Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Regular-Update கர்வம் அழிந்ததடி - (நிழல் நிலவு - பாகம் 2)

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
664
Reaction score
848
Points
93
அத்தியாயம் - 14

'பீச் சைடு ரெஸ்டாரண்ட்' வேண்டும் என்று தான் அபிமன்யு சொல்லி இருந்தான். ஆனால் நஸீம் தேர்ந்தெடுத்துக் கொடுத்த பாதுகாப்பான உணவாக பட்டியலில் அபிமன்யுவின் கவனத்தை ஈர்த்தது அந்த மிதக்கும் உணவகம். பழைய கப்பலை ரீமடல் செய்து உணவகமாக மாற்றி இந்திய பெருங்கடலில் மிதக்க விட்டிருந்தார்கள்.

பரந்து விரிந்த சமுத்திரத்தின் அழகை ரசித்தபடி விருப்பமான உணவை சுவைக்கும் வண்ணம், கப்பலின் மேல் தளத்தில் அமைந்திருந்தது அந்த ஹால். கூட்டம் அதிகம் இல்லை. கார்னர் டேபிள் என்பதால் மற்றவர்களின் இடையூறும் இருக்காது. நரேன் ஒருபக்கம் அமர்ந்திருக்க மறுபக்கம் ரகோத்தமன் மிருதுளாவோடு அமர்ந்திருந்தார்.

ஆம், மிருதுளாவே தான். முதல்நாள் அவனை பார்த்த அதிர்ச்சியில் அவள் கலங்கி போனது என்னவோ உண்மைதான். நஸீம் வந்து வீட்டுக்கு அழைத்துச் செல்லும் வரை அவளால் தன்னை நிலைப்படுத்துக்கொள்ள முடியவில்லை தான். ஆனால் அதன் பிறகு மீண்டுவிட்டாள்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் கண் எதிரில் பார்த்த பெற்றோரின் மரணத்தையே கடந்து வந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள். இன்று இவனை பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாதா என்ன! அவளுக்கு தேவை நேரம் மட்டும் தான். நேரம் செல்ல செல்ல மனதை திடப்படுத்திக் கொண்டாள்.

'உனக்கு உடம்பு சரியில்லை மிருதுளா. நாளைய மீட்டிங்கை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்க சொல்லி நான் நரேனிடம் பேசிவிடுகிறேன்' என்று ரகோத்தமன் கூறினார்.

ஆனால் மிருதுளா, "வேண்டாம்" என்றாள். அந்த சந்திப்பு நடந்தே ஆக வேண்டும். அவனுக்கு பயந்து ஓடி ஒளிய கூடாது என்று திடமாக நின்றாள். அதன் விளைவாகத்தான் இன்று… இப்போது… நரேனுக்கு எதிரில் அவள் அமர்ந்திருக்கிறாள்.

மிருதுளா எதிர்பார்க்காத தருணத்தில் தன்னை பார்த்துவிட்டாள் என்பதற்காக அபிமன்யுவின் பிளானில் எந்த மாற்றமும் இல்லை. அவன் அன்று காலையே வந்து அந்த கப்பலின் இரண்டாம் தளத்தில் அறை புக் செய்து தங்கிவிட்டான். தாடி தலைமுடி எல்லாம் ட்ரிம் செய்து, நல்ல உடை அணிந்து, மீண்டும் மீண்டும் தன்னை கண்ணாடியில் நூறு முறை பார்த்து சரி செய்து கொண்டு மேல்தளத்திற்கு சென்றான். தூரத்தில் இருந்தே பார்க்க முடிந்தது. வெண்ணிற உடையில், உயர்த்தி போடப்பட்ட போனிடெயிலில் கூந்தலை அடக்கி அழகு தேவதையாக அமர்ந்திருந்தாள் மிருதுளா.

மேல்தளத்திற்கு வரும் வரை... அவளை பார்க்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இப்போது பதட்டம் அவனை ஆட்கொண்டது. அவளிடம் செல்ல கால்கள் ஒத்துழைக்க மறுத்தன. ஒருமுறை மூச்சை ஆழமாக இழுத்துவிட்டு தன்னை சமன்படுத்திக் கொண்டு அவர்கள் அமர்ந்திருக்கும் டேபிளை நோக்கி சென்றான்.

அவனை பார்த்ததும், "ஹேய் அபி" என்று எழுந்து கைகொடுத்து அவனை வரவேற்ற நரேன், "ஹி இஸ் மை பிரதர் அபிமன்யு. இந்த ப்ராஜெக்ட்டை இவர் தான் ஹாண்டில் பண்ணிட்டு இருக்காரு" என்று அறிமுகப்படுத்தினான்.

"ஹலோ" என்று ராகோத்தமன் கைகொடுக்க, அவரை தொடர்ந்து மிருதுளாவும் கைநீட்டி, "ஹலோ” என்றாள்.

நெஞ்சு படபடக்க, அவள் நீட்டிய கையை பற்றி குலுக்கினான் அபிமன்யு. அவனை நேர் பார்வை பார்த்தவளிடம் எந்த சலனமும் இல்லை.

முதல் நாள் கேமிராவில் பார்த்த போது அவள் முகத்தில் தெரிந்த உணர்வுகளெல்லாம் தன்னுடைய கற்பனையோ என்று தோன்றும் அளவுக்கு அந்நிய பார்வை. அவன் அகம்பாவத்தை தலையில் தட்டி உசுப்பிவிட கூடிய பார்வை.

"ஹேய்... மிருதுளா... நலமா?" என்று மனதை மறைத்து முகத்தில் போலி புன்னகையை படரவிட்டான். அவனிடம் சிக்கியிருந்த தன் கையை விடுவிக்க முடியாமல் அவள் முகம் மாறியது. இப்போது அவன் மனதில் கொள்ளை திருப்தி - முகத்தில் மலர்ச்சி.

அவன் முகமாற்றம் அவளை இன்னும் இறுக செய்தது. "ஐ ஆம் கிரேட்..." என்றவள், "நீங்களும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்" என்றாள் தொடர்ந்து. வாய்மொழி இனிமையாக தான் இருந்தது. ஆனால் விழிகள் கோபத்தில் ஜொலித்தன.

உணர்வற்று இருந்த அவள் முகத்தில் குறைந்தபட்சம் கோபம் என்னும் உணர்வை கொண்டு வந்து விட்ட திருப்தியில் தன்னிடம் சிக்கியிருந்த அவளுடைய கரத்திற்கு விடுதலை கொடுத்தான்.

அவன் பார்வை அவளிடமிருந்து விடுபட முடியாமல் அடிக்கடி திணறுவதை அங்கிருந்த மற்ற இருவரும் கவனித்தார் போல் தெரியவில்லை. அவர்கள் முழுக்க முழுக்க தொழில் சார்ந்த உரையாடல்களில் மூழ்கியிருந்தார்கள். மிருதுளாவுக்கும் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள அதிக நேரம் தேவைப்படவில்லை. இந்த சூழ்நிலையை எதிர்பார்த்துத்தானே அவள் அங்கு வந்திருந்தாள்! சமாளித்துக் கொண்டு பேச்சு வார்த்தையில் கவனம் செலுத்தினாள்.

மூன்று யானைகளுக்கு நடுவே முயல் குட்டி போல அமர்ந்து கொண்டு அவர்களை கவுண்டர் செய்து மிருதுளா பேசும் போதெல்லாம் அபிமனுவின் கண்கள் மிண்ணும். பயந்து ஒடுங்கி அழுது அவன் நிழலில் ஒண்டி கொண்டிருந்த அவனுடைய தேவதை இன்று தனித்து செயல்படுவதை காண பெருமகிழ்ச்சி அவனுக்குள்.

ஒருவழியாக பேச்சு வார்த்தை முடிந்து இரு தரப்பிலும் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு உணவு ஆர்டர் செய்தார்கள்.

வெயிட்டர் மிருதுளாவின் விருப்பத்தை கேட்ட போது அவள் கண்ணில் பட்ட எதையோ ஆர்டர் செய்தாள். அவளுடைய விருப்பம் ரசனையெல்லாம் மடிந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. இப்போது பிடித்த உணவை தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்வது, அதை ரசித்து உண்பதெல்லாம் அவளுக்கு சாத்தியமில்லாதது.

அபிமன்யுவின் உதடுகள் அழுந்த மூடின. "சார், ஆர் யு ரெடி ஃபார் யுவர் ஆர்டர்?" - வெயிட்டர் அவன் பக்கம் திரும்ப, பொரித்த பேபி ஷிரிம்ப் மற்றும் லாப்ஸ்டர் ஆர்டர் செய்தான் அவன்.

மிருதுளா, தான் ஆர்டர் செய்த உணவை உன்ன முடியாமல் திணறி கொண்டிருந்த போது, அபிமன்யு ஆர்டர் செய்த பொரித்த இறால் வந்து சேர்ந்தது. அதை அவள் பக்கம் தள்ளி, "ட்ரை திஸ்"என்றான்.

அவள் மறந்தால் என்ன! அவன் தான் அவளுடைய விருப்பங்கள் அனைத்தையும் மூளையில் பச்சைக்குத்தி வைத்திருக்கிறானே!

பழைய நியாபகத்தில் மிருதுளாவின் நெஞ்சுக்குள் ஆழமாய் ஏதோ பாய்ந்தது. முகம் இறுக, "ஐ ஆம் சாரி... நான் இறால் சாப்பிடறது இல்ல" என்று கூறி மறுத்துவிட்டு, பிடிக்கவில்லை என்றாலும் தான் ஆடர் செய்த உணவையே முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து உண்டாள்.

அடுத்து பெவரேஜ் அட்டண்டர் வந்து அவர்களுடைய கிளாஸை ஃபில் செய்த போது மிருதுளா தனக்கு ரெட் ஒயின் வாங்கி கொண்டாள். அபிமன்யுவின் முகம் இறுகியது. அவள் அழகிய இதழ்கள் குவிந்து அச்செந்நிற செந்நிற திரவத்தை தொண்டையில் இறக்கிய போது அவன் அடிவயிற்றுக்குள் என்னவோ செய்தது.

மிருதுளா இரண்டாம் முறை தன் கோப்பையை மீண்டும் நிரப்ப சொன்னாள். அவள் சொன்னதை செய்து முடித்த அட்டெண்டருக்கு "தேங்க் யு" சொல்லி, அழகிய புன்னகையை பரிசளித்தாள். அழுந்த மூடிய உதடுகளோடு அவளை கவனித்துக் கொண்டிருந்தான் அபிமன்யு.

அவள் இறுக்கம் தளர்ந்து நரேனிடம் கூட இயல்பாக பேச துவங்கினாள். ஐந்து நிமிடம் கூட கடந்திருக்காது. மீண்டும் அட்டண்டரை அழைத்து மூன்றாம் முறை தன்னுடைய கோப்பையை நிரப்ப சொன்னாள். அடுத்து ஒரு நொடி கூட யோசிக்கவில்லை அபிமன்யு. ஒரு சின்ன புஷ்... அவ்வளவு தான். டேபிள் மெலிதாக அசைந்தது. அவள் கையிலிருந்த கோப்பை நழுவி... அவளுடைய வெண்ணிற ஆடையை செந்நிறமாக மாற்றியது.

"ஓ! ஐ'ம் சாரி மேம்" - தன் மீது தான் தவறோ என்று எண்ணி அட்டெண்டர் மன்னிப்பு கேட்டான். மிருதுளா கூட தான் தான் கோப்பையை சரியாக பிடிக்கவில்லையோ என்று நினைத்தாள். மற்ற இருவருக்கும் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு கண்கட்டி வித்தை போல் அரை நொடிக்கும் குறைவான நேரத்தில் ஒரு குயிக் ஆக்ஷன் செய்து நினைத்ததை முடித்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் அமர்ந்திருந்தான் அபிமன்யு.

அவள் அப்பாவியாக, "எக்ஸ்கியூஸ் மீ" என்று எழுந்து வாஷ்ரூம் பக்கம் சென்றாள். ஏற்படுத்திக் கொண்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்தில் அவனும் ஐந்து நிமிட இடைவெளியில் எழுந்து அவளை தேடி சென்றான்.

அது இரு பாலினத்தவரும் பயன்படுத்தும் வாஷ்ரூம். அவனுக்கு உள்ளே செல்ல எந்த தடையும் இல்லை. இல்லை என்றாலும் அவன் தயங்கி இருப்பானா என்பது சந்தேகம் தான்.

அருகில் நிழலாடுவதை கண்டு திரும்பிய மிருதுளா அங்கே அபிமன்யுவை பார்த்ததும் திடுக்கிட்டாள். அவள் சுதாரிக்கும் முன் அவளை இழுத்து சுவற்றோடு சாத்தி நிறுத்தினான். இருபுறமும் நீண்டு சுவற்றை தாங்கியிருந்த அவன் கரங்கள் அரணாக மாறி அவளை சிறை செய்திருந்தன.

"வாட் த ஹெல் ஆர் யு டூயிங்?" - சீறினாள்.

அவள் பார்வை நிதானமாக அவள் நெற்றியை... விழிகளை... இமைகளை... இதழ்களை... மெல்ல மெல்ல பருகின. கட்டுக்கடங்காத ஆத்திரத்தில் உடல் நடுங்க, "ஹௌ டேர் யு...!" என்று அவன் நெஞ்சில் கை வைத்து அவனை விளக்கித்தள்ள கடுமையாக முயன்றாள் அவள்.

மயிலிறகின் வருடல் போல் அவள் ஸ்பரிசத்தை கண்மூடி முழுமையாக உள்வாங்க முயன்றான். அவன் இதயம் வலியையும் சுகத்தையும் ஒருசேர உணர்ந்தது.

நெருப்பு பிழம்பில் நிற்பது போல் தவித்தவள், "லீவ் மீ யூ டாஷ் டாஷ்" என்று ஆபாச வார்த்தைகளை அனாயசமாக அள்ளி வீசினாள்.

இனிய கனவு கலைந்தது போல் சட்டென்று கண் திறந்தான் அவன். ஒரு நொடிதான் அந்த அதிர்ச்சி... மறுநொடி கண்ணோரம் சுருங்கியது. அவன் உள்ளுக்குள் நகைப்பதை உணர்ந்து கொதித்தாள் அவள்.

"லீவ் மீ யு ப்ளடி சிக் டாஷ்" என்றாள் மறுபடியும்.

அவள் பேசவில்லை. அவளுக்குள் இறங்கி இருக்கும் திரவத்தின் தாக்கம் என்று புரிந்துகொண்டு, "எவ்வளவு நாளா இந்த பழக்கம்?" என்றான். கேட்கும் போதே அவளும் நம்மை போலவே இப்படி கெட்ட பழக்கங்களுக்கு தன்னை அடிமையாக்கிக் கொண்டுவிட்டாளோ என்கிற எண்ணம் தோன்ற, இதயத்தை இறுக்கி பிடிப்பது போல் வலித்தது.

ஒரே நொடியில் அவன் கண்களில் இருந்த சிரிப்பு வலியாக மாறியதை கண்டு திகைத்தாள் மிருதுளா. இம்மி அளவும் உணர்வுகளை வெளிக்காட்டாமல் கற்சிலை போல் இருந்த அர்ஜுனா இவன்! - அவள் கோபத்தையும் பிடிவாதத்தையும் மீறி உள்ளே ஒரு ஓரத்தில் வலித்தது. உதட்டை கடித்துக் கொண்டு பார்வையை திருப்பிக் கொண்டாள்.

"ஒயின் மட்டும் தானா... இல்ல வேற வேதாவது பழக்கம் கூட இருக்கா?" - அவன் மீண்டும் கேட்க, அவனுடைய முந்தைய கேள்வியையே இப்போதுதான் அவள் ப்ராசஸ் செய்ய துவங்கினாள்.

'என்ன... என்ன கேட்டான்!' - மூளை மரத்துவிட்டது போல் எதுவும் யோசிக்க முடியவில்லை. அவன் இவ்வளவு நெருக்கத்தில் அவளோடு ஒட்டிக் கொண்டு நிற்கும் போது என்ன யோசிக்க முடியும் அவளால்!

"மிருது..." - மெல்ல அழைத்தான். குரல் குழைந்தது.

அந்த குரல் மிருதுளாவின் உயிரை தீண்டி அவளை நிலைகுலைய செய்ய, திறந்த வாய் மூட தோன்றாமல் அவள் அசைவற்று நின்றுவிட்டாள்.

"ரிட்டன் எப்படி போவ? ரெண்டு பேரும் ட்ரிங்க் பண்ணியிருக்கீங்களே! யார் ட்ரைவ் பண்ணுவா?" - அக்கறையாகத்தான் கேட்டான். ஆனால் அவனுடைய அக்கறையை ஏற்றுக்கொள்ள முடியுமா அவளால்! கொதித்துப் போய், "விடு... என்னை விடு" என்று பலம் கொண்ட மட்டும் அவனை தன்னிடமிருந்து விளக்கி தள்ளிவிட போராடினாள்.

கடோற்கஜன் போல உருன்டுதிரண்ட புஜங்களுடன் தன்னை சிறை செய்து வைத்திருப்பவனை ஒரு இம்மி கூட அசைக்க முடியவில்லை அவளால். ஆனால் ஆத்திரம் தீர தாக்க முடிந்தது.

அவள் மனநிலை புரிந்து அவனும் அவளுடைய கோபத்தை ஏற்றுக் கொண்டான். பிறகு அவள் சோர்ந்த போது கைகளை பிடித்து தடுத்தான். அவள் உதடு துடிக்க மேல்மூச்சு வாங்க அவனை வெறித்துப் பார்த்தாள்.

"ஐ'ம் சாரி… ஐ'ம் சாரி ஹனி " - கனத்த அவன் குரல் கரகரத்தது.

அவன் சொல்லும் எதையும் கேட்க கூட அவளுக்கு பிரியம் இல்லை. அவனிடம் சிக்கியிருக்கும் கைகளை பிடுங்கி, காதை மூடிக்கொள்ள வேண்டும் போல் தோன்றியது. ஆனால் அது முடியவில்லை. தோள்பட்டையை குறுக்கி... கண்களை இறுக மூடி அவன் சொல்லும் எதையும் கேட்காமல் தவிர்க்க முயன்றாள். அந்தோ பரிதாபம் கண்களை மூடிக் கொண்டால் காது கேட்காமல் போய்விடுமா என்ன! அவன் சொன்ன வார்த்தைகள் அட்சரசுத்தமாக அவள் செவியில் ஏறியது.

‘எத்தனை சுலபமாக சாரி சொல்கிறான்! ஹனியாமே! எவ்வளவு நெஞ்சழுத்தம்!' - தாங்க முடியாமல், "லீவ் மீ… யு… கிரேஸி அனிமல்... லீவ் மீ" என்று கத்தினாள்.

மூடி இருக்கும் கதவை தாண்டி நிச்சயமாக அவளுடைய குரல் வெளியே கேட்கும். வேலையாட்களோ அல்லது விருந்தினர்களோ கூட உள்ளே என்ன நடக்கிறது என்று செக் செய்ய வரலாம். அதைப் பற்றி கவலைப்படும் நிலையில் அவனும் இல்லை... எதையுமே யோசிக்கும் நிலையில் அவளும் இல்லை. ஓங்கி ஒலித்த அவள் குரலுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாமல் போனது. அதில் இரிட்டேட் ஆனவனின் பிடி இறுகியது.

அவள் அவனை வெறித்துப் பார்த்தாள். அவன் கண்களில் கடுமை... முகத்தில் பிடிவாதம். உள்ளும் புறமும் வலித்தது அவளுக்கு. இன்னும் கொஞ்சம் அழுத்தி பிடித்தால் எலும்பு கூட உடைந்துவிட கூடும் என்று தோன்றியது. ஆனாலும் அவனிடம் பலவீனத்தைக் காட்டக்கூடாது, ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்திவிட கூடாது என்கிற பிடிவாதத்துடன் பல்லை கடித்துக் கொண்டு நின்றாள். குரல் மட்டும் தேய்ந்து மெலிந்துவிட்டது.

"லீ...வ்...! மீ...!" - முயன்று வார்த்தைகளை வெளியே துப்பினாள்.

"ஐ ஹேவ் நோ இன்டென்ஷன் டு லீவ் யு பேபி" என்றான் அவன்.

பழைய அர்ஜுனை பார்க்க முடிந்தது அப்போது அவளுக்கு. அதே நக்கல்.... அதே திமிர். அவ்வளவு நேரமும் முயன்று மறைத்துக் கொண்டிருந்த வலி அவள் முகத்தில் வெளிப்பட்டது. கூடவே அவன் பிடியில் சிக்கியிருந்த அவள் கைகளும் நடுங்கியது. நொடியில் நிதானத்திற்கு வந்து பிடியை தளர்த்தினான் அபிமன்யு.

அவள் முகத்தில் தெரிந்த வேதனை முள்ளாக இதயத்தை தைக்க, அவசரமாக அவள் கைகளை ஆராய்ந்து, "வலிக்குதா? டைட்டா பிடிச்சுட்டேனா?" என்றான் உணராமல் செய்துவிட்ட செயலால் தன்னையே நொந்து கொண்டபடி.

அதற்குள், "இஸ் எவரித்திங் ஓகே?" என்று சினிமா போலீஸ் போல் எல்லாம் முடிந்த பிறகு உள்ளே வந்தான் அந்த கப்பல் ஊழியன் ஒருவன்.

அந்த ஒரு நொடி டிஸ்டராக்ஷன் போதுமானதாக இருந்தது மிருதுளாவுக்கு. சட்டென்று அவனிடமிருந்து விலகி அங்கிருந்து வெளியேறினாள்.​
 

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
664
Reaction score
848
Points
93
அத்தியாயம் -15

இருபுறமும் மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில் ஓடும் அந்த ஒற்றை சாலையில், வேகக் கட்டுப்பாட்டை மீறி விரைந்து கொண்டிருந்தது மிருதுளாவின் பழைய கார். கப்பலிலிருந்து எப்படி படகுக்கு வந்தோம்... படகிலிருந்து எப்படி கார் பார்க்கிங்கிற்கு வந்தோம்... இப்போது எப்படி காரை ட்ரைவ் செய்து கொண்டிருக்கிறோம் எதுவுமே தெரியவில்லை அவளுக்கு. இத்தனைக்கும் நடுவில் எப்படியோ ரகோத்தமனுக்கும், நரேனுக்கும், ‘எமர்ஜன்சி, நான் சென்றாக வேண்டும். மன்னிக்கவும். நாளை நேரில் சந்திக்கலாம்’என்று ஒரு குருஞ்செய்தியை மட்டும் அனுப்பிவிட்டாள். மற்றபடி எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் அவனிடமிருந்து விலகி ஓடிவிட வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் தான் அவளை ஆக்கிரமித்திருந்தது.

முதல் நாள் இரவு முழுக்க எத்தனையோ விஷயங்களை மீண்டும் மீண்டும் தனக்குள் சொல்லி உருவேற்றி கொண்டு திடமாக தான் அவனை சந்திக்க சென்றாள். மீசை தாடியெல்லாம் ட்ரிம் செய்து, நல்ல உடை அணிந்து, ஆண் அழகன் போல் அவள் எதிரில் அவன் வந்து நின்ற போதும், கை கொடுத்த போதும் கூட சூழ்நிலை அவள் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. பிறகு எப்படி எல்லாம் மாறியது! எப்படி ஒரே நொடியில் தலைகுப்புற கவிழ்ந்தாள்! ஒருவேளை மதுவின் தாக்கம் அவளை வலுவிழக்க செய்துவிட்டதா! அல்லது அவள் இன்னமும் அதே பழைய… பயந்த... 'வீக்'கான மிருதுளா தானா! - கோபமும் ஆத்திரமும் ஒருசேர பொங்க வெடித்து அழுதாள். அவனிடம் தோற்று பின்வாங்கி தலைதெறிக்க ஓட்டமாக ஓடிக் கொண்டிருக்கிறோம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் பிரேக்கை அழுந்த மிதித்தாள். கார் டயர் தேய்ந்து கிரீச்சிட்டு நின்றது.

அணிந்திருந்த சீட் பெல்டின் உதவியால், முன்னாள் தூக்கி எறியப்படாமல் தப்பித்தோம் என்பதை கூட உணர முடியாமல், 'எவ்வளவு ஆணவம்! எவ்வளவு நெஞ்சழுத்தம்! எவ்வளவு திமிர்!' என்று அவனை நிந்தித்துக் கொண்டிருந்தாள். அவன் சொன்ன ஒவ்வொரு பொய்யும்... நடித்த நடிப்பும்.... நம்ப வைத்து கழுத்தை அறுத்த துரோகமும்...நினைக்க நினைக்க நெஞ்சம் கொதித்தது.

'எவ்வளவு ஈசியாக தொட்டு பேசுகிறான்! எவ்வளவு ஈசியாக இழைகிறான்!' - தன்னை எவ்வளவு மலிவாக நினைத்துவிட்டான் என்கிற எண்ணம் தோன்றியதும், கோபத்தை மீறிய கழிவிரக்கத்தில் தவித்தாள்.

'அவன் எப்போது நமக்கு மதிப்பு கொடுத்தான்! ஆரம்பத்திலிருந்தே சீப்பாகத்தானே நடத்தினான்! பகடையாக பயன்படுத்தினான்! காதல் என்கிற பெயரில் கபட நாடகம் ஆடினான்!' - ஆறாத காயம் ரணமாக வலித்தது. கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீரில் கரைந்தாள்.

நேரம் செல்ல செல்ல உணர்வுகளும் மெல்ல கட்டுப்பாட்டிற்குள் வந்தது. தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு கீழே இறங்கி முகம் கழுவினாள். அப்போது பூனை போல் ஓசையில்லாமல் அவள் அருகே வந்து நின்றது ரீமாடல் செய்யப்பட்ட ஒரு பிளாக் டெவில் மெர்சிடிஸ்.

திரும்பி பார்த்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை. உள்ளுணர்வு சொன்ன செய்தியிலேயே வந்திருப்பவன் யார் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது அவளுக்கு. அவன் முகத்தில் விழிக்கக் கூடாது என்று ஓடி வந்தாலும் விடாமல் துரத்திக் கொண்டு வந்துவிட்டானே! - அடங்கிய கோபம் பொங்கிப் பீறிட்டது.

அவன் காரிலிருந்து இறங்கி தன்னை நோக்கி வருவது தெரிந்தும் அவன் பக்கம் திரும்பாமல் தன்னுடைய காரை நோக்கி நடந்தாள் மிருதுளா. இரண்டே எட்டில் அவளை தாண்டிக் கொண்டு அவளுடைய காரை அடைந்தவன், உள்ளே இருந்த சாவியை கையில் எடுத்துக் கொண்டு கதவை அடித்து மூடினான்.

"வாட் த ஹெல்... ஆர் யு டூயிங்!" - சீறினாள் மிருதுளா.

அவளுடைய கேள்விக்கு பதில் சொல்லாமல் கை கடிகாரத்தை திருப்பிப் பார்த்தவன், "எவ்வளவு ஸ்பீடா வந்திருக்க! அதுவும் இந்த வண்டியில!" என்றான் கடுகடுப்பாக.

அழுது வீங்கியிருந்த அவள் முகமும்... சிவந்திருந்த விழிகளும் கவனத்தை ஈர்க்க, கடுகடுத்த அவன் முகம் கனிந்தது. "வா.." என்று அவள் கையை பிடித்தான்.

"சாவியை கொடு முதல்ல" - அவன் கையை உதறிவிட்டு காலியாக மாறி கண்களை உருட்டினாள்.

"யு காண்ட் ட்ரைவ் மிருது. சொன்னா கேளு!" என்றான் அவன் தன்மையாக.

அவனுடைய இணக்கம் அவளுடைய வெறுப்பை இன்னும் அதிகமாக்கியது. கண்மண் தெரியாத ஆத்திரம் புத்தியை மழுங்கடித்துவிட்டது. சாவி அவன் கையில் இருக்கிறது... காரை லாக் செய்துவிட்டான் என்று தெரிந்தும், கார் கதவை பிடித்து இழுத்து திறக்க முயன்றாள் அவள்.

படபடவென்று அவள் ஹாண்டிலை இழுத்து இழுத்து விடுவதை பார்த்து, அவள் எங்கே தன்னை காயப்படுத்திக் கொள்வாளோ என்று பயந்து அவன் அவளை தடுக்க முயன்றான். எங்கிருந்துதான் அவ்வளவு பலம் வந்ததோ அவளுக்கு! துள்ளி குதித்து அவன் பிடியிலிருந்து விலகி கொண்டவள், அடுத்த நொடி ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்தாள்.

'படீரென்று' ஒலித்த ஓசைக்கு பிறகு ஆழ்ந்த அமைதி... மூச்சுவிடும் சத்தம் வெளியே கேட்கும் அளவுக்கு மயான அமைதி...

பாறையில் கையை வீசியது போல் விரல்கள் திகுதிகுவென்று எரிந்தது அவளுக்கு.. அவன் அசையாமல் சிலைபோல் நின்றான். முகம் மட்டும் பயங்கரமாக மாறிவிட்டது. நொடி பொழுதில் வேட்டை மிருகத்தின் ஆக்ரோஷம் அவன் கண்களில்!

மின்னல் பாய்வது போல் உள்ளே ஓர் இனம் புரியாத உணர்வு பாய சட்டென்று பின்வாங்கினாள் மிருதுளா. முகத்தில் மிரட்சி தெரிந்தது. உடனே அவன் மீண்டும் இலகுவானான். அவளுடைய பயம் அவனை நொடியில் இலகுவாக்கியது.

"இட்ஸ் ஓகே... ரிலாக்ஸ்... ரி..லா..க்ஸ்..." - அவளுக்கு சொன்னதோடு தன்னையும் அமைதிப்படுத்திக் கொள்ள முயன்றான்.

அது வேலை செய்தது. மேகம் மறைத்த சூரியன் போல பயத்திரைக்கு பின்னால் மறைந்திருந்த அவள் கோபம் இப்போது மீண்டும் அவனை சுட்டெரிக்க தயாரானது.

"உன்ன பார்க்கவே கூடாதுன்னு தானே தள்ளி வந்தேன். எதுக்காக என்னை தேடி வந்து கொல்ற?" - எரிமலையில் சீற்றத்துடன் வார்த்தைகளை கக்கினாள்.

உதடுகளை அழுந்த மூடி கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டான் அவன்.

"நீ கோவமா இருக்க, எனக்கு புரியுது. உன்கிட்ட சண்டை போட நான் வரல. நாம இங்கிருந்து கிளம்பனும் வா" என்றான் இழுத்துப் பிடித்த பொறுமையுடன்.

அவள் வெறுப்புடன் அவனை பார்த்தாள். "இது உன்னோட புது பிளான்... புது அஜெண்டா... இல்ல? இந்த டைம் யாரை டார்கெட் பண்ணி வந்திருக்க? இப்போ யாருக்கு வேலை செய்ய கிளம்பி இருக்க?" - ஏளனமாக கேட்டாள்.

"எஸ்... புது அஜெண்டா தான்... புது பிளான் தான்... ஆனா இது எனக்காக... உனக்காக... நமக்காக...” - அவளுடைய ஏளனத்தை புறம்தள்ளி தன் மனதை அவளிடம் வெளிப்படுத்தினான்.


அதை எட்டி உதைப்பது போல் அவனை ஒரு பார்வை பார்த்தாள் அவள்.

அதில் ட்ரிகர் ஆனவன், “நீ என்ன நினைக்கிற மிருதுளா? உன்னால என்னை ஸ்டாப் பண்ண முடியுமா? ட்ரை பண்ணி பாரேன்" என்றான் உள்ளடங்கிய குரலில். அந்த குரல்... அவளுக்கு பரிட்சயமான குரல்… எதையும் செய்து முடிக்கும் தீவிரம் மிகுந்த குரல்... மிருதுளா ஒரு வாயடைத்து போனாள். ‘இவன் எதையும் செய்வான்! முன்பு போலவே!’ - மீண்டும் ஒருமுறை உள்ளே மின்னல் பாய்வது போன்ற உணர்வு!

‘இதற்கு மேலும் அவனால் என்ன செய்துவிட முடியும்! இழப்பதற்கு இன்னும் அவளிடம் என்ன இருக்கிறது!’ - மனம் தன் அச்சத்திற்கான காரணத்தை தேட, விழிகள் அவன் முகத்தில் நிலைத்திருந்தது.

"ஐ டோண்ட் வாண்ட் டு ஹர்ட் யு... ஐ ரியலி டோண்ட்..." - ஒரே நொடியில் அவன் குரலில் இருந்த தீவிரம் கெஞ்சலாக மாறியது.

மிருதுளா உதட்டை கடித்துக் கொண்டு பார்வையை தாழ்த்தினாள். "தென் லீவ் மீ அலோன்" குரல் இறங்கிவிட்டது அவளுக்கு.

"அது முடியாது" - தீர்க்கமாக சொன்னான்.

சட்டென்று நிமிர்ந்து அவனை பார்த்தாள். "ஐ நோ... உன்னால என்னை காயப்படுத்தாம இருக்க முடியாது. அதுக்குத்தான் திரும்பி வந்திருக்க..."

"தட்ஸ் நாட் ட்ரு" - உடனே மறுத்தான் அவன்.

"ஹா" - அவள் உதிர்த்த அலட்சிய புன்னகை அவனை பிடரியில் தட்ட, அவன் உடல் விறைத்தது. "நம்மளோட கடைசி கார்வர்சேஷன் நியாபகம் இருக்கா மிருதுளா?" - ஒருவித கபட புன்னகையுடன் கேட்டான்.

மிருதுளாவின் விழிகள் விரிந்தன. 'உன்ன தேடி நான் வரமாட்டேன். உன் பின்னாடி அலைய மாட்டேன். ஆனா என்னைக்காவது ஒரு நாள் நீ என் முன்னாடி வந்த.. அதுக்கப்புறம் நீ செத்தாலும் என் கூட தான்' - ஐந்து ஆண்டுகளுக்கு முன் கர்ஜித்த அவன் குரல் இப்போதும் அவள் செவிகளில் எதிரொலித்தது.

அவள் முகத்தை படித்து மனதை அறிந்தவன், "எஸ்… யு ஆர் ரைட்... இனி நீ செத்தாலும் என் கூடத்தான்" என்றான்.

அவன் குரலும் பார்வையும் உள்ளுக்குள் அவளை சில்லிட செய்தது. ஆனாலும் அவள் கால்களை அழுந்த ஊன்றி நிமிர்ந்து நின்றாள். இன்னொரு முறை அவனிடம் தோற்று ஓடி ஒளிய அவள் தயாராக இல்லை.

"யு காண்ட் கண்ட்ரோல் மீ எனிமோர் மிஸ்டர் அபிமன்யு. நன் பழைய மிருதுளா இல்ல" என்றாள் அழுத்தம் திருத்தமாக. அவன் புருவம் உயர்த்தினான்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அங்கு இன்னொரு கார் வந்து நின்றது.

கப்பலில் அபிமன்யுவோடு மல்லுக்கட்டிய மிருதுளா அவனை உதறிவிட்டு ஓடியதும், அவனும் அவளை பின்தொடர்ந்து தான் வந்தான். ஆனால் அவள் கண்ணிமைக்கும் நேரத்தில் மந்திரம் போட்டது போல் மறைந்துவிட்டாள். லாபியில் தேடி பார்த்துவிட்டு வேறு எங்கு சென்றிருக்க கூடும் என்கிற யோசனையோடு அவன் மீண்டும் டைனிங் ஹாலுக்கு வந்த போது அங்கேயும் அவள் இல்லை.

நரேனும் ரகோத்தமனும் தங்களுடைய பேச்சில் மும்மரமாக இருந்தார்கள். அவர்களிடம் அவளை பற்றி கேட்க முடியாமல் அவன் தவித்துக் கொண்டிருந்த போதுதான் அவள் அனுப்பிய குறுஞ்செய்தி மற்ற இருவருக்கும் ஒரு சேர வந்து சேர்ந்தது. உடனே அபிமன்யுவுக்கும் விபரம் தெரிந்துவிட்டது. அடுத்து என்ன? அவனுக்கும் ஒரு எமர்ஜன்சி உருவானது, அடுத்த போட்டில் அவன் ஏறி மிருதுளாவை வந்து சேர்ந்தான்.

அதன் பிறகு சற்று நேரத்தில் நரேனும் கிளம்பிவிட்டான். அவனுடைய முதன்மை பாதுகாவலன் என்னும் முறையில் நஸீமும் அவன் கூடவே பயணிக்க இப்போது அவர்கள் இருவரும் கூட மிருதுளாவும் அபிமன்யுவும் வழக்காடி கொண்டிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

"என்ன ஆச்சு?" - நஸீம் காரிலிருந்து இறங்கி அவர்களை நோக்கி வந்தான். நரேன் கார் கண்ணாடியை இறக்கிவிட்டு, "வாட்ஸ் அப் அபி?" என்று குரல் கொடுத்தான்.

இவன் இங்கிருந்து கையை உயர்த்தி, 'கவலைபட எதுவும் இல்லை' என்று சைகை செய்தான்.

மிருதுளாவின் பார்வை நஸீமிடம் சென்றது. அபிமன்யுவின் பார்வை அவள் முகத்தில் நிலைத்திருந்தது.

"ஏதாவது பிரச்சனையா?" - மீண்டும் மிருதுளாவிடம் கேட்ட நஸீமின் பார்வை அபிமன்யுவின் பக்கம் சென்று மீண்டது.

"இல்ல... ஒன்னும் இல்ல..." - அவள் தடுமாறினாள். அதற்குள் நரேனும் கீழே இறங்கிவிட்டான். அண்ணனின் முகத்தில் இருந்த இறுக்கம் அவனை காருக்குள் அமரவிடவில்லை.

"என்ன ஆச்சு அபி?" என்றான் அருகில் வந்து.

அவன் பதில் சொல்லாமல் தோளை குலுக்கினான். அவன் குழப்பமாக பார்க்கவும், "தெரியல... அதை கேட்கத்தான் நானும் ஸ்டாப் பண்ணினேன்" என்றான்.

மிருதுளா பதட்டமானாள். அது ஒரு சின்ன விஷயம்... அதை கூட சமாளிக்க முடியாத அளவுக்கு தான் அவளுடைய மனநிலை இருந்தது. அதை உடனே கண்டு கொண்டு, "ஐ திங்க் ஷி லாக்ட் ஹர்செல்ஃப் அவுட்" என்று உதவிக்கரம் நீட்டினான் அபிமன்யு.

அது உதவியா உபாத்திரமா என்று புரிந்துகொள்ள முடியாத தவிப்புடன் அவனை பார்த்தாள் மிருதுளா.

"லாக்ட் அவுட்! எப்படி!" - நஸீமின் வியப்பு அபிமன்யுவை எரிச்சல் படுத்தியது.

"எப்படின்னா? சாவி உள்ள மாட்டிக்கிச்சு... வேற எப்படி?" - வெடுவெடுத்தான் அபிமன்யு.

அதற்கு மேல் அவனிடம் எதையும் கேட்க முடியாமல் மிருதுளாவின் பக்கம் திரும்பினான் நஸீம். அவன் பார்வை தன்னை ஆராய்வதை உணர்ந்து, "பிரெஷ் ஏர்-காக ஸ்டாப் பண்ணினேன். சாவியை உள்ளேயே விட்டுட்டேன்" என்று முணுமுணுத்தாள் அவள். சிறிதும் விருப்பம் இல்லை என்றாலும் மகுடிக்கு ஆடும் பாம்பு போல அபிமன்யுவின் பொய்யை ஒட்டியே அவளும் பேசினாள். ஏன் என்று காரணம் தான் புரியவில்லை.

"கேன் யு டிராப் மீ?" - மெல்லிய குரலில் கேட்டாள். அந்த கேள்வி நஸீமை நோக்கி சென்றதில் நாணறுந்த வில் போல் விறைத்து நிமிர்ந்தான் அபிமன்யு.

நஸீம் நரேனை பார்க்க அவன் ஆமோதிப்பாக தலையசைத்தான். அவன் கொடுத்த சம்மதத்தை நஸீம் மிருதுளாவிற்கு கடத்துவதற்குள், குறுக்கே வந்தான் அபிமன்யு.

"யு ஆர் ஆன் டியூட்டி. டிஸ்டராக்ஷன் வேண்டாம். எனக்கு ஆன் த வே தான். நான் டிராப் பண்ணிட்றேன். நீ நரேனை கூட்டிட்டு கிளம்பு" - நஸீம் கேட்க விரும்பாத அதிகார குரல்.

பல்லை கடித்து அவமானத்தை விழுங்கி கொண்டு மீண்டும் நரேனை பார்த்தான். உதவிக்கு வரமாட்டானா என்றிருந்தது.

அவனோ நஸீமை கவனிக்காமல், "ஆர் யு ஸூர் அபி?" என்று அபிமன்யுவிடம் விசாரித்துக் கொண்டிருந்தான்.

"நிச்சயமா" என்று அவனுக்கு பதில் கொடுத்தவன், "கிளம்பலாமா?" என்றான் மிருதுளாவிடம்.​
 

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
664
Reaction score
848
Points
93
அத்தியாயம் - 16
அது ஒரு கட்டாய கார் பயணம் தான் மிருதுளாவுக்கு. கட்டம் கட்டி தூக்குவது போல் அவளுக்கு வேறு வாய்ப்பே இல்லாத சூழ்நிலையை உருவாக்கி, தன்னோடு பயணம் செய்ய வைத்தான் அபிமன்யு. பழைய நினைவுகள் எல்லாம் அலையலையாக மேலெழுந்தது... அவர்களுடைய முதல் சந்திப்பே ஒரு கார் பயணம் தான். அதன் பிறகு எத்தனையோ! இப்போது இன்னொரு பயணம்... மனம், அலைக்கடலில் தத்தளிக்கும் துரும்பு போல அல்லாடியாது. தன் தவிப்பை வெளிக்காட்டி விட கூடாது என்கிற எண்ணத்தில் வேடிக்கை பார்ப்பது போல் முகத்தை வெளிப்புறம் திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

சாலையில் பார்வையை பதித்திருந்தவனும் இறுக்கமாகத்தான் இருந்தான். அந்த பயணம் முழுக்க இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அவளிடம் முகவரியோ வழியோ கேட்காமல் நேரடியாக அவளுடைய வீட்டுக்கு எதிரில் அவன் காரை கொண்டு சென்று நிறுத்தியதில் அவளுக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. காரிலிருந்து இறங்குவதற்கு முன், "கீ?" என்று தன்னுடைய கார் சாவியைக் கேட்டாள்.

"அது என்கிட்டயே இருக்கட்டும். மார்னிங் ட்ரைவர் வந்து உன்ன பிக் பண்ணிப்பான்" என்றான்.

அவள் தயாரித்துக் கொடுத்த ப்ராஜெக்ட் திட்டத்தில் ஒரு பகுதி, சர்வைலென்ஸ் சிஸ்டம் குறைபாடுகளை மேம்படுத்துவதற்காக அட்வான்ஸ்ட் டெக்னாலஜியை கொண்டு வருவதாகும். அதை செயல்படுத்தும் வேலை மறுநாளிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதும் இன்றைய பேச்சு வார்த்தையில் முடிவானது. அதனை தொடர்ந்து கட்டிடம் மற்றும் வாகன மேம்பாடு, செக்யூரிட்டி மற்றும் பாதுகாவலர்களுக்கான பயிற்சி என்று அனைத்தும் செயல்பாட்டுக்கு வர இருப்பதால் 'கீப் லாக் செக்யூரிட்டி' குழு இனி தினமும் கம்பெனிக்கு வர வேண்டியது அவசியம். அவர்களுக்கும் பி-ஆர்-என் இண்டஸ்ட்ரீஸுக்கும் இடையில் பாலமாக செயல்பட போவது மிருதுளாதான் என்பதால் தான் அபிமன்யு அவளை அழைக்க ட்ரைவரை அனுப்புவதாக சொன்னான்.

மிருதுளா மறுத்து எதுவும் பேசவில்லை. அவள் அமைதியாக காரிலிருந்து இறங்கியதற்கான காரணத்தை, மறுநாள் அவன் அனுப்பிய டிரைவரை திருப்பி அனுப்பிவிட்டு அவள் நஸீமுடன் கம்பெனிக்கு வந்தபோது தெரிந்து கொண்டான் அபிமன்யு.
*****
மிருதுளாவை அழைத்துவர அபிமன்யு ஒருவனை அனுப்புகிறான் என்றால் அவன் வெறும் டிரைவராக மட்டும் இருக்க முடியுமா என்ன! முன்பொரு காலத்தில் அபிமன்யுவோடு நீண்ட நாள் பயணித்தவன். பிறகு அவன் நிழல் உலக இருளில் கரைந்துவிட்ட போது அவனை சந்திக்க முடியாமல் தன் பயணத்தை மாற்றிக் கொண்டவன். இப்போது அவனுடைய அழைப்பை ஏற்று அந்தமானுக்கு வந்து மீண்டும் அவனோடு சேர்ந்து கொண்டவன். அவனுடைய நம்பிக்கைக்கு உரியவன். அப்படிப்பட்டவன் மிருதுளா திருப்பி அனுப்பியதும் உடனே அங்கிருந்து கிளம்பிவிடுவானா என்ன! டிரைவராக சென்றவன் ஸ்பையாக மாறி, மிருதுளா நஸீமின் காரில் ஏறுவதை, தூரத்தில் இருந்து புகைப்படம் எடுத்து அவனுக்கு அனுப்பினான்.

அந்த நொடியிலிருந்து நசீமின் கார் கம்பெனி வளாகத்திற்குள் நுழையும் வரை அபிமன்யுவிற்கு வேறு எந்த வேலையும் செய்ய முடியவில்லை. கோபமும் இயலாமையுமாக ஒருவித விளிம்பு நிலையில் நொடிக்கு ஒரு முறை முதன்மை நுழைவாயிலை ஃபோக்கஸ் செய்யும் கேமிரா படக்காட்சியையே திரையில் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த கார் உள்ளே நுழைந்ததும், சட்டென்று இருக்கை நுனிக்கு வந்து கணினி திரையை உன்னிப்பாக பார்த்தான். முடிந்தால் திரை வழியாகவே அந்த காருக்குள் நுழைந்து, நஸீமை நாக் அவுட் செய்துவிடுவான் போலிருந்தது. அதற்குள் கார் ஓரம்கட்டி நிற்க, மிருதுளா கீழே இறங்கினாள். குனிந்து ட்ரைவர் சீட்டிலிருந்த நஸீமிடம் ஏதோ பேசினாள். பிறகு அவன் கீழே இறங்கினான். கம்பெனி வளாகத்துக்குள் சுற்றிக் கொண்டிருக்கும் 'யுடிலிட்டி' வாகனம் ஒன்றை இடைமறித்து அழைத்தான் நஸீம். மிருதுளா அவனிடம் தலையசைத்துவிட்டு அதில் ஏறிக்கொள்ள, அந்த வாகனம் இரண்டாம் பிளாக் பக்கம் சென்றது. அங்குதான் முதற்கட்ட வேலை நடக்கிறது என்பதால் மிருதுளா அங்கு செல்கிறாள் என்று புரிந்து கொண்ட அபிமன்யு, அடுத்து நஸீமை கவனித்தான். அவனோ மிருதுளா கண்ணிலிருந்து மறையும் வரை நின்ற இடத்திலேயே நின்று, அந்த வாகனம் செல்லும் திசையிலேயே பார்வையை பதித்திருந்தான்.

தீ பிடித்தது போல் உள்ளுக்குள் எரிந்தது அவனுக்கு. மிருதுளாவை அவன் பார்க்கும் பார்வையும்... எண்ணவோட்டமும் சகிக்க முடியாத துன்பம்! ஆனால் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. கட்டிப்போட்டு அடிப்பது போல் சூழ்நிலை அவனை வதைத்தது. ஆனாலும் ரியாக்ட் செய்துவிட கூடாது என்று தன்னை கட்டுப் படுத்திக் கொண்டான். சற்று நேரத்தில் நசீம் அவனை பார்க்க வந்தான். அவனுடைய வேலை இவனோடு தொடர்புடையது என்பதால் அது தவிர்க்க முடியாத சந்திப்பு. பெரும்பாடுபட்டு தன்னை கட்டுக்குள் வைத்துக் கொண்டான் அபிமன்யு.

அன்று முழுவதுமே அவன் மிருதுளாவை சந்திக்கவில்லை. வேலை நேரம் முடிந்து ரிப்போர்ட் கொடுக்க மெயின் பிளாக் வந்த போதுதான் கேமிராவில் அவளை பார்த்தான். மித்ரா விடுப்பில் இருந்ததால், ரிசப்ஷனில் இருந்த பெண் அவளை நேரடியாக அபிமன்யுவிடம் அனுப்பினாள்.
********

'நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது' என்கிற ரீதியில் தான் அவன் அனுப்பிய காரை நிராகரித்துவிட்டு நஸீமை அழைத்து, ரைட் ரிக்வஸ்ட் செய்தாள் மிருதுளா. சொன்ன நேரத்திற்கு முன்பாகவே அவன் மலர்ந்த முகத்தோடு வந்து நின்றதை பார்த்ததும் சுருக்கென்று உள்ளே குத்தியது அவளுக்கு. தன்னுடைய சூழ்நிலைக்காக அவனை பயன்படுத்திக் கொள்கிறோம் என்கிற குற்ற உணர்ச்சி.

"சாரி... டாக்சி கூப்பிடலாம்ன்னு தான் நெனச்சேன். ஆனா..." என்று அவள் முடிப்பதற்கும், "நோ நோ நோ மிருதுளா... எனக்கு ஒரு கஷ்டமும் இல்ல... சந்தோஷம் தான்" என்றான் அவன். சொல்லும் போதே கண்கள் மின்னியது.

மிருதுளா பார்வையை திருப்பிக்கொண்டாள். அவன் மனதில் தேவையில்லாத ஆசைக்கு வித்திடுகிறோம் என்று புரிந்து மௌனமானாள். அவன் விடாமல் பேச்சு கொடுத்துக் கொண்டே வந்தான்.

"இப்போ எப்படி இருக்கு ஹெல்த்? பரவால்லையா?" என்றான் அக்கறையாக. வேலையில் ஏதேனும் சிரமங்கள் இருக்கிறதா என்று விசாரித்தான். ரகோத்தமனுக்கும் தனக்குமான உறவை பற்றி சொன்னான். கடைசியாக தன்னுடைய குடும்பத்தை பற்றி பேச்சை எடுத்தான். அவன் தன்னுனடய உணர்வுகளை அவளிடம் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைவதை சங்கடத்துடன் உணர்ந்தவள், "நஸீம்... நான் இங்கேயே இறங்கிக்குறேன்" என்றாள்.

"ஏன்? என்ன ஆச்சு?" - அவன் குழப்பத்துடன் கேட்டபடி காரை நிறுத்தினான்.

"நான் செகண்ட் பிளாக் போகணும்" - கீழே இறங்கி கொண்டாள்.

"ஓகே... அதுக்கு ஏன் இங்க இறங்கற? ஐ'ல் டிராப் தேர்"

"இட்ஸ் ஓகே.... நான் ஏதாவது ஒரு 'யு-டி-வி' ல போயிடுறேன். உங்களுக்கு டைம் ஆயிடிச்சு" - அவள் மறுக்கும் தொனியை மறுத்து போச முடியாமல் அவனும் கீழே இறங்கினான். அங்கே சுற்றிக் கேண்டிருந்த அந்த குட்டி வாகனத்தை அழைத்து மிருதுளாவை இரண்டாம் பிளாக்கிற்கு அழைத்துச் செல்லும்படி அதன் ஓட்டுனரிடம் பணித்தான். அவள் தலையசைத்து நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிய பிறகும் அவனால் பார்வையை அவளிடமிருந்து பிரிக்க முடியவில்லை.

என்னை உன்னால் கட்டுப்படுத்த முடியாது என்று அபிமன்யுவுக்கு தெரிவிப்பதற்காகத்தான் அவள் நஸீமின் உதவியை நாடினாள். ஆனால் அவன் மதியமே, "லஞ்ச் டைம் ஆயிடுச்சே! சாப்பிடலையா?" என்று மீண்டும் அவளிடம் வந்து நின்ற போது திகைத்துப் போனாள்.

"வேலை இருக்கு நஸீம். முடிச்சிட்டு போயி சாப்பிட்டுக்கறேன்" என்று அவனை தவிர்க்க முயன்றாள்.

"ம்ஹும்... கம்... சாப்பிட்டு வந்து பார்த்துக்கலாம்" என்று அவன் அவளை வலியுறுத்தி அழைத்தான்.

உடனே அவள் முகம் இறுகியது. கண்களில் கடுமை கூடியது. காலையிலிருந்து அவளிடம் தெரிந்த இலகு தன்மை சட்டென்று மறைந்துவிட்டதை வியப்புடன் பார்த்தவன், "என்ன ஆச்சு மிருதுளா?" என்றான் முகம் வாட.

அவளுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. "எனக்கு வேலை இருக்கு நஸீம். ப்ளீஸ்..." என்றாள் தன்மையாக. அவன் அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. "சரி" என்று தலையசைத்துவிட்டு, கையில் இருந்த ஒரு குளிர்பான பாட்டிலை அவளிடம் நீட்டி, "அட்லீஸ்ட்... ஹைட்ரேட்டடா இரு" என்று கூறிவிட்டு கிளம்பினான்.

இப்போது அவன் முதுகை வெறிப்பது மிருதுளாவின் முறையாயிற்று. தான் சிக்கியிருக்கும் சூழலில் தேவையில்லாமல் இவனையும் இழுத்துவிடுகிறோமே என்கிற குற்றவுணர்ச்சி அவளை குத்தியது. அனைத்திற்கும் காரணம் அவன் தானே என்று அபிமன்யுவின் பக்கம் திரும்பியது அவள் கோபம். அதே கோபத்துடன் தான் இப்போதும் அவன் முன் வந்து நின்றாள்.

அவன் முகத்தில் கோபமும் இல்லை... கனிவும் இல்லை... கண்களில் கூர்மை... தாடையோராம் தெரிந்த இறுக்கம்... புருவ மத்தில் இருந்த சுருக்கம்... அவன் மனவோட்டத்தை சிறிதும் கணிக்க முடியவில்லை அவளால். அதுவரை அவளுக்குள் இருந்த கோபம் மறைந்து, 'என்னவாயிற்று!' என்கிற கேள்வி ஒருவித தவிப்புடன் உள்ளே எழுவதை தவிர்க்க முடியவில்லை அவளுக்கு.

"கம்ப்ளீடட் ஏரியாஸ் மார்க் பண்ணி இருக்கேன். முப்பது பர்சண்ட் இன்ஸ்ட்டாலேஷன் முடிஞ்சிருக்கு' என்று கோப்பை அவன் மேஜையில் வைத்தாள்.

அதை ஓரமாக தள்ளி வைத்துவிட்டு, "சிட்" - என்று கண்களால் எதிரில் இருந்த நாற்காலியை காட்டினான்.

சட்டென்று உள்ளுக்குள் ஏதோ ஒன்று விழித்துக் கொண்டது போல், அவளுக்குள் ஒரு மாற்றம். ஓரிரு நிமிடங்களுக்கு முன், 'அவனுக்கு என்னவாயிற்று' என்று எழுந்த கேள்வியும் தவிப்பும் போன இடம் தெரியாமல் போய்விட, அவன் அமர சொன்னால் அமர்ந்துவிட வேண்டுமா என்கிற கேள்வி ஆங்காரத்துடன் மேலெழுந்தது. சின்ன விஷயத்தில் கூட அவனை எதிர்க்கும் மனநிலை ஓங்கியிருக்க, "இட்ஸ் ஓகே... சொல்லுங்க." என்றாள் நின்றபடியே.

அவன் எதுவும் பேசவில்லை. விலகாத பார்வையுடன் வெறித்துப் பார்த்தான்.

"டைம் ஆகுது? ஏதாவது சொல்லனும்னா சொல்லுங்க... இல்ல நான் கிளம்பறேன்" என்றாள்.

அவன் உதடுகளை அழுந்த மூடின.. நாசி விடைத்தது. நெற்றிப்பொட்டில் நரம்பு தெரிந்தது. பொங்கி பெறுக துடிக்கும் உணர்வுகளை உள்ளுக்குள் அழுத்தி அடக்கிவைக்க முயல்கிறான் என்று தெளிவாக தொரிந்தது அவளுக்கு. அது ஒரு விதத்தில் திருப்தியாகக் கூட இருந்ததது.

"காலையில ட்ரைவர் அனுப்பினேன். ஏன் திருப்பி அனுப்பின?"

"நீங்க அனுப்பி இருக்க வேண்டிய அவசியம் இல்ல"

"அது கம்பெனி கார்"

"நான் ரிக்வஸ்ட் பண்ணல"

"ஆர் யு ட்ரையிங் டு ட்ரைவ் மீ கிரேஸி?" - அவன் கண்கள் சுருங்கிய விதத்திலும்... உள்ளடங்கிய குரலிலும் அவளுக்கு முதுகுத்தண்டு சில்லிட்டு போயிருக்க வேண்டும். ஆனால் அவள் கொதிப்புடன் நிமிர்ந்தாள்.

"யு ஹேவ் நோ டாம் ரைட் டு டாக் டு மீ லைக் திஸ்" என்றாள் ஆத்திரத்துடன்.

அவன் சட்டென்று இருக்கையிலிருந்து எழுந்தான். "ஸ்டே அவே ஃபிரம் ஹிம் மிருதுளா" எச்சரிக்கும் தொனி. அது இன்னும் அவளை சீண்டியது.

"நீ யாரு அத சொல்ல?" - கோபத்தின் உச்சம் நடுங்கும் அவள் குரலில் தெரிந்தது.

அவன் நிதானத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டான். "நமக்குள்ள பிரச்னை இருக்கு. எனக்கு தெரியும். அதை நாம தீர்த்துக்கலாம்... இல்ல சண்டை போட்டுட்டே கூட இருக்கலாம். ஆனா இதுல இன்னொருத்தரை கொண்டு வராத ப்ளீஸ். ஐ காண்ட் டேக் இட்..." - கிட்டத்தட்ட கெஞ்சினான்.

பதிலுக்கு அவளிடம் ஒரு ஏளன பார்வை தோன்றியது. 'எத்தனை முறை அவள் கெஞ்சியிருப்பாள்! எத்தனை முறை அழுது தவித்திருப்பாள்! நெஞ்சில் கொஞ்சம் கூட ஈரம் இல்லாமல் அவளை உயிரோடு கொன்று புதைத்துவிட்டு... இப்போது நாம்! நம் பிரச்சனை! பேசி தீர்க்கலாம்! ப்ளீ…ஸ்!!! ஹா!' - அவன் கெஞ்சுவது அவளுக்குள் ஒரு குரூர திருப்தியை கொடுத்தது. அவன் கண்களில் தெரியும் தவிப்பும் வலியும் இன்னும் அதிகமாக வேண்டும்... அவனை இன்னும் துன்புறுத்த வேண்டும்... அப்போது கூட அவள் பட்ட அவளுடைய வேதனைக்கு ஈடாக முடியாது! உள்ளுக்குள் இருந்த வஞ்சினம், ஒரு விபரீத செயலில் அவளை இறங்கிவிட்டது.

அவன் கண்களை பார்த்துக் கொண்டே தன்னுடைய அலைபேசியை எடுத்து நஸீமை அழைத்தாள். அவன் எடுத்து 'ஹாலோ' சொன்னானோ இல்லையோ... அதற்குள் இவள் வெகு நெருக்கமாக குரலில், "ஹேய் நஸீ...ம், லஞ்ச் டைம்ல பிஸியா இருந்துட்டேன். சாரி... கேன் யு பிக் மீ அப் நௌ? அப்படியே வெளியே டின்னர் முடிச்சிடலாம்? மெயின் பில்டிங் எண்ட்ரன்ஸ்ல வெயிட் பண்றேன்" என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.

உறைந்து போய் நின்றுவிட்டான் அபிமன்யு. ஓரிரு நிமிடங்கள் அவன் கண்டது கேட்டது எதையும் கிரகித்து புரிந்துகொள்ள முடியவில்லை அவனுக்கு.

"என்ன பண்ண நீ இப்போ!" - நிலம் அதிர அவளிடம் நெருங்கியவனின் விழிகள் நெருப்பை உமிழ்ந்தது.

"நீ என்ன பார்த்தியோ... அதைத்தான் பண்ணினேன்..." - அழுத்தம் திருத்தமாக சொன்னாள். அவனை கொலை செய்தால் கூட தீராத அளவு ஆத்திரம் அவளுக்கு.

அவள் கையில் இருந்த போனை வலுக்கட்டாயமாக பிடுங்கி, நஸீமிற்கு கால் செய்து மீண்டும் அவளிடம் கொடுத்து, "வர வேண்டாம்னு சொல்லு.... ஒழுங்கான வாய்ஸ்ல பேசு" என்றான் பற்கள் நறநறக்க.

அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது. கையில் இருந்து போனில் குரல் கேட்டது. "ஹலோ... மிருதுளா! ஹலோ..." - நஸீம் மிருதுளாவின் பெயரை சொல்லும் போது அபிமன்யுவின் முகத்தில் கொலை வெறி!

"நஸீ...ம்" - மீண்டும் அவள் இனிய குரலில் குழைய துவங்க... மின்னல் வேகத்தில் அந்த போனை பிடுங்கி தூக்கி சுவற்றில் அடித்தான் அபிமன்யு. அது சுக்கு நூறாக நொறுங்கி சிதறியது.

"வாட் த ஹெல் ஆர் யு டூயிங்!" - வியப்பும் வெறுப்புமாக கேட்டான்.

"ஹூ த ஹெல் ஆர் யு டு கொஸ்டின் மீ டாமிட்?" - அவனுடைய அத்துமீறலில் கொதித்துப் போய் அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளினாள். அந்த கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டு, "டோண்ட் டூ திஸ் மிருது" என்றான் அவன் தேய்ந்துவிட்ட குரலில்.

"லீவ் மீ... லீவ்... மீ..." என்று கைகளை உதறினாள். அவன் பிடி இன்னும் இறுகியதே தவிர அவளால் விடுபட முடியவில்லை.

"எனக்கு உன்ன மாதிரி ஒரு டாக்ஸிக் மேன் கூட இருக்க வேண்டாம். ஐ டிசர்வ் பீஸ்... ஐ டிசர்வ் ஹேப்பினஸ்... லீவ்... மீ" என்று உதறினாள். அவளுடைய வார்த்தைகள் அவனை பலவீனப்படுத்திவிட, இப்போது அவளால் அவன் பிடியிலிருந்து விடுபட முடிந்தது. வேகமாக அந்த அறையில் இருந்து வெளியேறி லாபிக்கு வந்தாள். வழியிலேயே அவளை எதிர்கொண்டான் நஸீம்.

"என்ன ஆச்சு மிருதுளா! கூப்பிட்ட... அப்புறம் கால் கட் ஆயிடிச்சு... திரும்ப கூப்பிட்டா கால் போகல! என்ன ஆச்சு?" - அவள் முகத்தில் தெரிந்த மாற்றத்தை ஆராய்ந்தபடி கேட்டான்.

"போலாமா?" - அவனுடைய கேள்விக்கு பதில் சொல்லாமல் அவள் ஒரு கேள்வியை கேட்க, அவன் புருவம் சுருங்கியது.

"ஆர் யு ஓகே?"

"ஐ'ம் குட். கமான்... லெட்ஸ் கோ" - அவன் கையை பிடித்து இழுத்தாள். அவன் அசையாமல் அப்படியே நின்றான். அதன் பிறகுதான் அவள் கவனம் அவனிடம் திரும்பியது. நின்று அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

"என்ன ஆச்சு?" - இப்போது அவள் புருவம் சுருங்கியது.

"என்னோட டியூட்டி இன்னும் முடியல. உன்கிட்ட போன்லயே சொன்னேனே! கேட்கலையோ!" - தயங்கி தயங்கி சொன்னான்.

மனதிற்கு பிடித்த பெண்... கனியாதா... கனியாதா என்று காத்திருக்கும் காதல்... இப்போது கைகூடுவது போல் தோன்றுகிறது. ஆனாலும் அவனால் அவளோடு நேரம் செலவிட முடியாத சூழ்நிலை.

அவன் தான் நரேனுடைய முதன்மை பாதுகாவலன். அவன் வீட்டுக்கு செல்லும் வரை அவனை நிழல் போல பின்தொடர்வது அவனுடைய முக்கியமான கடமை. உண்மையாகவே அவனுக்கு இது இக்கட்டான சூழ்நிலை தான்.

மிருதுளா மருண்ட விழிகளுடன் அவனை பார்த்தாள். ‘இதெல்லாம் அவன் சொன்னானா! ஏன் நமக்கு எதுவும் நினைவில்லை!’ - அவன் சொன்னதில் ஒரு வார்த்தை கூட தன் காதில் விழவில்லை என்பதை புரிந்துகொள்ள முடியாமல் குழம்பினாள் அவள்.

"சாரி... ஐம் ரியலி... சாரி... இன்னொரு நாள் போகலாம்... ஐ ப்ராமிஸ்" - மிருதுளாவின் கையை பிடித்தான். அவள் விலகவில்லை. யோசனையுடன் அவன் முகத்தையே பார்த்தாள். அவன் முகத்தில் சின்ன புன்னகை தோன்றியது. அவள் தலையசைத்து, "சரி..." என்றாள். பிறகு அவனிடமிருந்து விலகி, "ஸீ யூ..." என்று கூறி திரும்பி நடக்க எத்தனித்தாள்.

"வெயிட்" - அவன் தடுத்தான்.

"என்ன?"

"என்னால வெளியே தான் டைம் ஸ்பென்ட் பண்ண முடியாது. ஆனா உன்ன டிராப் பண்ணிட்டு உடனே திரும்பி வர முடியும். நரேன் காம்பஸ்ல இருக்கும் போது... ஐ கேன் ரிலாக்ஸ். அதையும் சொன்னேனே!" என்றான் மலர்ந்த புன்னகையுடன்.

"சாரி... நீங்க சொன்ன எதுவும் எனக்கு கேட்கல" என்றாள் வருத்தத்துடன்.

"இட்ஸ் ஓகே... நெட்ஒர்க் இஸ்ஸுவா இருக்கலாம். இல்ல போன்ல கூட ப்ராப்லம் இருக்கலாம்" என்றான் பிரச்சனை அவளிடம் தான் உள்ளது என்று புரியாமல். மீண்டும் அவளுக்கு உள்ளே குத்தியது.
 
Messages
18
Reaction score
15
Points
3
Nice நித்யா❤️கதை விறுவிறுப்பாக போகிறது🥰மிருதுளா ரொம்ப வெறுப்பைக் காட்டுறா. அபியை பெரிய mass ஆகப் பார்த்துட்டு இப்படி கெஞ்சிப் பார்க்கவும் பாவமாக இருக்கிறது, அதேநேரம் இவனுக்கு இது தேவைதான், மிருதுளாவை முதல் எவ்வளவு கஸ்ரப்படுத்தியிருப்பான்.என்று தோன்றுகிறது.மிருதுளா, நசிம்முடன் குழைவாக கதைப்பதை பொறுக்க முடியாமல் அபி தவிப்பது மனதுக்கு ஒருவித இதத்தை தருகிறது, அதேநேரம்
மிருதுளாவுக்கும் அபியின் கவலையைப் பார்த்து தவிப்பதுவும், கோபத்தைப் பார்த்து பயப்படுவதும் நல்லாத்தான் இருக்கிறது🥰
 
Messages
18
Reaction score
15
Points
3
Thanks Nithiya ❤️ எங்களுக்கோரம் பெரிய ud ஆக தந்திருக்கிறிங்கள்🥰
 

dushyant

New member
Messages
13
Reaction score
7
Points
3
கதை மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது... அபி and மிருதுளா meeting எப்போவும் fire தான்.... இதுல நஜீம் தான் பாவம்... Weekly two uds தாங்க நித்யா...
 

Girija priya

Member
Messages
37
Reaction score
33
Points
18
Miru abhiya pathi therinjum naseem yein naduvula kondu vara.... Abhi miru kitta kenjuradhu 😥😥😥nice intresting ud sis ❤️ next ud yeppo sis ❤️
 

Latest posts

New Threads

Top Bottom