Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உனக்குள் நான்-19

அத்தியாயம் – 19

முற்றிலும் குளிரூட்டப்பட்ட அந்தப் பிரம்மாண்டமான ஜவுளி மாளிகையின் பில்லிங் செக்ஷன்…

 

“ஐயாயிரத்து எழுனூற்றி ஐம்பது ரூபாய்… கார்ட்டா… கேஷா சார்?” – கணினியைத் தட்டிக் கொண்டிருந்த இளைஞன் கேட்டான்.

 

“கார்ட்…” என்றபடி பர்சைத் திறந்து டெபிட் அட்டையை எடுத்து நீட்டினான் கார்முகிலன். கையில் குழந்தையோடு அருகில் நின்று கொண்டிருந்தாள் மதுமதி.

 

“ஹலோ சார்…” – பெண்ணின் இனிய குரல் அவர்களுடைய கவனத்தைக் கவர, முதலில் மதுமதி தான் திரும்பிப் பார்த்தாள். அரக்கு நிற சுடிதார் அணிந்த அழகிய பெண்ணொருத்தி கார்முகிலனின் மீது பார்வையைப் பதித்தபடி நின்று கொண்டிருந்தாள்.

 

பில் போடுபவரிடம் கார்டை நீட்டிவிட்டுத் திரும்பிய கார்முகிலன், அங்கே நின்று கொண்டிருந்த கலைவாணியைப் பார்த்து “ஹேய் காமெடி குயின்… என்ன இந்தப் பக்கம்..?” என்றான் உற்சாகமாக. ஆரம்பத்தில் அவளுடைய அதிகப்படியான பேச்சில் எரிச்சலடைந்திருந்தாலும் போகப்போக ரசிக்க ஆரம்பித்ததோடு அவளை அவ்வபோது… ‘காமெடி குயின்’ என்று அழைத்தும் கேலி செய்வான்.

 

“ஆஹா… கிளம்பிட்டாங்கய்யா… கிளம்பிட்டாய்ங்க…” – அவளுடைய பிரத்யேக கலகல சிரிப்போடு கூறினாள்.

 

“ஆரம்பிச்சிட்டியா?”

 

“நா எங்…க சா…ர் ஆரம்பிச்சேன்… நீங்க தான் காமெடி குயின்னு சொல்லி ஆரம்பிச்சு விட்டீங்க…” – அவள் பாவனையோடு சொல்லி முடிக்கும்போது கார்முகிலன் சத்தமாகச் சிரிக்கத் துவங்கிவிட்டான்.

 

வாய்விட்டுச் சிரிக்கும் கணவனை, மதுமதி வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் இது போல் சிரிப்பது மிக அபூர்வம்.

 

“எக்ஸ்கியூஸ் மீ சார்… உங்க கார்டு…” – பில் போடுபவரின் குரல் அவர்கள் கவனத்தை ஈர்த்தது.

 

பில் போட்டு முடிந்துவிட்டதால்… கார்ட் மற்றும் பொருட்களைக் கையில் வாங்கிவிட்ட மதுமதி ஓரமாக நகர்ந்து வந்தாள். அவள் பின்னாடியே கார்முகிலன் வர அவனை வால் பிடித்துக்கொண்டு கலைவாணியும் வந்தாள்.

 

“சரி சொல்லு… காலேஜ் போகாம இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க? மட்டம் போட்டுட்டியா?”

 

“சார்… சும்மா என்னை மட்டும் குத்தம் சொல்லக்கூடாது… உங்களை மாதிரி பாடம் சொல்லிக் குடுக்கற வாத்தியாரே மட்டம் போடும் போது சின்னப் பிள்ளைங்க நாங்க போட மாட்டோமா?”

 

“போடுவ போடுவ… உன்ன நாலு போட்டா நீ ஏன் மட்டம் போட மாட்ட..? எக்ஸாம் டைம் கலை… இந்த நேரத்துல உன்னோட கவனம் முழுக்கப் படிப்புல மட்டும் தான் இருக்கணும்… தேவையில்லாம ரிஸ்க் எடுக்கக் கூடாது” கிண்டலாக ஆரம்பித்துப் புத்தி சொல்லி முடித்தான்.

 

“ரிஸ்க் எடுக்கறது எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடற மா…தி…ரி-” என்று ஆரம்பித்தவள் அவன் சீரியசாக முறைப்பதைக் கண்டு “-ன்னு நான் சொல்ல மாட்டேன் சார்…” என்று முடித்தாள்.

 

“அடங்கமாட்டேங்கறீயே…” – அவன் முகத்தில் மீண்டும் புன்னகை வந்தது.

 

“ப்ச்… கவலைப்படாதீங்க சார்… அதெல்லாம் படிச்சிடுவேன்…” செல்லம் கொஞ்சுவது போன்ற முகப்பாவனையுடன் சொன்னாள்.

 

மதுமதிக்கு பற்றிக் கொண்டு வந்தது. ‘யாரிவள்..? எதற்கு இப்படிக் கொஞ்சிக் கொஞ்சி பேசுகிறாள். இவள்தான் இப்படி இளித்துக்கொண்டு பேசுகிறாள் என்றால் இவனுக்காவது புத்தி வேண்டாம்..? இவர்கள் பேசிக்கொள்ளும் தோரணையைப் பார்த்தால் இவள் இவனுடைய மாணவியாகத் தான் இருக்க வேண்டும். மாணவிகளிடம் இவன் இவ்வளவு தோழமையாகப் பேசுவானா…! முன்பெல்லாம் முசுடாகவல்லவா இருப்பான்…! இப்போது எப்படி…!’ – எரிச்சலும் வியப்புமாகக் கணவனை நிமிர்ந்து பார்த்தாள்.

 

“மதி… இது என்னோட ஸ்டூடண்ட்… பேர் கலைவாணி… தர்மா சார் ப்ராஜெக்ட் வொர்க்குகாக அனுப்பியிருக்கார்னு சொன்னேன்ல…”

 

“ம்ம்ம்…” கலைவாணியைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தாள்.

 

“இது என் மனைவி மதுமதி… இவங்க எங்க வீட்டு இளவரசி… யாழினி…” தன் குடும்பத்தை அவளுக்கு அறிமுகம் செய்தான்.

 

“ஓ…” என்று கார்முகிலனிடம் தலையாட்டிவிட்டு மதுமதியிடம் இதழ் பிரிக்காமல் புன்னகைத்தவள்… குழந்தையின் கன்னத்தில் தட்டி “ஹேய் குட்டி…” என்று சொல்லிவிட்டு… அடுத்த நொடியே கார்முகிலனின் பக்கம் திரும்பி “சார்… உங்களுக்கு ஒண்ணு தெரியுமா?” என்றாள்

 

“நல்லா தெரியுமே… ரெண்டுக்கு முன்னாடி வருமே…. அதானே..?” என்று ஐதர் காலத்துப் பழைய ஜோக்கை அடித்தான்.

 

“அட… நீங்களும் எங்க சங்கத்துல சேர்ந்துட்டீங்களா சார்…”

 

“சங்கமா…! அது என்ன சங்கம்..?”

 

“வருத்தப்படாத வாலிபர் சங்கம்…” – மீண்டும் கெக்கெபிக்கே சிரிப்பு.

 

“கடவுளே…! கடவுளே…! ” – நெற்றியில் தட்டிக் கொண்டான்.

 

“பரவால்ல விடுங்க சார்… இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணிக்கிட்டு… இப்போ என்ன… உங்களுக்கு அந்த ஒண்ணு மேட்டர் தெரியணும் அதுதானே..?”- பக்தி இல்லாதவனைக் கூடக் கடவுளை துணைக்கு அழைக்க வைத்துவிட்ட திருப்தியோடு சீரியசாகப் பேச முயன்றாள்.

 

“எனக்கு எதுவும் தெரிய வேண்டாம் நீ ஆளை விடு…”

 

“அது எப்படி சார் பாதிலயே விட முடியும்..?”

 

“சரி சொல்லு…”

 

“நம்ம ரேவதிக்குக் கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிருக்கு சார்…”

 

“ஓ… அப்படியா?”

 

“ஆமாம் சார்…. இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நிச்சயதார்த்தம்… அதனால இந்த வாரம் அவ கிளாஸுக்கு வரமாட்டா. நான் மட்டும் தான்… பேசாம லீவ் விட்டுடுங்க சார்…”

 

“லீவா… கல்யாணம் ரேவதிக்குத் தானே… நீ ஒழுங்கா கிளாஸுக்கு வந்து சேரு… நெக்ஸ்ட் வீக் ரெவ்யூ இருக்கு…”

 

“ஹ்ம்ம்… அவள சாக்கா வச்சு நானும் மட்டம் போடலாம்னு நெனச்சா விட மாட்டீங்களே… வந்துடறேன்… வந்துடறேன்… தர்மா சார்கிட்டப் போட்டுக் கொடுத்துடாதீங்க… அப்புறம் அவர் வேற அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிடுவார்”

 

“போட்டுக் கொடுக்கறது என்ன… ஒருநாள் நீ பேசுறத அப்படியே போன்ல ரெகார்ட் பண்ணி அவர்கிட்டப் போட்டுக் காமிக்கிறேனா இல்லையா பாரு…”

 

“தெய்வமே…! அப்படி மட்டும் செஞ்சுடாதீங்க தெய்வமே…! உங்களுக்குப் புண்ணியமாப் போகும்…” என்று அவள் ஏற்ற இறக்கங்களுடன் கூறியதைப் பார்த்துக் கார்முகிலன் வாய்விட்டுச் சிரித்தான்.

 

எல்லா ஆசியர்களுக்குமே மறக்க முடியாத மாணவர்கள் என்று யாரேனும் இருப்பார்கள். அது போல் கார்முகிலனுக்கு மறக்க முடியாத மாணவர்கள் வரிசையில் கலைவாணிக்கும் இடம் இருந்தது. கார்முகிலனின் அறிவும்… மாணவர்களைச் சிந்திக்கத் தூண்டும் விதமாகப் பாடத்தை விவரிக்கும் அவனுடைய திறமையும் கலைவாணிக்கு மிகவும் பிடிக்கும். அதோடு அவள் கேள்விபட்ட வரை அவன் ஒரு கண்டிப்பான ஆசான்…. ஆனால் இவளைப் பொருத்தவரை இயல்பாகப் பழகும் நல்ல மனிதன். ஆகையால் அவளுக்கும் இவன் மறக்க முடியாத ஆசிரியர்.. நல்ல மாணவி… சிறந்த ஆசிரியர்… என்கிற புனிதமான பாசம் அவர்களுக்குள் முளைவிட்டிருந்தது.

 

மதுமதிக்குச் சகிக்க முடியவில்லை. அவள் அவர்களைத் தவறாக நினைக்கவில்லை. சிறு குழந்தை போலிருக்கும் கலைவாணியைப் பார்த்தால் தவறாக நினைக்கவும் முடியாது. அதோடு கார்முகிலனை அன்றிலிருந்து இன்றுவரை அவள் தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததே இல்லை… பார்க்கவும் மாட்டாள்… ஆனால்… அவள் சூடுபட்ட பூனை…

 

தன்னைவிட வேறு யாரும்… எதுவும் அவனுக்கு முக்கியமாக இருந்துவிடக் கூடாது என்கிற பயம் கணவனுக்குப் பிடித்த எல்லாவற்றோடும் தன்னை ஒப்பிட்டுப் பார்க்கும் குணம்… அவளைத் தூண்டுதல் செய்தது. கலைவாணியையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து சரியான தருணத்திற்காகக் காத்திருந்தாள்.

 

அந்த வார சனிக்கிழமை காலை ஒன்பது மணி… கார்முகிலன் லேபிற்குக் கிளம்பிக் கொண்டிருந்தான்.

 

“எங்க கிளம்பிட்டீங்க?” வழக்கம் போல் ஆரம்பித்தாள்.

 

அவன் புருவம் சுருக்கி அவளைத் திரும்பிப் பார்த்து “லேபிற்குத் தான்…” என்றான்.

 

“இன்னிக்குப் போக வேண்டாம் லீவ் போடுங்க…”

 

“லீவா…! ஏன்?”

 

“இன்னிக்கு கல்பனாவோட ரிசப்ஷன்…”

 

“அதுக்கு..?”

 

“நாம போகணும்…”

 

“அதான் நாளைக்குக் கல்யாணத்துக்குப் போறோமே…”

 

“இன்னிக்கும் போகணும்…”

 

“வொர்க் இருக்கு மதி…”

 

“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கோங்க…”

 

“ப்ச்… புரியாம பேசாத… நெக்ஸ்ட் வீக் ஸ்டூடண்ட்ஸுக்கு ரெவ்யு இருக்கு… நான் இன்னிக்குப் போயே ஆகணும்…”

 

“அந்தப் பொண்ணு தான் இன்னிக்கு வரமாட்டாளே… அப்புறம் என்ன..?” – அலட்சியமான குரலில் கேட்டாள்.

 

“எந்தப் பொண்ணு..?”

 

“உங்க ஸ்டூடண்ட் ரேவதி… அவளுக்குத்தானே நாளைக்கு நிச்சயதார்த்தம்..? அவங்க அப்பா கூடப் பத்திரிகை கொடுக்க வந்தாரே…”

 

“ஆமாம்… ஆனா ப்ராஜெக்ட்ல ரேவதி மட்டும் இல்ல மதி… கலைவாணியும் இருக்கா…”

 

“ஓஹோ… அப்போ அந்த கலைவாணி இருந்தா..? என்னோட பேச்சுக்கு மதிப்பு இருக்காது… அப்படித்தானே?” – இடுங்கிய கண்களுடன் அவனைப் பார்த்துக் கேட்டாள்.

 

‘என்ன மாதிரி பார்வை இது…!’ – அவளுடைய பார்வை அவன் மனத்தைக் காயப்படுத்த சட்டென்று கோபம் வந்தது. ஆனாலும், “நான் எப்போ அப்படிச் சொன்னேன்?” என்று தன்னை வெகுவாகக் கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டான்.

 

“இதோ… இப்ப தானே சொன்னீங்க? கலைவாணி ப்ராஜெக்ட்ல இருக்கா… நான் கண்டிப்பா போகணும்னு சொன்னீங்களா இல்லையா..?”

 

அவன் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறான்… இவள் என்ன பேசுகிறாள்…! சுவற்றில் முட்டிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது அவனுக்கு… “உன்கிட்டயெல்லாம் மனுஷன் பேச முடியாதுடி…” – பல்லைக் கடித்துக் கொண்டு கூறியவன் வெளியேற எத்தனித்தான்.

 

“நில்லுங்க…” – குரல் கிறீச்சிட்டது.

 

ஒரு நொடி அதிர்ந்து திரும்பிப் பார்த்தான். ‘மென்மையான மதியின் குரலா இது!’. கோபத்தில் சிவந்திருந்த முகத்துடன் கணவனை உறுத்து விழித்து…

 

“போகக்கூடாதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்… என்னைக் கண்டுக்காம நீங்க பாட்டுக்குப் போனா என்ன அர்த்தம்..?” – கொதிப்போடு கேட்டாள்.

 

அவளுடைய கோபமுகமும்… ஆக்ரோஷமான பேச்சும் அவனை யோசிக்க வைத்தது. ‘வேணும்னே வம்பிழுக்கற மாதிரிப் பேசுகிறாளே…!’ – பிரச்னையை வளர்க்கப் பிடிக்காமல், “சரி… ஃபங்க்ஷன் ஈவ்னிங் தானே… சீக்கிரம் கிளாஸ் முடிச்சிட்டு வந்து கூட்டிட்டுப் போறேன்…” என்றான்.

 

“எப்படி..? அன்னிக்கு தர்மா தாத்தா வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனீங்களே அப்படியா..?” – நக்கலாகக் கேட்டாள்.

 

அன்று கிளம்பியிருக்கச் சொல்லிவிட்டு வராமல் இருந்தது அவன் தவறு தானே… குற்ற உணர்ச்சியில் ஒரு நொடி அமைதியாக இருந்தவன் “இன்னிக்கு அது மாதிரி ஆகாது மதி… சீக்கிரம் வந்திடறேன்… ரெடியா இரு…” என்று இறங்கிப் பேசினான்.

 

தலையைக் குறுக்காக ஆட்டி மறுத்தவள் “லீவ் போட முடி…யுமா… முடி…யாதா..?” – என்றாள் அழுத்தம்திருத்தமாக.

 

அவளுடைய பிடிவாதம் அவனை எரிச்சல்படுத்தியது. சமீபகாலமாக எதற்கெடுத்தாலும் இப்படித்தான் பிடிவாதம் பிடிக்கிறாள். இவனும் ஒவ்வொரு முறையும் விட்டுக் கொடுத்துத் தான் போகிறான். ஆனால் இன்று… “உஃப்ப்ப்ப்” என்று மூச்சை ஆழமாக இழுத்து ஊதிவிட்டு “என்னாச்சு உனக்கு?” என்றான்.

 

“லீவ் போட முடியுமா..? முடியாதா?” – ஒரே பிடியில் நின்றாள்.

 

அவள் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்ததில் எரிச்சலானவன், “காரணமில்லாம… சும்மா வெட்டித்தனமால்லாம் லீவ் போட முடியாது…” – கோபமாகக் கூறினான்.

 

“அப்போ… பிடிவாதமா லேப்புக்குப் போறதுக்கு மட்டும் காரணம் இருக்கு… இல்ல..?” – அவளுடைய குதர்க்கமான பேச்சில் அவனுக்கு பற்றிக்கொண்டு வந்தது.

 

“என்னடி சொல்ற?” – பல்லைக் கடித்துக்கொண்டு கேட்டான்.

 

“அந்த கலைவாணி…! என்னவிட அவதான் உங்களுக்கு முக்கியமா போயிட்டா இல்ல..? அதனால தானே நான் சொல்லச் சொல்லக் கேட்காம இப்படி ஓடத் துடிக்கிறீங்க?”

 

“ஏய்… ச்சீ… சும்மா கண்டபடி உளறாத… நகருடி அந்தப் பக்கம்… எனக்கு டைமாச்சு…” – எரிந்து விழுந்தபடி அவளைக் கடந்து வாசலை நோக்கி நடந்தான்.

 

“ஓ… அடுத்த நீலவேணியா?” – குரூரமாகக் கேட்டாள்.

 

பக்கென்றது கார்முகிலனுக்கு… ‘அடுத்த நீலவேணியா…!’ – ஓர் எட்டு எடுத்து வைத்தவன் அப்படியே நின்றான். ‘என்ன சொல்றா இவ…!’ – குழப்பத்துடன் மனைவியைத் திரும்பிப் பார்த்தான்.

 

“ஏற்கனவே ஒருத்தி என் வாழ்க்கையை அழிச்சிட்டுப் போய்டா… இப்போ இன்னொருத்தியா..?” – ஆத்திரத்துடன் கேட்டாள்.

 

கோபத்தாலோ… அவமானத்தாலோ… அவன் முகம் கன்றிச் சிவந்துவிட்டது. அவள் முகத்திலிருந்து பார்வையை விலக்காமல் கூர்மையாகப் பார்த்தான்.

 

“என்ன அப்படி முறைக்கறீங்க? எப்பவுமே உங்களுக்கு என்னைவிட உங்க ஃபிரண்ட்ஸ்… ஸ்டூடண்ட்ஸ்… இவங்கல்லாம் தானே பெருசு… நான் யாரு… மெஷின்… தேவைக்குப் பயன்படுத்திக்கிட்டு ரிப்பேர் ஆனா குப்பையில தூக்கிப் போட வேண்டிய பொருள்… எனக்குன்னு மனசு இருக்கா…! இல்ல ஃபீலிங்க்ஸ் இருக்கா…! எதுவும் இல்ல… நீங்க எதுக்கு நிக்கறீங்க..? கிளம்புங்க… உங்களுக்காக அவ வேற காத்துக்கிட்டு இருப்பா…” – என்ன பேசுகிறோம் என்று நிதானமே இல்லாமல் கோபத்தில் பொரிந்து கொட்டிக் கொண்டிருந்தாள்.

 

மதுமதிக்கு இப்படியெல்லாம் கூடப் பேசத் தெரியும் என்பதை நம்ப முடியாமல் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் கார்முகிலன். அவனால் எதுவுமே சொல்ல முடியவில்லை… கலைவாணியைத் தேவையில்லாமல அவர்களுடைய பிரச்சனையில் இழுப்பதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதே சமயம் தன்னிரக்கத்தில் தவித்தபடி பேசிக் கொண்டிருக்கும் மனைவியைக் கடிந்து கொள்ளவும் முடியவில்லை. தலையைப் பிடித்துக் கொண்டு சோபாவில் சரிந்து அமர்ந்தான்.

 

“காதலாம்… கன்றாவியாம்… எல்லாம் சுத்த பொய்…” கோபம் குறையாத குரலில் அலட்சியமாகக் கூறினாள்.

 

தலையைக் கைகளில் தாங்கியபடி குனிந்து அமர்ந்திருந்தவன், அவளுடைய பேச்சில் சட்டென்று நிமிர்ந்து பார்த்தான். மனதில் வலி அவன் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது.

 

“நல்லவர் மாதிரியே நடிச்சு என்னை நட்டாத்துல விட்டவராச்சே…! மறக்குமா… உங்களோடயும் வந்து நான் குப்பை கொட்றேனே… எல்லாம் என் விதி…” – உடைந்துவிட்ட குரலில் கூறினாள்.

 

அவன் மூச்சை ஆழமாக இழுத்துவிட்டுத் தன்னை நிதானப்படுத்திக் கொள்ள முயன்றான்… முடியவில்லை! கோபமும் ஆத்திரமும் அதிகமானது. இதற்கு மேல் இங்கிருந்தால் கட்டுப்பாட்டை இழந்துவிடுவோம் என்று நினைத்துத் தலையைக் குலுக்கியபடி எழுந்து மாடிப்படியில் ஏறி படுக்கையறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டவன்… கைப்பேசியை எடுத்து கலைவாணிக்கு அழைத்துச் சோதனைக்கூடத்திற்கு வர வேண்டாம் என்று கூறிவிட்டுக் கட்டிலில் விழுந்தான்.
Comments are closed here.

error: Content is protected !!