வேப்பங்குளத்தில் ஒரு காதல் – 12
2479
2
அத்தியாயம் – 12
விடியல் யாருக்காகவும் நிற்காமல் தன் கடமையில் கண்ணாக இருந்தது. இரவு தூங்காத கண்கள் தூக்கத்திற்காக ஏங்கியது. இருப்பினும் தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டு கூடத்திற்கு வந்தாள் ரம்யா சுகுணாவின் அறையில் யாருமில்லாததால் அங்கே
சென்று குளித்து தயாராகி வந்தவளை சாப்பாடு மேஜையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த நாட்டாமை வரவேற்றார்.
“வாம்மா சாப்பிடு …….உன் புருஷன் எங்க? அவரையும் கூட்டிகிட்டு வாம்மா சாப்பிடலாம்” எனவும் உள்ளுக்குள் விதிர்விதிர்த்து விட்டது அவளுக்கு, தயக்கமாய் படிகளில் ஏறமுற்பட்டவள்,
“இதோ வந்துட்டேன் ஐயா! ரம்யா கிட்ட சொல்லித் தானே அனுப்பினேன் ” எந்த திக்கல் தடங்கல் இல்லாமல் சரமாரியாக பொய் உரைத்தவனை எரித்து விடுவது போல் பார்த்தவளின் அருகில் வந்தவன், “என்ன டார்லிங் உன் பின்னாடியே வரேன்னு சொன்னத சொல்லலையா?” இரு பொருள்பட பேசிவிட்டு அவளது கன்னத்தை இரண்டு தட்டு தட்டியவன் சாப்பாடு மேஜை நோக்கிச் சென்றான்.
உடம்பெல்லாம் பற்றிஎரிவது போல் இருந்தது அவளுக்கு. தன் கன்னத்தை தொட்டவனை பளார், என அறைய அவளது கரங்கள் துடித்தன.முஷ்டியை இறுக மூடி கட்டுப்படுத்திக் கொண்டாள் ராஜ கவனிப்பில் நன்றாக உண்டு முடித்த ரவி…
“ஐயா இங்க வீட்டுக்குள்ளயே இருக்கறது ரொம்ப போர் அடிக்குதுங்க அதனால அப்படியே ரம்யாவ கூட்டிட்டு இந்த ஊரை சுத்தி பாக்கலாம்னு தோனுதுங்கையா, நீங்க அனுமதி கொடுத்தா ” என்று மிக மிக, பவ்வியமாக அப்பாவி போல் கேட்டவன், முகத்தில் சுட சுட சாம்பாரை கொட்டுவதற்காக அவளது கைகள் பரபரத்தன..
“அட என்ன தம்பி நீங்க கட்டின பொண்டாட்டிய கூட்டிட்டு போறதுக்கு என்கிட்ட அனுமதி கேட்டுகிட்டு…… கூட்டிட்டு போங்க தம்பி ……ஏய்………..
ஐயா கண்ணு இந்த தம்பிக்கும், ரம்யாவுக்கும் ஊரை சுத்திக்காட்ட வேண்டியது உன் பொறுப்பு. நம்ம கழனியெல்லாம் காட்டு பொழுது போறதே தெரியாது” என்ற உத்தரவை பிறப்பித்து ரம்யாவின் வயிற்றில் நெருப்பை அள்ளிக் கொட்டினார்.
‘அட இவர் வேற நேத்துலேந்து ஏடாகூடமா பேசி நம்மள கடுப்பேத்தராறே என்ன செய்யறது?’ என்று சிந்தித்தவளின் சிந்தனையை கலைத்தான் ரவி.
“அதான் ஐயாசொல்லிட்டாருல்ல வா…….சீக்கிரமா சாப்பிட்டுட்டு என் கூட வந்து ஊரை சுத்திகாட்டு…….” நக்கலாக கட்டளை பிறப்பித்து விட்டு சோபாவில் அமர்ந்து பேப்பர் படிக்கலானான்.
“விடாது சனியன் போலருக்கு “உள்ளுக்குள் நினைத்தவள் கடனே என்று இரண்டு இட்லிகளை உள்ளே நகர்த்தி விட்டு எழுந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தாள் …….,மதியழகியை காணவில்லை.
“ச்சே ……..இப்போ பாத்து இந்தப் பொண்ணை காணோமே! …….சரி அதுவும் நல்லது தான், ரவி கண்ணில் அவள் படுவதும் அத்தனை நல்லதல்ல,” சிந்தனையினூடே வேண்டா வெறுப்பாக ரவியுடன் வெளியேறினாள்.
ஐயாக்கண்ணும் ஊரில் முக்கிய இடங்களான கோவில், தாமரை குளம், பானைகள் செய்யுமிடம், கொய்யா தோப்பு, முந்திரி தோப்பு, மாந் தோப்பு, தென்னந்தோப்பு, என சுற்றிக் காண்பித்தான்.
தென்னந் தோப்பிற்கு வருகையில் மதியம் பன்னிரண்டை நெருங்கி விட்டது களைத்து அங்கே ஒரு மரத்திட்டில் அமர்ந்தான் ரவி.
“கொஞ்சம் இருங்கைய்யா, நான் போய் ரெண்டு இளநீ சீவியாறேன்.நம்ம தோப்பு இளநீ அம்புட்டு ருசியா இருக்கும் “என்று ஐயாக்கண்ணு சென்று விட,
“இளநீய விட ருசியா பலதும் இருக்கு ஆனா ருசிக்கத்தான் முடியல” என்றவன் ரம்யாவை ஏக்கம் நிறைந்த பார்வை பார்த்து ஒரு பெருமூச்செறிந்தான்.
ரம்யாவின் முகத்தில் எள்ளும்,கொள்ளும் வெடித்தது .இவன் கெட்ட கேட்டுக்கு டபிள் மீனிங் வேற, ச்சே……… அதற்குள் ஐயாக்கண்ணு இளநீருடன் இவர்களை நெருங்கி விட்டான்.
இளநீரின் ருசி அமிர்தமாய் இருந்தது .உச்சி வெயிலுக்கு இதமாக இருந்தது.ஸ்ட்ரா போட்டு குடித்து பழக்கப்பட்ட ரம்யாவிற்கு பெரிய துவாரம் வழியாக குடிப்பது சிரமமாக இருந்தது.மேலும் கீழும் ஊற்றி குடித்தவளை.
“என்ன ரம்யா டார்லிங் இளநீ கூட குடிக்க தெரியலையே உனக்கு பாருமேல ஊத்திகிட்ட”என்றவன் அத்தோடு நில்லாமல் ரம்யாவின் கழுத்தில் வழிந்த இளநீரை துடைக்கலானான். அப்போது அருகிலிருந்த மோட்டார் ரூமிலிருந்து வெளிவந்த பாஸ்கரனின் கண்கள் கண்ட காட்சியும் அதுதான். ஏற்கனவே சிவந்திருந்த கண்கள் மேலும் சிவந்து விட்டது.
ரவி தன்னை தொட்டதும் ஓங்கி ஒரு அப்பு அப்ப எத்தனித்தவள் பாஸ்கரனை பார்த்து விட்டாள். அவன் முன்னால் ரவியை அறைய அவளது தன்மானம் தடுத்தது. நேற்று தான் எனக்கும் என் கணவனுக்கும் நடுவில் நீ யார் என்று கேட்டுவிட்டு.இப்போது அவன் முன்னால் ரசா பாசம் வேண்டாம் என்று அவளது மூளை அறிவுறுத்தியதே தவிர கண்கள் என்னை காப்பாற்றேன்? என்று பாஸ்கரனிடம் மன்றாடியது.
கோபம் எல்லை மீறிவிடுமோ என்று பயத்தினால் சட்டென தன் கவனத்தை வேறு புறம் திரும்பி நடக்கலானான் பாஸ்கரன்.ஆனால் மனம், கெஞ்சும் ரம்யாவின் கண்களிலேயே நிலைத்தது.
சில நிமிடங்களில் அங்கே தோப்பில் வேலை செய்யும் மாணிக்கம் முச்சிறைக்க வந்து நின்றான்
“ரம்யாம்மா உங்களை பெரியம்மா கையோட கூட்டியாரச்சொன்னாங்க ” என்றான்
அவனை சாட்சாத் அந்த மகாவிஷ்னுவின் அவதாரமாகவே பார்த்தாள் ரம்யா.
“சரி வா ரம்யா” என்று உடன் கிளம்பிய ரவியை.
“ஐயா, உங்கள ஊர் சுத்திபாக்க சொன்னாங்க. ஐயாக்கண்ணு ரவிஐயாவை பாத்துக்கறது உன் பொறுப்பு அம்மா சொல்ல சொன்னாங்க. ரம்யாம்மா ….வாங்க… போகலாம் “சாமார்த்தியமாக ரவியை பின் தள்ளி ரம்யாவை மட்டும் வீட்டிற்கு அனுப்பிவைத்தான்.
அங்கே சென்றால் மரிக்கொழுந்து “நான் உன்ன கூட்டியாரச்சொன்னேனா? நல்லா கேட்டியா அந்த வீனா போன மாணிக்கம் அப்படித்தான் சொன்னானா? “என கேட்டதும் ரம்யாவிற்குள் மணி அடித்தது. ஆக இது பாஸ்கரனின் வேலை, எனக்கு துன்பம் நேரும் பொழுதெல்லாம் ஆபத்பாந்தவனாக அங்கே பாஸ்கரன் வந்துவிடுகிறார். அவருக்கு கோடான கோடி நன்றிகள். மனதார நன்றி கூறியவள்.
“அது தானே …அப்படியா சொன்னார் மாணிக்கம்…..,?எனக்கு ஒரே குழப்பமா இருக்கு அம்மா…,ஒரு வேளை நான் தான் தப்பா புரிஞ்சிகிட்டேனோன்னுதெரியல “அசடு வழிந்து சமாளித்தாள்.
* * * * * * * * * * * * * *
இரவு வந்ததும் ரம்யாவின் இதயம் தடதடவென அடித்து கொண்டது. காலையிலிருந்து ரவியின் தொடுகையும், இரட்டை வசனங்களும் ஏதோ ஒரு கேடு விளைவிக்கப் போவதற்கு அறிகுறியாகதான் தோன்றியது. நேற்று போல் இன்றும் மட்டையாகியிருந்தால் தேவலை’ என்ற சிந்தனையினூடே அறையினுள் தயக்கத்துடன் நுழைந்தாள்.
அவளின் கெட்ட நேரம் அங்கே ரவி மிதமான போதையில் சற்று தெளிவாகவே இருந்தான்.சட்டென வெளியேற எத்தனித்தவளை தாவிப்பிடித்தான் ரவி.
“ச்சீ …கையை விடு” அவன் முரட்டுக் கைகளுக்குள் சிக்குண்ட தன் மலர்கரத்தை விடுவிக்க பலம்கொண்டு முயற்சித்தாள்.
“என்னது ச்சீ…….யா நான் உனக்கு தாலி கட்டின புருஷன் நியாபகம்
இருக்குல்ல? மறந்து போச்சுன்னா சொல்லு கையோட கல்யாண ஆல்பம் கொண்டு வந்திருக்கேன் அதைகாட்டறேன்” அவனது பிடியை மேலும் இருக்கினான்.
வலியால் துடித்தவள், “அந்த கருமத்தை வேறு என் கண்களால் பாக்கனுமா? விடுடா கையை”
“என்ன ரம்யா இது புருஷனை வாடா போடானு மரியாதையில்லாம பேசர ” கொஞ்சும் குரலில் கேட்டான்.
“தாலி கட்டிட்டா புருஷனாயிடுவியா? உனக்குதான் ஊருல ஓராயிரம் பொண்ணுங்க வரிசை கட்டி நிக்கறாங்களே! அவளுங்க கிட்டப்போய்த் தொலையேன் “.
“அவளுங்க கிட்ட போக பணம் வேணுமே! அந்த பணம் உன் கிட்ட தானே கொட்டி கிடக்கு, அதான் நான் உன்னையே சுத்தி சுத்தி வரேன், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுமா “குழரலாய் வந்த வார்த்தைகள் அவனுக்கு போதை ஏறிவிட்டது என்பதை உணர்ந்தவள் அவன் அசந்த நேரத்தில் முழு பலம் கொண்டு அவனைபிடித்து தள்ளினாள்.நிலைகுலைந்து படுக்கையில் விழுந்தவன் சுதாரிப்பதற்குள் வேகமாக வெளியேறி கதவினை சாத்திவிட்டு ஓட்டம் பிடித்தாள்.
*****************************
மொட்டை மாடியின் கைப்பிடி சுவற்றில் சாய்ந்து நின்றிருந்தான் பாஸ்கரன்,அவன் கண்களில் சோகம் அப்பட்டமாக தெரிந்தது .
முதல் நாள் ரம்யாவை பார்த்தது, கடுமையாக இருவரும் மோதி கொண்டது.போகிப்பண்டிக்கை அன்று அவளிடம் சிநேகமாய் பேசியது. பொங்கல் அன்று அவளுக்கு அடிப்பட்ட போது, தன் இதயத்தில் லேசான வலியை உணர்ந்தது.கோலப்போட்டிக்கு அவளுக்கு உதவியது, உதவியை வேண்டிய அவளது கண்கள் எல்லாம் படமாய் வந்தது. மாட்டுப் பொங்கலன்று இங்கு தானே இருவரும் பேசினோம். அப்பொழுது கூட காதலை பற்றி பேசிய பொழுது, “அதற்கெல்லாம் கொடுப்பினை வேண்டும் சார்” என்றாளே.
நிச்சயம் பற்றியும் திருமணம் பற்றியும் பேசியவள் அழுது கொண்டே ஓடினாளே, ஒரு வேளை அவளது திருமணத்தினால் நடந்த கசப்பான சம்பவம் தான் காரணமோ? இங்கேயே இருந்து விட ஆசையாக இருக்கிறது என்றாளே அதற்கு என்ன காரணம்? அப்படி அவள் கூறியதும் அதற்கு ஓராயிரம் அர்த்தம் பிறப்பித்துக் கொண்டேனே. ஒரு மனமான பெண்ணை விரும்பி நான் பாவியானேன்.
ஆம் என்னுள் நடப்பது என்னவென்று இப்போது தான் எனக்கே புரிந்தது நான் ரம்யாவை காதலிக்கிறேன். அவள் இல்லாத இந்த வீட்டில் இருப்பதற்கு பிடிக்காமல் தானே நானே டிரைவராகி கார் எடுத்துக் கொண்டு ஓடினேன் அதற்கெல்லாம் காதல் தான் காரணமென்று “இன்னொருவன் மனைவி நான் “என்று தாலியை எடுத்து அவள் காண்பிக்கும் பொழுதான் புரிந்தது இந்த மரமண்டைக்கு. அப்போதும் புரியாமலே இருந்திருக்கலாம் இப்போது என்ன செய்ய?
மனதிலிருந்த வலி கோபமாகி சுவற்றில் நான்கு முறை ஓங்கி குத்தினான். கை பலமாக வலித்தது. இருந்தும் கோபம் குறைய மறுத்தது,நாளை காலை ரம்யாவை அவனுடன் அனுப்பவேறு வேண்டுமே ‘ என்னால் முடியுமா?
அவள், அவன் மனைவி அவனுடன் செல்வதை தடுப்பதற்கு நீ யார்?அவள் சென்ற பிறகு நீ என்ன செய்வாய்? மனசாட்சி தாறுமாறாக கேள்வி கேட்டு அவனை குடைந்தெடுத்தது. நெஞ்சின் பாரம் தாங்கவில்லை. இதயம் வெடித்துச்சிதறுவது போல் ஒரு வலி.
அப்போது ……….விசும்பல் சத்தம் …….அவனது காதில் எங்கிருந்தோ வந்து விழுந்தது.
கண்களை கூர்மைப்படுத்தி சத்தம் வந்த திசை நோக்கினான்
அங்கே மூலையில் முழங்கால்களுக்கு நடுவில் முகம் புதைத்து அழுது கொண்டிருப்பது ……….. அது……..ரம்யாவா? ……. சந்தேகமே இல்லை ரம்யாதான் …எதற்காக அழுகிறாள்……… என் வாழ்கையை நாசமாக்கி விட்டு இவள் எதற்காக அழுகிறாள்.அழட்டும், நல்லா அழட்டும் ….மனதிற்குள் கருவியவன் சில நிமிடத்திலேயே மனம் மாறினான்.
அவளது அழுகையை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
மெல்ல அவளருகில் சென்றவன்…..
“இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி அழறீங்க ரம்யா மேடம் “என்றவனது கேள்வியை கேட்டு பதறி எழுந்தாள் ரம்யா. அவசரமாக கண்களை துடைத்தவள் அதிர்ச்சியாக அவன் முகம் நோக்கினாள்.
“அது தான் உங்கள் காதல் கணவன் வந்து விட்டானே அவனுடன் நாளை ஓடப்போகிறீர்கள். அதாவது வீட்டுக்கு ……..உங்கள் வீட்டுக்கு போக போகிறீர்கள் என் வாழ்த்துகள் “என்றவனை கண்ணீர் நிறைந்த விழிகளால் ஏறிட்டாள். அவனது கண்களிலும் வலி தெரிந்தது.
2 Comments
Aaka arumai kathai nalla selkirathu
Nandri nataraj