Share Us On
[Sassy_Social_Share]உன் உயிரென நான் இருப்பேன்-12 & 13
1817
0
“ விக்கி ப்ரோ.. இந்த டிரஸ் எனக்கு நல்லா இருக்கா” என ஒவ்வொரு ஆடையாக அணிவதும் களைவதுமாக நின்ற ஆரவ்வை பார்த்து சிரித்த வண்ணம் இவனது கருத்தை தெரிவித்துக் கொண்டிருந்தான் விக்ரம். இருந்தும் அவனது அலப்பறை தாங்க முடியாமல்,
“டேய் ஆரவ் முடியலைடா… நிச்சயதார்த்தம் உனக்கில்லை உங்க அண்ணனுக்கு தான்.. நீ என்னடானா மாப்பிள்ளை மாதிரி ரெடியாகிட்டு இருக்க.” என்று அலுத்துக் கொள்ள,
“ப்ரோ இது மை ப்ரோ நிச்சயதார்த்தம் நானும் பார்க்க சூப்பரா இருக்கனும்ல.. அண்ணியை பர்ஸ்ட் டைம் பார்க்க போறேன்.. அன்ட் அங்கே அண்ணியோட சொந்தக்கார பொண்ணுங்க இருப்பாங்க அதுல யாரையாவது கரெக்ட் பண்ணலாம்னு பார்த்தா விட மாட்டேங்குறீங்களே..” என்றவன் கண்ணாடி முன் நின்று தலையை சீவியபடி தன் உடலை சுற்றி வளைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஆரவ்வ்வு.. அங்கே எந்த பொண்ணும் வராது ஏன்னா இது இனியா ஃபேமிலியும் நம்ம ஃபேமிலியும் மட்டும் தான் இருப்போம்..ரொம்ப அலட்டிக்காம வாடா” என அவனை இழுத்துக் கொண்டே போனான். அங்கே அபிநவ்வும் தயாராக இருக்க விக்ரமின் குடும்பமும் வந்திருந்தது.
அபிநவ்விற்கு தாய் தந்தை யாரும் இல்லாத காரணத்தினால் விக்ரமின் பெற்றோர்களையே தன் பெற்றோராக கருதுகிறான். விக்ரமின் அன்னை ஜெயவாணிக்கு அபிநவ்வின் மேல் எப்போதும் தனிப் பாசம் உண்டு. அபிநவ் அங்கே போனால் போதும் திருமணம் செய்து கொள்ளுமாறு பெரியதோர் விரிவுரையே செய்யத் துவங்கி விடுவார். இந்த நிச்சயதார்த்தம் அவர்களின் தலைமையில் நடக்க வேண்டும் என ஆசை கொண்டவன் அவர்களையும் அழைத்திருந்தான்.
“அக்கா அபிநவ் சார் வீட்டு கார் வருது..” என்று இனியாவின் அறையை பார்த்து ஏறக்குறைய கத்தும் குரலில் கூறிய வருண் தந்தை ஈஸ்வரனையும் இழுத்துக் கொண்டு படபடப்புடன் வாசலை நோக்கி விரைந்தான். ஈஸ்வரனுக்கு இந்த விஷயத்தில் அவ்வளவு ஈடுபாடு இல்லை தான் ஆனாலும் லலிதாவும் வருணும் கேட்டுக் கொண்டதிற்கிணங்க சாதாரணமாக இருந்தார்.
அதை உள்ளிருந்து கேட்டுக் கொண்டே தன்னறையில் டிரஸ்ஸிங் டேபிள் முன்னமர்ந்து பட்டுப்புடவை கட்டி ஆயத்தமாகிக் கொண்டிருந்த இனியாவுக்கோ வயிற்றில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்த அந்த கணம் அவளுள்ளே லேசாக படபடப்பு மிக தன்னைத் தானே கண்ணாடியில் பதற்றத்துடன் தன் ஒப்பனைகள் ஒழுங்காய் இருக்கிறதா? என தன் கன்னங்கள் இரண்டையும் வலப்புறமும் இடப்புறமும் திருப்பி சரி பார்த்துக் கொண்டாள்.
அன்று அவள் அபிநவ்விடம் கூறிய மறுநாளே இனியாவின் அன்னை லலிதாவை சந்திக்க வந்து விட்டான்.
“ஆன்ட்டி நான் உங்க பொண்ணை லவ் பண்றேன்.. அவளும் தான்.. உங்க மகளை உங்களை விட நான் நல்லா பார்த்துப்பேன்னு நம்பிக்கை இருக்கு.. எங்க காதல் மேல முழு நம்பிக்கை இருக்கு அவளை கண்கலங்காம பார்த்துப்பேன். உங்களுக்கும் அந்த நம்பிக்கை என் மேல இருந்தா இனியா கால் குணமானதும் நிச்சயத்தை வச்சிக்கலாம்..” என்று அபிநவ் கேட்ட விதமும் அவன் கண்களில் தெரிந்த உறுதியும் நம்பிக்கையுமே அவனது காதலின் ஆழத்தை சொன்னது.
அவரும் தன் மகள் ஆசைக்கு குறுக்கீடாக நிற்க விருப்பம் இருக்கவில்லை. அவருக்கும் காதலை பற்றியும் இணைய முடியாமல் போனால் அது தரும் மரண வலியை பற்றியும் நன்கு தெரியும்.
எப்போது அபிநவ் “ உங்க மகளை உங்களை விட நல்லா பார்த்துப்பேன். எங்க காதல் மேல முழு நம்பிக்கை இருக்கு ”என்று கூறினாரோ அதற்கு பிறகும் மௌனம் சாதிக்க மனமற்று,
“என் பொண்ணு சந்தோசம் தான் என் சந்தோசமும்.. எனக்கு ஓகே.” என்று கண்கள் உணர்ச்சி வசப்பட்டிருந்தாலும் மென்மையாக கூறிய தாயை கட்டியணைத்துக் கொண்டாள்.
அதன் பிறகு அவள் கால் குணமாகி அவள் சாதாரணமாக நடமாட துவங்கிய பின்னர் அடுத்த ஞாயிற்றுக் கிழமை நிச்சயதார்த்தம் என்று கூறியதும் தான் லலிதாவுக்கும் வருணுக்கும் கையும் ஓடவில்லை காலும் ஓட வில்லை. இவர்கள் இருவரின் வற்புறுத்தலின் காரணமாக ஈஸ்வரனும் இந்த வேலைகளில் கலந்து கொண்டார். ஆனால் அவருக்கும் மனதில் ஏதோ ஓர் மூலையில் மகிழ்ச்சி இருந்தது. காரணம் அவருக்கே புரியவில்லை.
இருந்தது குறுகிய கால இடைவெளியே ஆயினும் தன்னால் இயன்றவரை சிறப்பாகவே செய்தார். சமூகத்தில் பெரிய அந்தஸ்துள்ள குடும்பம் பெரும் வர்த்தகரும் பணக்காரரும் கூட. அவர் தங்கள் மகளை விரும்பி மணப்பதை எண்ணி உள்ளே பெருமை மிகுந்தாலும் அவர்கள் அளவுக்கு தங்களால் செய்ய முடியுமா? என்ன இருந்தாலும் பெண்ணை பெற்றவளாயிற்றே.
அதனால் விளைந்த சிறிய தாழ்வு மனப்பான்மையும் தனக்குள்ளேயே மறைத்துக் கொண்டு, மகளின் சந்தோசத்திற்காக ஆவண செய்திருந்தார்.
அபிநவ் எளிமையாக அவர்கள் குடும்பமும் தங்கள் குடும்பமும் மட்டுமென நிச்சயதார்த்தத்தை மிக எளிமையாக நடத்தி விடலாம் என்று கூறி விட, மாப்பிளையின் கோரிக்கையை மறுக்க முடியாமல் எளிமையாகவே ஏற்பாடுகள் அனைத்தையும் செய்திருந்தார்.
தெருமுனையில் காரை தரித்து விட்டு அவன், விக்ரம், அவனது பெற்றோர் மற்றும் ஆரவ் என்று அவர்கள் மட்டும் முகம் நிறைய புன்னகையுடனும் கை நிறைய தட்டு பழத்துடனும் புடவையுடனும் வர வாசலை தாண்டி வந்து இரு கரம் கூப்பி மகிழ்ச்சியுடன் “ வணக்கம் வாங்க.. வாங்க..” என்றவாறு ஈஸ்வரனும் வருணும் உள்ளே வரவேற்றனர்.
அபிநவ்வை முதன் முறையாக மிக அருகில் கண்ட ஈஸ்வரனுக்கு ஏனோ அவருக்கு ரொம்ப பிடித்துப் போயிற்று. அதைத் தொடர்ந்து வந்த லலிதாவும் அவர்களை வரவேற்க வருண் அபிநவ்வையே பார்த்துக் கொண்டிருந்தான்.
சினிமாக்களில் வரும் மாப்பிள்ளை போல் பட்டு வேஷ்டியும் சட்டையும் அணிந்து வரக்கூடும் என்ற எதிர்பார்த்திருந்தவனின் எதிர்ப்பார்ப்பை பொய்யாக்கும் முகமாக நீல நிற சர்ட்டும் டெனிமும் அணிந்து ரொம்பவே கேஷுவலாக ஸ்மார்ட்டாக வந்திருந்தவனை காண்கையில் தன் அக்காவின் தெரிவு மிகப் பிரமாதம் என்றே அவனுள் எண்ணம் மிகுந்தது.
உள்ளே வந்த விக்ரமின் தந்தை குருமூர்த்தியும் தங்களை வரவேற்ற இனியாவின் தாய் தந்தையை நோக்கி இரு கரம் கூப்பி “வணக்கம் சம்பந்தி” என்று கூறியமையால் விழிகள் பளபளக்க சந்தோசமாக வரவேற்று அமர வைத்தார் லலிதா.
வந்தவர்கள் அந்த குட்டி ஹாலில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்தனர். என்ன தான் இனியாவின் அவர்களின் வீட்டுடன் ஒப்பபிட்டுப் பார்க்க முடியா வண்ணம் சின்னதாக இருந்தாலும் அங்கிருந்தவர்களின் கண்களும் சரி மனங்களும் சரி அலட்சிய பாவனையை காட்டவில்லை.
“என்ன சம்பந்தி அப்படி பார்க்குறீங்க விக்ரம் ஆர்த்தியை போல அபிநவ்வும் ஆரவ்வும் எங்களோட சொந்த பிள்ளைகள் மாதிரி தான்.” என்று குருமூர்த்தி கூற அதை ஆமோதிக்கும் முகமாக ஜெயவாணியும்,
“ ஆமா.. அபி எங்க ரெண்டு பேரையும் அம்மா அப்பானு தான் கூப்பிடுவான்.. இந்த ஆரவ் இருக்கானே அவன் என்னை மம்மினு தான் சொல்லுவான்.” என்று இருவரையும் பார்த்து புன்னகைத்தவர் தொடர்ந்து,
“என் பொண்ணு ஆர்த்தி மட்டும் தான் இல்லை. மாப்பிள்ளை கூட சிங்கப்பூர்ல இருக்கா. அவளுக்கு தான் அபிநவ் கல்யாணம் பண்ணி பார்க்கனும்னு ரொம்ப ஆசை. ஆனால் கல்யாணத்துக்கு எப்படியும் வர்றேன்னு சொல்லி இருக்கா..”என்று தன் குடும்பம் பற்றிய பேச்சை பேசிக் கொண்டே போக லலிதாவுக்கும் வருணுக்கும் சகஜமாக உரையாடும் இவர்களை ரொம்பவும் பிடித்துப் போனது. ஈஸ்வரனுக்கும் தான்.
எல்லோரையும் விட அபிநவ் தான் அன்று கொஞ்சம் சந்தோசப் படபடப்பில் இருந்தான்.இன்று அவனுடைய நிச்சயதார்த்தம். இத்தனை நாள் தன்னவளுக்காக காத்திருந்தவனின் காதலுக்கு கிடைக்கப் போகும் முதல் பரிசு அவனுடைய நிச்சயதார்த்தம். அவள் எனக்கே எனக்கு மட்டும் சொந்தமாகப் போகிறாள் என்ற எண்ணம் மேலோங்க அவனுடைய கண்கள் தன்னவளை தேடின.
அவளைக் காண அவன் மனம் தவியாய் தவித்துக் கொண்டிருந்தது. அந்த சோபாவில் அமர்ந்திருந்தவன் கையால் நாடியை தடவிய வண்ணம் தலையை உயர்த்தி ஹாலோடு இருக்கும் அறைக்கதவினுள் கண்கள் அலை பாய அவளை தேடினான்.
அண்ணன் தலையை உயர்த்தி அறையின் கதவை தாண்டி தேடுவதை கண்ட பக்கத்தில் அமர்ந்திருந்த ஆரவ் தன் உள்ளங்கையால் உதடுகளை துடைப்பது போல் வாயருகே கொண்டு வந்து இடப்புறம் சாய்ந்து அவன் காதருகே “அண்ண்ணா.. கண்ட்ரோல் ..” என்று பற்களை கடித்த வண்ணம் மெல்லிய குரலில் கூற மெல்லத் திரும்பி தம்பியை பார்த்தான். பிறர் கூறும் அளவுக்கா அவள் வருகைக்காக ஏங்குகிறோம் என்று தோன்ற குரலை செருகிய வண்ணம் சாதாரணமாக அமர்வது போல் சாய்ந்து விறைப்பாய் அமர்ந்து கொண்டான் அபிநவ்.
அவள் ஏன் தான் வந்த பின்பும் தன்னை காண வரவில்லை. தன் முன்னே வர அவளுக்கு அத்தனை வெட்கமா? என அவ் ஆண்மகனின் உள்ளம் ஆதவனை காண நாடும் தாமரை போல ஆவலுடன் காத்துக் கிடந்தது. ஒரு நொடியும் யுகமாய் கடக்க, “எங்கே அத்தை இனியா” என்று கேட்டு விடலாமா என்று கூட ஒரு கட்டத்தில் தோன்றியது.
அவனுக்கு எதிரே அமர்ந்திருந்த ஜெயவாணி அபிநவ்வின் காத்திருப்பை கண்டு கொண்டவர், இனியாவின் அன்னை லலிதாவை நோக்கி,
“எங்கே என் மருமகள் சம்பந்திமா..” என்று கேட்க அபிநவ் அவரை நன்றியுணர்வுடன் நோக்கினான்.
“அவ ரெடியாகிட்டு இருக்காமா.. இதோ இப்போ வருவா” என்றவர் அறைப் பக்கம் “திரும்பி நிராஷாமா இனியாவை அழைச்சிட்டு வா மா” என்று குரல் கொடுக்க இனியாவுக்காக காத்திருக்கும் அபிநவ் போல அங்கே இன்னொரு ஜீவனும் தன் காதலி மதிமுகம் பார்க்க ஆவலாக இருந்தான். ஆமாம் அது விக்ரமே தான்.
அவளை ஆயத்தப்படுத்தி இரு தோள்களையும் பற்றிய வண்ணம் ஹாலை நோக்கி கூட்டி வர, அன்னப் பதுமை போல நடந்து வந்தாள் அவள். தன்னவனின் முன்னிலையில் கிட்டத்தட்ட மணக்கோலத்தில் செல்வதை எண்ணுகையில் பெண்களுள் பொதுவாக தோன்றும் நாணம் அவளிடம் குடியேறியது.
மெல்ல தலையை குனித்த வண்ணம் ஹாலுக்கு வந்தவளுக்கு அபிநவ்வை நிமிர்ந்து பார்க்கவே கூச்சமாக இருந்தது. ஆனால் அபிநவ்வோ அந்த பொன் வண்ண ஜரிகையிட்ட பட்டில் அழகுப் பதுமை போல வந்து நின்றவளைக் கண்டு தன் சுற்றம் மறந்தான். அவன் கண்களின் விழித்திரைக்குள் அவள் மட்டுமே விழ காதல் பித்தனாய் மாறிப் போனான் அபிநவ்.
சட்டென தலையை உயர்த்தி சில வினாடிகளுக்கும் குறைவாக வெட்டும் மின்னல் போல பார்த்த அந்த பார்வையில் என்னென்னவோ தோன்ற அவளைக் கண்டு அவன் நெஞ்சம் அலைபாயத் தொடங்கியது. அவனது நண்பன் விக்ரம் அவனது வழிதலைக் கண்டு தன் முழங்கையால் ஓர் குத்து விட நிஜ உலகுக்கு வந்தான் அபிநவ்.
அங்கிருந்த ஜெயவாணிக்கு அவளைப் பார்த்ததும் பிடித்து விட அருகில் அமர்த்திக் கொண்டார். ஆரவ்வுக்கும் தன் அண்ணியை ரொம்ப பிடித்துப் போனது. அண்ணன் காதருகே குனிந்தவன், “அண்ணா நீ என்னை அண்ணிக்கு இன்ட்ரடியூஸ் பண்ணவே இல்லையே. பண்ணுண்ணா..” மெல்லத் தணிந்த குரலில் அவனிடம் முறையிட, ரொம்ப முக்கியம் என்று எண்ணியவன்,
“இனியா ஹீ இஸ் மை பிரதர் ஆரவ்.. லண்டன்ல எம்.பி.பி.எஸ் முடிச்சு இன்டர்ன்ஷி பண்ணிட்டு இருக்கான்.” என்று அவனை அறிமுகம் செய்து வைக்க அவள் இவனை பார்த்து சிநேகமாய் புன்னகைக்க ஆரவ்வும் புன்னகைத்தான்.
அதன் பிறகு நடந்ததெல்லாமே ஓர் கனவில் நடந்தது போல் தோன்றிற்று அவளுக்கு. அவள் விரல்களை பற்றி போட்டு விட அதே சமயம் அவன் விரல்களை தொட்டு மோதிரம் அணிவித்த பின் அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க அவனை போலவே அவளும் முகம் பிரகாசித்து நின்றாள்.
“இன்னும் ஒரு மாசத்துல கல்யாணத்தை வச்சிக்கலாம் ஆன்.. அத்தை..” என்று அபிநவ் கூற,
“சரிப்பா.. பொண்ணுக்கு என்னென்ன செய்யனும்னு சொன்னீங்கன்னா..” என்று முறையாக செய்ய வேண்டிய தாய் வீட்டு சீர் பற்றி ஈஸ்வர் மற்றும் லலிதா இருவரும் கேட்க, அவசரமாக இடையிட்டு தடுத்த அபிநவ்,
“அத்தை..என் இனியாவை மட்டும் கட்டிக் கொடுத்தா எனக்கு போதும்.. என்னோட இனியாவுக்கு எல்லாமே என்னால செய்ய முடியும். அன்ட் அவளுக்கு நான் தான் எல்லாமே செய்வேன் நீங்க இதை பத்தி யோசிக்கவே வேண்டாம்” என்று அவன் கூறிய விதத்தில் லலிதா மற்றும் வருணின் கண்கள் தங்களையும் மீறி குளமாகின. ஏன் ஈஸ்வரனையும் கூட ஒரு கணம் அசைத்துப் பார்த்தது.
“அன்ட் என் இனியா மூலமா எனக்கும் என் தம்பி ஆரவ்வுக்கும் ஒரு குடும்பம் கிடைச்சிருக்கு அதுவே போதும்..” என அவன் கூற அங்கிருந்த அனைவருமே அவனை வியந்து நோக்கினர். ஆரவ்வுக்கும் கண்கள் கலங்கித் தான் போனது.
இனியாவுக்கோ தன்னவனின் காதலை எண்ணி மெய்சிலிர்த்து போனாள். இன்று அவனில்லாத வாழ்க்கையே வேண்டாம் என்னும் நிலையில் இருக்கிறாள். அதற்கு காரணம் அவனுடைய காதல் தானே. அவன் காதல் சமுத்திரத்தை விட ஆழமானது. எதையும் மாற்றும் வல்லமை கொண்டது.
அவனுடைய அலுவலகத்தில் கான்பரன்ஸ் அறையில் அபிநவ் ஆதித்யன் கணினித் திரையூடான விளக்கங்களை நீண்ட நீளமுனை மேற்பரப்புள்ள அகலமுனையில் அமர்ந்து தன்னுடைய சொகுசு நாற்காலியில் நேர்ப் பார்வையுடன் கம்பீரத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய உதடுகள் சாதாரணமாக இருந்தாலும் அவனுடைய கண்களோ கோபத்தில் சிவக்க தன்னைத் தானே சமரசப் படுத்திக் கொள்ளும் நோக்கில் அடிக்கடி மேசை மீதிருந்த தண்ணீர் கிளாஸை எடுத்துக் குடித்துக் கொண்டிருந்தான்.
இவனுடைய இத்தனை கோபத்திற்கு காரணம் அக் கணினித் திரையில் காணப்பட்ட சில புகைப்படங்களில் இருக்கும் ரமேஷ் எனப்படும் ரமேஷ் செனவிரட்ன தான். இவன் தற்போது எங்கிருக்கிறான் என்பதை தெரிந்து கொள்வதற்காக விக்ரமிற்கு மிகவும் நெருக்கமான ஒருவரை வைத்து இந்த வேலையை செய்திருந்தான். அதன் மூலம் அவன் தற்போது சிங்கப்பூரில் இருப்பது தெரிய வந்தது. அவனை இப்போதே அடித்து துவம்சம் செய்து விட தோன்றிய எண்ணத்தை மிகவும் கடினப்பட்டு அடக்கிக் கொண்டிருந்தான். வந்த அம் மனிதன் அபிநவ்வுக்கு தேவையான தகவல்களை வழங்கிக் கொண்டிருந்தான்.
அந்நேரம் அவனது கைப்பேசி சிணுங்க அதை எடுத்துப் பார்த்தவனின் முகம் மகிழ்ச்சியில் விகசித்தது. திரையில் தெரிந்த அவளது பெயர் கூடவே அன்று அவர்கள் நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட இருவரும் சேர்ந்து நிற்கும் புகைப்படமும் விழுந்தது. மூன்று நாட்களுக்கு முன்பு இவளுக்காக பார்த்து பார்த்து பல ஏற்பாடுகளை செய்திருந்தவன் வெளியே அழைத்துச் செல்ல ஆசைப்பட்டான். ஆனால் அவளோ இன்று தனக்கு வரவே முடியாது என மறுத்துவிட அதில் மனமுடைந்தவன் இது நாள் வரை அவளுக்கு அழைப்பெடுக்கவுமில்லை, சந்திக்கவுமில்லை.
அங்கிருந்த அம்மனிதனை நோக்கியவன், “மிஸ்டர். பிரகாஷ்.. கொஞ்சம் வெளியே வெயிட் பண்றீங்களா?” என்று அவன் கேட்க சரி என்றவன் அவ்வறையை விட்டும் வெளியேறினான். அழைப்பை ஏற்றவன் எந்த உணர்ச்சியையும் காட்டாத குரலில், “சொல்லு” என்றான். மறுமுனையில் இருந்த அவன் இதயம் கவர் தேவதையோ கைபேசி வழியாக முத்த மழை பொழிய நாற்காலியில் இருந்து எழுந்து இடது பேன்ட் பாக்கெட்டினுள் போட்டு நின்று கொண்டான்.
“என் செல்ல கிறுக்கா.. ஏன்டா இப்படி படுத்துற? மூனு நாளா எவ்வளவு துடிச்சி போனேன் தெரியுமா..?” என அவனிடம் மூன்று நாட்களாக பேசாததால் துடித்துப் போனாளாமா? அதுவும் தனக்காக தவித்திருக்கிறாள் என்ற சந்தோஷம் மேலிட தனக்குள் சிரித்துக் கொண்டான்.
“சாரிமா நானும் உன் கூட அப்படி சண்டை போட்டிருக்க கூடாது.. சாரி மா இனி உன்னை ஹர்ட் பண்ணிட்டேன்..” என்று அவன் மன்னிப்புக் கேட்க,
“சரி விடுங்க அபி.. என்னை அடிச்சா கூட பரவாயில்லை பட் என் கூட பேசாம மட்டும் இருக்காதீங்க அதை என்னால தாங்க முடியாது அபி..” என்று அவள் உள்ளத்தில் ஏற்பட்ட வேதனையை கூற அவள் காதலனுக்குத் தான் தன்னவள் கவலை கொள்வதை தாங்க முடியுமா? இப்போதே அவளை அணைத்து ஆறுதல் படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை கட்டுப்படுத்தியவன்,
“ ஹேய் சாரி மா.. இப்போ நீ எங்கே இருக்க?”என்று கேட்க,
“இப்போ தான் ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்தேன்.. ஹேய் அபி உன்னை பார்க்காம மூனு நாளா தூக்கம் வரலைடா.. வேணும்னா இன்னைக்கு வெளியில போகலாமா ப்ளீஸ்.. என் செல்ல கிறுக்கால” என்று அவள் கேட்ட விதத்தில் அவனுக்கு தானாகவே சிரிப்பு மூண்டது. இனியா அப்படித் தான் திடீரென ஒருமைக்குத் தாவி விடுவாள். அதுவும் உணர்ச்சி வசப்படும் தருணங்களிலும் அவனுடன் காதல் மொழி பேசும் தருணங்களில் மாத்திரம் தான். எப்போதும் இப்படியே பேசு இது தான் பிடித்திருக்கிறது என்று கூறினாலும் மறுத்து விடுவாள். “அப்படி ஒரே சொன்னா கிக் இருக்காது அபி. எனக்கு எப்போலாம் டா போடனும்னு தோணுதோ அப்போ மட்டும் தான் சொல்லுவேன்.” என முடிவாக கூறி விட்டாள். இதுவே அவனுக்கும் பிடித்திருந்தது.
அவன் அருமை காதலி இப்படி கிளி போல் கொஞ்சிப் பேசினால் எந்த காதலனால் மறுக்கத் தோன்றும். “ஓகே ஸ்வீட்டி ஈவ்னிங்க போர் தர்ட்டிக்கு உன்னை பிக் அப் பண்ணிக்குறேன் ரெடியா இரு மா..” என்று அவன் கூறியதும் தான் தாமதம் மறுபடியும் முத்த மழை பொழிந்தவள் சரி என்று கூறி சந்தோசமாகவே அழைப்பை துண்டித்தாள். அவள் தந்த செல்போன் முத்தத்தின் விளைவால் அவனுள் ஏற்பட்ட இரசாயன மாற்றங்களை கட்டுப்படுத்த வெகு சிரமமாய் போயிற்று அவனுக்கு.
லலிதாவும் ஈஸ்வரனும் அந்நேரம் வெளியில் சென்றிருக்க வருணும் இனியாவும் மட்டுமே வீட்டில் இருந்தனர். அக்காவை கண்டபடி கலாய்த்துக் கொண்டிருந்தான் வருண். அவளும் அதற்கு சளைக்காமல் பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தாள்.
“மாமா கூட அவுட்டிங் செம போ.. நல்லா வயிறு முட்ட கொட்டிக்கிட்டு வர தானே போற.. நீ சாப்பிட்றதை பார்த்தே மாமா பயந்து ஓடி போயிடப் போறாருக்கா பீ கேர்ஃபுல் ஹாஹா..” என்று அவளை கலாய்த்துக் கொண்டிருந்தான்.
“ஆமா.. அப்படி சாப்பிட்டு தான் இவ்வளவு உடம்பு வளர்த்து வச்சிருக்கேன். போடா கிரவுண்ட் போகனும்னு சொன்னல நீ போ.. நான் குளிக்கனும் என்றவள் வருணின் தலையை கொட்டி விட்டு குளியலறையினுள் புகுந்து கொண்டாள்.
சிறிது நேரத்தின் பின் குளித்து விட்டு வந்தவள் வீட்டில் யாரும் இல்லாத காரணத்தினால் ஹாலுக்கு வந்து தொலைக்காட்சியை இயக்கி ஒவ்வொரு மியூசிக் சேனலாக மாற்றிக் கொண்டிருந்தாள்.
சன் மியூசிக் சேனலில் அவளுக்கு பிடித்த நடிகரான சூர்யாவின் ‘அடியே கொள்ளுதே’ பாடல் போய் கொண்டிருக்க அப்படியே அந்த பாடலின் துள்ளல் இசைக்கு ஆடத் தான் தோன்றியது. தலையை துவட்டியபடி வந்தவளின் கைகளில் இருந்த டவலை கிட்டார் போல வைத்தவள் அந்த பாடலில் சூர்யா ஆடுவது போல பாடலை கத்திப் பாடிய வண்ணம் குதித்து குதித்து நடனம் ஆடிக் கொண்டிருந்தாள்.
அக்கணம் வீட்டின் அழைப்பு மணி அடிக்க தொலைக்காட்சியின் சத்தத்தை கொஞ்சம் குறைத்தவள் , “மம்மி கதவு திறந்து தான் இருக்கு. கம் இன்” என்று கத்தி விட்டு மீண்டும் ஆட்டத்தை துவங்கினாள். வெளியே சென்றிருந்த அம்மா தான் வந்திருக்கிறார் என்ற நினைப்பில் அவள் பாட்டுக்கு ஆடிக் கொண்டிருந்தாள். இது அவளும் வருணும் அடிக்கடி செய்யும் கூத்து தான். சில சமயம் லலிதா இந்த கூத்தில் எரிச்சலடைந்து சத்தம் போடுவதுண்டு. பல சமயம் அதை கண்டு கொள்ள மாட்டார். அந்த எண்ணத்தில் அவளுக்கு வந்திருப்பது யாரென்று கூட பார்க்க தோன்றவில்லை.
“என்ன மம்மி கிட்டார் டான்ஸை பார்த்து மயங்கிட்டீங்களா? என்னோட டான்ஸ் எப்படி இருக்கு மம்மிஈஈஈஈ” என திரும்பிப் பாரக்காமல் ஆடிய வண்ணம் பின்நோக்கி வந்தவள் தனது கூந்தலை சிலுப்பிய வண்ணம் திரும்ப, எதிரே நீல நிற டெனிமும் அவனது உடலை இறுக்கிப் பிடித்த வண்ணம் ஃபுல் ஸ்லீவ் டீ சர்ட்டுமாய், கைகளில் அவனது கைப்பேசியுடன் சிரித்த முகமாய் நிற்பதை கண்டு மலங்க மலங்க விழித்தாள்.
டவலை அழுந்தப் பற்றியபடி அப்படியே நின்றாள். அவனுடைய கண்களோ அவளை அக்கு வேராய், ஆணி வேராய் ஆராய்ந்து கொண்டிருந்தன. அவள் குளித்து முடித்து விட்டு அணிந்திருந்த நீளக் கை சட்டை அவளது தொடை வரை தான் அவளை மூடியிருந்தது.
இந் நேரத்தில் இவன் இப்படி வருவான் என்று யோசிக்கவே இல்லை. தானாகவே அவள் கண்கள் சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தை பார்த்தது.
“எ..என்ன அபி.. நீங்க இப்..பவே வந்துட்டீங்க? இ..இப்போ தானே நாலு மணி..” என்று நா தடுமாறியபடி அவள் கேட்டது அவன் கருத்தில் பதியவே இல்லை. அவனது எக்ஸ்ரே கண்களோ அவள் உடல் அங்கங்களில் ஆங்காங்கே பதிய கூசிக் குறுகிப் போனாள். பார்வை சென்ற இடங்கள் அவனை கிறங்க வைக்க அவளை நோக்கி ஒரு எட்டு முன்னேற சட்டென ஓடியவள் சோபாவின் பின்னே ஓடி மறைந்து நின்றாள்.
தன்னைத்தானே கட்டுப் படுத்திக் கொண்டவன், தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த கண்களை மூடித் திறந்தான். பிறகு அவளை பார்த்தவன் அவள் அசடு வழிய நிற்பதைப் பார்த்து ஒரு குபீர் சிரிப்பு எட்டிப் பார்த்தது.
“ஹேய் உன்னோட கிட்டார் டான்ஸ் சூப்பரா இருந்துச்சு. என்னோட ஸ்வீட்டிக்குள்ள இப்படி ஒரு திறமை இருக்குனு தெரியாம போச்சே.. கிட்டார் பேபி..” என்றவன் மேலும் நகைக்க அவளுக்கோ பேச வார்த்தை வரவில்லை.
“சரி நீ போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா போகலாம்..” என்று கூற அவளோ ஒன்றும் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள். ஏன் என்று புரியாதவன் கண்களால் என்ன என்பதைப் போல் பார்க்க,
“அது அபி.. நீங்க கொஞ்சம் வெளியே இருக்கீங்களா? உங்க முன்னாடி எப்படி இப்படியே போறது? நான் ரூமுக்கு போனதும் உள்ளே வந்து வெயிட் பண்ணுங்க..” என்று கூறியதும் தான் தாமதம் அவன் கண்களில் காதல் மறைந்து அனல் பறந்தது. அவள் அவனை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாள். அவளை இந்தக் கோலத்தில் பார்த்ததும் அவள் மேல் பாய்ந்து விடுவேன் என பயப்படுகிறாளா?
அன்றொரு நாள் ஏதோ ஓர் உணர்ச்சி வேகத்தில் அவளிடம் அத்துமீறி நடந்ததற்காக இன்றும் அவனை அப்படி எண்ணிவிட்டாளா? அதனால் தானே நிச்சயமான பிறகும் கூட இன்று வரை இதழ் முத்தம் ஒன்றை மாத்திரம் வழங்க முனையவில்லை. பிறகு ஏன் என்னை இப்படி கீழ்த்தரமாக நினைத்துவிட்டாள்? என்ற ஆதங்கத்தில்,
“ஏன் இனியா நான் உன்னை இப்படி பார்த்ததும் உன் மேல பாஞ்சிடுவேனு நினைச்சிட்டியா? கட்டிக்க போறவங்குற உரிமையில தான் உன்னை பார்த்தேனே தவிர தப்பான நோக்கத்தோட இல்லை. ஐ வில் நெவர் டச் யூ வித் அவுட் யோர் பர்மிசன் ஓகே” என்று கத்த ஒரு கணம் மிரண்டவள் சுதாரித்து, அவனருகில் வந்து ,
“சாரி அபி.. உன்னை நான் அப்படி நினைக்கலை.. வெயிட்பா நான் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடறேன்.” என்றபடி அங்கிருந்து நகர்ந்தாள்.
இது பெண்களுள் இயற்கையாக இருக்கும் வெட்க உணர்வு தானே. அதை போய் இப்படி எண்ணிக் கொண்டானே அவள் காதலன். அப்பப்பா.. என்னவொரு கோபம் அவன் கோபத்திலும் அழகாய் இருப்பதாய் தோன்ற, உடை மாற்றி விட்டு வெளியே வந்தாள்.
அவனோ எதுவும் பேசாமல் முகத்தை ‘உம்’ என்று வைத்தபடி சோபாவில் அமர்ந்து கொண்டிருந்தான். அதை பார்த்தவளுக்கு சிரிப்புத் தான் வந்தது. அவனருகில் வந்து மண்டியிட்டமர்ந்தவள், அவன் வலிமையான நாடியை பற்றி தன் பக்கம் திருப்பினாள்.
“சாரிடா… என்னோட கிறுக்கனை நான் தப்பா நினைப்பேனா? உன்னை ஹர்ட் பண்ணியிருந்தா சாரிடா.. இனி இப்படி நடந்துக்க மாட்டேன் ப்ரோமிஸ்..” என்று அவள் மன்னிப்புக் கேட்டுக் கெஞ்ச அப்போது தான் அவன் பார்வை அவளை நோக்கியது.
அவள் முகத்தில் மிளிர்ந்த அழகை கண்டு ஒரு கணம் மெய் மறந்து நின்றாலும், அவன் கோபம் குறையவில்லை என்பது அவனை பார்த்த மாத்திரத்திலேயே விளங்கியது. “என் செல்ல கிறுக்கால்ல” என்றவள்,அவன் எதிர் பாராத நேரத்தில் அவனது கண்ணத்தில் இதழ் பதித்தாள். சோபாவில் இருந்து கம்பீரமாய் எழுந்தவனது முகம் மலர்ந்திருந்தது. அவளது இந்த ஒரு அழைப்புக்காகவே அவளுடன் அடிக்கடி பொய்க் கோபம் காட்டலாம் என்றே தோன்றியது அவனுக்கு.
“ சரி வா ஸ்வீட்டி கிளம்பலாம்.” அதே முகமலர்தலடன் கைப்பற்றி அழைக்க, அவன் முகம் மலர்ந்திருந்ததை கண்டு தானும் மலர்ந்தவள்,
“ நாங்க இப்போ எங்கே போறோம் அபி?” என்று அவன் கையை பற்றியிழுத்தபடி அவனை வெளியே அழைத்து வந்தாள்.
அவள் கண்களைப் பார்த்து வசீகரப் புன்னகை ஒன்றை சிந்தியவன், அவளை தோளோடு அணைத்தவாறு காரை நோக்கி நடந்தான்.
தொடரும்..
அன்புடன் அபிநேத்ரா..❤
Comments are closed here.