Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மனதோடு ஒரு ராகம்-12

அத்தியாயம் – 12

 

சித்தார்த்தின் கோபம் பூர்ணிமாவிற்குப் புதிது இல்லை என்றாலும் இரண்டு மாத பிரிவிற்குப் பிறகு சந்தித்திருக்கும் இந்த நேரத்தில் அவள் விளையாட்டாகச் சொன்ன ஏதோ ஒரு வார்த்தையைப் பிடித்துக் கொண்டு அவன் இவ்வளவு தூரம் கோவப்படுவது சற்றும் நியாயமில்லை என்று அவளுக்குத் தோன்றியது. ஆனாலும் அவள் பொறுமையைக் கைவிடவில்லை.

 

“ஹேய் சித்து! என்னாச்சு உனக்கு?” – என்று இயல்பாகக் கேட்டாள்.

 

“எனக்கு ஒண்ணும் ஆகல. ஊருக்குப் போயிட்டு வந்ததும் உனக்குத்தான் ஏதோ ஆயிடிச்சு. உன்னோடப் பேச்சு நடவடிக்கை எதுவும் சரியில்ல. உங்கப்பன் காத்து உனக்கும் அடிச்சிடிச்சு போல…”

 

“அப்பாவைப் பற்றிப் பேசாத சித்து”

 

“ஏன் பேசக் கூடாது. அப்படித்தான் பேசுவேன். அந்த ஆள்கிட்ட இன்னும் மூணு வருஷத்துக்கு நம்ம கல்யாணத்தைப் பற்றிப் பேச முடியாதுன்னு நீயே சொல்ற. அப்படின்னா என்ன அர்த்தம். அவரோடத் தகுதிக்கு நான் சமமில்லைன்னு நீ நினைக்கிற. அப்படித்தானே?”

 

“அப்படி நினைச்சிருந்தா உன்னை எதுக்காக சித்து நான் லவ் பண்ணனும்?”

 

“அது எப்படி எனக்குத் தெரியும்? சென்னைல இருக்கற வரைக்கும் என் கூடப் பழகி என்ஜாய் பண்ணிட்டு கல்யாணம்னு வரும் போது என்னைக் கழட்டிவிட்டுட்டு உங்கப்பன் பார்க்கற மாப்பிள்ளைக்குக் கழுத்தை நீட்டுவியோ என்னவோ! உங்க பணக்காரப் புத்தியைப் பற்றி எனக்கு என்ன தெரியும்?” – கோபத்தில் வார்த்தையைக் கொட்டிவிட்டான்.

 

பூர்ணிமாவின் சின்ன இதயம் சுக்கலாக உடைந்தது. அவளால் பேச முடியவில்லை. எவ்வளவு ஆசையாக அவனைப் பார்க்க ஓடி வந்தாள்! அவனுக்காக அவளுக்குப் பிடித்த எத்தனை விஷயங்களை விட்டுக்கொடுத்திருக்கிறாள்! அவன் மீது எவ்வளவு உயிராக இருக்கிறாள்! இது எதுவுமே அவனுக்குப் புரியவில்லையா! – துடிக்கும் இதழ்களும் கலங்கிவிட்டக் கண்களுமாக அவனை உருத்து விழித்தாள். அவளுடைய பார்வையில் இருந்த குற்றச்சாட்டில் அவன் அமைதியானான்.

 

வந்த போது இருந்த உற்சாகத்தில் வீட்டிற்குள் எங்கோ ஒரு மூலையில் தூக்கி வீசிவிட்டிருந்த தன் கைப்பையையும் செல் போனையும் தேடி எடுத்துக் கொண்டு விருட்டென்று வெளியேறினாள். சித்தார்த் திகைத்துப் போய் நின்றான்.

 

எதிர்த்து ஒரு வார்த்தைக் கூடப் பேசாமல் போய்விட்டாளே! அவ்வளவு கோவமா…! இருக்காதா பின்னே! இவனும்தான் என்னென்ன பேசிவிட்டான். அவள் முகத்தில் எத்தனை வேதனை… அந்தக் கண்களில் எவ்வளவு வலி… பாவம்… – அவளுடைய துன்பம் அவன் மனதில் பல மடங்காக அதிகரித்து அவனை வருத்தியது. கண்மண் தெரியாத கோபத்தில் வார்த்தைகளைச் சிதரவிட்டுவிட்ட தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்து கொண்டான்.

 

பூர்ணிமா அவனை மறந்து வேறொருவனைத் திருமணம் செய்து கொள்வாள் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. அவன் பேசிய எந்த வார்த்தையும் அவனுடைய மனதிலிருந்து பேசவில்லை. ஆனால் ஏதோ ஒரு பயம்… கோவம் அவனை அப்படிப் பேச வைத்துவிட்டது. இப்போது எப்படி அவளைச் சமாதானம் செய்வது என்று புரியாமல் தலையை அழுந்த கோதிவிட்டு ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான். சாலையில் அவளைக் காணவில்லை. கார்மேகம் சூழ்ந்திருக்கத் தூரத்தில் மின்னல் வெட்டியது.

 

‘மழை வரும் போலருக்கே! எப்படிப் போகப் போறா…!’ – அவனுக்குள் கவலை வந்தது. சட்டென்று ஒரு டி-ஷர்ட்டை எடுத்து மாட்டிக் கொண்டு வெளியேறி வண்டியைக் கிளப்பினான். சற்றுத் தூரம் சென்று தெருமுனையில் திரும்பியதும் தூரத்தில் அவள் நடந்து சென்று கொண்டிருப்பது தெரிந்தது. அக்சிலேட்டரை முறுக்கி வேகத்தை அதிகப்படுத்திச் சென்று அவளுடைய வழியை மறித்து வண்டியை நிறுத்தினான்.

 

திடீரென்று ஒரு பைக் தன்னை வழிமறித்து நின்றதும் ஒரு நொடி திகைத்தவள் பிறகு சுதாரித்துக் கொண்டு, ஒற்றைக் காலை தரையில் ஊன்றி பேலன்ஸ் செய்தபடி வண்டியில் அமர்ந்திருப்பவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.

 

“ஏறு…” – சாந்தமாகச் சொன்னான்.

 

அவன் பேசியது காதில் விழாதது போல் அவனைச் சுற்றிக் கொண்டு நடந்தாள். அவன் மீண்டும் வண்டியை உறுமவிட்டுச் சென்று அவளுடைய வழியை மறித்து நின்றான்.

 

“பூர்ணி… வண்டில ஏறு…” – சற்று அதட்டலாக ஒலித்தது அவனுடைய குரல்.

 

‘ஏற முடியாது போடா…’ என்று அவள் சொல்வாள் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால் அவள் பதில் பேசாமல் மீண்டும் அவனைச் சுற்றிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

 

புண்பட்ட மனதுடன் சென்று கொண்டிருப்பவளை சமாதானம் செய்ய முடியாத கையாலாகாத் தனத்துடன் சமைந்து நின்றுவிட்ட சித்தார்த்தை மழைத் தூறல் நிற்க விடவில்லை. அவன் மீண்டும் தன் முயற்சியைத் தொடர்ந்தான்.

 

“பஸ் ஸ்டாண்ட் போறதுக்கு இன்னும் பத்து நிமிஷம் நடக்கணும். மழை வேற தூர ஆரம்பிச்சிடிச்சு. இப்போ நீ வண்டில ஏறப் போறியா இல்லையா?” – தவறு தன் மீதுதான் என்று தெரிந்தாலும் ஏனோ அவனால் தன்னிலையிலிருந்து இறங்கி அவளிடம் கெஞ்ச முடியவில்லை.

 

“ஏறலன்னா என்ன செய்வ?” – அவனுடைய கண்களை நேருக்கு நேர் பார்த்துக் கேட்டாள். அதற்கு அவனிடமிருந்து வந்த பதில் அவளை மேலும் நோகடித்தது.

 

அவன் ஏன் அப்படிச் சொன்னான். அவளை எப்படியாவது சமாதானம் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் இருந்தவனுடைய வாயிலிருந்து எப்படி அப்படி ஒரு பதில் வந்தது…! அது அவனுக்கே புரியவில்லை.

 

“ஏறலன்னா என்ன செய்வ?” என்று அவள் கேட்டதும் சற்றும் தாமதிக்காமல் “உன் மனசுல நான் இல்லவே இல்லைன்னு தெரிஞ்சுக்குவேன்… இதுவரைக்கும் நீ என்கிட்ட பழகினதெல்லாம் பொய்யின்னு புரிஞ்சுகிட்டு என் வழில போயிகிட்டே இருப்பேன்…” என்றான்.

 

அவள் முகத்தில் ஓர் அதிர்வு வந்து போனது. மழை வலுக்க ஆரம்பித்துவிட்டதைக் கூட உணராதவர்கள் போல இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் வெறித்துப் பார்த்துக் கொண்டு சிலை போல் நின்றார்கள். ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு பூர்ணிமா பின் சீட்டில் ஏறி அமர்ந்தாள். அமைதியில்லா மனதுடன் அவன் வண்டியை வீட்டை நோக்கித் திருப்பினான்.

 

தொப்பலாக நனைந்துவிட்ட ஆடையுடன் இருவரும் வீட்டிற்குள் நுழைந்தார்கள். அவள் கூடத்திலேயே தயங்கி நின்றுவிட அவன் உள்ளே சென்று ஒரு துண்டைக் கொண்டு வந்து அவளிடம் நீட்டினான். அவள் பதில் பேசாமல் வாங்கித் தலையையும் முகத்தையும் துடைத்துக் கொண்டாள்.

 

நனைந்துவிட்ட ஆடையுடன் தன் முன் நிற்கும் பளிங்குச் சிலையை ஓரக்கண்ணால் ரசித்துக் கொண்டே மின்விசிறியை சுழலவிட்டவன், அவள் துடைத்துவிட்டுக் கொடுத்த துண்டை வாங்கி முகத்தைத் துடைத்துக் கொள்ளும் பொழுது, அதிலிருந்து புதிதாக ஏதோ ஒரு வாசம் வருவது போல் உணர்ந்தான்.

 

‘ஒரு ஆட்டோவைப் பிடித்து ஹாஸ்ட்டலுக்குக் கொண்டு போய் விடாமத் தப்புப் பண்ணிட்டோமோ!’ – பாலுக்குக் காவலிருக்கும் பூனை போல் அவன் மனம் நிலை தடுமாறியது. தலையை உலுக்கிக் கொண்டு சமையலறைக்குள் சென்றான். அவளும் அவன் பின்னாலேயே சென்றாள்.

 

“இங்க எதுக்கு வர்ற? ஃபேன்ல போய் உட்காரு. டிரஸ் காயட்டும்…” அவள் முகத்தைப் பார்க்காமல் கேஸ் ஸ்டவ்வைப் பற்றவைத்துப் பாலை காய்ச்சியபடிப் பேசினான்.

 

“நீ என்ன செய்ற இங்க?”

 

“என்ன சாப்பிடற? டீயா இல்ல காபியா?” அவளுடைய கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் அவன் ஒரு கேள்வியைக் கேட்டான்.

 

“இதையெல்லாம் இப்படி ஈரத்தோட நின்னுகிட்டு தான் செய்யணுமா? முதல்ல போய் டிரெஸ்ஸை மாத்திகிட்டு வா…” – ஒட்டாத குரலில்தான் பேசினாள் என்றாலும் அவன் மீதான அக்கறையினால்தான் அவளிடமிருந்து அந்த வார்த்தைகள் வெளிப்பட்டன.

 

அவன் அவளை நிமிர்ந்துப் பார்த்தான். அவன் கண்களுக்கு அவள் குழந்தை போல் தோன்றினாள். ‘இவளை எதற்காக நோகடித்தோம்!’ – வருந்தினான். ஆனாலும் மன்னிப்புக் கேட்க மனம் வரவில்லை. டீ போடுவதில் கவனமானான்.

 

“சொல்றேன்ல… போயி டிரெஸ்ஸை மாத்திகிட்டு வா…” – அவள் மீண்டும் சொன்னாள். அவள் பேசுவது அவன் காதிலேயே விழாதது போல் அவன்தான் செய்து கொண்டிருந்த வேலையிலேயே கவனமாக இருந்தான்.

 

சற்று நேரம் அங்கு நின்று பார்த்தவள் ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து அகன்று ஹாலோடு ஒட்டியிருக்கும் பால்கனிக்குச் சென்று மழையை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்.

 

“என்ன இங்க வந்துட்ட? சாரல் அடிக்குதுப் பார்… உள்ள வா” – கையில் இரண்டு டீ கப்புடன் வந்தவன் அவளிடம் ஒன்றை நீட்டியபடிக் கூறினான்.

 

அவன் கொடுத்த கப்பை கையில் வாங்கிச் சூடான டீயைச் சுவைத்தாள். அவள் மனதில் ஏதேதோ எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன. அவன் கையிலிருந்த காலி கப்பையும் வாங்கிக் கொண்டு சமையலறைக்குச் சென்று கழுவி வைத்துவிட்டு ஹாலுக்கு வந்தாள். அவன் சோபாவில் அமர்ந்து டிவி ரிமோட்டைத் தட்டிக் கொண்டிருந்தான்.

 

“என்ன ப்ரோக்ராம் பார்க்கற?” – அவள் அவனோடு ஒட்டி அமர்ந்தபடிக் கேட்டாள்.

 

எப்பொழுதும் போல் இயல்பாக இருக்க முடியாமல் அவன் சங்கடத்துடன் நெளிந்தான்.

 

“சும்மாதான்… உனக்குப் பிடிச்ச ப்ரோக்ராம் ஏதாவது வந்தாப் பாரு…” அவன் அவள் கையில் ரிமோட்டைத் திணித்துவிட்டு எழுந்து நழுவப் பார்த்தான். அவனுடைய கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தியவள் “எங்க போற? உட்காரு” என்று அவனை மீண்டும் சோபாவில் அமரவைத்தாள்.

 

அவன் குழப்பத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே அவன் மார்பில் சாய்ந்து அவனோடு ஒட்டிக் கொண்டாள். அவன் விலகினான். அவள் விடவில்லை. அவனுடைய தயக்கங்களையெல்லாம் அவளே உடைத்து நொறுக்கினாள். வீட்டிற்கு வெளியே பெய்து கொண்டிருக்கும் மழையால் வான்மேகமும் கடல் நீரும் ஒன்றாய்க் கலந்தது. அவளுக்குள் பொங்கிய காதல் உணர்வால் வீட்டிற்கு உள்ளேயும் அதுவே நடந்தது.

 
1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Niveta Mohan says:

    :o………… Aaththiiiiiiiiiii………..

error: Content is protected !!