- Messages
- 845
- Reaction score
- 1,132
- Points
- 93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 17
உத்ராவின் இந்த எதிர்வினை தான் ஏற்கனவே எதிர்பார்த்தது தான் என்பதால் தானும் பதிலுக்கு முறைத்துப் பார்த்தான் விக்கி.
“உனக்கென்ன பைத்தியமா?” என்று இருவரும் ஒருவரையொருவர் ஏக காலத்தில் கேட்டுக்கொள்ள,
“உஷ்!” என்று இருவரையும் பானுமதியை கண்களால் சுட்டிக்காட்டி எச்சரித்தார் மருத்துவர்.
கோபமாக அவளை தள்ளிவிட்டு அவ்வறையிலிருந்து வெளியேறினான் விக்கி.
தடுமாறி நின்றவள் அவனின் பின்னேயே தானும் வெளியேறினாள். நடந்தவற்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மருத்துவருக்கும், செவிலியருக்கும் ஒன்றுமே புரியவில்லை. அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து தோள்களைக் குலுக்க, அசைவு தெரிந்தது பானுமதியிடம்.
அதை முதலில் கவனித்த மருத்துவர் அவரிடம் சென்று அவரின் பெயரைச் சொல்லி அழைத்தார். செவிலியரும் பானுமதியின் காதருகே குனிந்து அவரை எழும்படி கத்தினார். கண்களைப் பிரித்த பானுமதி ஒன்றும் புரியாமல் விழிக்க, அவரிடம் சம்பிரதாயமாக சில கேள்விகளைக் கேட்டார் மருத்துவர். அவரின் பதில்களனைத்தும் தனக்கு திருப்திகரமாக இருந்ததும் செவிலியரிடம் அவருக்கு செய்ய வேண்டிய சில சிகிச்சைமுறைகளை பட்டியலிட்டுவிட்டு, மருத்துவமனையின் முதல்வரை சந்திக்கச் சென்றார்.
திடீரென பதட்டமாகச் சென்ற மருத்துவரை கண்டதும் ஒன்றும் புரியாமல் தங்களுக்குள் பேசியபடி இருந்தனர் உத்ராவும், கவினும்.
அதன்பின் மருத்துவ நிபுணர்கள் சிலர் அவ்வறைக்குள் செல்வதும் வெளியேறுவதுமாக இருக்க, வெளியே நின்றிருந்தவர்களின் நெஞ்சமோ தடதடத்தது. இப்படியே சில நிமிடங்கள் பயத்தில் கழிந்ததும் தான் அவர்களை நோக்கி வந்தார் தலைமை மருத்துவர்.
“உங்கம்மா பெரிய ஆபத்துலயிருந்து மீண்டு வந்திருக்காங்கன்னு தான் சொல்லனும். அவங்க பல்ஸ் ரேட் இப்ப நார்மல் மோடுக்கு திரும்பியிருக்கு. உங்க பிரார்த்தன வீண் போகல.” என்றார் உற்சாகமாக.
அதைக்கேட்டதும் அனைவரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார்கள். மருத்துவராலும் அதை உணர முடிந்தது.
“அப்பறம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அவங்களுக்கு நினைவு திரும்பியிருக்கதால இன்னும் கொஞ்சம் டெஸ்ட்ஸ் அண்ட் ஸ்கேன்ஸ் எல்லாம் எடுக்க வேண்டியிருக்கு. அதுக்கப்பறம் நீங்கப்போய் அவங்களப் பாக்கலாம்.” என்றதும், பானுமதியின் பிள்ளைகள் கொண்ட நிம்மதிக்கு அளவே கிடையாது.
ஆனால், அந்த சந்தோசத்தை கொண்டாடவிடாமல் வேறொரு குண்டைத் தூக்கிப்போட்டார் வெளியே எட்டிப் பார்த்த செவிலியர்.
“யம்மா! உங்க அம்மா கண்ணு முழிச்சதும் எங்க என் பொண்ணு, எங்க என் மாப்பிளைனு கேட்டாங்க. அவங்க நான் சொன்னத கேட்டு தான் கண்ணு முழிச்சிருக்காங்க போலம்மா. நீ வேற அந்தப்பையன் கட்டின தாலிய அத்துப் போட்டுட்ட. இப்ப உன் அம்மாவுக்கு நடந்ததெல்லாம் தெரிஞ்சதுனா அவங்க நெலம இன்னும் மோசமாகிருமேம்மா. நீ பேசாம உன் அம்மாகிட்ட உனக்கு கல்யாணம் ஆன மாதிரியே நடந்துக்கோ.” என்றதும், தன் நெஞ்சைப் பிடித்தாள் உத்ரா.
இது என்ன புது சிக்கல் என்று அவள் அரண்டுபோய் நின்றிருக்க, கவினும் கவிலயாவும் அவர் சொல்வது புரியாமல் செவிலியரை தூண்டித் துருவினார்கள். அவர் பானுமதியின் அறைக்குள் சற்றுமுன் நடந்ததனைத்தையும் புட்டுபுட்டு வைத்தார்.
கவின் உத்ராவை பரிதாபமாக பார்த்து வைக்க, கவிலயாவோ அழுதே விட்டாள். விக்கியை உள்ளூற ஒருதலையாக காதலித்தவளால் இந்த சம்பவத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
உத்ராவோ ஒன்று போய் ஒன்றாக தன்னை நோக்கி வரும் பிரச்சனைகளைக் கண்டு பாவம் துவண்டு போனாள். அவளின் நிலையை நன்றாக உணர்ந்தவனாக அவளுக்கு உறுதுணையாக நின்றான் கவின். தன் பங்காக ஆலோசனையும் வழங்கினான்.
“அக்கா கடவுள் புண்ணியத்துல இப்ப தான் அம்மா நமக்கு கெடச்சிருக்காங்க. அவங்கக்கிட்ட நடந்ததெல்லாம் சொல்லி மறுபடியும் அவங்கள கஷ்டப்படுத்த வேணாம் க்கா. அவங்க ஒடம்பு சரியானதும் மெதுவா பேசி புரிய வைக்கலாம். ப்ளீஸ்க்கா!” என்றான்.
கவிலயா இன்னும் அழுதுகொண்டே இருக்க, “ஏய் லயா! நீயும் அக்காக்கிட்ட கொஞ்சம் சொல்லுடி” என்றான் அதட்டலாக.
அவள் தன் கண்களை துடைத்துக்கொண்டே, “ஆமாக்கா அம்மாகிட்ட இப்போதைக்கு நாம இது பத்தி சொல்ல வேணாம். அவங்க ஒடம்பு சரியானதும் சொல்லிக்கலாம்.” என்றாள் தேம்பலாக.
சிறியவள் அமிகாவோ ஒன்றும் புரியாமல் அனைவரின் முகத்தையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தன்னை தேற்றிக்கொண்ட உத்ரா ஒரு முடிவுடன் தன் உள்ளங்கையில் தான் சுருட்டி வைத்திருந்த தாலியை எடுத்து தானே தன் கழுத்தில் கட்டிக்கொண்டாள்.
பின் கவினிடம், “அந்த ஏமாத்துக்காரனுக்கு போன் போட்டு வரச்சொல்லுடா” என்றாள்.
“இப்பவேக்கா” என்று அலைபேசியில் நடந்ததைக் கூறி விக்கியை அழைத்தான்.
அடுத்த பதினைந்து நிமிடங்களில் அவர்களின் முன் நின்றிருந்தான் விக்கி.
‘இவன் இன்னும் வீட்டுக்குப் போகலையா?’ என்று சந்தேகப்பார்வை பார்த்தவள் அவன் தன் தாலியையேப் பார்ப்பதை கண்டு பல்லைக் கடித்தாள்.
தான் நினைத்தது போலவே நடந்தது கண்டு மகிழ்ச்சியடைந்த விக்கி, நீ சொல்வதை கேட்டு நான் தாலி கட்டாமல் போயிருந்தால் உன் அம்மாவுக்கு என்னவாகியிருக்கும்? என்று பார்வையால் உத்ராவுக்கு குட்டு வைக்கவும் தவறவில்லை.
பானுமதியின் உடல்நிலையே தற்போது முக்கியம் என்பது அவனுக்கும் தெரியுமாகையால் தற்சமயம் அவர்களோடு ஒத்துழைக்க சம்மதம் தெரிவித்தான். நேரம் சென்று கொண்டேயிருந்தது. மூன்று மணிநேர காத்திருப்புக்குப் பின் பானுமதியை பார்க்க அனுமதித்தார் மருத்துவர். ஐவரும் ஒருசேர உள்ளே சென்றார்கள். சோர்வாக படுத்திருந்த பானுமதி அவர்களைப் பார்த்து புன்னகைக்க முயன்றார்.
“இப்படி எங்கள பயமுறுத்திட்டீங்களே?” என்று உத்ரா வேதனையோடு கூறினாள்.
“பாட்டி எனக்கு இங்க இருக்கவே புடிக்கல. வா வீட்டுக்குப் போலாம்.” என்று சிணுங்கினாள் அமிகா.
அயர்வாக அனைவரின் முகத்தையும் ஆராய்ந்த பானுமதியின் கண்கள் உத்ராவிடம் மட்டும் கூடுதலாக அவளின் கழுத்தையும் சேர்த்து ஆராய்ந்தன. மனநிறைவில் அவரின் இரண்டு கண்களிலும் கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது. மறுபுறம் கவிலயாவின் கண்களிலும் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
அதைக் கவனித்த செவிலியர், “அச்சோ! பாருங்கம்மா உங்க சின்னப்பொண்ண. அவளுக்கு உங்க மேல எவ்ளோ பாசம் இருந்தா இப்படி நீங்க எழுந்திருச்சி உக்காந்த பின்னாடியும் பழச நெனச்சி இந்த அழுக அழுவா?” என்று உச்சுக்கொட்டவும், பானுமதியை தவிர உண்மை தெரிந்த மற்ற மூவரும் கமுக்கமாக நின்றார்கள்.
கவிலயாவை அருகில் வரச்சொல்லி அவள் நெற்றியில் முத்தம் பதித்தார் பானுமதி.
அவள் கையிலிருந்த அமிகாவோ, “எனக்கு பாட்டி?” என்றாள்.
சிரித்துக்கொண்டே அவளின் நெற்றியிலும் முத்தம் பதித்தார்.
அதனைத் தொடர்ந்த மூன்று நாட்களை மருத்துவமனையிலேயே கழித்த பானுமதி நான்காம் நாள் வீடு திரும்பினார். அதன் பின் அந்தப் பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை விக்கி.
அவனைப் பற்றி பானுமதி தொடர்ந்து கேட்டு நச்சரிக்க, பால்கனி சென்று யாருக்கும் தெரியாமல் அவனுடன் அலைபேசியில் தொடர்பு கொண்டாள் உத்ரா.
எடுத்ததுமே, “நீ எங்க வீட்டுக்கு வா.” என்றாள்.
“சாரி, நான் வேலைல கொஞ்சம் பிஸியா இருக்கேன்.” -பந்தா காட்டினான்.
“நீ அங்க என்னத்த கழட்டிட்டு இருந்தாலும் சரி. அத அப்படியே போட்டுட்டு மரியாதையா இங்க வா” என்று வார்த்தைகளை கடித்துத் துப்பினாள்.
அதற்கு மேல் அலட்டிக்கொள்ளாமல் அவர்களின் வீட்டிற்கு வந்தான். வந்தவனை பலமாக கவனித்தார் பானுமதி.
“ஜூஸ் குடிங்க மாப்பிள. உதி ஸ்வீட்ஸ் எடுத்துக் குடும்மா. கவின் நீ லயா கூடப்போய் லஞ்சுக்கு நான்வெஜ் எடுத்துட்டு வாப்பா. எல்லா வெரைட்டியும் இருக்கனும். இந்தா இந்த ஏடிஎம் கார்ட கொண்டு போ.” என்று அவர்களை அனுப்பி வைத்தார்.
போகும்போது ஏக்கமாக விக்கியை பார்த்துக்கொண்டே சென்றாள் கவிலயா.
அதைக் கவனித்த உத்ராவோ, “இவ வேற” என்று எரிச்சலடைந்தாள்.
பானுமதி விக்கியின் புறம் திரும்பியவர் முக்கியமான கேள்வியினைக் கேட்டார்.
“அப்பறம் உதிய எப்ப உங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போலாம்னு இருக்கீங்க மாப்பிள?”
வாயில் வைத்த பழச்சாறு புரையேறியது அவனுக்கு.
Last edited: