Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Regular-Update உயிரே உருகாதே....

Megala Pazhaniyappan

Active member
Saha Writer
Messages
36
Reaction score
31
Points
33
காதல் இல்லாம எந்த மனிதனும் இல்ல. அந்த காதல் ஒருத்தியை எப்படி எல்லாம் மாற்றும். எப்படி எல்லாம் பித்து பிடிக்க வைக்கும்.அவள் உயிரையே உருக வைக்குமா.. இதோ இந்த மீராவின் காதல் என்ன செய்கிறது பாருங்கள்.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

************************
அவனது கையணைப்பிற்குள் அவனது மார்போடு ஒன்றியிருந்தவளை அவன் குரல் அழைத்தது.

"ஓய் கண்ணம்மா இங்க பாருடி..."

அவனை நிமிர்ந்தும் பார்க்க அவளால் இயலவில்லை. அவனது கைஅணைப்பிற்குள்ளேயே கரைந்துவிட மாட்டோமா என்பது போல் அவன் சட்டையை இன்னும் இறுக்கமாய் பற்றி மார்புக்குள் மேலும் ஒன்றினாள்.

அவளது அணைப்பு அவன் மீதுள்ள அவளின் அதீதகாதலை அப்பட்டமாய் வெளிப்படுத்தியது. அவள் உச்சஞ்சதையில் அழுந்த முத்தமிட்டவன் நெஞ்சோடு சேர்த்து ஒரு சிசுவை பொத்தி வைத்து காக்கும் தாயாய் அவளை தன் நெஞ்சுக்குள் பொத்தி புதைத்துக் கொண்டான் கிருஷ்ணா.

அவன் கைக்குள் இருந்தபடியே "கிருஷ்ணா.." என்றழைத்தாள்.

"ம்ம்..."

என்னை எப்பவும் இப்படியே பாத்துப்பியா கிருஷ்ணா...

அணைப்பு விலகாமலேயே ஒரு கையால் அவள் முகவாய் பற்றி நிமிர்த்தியவன்

"என்னடா..." என்றான் வாஞ்சையாய்

"உன்னை நான் ரொம்ப கஷ்டபடுத்துறேனா கிருஷ்ணா..."

ஏய்.. லூசா டி நீ.‌.. உன்னை நான் பாத்துக்காம வேற யார் பார்த்துப்பாங்க... என் செல்லத்த பாத்துக்கறதை விட வேறென்ன எனக்கு வேலை இருக்கு. இந்த மண்டைக்குள்ள இருக்க குட்டி மூளைய ரொம்ப கசக்காம ஒழுங்கா மேரி சிஸ்டர் பேச்சை கேட்டு மெடிசின் போட்டுக்கோ.. அடம் பிடிக்காதே டி.. என அவளை எட்டி நிறுத்தினான்.

அவன் கண்களை நேருக்கு நேராய் பார்த்தவள் கண்கள் கலங்கி இருந்தது. அதை பார்த்த கிருஷ்ணாவின் முகம் இறுகியது.

"பார்த்தியா கோவப்படுற..." என மீண்டும் அவனோட அவள் ஒன்ற

அவள் தோள் பற்றி அவளை விடுவித்து எட்டி நிறுத்தியவன்

இங்க பாரு மீரா. நீ ஒன்னும் சின்ன குழந்தை இல்ல‌. நான் இல்லேன்னாலும் நீ இருக்கனும். எல்லாத்துக்கும் என்னை எதிர்பார்க்க கூடாது. ஒரு சாதாரண விஷயத்துக்கு கூட இப்படி இருந்தா எப்படி டீ என சலித்துக் கொள்ள மீராவுக்கு அவன் வார்த்தைகள் வலியைக் கொடுத்தது.


****************************

நடக்கத் தொடங்கியவளின் நினைவு மீண்டும் கிருஷ்ணாவிடமே சென்றது. பெங்களுர் சாலைகளில் அதிகாலை காற்று முகத்தில் மோத இந்த நடைநயிற்ச்சியை கற்று கொடுத்தது அவன் தானே.

இப்படி ஏழரை வரை தூங்காத பேபி... நாளைலேர்ந்து என்னோட வாக்கிங் வா என்று சொன்னதோடு நில்லாமல்.. அதை மறந்துவிட்டு உறங்கிய அவளை அவளது விடுதிக்கு வெளியே இருந்து அலைபேசியில் எழுப்பி அழைத்துச் செல்வதை வழக்கமாக்கியவன்.

கீஈஈஈஈஈஈஈ... என ஹார்ன் அடித்தபடி அவளை கடந்த இருசக்கரவாகனத்தை கண்டு மிரட்சியோடு இவள் ஸ்தம்பித்து நிற்க..

'ஹேய் பேபி ரோட்ல பாத்து வாடி. அப்படி என்னதான் யோசிப்பயோ..' என அவன் கடிந்து கொள்ளும் வழக்கமான வசனமாய் அவனது குரல் அங்கேயும் அவள் காதுகளில் ஒலித்தது‌.

தலையைபிடித்தபடி சாலையோரமாய் அப்படியே நின்றாள்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

இன்று முதல் வாரம் இருமுறை மீராவின் காதலோடு பயணிப்போம்.
 

Megala Pazhaniyappan

Active member
Saha Writer
Messages
36
Reaction score
31
Points
33
உயிரே உருகாதே!


அத்தியாயம் - 1


பொள்ளாச்சியிலிருந்து டாப்ஸ்லிப் செல்லும் வழியில் ஒர் அழகான மலையோர கிராமம். காலை பொழுதின் ஈரக்காற்று மேகமாய் தவழ்ந்து வந்து மீராவின் மேனியைத் தழுவிச் சென்றது. தலைக்கு ஒரு குல்லாயும், குளிருக்கு ஒரு சால்வையையும் போர்த்தியவாறு கையில் இருந்த கோப்பையில் உள்ள காப்பியை ரசனையற்று கடனேவென அருந்திக் கொண்டிருந்தாள் மீரா.



இந்நேரம் என் கிருஷ்ணா இருந்திருந்தால் 'ஏய் கண்ணம்மா அங்கே பாரேன் அந்த மேகம் எவ்ளோ அழகா ஒரு முயல்குட்டியாட்டம் வேகமா வந்து பிறகு நின்னு நிதானிச்சு தவழ்ந்து வருதுன்னு...' ஒவ்வொன்னுக்கும் கவிதையா ஒரு கதை சொல்வான். அவனில்லாத இந்த இரண்டு மாதங்கள் அவளுக்கு இரண்டு யுகங்களாய் கடந்திருந்தது.


"ப்ச் ...." சலிப்போடு காப்பி கோப்பையை காலி செய்ய முயன்றாள். அடிக்கின்ற ஈரக்காற்றில் காப்பி சில்லிட்டு போயிருக்க அதை அருந்த பிடிக்காமல் கீழே ஊற்றிவிட்டு வீட்டினுள் செல்ல முயன்றாள்.



"ஏனுங்கா காப்பி புடிக்கலீங்களா..." என்றவாரே தண்ணீர் குடத்தோடு எதிரே வந்து நின்றாள் பதினைந்து வயது தங்கம்.



சட்டென அந்த சிறுமியின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென தெரியமல் விழித்தாள் மீரா.


"காப்பி ஆறிப் போய்டுச்சுங்களா.." தங்கமே மறுகேள்வியும் கேட்டாள்.



'ஆம்..' என மீரா பதிலாய் தலையசைக்க


"நா வேணா வேற காப்பி போட்டு தரட்டுங்களா.." என அக்கறையாய் கேட்டாள் அந்த சிறுமி.



"வேணா நீ ஸ்கூல்க்கு கெளம்பு.." என்று மீரா கூற


தங்கம் நினைவு வந்தவளாய் பளிச்சென்ற சிரிப்புடன் "அக்கா ஸ்கூல்ல ஒரு கவிதை போட்டி இருக்கு. நா ஒன்னு எழுதிருக்கேன் அது சரியான்னு பாக்கறீங்களா.." என கண்ணில் ஆர்வம் மின்ன கேட்டபடி குடத்தை இறக்கி வைத்துவிட்டு உள்ளே ஓடினாள்.



"கண்ணம்மா இந்த கவிதையை படிச்சு பார்த்து சரியா இருக்கா சொல்லுடி. நேத்து ஒரு பென்சில் ஓவியம் பார்த்தேன். உடனே எழுதிட்டேன். நீ ஒருமுறை பார்த்துடேன்.. போஸ்ட் பண்ணனும்.." என கிருஷ்ணா கேட்பது அவளுக்கு நினைவு வந்து நெஞ்சை அழுத்தியது.



"இந்தாங்கக்கா.." என தங்கம் நீட்டிய நோட்டுபுத்தகம் அவளை கலைத்தது.



அவளது சேலை தலைப்பை கையில் பிடித்து விரலில் சுற்றியபடியே "எத்தனை தடவை டீ படிப்ப ... ஏதாவது சொல்லேன்..." என்றபடி அவளின் பதிலுக்காய் காத்திருக்கும் கிருஷ்ணாவின் நினைவிலேயே தங்கத்தின் கவிதையை வாசித்து முடித்தவள்


"நல்லாருக்கு.. நல்ல முயற்சி. எழுதிட்டே இரு. அப்பத்தான் இன்னும் நல்லா எழுதலாம்.." என்று கூற


தங்கத்திற்கு அவ்வளவு மகிழ்ச்சி. இந்த இரண்டு மாதத்தில் சேர்ந்தார் போல் நான்கு வார்த்தை மீரா பேசி தங்கம் கேட்டது இப்போது தான். மகிழ்ச்சியோடு "சரிக்கா..." என தலையாட்டியபடியே பள்ளிக்கு தயாராக ஓடினாள்.


காப்பி கோப்பையை அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் இருந்த நீரில் கழுவி அதன் மீதிருந்த பலகைமீது கவிழ்த்துவிட்டு, வழக்கம் போல தன் நடைபயிற்சியைத் துவக்கினாள். மீரா நடைபயிற்சி முடித்து வரும் முன் தங்கம் பள்ளிக்கு கிளம்பி இருப்பாள்.



நடக்கத் தொடங்கியவளின் நினைவு மீண்டும் கிருஷ்ணாவிடமே சென்றது. பெங்களுர் சாலைகளில் அதிகாலை காற்று முகத்தில் மோத இந்த நடைபயிற்சியை கற்று கொடுத்தது அவன் தானே.



"இப்படி ஏழரை வரை தூங்காத கண்ணம்மா... நாளைலேர்ந்து என்னோட வாக்கிங் வா.." என்று சொன்னதோடு நில்லாமல், அதை மறந்துவிட்டு உறங்கிய அவளை அவளது விடுதிக்கு வெளியே இருந்து அலைபேசியில் எழுப்பி அழைத்துச் செல்வதை வழக்கமாக்கியவன்.



"கீஈஈஈஈஈஈஈ..." என காது பிளக்க ஹார்ன் அடித்தபடி அவளை கடந்த இருசக்கரவாகனத்தை கண்டு மிரட்சியோடு இவள் ஸ்தம்பித்து நிற்க..


'ஹேய்... கண்ணம்மா... என்னடி.. ரோட்ல பாத்து வரமாட்ட.. அப்படி என்னதான் யோசிப்பயோ..' என அவன் கடிந்து கொள்ளும் வழக்கமான வசனமாய் அவனது குரல் அங்கேயும் அவள் காதுகளில் ஒலித்தது‌.



இரண்டு கைகளாலும் காதுகளை பொத்தியபடி சாலையோரமாய் அப்படியே நின்றாள்.


"பார்த்து போ கண்ணு கொள்ளைல போறவனுங்க, வண்டில ஏறிட்டா ஏரோப்பிளேனுல போறாதா நெனப்பு இவுனுங்களுக்கு‌ கட்டிதினிக.." என்றபடியே கூடவே இரண்டு கொங்குவட்டார கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்தார் அந்த வழியே வந்த பெண்மணி. அவளுருகே வந்து "பயந்துட்டயா சாமி.. ஆரு நம்ம முத்துச்சாமி வூட்டுக்கு வந்திருக்க ஒரம்பர தான.. சரி சரி பாத்து போ கண்ணு..." என்றபடியே நடந்தார்.


அவர் அவ்விடத்தை விட்டு அகன்றதும் அருகே மரத்தடியில் இருந்த கல்மீது அப்படியே அமர்ந்துவிட்டாள் மீரா. "இன்னும் பாதி தூரம் கூட நடக்கல அதுக்குள்ள உக்காந்தா எப்படி டீ..? வா.." என்று கைபிடித்து அழைத்திருப்பான் கிருஷ்ணா.


'ஒரு நொடி கூட உன்னை நினைக்காமல் என்னால் இருக்க முடியலையே கிருஷ்ணா. நீ எப்படி கிருஷ்ணா இருக்க..? நீயும் இருக்க முடியாம தான் தவிப்பேன்னு எனக்கு தெரியும்டா. ஆனா எனக்கு வேற வழி தெரியலயேடா.." நான் என்ன செய்வேன்.. என எண்ணியபடியே அவள் கண்கள் கலங்கியது.



"ஏய்... முதல்ல கண்ணைத் துடை.. எதற்கெடுத்தாலும் அழுகிறதை முதல்ல நிப்பாட்டு கண்ணம்மா. எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல.." என்று அவன் திரும்பி நிற்பது நினைவு வந்தது அவளுக்கு. கலங்கிய கண்களை அழுந்த துடைத்துக் கொண்டவள்


'அழமாட்டேன் கிருஷ்ணா.. நிச்சயமா அழமாட்டேன். நீ இல்லாம நான் இருக்க பழகனும். நீ இல்லாம நான் வாழப் பழகனும். எல்லாத்தையும் தனியா சமாளிச்சு எல்லாம் சரியான பின்னாடி தான் இந்த மீரா உன் முன்னாடி வருவா. ஆனா உடலால் மட்டும் தான் கிருஷ்ணா உன்னை விட்டு விலகிருக்கேன். என் உணர்வுகள் முழுக்க நீதானே இருக்க. நீ இல்லாமன்னு நான் எப்படி நினைக்கறது. சீக்கிரமா நீ சொன்ன மாதிரி தைரியமான பொண்ணா எதையும் தனியா போராடி சமாளிக்கிற பொண்ணா என்னை நான் மாத்திப்பேன். அப்போ தானே உன்கிட்ட வரமுடியும். ஆனா அதுவரை உன்னைவிட்டு எப்படி இருப்பேன் கிருஷ்ணா.." என்று மீண்டும் அவள் மனம் அவனையே நாடியது.


'இன்னும் எத்தனை நாட்கள் தாக்குப்பிடிப்பேன்னு தெரியலையே கிருஷ்ணா..' மருகி தவித்தாள் மீரா.


மீரா ரத்தினம் சுகந்தியின் ஒரே மகள். இளம் பிராயத்திலேயே தாயை இழந்தவள். தந்தை சென்னையில் ஆரம்பத்தில் சிறு சிறு வியாபாரங்கள் செய்து வந்தவர் மனைவியின் இழப்பில் நொந்து போனார். சிறு குழந்தையை வைத்துக்கொண்டு செய்வதறியாது தடுமாறியவரை ரத்தினத்தின் தமக்கை ஞானாம்பிகை ஆதரவாய் தாங்கி பிடித்தார்.



மீரா அத்தையின் அரவணைப்பில் வளர ஆரம்பிக்க ரத்தினம் மனைவியை இழந்ததாலோ என்னவோ வியாபர விசயமாக அடிக்கடி வெளியூர் செல்ல ஆரம்பித்தார். பின் வெளிநாடுகள் செல்ல ஆரம்பிக்க ஞானாம்பிகையின் பொறுப்பற்ற கணவர் மாணிக்கத்திற்கு வசதியாய் போயிற்று.


ரத்தினத்தின் வீட்டிலேயே நிரந்தரமாய் டேரா போட்டுவிட்டார். தாயற்ற குழந்தைக்கு தாயான ஞானாம்பிகை குடும்பம் ரத்தினத்திற்கு ஒன்றும் பெரிய பாரமாய் தெரியவில்லை. வியாபாரம் சம்பந்தமாய் வெளிநாடுகளுக்கு செல்ல ஆரம்பித்த ரத்தினம் மாதக்கணக்கில் அங்கேயே தங்கிவிட அது இன்னும் வசதியாய் போயிற்று மாணிக்கத்திற்கு.


மனைவி சுகந்திக்கு அவள் தாய் வீட்டில் சீதனமாய் கொடுத்த பணத்தில் இடத்தை வாங்கி போட்டார் ரத்தினம். மனைவியின் பிறந்த வீட்டு சொத்து என்பதாலேயே அந்த இடத்தை சுகந்தியின் பெயரிலேயே வாங்கினார். சுகந்தி சுற்றிலும் தோட்டத்தோடு வீடு வேண்டுமென்று கேட்க தன் மனைவியின் விருப்பப்படி ஆசை ஆசையாய் கட்டினார். அப்படி அவர் பார்த்து பார்த்து கட்டிய

வீட்டில் தன் மனைவி இல்லாமல் அவரால் இருக்க முடியாமலேயே போகும் போகும் என்று கனவிலும் எண்ணவில்லை. வீடு முழுவதும் சுகந்தியே நிறைந்திருந்தார். அதனாலேயே போகுமிடத்திலேயே நீண்ட அவர் தங்கிக்கொள்ள மாணிக்கம் வீட்டை ஆளத் தொடங்கினார்.



ஞானாம்பிகைக்கு ஒரு மகள் ஒரு மகன். சுந்தரேசன், சியாமளா இருவருமே மீராவை விட ஏழெட்டு வயதுக்கு மேல் மூத்தவர்கள். சியாமளா குணத்தில் தாயைக் கொண்டிருக்க சுந்தரேசன் அப்படியே தந்தையைக் கொண்டிருந்தான்.


மீராவுக்கென ரத்தினம் அனுப்பும் பணம் எதுவும் அவளுக்கு செலவு செய்யாமல் சீட்டு குடி என மாணிக்கம் செலவழிக்க ஞானாம்பிகை நொந்து போனார். தன் கணவனை பற்றி தன் தம்பியிடம் கூறவும் முடியாமல் உண்மை நிலையை மறைக்கவும் முடியாமல் தடுமாறிப் போனார் அம்பிகை.


சுகந்தி அவர் வீட்டை கட்டும் போதே சுற்றிலும் தோட்டத்திற்கென இடம் விட்டு தோட்டமும் அமைக்க தொடங்கி இருந்தால் அம்பிகை அதை இன்னும் பெருக்கி அழகாய் பராமறித்தார்.



அதில் வரும் கீரை காய்கறிகள் பழங்கள் பூக்கள் என வீட்டுக்கு போக மீதம் இருப்பவற்றை அக்கம் பக்கத்தினருக்கு விற்று அதில் வரும் பணத்தை மாணிக்கத்துக்கு தெரியாமல் மீராவுக்கு வேண்டியதை செய்வாள்.


தாயை இழந்த மீரா மாணிக்கத்தை பார்த்தாலே பயந்து நடுங்குவாள். அவரின் மிரட்டலும் "ஏ பொண்ணே.." என்ற அவரின் அதட்டுலும் கேட்டாலே அம்பிகையின் பின்னே மறைந்து கொள்ளுவாள். அம்பிகை காணப்படாத நேரங்களில் எல்லாம் மீராவை மிரட்டி வேலைகள் ஏவுவதை வாடிக்கையாக்கிக் கொண்டார். அந்த வீட்டின் வருங்கால எஜமானி மீரா அவளை மிரட்டி தன் கைக்குள்ளேயே வைத்துக் கொண்டால் கடைசி வரை தானே இந்த வீட்டை ஆளலாம் என்ற எண்ணம் மாணிக்கத்திற்கு. மகனும் அதையே பின்பற்ற பத்து வயது கூட நிரம்பாத மீரா பயந்து போனாள்.



ரத்தினம் வரும்போதெல்லாம் மகளுக்கும், தமக்கை பிள்ளைகளுக்கும் சேர்த்தே வாங்கி வந்தாலும் அவர் கண் மறைந்ததும் மீராவிடம் இருந்து பிடுங்கிக் கொள்வான் சுந்தரேசன். அவள் மறுக்கும் நேரங்களில் அவளை ஒரு தனியறையில் தள்ளி கதவை அடைத்து பூட்டி விடுவான். இருட்டு என்றாலே பயப்படும் மீரா அந்த இருட்டறை இன்னுமே பயமுறுத்த அதன் பின் சுந்தரேசன் கேட்பதை மறுக்காமல் கொடுக்கத் தொடங்கினாள். அந்த அளவிற்கு மாணிக்கமும், சுந்தரேசனும் அவளை பயமுறித்தி இருந்தனர். ஏற்கெனவே தாயை இழுந்த குழந்தை இன்னும் பயத்தில் உழன்றாள். அம்பிகை என்ன அடைகாத்தும் அது பயனற்று போனது.


தன் வீட்டையும் தன் மனைவி ஆசையாய் போட்ட தோட்டத்தையும் தன் மகளையும் அக்கறையாய் தமக்கை கவனித்து கொள்வதாலேயே மாணிக்கம் செய்யும் தகிடுதத்தம் தெரிந்தும் தெரியாதது போல் கண்டுகொள்ளாமல் விட்டார் ரத்தினம்.


அம்பிகையின் பிள்ளைகள் அரசு பள்ளியிலேயே படித்தனர். மீரா ஆரம்பத்திலேயே கான்வேண்டில் சேர்த்திருந்தார் அவள் தாய். வீட்டில் இருந்து சிறுது தொலைவு உள்ள பள்ளியிலேயே சுகந்தி தன் மகளை சேர்ந்திருந்தார். சிறு குழந்தை அதிக தொலைவு சென்று படிப்பதில் சுகந்திக்கு எப்போதுமே விருப்பம் இருந்ததில்லை. மகளிடம் கதை பேசியபடியே அழுத்து வந்து விட்டுவிட்டு மாலை வந்து அழைத்து செல்லவேண்டும் என்றே அருகில் உள்ள பள்ளியில் சேர்த்திருந்தார். ஐந்தாம் வகுப்பு வரை அதில் படித்த மீரா ஆறாம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்கு சேர்க்க வேண்டியிருந்தது.



ரத்தினம் அவளை கான்வெண்டில் சேர்க்கவென பணத்தை அனுப்ப, அதையும் பிடுங்கி ஏப்பம் விட்டு அவளையும் அரசு பள்ளிக்கு அனுப்பியதை அம்பிகையால் ஏற்க முடியவில்லை.



அரசு பள்ளியின் கல்வி தரத்தின் மீது அம்பிக்கைக்கு எந்த வித சந்தேகமும் இல்லை. ஆனால் தன் கணவனைத் தான் அவளால் நம்ப முடியாது போனது. இன்று இதை செய்தவர் நாளை எது வேண்டுமானாலும் செய்ய துணிவார் அதனால் மீராவின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த அம்பிகை தன் சகோதரனுக்கு கடிதம் எழுதினார்.


அந்த கடிதம் மீராவின் வாழ்க்கையை மாற்றியது.


வருவாள்...


திருக்குறள்

***************

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது" என்பது ஒரு திருக்குறள் (குறள் 103).


இதன் பொருள், "இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல், அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு, கடலின் அளவை விடப் பெரிது" என்பதாகும்; அதாவது, பிரதிபலனை எதிர்பார்க்காமல் செய்யப்படும் உதவியின் மேன்மை மிக உயர்ந்தது.



உங்கள் கருத்துக்களை கருத்து திரியில் பகிர்ந்து, தொடர்ந்து எழுது ஊக்கப்படுத்துங்கள் வாசகர்களே.. அன்பும் மகிழ்வும் ❤️❤️❤️


தித்திக்கும் கரும்பை போல

உங்கள் வாழ்வு மகிழ்ச்சியில்

இனிக்கட்டும் இனிய

தைப்பொங்கல் நல்வாழ்த்துகள் 💐💐💐💐
 

Latest posts

New Threads

Top Bottom