மாயப்புதிர்
அத்தியாயம்-4
இங்கு வினியோ தான் வரைய வேண்டிய ஓவியத்தை பத்து நிமிடத்தில் வரைந்துவிட்டு, 'அப்பாடா... ஒரு வழியா முடிச்சுட்டேன்' என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். ஆமாங்க... நம்ம வினிக்கு எப்பவும் எவ்வளவு பெரிய ஓவியமாய் இருந்தாலும் வரைவதற்கு 10 நிமிடம் போதும்.
பின் மணியைப் பார்த்த வினி, 'அடச்சே! இப்பதான் மணி 3:10-ஏ ஆகுதா.... ஐயோ தர்ஷி வர இன்னும் நிறைய நேரம் இருக்கே' என்று அலுத்துக் கொண்டாள்.
' சரி! பேசாம நாம போய் கொஞ்ச நேரம் தூங்கலாம். தர்ஷி வந்ததும் எந்திச்சிக்கலாம். டயர்டா இருக்கு' என்று தனக்குத்தானே கூறிக் கொண்டே, மாடியில் தன் அறையை நோக்கிச் சென்றாள். ஆனால் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அந்த தங்க நிறக் கண்களுடைய உருவமோ, அவள் அறியாவண்ணம் அவளை பின்தொடர்ந்தது.
இங்கு வினியோ, தூங்க வேண்டும் என்ற ஆர்வத்தில், தான் வெளியே எடுத்து வைத்திருந்த ஓவியத்திற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைக்காமல், அப்படியே போட்டு வைத்துவிட்டு வந்து இருந்தாள். பின் அறையை அடைந்தவுடன் தானாகவே அவளை தூக்கம் ஆட்கொள்ளவே, அப்படியே கட்டிலில் விழுந்து உறங்கத் தொடங்கினாள். அடுத்த நொடியே உறங்கியும் போனாள்.
அவள் தூங்கிய பின் நேரமோ, முயலைப் போன்று வேகமாக ஓடத் தொடங்கியது. 3 நிமிடம் தான் ஆனது போன்று இருந்தது. ஆனால் அதற்குள்ளாக மணியோ 6:30-ஐ தொட்டு இருந்தது.
தர்ஷி தன்னிடம் இருந்த சாவியைப் பயன்படுத்தி வீட்டுக்குள் நுழைந்தாள். ஆனால் வீட்டுக்குள் வந்த அவளுக்கு ஒரே அதிர்ச்சி. பிறகு எப்படி இல்லாமல் இருக்கும். அவ்வளவு பெரிய மொத்த வீடும் தூசி எல்லாம் எடுக்கப்பட்டு, இப்பொழுதுதான் கட்டப்பட்ட வீடு போன்று சுத்தம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் மாலையில் எரிய வேண்டிய அத்தனை விளக்குகளும் ஏற்கனவே போடப்பட்டும் இருந்தது.
' இதையெல்லாம் வினியா ஒத்த ஆளா பண்ணா??? என்னால நம்பவே முடியலையே... எப்படி பண்ணியிருப்பா? இதற்கு வாய்ப்பே இல்லையே?! ஒரே ஆச்சரியமா இருக்கே...' என்று நினைத்த தர்ஷி, பின் தண்ணீர் தாகம் மிகவும் எடுக்கவே, சமையலறைக்குச் சென்று தண்ணீர் அருந்தினாள்.
பின் சாப்பாட்டு மேசையும் சுத்தமாக இருப்பதைப் பார்த்த தர்ஷி, 'பரவாயில்லையே... எல்லாத்தையும் எடுத்து வச்சிருக்காளே...' என்று நினைத்தாள். தர்ஷி இப்போது வினி தூங்கிக் கொண்டுதான் இருப்பாள் என்பதை ஏற்கனவே அறிவாள்.
எனவே தானும் சிறிது நேரம் ஓய்வெடுக்கலாமே என்று நினைத்த தர்ஷி, தன் அறைக்கு சென்று கட்டிலில் அப்படியே பொத்தென்று போய் விழுந்தாள். அப்பொழுது அவள் முதுகில் ஏதோ ஒன்று கனமாக அழுத்தவே, வேகமாக எழுந்து தன் அறையின் விளக்குகளை உயிர்ப்பித்தாள்.
பின் விளக்குகளின் ஒளி மத்தியில், அவளது கட்டிலில் இருந்த பொருளைப் பார்த்ததும், தர்ஷியை ஒரு பெரிய குழப்பம் வந்து ஆட்கொண்டது.
'ஹே.... இது என்னது ஏதோ பழைய டைரி மாதிரி இருக்கு. இது எப்படி இங்க வந்தது. இத நான் இங்க வைக்கலையே...' என்று நினைத்த தர்ஷி, 'சரி போகட்டும்.... அது யாருடைய டைரி அப்படின்னு படித்துப் பார்க்கலாம்' என்று கூறியவாறே, அந்த பழைய டைரியைத் தன் கைகளில் எடுத்து, அதிலிருந்த தூசிகள் அனைத்தையும் தன் கைகளால் முதலில் தட்டி விட்டாள்.
பின் அந்த டைரியைத் திறந்துப் பார்த்தாள். அதை திறந்துப் பார்த்த உடனேயே, அந்த டைரியில் இருந்த எழுத்துக்கள் அனைத்தும் அது யாருடையது என்பதை உணர்த்துமாறு, எழுதப்பட்டு இருந்தது. அதை பார்த்த தர்ஷியோ அதிர்ச்சியுடனேயே ' இவ ஏன் இத இங்க வச்சி இருக்கா? எத்தனை தடவ தான் நான் அவட்ட சொல்ல... உன் பொருள் எதையும் எப்பவும் என் இடத்தில் வைக்காதன்னு...' என்று கூறினாள்.
பிறகு 'பரவாயில்லை வினி. இது உன் டைரியாவே இருக்கட்டும். பட் இது இப்ப என் ரூம்ல இருக்கு. சோ இத நான் இப்ப படிக்கப் போறேன்' என்று கூறிய தர்ஷி, அந்த டைரியில் எழுதப்பட்டு இருப்பவைகளை படிக்கத் தொடங்கினாள்.
ஆமாம்! அந்த டைரியில் இருந்த எழுத்துக்கள் வேறு யாருடையதும் இல்லை. நம்ம வினியின் எழுத்துக்கள் தான்.
படிக்கலாம் என்று ஆவலாக தர்ஷி அந்த டைரியைத் தன் கைகளில் எடுத்தபோது, அதிலிருந்து ஒரு துண்டுச் சீட்டு நழுவி கீழே விழுந்தது. உடனே தர்ஷி தன் கைகளில் இருந்த டைரியை கீழே வைத்துவிட்டு, அந்த துண்டுச் சீட்டை தன் கைகளில் எடுத்துப் பார்த்தாள்.
பின் அதில் எழுதி இருப்பதைப் படித்துப் பார்த்தாள்.
" வினி, நான் வீட்ல உனக்கு காலை மற்றும் மதிய உணவை ஏற்கனவே பண்ணி வச்சிட்டேன். மறக்காம சாப்பிட்ரு. முக்கியமா மிச்சம் வைக்கக் கூடாது. இது எல்லாத்தையும் விட முக்கியமா நீ இருக்கிற ரூமை மட்டுமாவது சுத்தம் செய்து வை.
இப்படிக்கு,
தர்ஷி"
' அட! இது நான் காலையில் டிவிக்கு பக்கத்தில் எழுதி வைத்திருந்த துண்டுச் சீட்டாச்சே... இது எப்படி இங்க? ஓ! ஒருவேளை, இதை படிச்சு முடிச்சுட்டு டைரி எழுதி இருப்பா போல. அதான் துண்டுச் சீட்டை டைரிக்குள்ளேயே வச்சிட்டுப் போயிருக்கா... ஆனால் பரவாயில்லையே... நான் அவளை ஒரு ரூம் தான் கிளீன் பண்ண சொன்னேன். ஆனால் அவ இப்படி மொத்த ரூமையும் சுத்தம் பண்ணி வச்சுட்டா.... என்னாலேயே இத நம்ப முடியல...' என்று நினைத்த தர்ஷி, பின் மறுபடியும் டைரியின் ஞாபகம் வரவே, துண்டுச் சீட்டை மறுபடியும் டைரிக்கு உள்ளேயே வைத்துவிட்டு, டைரியைப் படிக்கத் தொடங்கினாள். அந்த டைரியிலோ,
" நானும் தர்ஷியும் எங்களது உடைமைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு, நாங்கள் புதிதாக வாங்கியிருந்த அந்த வீட்டை நோக்கி, எங்கள் காரில் பயணம் செய்துக் கொண்டிருந்தோம். அம்மா அப்பா மரணத்திற்கு பின், எங்கள் சொத்து பறிபோன பிறகு, எங்களின் சொந்த உழைப்பில் வாங்கிய முதல் வீடு என்பதால், இருவர் மனதிலும் மகிழ்ச்சி தானாகவே குடியேறி இருந்தது.
இருந்தாலும் அந்த வீட்டைக் குறித்து, சுற்றியிருந்தவர்கள் கூறியவை அனைத்தாலும், சிறிது பயமும் எங்கள் இருவரையும் ஒட்டிக் கொண்டுதான் இருந்தது என்பதையும் மறுக்க இயலாது.
' என்னமா! நீங்க அந்த வீட்டையா வாங்க போறீங்க... பாத்துமா... உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்... பேசாம வேற வீடு பார்த்துக்கோங்கமா...' " என்று ஆரம்பித்து,
" தர்ஷியின் இந்த வார்த்தை என்னை மிகவும் உறுதியதால், தர்ஷியிடம் பதில் ஏதும் கூறாமல், என் அறையைத் தேடி நடக்கத் தொடங்கி விட்டேன்.
ஆனால் இதை எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத தர்ஷியோ, தன் அறைக்குச் சென்று விட்டாள்" என்பது வரை எழுதப்பட்டு இருந்தது.
இதை பார்த்ததும் தர்ஷியின் முகம் கோபம் மற்றும் கவலையின் காரணத்தால் சிவந்தது.
' வினி ஒரு டைரி வாங்குனா, அதுல உன் விசயத்தை பத்தி மட்டும் எழுத மாட்டியா? இப்படிதான் அடுத்தவங்களப் பற்றி எழுதுவதா? அதுவும் கரெக்டா நேத்து எனக்கு நடந்த வரைக்கு மட்டும் எழுதி இருக்க... உனக்கு நடந்ததை எழுத மாட்டியா? எவ்வளவு கொழுப்பு உனக்கு...' என்று கவலையில் ஆரம்பித்து, கோபத்தில் வந்து சொல்லவேண்டிதை சொல்லி முடித்த தர்ஷி, கோபத்தில் தன் கையில் இருந்த அந்த டைரியை வேகமாக சுவரை நோக்கி வீசினாள்.
இதனால் அந்த டைரியின் முகப்பு பக்கம் சுவரில் பட்டு, தெரித்து கீழே விழுந்தது மட்டுமில்லாமல், அந்த டைரியின் முகப்பு பக்கத்தில் இருந்து ஒரு வகையான சிவப்பு நிற திரவமும் வெளிவரத் தொடங்கியது. ஆனால் இதை கவனிக்காத தர்ஷியோ, தன் ஆத்திரம் குறையாமல்,
" வினி உனக்கு அறிவில்லையா? எத்தன தடவ சொல்றது உனக்கு... எடுத்த பொருளை எடுத்த இடத்தில வைன்னு..." என்று சத்தமாக கத்தினாள்.
இதனால் திடுக்கிட்டு தூக்கத்திலிருந்து எழுந்த வினிக்கு, அப்பொழுதுதான் அவள் தன்னுடைய ஓவியப் பொருட்களை கீழே வைத்துவிட்டு வந்தது நினைவு வரவே, அவசர அவசரமாக அதை எடுக்க கீழே ஓடினாள். பின் கீழே வந்த வினியின் உதடுகள் ஆச்சரியத்தில் பேச்சின்றி நின்றது.
' என்ன இது இப்பதான மணி 7:45 ஆகுது. தர்ஷி வந்து ஒன்னே கால் மணி நேரம் தான் ஆகுது. அதுக்குள்ளே எப்படி தர்ஷி மொத்த வீட்டையும் கிளீன் பண்ணா?' என்ற கேள்வி வினியின் மூளையைக் குடைந்துக் கொண்டிருக்க, ' அடச்சே! அவ கிளீன் பண்ணதால தான் என்னுடைய டிராயிங் திங்க்ஸ் எல்லாம் கீழ போட்டூ வச்சி இருக்கிறத பாத்து கோபமாகிட்டா போல. சரி! பேசாம வேகமா போய் எடுத்து வச்சிடலாம்...' என்று தனக்குத்தானே கூறிவிட்டு, வேகவேகமாய் தன்னுடைய பொருட்களை வைத்த இடத்தை நோக்கி ஓடினாள் வினி.
"அட! இங்க தான எல்லாத்தையும் வைத்தேன்... அதுக்குள்ள எங்க போயிருக்கும்..." என்று நினைத்த வினி, அங்கு தன்னுடைய பொருட்கள் இல்லை என்பதால், கீழே வீடு முழுவதும் தேடிப் பார்த்தாள். ஆனால் தான் தேடியவை கீழே எங்கும் கிடைக்காமல் போனவே, பேசாமல் தர்ஷியிடமே 'சுத்தம் செய்யும் போது எங்க வைத்தாய்?' என்று கேட்டு விடலாமா? என்று நினைத்தாள். ஆனால் தர்ஷியின் கோபத்தை ஏற்கனவே வினி அறிந்திருந்ததால், அந்த எண்ணத்தை ப்படியே குழி தோண்டி புதைத்து விட்டாள் வினி.
பின் நாளைக்கு இதைப் பற்றி தர்ஷிகிட்ட கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்துவிட்டு, தன் அறையை நோக்கி சென்றாள் வினி.
இங்கு தர்ஷிக்கோ, திடீரென அவள் தலையிலிருந்து ரத்தம் வரத் தொடங்கியதால், தலைசுற்றலாய் இருக்கிறது என்று கண்களை இறுக்கி மூடிக் கொண்டு கட்டிலில் படுத்துக் கொண்டாள்.
மேலே தன் அறைக்குச் சென்ற வினியோ, தன் அறையைத் திறந்துப் பார்த்தது தான் தாமதம், தன் கட்டிலில் ஏற்கனவே அழகாக அடுக்கப்பட்டிருந்த தனது ஓவியத்திற்குத் தேவையான பொருட்களைப் பார்த்து ஒரு குழம்பிய மனநிலையில் நின்றுக் கொண்டிருந்தாள்.
' அட! இது எப்படி மேல வந்திருக்கும்... தர்ஷியும் அவ ரூம்ல இருக்கா... சோ கண்டிப்பா அவளால் இத இங்க வச்சிருக்க முடியாது... என் ரூம்க்குமம் அப்படின்னா யாரும் போயிருக்க முடியாதே... ஏன்னா நானும் அக்காவும் மட்டும் தான் இந்த வீட்ல இருக்கோம்...' என்று யோசித்தவாறே, எல்லாப் பொருட்களும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்த வினிக்கு, மேலும் அதிர்ச்சித் தரும் விதமாய், காலையில் அவள் பார்த்த டைரி அவளின் ஓவிப் பொருட்களுக்கு நடுவிலிருந்து அவள் கைகளில் கிடைத்தது.
(புதிர் தொடரும்)
கருத்துக்களைத் தெரிவிக்க:
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏, வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை...
www.sahaptham.com