Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Short Story - கீரிடம்

Meenakshi sivakumar

Saha Writer
Team
Messages
21
Reaction score
4
Points
3
மதியம் உணவு இடைவேளை, கல்லூரியின் உணவு விடுதியில் உணவிற்காக சலிப்புடன் வரிசையில் நின்றுக் கொண்டு இருந்தாள் பாரதி. பாரதியை தேடும் ஆர்வத்தில் பலரை இடித்தும், சிலரை தடுத்தும் தலையிலிருந்து வேர்வை தரையிறங்க தேடி வந்த ஜெயப்பிரபா ஒரு வழியாக பாரதியிடம் வந்து சேர்ந்தாள்.

"அடியே, போன் பண்ணுனா எடுக்க மாட்ட, திரும்பவும் கூப்பிட மாட்ட நீயெல்லாம் எடுத்துக்குடி போன் வச்சுருக்க" என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க திட்டினாள் ஜெயப்பிரபா.

நக்கலாக அவளை பார்த்த பாரதி, "ம், அதுக்கு முதல்ல பேலன்ஸ் இருக்கனும்" என்று கூறியவாறே, பொரியல் கூட வைக்கவில்லை சாப்பாடு பரிமாறுபவரோடு சண்டைப்போட்டுக்கொண்டு இருந்தாள்.

பொறுமை இழந்த ஜெயப்பிரபா, "லெனின் சாருக்கு சிறந்த எழுத்தாளருக்கான விருது கிடைச்சுருக்கு" என்று சத்தமாக கத்தினாள்.

"என்னடி சொல்லுற, உண்மையாவா" என்று தனது கையிலிருந்த தட்டை ஒரம் வைத்துவிட்டு ஜெயப்பிரபாவை பிடித்து குலுக்கினாள் பாரதி.

சலனமே இல்லாமல் இருந்த ஜெயப்பிரபா, "அடுத்த வாரம் நம்ம காலேஜ்க்கு வராரு" என்றாள், இதை கேட்ட பாரதிக்கு இருப்புக்கொள்ளவில்லை சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து பித்து பிடித்தவள் போல நடந்துக்கொண்டாள்.

இதை ரசித்த ஜெயப்பிரபாவிற்கு காரணமின்றி விழியின் ஒரம் கண்ணீர் துளிர்விட, அதனை மறைத்து பாரதியிடம் இருந்து விடைப்பெற்றுக்கொண்டாள்.

பாரதிக்கு இருப்புக்கொள்ளவில்லை, லெனின் எழுத்திற்காக தனது உயிரை கூட அர்ப்பணிக்க தயங்காதவளாய் பாரதி மாற முக்கிய காரணம்.

லெனின் எழுதிய தனிமை (Loneliness) என்ற ஆங்கில நாவலோடு தனது வாழ்க்கையை பொறுத்திக்கொண்ட நாள் முதலே, இவளுக்கு லெனின் எழுத்தின் மீது தீராத காதல் ஏற்பட ஆரம்பித்தது.

இந்த நினைவுகளை அசைபோடுக்கொண்டே, கடைவிழியின் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் பயணமானாள் ஜெயப்பிரபா.

ஒரு வாரம் கழிந்து, லெனின் கல்லூரிக்கு வரும் நாள் வந்தது. பாரதியும், ஜெயப்பிரபாவும் காலையிலிருந்தே லெனின் வருகைக்காக காத்திருந்தனர்.

இருவரும் அசோசியன் கிளப்பில் இருந்ததால் லெனினை பார்ப்பதற்கோ அல்லது அவரிடம் பேசுவதற்கோ எவ்வித தடையும் இல்லை என்றபோதும், அவர்கள் இருவரும் லெனினிடம் பேசவில்லை.

லெனினும் கல்லூரிக்கு வந்தார், எவ்வித ஆடம்பரம் இல்லாத அவருடைய நடை, உடை, பாவனையும் அவர் மீது ஒரு பெரிய மரியாதையை ஏற்படுத்தியது.

வழக்கம் போல உபசரிப்பிற்கு பின்னர், லெனின் உரை நிகழ்ந்தது, அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனதை இலகுவாகி, சாதிக்க வேண்டும் என்ற உணர்வைத் தூண்டும் விதமாக இருந்தது.

பாரதிக்கு உள்ளத்தில் இருக்கும் தணல், கொளுந்துவிட்டு எரிவது போன்று இருந்தது.

பாரதியின் வாழ்க்கை லட்சியமே ஆசிரியராக வேண்டும் என்பது தான். அவள் ஒரு ஆசிரியராகவே வாழ்ந்து வருகிறாள் என்பதை உணர்ந்த ஜெயப்பிரபா அவளின் ஆசைக்கு தீனி போடும் விதமாக அவளை ஊக்குவித்து வருவாள்.

லெனின் பேசி விடைப்பெறும் வேளையில், அவரை இடை மறித்தார் அங்கு குழுமி இருந்த பத்திரிக்கையாளர்களில் ஒருவர்.

"சார், உங்க எழுத்த பத்தி எங்களுக்கு தெரியும், ஆனா உங்க வாழ்க்கையை பத்தி பெருசா இண்டர்நெட்டுலையும் இல்ல, நீங்களும் எந்த பத்திரிக்கையாளர் சந்திப்பிலையும் குறிப்பிடலை, உங்களை பத்தி நீங்க சொல்ல முடியுமா?".

சிரித்துக்கொண்டே மறுமுறை மேடை எறிய லெனின், "நீங்க இந்த கேள்வியை வெளியில கேட்டு இருந்தா, நான் மறுத்து இருக்கலாம் ஆனா இந்த இடத்துல நான் சொல்லித்தான் ஆகனும்".

பல அனாதை குழந்தைகளை தத்தெடுத்து, அவர்களுக்கு கல்வியின் வழியாக வாழ்க்கையைக் கொடுக்கும் இந்த இடத்துல நான் நிக்கிறதுக்குப் பெருமைப்படுகிறேன், நீங்கள் அனாதைனு நினைக்காம கடவுளின் குழந்தையாக நினைக்க, ஒரு குடும்பத்தை நீங்களே கட்டமைக்க வாய்ப்பு கிடைச்சதுக்கு கடவுளுக்கு நன்றி தெரிவிச்சுக்கோங்க என்றதும் பாரதியும், ஜெயப்பிரபா பார்த்துக் கொண்டனர்.

பிறப்பிலேயே அனாதையான பாரதியும், பாதியில் விபத்தில் அனாதையான ஜெயப்பிரபாவும் கண்ணிலே பார்வையால் பேசிக் கொண்டனர். இவர்களின் பார்வைக்கு இடையூறாக லெனின் குரல் ஒலிப்பெருக்கில் ஒலித்தது.

"சரி, நான் யாராக இருக்கக்கூடும்னு நீங்கள் நினைக்கிறீங்க" என்று பார்வையாளரை பார்த்து கேள்வி கணையை தொடுத்தார் லெனின்.

கூட்டத்தில் சலசலப்புகள் ஏற்படுவதை தாண்டி ஒலித்தது, கடைக்கோடியிலிருந்து ஒலித்த ஒசை, "நீங்க ஒரு தொழிலதிபரின் மகனாக இருக்கனும், இல்ல அரசியல்வாதியின் மகனா இருக்கனும் அதனால் தான் நீங்க இந்த இடத்தை இவ்வளவு சின்ன வயசுல அடைய முடிச்சது" என்றார் மெடுக்கான உடையணிந்த ஒருவர்.

அதற்கு புன்னகையை பதிலாக அளித்து, வேற எதாவது என்று பார்வையாளர்களின் பக்கத்தில் திரும்பினார்.

முதல் வரிசையில் அமர்ந்த ஒருவர், "நீங்க சமஸ்கிருதம் பயின்ற எங்கக்குடியில பிறந்தவரா இருக்கனும்" என்ற பேச்சிலேயே பிராமண வாடை வீசியது.

அதனைக் கண்டு நகைத்தவாறே, வேற எதாவது என்று கேட்டார், "நீங்க நல்லா படிச்ச குடும்பத்தைச் சேர்ந்தவரா இருக்கனும் அதனால தான் உங்களுக்கு ஆங்கிலத்தில புலமை வந்து இருக்கனும்" என்று தனது கண் கண்ணாடியை துடைத்தப்படியே கூறினார் அந்த கல்லூரியின் தளாளர்.

இதை அனைத்தையும் கேட்டுக்கொண்டு இருந்த மாணவர்கள், "நீங்களே சொல்லுங்க, சொல்லுங்க" என்று கோஷத்தை எழுப்பினர்.

நீங்க என்னுடைய தோற்றத்தையும், படிப்பையும் வச்சு உங்களுக்கு ஏற்ற மாதிரி என்னை நீங்க மாத்திக்கிறீங்கலே தவிர, நான் யாருனு தேட மாட்டுறீங்க, நீங்க சொன்ன எதுவுமே உண்மையில்ல, நான் ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவனு சொன்னா உங்களால ஏதுக்க முடியுமா சொல்லுங்க, என்றவுடனே சாய்ந்து மேஜையில் அமர்ந்து இருந்தவர்கள் மேஜையின் நுனியில் அமர்ந்தனர், பலரின் மனத்தில் பல புயல் அடித்துக் கொண்டிருந்தது.

பாரதிக்கும், ஜெயப்பிரபாவும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களாக தான் எங்களை பாக்குறாங்க, நான் இந்த இடத்தை அடைய முதல்ல சமூகத்தோடு ஒத்துப்போனேன், சமூகத்திற்கு ஏற்ற மாதிரி என்னை மாத்திக்கிட்டேன், நிறைய படிச்சேன், எனக்குனு ஒரு அடையாளத்தை நானே ஏற்படுத்திக்கிட்டேன், எனது எழுத்து இந்த உலகம் முழுக்க தெரியனும் என்று நினைச்சேன். ஆங்கிலத்தை தேர்ந்தெடுத்தேன், வாழ்க்கையில் வெற்றிப்பெற்றேன்.

சமுகத்தால புறக்கணிக்கப்பட்ட என்னாலே இந்த இடத்திற்கு வர முடிஞ்ச போது, சமுகத்துல சகஜமா வாழ முடிஞ்ச உங்களால் சாதிக்க முடியாதா என்ன?, நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற நீங்கள் கல்வியை தேர்ந்தெடுத்தா மட்டுத்தான் வெற்றிப்பெற முடியும்.

என்னைப்போல நீங்க வரனும்னு நினைக்காதீங்க, உங்கள போல நிறைய பேர் வரனும்னு நினைங்க, அவமானத்தை ஏற்றுக்கொள்ள தயங்காதீங்க, அது பிற்காலத்துல உங்களுக்கே கீரிடமா திரும்பி வந்து அலங்கரிக்கும் மறந்துடாதீங்க.

நானும் உங்களைப் போல இருந்தக்காலத்துல, என்னை தேற்றி, "தனிமை " எனும் நாவலை எழுதத்தூண்டிய பாரதி எழுதிய ஒரு கவிதையோடு என்னுடைய உரையை முடிக்கிறேன்,

"வெற்றியில் தோன்றி தோல்வியில் முடியும் இந்த வாழ்க்கையில்,
ஆதியும் இல்லாமல், அந்தமும் இல்லாமல்
நிழலென துணை வருகிறது தனிமை."

நன்றி, வணக்கம் என்று கூறி நிகழ்ச்சியிலிருந்து மின்னல் வேகத்தில் விடைபெற்றார் லெனின்.

"பாரதி நீ எழுதுன கவிதை டி" என்று ஜெயப்பிரபா பாரதியை ஆறத் தழுவ, மெளன மொழியை பேசத்தொடங்கினாள் பாரதி.

- மீனாக்ஷி சிவக்குமார்
 
Last edited by a moderator:
Top Bottom