Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GY NOVEL நானும் ஆன்டி ஹீரோ தான் - Tamil Novel

Status
Not open for further replies.

Kamali Ayappa

Member
Vannangal Writer
Messages
51
Reaction score
91
Points
18
அவனுக்கு எதிராகத் திட்டம் தீட்டிக்கொண்டிருந்த நேரம் அவன் திடுமென பின்னால் நிற்கவும், அவள் மூச்சின் வேகம் அதிகமாகத் தான் ஆனது. பதட்டத்தில் சில வியர்வைத் துளிகள் துளிர்த்தது.

மனம் ‘ஐயோ. இவன் எதையும் கேட்டிருக்கக் கூடாது’ என்று வேண்டுதல் வைக்க, அதே நேரம் மூளையோ, ‘இவன் எதிலிருந்து கேட்டிருப்பான். என்னவெல்லாம் கேட்டிருப்பான், என்ன சொல்லிச் சமாளிப்பது’ என்றெல்லாம் யோசிக்கத்தொடங்கியிருக்க, அவள் இருவிழிகளோ அவன் முகத்தில் ஏதேனும் மாறுதல் தெரிகிறதா என்று ஆராய்ந்துக்கொண்டிருந்தன.

‘அப்படி எதுவும் அவன் முகத்தில் வித்தியாசமானப் பாவனைகள் இல்லை. எப்பொழுதும் உன்னைப் பார்க்கும் அதே ஆசைப் பார்வை தான்’ என்று கண்கள் மூளைக்குத் தகவல் சொல்ல, மூளையோ, ‘அவன் எதையும் கேட்டு சந்தேகிக்கவில்லை’ என்று முடிவு செய்துகொண்டது. “என் வேண்டுதல் நிறைவேறிவிட்டது” என்று குதூகலித்தது மனம்.

லெனின் அத்தனை எளிதில் எந்த உணர்வுகளையும் முகத்தில் காட்டாதவன் என்பதை மறந்து மழுங்கிப் போய் அந்தக் குதூகலிப்பில் பங்குக் கொண்டது அவள் மூளையும்.

“லெனின். என்ன இங்க? இது லேடீஸ் ஸ்டாஃப் தங்குற இடம். இங்க எப்டி நீ வந்த? உள்ள விட மாட்டாங்களே” என்று அனிக்கா கேட்க, “என்னை உள்ள விட மாட்டேன்’ன்னு சொல்லிட்டு எவனாவது இங்க வேலைல இருக்க முடியுமா? இந்த விடுதி கூட என் காலேஜ் கேம்பஸ் உள்ள தான இருக்கு” என்று சொல்ல, மானசீகமாய் தன் தலையில் ஒரு கொட்டு வைத்துக்கொண்டாள் அனிக்கா.

இல்லை. மழுங்கிய புத்தி இன்னமும் கூடக் கூர்மையாகவில்லை. அதைத்தான் கொட்டிக் கூர்மையாக்க முயற்சித்துக்கொண்டிருந்தாள் போலும்.

ஆனால், அவனின் மூளையோடு சேர்த்து, கண்களும், காதுகளும் கூட கூர்மையாகத் தான் இருந்தது.

தளிர் தன்னிடம் அனிக்கா தனியாகப் பேசியதாகச் சொன்ன மாத்திரத்திலிருந்து அனிக்கா விடயத்தில் அதிக்கூர்மையாக மாறியது அவன் மூளை.

அவன் இங்கு அவளைக் காண வரும்போது, ‘அந்த மெடிக்கல் செக்-அப்க்கு பின்னாடி என்ன தில்லு முள்ளு இருக்கு' என்ற வார்த்தையைக் கேட்ட நொடியிலிருந்து அவன் செவிகள் கூர்மையாகியது என்றால், அவனைக் கண்டதும் அவள் பதறுவதையும், தடுமாறுவதையும் பார்த்ததும் கூர்மையானது பார்வை.

அவள் அலைபேசியில் பேசுவதைக் கேட்டதும் அவளுக்கு அந்த மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னாலிருக்கும் திட்டங்கள் எதுவும் தெரியவில்லை என்று உறுதியானது.

ஆனால், ‘ஏதோ ஒரு பெண்ணைக் கடத்தப் போவதாகப் பேசிக்கொண்டிருந்தாளே! யாராக இருக்கும்? ஒருவேளை, தான் இன்று இரவு இந்த விடுதியிலிருந்து ஒரு மாணவியைக் கடத்தத் திட்டமிட்டிருக்கிறோமே! அந்தப் பெண்ணையா?’ என்று அவனே ஒரு கேள்வியை முன்வைத்து, ‘மெடிக்கல் செக்-அப்பிற்கு பின்னாலிருக்கும் திட்டங்களே அவளுக்குத் தெரியாத போது, அந்தப் பெண்ணைக் கடத்துவதைப் பற்றித் தெரியவாய்ப்பில்லை’ என்று பதிலும் சொல்லிக் கொண்டான்.

‘ஆனால்? வேறு யாரைக் கடத்தத் திட்டம்?’ என்று யோசிக்கையில் பொறி தட்டியது. என்றுமில்லாமல் அனிக்கா தளிரிடம் பேசியிருக்கிறாளே! ஒருவேளை தளிரைக் கடத்தத் திட்டமா?

அவனுக்குள்ளும் கேள்விக்குறி தான்.

ஆனால்? எதற்காக?

இந்தக் கேள்விக்கு அவன் அதிகம் யோசிக்க வேண்டியதே இல்லை. அனிக்கா தன் அலைபேசி பேச்சுக்கு நடுவில் ‘அண்ணா’ என்று அழைத்தது நினைவுக்கு வந்தபோதே ‘எதற்காக’ என்பதற்குப் பதில் கிட்டியது.

தன் தந்தையிடமிருந்து தலைமையைப் பறிப்பது தானே அவள் அண்ணன்களின் குறிக்கோள்.

‘அப்பாவுக்கும் தளிருக்கும் இருக்கும் பிணைப்பு தெரிந்து, அவளைக் கடத்தி வைத்து அவரை மிரட்டி, அவரை இந்தத் தொழிலிலிருந்து ஒதுங்க வைப்பது தான் அவர்கள் திட்டமாக இருக்கும். அவரும் ஒதுங்கி, அவர் மகனாகத் தன்னையும் அந்தப் பக்கம் தலை வைத்து படுக்க வேண்டாம் என்று கட்டளையிடுவார் என்று எண்ணி இந்தத் திட்டத்தைத் தீட்டியிருக்கக் கூடும்’ என்று புரிந்துக்கொண்டான் லெனின்.

“சரி சரி. எதுக்கு இங்க வந்த லெனின்?” என்று அனிக்கா தன்னை நிலைப்படுத்திக்கொண்டு கேள்விக் கேட்பதற்குள் இத்தனையும் யோசித்து முடித்திருந்தான் லெனின். அவன் யோசிப்பது எல்லாம் முகத்தில் பிரதிபலித்துவிட்டால் அவன் லெனின் நிரஞ்சன் அல்லவே.

“எதுக்கு வந்தேனா? உன் கூட ஒரு காஃபி சாப்பிடலாம்’ன்னு தான்” என்று சொல்ல, “என்ன?” என்றாள் அனிக்கா.

ஒருவேளை, அவன் நினைத்தது போல் தான் அவர்கள் திட்டம் தீட்டியிருந்தார்கள் என்றால், அது அவனுக்குப் பயனுள்ளது தானே. தளிரைக் கடத்தி, அதனால் சிங்கமுத்து விலகிக்கொண்டால் அது லெனினுக்குச் சாதகமானது தானே. சிங்கமுத்து சொல்லி லெனினும் விலகிவிடுவான் என்று அனிக்காவின் அண்ணன்கள் எண்ணினாலும், ‘லெனினைப்’ பற்றி அதிகம் தெரிந்தவன் ‘லெனின்’ தானே.

அவர்களின் திட்டத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள எண்ணி, அவன் எதையுமே கேட்காதது போல் அனிக்காவிடம் நடந்துக்கொண்டான்.

“ஆமா. நீ ஏதோ என்னைப் பத்தியும், என் ரௌடிசம் பத்தியும் தளிர் கிட்ட பேசி ரொம்ப கஷ்டப்பட்டன்னு கேள்விப்பட்டேன். நீ கஷ்டப்பட்டு பேசுனன்னு கேட்டு நான் அப்டியே இருக்க முடியுமா? அதான் பார்க்க வந்துட்டேன்” என்று இருக்கைகளைக் கால் சட்டைப்பையில் விட்டுக்கொண்டு, தலை சாய்த்து சொன்னவனைக் கண்டு, கொஞ்சமாக மயங்கினாள் தான்.

ஆயினும், மயங்கி உடனேயே தெளியும் திறன் இருந்ததே அவளிடம். இல்லையெனில், எப்பொழுதோ லெனினிடம் மொத்தமாக விழுந்து, எழ முடியாமல், அவனோடு மொத்த வாழ்க்கையையும் கழிக்கத் தயாராகியிருப்பாளே.

தெளிந்தவள், அவள் இரவு உடையாக அணிந்திருக்கும் பிங்க் நிற ஸ்கர்ட்டை இருபக்கமும் பிடித்துக்கொண்டு, பம்பரம் போல் ஒரு சுற்றுச் சுற்றி, “பார்த்தாச்சா? கிளம்பலாமே!” என்றாள்.

அவளைப் பார்த்துப் புன்னகைத்தவன், “பார்த்துட்டு அப்படியே போகவா இவ்ளோ தூரம் வரணும்? வாயேன். ஒரே ஒரு எக்ஸ்ப்ரெஸோ?” என்று கண்கள் சுருக்கிக் கேட்டும் அவளால் மறுக்க முடிந்தது ஆச்சரியம் தான்.

“மணி நைட் பத்து!” என்று அவள் பலமாய் ஒரு காரணத்தைப் பிடித்துக்கொண்டு நிற்க, “இன்னும் கடை மூடியிருக்க மாட்டாங்க” என்றான் அவன்.

“அதுக்கு சொல்லல...” என்றவாறே, அவனை மேலும் கீழும் பார்த்தவள், “என்னைக்கும் இல்லாம இன்னைக்கு நைட் பத்து மணிக்கு வந்து தனியா கூப்பிட்டா!!!” என்று பேசுவதை நிறுத்திவிட்டு பார்க்க, புன்னகைத்தான் அவன்.

“அனிக்கா. ஐ லவ் யு. அப்டி இருக்கப்போ, உன்னைக் கொலை எல்லாம் பண்ண மாட்டேன். வேற என்ன பண்ணிடப் போறேன்?” என்றவன், அவள் காதருகில் சென்று, “ரேப்-ஆஹ்?” என்று கேட்க பதிலளிக்காமல் நின்றாள் அனிக்கா.

“ஒருவேள. நான் அப்படி பண்ணா கூட, ‘இவன் என்ன ரேப் பண்ணிட்டான். இவனைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்’ன்னு நீ சொல்லுவியா என்ன? நீ அப்டி இல்லன்னு எனக்குத் தெரியும். நீ அப்டி இருந்திருந்தா எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கவும் பிடிக்காது. அப்புறம் அதைப் பண்ணி கூட எனக்கு என்ன யூஸ்” என்று புருவம் உயர்த்தினான்.

“ஆனாலும்! ஏதோ தப்பா இருக்குமோன்னு தான் எனக்குத் தோணுது! உன் பார்வை சரி இல்லையே. என்னை நேரா பார்க்காம அங்கயும் இங்கயும் சுத்துது. ஏதோ தப்பு பண்ணப் போற” என்று யோசனையோடு அவள் சொல்ல, “ஹாஹா. நீ எந்தத் தப்பை நான் பண்ணுவேன்னு யோசிக்கறியோ, அந்தத் தப்பை நான் தான் பண்ண மாட்டேன்னு சொன்னேனே.

லுக் அனிக்கா. எனக்கு உன் கிட்ட இருந்து வேண்டியது செக்ஸ் இல்ல. அது தான் வேணும்ன்னா, எப்போவோ வேற பொண்ணைத் தேடிப் போயிருப்பேனே. இப்படி எப்போவும் அதிகமா யோசிக்கற அனிக்கா கிட்ட ஒரு கப் காஃபிக்காக கெஞ்சிட்டு நிற்க மாட்டேன்” என்றான் லெனின்.

“ஷட் அப் லெனின் நிரஞ்சன். நீ அதெல்லாம் செய்ய மாட்டேன்னு எனக்குத் தெரியும். இந்தத் தொழிலை மட்டும் விட்டுட்டா உன்ன கல்யாணம் பண்ணிக்கறேன்னு நான் தான் சொன்னேனே. நீ இப்டி பண்ணுவேன்னு நெனச்சா நான் எப்டி அதைச் சொல்லியிருப்பேன்” என்று அனிக்கா கேட்க, “அப்போ வேற என்ன தப்பு?” என்றான் லெனின்.

“ம்ம்ம்! எதுக்கு திடீர்ன்னு இந்த ஃப்ரீ செக்-அப்? அதுக்குப் பின்னாடி எதுவும் ப்ளான் இருக்கா? அதை வச்சி தான் எதுவும் தப்பு பண்ணப் போறியா?” என்று அவள் கண்டுபிடிக்காத விஷயத்தை அவனிடமே கேட்க, “எதுக்குத் திடீர்ன்னு நீ இன்னைக்கு தளிர் கிட்ட பேசுன? எதுவும் தப்பு பண்றியா அனிக்கா?” என்று விஷயம் தெரிந்தும் கேட்டான் அவன்.

அவள் கேட்கும் கேள்வியின் பதில் அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று அவளின் அலைபேசி உரையாடலில் இருந்து தெரிந்துக்கொண்டதால் அவன் பதறாமல் நின்றான். அவன் கேட்கும் கேள்வியின் பதில், தன் அலைபேசி உரையாடல் மூலம் அவனுக்குத் தெரிந்திருக்குமோ என்ற ஐயத்தால் அவள் பதறினாள்.

ஆயினும், தான் தெரிந்துக்கொண்டேன் என்று அவளுக்குத் தெளிவுப்படுத்த விரும்பாமல், “நீ எதுவும் பண்ண மாட்டன்னு எனக்குத் தெரியும். நீயும் அப்டியே நம்பு. அட்லீஸ்ட், ஒரு காஃபி குடிச்சிட்டு திரும்புற வரைக்கும்” என்று கை நீட்டினான் அவன்.

“காஃபிக்காக மட்டும். கல்யாணத்துக்காக இல்ல” என்று அவன் நீட்டிய கையைப் பிடித்தாள் அவள்.

அனிக்காவோடு, அந்த விடுதியை விட்டு வெளியேறி, காரில் ஏறியதும், ஒரு எண்ணிற்கு, “இப்போ போங்க” என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, காஃபி ஷாப் நோக்கி வாகனத்தைச் செலுத்தலானான்.

அவன் இங்கு வந்ததன் முக்கியக் காரணமே, அவனது திட்டங்கள் குறித்து அனிக்காவுக்கு ஏதேனும் தெரிந்திருக்குமா என்று தெரிந்துக்கொள்ளத் தான். அவளுக்கு எதுவும் தெரிந்துவிடவில்லை என்பதோடு சேர்த்து, அவள் சந்தேகிக்கிறாள் என்றும் தெரிந்துக்கொண்டான்.

அவன் திட்டத்தின் அடுத்தக் கட்டத்தை, அந்த விடுதியில் செயல்படுத்த வேண்டியிருந்ததால், ஏற்கனவே இதுகுறித்து சந்தேகிக்கும் அனிக்காவை அங்கிருந்து வெளியே அழைத்துச் சென்று, அந்நேரத்தில் அவன் ஆட்களை வைத்து விடுதியில் இருந்த வேலையை முடித்துவிட நினைத்தான் லெனின்.

ஆளுக்கு ஒரு காஃபி வாங்கி வந்து, எதிரெதிர் இருக்கையில் அமர்ந்திருந்தனர் இருவரும்.

இரவு உடையாக அணிந்திருந்த டீ-ஷர்ட் மற்றும் ஸ்கர்ட் உடன் வந்திருந்ததால், அந்த ஆடம்பர காஃபி டேவில் இருந்த ஏசி குளிர் அவள் உடலுள் ஊடுருவியது. அந்தக் குளிரைப் போக்கும் விதம், தொண்டைக்குள் இதமாக இறங்கியது அவளுக்குப் பிடித்த காஃபி.

“அனிக்கா. உனக்கு என்னைப் பிடிக்குமா? லெனியை விடு. நிரஞ்சனா பிடிக்குமா?” என்று லெனின் கேட்க, “நான் எதை விட சொன்னேனோ அதை விட்டுட்டா லெனின் நிரஞ்சன மொத்தமா பிடிக்கும்” என்றாள் அவள்.

“ஒருவேள. எனக்கு அதுவும் வேணும். நீயும் வேணும்ன்னு அடம் பிடிச்சா?” என்று லெனின் கேட்க, “உனக்கு அது வேணும்ன்னா, எனக்கு நீ வேணாம்ன்னு அடம் பிடிக்க எனக்கும் தெரியும்” என்றாள் அனிக்கா.

“என்ன வேணாம்ன்னு சொல்லிட்டு வேற யாரையும் கல்யாணம் பண்ணிப்பியா?” என்று லெனின் கேட்க, “நான் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கற வரை, நான் விட சொன்னதை விடாம இருப்பியா என்ன?” என்றாள் அவள் பேச்சில் விட்டுக்கொடுக்காமல்.

“ஒவ்வொரு பேச்சுக்கும் பதில் பேச்சுப் பேசுவியா?” என்று லெனின் கேட்க, “அப்டி பேசாட்டி லெனின் நிரஞ்சனுக்கு என்னைப் பிடிக்குமா என்ன?” என்று கேட்டு அவள் சிரிக்க, அவள் சிரிப்பில் அவனும் இணைந்துக்கொண்டான்.

அந்த அறுபது நொடிகள், அவர்கள் சிரித்த அந்த ஒரு நிமிடம், அவர்கள் கண்ணிலும் கருத்திலும் அவர்களுக்கு எதிரில் இருப்பவர்கள் மட்டுமே இருந்தனர். அந்தச் சிரிப்பில் அத்தனைத் தூய்மை.

காஃபிக்கு அடுத்தபடியாய் திகட்டாத ஒன்றாய் மாறிப்போனான் லெனின். சிரித்துக்கொண்டே, ஒரு மிடறு காஃபியை முழுங்கியவனுக்கு அந்த நொடி, அந்தக் காஃபி இதமான ஒன்றாய் மாறிப்போனது, அவள் சிரிப்புக்கு அடுத்தபடியாக.

எல்லாம் ஒரு நிமிடம். ஒரே ஒரு நிமிடம். அடுத்த நிமிடம், லெனின் சிரிப்பிலிருந்த தூய்மை கரைந்தது.

அனிக்கா முகத்தில் இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கும் சிரிப்பைப் பார்த்தவன், “உனக்கு நடிக்கத் தெரியாது அனிக்கா” என்றான் அவளைப் பார்த்து.

அப்படிச் சொன்னவன் மூளைக்குள் அந்த நொடி ஓடிக்கொண்டிருந்ததெல்லாம், ‘அண்ணன்களுடன் சண்டை என்று சொல்லிவிட்டு, அண்ணன்களுடன் அலைபேசியில் தனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுகிறாளே. இத்தனை நாள் தன்னிடம் நடித்தாளோ!’ என்ற கேள்வி தான்.

அந்தக் கேள்வியின் பதிலை மட்டும் வெளியே சொன்னான்.

“என்ன?” என்று அனிக்கா விழிக்க, “நீ என்னைக் காதலிக்கறன்னு காட்டிக்க நினைக்கவே இல்ல. உள்ளுக்குள்ள என்னைக் காதலிக்கறது எனக்குத் தெரியக் கூடாதுன்னு மறைச்சு வச்சு நடிக்கத் தானே பார்த்த.

ஆனா, உனக்கு நடிக்கத் தெரியல. ஒரு கப் காஃபி போதுமானதா இருக்கே. நீ என்கூட இருக்கும் போது சிரிப்பன்னு தெரிஞ்சிக்க” என்று அவன் சொல்ல அவள் புன்னகை இன்னும் நீண்டது.

“நான் நினைச்சதை செய்வேன்” என்று அவள் சொல்ல, “பாப்போம். அப்படித் தான் தளிரும் சொன்னா” என்றான் லெனின்.

“ம்ம்ம். ஆமாம். நேத்து பேசும்போது தெரிஞ்சிக்கிட்டேன். உன்ன போலிஸ்ல போட்டுக் குடுக்கக் கூட தயங்க மாட்டா போல” என்று அனிக்கா உளற, அதைப் பிடித்துக்கொண்டான் லெனின்.

“அப்டியா? அப்டியா சொன்னா?” என்று லெனின் கேட்க, “அப்டி சொல்லல. ஆனா, உன்ன ஏதாவது கடத்தல் கேஸ்ல மாட்டிவிட்டா எத்தன வருஷம் ஜெயில்ன்னு கேட்டா” என்றாள் அனிக்கா.

அதன் பிறகு அமைதியாகவே இருவரும் மீதமிருந்த காஃபியைக் குடித்து முடித்தனர்.

காஃபியோடு, காதல் நொடிகளும் முடிந்தது.

மீண்டும் பழைய அமைதியுடன் விடுதி நோக்கிப் பயணித்தனர் இருவரும்.

:: :: :: :: :: :: :: ::
 
Status
Not open for further replies.
Top Bottom