Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed ஒரு ஹீரோவின் பயணம்

Hrishikesh

New member
Messages
8
Reaction score
2
Points
3
அழகான அமைதியான காலை நேரம் இது. சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்த மெட்ரோ இரயிலில் அடுத்தடுத்த இருக்கையில் நானும் அப்பாவும். என் பள்ளியில் நடக்கவிருக்கும் பிஸிக்ஸ் ப்ராஜெக்ட் ஒன்றிற்கான பொருட்களை வாங்கி கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கிறோம். ரெசிஸ்டர், கெபாசிடர், காப்பர் ஒயர்கள், எல்.ஈ.டி பல்பு வகையறாக்கள் எங்கு கிடைக்கும் என்ற விவரத்தை நன்கு தெரிந்தவர் அப்பா மட்டுமே.



இப்போது அப்பாவிடம் ஒரு விஷயத்தை கவனிக்கிறேன். அவரது கண்கள்! அவை தூக்கத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தன. அப்பாவின் நேற்றைய கடுமையான வேலைப்பளுவை, இன்று அவரது கண்கள் காட்டிக் கொடுத்துவிட்டன. அப்பாவின் தொழில், அவரின் கடுமையான உழைப்பு இவையெல்லாம் உடனிருந்து பார்த்த எங்கள் குடும்பத்திற்கு மட்டுமே தெரியும். உறவினர்களோ நண்பர்களோ அதை புரிந்து கொள்ளக்கூட முற்படாதவர்கள்.



மெதுவாக கண்களை மூடி என் தோள் மீது சாய்ந்து கொண்டார். சற்று நேரம் உறங்கட்டும் என்று ஆடாமல் அசையாமல் ஒரே நிலையில் உட்கார்ந்து கொண்டேன்.



அப்போதுதான் என் எதிரே இருக்கும் இரு பெண்களை கவனித்தேன். ஒருவர் நடுத்தர வயதினர், மற்றொருவர் அவரது மகள் போலும். இருபது வயது இருக்கலாம். அந்த இளம்பெண் தன் தாயாருடன் நிறைய செல்பி புகைப்படங்களை அவரது கைபேசியில் எடுத்துக்கொண்டிருந்தார். அதுவும் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் அயராமல் சிரித்தபடியே! சரியாக இரண்டு நிமிடங்களுக்கு பின், அவர்களின் படமெடுக்கும் படலம் நிறைவுற்றது.



சற்று நேரம் கழித்து, அந்த தாயார் தன்னிடமிருந்த ஒரு கனமான பையை மகளிடம் நீட்டி, “இத்தனை நேரமா நான் தானே மடியில் வச்சுக்கிட்டு இருந்தேன். கொஞ்ச நேரம் நீ வச்சுக்கோயேன்... உள்ள சமையல் பொருட்கள் இருக்கிறதுனால கீழேயும் வைக்க முடியாது” என்றபடியே அவரது கையில் திணித்தார்.



மகளுக்கு அதில் துளியும் விருப்பமில்லை என்பதை அவரது முகபாவனைகளே வெளிப்படுத்தின. கோபமான பெருமூச்சுடன் தலையை உலுக்கியபடி எங்களை ஐந்து வினாடிகளுக்கு உற்று பார்த்தார். பின், ‘தன்னைப் பத்தி மத்தவங்க நல்லவிதமா நினைக்கணும்ங்கறதுக்காக இந்தப் பையன் அவங்க அப்பாவ தோள்ள சுமந்துட்டு இருக்கான்’ என்று மனதில் நினைத்தாரோ என்னவோ, ஒரு ஏளன சிரிப்புடன் எங்களிடம் இருந்து பார்வையை விலக்கிக் கொண்டார்.



நானும் மற்ற பயணிகளை நோட்டமிட ஆரம்பித்தேன். ‘இவ்ளோ பெரிய மனிதர், பட்டப்பகலில் பிரயாணம் பண்ணும்போது தூங்குறாரு... அதுவும் மகன் தோளில் படுத்துகிட்டு...’ என்ற மன ஓட்டம் பல பயணிகளில் மனதில் இருந்ததை என்னால் படிக்க முடிந்தது.



அப்பாவின் இருபது வருட அரசுப் பணியில் நைட் டியூட்டி, 24 ஹவர்ஸ் டியூட்டி போன்றவற்றை தவிர்க்க இயலாது. அவரது நேர்மை, தனது பதினெட்டு வயது நிரம்பாத மகனை வாகனம் ஓட்ட அனுமதிக்காததில் புலப்படுகிறது. இல்லையேல் நானே அப்பாவை வைத்துக்கொண்டு டூவீலரில் சென்று வந்து இருப்பேன்.



நேற்று அப்பாவுக்கு 24 ஹவர்ஸ் டியூட்டி. ஒரு மணி நேரம் கூட ஓய்வெடுக்க நேரம் கிடைத்திருக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. தன் மகனின் பிராஜெக்ட் எந்தவிதத்திலும் தன்னால் தடைப்பட்டு விடக் கூடாது என்பதற்காக டியூட்டி முடிந்து வீடு திரும்பிய உடன், குளித்து சாப்பிட்டுவிட்டு என்னுடன் புறப்பட்டார். ஒரு நாள் முழுவதும் ஓய்வின்றி உழைத்து, ராத்தூக்கத்தை தியாகம் செய்தவருக்காக என்னால் இயன்ற சிறு கைமாறு - என் தோளை அவரது தலையணை ஆக்குதல் தான்.



ஒருவேளை வீட்டில் உறவுக்காரர்கள் இருக்கும் நேரத்தில் அப்பா உறங்கிக் கொண்டிருந்தால், ‘அவருக்கு என்ன சும்மா தூங்குறாரு...’ என்று விமர்சித்திருப்பர். அதே சமயம் பரபரப்பாக பணி செய்து கொண்டிருக்கும் வேளையில், சில நண்பர்கள் ‘’ போட்டோ அனுப்பியிருக்கேன். ஒரு நிமிஷத்துல போன்ல பார்த்து சொல்ல வேண்டியது தானே... இதுக்கு போய் உன்னை நேர்ல பார்க்க வரணுமா என்ன?’ என்ற அர்த்தமில்லாத கேள்வியை முன் வைப்பர்.



ஒரு நல்ல குடிமகனாக நேற்று முழுவதும் அவரது கடமையைச் செய்தார். இன்று ஒரு அப்பாவாக தனது மகனுக்கு தொடர்கிறார்.



முன்னொரு காலத்தில் தன்னை நாடி அடைக்கலம் புகுந்தவர்களை காக்கும் மன்னர்கள் ஹீரோவாக தோன்றினர். இன்று அதே உன்னதமான சேவையை செய்பவர்கள் மருத்துவர்கள் தான்! ஆதலால் இக்காலத்து நவீன ஹீரோக்கள் மருத்துவர்களே... அதுவும் என்னுடைய ஸ்பெஷலான ஹீரோ என் அப்பாதான் - அன்பான தந்தையாகவும், பண்பான தோல் நோய் மருத்துவராகவும்.



நான் மெல்ல அப்படியே அப்பாவைப் பூப்போல என் மடியில் சாய்த்துக் கொண்டேன்.



அந்த இருபது வயது இளம்பெண்ணைப் பார்த்து ஏனோ ஏளனமாக சிரிக்கத் தோன்றியது!
 

New Threads

Top Bottom