Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் - Story

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்

அத்தியாயம் 9


உத்ரா தன் வீட்டிற்கு வந்த பின்னும் விக்கி சொன்னதையே நினைத்துக் கொண்டிருந்தாள்.

“விக்கி இடியட்! நீ உன் லவ்வ அக்செப்ட் பண்ணிக்க மாட்டேங்குற. பட், என்ன மட்டும் உதய்கிருஷ்ணா கூட ஜோடி சேர்த்து வைக்க துடியா துடிக்கிற. எல்லாம் இந்த அம்மாவ சொல்லனும். அவன்கிட்டப்போய் நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேங்குறேனு பொலம்பி இப்ப புரோக்கர் வேலப் பாக்க ஆரம்பிச்சிட்டான்.” என்று இருவரையும் சேர்த்து திட்டினாள்.

அப்போது தான் அவளது தம்பி கவின், “அக்கா நாளைக்கு நான் யூபிஎஸ்சி எக்ஸாம் எழுதப்போறேன். எப்பவும் போல நீதான் வந்து என்னை டிராப் பண்ணனும்” என்றான்.

“ம், ஓகேடா.” என்றவள் மீண்டும் விக்கியை மனதுள் குதறத் துவங்கினாள்.

கவினுக்கோ ஆச்சரியம். தனது கையிலிருக்கும் புத்தகத்தை பிடிங்கி அவள் இரண்டு கேள்வி கேட்காததும், ஒரு மணி நேரம் அறிவுரை வழங்கி அறுக்காததும் அவளின் மாற்றத்தை பறைசாற்றுவனவாய் இருந்தன. அதில் அவன் சற்று ஆசுவாசப்பட்டான். பானுமதியும் கவிலயாவும் கூறியபோது கூட அவன் உத்ரா மாறிவிட்டதாக நம்பவில்லை. ஆனால், இப்போது முழுமையாக நம்பினான்.

உத்ரா வேறு பிரச்சனைக்குள் தலையை நுழைத்திருந்ததில் தன் இயல்பை தொலைத்தாள். ஏன் அந்தப் பெட்டிக்கடைக்காரன் போதைபொருள் வினியோக வழக்கில் கைது செய்யப்பட்டதை விக்கியிடம் சொல்லவேண்டும் என்பதையே கூட மறந்திருந்தாள்.

ஆனால், அவளால் பாதிக்கப்பட்டவன் அவளை மறக்கவில்லை. அவனை கைது செய்த காவல்துறை அதிகாரி அவனை பற்றிய துப்பு கிடைத்த விவரத்தையும் சொல்ல, உத்ரா மேல் தீரா வஞ்சம் கொண்டான் அந்த பழைய ரௌடி முருகேசன். ஆனால், இதையெதையும் அறியாமல் தன்போக்கிலிருந்தாள் உத்ரா.

மறுநாள் காலை தனது தம்பியை ஸ்கூட்டியில் தேர்வு மையம் வரை கொண்டுபோய் விட்டவள் ‘ஆல் த பெஸ்ட்’ கூறி வீடு வந்தபோது அதிர்ச்சியொன்று காத்திருந்தது.

உதய்கிருஷ்ணா தனது அக்கா, அக்கா கணவனை அழைத்துக்கொண்டு அவள் வீட்டிற்கே வந்திருந்தான்.

அவனை பானுமதி ஏகபோகமாய் கவனித்துக் கொண்டிருந்தபோது கவிலயா உத்ராவின் காதருகே குனிந்து, “அம்மா ரொம்ப டூ மச்சா பண்றாங்க இல்லக்கா?” என்றாள்.

“ஆமாம்” என்று ஆமோதித்தாலும் வெட்கப் புன்னகை சிந்தினாள் உத்ரா.

கவிலயா அதனை குழப்பமாய் பார்த்தாள்.

பானுமதி உதய்கிருஷ்ணாவுக்கு பெண் பார்த்தாகிவிட்டதா என்று விசாரிக்க, அவர்கள் அனன்யாவை பற்றி கூறினார்கள். பானுமதியின் முகம் உடனே இருளடைந்துவிட்டது. உத்ராவும் அவஸ்தையாய் உணர்ந்தாள். ஆனால், அடுத்து அவள் எதிர்பாராத செய்தியொன்றை கூறினாள் அவனின் அக்கா ரஞ்சனி.

நேற்றிரவு அனன்யாவின் பெரியப்பா அலைபேசியில்‌ தொடர்புகொண்டு சம்பந்தத்தை இத்தோடு நிறுத்திக்கொள்ளலாம் என்று சொன்னதாய் கூற, உத்ரா அதிர்ச்சியாகப் பார்த்தாள்.

பானுமதி ஆர்வமாக அவர்களை ஏன், என்ன காரணம் என்று தூண்டித் துருவ, “ஒரு ட்ரக்‌ அடிக்ட்டுக்கு எம்பொண்ண குடுத்து கஷ்டப்படச் சொல்றீங்களா?” என்றுவிட்டாராம் அனன்யாவின் பெரியப்பா நந்தகோபன்.

யார் உங்களிடம் அப்படி பொய் சொன்னது என்று கேட்டதற்கும் எல்லாம் வெளியே விசாரித்துவிட்டு தான் சொல்கிறோம் என்று சொல்லி அழைப்பை துண்டித்ததோடு எண்ணையும் பிளாக் செய்துவிட்டாராம்.

இதையெல்லாம் ரஞ்சனி ஆக்ரோசமாகச் சொல்லும் போது, “என் தம்பியப் பத்தி இப்படி அவர்கிட்ட தப்பா சொன்னவன் மட்டும் என் கையில கெடச்சான்? அவன ஒரு வழி பண்ணாம விடமாட்டேன்!” என்று சபதம் எடுத்தாள்.

உத்ராவுக்கோ பகீரென்று இருந்தது. அதெப்படி அவர் இப்படி சொல்ல முடியும்? உதய்கிருஷ்ணா எந்தவொரு போதைப் பழக்கமும் இல்லாதவன் என்றல்லவா நான் அவருக்கு கொடுத்த அறிக்கையில் சொல்லியிருந்தேன். இப்போது அவர் இப்படி மாற்றி சொல்கிறார் என்றால்? என்று அதிலேயே உழன்று கொண்டிருந்தாள்.

உதய்கிருஷ்ணா அவளிடம், “நேத்து நான் குடுத்த அசைன்மெண்ட டிஸ்கன்டினியூ பண்ணிடுங்கங்க.” என்று இறங்கிய குரலில் சொன்னான்.

குழப்பத்திலிருந்தவளும் சரியென்று தலையாட்டினாள்.

ரஞ்சனியின் கணவன் அகிலன் பதிலுக்கு உத்ராவின் வரன் பற்றி கேட்க, நல்ல இடமாய் பார்த்துக்கொண்டே இருப்பதாய் சலிப்போடு சொன்னார் பானுமதி.

கவிலயாவையே பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சனி, “ஆமா மூத்தப்பொண்ணுக்கு முன்னாடி உங்க ரெண்டாவது பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதுல உங்களுக்கு ஆட்சேபனை ஏதாவது இருக்கா?” என்று கேட்க, கவிலயாவின் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது.

ரஞ்சனி தெளிவாகத் தான் அவ்வாறு கேட்டாள். ஏற்கனவே ஒருமுறை கோவிலில் வைத்து பானுமதி உத்ராவின் புகைப்படத்தை காண்பித்து சம்பந்தம் பேசியபோது வேண்டாம் என்று மறுத்துவிட்டு, இப்போது மீண்டும் அவளையே பெண் கேட்டால் அவளின் கௌரவம் என்னாவது? ஆகையால் தான் கவிலயாவிடம் தாவினாள்.

பானுமதி, “அய்யயோ! என்னம்மா நீ இப்படியெல்லாம் கேட்குற? அதெப்படிம்மா பெரியவ இருக்கும்போது சின்னவளுக்கு முடிக்க முடியும்?” என்று பதறி மறுத்தார்.

உதய்கிருஷ்ணாவும் தன் அக்காவை மனதிற்குள் கடிந்தான். உத்ரா இனிமையான மனநிலை கலைந்து அவர்கள் எப்போது வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்ற மனநிலைக்கு வந்துவிட்டாள்.

அகிலனோ வந்ததிலிருந்து உதய்கிருஷ்ணாவையே கவனித்துக் கொண்டிருந்தவன், “உங்களுக்கு பெருசா மறுப்பு ஒன்னும் இல்லைனா உங்க பெரியப் பொண்ணயே என் மாப்பிளைக்கு கட்டிக் குடுங்க.” என்று கேட்க, பானுமதி தயக்கமாய் உத்ராவைப் பார்த்தார்.

ஏன் அனைவருமே அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மொத்த ஸ்பாட்லைட்டும் தன் மேல் விழ, “உங்க இஷ்டம்மா” என்று சொல்லி தலை குனிந்தாள்.

முதல்முறையாக அந்த அதிசயம் நிகழ்ந்தது.

கவிலயாவிற்கோ தான் கனவு காண்பது போன்ற பிரம்மை உண்டானது. கூடவே நிம்மதிப் பெருமூச்சும். தனது தந்தையாலும், அக்கா கணவனாலும் திருமணத்தையே வெறுக்கும் நிலைக்குச் சென்ற தன் அக்கா எப்படி திடீரென்று இப்படி மாறினாள் என்று நடப்பதை தன் கண்களையே நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மகிழ்ச்சி பொங்க சாமியை கும்பிட்டுவிட்டு, “உங்க குடும்பத்துக்கூட சம்பந்தம் வச்சிக்க நாங்க குடுத்து வச்சிருக்கனும்.” என்று தன் சம்மதத்தை தெரிவித்தார் பானுமதி.

ரஞ்சனிக்கோ இந்த சம்பந்தம் சுத்தமாகப்‌ பிடிக்கவில்லை. ஆனாலும், நந்தகோபன் மூஞ்சில் கரியைப் பூச வேண்டும் என்ற ஆத்திரத்தில் அமைதியாக இருந்தாள். அகிலன் அடுத்த வாரமே நிச்சயம் செய்துக் கொள்ளலாம் என்று சொல்ல, பானுமதியும் சரியெ‌ன்றார்.

உதய்கிருஷ்ணா உத்ராவையே வைத்தக்கண் வாங்காமல் பார்த்ததும், “கெளம்பலாமா உதய்?” என்று அவன் தோளில் கைவைத்தான் அகிலன்.

“கெளம்பலாம் மச்சான்.” என்று நெளிந்தான் அவன்.

தாங்கள் கொண்டு வந்த பழங்களை கொடுத்துவிட்டு பானுமதியை உடல்நலத்தை பேணுமாறு கூறிவிட்டு அவர்கள் விடைபெற்றபோது, ஆசுவாசமாக இருந்தது உத்ராவுக்கு.​
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
நேரே படுக்கையறை சென்று அலைபேசியில் விக்கியின் எண்ணை தேடினாள். ஆனால், அது கிடைக்கும் முன் அனன்யாவின் பெரியப்பா நந்தகோபனிடமிருந்து அழைப்பு வந்தது. எடுத்துப் பேசியபோது அவளது தலையில் குண்டுமழை பொழிந்தார்.

“ரொம்ப தாங்க்ஸ்மா. அனன்யாக்கு நான் செய்யயிருந்த மிகப்பெரிய பாவத்த தடுத்து நிறுத்திட்ட. அந்தப் பொண்ணோட வாழ்க்கைய காப்பாத்திட்டம்மா. ச்சே! எவ்வளவு பெரிய போதைபொருள் ஆசாமிக்குப்போய் என் பொண்ண குடுக்க இருந்தேன்? நெனச்சாலே பதறுது. மறுபடியும் ரொம்ப ரொம்ப நன்றிமா.” என்று போனிலேயே அவளை பாராட்டு மழையில் நனைத்தார்.

ஆனால், அழைப்பை துண்டித்த உத்ராவின் முகத்தில் தான் ஈயாடவில்லை. எப்படி? எப்படி ரிபோர்ட் மாறியது? எப்படி இந்த தவறு நடந்தது? என்றவள் மூளை யோசித்துக் கொண்டிருந்தபோது வெளியே வரவேற்பறையில் விக்கியின் குரல் கேட்டது.

பானுமதி உத்ராவுக்கு சம்பந்தம் பேசி முடித்தது பற்றி சொல்லிக்கொண்டிருக்க, அவனும் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்தான். அப்போது ஆவேசமாக வந்த உத்ரா அவனை கைப்பிடித்து படுக்கையறை இழுத்துச்சென்று தாழ்போட்டாள். பானுமதியும் கவிலயாவும் புரியாமல் விழித்தார்கள்.

விக்கி குழப்பமாக, “என்னாச்சு உதி?” என்று விசாரிக்க,

“விக்கி ஏன் இப்படி பண்ண?” என்று தன் முதல் கேள்வியை நிதானமாகக் கேட்டாள்.

அவனோ புரியாமல், “என்ன பண்ணேன்?” என்றதும், கட்டுப்பாட்டை இழந்தாள்.

“என் கண்ணப் பாத்து பேசு. ஏன் உதய்கிருஷ்ணாவப் பத்தி நெகட்டிவ் ரிபோர்ட் குடுத்த? ஆர் யூ மேட்?” என்று கத்தினாள்.

“ஓ! உன் லவ்வரப் பத்தி தப்பான ரிபோர்ட் போனதும் கோபம் வருதா உனக்கு? ஒரு வகைல உனக்கு நல்லது தான நடந்திருக்கு? நீ இவ்வளவு டென்சன் ஆகற அளவு எதுவுமே நடக்கலையே உதி. இப்போ அவனுக்கு அனன்யா கூட கல்யாணம் நின்னுருச்சி. ஸோ, உனக்கு சாதகமா தான எல்லாம் நடந்திருக்கு?” என்றான் எளிதாக.

“நீ புரிஞ்சுப் பேசுறியா? இல்ல புரியாமப் பேசுறியா விக்கி? நாளப் பின்ன நான் தான் இப்படி பொய்யான ரிபோர்ட் குடுத்தேன்னு தெரிஞ்சா உதய் என்ன தலைல தூக்கி வச்சி கொண்டாடுவாருன்னு நெனைக்கிறியா நீ? இல்ல, அனன்யா குடும்பம் தான் தப்பான ரிபோர்ட் குடுத்ததுக்கு நம்மள சும்மாவிடுமா?”

“அடடா! உதய்னு செல்லமா கூப்பிடுற அளவு உங்க உறவு வளந்துருச்சா உதி?”

“விக்கி இந்த ஏஜென்சியோட பேர காப்பாத்த உன் அப்பா எவ்வளவு உழைச்சாருன்னு உனக்கே தெரியும். அப்படியிருக்க ஏன் பொய்யான ரிபோர்ட் குடுத்த? இதுனால உதய்கிருஷ்ணாவோட பேரு, நம்ம ஏஜென்சியோட ரெப்யூடேசன்னு எல்லாம் எவ்வளவு பாதிக்கப்படும்னு நீ யோசிச்சியா?”

“உதி நடந்தது நடந்துருச்சி. இப்போ என்ன பண்ண முடியும்? விடு”

“விடுறதா?”

“ஆமா பின்ன இத உதய்கிருஷ்ணாகிட்டயும், நந்தகோபன்கிட்டயும் சொல்லி மன்னிப்பு கேக்கச் சொல்றியா? வேற வெனையே வேணாம்.”

"எனக்கு இப்போ நான் என்ன செய்யனும்னு தெரிஞ்சிருச்சி விக்கி. இதுக்கு மேலயும் நான் உன்கூட வேலப் பாத்தேன்னா என்னை மாதிரி முட்டாள் யாரும் இருக்க மாட்டாங்க. நான்.. நான்.. என் வழியப் பாத்துக்கிறேன் விக்கி. நீ என்ன தடுக்காத ப்ளீஸ்!” என்று கைக்கூப்பி வேண்டியவள், விருட்டென்று அவ்வறையைவிட்டு வெளியேறினாள்.

அவள் தன் கைப்பையையும், ஸ்கூட்டி சாவியையும் எடுத்துக்கொண்டு நேரே சத்யம் டிடெக்டிவ் ஏஜென்சி நோக்கிச்செல்ல, அவளை காரில் பின் தொடர்ந்தான் விக்கி.

அதே சமயம், அவளை கண்கொத்தி பாம்பாக சுமோவில் பின்தொடர்ந்து கொண்டிருந்தனர் பெட்டிக்கடை முருகேசனின் ஆட்கள் இருவர்.

விக்கி உத்ராவை பின்தொடர்ந்து கொண்டிருந்தவன் தனக்கு முன்னால் செல்லும் சுமோ தன்னை உத்ராவை பார்க்க விடாமல் குறுக்கே குறுக்கே வருவது கண்டு சுமோ டிரைவரை திட்டினான்.

“பொறம்போக்கு! ஃபாலோ பண்ண விடுறானா பாரு?” என்று கடுப்பானான், அவர்களும் அதே வேலையை செய்வதை அறியாமல்.

விக்கி தன்னை நெருங்கிவிடக்கூடாது என்பதற்காக ஸ்கூட்டியில் புயல் வேகத்தில் சென்று கொண்டிருந்தாள் உத்ரா. ஆனால், சுமோ வேகத்திற்கு அவளால் ஈடுகொடுக்க முடியவில்லை.
தங்களின் தலைவன் தரப்போகும் தரமான சன்மானத்திற்காக சுமோவினால் அவளது ஸ்கூட்டியை அடித்து தள்ளிவிட்டு சிட்டாக பறந்தார்கள் அந்த கூலியாட்கள்.

அடித்த வேகத்தில் ஓரமாக கிடந்த மணற்குவியலில் சென்று விழுந்தாள். அவளின் நல்லநேரம் கையிலும் காலிலும் சிறு சிராய்ப்புகளோடு தப்பித்தாள். ஆனால், பயத்தில் மயக்கமடைந்திருந்தாள்.

விக்கி பதட்டமாக காரை நிறுத்தியவன் அவளை ஓடிவந்து தூக்கினான். கவனமாக அவளை காருக்குள் படுக்க வைத்து துரிதமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். படபடப்பில் மருத்துவமனை படிவத்தைக்கூட நிரப்ப முடியாமல் அவன் கைகள் நடுங்கின. ஒரு வழியாக அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்து, அவளின் கைக்கு மருந்திட்டு தடுப்பூசி ஒன்றை செலுத்தினார் மருத்துவர்.

விக்கியிடம், “நீங்க இவங்கள வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம்.” என்றவர் சொன்னபோது, விக்கி நம்பாமல் உத்ராவை சுற்றி சுற்றி வந்தான்.

“வேற எங்கயாவது அடிபட்டிருக்கப் போகுது டாக்டர். நீங்க இவங்கள முழுசா ஒரு ஸ்கேன் எடுத்துப் பாத்துருங்க.” என்றான்.

“இவன் இப்படி தான் பேசிட்டிருப்பான். நாங்க கெளம்பறோம் டாக்டர்” என்று எழுந்த உத்ரா பணம் கட்டச்சென்றாள்.

அவளுடனே ஓடி வந்தவன், “உதி நான் பேசுனது தப்பு தான். அதுக்காக எங்கூட இப்படி பேசாமல்லாம் இருக்காத. ப்ளீஸ் உதி! எங்கிட்ட பேசு.” என்று கெஞ்சிக்கொண்டே வந்தான்.

அவளோ அதை கண்டுகொள்ளாமல், “நீ என் பின்னாடி தான வந்த? என்னை இடிச்ச அந்த சுமோவோட நம்பர் பிளேட்ட நோட் பண்ணியா?” என்று தீவிரமாக கேட்கவும்,

தன் தலையில் கை வைத்தவன், “ச்சே! மிஸ் பண்ணிட்டேன் உதி. அவன் இடிச்சு நீ கீழ விழுந்ததும் என் மூள ஸ்டக்காகிடுச்சி. உனக்கென்னாச்சோன்னு பதறி வந்து பாத்ததுல நம்பர் பிளேட் நோட் பண்ண மறந்துட்டேன், சாரி.” என்று வருத்தப்பட்டான்.

அவனின் அசட்டைதனத்தில் உத்ராவின் ஆத்திரம் பல மடங்கானது.

“நீயெல்லாம் ஒரு டிடெக்டிவ்னு வெளிய சொல்லிக்கிறாத. ஒரு சின்ன விசயம் அதக்கூட கவனிக்க முடியல இல்ல? நீ இப்படி இருந்தா இன்னும் கொஞ்ச நாள்ல டிடெக்டிவ் ஏஜென்சிய இரும்புச்சங்கிலிப் போட்டு இழுத்து மூடிற வேண்டியது தான்.” என்று வார்த்தைகளை சூடாகக் கொட்டினாள்.

அவனோ அவளை அவளது வீட்டில் வந்து இறக்கி விடும்வரை மௌனம் சாதித்தான். அதுவே அவளது கோபத்தை இன்னும் இரட்டிப்பாக்கியது.

வீட்டிற்குள் நுழைந்ததும் நன்றாக சென்ற மகள் தன்னைப்போல் ஒருக்காலை மட்டும் ஊன்றி ஊன்றி நடப்பதைக் கண்டு, “என்னாச்சு உதி?” என்று பதறி ஓடி வந்தார் பானுமதி.

“இப்ப தான் ஹாஸ்பிடல் போயிட்டு வர்றேன். மறுபடியும் உங்களுக்காக என்ன ஹாஸ்பிடல் போக வச்சிடாதீங்க. மெதுவா வாங்க” என்று எச்சரித்தாள் மகள்.

பானுமதி அவள் பேசுவதை கண்டுகொள்ளாமல் விக்கியிடம் விசாரித்தார். பின், அவன் கூறிய மொத்தக் கதையையும் கேட்டு அவர் வருத்தப்பட்டுக் கொண்டிருக்க, வாடிய முகத்துடன் அவ்வீட்டிற்குள் நுழைந்தான் கவின்.


கலைடாஸ்கோப் திரும்பும்…

 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
அத்தியாயம் ஒன்பது பற்றிய உங்கள் விமர்சனங்களை கீழே உள்ள கிடங்கில் பதுக்கவும் ப்ரெண்ட்ஸ்.

கருத்துத்திரி,
கிடங்கு
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்

அத்தியாயம் 10


கவினைக் கண்டதும் தன் வலியைக்கூட மறந்து ஆர்வமாக, “என்னடா எக்ஸாமெல்லாம் எப்படி எழுதியிருக்க?” என்று எழ முயன்ற உத்ரா பின்‌ முடியாமல் சோபாவிலேயே உட்கார்ந்தாள்.

உடன்பிறப்போ, “உனக்கென்னாச்சுக்கா?” என்றான் பதற்றமாக.

“சும்மா சின்ன ஆக்சிடென்ட் தான்டா”

விக்கி அவளை மதியாமல் பானுமதியிடம் சொன்ன மொத்தக் கதையையும் அவனிடமும் சொல்ல, “அதவிடுடா உன் எக்ஸாம் என்னாச்சு? அதச்சொல்லு மொதல்ல. ஈஸியா? கஷ்டமா?” என்றாள்.

“நல்லா எழுதிருக்கேன் க்கா. இந்த தடவ கண்டிப்பா எனக்கு வேல கெடச்சிரும்.” என்றவன் குரலில் சுரத்தே இல்லை.

“ம், லாஸ்ட் மூனு தடவயும் இப்படி தான் சொன்ன. பாப்போம். எம்ஜிஆர் மூனு அடி வாங்கிட்டு திருப்பி அடிக்கிற மாதிரி நீயும் பாஸாகிடுவியான்னு.”

பாவமாக சிரித்தான் கவின்.

“எக்ஸாம் தான் முடிஞ்சிருச்சேன்னு உடனே ஊர் சுத்த கெளம்பிறாதடா. முடிஞ்சது லெவல் ஒன்னு தான். போய் லெவல் டூவுக்கு ப்ரிப்பேர் பண்ணு” எனவும், அழாத குறையாக தலையாட்டினான்.

அவன் முகம் வாடிப்போய் இருப்பதை வைத்தே உண்மையை ஊகித்த விக்கி, “யூபிஎஸ்சி எக்ஸாம ட்ரீமா நெனச்சி எழுதுறவங்களாலயே சில நேரம் பாஸாக முடியாமப் போகுது. இதுல நீ ஏன் இவன அது தான் உன் ஃப்யூச்சருங்குற லெவலுக்கு ப்ரசர் குடுக்குற? அவன ஃபர்ஸ்ட் டார்ச்சர் பண்றத நிப்பாட்டு. அவனுக்கு பிடிச்ச வேலைய அவனே தேடிப்பான்.” என்றதும், உத்ரா உக்கிரமானாள்.

“எல்லாரையும் உன்ன மாதிரி லட்சியமே இல்லாம இருக்கச் சொல்றியா விக்கி? உனக்கென்ன வசதியான வீட்டுப்பிள்ள. ஐ.டிய விட்டுட்டு விவசாயம், ஆர்கானிக் காய்கறி, ட்ராவல், அட்வெஞ்சர், எக்ஸ்ப்ளோரிங், மணி கான்ட் பை ஹாப்பினஸ்னு வாட்ஸப் ஸ்டேட்டஸ், என்ன வேணா பண்ணலாம். பட், நாங்க அப்படியில்ல. மிடில் கிளாஸ். ஒழச்சா தான் சோறு. பைதவே இது எங்க வீட்டு வெவகாரம் விக்கி. நீ இதுல தலையிடாம இருக்குறது தான் உனக்கு நல்லது. வந்த வேல முடிஞ்சிருச்சின்னா தாராளமா நீ உன் வீட்டுக்கு கெளம்பலாம்.” என்று வாசல் பக்கம் கைக்காட்டியவளை கவினும், பானுமதியும் ஒருசேர கண்டித்தார்கள்.

அதற்குள் விக்கி சொல்லாமல் கொள்ளாமல் தன் வீட்டிற்கு கிளம்பியிருந்தான். கவின் அவனை வாகனநிறுத்தம் வரை சென்று தடுத்துப் பார்த்தும் கேளாமல் சென்று விட்டான்.

பானுமதிக்கோ தாளவில்லை. “அடிபட்டு கெடந்த உன்ன வீடு வர கொண்டுவந்து விட்டப் பையன இப்படியா பேசுவ?” என்று சஞ்சலப்பட்டார்.

ஆனால், அதனை பொருட்படுத்தினால் அவள் உத்ரா அல்லவே. விக்கியிடம் இனி பேசவேக் கூடாது; கால் சரியானதும் வேலையை விட்டு நின்று விடவேண்டும் என்றவள் முடிவெடுத்திருக்க, அன்று மாலையே முதல் முடிவை மாற்ற வைத்தான் அவள் தம்பி.

மறுபுறம் உத்ராவின் வார்த்தைகளில் காயப்பட்டு தன் வீட்டிற்கு திரும்பிய விக்கியை காளி அவதாரம் எடுத்து வரவேற்றார் அவனின் அன்னை வேணி. வந்ததும் நேரே அவன் மின்தூக்கியில் தனதறைக்குச் செல்ல, அங்கு அவனின் பொருட்கள் யாவும் மெத்தையில் இறைந்து கிடந்தன.

அவன் ஃபேஸ்புக்கில் வால்பாறையில் எடுத்ததாகப் பதிவேற்றிய புகைப்படங்கள் சிலவற்றில் உத்ராவும் உடன் இருந்ததால் சந்தேகத்தில் அவன் வால்பாறைக்கு எடுத்துச்சென்ற பயணப்பொதியை வேணி சோதித்தார்.

எதிர்பார்த்தது போல் அவர்கள் தங்கியிருந்த விடுதியறையின் ரசீது ஒன்று சிக்கியது. அதில் ஒரு அறையில் இருவர் தங்குவதாக குறிப்பிடப்பட்டிருக்கவும் அவரின் ரத்த அழுத்தம் எகிறியது.

அத்துர்சகுனத்தில் தான் அந்த அறைக்குள் காலடி எடுத்து வைத்தான் மைந்தன்.

அரவம் கேட்டு திரும்பியவர், “என்னடாயிது?” என்று கண்களை உருட்டினார்.

“நான் இல்லாதப்ப என் திங்க்ஸ எடுத்துப் பாக்காதீங்கன்னு சொன்னா கேட்க மாட்டீங்களா?” கத்தினான் புதல்வன்.

“எடுத்துப் பாத்ததால தான உன் வாண்டவாளமெல்லாம் தெரிஞ்சது. ஏன்டா உனக்கு உன் ஸ்டேட்டஸுக்கு லவ் பண்ணவே தெரியாதாடா? அத விடு, வால்பாறைல நீயும் உத்ராவும் ஒரே ரூம்லயா தங்குனீங்க?”

“ஆமா, அதுக்கென்ன இப்ப?”

“ஆம்பள நீ சரின்னாலும் பொம்பளைக்கு எங்கடா போச்சு புத்தி? அது சரி வயித்துல வாங்கிட்டா யாரும் எதுவும் பண்ண முடியாதுனு நெனச்சிட்டாப் போல.”

“மாம் மைன்ட் யுவர் டங்க்! சின்ன விசயத்தெல்லாம் பெருசு பண்ணிட்டு இருக்காதீங்க. நாங்க ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் தான். இந்த விசயத்த இதோட விட்ருங்க ப்ளீஸ்!”

கையெடுத்துக் கும்பிடுபவனிடம் இனிப்பேசி பயனில்லை என்று வேலையாகும் இடத்தை நோக்கி தனது காயை நகர்த்த எண்ணினார்.

அவர் யோசனையோடு அவ்வறையைவிட்டு வெளியேறியதும் சோர்வாக மெத்தையில் விழுந்தவன் அலைபேசியின் அதிர்வில் அதை கையிலெடுத்தான். திரையில் ஒளிர்ந்த ‘கமிஷனர் கணபதி’ என்ற பெயரைப் பார்த்ததுமே அவன் கண்கள் மின்னின.

உத்ராவை மருத்துமனையில் சேர்த்தக் கையோடு அவளை மோதிய சுமோவின் நம்பர் பிளேட்டை ஞாபகம் வைத்து, தனக்கு நம்பிக்கையான காவல்துறை ஆணையர் ஒருவருக்கு தகவல் தந்தான் விக்கி.

உடனே சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதாய் வாக்குறுதி தந்தார் அவர். இப்போது அவர் அழைப்புவிடுப்பது அவர்கள் பிடிபட்டு விட்டார்கள் என்பதை அறிவிக்கவே என்று சரியாக ஊகித்தவன், உடனே எடுத்துப் பேசினான்.

“ம், சொல்லுங்க சார். கண்டுபிடிச்சிட்டீங்களா? யாரு சார் அவனுக? பெட்டிக்கட முருகேசன் ஆளுங்களா? எது கஞ்சா வித்துட்டு இருந்தானே அவனா? ப்ளடி பாஸ்டர்ட்! சார் நீங்க எனக்கு என்ன பண்ணுவீங்களோ தெரியாது. அந்த முருகேசனும் அவன் அடியாளுங்களும் லைஃப் லாங் ஜெயில்ல கெடக்கற மாதிரி பண்ணனும். அவனுங்க வெளியவே வரக்கூடாது. அதுக்கு எவ்ளோ செலவானாலும் பரவாயில்ல. நான் பாத்துக்கறேன்.” என்று சொல்லி வேண்டிய பதிலைப்பெற்று அலைபேசியை அணைத்தான்.

வன்மத்தில் அவன் வாய் சத்தமாக கர்ஜித்தது. “அவனுங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் உதியையே கொல்லப் பாப்பானுங்க?” என்று.

மறுபுறம் உத்ராவை கடிந்துவிட்டு தனது அறைக்குள் அடைந்துகொண்ட கவினுக்கோ உலகமே இருண்டுபோனது போலானது. வெறும் பத்து சதவீதக் கேள்விகள் மட்டும் தான் அவன் படித்த புத்தகங்களிலிருந்து கேட்கப்பட்டிருந்தன. மற்றவையெல்லாம் தூரதேசத்தவை. அங்கேயே கலங்கிய கண்களுடன் தான் தேர்வெழுதினான்.

முதல்சுற்றே இப்படியென்றால் இன்னும் இரண்டு சுற்றுகள் உள்ளன. ஏற்கனவே போட்டித்தேர்வென்று மூன்று வருடங்களை வீணாக்கி விட்டதற்காக ரொம்ப வருந்தினான். எப்படியும் தேர்வு முடிவு வந்து அனைவரின் பேச்சும் அவனை கொல்லத்தான் போகிறது. அதற்கு முன் தானே போய் விட்டால் என்னவென்ற ஒரு விநாடி யோசனையில் நகவெட்டியில் இருந்த கத்தியால் தன் இடக்கையின் நரம்பை வெட்டிக்கொண்டான்.​
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
மாலை தன் பிள்ளைகள் அனைவரும் வீட்டில் இருப்பதால் நொறுக்குத்தீனி தயார் செய்த பானுமதி அவற்றில் கொஞ்சத்தை கவினுக்கும் கொடுக்க வேண்டி அவன் அறைக்கதவை திறக்க, கண்களை மூடிக்கொண்டு கிடந்தவன் கதவு திறக்கப்பட்ட சத்தத்தில் தடாலென எழுந்தான்.

அவன் கையில் சொட்டும் ரத்தத்தைக் கண்டு பதறியவர், “டேய்! என்னடா பண்ணி வச்சிருக்க?” என்று தன் நெஞ்சைப் பிடிக்க,

“ம்மா நான் உங்களலாம் விட்டுப் போறேம்மா. நான் வாழவே லாயிக்கி இல்லாதவம்மா.” என்று அழுதான் மகன்.

“வாய மூடுடா ராஸ்கல்! உன்ன இப்படி பாதியிலயே பறிகொடுக்கவாடா படாத கஷ்டமெல்லாம் பட்டு வளத்தேன்.” என்று தாங்கி தாங்கி வந்து தனது சேலை தலைப்பால் அவனது வெட்டுக்காயத்தை அழுத்தினார்.

இரத்தம் அதில் அடங்கவில்லை எனவும்‌ அங்கு நாற்காலியில் கிடந்த பருத்தித்துண்டை எடுத்து தண்ணீர் போத்தல் நீரால் நனைத்து அவனது கையில் நன்றாக சுற்றினார்.

தன் அன்னையின் கூச்சலில் ஓடிவந்த கவிலயா, “என்னாச்சும்மா?” என்றவாறே, “என்னாச்சுடா உனக்கு?” என்று அவனின் இரத்தத்தைக் கண்டு அலறினாள்.

உத்ரா இருவரின் சத்தத்திலும் மெதுவாக நொண்டியபடியே கவினின் அறைக்குள் வர முயன்றாள். அதற்குள் கவினின் கையைப் பிடித்தவாறே வெளியே அழைத்துவந்தார் பானுமதி.

அவனைப் பார்த்ததும் உத்ரா, “என்னடா? ஏன்டா இப்படி?” என்று படபடத்தாள்.

பானுமதி, “எவ்வளவு கட்டியும் ரத்தம் நிக்க மாட்டேங்குதுமா. இப்பவே இவன ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிரலாம்.” என்று வெளியே அழைத்துச் சென்றார்.

உத்ராவும் தனது கைப்பையை எடுத்துக்கொண்டு அவர்களோடு புறப்பட்டவள் கவிலயாவிடம், “அம்மு நான்ஸி அவங்க வீட்டுல விளையாடப் போயிருக்கா. நீ அவளுக்கு தொணையா வீட்லயே இரு.” என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியேறினாள்.

சரியென்றவளும் கண்ணீருடன் வழியனுப்பினாள்.

மருத்துவமனையில் கவினை அனுமதித்து, சிகிக்சைக்காக உள்ளே அனுப்பிவிட்டவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. நெஞ்சம் தடதடத்தது. இந்தத் தேர்விலும் தான் தேர்ச்சிபெற மாட்டோம் என்று உறுதியாக தெரிந்து விட்டதால்‌ தான் இம்முடிவை எடுப்பதாக அவன் எழுதி வைத்திருந்த கடிதத்தை வேறு அவன் அறையை சுத்தம் செய்யச் சென்ற கவிலயா இப்போது தான் பார்த்ததாக அலைபேசியில் தெரிவித்தாள்.

அந்த குற்றவுணர்வும் சேர்ந்துகொள்ள மதியம் விக்கி கூறியதற்கு தான் மதிப்பளித்திருக்க வேண்டுமோ? அவன் கூறியதை தான் உதாசீனப்படுத்தியிருக்கக் கூடாதோ? என்று காலம் கடந்த ஞானயோதயத்தில் கைகளைப் பிசைந்தாள்.

தற்சமயம் விக்கி தன்னுடன் இருந்தால் தனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என்பதால் அவனை அலைபேசியில் தொடர்புகொண்டு வரச்சொன்னாள். அவன் அவள் அழைத்ததும் எதைப்பற்றியும் சிந்திக்கவில்லை. உடனே புறப்பட்டு வந்தான். அவன் வந்த சமயம் கவினின் கைக்கு கட்டுப்போடப்பட்டு ஒரு பாட்டீல் இரத்தம் ஏறிக்கொண்டிருந்தது. விக்கியின் தோளில் ஆறுதல் வேண்டி சாய்ந்தாள் உத்ரா.

அப்போது அவர்களின் அருகில் வந்த செவிலியர் ஒருவர், “உங்க தம்பிக்கு ஒரு பாட்டீல் ரத்தம் ஏத்தியிருக்கோம்மா. பதிலுக்கு நீங்க யாராவது ஒரு பாட்டீல் ரத்தம் எங்களுக்கு குடுத்துட்டுப் போகனும்.” என்றதும், உத்ரா தயாராக எழுந்து நின்றாள்.

அவளுக்கு அடிபட்டிருப்பதை பார்த்தவர் அவளால் இரத்த தானம் செய்யமுடியாது என்றதும், விக்கியின் பக்கம் திரும்பினாள். அவன் வேறுபுறம் பார்ப்பது போல் பாவனை செய்தான்.

ஏமாற்றத்துடன், “நாளைக்கு என் தங்கச்சி வருவா அவள குடுக்கச் சொல்றேன்” என்றதும், சரியென்றபடியே விலகினார் செவிலியர்.

சற்று மனகிலேசத்துடனே காணப்பட்ட விக்கி அன்று இரவு முழுவதும் மருத்துவமனையில் அவர்களுடனே இருந்தான். பானுமதி வீட்டிற்கு செல்லுமாறு கூறியும் கேட்கவில்லை.

எட்டு மணி நேர சிகிச்சைக்குப் பின் கவின் நார்மல் வார்டிற்கு மாற்றப்பட, உத்ரா வாடிய முகமாக படுத்துக் கிடப்பவனை துக்கம் பொங்கப் பார்த்தாள். ஆண் இனத்தின் மீது தனக்கிருந்த கோபத்தையெல்லாம் அவனிடம் தானே பெரும்பாலும் அவள் காண்பித்திருந்தாள்.

கடந்த இரவு முழுவதும் பயத்தில் தான் உருப்போட்டுக் கொண்டிருந்த அந்த வார்த்தையை அவனிடமே சொன்னாள், “சாரிடா கவின்” என்று.

அவனோ சோர்வாக, “இல்லக்கா, நாந்தான் அவசரப்பட்டுட்டேன்” என்றான்.

ஏதாவது இசகு பிசகாக நடந்திருந்தால் அவனோடல்லாமல் அவனது அக்காவின் திருமணநிச்சயமும் அல்லவா பாதிக்கப்பட்டிருக்கும்‌ என்ற உண்மையை சற்றுமுன் தான் பானுமதி அவனுக்கு சொல்லியிருந்தார். அதனால் குற்றவுணர்ச்சியில் மறுகினான்.

“இனி நீ உனக்கு என்ன இன்ட்ரெஸ்ட்டோ அதப் பண்ணு. நான் அம்மா யாரும் உன்ன டிஸ்டர்ப் பண்ணமாட்டோம். அதுக்குன்னு நீ தப்பான வழில போனா வாய மூடிட்டு சும்மா இருப்போம்னு மட்டும் நெனச்சிடாத.” என்று அன்போடு மிரட்டினாள்.

சிரித்தபடி சரியென்றான் கவின்.

பானுமதி தன் மகன் தற்கொலைக்கு முயன்றதை சொல்லாமல் இருக்கக்கூடாதெ‌‌ன லேசாக ரஞ்சனியின் காதிலும் போட்டு வைக்க, உடனே தன் தம்பியோடு புறப்பட்டு வந்தாள்.

உதய்கிருஷ்ணா கவினை நலம் விசாரித்துவிட்டு உத்ராவிடம், “டோன்ட் வொர்ரி உத்ரா. சீக்கிரம் எல்லாம் சரியாகிரும்.” என்று ஆறுதல் சொன்னான்.

ஹார்லிக்ஸ் தலைகாட்டிய பழக்கூடையை மேசையில் வைத்த ரஞ்சனி, “சம்பந்தம் பேசின அன்னைக்கே உங்கப்பொண்ணு கீழ விழுந்துட்டு நிக்கிறான்னா, உங்கப்பையன் கைய வெட்டிட்டு வந்து நிக்கிறான். இது எதுக்கான அறிகுறியோ ஒன்னும் தெரியல. நீங்க வீட்டுக்கு போனதுக்கப்பறம் உங்கப் பொண்ணோட ஜாதகத்த எங்களுக்கு வாட்ஸப்ல அனுப்பி வைங்கம்மா. ஒரு எட்டு ஜோசியர்கிட்ட போயிட்டு வந்துர்றோம். அப்ப தான் எங்களுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.” என்று தன் மனதில் நெருடியதை வெளிப்படையாகச் சொன்னாள்.

உதய்கிருஷ்ணா சங்கடமாய் பார்த்து வைக்க, விக்கி அவளை அங்கிருந்து நகர்த்தும் பொருட்டு, “ரொம்ப பேர் உள்ள நின்னா நர்ஸம்மா திட்டுவாங்க. நீங்களும் பானுமதி ஆன்ட்டியும் கொஞ்சம் வெளிய உக்காந்து பேசிட்டு இருங்க. நான் போய் எல்லாருக்கும் காஃபி வாங்கிட்டு வரேன்.” என்று அவர்களை கிளப்பியதோடு தானும்‌ கையில்‌ பிளாஸ்க்குடன் வெளியேறினான்.

விக்கி செல்வதையே பார்த்திருந்த ரஞ்சனி பானுமதியிடம், “இவன் எப்பவும் உங்கப்பொண்ணு கூட தான் இருப்பானா?” என்று உள்ளர்த்தத்துடன் கேட்டாள்.

பானுமதி வெள்ளந்தியாய், “ஆமாம்மா. அவங்க வேல அந்த மாதிரி.” என்றார்.

“ஓஹோ! ஆனா எதுக்கும் உங்கப்பொண்ண அவன்கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இருக்கச் சொல்லுங்க. மறந்தும் வீட்டுக்கெல்லாம் வர விடாதீங்க. ஏன்னா நிச்சயம் ஆனப் பின்னாடி இவங்க இப்படியிருந்தா சரியா இருக்காது. அதான்.” என்று பட்டுக்கத்தரித்தாள்.

அவளின் சூதானத்தில் தயக்கமாய் சரியென்றார் பானுமதி.

மறுபுறம் உதய்கிருஷ்ணா விக்கியின் செயல்களை ஆச்சரியமாகப் பார்த்தான்.

உத்ராவிடம், “ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி சிஇஓவா இங்க இப்படினு ஆச்சரியமா இருக்கு.” என்று சொல்லவும் செய்தான்.

உத்ரா அலட்டிக்கொள்ளவில்லை.

“சிஇஓவா? அவன் ஒரு கேர்லெஸ் பெர்சன், சோம்பேறி, இடியட், ஏழர, தல வலி, பைத்தியக்காரன், ஸ்ட்ரெஸ், மோர் ஓவர் வாசன் சார் புள்ள.” என்று கடைசி‌ வாக்கியத்தில்‌ ஸ்ருதியை‌‌ குறைத்தாள்.

இவையெதையும் அறியாமல் மகிழ்ச்சியாக காஃபி வாங்கச் சென்ற விக்கிக்கு இன்று‌ பொல்லாத நேரமோ என்னவோ அதே மருத்துவமனையில் மாதாந்திர பரிசோதனைக்காக அவனது அன்னை வேணி வந்திருந்தார். அவர் அவன் காஃபி பிளாஸ்க்குடன் தன்னை கவனியாமல் கடந்து செல்வதை யோசனையாகப் பார்த்தார்.

ஆனால், உள்ளே ஒரு அறைக்கு வெளியே பானுமதி உட்கார்ந்திருப்பதைக் கண்டதும் பாம்பாக படமெடுத்துவிட்டார்.


கலைடாஸ்கோப் திரும்பும்…
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
ஒரு நிமிஷம் ப்ரெண்ட்ஸ்.

இப்போது இக்கணம் கதை எவ்வாறு செல்லும் என்று கணிக்கிறீர்கள் ப்ரெண்ட்ஸ்? கதையின் முடிவு குறித்து உங்களால் யோசிக்க முடிகிறதா? அனன்யா- விக்கிக்குள் என்ன மாதிரியான பிரச்சனைகள் வந்திருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்?

இது நான் இனி எழுதப்போகும் கதையென்றால் இவ்வாறு கேட்டிருக்க மாட்டேன். ஏனெனில் அதுவொரு தடுமாற்றத்தை கொடுக்கும் எனக்கு. முழுக்கதையையும் ஏற்கனவே எழுதிமுடித்துவிட்டு பதிவிடுவதால் தான் உங்களின் அபிப்ராயத்தைக் கேட்கிறேன். உங்களுக்குத் தோன்றுவதை தயங்காமல் கீழே உள்ள குகையில் கல்வெட்டாய் பதியுங்கள்.

கருத்துத்திரி,
குகை
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
சென்ற அத்தியாயத்திற்கு தங்கள் பிடித்தம் மற்றும் கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி ப்ரெண்ட்ஸ்🙂 உங்களுக்கான அடுத்த அத்தியாயம் இதோ ->
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுத்தாளர்: ஷிவானி செல்வம்


அத்தியாயம் 11


மூச்சு வாங்கியபடி தன்னை நோக்கி வரும் வேணியைக் கண்ட பானுமதி பருந்தைக் கண்ட கோழிக்குஞ்சைப் போல் மிரண்டார்.

“என்ன பானுமதி பொண்ணுக்கு நல்லா ட்ரெயினிங் குடுத்து அனுப்பிருக்க போலயே? நீ எங்க சோப்பு கம்பெனில வேலை பாத்தவளாச்சேன்னு என் புருஷன்கிட்ட சிபாரிசு பண்ணி போனாப்போகுதுனு உன் பொண்ணுக்கு வேலைப் போட்டுக் குடுத்தேன் பாரு என்னை சொல்லனும். குடும்பமா சேர்ந்து‌ என் சொத்த அமுக்குற வேலைல எறங்கியிருக்கீங்கல்ல?”

பானுமதி இந்தத் திடீர் தாக்குதலில் என்ன சொல்வதென்று திணறினார்.

“ஆஹாஹாஹா! ஒன்னும் தெரியாத மாதிரி முழிக்காத பானுமதி. உன் பொண்ணும் என் பையனும் வால்பாறைல ஒரே ரூம்ல தங்கியிருந்தது உனக்கு தெரியாது? தெரியாதுனு மட்டும் சொல்லிடாத. எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துரும்.”

“அம்மா எம்பொண்ணு வாழ வேண்டியவ. அபாண்டமா அவ மேல வீண் பழி போட்டு அவ வாழ்க்கைய கெடுத்துறாதீங்க. உங்கள கும்புட்டுக் கேட்டுக்குறேன்.”

“அதத்தான் நானும் சொல்றேன் பானுமதி. என் பையன் வாழ்க்கைய நீயும் உன் பொண்ணுமா சேர்ந்து கெடுத்துறாதீங்க. உங்களுக்கும் எங்களுக்கும் ஏணி வச்சாக்கூட எட்டாது. என் பையன்‌ ரேஞ்சே வேற. அவன்‌ விழுந்து கெடக்க வேண்டிய எடம் நிச்சயமா உன் மக மடியில்ல. நான் சொல்றது புரியுதுல்ல?” எனவும், புரிந்தது போல் தலையாட்டினார் பானுமதி.

“ம், உம்பொண்ணுக்கும் சொல்லி புரிய வை.” என்று நடையை கட்டினார் வேணி.

பானுமதியோ புயலடித்து ஓய்ந்தது போல் உட்கார்ந்திருந்தார். நல்லவேளை ரஞ்சனி அந்நேரம் கழிவறை சென்றிருந்தாள். இல்லையெனில் பானுமதி அங்கேயே‌ தன் உயிரை விட்டிருப்பார். அவளில்லாத நேரத்தில் இவையனைத்தும் நடந்தது மட்டும் மனதிற்கு சற்று ஆறுதல்.

காஃபி வாங்கி திரும்பிய விக்கி தன்னை கடக்கும் போது, “தம்பி நானேப் போய் குடுத்துக்கறேன். இந்தப் பக்கமா உங்கம்மா போன மாதிரி இருந்தது. நீங்க அவங்களப் போய் பாருங்க. எங்க குடும்பத்த நாங்க பாத்துக்கறோம்.” எனவும், அடி வாங்கியது போல் பார்த்தான்.

கழிவறை சென்று திரும்பிய ரஞ்சனியும் அவர் இப்படி பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை. தன்னால் தான் அவர் இப்படி பேசுகிறார் என்று தற்பெருமைகொண்டாள்.

பரிசோதனை முடிந்து வெளியே வந்த வேணியிடம், “மாம் பானுமதி ஆன்ட்டிகிட்ட நீங்க என்ன சொன்னீங்க?” என்று பாய்ந்தான் மகன்.

“அதுக்குள்ள வத்தி வச்சிட்டாளா?”

“மாம் இனிமே நீங்க பானுமதி ஆன்ட்டிகிட்டயோ, இல்ல உத்ராகிட்டயோ ஒரு வார்த்த தப்பா பேசுனீங்கன்னு தெரிஞ்சது நான் மனுசனாவே இருக்கமாட்டேன் சொல்லிட்டேன்.”

“அப்படி என்ன சொக்குப்பொடிடா அவளுக உனக்குப் போட்டாளுக? இப்படி சப்போர்ட் பண்ணிட்டு வர்ற? ஆமா உன் மனசுல நீ என்னடா நெனச்சிட்டிருக்க? யாரோ ஒருத்திக்காக ஹாஸ்பிடல் வர வந்திருக்க. ஒரு தடவ! ஒரு தடவ உன்னப் பெத்த அம்மாவ நலம் விசாரிக்கனும்னு தோனுச்சாடா உனக்கு? ஏன்டா இப்படியிருக்க? இப்ப தான்டா வாசன நான் ரொம்ப மிஸ் பண்றேன். ஆனாலும் சில விஷயங்கள்ல நீ அவர மாதிரியே இருக்கியேன்னு பத்திக்கிட்டு தான் வருது. யார எங்க வைக்கனும்னு உங்க ரெண்டு பேருக்குமே சுத்தமா தெரியலடா.”

“மறுபடியும் மறுபடியும் உங்க டிராமாவ ஆரம்பிக்காதீங்க. நான் என் லவ் ஃபெயிலியர்ல இருந்து வெளிய வரனுமா? வேணாமா? வரனும்னா என்னை கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க. இப்படி போட்டு டார்ச்சர் பண்ணாதீங்க.”

வேணி அவனின் மிரட்டலில் பம்மியவராய் அவனை கடந்து நடக்கத் துவங்கினார். அவரை பின் தொடர்ந்து வந்தவன் பானுமதியை கடக்கும் போது அவரின் கையைப் பிடித்து நிறுத்தினான்.

“இவங்க வீட்டுக்கு தான் உத்ரா மருமகளாகப்போறா” என்று ரஞ்சனியைக் காண்பித்து அவர் வயிற்றில் பாலை வார்த்தான்.

“அப்படியா? கல்யாணத்துக்கு என்ன மறக்காம கூப்டனும் பானுமதி” என்று அன்புக் கட்டளையிட்டார் வேணி.

மேலும், “நான் பேசினதெதயும் மனசுல வச்சுக்காத.” என்றார் மகனை கீழ்க்கண்ணால் பார்த்துக்கொண்டே.

“அதெல்லாம் நான் பெருசா எடுக்கலம்மா. என் புள்ளைங்களப் பத்தி எனக்குத் தெரியும். அப்பறம் இன்னும் நாலு நாளுல உத்ராவுக்கும், இவங்க தம்பிக்கும் நிச்சயம் பண்ணலாம்னு இருக்கோம்மா. நீங்க விக்கி தம்பியோட கண்டிப்பா அதுல வந்து கலந்துக்கனும்” எனவும்,

“கண்டிப்பா பானுமதி நாங்க இல்லாமலா? ஆமா இத முன்னாடியே சொல்ல மாட்டியா?” என்றும் செல்லக்கோபம் கொண்டார்.

விக்கி அந்நியன், அம்பியாக மாறி மாறிப்பேசும் தன் அன்னையை சலிப்பாகப் பார்த்தான். அவர்கள் பானுமதியிடம் விடைபெற்று கீழே ரிசப்ஷன் வந்தபோது, கவினை பார்க்க சாப்பாட்டுக்கூடையுடன் அந்த மருத்துவமனைக்குள் வந்து கொண்டிருந்தாள் கவிலயா. அவளின் கையைப் பிடித்துக்கொண்டு பேந்த பேந்த விழித்தபடி அமிகாவும் அன்னநடை போட்டுக் கொண்டிருந்தாள்.

ரிசப்ஷனில் கவினின் பெயரையும் அவனது அறை எண்ணையும் சொல்லி அவள் வழி கேட்க, விக்கி அவளது தோளில் கை வைத்து, “வா, நான் கூட்டிட்டு போறேன்.” என்று அமிகாவை ஒரு கையில் தூக்கிக்கொண்டான்.

செல்லும் அவனை இயலாமையுடன் பார்த்தார் வேணி.

விக்கி மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்ததும், “நீ உன் அம்மாவோட வீட்டுக்குப் போயிட்டன்னு அம்மா சொன்னாங்க?” என்று உத்ரா கேட்க,

அவனின் பின்னேயே வந்த கவிலயா, “எங்களப் பாத்துட்டு சார் எப்படி வீட்டுக்குப் போவாரு?” என்று புன்னகை செய்தாள்.

தான் கொண்டு வந்த‌ உணவை மேசையின் மேல் வைத்தவள் அமிகாவை கவினின் அருகில் உட்கார வைத்ததும், டிரிப்ஸ் ஏறிக்கொண்டு கிடக்கும் கவினைப் பார்த்துவிட்டு சத்தம்போட்டு அழுதாள் குழந்தை. உடனே அவளை வெளியே பானுமதியிடம் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தாள் கவிலயா.

அவள் தன் முக்கிய கடமையாக அலைபேசியில் கவினையும் சுற்றியிருப்பவற்றையும் காணொளி எடுக்க, “என்ன செய்ற?” என்றான் உதய்கிருஷ்ணா.

அவள் யூடியூபில் பதிவேற்ற காணொளி எடுப்பதாகச் சொன்னாள் வேலையில்‌ கண்ணாக.

உதய்கிருஷ்ணா அவளை அருவருப்பாகப் பார்த்தவன், “எதயெத வீடியோ எடுக்கனும்னு அறிவில்லயா உனக்கு? உங்கண்ணே கையறுத்துப் படுத்துக் கெடக்கறத வீடியோ எடுத்து தான் சம்பாதிக்கனுமா உனக்கு? படிச்சப்பொண்ணு தான நீ?” என்று காரசாரமாய் திட்டினான்.

“இத அப்லோட் பண்ணினா என் ஃபாலோவர்ஸோட ப்ரேயர்ஸும் இவனுக்கு கெடைக்கும். சீக்கிரம் குணமாகிடுவானு தான் வீடியோ எடுக்கலாம் நெனச்சேன். நீங்க நெனைக்கிற மாதிரி இல்ல.” என்று கண்கள் கலங்கினாள் கவிலயா.

“சாரி, ஐ அம் ரியல்லி வெரி சாரிம்மா” என்றவன் சங்கடமாக சொல்ல, யார் பக்கம் பேசுவதென விழித்தாள் உத்ரா.

விக்கி கவிலயாவை தான் சமாளிப்பதாக கண்ணை காட்டியவன், உதய்கிருஷ்ணாவின் பொறுப்பை அவளிடம் ஒப்படைத்தான். நிம்மதி பெருமூச்செறிந்தாள் உத்ரா.

இப்படி அன்றைய நாளும் சரி, அதற்கடுத்த நாட்களிலும் சரி மருத்துவமனையிலேயே கிடையாய் கிடந்தான் விக்கி. நான்காம் நாள் கவின் வீடு திரும்பியபோது அவனறையில் கைத்தாங்கலாக அவனை கொண்டுபோய் விட்டான். அப்போது பானுமதி ரஞ்சனி சொன்னதையும், வேணி சொன்னதையும் மனதில் போட்டு குழம்பிக்கொண்டே இருந்தார்.

இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தவராக வரவேற்பறையில் இருந்தவனிடம், “நிச்சயதார்த்தத்தப்போ நீங்களும் உத்ராவுக்கு இன்னொரு சகோதரனா இருந்து எல்லாத்தையும் முன்ன நின்னு செய்யனும் தம்பி.” என்றார் சங்கடமாக.

விக்கி, “செய்யலாமே” என்றான் சாதாரணமாக.

பானுமதிக்கு அவனின் சொற்கள் எவ்வளவு நிம்மதியைத் தந்தன என்பது வார்த்தைகளில் வடிக்க இயலாதது. ஆனால், கொஞ்ச நாட்களில் அந்த நிம்மதி சுக்கு நூறாகப்போகிறது என்பதை சற்றும் அறியவில்லை அவர்.

அந்த வார இறுதியிலேயே உத்ராவுக்கும், உதய்கிருஷ்ணாவுக்கும் நிச்சயதார்த்தம் சிறிய அளவில் அவள் வீட்டில் நடைபெறவிருக்க, டிடெக்டிவ் ஏஜென்சியையே மறந்திருந்தாள்.

அதனால் விக்கியும் அவர்களின் வீட்டிற்கு வரும் வாய்ப்பு குறைந்துபோனது. பானுமதியும் விக்கியைப் பற்றி பெரிதாக கேட்டுக்கொள்ளவில்லை.​
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
நிச்சயநாளன்று மஞ்சள் வண்ண ஆரணி பட்டுக்கட்டி, தங்க நகைகளென்று ஒரேயொரு காசுமாலையும், வெள்ளைக்கல் பதித்த ஜிமிக்கித்தோடுகளும் அணிந்திருந்தாள் உத்ரா.

யூ-கட் செய்த முடியில் பாதியை மட்டும் மஞ்சள் வண்ண வாழைப்பழ கிளிப்பிற்குள் அடக்கி, மீதியை விரித்து விட்டிருந்தது ரவிக்கையின் பானைக்கழுத்து டிசைனை இன்னும் எடுத்துக் காட்டியது. இமைகளில் லைனரும், உதட்டில் இளஞ்சிவப்பு நிறச்சாயமும் மின்ன நின்றிருந்தவளை ஃபவுண்டேஷன், ப்ளஷ், ஹைலைட்டர் என்று பாடாய்படுத்தினாள் கவிலயா. முத்தாய்ப்பாக நெற்றியில் சிறிய அரக்குப்பொட்டு ஒன்றையும் வைத்துவிட்டாள்.

மகளின் கைகளில் திருகாணியுடனான பாகுபலி வளையலை அணிவிக்கும்போது லேசாக கண்கள் கலங்கினார் பானுமதி. மனதிற்குள் இறைவனுக்கு ஒருகோடி முறை நன்றி தெரிவித்தவரால் தன் பூரிப்பை மட்டும் மறைக்கவே முடியவில்லை.

அவ்வேளை தான் விக்கியும் தன் அன்னையோடு அவர்கள் வீட்டிற்கு வருகை புரிந்தான். உச்சந்தலையில் கூலிங் கிளாசை நிற்பாட்டி, ஸ்லீவ்லெஸ் பிளவுஸ், பாப் கட் ஹேர், ஃப்லோட்டிங்கில் விட்ட வெண்ணெய் நிற காஞ்சிபுரம் ஆர்கன்ஸா, இனிப்பில் மின்னும் சில்வர் பாயில் போல் உதட்டில் லிப் கிளாஸ், கழுத்தில் ஒரேயொரு பவள அட்டிகை என்று உத்ராவுக்கு போட்டியான அழகுடன் இருந்தவரை கவிலயா தான் முதலில் சென்று வரவேற்றாள்.

அவரிடம், “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க ஆன்ட்டி.” என்று சொல்லிவிட்டு சட்டென்று காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள்.

வேணிக்கோ அவளின் செயல் வெறுப்பாக இருந்தது. ‘குடும்பமே நல்லா காக்கா பிடிக்கும் போல’ என்று எண்ணிக்கொண்டே தன் முகத்தில் ஒட்ட வைத்திருக்கும் சிரிப்பு கீழே விழாமல் பார்த்துக்கொண்டார்.

விக்கிக்குமே அவளின் செயல் அதிகமாகத்தான் பட்டது. பொதுவாக இவள் இப்படி கிடையாதே என்றவன் அவளை ஆராய்ச்சி‌ செய்யும்போதே அவர்களின் வருகையை‌ த‌ன் அன்னைக்கு தெரிவிக்க மறந்தபடி‌ அவனை பதில் ஆராய்ச்சி செய்தாள்.

வளவளக்கும் ஒண்பட்டுத்துணியாலான சாம்பல் நிற சட்டையானது அரக்கு வண்ண பேண்ட்டிற்குள் சொருகிவிடப்பட்டிருந்தது. இடுப்பில் கூட பளபளக்கும் எல்வி பிராண்ட் லெதர் பெல்ட்.‌ மணிக்கட்டில் சற்றே தளர்வாய் சில்வர் ஸ்ட்ராப் கேசியோ வாட்ச். ஏன் பரட்டையாய் கிடக்கும் தலைமுடியைக்கூட வாசனைஜெல்லின் உதவியுடன் பின்பக்கமாக போனிடைல் போட்டிருந்தான். ஆனால், தேவதாஸ் போல மீசை, தாடி மட்டும் அப்படியே. இறுதியில் முத்தாய்ப்பாய் கண்களில்‌ தங்க பிரேமில் ப்ராடா கண்ணாடி.

ஆராய்ச்சியின் முடிவில் அடக்க மாட்டாமல் சிரித்தவள், “மனசுல என்ன நினைத்தேன் வந்தாய் விஜய்னு நெனப்பா? கண்ணாடி, இன் பண்ணின ஷர்ட்… ம் கையில கிட்டார் மட்டும் தான் பாக்கி” என்று கிண்டல் செய்யவும்,

“அது பேரு கிட்டார் இல்ல, மாண்டலின்” என்று காலை வாரினான் விக்கி.

அதை கண்டுகொள்ளாமல் அவனை‌ நெருங்கி மஸ்க்கின் மணத்தை நுகர்ந்தபடியே, “ஹலோ! நடக்கப்போறது உங்க கம்பெனி மீட்டிங் இல்ல. எங்கக்கா எங்கேஜ்மென்ட்.” என்று வம்பிழுத்தாள்.

“எங்க உங்க மாப்பிளைய விட போட்டோல நான் அழகா தெரிஞ்சிருவேனோன்னு உனக்கு பொறாம.”

மல்லுக்கட்டுபவர்களை கலைக்கும் விதமாய் வாசல்பக்கமிருந்து சந்தோசக் கூக்குரல்‌ கேட்டது.

“பானுமதியம்மா மாப்பிள வீட்டுக்காரங்கல்லாம் வந்துட்டாங்க போல?”

பக்கத்து வீட்டுப் பெண்மணிகளான மைதிலியும், நான்ஸியும் தான் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள்.

பானுமதி சந்தனத்தை கரைத்துக்கொண்டே அவ்விடம் வந்தவர், “அட! வாங்க! வாங்க! வாங்க வேணியம்மா சோபால வந்து உட்காருங்க. உத்ரா இங்க யாரு வந்திருக்காப் பாரேன். ஏய் லயா! எல்லாருக்கும் ஜூஸ் கொண்டு வா போ!” என்று விரட்டினார்.

உட்கார்ந்த கையோடு வேணி வீட்டை அளக்க ஆரம்பித்துவிட்டார். சிறிய வீடாக இருந்தாலும் ஒரு ஒழுங்கு முறையோடு இருப்பதைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. எட்டிப்பார்க்கும் தூரத்திலிருந்த சமையலறையிலோ மசாலா டப்பாக்கள் உயரம் வாரியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அனைத்தும் கவிலயாவின் கைவண்ணம் தான். அதற்கு தானே ஒவ்வொரு யூடியூப் காணொளியிலும் அவளை கருத்துப்பெட்டியில் பாராட்டித் தள்ளுகிறார்கள் சப்ஸ்கிரைபர்கள்.

உள்ளறையிலிருந்து வெளிப்பட்ட உத்ராவை பார்த்தவரின் விழிகளோ இன்னும் வியப்பில் விரிந்தன.

இவ்வளவு அழகையும் எங்கு தான் இவ்வளவு நாள் ஒளித்து வைத்திருந்தாள் என்ற எண்ணம் தோன்றினாலும், “இத வச்சு தான எல்லாரையும் மயக்கிடுறா?” என்றும் முணுமுணுத்தார்.

லயா வந்திருப்பவர்களுக்கு பழச்சாறு வழங்கிய வேளையில் விக்கி உத்ராவைச் சுற்றி சுற்றி வந்தான்.

“உதி நீ இன்னைக்கு எவ்ளோ அழகா இருக்க தெரியுமா? எனக்கே இப்ப உன்ன கல்யாணம் பண்ணிக்கனும் போல‌ இருக்கு. ஐ மீன் அந்தளவுக்கு இன்னைக்கு வெள்ளி கிரகத்துக்கு உரிய வள்ளி மாதிரி இருக்க.” என்று கேலியாக அவள் முகத்தை வழித்து நெட்டி முறித்தான்.

வேணியின் முன்பு அவனை திட்ட முடியாமல் பல்லைக் கடித்தாள் அவள்.

பக்கத்துவீட்டு பெண்மணிகளோ விக்கியை மாப்பிள்ளையாக நினைத்துக்கொண்டு வேணியிடம், “அவங்க‌‌ ஜோடிப்பொருத்தம் ரொம்ப அருமையா இருக்கு. உங்களுக்கு ஒரே பையன் தானா?” என்று கேட்க, துள்ளியெழுந்தார் அவர்.

“நல்லாயிருக்கே கத. யார யார் கூட ஜோடி சேக்குறீங்க? என் பையன் பெரிய கோடீஸ்வரன் வீட்டு வாரிசு. என் அப்பா யார் தெரியுமா? முப்பது வருசத்துக்கு முன்னாடி மதுரைல பேமஸா இருந்ததே வேணி சோப்? அதோட ஒன் அண்ட் ஒன்லி ஓனர் நீலமேகம். பாவம்! இந்த உத்ரா எங்க ஆஃபீஸ்ல வொர்க் பண்ற பொண்ணாச்சேன்னு ஒரு அனுதாபத்துல வீடுவரைக்கும் வந்தா, நீங்க தங்கத்துக்கும் தகரத்துக்கும் தராதரம் தெரியாம பேசுவீங்களா?” என்று பொரிந்துத் தள்ளினார்.

பானுமதி நிலைமையை‌ சமாளிக்கத் திணற, பக்கத்துவீட்டு பெண்மணிகள் எரியும் நெருப்பிற்கு எரிபொருளை வழங்கினர்.

“அய்யயோ! தப்பா நெனச்சிக்காதீங்கம்மா. இந்தத் தம்பி அடிக்கடி இங்க வருவாரா? அன்னைக்கு ஒருநாள் நைட்டுக்கூட இங்க தங்குறதப் பாத்தமா? அதான் அப்படி கேட்டுட்டோம்.” என்று பொய் வருத்தம் காட்டினர்.

உத்ராவின் பார்வை விக்கியை குற்றம் சாட்ட, வேணிக்குள் ஒரு பெருவெடிப்பே நிகழ்ந்து முடிந்தது.

“அது…அது… ஆஃபிஸ் விசயமா ஏதாவது டவுட்ஸ் கிளியர் பண்ண வந்திருப்பானா‌ இருக்கும். அதுக்குள்ள நீங்க அது இதுனு ஊதிப் பெருசு பண்றீங்க. இந்த மிடில்கிளாஸ் மென்டாலிட்டியே இதான். ஏம்மா தப்புப் பண்றவன் எதுக்கு எல்லாரும் இருக்கறப்ப வீட்டுக்கு வரப்போறான்?” என்று கேட்க, தன் அன்னையை கண்களை கசக்கிக்கொண்டு பார்த்தான் விக்கி.

“சாரி உத்ரா, சாரி தம்பி, நாங்க உங்கள தப்பா நெனச்சதுக்கு. பானுமதியம்மா மாப்பிள வீட்டுக்காரங்களுக்கு பிளேட்ல ஸ்வீட் காரமெல்லாம் எடுத்து வச்சிட்டீங்களா? நான்ஸி வாங்க பாத்து எடுத்து வைப்போம்” என்றவர்கள் சமையலறைக்குள் நழுவ,

இன்னும் கொதிப்பு அடங்காத வேணி, “ரொம்பப் புழுக்கமா இருக்குல்ல? இங்கல்லாம் எப்படி தான் மனுஷங்க வாழ்றாங்களோ‌ தெரியல” என்று கையை விசிறியாக்கினார்.

“அதோ அங்க உத்ரா ரூம்ல போய் உக்காருங்க. அங்க தான் ஏசி இருக்கும்” என்று அன்னைக்கு வழிகாட்டினான் விக்கி.

“இந்த வீட்டுல எது எது எங்கயிருக்கும்னு இவனுக்கெப்படி தெரியும்? ச்சே! என் மானத்த வாங்குறதுக்குன்னே பொறந்திருக்கான் போல.” என்று நொந்தபடியே உத்ராவின் அறைக்குச் சென்றார்.

இந்த ரகளைகளுக்கு மத்தியில் கவிலயாவோ எப்போதும் போல் தனது அலைபேசியில் நிகழ்வுகளை பதிவு செய்யத் துவங்கினாள். பானுமதி எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டுமே என்று பதற்றத்தோடு திரிந்தார்.

வேணி உத்ராவின் அறையில் குளிரூட்டியை இயக்கி உட்கார்ந்தவர் வெளியே விக்கியும், உத்ராவும் சத்தம்போட்டு சிரிப்பதைக் கேட்டு பதறி வெளியே வந்தார்.

அவ்வேளையில் ஆரவாரத்தோடு உதய்கிருஷ்ணாவின் குடும்பத்தினரும் வந்து விட்டனர்.


கலைடாஸ்கோப் திரும்பும்…


 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
நாவலின் பதினோராவது அத்தியாயம் பதிவிட்டாச்சு ப்ரெண்ட்ஸ். வாசித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிரவும்🙂

கருத்துத்திரி,
கருத்துக்கிணறு
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom