உனக்குள் நான்-12
3318
0
அத்தியாயம் – 12
காரில் கனத்த மௌனம் கவிழ்ந்திருந்தது. மடியில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையின் தலையைக் கோதியபடி சாலையில் பார்வையைப் பதித்திருந்த மதுமதியின் முகம் உணர்ச்சிகளற்று இருந்தாலும், உள்ளே மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. ஆனால் அதை அவள் துளியும் வெளியே காட்டவில்லை.
யாரிடம் காட்டுவது..? அவளில் பாதி அவன்தான்… அவனுடைய அன்பின் மீதான சந்தேகமே அவளை முழுமையாக ஆக்கிரமித்திருக்கும் பொழுது, கோபத்தையும் கொதிப்பையும் அவளால் எப்படி வெளிக்காட்ட முடியும். முடியவில்லை…! அதைவிட அமிலமாய் அவளுக்குள் சுரக்கும் அத்தனை உணர்வுகளையும் உள்ளேயே அழுத்தி மறைத்துக் கொள்வது எளிதாய் இருந்தது. மறைத்துக் கொண்டாள்…! மனதின் அழுத்தம் கூடிக் கொண்டிருக்க அவள் மனம் கனமாகிக் கொண்டே இருந்தது. எந்த நிமிடமும் அது வெடித்துச் சிதறலாம்…
மனைவி வாய்விட்டு எதையும் சொல்லவில்லை என்றாலும் அவள் மனக்காயத்தின் ஆழத்தைப் புரிந்து கொண்ட கார்முகிலனுக்கு அவளுடைய மௌனத்தைக் கலைக்கும் தைரியம் இல்லை. அவளுடைய முகத்தைக் கூடப் பார்க்கும் திராணியற்றவனாக காரை ஹோட்டல் வளாகத்திற்குள் விட்டான்.
பார்க்கிங்கில் கார் நின்றவுடன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு இறங்கியவள் கணவனைப் பொருட்படுத்தாமல் விறுவிறுவென்று அறையை நோக்கி நடந்தாள். தன்னிடமிருந்த சாவியைக் கொண்டு கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவள்… தன் தோளில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையைக் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு, மாற்று உடையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.
அவள் உடை மாற்றிக்கொண்டு வெளியே வரும் பொழுது, கார்முகிலன் அறைக்குள் நுழைந்தான். தன்னை ஏறெடுத்தும் பார்க்காமல் கையிலிருக்கும் அழுக்குத் துணியை லாண்டரி பைக்குள் திணிப்பதில் சிரத்தையாக இருந்த மனைவியின் முகத்தைக் கூர்மையாகக் கவனித்தான். சிவந்திருந்தது…
‘அழுதிருப்பாளோ…!’ – அவன் மனம் பதைபதைத்தது. ஆனால் கண்களில் அழுததற்கான தடயம் எதுவும் தெரியவில்லை. உள்ளுக்குள்ளேயே புழுங்குகிறாள் என்பதைத் தெளிவாக உணர்ந்தாலும்… அவனால் அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை. எதைச் சொல்லி ஆறுதல்படுத்துவது..? எப்படி ஆறுதல்படுத்துவது..? அவனிடமிருந்து இயலாமையில் ஆயாசத்துடன் ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது.
“ட்ரிங்… ட்ரிங்…” – இன்டர்காம் ஒலித்தது.
எடுத்துக் காதுக்குக் கொடுத்து “ஹலோ…” என்றான்.
“டின்னர் ஆர்டர் கொடுக்கறீங்களா சார்..?” – ரிசப்ஷனிஸ்டின் குரல்.
“நிச்சயமா…” என்று பதில் சொன்னவன், மனைவியிடம் பேசுவதற்கு அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டான்.
“என்ன சாப்பிடற மதி…”
“எனக்கு எதுவும் வேண்டாம்…” அவன் முகத்தைப் பார்க்காமல் சொன்னாள். அவள் முகம் திருப்பிக்கொள்ளும் வேதனையை விட… உணவை மறுக்கிறாளே என்கிற கவலை அவனை அதிகமாகச் சூழ்ந்து கொள்ள,
“ரெண்டு செட் சப்பாத்தி… வெஜ் கறி… ஒரு கப் மில்க்… ரெண்டு வாழைப்பழம்…” என்று சொல்லிவிட்டு போனை வைத்தான். அவள் குழந்தைக்கு அருகில் வந்து படுத்துக் கண்களை மூடிக்கொண்டாள்.
“மதி… டின்னர் ஆர்டர் பண்ணியிருக்கேன்… சாப்பிட்டுவிட்டுப் படு…” குரலில் அழுத்தத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னான். அப்படியாவது அவள் சாப்பிட வேண்டுமே என்கிற கவலை அவனுக்கு.
“எனக்கு வேண்டாம்னு சொன்னேனே…” – கண்களைத் திறக்காமலே பதில் சொன்னவள் போர்வையை இழுத்துத் தலைவரை போர்த்திக் கொண்டாள்.
அவன் மூடிய போர்வையையே பார்த்துக் கொண்டிருந்தான். மனம் கவர்ந்த பெண்ணின் கோபம் ஓர் ஆணை எவ்வளவு பெரிய கோழையாக்கும் என்பதை அன்று அறிந்து கொண்டான் கார்முகிலன்.
கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. எழுந்து சென்று கதவைத் திறந்தவன், கையில் ட்ரேயோடு நின்ற ரூம் பாய்க்கு வழிவிட்டு ஒதுக்க… அவன் உள்ளே வந்து கையிலிருந்த உணவு வகைகளை மேஜை மீது அடுக்கி வைத்துவிட்டு… “ஹாட் வாட்டர் வேணுமா சார்?” என்றான்.
“வேணும்னா சொல்றேன்…”
“ஓகே சார்…” – வெளியேறிவிட்டான்.
கார்முகிலன் கதவை அடைத்துவிட்டு வந்து மனைவிக்கு அருகில் அமர்ந்து “மதி… மதி…” என்று இருமுறை அழைத்துப் பார்த்தான். உறங்குகிற பாவனையில் அசையாமல் படுத்திருந்தவளிடமிருந்து பதிலே இல்லை…
கை வைத்து உலுக்கி “எழுந்திரு மதி… நைட் சாப்பிடாம படுக்கக் கூடாது…” கெஞ்சலாக அழைத்தான்.
அவள் அலுப்போடு போர்வையை விலக்கிப் பார்த்து “பசிக்கலன்னா விடுங்களேன்…” என்றாள்.
“பொய் சொல்லாத மதி… காலையிலேருந்து அலைஞ்சிருக்கோம்… அது எப்படிப் பசிக்காம போகும்…” லேசாக எட்டிப்பார்த்த கோபத்துடன் கேட்டான்.
“சின்ன விஷயம்… இதுல கூட நான் சொல்றதை நம்பப் போறதில்ல இல்ல?” மெல்லிய குரலிலேயே குற்றம் சாட்டி அவனைக் கொன்றாள்.
அடிபட்ட குழந்தை போல் பரிதாபமாக அவளைப் பார்த்தான். அந்தப் பார்வையிலிருந்த துயரம் அவள் அடிவாயிற்றைப் பிசைந்தது. மீண்டும் போர்வையைத் தலைவரை படர விட்டுக்கொண்டு புரண்டு படுத்தாள். ஆர்டர் செய்த உணவு மேஜையிலேயே காய்ந்து கொண்டிருக்க, மின்விளக்கை அணைத்துவிட்டு அவனும் கட்டிலில் சாய்ந்தான்.
விளக்கை அணைத்துவிட்டு ஆளுக்கொரு பக்கம் படுத்துவிட்டாலும் உறக்கம் அவர்களைத் துளி கூட நெருங்கவில்லை. மனம் நிறையக் காதல் இருக்கிறது. அதை நம்பாமல் தன்னைத் தானே வருத்திக் கொள்பவளிடம் தன் காதலை எப்படி நிரூபிப்பது..? புரியவில்லை… இதைச் செய்யலாமா… அதைச் செய்யலாமா… அலைபாயும் மனதை அமைதிபடுத்த முயன்று நடுநிசி வரை உறங்கமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தவன்… கட்டிலிலிருந்து இறங்கி இருளில் நடந்து சென்று பால்கனி கதவைத் திறந்து கொண்டு வெளியேறும் மனைவியைக் கண்டு அதிர்ந்தான்…
‘தூங்கலையா இவ..? இந்த நேரத்துல எதுக்கு எழுந்து வெளியே போறா…!’ குழப்பத்தோடு மெல்ல எழுந்து அமர்ந்து பால்கனி பக்கம் பார்வையைத் திருப்பினான்.
உறக்கம் வராமல் வெகுநேரம் விழித்துக் கிடந்த மதுமதி… கணவன் உறங்கியிருப்பான் என்ற எண்ணத்தில் வெளிக்காற்றைச் சுவாசித்தால் மன அழுத்தம் மட்டுப்படும் என்று நினைத்து மெல்ல எழுந்து பால்கனிக்கு வந்தாள்.
அழகான தோட்டம்… அதில் ஆங்காங்கே ஒளிர்ந்த மங்கலான விளக்குகள்… அந்த ஒளியில் மின்னிய வண்ணப் பூக்கள்… ரம்யமான அந்தச் சூழ்நிலை அவள் மனதில் சூழ்ந்திருந்த துன்பத்தின் காரணமாகச் சோகமாகக் காட்சியளித்து… அவளுடைய மன அழுத்தத்தைப் பலமடங்கு அதிகரித்தது. கண்களை மூடிக் குளிர்காற்றை ஆழமாகச் சுவாசித்தாள். உடலைத் துளைக்கும் குளிர் அவள் மனதைத் தீண்டவேயில்லை…
கண்களைத் திறந்து பார்த்தாள்… தூரத்தில் கவிழ்ந்திருக்கும் இருட்டு அவள் வருங்கால வாழ்க்கையின் பிரதியாகத் தோன்றியது… அங்கே நின்று கொண்டிருந்த மரங்களின் நிழலுருவங்கள் ராட்சச பேய்களைப் போல் அவளை அச்சுறுத்தின. இரவின் நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு செவியைத் துளைக்கும் பெயர் தெரியாத பூச்சிகளின் ஒருவித ரீங்காரம்… அவள் மன அமைதியை மேலும் குலைத்தது.
அவள் ரசித்து மகிழ்ந்த இயற்கை தான்… ஆனால் அவையனைத்துமே இன்று அவள் காயத்தைக் குத்திக் கிளறிக் கொண்டிருந்தது. மனதில் தீராத் துன்பம் தணலாய் தகிக்க… அதைச் சொல்லி ஆற மனமொத்த துணையின்றி… அநாதரவாய்த் தனிமை இருளுக்குள் நின்றவளின் கண்களிலிருந்து கண்ணீர் கசிந்தது.
இடுப்பளவு இருந்த தடுப்புச் சுவற்றோடு ஒட்டி நின்று இருளை வெறித்துக் கொண்டிருந்தவளுடைய வலதுகை உயர்ந்து கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைப்பதை பின்னாலிருந்து பார்த்துக் கொண்டிருந்த கார்முகிலன், தாங்க முடியாமல் மனைவியை நெருங்கினான்.
“மதி…” கரகரப்பான குரலில் அழைத்தான்.
திடீரென்று காதுக்கருகில் கேட்ட குரலில் திடுக்கென்று தூக்கிவாரிப் போட “ஹாங்…” என்று மிரட்சியுடன் திரும்பிப் பார்த்தாள்.
“ஹேய்… நான்தான்… நான்தான்…” என்று அவள் புஜங்களை அழுத்திப் பிடித்துப் பதட்டத்தைக் குறைத்தவன் “பயந்துட்டியா..?” என்றான்.
“ம்ம்ம்…”
“சாரி”
“…………………” பதில் சொல்லாமல் அவன் கைகளை விலக்கிவிட்டு விட்டு மீண்டும் இருளை நோக்கி பார்வையைத் திருப்பினாள்.
“தூங்கலையா?”
“தூக்கம் வரல…”
“எதுக்கு மனச போட்டுக் குழப்பிக்கற?”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல… எனக்கென்ன குழப்பம்..?” – சாதாரணமாகக் கேட்டாள்.
“மதி…” – அவள் தோளைப் பிடித்துத் தன்பக்கம் அவளைத் திருப்பினான். அவள் கேள்வியாக அவனைப் பார்த்தாள்.
அவளின் கையைப் பிடித்துத் தன் நெஞ்சுக்குள் வைத்துக்கொண்டு “மறந்துடு மதி… பழசையெல்லாம் கெட்டக்கனவா நெனச்சு மறந்துடு…” என்று கெஞ்சலாகக் கேட்டான்.
அவன் கண்களிலிருந்து பார்வையை விலக்காமல்.. கையை அவன் பிடியிலிருந்து உருவி கொண்டே “என் உயிர் இருக்கற வரை அந்தச் சம்பவத்தை என்னால மறக்க முடியாது…” என்று சொன்னவள் சட்டென்று திரும்பி உள்ளே சென்றுவிட்டாள்.
அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவன் நொந்து போன மனதுடன் இருண்டு கிடந்த கானகத்திற்குள் தொலைந்து போன தன் காதலின் உயிரைத் தேடினான்.
Comments are closed here.