Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மனதோடு ஒரு ராகம்-25(Final)

அத்தியாயம் – 25

 

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தாள் பூர்ணிமா. களைந்த கேசமும், வெளிறிய முகமும், ரெத்தக் கரை படிந்த ஆடையுமாக… ஒரே இடத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் சித்தார்த். அவனைச் சுற்றி ஆதரவாக நின்றுக் கொண்டிருந்தது அவனுடைய குடும்பம். அரை மணிநேரம் கழித்து ஐசியு-வின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த நர்ஸ், “யாராவது ஒருத்தர் மட்டும் உள்ள வாங்க. டாக்டரை பார்க்கலாம்” என்று கூறினாள்.

 

சித்தார்த்தின் இதயம் நூறு மடங்கு அதிகமாகத் துடிக்கத் துவங்கியது. அவன் ரவியின் கையை அழுத்தமாகப் பற்றிக் கொண்டான். சகோதரனின் உள்ளம் பதறுவதை புரிந்துக் கொண்ட ரவி, “டென்ஷானாகாத… ஒண்ணும் இருக்காது” என்று தைரியம் சொல்லி அவனை அணைத்துப் பிடித்துக் கொண்டான்.

 

அவனுடைய ஆதரவு சித்தார்த்தன் செவியைச் சிறிதும் எட்டவில்லை. அவன் தொய்ந்து விழுந்தான்.

 

“ஏய்… தைரியமா இருடா… பூர்ணிமாவுக்கு ஒண்ணும் ஆகாது. நா போயி டாக்டரை பார்த்துட்டு வர்றேன். நீ இங்கேயே இரு” என்று கூறினான்.

 

“இல்ல… நானும்… நானும் வர்றேன்…” – சித்தார் எழுந்தான்.

 

“அதெல்லாம் வேண்டாம். நீ இங்கேயே இரு. அம்மா… நீ இவன பார்த்துக்க. தமிழு… நீயும் இங்கேயே இரு. நான் இப்போ வந்துடறேன்” – சித்தார்த்தை தவிர்த்துவிட்டு ரவி மட்டும் மருத்துவரை சந்திக்கச் சென்றான்.

 

பத்து நிமிடம் கழித்து திரும்பி வந்த ரவியின் முகத்தில் சுரத்தே இல்லை.

 

“டாக்டரு என்னப்பா சொன்னாரு?” – பார்வதி கேட்க, சித்தார்த்தும் தமிழையும் அவனுடைய பதிலை எதிர்பார்த்தபடி அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 

“ஒண்ணும் இல்ல… பூர்ணிமாவுக்கு சீக்கிரமே குணமாயிடும்” என்றவனின் முகத்தில் ஏதோ குழப்பமிருந்தது.

 

“இல்ல… உன்னோட முகத்தைப் பார்த்தா ஏதோ சரியில்லைன்னு தோணுது. என்னன்னு சொல்லு ரவி”

 

“ஒண்ணும் இல்லடா…”

 

“இல்ல… நீ பொய் சொல்ற” – சத்தம் போட்டான் சித்தார்த்.

 

ஒரு நொடி தடுமாறிய ரவி பிறகு சுதாரித்துக் கொண்டு, “பணம் கொஞ்சம் அதிகமா செலவாகும் போலருக்கு. அதான் எப்படி சமாளிக்கிறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன். வேற ஒண்ணும் இல்லடா. நீ கவலைப்படாத” என்றான்.

 

“நிஜமாவா? பூர்ணிக்கு ஆபத்து எதுவும் இல்லல்ல?” என்று கேட்டு அண்ணனின் கூற்றை மீண்டும் ஒருமுறை ஊர்ஜிதப்ப படுத்திக்கொள்ள முயன்றான்.

 

அவனுடைய கையைப் பிடித்து அழுத்திக் கொடுத்து நீ பயப்படற மாதிரி எதுவும் இல்ல. உன்னோட பூரணி சீக்கிரமே உன்கிட்ட வந்துடுவா. தைரியமா இரு” என்று உறுதிக் கொடுத்தான். அதன் பிறகுதான் சித்தார்த்தின் மனம் சற்று அமைதியடைந்து.

 

சித்தார்த்தின் ஆடை முழுவதும் பூர்ணிமாவின் ரெத்தம் படிந்திருந்ததால் அவனை வீட்டுக்குச் சென்று குளித்துவிட்டு வரும்படி ரவியும் பார்வதியும் கூறினார்கள். அவனோ மறுத்துவிட்டான்.

 

“பூர்ணியை பார்க்காம நா இங்கிருந்து எங்கேயும் போகமாட்டேன்” என்று உறுதியாகக் கூறிவிட்டான். இரண்டு மணிநேரம் கழித்து பூர்ணிமாவை அவசர சிகிச்சை பிரிவிலிருந்து தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றினார்கள். அதற்கு பிறகு ஒரு மணிநேரம் கழித்து சித்தார்த்தை மட்டும் அவளைப் பார்க்க அனுமதித்தார்கள்.

 

மருத்துவமனைப் படுக்கையில் அவள் அசைவின்றி கிடந்தாள். முகமெல்லாம் வீங்கியிருந்தது. மூச்சு விட ஆக்சிஜன் பொருத்தப்பட்டிருந்தது. தலைமாட்டில் நின்ற கம்பி கொடியில் தொங்கி கொண்டிருந்த இரத்தப் பையிலிருந்து இரத்தம் சொட்டுச் சொட்டாக இறங்கிக் கொண்டிருந்தது. வெளிக்காயம் பட்ட இடங்களிலெல்லாம் கட்டுப் போட்டிருந்தார்கள். சித்தார்த் மெல்ல அவளிடம் நெருங்கினான். அவளைப் பார்க்கப்பார்க்க உள்ளே வலித்தது. நெஞ்சை அடைப்பது போலிருந்தது.

 

“பூ…ர்ணி…” – மெல்லிய குரலில் அழைத்தான். தொண்டைக் கரகரத்தது. அழுகை முட்டியது. பெருகும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் “பூர்ணி…” என்று மீண்டும் அழைத்தான்.

 

“டிஸ்டர்ப் பண்ணாம பாருங்க சார். ரெண்டு மணி நேரத்துல கண்ணு முழிச்சிடுவாங்க. அப்போ பேசிக்கலாம்” – டியூட்டி நர்ஸின் குரல் அவனை இடையிட்டது.

 

சித்தார்த்தின் பார்வை பூர்ணிமாவை முழுமையாக ஆராய்ந்தது. மேடிட்டிருந்த அவளுடைய வயிற்றை அவனுடைய பார்வை எட்டிய போது அடிவயிறு கலங்கியது. உள்ளே கொந்தளித்தது. முகம் தெரியாத அந்த கார் டிரைவரின் மீது வந்த கோபத்தைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகமாகக் கடவுளின் மீது கோபம் வந்தது.

 

‘பூ…ர்…ணி…’ – உள்ளம் தவித்தது. வெகு நேரம் அவள் முகத்தை பார்த்துக் கொண்டே நின்றான். அங்கிருந்து நகரவே மனமில்லை.

 

“பார்த்துட்டீங்கன்னா கிளம்புங்க சார். டாக்டர் ரௌண்ட்ஸ் வர்ற நேரம்…” – மீண்டும் அந்தப் பெண்ணின் குரல் அவனுடைய கவனத்தைக் கலைத்தது. விருப்பமே இல்லாமல் அந்த அறையிலிருந்து வெளியேறினான் சித்தார்த்.

 

எதிர்பார்த்தது போல் பூர்ணிமா இரண்டு மணிநேரத்தில் கண்விழிக்கவில்லை. நேரம் சென்று கொண்டே இருந்தது. சூரியன் அஸ்தமிக்கும் நேரம் நெருங்க நெருங்க, மெல்ல மெல்லப் பதட்டம் மீண்டும் அவர்களை ஆக்கிரமிக்கத் துவங்கியது. அடிக்கு ஒருமுறை டியூட்டி நர்ஸிடம் பூர்ணிமாவின் உடல்நிலையைப் பற்றிக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

 

ரவியின் கட்டாயத்தினால் வீட்டிற்குச் சென்றிருந்த சித்தார்த்தும் திரும்பி வந்துவிட்டான். அவனைச் சமாளிக்கும் வகையறியாது குழம்பிப் போய் நின்றார்கள் குடும்பத்தார்.

 

“உள்ள யாராவது போயி பார்த்திங்களா? முழிச்சாளா?” – சித்தார்த்தின் பார்வை ரவியைச் சந்தித்தது.

 

“இல்ல… இப்போ யாரும் உள்ள போக முடியாது. லேட்டா பார்த்துக்கலாம் நீ உட்காரு” – உடன்பிறந்தவனை அமைதிப்படுத்தினான் ரவி.

 

“ஏண்டா பார்க்கல? இந்நேரம் அவ கண்ணு முழிச்சிருக்கணுமே!” என்றபடி காவலாளியின் கட்டுப்பாட்டையும் மீறிக் கொண்டு தீவிர சிகிச்சைப் பிரிவுக்குள் நுழைந்தான்.

 

அதிர்ந்து போன நர்ஸ் அவனிடம் சமாதானமாகப் பேசி வெளியே அனுப்பி வைத்துவிட்டு, மருத்துவருக்குப் போனில் அழைத்து விபரத்தைக் கூறினாள். உடனே அவர் அங்கு வந்தார். பூர்ணிமாவை மீண்டும் ஒருமுறை பரிசோதித்துவிட்டு ரவியைத் தனியே அழைத்துப் பேசினார்.

 

அவன் திரும்பி வந்ததும் சித்தார்த் “என்னடா சொல்றாரு?” என்று அச்சத்துடன் கேட்டான்.

 

“ஒண்ணும் இல்ல… நீ கொஞ்சம் அமைதியா இரு” – தம்பியின் முகத்தைப் பார்ப்பதை தவிர்த்தான் ரவி.

 

“ரவி… நீ எதையோ என்கிட்ட மறைக்கிற. என்னன்னு சொல்லு…” – அவனுடைய குரலில் கடுமையிருந்தது.

 

“பூர்ணிக்கு என்ன ஆச்சு சொல்லு…?” – தமையனின் தோள்களை பிடித்து உலுக்கினான்.

 

அவனை ஆழ்ந்து பார்த்த ரவி, “பூர்ணிமாவுக்கு ஒண்ணும் இல்ல. ஆனா…”

 

“ஆனா?”

 

“குழந்தையை…”

 

“ரவி!” – அதிர்ந்து போனான் சித்தார்த்.

 

“சாரிடா…”

 

“என்னடா சொல்ற? எங்கடா அந்த டாக்டர்? ஒண்ணும் பிரச்சனை இல்லைன்னு தானேடா சொன்னான்? இப்ப என்னடா திடீர்ன்னு இப்படி சொல்றான்??” – இழப்பின் வேதனை மருத்துவரின் பக்கம் திரும்பியது.

 

“சித்து… அமைதியா இரு… அப்போவே குழந்தையோட கண்டிஷன் மோசமாதான் இருந்தது. நாந்தான் உன்கிட்ட சொல்லல…”

 

“ரவி…” – சித்தார்த்தின் குரல் உடைந்தது. தளர்ந்து போய் தரையில் சரிந்து அமர்ந்தான். அழுகையில் அவன் உடல் குலுங்கியது. மகனின் நிலையைக் காண சகிக்காமல் பார்வதியும் கலங்கிப் போனாள். தமிழி மாமியாரைத் தாங்கி கொண்டாள். ஆறுதல் மொழிகளைக் கூறி அவளைத் தேற்றினாள்.

 

“பூர்ணிமாவோட உயிருக்கு ஆபத்து இல்லாம போனதே! அதை நெனச்சு மனச தேத்திக்கடா சித்து” என்று தம்பியின் முதுகைத் தட்டிக் கொடுத்தான்.

 

அடுத்த சில மணி நேரத்தில் அறுவை சிகிச்சையின் மூலம் பூர்ணிமாவின் வயிற்றிலிருந்த குழந்தை நீக்கப்பட்டது. மறுநாள் காலையில் தான் “ம்ம்ம்…” என்றதொரு முனகல் அவளிடமிருந்து வெளிப்பட்டது. டியூட்டி நர்ஸ் கவனித்துவிட்டு அவளிடம் பேச்சுக்கு கொடுத்தாள். அவள் சுய நினைவோடு இருக்கிறாள் என்பதை உறுதிப் படுத்திக் கொண்ட பிறகு, கொடுக்க வேண்டிய மருந்துகளைச் சரிபார்த்து ஊசியில் ஏற்றி செலைன் பாட்டிலில் கலந்தாள். பிறகு மருத்துவருக்கு தொலைப்பேசியில் அழைத்து விபரம் கூறிவிட்டு வெளியே வந்து உறவினர்களிடம் தெரிவித்தாள்.

 

எல்லோரும் உள்ளே சென்று பார்த்தார்கள். ஏனோ சித்தார்த்துக்கு மட்டும் அவளைச் சந்திக்கும் துணிவு இல்லாமல் போனது. வெளியிலேயே தயக்கத்துடன் நின்றுவிட்டான்.

 

குழந்தையைப் பற்றி அவளிடம் யாரும் எதுவும் பேசவில்லை. அவளுடைய உடல் நலனை மட்டும் விசாரித்து தைரியம் கூறினார்கள். அயர்வோடு படுத்திருந்த பூர்ணிமா சிறிது நேரத்திற்குப் பிறகே தன்னுடைய அடிவயிற்றில் வலியிருப்பதை உணர்ந்தாள். அதன் பிறகுதான் மெல்ல மெல்ல அவளுக்கு அது உரைத்தது… ‘குழந்தை! எங்கே என் குழந்தை!’- தவிப்புடன் வயிற்றை தொட்டுப் பார்த்தாள். அது சருகாய் ஒட்டிக் கிடந்தது.

 

“என்ன அச்சு? எங்க…? எங்க என் குழந்தை?” – நைந்துக் கிடந்தவளிடமிருந்து எப்படி அத்தனை வலுவான சத்தம் வெளிப்பட்டதென்பது ஆச்சர்யம் தான்.

 

அடுத்த சில நிமிடங்களுக்கு அவளை சமாதானம் செய்ய சுற்றியிருந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். அவளுடைய கூக்குரல் கேட்டு வெளியே தயக்கத்துடன் நின்று கொண்டிருந்த சித்தார்த்தும் உள்ளே ஓடி வந்தான். அவளுக்கு ஆறுதல் கொடுக்க முயன்றான். யாருடைய முயற்சியும் அவளிடம் செல்லுபடியாகவில்லை. கடைசியில் ஊசிமூலம் கொடுக்கப்பட்ட தூக்க மருந்தே அவளை அமைதிப் படுத்த உதவியது.

 

கிட்டத்தட்ட பத்து நாட்கள் பூர்ணிமா மருத்துவமனையில் இருந்தாள். நொடி பொழுதும் அவளை விலகாமல் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த். அவளுடைய ஒவ்வொரு வேதனையையும் தன்னுடயதாக்கிக் கொள்ள முயன்றான். அவளுடைய வலிகளையெல்லாம் இவன் உள்ளத்தில் தங்கினான். அவள் அழும் பொழுதெல்லாம் ஆறுதலாகத் தோள் கொடுத்தான். தற்சமயம் மாபெரும் துயரச்சுழலில் சிக்கியிருந்த பூர்ணிமாவிற்கு, பழைய துன்பங்களையெல்லாம் நினைக்கக் கூட தோன்றவில்லை. இந்த நேரம் சித்தார்த்தின் அருகாமையும் ஆறுதல் மொழிகளும் மட்டுமே அவளுக்குத் தேவையாய் இருந்தன.

 

உடல்நிலை ஓரளவுக்கு தேறிய பிறகு பூர்ணிமாவை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தார்கள். ஆனால் மனநிலை மோசமாகவேத்தான் இருந்தது. யாரிடமும் முகம் கொடுத்துப் பேசாமல் அறையிலேயே அடைந்துக் கிடந்தாள். எப்போதும் கலகலப்பாக சிரித்துக் கொண்டே இருக்கும் அந்த பழைய பூர்ணிமாவிற்காக சித்தார்த்தின் மனம் ஏங்கியது.

 

“இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படியே இருப்ப பூர்ணி. கொஞ்சமாவது வெளியில வா. நாலு பேர பாரு… பேசு… மனசுக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்” – பூர்ணிமா தங்கியிருக்கும் அறைக்கு வந்த தமிழி அவளுக்கு அறிவுரைக் கூறினாள்.

 

அவள் பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தாள். அவளுக்கு அருகில் வந்து அமர்ந்து முகத்தைத் தன் பக்கம் திருப்பி மனச மாத்திக்க முயற்சி பண்ணும்மா. இப்படியே இருக்கறதுல யாருக்கு என்ன லாபம் சொல்லு?” என்றாள்.

 

அப்போதும் அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை. சித்தார்த் உள்ளே வந்தான். அவனைப் பார்த்ததும் தமிழி எழுந்து கொண்டாள்.

 

“என்ன சொல்றா?”

 

“ஒண்ணுமே சொல்லல. நீங்க கேட்டுப்பாருங்க” என்று கூறிவிட்டு வெளியே சென்றாள்.

 

சித்தார்த் பூர்ணிமாவிற்கு அருகில் வந்து அமர்ந்தான்.

 

“சாப்பிட்டியா?”

 

“………………..”

 

“எங்கேயாவது வெளியில போகலாமா? ஏதாவது கோவிலுக்கு?”

 

அதிருப்தியாக முகத்தை சுளித்துக் கொண்டு ‘வேண்டாம்’ என்று தலையசைத்தாள்.

 

அவளுடைய வலக்கரத்தை, தன் இருகரம் கொண்டுப் பற்றி  ஆறுதலாக வருடிக்கொடுத்து முத்தமிட்டான். அதில் ஒரு நீர்மணி பட்டுத்தெரிந்தது. நிமிர்ந்துப் பார்த்தான். கோவைப்பழம் போல் சிவந்திருந்த அவள் கண்களிலிருந்து கண்ணீர் முத்து முத்தாக வடிந்தது. அவள் முகத்தைக் கைகளில் ஏந்தி விழிநீரை இதழால் ஒற்றியெடுத்தான்.

 

“எல்லாத்தையும் இழந்துட்டு தனியாயிட்டேன் சித்து” – உள்ளே அடக்கி வைத்திருந்த உணர்வுகள் உடைத்துக் கண்டு வெளியேறின. நொடி கூட தாமதிக்காமல் அவனுடைய கரங்கள் அவளைச் சுற்றி வளைத்து இறுக்கிக் கொண்டன.

 

“அப்படி சொல்லாத பூர்ணி. நா இருக்கேன் உனக்கு…. கடைசி வரைக்கும் இருப்பேன்…” என்றான்.

 

அவளுடைய அழுகை அதிகமானது. தன் அணைப்பிலேயே வைத்திருந்து அவளை ஆறுதல் படுத்தினான். அவளுடைய மனநிலை ஓரளவுக்கு சமாதானமடைந்த பிறகு, “நாம கல்யாணம் பண்ணிக்கலாம் பூர்ணி” என்றான்.

 

“கல்யாணமா!” -அவளுடைய புருவம் சுருங்கியது.

 

“ம்ம்ம்… ஆமா…”

 

“இப்போ என்ன…? திடீர்ன்னு…” குழப்பத்துடன் கேட்டாள்.

 

“தெரியல. நம்ம ரெண்டு பேருக்குமே கல்யாணம் ஒரு மாற்றத்தைக் கொடுக்கும்னு தோணுது”

 

“இல்ல… நீ அவசரப்பட்டு முடிவெடுக்கற”

 

“இதுல அவசரப்பட என்ன இருக்கு? என்னைக்கு இருந்தாலும் நீதான் என் மனைவி… நாந்தான் உன் புருஷன்” என்றான். அவள் அமைதியாக இருந்தாள்.

 

“நடந்தது எல்லாமே உனக்குத் தெரியும். நா செஞ்சது எதையும் நியாய படுத்தல. என்னுடைய முட்டாள் தனத்தை நெனச்சு வருத்தப்படறேன் பூர்ணி. நீ என்னை நம்பனும். நீ இல்லாம என்னால வாழ முடியாதுங்கறதை புரிஞ்சுக்கணும் பூர்ணி” மனதார வருத்தப்பட்டான்.

 

அவனை புரிந்துக் கொண்டதற்கு அடையாளமாய் அவளுடைய முகத்தில் கீற்றாய் சிறு புன்னகை தோன்றியது. அந்த சின்ன புன்னகை அவனுக்குள் அளவில்லா ஆனந்தத்தை உண்டாக்க, அவள் நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டான் சித்தார்த். ஸ்ருதியும் லயமும் இணைந்த இனிய இசையாக மாறியது அவர்களுடைய வாழ்க்கை.

 

 

முற்றும்

 




15 Comments

You cannot copy content of this page