காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 1
அதிகாலைநேரம் பனியின் பாசப்பார்வை தன் உடலை பதம் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு கறுப்பு நிற காருக்குள் உட்கார்ந்து, தனக்கு எதிரே இருந்த வீட்டையே வெறித்துக் கொண்டிருந்தாள் உத்ரா. அவள் சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு மேலாகவே அவ்வாறு தான் செய்து கொண்டிருக்கிறாள். ஆனால், அவளின் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவனுக்கு தான் பொறுமை சுத்தமாக இல்லை.
“உதி ரிபோர்ட்ல அவன் ஆறுமணிக்கு ஜாகிங் போவான்னு இருக்கு. ஆனா ஆறேகால் ஆகியும் வரக்காணோமே?” என்றான்.
அவள், “உஷ்! அந்த பிரகாஷ் வந்துட்டான் விக்கி.” என்றதும், உடனே தன் பார்வையை அவள் கைக்காட்டிய பக்கம் திருப்பினான்.
அவர்கள் கண்காணிக்கும் பிரகாஷுக்கும், அவர்களுக்கும் சொல்லப்போனால் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது. ஆனால், ஒரு பெண்ணின் வாழ்க்கை இதில் அடங்கியிருப்பதால் கர்ம சிரத்தையுடன் உளவு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
வீட்டைவிட்டு வெளியில் வந்த பிரகாஷ் ஷீ லேஸை சரி செய்துகொண்டு தன் ஓட்டப்பயிற்சியை துவங்க, அவனை பின்தொடரும் பொருட்டு மிதவேகத்தில் காரை ஓட்டினான் விக்கி.
ஓடிக்கொண்டிருந்தவன் திடீரென ஒரு பெட்டிக்கடையில் நின்று சிகரெட் வாங்கிப் புகைக்க, “உதி நம்ம அண்டர்கவர் டிடெக்டிவ் சொன்ன எடம் இதான். கேமராவ ரெடியா வை.” என்று அவசரப்படுத்தினான்.
“ம்” என்றவளும் முதலில் அந்தக் காட்சியை பத்து படங்கள் எடுத்தாள்.
சிகரெட்டின் கதையை முடித்துவிட்டு அக்கம் பக்கம் பார்த்த பிரகாஷ் பெட்டிக்கடைக்காரனிடம் கழுத்தைத் தடவி சமிக்ஞை செய்ய, மீதச்சில்லறையுடன் அவன் கையில் பொட்டளம் ஒன்றையும் திணித்தான் கடைக்காரன். அதனையும் புகைப்படங்களாக கிளிக்கித் தள்ளினாள்.
பாவம் பிரகாஷ். இச்சம்பவம் தெரிந்தால் தன் மேட்ரிமோனியல் பக்கத்தில் தானொரு ‘100% டீட்டோட்லர்’ என்று பதிந்து வைத்திருப்பதற்காக நிச்சயம் வருத்தப்படுவான்.
அவன் மீண்டும் தன் ஓட்டப்பயிற்சியில் இறங்கியவனாக சிறிதுதூரம் செல்ல, சாலையின் வளைவில் அவனுக்காக காத்திருந்த புதியவன், “என்ன சீக்கிரம் வரச்சொல்லிட்டு நீ ஏன்டா இன்னைக்கு இவ்ளோ லேட்?” என்றவாறே உடனிணைந்து கொண்டான்.
‘யாரிவன்?’ என்று யோசித்தபடியே விக்கி தன் காரின் வேகத்தை சற்று அதிகரித்தான்.
இவ்வேலையில் உத்ரா உதவிக்காக வைத்திருந்த ஆட்கள் அவனின் இந்த மித ஓட்ட நண்பனை பற்றி சொல்லியிராததால் அவளும் சேர்ந்து குழம்பினாள்.
ஒரு கட்டத்தில் பிரகாஷும் அவனுடைய நண்பனும் அருகிலிருந்த பூங்கா ஒன்றினுள் நுழைய, தானும் காரை விட்டு இறங்கியவள், “வா அவங்கள உள்ளப்போய் ஃபாலோவ் பண்ணுவோம்” என்று விக்கியை அழைத்தாள்.
பகுமானக்காரன், “ஹலோ எஸ் கியூஸ் மி? நான் உங்களுக்கு பாஸ்! என்னால எல்லாம் உள்ள வர முடியாது. ஏதாவது எமர்ஜென்சினா இந்த இன்விஸிபல் இயர்பட்ல இன்ஃபார்ம் பண்ணு.” என்றபடியே சார்ஜிங் கேஸோடு தூக்கியெறிந்தான்.
அதை நழுவவிடாமல் பிடித்தவள் காதொலிப்பானை இடக்காதில் மாட்டியபடியே பூங்காவை நோக்கி ஓடினாள். போகும்போதே கடுப்பாக முணுமுணுத்தாள்.
“நீ ஃபீல்டு வொர்க் எதுக்கும் வராதன்னாலும் கேக்குறதில்ல. இப்படி கடைசி நிமிஷத்துல வந்து அத செய்யமாட்டேன் இத செய்யமாட்டேனு கழுத்தறுக்கறது. வாசன் சாருக்காக இன்னும் எவ்வளவு நாள் தான் இந்தத் தொல்லைய சகிச்சிக்கனுமோ தெரியல” என்று புலம்பினாள்.
திடீரென ஒரு திருப்பத்தில் தான் பின்தொடர்ந்து சென்றவர்கள் காணாமல் போகவும் தட்டுத்தடுமாறி நின்றாள் உத்ரா. அப்போது அவளுக்கு பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது.
"எதுக்கு நீங்க எங்கள ஃபாலோவ் பண்றீங்க மேடம்?"
திரும்பியவள் அது பிரகாஷின் நண்பன் தான் என்றறிந்ததும், பயத்தில் ஒரு அடி பின்வாங்கினாள்.
அவளுக்கு இந்தத்தொழிலில் முதலில் சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடமே ‘சப்ஜெக்ட்டை நெருங்கக்கூடாது. அவர்களிடம் அறிமுகமாகக்கூடாது’ என்பது தான். ஆனால், முதல் முறை மாட்டியிருப்பதால் தன் தைரியத்தை மீட்டு அவனை ஆராய்ந்தாள்.
சீராக வெட்டிய இளநரை முடி, அடர்த்தியில்லாத புருவங்கள், கவர்ச்சியான பெரிய கண்கள், சற்றே முன்புறம் வளைந்த பெரிய காதுகள், மூக்கின் நடுவே கோடு போட்டது போல் சிறிய தழும்பு, மூக்கிற்கு கீழே மீசையிருந்த தடம், நான்கு நாட்களுக்கு முன்பு தான் சவரம் பண்ணியிருக்க வேண்டுமென்ற சொர சொர கன்னங்கள், சிவந்த சிறிய இதழ்கள், கீழேயிறங்கினால் தொங்கும் தேன்கூடாய் ஆடம்ஸ் ஆப்பிள், அதில் வழியும் உப்புத்தேன் என்று சென்றவளின் பார்வை மீண்டும் கண்களுக்கேத் தாவின. கேள்வியின் நாயகனோ தன் பார்வையின் கூர்மையை குறைத்திருக்கவில்லை.
உத்ராவின் உள்மனம் ‘நீ இப்படி ஆராஞ்சுப் பாக்க வேண்டியவன் இவனில்ல, பிரகாஷ்!’ என்று இடித்துரைத்த அதே நொடியில், “கேட்டது காதுல விழல?” என்று குரலை உயர்த்தினான் நண்பன்.
சுதாரித்தவளோ, “யார யாரு ஃபாலோவ் பண்றா மிஸ்டர்?" என்று எகிறினாள்.
"நீங்க தான். கால்மணி நேரமா எங்கள ஃபாலோவ் பண்றீங்க." தானும் தயங்காமல் பதிலளித்தான்.
'டேய் கூமுட்ட அது தான்டா என் தொழிலே’ என்று மனதிற்குள் திட்டியவள் அருகில் சென்று கொண்டிருந்த ஒருவரை நிறுத்தி, "இங்கப் பாருங்க சார், நான் இவர ஃபாலோவ் பண்றேனாம். இவர் யாருன்னே எனக்கு தெரியாது. நான் ஏன் சார் இவர ஃபாலோவ் பண்ணப்போறேன்? நீங்க பாக்க நல்லவர் மாதிரி தெரியுறீங்க. நீங்களே இந்த நியாயத்த கேளுங்க சார்" என்று தன் முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டாள்.
நின்ற அந்த மனிதரும் சுற்றி அவ்வளவு பேர் இருக்க, அவள் தன்னை மட்டும் 'சார்' போட்டு அழைத்த குதூகலத்தில், "ஏப்பா! அழகான அந்தப் பொண்ண நீங்க ஃபாலோவ் பண்றீங்கன்னு சொன்னாலும் ஒரு நியாயம் இருக்கு. அந்தப்பொண்ணு போய் உங்கள ஃபாலோவ் பண்ணுதுனு சொல்றீங்களே? போங்கப்பா வேற வேல இருந்தா போய் பாருங்க” என்று டன் கணக்கில் வழிந்தார்.
"என்ன! அழகான பொண்ணா? எங்க? எங்க? சாரி சார். நீங்க உங்க மூக்குக்கண்ணாடிய உங்க வீட்லயே இன்னைக்கு மறந்து விட்டுட்டு வந்துட்டீங்கன்னு நெனைக்கிறேன். பாவம் வயசான உங்களப்போய் நிறுத்தி வச்சு மேடம் டிஸ்டர்ப் பண்றாங்க. போங்க சார். எதுலயும் இடிச்சிக்காமப் போங்க" என்றதும், வழியல் மனிதர் உர்ரென்ற முகத்துடன் விலகினார்.
பிரகாஷோ தன் நண்பனின் பேச்சில் அதிர்ச்சியுற்றான். யாரென்றே தெரியவில்லையானாலும் இவ்வளவு நேரமும் அந்த மஸ்கோத் அல்வா மேனிக்காரியை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவன் அல்லவா அவன்!
சற்று பூசினாற்போல் தான் இருக்கிறாள். ஆனால் உடை இறுக்கமாக இருப்பதால் அதுவே ஒருவித கவர்ச்சியை அல்லவா தந்து விடுகிறது. அந்த ரோஸ்மில்க் ரசகுல்லா இதழ்கள், அரை மண்டைவெல்ல அதிசயங்கள்… அவையுமா உதயை கவரவில்லை?
பிரகாஷ் யோசிக்கும்போதே, முன் பின் தெரியாத ஒருவன் தன்னை அவமானப்படுத்திய கடுப்பில்,
“உங்க மூஞ்சிய மொதல்ல நீங்க கண்ணாடில பாத்துருக்கீங்களா மிஸ்டர்?" என்று வரிந்து கட்டிக்கொண்டு சென்றாள் உத்ரா.
"ஹே! டோன்ட் சேஞ்ச் த டாப்பிக்! நாங்க இந்த பார்க்குல நுழைஞ்சதுல இருந்து மூனு எடத்துல நின்னோம். மூனு எடத்துலயும் ஷூ லேஸ் கட்டுற மாதிரி, வொர்க்கவுட் பண்ற மாதிரி, செல்பி எடுக்குற மாதிரி நீங்களும் நின்னீங்களே ஏன்?" என்று கிடுக்குப்பிடி போட்டான்.
"உங்களுக்கு பொண்ணுங்கள சைட் அடிக்கிறதுனா ரொம்ப பிடிக்குமோ?"
அவள் தன்னை ஒட்டி நின்று கிசுகிசுத்ததில் கடுப்பானவனோ, "ஹலோ" என்று சைகையால் விலகி நிற்கச் சொன்னான்.
"பின்ன நான் உங்கள ஃபாலோவ் பண்றேன்னு சொல்லிட்டு, நீங்க தான் என்ன சைட் அடிச்சிட்டு இருந்திருக்கீங்க. ச்சே! நான் இந்தியால பொறந்திருக்கவே கூடாது. இங்கப் பொண்ணுங்களுக்கு பாதுகாப்பே இல்ல.”
அவளின் அட்டகாசமான நடிப்பில் பிரகாஷ் ஏமார்ந்து தான் போனான்.
“உதய் நீ சொன்ன எடத்துல எல்லாம் நானும் தான்டா நின்னேன். ஆனா நான் இவங்களப் பாக்கலையேடா” என்று உத்ராவுக்கு மறைமுக ஆதரவு தந்தான்.
அவனை முறைத்துப் பார்த்தவன், “டேய் ஃபூல்! இவங்க ஃபாலோவ் பண்றதே உன்ன தான்டா.” என்று சரியாகச் சொன்னான்.
உத்ரா அதிர்ச்சியில் உறைந்துபோனாலும் மறுகணமே சுதாரித்துக்கொண்டு, “சார் இதெல்லாம் டூ மச். உங்க ஃப்ரெண்ட் ரொம்ப கற்பன பண்றாரு. நான் பண்ணாததெல்லாம் பண்ணேன்னு சொல்லி என்ன இன்சல்ட் பண்றாரு. என் பொண்ணு கமிஷ்னர். ச்சீ! நான் கமிஷ்னர் பொண்ணு. இத எங்கப்பாக்கிட்ட சொன்னா என்னாகும் தெரியுமா?” என்று உளறிக் கொட்டினாள்.
பேண்ட் பாக்கெட்டிற்குள் போதைபொருள் வைத்திருக்கும் பிரகாஷோ போலீஸ் என்றதும், “டேய் உதய்! வாடா போகலாம். எனக்கு ஆஃபிஸுக்கு வேற லேட்டாகுது.” என்று நண்பனை வலுக்கட்டாயமாய் இழுத்துச் சென்றான்.
எங்கே பிரகாஷின் கையை உதறிக்கொண்டு அந்த உதய் மீண்டும் தன்னை கேள்வி கேட்க வந்துவிடுவானோ என்று வேகமாக அவ்விடத்தைவிட்டே ஓடினாள் உத்ரா. வெளியே அவளுக்காக காத்திருந்த விக்கி, தன் காதொலிப்பானில் கேட்ட சங்கதியை வைத்தே காரை ஸ்டார்ட் செய்து கொண்டு நின்றான்.
வேகமாக அவனது காரில் ஏறியவள், "சீக்கிரம் கார எடு" என்று பரபரத்தாள்.
விக்கி, “யாரு அந்த ஏழ்ர?” என்று சத்தம் போட்டு சிரித்தான்.
தன் காதொலிப்பானை கழற்றி அவன் மேல் எறிந்தவள், “எங்கிட்ட உதை வாங்கப் பிறந்த உதய்” என்று எரிச்சலாகச் சொன்னாள்.
“நம்ம சப்ஜெக்ட் பேரு பிரகாஷ் தான?”
“அய்யோ! படுத்தாதடா. அந்த பிரகாஷோட ஃப்ரெண்ட் இவன். வெரி க்ளவர். நான் இந்த ஃபீல்டுக்கு வந்த நாலு வருஷத்துல ஃபாலோவ் பண்ணி போன யாருமே என்ன கண்டுபிடிச்சதில்ல. ஆனா இவன் கண்டுபிடிச்சிட்டான்.” என்று அவமானமாய் உணர்ந்தாள்.
“இந்தத் தொழில்ல மாட்டிக்கிறது மேட்டர் இல்ல உதி. எப்படி தப்பிக்கிறோங்கிறது தான் மேட்டர். பட் நீ யூஸ் பண்ணது காந்தி காலத்து டெக்னிக்”
அவன் சீண்டியதில் முகம் சிவந்தவள் பேச்சை திசைதிருப்பினாள்.
“ப்ரகாஷூக்கு போதைபொருள் யூஸ் பண்ற பழக்கமிருக்குனு வெரிஃபை பண்ணியாச்சு. இன்னும் ஒரே ஒரு வெரிஃபிகேசன் தான் பாக்கி. அதுவும் அவன் நெக்ஸ்ட் வீக் வால்பாறை போறப்ப அங்க வச்சு முடிச்சிட்டோம்னா, உடனே அவன் கேரக்டர் ரிபோர்ட்ட பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு அனுப்பிர வேண்டியது தான். அண்ட் இன்னைக்கு போதைப்பொருள் வித்த அந்த பெட்டிக்கடைக்காரன் பத்தியும் போலீஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணனும் விக்கி. ஆமா நம்ம முந்தின அசைன்மெண்ட் ரமேஷோட கேரக்டர் ரிப்போர்ட்ட அவன் வருங்கால மாமனாருக்கு மெயில் பண்ணிட்டியா? நேத்து நீ போன்ல சீரிஸ் பாத்துக்கிட்டிருக்கும்போது சொன்னேனே? அவர் அமௌன்ட் பாக்கி இல்லாம ஜிபே பண்ணிட்டாரு அதான்.” என்று நினைவுபடுத்தவும்,
"ம், பண்ணிட்டேன் பண்ணிட்டேன்" என ஆர்வமின்றி விடையளித்த விக்கி நேரே காரை அவள் இல்லம் நோக்கி திருப்பினான்.
அவளின் கண்கள் தன்னையுமறியாமல் பூங்காவை ஒருமுறை திரும்பிப் பார்த்தன.
விக்கியின் ‘பாம் பாம்’ விரட்டலில் கிருஷ்ணாபுரம் காலனியில் இருந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்குள் நுழைந்தது அந்த மரகத பிஎம்டபிள்யூ.
உத்ரா காரைவிட்டு இறங்கி விக்கிக்கு ‘பை’ சொல்ல, “ஒரு மரியாதைக்குக்கூட வீட்டுக்கு வரச்சொல்ல மாட்டியா உதி?” என்று முகத்தைத் தூக்கினான்.
“வெக்கமே இல்லைல? சரி ஒரு மரியாதைக்கு கூப்பிடுறேன். வா வீட்டுக்கு” என்றாள் இடக்காக.
அதற்காகவே காத்திருந்தவன் காரைவிட்டு இறங்கி அவளுக்கு முன் நடந்தான். அவனோடு அன்றாடம் நடக்கும் கூத்து தான் இது. வீட்டிற்குள் கூப்பிட மாட்டாயா? என்பான். கூப்பிட்டால் ஒருவேளை உணவு உண்ணாமல் வீட்டை விட்டு அகலமாட்டான். அவன் தினம் இதை வாடிக்கையாகக்கொண்டால் அக்கம்பக்கத்தினர் தங்களை என்ன நினைப்பார்கள் என்ற யோசனையிலேயே அவனை தன் வீட்டிற்கு அழைக்கத் தயங்கினாள் உத்ரா. ஆனால், அவனோ அது எதைப் பற்றியும் அக்கறை கொள்ளவில்லை.
மின்தூக்கியின் வழியே அவர்கள் எண் பதினேழு கொண்ட வீட்டிற்குச் சென்றபோது குட்டி வாண்டொன்று வரவேற்பறையில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தது.
அது உத்ராவைக் கண்டதும், “பாட்டிக்கு எந்திரிச்சதுலருந்து ஒடம்புக்கு முடியல உதி. லயா இன்னைக்கும் ரசம், பொட்டேடோ ஃப்ரை பண்றா உவேக்! அப்றம் கவின் குரங்கு ப்ரஷ் பண்ணாம காஃபி குடிச்சான்” என்று உத்ரா கேட்கப்போகும் கேள்விகளுக்கெல்லாம் தானே முந்திக்கொண்டு விடையளித்தாள்.
அவளின் கிராப் தலையை கோதிவிட்ட உத்ரா தன் அக்கா நந்திதா இந்நேரம் உயிரோடு இருந்திருந்தால் அமிகாவின் புத்திக்கூர்மையை கண்டு அகம் மகிழ்ந்திருப்பாளே என்று வலியோடு நினைத்துக் கொண்டாள்.
பின் இயல்புக்கு திரும்பியவளாய், “ஹேய் முந்திரிக்கொட்ட! நீ உன் பாட்டிக்கு ஒடம்பு நல்லா இருக்குன்னு சொன்னா தான்டி நான் ஆச்சரியப்படனும். ஒடம்பு முடியலைனு சொன்னா அவங்க நல்லா இருக்காங்கன்னு தான் அர்த்தம். போ! சாக்ஸ் எடுத்துட்டு வா. ஸ்கூலுக்கு லேட்டாகிருச்சில்ல?” என்று சோபாவில் போய் உட்கார்ந்தாள்.
வேண்டுமென்றே அவளை நெருங்கியமர்ந்த விக்கி, “உதி ஒரு காஃபி சொல்லேன்” என்றான் கெஞ்சலாக.
அவனை தன்னிடமிருந்து தள்ளியவள் சமையலறையில் இருந்த தன் தங்கை கவிலயாவிடம், “ஏய் லயா! ரெண்டு காஃபி போட்டு எடுத்துட்டு வாடி” என்று கத்தினாள்.
"ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுக்கா. வீடியோக்கு வாய்ஸ் ஓவர் குடுத்துட்டு இருக்கேன். டிஸ்டர்ப் பண்ணாத" என்ற கூக்குரல் மட்டும் உள்ளிருந்து கேட்டது.
“இவ ஒருத்தி தெனம் தான் பண்ற ரசத்தையும் சாம்பாரையும் மினி விலாக்குங்கிற பேர்ல ஊருக்கே காமிச்சிக்கிட்டு திரியுறா. யூடியூப்ல ஒரு முப்பதாயிரம் சப்ஸ்க்ரைபர்ஸ வச்சிக்கிட்டு இவ பண்ற அலம்பல் இருக்கே தாங்க முடியல” என்று ரிமோட்டை இயக்கி சானலை மாற்றினாள்.
உத்ராவின் சத்தத்தில் தன் தவம் கலைந்தவர் போல் நொண்டிக்கொண்டே தன்னறையிலிருந்து வெளிப்பட்டார் தாய் பானுமதி.
விக்கியைக் கண்டதும், "வாப்பா!" என்றபடியே டேபிள் ஃபேனை இயக்கி அவன் பக்கமாய் திருப்பி வைத்தார்.
ஏற்கனவே சீலிங் ஃபேன் ஒன்று ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறு விக்கியை விழுந்து விழுந்து கவனிக்கும் தன் தாயைப் பார்த்து தலையிலடித்துக் கொண்டாள் உத்ரா.
விக்கியை அவருக்கு அறிமுகப்படுத்திய அன்றே, “எந்த முகூர்த்தநாள் உங்க ரெண்டுபேருக்கும் சரியா இருக்கும்?” என்று நாட்காட்டியை வெள்ளந்தியாக தூக்கிக்கொண்டு வந்தவர் தானே அவர்.
முப்பது வயதாகியும் திருமணத்தில் நாட்டமில்லாமல் இருக்கும் தன் மகள் எப்படியாவது திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டாளா என்று ஏங்குகிறது தாய் மனம்.
அவரை ஒரு முறை முறைத்தவள் தன் மனதில் ஓடுவது புரிந்து சத்தம் வராமல் சிரித்த விக்கியையும் பார்வையால் எச்சரித்தாள். சரியாக அந்நேரம் கையில் காஃபிகோப்பைகளுடன் வந்தாள் கவிலயா. அவளின் வருகை பெண் பார்க்கும் வைபவத்தை ஞாபகப்படுத்தியது போலும், சத்தம் போட்டுச் சிரித்தான் விக்கி. அவள் நறுக்கென்று தொடையில் கிள்ள, அலறினான்.
பதறிய பானுமதியிடம், "ஒன்னுமில்ல ஆன்ட்டி, கட்டெறும்பு கடிச்சிருச்சி. செம கட்ட. ச்சே! செம கடி. நேத்து ஹாஸ்பிடல் போனீங்களே உங்க ஒடம்புக்கு இப்போ எப்டி இருக்கு ஆன்ட்டி?" என்று பரிவுடன் விசாரிக்கவும்,
"பிபி, சுகர், கால்வலினு எல்லாம் சௌக்கியமா இருக்குப்பா. என் பிள்ளைங்களுக்கு காலாகாலத்துல நடத்த வேண்டியத நடத்திப் பாத்துட்டேன்னா நிம்மதியா போய் சேர்ந்திடுவேன்." என்று வலியோடு சிரித்தவரை,
"ஏன் ஆன்ட்டி இப்படி விரக்தியா பேசுறீங்க? பி பாசிட்டிவ்." என்று தெம்பூட்டினான் விக்கி.
உதியோ தான் தினமும் காணும் நாடகம் தான் இது எனும் வகையில் சலிப்பாகப் பார்த்தாள்.
கவிலயா விக்கியின் கையில் காஃபியை கொடுத்துவிட்டு தன் அக்காவிற்கு கொடுக்கும்போது மட்டும், "சொல்லுக்கா இன்னைக்கு எந்தப் பையன் பின்னாடி சுத்தின?" என்று கேலிப்பேச, பிரகாஷை விட்டுவிட்டு ‘உதை வாங்கப் பிறந்த உதயை’ வட்டமடித்தது அவள் மனவிமானம்.
வரிசையாக அவன் செய்த ரகளைகளும் நினைவு வர, முகத்தில் ரெட் சிக்னல் விழுந்தது. கவிலயா வசமாகச் சிக்கினாள்.
கலைடாஸ்கோப் திரும்பும்…