Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மயக்கும் மான்விழி-2

அத்தியாயம் – 2

ஆனை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே,

கேடு வரும் பின்னே; மதிக் கெட்டு வரும் முன்னே.”

 

மான்விழிக்கு ஏகப்பட்ட எரிச்சல். “ச்ச… ஏன் தான் அப்பா இப்படி இருக்காரோ…” என்று நினைத்தவளுக்கு ஒரு மணிநேரத்திற்கு முன் வீட்டில் நடந்த சம்பவம் கண்முன் படமாக ஓடியது…

 

“மீனாட்சி… நா தென்னந்தோப்புக்குப் போறேன்… நீ நம்ம வேலன் வந்தான்னா தோப்புக்கு வரச் சொல்லு…”

 

“சரிங்க…”

 

“ம்ம்ம்… அப்பறம் நா மத்தியானம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வர முடியாது… தேங்காய லோடு ஏத்தி இன்னைக்கு அனுப்பணும். நீ சேகருகிட்ட சாப்பாட்டக் குடுத்தனுப்பிடு…”

 

“சரிங்க…”

 

“க்கும்… நா வாறன்…” வெற்றிலைப் பாக்கை மென்றபடி மனைவிக்கு வரிசையாக உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டு… ஒரு கனைப்புச் சத்தத்துடன் விடைப்பெற்று வாசலுக்கு வந்தார் சிதம்பரம்.

 

மகள் இரண்டு பெண்களுடன் வீட்டை நோக்கி வருவதைக் கவனித்துவிட்டு வண்டியில் ஏறுவதைத் தாமதித்து அவளிடம் பேச்சுக் கொடுத்தார்.

 

“என்ன கண்ணு… காலேஜூ இல்லையா…? எங்கப் போயிட்டு வர்ற…? யாரு இதெல்லாம்…?”

 

“அப்பா… இவங்க ரெண்டு பேரும் என்னோட காலேஜ் பிரெண்ட்ஸ்… நம்ம ஊருதான்… இவ பேரு காதம்பரி… இவ சுமதி… இன்னிக்கு காலேஜ் லீவ்… அதான் வீட்டுக்கு வரச் சொன்னேன்.”

 

“ஓஹோ… யாரு வீட்டுப் பொண்ணுங்கம்மா நீங்க…?”

 

“நா வேலுச்சாமி மகப்பா…” காதம்பரி சொன்னாள்.

 

“நா முனியன் மகங்கையா…” சுமதி வணக்கத்துடன் சொன்னாள்.

 

அவளுடைய ஐயா என்கிற அழைப்பும் அவள் வணக்கம் சொன்ன விதமும்… அவரை விழித்துக் கொள்ள வைத்தது.

 

“எந்த முனியன் மகம்மா நீ… எந்தத் தெரு…?”

 

“நாலாங்கரைங்கைய்யா (தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதி)… எங்க அப்பா பெரியவீட்டுல தோட்ட வேல செய்யிறாருங்கையா…” அவள் தெருவைச் சொன்னதும் அந்தப் பெண்ணுடைய ஜாதியைத் தெரிந்து கொண்டவர் மகளை உக்கிரமாகக் பார்த்தார்.

 

அவர் பார்வைக்கான அர்த்தம் மான்விழிக்குப் புரிந்தது… அவருடைய பிற்போக்கான எண்ணத்தைப் புரிந்து கொண்டவள் எரிச்சலுடன் அவரிடம் சொன்னாள்.

 

“ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நம்மூரு பள்ளிக்கூடத்துல பிளஸ் ட்டூல முதல் மார்க்கு வாங்கின பொண்ணுப்பா இவ… ”

 

“ஓஹோ… உன்னோட படிப்புச் செலவுக்கு என்ன செய்றான் உங்கப்பன்…”

 

“பெரியவீட்டு ஐயா தானுங்கையா உதவி செய்றாரு…”

 

“ம்ம்ம்… ம்ம்ம்…” என்று முணுமுணுத்தவர் மகளைக் கண்டிக்க இது நேரமல்ல என்பதை உணர்ந்து மனைவியைக் கூவி அழைத்தார்.

 

“மீனாட்சி…. மீனாட்சி….”

 

அடுத்த நொடி மீனாட்சி அவர் முன் ஆஜராகி… “என்னங்க…?” என்றாள்.

 

“இவங்க ரெண்டுபேரும் பாப்போவோட காலேஜில படிக்கிற புள்ளைகலாம்… நீ கூட்டிகிட்டுப் போயி முன்கட்டுல உக்கார வச்சி… என்ன வேணுமோ குடுத்துப் பேசி அனுப்பு…” என்றபடி வண்டியைக் கிளப்பினார்.

 

இந்தப் பெண்களை வீட்டுக்குள் விடாதே… திண்ணையிலேயே அமரவைத்துப் பேசி அனுப்பிவிடு என்று மறைமுகமாக அவர் சொல்லிவிட்டுச் சென்றது அங்கிருந்த அனைவருக்குமே புரிந்தது.

 

சிதம்பரம் சொன்னதைக் கர்மச்சிரத்தையாக நிறைவேற்றினாள் மீனாட்சி. மான்விழிக்கு உள்ளுக்குள் எரிந்தது. தன்னுடைய சிநேகிதிகளைப் பெற்றோர் அவமானப்படுத்தி விட்டதாக நினைத்துப் புகைந்தாள்.

 

நாள் முழுக்கத் தோழிகளுடன் ஜாலியாக இருக்கலாம் என்று அவர்களை வரச் சொன்னவளுக்குப் பெற்றோரின் நடவடிக்கைகள் எரிச்சலை உண்டாக்க… பத்து நிமிடத்திற்கு மேல் வீட்டில் தங்காமல் வந்தவர்களை வெளியே அழைத்துக் கொண்டு வந்துவிட்டாள்.

 

தோழிகள் மூவரும் ஊர் எல்லையில் இருக்கும் ஆற்றுப் பாலத்தை அடையும் பொழுது தான் கவனித்தாள் சுமதியின் கண்களில் கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது.

 

“சுமதி… ஏய்… என்னடி ஆச்சு…?” மான்விழி பதறினாள்.

 

“நாந்தான் உங்க வீட்டுக்கெல்லாம் வரமாட்டேன்னு சொன்னேல்ல… நீ… நீதான் கேட்கல…” அவள் மான்விழியைக் குற்றம் சொன்னாள்.

 

தன் பெற்றோரின் செயல் அவளை வேதனைப்படுத்திவிட்டது என்பதைப் புரிந்து கொண்டவள்,

 

“சாரிடி…” என்று உயிரற்ற குரலில் சொன்னாள்.

 

“என்னடி சாரி… உங்க அப்பா அம்மாவைப் பற்றி உனக்குத் தெரியாதா…? நாங்களா உங்க வீட்டுக்கு வர்றோமுன்னு சொன்னோம்…? நீயாத்தானே கூப்பிட்ட… இப்பப் பாரு என்ன ஆச்சுன்னு… இதல்லாம் எங்களுக்குத் தேவையா…?” காதம்பரிக்கு இந்த விதமான அவமானம் புதிது. அவளும் மான்விழியின் இனம்தான் என்றாலும் சுமதியுடன் வந்ததால் அவளையும் வீட்டிற்குள் சேர்க்கவில்லை மான்விழியின் பெற்றோர். அதில் ஆத்திரம் அடைந்திருந்தவள் சுமதியின் கண்ணீரைப் பார்த்ததும் வெடித்துவிட்டாள்.

 

தோழி என்றும் பார்க்காமல் மான்விழியைக் கன்னாபின்னாவென்று திட்டிவிட்டு சுமதியை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டாள். மான்விழி திகைத்துப் போய் அதே இடத்திலேயே நின்றுவிட்டாள்.

 

மனதை அமைதிப்படுத்த முயன்று ஆற்று மணலை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுதுதான் பின்னாலிருந்து அந்த அலட்சியமான குரல் கேட்டது.

 

“ந்தா… ஏய்… பொண்ணு…”

 

கடுப்புடன் திரும்பிப் பார்த்தவள் அங்கு புல்லெட்டில் அமர்ந்திருந்தவனின் மைனர் கெட்டப்பில் இன்னும் கடுப்பானாள். ‘இவனுக்கெல்லாம் என்ன பதில் சொல்ல வேண்டிக் கிடக்கு…’ என்று நினைத்து அவனுடைய அலட்சியத்தை அலட்சியம் செய்து வெடுக்கெனத் திரும்பிக் கொண்டாள்.

 

அவன் விடாமல் மேலும் துரத்த இவளும் சரியான பதில் கொடுத்தாள். பெரிய இவன் மாதிரி முறைத்துக் கொண்டே போய்விட்டான். “இவன மாதிரி ஆளுங்க தான் ஜாதி மதத்தையெல்லாம் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தறது…” என்று எரிச்சலுடன் நினைத்தபடி மீண்டும் ஆற்று மணலை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்துவிட்டாள் மான்விழி.

 

# # #

 

மூன்று ஏக்கர் தென்னந்தோப்பின் நடுவில் இருந்த அந்தச் சிறு கொட்டகையில் போடப்பட்டிருந்த கயிற்றுக் கட்டிலில்… ஊரில் ருத்ரனின் குடும்பத்திற்கு அடுத்தப்படியாகப் பாரம்பரியமும் பணமும் நிறைந்த குடும்பத்தின் தலைவரான சிதம்பரம் அமர்ந்திருந்தார். அவருக்கு முன் கோபால்சாமி, கலியபெருமாள், நாராயணமூர்த்தி மூவரும் மூன்று நாற்காலிகளில் அமர்ந்து… வேலைக்காரன் ஊற்றிக் கொடுத்த சாராயத்தை உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

 

லேசாகப் போதை ஏறியதும் சிதம்பரம் வேலைக்காரனிடம் சைகைக் காட்டித் தூரமாகப் போகச் சொன்னார். உடனே அவன் அங்கிருந்து நகர்ந்தான்.

 

“பங்காளிகளா… நா கண்ணக் காட்டுனோன்ன அந்த வேலைக்கார நாயி தெறிச்சு ஒடுனானே… இன்னும் ரெண்டு வருஷத்துக்குப் பொறவும் இவன் இப்புடி ஒடுவான்னு நெனக்கிறியளா…?” யோசனையுடன் கேட்டார் சிதம்பரம்.

 

“ஏன்… ரெண்டு வருஷத்துக்குப் பொறவு இவனுக்கு என்ன தலையில கொம்பா மொளைக்கப் போவுது…” நக்கலாகப் பதில் கேள்விக் கேட்டார் கலியபெருமாள்.

 

“மொளைக்கதான் போவுது…” சிதம்பரம் தீர்மானமாகச் சொன்னார்.

 

“என்ன பங்காளி சொல்ற…? அது எப்புடி மொளைக்கும்…!” நாராயணமூர்த்திக் குழப்பத்துடன் கேட்டார்.

 

“கொம்புத் தானா மொளைக்காது பங்காளி… ருத்ரன் மொளைக்க வைக்கப் போறான்…”

 

“ருத்ரனா..!!!” மூவரும் வாயைப் பிளந்தார்கள்.

 

“என்ன பெரியப்பா சொல்ற…? எனக்கு ஒன்னுமே புரியலையே…” கோபால்சாமி கேட்டான்.

 

இந்த நால்வரில் கோபால்சாமி மட்டும் அடுத்தத் தலைமுறை. மற்ற மூவரும் ஐம்பதிலிருந்து அறுபது வயதிற்குள் உள்ளவர்கள்.

 

“கோவாலு… நீ கேட்டக் கேள்விக்கு நா பொறவு பதில் சொல்லுறேன்… நீ நா கேக்குற கேள்விக்கு மொதல்ல பதில் சொல்லு…” சிதம்பரம் புதிர் போட்டார்.

 

“என்ன பெரியப்பா…?”

 

“என்னோட வயல்லையோ… வெளச்சல்லையோ… ஒருத்தன் கைய வச்சுட்டு இந்த ஊர்ல இருந்துட முடியுமா…?”

 

“அது எப்புடி பெரியப்பா… தொலச்சுப்புடுவிங்களே…”

 

“ஒன்னோட வயல்ல கை வச்சா நீ சும்மா இருப்பியா…?”

 

“வெட்டிப் பொதச்சுட மாட்டேன்…?”

 

“நீ சிங்கம்டா… நம்ப பரம்பர அப்புடி… வடக்கித் தெருவுல நேத்தைக்கு நடந்த சமாச்சாரம்… கேள்விப்பட்டியா…?”

 

“ஆமாம் பெரியப்பா… பெரியவீட்டுக் களத்துல காவக்காரனே கை வச்சிட்டானாமுள்ள…”

 

“அதுக்கு அந்தப் பெரியவீட்டு பெரியமனுஷன் என்ன பண்ணியிருக்கான் தெரியுமா…? அந்தப் பயலுவள ரெண்டு தட்டுத் தட்டிப்புட்டு… பொறவு இவனே ஆசுபத்திரில சேத்து வைத்தியம் பாக்குறான். இன்னைக்குத் தப்புப் பண்ணுனவனத் தட்டிக் குடுத்தா… நாளைக்கு எவனுக்குப் பயம் இருக்கும்…? எல்லாப் பயலுவளுக்கும் துளுருட்டுப் போயிறாதா…?” சிதம்பரம் பொரிந்துக் கொட்டினார்.

 

“பங்காளி… நீ அரகொறையா சொல்லுறப்பா… ருத்ரன் அவனுவள ஊரைவிட்டு போவச் சொல்லிட்டான். ஆனா அவனுவ வீட்டு பொண்டுவ(பெண்கள்) போயி பெரியாத்தாக் கிட்ட அழுதுப் பொலம்பிக் கெஞ்சியிருக்காளுவ… பெரியாத்தாவும் பாவத்துக்கு இரக்கப்பட்டு ருத்ரனுட்ட பேசி அவனுவள ஆசுபத்திரிக்குக் கொண்டு போவ ஏற்பாடு பண்ணியிருக்கு… ருத்ரனும் இந்த ஒரு தடவ போயித் தொலையிறானுவன்னு விட்டுட்டான்… இதானப்பா நடந்தது…” கலியபெருமாள் விளக்கமாகச் சொன்னார்.

 

“பொம்பள ஆயிரம் சொல்லுவாய்யா… இவனுக்குப் புத்தி வேண்டாம்…? இன்னைக்குத் தப்புப் பண்ணினவனுக்கு ஒழுங்கா தண்டனைக் குடுக்கலன்னா… நாளைக்கு இன்னொருத்தனும் இதே தப்பச் செய்யத் துணிவான்னுத் தெரிய வேண்டாம்… இவனெல்லாம் என்னய்யா பெரிய மனுஷன்…” எரிச்சலுடன் பேசினார் சிதம்பரம்.

 

அனைவரும் அவருடைய பேச்சுச் சரிதான் என்பது போல் அமைதியாக இருந்தனர்.

 

“பாருங்க பங்காளிகளா… நாமெல்லாம் அதிகாரம் பண்ணியே பழகிட்டோம்… நம்ம முன்னாடி கைகட்டி நின்ன பயலுகளாம் கை நீட்டிப் பேச ஆரம்பிச்சா என்ன ஆகும் யோசிச்சுப் பாருங்க…”

 

“நீங்க தேவை இல்லாம பயப்படுறிங்க பங்காளி… அதெல்லாம் ஒரு பயலும் நிமிர மாட்டான்… நாலாங்கரையில இருக்க எவனும் ஊருக்குள்ள செருப்புப் போட மாட்டானுவ… சட்டப் போட மாட்டானுவ… தோள்ள துண்டுப் போட மாட்டானுவ… இவனுவளா நிமுந்து நின்னுக் கேள்விக் கேப்பானுவன்னு இப்புடி நடுங்குறிய… ஹா… ஹா…” எக்காளமாகச் சிரித்தார் கலியபெருமாள்.

 

“சிரி பங்காளி… நல்லா சிரி… இந்த வருஷத்தோட இந்தச் சிரிப்புக் காலி…” தீவிரமான குரலில் எச்சரித்தார் சிதம்பரம்.

 

அவருடைய குரலில் இருந்த தீவிரம் கலியபெருமாளின் சிரிப்பை நிறுத்தியது.

 

“இன்னும் எண்ணி மூணே நாள்… நம்ம நாலு பேரையும் ருத்ரன் அவன் வீட்டுக்குக் கூப்பிடுவான். நம்ம நெலத்து வழியா நாலாங்கர நெலத்துக்குத் தண்ணிவிடச் சொல்லிக் கேப்பான்…”

 

“நாலாங்கர நெலத்துக்கு நாம தண்ணி விடணுமா…! எதுக்கு…?” நாராயணமூர்த்தியின் குரலில் ஆச்சர்யம்.

 

“இதுவரைக்கும் ஒரு போகம் வெள்ளாமை (விவசாயம்) பண்ணிக்கிட்டு இருந்த பயலுக நமக்குச் சமமா மூணு போகம் வெள்ளாம பண்ணனுமே… அதுக்குத்தான்…” சிதம்பரம் நிதானமாகச் சொல்ல… நாராயணமூர்த்தி ஆவேசமாக எழுந்தார்…

 

“என்ன அநியாயம்யா இது… அவனுக நமக்குச் சமமா மூணு போகம் வெள்ளாம செய்றதா…? அதுவும் நாம குடுக்குற தண்ணிய வச்சே…!”

 

“ஆமாம் பங்காளி… அதுக்குத்தான் ருத்ரன் ஏற்பாடு செய்றான்…” சிதம்பரம் நிதானமாகச் சொன்னார்.

 

சிறிதுநேரம் அங்கே பேச்சற்ற அமைதி… அனைவரும் வருங்காலத்தைப் பற்றிச் சிந்தித்தார்களோ…!

 

“பங்காளிகளா… இந்தக் காலத்துல யாரும் யாருக்கும் அடிமை இல்ல… எல்லாரும் பணத்துக்குத்தான் அடிமை… பணம் இருக்கவன் இல்லாதவன அடிமைப்படுத்தி வச்சுக்கலாம்… நம்மக்கிட்ட சிக்கியிருக்க அடிமைகளைத் தக்க வச்சுக்க நம்மக்கிட்ட பணம் இருந்தா மட்டும் போதாது… அவனுகக்கிட்ட பணம் இருக்கக் கூடாது… அது ரொம்ப முக்கியம். அவனுவளும் நம்மள மாதிரியே மூணு போகம் வெவசாயம் செய்ய ஆரம்பிச்சிட்டானுவன்னா நம்ம வயல்ல வெவசாயம் பண்ண நாமதான் கலப்பையப் புடிக்கணும்… இல்லன்னா எங்க வயல்லயும் வந்து கலப்பையப் புடிடான்னு அவனுவ காலப் புடிக்கணும்…”

 

“ஐயையோ… பங்காளி… அவனுவள நிமிர விட்டுடவே கூடாது… அது நாம எல்லாரும் குடும்பத்தோட தற்கொல பண்ணிக்கிறதுக்குச் சமம்…” நாராயணமூர்த்தி ஆவேசப்பட்டார்.

 

“ஆமாம் பெரியப்பா… நீங்க சொல்றது சரிதான்… அவனுகளுக்கு எப்புடிக் கொம்பு மொளைக்கப் போகுதுன்னு இப்பப் புரியுது… ஆனா விடக்கூடாது பெரியப்பா… விடவே கூடாது…” கோபால்சாமியின் குரலில் கோபம் பொங்கியது…

 

“நீங்களுவ சொல்றதெல்லாம் சரிதான்… நாலாங்கரைக்குத் தண்ணி விடறதா இல்லையான்னு ஊரு பஞ்சாயத்துல்ல முடிவுப் பண்ணனும்… நாம பேசி என்ன ஆகப் போவுது?” கலியபெருமாள் நிதானமாகக் கேட்டார்.

 

“பஞ்சாயத்து என்னாத்த முடிவுப் பண்ணப் போவுது…? அந்த ருத்ரன் முடிவுதானே பஞ்சாயத்து முடிவு… அவந்தான் தண்ணி விடறதுன்னு முடிவுப் பண்ணிட்டா(ன்) போலருக்கே… அவன எதுத்து நம்மளால என்ன செய்ய முடியும்… அடுத்த வருஷத்துலேருந்து கலப்பையப் புடிக்கத் தயாராக வேண்டியதுதான்…” கோபால்சாமி விரக்தியாகப் பேசினான்.

 

“அட ஏன்டா கோவாலு நாம கலப்பையப் புடிக்கணும்…? அந்தப் பயலுகளுக்குத் தண்ணி விட முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதான்… ”

 

“எப்படிப் பெரியப்பா…?”

 

“அடேய்… நாலாங்கரைக்குத் தண்ணி விடறதுன்னா நம்ம நாலு பேரோட நிலத்து வழியாதான் விடணும்… நாம நாலுபேரும் முடியாதுன்னு சொல்லிட்டா எவனும் நம்மள எதுவும் செய்ய முடியாது… ஆனா தைரியமா ருத்ரன எதிர்த்து நிக்கணும்… உங்களால முடியுமா…?” என்று சிதம்பரம் கேட்க,

 

‘ஆனை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே; கேடு வரும் பின்னே மதிக் கெட்டு வரும் முன்னேஎன்கிற உண்மை புரியாமல் சிறிதுத் தயக்கத்திற்குப் பின் அனைவரும் ருத்ரனைத் தீவிரமாக எதிர்ப்பது என்று முடிவுச் செய்தார்கள்.

# # #

 

சிதம்பரம், கலியபெருமாள், நாராயணமூர்த்தி மற்றும் கோபால்சாமி ஆகிய நால்வரும் ஒன்றாகப் பெரியவீட்டிற்கு வந்தார்கள்.

 

“வாப்பா செதம்பரோ… நல்லாருக்கியா…? என்ன இந்தப் பக்கம் உந்தெரு ஆளுகளோட வந்துருக்க…? ”

 

“நல்லாருக்கே(ன்) பெரியாத்தா… நடுத்தம்பி வரச் சொல்லிச் சேதி அனுப்பியிருந்துச்சு… அதாந் தோப்புக்குப் போறதுக்கு முன்ன ஓரெட்டு இங்குட்டு வந்துட்டுப் போயிடலாமுன்னு வந்தேன்…”

 

“அப்புடிச் சொல்லு… சேதியில்லாம நீ இங்குட்டு வருவியா…! சரி சரி… ஏ(ன்) வெளியவே நின்னுப் பேசுறிய… உள்ளுக்கு வாங்க… ”

 

நால்வரும் கூடத்திற்கு அனுமதிக்கப்பட்டார்கள். கள்ளிச்சொட்டு போல் திக்காக வீட்டில் கறக்கப்பட்டுச் சுண்டக்காய்ச்சிய பசும்பாலில் தயார் செய்த வெல்லக் காப்பியைச் சுவைத்தபடி ருத்ரனின் வரவுக்காகக் காத்திருந்தவர்களை அதிகநேரம் காத்திருக்க வைக்காமல் மாடியிலிருந்து கூடத்திற்கு இறங்கி வந்தான் அவன்.

 

“வாங்க மாமா… வந்து நேரமாச்சா…?”

 

அவர்களுக்குள் நேரடிச் சொந்தம் இல்லை என்றாலும்… மாமன் மச்சான் முறை உள்ளவர்கள் என்பதால் மாமா என்று அழைப்பதுதான் வழக்கம்.

 

“இல்ல மாப்ள… இப்பதா(ன்) வந்தோம்… தங்கச்சி காப்பிக் குடுத்துச்சு… இன்னம் குடிச்சு முடிக்கல… நீங்க வந்துட்டிங்க…” என்று சொன்னவர், அவன் அருகில் நெருங்கி வரும் பொழுது தானாக எழுந்து நின்றார். உடன் வந்திருந்தவர்களும் எழுந்தார்கள்.

 

“நல்லது… உக்காருங்க… உக்காருங்க…” என்றபடி அவர்களை நெருங்கி அவன் ஓர் இருக்கையில் அமர்ந்ததும்… அவனுடன் சேர்ந்து அவர்களும் அமர்ந்தார்கள்.

 

“உங்களையெல்லாம் ஒரு நல்ல விஷயத்தப் பத்திப் பேசத்தான் வரச் சொன்னேன்…”

 

“சொலுங்க மாப்ள… என்னா சேதி…?”

 

“நா எதப்பத்திப் பேசப் போறேன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கணுமே…!” அவன் சூசகமாகக் கேட்டான்.

 

சிதம்பரம் அவனுடைய கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று ஒரே ஒரு கணம் தடுமாறினார். அந்தத் தடுமாற்றத்தை அவருடைய கண்ணில் கண்டு கொண்டவன் அவருக்கு விஷயம் தெரிந்திருக்கிறது என்பதை ஊகித்துவிட்டான். ஆனால் சிதம்பரமோ… அவனைப் புத்திசாலித்தனமாகச் சமாளிப்பதாக நினைத்துக் கொண்டு,

 

“எதப் பத்தி மாப்ள பேசுறிங்க… ஒன்னும் புரியலையே…!” என்றார்.

 

அவன் உதடுகள் லேசாக மேல்நோக்கி வளைந்தன. சிதம்பரத்தை எண்ணி உள்ளுக்குள் சிரித்தானோ…!

 

“புரியலன்னா என்ன மாமா… வெளக்கிச் சொன்னா புருஞ்சுக்கப் போறீங்க…”

 

“ஹி… ஹி… நீங்க சொல்றதும் சரிதான் மாப்ள…”

 

“நம்ம ஊர்ல நாலாங்கர நெலத்துல ஒரு போகம்தான் விவசாயம் செய்றோம். இனி மூணு போகம் விவசாயம் பண்ண ஏற்பாடு செய்யணும்…”

 

“மூணு போகமா… அதுக்குத் தண்ணிக்கு எங்கப் போறது…? அதுவும் இல்லாம அந்தப் பக்கத்து நெலமெல்லாம் நாலாங்கரப் பயலுக நெலந்தானே… அந்த நெலத்தப் பத்தி நமக்கு என்னாத்துக்கு மாப்ள கவலை… வேற வேலையப் பாருங்க…” அலட்சியமாகப் பேசினார் சிதம்பரம்.

 

“அதானே… ” என்று மற்ற மூவரும் அவரை ஆமோதித்தார்கள்.

 

அவன் தாடையைத் தடவியபடி அவர்களைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“மாப்ள… அந்தப் பயலுக மூணு போகம் விவசாயம் பண்ண ஆரம்பிச்சிட்டானுவன்னா நமக்கு வேலைக்கு வரமாட்டானுவ… இந்த எண்ணத்த இன்னையோட விட்டுடுங்க… அப்பறம் இந்த வேலக்காரனுவளுக்கு ரொம்ப எடம் குடுக்காதிங்க… நாளைக்கு உங்க தல மேலயே ஏறிப்புடுவானுவ…” என்று இலவசமாக அறிவுரையும் வழங்கினார்.

 

“இந்த ஊர்ல நம்ம ரெண்டு குடும்பத்துக்கு மட்டும் இருக்க நிலத்துக்கு… நாலாங்கரையில இருக்க மொத்த நிலமும் ஈடாகாது. நீங்க அவனுகள நமக்குப் போட்டியா நெனக்கிறிங்க…! பாவம் மாமா… கஷ்டப்படறானுங்க… புள்ளைகளப் படிக்கவைக்க முடியாம வேலைக்கு அனுப்பறானுவ… பொழச்சுட்டுப் போகட்டுமே…” அவன் அவருக்குப் புரிவது போல் எடுத்துச் சொன்னான்.

 

யாரும் எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தார்கள்.

 

“இந்த வருஷம் நாலாங்கர நெலத்துல ரெண்டாம் போகம் வெள்ளாம நடக்கணும்… தண்ணி நா என்னோட போர்லேருந்து குடுக்கப் போறேன்… ஆனா நாலாங்கர நிலத்துக்கும் என்னோட நிலத்துக்கும் எடையில உங்க நாலு பேரோட நெலமும் வேலி மாதிரி வழிமறிச்சுக்கிட்டுக் கெடக்கு… அதுனால உங்க நெலத்து வழியாத்தான் நாலாங்கரைக்குத் தண்ணி பாஞ்சாகணும்… நீங்க என்ன சொல்றிங்க?”

 

“மன்னிச்சிடுங்க மாப்ள… எங்களுக்கு இதுல விருப்பம் இல்ல…”

 

“ஏன்…?”

 

“எங்க விவசாயத்துக்குப் பாதிப்பு வரும்…”

 

“எப்படி…?”

 

“அ… அது… வந்து… ”

 

“உங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராம… இன்னும் சொல்லப் போனா… உங்க வயல்ல என்னோட போர் தண்ணி ஈரம் கூடப் படாம பூமிக்குள்ள பத்தடி ஆழத்துல பைப்பப் பொதச்சு… தண்ணிய அந்தப் பக்கம் கொண்டு போக ஏற்பாடு செஞ்சுக்குறேன்… என்ன சொல்றிங்க…?”

 

“அதுக்கு நீங்க அவனுவளுக்கு அந்தப் பக்கம் போர் போட்டு குடுத்துடலாமே…” கோபால்சாமி கேட்டான்.

 

“அந்தப் பக்கம் அறநூறு அடி ஆழத்துல கூடத் தண்ணி சரியா இல்ல… இந்தப் பக்கத்துலேருந்து கனெக்க்ஷன் குடுத்துட்டா ஆத்து தண்ணியையும் திருப்பிவிடலாம்… ஆத்துல தண்ணி வராதப்ப போர் தண்ணிய தெறந்து விடலாம்… அந்தப் பக்கம் விவசாயம் செழிக்க நீங்க நாலுப் பேரும் ஒத்துழச்சுதான் ஆகணும்…” அவன் நேரடியாகவே நிர்பந்தித்தான்.

 

சிதம்பரத்திற்கு எரிச்சலாக வந்தது…

 

“இல்ல மாப்ள… நாங்க இதுக்கு ஒத்துக்க மாட்டோம்… இனிமே இதப் பத்திப் பேச நீங்க எங்களக் கூப்பிட வேண்டாம்…” பட்டென்று சொல்லியபடி எழுந்தார்.

 

ருத்ரன் முகத்தில் அடிவாங்கியதைப் போல் உணர்ந்தான். அவனுடைய ஈகோ தலைத்தூக்கியது. நாலாங்கரை பகுதி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தை விட… இந்தப் பக்கத்திலிருந்து தண்ணியை அந்தப் பக்கம் கொண்டு செல்வதில் தான் தன்னுடைய மரியாதை இருக்கிறது என்று உறுதியாக நம்பினான். தன்னுடைய மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள எதையும் செய்ய தயாராகிவிட்டான்.
Comments are closed here.

error: Content is protected !!