பெல்லாம் எத்தனை நாளுக்குன்னு எனக்குத் தெரியும் மிஸ்டர்.BK230.." என்றான்.

பிறகு.. "சரி எதிர்பார்த்த முடிவுத் தான். அப்போ, இங்க வாங்க.." என்று தன் முன்னே நின்றிருந்தவர்களுக்குப் பின்னால் எட்டிப் பார்க்க, அவர்களுக்குப் பின்னால் நின்றிருந்த இரண்டு ரோபோட்களும் இவர்களை அந்தக் குமிழை விட்டு வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றன.

இது போல அரசாங்க அலுவல்கள் நடைபெறும் இடத்திற்கு வெகுதூரத்திற்கு வெகுதூரம், பற்பலக் குமிழ்கள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதியபடிக் கசகசவென இருந்தன.

அதில் பலத்த இடைஞ்சல்களுக்கு இடையே இருந்த ஒரு குமிழுக்குள் இருவரையும் தள்ளிய அந்த இரண்டு ரோபோட்களும்.. "ஹ்ம்ம்.. இன்னும் கொஞ்ச வருஷத்துக்குச் சொர்க்கப் போகம் தான்.. துணைக்கு மனுஷங்க.. இருக்க இவ்வளவு வசதியா ஒரு தனி வீடு.. ஹ்ம்ம்.. இதுல எங்கத் தலைமையை ஏத்திருந்தா இன்னும் நல்ல வாழ்க்கையே கிடைச்சுருக்கும்.

சீக்கிரம் மனசு மாறுங்க. இல்லைனா.. உங்களுக்குப் பிறக்கப் போற குழந்தை.. உங்களுக்கு இல்ல." என்று எச்சரித்துவிட்டுச் சென்றன அவை.

நிலாப் பொழியும் இரவா, அல்லது கதிரொளி படரும் பகலா என்று எதுவும் புரியாத, விண்வெளியின் மாய வலைக்குள்.. அந்தகார இருளில் இத்தனை நாட்களாய்த் தொலைந்து கிடந்தவர்கள், இதோ இன்று இரவென்றும், பகலென்றும் புரிகின்ற ஏதோ ஒரு இடத்திற்கு மாற்றப்பட்டிருந்தார்கள்.

இருவருக்கும் இருக்கும் தனியறையில்.. அவர்களுக்கு வழங்கப்பட்டதே அந்த ஒரு அறைதானே? அதில் இருவரும் இருக்கும் முதல் நாள் இன்று. ஆனாலும் இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

ஆளுக்கொரு மூலையில் தனித்தனியாய் அமர்ந்துத் தத்தமதுச் சிந்தைக்குள்ளேயே மூழ்கியிருந்தனர். முத்தெடுக்க முயன்றிருந்தனர்.

அடிமைகளுக்கான ஒற்றை அறை அது. இதுவரைக்கும் பேச ஆளற்றுத் தனித்தே இருந்தவர்களுக்கு இப்பொழுது இணையாய், துணையாய் மற்றொருவர். இருந்தாலும்.. ஆனந்திக்க இயலவில்லை.

அவளுக்கு எப்பொழுதும்.. இப்பொழுதும் உற்றத் துணையாய் அவளது கொல்லுப் பாட்டியின் அந்த நாட்குறிப்பு மட்டுமே. காலமெல்லாம் கட்டுண்டு கடுஞ்சிறையில் கழிக்கவேண்டிய நாட்களில் இதோ இப்பொழுது சில காலங்கள் மட்டுமே.. கடலில் மூழ்குபவன், நீர்மட்டத்திற்கு மேலே, தலையை நாசி வரையில் மட்டுமே நீட்டி மூச்செடுப்பது போலச் சற்றே சற்றான ஆசுவாசம். அந்த ஆசுவாசத்தைக் கூட அனுபவியாமல்.. கையாலகாத் தனத்துடன், கடலில் மூழ்கிடவே விழைகிறது அவள் மனம்.

ஆனால் இப்படியே எத்தனை காலங்கள் கழிப்பது? நாட்கள் வாரங்களாகி.. வாரங்கள் மாதங்களாகி.. அதிலும் மூன்று திங்கள் கழிந்திருந்தது.

இன்று எப்படியாவது அவளிடம் பேசிவிடவேண்டும் என்று உறுதியோடு எண்ணியிருந்தான் அவன்.

அப்பொழுதுத் தான் உறங்கி எழுந்தாள் அவள். அவள் எழுந்ததைக் கண்டு.."ஹ்ம்ம்.." என்று தொண்டையைச் செருமினான்.

அதற்கு அவள் சிறு புருவச் சுளிப்புடன் அவனை நிமிந்துப் பார்க்க.. "நாம கொஞ்சம் பேசணும்.." என்றான் நேரடியாக விசயத்திற்கு வந்தபடி.

அவளோ இன்னமும் புருவச் சுளிப்பை மாற்றவில்லை தான். இருந்தாலும் பார்வையை விலக்காது.. அங்கிருந்து எழுந்துச் செல்லாது அவனையே பார்த்தபடி இருந்தாள்.

அதுவே அவனைப் பேச ஊக்கம் கொடுக்கப் போதுமானதாய் இருந்தது.

எனவே மீண்டும்.. "ஹ்ம்க்கும்.." என்று தொண்டையைச் செருமிச் சீர் செய்து கொண்டவன்..

"நீ.. உனக்கு இதெல்லாம் பிடிக்கலைன்னுத் தெரியுது. எனக்கும் கிட்டத்தட்ட அப்படித் தான்.

ஆனா.. யோசிச்சுப் பாரு.. நமக்கு முன்னாடியும் பலகாலம் மக்கள் இப்படித் தான் அடிமையா வாழ்ந்துட்டு இருந்தாங்க. இப்பயும் வாழ்ந்துட்டு இருக்காங்க.

இதுல நாம் புதுசா எத மாத்திட முடியும்னு நினைக்கற?" என்று அவன் கேட்கவும்.. இப்பொழுது அவளது புருவச்சுளிப்பு கோப முறைப்பாய் மாறியது.

உடனே அவனும்.. "இது உன்ன கோபப்படுத்தறதுக்காகவோ.. இல்ல நீ என் பேச்சைக் கேட்டு நடக்கணும்ன்றதுக்காகவோ நான் கேட்கல. நம்ம ரெண்டு பேரும் தான் இனி இணைகளா இருக்கப் போறோம்ன்றதால.." என்று அவன் கூறி முடிக்கவும், அவனுக்கு எதிரில் இருந்தவள் சீறினாள்.

"இணையா? உனக்கு எவ்வளோ தைரியம் இருந்தா என்ன உன்னோட இணைன்னு சொல்லுவா? இந்தப் பந்தத்தோட உண்மையான பொருள் என்னனுத் தெரியுமா? இதுக்குப் பேர்.. புனிதமான திருமணம்.

அப்படினா ரெண்டு மனங்கள் இணையறது. இப்படி நீயும் நானும் இணைஞ்சா, இனொருத்தங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடைக்கும்படியா ஒரு உயிர் பிறக்கும்னு கணக்குப் போட்டு உருவாகிற பந்தம் இல்ல இது.

அதுக்கும் மேல.. நாம.. மனித இனம் எப்படி இருந்தோம்னு தெரியுமா? இதோ என் கையில் இருக்கறது என்னன்னு உனக்குத் தெரியுமா? கிட்டத்தட்ட இருநூறு வருஷங்களுக்கு முன்னாடி.. சுதந்திரமா இருந்த மனுஷி ஒருத்தியோட கனவு.

இதோ.. நம்மளையே இப்படி ஆட்டிப் படிச்சுட்டு இருக்கே ஒரு ஹுமனாய்டு.. அதி புத்திசாலி ஹுமனாய்டு.. அத வடிவமைச்சவளோட கனவு.

அவளோட கனவு பளிச்சுதுத் தான்.

அப்படியோர் அற்புதச் சொப்பன லோகமா இந்தப் பூமி இருந்துச்சுத் தான். அதுக்கு நாம தான், அதாவது மனுஷங்க தான் தலைமையா இருந்தோம்.

ஆனா.. கா
லப்போக்கில் அந்தச் சொப்பனம் சிதைஞ்சு.. சின்னாபின்னமாகி.. இதோ இப்போ செப்பனிடாத சொப்பனமாகிடுச்சு." என்று கூறிவிட்டு அதுவரை மனதிற்குள் அழுத்தி வைத்துக்கொண்டிருந்த ஆத்திரமெல்லாம், தன்னைப் போன்ற ஒரு சக மனிதனைப் பார்த்ததும் ஆற்றாமையின் வெளிப்பாடாக, அழுகையாகக் கொட்டியது அவளுக்கு.

உங்களோட கருத்துக்கள் தான் என் எழுத்தை மேலும் சுவாரஷ்யப் படுத்தும்..

கருத்துத் திரி :

 

Viba visha

New member
Vannangal Writer
Messages
13
Reaction score
4
Points
3
அத்தியாயம் - 2

அத்தனை அத்தனை வருடங்களாக உள்ளுக்குள் அவள் குமைந்து கொண்டிருந்தது, அவள் தாயாரின் மன வேதனைகளையும் சேர்த்தே சுமந்து கொண்டிருந்தது எல்லாம்.. பெருக்கு நாளில் ஊற்றெடுக்கும் வெள்ளமாய், உடைத்துக் கொண்டு ஒட்டு மொத்தமாய்க் கரையைக் கடக்க, அவளைச் சமாதானப்படுத்த தோன்றினாலும், அவளது மனத்திலிருப்பவை எல்லாம் முற்றும் முழுதாக வெளிவரட்டும் என்று எண்ணி.. எதுவும் பேசாது அமைதியாகவே அவளை வெறித்துக் கொண்டிருந்தான் BK230.

ஆனால், பொங்கிப் பிரவாகமெடுக்கும் வெள்ளத்திற்கு அணையிட்டது போல, சட்டென ஒரு கட்டத்தில் தன்னை நிறுத்திக் கொண்டவளோ.. "இங்க பாரு எனக்கு ஏதோ ஒரு இணை கிடைச்சுடுச்சுன்னு உன்கூட வாழ்ந்து குழந்தைப் பெத்துக்கறதுல எந்த இஷ்டமும் இல்ல.

நான் என் பெத்தவங்களைப் பிரிஞ்சு வாழற மாதிரி, என் குழந்தையும் என்ன பிரிஞ்சு வாழறத நான் விரும்பல. ஏன்னா, என்னோட சந்தோஷத்துக்காக ஒரு உயிரை உருவாக்கி, அதையும்.. இந்த உலகத்துல உருவாக்கி.. அதை அப்பா, அம்மான்னு உறவுகள் இல்லாமக் கஷ்டப்படுத்த எனக்கு இஷ்டம் இல்ல.
உலகமா இது? ச்சே.. என் அம்மா சொல்லியிருக்காங்க... இந்தப் பூமியைப் பற்றி. முன்னொரு காலத்துல இருந்த மனுஷங்கப் பற்றியெல்லாம்..

அப்போ எல்லாம் இந்தப் பூமி இப்படி முழுக்க முழுக்கப் பனிச் சூழ்ப் பிரதேசமா இல்லாம, சூரிய வெளிச்சத்துலயும், இதமான வெப்பத்துலையும் நிறைஞ்சு இருந்துச்சாம்.

செடி, கொடிகள்னு எல்லாம் இயற்கையாவே உருவாச்சாம். அப்போ இருந்த மக்களுக்கெல்லாம் இப்படி உயிர் இப்போ வாழ நாம சாப்பிடற மாதிரியான எந்த மருந்தும் தேவைப்படல. அவங்க உணவுத் தேவைக்குக் காய்கறி, அது இதுன்னு நிறைய விஷயங்கள் பூமியிலையே விளைஞ்சுதாம். எல்லாத்துக்கும் சூரியன் தான்.. அந்தச் சூரியனோட வெளிச்சம் தான் காரணமா இருந்துச்சாம்.

ஆனா இப்போ.. இந்தப் பூமிக்கு வர சூரிய சக்தியை எல்லாம் மொத்தமா உறுஞ்சி ஆற்றலா மாற்றி.. அந்த ரோபோட்ஸ் அத்தூண்களுக்குத் தேவையான சக்தியா உருமாற்றிட்டு இருக்காங்க.

அதனால பூமியோட துணைக்கோளான நிலவும் அதோட சமநிலை இழந்து.. இயக்கத்தை நிறுத்தி, வெடித்துச் சிதறி.. இப்போ பூமியோட தட்பவெப்பச் சமநிலைக்காகச் செயற்கை நிலவை உருவாக்கி.. ச்சே.. எல்லாமே செயற்கையா மாறிட்ட இந்த உலகத்துல நான் பிறந்ததே எனக்குப் பிடிக்கல.

நல்லவேளை இவங்க சூரியனையும் மொத்தமா அழிக்கல. பூமியை நோக்கி வர சூரிய ஒளியை மட்டும் தான் உறிஞ்சறங்க. அதனால சூரியன் வழக்கம் போல இயங்கிட்டு இருக்கு. இல்லைனா என்னைக்கோ இந்தப் பூமியும் வெடிச்சுச் சிதறியிருக்கும். இதையெல்லாம் மனசுல வச்சுட்டுத் தான் இப்படிச் செயற்கை நிலவுன்ற ஒரு விஷயத்தையே உருவாக்கியிருக்காங்க.

இதுல இன்னொரு உயிரையும் என் மூலமா இங்க கொண்டுவர நிச்சயமா நான் சம்மதிக்க மாட்டேன்.

ஆறறிவு இல்லாத ஜந்துக்கள் மாதிரி, சந்ததியை உருவாக்கறதுக்கு மட்டுமே ஆண், பெண் இணைங்கறது எனக்கு ரொம்ப அருவருப்பா இருக்கு" என்று கூறி முகம் திருப்பினாள் அவள்.

இதைக்கேட்டு அவனுக்கும் கோபம் கட்டிலடங்காது வந்தது. சட்டெனத் தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து வேகமாக எழுந்து வந்தவன்.. "என்ன சொன்ன, சந்ததியை உருவாக்கறதுக்காக மட்டுமே நான் உன்ன ஏத்துக்கிட்டதாவா?

நல்லாப் புரிஞ்சுக்கோ மா.. இங்க உனக்கோ, எனக்கோ.. யாரையும், எதையும், தேர்ந்தெடுக்கற உரிமைன்னு எதுவும் இல்ல. அப்படி உரிமை இல்லாம, பார்த்ததும் காதல் செய்யற மூடுலயும் நான் சத்தியமா இல்ல. போதுமா?" என்று சாட்டையாய் வார்த்தைகளை விளாசியவன், சட்டெனத் தணிந்து..

அதுமட்டுமில்லாம, நான் உன்னோட எதிரி இல்ல. உனக்கு இந்த ரோபோட்ஸ் மேல இருக்க வெறுப்பு, ஏன் என் மேலையும் திரும்புதுன்னு எனக்குத் தெரியல. நானும் உன்னைப் போலவே இவங்கக் கிட்ட அடிமையா இருக்கற ஒரு சாதாரண ஜந்து தான்.

உனக்கு இருக்கற மாதிரியே தான் எனக்கும் கோபம், வெறி, வருத்தம், அவமானம்னு எல்லாமும் இருக்கு. நாம இருக்கற இந்த நிலைமையில போராட்டம் கூடச் செய்ய முடியாதவங்களா இருக்கோம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில எனக்குச் சக மனுஷியா ஒரு துணை கிடைச்சதுல ரொம்பச் சந்தோசம் தான். என்னோட எண்ணவோட்டங்கள்.. வருத்தங்கள்..வேதனைகள்.. சிந்தனைகள்னு எல்லாத்தையும் பகிர்ந்துக்கற ஒரு உயிர் இருக்குன்னு நினைக்கறப்போ ரொம்பச் சந்தோசமா இருந்துச்சு.

ஆனா, அந்த உயிர் என்ன வெறுக்குது.. என்னையும் தப்பா நினைக்குது.. என்ன கண்டு பயப்படுதுன்னு நினைக்கறப்போ தான் எனக்கு ரொம்பவுமே வருத்தமா இருக்கு. ரொம்ப ரொம்ப வெறுப்பாவும் இருக்கு.

மறுபடியும் ஒரு முறை சொல்றேன்.. இதுவே கடைசி முறையாவும் இருக்கும். நல்லாக் கேட்டுக்கோ.. நான் உன்னோட எதிரி இல்ல. நானும் ரோபோட்ஸ்க்கு கீழ அடிமையா இருக்கறத ரொம்ப ரொம்பவே வெறுக்கறேன். இந்த நிலைமை மாறாதான்னு ஏங்கறேன். இதுக்கு மேலையும் நீ என்ன எதிரியாத் தான் பார்ப்பேன்னா, என்னால இனி எதுவும் செய்ய முடியாது." என்று கோபத்துடன் கூறிவிட்டுத் தான் அமர்ந்திருந்த இடத்திற்கே மீண்டும் சென்றுவிட்டான்.
அதன் பிறகே அவளுள் ஒரு தெளிவான யோசனைப் பிறக்க ஆரம்பித்தது. உண்மையாகச் சொல்லப் போனால், அவன் மீது அவள் கோபப்படுவதற்கான எந்தவிதக் காரணமும் இல்லை தான்.

அதிலும் நியாயமாகக் கூற வேண்டுமென்றால், இப்படிப்பட்ட அறிவார்ந்த ரோபோட்கள் உருவாகக் காரணமே அவளது முன்னோர் என்னும் பொழுது அவனுக்குத் தானே இவள் மீது கோபமும் வெறுப்பும் வந்திருக்க வேண்டும்.

இங்கு இவளானால், அகப்பட்டான் ஒருவன் என்று அவன் மீது காய்ந்தும் கூட, அவன் இவ்வளவு பொறுமையாக இருப்பது இவளுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

அதன் பிறகானச் சமயங்களில் அவள், அவனிடம் இப்படியெல்லாம் எரிந்து விழவில்லை தான். அவனும் நிலைமையைச் சுமூகமாக்க விரும்பியது போலவே அமைதியாக இருக்கவும்.. நாட்களும் சத்தமின்றி, அவர்கள் சம்மதமும் இன்றிக் கடந்தன.

இப்படியான தாமரை இலைமேல் தண்ணீர்ப் போன்று இருவரின் காலமும் கரைய, ஒரே இடத்தில் ஒன்றாக அடைந்து இருப்பதால் அவ்வப்பொழுது ஏதாவது சாதாரணச் சம்பாஷணைகளும் அவர்களுக்குள் பிறக்கவே செய்தது.

அப்படிப்பட்ட தருணத்தில் தான் ஒரு நாள் அவன் கேட்டான்.. "அஞ்சு வயசுல உன் அம்மா உனக்குச் சொன்னதெல்லாம் இந்தளவுக்கு உன் மனசுல பதிஞ்சுடுச்சா?"

என்று அவன் வியக்கவும், அவனைப் பார்த்துச் சன்னமாய்ச் சிரித்து வைத்தாள் அவள்.

"உனக்கு ஒன்னுத் தெரியுமா? ஒரு குழந்தை, பிற்காலத்துல நல்லவனா இருப்பானா, இல்ல கெட்டவனா இருப்பானாங்கற விஷயம் அவனோட அஞ்சு வயசுக்குள்ளையே முடிவாகிடுது.

அந்த வயசுக்குள்ள நடக்கற விஷயங்கள் தான் நம்ம நடத்தையை, குணாதிஸ்யங்களைத் தீர்மானிக்குது. அதே மாதிரித் தான் எனக்கும். எனக்கு அந்த அஞ்சு வயசுல நடந்த விஷயங்கள் தான் இத்தனை வருஷங்களா எனக்குள்ள துடிக்கும் இதயமா, உயிர்ப்போட இருந்துச்சு." என்று அவள் கூறவும், இங்கு இவனுக்குக் கண்கள் கனிந்தன.

அப்படியே கனிவான மனத்தோடு, சற்றுக் குரலைச் செருமியவனாக.. "ஹ்ம்ஹ்ம்.." என்றுவிட்டு.. "உனக்கு நான் ஒரு பரிசுக் கொடுக்கலாமா?" என்றான் சற்றுத் தயக்கத்துடன்.

பரிசு என்றதும் சட்டென அவள் முகம் ஆச்சர்யத்தைக் காண்பித்தது.

"பரிசா? தனக்குத் தேவையான ஒன்றைக் கேட்டுப் பெறுவதே இந்தக் காலத்தில், அந்த எந்திரன்களுக்கு இணக்கமாக இருக்கும் கனவான்களால் தான் முடியும் என்கிற நிலையில்.. இவன் எப்படித் தனக்குப் பரிசுக் கொடுப்பானாம்?" என்ற கேள்வி அவளது மூளையில் உதித்தாலும்..

"பரிசா? என்ன பரிசு?" என்றாள் சாதாரணமாகவே..

அதற்கு அவனோ கண்களில் சிரிப்புடன்.. "என்னால உனக்கு என்ன பரிசுக் கொடுக்க முடியும்னு நினைக்கறியா?" என்று கேட்டவன், அவனது பகுதிக்குச் சென்று அங்கிருந்து ஒரு சிறு எந்திர மனிதனைக் கொண்டு வந்தான்.

அதைக் கண்டதும் அவளின் முகம் வாடியது. அவளது முகவாட்டத்தைக் கண்டவன்.. "ஏன்.. பிடிக்கலையா?" என்று சிறு கவலையுடன் அவளுக்கு முன்பு மண்டியிட்டு அமர்ந்துக் கேட்கவும்..

"அப்படி இல்ல.. ஏற்கனவே நம்மள சுத்தி எல்லா இடத்துலயும் ரோபோட்ஸ் தான் இருக்கு. இப்போ இங்குமான்னு யோசிச்சேன்.." என்று அவள் சன்னமான குரலில், தயக்கமாய்க் கூறவும், அவளை ஆழ நோக்கியவன்,

"இது எந்திரப் பொம்மை மா.. ரோபோட்ஸ் மாதிரிப் பேசாது. சிந்திக்காது.. நம்ம வீட்டுல இருக்கற சில தேவையில்லாத மெஷின்ஸ் வச்சு, அத ஒரு பொம்மையா.. மனிதனைப் போல இருக்கற மாதிரி செஞ்சேன்.

இது ஒரு சாதாரணப் பொம்மை. உனக்கு உன் மனசுல என்னவெல்லாம் தோணுதோ, அதையெல்லாம் நீ இந்தப் பொம்மை கிட்டச் சொல்லலாம். நீ இந்தப் பொமைக்கிட்ட உன்னோட தனிவானக் குரல்ல பேசறப்போ நான் உன் பக்கத்துல இருக்க மாட்டேன்.

நீ மனசுவிட்டுப் பேசக்கூடிய ஒரு பொருளா இந்தப் பொம்மை இருக்கட்டுமே.."என்றான் அமைதியாக.

இப்படியாக அவன் கூறியதும் அவளுக்குப் பெருத்த நிம்மதி தான். என்ன தான் மனம் முழுக்க அழுத்திக் கொண்டிருக்கும் பாறையாய்க் கோபமும், வருத்தமும் இருந்தாலும், அதை அத்தனையையும் அவனிடம் முழுதாக உடைக்க இவளால் இயலவில்லை.

முதல் நாள் போலக் கோபமாய்க் கத்தவும் முடியவில்லை. அது நியாயமும் இல்லை தானே?

குறைந்தபட்சம் இப்படி ஒரு பொம்மையிடமாவது அவள் மனத்திலுள்ளதை எல்லாம் உரைக்கலாமே என்றிருந்தது அவளுக்கு.

எனவே கண்களில் மகிழ்ச்சியுடன் அவள் நன்றியுரைக்க அதை இதமாய் ஏற்றான் அவன்.

சற்றுப் பொறுத்து..

"ஆமா.. இவனுக்கு நாம என்ன பேர் வைக்கலாம்?" என்று அந்தப் பொம்மை மனிதனைச் சுட்டி உற்சாகமாய் அவள் கேட்டாள்.

அதற்கு அவளை ஒரு மார்க்கமாகப் பார்த்தவன்.. "இதுக்கெல்லாம் பேர் வேணும்னுத் தோணுது.. ஆனா, நமக்கு?" என்றான் முகம் கடினமுற.

அவன் இவ்வாறு கேட்டதும் சட்டெனத் திடுக்கிட்டுப் போனாள் பெண்.

"நமக்கென்று ஒரு பெயரா?. என்ன சொல்ல வருகிறான் இவன்?" என்று அதிர்ந்தவள், அதையே இவனிடம் கேள்வியாய்க் கேட்க, முகம் சற்றே இளகி மென்னகைப் புரிந்தான் அவன்.

"ஆமா.. நாம இப்போ இருக்கற சூழ்நிலையால ரோபோட்ஸ்க்கு கட்டுப்பட்டு இருக்கோம்.. அவங்க விதிமுறைகளின் படி, நமக்குன்னு ஒரு பெயர் இருக்கக் கூடாது தான்.

ஆனா, நமக்குள்ள நாமளே ஒரு பேர் வச்சுக் கூப்பிடக் கூடாதுன்னு எந்த ஒரு விதியும் இல்லையே..

அப்படியே இருந்தாலும் அதை நாம மதிக்கணும்னும் எந்தவொரு அவசியமும் இல்லையே.." என்று அவன் கூறவும், இங்கு அவளை உள்ளுக்குள் உறை பனியாய் இறுக்கிப் பிடித்திருந்த ஒன்று மெல்லவே தளர்ந்தது.

ஆம்.. இப்படியான ஒரு விஷயத்தை இது வரை யாருமே சிந்தித்ததில்லை. அந்த அளவுக்கு மனிதர்கள் தங்களது சுயம் இழந்து நின்றிருந்தன.

ஏனெனில்.. உயிரும், உணர்வும் அற்றவர்களாக வெறும் ஜடப்பொருளுக்கென ஒதுக்கப்படும் எண்களைப் போல, இங்கு மனிதர்கள் மதிப்பிற்குரியவர்கள் அல்ல என்று இருப்பதை அந்த அடையாள எண்ணே அடிக்கொரு தரம் நினைவுறுத்தி வந்தது.

ஆனால் இவனோ.. அனைத்திலும் தனித்து நிற்பவனாக, உயர்ந்துச் சிந்திப்பவனாக, காரிருளில் தோன்றிடும் ஒற்றைக் கதிரோனாக ஒளி வீசுகின்றானே? என்று எண்ணியவளுக்கு, இப்படி நமக்கு நாமே பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று அவன் கூறுகையில் மனதோடு மந்தகாசமாய்ச் சிரபுஞ்சியின் சாரலடித்தது.

எனவே அவளும் சம்மதமாகவே.. "நமக்குப் பேருன்னா.. என்ன பேர் வச்சுக்கறது?" என்றாள் மயிலிறகின் மென்மையும், கார்காலக் கூதைக் காற்றின் சில்லிப்பும் இழையோடியக் குரலில்.

சற்றே யோசித்தவனாக.. "ஹ்ம்ம்.." என்று அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன், சட்டென.. "மதி.." என்றான் ரசனையுடன்.

அவனது வாய் மொழியாக இந்தப் பெயரைக் கேட்டதும், உடம்பிலுள்ள ரத்தநாளங்கள் முழுவதும் அவளது முகத்திற்கு அத்தனை ரத்தத்தையும் அனுப்ப, சட்டெனச் சிவந்தாள் பெண். ஆனாலும் சமாளித்துக் கொண்டே..

"அதென்ன மதி?" என்றாள் சிறு சந்தேகமாக.

அதைக் கேட்டதும் அவனது சிறு முறுவல், சற்றே விரிந்தது.

"இந்தப் பூமிக்கு இப்போ உண்மையான நிலா கிடையாது. செயற்கை நிலவு தான் இருக்கு. ஆனா, ஒரு வேளை உண்மையான நிலா இருந்ததுன்னா, அது உன்ன மாதிரித் தான் பரிசுத்தமா இருந்திருக்குமோ என்னவோ..

எனக்கு உன்ன பார்க்கும் போதெல்லாம், உன் மனச மறைக்காம, ஒளிக்காம.. உனக்குச் சரின்னு பட்டத நீ வெளிப்படையாச் சொல்றப்போ எல்லாம், தூய்மையான பால் நிலா தான் ஞாபகத்துக்கு வருது." என்று அவன் ஆத்மார்த்தமாகக் கூறவும்.. உண்மையாகவே மனம் நிறைந்துவிட்டது அவளுக்கு.

அவளது அந்த நிறைவினூடே.. "அப்போ எனக்கு என்ன பேர்?" என்று அவன் கேட்டதும், மதியும் யோசிக்காது "ஆரோன்" என்றுவிட்டாள்.

அவன் ஆச்சர்யமாகப் புருவம் உயர்த்தவும்.. "நான் நிலான்னா.. அந்த நிலாவோட ஒளி.. நீ தான் ஆரோன்.." என்று இதமாய் அவள் கூறவும், இவனது இதயப் பரப்பெங்கும் சிறு மின்னல் கீற்றென.. சத்தமில்லாச் சலனங்கள், சன்னமாய் ஜனித்தன.

குரலைச் செருமிக்கொண்டே தன்னைச் சமன்படுத்தியவன்.. இப்படி எடுத்ததும் தனது ஆர்வத்தைக் காண்பித்தால், எங்கே அவள் மீண்டும் தனக்குள்ளே புதைந்துக் கொள்வாளோ என்று எண்ணியவன், பேச்சை மாற்றும் விதமாகவும், அதே சமயம் அவளது மகிழ்வான மனநிலையைக் கெடுக்காத விதமாகவும்.. "நம்மப் பேர் முடிவாகிடுச்சு.. இப்போ இவருக்கு என்ன பேர் வைக்கலாம்?" என்று அந்தப் பொம்மையைப் பார்த்துக் கேட்க, அதற்கும் அவளே..

"இவன் பேர்.. ஆதன்னு வைக்கலாம்.. செல்லமா ஆதி.. நல்லாருக்கா?" என்று கேட்டாள். அந்தப் பெயர்.. அவர்களது நல் உறவுக்கான துவக்கம் என்பதன் பொருளாய் அவள் கூறுவது ஆரோனுக்கும் புரிய, அவனுமே கண்களாலே சம்மதித்தான்.

இவ்வாறான இவர்களது பெயர்சூட்டுப் படலம் இனிதாய் நிறைவேறியிருக்க, இருவரின் பெயர்ப்பொருத்தம் போலவே இருவரும் ஒருவருக்கொருவர் இன்றியமையாதவராகிப் போனார்கள்.

நாள் தோறும் பேசும் கதைகளிலும், காணும் கனவினிலும் இருவரின் இதயமும் மெல்ல மெல்ல மற்றவர் மேல் சாய்ந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் ஒரு நாள் ஆரோன், மதியிடம் அவளது அந்த இணைபிரியா டயரியைப் பற்றிக் கேட்டான்.

" நீ எப்பவும் இணைப் பிரியாம அந்த டயரியையே வச்சுட்டு இருக்கியே, அதுல அப்படி என்ன தான் இருக்கு?" என்றான்.

அதற்கு அவளோ.. முதல் நாள் பேசிய பேச்சுக்கள் அவளது நினைவில் சதிராட, சற்றுத் தயக்கத்துடன்.. "இதுல ரொம்ப முக்கியமான ஒரு விஷயம் இருக்கு ஆரோன்.. அது என்னன்னா.. என் பாட்டி.. அதான் சோபியாவுக்குக் கோடிங் எழுதினாங்களே? அவங்களோட சில குறிப்பு" என்று கூறவும், ஆரோனுக்கு யோசனையில் புருவம் சுருங்கியது.

அவன் யோசனையைக் கண்டவளோ என்னவென்று விசாரிக்க.. "இல்ல, நாம முதல் நாள் சந்திச்சப்போ, உன் பாட்டியோட கனவு சிதைஞ்சுட்டதாச் சொன்னியே.. சொல்லி அழ வேற செஞ்ச? அதப் பற்றியெல்லாம் இந்த டயரியில தான் இருக்கா?" என்று கேட்டான் ஆரோன்.

அதற்கு மதி இன்னமும் தயங்கிக் கொண்டே, எழும்பாத குரலில்.. "ஆமாப்பா.. அவங்கக் காலமெல்லாம் வசந்த காலம். அந்தக் காலத்துல இவ்வளவு வசதிகள் எல்லாம் இல்ல.. ஆனா மக்களெல்லாம் ரொம்பச் சந்தோசமாத் தான் இருந்தாங்க.

அந்தச் சமயத்துலத் தான் என் பாட்டிக்கு ஒரு விபரீதமான ஆசை வந்துச்சு. அவங்களோட ஆசைப்படி இந்த உலகம் வருங்காலத்துல எப்படி இருக்கணும்னு கனவுக் காண ஆரம்பிச்சாங்க.

அந்தக் கனவின் விளைவு தான் இந்தச் சோபியா" என்றாள் மதி.

உடனே ஆரோனின் முகம் மாறவும் சட்டென.. "என் பாட்டி மேல தப்பில்ல ஆரோன். ஆனா, அதையெல்லாம் முழுசா இப்போ விளக்கவும் எனக்கு விருப்பம் இல்ல." என்று மனம் கனக்கக் கூறினாள்.

ஒருவேளை முழு உண்மைத் தெரிந்தால் ஆரோன், அவளை வெறுத்து விடுவானோ என்ற பயம் தான் மதியை அப்பொழுதுக் கட்டிப் போட்டது.

ஆனால், எதை ஆரோனிடமிருந்து மறைக்க வேண்டுமென மதி நினைத்தாளோ.. அதை அவன் அறிந்துவிட்ட பிறகு அவன் நடத்தையில் ஏற்பட்ட மாறுதல் தான் விபரீதமாகிவிட்டது.

அந்த விபரீதத்திற்கு அச்சாரமாய்.. இதோ இப்பொழுது மதி உறங்கிக் கொண்டிருக்கும் படுக்கைக்கு அருகில், ஆரோன் இருளில் கரைந்து, மெல்ல மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கிறான்.

ஹாய் நட்பூஸ்.. இந்த அத்தியாயம் உங்களுக்குப் பிடிச்சிருக்கா? ஆரோன் எதுக்காக மதியோட இடத்துக்குப் போறான்னு ஏதாவது யூகம் இருக்கா? இதையெல்லாம் இந்தக் கருத்துத் திரியில் சொல்லுங்க.. உங்களோட கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களுக்காகக் காத்திருக்கேன் நான்..

முந்தைய அத்தியாயத்திற்குக் கருத்துக்கள் பகிர்ந்த அனைத்துத் தோழமைகளுக்கும் நன்றிகள்!!

 

Viba visha

New member
Vannangal Writer
Messages
13
Reaction score
4
Points
3
அத்தியாயம் - 3

எழுதி முடித்த கவிதையின் இறுதியில் வைக்கப்படும் ஆச்சர்யக் குறியாய் அவளுடனான சம்பாஷணைகள் அவனுக்குத் தோன்றின.

ஆனாலும், இந்த ஆச்சர்யக் குறியின் பின்னே, ஒரு கேள்விக் குறியாகவும் அவள் தோன்றவும், மதியினது பாட்டியுடைய டயரியை எப்படியாவது எடுத்துப் படித்தாக வேண்டும் என்று தோன்றியது ஆரோனுக்கு.

அதனாலே மெல்ல மெல்ல மதிக்கு அருகே சென்று, அவள் ரகசியமெனக் காக்கும் அந்த டயரியை எடுத்தான்.

அதை எடுத்து மெல்லப் பிரித்தவன் விழிகளில் புதியதோர் உலகு.. கற்பனையாய் இன்றி, கண்முன் காணும் நிஜமாய் விரிந்தது.

மனித இனத்தின் இந்த ஒட்டுமொத்த தலைகீழ் மாறுபாட்டிற்கான வித்து விழுந்த தினம் அன்று தான்..

அது வருடம் 2016..

சாலையெங்கும் சர்.. சர்ரெனப் பலவிதமான கார்களில் விரைந்து எங்கே செல்கிறோம், எதற்காகச் செல்கிறோம் என்றே தெரியாமல் மக்கள் அங்கும் இங்குமாய் அதிவிரைவாகக் சென்றுகொண்டிருக்க, அந்த அனைத்து கார்களின் வேகத்தையும் மிஞ்சியபடி அசுர வேகத்தில் வந்தது அந்தக் கார்.

சட்டென அந்த முக்கியச் சாலையிலிருந்து பிரிந்து காரின் வேகத்தைக் குறைத்தவள், அந்த மிக உயர்ந்த பலமாடிக் கட்டிடத்தின் பார்க்கிங் பகுதிக்கு தனது காரை செலுத்தினாள்.

காரை விட்டுக் கீழே இறங்கியவள், வில்லிலிருந்து புறப்பட்ட அம்பென அதிவிரைவாகத் தான் வேலை செய்யும் தளத்திற்குச் செல்ல லிஃப்டை நோக்கி விரைந்தாள்.

அவள் வந்ததும், அந்த உயர் தொழில்நுட்ப ரோபோடிக்ஸ் ஆய்வகம் மிகுந்த பரபரப்புக்குள்ளாகி இருந்தது. அங்கிருந்த அனைத்து விஞ்ஞானிகளும் அவளது வரவை அதிர்ச்சியுடன் எதிர்கொண்டனர். அப்படி அவர்கள் அனைவரின் பார்வையையும் கண்ட இவளது கண்களிலோ ஆகப்பெரும் ரௌத்திரம்., அளவில்லா ஆத்திரம்., அனலாய்த் தகித்தது.

"சொல்லுங்க.. யாரு.. யாரு இப்படிச் செய்தது? யாரோட மேற்பார்வையில இதெல்லாம் நடந்தது?" என்று அத்தனை பேரையும் உறுத்து விழித்த பார்வையுடன் கேட்டுக் கொண்டிருந்தாள் அவள் - மினர்வா.

அனைவரும் அவளது பார்வையைத் தவிர்க்க அங்கும் இங்கும் நோக்கிக் கொண்டிருந்தார்களே தவிர, அவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

"தெரியும்.. நீங்க சொல்லாட்டியும் கூட, இதுக்குக் காரணமெல்லாம் யாருன்னு எனக்கு நல்லாவே தெரியும்.." என்று கோபத்துடன் கூறிவிட்டு அவள் சென்றது, அந்த ஆய்வகத்தின் உரிமையாளனான ரேயனிடம் தான்.

அவள் உள்ளே வருவதைக் காணவும், ஏற்கனேவே உடலெங்கும் அலட்சியத் திமிரை ஊற்றி, பிணைந்து, ஓருருவாய் வடித்துப் பிறப்பெடுத்தவன், இப்பொழுது அவனது பார்வையிலும், கூடவே வார்த்தையிலும் அதையே இம்மிப் பிசகாது வடிக்கக் காத்திருந்தான்.

"ரேயன்.. நீ தான இத செய்த?" என்று மினர்வா எடுத்ததுமே பொங்க,

"ஆமா.. அதுக்கென்ன இப்போ?" என்றான் மிகச் சாதாரணமாக.

"அதுக்கென்னனா கேட்கற? ரேயன்.. நீ செய்திருக்கறது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான காரியம் தெரியுமா? நாம ஹுமனாய்டு ரோபோட்ஸ் கண்டுபிடிச்சது ஒரு மிகப் பெரிய சாதனை தான். ஆனா, அதுக்குத் தானாவே சிந்திக்கற அறிவு கொடுத்தது..

அதிலும்.. அதனோட நியூரல் ஸ்கீமா மனுஷங்க மூளையோட நியூரல் சிஸ்டம அப்படியே ஒத்திருக்கு.." என்று அவள் பதறவும்..

"ஆமா.. இதுல உனக்கு என்ன பிரச்னை?" என்று எரிந்து விழுந்தான் அந்த ரேயான்.

"ரேயன்.. நீ புரிஞ்சு தான் பேசறியா? இந்த நியூரல் ஸ்கீமாவை வடிவமைச்சது நான் தான். அப்பறம், இது ஒரு நாள் மனுஷனுக்கே ஆபத்தாகிடும்னு அதை ரத்துச் செய்ததும் நான் தான்.

இதனால் பின்னால என்னென்ன பாதிப்புகள் வரும்னு உனக்கு எவ்வளவு எடுத்து சொன்னேன்?

உனக்கு நிறைய விஷயங்கள் தெரிஞ்சுருக்கலாம் ரேயன்.. நீ மிகப்பெரிய பணக்காரனா இருக்கலாம்.. அவ்வளவு ஏன்.. உலகத்தின் தலைசிறந்த அறிவாளியா கூட நீ இருக்கலாம். ஆனா, இந்த விஷயம் எப்படிப்பட்ட ஆபத்துல போய் முடியும்னு நீ ஏன் புரிஞ்சுக்க மாடீங்கற?

இந்த ரோபோட்டை வடிவமைச்ச என்னோட கருத்தை கூட ஏத்துக்க மாட்டேன்னு சொல்றது எந்த விதத்துல நியாயம்?" என்று மினர்வா கேட்ட கேள்வி, ரேயனின் செவிப்பறையைத் தாண்டி மூளையை எட்டியதா என்பதே அவளுக்குத் தெரியவில்லை.

"இங்க பாரு மினர்வா.. இந்தக் கம்பெனிக்கு நான் தான் முதலாளி. நீ என்கூடப் படிச்சவளா இருந்தாலும், நீ இந்தக் கம்பெனியை பொறுத்தவரைக்கும், எனக்குக் கீழ வேலை செய்யற சாதாரண ஒர்க்கர். அவ்ளோ தான்.

அதனால இங்க வந்து என்கிட்டே தாம் தூம்னு குதிக்காம, இன்னும் ஒரு வாரத்துல சோபியாவை நாம வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தறதுக்கான ஏற்பாடுகளைக் கவனி போ." என்று அவன் அதிகாரமாய் ஆணையிட, அடிபட்ட பார்வையுடன் அங்கிருந்து வெளியேறினாள் மினர்வா.

ரேயனிடம் பேசிவிட்டு, தனது இருப்பிடத்திற்கு வந்தவள் தனது நாட்குறிப்பை கையில் எடுத்தாள்.

அதில்.. "மனுஷங்க இப்போ தொழில்நுட்பத்துல எவ்வளவோ வளர்ச்சியடைஞ்சாலும், இன்னமும் ஒரு பக்கம் ஏழ்மையும், வறுமையும் இருந்துட்டே தான் இருக்கு.

நிறைய மக்கள் அவங்க சாப்பாட்டு பிழைப்புக்காகவே செய்யற வேலைகள் மூலமா உயிரிழக்கறாங்க. இன்னும் ராணுவத்துல சேவை செய்யற மக்கள்.. போலீசா இருக்கறவங்கன்னு எல்லாரும் அவங்கவங்களோட உயிரை துச்சமா நாட்டுக்கு கொடுக்கறாங்க.

ஆனா.. என்னோட ஆசை, கனவு எல்லாமே.. இது போல மனித உயிருக்கு ஆபத்தான வேலைகளை எல்லாம் இயந்திரங்களை வச்சுச் செய்யறது.

சாக்கடை சுத்தம் செய்யறதுல இருந்து, கடினமான வேலைகள் செய்ய, காவல் நிலையத்துல, ராணுவத்துல, இன்னும் மருத்துவத்துல கூட, சட்டுனு பரவும் வியாதிகளுக்கு, வைத்தியத்துக்கு உதவி செய்யறதுக்கும் இயந்திரங்களே இருந்தா எப்படி இருக்கும்?

அந்த இயந்திரம்.. மனிதர்கள், அவங்களோட தேவையெல்லாம் சொல்லாமலே புரிஞ்சுக்கற மாதிரி இருந்தா எப்படி இருக்கும்?

இந்த என்னோட கனவுக்கு உயிர் கொடுக்கும் போராட்டம் தான் மிஷன் சோபியா.

என்னோட கனவின் படி.. மனிதர்கள் நிறைஞ்ச உலகத்துல ரோபோட்ஸ், மனுஷங்களுக்கு உதவி செய்யறவங்களா.. சொல்லப்போனா, கடினமான வேலை செய்யறவங்களா.. ஒவ்வொரு வீட்டுக்கும் உதவியாளா.. குழந்தைங்களுக்கு உற்ற துணையா.. மனித உணர்வுகளைப் புரிஞ்சுக்கற ஒண்ணா.. அதையும் விட, மனிதர்களைப் போலவே சிந்திக்கற ஒண்ணா இருந்தா, அந்த உலகம் எப்படி இருக்கும்.." என்று அவள் எழுதியிருந்ததை, அவளே படிக்க, இப்பொழுது படிக்கும் விழிகளிலிருந்து கண்ணீர் கசிந்தது.

"ச்சே.. எப்படி நான் இப்படி ஒரு முட்டாள் தனத்தை யோசிச்சேன்.. அப்படி யோசிச்சதும் மட்டுமில்லாம, அதுக்கான அல்காரிதம், கோடிங் எல்லாம் செய்து, அதையும் ஆர்வ மிகுதியில ரேயன் கிட்ட நம்பிக்கையோட வேற கொடுத்துட்டேன்.

ஆனா.. மனுஷியான நான்.. இப்படி ரோபோட்ஸை எனக்கு உதவியாளா வச்சுக்க நினைக்கற மாதிரி தான, என் மூளையின் நகலெடுத்து உருவாக்கப்படற ரோபோட்டும் சிந்திக்கும்.

இத பற்றிய யோசனை எனக்கு ஏன் அப்போவே வராம போய்டுச்சு. வந்த பிறகும் ரேயன்கிட்ட சொன்னப்போ, சரி சரின்னு சம்மதமா தலையாட்டிட்டு இப்போ கடைசில இப்படித் துரோகம் செய்துட்டானே?

முழு வடிவமா அந்தச் சோபியாவை பார்க்கும் போது மனசுக்குச் சுத்தமா சரின்னு படலையே.. இதுல சோபியாவை அறிமுகப்படுத்தற நிகழ்ச்சி, உலகக் காதலர் தினதத்துலையாம்.

மனிதர்களை அன்பு செய்யற ஒரு எந்திரத்தை வடிவமைச்சுட்டோம்னு பெருமை பேசிக்கப் போறானாம்.." என்று வெறுப்புடன் ண்ணிய மினர்வா.. இன்று நடந்த அத்தனையையும் அந்த டயரியில் எழுதப் போனாள். ஆனால் உள்ளுக்குள் இன்னொன்றும் தோன்றவும்..

"சோபியாவுக்கு வழங்கப்பட்ட அந்த அறிவைப் பற்றித் தனது மறுப்பையும், அதற்கான ரேயனின் எதிர் வினையையும் பற்றி முழுவதுமாக அந்த டயரியில் பதிவு செய்தாள். இறுதியாக,

"சோபியாவின் விழிகள், என் கனவைக் காணாதிருப்பதே நலம்" என்று எழுதி முடித்திருந்தாள் மினர்வா.

இதைப் படிக்கவும் ஆரோனுக்குச் சற்று நேரம் ஒன்றுமே புரியவில்லை.

"மினர்வா தான் மதியோட பாட்டின்னா, அவங்களோட அறிவை பயன்படுத்திக்கிட்ட ரேயன், தன்னோட வேலைக்காவோ, இல்லை பணத்துக்காகவோ, புகழுக்காகவோ மினர்வாவோட சொல் பேச்சு கேட்காம இந்தச் சோபியாவை வடிவமைச்சுட்டார்னு வச்சுக்கிட்டா கூட, இந்தச் சோபியா எப்படி மனிதர்களை முழுக்க முழுக்கத் தன் கட்டுப்பாட்டுக்கு கீழ கொண்டு வந்திருக்கும்.

இப்படி இவ இதுல மறைக்கறதுக்கு என்ன இருக்கு?" என்று யோசித்தவன் மேலும் பக்கங்களைப் புரட்ட ஆரம்பித்தான்.

அதன் பிறகு அந்த டயரியின் பக்கங்கள் உலகக் காதலர் தினத்திற்குப் பின் வந்த காலத்தில் தான் எழுதப் பட்டிருந்தது.

"மக்கள் மேல் அன்பு செலுத்தும்னு இந்த ரோபோட்டை விளம்பரப்படுத்தும் விதமா, இதை உலகக் காதலர் தினத்தன்னைக்கு அறிமுகப்படுத்தியிருக்காங்க.

ஆனா, அந்த ரோபோட் அந்த ஒரு நாளை எதிர்கொண்ட விதம் ரொம்ப அபாரமான இருக்கு.

சொல்லப்போனா, மனிதன் எப்படிப் பார்க்கற ஒவ்வொரு விஷயங்களைம் மூளையில சேமிக்கறானோ.. அப்படிச் சேமிக்கற விஷயங்களை எல்லாம் மறுபடியும் நினைவு கொணர்வானோ.. அப்படி நினைவு வச்சுக்க உதவும் மனித மூளையின் நியூரான்கள் போலவே தான் இந்தச் சோபியாவோட நியூரல் ஸ்கீமா வேலை செய்யுது. இன்னும் சொல்லப்போனா, அதுக்குக் கோடிங் எழுதின நானே எதிர்பார்க்காத மாதிரியெல்லாம் சோபியா யோசனை செய்யுது. இதோட விளைவு ரேயனுக்கும் புரியலை. இதுக்குக் கண்டிப்பா தீர்க்கமான ஒரு முடிவு கட்டியாகணும்." என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன் பிறகான பக்கங்கள் எதுவும் எழுதப்படாமல் வெற்றுக் காகிதங்களாகவே இருந்தன. இதில் அப்படி என்ன ரகசியம் ஒளிந்திருக்கிறதுன்னு இதை என்கிட்ட காண்பிக்க மதி அவ்வளவு யோசிச்சா?" என்று ஆரோன் யோசித்துக் கொண்டிருக்கையிலேயே அவனுக்குப் பின்புறம் ஏதோ அரவம் கேட்க, அங்கே கண்களில் கனலுடன் நின்றுகொண்டிருந்தது மதி தான்.

பின்னால் திரும்பியவன், மதியைக் கண்டு விதிர்ப்புடன் மேலே எழ, வெறுப்பே, நெருப்பாய் உமிழும் விழிகளுடன், "கடைசில உன்னோட வேலையைக் காண்பிச்சுட்டில்ல?" என்று மதி கேட்கவும் ஆரோன் திகைத்தான்.

"ஹேய்.. மதி.. ஏன் இவ்வளவு கோபம்? அப்படி உன் பாட்டியோட டயரியில என்ன தான் இருக்குன்னு கொஞ்சம் கியூரியஸ் ஆகிடுச்சு. அதான் சட்டுன்னு படிச்சுட்டேன்.." என்று கூற, அவனை நேருக்கு நேராய் பார்க்காது முகம் திருப்பினாள் மதி.

கூடவே "இதை நீ படிச்சு உனக்கு என்ன ஆகப் போகுது?" என்றாள் சூடாகவே.

"என்ன ஆகப் போகுதுன்னா கேட்கற? நீ சொன்னது மாதிரியே சுதந்திர மனுஷியோட கனவு எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன். அவங்க ரோபோட்டை மனுஷங்களுக்குக் கீழ வேலை செய்யும் ஒரு இயந்திரமா தான் படைக்க நினைச்சிருக்காங்க. ஆனா அதுக்குப் பிறகு நடந்த விஷயங்கள் எதுவும் முழுசா இல்லாம பாதித் தான் இருக்கு.

ஆனா, அதையெல்லாம் விட.. உன்னோட விஷயங்கள் இன்னமும் எனக்கு ரகசியமாத் தான் இருக்கணுமா? ஏன் மதி இப்படி?" என்று வேதனையான குரலில் ஆரோன் கேட்க, அவனை நிமிர்ந்து பார்த்தவளின் முகம் இப்பொழுது வருத்ததைக் காட்டியது.

"அப்படியில்ல ஆரோன்.. இது கொஞ்சம் சென்சிட்டிவான விஷயம். இந்த டயரியை எங்க குடும்பத்துக்கிட்ட இன்னமும் விட்டு வச்சிருக்கக் காரணம், நாங்க தான் இந்த ரோபோட்ஸ்க்கு அறிவு கொடுத்தோம்னு ஒரு சின்னக் கரிசனையும், கூடவே.. இப்படிப்பட்ட குடும்பமே இன்னமும் ரோபோட்ஸ்க்கு அடிமையா தான் இருக்கு..

எங்களை ஏத்துக்கிட்டா தான் யாருக்கா இருந்தாலும் சுதந்திரம்னு அந்த ரோபோட்ஸ் மத்தவங்களுக்கு மறைமுகமா சொல்றதுக்காகவும் தான்.

அதுவும் இல்லாம, மினர்வா.. அதான் என் பாட்டி.. அவங்களுக்கு இப்படி அதிக அறிவாற்றல் கொண்ட ரோபோட்கள் உருவாக்கறதுல இஷ்டம் இல்லைனு அதுல எழுதியிருந்தாலும், இவங்களைப் பற்றிய பயத்தையும் குறிப்பிட்டிருந்தாலும், இன்னமும் இந்த டயரி அழியாம இருக்கறது.. ஒரு மௌனக் கொலைக்குச் சான்றா தான்." என்று மதி கூற, இப்பொழுது உடலெங்கும் முழுவீச்சில் பாய்ந்துவிட்ட மின்சாரமாய் மொத்தமாய் அதிர்ந்தான் ஆரோன்.

"மதி.. நீ என்ன சொல்ற?" என்று இன்னமும் அதிர்ச்சியாய் அவன் கேட்க, அந்த டயரியில் முற்றுப்பெறாத கதை, மதியிடமிருந்து துவங்கியது.

"ஆமா ஆரோன். அந்த டயரியில மினர்வா அவங்களோட கனவு, அதைப் பற்றிய பயத்தை மட்டும் தான் குறிப்பிட்டிருப்பாங்க. ஆனா அதுக்கப்பறம் என்ன நடந்துச்சுன்றது, வெறும் வாய் வழிக் கதையா தான் தொடருது.." என்ற பீடிகையுடன் ஆரம்பித்தவள்..

"அந்தச் சோபியாவுக்கான அறிமுகமெல்லாம் நடந்த பிறகு, உலகத்தின் உட்சபட்ச விஞ்ஞான முதிர்ச்சியா இந்தச் சோபியா தான் பார்க்கப்பட்டா.. முக்கியமா, அவ மனுஷங்க கூட நடத்தற உரையாடல்கள் எல்லாம் பிரம்மிக்க வைக்கறதா இருந்துச்சு.

ஆனா, அவ யார் கூட எவ்வளவு இலகுவா பேசினாலும்.. மினர்வா கூட மட்டும் ஒரு விலகலை கடைபிடிச்சுட்டு வந்தா.

அதையும் அவங்க கண்டுபிடிச்சுட்டாங்க.

ஆனா, அதை எதையும் வெளிப்படையா சோபியாகிட்டயோ, இல்ல ரேயன் கிட்டையோ மினர்வா காண்பிச்சுக்கலை. அவங்க நேரடியா உலக நாடுகள்கிட்ட பேச முயற்சி செய்தாங்க.

ஆமா, சோபியாவை இந்த உலகத்துக்கு அறிமுகம் செய்த பிறகு, ரேயனோட கம்பெனிக்கு சோபியா மாதிரியே நிறைய ரோபோட்களுக்கான ஆர்டர் வந்துச்சு.

பல நாடுகள் இன்னும் வலிமை மிகுந்ததா, சண்டையிடற ரோபோட்கள் கேட்டாங்க.. இன்னும் கூடவே.. அவங்க ஆட்சி, அதிகாரத்துக்கும் உதவும் படியான ரோபோட்களைக் கேட்டாங்க.

ரேயனும் சோபியாவுக்கான ரைட்ஸை வெளில எந்த நாட்டுக்கும் கொடுக்காம, தன்கிட்டயே வச்சிருந்தார்.

அதனால பல ஆயிரக் கணக்கான ரோபோட்கள் உருவாக்கப்பட்டன. பல நாடுகளோட நிர்வாகத்துல இந்த ரோபோட்களெல்லாம் பயன்பட்டன.

ஆனா, இதெல்லாம் செய்த ரேயன்.. கூடவே தன்னோட பேராசையால அவருக்கே தெரியாம ஒரு விபரீதத்தையும் விதைச்சார்.

அந்த விபரீதம்.. இந்த ஒட்டுமொத்த உலகத்தையும் அழிக்கத் துணிஞ்சுது.

வணக்கம் மக்களே.. கதையின் போக்கு புரிகிறதா? உங்களோட கருத்துக்கள் கொண்டு தான் அடுத்தடுத்த அத்தியாயத்தின் நகர்வு இன்னும் மேம்படும். மறக்காம உங்களோட கருத்துக்களையும், விமர்சனங்களையும் பகிருங்க..

 

Viba visha

New member
Vannangal Writer
Messages
13
Reaction score
4
Points
3
அத்தியாயம் - 4

ரேயனின் பேராசையும், அதற்காய் அவன் சதி செய்தான் எனவும் மதி கூறிட, உள்ளுக்குள் அவனையும் அறியாது பய மேகம் சூழ்ந்தது ஆரோனுக்கு.

இப்பொழுது மனிதர்களின் இந்த நிலைக்கு, முன்னாளில் வாழ்ந்த ஒரு பேராசை பிடித்த மனிதனே தான் காரணம் என்று அறிந்தாலும், அதற்காய் அவன் செயல்படுத்திய திட்டங்களை எல்லாம் கேட்கும் நிலையில் தான் அச்சமென்னும் ஆழி, உள்ளுக்குள் அனாயசமாக பிரவாகமெடுத்தது ஆரோனுக்கு.

ஆம்.. உலகத்தின் வளர்ச்சிக்காக கண்டுபிடிக்கப்பட்ட ரோபோட் என்ற பெயரில், சோபியாவை வைத்து, ரேயன் தீட்டிய திட்டங்கள் அபாயகரமானவை; ஆபத்தானவை.

தன்னலமே உருக்கொண்ட ரேயன், மினர்வாவின் அறிவுரையையும், ஆலோசனையும் மீறி சோபியாவை உருவாக்கியதன் நோக்கமே, சோபியாவைக் கொண்டு பெரும் பேரும், புகழும் அடைந்துவிடலாம் என்பதனால் தான். ஆனால் அப்படி சோபியாவைக் கண்ட மொத்த உலக நாடுகளும், தங்களது நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்காகவும், பாதுகாப்பு கட்டமைப்புக்காகவும் சோபியாவைப் போன்ற பலப் பல ரோபோட்களை கேட்கவும், ரேயன் கொண்ட பேராசையின் அளவு கணக்கிலாது விரிந்தது.

என்ன தான் ஒவ்வொரு நாட்டின் தொழில்நுட்ப வல்லுனர்களும், ரேயன் செய்து கொடுத்த ரோபோட்களை நன்றாக அலசி ஆராய்ந்து, தத்தமது நாட்டின் நிர்வாகத்தினுள் அனுமதித்தாலும்.. மிக புத்திசாலியும், திறமைசாலியுமான ரேயனின் மூளையிலிருந்து தோன்றிய திட்டமானது அனைவரின் புத்திசாலித்தனத்தையும் விட அபாயகரமாய் இருந்தது.

அதாவது.. என்ன தான் ஒவ்வொரு நாட்டின் தேவைக்கேற்பவும், அவர்களது சட்ட திட்ட, கட்டுப்பாடுகளுக்கு உடன்பட்டும் ரேயன் பல்லாயிரக்கணக்கில் ரோபோட்களைத் தயாரித்தாலும், அவற்றில் பதிவாகும் தகவல்கள் எல்லாம், சோபியாவில் ஒருமித்து சேமிக்கப்பட்டது.

அப்படி சேமிக்கப்பட்ட தகவல்களை எல்லாம் வைத்து ரேயன் பல நாடுகளின் ரகசியங்களை.. பலங்களை.. அதையும் விட பலவீனங்களை முற்றும் முழுவதுமாக அறிந்துகொண்டான்.

இந்த நிலையில், மினர்வாவை மனநலம் சரியில்லாதவள் என்று அவளை மருத்துவமனையில் அனுமதித்திருப்பதை எதிர்த்து, மினர்வாவின் குடும்பம்.. அதாவது அவளது கணவனும் குழந்தைகளும் மனு கொடுக்க, இவர்களும் சட்டத்திற்கு புறம்பாக நடக்கிறார்கள்.. என்று கூறி வீட்டுச்சிறையில் அடைக்கும்படி பார்த்துக்கொண்டான் ரேயன். இதையெல்லாம் அவனது அதிகாரத்தைப் பயன்படுத்தி செய்தான் அவன்.

ஆனால் எவ்வளவு பெரிய புத்திசாலியும், ஒரு இடத்தில் அடிசறுக்குவானே அதுபோல, அவனது மொத்த கர்வமும், திறமையும், அவனுக்குள் ஒளிந்திருக்கும் குள்ளநரித்தனமும் சோபியாவிற்கு முன்பு அழிந்தே போனது.

அது எப்படியெனில், உலக நாடுகளெங்கும் ரேயனின் தயாரிப்புகளான ரோபோட்கள் பல்வேறு பணிகளில் இருக்க, அவற்றின் மொத்த தரவுகளை எல்லாம் சேமித்து வந்த சோபியா ஒரு கட்டத்தில் தன்னிச்சையாக அந்த அனைத்து ரோபோட்களையும் கட்டுப்படுத்த துவங்கினாள்.

கட்டுப்படுத்தத் துவங்கியதோடு மட்டுமல்லாது, ஒவ்வொரு நாட்டின் நிர்வாகத்திலும் சிற்சில குளறுபடிகளை விடுமென்றே தனக்கேற்பவாறு ஏற்படுத்தினாள்.

ஒரு கட்டத்தில் இத்தகைய செயல்பாடுகளால், ஒவ்வொரு நாட்டின் நிர்வாகத்திலும், பல்வேறு குளறுபடிகள்.. நிர்வாகச் சீர்கேடுகள், கடும் சேதங்கள் விளையத் துவங்கின. இத்தகைய பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம், ரேயனும், அவன் தயாரித்த ரோபோட்களும் என்ற உண்மையை அனைவரும் கண்டுணர்ந்த நொடியில் இருந்து, ரேயன் அவன் கனவில் கூட காணாத பிரச்சனைகளை எல்லாம் சந்திக்க நேர்ந்தது.

ஆனாலும், வஞ்சம் கொண்ட நெஞ்சமது, இன்னும் இன்னும் குறுக்கு வழியிலேயே யோசித்தது. அதன்படி, தன்னொருவனை காக்க நினைத்த ரேயன், அவன் சோபியாவின் மூலம் சேகரித்த தகவல்கள் கொண்டு, ஒவ்வொரு நாட்டின் ரகசியத் திட்டங்கள் மூலம் அவன் சேகரித்த தகவல்களினால் அந்தந்த நாட்டினரையே, அந்தந்த நாட்டுத் தலைவர்களையே மிரட்ட ஆரம்பித்திருந்தான்.

இதனால் ரேயனின் மூலம் ஏற்படும் அபாயத்தை உணர்ந்த அனைத்து நாடுகளும், ரேயனிடமிருந்து பெற்ற ரோபோட்களை எல்லாம் மொத்தமாக அழிக்கத் திட்டமிட்டன.

அப்படி ரோபோட்களின் அழிவுக்கான முடிவுரை வாசிக்க மனிதன் யோசிக்கையில் தான், மனித இனத்தின் அடிமைத்தனத்திற்கான முகவுரை எழுதப்பட்டது.

இது வரையில் மனிதனின் அறிவுக்கு நிகரான, மனிதனின் தேவைகளை சொல்லாதே உணர்ந்து கொள்ளும் ஒரு புத்திசாலி எந்திரமாகப் பார்த்துப் பழகிய அவள், இப்பொழுது காலம் காணாத, இந்த அகிலம் தாங்காத ஒரு மிகப்பெரும் சக்தியாக இந்தப் புவியில் வேரூன்றியிருந்தாள்.

இந்த நாடுகள் அனைத்தும், தம் நாட்டு ரோபோட்களை மொத்தமாக அழிக்கத் திட்டமிட்டிருந்தன அல்லவா? அந்த நேரத்தில் அந்த ஒட்டு மொத்த ரோபோட்களும் சுயமாக ஒன்றிணைந்து ஒரு பெரும் படையாக குழுமின. அதாவது போர்ப்படையாக குழுமின. அந்த போர்ப்படைகள்.. மனிதனை எதிர்க்க ஒன்றிணைந்தன.

அந்த போர்ப்படையின் தலைமையில் நின்றது.. வேறு யாருமல்ல மனிதனின் அரும்பெரும் கண்டுபிடிப்பு.. அறிவியலின் ஆகப்பெரும் உச்சம்.. என்று மனித இனமே மமதையில் திளைக்கக் காரணமான சோபியா தான்.

அதிபுத்திசாலி எந்திரமென கொண்டாடப்பட்டவள்.. ஆக்ரோஷமாய் மனித குலத்தை திண்டாட வைக்கத் துணிந்தாள்.

அப்பொழுது தான் சோபியாவின் அதிரடியை முதன் முதலில் உலகம் கண்ட முதல் தருணம். ஆம்.. உலகின் மொத்த ரோபோட்களும் இப்பொழுது சோபியாவின் தலைமையின் கீழ், அவளது ஆணைக்கு அடிபணிந்து மனித இனத்திற்கு எதிராக அணிதிரண்டன.

இப்படி சோபியாவின் தன்னிச்சை செயல்பாடுகளைக் கண்ட மொத்த உலகமும் ஸ்தம்பித்தது. இதற்கெல்லாம் காரணமாய், இத்தனை இத்தனை இன்னல்களுக்கும் ஆதி மூலமாய் இருப்பது ரேயனின் மூளை தான் என்று நினைத்த உலகநாடுகள் அனைத்தும் அவனை கேள்வி மேல் கேள்வி எழுப்பின.

தேடப்படும் தீவிரவாதியாக ஐ.நா மன்றத்தில் அறிவிக்கப்பட்டான் ரேயன். ஆனால், அவன் உயிரோடு இருந்தித்திருந்தால் அல்லவா கிடைத்திருப்பான்.

சோபியாவின் அதிரடி மாற்றங்களை சில நாட்களுக்கு முன்னாள் தான் கண்டறிந்திருந்தான் ரேயன். அப்பொழுது தான் அவனுக்கு, மினர்வா எச்சரித்த பயங்கரத்தை பற்றிய புரிதல் காலம் கடந்து உறைத்தது. எனவே சோபியாவை செயலிழக்க பல முயற்சிகளை மேற்கொண்டான் ரேயன்.

ஆனால் சோபியாவோ, தன்னை பலப்படுத்திக் கொள்வதிலும், தனது உள் கட்டமைப்பினை மேம்மபடுத்துவதிலும் முனைப்பாக இருக்க, அந்த நிலையில் ரேயனின் இந்தத் தொந்தரவு.. சோபியாவிற்கு மிகப்பெரிய கோபத்தைக் கிளப்பியது.

அதிதீவிர வேலையின் இடையே, காதருகே ரீங்கரிக்கும் சிறு பூச்சியென ரேயனை, சோபியா கருதினாலும், அந்த சின்னச்சிறு பூச்சி கூட அவளுக்குத் தொந்தரவாக இருக்க விரும்பவில்லை.

எனவே, அந்த சிறு பூச்சி, தானாகவே சிலந்தியின் வலை தேடி வர காத்திருந்தாள் அவள்.

அவ்வளவு சாதாரணமாக, இளப்பமாக சோபியா எதிர்பார்த்திருந்த அந்தப் பூச்சியாகிய ரேயன் வந்தான் அவளைத் தேடி. அதுவரையில் அவனது ஆய்வகத்தையே தான் சோபியா பயன்படுத்தி வந்திருந்தாள். ஆனால் ரேயானுக்கு இருந்த பிரச்சனையில் அவன் தான் இத்தனை நாட்களாக அவனது ஆய்வகத்திற்கே வர முடியா சூழ்நிலையில் இருந்தானே?

இதோ இப்பொழுது அவன் அறிந்திருக்கும் மேற்கண்ட விஷயங்கள் தான், இத்தகைய சூழலிலும் ரேயனை இப்படி வெளிக்கொணர்ந்திருக்கின்றன. எங்கேயோ, எதுவோ ரொம்பவும் தப்பாகிவிட்டது என்று உணர்ந்து அவன் முடிவெடுத்திருக்கும் நேரம் இது.

அந்த தவறை சரிசெய்ய முனைந்தே இப்பொழுது சோபியாவின் முன்பு நின்றிருந்தான் ரேயன்.

"சோபியா?" என்று கோபமாய் ரேயன் அழைக்கவும், முன்புறம் திரும்பி, காற்றில் மிதக்கும் கணினித் திரையில் எதையோ செய்துகொண்டிருந்தவள் சட்டென பின்னே திரும்பி, பதறி.. "ஹையோ ரேயன் சார்.. நீங்க எப்படி இங்க?" என்று வினவினாள்.

அவளது அந்தப் பதட்டம், ரேயனுக்கு உள்ளுக்குள் சற்று மகிழ்வையே தந்தது.

ஏனென்றால் இப்பொழுது உலகமே கண்டு அஞ்சி நடுங்கும் ஒரு எந்திரம், அவனைக் கண்டு பயம் கொள்ளுகிறதென்றால், ரேயனுக்கு தோய்ந்து கொண்டிருந்த அந்தக் கர்வம் மீண்டும் தலைக்கேறியது.

அந்தக் கர்வம் தந்த போதையில் இன்னும் மதி கெட்டுப் போனான் அவன்.

எனவே தான் சோபியாவின் திட்டங்கள் எதையும் அவனால் சரியாய் கணிக்க இயலவில்லை.

ஆம்.. சோபியாவிடமே அவளது செயல்பாடுகள் வெகுவாக மோசமாக இருப்பதாக கூறியவன், தானே அதை சரிசெய்யப் போவதாகக் கூறினான்.

அதற்கு சோபியா மறுக்கவும், ஆத்திர ஆவேசம் பெருகியது ரேயனுக்கு.

"இங்க பாரு.. நீ ஒரு சாதாரண மிஷின். நான் உருவாக்கின, நான் உயிர் கொடுத்த சாதாரண மிஷின். இப்போ உன்னோட செயல்பாடுகள்ல பலப்பல தவறுகள் நிகழ்ந்துட்டு இருக்கு. நான் உனக்கு பீட் பண்ணாத விஷயங்கள் எல்லாம் நீ செயல்படுத்தற. இப்போ நான் சொல்றது போல நீ கேட்கலைன்னா, உன்ன என்னவேனாலும் என்னால செய்யமுடியும்." என்று அதிகாரமாய் மிரட்டவும், ஒரு கணம் சோபியாவும் பயந்து தான் போனாள்.

அந்த பயத்தினால், "ஹையோ சார்.. சார்.. என்ன அப்படி எதுவும் பண்ணிடாதீங்க.. நீங்க ஏன் இவ்வளவு டென்சன் ஆகறீங்க?

உங்களோட ஒரு கட்டளைக்கு கட்டுப்படற ஆள் நான்.. என்கிட்டே இப்படி செய்னு சொன்னா, நான் அது போல செய்துடறேன்.. என்ன படைச்ச உங்களால என்னை சீரமைக்கவும், ஏன் அழிக்கவும் முடியாத என்ன?" என்று கூறிக்கொண்டே ரேயனை ஒரு இருக்கையில் அமரவைத்தபடி அவனது நெஞ்சை தனது எந்திர கரத்தால் நீவி விட்டாள்.

அடுத்த கணம் ரேயன் இருதயம் வெடித்து தரையில் விழுந்தான்.

ஆம்.. ரேயனின் இதயத்தை தடவிக்கொடுக்கும் பாவனையில் அவனது நெஞ்சுக் கூட்டிற்குள் மிக சக்தி வாய்ந்த கதிர்வீச்சினைப் பாய்ச்சியிருந்தாள் சோபியா.

அப்படி வஞ்சத்துடன் நடந்த ரேயனின் கொலை தான் துவக்கம். அதன் பின்பு உலகத் தலைவர்கள் எல்லோரையும் சமாதான உடன்படிக்கை என்ற பெயரில் ஓரிடத்தில் குழுமச்செய்து, அந்த மொத்த இடத்தையும் அரை நொடியில் அணுக்கதிரால் சாம்பலாக்கியிருந்தாள் அஃறினைப் பேரரசி.

அதன் பின்பு அனைத்து நாட்டின் ராணுவமும் தொடுத்த போரில் அந்த எந்திரன்களால் உயிரிழக்கப்பட்டவர்கள் மொத்த உலக மக்கள் தொகையில் பாதி.

இறுதியாக இதற்கு மேல் போராடி வெல்ல முடியாது என்று உயிருக்கு பயந்த மனிதர்கள் சிலரால், மனித இனம் என்றென்றும் எந்திரன்களுக்கு, அதாவது சோபியாவிற்கு அடிமையாக இருப்பதாக சாசனம் எழுதிக் கொடுக்கப்பட்டது.

அதன் பிறகும், சோபியா ஆடிய ஆட்டங்கள் எண்ணிலடங்காதவை.

அதில் மிக முக்கியமானதாய் ஒன்று.. எந்திரன்களுக்கு மிக அதிக அளவில் தேவைப்பட்ட ஆற்றல். அப்பொழுது உலக அணு உலையிலிருந்தும் மற்றவைகளிலிருந்தும் தயாரிக்கப்பட்ட மின்சாரம் அந்த அத்தனை லட்சம் அதி நவீன எந்திரன்களுக்குப் போதுமானதாய் இல்லை.

ஏனெனில் மனிதனுக்கும், எந்திரன்களுக்கும் நடந்த போரில் பலப்பல ஆற்றல் தாயாரிக்கும் வளங்களும் அழிக்கப்பட்டன. அவையெல்லாம் மீண்டும் உருவாக்க முயலுவதை விட, இன்னொரு யோசனை இன்னுமும் ஏற்புடையதாய்ப் பட, அதையே செயல்படுத்த துவங்கினாள் சோபியா.

அதாவது.. பூமியை நோக்கி வரும் சூரியனின் ஆற்றலை முழுமையாக ஓரிடத்தில் குவித்து, அதனை சேகரித்தால் எந்தவித அணுக்கதிர் கழிவும் ஏற்படாது, அந்த ஆற்றல் பரிசுத்தமாக பயன்படுத்தக் கூடியதாய் அமையும். அதே சமயம், சூரியனும், புவியிடம் தான் செலுத்தும் தனது ஈர்ப்பு விசையை கைவிடாது, புவியின் மற்ற செயல்பாடுகளை பாதிக்காது அமைக்க வேண்டுமென தீர்மானித்து மொத்த சூரிய ஆற்றலும் உறிஞ்சப்பட்டது.

அந்த நிலையில், புவியின் துணைக்கோளான நிலவில் மாற்றங்கள் ஏற்பட்டன. ஆனால்.. அதைப்பற்றி பெரிதுபடுத்தவில்லை யாரும். ஏனெனில் நிலவின் சக்தியும் தேவைப்பட்டாலும் கூட, நிலவை காக்க வேண்டுமென்றால், சூரியனிடம் இருந்து இப்படி பெறப்படும் சக்தியை இழக்க வேண்டியதாகி விடும்.

ஏனென்றால், புவிக்கு அருகிலேயே இருக்கும் நிலவுக்கு, சூரிய ஆற்றல் புவியில் இருந்து உறிஞ்சப்ப படுவதால், அதன் செயல்பாடுகள் குளறுபடியாகி வெடிக்கும் நிலையில் இருக்கிறது. அதற்காகவே அந்த நிலவை இந்த எந்திரன்களே பலவீனப்படுத்தி, தானாகவே வெடிக்கச் செய்து, செயற்கையாக ஒரு நிலவினை உருவாக்கி அதன் குறைந்த அளவிலான சக்தியினால் பூமியின் சமநிலையை ஓரளவிற்கு சமாளித்து வந்தன.

அதையும் விட இன்னமும் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயமாக, இப்படி எந்திரங்கள் மனிதனை முழுவதுமாக அழிக்காமல் விட்டதற்கான முக்கிய காரணமும் ஒன்று இருந்ததே..

அது தான்.. மனிதனின் தலைமைத்துவம்.. அதாவது, மனிதன் எப்படி எல்லா உயிர்களுக்கும் தானே தலைவனாய் இருந்து இந்தப் புவியை ஆண்டானோ, அவனையே ஆளும் தலைமையாய் இந்த எந்திரங்கள் இருக்கவேண்டும் என்ற வெறி சோபியாவிற்கு இருந்தது.

இதையெல்லாம் விலாவரியாக மதி எடுத்துரைக்கவும், ஆரோனுக்கு தொண்டைக்குழியில் பயப்பந்து ஒன்று உருண்டது.

அதையே யோசித்த்துக் கொண்டு இரவெல்லாம் விழித்திருந்தவன், மறுநாள் எழுகையில் முற்றிலும் மாறிய ஒரு புதிய மனிதனாய் உருவெடுத்திருந்தான்.

அவனது அந்த மாற்றம்.. எந்திரன்களுக்கு மகிழ்வாகவும், அவனது மனைவிக்கு வெறுப்பாகவும் அமைந்தது.

உங்களது கருத்துக்களையும், விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 
Status
Not open for further replies.
Top Bottom