Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

உனக்குள் நான்-25

அத்தியாயம் – 25

மடியில் உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையைத் தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு சோபாவில் வந்து அமர்ந்த மதுமதிக்குப் பொழுது போகவில்லை. டிவி பார்க்கலாம் என்றால் சத்தத்தில் குழந்தை விழித்துவிடக் கூடும். டீப்பாயில் கிடந்த பழைய வார இதழை எடுத்துப் புரட்டினாள். அதிலும் மனம் லயிக்காததால் எடுத்த இடத்திலேயே மீண்டும் வைத்தவளுக்கு குணாவின் ஞாபகம் வந்தது.

 

‘குணாண்ணன் வந்துட்டுப் போயி கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆயிடுச்சு. அவங்கதான் அடிக்கடி போன் பண்ணிக்கிட்டு இருக்காங்க. இன்னிக்கு நாம கூப்பிட்டுப் பேசலாம்…” – கைப்பேசியை எடுத்து குணாவின் எண்ணை அழுத்திவிட்டுக் காத்திருந்தாள்.

 

“ஹலோ…” – அவன் குரல் சுரத்தில்லாமல் ஒலித்தது.

 

“நான் மது பேசுறேன்ணா…”

 

“சொல்லும்மா”

 

“எப்படி இருக்கீங்க?”

 

“ம்ம்ம்… இருக்கேன்…”

 

“என்னாச்சுண்ணா..? ஏன் டல்லா பேசுறீங்க?”

 

“ப்ச்… அதெல்லாம் ஒண்ணும் இல்லம்மா… சும்…மாதான்… கடுப்பாகுது… என்ன வாழ்க்க… மனுஷ வாழ்க்க…” – எரிச்சலாக ஆரம்பித்தவன் முடிக்கும் பொழுது அலுத்துக் கொண்டான்.

 

“எந்தக் கப்பல் கவிழ்ந்துடுச்சின்னு இப்படிச் சோகக் கடல்ல குதிச்சுட்டீங்க?” – கிண்டலாகவே கேட்டாள்.

 

“அதான் வாழ்க்கை கப்பலே கவிழ்ந்துடுச்சே…! இனியும் வேற எந்தக் கப்பல் கவிழணும்?” – விளையாட்டுப் போலவே பதில் கூறினாலும்… அவன் குரலில் வெளிப்பட்ட மிதமிஞ்சிய சோகம் அவள் மனதைத் தொட்டது.

 

“என்னண்ணா திடீர்னு..?” – குழப்பத்துடன் கேட்டாள்.

 

“நாலு வருஷத்துக்கு முன்னாடி இதே நாள்ல தான் என் காதலை அவகிட்டச் சொன்னேன். அப்போ அவ முகத்துல ஒரு சந்தோஷம் வந்துச்சு பாரு… ப்ச்… இப்ப கூட மறக்க முடியல…”

 

“அண்ணா!”

 

“ஒவ்வொரு வருஷமும் இந்த நாளை ஞாபகம் வச்சுக்க மறந்துட்டு, அவகிட்டப் பயங்கரமா திட்டு வாங்குவேன் மது. ஆனா ரோகினி அப்படியில்ல… என் சம்மந்தப்பட்ட சின்னச் சின்ன விஷயத்தைக் கூட ரொம்ப ஸ்பெஷலா நினைப்பா. மறக்கவே மாட்டா… ஹா… அப்போல்லாம் நான் நினைக்கவே இல்ல… இப்படி என்னையே மறந்திடுவான்னு…” – அவன் குரல் உடைந்தது.

 

“அண்ணா ப்ளீஸ்…”

 

“க்கும்…” – கரகரக்கும் தொண்டையைச் செருமி சரி செய்து கொண்டு பேசினான்.

 

“போன வருஷம் வரைக்கும்… வரமா தெரிஞ்ச இந்த நாள்… இன்னிக்கு எனக்குப் பெரிய சாபமா தெரியிதும்மா… ஒரு நிமிஷம் கூட அவளை மறக்க முடியல… ஒரு மாதிரி… வலிக்குது…”

 

“அண்ணா… ரோகினிக்குக் கல்யாணமாயிடுச்சு… இனியும் நீங்க…”

 

“அவளை நினைக்கக் கூடாதா? மறந்துடணுமா?” – குரலை உயர்த்திக் கேட்டவனுடைய கோபம் அவளுக்குப் புரிந்தது.

 

“வேற என்னண்ணா பண்ண முடியும்? மறந்து தானே ஆகணும்…”

 

“மறந்துடு…. மறந்துடுன்னா எப்படிம்மா மறக்கறது? ரப்பர் வச்சா அழிக்க முடியும்? நானும் மறக்கணும்னு தான் நெனக்கிறேன்… முடிஞ்சாத்தானே!”

 

“இந்தக் காதல்… கீதல்லெல்லாம் பயங்கரமான மாயவலைண்ணா… சிக்கிட்டோம்னா வெளியே வரவே முடியாது. இந்தக் கன்றாவியெல்லாம் உங்களுக்கு எதுக்குண்ணா. பேசாம அவளை மறந்துட்டு உங்க வாழ்க்கையைப் பாருங்க”

 

“என் வாழ்க்கைய பார்க்கறதா! ஓஓஓ…!!! வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்கணுமோ…!”

 

“ச்ச… ச்ச… அந்த மாதிரி முட்டாள்தனமான யோசனையெல்லாம் நான் சொல்ல மாட்டேன்” – அவனுடைய குதர்க்கமான (நக்கலான) கேள்விக்குப் பட்டென்று பதில் சொன்னாள்.

 

அவளுடைய துடுக்குத்தனமான பேச்சில் அவனுடைய மனநிலை சற்று மாறியது. “வேற என்ன யோசனை சொல்ல போற?” என்றான் கேலிக் குரலில்.

 

“காதல் ஒரு மாயவலைன்னு சொன்னா… கல்யாணம் ஒரு புதைகுழி… இதெல்லாம் எதுவுமே வேண்டாம். நீங்க உங்க கெரியர்ல கவனத்தைச் செலுத்துங்க. வாழ்க்கையை ஜெயிச்சுக் காட்டுங்க” அவனுடைய கேலியைப் புரிந்துக்கொள்ளாமல் சீரியசாக அட்வைஸ் கொடுத்தாள்.

 

“ஹும்… நல்ல அட்வைஸ்… ஆனா அதை நடைமுறை படுத்த முடியுமா? ம்ம்ம்..? முடியும்னா நீ தான் அதை முதல்ல செயல்படுத்தணும்”

 

“நானா! என்னண்ணா சொல்றீங்க?”

 

“உண்மையைத் தான் சொல்றேன் மது. என்னோட பிரச்சனை பெரிய விஷயமே இல்ல… இன்னிக்கு மூட் அவுட்ல இருக்கேன். நாளைக்கே சரியாயிடுவேன். என்னோட மனசு மாறுறதுக்கு என்னைச் சுத்தி ஆயிரம் விஷயங்கள் இருக்கு. ஆனா நீ..? அவ்வளவு தூரம் அடிபட்டும் இன்னமும் உன் கணவரை சார்ந்து தானே வாழணும்னு நினைக்கிற? உன்னோட சொந்தக்கால்ல நிக்க முயற்சியே பண்ண மாட்டேங்கறியே…” கிடைத்த வாய்ப்பை விடாமல் பிடித்துக் கொண்டு வழக்கம் போல் அவளுக்கு அறிவுரை கூறினான்.

 

சாட்டையால் அடிவாங்கியது போலிருந்தது மதுமதிக்கு. தன்னுடைய வாழ்க்கையைப் பற்றித் தான் கூறிய வார்த்தைகளை வைத்துத் தன்னையே திருப்பி அடித்துவிட்டானோ என்கிற எண்ணம் அவள் மனதைச் சுட்டது.

 

“நான் என்னோட சொந்த கால்ல நிக்க முயற்சி செய்ய மாட்டேங்கிறேன்னு உங்களுக்கு யார் சொன்னது? நானும் ஆன்லைன்ல வேலை தேடிக்கிட்டுத் தான் இருக்கேன்” – ரோஷத்துடன் கூறினாள்.

 

“என்னத்த தேடுற? உன்னோட ரெஸ்யூமை எனக்கு அனுப்புன்னு எத்தனை தடவ சொன்னேன். அனுப்பினியா?”

 

“உங்களுக்கு ரெஸ்யூம் அனுப்பிட்டா மட்டும் உடனே வேலை கிடைச்சிடுமா…! உங்களுக்கு என்ன வேணும் இப்ப..? ரெஸ்யூம் அனுப்பணும் அவ்வளவு தானே? ஒரு நிமிஷம் இருங்க… இப்பவே அனுப்பறேன்” – எரிச்சலுடன் கூறியவள் உடனடியாக மடிக்கணினியை இயக்கி தன்னைப் பற்றிய விவரங்கள் அடங்கிய கோப்பை அவனுக்கு அனுப்பி வைத்தாள்.

 

அவளுடைய கோபம் அவனுக்குச் சிறுபிள்ளைத் தனமாகத் தோன்ற, “ப்ப்பா… பேய் மாதிரி (இவ்வளவு) கோபம் வருது…” – என்றான் சிரித்துக் கொண்டே.

 

“பேயா…! என்னோட தளபதி தூங்கிகிட்டு இருக்கிற தைரியத்துல என்னைப் பேய்னு சொல்றீங்களா? தைரியம் இருந்தா யாழிகுட்டிக்கு நேரா என்னைத் திட்டிப் பாருங்க. அப்புறம் தெரியும்” – அவள் மிரட்டலாகக் கூற அவன் சத்தமாகச் சிரித்தான். வாசலில் அழைப்புமணி சத்தம் கேட்டது.

 

“அண்ணா… ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க யாரோ வந்திருக்காங்க…”

 

“ஓகே மது… நீ பாரு… நான் அப்புறம் பேசுறேன்”

 

“சரிண்ணா” – கைப்பேசி இணைப்பைத் துண்டித்த மதுமதி கதவைத் திறந்தாள். கேட்டுக்கு வெளியே வீரராகவனும் கௌசல்யாவும் நின்று கொண்டிருந்தார்கள்.

 

பட்டுப்புடவையும்… சிறு மலர்ச் சரமும்… சந்தனப் பொட்டும்… கூடுதல் அணிகலங்களுமாகத் திருமண வீட்டிலிருந்து வந்திருப்பதற்கான அத்தனை அடையாளங்களோடும் நின்ற தாயைப் பார்த்ததும் மதுமதியின் மனதில் புது உற்சாகம் பிறந்தது.

 

“அம்மா…” என்றபடி கேட் சாவியை எடுத்துக்கொண்டு ஓடியவள், பூட்டைத் திறக்கும் பொழுதே “வாங்கப்பா… எப்படி இருக்கீங்க..?” என்றாள்.

 

“நல்லா இருக்கோம்மா…” – வீரராகவன் பதில் சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தார்.

 

“குட்டிமா என்ன பண்றா..? சத்தத்தையே காணும்?” – பேத்தியை விசாரித்தபடியே கணவனைத் தொடர்ந்து கௌசல்யாவும் உள்ளே நுழைந்தாள்.

 

“தூங்கறாம்மா… உக்காருங்கப்பா… என்ன சாப்பிடறீங்க? டீ போடவா… இல்ல ஜூஸ் சாப்பிடறீங்களா?”

 

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம்… நீ உட்காரு…” – குழந்தை உறங்கிக் கொண்டிருக்கும் தொட்டிலை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த கௌசல்யா கூறினாள்.

 

“அவளுக்கு வேண்டாம்னா பரவால்ல… எனக்கு ஒரு கிளாஸ் சால்ட் போட்ட லெமன் ஜூஸ் கொண்டுவாம்மா…” – மகளிடம் உரிமையாகக் கேட்டார் வீரராகவன்.

 

“அடடா… வந்த உடனே புள்ளைக்கு வேலை குடுக்கணுமா? நீ உக்காரு மது… நான் போய் எடுத்துட்டு வர்றேன்” – கௌசல்யா சமையலறைக்குள் நுழைய தாயைத் தொடர்ந்து மதுமதியும் உள்ளே சென்றாள்.

 

“என்னம்மா… கல்யாணத்துக்குப் போயிட்டு வந்திருக்கீங்க போலருக்கு… யார் கல்யாணம்?”

 

“உங்க அப்பாவோட ஃப்ரண்டு தேவராஜ் இருக்காருல்ல… அவரோட மகளுக்குத் தான் கல்யாணம்… தேனில… நல்ல கூட்டம்… கிராண்டா பண்ணியிருந்தாங்க…”

 

“ஓ… மாப்பிள்ளை என்ன செய்றாரு? பொண்ணு நல்லா இருந்ததா..?”

 

“பொண்ணு நல்லா இருந்தாளோ இல்லையோ… சாப்பாடு பிரமாதமா இருந்தது. மட்டன் பிரியாணி செஞ்சிருந்தாங்க. அளவா சாப்பிடணும்னு நமக்கெல்லாம் அட்வைஸ் பண்ற உங்க அப்பா, இன்னிக்குப் பிரியாணி டேஸ்ட்ல தன்னையே மறந்து ஒரு பிடி பிடிச்சுட்டார். அதான் லெமன் ஜூஸ் கேக்கறார்…” சிரித்துக் கொண்டே கௌசல்யா கூற மதுமதியும் “அப்படியா?” என்று கேட்டு வாய்விட்டுச் சிரித்தாள்.

 

“பலாபழம் சாப்பிட்றீங்களாம்மா” – குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பலாப்பழ சுளைகள் இருந்த டப்பாவை எடுத்தாள்.

 

“எனக்கு வேண்டாம். உங்க அப்பாவுக்கு வேணுன்னா கொண்டு போய்க் குடு”

 

மதுமதி ஐந்தாறு பலாச்சுளைகளை ஒரு தட்டில் வைத்துத் தந்தைக்குக் கொண்டு சென்று கொடுத்தாள்.

 

“என்ன ஜூஸ் கேட்டா பலாப்பழம் வருது”

 

“இதை முதல்ல சாப்பிடுங்கப்பா… அம்மா ஜூஸ் எடுத்துட்டு வருவாங்க”

 

“யாழி குட்டி எத்தனை மணிக்கு எந்திரிப்பா… அவளைப் பார்க்கணும்னு தானே கல்யாணம் முடிஞ்சதும் முடியாததுமா ஓடி வந்தோம்… உங்க அம்மா வேற ரெண்டு நாளா பேத்திய பார்க்கணும்னு புலம்பிகிட்டே இருந்தா…” பழத்தைச் சுவைத்தபடி மகளிடம் பேசிக் கொண்டிருந்தவரின் முகம் திடீரென்று மாறியது.

 

மதுமதி தந்தையைக் கூர்ந்து கவனித்தாள். அவர் கையிலிருந்த பழத்தை மீண்டும் தட்டில் போட்டுவிட்டு சோபாவில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்தார். முகமெல்லாம் முத்துமுத்தாக வியர்வைத் துளிர்த்திருந்தது.

 

“என்னப்பா… எதுக்கு இப்படி வேர்க்குது… ஃபேனை ஸ்பீடா வைக்கவா?” – தந்தையின் பதிலை எதிர்பார்க்காமல் வேகமாக ஓடிச்சென்று காற்றாடியின் வேகத்தை அதிகப்படுத்திவிட்டு… மீண்டும் தந்தையிடம் ஓடிவந்து அவருடைய வியர்வையைத் துடைத்து விட முயன்றாள். அவர் மகளை விலக்கிவிட்டார். மதுமதியைப் பதற்றம் தொற்றிக் கொண்டது.

 

“அப்பா… என்னப்பா பண்ணுது..?”

 

முகம் வெளிறிப் போய்… கண்களில் பீதியுடன் அமர்ந்திருந்த வீரராகவன் வலதுகையை உயர்த்தி மெல்ல தன் இடதுபக்க மார்பை அழுத்திப் பிடித்தார்.

 

நிலைமையின் தீவிரம் மதுமதியை உலுக்கியது. “அப்பா… அ… அப்பா… என்.. என்ன… என்னப்பா..?” – கோர்வையாகப் பேச முடியாமல் தடுமாறியபடி அருகில் கிடந்த புத்தகத்தை எடுத்து அவருக்கு விசிறிக் கொண்டே, “அம்மா… ம்மா… இங்க சீக்கிரம் ஓடி வாங்கம்மா…” – தாயைச் சத்தமிட்டு அழைத்தாள்.

 

கடைகோடியிலிருந்த சமையலறையிலிருந்து மகளின் குரல் கேட்டு ஓடிவந்த கௌசல்யா, கணவன் அமர்ந்திருந்த நிலையைக் கண்டுவிட்டு “ஐயையோ… ஏங்க… என்னங்க… என்னாச்சு?” என்று பதறியடித்துக் கொண்டு அவரை நெருங்கினாள்.

 

“ஒண்ணும் இ… இல்ல… கௌசி… பயப்படாத…” – ஓரளவு தன்னைத் திடப்படுத்திக் கொண்டு மனைவிக்குத் தைரியம் சொன்னார்.

 

“ஒண்ணுமில்லையா! மது… என்னடி… என்னாச்சு அப்பாவுக்கு..? நல்லாத்தானே பேசிக்கிட்டு இருந்தாரு..?” அவள் படபடத்துக் கொண்டிருக்கும் பொழுதே அவரிடமிருந்து, “ம்ம்ம்…மா… ” என்கிற முனகல் வெளிப்பட்டது.

 

“ஐயோ… என்னங்க… வலிக்குதா… வாங்க… ஹாஸ்பிட்டல்… மது… அப்பா…” – கௌசல்யா உளற, மதுமதி முடிந்த அளவு பதட்டத்தை மறைத்துக் கொண்டு “அப்பா… ஒண்ணும் இல்லப்பா… ஒண்ணுமில்ல… வாங்க ஹாஸ்பிட்டல் போயிடலாம்…” என்று தந்தையைப் பிடித்துத் தூக்கினாள்.

 

“நீ… கா… காரை எடும்மா…” – தடுமாற்றத்துடன் பேசினார்.

 

“ம்மா… டென்ஷன் ஆகாதீங்கம்மா… அப்பாவைக் கூட்டிட்டு வாங்க… நான் போய்… காரை வெளியே எடுத்து வைக்கிறேன்…” – பேசிக் கொண்டே வெளியே ஓடிச் சென்று… சற்று முன் தந்தை போர்டிகோவில் நிறுத்திய காரை வெளியே எடுத்து வாசலில் நிறுத்தியபோது…. பக்கத்து வீட்டு பெரியப்பா அந்த வழியாக சைக்கிளில் செல்வதைக் கண்டாள்.

 

“பெரிப்பா… அப்பா… அப்பாவுக்கு உடம்பு சரியில்ல பெரிப்பா… கொஞ்சம் வாங்களேன்… சீக்கிரம்…” அவரிடம் கூறியபடியே காரிலிருந்து கீழே இறங்கி மீண்டும் வீட்டிற்குள் ஓடினாள்.

 

“என்னம்மா… என்ன பண்ணுது..?” என்று கேட்டுக்கொண்டே அவரும் சைக்கிளை வாசலிலேயே போட்டுவிட்டு வேகமாக உள்ளே ஓடி வந்தார்.

 

உடல் வெடவெடவென்று நடுங்க… கண்ணீரும் கம்பலையுமாகக் கணவனைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து, வியர்வையைத் துடைத்து விடுவதும்… விசிறி விடுவதுமாக இருந்த கௌசல்யா, பதட்டத்தில் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் “என்னங்க… என்ன பாருங்க… ஒண்ணும் இல்லங்க… உங்களுக்கு ஒண்ணுமில்ல” என்று புலம்பிக் கொண்டிருந்தாள். அந்தப் பெரியவரின் உதவியுடன் மதுமதி தான் தந்தையை காருக்குக் கொண்டு வந்தாள்.

 

வீரராகவனுக்கு இருபுறமும் பெரியவரும் கௌசல்யாவும் அமர்ந்து கொள்ள, தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்து தாயின் கையில் கொடுத்துவிட்டு காரை எடுத்தாள் மதுமதி. கல்லூரிக் காலத்தில் விளையாட்டாகக் கற்றுக் கொண்ட டிரைவிங் இப்படி ஓர் இக்கட்டான சூழ்நிலையில் உதவக்கூடும் என்று அவள் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை…
Comments are closed here.