Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL பாலைவன பைங்கிளியே - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
780
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

லரா ஸ்ரீ

New member
Vannangal Writer
Messages
15
Reaction score
17
Points
3
பாலைவன பைங்கிளியே!!!
1


வெண்பனிகள் கொண்டலை மூடிட இன்று பாற்கரன் சிலமணித்துளிகளாவது எட்டிப் பார்த்துவிட மாட்டானா என்ற ஏக்கத்தில் ஊர்மக்கள் கதிகலங்கித் தவித்திருக்க.. 'நிச்சயம் இப்பனியில் உறைந்து அப்படியே உறங்கி போய்விட மாட்டோமா' என அவளின் சிந்தனை மொத்தமும் மையக் குவியலாய் அவள் நெஞ்சை அறுத்துக் கொண்டிருந்தது.

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவள் மெல்ல தன் கருமை படர்ந்து சுருங்கிய கண்களை உருட்டி விழித்தபடி சிந்தையை கசக்கினாள்... 'எத்தனை முறை காப்பாற்றினாலும் அத்தனை முறையும் முயற்சி செய்வேன் என இரண்டாவது முறையாக படுக்கையில் விழுந்தவளை எண்ணி கலங்கிடாமல் இல்லை அவள் தாயுமானவர் சிதம்பரம்...

எங்கிருந்துதான் புது புது யுக்தியை கையாள்வாள் என் செவிலியர்கள் ஒருபுறம் கொதித்திருக்க, "பயப்படும் படி ஒன்றும் இல்லை" என்ற மருத்துவருக்கு வழக்கம் போல் நன்றியை செலுத்தியவர் தோள் துண்டின் தலைப்பை வாயில் வைத்து மௌனமாய் கரைந்தார்...

" ஐயா பொட்ட புள்ளைக்கு இம்புட்டு ஆங்காரம் ஆகாது... எதுக்கு இப்படி புதுசு புதுசா எதாச்சும் பண்ணிட்டு வந்து இப்படி படுக்கையில விழுகுது... நீங்க அதுக்கு என்ன குறை வச்சுட்டீக அடுத்த வாரம் ஊரை கூட்டி கண்ணாலம் வச்சுருக்கீக… இவ சோட்டு புள்ளைகலாம் ஏங்கி மருவுற வாழ்க்கை இவளுக்கு கிடைக்க போவுது.. புறவு எதுக்கு இந்த புள்ள இப்படி சாகத்துடிக்குது... ஆத்தா இல்லாத புள்ளைனு பொத்தி பொத்தி வளத்தீக..

அவ ஆத்தா புத்தியத்தான் காட்டுவா போலயே... இதோட இந்த புள்ளை நிறுத்துனாதா இதுக்கு புறவு எந்த சங்கடமும் சேராது.. இல்லாட்டி இத காப்பாத்துறதுக்கு நாங்க கொடுக்குற வைத்தியமே இதுக்கு வேற நோய்நொடிய கொடுத்திடும் பாத்துக்கோக" உரிமையாய் கடிந்துவிட்டு சென்றுவிட அவர் புள்ளியாய் மறையும் திசையையே வெறித்திருந்தார் சிதம்பரம்

சிதம்பரம் பார்க்க கரடுமுரடானவர்.. அவரின் சிறுபிராயமும் கரடுமுரடானது.. தட்டுத்தடுமாறி வாழ்ந்த அதே ஊரில் இன்று ஓரளவு தன்னை நிலைநாட்டிக் கொண்டு வாழ்பவர்…எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்... நல்லது கூறினாலும் கோபம்.. கூறாவிட்டாலும் கோபம்.. தான் நினைத்தது நடக்காவிட்டால் அவ்வளவுதான், கண்முன் நிற்பவர் கதி அதோ கதிதான்...

மனைவி மங்கலம் பக்கத்து ஊரிலிருந்து வாக்கப்பட்டு வந்தவள்… மங்கலம் சிதம்பரம் தம்பதி இடையே நடந்த வாய்தகராறில் சிதம்பரத்தை பயம் கொள்ள வைக்க விளையாட்டாய் தற்கொலை நாடகத்தை கையில் எடுக்க அது மெய்யாகிப் போனது..

மங்கலத்திற்கு வாய்க்கரிசி போட்ட கையோடு ஒரு வயது பிள்ளையை வளர்க்க போராடியவர் தான், இன்றும் அவள் உயிருக்கு ஊறு ஏதும் வந்துவிடக் கூடாதே என கண்ணும் கருத்துமாய் அடைகோழியாய் அமர்ந்து காத்து வருகிறார்... இருந்தும் எப்படியோ இது நடந்துவிட்டது...

நேற்று வைகறை வேளையில் கொல்லைப் புறத்தில் கிடந்த கயிற்று கட்டிலில் சிதம்பரம் உறங்கியிருந்தார்... உள்ளே உறங்கியிருந்தவள் தற்கொலைக்கு முயன்றிருக்க, அவள் பாலூட்டி வளர்த்து வந்த ஜந்தறிவு ஜீவன் அவளின் அப்புக்குட்டி பாத்திரங்களை உருட்டி சத்தமிட்டது... சின்ன சத்தம் என்றாலே முழித்துவிடும் சிதம்பரம் உள்ளே சென்று பார்க்க இம்முறை தப்பித்தாள் குந்தவி..

"ஐயா இந்த மருந்தை வாங்கி வாங்க புள்ளைக்கு கொடுக்கனும்" சிந்தையை கலைத்த செவிலியர் குரலில் நிதானம் பெற்றவர் எழுந்து சென்றார்...

குந்தவிக்கு டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது... "ஏலே இன்னும் எம்புட்டு காலத்துக்கு இப்படி மருந்து மாயத்தை குடிச்சுட்டு கிடப்ப... பேயாம அப்பன் காட்டுற மாப்பிள்ளைக்கு கழுத்த நீட்டி புள்ள குட்டிய பெத்துட்ட கிடக்காம.. நீ என்னடி இப்படி பண்ணிட்டு திரியறவ" பார்க்க வந்த அம்மையின் தாயான ஆச்சி பேச்சியோ முடிந்த மட்டும் பேசி அவள் மனதை மாற்ற முயற்சி செய்து கொண்டிருந்தார்...

"ஆச்சி நீ பேசாம கெட எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும்... ஓயாம இப்படி பேசிட்டிருந்த எங்கயாது ஓடிப்போயிருவேன் ஆமா"

"அய்யோ அய்யோ வீட்டுக்கு வெளக்கேத்துற மவராசியா இருப்பானு பாத்தா, வீட்ட கொலுத்துற குலநாசியா இருக்காளே" என்று தலைத்தையாய் அடித்து அழுது கூப்பாடு போட்டார் பேச்சியம்மாள்

"இந்தா கிழவி எதுக்கு இப்ப ஒப்பாரி வக்கிற அதான் உன் பேத்தி பொழச்சுட்டாள.. சும்மா இம்சையை கூட்டாம அரவமில்லாம இரு... பெரிய டாக்டரு வந்தாருனா உன் பேத்திக்கு முழுசா வைத்தியம் பாக்காம விரட்டி புடுவாரு" மருத்துவச்சியின் வார்த்தைகளில் ஆடிப்போன பேச்சி மௌனமாகிப் போனார்..

குந்தவியின் கண்கள் வழி வழிந்து கொண்டே இருந்தது உவர்ப்பு நீர்.. "இப்ப உசுர மாச்சிக்கிட்டு என்ன பன்ன போற.. எதுக்கு உன் ஐயன் கூட உரண்டையிழுக்குற… அவரு சொல்றதை கேட்டு உருப்படுற வழிய பாரு" என்ற மருதுவிடம்

"பேசாம போயிரு எல்லா எமக்குத் தெரியும்…" கடுகாய் வெடித்தாள்

"என்ன அப்பத்தா இந்த புள்ள இப்படி பேசிட்டு திரியுது.. எல்லா நேரமும் இப்படியே இதுக்கு காவல் காத்துட்டு இருக்க முடியுமா… நான் என் ஐயன்கிட்ட பேசி இப்பயே இந்த கண்ணாலத்த நிப்பாட்டுறேன்"

"மருது நீயும் ஏயா அவ கூட சரிக்கு சரியா நிக்குற... அதெல்லாம் மாத்தி புடலாம் அந்த கூறுகெட்ட சிறுக்கிய… நீ வீம்புக்காட்டாதய்யா" பேச்சியம்மாள் பேசி பேசியே அவனை சரிகட்டினாள்

'என்ன இந்த கழுதை இம்புட்டு உரமா இருக்கு.. இவ கூட என்ன பண்ண போறமோ கண்ணாலம் கட்டிக்கிட்டு' உள்ளூற ஊர்ந்த கவலையை பக்குவமாய் தன்னில் பத்திரப்படுத்திக் கொண்டான்…

மருதுவிற்கு குந்தவி என்றால் கொள்ளைப் பிரியம்… வீட்டிற்கு வரும் போதெல்லாம் ஒரக்கண்ணில் அவளை பார்த்து வழியாமல் ஒரு முறை கூட இருந்ததில்லை… இப்பொழுது திருமணத்தை நிறுத்துவேன் என்பது கூட வாய் வார்த்தைதான்...

இன்னும் ஒரு நாள் குந்தவியை மருத்துவமனையில் தங்கிடச் சொன்னார் பெரிய மருத்துவர் … மருதுவை காவலுக்கு வைத்த சிதம்பரமும் பேச்சியம்மாளும் வீட்டிற்கு நடையை கட்டினர்…

"மாப்ள பொண்ணு பத்திரம்.." என்று அடர்ந்து வளர்ந்திருந்த மீசையை அழுந்தத் தடவி குரலை உயர்த்தி கூற "ஆகட்டும் மாமா" என்றான் அடக்கமாய் கைகளை கட்டிக்கொண்டு…

"சரி சரி நான் வாரேன் சூதானமா இருங்க" கம்பீரமாய் கூற மீண்டும் "ஆகட்டும் மாமா" என்ற மருது 'ச் ச என்ன ஆளுயா பாத்தா பதினைஞ்சு வயசு புள்ளைக்கு அப்பன் மாதிரியா இருக்கான் என்ன உடம்பு என்னா கம்பீரம்.. ஹூம்' என பெருமூச்சை இழுத்தான்

மருத்துவமனையிலிருந்து அம்பாசிடர் காரில் ஏறியவர்கள் ஒரு வழியாய் உருண்டு போய் ஊரை அடைந்தனர்.. நான் உங்களை கூட்டியாந்தது கோதாவரிக்கு தெரியாம பாத்துகிடுங்க" என்ற சிதம்பரத்திடம்
"ஆட்டும் மாப்ள" என்ற பேச்சி கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது..

என்ன செய்ய வாழ வேண்டிய வயதிலேயே வாய்க்கரசி போட்டு அனுப்பிய தன் மகள் மங்கலத்தை நினைத்து இந்த வயதிலும் கலங்கினார்.. எந்த வயதாயினும் பெத்த மனம் பித்துதானே…

"சரி சரி இங்கனயே இறங்கிக்கோக புறவு அவ பாத்தா ஆட்டமா ஆடுவா"

சரியென தலையாட்டி இறங்கிய பேச்சியின் மனம் கோதாவரியை நினைத்தது.. 'நான் பாத்து கட்டி வச்ச சிறுக்கி இன்னைக்கு என்னயவே வந்து பாருங்குறா என்னத்த சொல்ல' என்று நினைக்கும் போதே கண்களில் வழிந்த நீரை முந்தானை தலைப்பில் துடைத்தும் மூக்கை சிந்தியும் வீட்டிற்கு செல்ல மெல்ல மெல்ல எட்டு வைத்தார்...

ஊரெல்லாம் மேய்ந்த கோழிகளும் சேவல்களும் தன் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்த நேரமது.. "இன்னும் இந்த மனுசனை காணல… என்னேரமும் புள்ளை புள்ளைனு கட்டிட்டு அழறாக… வரட்டும் இன்னைக்கு இதுக்கு பேசி முடிவு கட்டுறேன்" வாசலை எதிர்நேக்கியபடியே வாய்க்கு வந்த வார்த்தைகளால் கருவிக்கொண்டிருந்தாள் கோதாவரி…

வண்டியின் சத்தம் அருகில் கேட்க "வந்துட்டான் மனுசன்" என்றவள் கலைந்து கிடந்த கேசத்தை ஒன்றாக வாரி கொண்டையிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டாள்…

காலையிலிருந்து அலைந்த கலைப்பில் சோர்வாய் வந்தமர்ந்தவன் "கோதா.. கோதா" என அழைத்தான்

கேட்டும் கேட்காதவளாய் உள்ளறையில் இருந்தாள்…

"என்ன கோதா கூப்டுட்டே இருக்கேன் நீ இங்கன என்ன பண்றவ" என்றவன் அவள் படுக்கையின் அருகில் சென்று அமர்ந்து அவள் கைகளைப் பிடித்தான்

"விடுக மாமா கையை"‌ முகத்தை சிலுப்பினாள்

"ஏன் இப்ப வீஞ்சிக்கிட்டு திரியுறவ" மெலிதாக முகத்தை சுழித்தான்

அவனின் மெலிய கோபத்தை உணர்ந்தவள் மெல்ல மலையிறிங்கினாள்

"புறவு எப்படி இருக்கறதாம் நீங்க வெள்ளனே வாறேன் வெளிய போவோம்னு சொல்லிபுட்டு இப்புடி ரா'வேளைக்கு வூட்டுக்கு வந்தா கொஞ்சுவாகளாக்கும்" வார்த்தைகளில் தேனைத்தடவி குழைந்தாள்

"அந்த உருப்படாத கழுதையை அஸ்பத்துரியில போய் பாத்துட்டு வாறேன்…" கோபத்தில் வெடித்தார்

கோபத்தை தணிக்க விழைந்தவள் எழுந்து அவன் கைகளை பற்றிக் கொண்டாள்

"எதுக்கு இம்புட்டு கோவம்… கழுதை எப்படியோ போய் தொலையுதுனு விடுவீகளா" பேசிக்கொண்டே அவன் மார்பை தஞ்சமடைந்தவள் கிறக்கமாய் பார்வை பார்த்தாள்...

"சரி சரி அந்த பேச்சை விட்டுத்தள்ளு அப்றம் இன்னைக்கென்ன இம்புட்டு அழகா இருக்கவ" கேசத்தில் விளைவித்திருந்த மல்லியின் மணத்தை நாசியில் ஏற்றிக் கொண்டே கேட்டான்

"எல்லாம் எம் மாமனுக்காகத்தான்... ஆனா என் மாமா தான் என்ன கண்டுகவனாங்குது" சலித்துக் கூறியவளை விழுங்கும் பார்வையில் பார்த்தவன் வாரி அணைத்துக்கொண்டான்

*****

ஆள் அரவமற்று தனித்திருந்த கட்டிடத்தில் நான்கு கட்டில்களை போட்டு பச்சை வண்ணத்தில் சாளரங்களுக்கு மாராப்பு அணிவித்து அதற்கு இரண்டு மருத்துவர் ஐந்து செவிலியர் என நியமித்து அதை அரசு மருத்துவமனையாய் மாற்றியிருந்தது அப்போது ஆட்சி செய்த சர்கார்….

இரண்டு மூன்று முறை சர்கார் மாறியும் அந்த மருத்துமனை மட்டும் மாறிய பாடில்லை… அவசரம் என்று செல்லும் மக்களுக்கு முதலுதவி மட்டுமே கிடைக்கும்.. முறையான சிகிச்சைக்கு வழியில்லாமல் அடுத்த ஊர் மருத்துவமனையைத்தான் நாடுவர் கிடும்பனூர் மக்கள்…

அந்த கட்டிடத்தின் கட்டிலில் தான் உறங்கிக்கொண்டிருந்தாள் குந்தவி… அடுத்த வாரம் நடக்கும் திருமணத்தை எண்ணி நடுநடுங்கிப் போயிருந்தாள்.. இரண்டாவது முறையாக உயிருக்கு பாதிப்பு ஏற்படாமல் ஊறு வைத்தவள் தன் தேவையில் கராராக இருந்தாள்… எல்லாம் இவளுக்கு வேண்டியது கிடைக்கத்தான்.. இரண்டு முறையும் தற்கொலை முயற்சிக்காக வீரியம் மிகுந்த முயற்சிகள் எதையும் முயற்சிக்கவில்லை.. மேலோட்டமாகவே தந்தையின் மன எண்ணத்தை ஓட்டிப்பார்த்து கொண்டாள்...‌

இவளின் வீராப்புகள் அனைத்தும் சிதம்பரத்திடமிருந்து வந்தது தானே அவரும் அவளோடு சரிக்கு சரியாய் தர்க்கம் செய்தார்… இதையெல்லாம் அசை போட்டவளுக்கு நித்திரா தேவி எங்கே எட்டிப்பார்த்தாள்..

சுற்றியெங்கும் வெறித்துப்பார்த்தாள் பல்லு போன கிழங்களே இவளுக்கு சமமாய் மற்ற கட்டில்களில் படுத்திருந்தனர்.. வலது புறம் இரண்டு கிழம் இடது புறம் இரண்டு கிழம் அவர்களைச் சுற்றி நடுத்தர வயது பெண்மணிகள் உறங்கியிருந்தனர்…

'எந்த நேரம் அந்த கோதா… ஹூம் பேர பாரு...கோதா….வரி… அவளை…" என்று சித்தியை திட்ட தொடங்கியவர் அதை முடிக்காமல் அவள் தந்தையிடம் தாவினாள்… 'அப்பாவாம் அப்பா… 'ச்சை' சொல்லவே கூசுது.. அந்த ஆளு எப்ப அந்த பொம்பளயை கண்ணாலம் பண்ணாகளோ அப்பவே என் நிம்மதி என் சந்தோஷம் எல்லாம் ஓடிருச்சு.. நானா எனக்கு அம்மா வேணும்னு கேட்டேன்… சொந்த வூட்லயே இருக்க பயந்து இப்படி நாடகமாடிட்டு திரியுறேன்..' என்று வெம்பினாள்..

'அந்த காலிப்பயத் தலைல என்ன கட்டி வச்சுட்டு, அவுக நிம்மதியா இருக்க பாக்குறாக.. இந்த கல்யாணத்துக்கு நான் ஒத்துக்க போறதே இல்ல... நான் அவனைத்தான் கட்டிக்கிவேன்' என்று மனத்தினுள் அணத்திக் கொண்டிருந்தாள்

அவள் சொல்லும் காலிப்பயல் மருது தான் அவளுக்காக மருத்துவமனையில் காவல் நிற்கிறான்… கோதாவரியின் தூரத்து சொந்தம்; கோதாவிற்கு தம்பி முறை… அவன் தலையில் கட்டி வைத்திட கோதாவிற்கு ஒன்றும் ஆசையெல்லாம் இல்லை.. அதுவாக அமைந்ததால் அமைதியாக இருக்கிறாள்.. ஆயினும் அதைத் தடுக்க முயற்சித்துதான் வருகிறாள்

*****

அதே நேரம் வீட்டிலும் கோதா அணத்தி எடுத்திருந்தாள் சிதம்பரத்தை… "அந்த சிறுக்கி உம்ம மானத்தை வாங்க பாக்குறா… அவ மட்டும் இந்த கண்ணாலத்தை கெடுத்துட்டா உங்க மானம் மருவாதை அம்புட்டும் போயிடும் நம்மால இந்த ஊருக்குள்ள தலை நிமிர முடியுமா"

"அடியே நீ வேற அடி வயித்துல புளியை கரைக்காத.. அவள அப்புடி பண்ண விடுவனா.. நீ எதும் புலம்பாத… அவ என் புள்ள நான் அதுக்கு இம்புட்டாவது நல்லது பண்ணனும்ல அதான்… அவ நல்லபடியா பொழச்சுப்பா"

கோதாவரிக்கு அவன் வார்த்தைகள் பத்திக்கொண்டு வந்தது… மெல்ல அவனை தன் பக்கம் இழுக்க அவள் மார்பில் தலை சாய்த்தாள்…

"சரி அதெல்லாம் தூரம் போடு.. நாம ஒன்னுமன்னா இருந்து எம்புட்டு நாளாகுதுனு அம்மணிக்கு நினைப்பு இருக்காவ"

"ஆமா புள்ள வெசத்தை குடிச்சுட்டா வெங்காயத்த உரிச்சுக்கிட்டானு யாரு வீஞ்சிக்கிட்டு திறிஞ்சதாம்" சலிப்பாய் கூறியவள் மனதினுள் 'நினைத்த காரியத்தை சாதிக்க முடியுமா' என எண்ணினாள்

அவள் பேச்சில் சத்தமாக சிரித்தான்..
அவள் எண்ணியபடியே அவன் இவள் வசமாகி மயக்கத்தில் கிறங்க, மெல்ல தூபாளம் போட்டாள் "மாமோய் நான் சொல்றத கொஞ்சமாச்சும் யோசனை பண்ணுக.. மருது என் தூரத்து சொந்தந்தான, நான் சொன்னா தட்டாம கேப்பான்; வீட்டோட வந்துருனா வந்திட போறான் இதுக்கு எதுக்கு அவனுக்கு நெலம் புலம்னு கொடுத்துக்கிட்டு… நம்ம புள்ளையும் வூட்டோட கெடக்கும்ல" என்றவள் அவன் இவளை மட்டுமே எண்ணும் வண்ணம் பார்த்துக்கொண்டாள்…

அவளின் நெருக்கத்தில் கிறங்கிப்போனவன் "யோசிப்போம் கோதா" என்றான்

இதுவே அவளுக்கு பெரிய சாதனையாகத் தான் இருந்தது… ஆழ்ந்த களிப்பில் உறங்க முற்பட்டவள் மனதினுள் நினைத்துக்கொண்டாள் 'எப்படியாவது இத்திருமணத்தை நிறுத்த வேண்டும்' என்று…

கோதா, சிதம்பரத்திற்கு இரண்டாம் தாரமாய் வாக்கப்பட்டு வந்தவள்; குந்தவிக்கு பத்து வயது இருக்கும் போது.. சிதம்பரத்திற்கு கடைசி காலத்தில் துணை வேண்டுமென்று பேச்சியம்மாள் தான் கட்டி வைத்தார்… மணமான புதிதில் அமைதியாக நடமாடியவள் முதல் வேலையாக இல்லாத பொல்லாத விடயங்களைக் கூறி பேச்சியை துரத்தியடித்தாள்…

இந்த ஐந்து வருடங்களில் எத்தனையோ மருத்துவச்சியை பார்த்துவிட்டாள்… "வேண்டாத தெய்வம் இல்லை வைக்காத வேண்டுதல் இல்லை இன்னும் ஒரு புழுபூச்சிக்கூட வயித்துல தங்கலை" என்று கோதாவின் அக்காதான் அவளைப் பார்க்க வரும்போதெல்லாம் புலம்பித் தள்ளுவாள்

சிதம்பரம் கோதாவரியின் தனிமைப் பேச்சுக்களை அவ்வப்போது குந்தவி கேட்டு வைத்தாள்.. அப்போது புரியாததெல்லாம் இந்த ரெண்டும் கெட்டான் வயதில் புரியத் தொடங்கியது… தந்தை காதல் மயக்கத்தில் இருக்க, தனக்கு ஆதரவாய் இருந்த பேச்சியையும் கோதாவரி விரட்டி அடிக்க, தனிமையை உணர்ந்தவள் பள்ளியில் பயிலும் பனிரெண்டாம் வகுப்பு மாணவனோடு பழக்கம் ஏற்படுத்திக் கொண்டாள்…

அவனிடம் வீட்டுச் சூழலை ஒன்றுவிடாமல் உலறி வைக்க அவனும் அவளுக்கு ஆதரவாய் பேச ஆரம்பித்தான்.. நாளாக நாளாக அதற்கு காதல் என அவர்கள் பாஷையில் பெயர் வைத்து நாட்களை நகர்த்தினர்…

இதற்கு ஏற்றாற்போல கோதாவரியும் கொஞ்சம் கொஞ்சமாக சிதம்பரத்தை குந்தவியிடமிருந்து பிரிக்கும் வேலைகளை பார்த்து முடிந்த மட்டும் இருவரும் பேசிடாமல் பார்த்துக்கொண்டாள்…

மனமுடைந்த குந்தவியோ இதையே ஒரு சாக்காக்கி அவனுடன் ஊர் சுற்ற கிளம்பிவிட்டாள்… அப்படி இப்படி என அரசல் புரசலாய் சிதம்பரம் காதுக்கு வர முதலில் அவளிடமிருந்து பறிக்கப்பட்டது படிப்பு… பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டினுள் அடைத்தனர்...‌

கோதாவரியின் பேச்சை பல வேளைகளில் கேட்டாலும், அவள் செய்த காரியத்திற்கு கண்முன் தெரியாமல் அடித்து துவைத்திருந்தாலும் குந்தவி மேல் இருந்த பாசம் துளியும் குறையவில்லை..‌ இதுவே வேறு தகப்பனாக இருந்திருந்தால் அவளை வெட்டி கூறுபோட்டிருப்பார்… இருந்தும் அவரின் பெத்த மனம் கேட்கிறதா… முடிந்தமட்டும் அறிவுரை கூறி மீண்டும் பள்ளிக்கு அனுப்பினார்…

அறியாத வயது மீண்டும் அவள் அவனோடே சுற்றினாள்… இது தான் சரியான தருணம் என்று நினைத்த கோதாவரி சிதம்பரத்தை உரமேற்றினாள் வார்த்தைகளால்… அதனால் மீண்டும் அவளின் படிப்பு பறிக்கப்பட்டது… இப்போதெல்லாம் இருவரும் வெளியே சென்றால் குந்தவியை வீட்டினுள்ளே வைத்து பூட்டி விட்டுதான் செல்கின்றனர்…
*****
சிதம்பரத்திடம் இன்றளவும் ஒரு வழக்கமிருக்கிறது.. என்னதான் மங்கலம் இறந்து மீண்டும் அவன் தனது சம்சாரி பயணத்தை தொடர்ந்திருந்தாலும் மங்கலம் இறந்த தேதியன்று விரமிருப்பான்.. இது மாதாமாதம் தொடரும் சங்கதி…

அன்றைய நாளில் அவன் கோதாவரியை விடுத்து கொல்லைப்புறத்தில் படுப்பது வழக்கம்.. சரியாக அந்த நாளைத்தான் தற்கொலை முயற்சிக்கு கையிலெடுப்பாள் குந்தவி… இவளும் சளைத்தவள் அல்ல எல்லாக் கேடித்தனமும் குந்தவிக்கு அத்துப்படி…
அப்படித்தான் இன்று இரண்டாவது முறையாக இன்று மருத்துவமனையில் கிடக்கிறாள்….

*****
விடியும் வேளையில் துயில் கலைய எழுந்தவள் சித்த பிரம்மை பிடித்தவள் போல் எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள்… அரைமணி நேரம் ஆழ்ந்து சிந்தித்த பிறகுதான் முகத்தில் சிறு தெளிவு பிறந்தது… எதையோ சாதித்த மிதப்பில் வேலைகளை கவனிக்க எழுந்தாள் கோதாவரி…

வீட்டின் கொல்லைப்புறம் வந்தவள் சேலை கொசுவத்தை தூக்கிச் சொருகிக்கொண்டு தென்னங்கீத்தில் கிழிக்கப்பட்ட குச்சிகளை சேர்த்து கட்டி கையில் எடுத்து தூய்மைப் படுத்த தொடங்கினாள்… சுற்றமெங்கும் சாணி வாடை வெளியூரிலிருந்து வரும் இவள் தமக்கைக்கு வேண்டாமானால் இது குமட்டும்… ஆனால் கோதாவிற்கு அல்ல… இவ்வாடைகளை சந்தனம் வாசம் என ஏற்றுக்கொண்டவள்…

இது மட்டுமா இவர்கள் வீட்டில் வளரும் ஆடு மாடு கோழி என அனைத்தும் இவளுக்கு அடிமை… இவள் குரல் கொடுக்க அனைத்தும் அமைதியாகிப்போகும்… இவள் நினைத்தால் வேலைக்கு ஆட்கள் வைத்து செய்யலாம்‌… ஆனால் இவள் இல்லாமல் இங்கு துரும்பும் அசையாது என பெயர் எடுக்கவே அனைத்தையும் இழுத்துப்போட்டுக் கொள்கிறாள்…

கோதாவரியும் அவள் அக்காவும் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள்… அவள் அந்த ஊருக்கு வந்த நாளிலிருந்தே அவளுக்கு இந்த வீட்டிற்குள் வர வேண்டுமென்ற ஆசை… அந்நாளில் அங்கு வேலை பார்த்த பாட்டி தான் இங்கு எல்லாமாவும் இருந்தார்… அவர் இவளை ஒரு முறைக்கூட விட்டதில்லை… இவளும் ஏங்கித்தவித்தே செல்வாள்…

இவள் ஏழ்மை வீட்டில் பிறந்தவள் என்பதால் தான் வீட்டிற்குள் நுழைய விடாமல் இருக்கிறார்கள் என நினைத்துக்கொண்ட கோதா எப்படியாவது இந்த வீட்டிற்குள் வர வேண்டும் என்று சபதமெடுத்துவிட்டாள் போல… அப்போது இவளுக்கு மாப்பிள்ளை பார்க்க, அதே நேரம் சிதம்பரத்திற்கும் பெண் பார்க்க எப்படியோ ஆண்டவன் போட்ட முடிச்சாய் இங்கு வந்து சேர்ந்தாள்…

கோதாவரி ஏழ்மையிலேயே பிறந்ததால் அவளுக்கு செல்வ செழிப்புடன் வாழத்தான் ஆசை… அதானாலேயே இரண்டாம் தாரம் என்றாலும் பரவாயில்லை என ஒப்புக்கொண்டாள்… சிதம்பரம் செல்வாக்கில் ஒன்றும் சளைத்தவரல்ல என்பது அவளுக்கு தெரிந்தது தானே… பெரிய பெரிய மச்சு வீடுகள், நிலம், தோட்டம், துரவு என வாழ்பவர்… அவையனைத்தையும் தானும் தனக்கு வரப்போகும் வாரிசுகள் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தாலேயே குந்தவியை ஏதோ விவகாரத்தில் சிக்கிய வைக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறாள்…

கூட்டி சுத்தம் செய்தவள் குளித்துவிட்டு வந்து ஒருவழியாக பாலைக்கரந்து முடித்தாள்... அதை விற்பனைக்காக தயார் படுத்திக் கொண்டிருக்க சிதம்பரம் பால் வண்டி வந்து நின்றது…பாலை சொசைட்டிக்கு அனுப்பிவிட்டு வீட்டிற்குத் தேவையான பாலை எடுத்துக்கொண்டாள்… முன் வாசல் வந்து முறைவாசலை முடித்துவிட்டு கரந்த பாலில் தண்ணீர் கலக்காமல் காய்ச்சி அதில் மணக்க மணக்க காபியை போட்டு சிதம்பரத்தை எழுப்பினாள்…

*****

"டேய் டேய்" பின்னங்கால் பிடரியில் படுமளவு வேகத்தோடு ஓடிவந்தான் ஒருவன்…

"டேய் ஏன்டா இம்புட்டு வேகமா வாறா நாய் ஏதும் தொரத்துதா" என்றவன் ஒடிவந்தவன் வந்த திசையை கண்களாலே அளவெடுத்துவிட்டு "இல்லையே நாய் வர அறிகுறியே இல்லையே புறவு உன் அப்பங்காரன் எதும் தொரத்துறானா நேத்து கள்ளு குடிச்சதுக்கு"

மூச்சு வாங்க பேசினான், ஓடி வந்தவன்… "ஏலேய் சும்மா இரு.. உன் கூட ஒரு புள்ள பள்ளிக்கூடத்துல சுத்தும்ல அதான் அந்த பக்கத்து ஊர்ல இருக்க மச்சுவீட்டுகார புள்ள"

"ஆமா குந்தவி அவளுக்கு என்னவே"

"அது மறுபடியும் மருந்த குடிச்சுருச்சாம்ல.. சாகக் கெடக்கான்… போலீஸ் உன்னைத்தான் புடிக்கும்னு அங்க பேசிக்கிறாங்கவே"

"ஏலேய் என்னல சொல்ற" பயத்தில் முகமெல்லாம் வியர்வை பூவைச் சூடிக்கொண்டன

"புறவு உன்னய புடிக்காம எங்களையாவே புடிக்கும்… நீ தான அவ பின்னாடி சுத்திட்டு திரிஞ்ச"

"ஏலே பயமுறுத்தாதல" மெலிதாக பயம் பற்றியது அப்பேச்சில்

மற்றொருவன் "அவன் சொல்றது நிசந்தாம்ல போலிஸ் மட்டுமா புடிக்கும் செத்து போன புள்ளயும் பேயா வந்து உன்னயத்தாம்ல புடிக்கும்"

அடிவயிறு கலங்கியவாறே கூறுகிறான் "போங்கல நான் போயி மணியாட்டி சாமி கிட்டபோய் கயிறு கட்டிக்கிடுவேன்"

"உனக்கு சேதியே தெரியாதோ போன வாரந்தான் அந்தாளு மேல பிராது குடுத்தாக போலிச்சாமியார்னு" இருந்த மூவரில் இருவர் பலமாக சிரிக்க மாரி மட்டும் கலங்கி போயிருந்தான் அவர்கள் உரையாடல்களில்…

அவனை கலாய்த்து களைத்தவர்கள் மாரியின் முகம் வாடியதை உணர்ந்து அருகில் வந்தனர்… "ஏன்டா அந்த புள்ளைய கூட்டிட்டு சுத்தும் போது ஜாலியா இருந்துச்சோ இப்ப ஏன் இப்படி குறப்பய மாதிரி நிக்க"

"அந்த புள்ள நிசமாவே சாகப் போதாடா" கண்களில் தொடங்கிய நீர் கன்னத்தில் வழிய கேட்டிட்டான்

"ஏ அதலாம் இல்லல… அந்த புள்ள நல்லா குத்துக்கல்லு மாறித்தான் கெடக்கு; நாங்க சும்மா லந்து பண்ணோம்" என்று ஓட, அவனைத் துரத்திச் சென்றான் மாரி

"ஏலே மக்கா இவ்வளோ வெள்ளனவே என்னல சுத்திக்கிட்டு திரியிறீக வூட்டுக்கு போங்கல…" என்றார் அவர்களின் உறவுக்காரர்…

"நாங்க போறோம் சித்தப்பு.. நீங்க வந்த வேலையை சட்டுபுட்டுனு முடிச்சுட்டு கிளம்புக… பொம்பளைங்க நடமாடுற எடமிது…" என்றான் மாரி

"எனக்கு தெரியும்ல" என்று அருகில் கிடந்த இல்லை எடுத்து அவர்கள் திசை நோக்கி எரிந்தார் மாரியின் சித்தப்பா

மூவரும் பேசிக்கொண்டே செல்கின்றனர்…

"ஏன்டா அந்த புள்ளைய போயி ஒரெட்டு பாத்துட்டு வருவோமா"

"ஏலே மாரி செத்த சும்மா கிடக்குறியால.. ஏற்கனவே அவங்கப்பன் உன்னை தேடி ஆளு விட்டான் அதெல்லாம் மறந்துட்டியோ ஏதோ நீ செம்மனூர் காரனா இருக்கானல தப்பிச்ச… அவளைத் தேடிப்போயி வசவும் வம்பும் வாங்கிட்டு வராத… அம்புட்டுதேன் சொல்லுவேன்" என்றவன் நடையில் வேகங்கூட்டிட மாரியின் கால்கள் மட்டும் வேகத்தை குறைத்திருந்தது…
*****
"இந்தா இன்னும் இட்டிலி தின்னு…உடம்ப பாரு எப்புடி இளைச்சுட்டுனு வயசு புள்ள மாதிரியா இருக்க"

'இன்னைக்கு என்ன பன்ன காத்திருக்குனு தெரிலையே இம்புட்டு கரிசனங்காட்டுது' பாசமாய் பரிமாறிய சித்தியை இவ்வாறு நினைத்துக் கொண்டிருந்தாள் குந்தவி

"ஏன் குந்து உனக்கு இந்த கண்ணாலத்துல விருப்பமில்லையாட்டி"

"…….."

"சொல்லு உன்ற அப்பாட்ட சொல்லமாட்டேன்"

"ஆமா புடிக்கலை"

"அப்ப என்ன பன்றதா உத்தேசம்"

"நான் மாரியத்தான் கட்டிக்குவேன்"

"ஏய் என்ன பேசுற உன் அப்பா எம்புட்டு ஆசையா இந்த கண்ணலாத்துக்கு தேதி குறிச்சாரு, நீ என்னவே இப்படி சொல்லுத"

"இங்காரு சித்தி எனக்கு அந்த பயலைத்தேன் புடிச்சிருக்கு"

கோதாவரிக்கு உள்ளூற உற்சாகம்.. மனதில் மழைச் சாரலோடு இளந்தென்றலும் சேர்ந்து ஜில்லென்று வீசிக்கொண்டிருந்தது…

'நம்ம வேளை சுலுவா முடிஞ்சிரும் போலவே' என்று ஆர்பரித்தாள் உள்ளூற

"உனக்கு விசயமே தெரியாதுல.."

"என்னது"

"அந்த மாரிப்பயலை உன் அப்பா பட்டணத்துக்கு அனுப்பிட்டாக… உன் கண்ணாலம் முடிஞ்சுதான் அந்த பய ஊருக்குள்ள வருவான்… உன் நல்லதுக்குத்தான் சொல்லுதேன்… பேசாம மருதுப்பயலை கட்டிட்டு காலந்தள்ளுற வழியப்பாரு" என்று வந்த வேலையை சிறப்பாய் செய்தவள் வீட்டிற்கு கிளம்பினாள்…

'மாரி ஊரை விட்டு போய்ட்டானா… இது சொல்றத நம்பவும் முடியலை நம்பாம இருக்கவும் முடியல… அப்பா இடத்துலே இருந்து யோசனை பண்ணா கண்டிப்பா சொஞ்சுருப்பாகனுதான் தோனுது… அவருக்கு அவரு சாதிதான பெருசு… நான் இந்த மருதுவ செத்தாலும் கட்டிக்க மாட்டேன்… போசாம நம்மலும் பட்டணத்துக்கு போயிருவோமா… முத இந்த வீட்ட விட்டு ஒழிஞ்சாதான் நிம்மதி'
 

லரா ஸ்ரீ

New member
Vannangal Writer
Messages
15
Reaction score
17
Points
3
பாலைவனப் பைங்கிளியே!!!
2

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒவ்வொரு வாகனமும் தார் சாலையை வேகங்கொண்டு தேய்த்து பறந்து கொண்டிருந்த பிரதான சாலை நெரிசல் மிகுந்ததாகவே காட்சியளித்தது… சுற்றியெங்கும் விளம்பர பதாகைகள் பெரிதாக காட்சியளித்தன… ஆங்காங்கே அடுத்தவரிடம் கையேந்தும் குழந்தை தொழிலாளர்கள் ஒருபுறம், சக்கர நாற்காலியில் அமர்ந்து கையேந்தும் மாற்றுத்திறனாளிகள் ஒருபுறம் என்ற மக்கள் நெருக்கமான வீதியில், ஒரு நாள் துணியை மட்டும் திணித்து வைத்திருந்த கைப்பையோடும் மிரட்சியான பார்வையோடும் கால்கள் தடுமாற மெல்ல மெல்ல எட்டு வைக்கும் குழந்தையைப் போல் எங்கே விழுந்து விடுவோமோ என்ற பயத்துடன் நடை பழகிக் கொண்டிருந்தாள் குந்தவி…

மாலை ஆறறையைத் தொட்டும் இவளின் நிலையறிந்த வெய்யோன் கூட மறைய மறுக்கிறான் பரிதாபம் பார்த்து… இளஞ்சிவப்பு வண்ணத்தில் அவள் நடக்கும் திசையை நோக்கி அவனும் நகர்ந்து போகிறான்… சித்தியின் பேச்சில் இருக்கும் வஞ்சகம் புரியாதவள் உண்மையிலேயே காதலனைக் கடத்தி அடைத்து வைத்திருக்கிறார்கள் என்ற சந்தேகத்தில், பேச்சி அன்று கொடுத்த அவரின் சிறுவாட்டுப் பணம் நான்கு நூறு ரூபாய்த் தாள்களைத் துணைக்கு அழைத்துக்கொண்டு பழக்கமில்லாத பட்டிணம் வந்திறங்கியிருக்கிறாள்…

அவள் ஊரிலிருந்து சுமார் மூன்னூறு நானூறு கிலோ மீட்டர் தொலைவு… வந்து சேர்ந்தவளுக்கு எங்கே தேடுவது எப்படித் தேடுவது என்று எதும் புலப்படவில்லை… பேருந்து இறக்கிவிட்ட இடத்தையே சுற்றி சுற்றி வந்தாள்… இவளின் நடவடிக்கையை ஒருவன் நோட்டமிடவே பேருந்து நிலையத்தைத் தாண்டி நடக்கிறாள்…

"மாரி எங்க இருக்கான்;என்ன பண்றான்;எதுமே தெரியாம நான் இப்படி ஊறவிட்டு வந்துட்டேனே" என அவள் மனம் எரிமலையாய் குமுறியது… "இப்ப தெரியாத ஊருல என்ன பண்றது" என்று யோசித்தவளுக்கு மருது சட்டைப்பையில் இருந்து எடுத்த முகவரி நியாபகம் வந்தது…

அன்று அவள் சித்தி சொல்லி விட்டுத்தான் சென்றாள் "மருதுவிற்கு தெரியும் மாரியை அடைத்து வைத்திருக்கும் இடம்… அன்று கூட அந்த முகவரியை சட்டைப்பையில் வைத்தான் நான் பார்த்தேன்" என்று

அதைத் துணிப்பையில் இருந்து எடுத்தவள் விரித்தும் பார்த்தாள்… ஆங்கில எழுத்துக்களைத் தாங்கியிருந்த தாளை படித்துப் பார்த்தாள் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை…

"யாரிடம் கேட்பது" என யோசிக்க ஒருமுறை நடையை நிறுத்தி திரும்பி பார்த்துக்கொண்டாள், தொடர்ந்தவன் இன்னும் தொடர்கிறானா என்று...

"இல்லை" என உறுதிப்படுத்தியவள் வாய் வழியே மூச்சை இழுத்துக் வெளியிட்டு பதட்டத்தைக் குறைத்தாள்… தண்ணீர் தாகம் எடுத்தது… நாவெல்லாம் வறண்டு போனது… கையில் இருந்த நானூறில் இருநூறு காலியாகியிருக்க மீதமிருந்த சில்லறையை பொருக்கிக் கொண்டு எதிரேயிருந்த பெட்டிக்கடையில் தண்ணீர் போத்தல் வாங்கினாள்… மூச்சு முட்டும் வரை ஒரே இழுப்பில் குடித்து தாகத்தை தீர்த்தவள் மீதமிருந்த தண்ணீர் போத்தலை கைப்பையில் திணித்து பத்திரப்படுத்திக் கொண்டாள்…

'அந்த அண்ணன்டயே கேட்போம்' என்று மீண்டும் பெட்டிக்கடைக்கு வந்தவள் "அண்ணே இந்த அட்ரெஸ் எங்க இருக்குனு சொல்லுங்க" அவள் ஊரிலிருந்து கொண்டு வந்த தாளை நீட்டியவளுக்கு அதிர்ச்சி இதன் வழியே தான் வந்து தாக்கப்போகிறது என்ற எண்ணம் துளியும் வரவில்லை அப்போது…

"எனக்குத் தெரிலமா படிச்சவங்க யார்டயாச்சும் கேளு" என்றார்

இவளுக்கென்று வருபவர்கள் எல்லாம் ஆங்கிலம் படிக்கத் தெரியாதவர்களாக இருக்க பாவமாய் முழித்தவள் விதியை எண்ணி விரக்தியாய் சிரித்தும் வைத்தாள்… தூரத்தில் ஒருவர் பேண்ட் சட்டையோடு டை எல்லாம் கட்டிக்கொண்டு படித்தவராக தென்பட வேகமாக ஓடினாள் "அண்ணே இதுல இருக்குற அட்ரெஸ் எங்கனே இருக்கு" ஓடிவந்த வேகத்திற்கு மூச்சுவிடவே சிரமபட்டுக்கொண்டு கேட்டாள்…

"அட்ரெஸா" என தடுமாறியவர் 'நம்ம கரெக்டாதான் படிக்குறோமா' என்று மீண்டும் ஒருமுறை சரியாக படித்து வைத்துக்கொண்டார்…

"என்ணெண்ணே உங்களுக்கு தெரியலையா" என்றவள் குரலில் தெரிந்த பரிதாபத்தில் புரிந்து கொண்டார்… "ஊருக்கு புதுசா பாப்பா" என்றார்

"அதெல்லாம் நீங்க ஏன் கேக்குறீங்க கேட்டா கேட்டத மட்டும் சொல்லுங்க" என்று பதட்டமாகவும் கோபமாகவும் சொன்னவளுக்கு சரியான விளக்கம் கொடுத்தார்… "நேரா போயி ரெண்டாவது கட்ல ரைட் சைடு போ மணிகண்டன் பார்மஸினு போட்டுருக்கும் அங்க போயி கேளு சொல்லுவாங்க" என்று வேண்டா வெறுப்பாய் அவளிடம் கூறிவிட்டு அந்த நாளைத் திணித்துவிட்டு நகர்ந்தார்…

'பார்மஸியா என்ன இது புது குழப்பம்' நினைத்துக்கொண்டே அவன் கூறிய வழியில் பயணமாகிறாள்… சென்றவளுக்கோ பேரதிர்ச்சி… அந்த பகுதியிலேயே பெரிய மருந்துகடைதான் போல...‌ சுற்றும் முற்றும் விதவிதமான மருந்துப் பொருட்கள்… ஈசானி மூலைப் பக்கம் திரும்பினால் குழந்தைகளுக்கான பொருட்கள்.. அக்னி மூலைப் பக்கம் பார்த்தால் மகளிர் மாதந்தோறும் உபயோகிக்கும் பொருட்கள் என, அனைவருக்கும் தேவையான அனைத்தையும் தாங்கியிருந்தது… அவள் எழுதி கொண்டு வந்திருந்த முகவரிச் சீட்டை பதட்டத்துடன் எடுத்து மெடிக்கலில் நீட்டிட அங்கு வேலை பார்ப்பவனோ வெடுக்கென பிடிங்கினான்… 'இந்த அட்ரெஸ்' என ஆரம்பிக்கும் முன்னமே பரபரப்பாய் உள்ளே சென்று வெளிவந்தவன் அவள் முன் இருந்த மேசையில் தன்னோடு கொண்டு வந்திருந்த மருந்துப் பொருட்களை வைத்துவிட்டு "நானூத்தி என்பது ரூபா கவுண்டர்ல கட்டிடுங்க" என கேஷ் கவுண்டரை கைக்காட்டினான் அங்கோ பல் இழித்தபடி வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் சிரித்தமுகமாக ஒருவர் இவளைப் பார்த்து தலையசைத்தார்…

ஒன்றும் புரியாமல் தவித்துப் போனவளுக்கு புரிகிறது 'இது மருந்து சீட்டா இருக்குமோ' என்று ஞானோதயம் பிறக்க, தொண்டையடைத்துக்கொண்டு வந்தது… "அய்யோ கடவுளே என்ன பண்ணப் போறேனோ" என்று கைகளை பிசைந்தபடி நெஞ்சில் ஊடுருவிய நெருப்பை தணிக்கத் தெரியாமல் கண்களில் வந்த நீரை காற்றில் கரையவிட்டிருந்தாள் பேதையானவள்

"இந்தாமா குந்தவி"

"..…."

"ஏய் குந்தவி"

"......"

இவளைலாம் இப்படி கூப்பிட்டா சரிவராது… என நினைத்த செவிலியர் ஒருவர் தன் கைகளால் அவளது முதுகில் விரவினார்…. சுருக்கென்ற வலியில் "ஆஆஆஆஆவென" கத்திக்கொண்டு எழுந்தாள் குந்தவி…

"ஏம்மா எத்தனை முறை கூப்பிட்றது இந்தா உங்க ஊட்டுல சோறு பொங்கி குடுத்துருக்காங்க" என்று சாப்பாடு வந்த கூடையை அவள் கைகளில் திணித்து விட்டு நகர்ந்தாள்…

"இப்ப நம்ம யார் கூடவோ பேசிட்டு இருந்தோமே அதுக்குள்ள இந்த பொம்பளை வந்து பேசுது" தனக்குள்ளே பேசியவள் ஒரு நொடியில் கண்டுகொண்டாள் பேசியது, கனவில் என்று ..

"ச்...சை...ச்...சை' இப்படி ஒரு கேவலமான கனவா வரனும்... அதும் மருந்துச்சீட்டை அட்ரெஸூனு நினைச்சு இந்த ஊரைவிட்டு பட்டிணத்துக்குப் போய், 'ச்...சை' இப்படியொரு கூமுட்டையா இருக்க மாதிரி கனவு வரனும்" என்று தலைத்தலையாக அடித்துக் கொண்டாள்… "ஊரை விட்டு போற கனவை இத்தோட நிறுத்திட வேண்டியதுதான்" என்று தன்னிடமே கூறிக்கொண்டாள்…

ஒருவழியாக சாப்பாட்டை சாப்பிட்டு முடித்தாள்… எப்போதும் பெரிய மருத்துவர் வரும் முன் செவிலியர்கள் ஒவ்வொரு அறையாகச் சென்று சரிபார்த்து வருவர்… எல்லாம் சரியாக இருக்கிறதா என்று அதுபோல அன்றும் ஒரு செவிலி வந்தார்

"என்ன குந்து நல்லா சாப்பிட்ட போல"

"ம் ஆமாக்கா இந்தா உனக்கு கொஞ்சம் வச்சுருக்கேன்…"

"என்னடி பாசமெல்லாம் புதுசா இருக்கு"

"ஆமா உடம்பு சரியான ஒருநாள்ல என்னைய அனுப்பாம இன்னொரு நாள் தங்க வச்சுருக்கியே அதான்"

"ஆமா அன்னைக்கு உன்ன பாக்கவே பாவமா இருந்துட்டு... அதான் இன்னும் ஒருநாளைக்கு நீ நிம்மதியா இருக்க, எங்க டாக்டர்கிட்ட கேட்டு இங்கயே உன்ன இருக்க வைக்கலாம்னு தங்க வச்சேன்... சந்தோசந்தானே"

"சந்தோசமாவா எனக்கு எப்படி இருக்கு தெரியுமா அப்படியே ஆகாசத்துல பறக்கேன்க்கா..." பேச்சை நிறுத்தியவர் மீண்டும் "அப்படியே" எனத் தொடர்ந்து இழுவையைப்போட

"என்னல இப்படி இழுக்குறவ"

"......"

"என்னல கேக்குறேன்ல பதிலச்சொல்லு" அதட்டிப்பார்த்தாள் செவிலி

"அது வந்து அப்படியே அப்பா ஏற்பாடு பண்ணி கலியாணத்தை நிறுத்த எதாச்சும் யோசனை கொடேன்"

"ஆத்தி… யாருடி இவ‌‌...என் உசுருக்கே உலை வெச்சிடவ போலயே"

"அக்காகாகாகாகா"….

"பின்ன என்னடி அந்த மாரிப்பயலாம் ஒரு ஆளா… அவனுக்காக உன் அப்பாவை எதிர்க்கப் போறியா??.. அவனை நம்பி போனா உன்ன நட்டாத்துல இறக்கிடுவான் பாத்துக்கோ.. அக்கா உன் நல்லதுக்கு தான் சொல்லுவேன் புறவு உன் இஷ்டம் " என்றவர் சென்றுவிட்டார்

குந்தவிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை… ஆழ்ந்த குழப்பத்தில் தன் மூளையையும் மனதையும் சிக்கவைத்து வேடிக்கை மட்டும் பார்த்திருந்தாள்…

மாலை சூரியன் தன் இல்லறம் புகுந்துவிட வானமகனோ இருளை பரப்ப ஆரம்பித்தான்… தன் மகளைக் காண வந்தார் சிதம்பரம் தேய்ந்து போன அம்பாசிடரில்…

"என்னமா உடம்பு எப்படி இருக்கு"

"ம் தேவலைபா"

"ஏம்ல இப்படி பண்ணுத… உன் அப்பன் உன் நல்லதுக்குதான்ல பண்ணுவேன்"

"....."

"கலியாணத்துக்கு ஒத்துக்கோல…. நம்ம சாதிப்பய… நீ கண்ணாலம் கட்டி வேற வூட்டுக்கு கூட போக வேணாம்ல என் கூடவே இரு… நான் மருதுட்ட பேசுறேன்ல"

"......"

"ஏம்ல பேசாம இருக்க, அந்த மாரிப்பய சாதிகெட்ட பயல…"

"....."

"நீ இந்த கண்ணாலத்துக்கு ஒத்துக்கல இந்த அப்பன நீ உசுரோடவே பாக்க முடியாதுல ஆமா" என்று கூறும் முன்னமே குரல் தழுதழுத்தது… அவர் அணையிட்ட வைத்த கண்ணீரும் மிழிகள் தாண்டி கன்னம் தொட்டது

தந்தையின் கண்ணீரை இதுநாள் வரை பார்த்திராத குந்தவிக்கு ஏனோ மனது பாரம் ஆனது… அவர் கூறிய வார்த்தைகள் வேறு ரம்பமாய் அவள் உயிரை அறுத்து கூறு போடுவது போல் இருக்க "அப்பா நான் கலியாணத்துக்கு சம்மதிக்கேன்" கூறிய வார்த்தையில் எண்ணிலடங்கா வெறுமை பற்றியிருந்தது…

"ஏம்ல உண்மையைத்தான் சொல்றியா"

"ஆமா… என்னால யாரும் சாக வேணாம்" முகமானது நாலு முழம் இழுத்திருந்தது….

"எம் பாசக்காரில… இந்த அப்பங்காரனுக்கு ஒன்னுனதும் எம்புட்டு பாசம்…" உச்சியில் முத்தம் வைத்தவர் போனை எடுத்து யாருக்கோ தொடர்பு கொண்டு "ஏலே கருப்பு நாளைக்கு நம்ம குலசாமி கோவில்ல கெடா வெட்டுல… நல்ல இள வெள்ளாடா பாத்து இருபது வாங்கிட்டுவால நாளைக்கு நம்ம சாதி சனத்துக்கு பூராம் விருந்துல" அவர் வதனத்தில் இதுவரை குந்தவி இது போன்ற மகிழ்ச்சியை கண்டதில்லை…

"சரி வாரேம்ல, தலைக்கு மேல் வேலை கெடக்கு" என்றவர் நாலே பாய்ச்சலில் மருத்துவமனையை விட்டு நகர்ந்தார்

நாளைக்கு கெடா விருந்திருக்கும் தகவலையும் ஏன் கெடா விருந்து என்பதையும மருதுவிடம் கூறினார் சிதம்பரம்

"ரெம்ப சந்தோசம் மாமா" இருளடைந்தவன் முகத்தில் தௌசண்ட் வாட்ஸ் பல்பு பிரகாசமாக ஒளித்தது

"சரி வாலே தலைக்கு மேல வேலைகெடக்கு போவோம்"

"மா...மா குந்தவி.. தனியா இருக்காளே" தயக்கத்தில் கேட்க

"அவ எம்புள்ளல… வா போவோம்" என்றவர் தோளில் கைப்போட்டு கூட்டிச்சென்றார்

இரவு ஏழு மணி

மருத்துவமனை

படுத்தேயிருந்து சளித்தப்போன காரிகையவளுக்கு காற்று பற்றாமல் போக தென்றலைத்தேடி சாளரம் பக்கம் சென்று தென்றலை வாரிக்கொண்டிருந்தாள்… தென்றலும் இதமான இதத்தை அவளுக்குள் பரப்பி அமைதி கொள்ளச் செய்தது… மிழிகளை மூடி தென்றலின் இதத்தோடு இயைந்தவளுக்கு ஏதோ ஒன்று நெருடலாக இருக்க விழிகளைத் திறந்தாள்…

மாரி தான் சாளரத்தின் வழி அவளை பார்க்க எம்பி எம்பி எக்கியபடி, "குந்தவி… குந்தவி" கைகளை காற்றில் ஆட்டி அழைத்தான்… பதறியவள் அவனைப் பார்த்தவாறே சாளரத்தின் ஒரு கதவை அடைத்தாள்… இதுவரை இதமாக வீசியத் தென்றலோ புயலாக உருவெடுத்திருந்தது…

"குந்தவி"

"....."

"குந்தவி"

"......"

பதில் ஏதும் கிடைக்காததால் வீட்டின் கதவை வேகங்கொண்டு தட்டினார் மேரி… கதவு தட்டும் சத்தம் கேட்டவள் "ஹான் வரேன் வரேன்" சத்தம் கொடுத்துக்கொண்டே சென்று கதவைத் திறந்தாள்…

ஏதோ உள்ளூற யோசித்தப்படியே திறந்தவள் "நீங்களா அக்கா" என்று கண்களைத் தேய்த்துக் கொண்டாள்…

"ஏன் குந்தவி சரியா தூங்கலையா பழைய நியாபகமா…"

"...."

"உன் அமைதிலயே தெரியுது அத மறந்துதான் தொலையேன்…"

"சில விஷயங்களை மறக்கக்கூடாதுக்கா அப்படியே மனசுல பதுக்கி வச்சு நேரம் வரும் போது பழி தீக்கனும்" அவள் விழிகள் வெளியேற்றிய அக்னி பார்வையில் ஒரு நிமிடம் ஆடிப்போனார் மேரி…

அவள் மனதை மாற்றும் விதமாக
"ஆமா கதவைத் திறந்ததும் நீங்களானு கேட்டியே, வேற யாரை நினைச்ச" என்று கண்ணடித்து கேட்க… அவரின் பாவனையை புரிந்தவள் "அயோ அக்கா நீங்க வேற" என்று கைக்கடிகாரம் தாங்கியிருந்த வலது கரத்தைக் கொண்டு பிறையை நீவினாள்…

"சரி சரி வெட்கப்படாத… "காதல் முத்தினா... அடச்சீ இந்த வாய் ஒன்னு நேரம் தெரியாம கரெக்டா சொல்ல வரும் பழமொழிய‌…" என்றவர் குறுநகை பூத்து இடைவெளி விட்டு "கத்திரிக்கா முத்தினா கடைத்தெருவுக்கு வந்துதான ஆகனும் அப்ப தெரிஞ்சுக்கிறேன்" என்றார்

"கத்திரிக்கா கடைத்தெருவுக்கு வரது இருக்கட்டும் நீங்க ஏன் என்னத்தேடி வந்தீங்க"

"நான் வந்தது இருக்கட்டும் ஏன் வாட்ச் கூட கழட்டாம தூங்கிட்ட"

மேரி, அவருக்கு ஏற்படும் சந்தேகத்தை முதலில் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புபவர்.. விரும்புவதோடு நிறுத்தாமல் உடும்புப்பிடியாய் கேட்டு தெரிந்தும் கொள்வார்… இது அவரது சிறுபிராயத்திலிருந்து ஏற்பட்ட வழமையாகும்…

"ஆமா…க்கா, என் வாழ்க்கையில ஒவ்வொரு நொடியும் எனக்கு ரொம்ப முக்கியம்… தூக்கம் அதிகமாகி அத கெடுத்திடக்கூடாதுல"

"சந்தேகத்தையெல்லாம் கேட்டாச்சா… சரி எதுக்கு வந்தீங்கனு சொல்லுங்க"

"அது ஒன்னுமில்லை குந்தவி நம்ம இன்ஸ் அம்மா உன்ன கூட்டி வர சொன்னாங்க அர்ஜெண்ட் கேஸ் "

தலையில் அடித்துக் கொண்டாள் அவர் வார்த்தைகளில் "அக்கா உனக்கு கொஞ்சமாச்சும் எதாச்சும் இருக்கா?? அர்ஜெண்ட் கேசுங்குற இம்புட்டு கூலா பேசிட்டு இருக்க, வா கிளம்புவோம்…" என்றவளை மேலிருந்து கீழாக பார்த்தார் மேரி

"அட வா..க்கா "

" உன் கடமை உணர்ச்சி புரியுதுடி அதுக்காக இப்படியா நைட்டிய போட்டுட்டு வருவ"

மீண்டும் தலையில் அடித்துக்கொண்டவள் "சாரிக்கா ஒரு அஞ்சு நிமிஷம்"

தலையை வாரி குதிரைவால் போட்டுக்கொண்டு முழு கைச்சட்டையை அணிந்து அதை முஷ்டி வரை மடக்கிவிட்டவள், காலை ஒட்டிய ஜீன்ஸை அணிந்து பாதங்களுக்குள் சாக்ஸை நுழைத்து ஷூவையும் மாட்டிக்கொண்டாள்... பின்பு கைப்பேசியை எடுத்து மறவாமல் பேண்ட் பாக்கெட்டில் சொருகிக்கொண்டாள்…

"போலாம்க்கா" என்றவள் வீட்டை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர் காவல் நிலையத்திற்கு….

கால்மணி நேரப் பயணமாய் ஸ்கூட்டி ப்ளசில் பயணப்பட்டவர்கள் ஒரு சிறிய கட்டிடத்தின் முன் தங்கள் இருசக்கர வாகனத்தை பார்க் செய்தனர்…

"மகளிர் காவல் நிலையம்
ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் மாவட்டம்" என பெயர் பலகையை தாங்கியிருந்த கட்டிடம், ஒன்றிரண்டு காக்கிச்சட்டை அணிந்தவர்களைத் தன் வசம் வைத்திருந்தது…

உள்ளே அமர்ந்திருந்த ஆய்வாளர் திருமதி.ரெங்க நாயகி வண்டியின் சத்தம் கேட்டு வெளியே எட்டிப்பார்த்தார்… குந்தவி காவல் நிலையத்திற்குள் நுழையும் ஒவ்வொரு முறையும் அவள் கம்பீரமான நடையையும், திமிரான முகபாவத்தையும் அழகான வெளிப்புறத் தோற்றத்தையும் சில நொடி ரசித்துப் பார்ப்பார்… 'எப்படி வந்தவள் இன்றெப்படிப்பட்ட நிலையில் இருக்கிறாள்' என்று அவளை எண்ணி பெருமைப்பட்டுக் கொள்வார்….

"வாங்க வாங்க குந்தவி"

"என்னக்கா மரியாதையெல்லாம் பலமா இருக்கு" சகஜமாய் விசாரித்தவள் ரெங்கநாயகியின் முன்னிருந்த இருக்கையில் அமர்ந்தாள்

"அக்கா ஏதோ கேஸூனு அவசரமா கூப்பிட்டீங்களாம் என்னாச்சுக்கா" என்று நாற்காலியின் நுனியில் அமர்ந்து கேட்டாள் பரபரப்புடன்

"ஆமா குந்தவி என் சொந்தக்காரங்களுக்கு சின்னப் பிரச்சனை… ஒரு திருட்டு கேஸ் தான் நீ தான் யாருனு கண்டுபிடிக்கனும்"

"சூப்பர்க்கா"

இடைமறித்த மேரி அக்கா "ஏன்டி அவங்க சொந்தக்காரங்க வீட்ல திருடு போயிருச்சுனு சொல்றாங்க நீ என்ன சூப்பர்னு சொல்ற"

"அய்யோ அக்கா அதுக்கில்ல, இந்த சூப்பர் எதுக்குனா… இந்த கேஸ் என்னோட இருபத்தி அஞ்சாவது கேஸ்" என்று சட்டைக்காலரை தூக்கிவிட்டாள்…

"ஆஹா வாழ்த்துகள் குந்தவி ரொம்ப சந்தோஷம்"

"தேங்க்ஸ் நாயகி அக்கா… அப்பறம் எப்ப ஸ்பாட்க்கு போறோம்"

"நாளைக்கு குந்தவி... அப்பறம், யாருக்கும் தெரியாம பாத்துக்க இது கொஞ்சம் பெரிய இடம், கொஞ்சம் வில்லங்கமான இடமும் கூட"

"அதெல்லாம் பாத்துக்கலாம் அக்கா" என்றவள் வரப்போகும் விளைவை அறியாமல் ஆனந்தம் கொண்டிருந்தாள்

"ரொம்ப அம்சமா அழகா இருக்க குந்தவி"

"அழகு என்னைக்குமே ஆபத்துக்கா" என்றவள் சூசகமாய் சிரித்தாள்

Word count : 1525

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன... மறக்காம சொல்லுங்க
 
Last edited:

லரா ஸ்ரீ

New member
Vannangal Writer
Messages
15
Reaction score
17
Points
3
பாலைவன பைங்கிளியே!!!
3

ஆரவாரமாய் விடிய வேண்டிய வைகறைப் பொழுதோ மந்தமாய் இருந்தது… தபனன் தன் கதிர்களோடு மேகத்தின் கூண்டுக்குள் சிக்குண்டு சின்னா பின்னமாகி கிடந்தான்… மேகமானதோ தன் கருமையை வெளிப்படுத்தி, தென்றலை யுத்தமிட்டு விரட்டி, இள மென்மையாக மாரியை பொழிவித்தது…

வெள்ளச் சேதங்கள் ஏதும் ஏற்படாது அனைத்து மக்களுக்கும், அனைத்து நிலப்பரப்புக்கும் சமமாக வானிலிருந்து இறங்கியது மாரி….

கல்யாண கனவுகள் பல, பிடித்தது போல் இருந்திருந்தாலும் இன்றைய நிஜம் என்னவோ வெறுப்பையே கல்யாணப் பரிசாய் வழங்கியது அவளுக்கு… முகத்தில் ஒப்பனைகள் அப்பிக் கிடந்தாலும் மனம் சிரிக்காமல் வதனம் மட்டும் எப்படி எழில் பெறும்… கடமைக்கேயென்று அய்யர் கூறிய வாயில் நுழையாத மந்திரங்களை உலறி "ஸ்வாகா" மட்டும் சரியாய் சொல்லி வந்தாள் மண மேடையில் அமர்ந்திருந்தவள்…

மிக அருகாமையில் பட்டு வேட்டி பட்டு சட்டை அணிந்து மிடுக்காய் அமர்ந்திருந்தான் அவன்.. கலையில்லா முகத்திற்குச் சொந்தக்காரன் இன்று ஏனோ மன‌ மகிழ்ச்சியில் ஆணழகனாய் மாறிப்போயிருந்தான்… தோள்களால் குந்தவியை இடித்தவன் புன்னகைத்து வழிந்தான்..

அதைப்பார்த்தவளுக்கோ குமட்டிக்கொண்டு வந்தது… மூஞ்சியைத் தூக்கி வேறுபுறம் வைத்தாள்… பதினேழு வயதில் நடைபெறும் திருமணத்தை எந்த மங்கை தான் ஆதரிப்பாள், அதும் பிடிக்காத மணாளனோடு…

என்ன செய்வது தந்தை தனது அதிகாரத்தை பயன்படுத்தி குந்தவியின் வயதை இருபத்தி இரண்டாக்கி, பந்தக்கால் நட்டு, இன்று திருமணம் வரை வந்ததை எண்ணி அவர் வெற்றிக் களிப்பில் சுற்றுவதைப் பார்க்கவே பற்றிக்கொண்டு வந்தது குந்தவிக்கு… கண்கள் சிவந்து போயின ஆத்திரத்தில்…

சம்மணமிட்டு அமர்ந்திருந்தவளின் தொடை மீது கை வைத்து கேவலமாக சிரித்தவனை அருவருப்பான ஜந்துவைப் பார்ப்பது போல் குந்தவி பார்த்து வைக்க மெதுவாய் கைகளை விளக்கினான் மருது…

மருது ஒன்றும் குந்தவி மேல் இருக்கும் அன்பாலோ காதலாலோ திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை… இவன் இடத்தில் வேறொருவன் இருந்திருந்தால் மாரியைப் பற்றி தெரிந்தவுடனே துண்டை உதறி தோளில் போட்டு தன் திசை நோக்கி சென்றிருப்பான்‌.. ஆனால் இவன் தான் மருதாயிற்றே எப்படிச் செல்வான் தங்க ரதம் போல் மேனி மின்னும் பருவமகளையும், அவள் பெயரில் இருக்கும் கணக்கு வழக்கு இல்லா சொத்துக்களையும் எப்படி விட்டுச்செல்வான்…

ஏதேதோ மந்திரங்கள் ஓத புகைமண்டலத்திலிருந்து புகை விரவியது மணமேடை முழுவதும்… ஏதாவது ஒரு மாயம் நடந்து இந்நிலை இப்படியே போய்விடாதா என்று மங்கையவள் உள்ளம் குமுறியது… 'இந்த சித்தி எங்கபோய் தொலைஞ்சா இவளாவது எதாவது சொல்லி நிறுத்தலாமே' என்று உள்ளூற வெடித்தவள் கண்ணில் பாவமான தோற்றத்தில் தெரிந்தாள் கோதாவரி..

எல்லாம் சிதம்பரத்தின் வேலைதான் திருமணத்தை தடுக்க தொடர் முயற்சி கொண்ட கோதாவிற்கு செக்மேட் வைத்தார் சிதம்பரம் அவள் உண்மையான குணம் தெரிந்து…. அப்போது பம்மியவள் தான் இந்த நிமிடம் வரை அப்படியே இருக்கிறாள்

கண்ஜாடை காண்பித்து சித்தியை அழைக்க சித்தி "ஹூம்" என்று கழுத்தை வெட்டிக்கொண்டு திரும்பினாள் கோதா…

பின் வார்த்தையாகவே அழைத்தாள் குந்தவி… அருகினில் வந்தவளை அவள் உயரம் வரை குனியவைத்து கேட்டாள் "ஏன் சித்தி இந்த கல்யாணத்தை நிப்பாட்ட எதுமே பண்ணலையா… அப்பா நீ சொல்லியுமா கேட்கல"

அன்றைய சம்பவம் அவள் முன் நிழலாடியது, சிதம்பரம் இவள் திருமணத்தை நிறுத்தச் சொன்னதும் பாயும் புலியாய் மாறி கோதாவை அடித்து துவைத்து விட்டார்… நினைவில் நினைக்கும் போதே வந்த வலியால் கன்னத்தை ஐவிரல் கொண்டு தேய்த்துக்கொண்டாள்…

"ஹான் அது எப்படி நான் சொன்னா கேப்பாக...போடி கூறு கெட்ட கழுதை…" என்று அவளை சமாளித்து எழுந்துகொண்டார்…

வெறுப்பும் வேதனையும் மனதை ரணமாய் காயப்படுத்தியது… "இருந்த ஒரு நம்பிக்கையும் போச்சே" என்று கைகளைப் பிசைந்தாள்

"கெட்டி மேளம், கெட்டி மேளம்” என்று சொல்லுவதோடு, தவில் நாதஸ்வர கலைஞர்களுக்கு தெரியும் வண்ணம் கையை உயர்த்தி சைகையும் காட்டினார் அய்யர். சமிக்ஞை சரியாக செல்ல வேண்டும் என்பதற்காக பலரும் அதே போல கையை உயர்த்தி விரலை ஆட்டி
“கெட்டி மேளம்,கெட்டி மேளம்” என்று கூறியவுடன்

“மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்” என்று அய்யர் ஸ்ருதி சேர்த்துப் பாட, மூன்று மூடிச்சுகளில் ஒரு முடிச்சை‌ அவன் போட, மற்ற இருமுடிச்சுகளையும் தங்கை முறையில் இருந்த ஒரு பெண் போட, இருவரும் எழுந்து அக்னிக்குண்டத்தை மூன்று முறை சுற்றி ஒருவருக்கொருவர் சொந்தமாகிப்போயினர்…

"என்ன பெரிய சொந்தபந்தம்… நீ சொல்ற சொந்தக்காரனுங்க எல்லாம் காசு இருந்தா ஒரு பேச்சு காசு இல்லைனா ஒரு பேச்சு… காசு இல்லைனா நம்ம மூச்சே நின்னாலும் கண்டுக் காதவனுங்க...‌‌ அவனுங்க என்னைய மதிச்சா என்ன மதிக்காட்டி என்ன??.. நான் என் மாமானார் வீட்டோட வந்து தங்கிக்கிடுதேன்… அம்புட்டுதேன் வழியை விடு வெளிய போக" மருது உடன்பிறந்த முறையிடம் பேசிவிட்டு அடைத்திருந்த கதவை திறந்து கொண்டு வெளிவர சிதம்பரம் அவனை நன்றியோடு பார்த்துக் கொண்டிருந்தார்...‌ உவர்நீர் கூட சுரந்தன..

"ரொம்ப சந்தோசம்யா மாப்ள…" என்றவர் அவள் தோளில் கைப்போட்டு கூட்டிச்சென்றார்… எதையோ சாதித்த நினைப்பில் மருதும் நிமிர்ந்த சட்டமாய் சென்றான்…

எதையோ தொலைத்தவள் போல் (இல்லையில்லை வாழ்க்கையை தொலைத்துத்தானே நிற்கின்றாள்) எங்கோ விரக்தியான பார்வையை பதித்து முறைப்பாய் அமர்ந்திருந்தாள்…

"குந்தவி"

"...."

குந்தவி

"....."

"ஏ புள்ள குந்து"

இதுவரை பதிலேதும் அளிக்காதவள் இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் பொருமினாள்

"இந்தாரு, குந்து கிந்துனு கிட்ட வந்த எட்டி ஒருமிதிதான் அப்றம் நீ எவ கிட்டயும் போக முடியாது"

அவள் கூறிய வார்த்தைகள் எந்த ஆண்மகனையும் பொறுமையிழக்கச் செய்யும் வார்த்தைகள்… ஏதாவது ஏடாகூடமாக ஒன்று நடந்து இப்படியே அப்பன் வீட்டில் இருந்திட மாட்டோமா என்று முன்னுக்கு பின் முரனாக பேசினாள்

வந்த ஆத்திரங்கள் அனைத்தையும் அடக்கியவன் "ஏன் குந்து இப்படிலாம் பேசுற… மாமேன் உன்ன நல்லா பாத்துப்பேன்டி"

"யாருக்கு யாருயா மாமா… இன்னொரு முறை டி போட்டு பேசின நாக்கு துண்டாயிடும்" சினத்தை கக்கியவள் அறையை விட்டு வெளியேறினாள்

அவள் சென்றதும் அமர்ந்திருந்த கட்டிலை முடிந்த மட்டும் சினத்தை அடக்கி குத்தினான்..‌ அப்படியிருந்துமே லேசான கீறல்களை பரிசாய் வாங்கிக்கொண்டது அந்தகாலத்து பர்மா தேக்குக் கட்டில்…

"பசு ரொம்ப முரண்டு பிடிக்குதே… பாப்போமே அதையுந்தான் பசு எப்படி இருந்தாலும் இந்த காளைக்கிட்ட அடங்கித்தான போகோனும்" சிரிப்பில் விஷமத்தையும் கலந்து கொண்டான்

*****
அலைபேசியின் வழி அலாரம் அடிக்க ஏற்கனவே விழித்திருந்தவள் கரமோ அலாரத்தை அமர்த்தியது மேரி அக்கா எழுந்து விடாமலிருக்க… வழக்கம் போல வழமையான வேலைகளைத் தொடங்கினாள்… காலைக்கடன்களை முடித்தவள் உடற்பயிற்சிக்குள் குதித்தாள் ஒவ்வொரு உறுப்புக்கும் தனித்தனியாய் உடற்பயிற்சி செய்தவளோட ஒருமணிநேரம் கடந்துவிட, வியர்வை மொட்டுக்களை துடைத்தவள் ஆசுவாசப்படுத்தி அமர்ந்தாள்…

"என்ன குந்தவி போலிஸ் வேலைல இருக்க நாங்களே எங்க உடம்ப இப்படி கவனிக்கிறது இல்ல நீ ஏன் இதெல்லாம் பண்ற" பூலோக வைகுண்டம் எனப்படும் திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் ரெங்கநாதரைப்போல படுத்துக்கொண்டே கேள்வியை கேட்ட மேரியிடம் "உங்களுக்கு ஈசியா கெடச்சனால அதோட அருமை தெரிலக்கா… என்ன மாதிரி கீழ்மட்டத்துலயிருந்து அடிபட்டு உதபட்டு வரவங்களுக்குத்தான் அதோட அருமையே புரியும்"

"சரி டி தாயே ஆள விடு.. உன் கூட என்னால போட்டி போட்டு பேச முடியாது பா"

"அதில்ல பேரிக்கா 'ச்...சை' மேரிக்கா இதுல ஒரு சுகம் இருக்கு… என் உடம்பு என் பேச்சை கேக்குதுனு ஒரு கர்வம் இருக்கு அதான்… அதுல எனக்கு ஒரு தனி சந்தோஷம்"

"சரி சரி நான் போய் குளிச்சிட்டு வாரேன்"

"அக்கோவ் இப்ப நான் உன்ன பேரிக்கானு சொன்னேனே கோவம் வரலை"

"எனக்கு ஏன்டி கோபம் வருது நீ என்ன அக்கானு கூப்டாலும் நான் உன்னை என் புள்ளையாதான் பாக்குறேன்" என்றவள் குந்தியின் கலங்கும் முகம் பார்க்க பிடிக்காமல் குளிக்கச் சென்று விட்டார்

தொலைந்த தன் அன்னையை திருப்பி எடுத்த நெகிழ்ச்சியில் கண்ணீர் கரைத் தாண்டியது குந்தவிக்கு….

இருவரும், ரெங்கநாயகி அனுப்பிய முகவரிக்கு விரைய தயாராகினர்…

அரைமணி நேரப்பயணத்தில் குந்தவி ரெங்க நாயகி, மேரி என மூவரும் பெரிய பணக்காரர்கள் தங்கியிருக்கும் நிலா கார்டனுக்குள் நுழைந்தனர்… அங்கு கட்டியுள்ள ஒவ்வொரு வீட்டின் வெளிப்புற அழகையும் வாயை பிளந்து கொண்டு பார்த்தனர் மேரியும் குந்தவியும்…

அவர்கள் சென்ற கேப் அந்த பெரிய இரும்பு கதவின் முன் நின்றது.. கதவின் இடதுபுறம் அமர்ந்திருந்த காவலாளி வந்து விசாரிக்க, ரெங்கநாயகியின் பெயரை சொன்னதும் அவர் கதவைத் திறக்காமல் பதிலுக்கு ஒரு பொத்தானை அழுத்தினார்… கதவு தானாக திறந்து வழிவிட்டது…. பெரிய மாடமாளிகை இடது வலது எனச் சுற்றி எங்கும் ரம்மியமான சோலைகள்… அதில் பூக்கள் எங்கும் பூத்துக்குலுங்கின…

மேரியும் குந்தவியும் ஒரு நிமிடம் இமைக்கவும் மறந்து போயினர்… "வாங்கப்பா ஏன் அங்கேயே நின்னுடீங்க" ரெங்கநாயகி குரல் எழுப்ப பிரமை பிடித்தவர்கள் பின்னே சென்றனர்… அதை மேலே பால்கனியில் இருந்து ஒருவன் பார்த்துக் கொண்டிருந்தான்… இவர்களைப் பார்த்ததும் வேக வேகமாக சரசரவென கீழே இறங்கி வந்தான்… ரெங்கநாயகியை பார்த்ததும் ஒருவித முறைப்பை வழங்கி விறுவிறுவென உள்ளே சென்று கதவையடைத்துக் கொண்டான்

போர்டிக்கோவிற்குள் நுழைந்த குந்தவிக்கு புரிந்தது யாரோ இறந்ததற்காக துக்கம் அனுசரிக்கப்படுகிறது என்று… அந்த இடத்தை நகர்ந்து மேலும் உள்ளே செல்ல வரவேற்பரையில் மௌனமாய் கண்ணீர் வடித்து அமர்ந்திருந்தனர் பெண்டிர்… அங்கிருந்த அனைவரும் வெள்ளை உடையில் தெரிய இவர்கள் மூவரும் கருப்பு உடையணிந்து தனித்து தெரிந்தனர்… அங்கே ஒரு பெண் சற்றுத் தடித்த தேகத்தை தாங்கி அழக்கூட திராணியற்ற நிலையில் அமர்ந்திருந்தார்…

அவர் அருகில் சென்ற ரெங்கநாயகி கைகளைப் பிடித்து ஆறுதல் கூற அந்தப் பெண்மணியோ ரெங்காவை கட்டிக்கொண்டு அழுதார்… அந்த மாடமாளிகையின் சொந்தக்காரரான மாமனிதர் வெள்ளியங்கிரியின் பதினாறாம் நாள் காரியம் தான் அங்கு நடந்தேறி வருகிறது…

சுவற்றில் போட்டோவாய் தொங்கினாலும் அவரது வழக்கமான புன்னகையை ஏந்தியே அவர் வதனம் காணப்பட்டது… அவருக்கு மாலையணிவித்த அவ்வீட்டார் புகைப்படத்திற்கு கீழேயே படையலையும் போட்டு சடங்கை திருப்தியாய் முடிக்க மாலை நேரமானது… இதற்கிடையில் ரெங்கநாயகி ஏன் தன்னை இங்கு அழைத்து வந்தார் என குந்தியின் மூளைக்குள் ஓடியிருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அமைதி காத்தாள்….

கூடியிருந்த சொந்தங்கள் ஒவ்வொருவராய் கலைந்து செல்ல வீட்டில் அவரது குடும்பம் மட்டுமே இருந்தது… இரண்டு பெண் பிள்ளைகள் மூன்று ஆண் பிள்ளைகள் என செல்வத்தோடு சேர்த்து இந்த மக்கள் செல்வங்களையும் அதிகமாக்கிக் கொண்டார் வெள்ளியங்கிரி… பாவம் இப்படி திடீரென போய் சேருவார் என்று எவரும் அறிந்திலர்…

"மஞ்சு இப்படியே அழுதுட்டு இருந்தா போனவரு என்ன திரும்பி வரவா போறாரு நீ தான இந்த பிள்ளைங்களுக்கு ஆறுதல் சொல்லனும்" ரெங்கா மெதுவாய் பேச்சை ஆரம்பித்தார்…

"கோமால இருக்காருனு சொன்னாங்க… சரி படுத்த படுக்கையா இருக்க மனுசன பாத்துட்டாச்சும் இருக்கலாம்னு நினைச்சேனே… ஆனா இப்படி நினைச்சுக்கூட பாக்காத நேரத்துல போய்டாரே"

"எல்லாரும் ஒருநாள் போய்த்தான் ஆகனும் மஞ்சு போனவர நினைச்சுட்டே இருக்கவங்கள விட்ராத… ஆம்பளப் புள்ளைங்க உருண்டு புரண்டு பொழச்சுக்குங்க... அங்க பாரு ரெண்டு பிள்ளையும் கல்யாண வயசுல இருக்குங்க… இதுங்களுக்கு ஒரு நல்லது பாக்கனும்ல"

"மஞ்சு, அன்னைக்கு நான் சொன்னேன்ல குந்தவி இதோ வந்துருக்கா பாரு" என்று ரெங்கா கூற குந்தவியின் பக்கம் திரும்பி மஞ்சு அவளை கண்ணசைத்து அருகில் அழைத்தார்

அருகில் சென்றவளை மஞ்சு பார்க்க பவ்யமாய் வணக்கம் வைத்தாள் குந்தவி…

"வணக்கம் மா" என்று பதில் மரியாதை மஞ்சுவிடமிருந்து வந்தது…

ரெங்கநாயகியை அழைத்துக்கொண்டு மஞ்சுளா ஒரு அறைக்குள் நுழைந்தார்…

அதுவரை அமைதிகாத்த மேரியோ குந்தவியின் அருகில் சென்று "குந்து வா இப்படிக்கா குந்துவோம்" என்று சிரிக்க

"அட சும்மா இருக்கா" என்று முகம் சுளித்தாள்

'எப்போதும் இப்படி இருக்கமாட்டாளே' என்றெண்ணிய மேரியோ அவளை அழைத்துக்கொண்டு வெளியே சென்றாள்

"ஏன் குந்து‌ என்னாச்சு முகம் வாடியிருக்கு"

"பின்ன என்னக்கா திருட்டு கேச பாக்கனும் சொல்லி ஏமாத்தி கூட்டிட்டு வந்திருக்கு இந்தக்கா… துக்க வீட்டுக்கு போகனும்னு உண்மையை சொன்னாலே அக்கா கூப்புட்டுச்சுனு வந்துருப்பேன்ல"

"உன் வருத்தம்‌ புரியுது டி ஆனா ரெங்கா அக்கா எது பண்ணாலும் கரெக்டாதான் இருக்கும்" என்று இழுத்துக் கொண்டு அருகிலுந்த சோலைக்குள் சென்றாள்

ஏதோ பேசி திருப்தியடைந்த நிலையில் மஞ்சுளா அறையை விட்டு வெளியே வரவும் அவர்களின் குடும்ப வக்கீல் வீட்டிற்குள் நுழையவும் சரியாய் இருந்தது…

மஞ்சுளா "வாங்க அண்ணே"

வரவேற்புக்கு சம்பிரதாயமாக பதிலுக்கு குறுநகை புரிந்தார் வந்தவர்… "வெள்ளியங்கிரி எழுதுன உயில் கொண்டு வந்திருக்கேன்மா… படிச்சுப் பாருங்க" என்றவர் முகத்தில் பதட்டம் அப்பிக் கிடந்தது…

"உக்காருங்கண்ணே முதல்ல.. ரேனு போய் அங்கிள்க்கு ஜூஸ் கொண்டு வா"

மஞ்சுவின் மகள் ரேனு எழ அதெல்லாம் "வேணாம்மா நான் கொஞ்சம் அவசரமா போகனும்…" என்று முகத்தில் வடிந்த வியர்வைத்துளிகள் கீழே விழாதவாறு கைக்குட்டையில் ஏந்திக்கொண்டார்

"உயில், வெள்ளியங்கிரி முழு சுயநினைவோடு எழுதினதுமா ஒரு தடவை படிச்சு பாருங்க நான் கிளம்பனும்"

"என்ன பெரிசா இருக்கப் போகுது எல்லாம் அவரு முன்னாடியே சொல்லிட்டாருண்ணா எங்கிட்ட"

"பரவால்லமா மறக்காம படிச்சு பாருங்க.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் வரேன்மா" என்றவர் எட்டு கால் பாய்ச்சலில் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்…

ஆர்வத்தில் உயிலை வாங்கிப் படித்த ரேனு எழுதியிருப்பதை தாயிடம் கூற "ஓஓஓஓஓஓஓ…." வென உயிரை வெறுத்து அடிக்குரலில் ஓலமிட, அறையின் கழிவறைக்குள் இருந்த ரெங்கநாயகியும், சோலைக்குள் இருந்த குந்தவி மற்றும் மேரியும் அடித்து பிடித்து மஞ்சுளாவிடம் வந்து சேர்ந்தனர்…

வேகமாக ஆர்வத்தில் குந்தவி வாங்கிப் படிக்க அத்தனை சொத்துக்களும் அவரின் மகன் நகுலனின் பெயரில் இருந்தது…

"யாருமா நகுலன்" சந்தேகமாய் நெற்றிய தேய்த்துக்கொண்டே கேட்க

"எங்க ரெண்டாவது அண்ணே" என்று ரேனு கூறினாள்

"என்ன குந்தவி என்னாச்சு" ரெங்கநாயகி பரிதவித்து கேட்க

"எல்லா சொத்தையும் நகுலன் பேருல எழுதிருக்காரு வெள்ளியங்கிரி சார்"

"எப்படி இது சாத்தியம் அப்ப மத்த பிள்ளைகள் கதி"

"விடு ரெங்கா இது அவரோட கடைசி ஆசை போல, எங்க அவன் இன்னும் உருப்படாம போய்டுவானோனு நெனைச்சு எழுதிருப்பாரு…"

"அப்ப உனக்கும் இதுல சம்மதமா"

"சம்மதமானு கேட்டா என்ன சொல்ல,
அவரோட கடைசி ஆசைக்கு நான் எப்படி குறுக்க நிக்க முடியும்…"

"அப்ப உங்களுக்கு இதுல சந்தோசம் இல்லை, அப்படித்தானமா" அறைக்குளிருந்து எல்லாவற்றையும் கேட்ட நகுலன் கதவைத்திறந்து கொண்டு இவ்வாறு கதைத்தான்

"அய்யோ அப்படி இல்லடா உன் சந்தோஷம் தான் என் சந்தோஷம் டா" அம்மா கூறிய எதையும் பொருட்படுத்தாத பொறுப்பற்ற பிள்ளை
"நான் கொஞ்சம் வெளிய போகனும் போயிட்டு வரேன்" என்றான்

"ஒரு நிமிஷம் நகுலா" ரெங்கநாயகி அழைக்க, 'என்ன' என்று வார்த்தையால் கேட்காமல் தெனாவெட்டாய் புருவம் உயர்த்திக் கேட்டான்

குந்தவிக்கு அவனின் நடத்தையிலேயே புரிந்தது இருவருக்கும் ஏதோ காரணத்திற்காக முன்பகை என்று…
தன்னை அவன் மரியாதை குறைச்சலாய் நடத்துவது வருத்தம் அளித்தாலும் மேலும் தொடர்ந்தார் ரெங்கா "நீ உன் தங்கச்சிகளுக்கும், அண்ணனுக்கும் இதுல பங்கு கொடுக்கமாட்டியா"

"அது என் அம்மா சொன்னா நடக்கும்" உதிர்த்த வார்த்தைகளின் காரத்தன்மை அனைவருக்கும் தெரிந்தது… சொன்னவன் வெளியே சென்று விட்டான்

"மஞ்சு நீ உன் பையன்ட பேசு"

"இது அவரு எடுத்த முடிவு ரெங்கநாயகி அத நான் எந்த காலத்திலும் மாத்த மாட்டேன்"

"இவளைத் திருத்தவே முடியாது" என தலையில் கைவைத்து அமர்ந்தார்

பள்ளிப் பருவ நட்பு.. இருபது வருட நட்பாக மாறியிருக்கிறது… இன்றுவரை மஞ்சு எந்த முடிவும் ரெங்கநாயகியை கேட்காமல் எடுத்ததில்லை… வெள்ளியங்கிரியும் தங்கமான மனிதர் ரெங்கநாயகியை தங்கையாக பாவித்து குடும்ப உறுப்பினராக்கிக் கொண்டார்… ஒருமுறை நகுலனால் ஏற்பட்ட பிரச்சனை ரெங்கநாயகியால் தான் தீர்த்து வைக்கப்பட்டது…

வெள்ளியங்கிரியின் முடிவை மாற்றாவிட்டாலும் மஞ்சுவிற்கு வேதனை பலமடங்கு ஏறிப்போயிருந்தது… கண்கள் நீரை இறைத்துக் கொண்டிருந்தன…. ரேனுவும் அவளது தங்கை பானுவும் அம்மாவின் அருகில் இருந்து அவரைத் தேற்ற முற்பட, மஞ்சு அவர்களைக் கட்டிக்கொண்டு அழுதார்…

ரெங்கநாயகியின் அருகில் சென்ற குந்தவி "அக்கா இந்த உயில் விஷயம் இவங்களுக்கு முன்னாடியே தெரியாதா"

"ஆமா குந்தவி நகுலன் தான் இந்த வீட்டுலையே அடங்காதவன்… அவனைத் திருத்த தான் அவங்க அப்பா உயிலே எழுதுறேனு சொல்லிட்டு இருந்தாரு… மஞ்சுகிட்ட வெள்ளியங்கிரி அண்ணா சொன்னது என்னன்னா, "எல்லாருக்கும் சமமா பங்கு எழுதி வச்சுட்டேன் ஆனா நகுலன் இன்னும் திருந்தாம இருந்தா அவன் பங்கு அநாதை ஆசிரமத்துக்குப் போகும்னு எழுதப்போறதா சொன்னாருனு அன்னைக்கு மஞ்சு என்கிட்ட சொன்னா"

"ஓ அப்படியாக்கா சரி அந்த டாக்குமெண்ட்ட நான் மறுபடி பாக்கலாமா"

"இந்தாமா" என்ற கைகளில் சுருட்டி வைத்திருந்த பத்திரத்தை மஞ்சு அவளிடம் கொடுக்க‌, ஒரு வரி இடைவெளி இல்லாமல் முழுதுமாக படித்தாள்… பின்பு கடைசி பக்கத்தில் இருந்த கையெழுத்திலும், விரல்ரேகையிலும் அவளது கவனம் வந்து நின்றது…

தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த பூதக்கண்ணாடியை எடுத்தவள் உற்று நோக்கினாள் கையெழுத்தை…

"ஏதோ தப்பா இருக்கு"

வீட்டில் இருந்த அனைவரும் குழப்பமாகிப்போக ரெங்கநாயகி மட்டும் அமைதியாய் காணப்பட்டார்…

மஞ்சுளா ரெங்கநாயகியின் காதில் கிசுகிசுத்தார் "அந்த பொண்ணு என்ன சொல்றா"

"அவ ஃபாரன்சிக் சைன்ஸ் படிச்ச பொண்ணு… கைரேகை கையெழுத்து திருட்டுனு எல்லா கேஸ்லயும் ஸ்பாட்டுக்கு போய் நல்லா தேடிப்பாத்து சரியா துப்பு கொடுப்பா… அது எல்லாமே சரியா இருக்கும்…. எனக்கு கூட நிறைய கேஸ்ல இன்டேரக்டா நிறைய உதவி பண்ணிருக்கா…அவ சொல்றானா நிச்சயம் சரியா இருக்கும்… நான் அவளை இங்க கூட்டிட்டு வந்த நோக்கம் வேற.. ஆனா இங்க நடக்குறது வேற…"

மஞ்சுளா "கடவுள் ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் இவளை இங்க வரவழைச்சுருக்காரு"

குந்தவி "ரேனு உங்கப்பா சைன் இருக்க வேற டாக்குமெண்ட்ஸ் இருந்தா எடுத்துட்டு வா"

"ஹான் அக்கா"என்றவள் மாடியறை நோக்கி வேகமாக ஓடினாள்

ரேனு கையோடு கொண்டு வந்த பத்திரத்தை வாங்கியவள் இரண்டு பத்திரங்களிலும் உள்ள கையெழுத்தை சேர்த்து‌ வைத்துப் பார்த்தாள்… உற்று கவனித்தாள் கையெழுத்தின் வித்தியாசத்தை புரிந்து கொண்டாள்…

"மை கெஸ் இஸ் கரெக்ட்‌… சிக்னேச்சர் ரொம்ப ஷேக்கியா இருக்கு.. ஐ திங்க் இட்ஸ் போர்ஜெரி டாக்குமெண்ட்" அந்த வக்கீல் கொண்டு வந்த பத்திரத்தை மேலே தூக்கிக் காட்டி சத்தமாய் கூற மஞ்சுளா குடும்பம் வாயடைத்துப் போனது…

"எப்படி சொல்றீங்க.. எங்களை எங்கப்பா எதுக்காக ஏமாத்தனும்" என்று மஞ்சுளாவின் கடைக்குட்டி பானு கேட்க

"உங்கப்பா உங்களை ஏமாத்துனதா சொல்லல… அவரோட கையெழுத்துப் போட்டு இடையில வேற யாரோ ஏமாத்திருக்காங்கனு சொல்றேன்... உங்க வக்கீலாக இருக்கலாம் இல்ல‌.." என்று இடைவெளிவிட்டவள் தொடர்ந்தாள் "ஏன் அது உங்க அண்ணா நகுலனா இருக்கலாம் இல்லரெண்டு பேரும் சேர்ந்து கூட இந்த வேலையை பாத்துருக்கலாம்"

"நிறுத்துமா விட்டா பேசிட்டே போற" தாயின் மனம் குமுறியது தன் மகனைத் தவறாகக் கூறியதும்…

"எல்லா சொத்தும் அவரு பேருல இருக்கனால அவரு கூட ஏமாத்தலாம்னு தோணுச்சு அதான்.. மன்னிச்சுக்கோங்கமா" என்றாள்

"இரு மஞ்சுளா அவசரப்படாத" என்றார் ரெங்கநாயகி….

இதற்கிடையில் "எந்த விதமான டெஸ்ட்டும் பண்ணாம நீங்க எப்படி இப்படி சொல்லாம்" என ரேனு ஆரம்பித்தாள்…

"இவங்களுக்கு எப்படி சொல்றது" என்று தன்னுள்ளே பேசியவள் "சோ சிம்பிள்‌ ரேனு அதாவது நம்ம கையெழுத்தை நம்ம போடும் போது முதல்ல நம்ம மூளை ஆடர் போடும்… அப்பறம்தான் நம்ம கை கையெழுத்து போட ஆரம்பிக்கும்… ஆனா இன்னொருத்தரோட கையெழுத்த போடும் போது கை தான் முதல்ல வேலையை ஆரம்பிக்கும் அப்றம் தான் கையெழுத்த சரியா போடனும்னு மூளை ஆடர் போடும்.. அப்ப நம்மளை அறியாமலே ஒரு சின்ன ஷேக் அந்த கையெழுத்துல இருக்கும்…

அதுமாதிரி தான் இந்த டாக்குமெண்ட்ல இருக்கு.. நயன்டி பர்செண்ட் இது ஃபேக் டாக்குமெண்ட் இத முழுசா நிரூபிக்கனுமா??.. அக்காட்ட குடுங்க டெஸ்ட் பண்ணிட்டு வந்து ரிப்போர்ட் தரேன்… ஆனா இது ஃபேக் டாக்குமெண்ட்" என்று மறுமுறையும் கூறியவள் அங்கிருந்து வெளியேறினாள்

Word count:1972

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...
 
Last edited:
Status
Not open for further replies.
Top Bottom