Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – [email protected]

Share Us On

[Sassy_Social_Share]

மனதில் தீ -21(Final)

அத்தியாயம் – 21

 

ஓர் ஆண்டிற்கு பிறகு

 

“என்னங்க….” காலையிலேயே ஏதோ வேலையாக தஞ்சாவூர் புறப்பட்டுக் கொண்டிருந்த இராஜசேகரிடம் பேச்சை ஆரம்பித்தாள் நீரஜா.

 

“சொல்லு நீரு…. என்ன விஷயம்….?”

 

“நா சொல்றத கேட்டு நீங்க கோவப்படக் கூடாது. ”

 

“அது நீ சொல்ற விஷயத்த பொருத்தது…. சீக்கிரம் சொல்லு வேலையிருக்கு ” என்று அவளை அவசரப்படுத்தினான்.

 

“அம்மாவுக்கு ஒடம்பு சரியில்லையாம். நா ஒரு தடவ போயி பார்த்துட்டு வந்துடறேனே…” அவள் கெஞ்சிக் கேட்டாள்

 

“சரி… போயி பாரு. ஆனா திரும்ப வராத” அவன் சாதாரணம் போல் சொன்னான். கடந்த ஆறு மாதமாக அவளும் கேட்டுக் கொண்டே இருக்கிறாள். அவனும் சலிக்காமல் இதே பதிலை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்கிறான்.

 

நீரஜாவுக்கு கண்கள் கலங்கிவிட்டன.

 

“ரஞ்சி போயி வருஷம் ஒன்னு ஆச்சு… அப்பா அம்மா தான் அவளோட தொடர்புல இல்லையே. அப்புறம் எதுக்கு அவங்களோட பேசக் கூடாதுன்னு சொல்லி இந்த கெடுபிடி பண்ணுறீங்க…?”

 

இராஜசேகர் அவளை முறைத்துப் பார்த்தான்.

 

“என்ன பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு. நா உன்னை போக வேண்டான்னு தடுக்கல. நீ போ… ஆனா திரும்பி இங்க வரவேண்டாம். நா மானம் ரோஷம் உள்ளவன்….”

 

“அப்படின்னா நா என்ன ரோஷம் இல்லாதவளா..? எல்லாம் என் தலையெழுத்து… எங்க அம்மா உடம்பு சரியில்லாம இருக்கு. என்னால போயி பார்க்க முடியல. அம்மா என்ன தப்பு செஞ்சது? அதுக்கு எதுக்கு இப்படி தண்டனை குடுக்குறீங்க…?”

 

“அவங்களுக்கு தண்டனை கொடுக்க நான் யாரு? எனக்கு அங்க போக வர பிடிக்கல நான் அவங்களோட தொடர்பு வச்சுக்காம இருக்கேன். நீ என் பொண்டாட்டி… நா இருக்க மாதிரி தானே நீயும் இருக்கணும்? நீ எதுக்கு பிடிவாதம் பிடிக்கிற?”

 

“உங்க அம்மாவும் உடம்பு சரியில்லாம படுத்தா அப்ப தெரியும் உங்களுக்கு, நா எதுக்கு பிடிவாதம் பிடிக்கிறேன்னு”

 

“என்னடி வாய் நீளுது? எங்க அம்மாவுக்கு முடியாம போகனும்ன்னு நீ ஆசபடுரியா?” என்று நீரஜாவை முறைத்தான்.

 

“அந்த மாதிரி ஆசையெல்லாம் உங்களுக்கு தான் வரும். எனக்கு எங்க அம்மாவ பார்க்கணும். ஆறு மாசமா உடம்பு முடியாம இருக்கவங்க பெத்த பிள்ளைகள பார்க்காம எவ்வளவு தவிப்பாங்கன்னு உங்களுக்கு என்ன தெரியும். அதெல்லாம் நீங்க அனுபவிச்சா தான் உங்களுக்கு தெரியும்.”

 

“ஏய் அதிகமா பேசின… பல்ல தட்டிடுவேன் ஜாக்கிரதை…”

 

“ஆமா ஆமா… நீங்க தட்டுறதுக்கு தான் நா காலையிலேயே பல்லு வெளக்கிட்டு உங்களுகிட்ட வந்து நிக்கிறேன். தட்டுங்க… பல்ல தட்டுவாரம் பல்ல…” என்று அவள் கண்ணை கசக்கினாள்.

 

“காலையிலேயே ஆரம்பிச்சுட்டா… இவளுக்கு இதே பொழப்பா போச்சு…” என்று அவன் அலுத்துக்கொண்டு வெளியே கிளம்பிவிட்டான்.

 

வளநாடு வந்து கொண்டிருக்கும் போது ஒரு கார் அவனை கடந்து வளநாட்டை நோக்கி விரைந்தது.

 

‘வாடக கார் மாதிரி இருக்கு… இந்த நேரத்துல ஊருக்குள்ளேயிருந்து போகுது…!’ என்று நினைத்துக் கொண்டே அவனும் வளநாட்டை நெருங்கினான்.

 

“என்ன ராஜசேகரு… மாமியார பார்க்க போறியா?” என்று வளநாட்டிலிருந்து வேம்பங்குடிக்குள் செல்லும் ஒரு பெரியவர் கேட்டார்.

 

“இல்லையே… அவங்களுக்கு என்ன…?” என்று கேட்டான்.

 

“என்ன தெரியாதது மாதிரி கேக்குற…? காலையிலேயே ரொம்ப சீரியசா இருந்ததுன்னு வளநாட்டுக்கு கொண்டு போனாங்க.. டாக்டர் பாத்துட்டு தஞ்சாவூர் கொண்டு போக சொல்லிட்டாராமே… இங்க பாக்க முடியாதுன்னு சொல்லிட்டா பொழைக்கிறது கஷ்டம் தான். ஆனா காரு தஞ்சாவூர் பக்கமா தான் போனுச்சு. ”

 

என்ன தான் வீம்பு பார்த்தாலும் ஒரு உயிர் ஆபத்தில் இருக்கு என்று தெரிந்ததும் அவனுக்கு மனம் அசைந்தது.

 

“எந்த ஆசுபத்திரிக்கு போயிருக்காங்க?”

 

“தெரியலப்பா… நீ போயி பாக்க போறியா? ”

 

“ம்ம்… ஆ..ஆமா… இல்… இப்ச்… அதெல்லாம் இல்லப்பா… சும்மா தான் கேட்டேன்” என்று குழப்பமாக அவருக்கு ஒரு பதிலை சொல்லிவிட்டு அவனுடைய வண்டியை தஞ்சாவூர் நோக்கி விட்டான்.

 

ஏதோ ஒரு உந்துதலில் புல்லெட்டை அதி விரைவாக செலுத்தினான். அவன் மனம் முழுக்க நீரஜாவுடன் அவன் காலையில் பேசியது தான் நிறைந்திருந்தது.

 

‘ஒரு தடவ அவள போயி பார்க்க சொல்லியிருக்கலாமோ… இந்த அம்மாவுக்கு இப்ப ஏதாவது ஆச்சுன்னா என்ன செய்றது? அவங்களுக்கு உடம்பு முடியாம போயி இந்த ஆறு மாசத்துல நீரஜா, அவங்கள ஒரு தடவ போயி பார்க்க கிட்டத்தட்ட தினமுமே கெஞ்சுவாளே… தப்பு பண்ணிட்டோமோ…!’ என்று பலவிதமாக யோசனை செய்து கொண்டே வண்டி ஓட்டியவன் வளநாடு எல்லையை கடந்து தஞ்சாவூர் ரோட்டை அடையும் போது, அதே நேரம் மன்னார்குடி எல்லை முடிந்து தஞ்சாவூர் ரோட்டை நோக்கி வந்து கொண்டிருக்கும் டாங்கர் லாரியை கவனிக்காததால் வண்டியின் வேகத்தை குறைக்காமலே சென்றான்.

 

நொடி பொழுதில் இராஜசேகர் வண்டியும் டாங்கர் லாரியும் மோதியதில் லாரிக்கு எந்த சேதமும் இல்லை. லாரி இடித்த வேகத்திலேயே தஞ்சாவூர் நோக்கி பறந்துவிட்டது.

 

ஆனால் இராஜசேகரின் வண்டி அடையாளம் தெரியாமல் நசுங்கிவிட்டது. லாரியில் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட இராஜசேகர் சாலையோரம் இருந்த வயலில் விழுந்துகிடந்தான்.

 

இராஜசேகர் நினைவிழக்காமல் இருந்தான். “நான் சாகக் கூடாது… சாக மாட்டேன்… நீரு… நீரு… நான் வந்துடுவேன் நீரு… உன்ன பார்க்க வருவேன். நம்ம குழந்தைய பார்க்க வருவேன்.. நீரு… நீரு…” அவன் வாய்விட்டு பேசினான்.

 

முதலில் முழுவதுமாக நினைவிழக்காமல் இருந்தவன் சில நிமிடங்களில் பார்வை மங்கலாவதை உணர்ந்தான். அவனுக்கு பயம் வந்தது.

 

“ஐயோ கடவுளே… நான் வாழனும்… எனக்காக இல்ல. என் நீருக்காக… என் பையனுக்காக… ” – பார்வை மேலும் மங்கலானது.

 

“ஐயோ காலைல நீரு அழுதாளே… காலையில மட்டுமா… இந்த ஆறு மாசமாவே தினமுமே அழுதுகிட்டு இருக்காளே… என்னால தான்… ஆண்டவா நான் செஞ்ச தப்பெல்லாம் மன்னிச்சுடு… இந்த ஒரு தடவ மட்டும் எனக்கு வாய்ப்பு குடு… என்னோட தப்பெல்லாம் சரி பண்ணிடுறேன்… நீரு… நீரு… அழாத நீரு… அழாத…”

 

அவன் கண் முன் காட்சிகள் தெளிவில்லாமல் கலங்கலாக தெரிந்தன. சிறிது நேரத்தில் பார்வை சுத்தமாக மறைந்து இருள் சூழ்ந்தது.

 

“என் தப்பெல்லாம் சரி பண்ண ஒரே ஒரு வாய்ப்பு குடு ஆண்டவா… அப்புறம் என்னை இந்த உலகத்திலேருந்து அழச்சுக்கோ…. இப்போ நா சாக மாட்டேன். என்ன காப்பாத்து… காப்பாத்து…” என்று முனகலாக பேசினான். பேசிக்கொண்டே முழுமையாக நினைவிழந்தான்.

 

******************

 

“என்ன மிஸ்டர் இராஜசேகர்…. இப்போ எப்படி இருக்கு?” இராஜசேகர் மீண்டும் கண் விழித்து பார்க்கும் போது அவன் முன் ஒரு மருத்துவர் நின்று அவனோடு பேசிக் கொண்டிருந்தார்.

 

அவனுக்கு ஆச்சர்யம்… “ஓ… நா சா..கலையா..?” முனகலாக வந்தது அவனுடைய வார்த்தைகள்.

 

“உங்களுக்கு ஒன்னும் இல்ல.. யு ஆர் ஆல் ரைட்…” என்று சொல்லிக் கொண்டே அவனுக்கு போடப்பட்டிருந்த ட்ரிப்சில் ஒரு ஊசியை போட்டார்.

 

அவன் கண்களை அந்த அறை முழுக்க சுழலவிட்டான். அந்த அறையின் ஒரு மூலையில் நீரஜா கையில் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தாள்.

 

“ஓகே மிஸ்டர்… ரெஸ்ட் எடுங்க… நா சாயங்காலம் வந்து பார்க்குறேன்…” என்று சொல்லிவிட்டு மருத்துவர் அங்கிருந்து அகன்றார்.

 

“நீரு…” என்று அழைத்து அவளை கண்களால் சைகை செய்து அருகில் அழைத்தான்.

 

நீரஜா வேகமாக அவன் அருகில் வந்து “என்னங்க… ஏதாவது வேணுமா…? ” என்று சொல்லி அவனது கையை பிடித்தாள்.

 

“நா எப்படி இங்க…?”

 

“ரெண்டு காலேஜ் பசங்க கொண்டுவந்து சேர்த்துட்டு எனக்கு போன் செஞ்சாங்க. உங்க போன்லேருந்து நம்பர் எடுத்தாங்கலாம். சரி அது எதுக்கு இப்ப… கண்ண மூடி தூங்குங்க.”

 

“உங்க அம்மா எப்படி இருக்காங்க…?” அவனால் பேச முடியவில்லை. சிரமப்பட்டு அவளோடு பேசினான்.

 

“தெரியலையே…” என்றாள் நீரஜா.

 

“சரி நீ மட்டுமா இங்க இருக்க? இல்லங்க காசி பெரியப்பா, சின்னசாமி மாமா எல்லாரும் வெளிய தான் இருக்காங்க. உங்களோட ஒருத்தர் மட்டும் தான் இருக்க முடியும்.”

 

“ஓ சரி… நீ உங்க சித்திக்கு இல்லன்னா உங்க மாமாவுக்கு போன் போட்டு உங்க அம்மா எப்படி இருக்காங்கன்னு கேளு”

 

“என்னங்க திடீர்ன்னு…?”

 

“போன்ல பேசிட்டு, வெளிய இருக்க யாரையாவது இங்க என்னோட இருக்க சொல்லிவிட்டு நீ போயி உங்க அம்மாவை பார்த்துட்டு வந்துடு…”

 

நீரஜாவுக்கு ஆச்சர்யம் சந்தோஷம் எல்லாம் ஒருசேர தோன்றியது.

 

“இல்லங்க… உங்கள விட்டுட்டு நான் போக முடியாது. உங்களுக்கு சரியாகட்டும். நாம போயி பார்க்கலாம்” என்று அவனுக்கு சமாதானம் சொல்லிவிட்டு சித்தி அல்லிக்கு போன் செய்து தாமரை பற்றி விசாரித்தாள்.

 

“சித்தி… நா நீரு பேசுறேன் சித்தி… அம்மா எப்படி இருக்கு?”

 

“நீரு… நீ எப்படி இருக்க? மாப்ள எப்படி இருக்காரு? என்னடி ஆச்சு?”

 

“அவரு நல்ல இருக்காரு சித்தி. இன்னும் ரெண்டு நாள்ல வீட்டுக்கு போயிடுவோம். கால்ல தான் நல்ல அடி சித்தி. மற்றபடி பயப்பட ஒன்னும் இல்ல.”

 

“அப்படியா…?”

 

“ஆமா சித்தி… வயலுக்குள்ள விழுந்துட்டாரு. சேத்துல விழுந்ததால பெருசா ஒன்னும் இல்ல… ஆனா வண்டி நொறுங்கிட்டு… ஏதோ கடவுள் பபுண்ணியத்துல இவரு தப்பிச்சதே பெரிய விஷயம் சித்தி.”

 

“சரி சரி… நாங்க வந்து பார்த்தா உனக்கு எதுவும் பிரச்சன வருமா…? உனக்கு துணையா அங்க யாரு இருக்கா?”

 

“அதெல்லாம் இங்க ஆளுங்க இருக்காங்க சித்தி… அம்மா எப்படி இருக்கு?”

 

“நா இங்க அக்காவோட தான் இருக்கேன் நீரு. ரோகினி மருத்துவமனைல தான் அக்கா இருக்கு… ”

 

இன்னும் ரெண்டு நாள் போகட்டும் சித்தி. நானும் அவரும் அம்மாவ பார்க்க வருவோம் சித்தி… ”

 

“அப்படியா… சந்தோஷம்டி… நீ வந்தா அக்காவுக்கு குணமானாலும் ஆயிடும்…” என்றாள் அல்லி மகிழ்ச்சியாக.

 

ஆனால் அல்லியின் எதிர்பார்ப்புப்படி நீரஜாவின் வரவால் தாமரையின் உடல்நிலையில் எந்த மாற்றமும் ஏற்ப்படவில்லை.

 

சொன்னது போலவே இரண்டு நாள் கழித்து இராஜசேகரும் நீரஜாவும் தாமரையை பார்க்க மருத்துவமனைக்கு சென்றார்கள். இராஜசெகருக்கு முழுவதும் குணமாகவில்லை. அவன் சக்கர நாற்காலியில் தான் வந்தான். ஆனாலும் பிடிவாதமாக மாமியாரை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருந்தான்.

 

“எப்படி இருக்கீங்க அத்த…?” என்று கிழிந்த நாராக கட்டிலில் படுக்கையில் இருக்கும் தாமரையிடம் கேட்டான்.

 

தாமரைக்கு கண்களில் உயிர் இல்லை. நீரஜாவை பார்த்துவிட்ட மகிழ்ச்சி சுத்தமாக இல்லை. இராஜசேகருக்கு நடந்த விபத்து தெரிந்த பின்னும் அதை பற்றிய படபடப்பு இல்லை. ஏதோ கடமைக்கு பேசினாள்.

 

“இருக்கேன்… நீங்க நல்லா இருக்கீங்களா…?”

 

இராஜசேகருக்கு தாமரையின் விரக்தி விசித்திரமாக இருந்தது.

 

‘இது என்ன இந்த அம்மா இப்படி இருக்காங்க… பொண்ண பார்த்த சந்தோசத்தையே காணுமே…!’ என்று நினைத்துக் கொண்டான்.

 

‘ஒரு வேளை ரஞ்சிய நெனச்சு ஏங்கிகிட்டு இருக்காங்களோ…!’ என்று யோசித்தான்.

 

மரண தருவாயில் அவன் தான் செய்த தவறு என்று உணர்ந்தது நீரஜாவை அவள் பெற்றோரிடமிருந்து பிரித்ததை மட்டும் தான். ஆனால் இப்போது அவனுக்கு வேறு ஒன்று தோன்றியது…

 

அவன் யோசனையிலேயே இருந்தான். தாமரையை பார்த்துவிட்டு வெளியே வந்து காரில் ஏறும் வரை அவன் எதுவும் பேசவில்லை. பலமான யோசனையில் இருந்தான். பின் டிரைவரிடம்

 

“மங்கலபுரம் போங்க….” என்று சொன்னான். நீரஜா அவனை குழப்பமாக பார்த்தாள். அவளுக்கு அவன் எந்த பதிலும் சொல்லவில்லை.

 

மங்கலபுரத்தில் அந்த பெரிய வீட்டின் முன் கார் நின்றது. நீரஜாவிற்கு அது யார் வீடு என்று தெரியவில்லை.

 

“ஏங்க… உடம்பு சரியில்லாம இருக்கும் போது எதுக்கு இப்படி அலையிறீங்க… வீட்டுக்கு போயி ரெஸ்ட் எடுத்தா தான் சீக்கிரம் குணமாக முடியும் மறந்துடீங்களா?”

 

“இல்ல நீரு… மனசு அமைதியா இருந்தா தான் சீக்கிரம் குணமாக முடியும். நீ எதுவும் பேசாம என் பின்னாடி வா…” என்று சொல்லிவிட்டு டிரைவர் உதவியுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்து அந்த வீட்டு வாசலுக்கு சென்றான்.

 

நீரஜா அழைப்பு மணியை அடித்தாள். கதவை திறந்த புகழேந்தியை அவள் அங்கு சிறிதும் எதிர் பார்க்காததால் அவளுக்கு ஏன் என்று தெரியாமல் உடல் நடுங்கியது.

 

ஆனால் புகழேந்திக்கு அந்த கலக்கம் சிறிதும் இல்லை. அல்லது அதை சாமர்த்தியமாக மறைத்துவிட்டானா என்பதும் நீரஜாவிற்கு புரியவில்லை.

 

“ஹலோ… வாங்க வாங்க… என்ன ஆச்சு… ஏன் கால்ல, கைல எல்லாம் கட்டு… வாங்க… உள்ள வாங்க… ஜெனி… யார் வந்திருக்காங்க பாரு…” என்று மிக மகிழ்ச்சியாக என்னவோ அவர்கள் வரப்போவதை முன்பே அறிந்தவன் போல் பேசினான்.

 

புகழேந்தியின் அந்த செயல் இராஜசேகரை மிகவும் வருத்தியது. புகழேந்தியின் நிலையில் தான் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம் என்று நினைத்து பார்த்தான்.

 

‘எங்கடா வந்த… போடா வெளியே…’ என்ற வார்த்தைகள் தான் தன்னிடமிருந்து வந்திருக்கும் என்பதை அவன் மனசாட்சிக்கு முன் ஏற்றுக் கொண்டான்.

 

புகழேந்தியின் குரல் கேட்டு வெளியே ஓடிவந்து பார்த்த நிரஞ்சனிக்கும் நீரஜாவின் நிலை தான். அவளும் கால்கள் நடுங்க கதவை பிடித்துக் கொண்டு நின்றாள்.

 

அவளுடைய கண்கள் நீரஜாவில் கையில் இருந்த தன் அக்காவின் குழந்தையின் மீது ஆவலுடன் பதிந்தது.

 

“என்ன ரஞ்சி… வாங்கன்னு சொல்ல மாட்டியா…?” என்று இராஜசேகர் கேட்டது தான் தாமதம் , சட்டென பாய்ந்து நீரஜாவின் கையில் இருந்த குழந்தையை பறித்துக் கொண்டு குழந்தைக்கு முத்தங்களை வாரி வழங்கியவள் அக்காவை கட்டிக் கொண்டாள். கண்களில் சகோதரிகள் இருவருக்கும் மடை திறந்தது.

 

பின் உள்ள வாங்க என்று உள்ளே அழைத்து சென்றாள். அவளுக்கு படபடப்பில் எதுவும் புரியவில்லை. என்ன பேசுவது… எப்படி பேசுவது… எதுவுமே புலப்படவில்லை…

 

“நா உங்களுக்கு எவ்வளவோ கெடுதல் செஞ்சிருக்கேன். ஆனா அதை எல்லாம் ஒரு நொடியில மறந்துட்டு என்ன ‘உள்ள வாங்கன்னு ‘ வீட்டுக்குள்ள கூப்பிடீங்க. உண்மையிலேயே நீங்க பெரிய மனுஷன்தாங்க… என்ன மன்னிச்சிடுங்க…” என்றான் இராஜசேகர் புகழேந்தியை பார்த்து.

 

லேசாக சிரித்த புகழேந்தி ” ‘மன்னிக்கத் தெரிஞ்சவன் மனுஷன்… மன்னிப்பு கேட்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்…’ என்று விருமாண்டி படத்துல ஒரு வசனம் வரும். அது நூறு சதவிகிதம் உண்மை… நான் மனுஷன்… நீங்க பெரிய மனுஷன்…” என்றான்.

 

இராஜசேகரின் மனதிலிருந்த பாரம் பாதி குறைந்துவிட்டது.

 

“கேட்கிறேன்னு தப்ப எடுத்துக்காதிங்க… என்ன திடீர்ன்னு ஆளே சுத்தமா மாறிட்டீங்க?”

 

“அது ஒன்னும் இல்ல டாக்டர்… ”

 

“நீங்க புகழ்னே சொல்லுங்க… நீங்களும் எனக்கு ஒரு அண்ணன் தான்.”

 

“அதுவும் சரிதான்… நூறு வருஷம் வாழ்ந்தாலும் கத்துக்க முடியாத பாடத்த, அடுத்த நொடி சாகப் போறோம் என்கிற மரண பயம் எனக்கு கத்து கொடுத்துடுச்சு.”

 

“மனுஷனோட வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது. அடுத்த நிமிஷம் என்ன ஆவோம் என்று நிலையில்லாத வாழ்க்கை தான் வாழ்ந்துகிட்டு இருக்கோம். அதனால வாழற இந்த நிமிஷத்த நியாயத்தோட வாழனுமுன்னு தோணுது… அதோட நம்பளோட இந்த குறுகிய வாழ்க்கையில, எதுக்கு அவங்களோட பேச மாட்டேன்… இவங்களோட பேச மாட்டேன்னு வெட்டி வீராப்பு பிடிவாதம் எல்லாம்… ”

 

“வாழற வரைக்கும் யாரோடையும் எந்த மனகசப்பும் இல்லாம வாழ்ந்தா போதும் ஏதோ ஒரு செயல அரை குறையா விட்டுட்டு போறமாதிரி தோணாம நிம்மதியா போக முடியும்…” என்றான்.

 

இராஜசேகரின் இந்த மாற்றம் அங்கிருந்த அனைவருக்கும் மகிழ்ச்சியை அள்ளி வழங்கியது. அன்று முழுவதும் இராஜசேகர் புகழேந்தியின் வீட்டில் தான் இருந்தான். நீரஜாவும் நிரஞ்சனியும் கடந்த ஒரு வருடத்தில் நடந்த சம்பவங்களை பேசி பேசி மாய்ந்தார்கள்.

 

நிரஞ்சனி தாயின் நிலையை அறிந்து புகழேந்தியுடன் சென்று மருத்துவமனையில் தாமரையை பார்த்தாள்.

 

ஒளியிழந்து சோர்ந்து காணப்பட்ட தாமரையின் கண்களில் நிரஞ்சனியை பார்த்ததும் ஜீவனும் மீண்டது கண்ணீரும் கோர்த்தது. மகளை தொட்டு தடவி பார்த்து மகிழ்ந்தாள். அன்றிலிருந்து தாமரையின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. சிறிது சிறிதாக முன்னேற்றம் தெரிந்தது.

 

பதினைந்து நாட்களில் எழுந்து நடமாட ஆரம்பித்துவிட்டாள்.

 

அனைவரும் சமாதானம் ஆகிவிட்டது தெரிந்ததும் அரசு ஊரை கூட்டி விருந்து வைத்து நிரஞ்சனியையும் புகழேந்தியையும் வேம்பங்குடிக்கு அழைத்துவர நினைத்தார். அவர் நினைத்ததை இராஜசேகர் செய்து முடித்தான்.

 

நிரஞ்சனி, புகழேந்தி, புகழேந்தியின் பெற்றோர் மற்றும் அவர்களின் நெருங்கிய சொந்தபந்தங்கள் வேம்பங்குடிக்கு அழைத்துவரப்பட்டார்கள். ஊர் மக்கள் அனைவரும் இரஞ்சநியையும் புகழேந்தியையும் வந்து பார்த்துவிட்டு விருந்தில் கலந்து கொண்டார்கள்.

 

“இந்த மப்பிளையையா வேண்டாமுன்னு இந்த தாமரைக்கா அந்த ஆட்டம் ஆடுனுச்சு…” என்று விருந்திற்கு வந்த பெண்களின் பேச்சு தாமரையின் காதில் விழுந்தது. தன்னுடைய முட்டாள் தனத்தை எண்ணி வருந்தினாலும் தன் மகளுக்கு அமைந்திருக்கும் வாழ்க்கையை நினைத்து பெருமை படாமல் இருக்க முடியவில்லை தாமரையால்.

 

“அண்ணே… இந்த இலைக்கு ரசம் போடுங்க… தாத்தா… உங்களுக்கு என்ன வேணும்…?” என்று கேட்டு பந்தியில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த சுட்டிப் பையன் சாரதி அடிக்கடி புகழேந்தியின் கவனத்தை ஈர்த்தான்.

 

“ஜெனி… அந்த பையன் யாரு…?”

 

“எது… ஓ… அவனா… சாரதி… ஏங்க மாமா பையன்… உங்ககிட்ட சொல்லியிருக்கேனே…”

 

“ஆமா… ஞாபகம் இருக்கு…” என்று சொன்ன புகழேந்தி மீண்டும் விருந்திற்கு வந்திருபவர்களை கண்களால் அலசினான்.

 

அந்த ஊரில் தெரிந்தவர் தெரியாதவர்களை எல்லாம் சந்தித்துவிட்ட புகழேந்திக்கு அந்த விருந்தில் கோபாலனை பார்க்க முடியவில்லை.

 

நிரஞ்சனியை அழைத்துக் கொண்டு அடுத்த ஐந்தாவது நிமிடம் கோபாலன் வீட்டில் இருந்தான்.

 

புகழேந்தியை பார்த்ததும் கோபாலனின் கோபமெல்லாம் பறந்துவிட்டது. குடும்பத்தில் அனைவரும் விருந்திற்கு அழைத்தும் முறுக்கிக் கொண்டு வீட்டில் இருந்துவிட்ட கோபாலன் புகழேந்தி தன்னை தேடிக்கொண்டு தன் வீட்டிற்க்கே வந்துவிட்டதும் மகிழ்ந்து போய் விட்டார்.

 

“மன்னிச்சுடுங்க சார்… அன்னைக்கு இருந்த மனநிலைல என்ன பேசுறோம் என்றே தெரியாமல் உங்ககிட்ட தப்ப பேசிட்டேன்…”

 

“அத விடுங்க மாப்ள.. இங்க களத்துல நெல்லு கெடக்கு… அது தான் அந்த பக்கம் வரமுடியல… மத்த படி ஒன்னும் இல்ல…”

 

“அதெல்லாம் இல்ல சார்… நீங்க விருந்துக்கு இப்போ வரணும்… உங்கள அழைச்சுகிட்டு போகத்தான் நாங்க வந்திருக்கோம்…”

 

“ஆமா மாமா… கெளம்பி வாங்க…” என்று நிரஞ்சனியும் அழைத்தாள்.

 

“அட என்ன மாப்ள நீங்க… சார்… மோர்ன்னு… உரிமையா சித்தப்பான்னு கூப்பிடுங்க… ”

 

“சரி சித்தப்பா… வாங்க…” என்று அவரை அழைத்துக் கொண்டு நிரஞ்சனியின் வீட்டிற்கு வந்தான்.

 

“டேய் மாப்ள… என்னடா நீ பந்தி பரிமாறிகிட்டு இருக்க…”

 

“ஏன் சுந்தரத்தான்… எங்க அத்தைக்கு நான்தானே பையன்… நாந்தான் எல்லாத்தையும் பார்க்கணும்.”

 

“அது எப்படி.. நாந்தான் எங்க சித்தப்பாவுக்கு பையன். நீ மருமகன் தானே… நீ விருந்தாளி தான். இங்க வா… இப்படி உக்காரு… நான் பரிமாருறேன்… நீ சாப்பிடு…”

 

“என்னத்தா(ன்) நீ… எங்க அத்தைக்கு நா மருமகன் கிடையாது… பையன் தான்… நானெல்லாம் உக்கார மாட்டேன். நீ வேணுன்னா உக்காந்து மூக்க பிடிக்க சாப்பிடு… உனக்கு நானே பரிமாறுறேன்.

 

“என்னாது… நா உக்காரனுமா… வடக்கி தெருவான் இங்க வந்து என்னையே உபச்சாரம் பண்ணுவியா…?” என்று கேட்டு அந்த சிறுவனிடம் சுந்தர் மல்லுக்கு நின்றான்.

 

சாரதியும் விடாமல் சரிக்கு சரி பேசினான்.

 

“ஆமா… அப்படி தான் நீ போ…”

 

“என்னது நா போறதா… வடக்கி தெருவானுக்கு இருக்க உரிமை எனக்கு இல்லையா… இரு உங்க அப்பாவை கூப்பிட்டு நியாயம் கேட்போம்…”

 

சாரதிக்கு பயம் வந்துவிட்டது. அப்பா கோபமாக வராத இடத்திற்கு அவன் மட்டும் வந்து உரிமைக்காக போராடிக் கொண்டிருப்பது தெரிந்தால் அவர் இவன் தோலை உரித்தாலும் உரித்துவிடுவார்.

 

“என்னது.. அ..அப்பாவா.. அதெல்லாம் வேண்டாம்… இந்தா பிடி… இந்த சாம்பார் வாளி தானே உனக்கு வேணும்… நே வச்சுக்கோ…” என்று சொல்லிவிட்டு லேசாக கண் கலங்க மூக்கை விடைத்துக் கொண்டு விறைப்பாக செல்ல எத்தனித்தான் சாரதி.

 

“என்னடா மாப்ள நீ… ம்…ங்குரதுக்குள்ள பொட்ட புள்ள மாதிரி கண்ண கசக்குற…” என்று மீண்டும் சுந்தர் சாரதியை சீண்ட, சாரதி சிலிர்த்தெழுந்தான்

 

“என்னது… பொட்ட புள்ளையா… நா ஆம்பள சிங்கம்… அதுவும் வேம்பங்குடி சிங்கம் தெரியுமுல்ல… கொண்டா அந்த சாம்பார் வாளிய… நீ போயி எங்க அப்பா… தாத்தா… பாட்டன்… எல்லாரையும் ஞாயம் கேட்டுகிட்டு இரு…” என்று படபடத்துவிட்டு சாம்பார் வாளியை சுந்தரிடமிருந்து பிடுங்கிக் கொண்டான்.

 

சிறுவனின் செயலை பார்த்து அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரித்தார்கள். அப்போதுதான் அங்கு வந்த கோபாலனும் சிரித்தார்.

 

“எப்பா… தங்கச்சி வீட்டு விருந்துக்கு வர்ற நேரமா இது… வாப்பா இங்க…” என்றான்.

 

“ஆமா மாமா… வந்து இந்த இலையில உக்காருங்க …” என்று சொல்லி அவருக்கு ஒரு இலையை காட்டினான் சுந்தர்.

 

அவர் அருகில் வந்ததும் “எப்பா… எப்பா…. எங்க வந்தோன இலைக்கு போற… இந்த சாம்பார் வாளிய பிடி…” என்று வாளியை அவரிடம் கொடுத்துவிட்டு

 

“அத்தாச்சி… மாப்ள… சின்ன அத்த… பெரியத்த… சின்ன மாமா… பெரிய மாமா… ஆத்தா… அம்மா… எல்லாரும் வந்து உக்காருங்க…. விருந்துக்கு வந்தவர்கள் எல்லாம் சாப்பிட்டாச்சு. இனி நம்மதான் பாக்கி…. எல்லாருக்கும் அப்பா பரிமாறட்டும் ” என்று சொல்லி அனைவரையும் பந்தியில் அமரவைத்து அவனும் ஒரு இலையில் அமர்ந்து கொண்டான். சுந்தரும் கோபாலும் மற்றவர்களுக்கு பரிமாறினார்கள்.

 

“மாப்ள… நீங்க வீட்டுக்கு வந்து கூப்பிட்டோன விருந்து சாப்பிட தான் கூப்பிடுறீங்கன்னு நெனச்சு வந்தேன். ஆனா இங்க வந்ததுக்கு பிறகு தான் தெரியுது… நீங்க எதுக்கு அவ்வளவு சிரமப்பட்டு வந்து என்ன அழைச்சுகிட்டு வந்தீங்கன்னு…” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

 

“மாமா நா யார வேணுன்னாலும் நம்புவேன்… ஆனா… இந்த குட்டி சாத்தான மட்டும் நம்ப மாட்டேன். இவ்வளவு நேரம் நான் இவன சாப்பிட சொல்லி பிடிவாதம் பண்ணிக்கிட்டு இருந்தேன். அப்பெல்லாம் சாப்பிட மாட்டேன்னு சொல்லிபுட்டு… இப்போ எல்லாரையும் பந்தில உக்காரவச்சு அவனும் உக்காந்துகிட்டு வெவரமா என்ன மட்டும் கழட்டி விட்டுட்டான்…”

 

அனைவரும் அவன் பேசுவதை கேட்டு சிரித்தார்கள். அனைவருடைய மனத்திலும் சந்தோஷம் மட்டுமே நிறைந்திருந்தது… இனி வரும் காலம் அந்த குடும்பத்திற்கு மகிழ்ச்சியை மட்டுமே அள்ளி கொடுக்கும்…

 

சுபம்

 
1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Deepika P says:

    Nice story sis story awesome different 👌👌👌

You cannot copy content of this page