- Messages
- 845
- Reaction score
- 1,132
- Points
- 93
பச்சையை அழுத்தினதுலயே நீங்க எவ்வளவு பச்சை மண்ணுன்னு தெரியுது. அப்படியே கமெண்ட் பண்ணிட்டு போங்க ப்ரெண்ட்ஸ்😂
semma interesting nice
காதல் கணம் 18
அடுத்த நாள் ஷ்ரதா வந்தபோது அவளது பிரச்சினை என்ன என்பதை அவளிடம் பேச்சுக் கொடுத்தே கண்டுபிடித்துவிட்டான் வீசி.
"இங்கப்பாரு உனக்கு கணக்கெல்லாம் புரியுது.. ஃபார்முலாஸ் தான் அடிக்கடி மறந்து போயிடுற; இல்ல இன்னொன்னோட குழப்பிக்கிற.. அப்புறம் மல்டிப்ளை பண்ணவும் டிவிஷன் போடவும் ரொம்ப டிளை பண்ற.. இந்த விஷயங்கள்ல மட்டும் நீ கூடுதல் கவனம் செலுத்தினா ஒன்செவன்டிக்கு மேல வாங்கலாம்" என்று அறிவுரை கூறினான்.
அப்போது தான் கணக்கில் தான் இடறும் இடம் எவை என்பதை அவளே புரிந்துகொண்டாள் ஷ்ரதா.
'எனது பிரச்சினை எதுவென்று எளிதாக கண்டுபிடித்து விட்டாரே!.. ஏதோ அபரிமித சக்தி இருக்கிறது இவரிடம்' அவன் மீதான மோகம் அவளுக்குள் கொழுந்துவிட்டுக்கொண்டே இருந்தது.
ஆனால், வீசிக்கு தான், தான் கோபத்தில் ஏதாவது சொல்லிவிட்டால் கூட பிழிந்து பிழிந்து அழும் அவளின் வாடிக்கை எரிச்சலைத் தந்தது.
ஒருமுறை நோட்டின் பக்கங்களை புரட்டிக்கொண்டே, "ஹேய்! இங்கப்பாரு.. எதுக்கு அழற?.. ம்ம்?" என்றான்.
அவள் நிமிர்ந்துப் பார்க்கவில்லை. "இங்கப்பாரு.. இங்கப்பாருஊ.." என்று சொடுக்கிட்டு அதட்டியதும் தான் நிமிர்ந்துப் பார்த்தாள்.
"தப்பு செஞ்சா தான் பயப்படனும்.. நீ தப்பு செஞ்சியா?" என்றதும், அவள் இல்லை என்று தலையை ஆட்டினாள்.
"அப்புறம் ஏன் பயப்படுற? அழற?.. உங்கப்பா அழுதா தான் காரியம் நடக்கும்னு உனக்கு சொல்லிக் கொடுத்தாரா?.." எனவும் வேகமாய் இல்லை என்று தலையை இடவலம் ஆட்டினாள்.
"இல்லைல? அப்போ பயப்படக்கூடாது; அழக்கூடாது.. புரியலைன்னா புரியலைன்னு சொல்லனும்.. உன் கண்ணைப் பார்த்தே நீ மனசுல என்ன நினைக்கிறேன்னு கண்டுபிடிக்க நான் என்ன ரிஷியா?.. நீ வெளிய சொன்னா தானே எனக்குத் தெரியும்?.. உன் ப்ரெண்ட் தானே தாரிணி?.. அவளுக்கு ஒரு விஷயம் புரியலைன்னா எப்படி என்னைப் போட்டு துளைச்சி எடுக்குறா.. அவளைப் பார்த்து கத்துக்கோ!" என்றான்.
இவர்கள் பேசுவதை ஒரு காதை மட்டும் செயல்பாட்டில் வைத்து ஒற்றுக் கேட்டுக் கொண்டிருந்த தாரிணி, "சார், இது வஞ்சப் புகழ்ச்சி அணி மாதிரி இருக்குதே" என்றாள்.
"சந்தேகமே வேண்டாம் தாரிணி.. வஞ்சப்புகழ்ச்சியே தான்.." என்று சிரித்தான் அவன்.
அவள், "ம்க்கும்" என்று சலித்து திரும்பிக் கொண்டாள்.
ஷ்ரதா அவனது சிரிப்பை கண்கொட்டாமல் பார்த்தபடியே ஆசையாக எண்ணிக்கொண்டாள். 'இவரை இப்படி சிரிக்க வைக்கவே எது வேண்டுமானாலும் செய்யலாம்'
வீசி சிரித்துக்கொண்டே ஷ்ரதாவிடம் கேட்டான். "நீ ஏன் அவளை மாதிரி வெளிப்படையா பேச மாட்டேங்கிற ஷ்ரதா?.."
ஆம், அவள் பெயரை முதல்முறையாக உச்சரித்திருந்தான்.
'ஷ்ரதா' எனும் பெயருடனே அவளது அகவுலகம் சுழல மறுத்து நின்றுவிட்டது. அது தெரியாமல் வீசி தொடர்ந்து பேசிக்கொண்டேப் போனான்.
"மொழிங்கிறது நம்ம கம்யூனிகேஷனுக்காக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கருவி.. பேச பேசத்தான் அறிவு வளரும்.. கேள்வி கேட்கலைன்னா இங்க எப்படி பகுத்தறிவு வந்திருக்கும் சொல்லு.. பேசுறதோட அவசியம் புரிஞ்சதால தான் ரேடியோ, டெலிவிஷன், செல்போன், ஸ்பீக்கர்னு எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டது.. அதே மாதிரி பேசுறது ஒரு கலை.. எல்லார் பேசுறதையும் நம்மளால ரசிச்சி கேட்க முடியாது தெரியுமா.."
தாரிணி அவர்கள் இருவரையும் மாறிமாறி பார்த்தாள். 'இவர் ஏன் அவளிடம் இப்படி அறுத்துத்தள்ளி கொண்டிருக்கிறார்?.. வகுப்பில் அவளது ஸ்பீக்கர் எட்டு கிளாஸுக்கு கிழியுமே.. என்னவோ இங்க வந்து தான் செய்வினை செஞ்ச பொம்மை கணக்கா இருக்கா' என்று மனதுள் முரண் பேசிக்கொண்டாள்.
நீண்ட சொற்பொழிவின் முடிவில் அவன், "ம்ம் சொல்லு!.. இனி வாய் திறந்து பேசுவியா?" என்றதும், "ம்ம்" என்று தலையாட்டி வைத்தாள் ஷ்ரதா. அவன் சுத்தம் என்று தன் தலையில் கைவைத்துக் கொண்டான். தாரிணி அடக்க மாட்டாமல் சத்தம்போட்டு சிரித்தாள்.
அன்றைய கலகலப்பான நாளைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அவன் ஒவ்வொரு கணக்கையும் ஒரு தடவைக்கு நான்கு தடவையாய் அவளுக்கு சொல்லிக் கொடுக்க, அது நடுநிசியில் எழுப்பிக் கேட்டால் கூட அடுத்த ஸ்டெப் என்னவென்று சொல்லும் அளவிற்கு அவளுக்கு மனப்பாடமானது.
அவன் தனக்கு கொடுக்கும் இந்த முக்கியத்துவங்கள் எல்லாம் கவன ஈர்ப்புகளாய் மாறி புது உற்சாகத்தை கொடுக்க, அவனுக்காகவே வீட்டில் இரவு கண் விழித்துப் படிக்க ஆரம்பித்தாள் ஷ்ரதா. சண்டித்தனம் பண்ணும் dx, dy கணக்குகளை எல்லாம் திரும்ப திரும்ப போட்டுப் பார்த்தாள்.
இதுவரை சாத்தானின் உறைவிடமாய் தோன்றிய கணக்குப் புத்தகம் சட்டென்று தேவதைகளின் கூடாரமாய் மாறிய விந்தை மயிர் கூச்செறிய செய்தது அவளை.
இரவில் கனவில் "MATHEMATICS" நகரத்துக்குள் நுழைந்தாள். நகரின் அனைத்துப் பகுதிகளிலும், தான் கணக்குப் புத்தகத்தில் பார்த்த குறியீடுகளும் எண்களுமே நகரவாசிகளாய் தெரிய, தலை கிறுகிறுத்துப் போனாள்.
எக்ஸ், ஒய், இசட், ப்ளஸ், மைனஸ், டெல்டா என்று சுற்றி குள்ள மனிதர்கள்.
அவசரக்கதியில் செல்லும் கூட்டத்தை பின்தொடர்ந்து சென்றவள் ஒரு வளைவில் ஆரியபட்டாவை சந்தித்தாள். அவர் பாகுபலியை தூக்கிக்காட்டிய ரம்யா கிருஷ்ணனைப் போல் பை(pi) மனிதனை கூட்டத்திற்கு தூக்கிக்காட்டி கொண்டிருந்தார்.
அவரை கடந்து சென்றவள் பாஸ்கராச்சாரியாரும் ஐசக் நியூட்டனும் ஆப்பிள் பழத்திற்கு அடித்துக் கொள்வதைப் பார்த்து சுவாரசியமாகினாள். ஆனால், முடிவில் தான் தெரிந்தது அவர்கள் மல்லுக்கட்டியது ஆப்பிள் பழத்திற்காக அல்ல, 'புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்த முதல் மனிதர்' என்ற பட்டத்தை பெறுவதற்காகயென்று.
அவள் விழிகள் விரிய அந்த 'கிராப் ஷீட்' கட்டமைப்பில் இருந்த நரகத்தின் வீதிகளுக்குள் நடந்துகொண்டே இருந்த போது, திடீரென ஓரிடத்தில் மனித கணினி சகுந்தலா தேவியைப் பார்த்தாள். அவர் பிபிசி தொலைக்காட்சி நிரூபர் லெஸ்லி மிட்செல்லிடம் காலண்டர் கணிதம் குறித்து தான் அளித்த பதில்கள் எல்லாம் சரிதான் என்று வாதிட்டுக் கொண்டிருந்தார். சிறிது நேரம் அவர்களின் வாதத்தைக் கேட்டவள், மீண்டும் நடக்கத் துவங்கி விட்டாள்.
ஒவ்வொரு கணித வகுப்பின் போதும் தான் சபித்த மேதைகளை எல்லாம் அந்த இரவு முழுவதும் சந்திக்க நேர்ந்தவள், உளமார அவர்களிடம் மன்னிப்பு கேட்டாள். கனவிலேயே தன் ஆத்மா பரிசுத்தமாகிவிட்டது போல் ஒரு புளகாங்கிதம் அவளிடம். அந்நிலையில் தூக்கத்திலேயே முணுமுணுத்தாள், "தான்க்யூ வருண் அத்தான்" என்று.
காலத்தை நாம் இரு வகைகளில் தூற்றுவோம். ஒன்று கடினமான தருணங்களில் நகர்ந்து தொலையேன் என்போம். இரண்டு சுவையான தருணங்களில் இந்நிலை இப்படியே இன்னும் கொஞ்சம் நீடிக்கக்கூடாதா? ஏன் பறக்கிறாய் காலமே? என்போம்.
ஷ்ரதாவும் இரண்டு வார முடிவில் இரண்டாம் வகையில் தான் காலத்தை தூற்றிக் கொண்டிருந்தாள். இனி எப்போது இந்த வாய்ப்பு கிட்டுமோ என்றும் கலங்கிக் கொண்டிருந்தாள்.
'முட்டாள்கள் வாய்ப்பை தேடுகிறார்கள்.. ஆனால் அறிவாளிகள் உருவாக்குகிறார்கள்..' பள்ளியில் அறிவிப்புப்பலகையில் ஷ்ரதா அடிக்கடி பார்க்கும் வரிகள் இவை. நல்ல நேரம் அது இப்போது ஞாபகம் வர, திட்டம் ஒன்றை தீட்டினாள். 'எப்படியாவது கணக்கில் நூத்துக்கு நூறு வாங்கி விட்டால் போதும்.. கௌரவமாக 'சாக்லேட் கொடுக்க வந்தேன் சார். நீங்கள் தான் இதுக்கு காரணம்' என்று பெரிய ஐஸ் மலையையே அவர் தலையில் தூக்கி வைத்து நெருங்கி விடலாம்.. முடியுமா?.. இதே வேகத்தில் முயன்றால் நிச்சயம் முடியும்.. மற்ற சப்ஜெக்ட்டுகளில் ஜஸ்ட் பாஸ் வாங்கினால் கூட போதும்' என்று பலவாறு சிந்தித்தவாறே அதை செயல்படுத்தத் தொடங்கினாள்.
அது நிச்சயம் எளிமையான காரியமாக இருக்கவில்லை அவளுக்கு. ஒரேநாளில் விதையை விருட்சமாக்க முடியுமா என்ன?. ரொம்பவே சிரமப்பட்டாள்.
'பார்க்கும் இடத்திலெல்லாம் நின்றன் கரியமுகம் தோன்றுதடா நந்தலாலா' என்றார் பாரதியார். ஷ்ரதாவிற்கோ கண்ணனின் கரியமுகத்திற்கு பதில், சமயத்தில் மறந்துபோய் காலைவாரும் ஃபார்முலாக்கள் தான் தோன்றின. தேர்வு நாள் நெருங்க நெருங்க ஃபார்முலாக்களை அங்கங்கு சுவரில் எழுதி ஒட்டி வைத்து அவ்வாறு தோன்றும்படி பார்த்துக் கொண்டாள்.
தன் மகளின் படிப்பார்வத்தை மீனாட்சி, விஜயாதித்தனின் காதிலும் கொஞ்சம் போட்டு வைத்ததின் பலனாக, அவரும் மகளை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடினார்.
ஷ்ரதா, 'ஆஹா! ஒரே விரதத்திற்கு இரண்டு பலன்' என்று உற்சாகமாகினாள்.
தேர்வன்று ஷ்ரதாவின் கடினமுயற்சி அவளை கைவிடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வினாத்தாளை எளிமையாய் மாற்றித் தந்த முருகனுக்கு கோடிமுறை நன்றி சொன்னாள்.
ஆனால், ரிசல்ட் தான் அவள் எதிர்பார்த்தபடி வரவில்லை. கணக்கில் இருநூற்றுக்கு நூற்றித் தொண்ணூறு தான் எடுத்திருந்தாள். கந்தன் கருணையேயின்றி கவிழ்த்துவிட்டார். மற்ற பாடங்களிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. மொத்தத்தில் அவள் கூற்றுப்படி கிரகங்களின் திட்டமிட்ட சதியால் தொள்ளாயிரத்து ஐந்து மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தாள் ஷ்ரதா. மிகுந்த கவலையால் அவள் முகம் கூம்பிப் போனது.
'சரி, கணக்கில் நூற்றித் தொண்ணூறு வாங்கியதே பெரிய விஷயம். இதையும் விட்டால் அவரிடம் பேச வாய்ப்பே கிடைக்காது' என்று தனக்குத்தானே ஆறுதல் கூறிக்கொண்டு, தன் அன்னையிடம் தாரிணியின் வீட்டிற்கு செல்வதாக பொய்கூறிவிட்டு தங்கள் புத்தகக் கடைக்கு வந்தாள்.
ஆனால், அங்கு வீசியிடம் பேசிக் கொண்டிருந்த சிவனேஸ்வரனைக் கண்டதும் வெலவெலத்துப் போய்விட்டாள். 'அத்தானா?.. இவர் எங்கே இங்கே?.. சாயங்காலம் ஆறு மணிக்கு போனால் அவரை தனியாக சந்திக்கலாம் என்று தானே திட்டமிட்டு இப்போது வந்தேன்.. முருகா! என்ன இது அக்கிரமம்!.. அப்போ எனது இரண்டு மாத உழைப்பும் வீணா?..' புத்தகக்கடையின் வாசலில் துப்பட்டாவை சுற்றிக்கொண்டே நின்றிருந்தவளை, "என்ன ஷ்ரதா! நீயெங்கே இங்கே?" என்று கூப்பிட்டான் சிவனேஸ்வரன்.
இப்போது எப்படி சமாளிப்பது என்று கருவிழியை வல விளிம்புக்கும் இட விளிம்புக்கும் உருட்டியவள், "அது? அது? ஹான்! ரொம்பப் போரடிச்சதா அதான் கதை புக் ஏதாவது வாங்கிட்டுப் போகலாம்னு வந்தேன் அத்தான்.." என்று தேடி காரணத்தை கண்டுபிடித்துவிட்டாள்.
"தனியாவா நடந்து வந்த?"
அவள் ஆமாம் என்றால், தானே அவளை தனது பைக்கில் கொண்டுபோய் விடலாம் என்பது அவனது திட்டமாக இருந்தது.
"இல்லத்தான், லீவுல அப்பா புது ஸ்கூட்டி வாங்கித் தந்தாங்க.. ட்ரைவிங் ஸ்கூல் போய் ஓட்டக் கத்துக்கிட்டேன்.. இப்போ அதுல தான் வந்தேன்.. வெளிய நிற்கிற பிங்க் கலர் ஸ்கூட்டி என்னோடது தான்" என்று இடையிடையே வீசியைப் பார்த்துக்கொண்டே பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
சிவனேஸ்வரனிடமிருந்து ஏமாற்றமாய் ஒரு "ஓஹோ" வந்தது.
பின், "ரிசல்ட் பார்த்தேன்.. முன்ன சொன்ன மாதிரி என்ஜினீயரிங்கே அப்பிளை பண்ணிடு ஷ்ரதா!.. மாமாக்கிட்ட பேசினேன்; அவர் சிவில் என்ஜினீயரிங் சேர்ப்போம்னு சொன்னாரு.. உனக்கு சிவில் ஓகே தானே ஷ்ரதா?" என்றவன் கேட்டதும், 'சிவிலோ தவிலோ என்னவாவது படிக்கிறேன்.. சும்மா கேள்விக்கேட்டு கழுத்தறுக்காதீங்க அத்தான்' என்று மனசாட்சிக்கு விரோதமில்லாமல் அகவுலகில் பதிலளித்தவள், புறவுலகில் விரோதமாக, "ஓகே தான் அத்தான்" என்றுவிட்டு மீண்டும் வீசியைப் பார்த்தாள்.
இருவரையும் கவனித்துக் கொண்டிருந்த வீசி, "ஸ்டோரி புக்ஸ் அந்தப் பக்கம்" என்று கைகாட்டினான்.
அவளும் இப்போது என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டே கதைப்புத்தகங்கள் இருக்கும் கட்டிற்குள் சென்றாள். அப்போது தான் அவள் மூளை காட்டிற்குள் யோசனைப்பூ ஒன்று பூத்தது.
இங்கு நண்பர்கள் இருவரும் புதிதாக சந்தையில் இறக்குமதி ஆகியிருந்த பைக்குகளை உரையாடலிலேயே உதிரிபாகங்கள் ஆக்கிக்கொண்டிருந்தார்கள்.
பத்து நிமிடங்கள் கழித்து சரியாக பதினைந்து புத்தகங்களை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வந்தவள், அவற்றை நோட்டில் வரிசை மாற்றி குறித்து வைக்கப் போனவனை, "இல்ல! இல்ல! இதே வரிசையில தலைப்பு எழுதுங்க" என்று தடுத்தாள். அவனும் அதன்படியே செய்தான்.
பிறகு மீண்டும் உள்ளேப்போய் அடுத்த பதினைந்து செட் புத்தகங்களை தூக்கிக்கொண்டு வந்தாள். அதையும் வரிசை மாற்றாமலேயே நோட்டில் தலைப்பெழுதிக்கொள்ள சொன்னாள். வீசியும் பொறுப்பாய் எழுதிவைத்துக்கொண்டான்.
சிவனேஸ்வரன், "இவ்வளவு புக்ஸையும் வாசிச்சிருவியா நீ?" என்று திகைப்பாக கேட்டபோது, "ம்ம் வாசிச்சிருவேன் அத்தான்" என்று முறுவலித்தவள், திடீரென ஞாபகம் வந்தவள் போல் வீசியிடம், "ஒரு புக் மட்டும் மேல உயரத்துல இருக்கு.. எடுத்துக் கொடுக்க கொஞ்சம் வர்றீங்களா?" என்றாள்.
வீசிக்கு முன் சிவனேஸ்வரன் எழவும் ஷ்ரதா பதற்றமாக, "நீங்க உட்காருங்க அத்தான்.. நாமெல்லாம் முதலாளிங்க.. வேலைக்காரங்க இருக்கும்போது வேலை செய்யக் கூடாது.. அவரு எடுத்துத் தருவாரு.." என்று தடுத்தாள்.
ஷ்ரதாவின் 'நாமெல்லாம் முதலாளிங்க' என்ற வரியில் சிவனேஸ்வரன் ஜிவ்வென்று மேகங்களுக்கிடையே பறந்த அதே வேளையில், வீசி 'வேலைக்காரங்க' என்ற பதத்தில் முகம் கருத்துப்போனான்.
'காட்டிவிட்டாள் அவள் பணக்காரப் புத்தியை.. அழகாய் வளைந்து நெளிந்து ஆடிக்கொண்டிருந்த பாம்பு கக்கிவிட்டது அதன் விஷத்தை.. இவளைப்போய் வெகுளி என்று நினைத்தேனே.. அகம்பாவி..' என்று புலம்பித் தள்ளினான்.
உயரத்தில் இருக்கும் புத்தகத்தை காண்பிப்பதற்காக அவள் ஒயிலாக முன்னே நடந்து செல்ல, அவள் முதுகில் அசைந்தாடிய கார்கூந்தலை பார்த்துக்கொண்டே வந்தவன், 'அவள் இருளடைந்த எண்ணங்களின் குறியீடு இது' என்று கருதிக் கொண்டான்.
மூன்றாம் கட்டுக்குள் அவன் நுழைந்த உடனேயே, தோளில் தொங்கி தொடையை தட்டிய தனது ரவுடி கைப்பையைத் திறந்து, அவனிடம் டைரிமில்க் சாக்லேட்டை நீட்டினாள் அவள்.
அவன் விளங்காமல் பார்த்த போது, "மேத்ஸ்ல நான் நூத்தித் தொண்ணூறு சார்.. நீங்க தான் அதுக்கு காரணம்.. தான்க் யூ சார்" என்று அவன் கையைப் பிடித்து சாக்லேட்டை வைத்தாள்.
அவன் வேண்டாவெறுப்பாய் முகத்தைத் திருப்பினான். அவளுக்கு அதற்கு காரணம் புரியாமல் இல்லை. "வேலைக்காரர்னு ரொம்ப அலட்சியமா பேசிட்டதுக்கு சாரி சார்.. உங்கக்கூட தனியா பேசணுங்கிறதுக்காக தான் அப்படி வெடுக்குன்னு பேசிட்டேன்.. அப்புறம் இப்போ நான் எடுத்துட்டுப் போகிற புத்தக லிஸ்ட்டை நிதானமா ஒரு தடவை வாசிச்சிப் பாருங்க சார்.. என் மனசு உங்களுக்குப் புரியும்" என்றுவிட்டு கைக்கெட்டும் உயரத்தில் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு கல்லாப்பகுதிக்கு சென்று விட்டாள்.
விதிர்த்துப் போயிருந்தவன் தலையை கோதிக்கொண்டு வெளியே வந்து, புத்தகங்கள் அனைத்தையும் எடுத்துச் செல்வதற்கு வசதியாக தாம்புப்போட்டு இறுக்கமாகக் கட்டினான்.
பின், இரண்டு கட்டு புத்தகங்களையும் ஸ்கூட்டியில் அவள் கால் வைக்கும் பகுதியில் சென்று ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்துவிட்டு, சிவனேஸ்வரனின் அருகில் வந்து நின்று கொண்டான்.
ஷ்ரதா கிளம்பும் முன்பு வாசலில் நின்ற சிவனேஸ்வரனுக்கு 'பை' காட்டிவிட்டுப் போனாள்.
வீசியின் ஆழ்மனம் சத்தமாக சொன்னது சிவனேஸ்வரனிடம், 'சரியான டிராமா குயின் இவ'.
பாபம்! அவனுக்குத் தான் அது கேட்கவில்லை.
வீசி மீண்டும் கல்லாவில் வந்து உட்கார்ந்தபோது சிவனேஸ்வரன் ஷ்ரதாவை பற்றித்தான் வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தான். இடையில், "சாரிடா வீசி, ஷ்ரதா ஒரு குழந்தை மாதிரி.. தெரியாம பேசிட்டா.. அவ பேசினதை எல்லாம் பெருசா எடுத்துக்காதடா" என்று அவள் பேசியதற்கும் மன்னிப்புக் கேட்டான்.
வீசி அந்த மன்னிப்பை காதில் ஏற்றிக்கொள்ளவில்லை. கையருகிலிருந்த கனத்த நோட்டில் தான் கண்களை ஓடவிட்டுக் கொண்டிருந்தான். அவள் எடுத்துச்சென்ற புத்தக தலைப்புகள் எல்லாம் வரிசையாக, ஒன்றன் கீழ் ஒன்றாக, எழுதப்பட்டிருந்தன. மனதிற்குள் வாசித்தான்.
*********************
என்னவென்று நான் சொல்ல
இமையோரம் உன் நினைவு
தீயாக உன்னைக் கண்டேன்
காதலாகி கசிந்துருகி
மாறியது நெஞ்சம்
தன்னந்தனிமையிலே
சொல்லத்தான் நினைக்கிறேன்
உன்னை விட ஓர் உறவா?
விடிகின்ற வேளையிலே
கனா கண்டேன்
உன்னோடு நான்
நிலா வெளியில்
நிழலோடு நிழலாக
நதியோரம் நடந்த போது
நேசம் மட்டும் நெஞ்சினிலே.
ஓரவிழி பார்வையிலே
பூவே மயங்காதே
சொன்னது நீதானா?
உயிரே உன்னைத்தேடி
அலை பாயுது மனசு
கன்னத்தில் முத்தமிட்டால்
வானம் வசப்படும்
காத்திருந்தேன் காற்றினிலே
பூகோலம் போட வா!
மனதோடு பேசவா!
நீயின்றி நான் இல்லை
எண்ணியிருந்தது ஈடேற
காற்றோடு தூது விட்டேன்
வைகறையே வந்துவிடு
உன் மனதை தந்துவிடு!
இப்படிக்கு உன் இதயம்
*********************
சிவனேஸ்வரன் இன்னும் அவனுக்கு முன்னால் உட்கார்ந்து ஷ்ரதாவை பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தான்.
"ஷ்ரதா ஒரு தேவதை.. அவளை மாதிரி ஒரு அழகை நிச்சயமா எங்கேயும் சந்திக்க முடியாது வீசி.. யோசிச்சிப்பாரு! அந்த அழகு மொத்தமும் எனக்கே சொந்தம்"
![]()
காதல் கணம் கூடும்…
ஷ்ரதா எடுத்திருந்தப் புத்தகங்களில் கடைசி புத்தகம் தவிர்த்து மற்ற அனைத்தும் முத்துலட்சுமி ராகவன் அம்மாவுடைய புத்தகங்கள் ப்ரெண்ட்ஸ். அவர்களுக்கு நான் செலுத்தும் சிறுஅஞ்சலியாக இந்த அத்தியாயத்தை கருதுகிறேன்.
அப்புறம் சென்ற அத்தியாயத்திற்கு கருத்துத்திரியில் 500-ஆவது கருத்தை பதிவிட்டிருந்த தோழி அரும்பு அவர்களுக்கு எனது அன்பும்❤️ கைதட்டல்களும்👏.
இதேபோல் தளத்தில் 1000-ஆவது கருத்தை பதிவிடுபவர்களுக்கு எனது அன்போடு முத்தங்களும் கிடைக்கும். பார்ப்போம் யார் அந்த அதிர்ஷ்டசாலியென்று.
என்றும் உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.
கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️
கீழே உள்ளதில் 'பச்சை'யென்று எழுதியிருப்பதை சரியாக கண்டுபிடித்து தொடுங்கள் பார்ப்போம்.
கருத்துத்திரி,
பசசை பச்ச பச்சை பட்சை
(முக்கியக் குறிப்பு: கருத்துத் திரியில் அல்லாமல் இங்கு கதை திரியில் வந்து கருத்து பதிவிடுபவர்கள் எல்லாம் அந்நியனால் கருடபுராணத்தின்படி தண்டிக்கப்படுவார்களாம். ஏனென்றால் அவர்கள் எல்லாம் ரூல்ஸை மீறியவர்களாம்😂.