காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 12
மாப்பிள்ளையோடு சேர்த்து மொத்தம் பத்து நபர்கள் வந்திருந்தார்கள்.
தங்கள் உறவினர்கள் யாரையும் இந்த நிகழ்விற்கு அழைக்க வேண்டாம் என்று பானுமதியிடம் உறுதியாக சொல்லிவிட்டாள் உத்ரா. தங்களின் குடும்பத்திற்கு எவ்வகையிலும் துணைநில்லாதவர்களை அவள் துளியும் மதிப்பதாயில்லை. பானுமதியும் அவளின் முடிவிலிருந்து அவளை மாற்ற முடியாது என்று அவ்வாசையை கைவிட்டார்.
ஆனால், பத்திரிக்கை வைக்கும்போது ஒருவர் விடாமல் வைக்கவேண்டும் என்று மட்டும் பிரயாசை.
இந்த இடைப்பட்ட நாட்களில் உதய்கிருஷ்ணாவும், உத்ராவும் வாட்சப்பில் குட் மார்னிங், குட் நைட் சொல்லும் அளவிற்கு முன்னேறியிருந்தார்கள்.
உதய்கிருஷ்ணா தன் அக்காவின் தேர்வில் ராமர் பச்சையில் பருத்திச்சட்டை, பீஜ் நிற பேண்ட், கறுப்பு நிற லெதர் பெல்ட், டையடித்து ஸ்மூத்தனிங் செய்த ஹேர் என்று புதுப்பொலிவுடன் காணப்பட்டான். அவனைப் பார்த்ததும் அதிகப்படியாய் சிவந்த உத்ரா சம்பிரதாயமாய் கைகளைக் கூப்பினாள்.
திடீரென கூட்டத்தில் ஒளிந்திருந்த பிரகாஷ் அவள் கண்ணில் பட, பீதியடைந்தாள். விக்கி அதை இனம் கண்டதும் பயப்பட வேண்டாமென அவளிடம் கண்களை மூடித் திறந்தான்.
ஆனால், அவள் மனமோ பிரகாஷ் அவளையும் உதய்கிருஷ்ணாவையும் ஆட்காட்டி விரலால் சுட்டிக்காட்டி ‘ஜோடி பொருத்தம் சூப்பர்’ என்றபோது தான் இயல்புநிலைக்கு திரும்பியது.
பிரகாஷ் முதல்முறை அவளை பூங்காவில் பார்த்தபோது அவள் அழகில்லை அப்படி இப்படியென்றுவிட்டு இன்று அவளையே நிச்சயம் செய்ய வந்திருப்பதற்காக உதய்கிருஷ்ணாவை அவனுக்கு மட்டும் கேட்கும்படியாக கேலி செய்து கொண்டிருந்தான்.
இந்த இடைவெளியில் கவிலயா அனைவருக்கும் இனிப்பு காரம் பரிமாற, ரஞ்சனி தாங்கள் கொண்டுவந்த மோதிரத்தை உதய்கிருஷ்ணாவிடம் கொடுத்து உத்ராவுக்கு அணிவிக்கச் சொன்னாள்.
அவனும் படபடப்புடன் நின்றிருந்தவளை நெருங்கி, மிருதுவாக அவள் மோதிரவிரலைப் பிடித்து காதலுடன் கணையாளியை அணிவித்து விட்டான்.
அடுத்த மாதமே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று அனைவரின் ஒப்புதலுடனும் முகூர்த்தத்தேதி குறிக்கப்பட, பிரேமவிலாஸின் இனிப்பும் காரமும் தொண்டைகளுக்குள் இதமாக இறங்கின.
ரஞ்சனி உத்ராவை உதய்கிருஷ்ணாவிற்கு அருகில் இருந்த நாற்காலியில் போய் உட்கார வைத்ததும் வளைத்து வளைத்து புகைப்படமெடுத்தாள் ரஞ்சனியின் மகள் மேகா.
அவள், “டேய் மாமா! நீ கொஞ்சம் சிரிச்சா தான் என்ன?” என்று அவனை மரியாதையின்றி பேசிவிட்டு சட்டென்று, “சாரி அத்த. சாரிடா மாமா” என்று சொல்லி மீண்டும் நாக்கை கடித்தாள்.
“இல்ல உன் இஷ்டப்படியே அவர கூப்பிடு.” என்று அனுமதியளித்து உதய்கிருஷ்ணாவின் நன்மதிப்பை பெற்றாள் உத்ரா.
அவளிடம் விக்கி தான் தேடித்தேடி வாங்கி வந்திருந்த பரிசுப்பெட்டியை கொடுக்க, கவிலயா அதனையும் தன் அலைபேசியில் காணொளியாக பதிவு செய்தாள். ஆர்வம் தாங்காமல் உத்ரா அங்கேயே அதை பிரித்துப் பார்க்க, வெள்ளியில் செய்த புத்தர் சிலையொன்று உள்ளே இருந்தது.
“கல்யாணத்துக்கு அப்பறம் உதய்கிருஷ்ணா உயிர் வாழனும்னா புத்தர் தான் அவர் குலதெய்வமா இருக்கனும். அதான் அவர் வழிபட வசதியா இப்பவே புத்தர் செலய கிஃப்ட் பண்ணேன்.” என்றவன் தீவிரமாக விளக்க, சபையில் சிரிப்பலை பரவியது.
உத்ரா மட்டும் அவனுக்கு ஒழுங்கு காட்டினாள்.
அவ்வேளை வேணி தன் பங்காக, “உத்ரா ரொம்ப தங்கமானப்பொண்ணு தம்பி. அவள மாதிரி ஒரு புத்திசாலிய நீங்க பாக்கவே முடியாது. உத்ரா, அடக்கம் இந்த ரெண்டு வார்த்தையையும் நீங்க தனியா பிரிச்சிப் பாக்கவே முடியாது. அவ செய்ற வேலைல ஒரு கொறையக்கூட உங்களால கண்டுபிடிக்க முடியாது. அவ்வளவு நேர்த்தி. அவ உங்க வீட்டு மருமகளா வர்றது நீங்க செஞ்ச பாக்கியம்.” என்று உதய்கிருஷ்ணாவிடம் புகழ, வாயைப் பிளந்தார் பானுமதி.
உத்ராவுமே ஆச்சரியமாகத் தான் கேட்டுக் கொண்டிருந்தாள்.
அவள் சந்தேகமாக விக்கியைப் பார்த்தபோது, “நீயும் உதயும் ஏதாவது தனியா பேசனும்னா போய் பேசிட்டு வாங்களேன்.” என்றான்.
பெரியவர்களும் விக்கி கூறியதை ஆமோதிக்க, இருவரும் ஒரு சேர இருக்கையைவிட்டு எழுந்தனர். கவினின் அறையை ஒட்டிய பால்கனியில் நின்றிருக்கும்போது சுற்றி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் உதய்கிருஷ்ணா. அவள் கண்களோ அவனை புகைப்படமெடுத்துத் தள்ளின.
அவன் தன்புறம் திரும்பியபோது புகைப்படக்கருவியை தாழ்த்தியவள், “பிரகாஷ்கிட்ட என்ன சொல்லி இங்க கூட்டிட்டு வந்தீங்க?” என்றாள்.
“என்ன சொல்லனுமோ அத மட்டும் சொன்னேன்.” விளையாடினான்.
“அதான் என்ன?”
“சொல்லியே ஆகனுமா? நீயும் நானும் தூரத்து சொந்தக்காரங்கனும், நான் உன்ன லவ் பண்றேனும் சொன்னேன்.”
அவ்வளவு தான்! அவள் மொத்தமாக அவனில் வீழ்ந்தாள். ஏனோ மறுபடியும் அவனை அதை சொல்ல வைக்க வேண்டும் போலிருந்தது, அதுவும் விக்கியின் முன்னால். அவன் தானே யார் அவளை விரும்புவார்கள் என்று கேட்டது!
“நீ கொழந்த பத்தி என்ன பிளான் பண்ணிருக்க உத்ரா? எனக்கு இப்பவே முப்பத்தஞ்சு வயசாகுது. சோ, ரொம்பத் தள்ளிப் போட வேணாம். உனக்குமே முப்பதாகுதுல்ல?”
வெட்கம் பிடுங்கித் தின்றது அவளை. ஈர விரல்ரேகையை உணர மறுக்கும் அலைபேசித் திரையை போல் தடுமாறினாள்.
அவள் பதிலேதும் சொல்லாமல் நிற்பது கண்டு அவளது வலக்கையைப் பற்றி மென்முத்தம் பதித்தான் மாப்பிள்ளை. அவள் மறுப்பு தெரிவிக்கவில்லை எனவும் அவளை உள்பக்கமாகச் சுவற்றில் சாய்த்து கன்னங்களை பதம் பார்த்தான். கிறங்கி நின்றவளிடமிருந்து வந்த கலவையான நறுமணம் அவனை இன்னும் முன்னேறச் சொன்னதோ? அவளின் கன்னங்களைப் பற்றி உதட்டில் ஆழ முத்தமிட்டான்.
நொடி நேரத்தில் நிகழ்ந்துவிட்ட முத்தச் சம்பவத்தில் ஒரு பரவசநிலையை அடைந்தது அவளது உடல். உடன் ஒரு பயஅலையும் ஓடி அடங்கியது.
அவள் சுதாரித்து அக்கம் பக்கம் பார்க்க, “புடிக்கலையா?” என்று கிசுகிசுத்தவனின் கரங்கள் இடையில் பதிந்தன.
இல்லையென்று மறுப்பாக தலையாட்டியவள் அவனை தள்ளிவிட்டு உள்ளே ஓடினாள். வந்த வேகத்தில் விக்கியையும் இடித்துவிட்டாள்.
அவன் அவள் தோள்களைப் பற்றி பதட்டமாக என்னவென்று கேட்க, “ஒன்னுமில்ல” என்று வெட்கமாகச் சொல்லியபடியே வரவேற்பறைக்குச் சென்றாள். ஏதோ ஓட்டப்பந்தயத்தில் ஓடி ஜெயித்தவள் போன்ற மனநிலை.
விக்கி அவள் காதலின் மூன்றாம் நிலையை வெற்றிகரமாகக் கடந்ததை வேடிக்கையாகப் பார்த்தான்.
அவளைத் தொடர்ந்து உதய்கிருஷ்ணாவும் வரவேற்பறைக்கு வந்தபோது அவனிடம் ரஞ்சனி நைச்சியமாகப் பேசினாள்.
“ஏற்கனவே அந்த நந்தகோபன் உன்ன ட்ரக் அடிக்ட்டுனு முத்திர குத்திட்டுப் போயிருக்கான். அத இவங்களும் உண்ம தான்னு நெனச்சிரக் கூடாதுல்ல? அதான் பேருக்கு சும்மா நாப்பது பவுன் கேக்குறோம் உதய். நாங்க ஒன்னும் எங்களுக்காக இத கேக்கலப்பா. உனக்கொரு கெட்டப் பேர் வந்துரக் கூடாதுன்னு தான் முன்னெச்சரிக்கையா இருக்கோம்.” என்றதும், அதை அமைதியாக ஆமோதித்தான்.
பானுமதி தன்னால் இயன்றதை செய்வதாக வாக்குறுதி தந்தார்.
உத்ராவுக்கு உதய்கிருஷ்ணா தன் அக்காவை எப்போதுமே கண்மூடித்தனமாக ஆதரிப்பது கண்டு ஆத்திரமாக வந்தது. ஆனாலும், பல்லைக் கடித்துக்கொண்டு நின்றாள்.