Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Regular-Update தொடுக்காத பூச்சரமே கதை திரி

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
420
Reaction score
659
Points
93
தொடுக்காத பூச்சரமே! அத்தியாயம் 19

நிறையோ பூவணியின் கண்களைப் பார்த்து அதிர்ந்தாள். கண்களில் ஒளி என்பதே இல்லாமல் பொலிவு இழந்து பார்க்கவே பரிதாபமாக இருந்தாள்.

பூவணியோ, நிறையை ஆசையாக கட்டிக் கொண்டு, "எப்படி டீ இருக்கே உடம்புக்கு என்ன..?" என்று பதட்டமாக கேட்டாள்.

நிறையோ, "எனக்கு ஒன்றுமில்லை.. உனக்கு என்ன? ஏன் இப்படி மெலிந்து போய் இருக்கிறாய்?” என்று கேட்டாள். அவள் இன்னும் பூவணியை முழுதாக பார்க்கவில்லை.

உதியனம்பியும் மருத்துவர் அறையிலிருந்து வெளியே வந்தான். கண்களால் மனைவியைத் தேடியவன், அவள் பூவணியுடன் பேசிக் கொண்டு இருப்பதைப் பார்த்து அவர்களிடம் சென்றான்.

பூவணியோ நிறை கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் சிரித்தாள்.
நிறையோ, "ஏண்டி நான் கேட்டதற்கு பதிலே சொல்லாமல் சிரிக்கிறாய்..?" என்று கடிந்து கொண்டவளிடம்..

"நிறை முதலில் பூவணியை உட்காரச் சொல். அவள் நிலையைப் பார்த்து விட்டு இப்படித் தான் நிற்க வைத்து கேள்வி கேட்பாயா?" என்று உதியனம்பி கடிந்து கொண்ட பின் தான் தன் தோழியை உச்சி முதல் பாதம் வரை பார்த்தாள். அப்போது தான் பூவணியின் மேடிட்ட வயிறு அவள் கண்ணுக்கு புலப்பட்டது.

பூவணியோ, உதியனம்பியைப் பார்த்தவுடன், "நம்பி அண்ணா நல்லா இருக்கீங்களா..? உடம்புக்கு என்ன? இருவரும் வந்து இருக்கீங்க.." என்று அவன் முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.

நிறையோ, தோழியின் நிலையைக் கண்டு மகிழ்ச்சியுடன் பேச்சற்று.. அவளை ஆரத் தழுவிக் கொண்டாள்.

உதியனம்பியோ, இருவரையும் அமரச் சொல்லிவிட்டு, தாங்கள் எடுக்க வேண்டிய இரத்த பரிசோதனைக்கு பணம் கட்டச் சென்றான்.

நிறையோ, பூவணியிடம், "இது எத்தனாவது மாசம். குழந்தை நல்லா இருக்கா..? ஏன்டி சொல்லவில்லை.. தனியாகவா டெஸ்ட்க்கு வந்தாய். சத்தாக சாப்பிடுகிறாயா?" என்று கேள்வியாக கேட்டு துளைத்து எடுத்தாள்.

பூவணியோ, "அடியே போதும்.. போதும், என்னைக் கொஞ்சம் பேச விடு.." என்று கேலியாக பேசினாள்.

இருவரும் தங்களுக்கு தேவையான தகவலைப் பகிர்ந்துக் கொண்டனர்.

சிறிது நேரத்தில் நிறையாழியும், உதியனம்பியும் பரிசோதனைக்கு இரத்தம் கொடுத்து விட்டு, பூவணியை அழைத்துக் கொண்டு கேன்டீன் சென்று பேசிக் கொண்டே உணவு உண்டார்கள்.

பூவணியின் தோற்றமும், வாடிய முகமும் ஏதோ அவளிடம் சரியில்லை என்று கணவன், மனைவி இருவருக்கும் புரிந்தது.

நிறையோ, தோழியிடம் துளைத்து.. துளைத்து, பேசியே தோழியின் நிலையை அறிந்து கொண்டாள்.

நிறையாழிக்கு, தோழி சொன்னதைக் கேட்டு தாங்க முடியாத வேதனையும், பாரமும் மனம் முழுவதும் ஆட்கொண்டது.

பூவணி கல்யாணம் முடிந்த அன்றே உதி சொன்னானே, அது எவ்வளவு சரி என்று நினைத்து வருந்தினாள்.

பூவணியின் கணவன், உதியனம்பி நினைத்தது போலவே கொஞ்சம் கூட சரியில்லாத குணம் கெட்டவன்.. குடிக்கு அடிமை.. சந்தேகப் பேர்வழி.. இத்துடன் பெண் சகவாசம் வேறு.. தினமும் அவளை அடிக்க வேறு செய்கிறானாம்..

பூவணி சொல்ல சொல்ல கணவன் மனைவி இருவருக்கும் அளவில்லா வேதனை உள்ளத்தை அரித்தது.

பூவணிக்கோ, யாரிடம் தன் சுமையை இறக்குவது என்று காத்திருந்தவள்.. தன் உடன்பிறவா சகோதரனாக நினைக்கும் நம்பியையும், தன் உயிர் தோழியையும் கண்டவுடன் தன் துக்கத்தை அவர்களிடம் கொட்டித் தீர்த்தாள்.

நிறையோ, "எதுக்குடி இன்னும் அவன் கூட இருக்கிறே? நீ பேசாமல் அம்மா அப்பாகிட்ட வந்துடலாம் தானே.." என்று பொறுக்க முடியாமல் கேட்டு விட்டாள்.

பூவணியோ, விரக்தியாக சிரித்தபடி, "நான் அங்கு போனால் பொண்ணு வாழாமல் வந்து விட்டாள்.. என்ன பொண்ணு வளத்தி வச்சு இருக்கீங்கன்னு ஊரும் சொந்தமும் பேசுமாம்.. அவர்கள் மானமும், கவுரவமும் போய்விடுமாம்.. அதனால் ஆம்பிளைன்னா அப்படி, இப்படித் தான் இருப்பாங்க.. நீ தான் அட்ஜஸ்ட் பண்ணிட்டு வாழனும்ன்னு புத்தி சொல்றாங்க.." என்றாள்.

நிறையோ, பூவணி கூறியதைக் கேட்டு கோவமுடன், "அங்கிளும் ஆண்டியும் எந்த காலத்தில் இருக்காங்க.. நீ கஷ்டப்படும் போது அந்த ஊரும் சொந்தமுமா வந்து நிற்கும். பெத்த பெண்ணை விட மானமும் கவுரவமும் தான் அவர்களுக்கு முக்கியமா..?" என்று பொரிந்து தள்ளினாள்.

உதியனம்பியோ, "வணிம்மா நான் வேண்டுமானால் அம்மா அப்பாகிட்ட பேசி பார்க்கட்டுமா..?"

"வேண்டாம் அண்ணா, அவர்கள் மாறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை. என் தலையில் என்ன எழுதி இருக்கோ அதன்படி நடக்கட்டும்.." என்றவளின் விழிகளில் நீர் அருவியாய் கொட்டியது.

பூவணி அழுவதை தாங்க முடியாத நிறையோ, "வணி என்னால் உன்னை இப்படி பார்க்க முடியலையே.. ஏண்டி என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. என் மேலும் தப்பு தான், நானாவது அடிக்கடி உனக்கு போன் பண்ணி பேசி இருக்கனும்.. என்னை மன்னித்துவிடு டீ.." என்று மனம் கலங்கி சொன்னவளின் கைகளை அழுந்த பற்றிக் கொண்ட பூவணி..

"நிறை நீ என்ன செய்தாய் மன்னிப்பு கேட்க.. நான் தான் உன்னிடம் சொல்லி உன்னையும் கஷ்டப்படுத்த வேண்டாமென்று நினைத்தேன். ஆனால் இன்று விதி நம்மை சந்திக்க வைத்துவிட்டது. என் கதையைச் சொல்லி உன்னையும் சங்கடப்படுத்திட்டேன்.." என்றவள் எதேர்ச்சையாக தன் கைகடிகாரத்தைப் பார்த்த பூவணி பதறி எழுந்தாள்.

அவளின் பதற்றத்தைக் கண்டு கணவன் மனைவி இருவருமே சட்டென்று எழுந்து "என்னாச்சு..?" என்று கேட்டனர்.

பூவணியோ, அவர் வரும் நேரமாகிவிட்டது. நான் வீட்டில் இல்லை என்றால் அதற்கொரு சண்டை வரும்.. நான் உனக்கு போன் செய்றேன்.. இப்ப கிளம்பட்டுமா..?" என்று கேட்டவளை இருவரும் வலியுடன் பார்த்தனர்.

பூவணியோ வாயில் நோக்கி நடந்தபடியே, "நிறை உன் மனதிற்கு எல்லாம் நல்லதே நடக்கும்.. நீயும் சீக்கிரம் நல்ல செய்தி சொல்வாய்.. நாம் சீக்கிரம் சந்திப்போம்.." என்றாள்.

நிறையோ, "வணி உனக்கு எப்போதும் நான் இருக்கிறேன் என்பதை மறவாதே.. மனதில் எதையும் போட்டு குழப்பிக்காதே.. இந்த நேரத்தில் மகிழ்ச்சியாக இருக்கனும்.. குழந்தை பிறக்கும் நேரமாவது உனக்கு நல்லதாக நடக்கட்டும்.." என்று பூவணியின் கைகளை அழுத்திய படியே சொன்னாள்.. பூவணியோ வெற்று புன்னகை ஒன்றை உதிர்த்தாள்.

உதியனம்பியோ, "வணிம்மா, நீ எதில் வந்தாய் ஆட்டோவை கூப்பிடட்டுமா..?" என்று அக்கறையாக கேட்டான்.

பூவணியோ, "அண்ணா நான் வரும் போது பஸ்சில் தான் வந்தேன். நான் பஸ் பிடிச்சு போய்க்கிறேன்.." என்றவளிடம்..

நிறையோ, "ஆட்டோ பிடிச்சு கொடுங்க, இந்த நிலைமையில் பஸ்சில் எல்லாம் போக வேண்டாம்.." என்றாள் அக்கறையாக.
உதியும் அதையே நினைத்து வேகமாக சென்றவன்' ஆட்டோ ஒன்றை அழைத்து வந்தான்.

ஆட்டோ ஒட்டுநரிடமும், பூவணியிடமும் ஆயிரம் புத்திமதிகள் சொல்லி ஆட்டோவிற்கான பணத்தையும் பூவணி மறுக்க.. மறுக்க, ஆட்டோ ஒட்டுநரிடமும் கொடுத்து அவளை அனுப்பி வைத்தார்கள்.

பூவணி தலை மறையும் வரை பார்த்துக்கொண்டு நின்ற நிறையாழிக்கோ மனம் முழுவதும் சொல்ல முடியாத கவலை அரித்தது.

உதியனம்பி தன் வண்டியை எடுத்து வந்ததும் ஏறி அமர்ந்தவள் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக வந்தாள்.

உதியனம்பியும் பூவணியைப் பற்றி சிந்தித்த படியே வண்டியை வீடு நோக்கி செலுத்தினான்.
வீட்டிற்கு வந்தவர்களுக்கு மனம் எந்த வேலையிலுமே செல்லவிலலை.. இருவரும் இறுக்கத்துடனேயே வலம் வந்தனர்..

மனம் முழுவதும் பூவணியைப் பற்றியே எண்ணம் மேலோங்கி இருந்தது. ஆணோ, பெண்ணோ திருமண வாழ்க்கை மட்டும் நன்றாக அமையவில்லை என்றால் அவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகிறது.

இந்த காலம் தான் எப்போதும் ஒவ்வொருவருக்கும் ஒரு கஷ்டத்தை வைத்து காத்திருக்கிறது. யாருமே விதி விலக்கல்ல..

உதியனம்பியோ பூவணி வாழ்க்கைக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தான்.

நிறையாழியோ பூவணியைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்ததால் தன் பிரச்சனையிலிருந்து கொஞ்சம் வெளியில் வந்தாள்.

கெட்டதிலும் ஒரு நல்லது போல் பூவணியைச் சந்தித்தது அவளுள் பெரிய மாற்றத்தை கொண்டுவந்தது.
சின்ன கோடு பக்கத்தில் ஒரு பெரிய கோடு போட்டால் சின்ன கோடு மறைந்துவிடுவது போல்.. பூவணியின் பிரச்சனை முன் இவள் பிரச்சனை பெரிதாக தோன்றவில்லை.

எப்பவும் சதா குழந்தையைப் பற்றி சிந்தித்து கொண்டு இருந்தவள், இப்போது பூவணிக்கு எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து அவள் முகத்தில் பழைய படி சிரிப்பு வரனும் என்று கடவுளை வேண்டத் தொடங்கினாள்.

உதியனம்பி அன்று காலையில் கல்லூரியில் அவளை விடும் போதே.. மாலை வேலை இருக்கு, நீ பஸ் பிடித்து வீட்டுக்குப் போய்டு என்று சொல்லி இருந்தான்.

அதனால் கல்லூரி முடிந்து வீட்டுக்கு பஸ் பிடித்து வந்தவளுக்கு அலுப்பாக இருந்தது. சிறிது நேரம் படுத்து இருந்தவள் களைப்பு தீர குளித்து விட்டு வந்து காபி கலக்கி குடித்தாள்.

இரவு உணவையும் சமைத்து வைத்து விட்டு கொஞ்ச நேரம் தொலைக்காட்சியாவது பார்க்கலாம் என்று அதை ஓடவிட்டாள்.

ஆனால், அவள் மனம் அதில் செல்லவில்லை.. அன்று அவளுக்கு நேரத்தை நெட்டி தள்ள வேண்டியதாக இருந்தது. ஏனோ கணவன் ஞாபகமாகவே இருந்தது. இன்னும் அவனை காணோமே என்று வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனை நினைத்தாலே இப்போதெல்லாம் அவள் மனம் முழுவதும் மகிழ்ச்சி தான் பொங்கி வழிகிறது.
அவன் எண்ணங்களும், செயல்களும், சிந்தனைகளும் அவனைப் போலவே எத்தனை அழகு.. என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போதே.. அவளின் எண்ணத்தின் நாயகன் வந்துவிட்டான்.

உழைத்த களைப்பு ‌அவன் உடைகளில் தெரிந்தாலும், அவன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல், எப்போதும் போல் இவளைப் பார்த்து மென் சிரிப்பொன்றை உதிர்த்தவன், தன் வண்டியை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் வந்தான்.

அவனின் சிரிப்பு அவளையும் தொற்றிக்கொள்ள, "என்னங்க இன்னைக்கு வழக்கத்தை விட லேட் .." என்று புன்னகையுடன் கேட்டவளிடம்..

"ஆமாம் யாழி இன்னைக்கு வேலை கொஞ்சம் அதிகம்.." என்றான்.

"சரி நீங்க குளிச்சுட்டு வாங்க.. நான் டிபன் எடுத்து வைக்கிறேன்.." என்று திரும்பியவளை தடுத்து நிறுத்தியவன், அவள் கையில் ஒரு கவரைக் கொடுத்தான்.

அவளோ, அதை குழப்பத்துடன் வாங்கிக் கொண்டாள். அவளுக்கு சுத்தமாக மருத்துவ அறிக்கை பற்றி(ரிப்போர்ட்) ஞாபகமே இல்லை.

அவனோ, அவளின் குழம்பிய முகத்தைப் பார்த்தவாறே.. "யாழி இது நாம் நேத்து எடுத்த டெஸ்ட் ரிப்போர்ட். நான் ரிப்போர்ட் வாங்கிட்டு டாக்டரையும் பார்த்துட்டேன்.. இருவரின் ரிப்போர்ட்டும் நார்மல்ன்னு சொன்னாங்க. அந்த விட்டமின் மாத்திரையை மட்டும் கன்ட்நியூ பண்ணச் சொன்னாங்க, நீ பிரித்துப் பார்.." என்றவன், அவள் பிரிக்கும் வரை அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.

உதியனம்பி சொன்னதும், அவளுக்கு கலவையான உணர்வு. அந்த கவரை கை நடுங்க பிரித்து பார்த்தவள், மகிழ்ச்சியில் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தாள். அடுத்த நொடி "..உதி.." என்று அழைத்தபடி, அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு, அவன் முகம் முழுவதும் முத்தமழை பொழிந்தாள்.

அவனோ, மனதிற்குள் சொல்ல முடியாத வலியுடன் மனைவியின் மகிழ்ச்சியை ரசித்தான்.

நிறையோ அதன் பிறகு வந்த நாட்களில் மகிழ்ச்சியுடனேயே வலம் வந்தாள்.. பழையபடி அவளுடைய குறும்புத்தனம் அதிகரித்தது.

செந்தழைக்கு கூட மகளின் மாற்றம் கொஞ்சம் நிம்மதியைக் கொடுத்தது.. தாயிடம் புலம்புவதையும் நிறுத்தி இருந்தாள்..

உதியனம்பியோ மனை
வியின் மாற்றத்தில் நிம்மதியாக இருந்தான்.
ஆனால் அந்த நிம்மதிக்கு அற்ப ஆயுள் என்பது அவனுக்கு அப்போது தெரியவில்லை...

தொடரும்..
Hi friends,
அடுத்த அத்தியாயம் நாளை காலை..இன்றைய அத்தியாயத்தை படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..இன்னும் 3 யூடியில் கதை நிறைவு பெறும்..
நன்றி
அன்புடன்

இனிதா மோகன்
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
420
Reaction score
659
Points
93
தொடுக்காத பூச்சரமே! அத்தியாயம் 20



வாழ்க்கையில் நாம் நினைத்தது போலவே நடந்தால் சுவாரஸ்யம் இருக்காது. ஏற்ற தாழ்வுடன் பயணிக்கும் போது தான் வாழ்க்கையின் மீது பிடிப்பும், ஆர்வமும் இருக்கும்.



அடுத்த நொடி என்ன நடக்கும் என்று தெரியாமல் எதிர்பார்ப்புடன் வாழும் போது தான், காலம் நமக்கு வைத்திருக்கும் திருப்பங்களை அனுபவிக்க முடியும்..



எப்போதும் எல்லா விடியலும் அழகாக விடிவதில்லை..

உதியனம்பிக்கு அன்று கண்விழிக்கும் போதே மனதிற்குள் ஏதோ பாரமாக இருந்தது.. இனம் புரியாத பயம் அவனை ஆட்கொண்டது.



வழக்கம் போல் எழுந்ததும் மனைவியைத் தேடினான். அவள் அருகில் இல்லை.. சமையலறையில் பாத்திரங்கள் உருட்டும் சத்தம் கேட்டது.



யாழி சமைக்க ஆரம்பித்து விட்டாள் என்று நினைத்தபடியே, குளியலறைக்குள் சென்று பல் துலக்கி முகம் கழுவி விட்டு மனைவியை காணச் சென்றான்.



யாழியோ காய்கறிகளை நறுக்கி கொண்டு இருந்தாள். உதியோ அவள் அருகில் சென்று அவளை பின்புறமிருந்து அணைத்தான்.



கணவனின் அணைப்பில் வாகாக பொருந்திக் கொண்டே, "என்ன இன்னைக்கு காலையிலேயே சார் ரொமான்டிக் மூடுலே இருக்காங்க போலே.."



"ம்ம்.. நான் எப்பவும் அதே மூடுல தான் டீ இருக்கேன்.. நீ தான் எப்ப பாரு ஸ்ட்ரிக்ட் ஆபிஸரா இருக்கே.." என்றவன் அவள் கழுத்தில் தன் முகவாயைப் பதித்தான்.



"ஆமாம், நான் அப்படி இல்லைன்னா.. உங்கள சமாளிக்க முடியுமா..?" என்றவள் காய் நறுக்குவதை நிறுத்தி விட்டு கணவனின் தலையை மெல்ல வருடினாள்.



அவனோ, மனைவியின் தலை வருடலை கண்கள் மூடி சுகமாக அனுபவித்தான். அந்த மயக்கத்தில் மனைவியை இன்னும் இறுக அணைத்தான்.



யாழிக்கோ, அவனின் அணைப்பு இறுகவும் வயிற்றில் லேசாக சுருக்கென்று வலி வந்தது. நேத்து இரவில் இருந்தே இப்படித் தான் லேசாக அவ்வப்போது வலித்தது.



கணவனிடம் சொன்னால் பயந்து விடுவான் என்று நினைத்தவள், "போதும் போய் குளித்து ரெடியாகி வாங்க.. எனக்கு வேலை இருக்கு இன்னைக்கு காலேஜ்க்கு நான் சீக்கிரம் போகனும்.." என்று அவன் அறியாமல் அவனின் அணைப்பிலிருந்து விலகினாள்.



அவனோ, மனசே இல்லாமல் அவளை விடுவித்தவன், "ராட்சசி கொஞ்ச நேரம் நான் நிம்மதியாக இருக்க கூடாதே.." என்று முனங்கிய படியே குளிக்க சென்றான்.



அவனின் முனங்கல் அவளுக்கு சிரிப்பை வரவழைத்தது.

உதி குளித்து விட்டு வந்தவுடன் இருவரும் டிபன் சாப்பிட்டு விட்டு கிளம்பினார்கள்.



நிறையை கல்லூரியில் இறக்கி விட்டுட்டு அவனுக்கும் அன்று கெஸ்ட் லெக்சர் வகுப்பு இருந்ததால், பொறியியல் கல்லூரிக்குச் சென்றான்.



நிறையாழிக்கோ, கல்லூரிக்குள் போனதிலிருந்தே வயிற்று வலி அதிகமாக இருந்தது. வயிற்றைப் பிடித்துக் கொண்டு தன் மேஜை மீது சாய்ந்து படுத்துக் கொண்டாள். அவளுடன் பணி புரியும் கோதை அவள் நிலையைக் கண்டு,"நிறை என்னாச்சு..?" என்று கேட்டாள்.



நிறையோ, வலியுடன் "கோதை என்னன்னு தெரியலை.. காலையில் வந்ததிலிருந்தே வயிறு ரொம்ப வலிக்குது. தாங்க முடியவில்லை.." என்று பேசமுடியாமல் பேசினாள்.



கோதைக்கு அவளின் முகமே அவளின் நிலையைச் சொல்லியது.. "நிறை டாக்டர் கிட்ட போலாமா?" உன் முகமே சரியில்லை என்றாள்.



நிறையும் வலி பொறுக்க முடியாமல் இருந்ததால் தலையை ஆட்டினாள்.

கோதை உடனே வாட்ச்மேனை அழைத்து ஆட்டோ பிடித்து வரச்சொல்லி விட்டு, ப்ரின்ஸ்பால் ரூம் சென்று இருவருக்கும் விடுப்பு எழுதி கொடுத்து விட்டு நிறையாழியை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் மருத்துவமனைக்கு சென்றாள்.



கோதைக்கு நிறையை எப்போதுமே மிகவும் பிடிக்கும். அவளின் துறுதுறுப்பு.. வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பதும்.. எதற்கும் பயப்படாமல் நேர்மையாக, தைரியமாக இருப்பதும் அவளிடம் கோதைக்கு பிடித்த விசயம்.



அவளுடன் வேலை பார்த்த இத்தனை நாட்களில் அவள் ஒரு முறை கூட இப்படி முகம் சோர்ந்து பார்த்ததில்லை.. பல முறை தன் வேலையைக் கூட முகம் சுளிக்காமல் செய்து கொடுத்து இருக்கிறாள்.

அதனால் தான் அவளுக்கு முடியவில்லை என்றவுடன் கோதை யோசிக்காமல் அவளுடன் மருத்துவமனைக்கு வந்தாள்.



நிறையாழியை அவசர சிகிச்சைப் பிரிவில் உடனே சேர்த்தனர். அதுவும் பல்நோக்கு மருத்துவமனை என்பதால் உடனே தேவையான அனைத்து பரிசோதனையும் செய்தார்கள்.



நிறைக்கு வலி குறைய ஊசி போட்டார்கள். சிறிது நேரத்தில் அவளுக்கு வலி சுத்தமாக குறைந்துவிட்டது.

மருத்துவ அறிக்கை வரும் வரை நிறையும், கோதையும் மருத்துவமனையிலேயே காத்திருந்தனர்.



கோதையோ, "நிறை உங்க வீட்டுக்காரருக்கு போன் பண்ணி சொல்லிடுங்க.." என்றாள்.



"இல்லே கோதை அவர் பயந்துடுவார்.. இப்ப வலி இல்லே.. ரிப்போர்ட் வந்ததும் டாக்டரை பார்த்துட்டு அப்புறம் சொல்லிக்கிறேன் .."



"ஓகே நிறை.." என்ற கோதையும் அவளின் அருகில் அமர்ந்து கொண்டாள்.



நிறையோ, இன்னும் சற்று நேரத்தில் தன் மண்டையில் இடி இறங்கப் போவது தெரியாமல் அமைதியாக அமர்ந்து இருந்தாள்.



உதியனம்பிக்கோ, அன்று சரியாக வகுப்பே எடுக்க முடியவில்லை.. மனசில் ஏதோ போட்டு பிசைவது போலவே இருந்தது.



மனைவிக்கு அழைத்து பேசினால் நல்லா இருக்கும் போல் இருந்தது. அவளுக்கு வகுப்பு இருக்குமே, உணவு இடைவெளியில் அழைத்துப் பேசிக்கலாம் என்று நினைத்தவன் நேரத்தை நெட்டித் தள்ளிக் கொண்டு இருந்தான்.



நிறையாழியை மருத்துவர் அழைப்பதாக செவிலியர் அழைக்கவும் கோதையுடன் அறைக்குள் சென்றாள்.



மருத்துவர் அவளின் மருத்துவ அறிக்கையைப் பார்த்தபடி அமரச் சொன்னார்.



நிறையாழிக்கோ, மனதிற்குள் திக்..திக் என்று இருந்தது.



மருத்துவர் நேரடியாக விசயத்திற்கு வந்தார்..

"உங்களுக்கு எத்தனை நாளாக இந்த வலி இருக்கும்மா..?"



"நேத்து மாலையிலிருந்து லேசாக இருந்தது. இன்று காலையில் தான் தாங்க முடியாத வலி வந்தது. ஏதாவது பிரச்சனையா மேம்..?" என்றாள்.



மருத்துவரோ, அவளை ஆழ்ந்து பார்த்தபடி "குழந்தை இருக்கா..?" என்றார்.



அவளோ, 'இல்லை' என்று தலையாட்டினாள்.



மருத்துவரோ, ஓர் ஆழ்ந்த மூச்சை எடுத்த படி.. "இங்க பாரும்மா நான் சொல்வதைக் கொஞ்சம் பொறுமையா கேளுங்க.." என்றவர்.



"உங்களுக்கு இதற்கு முன் எப்போது சர்ஜரி பண்ணி இருக்காங்க..? எத்தனை வருடம் இருக்கும்..?" என்று கேட்டவுடன் நிறையாழி அவர் சொல்வது புரியாமல் விழித்தாள்.



மருத்துவரோ, அவள் பதில் சொல்லாமல் விழிப்பதைப் பார்த்து, "உங்கள் இடது ஓவரிய எப்ப எடுத்தாங்க..? என்ன காரணத்துக்காக எடுத்தாங்க..?" என்று கேட்டவுடன் நிறையாழி அதிர்ச்சியில் பேச்சு மூச்சின்றி அசையாமல் உறைந்துப் போய் அமர்ந்திருந்தாள்.



அவளுக்கு தெரியாமல் இது எப்போது நடந்தது. அவளுக்கு ஒன்றுமே புரியாமல் குழப்பமாக இருந்தது.



கோதையும் குழப்பத்துடன் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

மருத்துவரோ, அவளின் உடல் மொழியை வைத்தே அவளுக்கு இதுவரை தெரியாது என்பதை புரிந்து கொண்டார்.



அவளின் கைகளை தட்டி, "ஆர் யூ ஓகே..?" என்று தன்மையாக கேட்டவரிடம் பதில் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டினாள். மருத்துவர் செவிலியரை அழைத்து அவளுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்கச் சொன்னார்.



நிறையும் செவிலியர்கள் கொண்டு வந்து கொடுத்த தண்ணீரை மடமடவென அருந்தினாள். அவளுக்கு தன்னை சமன்படுத்திக் கொள்ள தண்ணீர் தேவைபட்டது.



மருத்துவரோ, அவள் தெளிவதற்கு அவகாசம் கொடுத்து பேச்சை தொடங்கினார். "நிறை உன்னுடைய ஒரு ஓவரி ஏதோ காரணத்தால் ஏற்கனவே எடுத்து இருக்காங்க.. இப்போது இரண்டாவது ஓவரியில் நீர் கட்டி கொஞ்சம் பெரிய அளவில் இருக்கு.. அதை உடனடியாக லேப்ராஸ் கோப் மூலம் நீக்கனும். இல்லைன்னா அந்த கட்டி பெரிதாகி பல்ஜ்ஜாகிவிடும் அப்புறம் இதையும் எடுக்க வேண்டி வரும்..



நல்லவேளை இது பெரிய சைஸ் ஆகும் முன்னேயே உனக்கு வலி வந்ததால் கண்டுபிடிக்க முடிந்தது. எவ்வளவு சீக்கிரம் அதை ரீமூவ் பண்றோமோ அவ்வளவு நல்லது.." என்றார்.



நிறையாழியோ, பதிலே பேசாமல் சிலையாக அமர்ந்திருந்தாள்.



அவளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது மருத்துவர் சொன்னது.



கோதையோ, நிறையின் நிலையைப் புரிந்து கொண்டு அவளுக்கு பதிலாக தானே எல்லா விசயங்களையும் கேட்டாள்.



"மேம், இதனால் எதிர்காலத்தில் ஏதாவது பிரச்சனை வருமா?" என்றவளிடம்..



"இவங்களுக்கு ஏற்கனவே ஒரு ஓவரி இல்லை.. இந்த நிலையில் இந்த இரண்டாவதிலும் பிரச்சனை வந்தால் குழந்தை பிறப்பது கடினம்.. முடிந்தவரை இதை காப்பாற்ற பார்ப்போம்.." என்று மருத்துவர் கூறுவதைக் கேட்டவுடன் அதுவரை கல்லாக இருந்தவளின் கண்களில் நீர் ஆறாக வடிய ஆரம்பித்தது.



மருத்துவரும், கோதை நிறையின் சொந்தமென்று நினைத்து, முகம் சுழிக்காமல் அவள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் தன்மையாக பதில் அளித்ததுடன், அவளிடம் அதன் வழிமுறைகளை விவரமாக சொல்லி வலி மாத்திரையை எழுதி கொடுத்தார். முடிந்தவரை விரைவாக சிகிச்சை செய்ய வேண்டும் என்பதை அழுத்திச் சொல்லி அனுப்பி வைத்தார்.



மருத்துவர் அறையில் இருந்து வெளியில் வந்த நிறையோ பித்து பிடித்தது போல் இருந்தாள்.



கோதைக்கு அவள் நிலை பயத்தை தந்தது. என்ன செய்வது என்று கைகளைச் பிசைந்து கொண்டு இருந்த நேரம்.. கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல், யாரையோ பார்க்க வந்த சேத்தன் நிறையைப் பார்த்து விட்டு அவள் அருகில் வந்தான்.



நிறையோ எதையும்.. யாரையும் உணரும் நிலையில் இல்லை.. கண்களில் மட்டும் நீர் வடிந்துக் கொண்டே இருந்தது.



சேத்தன் அவள் கண்களில் கண்ணீரைக் கண்டு பதறியவன், "என்னாச்சு நிறைம்மா..?" என்று கவலையுடன் கேட்டான்.



அவன் பல முறை கேட்டவுடன் தான் நிறைக்கு சுற்றுப்புறம் தெரிந்தது.. அப்போது தான் சேத்தனைப் பார்த்தவள், "மாமா.." என்று அழைத்தவளுக்கு வார்த்தைக்குப் பதிலாக தேம்பல் தான் வந்தது.



கோதையோ, அவள் சொல்லும் நிலையில் இல்லை என்பதை உணர்ந்து, சேத்தன் யார் என்று அறிந்து கொண்டு அனைத்தையும் சொன்னாள்.



அவனோ, அவளுக்கு உண்மை தெரிந்துவிட்டது என்று தெரிந்ததும் ஆடிப்போய் விட்டான்.. அத்தோடு இன்னொரு பிரச்சனையையும் கேட்டு விக்கித்துப் போனான்.



தன்னை சமன்படுத்திக்க சிறிது நேரம் எடுத்துக் கொண்டவன், தள்ளிப் போய் நின்று உதியனம்பிக்கு அழைத்து விசயத்தைச் சொல்லாமல் அவனை மாமனார் வீட்டுக்கு உடனே வரச்சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.



கோதைக்கும் நன்றி சொல்லி அவளை அனுப்பி விட்டு, நிறையாழியை அழைத்துக் கொண்டு, தன் மாமனார் வீடு நோக்கி சென்றான்.



வீடு வந்ததும் சேத்தன் வண்டியை நிறுத்தியும் கூட நிறை இறங்காமல், உணர்வே இல்லாமல் அமர்ந்து இருந்தாள்.



அவனுக்கு அவளின் நிலை மிகவும் வேதனை தந்தது. இவள் எப்படி இதிலிருந்து மீண்டு வருவாள் என்று தெரியவில்லையே.. என்று பயந்தான்.



அவளிடம் மென்மையாக "நிறை இறங்கும்மா வீடு வந்துருச்சு.. உள்ளே போலாம்.." என்று சொல்லி அவள் கைபிடித்து இறங்க உதவியவன் அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.



வரவேற்பறையில் யாரும் இல்லை. ஆடலரசு படுத்திருந்தார். செந்தழை சமையலறையில் இருந்தார். பனிநிலவோ குழந்தையைத் தூங்க வைத்துக் கொண்டு இருந்தாள்.



சேத்தனோ, "நிறை நீ உட்கார்.." என்று சொல்லிவிட்டு அத்தை என்று மாமியாரை அழைத்தான்.



நிறையோ நடைபிணமாக சென்று அமர்ந்தாள்.

செந்தழை மருமகனின் அழைப்பை கேட்டு வெளியில் வந்தவர் மகளை கண்டதும்.. "நிறை வா. வா.. என்ன இந்த நேரத்திற்கு வந்து இருக்கே... காலேஜ் போகலையா..?" என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்டார்.



சேத்தனோ அதற்குள் ஆடலரசை அழைத்து வந்தான்.



செந்தழையோ மருமகனையும் "வாங்க" என்று வரவேற்றவர், ‘எப்போதும் வாயை மூடாமல் பேசும் மகள் ஏன் இன்று இப்படி அமைதியாக இருக்கிறாள்.. அவள் வந்தாலே வெங்கல கடையில் யானை பூந்த மாதிரி சத்தம் இருக்கும். இன்னைக்கோ இப்படி அமைதியாக இருக்காளே.. உடம்பு எதுவும் சரியில்லையோ’ என்று மகளைப் பார்த்தவாறு மனதிற்குள் குழம்பினாள்.



ஆடலரசோ மகளின் அருகில் வந்து அமர்ந்து கொண்டு, "நிறைம்மா ஏன்டா உடம்பு சரியில்லையா..? ஒரு மாதிரி இருக்கே.." என்று தன்மையாக கேட்டார்.



சேத்தனோ, மகளையும் கணவரையும் பார்த்துக் கொண்டு நின்ற மாமியாரிடம், "அத்தே நிறைக்கு ஏதாவது குடிக்க கொண்டு வாங்க.." என்றான்.



செந்தழைக்கோ மனதிற்குள் ஏதோ சரியில்லை என்று புரிந்தது. அடிவயிற்றில் பயம் கவ்வியது.. விரைந்து சென்று எலுமிச்சை பழரசத்தைக் கலக்கி டம்ளரில் ஊற்றி எடுத்து வந்து மூவருக்கும் கொடுத்தார்.



சேத்தனும், ஆடலரசும் டம்ளரை எடுத்துக் கொண்டனர். நிறையோ எடுக்காமல் தாயையே நேர் பார்வை பார்த்தாள்.



செந்தழையோ, மகளின் பார்வையை தாங்கிக்கொள்ள முடியாமல், "என்னடி புதுசா பார்க்கிற மாதிரி என்னை பார்க்கிறே ஜூஸை எடுத்து குடி.." என்றவரிடம்..



"நீ இன்னைக்கு எனக்கு புதுசா தான் தெரியுறேம்மா.. எந்த தாயும் செய்யாத வேலையை நீ செய்திருக்கியே அது தான் புதுசா தெரியுறே.."



"என்னடி சொல்றே எனக்கு ஒண்ணும் புரியலை.."



"உனக்கு எப்படிம்மா புரியும்.. எப்பேர் பட்ட விசயத்தை என்னிடம் மறைத்து இருக்கே.." என்றவுடன் செந்தழையின் முகம் பேய் அறைந்தது போல் ஆனது.



சேத்தனோ நொடிக்கு ஒரு முறை வாயிலையே பார்த்தான். பிரச்சனை பெரிதாகும் முன் நம்பி வந்து விட்டால் பரவாயில்லை என்று நினைத்தான்.



ஆடலரசோ, மகள் மனைவியைப் பேசுவது பொறுக்காமல், "நிறை என்னாச்சு உனக்கு..? எதுக்கு அம்மாவை தேவை இல்லாமல் பேசறே..?" என்றவுடன்.



"நீங்க பேசாதீங்கப்பா... நீங்களும் அம்மா கூட சேர்ந்து எல்லாத்தையும் மறைச்சு என் வாழ்க்கையையே கெடுத்துட்டீங்களே.." என்றவளுக்கு அழுகை வந்தது.



பனிநிலவோ, குழந்தையை தூங்க வைத்து விட்டு வெளியில் வந்தவள், தங்கை பெற்றவர்களை பேசுவதைப் பார்த்து சிலையாக நின்றாள்.



"நிறை புரியும் படி சொல்லு.." என்ற ஆடலரசிடம் தன் மருத்துவ அறிக்கையை எடுத்து கொடுத்து, "இதை பாருங்க, எனக்கு ஒரு ஓவரியே இல்லையாம்.. எப்ப எடுத்தாங்கன்னு டாக்டர் கேட்டாங்க.. நான் எதுவும் தெரியாமல் பைத்தியம் போல் முழிச்சுட்டு இருந்தேன்.." என்று ஆக்ரோசமாக கத்தியவளைப் பார்த்து பெற்றவர்கள் ஸ்தம்பித்தார்கள்.



சேத்தன் வரச் சொன்னதும் என்னவோ, ஏதோ! என்று அடித்து பிடித்து மாமனார் வீட்டுக்கு வந்த உதியனம்பி மனைவி பேசியதைக் கேட்டு அவளுக்கு உண்மை தெரிந்து விட்டதை ஜீரணிக்க முடியாமல் கல்லாக உறைந்து போய் நின்றான்.



தொடரும்..
Hi friends,
அடுத்த அத்தியாயம் நாளை காலை.. இன்றைய அத்தியாயத்தை படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
420
Reaction score
659
Points
93
தொடுக்காத பூச்சரமே!அத்தியாயம் 21



நிறையாழியின் மனம் கட்டுக்கடங்காமல் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் போல் தாங்க முடியாத துன்பத்தை சுமந்தது.



மீள்வதற்கு வழியே இல்லாத இருளில் சிக்கியது போல் தவித்தாள்.

தப்பே செய்யாமல் தண்டனை அனுபவிப்பது எவ்வளவு பெரிய கொடுமை.. நிறையாழி இப்போது அதே நிலையில் தான் இருந்தாள்.



அவள் நிலையை பொறுத்தவரை யாரும் தப்பு செய்யவில்லை. ஆனால், காலமும்.. விதியும், அவள் வாழ்க்கையில் விளையாடி விட்டது.



அவர் அவர் பக்க நியாயம் அவரவர்களுக்கு சரி.. ஆனால் தண்டனை என்னவோ நிறையாழிக்குத் தான்..



காலமும் சூழ்நிலையும் ஒருவரை பிணையக் கைதி ஆக்கும் என்பது எத்தனை சதவீதம் உண்மை.

தப்பே செய்யாமல் நிறையாழியின் பெற்றோர்கள் அவள் முன் குற்றவாளியாக நின்றார்கள்.



நிறையாழியோ, கட்டுக்கடங்காத கோவத்துடன் தன் தாய் தந்தையைக் கேள்வி கேட்டாள்.



உதியனம்பி வந்ததை அவள் இன்னும் பார்க்கவில்லை.

சேத்தனுக்கோ, நம்பியைப் பார்த்தவுடனே தான் உயிரே வந்தது. இனி அவன் பார்த்துக் கொள்வான் என்று நிம்மதி அடைந்தான்.



யாழியோ, தன் தாயிடம் "ஏம்மா என்னிடம் சொல்லாமல் மறைத்தாய்.. நீயும் ஒரு பெண் தானே, என் உணர்வுகளை உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லையா? குழந்தை வேண்டுமென்று எவ்வளவு ஆசைப்பட்டு நான் உன்னிடம் புலம்பி இருக்கேன், அப்பவாவது சொல்லி இருக்கலாமே.." என்றவளுக்கு அழுகையை அடக்க முடியாமல் வெடித்து அழுதாள்.



அதுவரை கற்சிலையாக நின்ற உதியனம்பியோ, மனைவியின் அருகில் வந்து, "யாழி.." என்று அழைத்ததும், உயிரே வந்தது போல் நிமிர்ந்து கணவனை கண்டவள், "உதி.." என்று கதறியபடி அவன் நெஞ்சில் தஞ்சம் புகுந்தாள்.



இத்தனை நேரம் அவள் அடக்கி வைத்திருந்த அத்தனை துக்கத்தையும், கணவன் மார்பில் சாய்ந்து கதறி அழுது தீர்த்தாள்.



அவனோ, என்ன சொல்லி தேற்றுவது என்றே தெரியாமல் சிறிது நேரம் அவளை அழவிட்டான். அவளின் கதறல் கட்டுக்கடங்காமல் போகவும், தன்னவள் துடிப்பதைக் காணமுடியாமல், "யாழி ப்ளீஸ்... முதலில் அழுவதை நிறுத்து! எதுவானாலும் பார்த்துக்கலாம் டீ.." என்றவுடன் அவளுக்கு மனதிற்குள் ஒரு நடுக்கமே வந்தது.



அச்சோ, இவனுக்கும் நம் குறை தெரிந்தால் நம்மை என்ன நினைப்பான்.. அவனால், தாங்க முடியுமா..? என்று கணவனுக்கு முதலிலேயே தெரியும் என்பதை அறியாமல், அவள் மனம் பலதையும் எண்ணி கலங்கியது.



அவனோ, அவளை தன்னிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரித்து, "யாழி அழுவது எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது.. முதலில் என்ன நடந்தது என்று சொல்.." என்றான் அழுத்தமாக.



யாழியோ, சில நிமிடங்கள் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவித்தாள். வேறு வழி இல்லாமல், அதற்கு மேல் எதையும் மறைக்காமல் அழுது கொண்டே அனைத்தையும் சொன்னாள்.



அவனோ, அவளுக்கு மறுபடியும் சினைப்பையில் பிரச்சனை என்று தெரிந்ததுமே இடிந்து போய் சிலையாக நின்றான்.



பெற்றவர்களுமே அவளின் மற்றொரு சினைப்பையிலும் பிரச்சனை என்று சொன்னதைக் கேட்டு உறைந்து போனார்கள்.



யாழியோ, கணவனின் நிலை கண்டு துடித்துப் போனாள். தன்னைப் பற்றி எல்லாம் தெரிந்தும் தன் பெற்றவர்கள் தன்னை அவனுக்கு கட்டி வைத்து அவன் வாழ்க்கையையே கெடுத்து விட்டார்களே என்று மனம் வெதும்பினாள்.



அவள் கணவன் மீது வைத்திருந்த அளவுகடந்த அன்பு பெற்றவர்கள் மீது கோவமாக மாறியது.



வெறி கொண்டவள் போல் தன் தந்தையைப் பார்த்து, "ஏம்ப்பா இப்படி செய்தீங்க..? என்னைப் பற்றி முழுதாக தெரிந்தும் அவர் வாழ்க்கையை ஏன் கெடுத்தீர்கள்..?" என்ற மகளை மனதில் சொல்ல முடியாத வலியுடன் பார்த்தார் ஆடலரசு.



மனைவி தன் மாமாவை பேச ஆரம்பித்ததும் நம்பிக்கு உணர்வு வந்து, "யாழீ .. நீ பேசாமல் இருக்க போறீயா? இல்லையா ?" என்றான்.



அவளோ, கணவனைப் பொருட்படுத்தாமல் மீண்டும் தன் தந்தையிடம், "உங்கள் மகனாக இருந்தால் என்னைப் போல் ஒரு பெண்ணை மணமுடிப்பீர்களா?” என்றவளின் காது 'கொய்ங்' என்றது.



ஒரு நொடி என்ன நடந்தது என்றே அவளுக்கு புரியவில்லை. தன் மேல் உயிரையே வைத்திருக்கும் தன் கணவனா? தன்னை அடித்தது என்று திகைப்புடன் நினைத்தாள்.



பெற்றவர்கள் இருவரும் மாப்பிள்ளையின் கோபத்தில் உறைந்து போய் நின்றனர்.



அவளோ, தீயாக எரிந்த கன்னத்தைப் பற்றிய படியே அவளுடைய அருமை கணவனை நிமிர்ந்து பார்த்தாள்.



அவனோ, கண்கள் சிவக்க ருத்திரமூர்த்தியாக நின்றிருந்தவன், "யாழீ இனி நீ ஒரு வார்த்தை மாமாவை பேசினால், நான் என்ன செய்வேன் என்று எனக்கு தெரியாது. மாமாவை கேள்வி கேட்கும் அளவுக்கு நீ வளர்ந்து விட்டாயா? எனக்கு எல்லாமே தெரியும் டீ. தெரிந்து தான் உன்னை விரும்பி மணந்தேன்.." என்றான்.



அவளோ, மனதிற்குள் இவனுக்கு எல்லாமே தெரியுமா? தெரிந்துமா என்னை மணந்தான். இவன் என்ன மனிதன்! என்று நெகிழ்ச்சியுடன் கணவனையே விழி எடுக்காது பார்த்தாள்.



அவனோ, "நம் கல்யாணத்திற்கு முன்பே எனக்கு தெரியும்.. மாமாவும் அத்தையும் அம்மாவிடம் எல்லாம் சொல்லிட்டாங்க.. அம்மா என்னிடம் சொல்லி எனக்கு உன்னை கல்யாணம் பண்ண சம்மதம் கேட்டாங்க.." என்றவன்..



"எல்லாம் தெரிந்து தான் சம்மதம் கொடுத்தேன். இதில் மாமா, அத்தை தப்பு என்ன..? உனக்கு இந்த விஷயம் தெரிந்தால் நீ தாங்க மாட்டாய்.. அதனால் உன்னிடம் சொல்லாமல் மறைத்தோம்.." என்றான்.



அவளோ, அவன் சொல்ல.. சொல்ல தன்னைப்பற்றி எல்லாம் தெரிந்தும், தனக்காக ஒவ்வொன்றாய் பார்த்து பார்த்து செய்து இருக்கும் அவனின் அன்பை தாங்க முடியாது அவன் காலடியில் உள்ளமும் உடலும் நடுங்க தொய்ந்து அமர்ந்தாள்.



தன் மனப்பாரத்தை சுமக்க முடியாமல், "உதி என்னால் இதை தாங்க முடியலையே, உங்க வாழ்க்கையே என்னால் போச்சே.. எனக்கு குழந்தை பிறப்பது கஷ்டம்ன்னு சொல்றாங்களே, நான் என்ன செய்வேன்.. ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்கனும்.." என்று தரையில் விழுந்த மீனாக துடித்த மனைவியின் அருகில் தானும் அமர்ந்தவன்..



"யாழிம்மா என்ன இது... இப்படி நீயே கலங்கினால் நான் என்ன செய்வேன்.. எனக்கு நீ தானே இருக்கே.. எதுக்குடி சும்மா சும்மா உங்க வாழ்க்கை போச்சுன்னு சொல்றே.. என் வாழ்க்கையே நீ தானே! அது ஏன்டி உனக்கு புரியமாட்டீங்குது.. குழந்தை மட்டுமே வாழ்க்கை இல்லை.. உனக்கு நான்.. எனக்கு நீ அது போதும் டீ, காலம் முழுவதற்கும்.." என்றவனைப் பார்த்து என்ன சொல்வதென்றே தெரியாமல் கை எடுத்து கும்பிட்டாள்.



அவனோ, அவள் கைகளை சட்டென்று பிடித்து, "லூசு மாதிரி என்ன காரியம் டீ செய்கிறாய்.. நான் ஒன்றும் கடவுள் இல்லை.. சாதாரண மனுசன் தான்.." என்றான்.



யாழியோ, "எந்த சமாதானத்தையும் ஏற்றுக் கொள்ளாமல், எனக்கு தாய்மைங்கிற வரமே இல்லாமல் போய்விட்டதே.." என்று கதறியவளின் பார்வையில் கண்ணீர் வடிய நின்ற தாயைக் கண்டதும்,

"ஏம்மா எனக்கு மட்டும் இப்படி ஆச்சு. நான் என்ன பாவம் செய்தேன்.." என்றதும்..



பெற்ற வயிறு துடிக்க, "என் தங்கமே அப்படி எல்லாம் பேசாதே டா.. நாம் கும்பிடும் சாமி நம்மை கைவிடமாட்டார்.." என்று மகளை அணைத்து ஆறுதல் படுத்தினார்.



நிறையோ, "எப்பம்மா இதெல்லாம் நடந்தது..? எனக்கு தெரியலையே.." என்றவளிடம்,



"நிறை நீ பத்தாவது படிக்கும் போது உனக்கு அடிக்கடி வயித்து வலின்னு சொல்லுவீயே ஞாபகம் இருக்கா..? ஒரு நாள் நீ தாங்க முடியாத வலியில் துடித்த போது டாக்டர் கிட்ட போய் செக் பண்ணினோம். அப்போது தான் தெரிந்தது.. உனக்கு சினைப்பையில் பெரிய கட்டி இருப்பதும், அதுவும் அது நல்லா பல்ஜ் ஆகிவிட்டது. உடனே அதை எடுப்பதை தவிர வேறு வழி இல்லை என்று டாக்டர் சொல்லிட்டாங்க.. நாங்களும் ரொம்ப பயந்துட்டோம்... எங்களுக்கும் வேறு வழி தெரியலே..” என்றவர் ..



"உன்னிடம் என்ன சொல்வதென்று தெரியாமல், வயித்து வலி சரியாவதற்கு உன் வயித்துலே ஓட்ட போட்டு மருந்து போடுவாங்கன்னு சொல்லி உன்னை நம்ப வைத்தோம். உடனடியாக லேப்ராஸ்கோப்பி மூலம் எடுத்துட்டாங்க.. உனக்கு அப்போது அதைப் பற்றி சொன்னாலும் சரியா புரிந்து இருக்காது.

யாரிடமும் நாங்கள் இதைப் பற்றி சொல்லவில்லை. அத்தைக்கு கூட அப்போது தெரியாது.." என்றவரை கண்களில் ஒளியே இல்லாமல் பார்த்தாள்.



"பொட்டபிள்ளையாச்சே இதை எடுத்தால் குழந்தை பிறக்குமான்னு நாங்க ரொம்ப பயந்தோம். அதற்கு அந்த டாக்டர் தான் ஒரு சினைப்பை இருந்தால் கூட குழந்தை பிறக்கும் என்று நம்பிக்கை கொடுத்தார்.

ஆனால் இப்போது இன்னொன்றிலும் பிரச்சனை வரனுமா..?" என்று தலையில் அடித்து கொண்டு அழுதார். பெத்த வயிறு மகளின் நிலையைக் கண்டு துடித்தது.



உதியனம்பியோ, தன் மாமியாரும் மனைவியும் என்னமோ கொலை குற்றம் செய்தது போல் துடிப்பதைக் காணமுடியாமல், "அத்தை முதலில் அழுவதை நிறுத்துங்க.. நீங்களே இப்படி அழுதால் எங்களை யார் தேற்றுவது.. திரும்ப.. திரும்ப நான் சொல்றேன், குழந்தை மட்டும் வாழ்க்கை இல்லே.. அப்படியே குழந்தை வேண்டுமென்றாலும் எத்தனையோ நல்ல வழி இருக்கு. அப்புறம் அதைப் பற்றி யோசிக்கலாம்.. இப்போதைக்கு இருக்கும் பிரச்சனையை தீர்ப்போம். உடனே அந்த கட்டியை ரிமூவ் செய்யனும். அதற்கான வழியைப் பார்ப்போம்.." என்று அழுத்தமாக சொன்னான்.



தாயும் மகளும் அவனை பிரம்மிப்பாக பார்த்தார்கள்.

யாழியோ இவன் கிடைக்க நான் என்ன தவம் செய்தேன்.. குழந்தை கனவு என்பது எல்லோருக்கும் இருக்கும். ஆனால் அந்த ஆசையைக் கூட காட்டிக்காமல், என்னை குறை கூறாமல் எனக்கே ஆறுதல் சொல்றானே என்று கணவனை நினைத்து நெகிழ்ச்சி அடைந்தாள்.



சேத்தனும், பனிநிலவும் உதியைப் பார்த்து வியந்தனர்.



ஆடலரசுக்கோ, சொல்லவே வேண்டாம்.. சும்மாவே தன் மருமகன் உதியனம்பி என்றால் உயிர்.. இப்போது இன்னும் அவன் மீது பாசம் பொங்கியது. அவர் மனம் அவனை நினைத்து பெருமிதம் கொண்டது.



ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தார்கள்..



உதியனம்பியோ, மனைவியைப் பார்த்து, "யாழி போனது போகட்டும்.. எப்படி இது எல்லாம் உனக்கு தெரிஞ்சுச்சு.. உனக்கு தெரியக் கூடாதுன்னு தான், நீ டாக்டர் கிட்ட செக் பண்ணிக்கலாம்ன்னு அடம் பிடிச்ச போது கூட நான் சேத்தன் அண்ணாவிற்கு தெரிந்த டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போனேன்.."



"ஓ! அது தான் செக்கப் பண்ண போக முதலில் தயங்கினீங்களா? தெரிந்த டாக்டர் என்பதால் தான் கண்துடைப்புக்காக வெறும் சாதாரண ப்ளட் டெஸ்ட் மட்டும் எடுத்துட்டு விட்டமின் மாத்திரை கொடுத்தாங்களா..?" என்று முறைத்தவளை அசடு வழிய பார்த்தான்.



"எல்லாரும் சேர்ந்து என்னை ஏமாற்றி இருக்கீங்க.. நான் தான் எதுவும் தெரியாமல் லூசு மாதிரி இருந்து இருக்கேன்.." என்று வருந்தியவளை..



"அசடு மாதிரி பேசாதே.. ஆமாம் இன்னைக்கு எதுக்கு ஹாஸ்பிட்டல் போனே..?" என்றவனிடம்..



தனக்கு காலையில் வலி வந்ததையும் மருத்துவமனை போனதையும் சுருக்கமாக சொன்னாள்.



"ஓ!” என்றவன்.. "சரி வா.. நேரத்தைக் கடத்தாமல் உடனே டிரீட்மெண்ட் எடுத்துக்கலாம்..



"எடுத்தா மட்டும் எனக்கு குழந்தை பிறந்திடுமா..?" என்றவளிடம்...



"யாழி எத்தனை முறை சொல்வது இந்த மாதிரி பேசாதே.."



"உதி உங்களுக்கு என் உணர்வுகள் புரியலையா..? பெண்மைக்கு அழகே தாய்மை தானே.. அந்த கொடுப்பினை எனக்கு கேள்வி குறியாகும் போது என் வலிக்கு அளவே இல்லை.."



"யாழி எனக்கு உன் வலி புரியுது டீ.. அதனால் தான் சொல்றேன்.. யாழிம்மா எல்லா மரங்களும் பூப்பது இல்லை.. அதனால் அது மரம் இல்லைன்னு ஆகுமா..? பூக்காத மரங்களும் இந்த பூமிக்கு ஏதோ ஒரு வகையில் உதவுகிறது. சரக்கொன்றை பூ தெரியுமா...?" என்றவனைப் பார்த்து.. இவன் எதுக்கு இப்போ சம்மந்தமே இல்லாமல் பூ பற்றி பேசுகிறான் என்று விழித்தாள்.



அவனோ, "சரக்கொன்றை பூ மஞ்சளாக இருக்கும். இயல்பிலேயே சரம்.. சரமாக பூக்கும்.. அது தொடுக்காமலே பூச்சரம் போல் இருக்கும். அது போல் குழந்தை பெற்றால் தான் தாயாக இருக்க முடியுமா..? இயற்கையாகவே பெண்களுக்குள் தாய்மை உண்ர்வு அளவில்லாமல் இருக்கும்.. பெண் என்றாலே தாய்மை தான். நீ குழந்தை பெற்று தான் அதை நிரூபிக்கனும்னு அவசியம் இல்லை.. நீயும் சரக்கொன்றை பூவைப் போல் தொடுக்காத பூச்சரம்! புரிஞ்சுக்கோ யாழி.." என்றவனை குடும்பமே பிரம்மிப்பாக பார்த்தது.



உதி பேசியதைக் கேட்ட பனிநிலவு, "நம்பி சொல்வது நூத்துக்கு நூறு சரி, நீ பெற்றால் தான் பிள்ளையா? இதோ இதுவும் உன் குழந்தை தான் என்று தூங்கிக் கொண்டிருந்த தன் குழந்தையைக் கொண்டு வந்து கொடுத்து, நல்லதே நினைப்போம் உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்.." என்ற தமக்கையை கண்ணீர் வழிய பார்த்தாள்.



தன் கைகளில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் நெற்றியில் நிறை மென்மையாக முத்தமிட்டாள். சில நொடி தூங்கும் குழந்தையைப் பார்த்தவள், குழந்தையின் தூக்கம் கலையாமல் தூக்கி தன் அக்காவிடம் கொடுத்தாள்.



உதியனம்பியோ, மனைவிடம் கண்களால் ஜாடை காட்டி தன் மாமாவிடம் பேச சொன்னான். சொல்ல முடியாத வலியுடன் பேச்சற்று நின்றவரை பார்க்க அவனால் தாளமுடியவில்லை..



கணவன் சொல்லை தட்டாமல் தந்தையிடம் சென்று, "அப்பா என்னை மன்னித்துவிடுங்கள். கோவத்தில் நான் என்னென்னவோ பேசிட்டேன்.." என்ற மகளை ஆறுதலாக அணைத்துக் கொண்டவர், அப்பாவை நீயும் மன்னித்து விடுடா.. அப்பாவும் அம்மாவும் எதையும் வேண்டுமென்று செய்யலே.. உன் நல்லதுக்கு தான் செய்தோம்.. உன் மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்.." என்றவரிடம் தன் வலியை காட்டிக்காமல் தலையை மட்டும் ஆட்டினாள்.



அவள் மனதில் இருக்கும் ரணத்திற்கு மருந்தே கிடையாது. காலம் முழுவதும் அழுதாலும் அவள் துக்கம் தீராது.

அவளுடைய இழப்பின் வலி அவளுக்கு மட்டுமே புரியும்.. தன் உயிரானவனுக்கு தன்னால் அவனின் கருவை சுமக்க முடியாமல் போய்விடுமோ என்று நினைக்கும் போது உயிர் போகும் வலியை அவள் உணர்ந்தாள்.



தன்னவனிடம் தன் வலிகளைச் சொல்லி அவனை மேலும் மேலும் துண்புறுத்த வேண்டாம் என்று நினைத்தாள்.

உதியோ, தாமதிக்காமல் அவளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.



தொடரும்..

Hi friends ,
நாளை காலை இறுதி அத்தியாயம்..இன்றைய அத்தியாயத்தை படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
420
Reaction score
659
Points
93
தொடுக்காத பூச்சரமே!

அத்தியாயம் 22



நிறையாழிக்கு சரியான நேரத்தில் (வயிற்றறை உட்காண் அறுவைச் சிகிச்சை) லேப்ராஸ் கோப்பி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இனி எந்த பிரச்சனையும் இல்லை.. என்று மருத்துவர் சொன்ன பின்னர் தான் மொத்த குடும்பத்தினருக்கும் நிம்மதி கிடைத்தது.



உதியனம்பியோ, மனைவியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டான். என்ன தான் லேப்ராஸ் கோப்பி சிகிச்சை என்றாலும் உள் புண் ஆறனுமே! என்று அவளை பத்திரமாக பார்த்துக் கொண்டான்.



நிறைக்கோ, அவனைப் பார்க்கும் போதெல்லாம் பிரம்மிப்பாகவே இருக்கும். அவனுடைய ஒவ்வொரு செயலும் அவளை அவன் மீது பைத்தியமாக்கியது.

ஒரு காலத்தில் எப்படி எல்லாம் இவனை அவமானப்படுத்தினோம் என்று நினைத்தவளுக்கு தன்னை நினைத்தே வெறுப்பாக இருந்தது.



உதி வீட்டில் இருக்கும் போதெல்லாம் அவனைவிட்டு நகராமல் அட்டை போல் ஒட்டிக்கொண்டே சுற்றுவாள்.



அவனும் அவளை தன் கைக்குள் வைத்து பார்த்துக் கொள்வான்.



கணவன் மனைவி தனிமையில் இருக்கும் நேரத்தில் கணவனிடம், "என் மீது உங்களுக்கு வருத்தமோ, கோவமோ இல்லையா?" என்றவளிடம்...



அவனோ, "எதுக்கு டீ .. வருத்தமும், கோவமும் படனும்?"



"நம் கல்யாணத்திற்கு முன்பும் சரி.. ஏன் நம் கல்யாணத்திற்கு பின்பும் சரி நான் உங்களை எவ்வளவு கஷ்டப்படுத்தி இருக்கேன்.."



"நான் அதை கஷ்டமாகவே நினைக்கலே.. என் யாழி தானே.." என்று நினைத்துப்பேன் என்றவனை கண்களில் காதல் பொங்க பார்த்துக் கொண்டே..





"அத்தை இறந்ததற்கு கூட நான் பேசியது தான் காரணமென்று எனக்கு குற்ற உணர்வாக இருக்கு.." என்று புலம்பியவளிடம்..



"அப்படி எல்லாம் இல்லை.. நானும் தான் அன்று உன்னிடம் கோவத்தில் பேசினேன்.. அவர்களுக்கு ஆயுசு அவ்வளவு தான்.." என்று பேசுபவனை விழி எடுக்காது பார்ப்பாள்.



"சில சமயம் உதி எனக்கு அத்தையே என் வயிற்றில் வந்து பிறக்கனும்ன்னு ஆசையா இருக்கு.. எனக்கு அந்த கொடுப்பனை கிடைக்குமா..?" என்று புலம்புவாள்.



"யாழி இந்த மாதிரி பேசுவதை முதலில் நிறுத்து... நமக்குன்னு எது எப்போ கிடைக்கனுமோ அது அப்போ கிடைக்கும்.." என்று அவள் புலம்பும் போது எல்லாம் கடிந்து கொள்வான்.



அதன் பிறகு யாழி சில நாள் புலம்பாமல் இருப்பாள்.. அப்புறம் திரும்பவும் ஆரம்பிப்பாள்.

நாட்கள் இப்படியே அதன் போக்கில் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் நகர்ந்தது. அப்படியே சென்று இருந்தால் நன்றாக தான் இருந்து இருக்கும்..



ஆனால், வாழ்க்கை என்றால்.. மேடு, பள்ளம் வரத்தானே செய்யும்.



அவர்களை புரட்டி போட ஒரு செய்தி வந்தது.

பூவணியின் கணவர் விபத்தில் இறந்து விட்டதாக செய்தி கிடைத்தது.. அது கணவன் மனைவி இருவருக்குமே பெரிய இடியாக இருந்தது.



பூவணியோ, இருவரையும் கண்டதும் கதறி அழுதாள்.. நிறை மாதத்தோடு அவள் அழுவது கல் நெஞ்சையும் கரைக்கும் விதமாக இருந்தது.



இருவரும் இனியாவது பூவணி நிம்மதியாக இருக்கட்டும் என்று நினைத்தாலும், இன்னொரு புறம் அவள் வாழ்க்கை கேள்விக் குறியானதை நினைத்து வருந்தினார்கள்..‌



பூவணியின் பெற்றோர்களோ உடைந்து போய் இருந்தனர்.. தங்கள் பெண் வாழ்க்கையில் தாங்களே மண் அள்ளிப் போட்டு விட்டோமே என்ற குற்றவுணர்வில் தவித்தார்கள்.



எல்லா துன்பத்துக்கும் ஒரு முடிவு வந்து தானே தீரும்.. அதே போல் பூவணி பட்ட கஷ்டத்திற்கு நிரந்திர முடிவு வந்தது.



கணவனின் கொடுமையால் தாய்மை அடைந்ததிலிருந்து அவள் சரியாக தன் உடல்நிலையில் கவனம் செலுத்தாமல் போனதால், அவளின் பேறு காலம் மிகுந்த சிக்கல் ஆனது.



பிரசவம் என்பது பெண்களுக்கு மறுபிறவி.. அதனால் தான் அவர்கள் கருவுற்றிருக்கும் போது மனநிலையை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்..



பூவணியோ, மனநிலையும் சரி.. உடல்நிலையும் சரி நல்ல படியாக வைத்து கொள்ளவில்லை.

அதற்கான வாய்ப்பும் அவளுக்கு அமையவில்லை.



பூவணிக்கு சரியான நேரத்தில் பிரசவ வலி வந்தது. நிறையாழியும் உதியும் அவளை மருத்துவமனையில் சேர்த்தனர். அவளின் (bp) இரத்த கொதிப்பின் அளவு அதிகமாக இருந்தது.



அதனால் அவளின் பிரசவம் மிகுந்த சிக்கலானது.

எப்படியோ போராடி பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.



ஆனால், விதியோ அவள் பட்ட கஷ்டம் போதுமென்று நினைத்ததோ என்னவோ பிரசவம் முடிந்த உடன் அவளுக்கு பிரசவ கால ரண ஜன்னி கண்டது.. அதை எதிர்த்துப் போராட அவள் உடம்பில் சக்தி இல்லாமல் போனது.. மருத்துவர்களோ அவளைக் காக்க போராடினார்கள்.



பூவணிக்கு தான் இனி பிழைக்க மாட்டோம் என்று உள் உணர்வு சொல்லியதும், தன் பெற்றவர்களைக் கூட அழைத்து பேசாமல், தன் உயிர் தோழியையும் தன் உடன்பிறவா சகோதரனான நம்பியையும் அழைத்து பேசினாள்.



"நிறை நான் இனி பிழைக்க மாட்டேன் என் குழந்தையின் பொறுப்பு இனி உன்னுடையது.." என்று திக்கி திணறி பேசியவளிடம்,



"வணி அப்படி எல்லாம் பேசாதே.. உனக்கு ஒண்ணும் ஆகாது டீ..” என்று கதறிய தோழியைப் பார்த்து விரக்தியாக சிரித்தாள்.



நம்பியோ, "வணிம்மா மனம் தளராதே.. உனக்கு ஒண்ணும் ஆகாது.. நீ சீக்கிரம் உடல் நலம் தேறி வருவாய் பாரு.." என்றவனிடம்..



"அண்ணா எனக்கு வாழும் ஆசையே போய்விட்டது. என் குழந்தையை நான் இருந்து வளர்ப்பதை விட நீங்க நல்லா வளர்ப்பீங்க.. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு.. இனி அவள் உங்கள் குழந்தை.." என்றவளுக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை.. கண்ணீர் தான் அருவியாக கொட்டியது.



கணவன் மனைவி இருவரும் அவள் இருக்கும் நிலையில் அவளை மீறி எதுவும் பேச வேண்டாம்.. முதலில் அவள் நன்றாகி வரட்டும் பிறகு பார்ப்போம் என்று நினைத்து அறையை விட்டு வெளியில் வந்தார்கள்.



ஆனால், அது தான் பூவணியை தாங்கள் பார்ப்பது கடைசி என்று அவர்களுக்கு அப்போது தெரியவில்லை.



போதும் நீ பட்ட கஷ்டம் என்று பூவணியை காலான் அழைத்துச் சென்று விட்டது.



நிறையோ, பச்சை குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு அழுது.. அழுதே ஓய்ந்து போனாள்..

எல்லாம் முடிந்த பின் பூவணியின் தாய் தந்தையை கோவம் தீர பேசி விட்டு வந்தாள்.



"பெற்று வளர்த்து கல்யாணம் பண்ணி கொடுத்தால் கடமை தீர்ந்தது என்று அவளை எமனுக்கு பழியாக்கி விட்டீர்களே.. அழகு பூவை நெருப்புக்கு இரையாக்கிட்டீங்களே.." என்று தீயாக காய்ந்தாள்.



பூவணியின் பெற்றோர்களோ நிறையின் வார்த்தைகளை கேட்டு கண்ணீர் வடித்தனர்.



அவளோ, அப்போதும் மனம் இறங்காமல், "சரியாக விசாரிக்காமல் கல்யாணம் பண்ணி கொடுத்து.. உங்கள் கவரவத்திற்காக அவள் வாழ்க்கையையே கெடுத்து விட்டு, இப்போது அழுது என்ன செய்ய..? அவள் என்ன திரும்பியா வரப்போகிறாளா?" என்றவளுக்கும் தாளமுடியாத துக்கம் நெஞ்சை அடைத்தது.



உதியனம்பியோ, "யாழி வேண்டாம் அவங்க ஏற்கனவே செத்த பாம்பு நீயும் நோகடிக்காதே..” என்றான்.



அதன் பின் வந்த நாட்களில், பூவணியின் பெற்றவர்கள் மகளின் கடைசி ஆசையாய் அவளின் குழந்தையை நிறையே வளர்க்கட்டும் என்று மனதார விட்டுக் கொடுத்தார்கள்.



நிறையாழியின் பெற்றோர்களும் குழந்தையைத் தத்தெடுக்க மகிழ்ச்சியுடன் சம்மதித்தார்கள். அவளின் ஏக்கம் தீரட்டும் என்று நினைத்தார்கள்.



யாழியோ குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக தன் வேலையை விட்டுவிட்டாள்.



குழந்தையை சட்டபடி தத்தெடுக்க நடைமுறை சிக்கல் அதிகமாக இருந்தது. குறைந்த பட்சம் இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டு முடிந்து இருக்க வேண்டும்.. ஆனால் இவர்களுக்கு ஒன்றை வருடம் தான் முடிந்து இருந்தது.



சட்டபடி தத்தெடுக்கும் வழிமுறைகளுக்கு அவர்களுக்கு கால அவகாசம் தேவைப்பட்டது..



நிறையோ, குழந்தையை தன் தோழியின் மறுஉருவமாக பார்த்தாள். குழந்தைக்கு தன் தோழியின் பெயரில் முதல் எழுத்தை எடுத்து பூவினி என்று அழகான தமிழ் பெயரை சூட்டினாள்.



பூவினி வந்த பின் நிறையின் வாழ்க்கை தெளிந்த நீரோடையாக மிக அழகாக நகர்ந்தது.



பூவினிக்கு ஒரு வயது ஆனதும், சட்டபடி அவளைத் தத்தெடுக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நம்பி செய்தான்.



பல சட்ட சிக்கல்களுக்கு நடுவில் குழந்தையை தத்தெடுப்பதற்குள் அவர்களுக்கு போதும்.. போதுமென்று ஆகிவிட்டது .



தத்தெடுக்கும் குழந்தைகளின் நலனுக்காக இப்போது விதிமுறைகளை மிக கடுமையாக்கி இருந்தது அரசு.



உதிக்கும், யாழிக்கும் பூவினியின் வரவு வசந்தமாக இருந்தது.

அவர்களின் வாழ்க்கை இரண்டு வரி கவிதையாக இனித்தது.



யாழி வீட்டையும் குழந்தையும் பார்த்துக் கொண்டாள்.



உதியோ தன் கனவான மின்சார பைக்கை உருவாக்குவதில் தன் முழு நேரத்தையும் செலவிட்டான்... அவன் எதிர்பார்த்தது போல் பைக்கை தயாரித்தும் முடித்தான்.



அவனே பல முறை அதை ஓட்டிப் பார்த்து பரிசோதனை செய்தும் பார்த்தான். ஏதாவது குறைகள் கண்டால் அதை அவ்வப்போது நிவர்த்தி செய்தான்.



அவன் உருவாக்கிய மின்சார பைக் மணிக்கு ஐம்பது கிலோமீட்டர் வேகம் கொண்டதாகவும், பேட்டரி சார்ஜிங் 5 மணிநேரம் போதுமானதாகவும்.. அதன் ‌‌வரம்பு 110கிமீ என்ற அளவில் அதன் செயல்பாடு இருந்துது.



அவனின் இந்த கண்டுபிடிப்பு ஒன்றும் சாதாரண வேலை இல்லை.. எத்தனை போராட்டங்களுடன் உருவானது.



எல்லாம் சரியாக இருந்த போதிலும் வண்டிக்கு அனுமதி வாங்குவது மிக கடினமான வேலையாக இருந்தது. அதுவும் புனேவில் உள்ள இந்தியாவின் ஆட்டோமேட்டிக் ரிசர்ச் அசோசியேஷன் (Automotive Research Association of India)(ARAI) அனுமதி வாங்க வேண்டி இருந்தது.



உதியோ தன் இத்தனை வருட கனவு வண்டிக்கு அனுமதி வாங்குவதில் எந்த விதத்திலும் தடை வந்து விடக்கூடாது என்று பல முறை சிரத்தி எடுத்து பரிசோதனை செய்து பார்த்து அவனுக்கு முழு திருப்தி வந்த பின் தான் அனுமதிக்கு அனுப்பி வைத்தான்.



அவனும் இரண்டு முறை புனே சென்று வந்தான்.. அவர்களின் சந்தேகங்களுக்கு எல்லாம் சலிக்காமல் பதில் அளித்தான்.. ஒரு வழியாக பல கட்ட பரிதோசனைக்கு பிறகு ஒரு மாதத்தில் அவனின் வண்டிக்கு அனுமதி கிடைத்தது.



அதன் பிறகு வங்கியில் கடன் வாங்கி உற்பத்தியை சிறிய அளவில் தொடங்கினான்..



சேத்தனும், பேராசிரியரும் அவனுக்கு பக்க பலமாக இருந்து உதவினார்கள்.

இன்று அவனின் பைக் பெயரைச் சொன்னால் தெரியாதவர்களே இல்லை என்னும் அளவிற்கு முன்னேறி இருந்தான்.



அவனுடைய உழைப்பும் பொருளாதார முன்னேற்றமும் பல இளைஞர்களுக்கு வழிகாட்டுதலும் , உத்வேகமும் கொடுத்தது.



யாழியோ தன் கணவனின் உழைப்பையும் திறமையையும் கண்டு வியந்து போனாள்.



எந்த சூழ்நிலையிலும், எப்போதும் யாரையும் மட்டம் தட்டக் கூடாது என்பதை யாழி நன்றாக புரிந்து கொண்டாள்..



யாரை தான் படிக்கவில்லை என்று அவமானப்படுத்தினாலோ.. அவன் இன்று தன் அறிவாலும், திறமையாலும் உயர்ந்து நிற்பதைப் பார்த்து பெருமிதம் அடைந்தாள்.



ஆனால் அவனின் ஆரூயிர் கணவனோ, சிறிது கூட தலைக்கணமோ, கர்வமோ இல்லாமல் பழைய உதியனம்பியாகவே வலம் வந்தான்.



யாழியையும் குழந்தையையும் தன் இரு கண்கள் போல் பாவித்தான்.. அவனின் உலகமே அவர்கள் தான்.



எத்தனை வேலைகள் இருந்தாலும் மனைவியுடனும், குழந்தையுடனும் செலவிடும் நேரத்தை யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டான்.



யாழிக்கோ எதை பற்றி சிந்திக்கவும் நேரமே இல்லை.. அவளின் நேரத்தை எல்லாம் உதியும், பூவினியுமே எடுத்துக் கொண்டார்கள்..



என்றாவது இரவின் தனிமையில் உதியின் கைக்குள் இருந்தபடி குழந்தையைப் பற்றி பேசுவாள்.



அன்றும் அப்படித் தான் சமையலறையை ஒழுங்குப்படுத்திவிட்டு, படுக்க வந்த யாழி கணவனின் அருகில் படுத்து உறங்கி கொண்டிருந்த பூவினியை வருடியபடியே, "உதி நான் ஒன்று கேட்பேன் நீங்க கோவீச்சுக்காம பதில் சொல்லனும்.." என்றாள்.



அவனோ, "என்ன பீடிகை எல்லாம் பலமா இருக்கு.." என்றவனின் இரு கன்னத்தையும் பிடித்து ஆட்டியபடியே.. "என் உதிகுட்டிக்கு என் மீது கொஞ்சம் கூட வருத்தமே இல்லையா..?"



"எதுக்கு டீ வருத்தபடனும்..?"



"இல்லே உங்க குழந்தையை என்னால் சுமக்க முடியலையேன்னு.." என்றவளிடம்..



"ஏன்டி எத்தனை தடவை தான் இதையே கேட்பே.. பைத்தியமா டீ நீ..? ஒரு முறை சொன்னால் உனக்கு புரியாதா?" என்று கட்டுக் கடங்காத கோபத்துடன் அவன் கத்தவும்..



"அச்சோ! சத்தம் போடாதீங்க .. பாப்பா எழுந்துக்குவா.." என்றதும் அவளை முறைத்து விட்டு அவளுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டான்.



அவளோ, குழந்தையை எடுத்து அவனின் மறுபுறம் படுக்க வைத்து விட்டு, கணவனிடம் வந்து அவனின் பின்புறம் படுத்து அவனை அணைத்துக் கொண்டாள்.



அவனோ கோபத்தில் அவளிடமிருந்து நகர்ந்து படுத்துக் கொண்டான்.



யாழியோ, தன் தவறை உணர்ந்து கொண்டு, இனிமேல் இதைப் பற்றி எப்போதும் அவனிடம் பேசக்கூடாது என்று நினைத்தவள்..



அவன் காதருகில் குனிந்து "சாரி நம்பியார் இனிமேல் இப்படி பேசமாட்டேன்.." என்றதும்.. அவன் வாரி சுருட்டி எழுந்து அமர்ந்தவன்.. "இப்ப என்ன டீ சொன்னே..?" என்றான்.



யாழிக்கு தெரியும், நம்பியார் என்று அவனை அவள் அழைத்தாள்.. அவன் சண்டை இடுவான் என்று.. அதனாலேயே அப்படி அழைத்தாள்.



அவனோ, "சொல்லு டீ இப்ப என்ன சொன்னாய்..?" என்றவுடன்.. வாகாக அவன் மடி மீது ஏறி அமர்ந்து கொண்டு, அவனின் கழுத்தை குழந்தை போல் கட்டிக் கொண்டு, "என் கூட கோவீச்சா அப்படித் தான் சொல்வேன்.."



"அப்படியா? இனி அப்படி சொன்னே அப்புறம் பேச வாய் இருக்காது.."



"வாய் இல்லாமல் எங்கே போகும்.."



"ம் கடித்து திண்றுவேன்.." என்று அவன் சொன்னதும்.. "ஆ!" என்று அவனை அதிர்ச்சியாக பார்த்தாள்.



அவனோ, அவளின் அதிர்ச்சியைக் கண்டு "அந்த பயம் இருக்கட்டும்.." என்றான்.



அவளோ, "பயமெல்லாம் இல்லே.. உங்க கூட சண்டை போட வாய் வேணுமே அதற்காக தான் அமைதியாக இருக்கேன்.." என்றாள்.



அவனோ, "அது தானே! என் பொண்டாட்டி என்னைப் பார்த்து பயந்தால் இந்த உலகம் என்னாவது.." என்றான்.



"உங்க பொண்டாட்டி உங்களே பார்த்து பயப்படவெல்லாம் மாட்டாள்.. ஆனால், பயங்கரமா லவ் பண்ணுவா.. சைட் அடிப்பா.." என்றதும்.. "அது தான் எனக்கு நல்லா தெரியுமே.." என்றவனிடம்.. தன் விளையாட்டுத்தனத்தை விட்டு சாரி கேட்டாள்.



அவனோ, "யாழி நமக்கு குழந்தை கிடைக்கனும்ன்னு இருந்தா கண்டிப்பா ஒரு நாள் கிடைக்கும் டீ.. சும்மா அதைப் பற்றியே பேசி உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காதே.." என்றவனிடம்..



"சரி இனி பேசலே.. ஆனால் உதி எனக்கு ஒரே ஒரு ஆசை தான். எனக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கு.. என் உதிக்குட்டி மாதிரி ஒரு ஆண் குழந்தை வேணும் அது போதும்...

உங்களுக்கு அப்படி எந்த ஆசையும் இல்லையா..?” என்று கேட்டபடி அவளின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.



அவனோ, "யாழி எனக்கு எந்த ஆசையும் இல்லை.. நான் ஆசைப்பட்டது எனக்கு கிடைத்துவிட்டது. என் வாழ்வை இனிமையாக்க நீ இருக்கிறாய்.. நம் குழந்தை இருக்கு... இதைவிட வேறு என்ன வேண்டும் என் நிறையழகி.."



"அது என்ன புதுசா நிறையழகி..?"



"ம்ம்.. என் வாழ்வில் மகிழ்ச்சியை நிறைக்க வந்த நிறையழகி.." என்று அவள் பேருக்கு புது அர்த்தம் சொன்னவனைப் பார்க்க.. பார்க்க அவளுக்கு திகட்டவில்லை..



அப்போது பூவினி லேசாக சினுங்கவும், அவனிடமிருந்து சட்டென்று விலகி குழந்தையை எடுத்து மடியில் கிடத்தி தட்டிக் கொடுத்தாள்.



உதியோ, அதைப் பார்த்து விட்டு, "யாழி இது தான் தாய் உள்ளம்.. பாப்பா கொஞ்சம் சினுங்கினதும் ஓடிப்போய் தூக்கி சமாதானப்படுத்துகிறாயே இது தான் டீ தாய்மை.

பெற்றால் தான் தாய்யா? பெண்களுக்கு இயற்கையாகவே தாய்மை உணர்வு உண்டு. சரக்கொன்றை பூ எப்படி இயற்கையாகவே தொடுக்காமல் பூச்சரமாக தொங்குவது போல் நீ தொடுக்காத பூச்சரம்!" என்றவனின் விளக்கத்தில் மயங்கி அவனின் தோள்களில் சாய்ந்து கொண்டாள். அவனும் அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.



அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள நேசமும், அன்பும் காலத்தால் அழியாத அழகான காவியம்..



அவளின் தனியாத ஆசை நிச்சயமாக ஒரு நாள் நடக்கும் என்று இயற்கை வசந்த மலர்களை அவர்கள் மீது அள்ளி தெளித்து ஆசிர்வதித்தது.

சுபம்.

நன்றி
அன்புடன்
இனிதா மோகன்

தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்.. உயிர் துடிப்பாய் நீ! அடுத்த அத்தியாயம் நாளை போடுகிறேன்..
 

New Threads

Top Bottom