மனதில் தீ-12
3675
1
அத்தியாயம் – 12
அன்று
நிரஞ்சனியின் வீட்டில் சபை கூடியிருந்தது. அனைவரும் அன்று நடக்கவிருந்த அசம்பாவிதத்தை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அதில் எந்த அளவு பிரசன்னாவை சிறுமைப்படுத்தி பேசினார்களோ அதை விட பத்து மடங்கு அதிகமாக புகழேந்தியை உயர்த்தி பேசினார்கள்.
அன்றிலிருந்து நிரஞ்சனியின் உறவினர்களின் மத்தியில் புகழேந்தி ஒரு நல்ல மதிப்பில் இருந்தான். நிரஞ்சனியின் மனதில் இன்னும் ஆழமாக பதிந்தான். குடும்பத்தினர் அனைவருமே அவனிடம் நல்ல முறையில் பழகுவதால் நிரஞ்சனியும் தன்னுடைய தயக்கத்தை கொஞ்சம் விட்டுவிட்டு அவனுடன் கொஞ்சம் சகஜமாக இருந்தாள். கொஞ்சம் தான்…
அன்று புகழேந்தி வேலை முடிந்து வீட்டிற்கு கிளம்ப இரவு ஒன்பது மணியாகிவிட்டது. வீட்டிற்கு செல்லும் வழியில் அவனுடைய காரை நான்கு தடிமாடுகள் வழிமறித்து அவனை அடித்து போட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். அந்த நான்கு தடிமாடுகளில் ஒன்று பிரசன்னா…
ஆனால் பிரசன்னா எதிர்பாராதது அடுத்த ஒரு மணிநேரத்தில் நடந்தது. மற்ற மூன்று தடிமாடுகளுக்கும் பணத்தை செட்டில் பண்ணிவிட்டு அவன் அவனுடைய வீட்டிற்கு செல்ல நினைத்த போது ஒரு கும்பல் அவனை சூழ்ந்துக் கொண்டது. அது வேறு யாரும் அல்ல…
இராஜசேகர், சுந்தர், மற்றும் இரண்டு வேம்பங்குடி ஆட்கள்.
“ஏய்… யாருடா நீங்க…?” பிரசன்னா தன்னை திடீரென்று சூழ்ந்து கொண்ட கும்பலை பார்த்து கேட்டான்.
அப்போது நேரம் நடு இரவாகிவிட்டது. அந்த சாலையும் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத சாலை. பிரசன்னாவுக்குள் பயம் துளிர்த்தது.
“என்ன மாப்ள… மாமனார் வீட்டு ஆளுங்கள அடையாளம் தெரியலையா…? ” என்று கையில் ஒரு உருட்டுக் கட்டையை வைத்துக் கொண்டு இராஜசேகர் கேட்டான்.
“என்ன மாப்ள இப்படி கேட்குறீங்க… அவருக்கு பொண்ண மட்டும் தான் அடையாளம் தெரியும். மச்சான் சகலையெல்லாம் எப்படி தெரியும்?” என்று சுந்தர் இராஜசேகருக்கு எடுத்துக் கொடுத்தான்.
அவர்களுடைய பேச்சிலிருந்து பிரசன்னாவுக்கு அவர்கள் யார் என்பது புரிந்துவிட்டது.
“அதும் சரிதான்… மாமனார் உனக்கு சீர் கொடுத்துட்டு வர சொன்னார்… இந்தா வாங்கிக்க…” என்று இராஜசேகர் ஆரம்பிக்க மற்றவர்களும் பிரசன்னாவுக்கு கொடுக்க வேண்டியதை முறையாக கொடுத்தார்கள்.
அவனை சக்கையாக பிழிந்துவிட்டார்கள். அவன் தேறி எழுந்து நடமாட குறைந்தது ஆறு மாதம் ஆகும். அதோடு நிற்காமல் அவனுடைய வேலைக்கும் உளை வைத்துவிட்டுதான் அமர்ந்தார்கள்.
அவர்கள் பிரசன்னாவை அடிக்கும் போது அவர்களுக்கு தெரியாது. ‘அவன் அப்போதுதான் புகழேந்தியை தாக்கிவிட்டு வந்திருக்கிறான்’ என்று. தெரிந்திருந்தால் அவன் உயிர் அவனுடையதாக இருந்திருக்காது. ஏதோ அந்தமட்டில் தப்பித்தான்.
இன்று
மறுநான் காலை பத்து மணிக்கு மாப்பிள்ளை வீட்டிலிருந்து வருவதாக சொல்லியிருந்தார்கள். எப்படியாவது இந்த மாப்பிள்ளையை பிடித்து விடவேண்டும் என்று நினைத்த இராஜசேகர் அவர்களுக்கு பலமான வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தான்.
நிரஞ்சனியின் மாமா வீட்டிலிருந்து அனைவரும் வந்திருந்தார்கள். அவளுடைய பெரியப்பா மகன் சுந்தர் தன் மனைவியை அழைத்துக் கொண்டு வந்திருந்தான். சித்தி அல்லி வீட்டில் பெண் பார்க்கும் படலம் ஏற்பாடு செய்திருந்ததால் அனைவரும் அங்கு கூடியிருந்தார்கள்.
பெண்ணுக்கு அலங்காரம் பலமாக நடந்தது. ஏற்கனவே அழயான நிரஞ்சனி தேவதையாக ஜொலித்தாள். மணி பத்து ஆனது… பதினொன்று ஆனது… பன்னிரண்டு ஆனது…
மாப்பிள்ளை வீட்டிலிருந்து யாரும் வரவில்லை. காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. நிரஞ்சனிக்கு நிம்மதியாக இருந்தது. ‘கடவுளே… உனக்கு கோடான கோடி நன்றிகள்பா… யாரும் இன்னைக்கு இந்த பக்கம் வரவே கூடாது….’ என்று வேண்டிக் கொண்டாள்.
அவளை தவிர அனைவருக்குமே அது பெருத்த அவமானமாக இருந்தது. ‘எல்லா ஏற்படும் செய்துவிட்டு… மாப்பிள்ளை வீட்டிலிருந்து வரவில்லை என்றால் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்…?’ அனைவரும் கையை பிசைந்து கொண்டு வாசல் பக்கம் கண்களை பதித்து காத்திருந்த போது இராஜசேகர் தரகருக்கு கைபேசியில் அழைத்தான்.
அந்த தரகர் கைபேசியை எடுக்கவே இல்லை. மாப்பிள்ளை வீடு வெளியூர். அதனால் அவனால் நேரடியாக மாப்பிள்ளை வீட்டிற்கு தொடர்பு கொள்ள முடியவில்லை. நேராக தரகர் வீட்டிற்கு வண்டியை விட்டான்.
அவர் கையும் காலுமாக இராஜசேகரிடம் மாட்டிக் கொண்டார். ஆனால் அந்த நேரம் மாப்பிளையின் அப்பா தரகரை ஏதோ திட்டிக் கொண்டிருந்தார்.
“வணக்கம் சார்… என்ன இங்க நின்னுகிட்டு இருக்கீங்க… உங்களுக்காக அங்க எல்லாரும் காத்துகிட்டு இருக்காங்க…” என்று தன்மையாக பேசினான்.
“யோவ்… நீயெல்லாம் எதுக்குய்யா வெல்ல வேட்டி கட்ற…? நீயெல்லாம் ஒரு ஆம்பளையா…? எவனோடவோ ரிஜிஸ்டர் கல்யாணம் பண்ணிகிட்ட பொண்ண எம்பையன் தலையில கட்ட பார்த்துருக்கியே… நீயெல்லாம் மனுஷனாயா…?” மாப்பிள்ளையின் அப்பா சரமாரியாக வார்த்தையை விட்டார்.
“யோவ்… என்னையா இது… எல்லாத்தையும் சொல்ல சொன்னேனே… நீ சொல்லலையா…?” என்று தரகரை பார்த்து கேட்டான் இராஜசேகர்.
“இல்ல… சொல்லலாமுன்னு நெனச்சுகிட்டு இருந்தேன்…” என்று அந்த தரகர் விழித்துக் கொண்டு சொன்னார். தவறு தன் பக்கம் இருப்பதால் இராஜசேகர் அந்த புதிய மனிதர் பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டு வீடு திரும்பினான்.
வீடு திரும்பியவனின் கண்கள் சிவந்திருந்தன. முகம் நெருப்பை போல் உஷ்ணமாக இருந்தது. யாருக்கும் அவனிடம் நெருங்கி விபரம் கேட்க முடியவில்லை.
1 Comment
Hi mam
நன்றாக இருந்தது இப்பகுதி.
நன்றி