குற்றப்பரிகாரம் – 4
1303
1
அத்தியாயம் – 4
நேற்றுவரை அக்கரைப்பட்டி அகிலாண்டமாய் இருந்தவள், கணவன் தொடர்ந்து நாலு படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தவுடன், எல்லோருக்கும் அகிலா மேம் ஆகிப் போனாள்.தேங்காய் எண்ணெய்-ஷாம்பூ ஆனது. மஞ்சள்-ஃபேர் அண்ட் லவ்லி ஆனது, அறுபது ஏக்கர் ஊர் நிலம்-ரெண்டு க்ரௌண்ட் சிட்டி பங்களாவானது,செங்கல்-ஆப்பிள் ஐ ஃபோன் ஆனது. ( அது பேசுவதற்கு மட்டுமே உபயோகப்படுத்த தெரியும் என்பது வேறு விஷயம் ) மொத்தத்தில்… நிலவு- லேம்ப் ஆனது. இப்போதுகூட லேடீஸ் ஜிம் வாசலில் அந்த வெஸ்பாவை ஸ்டைலாக (!) நிறுத்திவிட்டு ( பாபா ட்ரைவிங் ஸ்கூல் உபயம் ) உள்ளே நுழைந்தாள் அகிலா.
அதற்காகவே காத்திருந்தவன் போல் ஹெல்மட் அணிந்த ஒருவன் அவள் வண்டியின் பக்கத்தில் நிறுத்தினான்.ஒருமணி நேரம் கழித்து, என்னவோ, அறுபது கிலோவை உடம்பை இருபது கிலோ ஆக்கிவிட்டதுபோன்ற சந்தோஷத்தில் வந்த அகிலா…. வண்டியின் ஃபுட் ரெஸ்டில் இருந்த அந்த பெரிய சைஸ் ப்ரௌன் கவரைப் பார்த்தாள்.சுற்றும் முற்றும் பார்த்தவள், கவரின் மேல் கண்களை ஓட்டினாள்.
‘உங்கள் கணவருக்கு ஆபத்து. உடனே இதை உங்கள் பக்கத்துவீட்டு போலீஸ் அதிகாரியிடம் கொடுக்கவும் .அவ்வளவுதான், ஜிம்மில் கலோரி இறங்கியதைவிட இப்போது வேர்த்து விறுவிறுத்து விட்டது அகிலாவிற்கு.
“ஆத்தா மகமாயி அவருக்கு ஒன்னும் ஆகிடக்கூடாது. ஒனக்கு கடாவெட்டி பொங்க வைக்கிறேன்” என ஒரிஜினல் அகிலாண்டம் எட்டிப்பார்த்தாள். ஒரே திருகு த்ராட்டிலை! தனது அதிகபட்ச வேகமான நாற்பது கிமீ வேகத்தை நாலு நிமிடத்தில் தொட்டாள்.
அகிலாவின் பயங்கலந்த த்ராட்டில் முறுக்கலைப் பார்த்தபிறகே, சற்று தள்ளி நின்றிருந்த ஹெல்மட் நகர்ந்தது.
டிஜிபி-யின் பங்களா வீட்டு வாசலின் முன், அரக்கபரக்க அகிலா வண்டியை நிறுத்துவதை பார்த்து சென்ட்ரி
“என்ன அகிலா மேம்… உங்க வீடு அடுத்தது, இங்க நிப்பாட்றீங்க… ஓ… இன்னிக்கு காலைல பேப்பர்ல போட்ருந்தானே.,ரமாஸ்ரீக்கும் உங்க கணவருக்கும் ரகசியத் தொடர்புனு… அதப்பத்தி ஐயாகிட்ட கம்ளைண்ட் கொடுக்கப் போறீங்களா! போங்க போங்க ஐயா உள்ளதான் இருக்காரு”
இவன் வேற வேலையத்த வேலைல.. ( இருந்தாலும் இந்த விஷயத்தைப் பத்தி அந்தாள் ஜூட்டிங் முடிச்சு வந்த உடன கேக்கனும்… வரணுமே ஆண்டவா…) நடந்தவளை தாலி ஓட வைத்தது…ஹாலைக் கடந்து, “யக்கோவ்” என்றபடியே உள்ளே ஓடினாள். அவள் கத்திய கத்தலை கேட்டு, என்னவோ ஏதோவென வந்த டிஜிபி.,யின் மனைவி, அவளை ஆசுவாசப்படுத்தி,மாடி ரூமில் இருந்த தன் கணவரின் முன்னால் நிறுத்தினார்.
“சார்… பாருங்க சார் இந்த அநியாயத்த… நடிப்பைத்தவுர எதுமே தெரியாத எம்புருசனுக்கு வந்த பாவத்த… நீங்கதான் கெல்ப் பண்ணனும். எத்தினி வருசமா நாம பளகுறோம்”. அடிப்பாவி இவ புருஷன் பட்டணம் வந்தே நாலு வருஷந்தான் ஆச்சு. அதுவும் இந்த பங்களாவிற்கு இவர்கள் குடிவந்தே ஆறு மாசம்தானாச்சு… டிஜிபி.,யின் மனைவி உள்ளுக்குள் நகைத்துக் கொண்டார். அகிலாண்டம் நடந்ததை சொல்லிக் கவரை கொடுத்தாள்…
முதலில் அவள் கணவரின் நிலைப் பற்றி தகவலறிய ஏற்பாடு செய்த டிஜிபி, அதன் பின்னேதான் கவரைப் பிரித்தார். உள்ளிருந்தது இன்னொரு வெள்ளைக் கவரும், வெகு அழகாக நான்காய் மடிக்கப்பட்ட கடிதமும் விழுந்தது. கடிதத்தைப் பிரித்த டிஜிபி மனதிற்குள் படித்தார்….மன்னிக்கவும் டிஜிபி. வெள்ளைக் கவர் கடிதம் உங்களை நேரடியாக சேர வேண்டும் என்பதற்காகவே இந்த மெனக்கெடல். அகிலாண்டத்தை அனுப்பிவிடவும். அவள் கணவர் இன்னும் தமிழ் மக்களை முட்டாளாக்க வேண்டியிருக்கிறது
“என்னங்கய்யா இருக்கு அதுல” அகிலாவின் குரல் டிஜிபியை உசுப்பியது.
“ம்… ம்… ஹ ஹ… ஒன்னுமில்லமா! இது பிரபலங்களோட மனைவிமார்கள் பயபடறாங்களானு, சும்மா டிவி ஷோக்காக! நீ் கவலைப்படாம போ! இது இதை பற்றி நீ ஒன்னும் கண்டுக்க வேணாம்… உன் கணவர்டையும் சொல்லு… நீ போம்மா!
இது விளையாட்டுதான்” அவள் முன்னால் அலட்சியமாக கடிதத்தைத் தூக்கிப் போட்ட டிஜிபி, மனைவிக்கு கண்ணைக் காட்டினார். அவர்கள், நகர்ந்ததும் டிஜிபி கவரைப் பார்த்தார்… சுத்தமான வெள்ளைக்கவர். முகவரி பகுதியில்…
அனுப்புனர் : நான்
பெறுநர் : நீங்கள்
வேறு எந்தக் குறியீடும் இல்லை…கவரின் உள்ளே இரண்டாய் மடிக்கப்பட்ட கடிதம்…. நாலே வரிகள்
அந்நிய மண்ணில் அமைச்சரின் ரத்தம் – டிஐஜிக்கு உடனே போன் செய்தார் டிஜிபி.
1 Comment
அமைச்சருக்கு எதாவது ஆபத்தா? எந்த அமைச்சர்