தாரகை 1
மாயைகள் புதிதல்ல
மாயாஜாலங்களும் புதிரல்ல
உன் முன் நிற்கும்
அந்த நிமிடங்களே
எனக்கு இவையனைத்தையும்
புலப்படாத
மர்மங்களானது…
இரவு ஒன்பது மணியளவில் அவ்விடத்தில் ஆள் நடமாட்டம் முற்றாய் அடங்கியிருக்க சூழ்ந்திருந்த இருளின் பரவலை மட்டுப்படுத்திருந்திருந்தது மின்கம்ப விளக்குகள். இரவின் பனித்தூறலும் அவ்விடத்திற்கே பிரத்யேகமான சீதோஷண காலநிலையும் குளிரின் வீரியத்தை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்தபடியிருக்க அதையெல்லாம் பொருட்படுத்தாது அங்கிருந்த நிமிடங்களை அனுபவித்துக்கொண்டிருந்தது ஐவரை கொண்ட அந்த நால்வர் குழு.
விறகுகளை கொத்தாய் அடுக்கி அதில் தீமூட்டி அதன் செந்தணல் உமிழ்ந்த வெப்பத்தில் குளிர்காய்ந்தபடியே கதை பேசிக்கொண்டிருந்தனர் அந்த நால்வரும்.
“டேய் ஆகாஷ் எப்படிடா எங்க போனாலும் உன்னை தேடி வந்தே எல்லாரும் கலாய்க்கிறாங்க?” என்று பிரவீன் தன் கேலியை ஆரம்பிக்க ரக்ஷிதாவோ
“ இன்னைக்கு யாருகிட்ட மொக்க வாங்குனான்?” என்று கேட்க
“அது ரச்சு…” என்று தொடங்கிய பிரவீன் ஆகாஷை குறுகுறுவென பார்த்தபடியே ஏதோ கூறவர அவன் திட்டத்தை புரிந்து கொண்ட ஆகாஷ் பாய்ந்து வந்து பிரவீனின் வாயை மூடினான்.
பிரவீனோ தன் வாயினை அரணிட்டிருந்த ஆகாஷின் கையை கடித்திட அவனோ கையை உதறியபடியே வலியில் அலறியபடி பிரவீனை திட்டினான்.
“மனிஷனாடா நீ… இப்படி கடிக்கிற?”
“நீ ஏன்டா என் வாயை மூடுன?”
“அது நீ ரச்சுகிட்;ட அந்த அட்டுபிகர் என்னை கலாய்ச்சதை சொல்லிடுவனு தான்.” என்றவனுக்கு அப்போது தான் தன் வாயால் உளறியது புரிந்தது.
மானசீகமாய் தலையில் அடித்தபடியே ஈயேன்று பல்லை காட்டியபடியே ரக்ஷிதாவை பார்த்தான் ஆகாஷ். அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தபடியிருக்க பிரவீனோ சத்தமாக உருண்டுபிரண்டு சிரித்தான்.
பிரவீனின் செய்கையை கண்டு ஆகாஷிற்கு அவனை ஏறிமிதிக்க தோன்றிய போதிலும் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்ததால் அவனை முறைக்கமட்டுமே முடிந்தது அவனால்.
ஆகாஷ் எதிர்பார்த்தது போல் அவன் காதலியும் தோழியுமான ரக்ஷிதா பல்லை கடித்தபடியே பிரவீனிடம்
“என்ன நடந்தது பிரவீன்?”
“ அது எப்பவும் போல உன்னை முன்னுக்கு போகச்சொல்லிட்டு பின்னாடி வந்த அத்தனை பொண்ணுங்களையும் வரிசையாக ஜொள்ளு விட்டுட்டே வந்தான். அதுல ஒரு பொண்ணு இவனை ரொம்ப பயங்கரமா கலாய்ச்சிட்டு கடைசில கைலாசா போய் ட்ரெயினிங் எடுத்துட்டு வானு ப்ரீ அட்வைசும் கொடுத்துட்டு போனா ரச்சு.” என்று சின்ன விஷயத்தை பெரிதாய் கூறி ரக்ஷிதாவின் கோபத்திற்கு பிரவீன் தூபம் போட அவள் கோபத்தில் அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாள்.
நடப்பதை சுவாரசியமாய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பவித்ரா ரக்ஷிதாவை சமாதானப்படுத்த முயல அவளோ நின்று கேட்டிடவில்லை. ஆகாஷ் பிரவீனை திட்டியபடியே ரக்ஷிதாவை அழைத்துக்கொண்டே அவள் பின்னாடியே ஓடினான்.
அவர்கள் இருவரும் சென்றதும் பவித்ரா பிரவீனிடம்
“ஏன்டா இப்படி?”
“நமக்கு டைம் பாஸாக வேணாமா பவி?”
“அதுக்குனு இப்படியா கொளுத்தி போடுவ?பாவம்டா அவன்.”
“நீ நினைக்கிற அளவுக்கு எதுவும் நடக்காது. இந்நேரம் அவன் ரச்சு கால்ல விழுந்து சரண்டராகியிருப்பான்.”
“அது என்னமோ உண்மை தான். இந்த நவீன் எங்க போயிட்டான்?ஆளையே காணோம்.” என்று நெடுநேரமாய் காணாமல் போயிருந்த அந்த ஐவர் கூட்டணியின் ஐந்தாவது நபரான நவநீதனை பவித்ரா தேட
கால்களை முன்னால் நீட்டி கைகளை பின்னுக்கு முட்டுக்கொடுத்தபடி ஒய்யாரமாய் அமர்ந்த ஆகாஷ்
“அவன் தான் ஒன்பது மணியானாலே காணாமல் போயிடுறானே.”
“என்னடா சொல்லுற?”
“ஆமா பவி. இரண்டு நாளா அந்த லேக்குக்கு பக்கத்துல இருக்க மரத்தை பார்க்க போறேன்னு கிளம்பி போயிடுறான். இரண்டு நாளாக ஏதோ வேண்டுதல் போல அதையே சுத்திவந்துட்டு இருக்கான்.”
“இவன் எப்ப இருந்துடா மண்ணை நோண்டுறதை விட்டுட்டு மரத்தை சுத்த ஆரம்பிச்சான்?”
“அதான் சொன்னேனே இரண்டு நாளானு. ஏதோ கேர்ள ;ப்ரெண்டை பார்க்க போறமாதிரி நைட்டு ஒன்பது மணிக்கு கிளம்பிபோயிட்டு நடுச்சாமம் 12 மணிக்கு திரும்பி வரான். எனக்கென்னவோ ஏதோ பேயை கரெக்ட் பண்ணிட்டான்னு தோனுது.” என்று கூற தலையில் அடித்துக்கொண்டாள் பவித்ரா.
“எப்படிடா உனக்கு மட்டும் இப்படியான சந்தேகமெல்லாம் வருது?”
“ஒரு சிங்கிளோட பிரச்சினை இன்னொரு சிங்கிளுக்கு தான் புரியும். அதனால நான் சொன்ன மாதிரி தான் நடந்திருக்கும்.” என்றவனை என்ன செய்வதென்று தெரியாது பார்த்துக்கொண்டிருந்தாள் பவித்ரா.
இவர்களது உரையாடலின் காரணகர்த்தாவான நவநீதனோ அந்த மரத்தடியில் அமர்ந்து யாரையோ எதிர்பார்த்தபடியிருந்தான்.
இருளின் ஆக்கிரமிப்பை முழுநிலவின் ஒளி தடைசெய்திருக்க உடுக்களும் அதற்கு வலு சேர்க்கும் வகையில் இருளின் படையெடுப்பை தன் சிறு ஒளியினால் தடுத்தபடியிருந்தது. வானில் இவ்வாறானதொரு யுத்தம் நடந்தபடியிருக்க மண்ணிலோ அதற்கு நேரெதாய் சுற்றம் முழுதும் மயான அமைதியால் தத்தெடுக்கப்பட்டிருந்தது.
ஏரியின் நீரோட்டமும் பச்சைவண்ண மரங்களின் அசைவும் சூழல் அடங்கியதும் பூத்துக்குலுங்கி மணம் பரப்பும் புஷ்பங்களின் நறுமணமும் மட்டுமே அவ்விடத்தில் உயிர்ப்புடன் இருந்தது. ஆனால் இவை எதையும் உணரும் நிலையிலோ அனுபவிக்கும் நிலையிலோ நவநீதன் இல்லை. அவன் எண்ணம் முழுதும் இரண்டு நாட்களாய் அவன் எண்ணங்களில் குடிகொண்டு அவனை ஆட்டிப்படைக்கும் அந்த மஞ்சளாடை அழகியிடமே ஸ்தம்பித்து நின்றது. இத்தனை நாட்களில் எந்த பெண்ணும் அவனை இத்தனை தூரம் இம்சித்ததில்லை. அவன் அவளை பார்த்தது இரண்டு நாட்கள் மட்டுமே. அதுவும் சில விநாடிகள் மட்டுமே. எதை கண்டு அவள் மீது இத்தனை பித்தானான் என்று அவனுக்கு புரியவில்லை. ஆனால் இது வெறும் ஈர்ப்பில்லையென்று மட்டும் அவனுக்கு நன்றாய் புரிந்தது. நேற்று அந்த மஞ்சளாடைப்பெண் ஏதோவொரு செடியை ஏக்கமாக பார்த்திருப்பதை கண்டவன் அந்த பெண் அங்கிருந்து சென்றதும் அது என்ன செடியென்று ஆராய்ந்து கண்டுகொண்டான்.
நவநீதனின் தாய் காத்யாயினியும் தந்தை அமரேந்திரன் இருவரும் தாவரவியல் நிபுணர்கள். பல இடங்களுக்கு சென்று பல அறியவகை தாவர இனங்களை கண்டறிந்து அதற்காக பல விருந்துகளும் பட்டங்களும் பெற்றுக்கொண்ட புத்திஜீவிகள். அவர்கள் மூலம் நவநீதனுக்கும் தாவரங்கள் பற்றி நல்ல புலமை உண்டு. என்ன தான் புலமை இருந்தபோதிலும் அவனுக்கு அதில் நாட்டமிருக்கவில்லை. அவன் மூளையோ வரலாற்றின் பழமையினை அறிவதில் ஆவலைக்காண்பிக்க அவன் மனமும் அகழ்வாராய்ச்சி நிபுணத்துவத்திற்கு பலத்த ஆதரவு வழங்கிட அத்துறையிலேயே தன் பயணத்தை தொடர்ந்தான். இன்றுவரை அவன் பயணம் அவன் எதிர்பார்த்தது போல் பல சுவாரஸ்யமான அனுபவங்களை அள்ளி வழங்கியிருக்க இன்றோ அதற்கு நேர்மாறான ஒரு சூழ்நிலையில் சிக்கியிருந்தான் நவநீதன்.
ஆண்டு முழுவதும் அகழ்வாரய்ச்சி கண்டுபிடிப்புகள் என்று இருப்பவன்
வருடத்திற்கு ஒரு முறை மூன்று வாரங்கள் விடுமுறையில் தன் பள்ளி நட்புக்களுடன் சுற்றுலா சென்றுவிடுவான். இப்போதும் மூன்று வாரவிடுமுறையிலேயே நிலையூருக்கு தன் நட்புக்களுடன் வந்திருந்தான். இயற்கையின் மொத்த அழகையும் வரமாய் பெற்றிருப்பதாய் அவ்வூரை அவனது பெற்றோர் அடையாளப்படுத்த தன் படையை கிளப்பிக்கொண்டு அங்கு வந்திருந்தான் நவநீதன்.
விடுமுறையை கொண்டாட வந்தவனுக்கு விடுகதையானது அந்த மஞ்சளாடை அழகியின் வருகை. முதல்முறை அவளை பார்த்தபோது இந்தநேரத்தில் இந்த பெண் இங்கென்ன செய்கிறாள் என்ற கேள்வியே அவன் மனதில் எழுந்தது.
அவளை கவனித்தபடியே அவளருகே சென்றபோது அவளது ஏக்கம் தோய்ந்த முகமும் ஏமாற்றத்தை தாங்கிய கண்களுமே அவன் கண்களில் பட்டது. அவை இரண்டும் அந்த நிலவின் பிரகாசத்தில் அத்தனை கவர்ச்சியாகவும் ரசிக்கும் விதமாகவும் இருந்தது. அவளது வாட்டமே நவநீதனை சிந்தை குலையச்செய்துவிட அவளிடம் ஏதேனும் உதவி வேண்டுமா என்று விசாரிக்க வந்தவனின் கால்கள் அசைய மறுத்து அங்கேயே வேரோடிநின்றுவிட்டது. புதுமணப்பெண்ணின் தயக்கத்தை போல் அவளிடம் பேச மறந்து தயங்கி நின்றதை நினைக்கையில் நவநீதனுக்கே சற்று ஆச்சரியமாக தான் இருந்தது.
இந்த தயக்கத்திற்கான காரணத்தை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவன் தயக்கம் புதிதாயிருக்க அதைபற்றி என்ன முடிவெடுப்பதென்று தெரியாது அங்கிருந்து சென்றுவிட்டான். ஆனால் அவள் நினைவுகள் அவனை விட்டு விலகியபாடில்லை. பார்பதனைத்திலுமே அவள் முகம் தான் தெரிந்தது. அவன் எண்ணம் முழுதும் அவள் நிறைந்திருக்க மறுநாள் இரவு அவள் நிச்சயம் அவ்விடத்திற்கு வருவாளென்ற நம்பிக்கையுடன் அந்த மரத்தடியில் மறைவாக அவளுக்காக காத்திருந்தான்.
அவன் நம்பிக்கையை பொய்யாக்காமல் அன்றும் அந்த அழகி அங்கு வந்தாள். இன்று அவள் மென்சிவப்பாடையில் வந்திருந்தாள். அங்கு வந்தவள் முதல்நாள் போல் அந்த செடியையே ஏக்கமாக பார்த்துவிட்டு அருகிலிருந்த மரத்தின் பொந்தினுளிருந்த மரத்தாலான ஒரு வயலினை எடுத்து அதை மீட்டத்தொடங்கினாள்.
இவையனைத்தையும் பார்த்திருந்தபோது நவநீதனுக்கு ரவிவர்மனின் ஓவியங்கள் நினைவிற்கு வந்தது. பெண்களுக்கே உரித்தான சில நளினமான உணர்வுகளை ரவிவர்மனின் ஓவியங்கள் எப்போதுமே வெளிப்படுத்த தவறியதில்லை. பெண்களுக்கே உரித்தான குணங்களான அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு ஆகிய குணங்கள் வெவ்வெறு சந்தர்ப்பங்களில் வெளிப்படும் நளினத்தை அவரது ஓவியங்கள் வர்ணங்களின் துணையோடு வர்ணித்திடும். இன்று இந்த மஞ்சளாடைப்பெண்ணை பார்த்தபோது அவனுக்கு ரவிவர்மனின் ஓவியங்கள் இவளளவு உணர்வுகளை பிரதிபலிக்கவில்லையென்றே தோன்றியது.
இருள் சூழ்ந்திருந்த ஆகாயத்திற்கு வெளிச்சத்தினை அள்ளிக்கொடுக்கும்
நிலவினை போல் இராப்பட்சிகளின் இரைச்சலாலும் இலைச்சருகுகளின் சலசலப்பினாலும் கனத்திருந்த அந்த சூழலிற்கு கவர்ச்சியை வழங்கியிருந்தது அவளது இருப்பு. அதிலும் அவள் அந்த மரத்தாலான வயலினை மீட்டியபோது அதிலுண்டான இசை நம்பவே முடியாத அளவிற்கு அத்தனை இனிமையாயிருந்தது. மரத்தாலான வயலினிலிருந்து அத்தனை இனிமையான ஒலி வருமென்று அவன் இதுவரை கேள்விபட்டதில்லை. ஆனால் இன்று நேரில் கண்ட பிறகு அவனால் நம்பாமல் இருக்கமுடியவில்லை.
அந்த இரவின் தனிமைக்கு அவளது தரிசனமும் அவள் மீட்டிய வயலினின் ஒலியும் இதமாயிருந்தது. இதையெல்லாம் ரசித்தபடியிருந்தவனுக்கு அவளருகே செல்லும் எண்ணம் மறந்துபோனது. இயற்கையின் மாயையும் அவள் இசைத்த இசையின் மாயையும் அவனை உலகம் மறந்திடச்செய்தது. கண்விழித்திருந்தபோதிலும் அவன் மூளையில் பல காட்சிகள் ஓடியது. அந்த காட்சிகள் மனதில் பல எண்ணவோட்டங்களுக்கு அஸ்திவாரமிட அவன் ஆழ்மனம் வேறொரு உலகத்தில் சஞ்சரிப்பதை உணர்ந்த மூளை அதற்கு தடையிடுவதற்கான முயற்சியிலிருக்க அந்த வயலின் இசையோ அதற்கெல்லாம் இடம் கொடுக்கவில்லை. இவ்வாறு பல விநாடிகள் கடந்திருக்க நடுச்சாமம் ஒருமணியளவிலேயே தன்னிலையடைந்தான் நவநீதன்.
தன்னிலையடைந்தவன் அந்த மஞ்சளாடை பெண்ணைத்தேட அவள் அங்கிருப்பதற்கான தடயமே இருக்கவில்லை. சுற்றும் முற்றும் தேடியவனுக்கு குழப்பமே மிஞ்சிட அப்போது அவன் கண்ணில் பட்டது அரும்புவிடத்தொடங்கியிருந்த அந்த செடி. அதை பார்த்தவனுக்கு அப்போதுதான் அந்த பெண் இந்த செடியை ஏக்கமாய் பார்த்தது நினைவில் வந்தது. அதை உற்று கவனித்தவனுக்கு அது எந்தவகை செடியென்று தெரியவில்லை. உடனடியாக அதனை தன் மொபைலில் புகைப்படமாக பதிந்து கொண்;டவன் அதன் இலையை பறித்து பத்திரப்படுத்திக்கொண்டு அந்த பெண் இருக்கிறாளா என்று நோட்டம் விட்டபடியே அங்கிருந்து
சென்றான்.
இரவோடிரவாக அது எந்தவகை செடியென்று கண்டு கொண்டவன் அதைபற்றி தெரிந்துகொண்டான். இன்று எப்படியேனும் அந்த பெண்ணிடம் பேசிட வேண்டுமென்று காத்திருந்தவனது கண்களுக்கு விருந்தானது அவளது வருகை. இன்றும் நேற்று போல் அந்த பெண் அந்த செடியை ஏக்கமாய் பார்த்திருக்க அவளருகே வந்தான் நவநீதன்.
“இன்னைக்கு இந்த நிஷாகாந்தி பூ கண்டிப்பா பூக்கும்.” என்;றவனது வார்த்தைகளை கேட்டு திரும்பிப்பார்த்தாள் அந்த மஞ்சளாடைப்பெண்.
அவனை அந்த பெண் ஒருவித அச்சத்துடன் பார்க்க அதை புரிந்து கொண்ட நவநீதன்
“பயப்படாதீங்க. நீங்க இரண்டு நாளாக இங்க வருவதையும் அந்த செடியை ஏக்கமாக பார்க்கிறதையும் பார்த்தேன். உங்களுக்காக இது என்ன வகையான செடினு தேடும் போது தான் இது நிஷாகாந்திப்பூனு தெரிஞ்சிக்கிட்டேன். ரொம்ப நன்றிங்க. உங்களால தான் ரொம்ப அரிதாக பூக்கின்ற இந்த நிஷாகாந்திப்பூ மலர்வதை பார்க்கிற சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருக்கு.” என்று நவநீதன் பேசிக்கொண்டே போக அந்த பெண்ணின் முகத்தில் எந்தவித மாற்றமும் இல்லை.
நிஷாகாந்தி பூ ஆங்கிலத்தில் நைட் குயின் (Night Queen) என்றழைக்கப்படும் கள்ளி இனத்தை சேர்ந்த தாவர வகையாகும். இது இரவில் மிக அரிதாக பூக்கும் தாவர வகையை சேர்ந்தது. அதாவது வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறைமட்டுமே பூக்கக்கூடியது. இதன் சிறப்பே இரவு ஒன்பது மணிக்கு மேல் மலர்ந்து விடியற்காலை நான்கு மணிக்கு முதல் உதிர்ந்துவிடும். அதன் இந்த இயல்பினால் பலருக்கு இப்படியொரு பூ இருப்பது தெரியாது. அதனாலேயே இதனை இரவின் ராணி என்று அழைக்கின்றனர். அதோடு இந்த பூ தொடர்பான பல மூடநம்பிக்கைகளும் உண்டு.
சட்டென்று எழுந்த அப்பெண் எதிர்திசையில் நடக்க ஆரம்பிக்க நவநீதனோ எதுவும் புரியாது அவளை நிறுத்தமுற்பட அந்த பெண்ணோ நின்றபாடில்லை.
அப்போது திடிரென அவனெதிரே கண்களை கூசச்செய்யும் ஒரு ஒளி விழ நவநீதனோ கண்களை மூடி கைகளை அதற்கு கவசமாக்கி நிலைதடுமாறியபடியே பின்னே நகன்றான்.
பௌர்ணமி நிலவிலிருந்து தோன்றிய அந்த வெள்ளொளி நேராக அந்த நிஷாகாந்தி செடியில் விழ மொட்டாயிருந்த நிஷாகாந்தி இப்போது மலராய் உருவெடுத்திருந்தது. அது வழமைபோலில்லாது அந்த பூவினை சுற்றி தங்கநிறத்தாலான ஒரு வளையம் இருந்தது.
எதிர்திசையில் நடந்துசென்றுக்கொண்டிருந்த அந்த பெண் ஏதோ தோன்ற பின்னால் திரும்பி பார்த்தாள்.
அப்போது நிலவொளி பட்டு அந்த பூ பூத்திருப்பதை கண்டவளின் வதனத்தில் அத்தனை மகிழ்ச்சி. உலகை வென்ற உவகையுடன் அந்த மலரருகே ஓடிவந்தவளின் முன் வெள்ளை நிற புகையில் தோன்றி அதில் ஒரு பெண்ணின் முகம் தென்பட்டது.
அது அவளிடம்
“மும்டிம்க்ம்கும்ரிம்யம் மம்ன்ம்னம்வன் கைம்சேம்ர்த்ம்து வாம்ங்கும்கைம்யில் கிம்ட்டும் பம்லம்மம்னைத்தும் ஜெம்ய் ஜெம்ய்.” என்று கூறிவிட்டு மறைந்து போக இப்போது ஸ்தம்பித்து போனாள் அந்த மஞ்சளாடை அழகி.
அந்த புகையில் தோன்றிய பெண் கூறிய வார்த்தைகள் அவளை நிலைகுலையச்செய்தது. இத்தனை நேரம் அவள் மனதில் தாண்டவமாடிய மகிழ்ச்சி உருத்தெரியாமல் போனது. அடுத்து என்ன செய்வது என்று புரியாது நின்றவளது கண்ணில் பட்டான் அந்த ஒளியின் பிரகாசத்தை ச
அந்த மஞ்சளாடை பெண் அவன் கரம் பற்றி அவனை அந்த நிஷாகாந்தி செடியினருகே அழைத்து சென்றாள். அவனை அந்த செடியை தொடச்செய்தாள். அவனும் தொட்டான். அப்போது தான் அவள் மனதில் ஒரு நிம்மதி பரவியது. அடுத்து தன் கையின் மேல் அவன் கையை வைத்தவள் வாயில் ஏதோ முணுமுணுத்தபடியே பளபளத்துக்கொண்டிருந்த அந்த நிஷாகாந்தி பூவை பறித்தாள். அவர்கள் கை பட்டதும் அந்த பூ முழுவதும் தங்கநிறமாய் மாறியது. அதை பறித்ததும் அந்த நிலவிலிருந்து வெளிபட்ட வெள்ளொளியும் காணாமல் போனது. பூ அவர்கள் கைக்கு வந்ததும் அது சுடர்விட்டெரியும் விளக்கின் ஒளியை போன்றதொரு பிரகாசத்தை உமிழ்ந்துவிட்டு பழைய நிலைக்கு திரும்பியது. நவநீதனின் கையை தன் கையிலிருந்து விலக்கிய அந்த மஞ்சளாடைப்பெண் வாயில் ஏதோ முணுமுணுத்துவிட்டு அந்த பூவை கண்ணிரண்டிலும் ஒற்றிக்கொண்டவள் தன் அருகில் இருந்தவனை பார்த்தாள்.
அவன் முன் சொடக்கியதும் ஏதோ கனவிலிருந்து விழித்தவன் போல் மலங்க மலங்க விழித்தான் நவநீதன். அவன் செயல் அந்த மஞ்சளாடை பெண்ணிற்கு புன்னகையை உண்டாக்க லேசாக சிரித்தாள் அந்த பெண். அது அவன் கண்ணில் பட அப்போது தான் சற்று நேரத்திற்கு முன் நடந்தது அனைத்தும் நினைவில் வந்தது. வானை நோக்கி எதையோ தேடியவன் அந்த பெண்ணிடம் திரும்பி
“ஏங்க ஒரு வெளிச்சம் வந்துச்சே அது எங்கங்க?” என்று அவன் கேட்க மீண்டும் புன்னகையையே பதிலாக கொடுத்தாள் அப்பெண்.
அப்போது அந்த பெண்ணின் கையிலிருந்த நிஷாகாந்தி பூவை பார்த்தவன்
“பூத்திடுச்சாங்க? நான் சொன்னேன்ல? ரொம்ப அழகா இருக்குங்க.” என்று அவன் கூற அவளோ அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அந்த பூவை ஏந்தியபடியே நடக்கத்தொடங்கினாள்.
அவள் திடிரென நடக்கத்தொடங்கியதும் என்னானது என்று புரியாமல் அவளை அழைத்தபடியே பின்தொடர்ந்தான் நவநீதன்.
வேகக்கதியில் நடந்தவள் கடைசியில் நின்றது ஒரு ஆலமரத்தினடியில். அந்த ஆலமரத்தின் தோற்றமே ஆளை மிரட்டுவதாய் இருந்தது. இரவின் வீரியம் வேறு அதற்கு வலு சேர்க்க அது பார்ப்பவரின் மனதில் மிரட்சியை அதிகப்படுத்துவதாயிருந்தது. அந்த ஆலமரத்தின் பொந்தின் முன் சென்று சம்மணமிட்டு அமர்ந்த அந்தப்பெண் கைகளில் அந்த நிஷாகாந்திப்பூவினை ஏந்தியபடியே கண்மூடி ஏதோ முணுமுணுத்தாள். அப்போது அந்த ஆலமரம் திடிரென தங்கமாய் மினுமினுக்கத்தொடங்கியது. அந்த திடிர் மாற்றத்தை அதிர்ச்சியுடனும் குழப்பத்துடனும் பயத்துடனும் பார்த்தபடியிருந்த நவநீதனுக்கோ ஏதோ மாயாஜால நிகழ்ச்சி பார்ப்பது போல் இருந்தது. கண்முன்னால் நடந்ததனைத்தையும் உண்மையில்லையென்று அவனால் புறந்தள்ளமுடியவில்லை.
அப்போது அந்த மரத்திலிருந்து ஒரு ஜோதி வெளிப்பட்டது. அதை உணர்ந்தது போல் அப்பெண்ணும் கண்திறந்து எழுந்து நின்று தன் கைகளிலிருந்த அந்த மலரினை உயர்த்திப்பிடித்தாள். அப்போது மரத்திலிருந்து வெளிப்பட்ட அந்த ஜோதி காற்றில் மிதந்து வந்து அந்த பூவில் ஐக்கியமானது. அந்த ஜோதி ஐக்கியமானதும் தன் கையிலிருந்த அந்த பூவை தலையில் சூடிக்கொண்டாள் அந்தப்பெண்.
அவள் தலையில் சூடிய மறுகணம் அந்த பூ சிறிதாகி அவள் கூந்தலில் மறைந்து தன் அடையாளத்தை மறைத்துகொண்டது.
இவையனைத்தையும் வாய்பிளந்து பார்த்திருந்த நவநீதனுக்கு தான் காண்பது கனவோவென்றொரு சந்தேகம் எழுந்திட தன்னை ஒருமுறை கிள்ளிப்பார்த்துக்கொண்டான். ஆனால் அனைத்துமே நிஜம். ஒரு நிமிடம் அடுத்து என்ன செய்வதென்று புரியாத நிலையிலிருந்தான் நவநீதன். அப்படியே நின்றிருந்தவனது அருகில் வந்தாள் அந்தப்பெண்.
சற்று நேரத்திற்கு முன் வரை அவளை காதலுடன் ரசித்த அவன் கண்கள் இப்போது மிரட்சியை உமிழ்ந்தது. ஆனால் அது அப்பெண்ணை பாதித்ததாக தெரியவில்லை. அவனை பார்த்து அழகாயொரு புன்னகையை சிந்தியவள்
“நடந்ததை கண்டு நா கட்டுண்டு இருக்கிறீரோ?” என்று கேட்க
“நீங்… நீ யாரு?”
“தம்மை தேடியலைந்த பட்சி நான்”
“நீ நீ என்ன சொல்ற?”
“நான் தற்சமயம் உரைப்பது தமக்கு புரிவதற்கு வாய்ப்பில்லை. காலச்சக்கரம் அதை தமக்கு விளக்கிடும் காலமும் வெகு தொலைவில் இல்லை.”
“நீ சொல்லுறது எதுவும் புரியலை. நீ இவ்வளவு நேரம் பண்ணது ப்ளாக் மேஜிக்கா?” என்று தன் மனதில் எழுந்த சந்தேகத்தை நவநீதன் கேட்க அந்த பெண்ணோ குழப்பமாய் பார்க்க
“ அதாவது இந்த ஏவல் பில்லி சூனியம்னு சொல்லுவாங்களே அதுவா?” என்று கேட்க மீண்டும் சிரித்தாள் அந்த பெண்.
“எம்மை பார்த்தால் தமக்கு சூனியக்கிழவி போலா தெரிகிறது?” என்று ஆளை வசியம் செய்யும் புன்னகையுடன் கேட்டவளை பார்த்தவனது மனது
“ஆமா நீ எனக்கு ஏதோ சூனியம் வைத்து தான் இரண்டு நாளாக உன்னை நினைச்சிட்டே அலைஞ்சிட்டிருந்தேன்.” என்று கூக்குரலிட அதை அடக்கியவன்
“அது… அது… நீ இப்படியெல்லாம் பண்ணவும்…”
“இவை எதையும் யான் செய்திடவில்லை. இவையனைத்தும் இறைசித்தத்தின் படி நடந்தேறிய சம்பவங்கள். இவையனைத்திலும் நாமிருவரும் பார்வையாளர்கள் மட்டுமே.”
“நான் பார்வையாளர்னு சொல்லுங்க ஒத்துக்கிறேன். ஆனா நீங்க?” இவ்வளவு நேரம் அவளை ஒருமையில் விளித்திருந்தவன் இப்போது அவளை மரியாதையாய் விளிக்கத்தொடங்கியிருந்தான்.
“யானும் பார்வையாளர் மட்டுமே… அதனாலேயே எமக்கான கட்டளையை மட்டும் செய்தோம்.” என்று தெளிவாகவும் புதிரோடும் பேசியவளை குழப்பத்தோடு பார்த்தவன்
“சரி இவ்வளவு நேரம் நீங்க என்ன செய்தீங்க? எப்படி மரம் தங்கமாக மினுமினுத்துச்சு? மரத்துல இருந்து ஒரு ஜோதி வந்திச்சே அது என்ன? அந்த பூ எப்படி சின்னதாக மாறி உங்க தலைக்குள்ள மறைந்து போனது?” என்று தன் சந்தேகங்கள் அனைத்தையும் நவநீதன் அடுக்கிக்கொண்டே போக
“ அதனை நாடகத்தின் கதாசிரியரிடமல்லவா தாங்கள் வினவ வேண்டும்? பார்வையாளரான என்னிடம் வினவுவதில் எவ்வித உபகாரமும் இல்லை.”
“என்னது நாடகமா? அது யாரு கதாசிரியர்? நீங்க சொல்றது எதுவுமே புரியலைங்க?”
“நான் முன்னமே கூறியது போல் இவையனைத்தும் இறைசித்தத்தின் படி நடந்தேறியவை. இதில் நாம் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே. எனக்கிடப்பட்ட கட்டளையை நான் சரிவர நிறைவேற்றினேன் அவ்வளவே. இதில் தங்கள் பங்கு சற்று இருந்ததையும் மறுக்கமுடியாது.” என்றவளை மீண்டும் குழப்பமாக பார்த்தவன்
“நீங்க சொல்றது எதுவும் எனக்கு சுத்தமாக புரியலைங்க. முதல்ல இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க. நீங்க யாரு?எங்க இருக்கீங்க? இங்க எதுக்கு வந்தீங்க? எதுக்காக அந்த பூ எப்போ பூக்கும்னு எதிர்பார்த்திட்டிருந்தீங்க?இந்த கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்க.” என்று நடப்பை தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் கேட்டவனது கேள்வியில் மெலிதாய் புன்னகைத்தவள்
“தம் தொழில்பற்றை இப்போது என்னால் அறிந்து கொள்ளமுடிகிறது.” என்று அந்தப்பெண் கூற இப்போது அதிர்ந்து நின்றான் நவநீதன்.
“நீங்க… நீங்க… உங்களுக்கு எப்படி என்னை பற்றி?உங்களுக்கு நிஜமாகவே என்னை பற்றி தெரியுமா?”
“ஓரளவுக்கு கணித்துவிட்டேன். கணித்தவரை உரைக்கவா அல்லது முழுதாய் கணித்துவிட்டு உரைத்திடவா?” என்று மாறாபுன்னகையுடன் கேட்டவளை ஒரு சந்தேகப்பார்வையோடு பார்த்தவன் அவளை பார்த்து
“ம்ம்ம் சொல்லுங்க.” என்று கூற அவனது மொத்த ஜாதகத்தையும் ஒப்புவிக்கத்தொடங்கினாள் அந்த பெண்.