Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் - Story

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
661
Reaction score
844
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் - Shivani
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு ஒரு புதிய நாவலுடன் உங்களை‌ சந்திக்க வந்திருக்கும் நான் உங்கள் ஷிவானி செல்வம்.

இது எனது ஒன்பதாவது நாவல்.

கதையின் தலைப்பு: காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்

குழந்தைகள் விளையாடும் கலைடாஸ்கோப்புகளில் உடைந்த வளையல்கள் கண்ணாடிகளின் பன்முக எதிரொளிப்பில் ஒரு அழகான கோலத்தை உருவாக்கும். அதன் ஒவ்வொரு திருப்பத்திலும் வெவ்வேறு வளையல்கள் இணைந்து புதுவித கோலத்தை கட்டமைக்கும்.

காதலும் அதே போல் தான். மனிதர்கள் உடைந்த வளையல்கள் என்றால், காலமும் சூழலும் கண்ணாடிகள். இந்நாவலுக்கு இத்தலைப்பு‌ பொருத்தமா என்று நாவலின் இறுதியில் நீங்கள் தான் கூற வேண்டும்.

இது முழுக்க முழுக்க ரொமான்டிக் சஸ்பென்ஸ் வகையைச் சார்ந்த ஒரு குடும்ப நாவல்.

எனது மற்ற நாவல்களுக்கு அளித்த ஆதரவை இந்நாவலுக்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

கதைக்குள் செல்லலாமா?


 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
காதலொரு கலைடாஸ்கோப்‌ திருப்பம்

எழுதியவர்: ஷிவானி‌ செல்வம்

அத்தியாயம் 1


அதிகாலைநேரம் பனியின் பாசப்பார்வை தன் உடலை பதம் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு கறுப்பு நிற காருக்குள் உட்கார்ந்து, தனக்கு எதிரே இருந்த வீட்டையே வெறித்துக் கொண்டிருந்தாள் உத்ரா. அவள் சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு மேலாகவே அவ்வாறு தான் செய்து கொண்டிருக்கிறாள். ஆனால், அவளின் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவனுக்கு தான் பொறுமை சுத்தமாக இல்லை.

“உதி ரிபோர்ட்ல அவன் ஆறுமணிக்கு ஜாகிங் போவான்னு இருக்கு. ஆனா ஆறேகால் ஆகியும் வரக்காணோமே?” என்றான்.

அவள், “உஷ்! அந்த பிரகாஷ் வந்துட்டான் விக்கி.” என்றதும், உடனே தன் பார்வையை அவள் கைக்காட்டிய பக்கம் திருப்பினான்.

அவர்கள் கண்காணிக்கும் பிரகாஷுக்கும், அவர்களுக்கும் சொல்லப்போனால் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது. ஆனால், ஒரு பெண்ணின் வாழ்க்கை இதில் அடங்கியிருப்பதால் கர்ம சிரத்தையுடன் உளவு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

வீட்டைவிட்டு வெளியில் வந்த பிரகாஷ் ஷீ லேஸை சரி செய்துகொண்டு தன் ஓட்டப்பயிற்சியை துவங்க, அவனை பின்தொடரும் பொருட்டு மிதவேகத்தில் காரை ஓட்டினான் விக்கி.

ஓடிக்கொண்டிருந்தவன் திடீரென ஒரு பெட்டிக்கடையில் நின்று சிகரெட் வாங்கிப் புகைக்க, “உதி நம்ம அண்டர்கவர் டிடெக்டிவ் சொன்ன எடம் இதான். கேமராவ ரெடியா வை.” என்று அவசரப்படுத்தினான்.

“ம்” என்றவளும் முதலில் அந்தக் காட்சியை பத்து படங்கள் எடுத்தாள்.

சிகரெட்டின் கதையை முடித்துவிட்டு அக்கம் பக்கம் பார்த்த பிரகாஷ் பெட்டிக்கடைக்காரனிடம் கழுத்தைத் தடவி சமிக்ஞை செய்ய, மீதச்சில்லறையுடன் அவன் கையில் பொட்டளம் ஒன்றையும் திணித்தான் கடைக்காரன். அதனையும் புகைப்படங்களாக கிளிக்கித் தள்ளினாள்.

பாவம் பிரகாஷ். இச்சம்பவம் தெரிந்தால் தன் மேட்ரிமோனியல் பக்கத்தில் தானொரு ‘100% டீட்டோட்லர்’ என்று பதிந்து வைத்திருப்பதற்காக நிச்சயம் வருத்தப்படுவான்.

அவன் மீண்டும் தன் ஓட்டப்பயிற்சியில் இறங்கியவனாக சிறிதுதூரம் செல்ல, சாலையின் வளைவில் அவனுக்காக காத்திருந்த புதியவன், “என்ன சீக்கிரம் வரச்சொல்லிட்டு நீ ஏன்டா இன்னைக்கு இவ்ளோ லேட்?” என்றவாறே உடனிணைந்து கொண்டான்.

‘யாரிவன்?’ என்று யோசித்தபடியே விக்கி தன் காரின் வேகத்தை சற்று அதிகரித்தான்.

இவ்வேலையில் உத்ரா உதவிக்காக வைத்திருந்த ஆட்கள் அவனின் இந்த மித ஓட்ட நண்பனை பற்றி சொல்லியிராததால் அவளும் சேர்ந்து‌ குழம்பினாள்.

ஒரு கட்டத்தில் பிரகாஷும் அவனுடைய நண்பனும் அருகிலிருந்த பூங்கா ஒன்றினுள் நுழைய, தானும் காரை விட்டு இறங்கியவள், “வா அவங்கள உள்ளப்போய் ஃபாலோவ் பண்ணுவோம்” என்று விக்கியை அழைத்தாள்.

பகுமா‌‌னக்காரன், “ஹலோ எஸ் கியூஸ் மி? நான் உங்களுக்கு பாஸ்! என்னால எல்லாம் உள்ள வர முடியாது. ஏதாவது எமர்ஜென்சினா‌ இந்த இன்விஸிபல் இயர்பட்ல இன்ஃபார்ம் பண்ணு.” என்றபடியே சார்ஜிங் கேஸோடு தூக்கியெறிந்தான்.

அதை நழுவவிடாமல் பிடித்தவள் காதொலிப்பானை இடக்காதில் மாட்டியபடியே பூங்காவை நோக்கி ஓடினாள். போகும்போதே கடுப்பாக முணுமுணுத்தாள்.

“நீ ஃபீல்டு வொர்க் எதுக்கும் வராதன்னாலும் கேக்குறதில்ல. இப்படி கடைசி நிமிஷத்துல வந்து அத செய்யமாட்டேன் இத செய்யமாட்டேனு கழுத்தறுக்கறது. வாசன் சாருக்காக இன்னும் எவ்வளவு நாள் தான் இந்தத் தொல்லைய சகிச்சிக்கனுமோ தெரியல” என்று புலம்பினாள்.

திடீரென ஒரு திருப்பத்தில் தான் பின்தொடர்ந்து சென்றவர்கள் காணாமல் போகவும் தட்டுத்தடுமாறி நின்றாள் உத்ரா. அப்போது அவளுக்கு பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது.

"எதுக்கு நீங்க எங்கள ஃபாலோவ் பண்றீங்க மேடம்?"

திரும்பியவள் அது பிரகாஷின் நண்பன் தான் என்றறிந்ததும், பயத்தில் ஒரு அடி பின்வாங்கினாள்.

அவளுக்கு இந்தத்தொழிலில் முதலில் சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடமே ‘சப்ஜெக்ட்டை நெருங்கக்கூடாது. அவர்களிடம் அறிமுகமாகக்கூடாது’ என்பது தான். ஆனால், முதல் முறை மாட்டியிருப்பதால் தன் தைரியத்தை மீட்டு அவனை ஆராய்ந்தாள்.

சீராக வெட்டிய இளநரை முடி, அடர்த்தியில்லாத புருவங்கள், கவர்ச்சியான பெரிய கண்கள், சற்றே முன்புறம் வளைந்த பெரிய காதுகள், மூக்கின் நடுவே கோடு போட்டது போல் சிறிய தழும்பு, மூக்கிற்கு கீழே மீசையிருந்த தடம், நான்கு நாட்களுக்கு முன்பு தான் சவரம் பண்ணியிருக்க வேண்டுமென்ற சொர சொர கன்னங்கள், சிவந்த சிறிய இதழ்கள், கீழேயிறங்கினால் தொங்கும் தேன்கூடாய் ஆடம்ஸ் ஆப்பிள், அதில் வழியும் உப்புத்தேன் என்று சென்றவளின் பார்வை மீண்டும் கண்களுக்கேத் தாவின. கேள்வியின் நாயகனோ தன் பார்வையின் கூர்மையை குறைத்திருக்கவில்லை.

உத்ராவின் உள்மனம் ‘நீ இப்படி ஆராஞ்சுப் பாக்க வேண்டியவன் இவனில்ல, பிரகாஷ்!’ என்று இடித்துரைத்த அதே நொடியில், “கேட்டது காதுல விழல?” என்று குரலை உயர்த்தினான் நண்பன்.

சுதாரித்தவளோ, “யார யாரு ஃபாலோவ் பண்றா மிஸ்டர்?" என்று எகிறினாள்.

"நீங்க தான். கால்மணி நேரமா எங்கள ஃபாலோவ் பண்றீங்க." தானும் தயங்காமல் பதிலளித்தான்.

'டேய் கூமுட்ட அது தான்டா என் தொழிலே’ என்று மனதிற்குள் திட்டியவள் அருகில் சென்று கொண்டிருந்த ஒருவரை நிறுத்தி, "இங்கப் பாருங்க சார், நான் இவர ஃபாலோவ் பண்றேனாம். இவர் யாருன்னே எனக்கு தெரியாது. நான் ஏன் சார் இவர ஃபாலோவ் பண்ணப்போறேன்? நீங்க பாக்க நல்லவர் மாதிரி தெரியுறீங்க. நீங்களே இந்த நியாயத்த கேளுங்க சார்" என்று தன் முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டாள்.

நின்ற அந்த மனிதரும் சுற்றி அவ்வளவு பேர் இருக்க, அவள் தன்னை மட்டும் 'சார்' போட்டு அழைத்த குதூகலத்தில், "ஏப்பா! அழகான அந்தப் பொண்ண நீங்க ஃபாலோவ் பண்றீங்கன்னு சொன்னாலும் ஒரு நியாயம் இருக்கு. அந்தப்பொண்ணு போய் உங்கள ஃபாலோவ் பண்ணுதுனு சொல்றீங்களே? போங்கப்பா வேற வேல இருந்தா போய் பாருங்க” என்று டன் கணக்கில் வழிந்தார்.

"என்ன! அழகான பொண்ணா? எங்க? எங்க? சாரி சார். நீங்க உங்க மூக்குக்கண்ணாடிய உங்க வீட்லயே இன்னைக்கு மறந்து விட்டுட்டு வந்துட்டீங்கன்னு நெனைக்கிறேன். பாவம் வயசான உங்களப்போய் நிறுத்தி வச்சு மேடம் டிஸ்டர்ப் பண்றாங்க. போங்க சார். எதுலயும் இடிச்சிக்காமப் போங்க" என்றதும், வழியல் மனிதர் உர்ரென்ற முகத்துடன் விலகினார்.

பிரகாஷோ தன் நண்பனின் பேச்சில் அதிர்ச்சியுற்றான். யாரென்றே தெரியவில்லையானாலும் இவ்வளவு நேரமும் அந்த மஸ்கோத் அல்வா மேனிக்காரியை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவன் அல்லவா அவன்!

சற்று பூசினாற்போல் தான் இருக்கிறாள். ஆனால் உடை இறுக்கமாக இருப்பதால் அதுவே ஒருவித கவர்ச்சியை அல்லவா தந்து விடுகிறது. அந்த ரோஸ்மில்க் ரசகுல்லா இதழ்கள், அரை மண்டைவெல்ல அதிசயங்கள்… அவையுமா உதயை கவரவில்லை?

பிரகாஷ் யோசிக்கும்போதே, முன் பின் தெரியாத ஒருவன் தன்னை அவமானப்படுத்திய கடுப்பில்,
“உங்க மூஞ்சிய மொதல்ல நீங்க கண்ணாடில பாத்துருக்கீங்களா மிஸ்டர்?" என்று வரிந்து கட்டிக்கொண்டு சென்றாள் உத்ரா.

"ஹே! டோன்ட் சேஞ்ச் த டாப்பிக்! நாங்க இந்த பார்க்குல நுழைஞ்சதுல இருந்து மூனு எடத்துல நின்னோம். மூனு எடத்துலயும் ஷூ லேஸ் கட்டுற மாதிரி, வொர்க்கவுட் பண்ற மாதிரி, செல்பி எடுக்குற மாதிரி நீங்களும் நின்னீங்களே ஏன்?" என்று கிடுக்குப்பிடி போட்டான்.

"உங்களுக்கு பொண்ணுங்கள சைட் அடிக்கிறதுனா ரொம்ப பிடிக்குமோ?"

அவள் தன்னை ஒட்டி நின்று கிசுகிசுத்ததில் கடுப்பானவனோ, "ஹலோ" என்று சைகையால் விலகி நிற்கச் சொன்னான்.

"பின்ன நான் உங்கள ஃபாலோவ் பண்றேன்னு சொல்லிட்டு, நீங்க தான் என்ன சைட் அடிச்சிட்டு இருந்திருக்கீங்க. ச்சே! நான் இந்தியால பொறந்திருக்கவே கூடாது. இங்கப் பொண்ணுங்களுக்கு பாதுகாப்பே இல்ல.”

அவளின் அட்டகாசமான நடிப்பில் பிரகாஷ் ஏமார்ந்து தான் போனான்.

“உதய் நீ சொன்ன எடத்துல எல்லாம் நானும் தான்டா நின்னேன். ஆனா நான் இவங்களப் பாக்கலையேடா” என்று உத்ராவுக்கு மறைமுக ஆதரவு தந்தான்.

அவனை முறைத்துப் பார்த்தவன், “டேய் ஃபூல்! இவங்க ஃபாலோவ் பண்றதே உன்ன தான்டா.” என்று சரியாகச் சொன்னான்.

உத்ரா அதிர்ச்சியில் உறைந்துபோனாலும் மறுகணமே சுதாரித்துக்கொண்டு, “சார் இதெல்லாம் டூ மச். உங்க ஃப்ரெண்ட் ரொம்ப கற்பன பண்றாரு. நான் பண்ணாததெல்லாம் பண்ணேன்னு சொல்லி என்ன இன்சல்ட் பண்றாரு. என் பொண்ணு கமிஷ்னர். ச்சீ! நான் கமிஷ்னர் பொண்ணு. இத எங்கப்பாக்கிட்ட சொன்னா என்னாகும் தெரியுமா?” என்று உளறிக் கொட்டினாள்.

பேண்ட் பாக்கெட்டிற்குள் போதைபொருள் வைத்திருக்கும் பிரகாஷோ போலீஸ் என்றதும், “டேய் உதய்! வாடா போகலாம். எனக்கு ஆஃபிஸுக்கு வேற லேட்டாகுது.” என்று நண்பனை வலுக்கட்டாயமாய் இழுத்துச் சென்றான்.

எங்கே பிரகாஷின் கையை உதறிக்கொண்டு அந்த உதய் மீண்டும் தன்னை கேள்வி கேட்க வந்துவிடுவானோ என்று வேகமாக அவ்விடத்தைவிட்டே ஓடினாள் உத்ரா. வெளியே அவளுக்காக காத்திருந்த விக்கி, தன் காதொலிப்பானில் கேட்ட சங்கதியை வைத்தே காரை ஸ்டார்ட் செய்து கொண்டு நின்றான்.

வேகமாக அவனது காரில் ஏறியவள், "சீக்கிரம் கார எடு" என்று பரபரத்தாள்.

விக்கி, “யாரு அந்த ஏழ்ர?” என்று சத்தம் போட்டு சிரித்தான்.

தன் காதொலிப்பானை கழற்றி அவன் மேல் எறிந்தவள், “எங்கிட்ட உதை வாங்கப் பிறந்த உதய்” என்று எரிச்சலாகச் சொன்னாள்.

“நம்ம சப்ஜெக்ட் பேரு பிரகாஷ் தான?”

“அய்யோ! படுத்தாதடா. அந்த பிரகாஷோட ஃப்ரெண்ட் இவன். வெரி க்ளவர். நான் இந்த ஃபீல்டுக்கு வந்த நாலு வருஷத்துல ஃபாலோவ் பண்ணி போன யாருமே என்ன கண்டுபிடிச்சதில்ல. ஆனா இவன் கண்டுபிடிச்சிட்டான்.” என்று அவமானமாய் உணர்ந்தாள்.

“இந்தத் தொழில்ல மாட்டிக்கிறது மேட்டர் இல்ல உதி. எப்படி தப்பிக்கிறோங்கிறது தான் மேட்டர். பட் நீ யூஸ் பண்ணது காந்தி காலத்து டெக்னிக்”

அவன் சீண்டியதில் முகம் சிவந்தவள் பேச்சை திசைதிருப்பினாள்.

“ப்ரகாஷூக்கு போதைபொருள் யூஸ் பண்ற பழக்கமிருக்குனு வெரிஃபை பண்ணியாச்சு. இன்னும் ஒரே ஒரு வெரிஃபிகேசன் தான் பாக்கி. அதுவும் அவன் நெக்ஸ்ட் வீக் வால்பாறை போறப்ப அங்க வச்சு முடிச்சிட்டோம்னா, உடனே அவன் கேரக்டர் ரிபோர்ட்ட பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு அனுப்பிர வேண்டியது தான். அண்ட் இன்னைக்கு போதைப்பொருள் வித்த அந்த பெட்டிக்கடைக்காரன் பத்தியும் போலீஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணனும் விக்கி. ஆமா நம்ம முந்தின அசைன்மெண்ட் ரமேஷோட கேரக்டர் ரிப்போர்ட்ட அவன் வருங்கால மாமனாருக்கு மெயில் பண்ணிட்டியா? நேத்து நீ‌ போன்ல சீரிஸ் பாத்துக்கிட்டிருக்கும்போது சொன்னேனே? அவர் அமௌன்ட் பாக்கி இல்லாம ஜிபே பண்ணிட்டாரு அதான்.” என்று நினைவுபடுத்தவும்,

"ம், பண்ணிட்டேன் பண்ணிட்டேன்" என ஆர்வமின்றி விடையளித்த விக்கி நேரே காரை அவள் இல்லம் நோக்கி திருப்பினான்.

அவளின் கண்கள் தன்னையுமறியாமல் பூங்காவை ஒருமுறை திரும்பிப் பார்த்தன.

விக்கியின் ‘பாம் பாம்’ விரட்டலில் கிருஷ்ணாபுரம் காலனியில் இருந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்குள் நுழைந்தது அந்த மரகத பிஎம்டபிள்யூ.

உத்ரா காரைவிட்டு இறங்கி விக்கிக்கு ‘பை’ சொல்ல, “ஒரு மரியாதைக்குக்கூட வீட்டுக்கு வரச்சொல்ல மாட்டியா உதி?” என்று முகத்தைத் தூக்கினான்.

“வெக்கமே இல்லைல? சரி ஒரு மரியாதைக்கு கூப்பிடுறேன். வா வீட்டுக்கு” என்றாள் இடக்காக.

அதற்காகவே காத்திருந்தவன் காரைவிட்டு இறங்கி அவளுக்கு முன் நடந்தான். அவனோடு அன்றாடம் நடக்கும் கூத்து தான் இது. வீட்டிற்குள் கூப்பிட மாட்டாயா? என்பான். கூப்பிட்டால் ஒருவேளை உணவு உண்ணாமல் வீட்டை விட்டு அகலமாட்டான். அவன் தினம் இதை வாடிக்கையாகக்கொண்டால் அக்கம்பக்கத்தினர் தங்களை என்ன நினைப்பார்கள் என்ற யோசனையிலேயே அவனை தன் வீட்டிற்கு அழைக்கத் தயங்கினாள் உத்ரா. ஆனால், அவனோ அது எதைப் பற்றியும் அக்கறை கொள்ளவில்லை.

மின்தூக்கியின் வழியே அவர்கள் எண்‌ பதினேழு கொண்ட வீட்டிற்குச் சென்றபோது குட்டி வாண்டொன்று வரவேற்பறையில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தது.

அது உத்ராவைக் கண்டதும், “பாட்டிக்கு எந்திரிச்சதுலருந்து ஒடம்புக்கு முடியல உதி. லயா இன்னைக்கும் ரசம், பொட்டேடோ ஃப்ரை பண்றா உவேக்! அப்றம் கவின் குரங்கு ப்ரஷ் பண்ணாம காஃபி குடிச்சான்” என்று உத்ரா கேட்கப்போகும் கேள்விகளுக்கெல்லாம் தானே முந்திக்கொண்டு விடையளித்தாள்.

அவளின் கிராப் தலையை கோதிவிட்ட உத்ரா தன் அக்கா நந்திதா இந்நேரம் உயிரோடு இருந்திருந்தால் அமிகாவின் புத்திக்கூர்மையை கண்டு அகம் மகிழ்ந்திருப்பாளே என்று வலியோடு நினைத்துக் கொண்டாள்.

பின் இயல்புக்கு திரும்பியவளாய், “ஹேய் முந்திரிக்கொட்ட! நீ உன் பாட்டிக்கு ஒடம்பு நல்லா இருக்குன்னு சொன்னா தான்டி நான் ஆச்சரியப்படனும். ஒடம்பு முடியலைனு சொன்னா அவங்க நல்லா இருக்காங்கன்னு தான் அர்த்தம். போ! சாக்ஸ் எடுத்துட்டு வா. ஸ்கூலுக்கு லேட்டாகிருச்சில்ல?” என்று சோபாவில் போய் உட்கார்ந்தாள்.

வேண்டுமென்றே அவளை நெருங்கியமர்ந்த விக்கி, “உதி ஒரு காஃபி சொல்லேன்” என்றான் கெஞ்சலாக.

அவனை தன்னிடமிருந்து தள்ளியவள் சமையலறையில் இருந்த தன் தங்கை கவிலயாவிடம், “ஏய் லயா! ரெண்டு காஃபி போட்டு எடுத்துட்டு வாடி” என்று கத்தினாள்.

"ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுக்கா. வீடியோக்கு வாய்ஸ் ஓவர் குடுத்துட்டு இருக்கேன். டிஸ்டர்ப் பண்ணாத" என்ற கூக்குரல் மட்டும் உள்ளிருந்து கேட்டது.

“இவ ஒருத்தி தெனம் தான் பண்ற ரசத்தையும் சாம்பாரையும் மினி விலாக்குங்கிற பேர்ல ஊருக்கே காமிச்சிக்கிட்டு திரியுறா. யூடியூப்ல ஒரு முப்பதாயிரம் சப்ஸ்க்ரைபர்ஸ வச்சிக்கிட்டு இவ பண்ற அலம்பல் இருக்கே தாங்க முடியல” என்று ரிமோட்டை இயக்கி சானலை மாற்றினாள்.

உத்ராவின் சத்தத்தில் தன் தவம் கலைந்தவர் போல் நொண்டிக்கொண்டே தன்னறையிலிருந்து வெளிப்பட்டார் தாய் பானுமதி.

விக்கியைக் கண்டதும், "வாப்பா!" என்றபடியே டேபிள் ஃபேனை இயக்கி அவன் பக்கமாய் திருப்பி வைத்தார்.

ஏற்கனவே சீலிங் ஃபேன் ஒன்று ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறு விக்கியை விழுந்து விழுந்து கவனிக்கும் தன் தாயைப் பார்த்து தலையிலடித்துக் கொண்டாள் உத்ரா.

விக்கியை அவருக்கு அறிமுகப்படுத்திய அன்றே, “எந்த முகூர்த்தநாள் உங்க ரெண்டுபேருக்கும் சரியா இருக்கும்?” என்று நாட்காட்டியை வெள்ளந்தியாக தூக்கிக்கொண்டு வந்தவர் தானே அவர்.

முப்பது வயதாகியும் திருமணத்தில் நாட்டமில்லாமல் இருக்கும் தன் மகள் எப்படியாவது திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டாளா என்று ஏங்குகிறது தாய் மனம்.

அவரை ஒரு முறை முறைத்தவள் தன் மனதில் ஓடுவது புரிந்து சத்தம் வராமல் சிரித்த விக்கியையும் பார்வையால் எச்சரித்தாள். சரியாக அந்நேரம் கையில் காஃபிகோப்பைகளுடன் வந்தாள் கவிலயா. அவளின் வருகை பெண் பார்க்கும் வைபவத்தை ஞாபகப்படுத்தியது போலும், சத்தம் போட்டுச் சிரித்தான் விக்கி. அவள் நறுக்கென்று தொடையில் கிள்ள, அலறினான்.

பதறிய பானுமதியிடம், "ஒன்னுமில்ல ஆன்ட்டி, கட்டெறும்பு கடிச்சிருச்சி. செம கட்ட. ச்சே! செம கடி. நேத்து ஹாஸ்பிடல் போனீங்களே உங்க ஒடம்புக்கு இப்போ எப்டி இருக்கு ஆன்ட்டி?" என்று பரிவுடன் விசாரிக்கவும்,

"பிபி, சுகர், கால்வலினு எல்லாம் சௌக்கியமா இருக்குப்பா. என் பிள்ளைங்களுக்கு காலாகாலத்துல நடத்த வேண்டியத நடத்திப் பாத்துட்டேன்னா நிம்மதியா போய் சேர்ந்திடுவேன்." என்று வலியோடு சிரித்தவரை,

"ஏன் ஆன்ட்டி இப்படி விரக்தியா பேசுறீங்க? பி பாசிட்டிவ்." என்று தெம்பூட்டினான் விக்கி.

உதியோ தான் தினமும் காணும் நாடகம் தான் இது எனும் வகையில் சலிப்பாகப் பார்த்தாள்.

கவிலயா விக்கியின் கையில் காஃபியை கொடுத்துவிட்டு தன் அக்காவிற்கு கொடுக்கும்போது மட்டும், "சொல்லுக்கா இன்னைக்கு எந்தப் பையன் பின்னாடி சுத்தின?" என்று கேலிப்பேச, பிரகாஷை விட்டுவிட்டு ‘உதை வாங்கப் பிறந்த உதயை’ வட்டமடித்தது அவள் மனவிமானம்.

வரிசையாக அவன் செய்த ரகளைகளும் நினைவு வர, முகத்தில் ரெட் சிக்னல் விழுந்தது. கவிலயா வசமாகச் சிக்கினாள்.


கலைடாஸ்கோப் திரும்பும்…


 
Last edited:

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
எனது புதிய நாவலுக்கான பிள்ளையார் சுழியை நான் போட்டுவிட்டேன். அதேபோல் இந்நாவலுக்கான கருத்துத்திரியில் உங்களது பிள்ளையார் சுழியையும் போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துத்திரி,

பிள்ளையார் சுழி போடுமிடம்
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
சென்ற அத்தியாயத்திற்கு முகநூலில் தங்கள் பிடித்தம் மற்றும் கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி ப்ரெண்ட்ஸ் ❣️

ஆனால் தைப்பூசமான நேற்று முருகனை கொண்டாடிவிட்டு தளத்தின் கருத்துப்பெட்டியில் பிள்ளையாரை அம்போவென விட்டுவிட்டீர்கள். பரவாயில்லை, மெதுவாக கருத்துப்பெட்டி வந்து சேருங்கள்.

இப்போது உங்களுக்காக அத்தியாயம் இரண்டு தயார் ப்ரெண்ட்ஸ்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்

எழுத்தாளர்: ஷிவானி செல்வம்

அத்தியாயம் 2


உத்ராவிற்கு வண்ண வண்ணமாய் வார்த்தைகள் தோன்றினாலும் முயன்று தன்னை‌ கட்டுப்படுத்தினாள்.

"என் பொழப்பு உனக்கு சிரிப்பாயிருக்கா லயா? ஒரு நாள் வெயில்ல எங்கூட திரிஞ்சுப் பாரு. அப்ப தெரியும் என் கஷ்டம்." என்று புஸுபுஸுவென்று மூச்சுவாங்குபவளை எப்போதும்போல் பானுமதி தான் குறுக்கே புகுந்து சமாளிக்க வேண்டியிருந்தது.

"இப்ப நீ கஷ்டப்படாம சொகுசா சம்பாதிக்கிறன்னு யாரு சொன்னா உதி? அவ வெகுளியா பேசுறதப் போய் வினையமா எடுக்குற? சொல்லப்போனா நீ வெளில கஷ்டப்படுற. அவ வீட்ல கஷ்டப்படுறா. ஒரு நோயாளி பொம்பளைக்கும், சின்னப்பொண்ணுக்கும் ஆயாவா தெனம் சேவகம் பண்ணிட்டு இருக்காடி. அதோ வரானே உன் தம்பி, அவனச் சொல்லு தகும். தினம் வீட்டுக்கு ஏன்டா லேட்டா வர்றன்னு கேட்டா கோச்சிங் கிளாஸ் மண்ணாங்கட்டினு பொய் சொல்றான். ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகற மூஞ்சா இது? எங்க நீ வேல தேடுறேன்னு வீட்ல சும்மா உக்கார்ந்திருந்தா உன் ஆஃபிஸுக்கு வரச்சொல்லிருவியோன்னு சார் கண்டுபிடிச்சிருக்கற வழியில்ல இது?" என்று தவறான நேரத்தில் தன் அறையைவிட்டு வெளியே வந்தவனை பிடித்துக் கொடுத்தார்.

உத்ரா தன் உஷ்ணப் பார்வையை அவன் பக்கம் திருப்பியவள் குரலை உயர்த்தி அதட்டினாள்.

“இவங்க சொல்றது உண்மையா கவின்? இன்னும் உன் ஃப்ரெண்ட்ஸுக்கு அஞ்சு பத்துக்கு லேப்டாப் ரிப்பேர் பண்ணி‌ குடுக்குற வேலையத் தான் நீ பாத்துக்கிட்டிருக்கியா?” எனவும், பதறினான் கவிலயாவின் இரட்டையன்.

"அய்யோ! சத்தியமா இல்லக்கா. இப்பலாம் நான் யாருக்கும்‌ எந்த சர்வீஸும் பண்ணிக் குடுக்கறதில்ல. இங்க ரெண்டுதெரு தள்ளி புதுசா லைப்ரரி ஒன்னு ஓப்பன் பண்ணிருக்காங்கக்கா. நானும் என் ஃப்ரெண்ட்ஸும் கோச்சிங் கிளாஸ் போன கையோட அங்கப்போய் தான் நோட்ஸ் எடுத்துட்டு வர்றோம். அம்மா அது தெரியாம நான் ஊர் சுத்துறேன்னு தப்பா நெனைக்கிறாங்க. நீ வேணா லயாகிட்ட கேளேன்." என்றதும்,

"சுத்தப் பொய்க்கா. அங்க லைப்ரரியே கெடையாது." என்றாள் துடுக்காக.

உத்ராவின் கோபமோ இரட்டிப்பானது.

"இந்த வருசமும் நீ கம்பெடடிவ் எக்ஸாம் பாஸ் பண்ணலன்னா, தயவு தாட்சண்யம் பாக்காம உன்ன வீட்டவிட்டு வெளிய அனுப்பிருவேன் கவின். அதுக்கு அப்புறம் லேப்டாப்‌‌ சர்வீஸ் என்ன; ஷூ பாலீஷ் சர்வீஸ் கூட பண்ணலாம். யாரும் உன்ன கேக்கப்‌‌போறதில்ல." என்றாள்.

அவமானத்தில் தலை குனிந்து நின்றான் கவின்.

விக்கியின் முன்பு இவ்வளவு பஞ்சாயத்தும் ஓடிக்கொண்டிருக்கிறதே என்று உத்ரா சங்கடமாய் அவன்புறம் திரும்ப, சண்டை பார்க்கும் ஆர்வத்தில் சாக்‌ஸுடன் அவன் மடியில் வந்தமர்ந்த அமிகா, "என்னயும் திட்டிறாத உதி. நான் குட் கேர்ளா நேத்து ஈவ்னிங்கே ஹோம்வொர்க்கெல்லாம் முடிச்சிட்டேன். பாட்டிக்கும் கால்ல தைலம் தேய்ச்சு விட்டேன். இல்ல பாட்டி?" என்று சிணுங்கினாள்.

அவளை தன்னருகே வரச்சொல்லி கட்டியணைத்தவள், "ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டு படிக்கிற உனக்கிருக்க பொறுப்பு கூட பி.இ படிச்சிருக்க உன் மாமனுக்கு இல்ல பாரு." என்று கவினை மேலும் கூனிக்குறுகச் செய்தாள்.

கோபத்தில் சாப்பிடாமல் புத்தகப்பையுடன் வீட்டைவிட்டு வெளியேறினான்.‌ உடனே தான் கொரியர் செய்ய வேண்டிய ஏபிசி மால்ட் பார்சல்களை ஒரு பைக்குள் திணித்துக்கொண்டு அவனின் பின்னேயே ஓடினாள் கவிலயா. முன்பதிவின் பெயரில் அவள் செய்யும் ஹோம்மேட் பொருட்களை எல்லாம் சரியான நேரத்தில் தபால்நிலையம் கொண்டுபோய் சேர்ப்பவன் அவன் தானே! இன்று கோபத்தில் அவளை தன் ஹோண்டாவில் ஏற்றாமல் சென்றுவிட்டால்? அது தான் பதறியடித்துக்கொண்டு ஓடுகிறாள்.

அவளைத் தொடர்ந்து அமிகாவும் தன் பள்ளி வாகனம் வரும் நேரமென்று பதற, அவளை கீழே சென்று ஏற்றிவிட்ட உத்ரா மற்ற தாய்மார்களுடன் டாட்டா காட்டினாள்.

அப்போது அவளது அலைபேசி பசியில் சிணுங்கியது. தூக்கி அமர்த்தியவள், "ஹலோ" என்றாள்.

எதிர்புறக்குரல் கேட்டக் கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்துக்கொண்டே வந்தவள் இறுதியாக, "சரிங்க சார், நாங்க விளக்குத்தூண் ஏடூபிக்கே வந்துடுறோம்." என்றாள்.

அவள் வீட்டிற்குள் நுழைவதற்குள் விக்கியிடம் தன் மனதில் இருப்பதையெல்லாம் கொட்டத் துவங்கியிருந்தார் பானுமதி.

"இப்படி தாம்ப்பா எதுக்கெடுத்தாலும் கோபம். ஹிம்! எனக்கிருக்க வியாதிய நான் மருந்தப்போட்டு ஆத்திக்கிறேன். அவ அவளோட மனக்கஷ்டத்த இப்படி கோபப்பட்டு தான ஆத்திக்க முடியுது. இப்படியே இருந்தா அவளுக்கு நாலு நல்லது நடக்குமா சொல்லு? கேட்கறேன்னு தப்பா நெனைக்காதப்பா. அவளுக்கு வேற யார் மேலயாவது விருப்பம் இருக்கா? குடும்பப் பொறுப்பு இருக்கேன்னு எங்கிட்ட சொல்ல எதுவும் தயங்குறாளா?"

"சேச்சே! அப்படி எதுவும் இல்ல ஆன்ட்டி. அப்படி யாராவது இருந்தா நானே அவ கல்யாணத்த முன்னாடி நின்னு நடத்தி வைக்கிறேன்‌ ப்ராமிஸா."

வீட்டிற்குள் நுழைந்த உத்ரா, "விக்கி, ஹர்ரியப்! நம்ம இப்ப நியூ கிளைண்ட் ஒருத்தர மீட் பண்ண வேண்டியிருக்கு." என்றதும், பசியிலிருந்தவன் மறுமொழி பேசாமல் அவளுடன் புறப்பட்டான்.

பானுமதி, “ரெண்டு இட்லி சாப்ட்டு போங்களேன்” என்றது காதில் ஏற்றிக்கொள்ளப்படாமலே காற்றில் கரைந்தது.

அந்த உணவுவிடுதியின் தனி கேபினுக்குள் நுழைந்ததிலிருந்தே ஒவ்வொரு பதார்த்தமாய் கேட்டு வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தான் விக்கி. அவ்வளவு பசி.

“அடுத்தவன் காசுல சாப்பிடுறதுல எவ்ளோ பரமானந்தம்டா உனக்கு?” என்று உத்ரா சொல்லிக்கொண்டிருந்தபோதே அவளிருந்த கேபினுக்குள் நுழைந்தார் அறுபது வயது பெரியவர் ஒருவர்.

வந்தவர் இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு உத்ராவிடம், “நான் நந்தகோபன். நீங்க…” என்று இழுக்க,

மரியாதை நிமிர்த்தமாய் எழுந்து நின்றவள், “நான் உத்ரா தான் சார்.” என்று கைக்குலுக்கினாள்.

அவரோ, “சார் யாரு?” என்று விக்கியைப் பார்த்து தன் நெற்றிவிபூதியை இரண்டு கோடுகளாக்கினார்.

“என் பாஸ்” என்று அறிமுகப்படுத்தி வைத்தாள்.

ஆனால், விக்கி அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. தன் தட்டிலேயே கவனமாக இருந்தான்.

உத்ரா அவரை, “உக்காருங்க சார்” என்றவள் அப்போது தான் கவனித்தாள் அவருக்கு பின்னால் நின்றிருந்த பெண்ணை.

சாம்பலில் வெள்ளைப்பூக்கள் தூவப்பட்ட பருத்தி சுடிதார் அணிந்து பெரிதாக அலங்காரம் எதுவுமின்றியே பேரழகியாய் திகழ்ந்தவளை வியந்துப் பார்த்தாள், பெண்களுக்கே உரிய ஒரு நுண்ணிய அழகியல் உணர்வில். ஆனால், குட்டி வெள்ளி ஜிமிக்கி ஆட நின்றிருந்தவளோ விக்கியின் குற்றம் சாட்டும் பார்வையில் கதிகலங்கிப் போயிருந்தாள்.

ஒரு வகையில் விக்கியுமே ஆடித்தான் போயிருந்தான். தன் வாழ்நாளில் யாரை அவன் திரும்ப சந்திக்கவேக்கூடாதென்று கடவுளை வேண்டியிருந்தானோ அவளையே மீண்டும் சந்திக்கும் நிலையென்றால் அவனால் எப்படி இயல்பாக இருக்க முடியும்?

உத்ராவின் பார்வை பின்னால் சென்றதுமே, “இவ விஷயமா தாம்மா உன்ன பாக்கனும்னு சொன்னேன்.” என்றார் நந்தகோபன்.

“ஓ!” என்றவள் புதியவளைப் பார்த்து புன்னகைக்க, அவளும் முயன்று புன்னகைத்தாள்.

விக்கி பழைய நினைவுகளில் ஆழ்ந்திருக்க, நந்தகோபன் தன்னுடன் வந்தவளைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.

“இவ என் தம்பிப்பொண்ணு அனன்யாம்மா. இவளுக்குப் பாத்திருக்க மாப்பிளைக்கு தான் நீங்க கேரக்டர் ரிபோர்ட் குடுக்கனும். மேட்ரிமோனில பாத்து நாங்க தான் ஃபர்ஸ்ட் அவங்கள அப்ரோச் பண்ணோம். நேர்ல பாத்தப்ப அவங்க குடும்பத்தையும் எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ஆனாலும், ஒரு தயக்கம். இந்தக் காலத்துல யாரையும் நம்ப முடியுறதில்லையேம்மா. அதுலயும் அனு அப்பா அம்மா இல்லாதப்பொண்ணு. நாளைக்கு பெரியப்பா இப்படியொரு எடத்துல நம்மள கட்டிக்குடுத்துட்டாரேனு ஃபீல் பண்ணக் கூடாதில்லம்மா? அதான் உங்களப் பாக்க வந்தேன். இது மாப்பிளையோட போட்டோ." என்று மேசையின் மீது தன் அலைபேசியை வைத்தார்.

அதை கையிலெடுத்துப் பார்த்தவளின் முகமோ பேயறைந்து போனது.

"மாப்பிளை பேரு…" என்று நந்தகோபன் ஆரம்பிக்க, ‘எங்கிட்ட உதை வாங்கப் பிறந்த உதய்' என்று உத்ராவின் உள்மனம் முந்திக்கொண்டது.

அந்தப்படத்தை அவள் விக்கிக்கும் காட்ட, வேண்டாவெறுப்பாக பார்த்தான்.

உதய்கிருஷ்ணாவின் புகைப்படத்திலிருந்து தன் பார்வையை மீட்ட உத்ரா, “இது எங்க ப்ரொசிஜர் சார். ஃபர்ஸ்ட் இந்த அப்ளிகேஷன ஃபில் பண்ணி சைன் பண்ணிடுங்க.” என்று படிவம் ஒன்றை நீட்டினாள்.

அதை நிரப்பிக் கொடுத்த நந்தகோபன், “அப்புறம் நான் உங்கக்கிட்ட போன்ல சொன்ன மாதிரி இது பத்தி யாருக்கும் தெரிய வேணாம்மா. ஏன்னா அவங்கள பொண்ணுப் பாக்க வரச்சொல்லி நிச்சயதார்த்தம் வர பேசி முடிச்சாச்சு.” எனத் தயங்கவும்,

“ஆமா இத மொதக்காரியமா போஸ்டர் ஒட்டி எல்லாருக்கும் சொல்லி பூஜ போட்டு தான் ஆரம்பிக்கப் போறோம். யாருடா இந்த பூமர் அங்கிள்” என்று முனகினான் விக்கி.

“இல்ல சார். ஹண்ட்ரெட் பெர்சண்ட் யாருக்கும் தெரியாம முடிச்சுத் தர்றோம்.” என்ற உத்ராவின் வாக்குறுதியில் அவர் முகம் திருப்தி காட்டியது.

“கெளம்பலாமா விக்கி?”

அவசரமாக எழுந்தான்.

“அப்பறம் நான் போன்ல சொன்ன மாதிரி இனிஷியல் பேமண்ட்டா நீங்க பாதி அமௌண்ட்ட இப்பவே பே பண்ற மாதிரி இருக்கும் சார். அண்ட் டூ த்ரீ வீக்ஸ்ல உங்களுக்கு நீங்க கேட்டது கெடைக்கும்.” என்று நம்பிக்கை தெரிவித்து தானும் எழுந்தாள்.

நகரும் போது, “இந்தாங்க சார்” என்று அவர் கையில் ஒரு காகிதத்தைத் திணித்தான் விக்கி.

“என்ன?” என்று திறந்துப் பார்த்தவருக்கு முகம் எண்கோணலானது.

“நாங்க சாப்பிட்ட பில்” என்றவன் வெளியேறியிருந்தான்.

உத்ராவும் மழுப்பலாக சிரித்துவிட்டு விடைபெற்றாள். ஆனால், காரில் வரும்போதோ சத்தம்போட்டு சிரித்தாள்.

“விக்கி நீ பில்லக் கட்டச் சொன்னதுமே அவர் மூஞ்சி போன போக்கப் பாக்கனுமே ஹாஹாஹா”

“அவர் தம்பிப் பொண்ணுக்கு எத்தன தடவ நான் பில் கட்டியிருப்பேன்? இன்னைக்கு ஒரு நாள் அவர் கட்டட்டுமே.”

உத்ராவிற்கோ ஒன்றும் புரியவில்லை.

“உனக்கு அந்தப் பொண்ணு அனன்யாவ முன்னாடியே தெரியுமா விக்கி?” -வியப்பாகக் கேட்டாள்.

“ஆமா தெரியும். அவள எல்லாம் பொண்ணுன்னு சொல்லி பெண் இனத்தையே அசிங்கப்படுத்தாத சொல்லிட்டேன்.”

“ஏன்டா? அப்படி என்ன பண்ணினா அவ?”

“ச்சே! அவளப் பத்தி நெனச்சாலே இரிட்டேட் ஆகுது. ஷீ இஸ்ஸ டெவில். ப்ளீஸ் இப்ப அவளப் பத்தி எதுவும் கேக்காத. அந்த கிளையண்ட் என்ன வேல குடுத்தாரோ அத மொத முடிச்சுக் குடுப்போம்.” என்று முற்றுப்புள்ளி வைத்தவன் நொந்துப் போயிருந்தான்.

உத்ராவும் மேற்கொண்டு தூண்டித் துருவவில்லை.

ஆனால், திடீரென ஞாபகம் வந்தவளாய், “விக்கி இன்னைக்கு அவர் காமிச்ச அந்த போட்டோல இருந்தது யார் தெரியுமா? காலைல நான் பார்க்ல பிரகாஷ ஃபாலோவ் பண்றத கண்டுபுடிச்சு ஒருத்தன் ரகள பண்ணானே? அவந்தான். ஃப்ரெண்ட ஃபாலோவ் பண்ணதுக்கே அந்தக் குதி குதிச்சான். இப்ப அவன ஃபாலோவ் பண்றோம்னு தெரிஞ்சதோ அவ்ளோ தான்.” என்று கலக்கமுற்றாள்.

“இத ஏன் நீ முன்னாடியே சொல்லல உதி? அப்பா என்ன சொன்னாருன்னு மறந்துருச்சா? உன் முகத்த அவன் பாத்துருக்கான்னா நாம இதுல எறங்குறது டேஞ்சர். உடனே இந்த அசைன்மெண்ட்ட கேன்சல் பண்ணு.” என்று அவசரப்படுத்தினான்.

உத்ரா நிதானமாகப் பேசினாள்.

“இல்ல விக்கி. இந்த அசைன்மெண்ட்ட முழுக்க முழுக்க பாத்துக்கப் போறது நம்ம அண்டர்கவர் டிடெக்டிவ்ஸ் தான். ஸோ, பிரச்சன எதுவும் வராது.” என்று சமாதானம் கூறினாள்.

“எப்படிப் பாத்தாலும் அவங்க தர்ற ரிபோர்ட்ட வெரிஃபை பண்ற கடமை நமக்கு இருக்கு உதி. அப்ப அவன் உன்ன பாத்துட்டா?”

பின்னால் வரப்போவதை முன்பே உணர்ந்து எச்சரித்தான்.

“இதுல எந்த சிக்கலும் வராது விக்கி. நீ அந்த அனன்யாவ பாத்ததுல மெரண்டுப் போயிருக்க. பி காம்!”

“மெரண்டது நானா? நீயா?” அவன் முணுமுணுத்தது நல்லவேளை உத்ராவுக்கு கேட்கவில்லை.

உத்ராவோ இந்தப் பொறுப்பை சவால் போல் ஏற்றாள். தன்னை பிடித்து வைத்து கேள்விகள் கேட்டு அசிங்கப்படுத்தியவனை‌ பதிலுக்கு பின் தொடர்ந்து தகவல் சேகரிப்பதென்பது அவள் ஈகோவை திருப்திபடுத்தும் விசயமாய் இருந்தது. ஆகையால், விக்கியின் வாதம் எதுவும் அவளிடம் எடுபடவில்லை.

மறுபுறம் தன் வீட்டிற்கு செல்லும் வழியில் விக்கியைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள் அனன்யா. அவன் எப்போதும் தன்னை அழைக்கும் ‘அனி’ என்ற செல்லப்பெயர் வேறு ஞாபகம் வந்து தொல்லை செய்தது.



கலைடாஸ்கோப் திரும்பும்…

 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
அத்தியாயம் இரண்டிற்கு தங்களது பிடித்தம் மற்றும் கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி ப்ரெண்ட்ஸ்.

இப்போது அத்தியாயம் மூன்று மற்றும் நான்கு தயார். தொடர்ந்து வாசியுங்கள். இன்று ஏன் டபுள் டமாக்கா என்பதற்கான காரணத்தை கூறுகிறேன்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்

எழுத்தாளர்: ஷிவானி செல்வம்

அத்தியாயம் 3


மறுநாள் நந்தகோபன் நிரப்பிய படிவம் மூலம் தனக்கு தெரிந்த தகவல்களையெல்லாம் வரிசையிட்டுக் கொண்டிருந்தான் விக்கி.

“பேரு உதய்கிருஷ்ணா. சொந்த ஊர் மதுர தான். எம்பிஏ கிராஜுவேட். வயசு முப்பத்தி அஞ்சு. மதுர பெடிகிரி கான்ட்ராக்டர் சபாபதிகிட்ட மார்கெட்டிங் மேனேஜரா வொர்க் பண்றான். சம்பளம் ஃபிஃப்ட்டி ஃபைவ் தவுசன்ட் பெர் மன்த். அம்மா அப்பா ரெண்டுபேருமே இல்ல. இப்போ பொண்ணு பாக்குற வேலைல எறங்கியிருக்கதெல்லாம் அக்காவும், அக்கா புருஷனும் தான். சிகரெட், ஆல்கஹால், கொகைன், பொண்ணுன்னு எந்தப் பழக்கமும் கெடையாது. வீடு சொந்த வீடு தான். பட் அதுக்கு இஎம்ஐ கட்டிட்டுருக்கான்.”

அவன் ஒப்பித்ததை கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த உத்ரா,
“இதெல்லாம் உண்மையான்னு நாம ஃபர்ஸ்ட் செக் பண்ணனும் விக்கி. அந்த ஃபார்ம்ல இருக்க அவனோட அக்கா நம்பருக்கு மொதல்ல கால் பண்ணு.” என்றதும், எதற்கு என்று புரிந்தவனும் அழைப்பு விடுத்தான்.

எதிர்புறக்குரலைக் கேட்டதுமே, “ஹலோ! உதய்கிருஷ்ணாங்கிற வரனுக்கு பொண்ணு தேடுறீங்களா? நாங்க ஈரோட்லருந்து பேசுறோங்க. இன்னைக்கு தான் ஸ்ரீதேவி மேட்ரிமோனில உங்கப்பையன் ப்ரொஃபைல் பாத்தோம். எங்க பாப்பாவுக்கு ஏத்த இடமா இருக்குதேன்னு தான் உடனே கால் பண்றோம். அப்படிங்களா? வேறப்பொண்ணு பாத்துட்டீங்களா? ஓ! அவங்க எந்த ஊருங்க? ஓஹோ! அந்த ஊருல எப்படின்னு தெரியல. ஆனா எங்க ஊர்ப்பக்கம் பொண்ண தங்கத்துலயே எழச்சு அனுப்புவோங்க. நாங்களாங்க? எங்க சத்துக்கு ஒரு நூறு பவுன் போடுவோங்க. சீர்வரிசையா வீடு, காரு, வெள்ளி சாமான், ஃப்ரிட்ஜ், டீவி, வாஷிங்மெஷின்னு ஒரு குறையும் வைக்க மாட்டோம். அப்படியாங்க, அந்த சம்பந்தம் இன்னும் பேச்சு வார்த்தைல தான் நிக்கிதா? நம்ம பாப்பா கொஞ்சம் புதுநெறம் தான். ஆனா மொக லட்சணம் உள்ளப்பொண்ணு.” என்று உத்ராவின் நாடியைப் பிடித்து கொஞ்சினான்.

அவன் கையை வெடுக்கென்று அவள் தட்டிவிடவும் சிரித்துக்கொண்டே, “நானாங்க? நான் பொண்ணுக்கு தாய்மாமங்க. நீங்க யாருங்க? ஓ! அக்காவா? பொண்ண நீங்கப் பாத்து ஓகே பண்ணா போதுமா? சரிங்க, அப்ப நான் வாட்ஸப்ல பொண்ணு போட்டோ அனுப்பி வைக்கிறேன். பாத்துட்டு நல்ல முடிவாச் சொல்லுங்க.” என்று அலைபேசியை அணைத்தான்.

உத்ரா அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தவள், ‘பணத்தாச பிடிச்சக் குடும்பம். மாப்பிள்ள அக்காவோட தலையாட்டி பொம்ம’ என்று தனக்கு எதிரிலிருந்த வெள்ளை பலகையில் கறுப்பு கோலால் எழுதினாள்.

பின், விக்கியிடம் திரும்பி, “நம்ம டீம் ‘ஏ’ கிட்ட இன்னும் ஒரு ஃபோர் டேஸ்க்கு உதய்கிருஷ்ணா எங்க போறான், என்ன பண்றான்னு ஃபாலோவ் பண்ணி இன்ஃபார்ம் பண்ணச்சொல்லு விக்கி. டீம் ‘பி’-ஐ அவன் ஃபேமிலி டீட்டைல்ஸ வெரிஃபை பண்ணச்சொல்லு. அண்ட் டீம் ‘சி’ கிட்ட அவனோட லாஸ்ட் ஒன் மன்த் கால் ரெக்கார்டிங்ஸ செக் பண்ணச்சொல்லு.” என்றதும், மேம்போக்காக சரியென்றான்.

திடீரென உத்ரா என்ன நினைத்தாளோ, “நம்ம டீம் மெம்பர்ஸ அவன கேர்ஃபுல்லா வாட்ச் பண்ணச் சொல்லனும் விக்கி” என்றாள்.

எதற்காக இப்படி சொல்கிறாள் எனப் புரிந்தவனும் கேலியாக நகைத்தான்.

உத்ரா தனது சுழல் நாற்காலியில் சென்று அமர்ந்தவள் கணினிதிரையில் உதய்கிருஷ்ணாவின் மேட்ரிமோனியல் பக்கத்தையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அத்திரை அவளுக்கு பின்னால் மாட்டப்பட்டிருந்த வாசனின் புகைப்படக்கண்ணாடியில் பட்டு எதிரொளிக்க, விக்கி அவள் எதைப் பார்க்கிறாள் என்று கண்டுகொண்டவனாய் புருவங்களை சுருக்கினான். பின், விசமமாய் புன்னகைத்தான்.

அப்படத்தில் அன்று பூங்காவில் பார்த்தது போல் இல்லாமல் சிரித்தமுகமாய் இருந்தான் உதய்கிருஷ்ணா. பொதுவாக யாருடைய படத்தையும் இப்படி உற்றுப்பார்த்து பொழுதை போக்கியது கிடையாது உத்ரா. அது தனக்கு ஞாபகம் வரவும் தலையை உதறிக்கொண்டு மற்ற வேலைகளை கவனித்தாள்.

அன்று மதியம் தனது நண்பன் மகேஷை சந்திக்கச் சென்ற விக்கி இரவு ஏழு மணியாகியும் அலுவலகம் திரும்பவில்லை எனவும், அலைபேசியில் அவனுக்கு அழைப்பு விடுத்தாள்.

மெத்தனமாக சங்கமம் பாரில் இருப்பதாகத் தெரிவித்தவன், உதய்கிருஷ்ணாவும் தனக்கு பக்கத்து மேசையில் தான் இருப்பதாகக் கூற, அவன் போதையில் உதய்கிருஷ்ணாவிடம் சென்று எதையும் உளறிவைக்கக்கூடாதே என்று அஞ்சியவள் வேறுவழியின்றி தானே அவனை அழைத்துவரச் சென்றாள்.

ஆட்டோவில் அசுர வேகத்தில் அவள் பாருக்கு வந்த போது ஜின் வாங்கி அருந்திக் கொண்டிருந்தான் விக்கி. அவனுக்கு பக்கத்திலிருந்த மேசையில் தான் தன் மச்சான் அகிலனுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான் உதய்கிருஷ்ணா. அவனும் மற்ற ஆண்கள் போல் ஏமாற்றுக்காரன் தான் என முகத்தை சுளித்தவள் நேரே விக்கியிடம் சென்றாள்.

“ஏய் எருமமாடே! உன் ஃப்ரெண்ட் மகேஷ பாக்கப்போறேனு சொல்லிட்டு இங்க வந்து குடிச்சிட்டு உக்கார்ந்திருக்க?"

“யாரு உதியா? வா வா உக்காரு உதி. உனக்கு என்ன வேணும்? வைன் குடிக்கிறியா? என் அனி மாதிரியே பளபளன்னு ஆகிடுவ”

“செருப்பு. ஒழுங்கு மரியாதையா இங்கயிருந்து கெளம்புடா”

அவன் எவ்வளவு முயன்றும் எழ முடியவில்லை எனவும்‌ தன் தலையில் அடித்துக்கொண்டு மெதுவாக தானே அவனை தூக்கி நிறுத்தினாள். அவள் தோளைப்பற்றி நடக்க முடியாமல் நடந்து வந்தான் விக்கி.

ஆனால், இவ்வளவு நேரமும் அவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த உதய்கிருஷ்ணாவோ அவளுக்கு பின்னால் வந்து நின்று, “எஸ்கியூஸ் மீ” என்றான்.

அவன் குரலை கண்டுகொண்டவள் பயந்தபடியே திரும்ப, “அந்த போன் அவரோடது தான். அப்படியே சேர்ல விட்டுட்டுப் போறீங்க?” என்று நினைவுபடுத்தவும்,

“தாங்க்ஸ்” என்று பெருமூச்சுவிட்டாள்.

“கமிஷ்னர் பொண்ணுக்கு தாங்க்ஸ் சொல்லக்கூட வருமா?”

தான் முகக்கவசம் அணிந்திருந்தும் தன்னை சரியாக கண்டுபிடித்துவிட்டவனை விழிகள் அகலப் பார்த்தாள் உத்ரா.

‘யெஸ் ஐ காட் யூ’ என்றது அவனது சிரிப்பு.

அவள் அந்த அலைபேசியை எட்டிப்போய் எடுத்தால் விக்கி பிடிமானமின்றி கீழே விழும் வாய்ப்புண்டு என்பதால் தயங்கியபடி நிற்க, தானே அந்த அலைபேசியை எடுத்து வந்து அவளது தோள்பைக்குள் போட்டான்.

அவன் அடித்து வந்த அம்பர் பிசின் வாசனைதிரவியத்தின் மணம் “தாங்க்ஸ்” என்றவளின் நாசிக்குள் மெல்ல ஏறியது அவளின் முகக்கவசத்தையும் மீறி.

அவனின் சிரிப்புச் சத்தம் பின் தொடர விறுவிறுவென மதுபான விடுதியை விட்டு வெளியேறிய உத்ராவின் பதற்றநிலையானது உச்சத்தை தொட்டது. போதையில் கிடக்கும் விக்கியை காருக்குள் தள்ளியவளின் மனமோ இன்னும் சாந்தமடைய மறுத்தது.

அவளின் ஒட்டுமொத்த கோபமும் போதையில் கிடப்பவனின் மீது திரும்ப, “குடிகாரா! எத்தன பாட்டில்டா குடிச்ச? இப்படி கெடக்க?” என்று அவன்‌ காரை ஓட்டியபடியே கத்தினாள்.

“உதி அந்த உதய் ரொம்ப நல்லவன். என்ன விட நல்லவன். அனிக்கு ஏத்தப்பையன். அவ அவன் கூட சந்தோசமா இருப்பா. அவன் அவள நல்லா பாத்துப்பான். ஆனா, என்னவிட அவள நல்லா பாத்துக்க முடியாது.” என்று அழுகுரலில் கூறினான்.

“அய்யோ! கொஞ்சம் அனத்தாம வர்றியா? என்னால ரோட்ட ஃபோகஸ் பண்ண முடியல. குடிகாரனுக்கு குடிகாரன் வக்காலத்தா?” என்றவள் இந்த நேரத்தில் கேட்டால் தான் அவன் உண்மை முழுவதையும் கக்குவான் என்று, “யாருடா அந்த அனன்யா? நேத்துப் பாத்தவளுக்காக நீ எதுக்குடா இவ்வளவு யோசிக்கிற? அப்படி அவ உனக்கு என்னடா செஞ்சா?” என்று காரை ஓரமாக நிறுத்தியபடி வினவினாள்.

“அவ ஒரு காலத்துல என் தேவத உதி.”

“ஓ! தேவத எப்படி டெவிலானாங்க?”

“தேவதயோ? டெவிலோ? அவ எப்பவுமே சந்தோசமா இருக்கனும். யார் கூட இருந்தாலும் நல்லா இருக்கனும். நல்லா இருக்கனும்..” என்றபடியே மயங்கிவிட்டான்.

இதற்கு மேல் அவனிடம் எதுவும் கறக்க முடியாது என்று அவளும் நேரே தன் வீட்டிற்கு அவனை அழைத்துக்கொண்டு போனாள். அவளுக்கு வேறு வழியில்லை.

இங்கு மதுபான விடுதியிலோ ஒரு கட்டத்தில் தன் ரம் பாட்டீல் இரண்டும் தீர்ந்து போகவும் இன்னொரு குவார்ட்டர் ஆர்டர் செய்து கொண்டிருந்தான் அகிலன், அவன் உதய்கிருஷ்ணாவின் அக்கா கணவன்.

நொறுக்குத்தீனிகளை மேய்ந்துக் கொண்டிருந்த உதய்கிருஷ்ணாவோ, “மச்சான் போதும் மச்சான். இதுக்கு மேல போனா ஓவராகிரும். அப்பறம் அக்கா என்ன தான் திட்டும். ஏன்டா‌ நீ மட்டும் காந்தியவாதியா இருந்துட்டு இவர வாந்திவாதியா கூட்டிட்டு வர்றியேன்னு. நேரமாச்சு வாங்க வீட்டுக்குப் போகலாம்” என்று போராடி அகிலனை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனான்.

தன் மகளின் துணையோடு தள்ளாடியபடி வரும் விக்கியைப் பார்த்து, “தம்பிக்கு என்னம்மா ஆச்சு? கொஞ்சநாளா இந்தப் பழக்கத்தையெல்லாம் விட்டு நல்லப் புள்ளையா தான இருந்தது? இந்த விசயம் வேணி அம்மாவுக்கு மட்டும் தெரிஞ்சதோ? ஏற்கனவே வாசன் ஐயா போன துக்கத்துல இருக்காங்க அந்தம்மா. இப்ப இதையும் பாத்தா ஒடஞ்சுப் போயிருவாங்க மனுசி. அவங்கக்கிட்ட இது எதயும் சொல்லாதம்மா.” என்றவரை முறைத்துப் பார்த்தாள் மகள்.

“ம்மா உங்களுக்கு வேணி மேடம் மேல இருக்க அனுதாபத்தவிட வாசன் சார் மேல எனக்கிருக்க நன்றியுணர்வு அதிகம். அதனால கொஞ்சம் அனத்தாம இருங்க.” என்று கடுப்பாக மொழிந்தாள்.

அவளின் பேச்சிற்கு கட்டுப்பட்ட பானுமதி, “நீ தம்பிய கவின் ரூம்ல கொண்டு போய் விடும்மா. அவன் மத்தத பாத்துக்குவான்.” என்றதும், உத்ராவும் அதுபோலவே செய்தாள்.

கவினும் விக்கியை குளிக்கச்செய்து உடை மாற்றி விட்டான்.

கவிலயா முதலில் விக்கிக்கு ஒரு தட்டில் ஆறு இட்லிகள் கொண்டுபோய் கொடுத்தவள் பின் ஒரு தட்டில் ஸ்பெஷலாக ஆம்லெட்கள் கொண்டு போக, சோபாவில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த உத்ரா ஓடி வந்து, “ஏய் நில்லு! இப்போ எதுக்கு அவனுக்கு ஆம்லெட் கொண்டு போற? அதுவும் ரெண்டு?” என்றாள்.

“தள்ளு! அம்மா தான் கொண்டு போகச் சொன்னாங்க.” என்றவள் நகரப் பார்க்க,

பானுமதியும் தன் பங்கிற்கு, “இந்த மாதிரி நேரத்துல ஏதாவது நல்லது பொல்லத சாப்பிடக் குடுக்கனும்மா. இல்லனா காலைல பசில வயிறு கபகபன்னு எரிய ஆரம்பிச்சிரும்.” என்றார்.

அவரின் அக்கறையில் தலையிலடித்துக் கொண்டவளோ, “நீங்கல்லாம் திருந்தவே மாட்டீங்கல்ல? எக்கேடோ கெட்டுப் போங்க” என்றுவிட்டு கைக்கழுவி தூங்கப்போனாள்.

தன் படுக்கையறையில் ஏற்கனவே வாயில் விரல் வைத்தபடி உறங்கும் அமிகாவைப் பார்த்ததும் அவள் கோபம் மொத்ததும் வடிந்தது. இன்னும் அமிகாவுக்கு தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பழக்கமிருந்ததால் தேங்காய் நார் மெத்தையில் தான் உறங்கவைக்கப்பட்டிருந்தாள். அவளை அணைத்து தூங்குவதே உத்ராவின் வழக்கமும்.

நேரே அவளிடம் சென்று “அழகி” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டவள் தூக்கத்திலும், “எச்சில் பண்ணாத உதி” என்றவளை மீண்டும் அணைத்து முத்தமிட்டாள்.

திடீரென அவளை இழந்துவிடுவோமோ என்ற பயம் வந்து அவள் நெஞ்சைக் கவ்வியது. அதற்கு காரணமில்லாமலும் இல்லை. சென்ற மாதம் தான் அமிகாவின் தந்தைவீட்டு ஆட்கள் திடீரென வந்து அவளை தங்களிடம் கொடுக்கச்சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். உத்ரா முடியாது என்று மறுக்கவும் நீதிமன்றத்தில் அவளை சந்திப்பதாகவும் மிரட்டிவிட்டு சென்றிருந்தார்கள். அதுவேறு மனதில் கிடந்து உறுத்தியதால் தற்போது சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தாள்.

அப்போது பார்த்து அவ்வறைக்குள் நுழைந்த பானுமதி தயங்கியபடியே தன் மனத்தாங்கலை சொன்னார். விக்கியின் தாய் வேணி அவனை நினைத்து தூங்காமல் இருக்கிறாரோ என்னவோ என்ற வருத்தம் அவருக்கு. ஒரு தாயின் கண்ணோட்டத்துடன் அதனை அணுகிய உத்ரா இம்முறை எரிந்து விழாமல் அமைதியாகவே பதிலளித்தாள்.

“மகன் விசயத்துல நீங்க பயப்படுற மாதிரியெல்லாம் வேணி மேடம் கெடையாது. அவன அவங்க தண்ணி தெளிச்சிவிட்டு பல மாசம் ஆச்சு. வீணா நீங்க மனசப் போட்டு கொழப்பிக்காதீங்க. நைட் போட வேண்டிய டேப்லெட்ஸ் எல்லாம் போட்டுட்டீங்கன்னா நிம்மதியா தூங்குங்க” என்றாள் கறாராக.

அவளுக்காக அரைமனதாகவே கண்களை மூடினார் பானுமதி. மறுநாள் காலையில் உத்ரா எழுந்து வந்தபோது வரவேற்பறையில் தலையைப் பிடித்தபடி உட்கார்ந்திருந்தான் விக்கி. அவனைப் பார்த்ததும் திட்டுவதற்காக அவள் வாயை திறக்க, அவன் முந்திக் கொண்டான்.

“உனக்கு அறிவிருக்கா இல்லையா உதி? ஒரு கல்யாணம் ஆகாத கட்டபிரம்மச்சாரி பையன இப்படி பொண்ணுங்க தங்கியிருக்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கியே, நாளப்பின்ன இந்த விஷயம் வெளிய கசிஞ்சா எவனாவது எனக்கு பொண்ணு குடுப்பானா சொல்லு? என் வாழ்க்கையையே நாசம் பண்ணிட்டியே உதி. உன்னால என் மானம் போச்சு, மரியாதப் போச்சு..”

“ம், இன்னும் கொஞ்ச நேரத்துல உன் உயிரும் போகப்போகுது. அதயும் சேத்துக்கோ.”

“உதி என்ன பேச்சு இது!” என்றவாறே வந்த பானுமதி ஒரு டம்ளர் நிறைந்த பாலை விக்கிக்கு கொடுக்க,

“ம்மா இவன் என்ன விருந்துக்கு வந்த புதுமாப்பிளையா இப்படி கவனிக்கிறீங்க? இந்த குடிகாரனுக்கு பச்சத்தண்ணியே அதிகம்.” என்று எதிர்த்தாள் கோபமாக.

ஆவேசமாக எழுந்தவனின் இடுப்பிலிருந்து வேட்டி நழுவியதும் அதை பிடித்துக்கொண்டே, “குடிகாரனா? உனக்கு தொழில் கத்துக்குடுத்து அவ்ளோ பெரிய டிடெக்டிவ் ஏஜென்சிய உன் கையில தார வார்த்தவரோட பையனப் பாத்து நீ பேசுற பேச்சா இதுன்னு நல்லா கேளுங்க ஆன்ட்டி.” என்று எடுத்துக் கொடுத்தான்.

“உதி உங்கப்பா குடிக்காத குடியா? விடும்மா.” என்றார் பானுமதி.

“ஹை! அன்க்கிளும் நம்ம இனம் தானா? உதி நீ சொல்லவே இல்ல?”

“அதச் சொன்னா குடியால அவர் லிவர் ஃபெயிலியராகி செத்ததயும் சொல்லனுமேனு தான் சொல்லல” என்று அவன் மூக்குடைத்தாள் உத்ரா.

விக்கி கமுக்கமாக வேட்டியை கட்டுவதில் மும்முரமாக, “உன் குடும்பத்து மேல எனக்கிருக்க மரியாதையால தான் உன்ன இங்க கொண்டு வந்து போட்டேன் விக்கி. இல்ல நடு ரோட்டுல கெடந்துருப்ப. நீ படிச்ச படிப்புக்கும், பாத்த வேலைக்கும் எங்க எப்படி இருக்க வேண்டியவன்டா? ஏன்டா இப்படி உன் வாழ்க்கைய நீயே நாசமாக்கிக்கிற?” என்று வேதனைபட்டாள்.

விக்கியோ அதனை கண்டுகொள்ளாமல் அவள் தம்பி கவின் மீது பாய்ந்தான்.

“துரோகி! உன் அக்கா இப்படி காலைலயே அட்வைஸ போடுவான்னு சொல்லியிருந்தா நான் எந்திரிச்ச உடனேயே என் வீட்டுக்கு ஓடியிருப்பேனேடா?” என்று சோபாவில் கிடந்த சதுர தலையணையை அவன் மேல் எறிந்தான்.

“இது திருந்தாத ஜென்மம்!” என்று முத்திரை குத்தியவள், “சரி சொல்லு அந்த உதய்கிருஷ்ணா எப்படிப்பட்டவன்? நான் பாத்த வர அவன் ஒரு சோஷியல் ட்ரிங்கர் மாதிரி தான் தெரியுது.” என்றாள் சந்தேகமாக.

விக்கிக்கோ அவனைப் பற்றிய பேச்சில் கோபம் தலைக்கேறியது.



கலைடாஸ்கோப் திரும்பும்…
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
இன்றைய டபுள் டமாக்காவிற்கான காரணம், நாளை நான் துபாயிலிருந்து மதுரைக்கு பறக்கவிருப்பது தான் ஃப்ரெண்ட்ஸ். பயணக்களைப்பில் முடியுமோ? முடியாதோ? அதான் நான்காவது அத்தியாயத்தையும் இன்றைக்கே பதிவிட்டாச்சு. அடுத்தப் பக்கத்தில் உங்களுக்கான அத்தியாயம் காத்திருக்கிறது ப்ரெண்ட்ஸ்.
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom