Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உனக்குள் நான்-2

அத்தியாயம் – 2

 

“அனுபவிக்கும் வரை இனிக்கும்

சின்னச்சின்ன ஆசைகள் – துறக்க

நினைத்தால் பெரும் துன்பங்களாக

மாறிவிடும் விந்தை ஏனோ…!

 

எதுவுமே தலை போகிற காரியமல்ல… எல்லாமே சின்னச் சின்ன விஷயங்கள் தான். ஆனால் அந்தச் சின்ன விஷயங்களுக்குப் பழகிவிட்ட ஒருவருக்கு அந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்வது என்பது பெரிய சவால். கதை படிப்பவர்களுக்குப் படிக்காமல் இருக்க முடியாது… சீரியல் பார்ப்பவர்களுக்கு அதைப் பார்க்காமல் இருக்க முடியாது… ஊர்க்கதை பேசுகிறவர்களுக்கு அதைப் பேசாமல் இருக்க முடியாது.

 

மனிதனுக்கு ஒரு நேரத்தில் ஒரு பழக்கத்தை மாற்றுவதே சவால் எனும் போது… ஒரே நேரத்தில் எட்டு பழக்கங்களை மாற்றிக்கொள்வது என்பது கார்முகிலனுக்கு எவ்வளவு சவாலான விஷயமாக இருந்திருக்கும்…! திணறிப் போய்விட்டான்.

 

ஒரு விஷயத்தைச் செய்யக்கூடாது என்று நினைத்தால் தான் அதைச் செய்ய வேண்டுமென்கின்ற எண்ணம் அதிகமாகத் தோன்றும். அவனுக்கும் தோன்றியது. முன்பெல்லாம் தூக்கத்திலிருந்து எழும்போது எந்த நினைவும் இல்லாமல் எழுபவன், இப்போதெல்லாம் காலை காபி குடிக்கக்கூடாது என்கிற நினைவோடு தான் எழுகிறான். அந்த நினைவே காலை உணவு உண்ணும் வரை அவனைப் பாடாய்ப்படுத்தும்.

 

டவல்… சீப்பு… மொபைல்… அது… இது… என்று அத்தனையையும் மறக்காமல் அதற்கான இடத்தில் வைக்க வேண்டும். ஒன்றை மறந்தால் கூட அவனுடைய நியாய மனம் கட்டளைப் பட்டியலை மீறிவிட்டாய் என்று குற்றம் சொல்லிவிடும். சில சமயம் படுக்கையிலிருந்து கூட எழுந்து சென்று வைக்க வேண்டிய பொருளை… சரியான இடத்தில் வைத்துவிட்டுத் தான் வந்தோமா என்று சரிபார்த்துவிட்டு வருவான்.

 

அடுத்துப் படுக்கையறையில் மடிக்கணினி… பொதுவாக அவனுக்குப் பாட்டுக் கேட்காமல் தூக்கமே வராது. ஆனால் இப்போது படுக்கையறைக்குள் எந்த எலக்ட்ரானிக் பொருட்களுக்கும் அனுமதி இல்லை… அவள் எதுவும் சொல்ல மாட்டாள் தான். ஆனால் இவன் தனக்குத் தானே போட்டுக் கொண்ட எட்டு கட்டளைப் பட்டியல் என்ன ஆவது..? விடுவானா..? தூக்கம் கெட்டாலும் பரவாயில்லை என்று புரண்டு கொண்டிருந்து விட்டுத் தாமதமாக உறங்குவான்.

 

கிரிக்கெட்டை மறந்தே விட்டான். அதை நினைத்தால் மற்றதையெல்லாம் மறந்துவிடுவோம் என்கிற பயம் தான் காரணம்.

 

ஒரு நாள், அவன் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது மதுமதி வேலைகளை முடித்துவிட்டு “ஹப்பாடா…” என்று வந்து சோபாவில் அமர்ந்தாள். டிவி… நியூஸ் சேனலிலிருந்து மியூசிக் சேனலுக்கு மாறியது. அவளிடம் எந்த எதிர்வினையும் இல்லை. இவன் அவளுக்காக எவ்வளவு மாறியிருக்கிறான்…! அதற்காக எவ்வளவு சிரமப்படுகிறான்…! எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள்….! இவள் மாற வேண்டாம்… குறைந்தபட்சம் அவனுடைய மாற்றங்களைச் சின்னச் சிரிப்பில்… ஒரு தலையசைப்பில் அங்கீகரிக்கலாம் அல்லவா..? ‘எதுக்கு இப்படியெல்லாம் செய்றீங்க..? இது மாதிரியெல்லாம் செஞ்சா என் மனசு மாறிடுமா…! இல்லை நடந்ததெல்லாம் இல்லையென்றாகிவிடுமா..?’ என்று திட்டவாவது செய்யலாமல்லவா..? எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் இப்படி மண் மாதிரி அமர்ந்திருந்தால் என்ன அர்த்தம்… அவன் என்ன பைத்தியக்காரனா..? – கார்முகிலனின் மனம் பொருமியது.

 

அவள் டிவி திரையைப் பார்த்துக் கொண்டிருக்க… இவன் அவளின் முகத்தையே சிறிதுநேரம் வெறித்துப் பார்த்துவிட்டு எழுந்து சென்றுவிட்டான். அவன் அந்த இடத்திலிருந்து நகர்ந்த பிறகு அவனின் முதுகை ஒரு நொடி திரும்பிப் பார்த்தவள்… பிறகு டிவியில் கவனமானாள்.

 

அவளுக்குப் பிடிக்காததைச் செய்யாமல் இருப்பதன் மூலம் ஓர் இம்மிக் கூட அவள் மனதை நெருங்க முடியவில்லை என்பதை கார்முகிலன் நன்றாக உணர்ந்துவிட்டான். ஒரு பக்கம் தன்னுடைய எட்டு கட்டளைப் பட்டியலை விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தாலும்… இன்னொரு பக்கம் அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டிய கட்டாயம்.

 

அவளுக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அதையெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தான். அவளுக்கு மீன் தொட்டி என்றால் உயிர். அதை ஒருமுறை அவள் அவனிடம் வாங்கித் தர சொல்லி கேட்டபொழுது ‘தேவையில்லாத செலவு…’ என்று சொல்லி வாங்கிக் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டான். இப்போது அன்றைய நாளை நினைத்து வருந்தினான். ‘என்ன பெரிய செலவு….! ஆசையா கேட்டாளே… வாங்கிக் கொடுத்திருக்கலாம்….’ என்று வருத்தத்துடன் நினைத்தான். நினைத்ததோடு நிற்காமல் அடுத்த நாள் கல்லூரியிலிருந்து வரும்பொழுது பெரிய மீன் தொட்டியோடு வீட்டுக்கு வந்தான்.

 

“என்ன இது..? எதுக்கு இதை வாங்கிட்டு வந்திருக்கீங்க..?” மதுமதி வியப்புடன் கேட்டாள்.

 

“உனக்குப் பிடிக்கும் தானே…!”

 

“முன்னாடி பிடிக்கும்… இப்போ அவ்வளவு இன்ட்ரெஸ்ட் இல்ல… அதோட இதையெல்லாம் யார் வாரா வாரம் கழுவி சுத்தம் செய்றது..?” – பெரிய குண்டைத் தூக்கி அவன் தலையில் போட்டாள்.

 

“இன்ட்ரெஸ்ட் இல்லையா…! இதை ஏன் நீ முன்னாடியே சொல்லல..?”

 

“எப்படிச் சொல்ல முடியும்..? நீங்க கேட்டீங்களா?”

 

அவன் அமைதியாகிவிட்டான். மீன் தொட்டி அவளைச் சந்தோஷப்படுத்தவில்லை என்பதைக் கூடச் சகித்துக் கொண்டான். ஆனால் வாராவாரம் அதைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டுமாமே…! நாம் தான் செய்ய வேண்டுமோ…! பீதியோடு தொட்டியை வைக்க வேண்டிய இடத்தில் வைத்துவிட்டு… மகளைத் தூக்கிச் சென்று மீனுக்கு உணவு போட்டு வேடிக்கைக் காட்டினான்.

 

“பொம்முகுட்டி… உன் அம்மாவுக்கு இந்த மீனையெல்லாம் பார்க்க இன்ட்ரெஸ்ட் இல்லையாம்… உனக்காவது பிடிச்சிருக்கா சொல்லு…”

 

“இப்ச்… குழந்தைங்கள அம்முன்னு கூப்பிடுவாங்க பார்த்திருக்கேன்… அது என்ன பொம்மு..? அழகா யாழினின்னு பேர் வச்சுட்டு… பொம்மு… கும்முன்னா கூப்பிடுவாங்க?” – சிறு எரிச்சலுடன் கேட்டாள்.

 

“எம் பொண்ணு பொம்மை மாதிரி அழகா இருக்காடி… அவ அம்மா மாதிரியே…!” காதல் வழியும் குரலில் சொன்னான்.

 

குரலிலும் முகத்திலும் எந்த உணர்ச்சியும் காட்டாமல் “ஓ…” என்றபடி நகர்ந்தவளை மற்றொரு கையில் வளைத்துப் பிடித்துத் தனக்கருகில் நிறுத்திக் கொண்டு “எங்க ஓடுற..? நான் என்ன உனக்கு ‘தெர்மோ டைனமிக்ஸ்’ஸா எடுக்குறேன்… ‘ஓ’ன்னு இழுத்துட்டு நீ பாட்டுக்குப் போற..? லவ் மூட்ல ஏதாவது சொன்னா கரெக்டா ரியாக்ட் பண்ணணும்டி…” என்றான்.

 

வீட்டு வேலைகளில் மதுமதிக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக ராதா என்கிற ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணியைப் புதிதாக வேலைக்கு அமர்த்தியிருந்தான் கார்முகிலன். அந்தப் பெண்மணி சமையலறையில் இருப்பதால் மதுமதி சங்கோஜத்தில் நெளிந்தாள்.

 

“விடுங்க நான் போகணும்… ராதாம்மா சமையல்கட்டுல இருக்காங்க…”

 

“இருந்தா இருக்கட்டும்… அதுனால என்ன இப்போ? உனக்கு இந்த மீன்ல எது பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டுப் போ” என்றான் வலுக்கட்டாயமாக.

 

முதலில் ஆர்வமில்லாமல் அந்தத் தொட்டியைப் பார்த்தவள், ஆழ்கடல் போல் அலங்கரிக்கப் பட்டிருந்த அந்தத் தொட்டியின் அழகிலும்… அங்கே நீந்திக் கொண்டிருந்த குட்டிக் குட்டி கலர் மீன்கள் வாயைத் திறந்து மூடி உணவை எடுக்கும் அழகிலும்… வளைந்து நெளிந்து நீந்தி விளையாடும் அழகிலும்… தன்னை மறந்து புன்னகையுடன் ரசிக்க ஆரம்பித்தாள்.

 

“பிடிச்சிருக்கா…?” அவள் காதோரம் கிசுகிசுப்பாகக் கேட்டான்.

 

“ம்ம்ம்…. அழகா இருக்கு…” மீன் தொட்டியிலிருந்து கண்ணை எடுக்காமல் மெல்லிய புன்னகையுடன் பதில் சொன்னாள்.

 

அந்தச் சின்னச் சிரிப்பில் கிழக்கே உதிக்கும் சூரியனை மேற்கே உதிக்க வைத்துவிட்டது போல் ஒரு பெரிய திருப்தி கிடைத்துவிட்டது கார்முகிலனுக்கு. குனிந்து அவள் கன்னத்தில் இதழ் பதித்து “தேங்க்ஸ்…” என்றான்.

 

“என்ன இது..? குழந்தையைக் கைல வச்சுக்கிட்டு..?” என்று கூறியபடி அவள் சட்டென விலகி ஓடிவிட, அவனுடைய சிரிப்பொலி ஓங்கி ஒலித்தது.

 

அன்று இரவெல்லாம் அவனுக்குப் பூரிப்பில் உறக்கமே வரவில்லை. ‘கொஞ்சம் மாற்றம் தெரியுது… கொஞ்ச நாள்ல பழையபடி மாமா மாமான்னு என்னையே சுற்றி வரும் மதுமதி கிடச்சிடுவா… கண்டிப்பா கிடச்சிடுவா…’ மனதெல்லாம் இன்பக்களிப்பு… புன்னகையோடு புரண்டு படுத்து விடிவிளக்கின் வெளிச்சத்தில் அருகில் உறங்கிக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்தான். கால்களைச் சுருட்டிக் கொண்டு குறுகிப் படுத்திருந்தவளின் முகத்தில், ஆழ்ந்த உறக்கத்திலும் ஒரு சோகம் படர்ந்திருப்பது போல் தோன்றியது. அதுவரை அவனை ஆக்கிரமித்திருந்த மகிழ்ச்சி சட்டென விலகி ஓடிவிட இதயம் வலித்தது…

 

‘உயிரோட கொன்னுட்டேனே மதி… அப்பாவியா என்னையே சுத்தி சுத்தி வந்த உன் மனச நசுக்கிட்டேனே…! எப்படித் தாங்கின..? என்னையே முழுசா நம்பின உன்னை ஏமாத்திட்டேனே… அதை எப்படி உன்னால மறக்க முடியும்..?’

 

பழைய சம்பவங்கள் எல்லாம் சரம்சரமாக ஞாபகம் வந்துவிட மனம் ரணமானது… துக்கம் நெஞ்சையடைக்கத் தூங்க முடியாமல் தவித்தவன், மெல்ல மதுமதியின் கையை எடுத்துத் தன் கன்னத்தோடு சேர்த்தணைத்துக் கொண்டு படுத்தான். வெகுநேர மனப் போராட்டத்திற்குப் பிறகே கண்ணயர்ந்தான்.

 

மறுநாள் கார்முகிலனால் இயல்பாகவே இருக்க முடியவில்லை. அன்று அவனுக்குப் பழைய சம்பவங்களின் தாக்கம் அதிகமாக இருந்தது. மனைவியின் முகத்தைக் கூடப் பார்க்க முடியாமல்… ‘எவ்வளவு பெரிய கொடுமையைச் செய்துவிட்டோம்’ என்கிற குற்ற உணர்ச்சியில் மௌனமாகவே கல்லூரிக்குக் கிளம்பிச் சென்றான்.

 

தெளிவில்லாத மனநிலையில் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தவன் குறுக்கே வந்த சைக்கிள்காரனைக் கவனிக்கத் தவறிவிட்டான் தவறினான்.. கடைசி நொடியில் சடன் பிரேக் அடித்துத் திருப்பிய போது… சைக்கிள் மீது மோதாமல் தவிர்த்துவிட்டாலும், கனமான வண்டி சறுக்கி ஒரு பக்கமாகச் சாய்ந்ததில் வலது காலில் நல்ல அடி…

 

###

 

காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு வந்து கதவைத் திறந்த மதுமதி வெளியே கேட்டைப் பிடித்தபடி நின்ற கணவனைக் கண்டதும் “என்ன அதுக்குள்ள வந்துட்டீங்க? காலேஜ் இல்லையா?” என்றாள்.

 

“இருக்கு இருக்கு… நகரு…” – நொண்டிக் கொண்டே உள்ளே வந்தான்.

 

அப்போதுதான் அவனுடைய காலில் போடப்பட்டிருந்த கட்டைக் கவனித்தாள். அவள் முகத்தில் நொடியில் தோன்றி மறைந்த அதிர்வை… அடியெடுத்து வைப்பதில் கவனமாக இருந்த கார்முகிலன் கவனிக்கவில்லை.

 

“என்னாச்சு..?” ஏதோ மூன்றாம் மனிதன் அடிப்பட்டு வந்திருக்கிறான் என்பது போல் அவள் கேட்டதில், அவனுக்குள் எக்கச்சக்கமாக எரிச்சல் மண்டியது. இன்று காலை வரை இருந்த குற்ற உணர்வெல்லாம் போன இடம் தெரியாமல் பறந்து போய்விட்டது. பதில் பேசாமல் விந்தி விந்தி நடந்து சோபாவை அடைந்தான்.

 

“நான் ஏதாவது ஹெல்ப் பண்ணவா?” ஒட்டாமல் அவள் கேட்ட பாவனையில் “நீ ஒண்…ணும் பண்ண வேண்டாம்மா… கொஞ்சநேரம் என்னைத் தனியா விடு…” என்று எரிந்து விழுந்தான். அவளும் எனக்கென்ன என்பது போல் உள்ளே சென்றுவிட்டாள். அவளுடைய அந்தச் செயல் அவனை மிகவும் பாதித்துவிட்டது. தனிமை பட்டுவிட்டது போல்… கைவிடப்பட்ட குழந்தை போல் உணர்ந்தான்.

 

“தாய்க்குப் பின் தாரமே தாய் என்பார்கள்,

தாயாயல்ல சேயாகக் கண்டேன் உன்னை

முதுமை வரை காத்திராமல் – தள்ளிவிட்டாய்

என்னைத் தனிமை துயரில்…!
1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sudha says:

    Suppper sis

error: Content is protected !!