மனதோடு ஒரு ராகம்-22
4375
1
அத்தியாயம் – 22
“ஏன், உங்க பொண்ணக் கவனிக்கிறதைத் தவிர எங்களுக்கு வேற வேலை எதுவும் இருக்கக் கூடாதா?” – சட்டென்று உள்ளே நுழைந்தாள் சரளா.
“அண்ணி, நீங்க கோவிலுக்குப் போகலையா!”
“கிளம்பிட்டு இருந்தேன்… இன்னும் போகல”
“அப்போ நான் கூப்பிட்டது உங்களுக்குக் கேக்கலையா?”
“கேக்காம என்ன? நீங்க கூப்பிட்டக் குரலுக்கெல்லாம் ஓடியோடி வந்து உங்களுக்கும் உங்க மகளுக்கும் சேவகம் செய்யணும்னு எங்களுக்கு என்ன அவசியம்?”
“என்னண்ணி இப்படிப் பேசுறீங்க? பூர்ணி உங்க மக-ண்ணி”
“ஹா…! நல்ல கதையா இருக்கு நீங்க சொல்றது. எம்பொண்ணு ராஜி மட்டும்தான்”
“ராஜியா!” அவர் முகத்தைச் சுளித்தார்.
“ஏன்? ராஜிக்கென்ன?” முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க மிகவும் ஆக்ரோஷமாகக் கேட்டாள் சரளா. இதற்கு முன் அவளுக்கு இவ்வளவு கோபம் வந்து வேல்முருகன் பார்த்ததே இல்லை எனலாம். அவர் சற்றுக் குரலைத் தாழ்த்திச் சாதுவாகவே பேசினார்.
அண்ணி… ராஜி…”
“சொல்லுங்க, ராஜிக்கு என்ன? அவ ஒழுக்கங்கெட்டவ… ஓடுகாலி… குடும்ப மானத்த வாங்கினவ… இதானே?”
“இந்த மாதிரியெல்லாம் பட்டங்கட்டித்தானேய்யா எம்மகள உயிரோட எரிச்சுட்டு வந்து நின்னீங்க. இப்ப உங்க மக என்ன பெரிய உத்தமப் புத்திரியா இருக்காளா? அவளுந்தானே மானங்கெட்டுப் போயி வந்து நிக்கிறா? அவளையும் கொளுத்த வேண்டியது தானே?”
“அண்ணீ…!” – வேல்முருகனின் முகம் பயங்கரமாக மாறியது. அந்த நேரத்தில்தான் ஜெயராமனும் குலசேகரனும் வீட்டிற்குள் வந்தார்கள். அங்கு ஏதோ வாக்குவாதம் நடந்து கொண்டிருப்பதைக் கவனித்துவிட்டு என்னவென்று புரியாத குழப்பத்துடன்,
“என்ன? என்ன முருகா?” என்றார் ஜெயராமன். கடைசியாகப் பேசியது வேல்முருகன் என்பதால் அவரிடமே விசாரணையை ஆரம்பித்தார். ஆனால் அவருடைய அந்தச் செயல் சரளாவின் ஆத்திரத்தை மேலும் கிளப்பிவிட்டது.
“கேளுங்க… அந்த ஆளுப் பேச்சக் கேட்டுத்தானே எம்மகளை உசுரோட எரிச்சு சாம்பலாக்குனீங்க… இப்பவும் அவனுகிட்டையேப் போயிக் கேளுங்க. அப்படியே மனசுல உள்ளதச் சொல்லிட்டுதான் மறு வேல பாப்பான். சதிகாரன்…” – ஆண்டுக் கணக்கில் அடக்கிவைத்திருந்த ஆத்திரமெல்லாம் எரிமலை போல் வெடித்துக் கொண்டு வெளியேறின.
ஜெயராமன் மனைவியைக் கண்டிக்கவில்லை. குலசேகரனும் அண்ணியின் அதிகப்படியான பேச்சை ஆமோதிப்பது போலவே நின்று கொண்டிருந்தது வேல்முருகனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“என்னண்ணா இதெல்லாம்? அண்ணி பேசிகிட்டே இருக்காங்க நீ பாத்துகிட்டு இருக்க?”
“பாக்காம என்ன செய்வாரு? இத்தனை வருஷமா உனக்கே கூஜாத் தூக்கிக்கிட்டு இருந்துட்டாரு. கடைசியில என்ன கெடச்சுது? பெத்தப் புள்ளைய பலிக் கொடுத்ததுதான் மிச்சம்”
“அண்ணா… ராஜி பண்ணினது தப்பு. அந்தத் தப்புக்கான பலனைத்தான் இப்போ பூரணி அனுபவிக்கிறா”
“இதுக்கு மேல எம்மகளைப் பத்தி ஒரு வரத்தை பேசுனா, நல்லா இருக்காது சொல்லிட்டேன். உம்மகத் திமிரெடுத்துத் தப்புப் பண்ணீட்டு வந்து நிக்கிறா, அதுக்கும் எம்மக மேலயே பழிப் போடுவியா?” – சரளா.
“அண்ணே… நா உன்கிட்டப் பேசிகிட்டு இருக்கேன். இவங்கப் பேச்ச நிறுத்தச் சொல்லு”
“எதுக்கு நிறுத்தணும்? ஏன் நிறுத்தணும்? இப்படி அடக்கி அடக்கியே தானே எங்களை ஒண்ணுமில்லாமப் பண்ணிட்ட?” சரளாவின் ஆத்திரம் கணத்திற்குக் கணம் அதிகரித்துக் கொண்டிருந்தது.
வேல்முருகன் அண்ணியின் பேச்சைப் புறந்தள்ளிவிட்டு அண்ணனிடம் பேச முயன்றார்.
“அண்ணே… எனக்கு ராஜியும் பூர்ணியும் வேறவேற இல்லண்ணே”
“…………………..”
“பூர்ணி பண்ணினத் தப்பு எப்பத் தெரிஞ்சதோ அப்பயிலேருந்து அவ மொகத்துலையே நா முழிக்கல. பாத்துகிட்டுத் தானே இருந்த?”
“ஆஹா… என்ன ஜாலம்…! மொகத்துலையே முழிக்கலையாம்! முழிக்காதவருதான் அவளுக்கு ஒண்ணுன்னதும் அந்தக் குதி குதிச்சாரா!” – சரளா.
“பூர்ணி ஏமாந்துப் போயிருக்காண்ணே. அவளைத் திட்டம் போட்டு ஏமாத்தியிருக்கான் அந்தக் குருவோட தம்பி. நா எல்லாத்தையும் விசாரிச்சுட்டேன். நம்மப் பொண்ணுப் பொறியிலச் சிக்குன எலியாயிட்டாண்ணே. புரிஞ்சுக்க”
“இந்த ஆளுகிட்ட உங்களுக்கு என்னங்கப் பேச்சு? விசாரிச்சாராம் விசாரிப்பு… எப்ப விசாரிச்சாரு? இந்த ரெண்டு மூணு நாள்லத் தானே விசாரிச்சிருப்பாரு. அப்போ ஹாஸ்ப்பிட்டல்ல அவ கர்ப்பத்தை ஏன் கலைக்க வேண்டாம்னுச் சொன்னாராம்?”
“அதைக் கலச்சா பூர்ணியோட உயிருக்கு ஆபத்துன்னு உங்க முன்னாடிதானே டாக்டர் சொன்னாரு?” – தன்னிலையிழந்து மனதிலிருந்ததை சொல்லிவிட்டார் வேல்முருகன். அந்த நொடியே ஜெயராமன் செத்துவிட்டார்.
‘நீ பெத்தப் பொண்ணு மேல உனக்கு இருந்த கரிசனம் நா பெத்தப் பொண்ணு மேல எனக்கு இல்லாமப் போச்சே!’ – அவர் மனம் அழுதது. குற்ற உணர்ச்சியும் கழிவிரக்கமும் அவர் உயிரைக் குடிக்கத் துவங்கிவிட்டது.
‘போச்சு… எல்லாம் போச்சு…’ – அதுவரை பார்வையாளராக இருந்த குலசேகரனின் மனமும் விட்டுப் போனது.
“ஆங்… அப்படிச் சொல்லு. பூர்ணியோட உயிருக்கு ஆஆஆபத்து…!!! உங்க பொண்ணு உயிருன்னா அது சக்கரக்கட்டி. அதுவே எங்கப் பொண்ணு உயிருன்னா ——ல்ல? நீயெல்லாம் நல்லா இருப்பியா. பழிகாரா… பாதகா… எல்லாம் இவனைச் சொல்லணும்… இவன் ஒழுங்கா இருந்திருந்தா எம்மகளுக்கு ஏன் இந்த விதி. உன்தம்பி பதவி வெறிக்கு நா பெத்த மகள பலியாக்கிட்டானே!” – கணவனைச் சட்டையைப் பிடித்து உலுக்கியவள் தானும் அடித்துக் கொண்டு கதறியழுதாள்.
“இ… இல்ல… அப்படி இல்ல…” – வேல்முருகன் உளறினார்.
“வேற எப்படி முருகா?” – முதல் முறையாகக் குலசேகரன் வாய் திறந்தார்.
“ராஜி விஷயம் அத்து மீறிப் போயி, வேற வழியில்லாம… ஆனா பூர்ணி… விசாரிக்க நெனச்சேன்…” பதட்டத்தில் ஏதோதோ கோர்வையில்லாமல் பேசினார்.
“இல்ல முருகா. அன்னைக்கு ராஜி பண்ணினத பூர்ணிமா பண்ணியிருந்தா நீ அந்த முடிவு எடுத்திருப்பியான்னு சந்தேகமா இருக்கு” – குலசேகரன்.
“அண்ணா… என்னை நம்பு… நா சொல்றதை…” – தம்பியின் முகத்துக்கு நேரே கை நீட்டித் தடுத்தார் ஜெயராமன்.
“இனி பேச எதுவும் இல்ல முருகா. ஒண்ணா இருந்த சங்கு ஒடஞ்சிடிச்சு. இனி ஒட்டாது. தப்பு உம்மேல மட்டும் இல்ல. எங்களுக்கும் அதுல பங்கு இருக்கு. இனி பேச எதுவும் இல்ல விட்டுடு”
“என்னண்ணே?”
“இன்னிக்குச் சாயங்காலமே நாங்க இந்த வீட்டுலேருந்து வெளியே போறோம். சொத்துப் பத்துப் பங்கெல்லாம் சீக்கிரமாப் பிரிச்சுக்கிட்டு அவங்கவங்க அவங்கவங்க வாழ்க்கையப் பாத்துகிட்டுப் போவோம். இது இன்னைக்கு நேத்து எடுத்த முடிவு இல்ல. என்னைக்கு நீ பூர்ணிமாவை ஹாஸ்பிடல்லேருந்து வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தியோ அன்னைக்கே எடுத்த முடிவு. இப்பதான் உன்கிட்டச் சொல்லறச் சந்தர்ப்பம் கிடச்சுது. சொல்லிட்டேன்” – முடிவாகக் கூறினார்.
ஜெயராமன் தம்பதியர் கூறியது போலவே அன்று மாலை தங்கள் உடைமைகளுடன் அந்த வீட்டிலிருந்து வெளியேறினார்கள். அவர்கள் கூடவே குலசேகரனும் வெளியேறினார். பலமிழந்து தனிமரமாக நின்றார் வேல்முருகன்.
1 Comment
Super…. Thannoda ponnu vantha udine visarikiraro visarippu.. Raaji enables panninaaa.. Vaithula pullaioda konnutu thann magaluku nyayam pesuraru periye manusan…
Sarala panninathu than sari